பகவத் விஷயம் காலஷேபம் -86- திருவாய்மொழி – -4-1-1….4-1-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

முதற்பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்;
மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்;
இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் என்கிறார் இந்த நான்காம் பத்தால்.

முதல் மூன்று பத்துகளாலும் துவயத்தில் பின் வாக்கியத்தின்பொருளை அருளிச்செய்தார்;
இனி, மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே அதில் முன் வாக்கியத்தின் பொருளை அருளிச்செய்கிறார்.

மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே’ என்றது, 4-ஆம் பத்து, 5-ஆம்பத்து, 6-ஆம் பத்துகளைக் குறித்தபடி.
இம்மூன்று பத்துகளாலே ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம் பிரபத்யே’ என்ற முன் வாக்கியத்தின்பொருளை அருளிச்செய்கிறார் என்றபடி.
பெரிய பிராட்டியார் புருஷகாரமாக, வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் ஞானம் சத்திகளாகிய குணங்களையுடைய
எம்பெருமானுடைய திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்,’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.
இப்பொருள்தன்னையே 4,5,6-ஆம் பத்துகளில் அருளிச்செய்கிறார் என்பதனைத் தெரிவிக்கின்றார். (முதல் பத்து அவதாரிகை – ‘திருமகள்
கேள்வன் இரண்டு’ காண்க.) “இதில் (துவயத்தில்) முற்கூற்றால், பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது;
பிற்கூற்றால், அச்சேர்த்தியிலே அடிமை இரக்கிறது,” என்பது ஸ்ரீபிள்ளைலோகாசார்யர் ஸ்ரீசூக்தி.
அக்ரமாக அருளிச் செய்தது -அனுஷ்டான பரம் த்வயம் –சரணாகதி பண்ணினால் பலம் கிடைக்கும் -இங்கு உபதேசம் பலத்தை முதலில் சொல்லி
-பின்பு உபாயம் சொல்ல வேண்டுமே -பிரயோஜனம் இல்லாமல் மந்த மதிகளும் கார்யம் செய்ய மாட்டார்களே –
ஸ்வர்க்க காம-பலம் சொல்லி -ஜ்யோதிஷ்ட ஹோமம் யஜெத -செய்யச் சொல்லிற்றே
பஹூச்யாம் -பிரஜா யேய-சங்கல்பம் -பலத்தை -வியஷ்டி சிருஷ்டி முதலில் சொல்லி -சமஷ்டி சிருஷ்டி பின்பு சொன்னால் போலே

முதல் மூன்று பத்துகளாலும் சொன்ன புருஷார்த்தத்துக்கு உரிய உபாயத்தை அடியிலே அறுதியிடுகிறார்.
‘அடியிலே’ என்றது, சிலேடை : முதல் திருவாய்மொழியிலே என்பதும், திருவடிகளிலே என்பதும் பொருள்.
திருவடிகளிலே என்று பொருள்கொள்ளும்போது ‘உபாயத்தை’ என்பதற்கு உபாயத்தின் தன்மையை என்று பொருள் கொள்க. ‘
சந்தித்துய்ம்மினோ’ என்பது போன்ற இடங்களில் உபாயத்வம் கூறப்பட்டிருத்தல் தெளிவு. உபாயத்வம் – உபாயத்தினது தன்மை. உபாயம் – வழி.

இவ்வடி அறியாதாரே அன்றோ வேறு உபாயங்களாகிற விலக்கடிகளில் செல்லுகின்றவர்கள்?

‘அல்லாதார் கர்மம் ஞானம் பத்திகளை உபாயமாகக் கொள்ளாநிற்க, இவர் திருவடிகளை உபாயம் என்கிறது என்?’ என்னும்
வினாவிற்கு விடையாக,‘இவ்வடி அறியாதாரேயன்றோ’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அடி – திருவடிகள்.

நிரவதிகப் பிரீதியோடேயன்றோ, மேல், திருவாய்மொழியை இவர் அருளிச்செய்தது? -நிரவதிகம்– தனக்குமேல் ஒன்று இல்லாதது.
தாமும் குறைவற்று, பற்றினார் குறைகளையும் தீர்க்க வல்லவராம்படி இருந்தார் மேல்.
சமுசாரிகளைப் பார்த்து, ‘நீங்கள் பற்றின விஷயங்கள் தண்ணியவான பின்பு அவற்றைவிட்டுத் திருமகள் கேள்வனைப் பற்றுங்கோள்’ என்று
பரோபதேசத்தில் இழிகிறார் இத்திருவாய்மொழியில்.
ப்ராப்யாந்தர நசை ஒழிந்தே -பரித்யாகம் பூர்வாகமாகவே -உபாயாந்தர பரித்யாகம் -சர்வ தர்மான்-பரித்யஜ்ய என்பதால் சொல்லிற்றே –

‘நன்று; ‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்;
‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்;
இந்தத் திருவாய்மொழியும் பரோபதேசமாய் இருக்கின்றது; இவற்றிற்குக் கருத்து என்?’ எனின்,
இவை எல்லாவற்றிலும் எல்லா அர்த்தங்களும் உளவேயாகிலும் ஒவ்வொன்று ஒவ்வோர் அர்த்தத்தில் நோக்காய் இருக்கும். ‘யாங்ஙனம்?’ எனில்,
‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியில் ‘இதர விஷய வைராக்கியம் முன்னாகப் பகவத் பத்தியைச் செய்யுங்கோள்’ என்றார்;
‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியில் ‘பகவானைத் துதிப்பதற்குத் தக்கனவான உறுப்புகளைக்கொண்டு
பிறரைத் துதி செய்யாமல் சர்வேசுவரனைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்றார்;
இத்திருவாய்மொழியில் ‘இவர்கள் தாம் பிறரைத் துதி செய்வது சில பிரயோஜனத்திற்காகவே அன்றோ?’ என்று
அவற்றினுடைய சிறுமை, நிலையின்மை -அனர்த்தாவகத்வம் -துக்க மிஸ்ரத்வம் முதலிய தோஷங்களின் மிகுதியை அருளிச்செய்கிறார்.

செல்வம் அற்பமானது, நிலையாதது முதலிய குற்றங்களையுடையதாகையாலே தண்ணிது;
ஆத்துமலாபமாகிய கைவல்யம் நிலைத்து நிற்பதாயினும், புருஷார்த்தம் அல்லாதது ஆகையாலே, தண்ணிது;
இப்படி ஐஸ்வரிய கைவல்யங்களுக்கு உண்டான தண்மையைச் சொல்லி, ‘சர்வேசுவரன் ஆகிறான் மங்களம் பொருந்திய
எல்லா நற்குணங்களையும் உடையவனாய் விரும்பினவை அனைத்தையும் கொடுக்கக் கூடியவனாய் இருப்பான் ஒருவன்;
ஆனபின்பு அவற்றை விட்டுப் பகவானைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்று இங்ஙனே பகவானைப் பற்றுவதற்கு உண்டான
நன்மையை விளக்கிப் பேசாநின்றுகொண்டு பரோபதேசம் செய்ய இழிகிறார்.
தான் பெற்ற அனுபவம் பேசி அருளிய பின்பு ஆழ்வார் ஐஸ்வர்யம் கைவல்யம் அனுபவிக்கும் சம்சாரிகளைப் பார்த்து
நிலை அற்ற அத்ய அல்பம்விட்டு பகவத் விஷயம் பற்ற அருளுகிறார் இந்த திருவாய்மொழியில்

இவர் தாம், மக்கள் இந்திரியங்களை வென்றவர்களாய் வந்து நின்றுகொண்டு, ‘எங்களுக்கு நலத்தை உபதேசிக்க வேண்டும்’ என்று கேட்க,
உபதேசிக்கிறார் அன்றே? பிராட்டியும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் இராவணனை நோக்கி நலத்தைக் கூறினாற்போன்று இருப்பது ஒன்றேயன்றோ
இவருடைய பரோபதேசம்? ‘எல்லா ஆத்துமாக்களையும் கவரக்கூடியதான காலபாசத்தினால் கட்டு உண்டவனும் நாசத்தை அடைகின்றவனுமான
இராவணனை – பற்றி எரிகின்ற வீட்டினைப் போன்று – உபேக்ஷை செய்யமாட்டேன்’ என்பது ஸ்ரீ விபீஷணாழ்வான் வார்த்தை.
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘வெந்து அற்ற வீட்டிலே ‘ஒரு கம்பாகிலும் கிடைக்குமோ?’ என்று அவிக்கப் பார்ப்பாரைப் போன்று,
நானும் நலத்தைக் கூறுவேன்’ என்கிறார் என்பது.

————————————————————————-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

உபாயத்வம் அடியிலே தொடக்கத்திலே அருளிச் செய்கிறார் –
ஏகாதி பத்தியம் பண்ணும் ராஜாக்களே பிச்சை
ஆகையால் நிருபாதிக சம்பந்த உக்தன் -திருவடிகளைப் பற்றுங்கோள்
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்-மண்டல நாதன் -ஏக அதிபதி -ஓட -நெடுங்காலம் -லோகத்துடன் பொருந்தி
ஆண்டவர் -ராஜ்ய ரஷணம் பண்ணிப் போந்தவர்கள்
ஐஸ்வர்யம் பக்னம் ஆனவாறே -லஜ்ஜித்து பிச்சை பெற தேடி
மயிர் நீப்பின் உயிர் வாளா கவரி மான் இல்லையே
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்-கருப்பு நாய் -இருட்டு அறியாமல் காலை வைக்க
கவ்வப்பட்ட கால் -உடைய ஒட்டாஞ்சில் –
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-மகா பிருத்வியில் உள்ளார் அனைவரும் காண -இவரால் முன் நாள் நலியப்பட்டவர்கள்
இந்த ஜன்மம் தன்னிலே -கை மேல் பலன் -லஜ்ஜையையும் விட்டு தாமே அர்த்தித்து -தாமே கொள்வர்
ஐஸ்வர்யம் அஸ்தரம்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ-நித்ய ஸ்ரீ -நிருபாதிக சேஷி -திரு உடன் கூடிய தாள் -கை விடாத –
கால விளம்பம் பெறாமல் சடக்கென –பிராப்யமாக -அனுசந்தித்து உஜ்ஜீவியுங்கோள்

‘ஒற்றை வெண்கொற்றக்குடையின் நிழலிலே தன் ஆணையானது தடையின்றிச் செல்லும்படி உலகத்தை எல்லாம் ஒருசேர ஆண்ட சக்கரவர்த்திகள்,
கரிய நாயால் கவ்வப்பட்ட காலையுடையவர்களாய் உடைந்த பானையை உடையவர்களாய்ப் பெரிய நாட்டிலேயுள்ள மக்கள் எல்லாரும் காணும்படியாக
இப்பிறவியிலேயே இரந்து உண்ணும் தொழிலைத் தாங்களே மேற்கொள்வார்கள்;
ஆதலால், திருமகள் கேள்வனான நாராயணனுடைய திருவடிகளைக் காலம் நீட்டிக்காமல் (மிக விரைவில் என்றபடி) மனத்தால்
நினைத்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.
நாயகம் – முதன்மை. ‘ஆக ஓட ஆண்டவர்’ என்க. ‘ஆண்டவர் கொள்வர்’ எனக் கூட்டுக.
‘காலர், பானையர்’ என்பன, முற்றெச்சங்கள். ‘கவர்ந்த’ என்பது ஈண்டுச் செயப்பாட்டு வினையின்கண் வந்தது.
இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

‘சார்வபௌமராய்ப் போந்தஇராசாக்கள் அந்த இராச்சிய ஸ்ரீயை இழந்து இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆவார்கள்;
ஆன பின்பு, திரு மறு மார்பன் -‘ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ – ஸ்ரீவத்சத்தை மார்பிலேயுடையவன், நித்தியமான ஸ்ரீயையுடையவன்’ என்கிறபடியே,
அழியாத செல்வமான ‘சர்வேசுவரனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.-ஈசான சீல நாராயணன் -பகவத் பாதர் ஆதி சங்கரர் –

ஒரு நாயகமாய் –
தனி அரசாக. ‘உலகங்கட்கு எல்லாம் தலைவன்’ எனப்படுகின்ற சர்வேசுவரனுடைய
ஐஸ்வரியத்தைப் பௌண்ட்ரக வாசுதேவன் பின்பற்றினாற் போலே பின் பற்றுகிறவாற்றைத் தெரிவித்தபடி.
‘செங்கதிர்க் கற்றை காலும் திகிரியஞ் செல்வன் யானே! சங்கொடு தழல்வாய் நேமி தாங்குதல் விடுத்தால் உய்ந்தான்;
அங்கவை விடுகலானேல் ஆடமர்க் கெழுக’ என்னா வெங்கடக் களிறட் டார்க்கு விடுத்தனன் தூது மன்னோ.’–பாகவதம்
நிலை நில்லாத ஐஸ்வரியத்தைப் பற்றி நீர்க்குமிழி போலே உடைந்து போகின்ற மனிதர்களாதலின், ‘நாயகம் ஆய்’ என்கிறார்.
ஓட –
‘இப்படி ஆளுவது எத்துணைக்காலம்?’ என்றால், நெடுங்காலம். என்றது, ‘அறுபதினாயிரம் யாண்டு’ என்கிறபடியே நெடுக என்றபடி.
‘இப்படி நெடுங்காலம் ஆள்வது எவ்வளவு?’ என்னில்,
உலகு –
கடல் சூழ்ந்த பூமிப்பரப்பு அடங்கலும்; ‘எங்கிருந்து சூரியன் உதிக்கின்றானோ, எங்கு மறைகின்றானோ, அதற்கு இடைப்பட்ட பூமி முழுதும்
யுவநாஸ்வனுடைய புதல்வனான மாந்தாதா என்ற அரசனுடைய பூமி என்று சொல்லப்படுகிறது,’ என்கிறபடியே,
முந்திரிகை நிலம்-கை மண் அளவு -ஷேத்திர அல்ப அம்சம் – உடையவனைப் போலே ஆயிற்று ஆள்வது.
உடன் ஆண்டவர் –
இந்தப் பூமிப்பரப்பில் ஓர் இடம் குறை கிடவாதபடி ஆண்டவர் என்னுதல்.
அன்றிக்கே,
‘பாப காரியங்களை நினைத்தவர் முன்பே கையும் வில்லுமாய் நின்று நோக்கிக்கொண்டு போந்த
கார்த்தவீரியார்ச்சுனனைப் போன்று ஆண்டவர்கள்’ என்னுதல்.ஆண்டவர் –-ரஷிப்பவர் என்றுமாம் –

‘இப்படிச் சக்கரவர்த்திகளாய் இருந்துகொண்டு தனி அரசாக நெடுநாள் உலகத்தை ஆண்டு போந்தவர்கள் பின்னை என் செய்வார்கள்?’ என்னில்,
‘இராச்சியம் என்பது, வைத்யம் செய்யமுடியாததும் நாசத்தை விளைவிப்பதுமான பெரியது ஒரு நோய்;
அதன்பொருட்டு அரசர்கள் சகோதரனையும் பிள்ளையையும் விடுகிறார்கள் அல்லவா?’ என்கிறபடியே, அவற்றை இழந்து வருந்துவார்கள் என்கிறார் மேல்:
கருநாய் கவர்ந்த காலர் –
‘இப்படி நெடுநாள் மதிப்போடே வாழ்ந்து போந்தவன் எளிமைப்பட்டு வாழ்கிறது என்?’ ‘ஒரு பட்டினி விடுவோம்’ என்று இருக்க மாட்டானே!
வாழ்க்கையில் உண்டான நசையாலே பிக்ஷை எடுப்பதற்குப் பார்ப்பான்; முன்பு குறைவற வாழ்ந்துபோந்தவன் ஆகையாலே,
பலர் காண வெளியில் புறப்படமாட்டானே! நிலா நாளிலே இருட்டுப் புரைகளிலும் இருட்டுநாளிலும் ஆயிற்றுப் புறப்படுவது;
இருள் ஓர் இடத்திலே திரண்டாற்போலே கறுத்த நாய்கள் கிடக்கும்; அதனை அறியாதே அவற்றின் வாயிலே காலை இடும்;
அவை கடிக்கும்.
அன்றிக்கே,
கருநாய் என்பதற்கு, கருமை –-கறுமை- சீற்றமாய், வெட்டிய நாய் என்னுதல். அன்றிக்கே, கரு நாய் – கருவையுடைத்தான நாய் என்னுதல்;
என்றது, குட்டி இட்ட நாய், என்றும் குட்டியைக் காத்துக்கொண்டு கிடக்குமாகையாலே, ‘அதற்கு ஏதேனும் தீங்கு வருகிறதோ!’ என்று
கண்டாரை ஓடிக் கடிக்குமே அன்றோ? அதனைச் சொல்லுகிறது என்றபடி.
காலர் –
‘வீரக் கழல் இட்ட கால்’ என்றே அன்றோ முன்னர்ச் சொல்லிப்போருவது?
இப்போது, ‘நாய் கடித்த காலர்’ என்றாயிற்றுச் சொல்வது என்பார், ‘நாய் கவர்ந்த காலர்’ என்கிறார்.
சிதைகிய பானையர் –
கண்ட இடம் எங்கும் பொளிந்து உபயோகித்தற்குத் தகுதியின்றிக்கே போகட்டுக் கிடந்தது ஒன்றனை எடுத்துக்கொள்ளும்.
இட்டது உண்டாகில் ஒரு மூலையிலே கீழே போம்படி ஆயிற்று இருப்பது என்பார்,
‘சிதைகிய’ என்றும், ‘முன்பு பொற்கலத்திலே உண்டு வாழ்ந்தவனுக்கு இப்போது ஒரு புத்தோடு கிடையாதபடியாயிற்று’ என்பார்,
‘சிதைகிய பானையர்’ என்றும் அருளிச்செய்கிறார்.

பெரு நாடு காண –
முன்பு பச்சை கொண்டு வந்தவர்கள் ஓர் யாண்டு ஆறு மாதங்களும் உள்ளும் புகப்பெறாதே நின்று உலரும் இத்தனை அன்றோ?
அதற்கும் போர இப்போது தடை அற்று இருந்ததே குடியாகக் காணும்படியாக,
அன்றிக்கே,
முன்பு போர வாழ்ந்து எளிமைப்பட்டவன் ஆகையாலே எல்லாரும் காண வருவர்கள் ஆதலின், ‘பெரு நாடு காண’ என்கிறார் என்னுதல்.
‘இப்படிச் செய்வது ஒரு பிறவியில் வாழ்ந்து மற்றொரு பிறவியிலேயோ?’ என்னில்,
இம்மையிலே –
அப்படி வாழ்ந்த இந்தப் பிறவியிலே.
பிச்சை –
முன்பு அரசர்களுக்கு இராச்சியம் வழங்கினானாய் அன்றோ போந்தது? இப்போது ஒரு பிச்சை மாத்திரமேயாயிற்று இவன் விரும்புவது.
முன்பு இராசாக்கள் கொண்டு வந்த பச்சையை, சிலர் இடத் தாம் கொண்டார் என்பது ஆகாமைக்கு ஆள் வைத்தே அன்றோ வாங்குவது?
இப்போது தாமே கொள்வர்.
அன்றிக்கே.
இடுகின்றவர்கள் பக்கல் நினைவு இன்றிக்கே, தம் விருப்பம் மாத்திரமே உள்ளது என்பார், ‘தாம்கொள்வர்’ என்கிறார் என்னுதல்.

இராச்சியத் திரு இங்ஙனேயான பின்பு,
திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ –
‘ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’
‘பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம் மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன் இடர்கெடுத்த திருவாளன் இணையடியே அடைநெஞ்சே!’–பெரிய திருமொழி.6: 9 : 1.
‘இடர் கெடுத்த திருவாளன்இணை அடி’ என்றும், ‘அங்கு ஸ்ரீமந் நாராயணனிடத்தில் நான் பிச்சையை யாசித்தேன்,’ என்றும்
வருகின்ற பிரமாணங்களைக் காணல் தகும். இதனால், ஓடு கொண்டு இரப்பார்க்கு எல்லாம் இவனை ஒழியக் கதி இல்லை என்பது போதரும்;
கபாலித்வம்– தத்ர நாராயாண ஸ்ரீ மான் -மயா பிஷாம் –ஸ்வப்ன லப்த தனம் போலே -கபாலம் போனதே -சிவன் பார்வதிக்கு சொன்னது –
கபால போஜனம் –‘ஓட்டு ஊண் ஒழித்தவன்’ அன்றோ? தாள் – ‘பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன,
‘நானும் எனக்கு வகுத்த முடி சூடி அவரும் தமக்கு வகுத்த முடி சூடின அன்றே,’ என்றான் அன்றோ ஸ்ரீ பரதாழ்வான்?
அப்படித் தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை ‘அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ?
காலம் பெற – அரை நாழிகையாகிலும் முற்பட்டது உடலாக; ‘வாழ்வு சாதலை முடிவாக உடையது;
உருவம் யௌவனம் இவைகள் முதுமையை முடிவாக உடையன; செல்வம் நாசத்தை முடிவாக உடையது,’ என்னும் இவற்றை அறிந்த
எவன்தான் தைரியத்தை அடைவான்?’ என்ப ஆதலின், நாளைச் செய்கிறோம் என்னுமது அன்று என்பார், ‘காலம் பெற’ என்கிறார்.
அன்றிக்கே,
‘ஒரு முகூர்த்த காலமாவது ஒரு கணநேரமாவது வாசுதேவனை நினைக்கவில்லை என்பது யாது ஒன்று உண்டு?
அதுவே, இவனுக்கு ‘அஸந்நேவபவதி – இல்லாதவன் ஆகிறான்’ என்னும்படி வருகிற கேடு ஆகிறது; கேடு வருகைக்கு
அவகாசமும் அதுவே; திரிபு உணர்ச்சி ஆகிறதும் அதுவே; விலக்கப்பட்ட ஒழுக்கம் ஆகிறதும் ஆதுவே,’
என்ப ஆதலின், ‘காலம் பெற’ என்கிறார் என்னலுமாம்.
சிந்தித்து –
“இனி வழி இல்லை’ என்று கண்ணழிவு சொல்ல வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்;
நெஞ்சிலே அடி பட நினைக்க அமையும்’ என்றபடி.–நெஞ்சிலே திருவடி பட -சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் –
இடைவெளி இல்லாமல் சிந்திக்க இடை வெளி இல்லாமல் உஜ்ஜீவிப்போமே
உய்ம்மின் –
அந்த நினைவு பலத்தோடே கூடி இருக்குமாதலின், ‘உய்ம்மின்’ என்கிறது.
‘அந்தப் பகவானை நினைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? நினைத்தால் மங்களத்தைக் கொடுக்கிறார்;
இரவு பகல் எந்நேரத்திலும் அவரை நினைக்கின்றவர்களுக்குப் பாவங்களின் நாசமும் உண்டாகின்றன,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.
‘பேறு எல்லார்க்கும் வேண்டும்’ என்று இருக்கையாலே எல்லார்க்குமாக ‘உய்ம்மின்’ எனப் பன்மையாக அருளிச்செய்கிறார்.
தாள் சிந்தித்து உய்ம்மின் – அடி அற்றால் வாடும் அத்தனையே அன்றோ? ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.

————————————————————————————————

உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-

ஐஸ்வர்ய பங்கம் அன்றிக்கே அபிமத வியோகமும் பிறக்கும்
உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே-தண்டோரா வார்த்தை -உக்தி மாத்ரத்தாலே
-கத்தி பேசியே ஆண்டவன் -கத்தி வீசி இல்லை அடுத்த வீட்டில் செய்வதை செய்வேன் -பிச்சைக்காரன் கதை போலே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு-இந்த ஜன்மம் தன்னிலே பலம் -பிரபல பாப ஜென்மங்களுக்கு –
அந்யர் பரிகரிக்கும் படி -தாங்களே கை விட்டு -அத்தேசத்திலும் இருக்க பெறாதே -தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;-வெவ்விய -வெய்யிலை உடைய காட்டுக்கு -அந்ய ராஜ்யராலே கிலேசம் -ஆதலால்
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. -அபிரதிகத தேஜஸ் -பதாஸ்ராயணம் செய்மின் –

‘திறைப்பொருளைக் கொணர்ந்து கொடுத்து உயிர் வாழ்ந்து போமின்’ என்று கூறி, உலகத்தை எல்லாம் ஒரு குடையின் கீழே
ஆண்ட சக்கரவர்த்திகள் இன்பத்தை அளிக்கின்ற தம் பெண்களை இப்பிறவியிலேயே பிறர் கொள்ளும்படியாகத் தாமே விட்டு,
கொடிய மின் ஒளி பரக்கின்ற காட்டிற்குச் சென்று, அங்கும் பகைவர்களாலே துன்புறுத்தப்படுவார்கள்;
ஆகையாலே, ஒளி பொருந்திய திருமுடியைத் தரித்த திருமகள் கேள்வனுடைய திருவடிகளை விரைந்து சேர்மின்,’ என்றவாறு.
‘திறை கொணர்ந்து உய்ம்மின்’ என மாறுக. திறை – கப்பம். தம்மின் – தம்முடைய.
இனி, தம் இன் என்பதில் ‘இன்’ என்பதனைச் சுவைக்கு அடையாக்கலுமாம். குமைதின்பர் – நலியப்படுவர்.
‘திருமாலை அடி விரைந்து சேர்மின்,’ எனக் கூட்டுக. திருமாலை உருபு மயக்கம்.

இராச்சியத்தை இழத்தலே அன்றிக்கே, இராச்சியம் பண்ணுகிற காலத்தில் மணஞ்செய்துகொள்ளப்பட்ட இன்சுவை
மடவார்களையும் பகைவர்களுக்குக் கொடுத்து எளிமைப்படுவர் என்கிறார்.

‘திறை கொணர்ந்து உய்ம்மின்’ என்று உலகு ஆண்டவர் –
பகைவர்களுடைய இராச்சியத்தைத் தனக்கு ஆக்கக் கோலினால் போர் செய்து ஆக்கிக் கொள்ளுகை அன்றிக்கே,
‘நீ உன் பிராணனை நோக்கிக்கொள்ள வேண்டியிருந்தாயாகில், உன் செல்வம் அனைத்தையும் நம் பக்கலிலே கொண்டுவந்து தந்து,
உன்னைக்கொண்டு பிழைத்து ஓடிப் போ’, என்கிற வார்த்தையாலே ஆயிற்றுத் தனக்கு ஆக்குவது; என்றது,
‘படையும் குதிரையும் கொண்டு போர் செய்து தனக்கு ஆக்கிக்கொள்ள வேண்டா;
திறையைக் கொண்டு வந்து கொடுத்து உயிர் பிழைத்துச் செல்லுங்கோள்’ என்கிற சொல்லாலே உலகத்தை ஆண்டவர்கள் என்றபடி.
இம்மையே –
இப்படி அரசு ஆண்ட இந்தப் பிறவியிலேயே.
தம் இன் சுவை மடவாரைப் பிறர் கொள்ள –
தத்தமக்கு எல்லையில்லாத இனிய பொருள்களான பெண்களைப் பகைவர்கள் கொள்ளும்படியாக; என்றது,
‘தான் அரசு ஆளுங்காலத்தில் அந்தத் தேசத்திலே உள்ள பெண்களை எல்லாம் திரட்டுமே?
இவன் திரட்டினபடியே வேறு ஒருவன் வந்து கைக்கொள்ளும்,’ என்றபடி. இது,
நரகபுரம் அழிந்த அன்று கண்டதே அன்றோ? பாண்டவர்களுடைய இராஜசூயமும் செருக்கும் எல்லாம் கிடக்க,
திரௌபதி சபையிலே மானபங்கம் அடைந்த அதுவே அன்றோ இதில் பிரமாணம்?
தாம் விட்டு –
தம்முடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுவதில் உண்டான நசையாலே, மனம் அறியத் தாங்களே
கூறைப்பையும் சுமந்துகொண்டு போய் விட்டுப் போவர்கள்; ‘ஆபத்தின்பொருட்டுச் செல்வத்தைச் செலவு செய்யாமல் காக்கக் கடவன்,
அப்பொருள்களைச் செலவு செய்தாகிலும் மனைவிமார்களைக் காக்கக் கடவன், அம்மனைவிமார்களைக் கொண்டும்
அப்பொருள்களைக்கொண்டும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக் கடவன்,’ என்றார் பிறரும்.

வெம் மின் ஒளி வெயில் கானகம் போய் –
பேய்த்தேரையும் வெயிலையும் உடைத்தான காட்டிலே போய்.
அன்றிக்கே,
‘வெவ்விய மின்னின் ஒளி போலே இருந்துள்ள வெயிலையுடைத்தான காட்டிலே போய்’ என்னுதல்.
என்றது, ‘பின்னையும் இவன் இங்கே காணில் நலியும்’ என்று தண்ணீர் அற்றதாயும் மனித சஞ்சாரம்
இல்லாததாயும் இருக்கின்ற காட்டிற்குச்செல்லும்’ என்றபடி.
குமைதின்பர்கள் –
நலிவுபடுவர்கள்; என்றது, செல்வம் உடையவர்களுக்கு எங்கும் ஆள் ஓடுமே? ‘அவன் போன இடத்தே போய்க் கொன்று வருகிறோம்;
எங்களுக்கு வெற்றிலை இட்டருளீர்’ என்பார்கள்; அருகே நின்று. ‘அப்படியே செய்து வாருங்கோள்’ என்று
அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் கொடுத்து விடுவார்கள்; அங்குப் போய்க் கொலை தப்பாது என்றபடி.
அடியிலே நாய் அடி இட்டு நலியத் தொடங்கிற்றே? நாய் முதலிலே காற்கூறு கொண்டது;
அடியிலே என்பதற்கு ‘முதற்பாசுரத்திலே’ என்பதும், ‘காலிலே’ என்பதும் இரு பொருள். அடியிட்டு என்பதற்கும்
‘தொடங்கி’ என்பதும், ‘காலிலே பிடித்து’ என்பதும் இரு பொருள்.
‘காலாகிற பாகம்’ என்பதும், ‘நாலில் ஒரு பாகம்’ என்பதும் பொருள். ‘காற்கூறு கொண்டது’ என்றதனால்,
‘முக்காற்கூறும் வெற்றிலை பிடித்தவர்கள் கொள்ளுகிறார்கள்’ என்பது தொனி.
ஆன பின்பு,
செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மின் –
சிவந்து மின்னுகின்ற முடியையுடைய திருமகள் கேள்வனுடைய திருவடிகளை விரைவில் பற்றுவதற்குப் பாருங்கோள்.
தன்னை அடைந்தார்க்குக் கொடுக்கைக்குத் தலையான முடி உண்டு; கொடுப்பிக்கைக்கு அருகே இருப்பாரும் உண்டு;
‘விரையாமையால் உள்ள இழவே உள்ளது’ என்பார், ‘செம்மின் முடித் திருமாலை விரைந்து’ என்கிறார்.
‘அவன் முடியைத் தரினும் நீங்கள் திருவடியைச் சேருங்கோள்’ என்பார், ‘அடி சேர்மினோ’ என்கிறார்.
‘நீங்கள் உங்கள் அடிவிடாதே கொள்ளுங்கோள்’ என்பதாம்.
‘உங்கள் அடி விடாதே கொள்ளுங்கோள்’ என்றது, சிலேடை : அடி – திருவடியும் மூலமும்.
தாஸ்யம் விடாதே -அடிப்படைக் கருத்து -சேஷத்வ பாரதந்த்ர்யம் விடாதே கொள்ளுமின் –

—————————————————————————————–

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-

காலில் விழுந்த ராஜாக்களையும் மதியாமல் இருந்தவர் -பஸ்மம் -போலே -ஆகிறார்கள் -வஸ்து என்று கூட பிரதிபத்தி கூடாமல் –
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ-சக்ரவர்த்தி -குரு நில மன்னவன் முடி –இவர்களே சென்று தோழா -அங்கீ காரம் செய்யாமல்
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்-முரசு தோல் பறை -சப்திக்க -செவி மடுத்து அந்ய பரராகி -பராக்கு பாவித்து
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்-பரமாணு ஆகும் படி -மதிப்பு அற்று -சடக்கென
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.-பரிமள சமவாயம் உடைய -அளந்க்ருதமான -கண்ணன் கழல் நினைமினோ

‘தம்முடைய அடிகளிலே பொருந்திய முடியினையுடையவர்களாகி அரசர்கள் தாங்கள் தொழாநிற்க, இடியைப் போன்ற முரசங்கள் வீட்டின்
முன்னிடத்திலே ஒலித்துக்கொண்டிருக்க வீற்றிருந்த சக்கரவர்த்திகள், (அந்நிலை கெட்டு) பொடியோடு சேர்ந்த தூளியாய்ப் போவார்கள்;
ஆகையாலே வாசனை சேர்ந்திருக்கின்ற திருத்துழாயினைத் தரித்த முடியினையுடைய கண்ணபிரான் திருவடிகளை விரைவில் நினையுங்கோள்’ என்பதாம்.
‘முடியினராகித் தொழ இருந்தவர்’ என்க. ‘இருந்தவர் துகளாய்ப் போவர்’ என முடிக்க; ‘ஆதலின், கழல்கள் நினைமின்’ என்க.
நொக்கு என்பது, விரைவுக் குறிப்பினைக் காட்டுகின்ற இடைச்சொல்.

இராசாக்கள், தங்கள் காலிலே விழுந்து கிடந்தால் அதனை ஒரு பொருளாக நினைத்து நோக்காத மதிப்பினையுடையவர்கள்,
‘ஒரு சேதநன் – மகன், என்று எண்ண முடியாதபடி மதிப்பு அறுவர்கள் என்கிறார்.

அடிசேர் முடியினர் ஆகி –
தன்னோடு ஒக்க ‘அரசு’, என்று இருந்த இராசாக்கள் தன் காலிலே சேர்க்கப்பட்ட முடியையுடையராய்.
அரசர்கள் –
இராசாக்கள்.
தாம் தொழ –
தாங்கள் அறிந்ததாகத் தொழும் இத்தனை போக்கி, ‘இவன் இப்படித் தொழுதான்’ என்னும் நினைவு அவனுக்கு இல்லை’ என்பார்,
‘தாம் தொழ’ என்கிறார். ‘இன்று ஸ்ரீபாதத்திலே தலை தாக்கத் தொண்டன் இடப்பெற்றோம்,’ என்று இவன்தான் நினைத்திருக்கும் இத்தனை என்பதாம்.
‘தலையாலே யாசித்த அந்தப் பரதாழ்வானுடைய வேண்டுகோள் என்னால் முடிக்கப்படவில்லை,’ என்கிறபடியே,
‘பிள்ளை தலையாலே இரக்க, நாம் மறுத்துப் போந்தோம்’ என்று புண்பட்டுத் தலை சீய்க்கும் இறைவனைத் தொழுகிறார்கள் அன்றோ?
‘இவன் இப்படித் தொழ, அவன் செய்தது என்? என்னில்,

இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் –
‘இன்ன அரசன் காணப் புகுகிறான்’ என்று ஓலக்கம் இருந்து, நாடகச்சாலையில் உள்ளாரை அழைத்து அருளப் பாடிட்டு,
நாட்டில் மரங்களை அடையத் தொளைத்துத் தோலை மேவி அதனை இடியைப் போன்று ஒலிக்கச் செய்து விருப்பு இன்றியே இருப்பான்.
‘இன்னான் வந்து காலில் விழுந்து கிடந்தான்; அவன் இதனை விரும்பாமல் கூத்துக் காண்பது பாட்டுக் கேட்பது ஆனான் என்று
உலகத்திலே பிரசித்தமாக வேண்டும்’ என்று ஆயிற்று இவன் இருப்பது.
அங்கு நிற்கின்ற தூணைக் காட்டிலும் ஒரு வாசி இல்லை காணும் இவருடைய நினைவால்: ஆதலின், ‘இருந்தவர்’ என்கிறார்.
‘இப்படி இருந்தவர்கள் என் ஆவர்?’ என்றால், பொடிபடுவர் என்கிறார் மேல் :
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் –
‘தனக்கு’ என்று ஓர் தன்மை இன்றிக்கே ‘பொடியோடே சேர்ந்த தூளி என்று வேறு ஒன்றனோடே சேர்த்து நிரூபிக்க வேண்டும்படி ஆவர்கள். என்றது,
‘தம் காலிலே ஒருவன் குனிந்தால் அநாதரிக்கும்படியான மதிப்புடையவர், தம் தலையிலே ஒருவன் அடி இட்டால்
‘நாம் இவன் தலையிலே அடி இட்டோம்’ என்று நினைக்க வேண்டாதபடி சிறிய துகளாய்ப் போவர்கள்’ என்றபடி.

ஆதலின் –
பொருளின் உண்மை நிலை இதுவான பின்பு.
நொக்கு என –
சடக்கு என.
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமின் –
முடி கொடுத்தால் மாலையும் கொடுக்க வேண்டுமே! திருமேனியின் பரிசத்தால் நாட்செல்ல நாட்செல்ல வாசனை ஏறி
வாரா நின்றுள்ள திருத்துழாய் மாலையைத் திருமுடியிலேயுடையனாய் அடியார்கட்கு எளியவனான கிருஷ்ணன் திருவடிகளை நினைக்கப் பாருங்கோள்.
‘நினைத்தல் மாத்திரம் போதியதாமோ? துதிசெய்தல் வேண்டாவோ?’ எனின், நினைத்த மாத்திரத்தில் கொண்டு முழுகுமே அன்றோ திருவடிகளின் இனிமை?
அன்றிக்கே,
‘இவ்வடியை நினைக்கவே சமுசாரம் அடி அறும்’, என்னுதல். என்றது, ‘யமன், கையில் பாசத்தைத் தரித்த தன்னுடைய கிங்கரனைப் பார்த்து,
‘பகவானிடத்தில் பத்தியுள்ளவர்களை விட்டுவிடு; நான் மற்றையோர்க்கே எஜமானன்;பாகவதர்களுக்கு எஜமானன் அலன் என்று
காதின் அடியில் சொன்னான் அல்லவா?’ என்கிறபடியே, யமன் முதலானோர் அஞ்சும்படியான மதிப்பைப் பெறுவர்,’ என்றபடி.

திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும்
சாதுவாராய்ப் போதுமின்கள் என்றான் நமனுந்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு.’-(நான்முகன் திரு. 68)

‘காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ!நின் நாமங் கற்ற ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே!’-(திருமாலை. 1)
என்னும் திருப்பாசுரங்களை அநுசந்திக்கத் தகும்.

———————————————————————-

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4-

மாமின் அர்த்தம் முந்திய பாசுரம் -அஹமின் அர்த்தம் இதில் –
அடியேன் கண்ட பேர் இடமும் சொல்லாதே -பெருமாள் – —–சாகரம் சோஷயிஷ்யாமி –
அடியேன் திருவடி பற்று சொல்லக் கூடாதே -பற்ற சுலபன் -ஆச்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள் -வாத்சல்யாதி
அஹம் -அஞ்சின அர்த்தம் தீர -ஆஸ்ரய கார்ய ஆபாதக கல்யாண குணங்கள்
குவலயா பீடம் சுழற்றி அடித்த பரத்வன் -இங்கு
மதிப்புக் கெடும் அன்றிக்கே -ஆயுஸ் சூம் நிலை நிற்காமல் விரோதி நிரசன்னா சீலனை பற்ற
நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்-பகவத அனுபவம் விட்டு -ஆராயப் பார்த்தால் -துர்லபம்
ஆழ்வாருக்கு நினைப்பான் -புகில் -நுணுக்கமாக ஆராய மாட்டாரே
தாம்பு வெண்ணெய் தானே ஆராய்வார்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்-யுகங்கள் -இந்த லோகத்தை ஆண்டு ஆண்டு கழிந்து
நுண்ணிய மணல் போலே பலர் இப்படி ஆனார்களே -இத்தை போலே -நுண் மணல் -என்ன முடியாத என்றபடி
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்-முடியும் பொழுது -கிருஹப் பிரதேசம் -அண்டை அசல் -வாசி தெரியாதபடி மாய்வரே
மிச்சம் இல்லாமல் -ஆதலால்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.-அடி பருத்த கால்கள் கொண்ட யானை -அட்டவன் திருவடி பணிமின் –

‘நினைப்பதற்குப் புகுந்தால், பல யுகங்களும் இந்த உலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போனவர்கள், கடல் எக்கலிலே உள்ள
நுண்மையான மணல்களைக்காட்டிலும் பலர் ஆவர்; அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாதபடி அழிந்தார்களே அன்றி,
வேறு ஒன்றனையும் பார்த்தோம் இல்லை; ஆதலால், பனைமரம் போன்ற கால்களையுடைய மதம் பொருந்திய யானையைக் கொன்ற
கிருஷ்ணன் திருவடிகளை வணங்குங்கள்,’ என்றவாறு.
‘நினைப்பான் – வினையெச்சம். எக்கல் – மணல் மேடு. ‘ஆண்டு கழிந்தவர் பலர்’ என்க. மனைப்பால் – மனை இடம்.

‘செல்வத்தின் நிலையாமையும் மதிப்பு அறுகையும் கிடக்கச்செய்தே, இன்பத்தை அனுபவிக்கின்றவர்களுடைய
நிலையாமையாலும் அவனைப் பற்றவேண்டும்,’ என்கிறார்

.நினைப்பான் புகின் –
நினைக்கப்புக்கால். ‘புகின்’ என்றதனால், கடலிலே இழிவாரைப்போல, நினைத்ததாய்த் தலைக்கட்ட ஒண்ணாதபடியாய் இருக்கிற இருப்பும்,
தாம் உலக வாழ்வினை நினையார் என்னுமிடமும் தோற்றுகின்றன. ‘ஆயின், இப்பொழுது நினைக்கிறது என்?’ எனின், ஆனாலும்,
பிறருடைய நலத்திற்காக நினைக்குமது உண்டே அன்றோ? –பர ஹிததுக்காக அனுசந்திக்கிறார் –
கடல் எக்கலில் நுண்மணலின் பலர் –
அலைவாய் எக்கலில் நுண்ணிய மணலிற்காட்டில் பலர் ஆவார். ‘இப்படியாண்டு முடிந்து போகிறவர்கள்தாம் யார்?’ என்னில்,
‘சிறிய மனிதர்கள் அல்லர்;
‘பிரமாவினுடைய ஒரு பகலை ஆயிரம் சதுர்யுகம் உள்ளதாகவும் ஓர் இரவை ஆயிரம் சதுர்யுகம் உள்ளதாகவும் அறிகிறார்கள்,’ என்கிறபடியே,
ஆயிரம் சதுர்யுகம் கூடியது ஒரு பகலாய், இப்படி இராத்திரியாய், இங்ஙனம் நூறு ஆண்டு இருந்து துவிபரார்த்த காலம் உயிர் வாழ்ந்து முடிந்து
போகும் பிரமன் முதலானோர்’ என்கிறார் மேல்;
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர் –
பல யுகங்களும் இவ்வுலகையாண்டு, இது குறி யழியாதே இருக்க, இதனை ‘என்னது’ என்று அபிமானித்து முடிந்து போனவர்கள்.
‘கழிந்தவர் கடல் எக்கலில் நுண் மணலின் பலர்,’ எனக் கூட்டுக.
‘உலகில் கழிந்த பிரமர்கள் கங்கையிலே உள்ள மணல் போலவும் இந்திரனாலே பெய்விக்கப்படுகின்ற மழைத்தாரைகள் போலவும்
எண்ணுதற்கு முடியாதவர்கள் ஆவர்,’ எனப்படுதலால். ‘கழிந்தவர் நுண் மணலிற்பலர்’ என்கிறார்.

மனைப்பால் மருங்கு அற –
அசலிட்டுப் பக்கத்தில் உள்ளார்க்கும் நாசமாம்; மனைப்பால் – மனை இடம். மருங்கு – அயல்.
சிறுக வாழ்ந்தானாகில், தன்னளவிலே போம்; பரக்க வாழ்ந்தானாகில், தன் அயலில் உள்ளாரையும் கொண்டு போம்;
பெருமரம் முரிந்தால் அருகு உள்ளவற்றையும் கொண்டு போம் அன்றோ? ஆதலின், ‘மனைப்பால் மருங்கு அற’ என்கிறார்.
மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம் –
இப்படி முடியுமது ஒழிய நிலைத்திருப்பாரை ஒருவரையும் கண்டிலோம். ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்னில்,
பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமின் –
‘பனைபோலே இருக்கையாலே அச்சத்தை உண்டாக்குகின்ற காலையுடைத்தான மதயானை உண்டு, குவலயாபீடம்;
அதனை முடித்தவன் திருவடிகளைப் பற்றுதற்குப் பாருங்கோள். அவன் உங்களுடைய பிரபலமான தடைகளைப் போக்க,
நீங்கள் அவன் காலிலே தலை சாய்க்கப் பாருங்ககோள்,’ என்கிறார்.
மேற்பாசுரத்தில். ‘மாம்’ என்றபதத்தின் பொருள் சொல்லப்பட்டது: இப்பாசுரத்தில் ‘அஹம்’ என்ற பதத்தின் பொருள் சொல்லப்படுகிறது.

———————————————————————————–

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-

அபிமதைகள் சம்ச்லேஷமும் அஸ்தரம் -அபிரூபமான சர்வேஸ்வரனைப் பற்றி வாழுமின்
பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி-அழகிய சீதளம் குளிர்ந்த -பரந்த பூ படுக்கையில்
-திரு அருள் பண்ணி அருள வேணும் -என்னும் ஆதரத்துடன்
சொல்வது ஆண்கள் -பட்டர்
பெண்கள் -மற்றவர் –
-இளமை உள்ள வன்று அன்று படுக்கையில் இருந்து கேட்க – அருள் புரிந்து -கலவி இன்பம் அமுது உண்டார் —
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்-அலங்கரோத்தரமாய் -காம சுகம் -சம்ச்லேஷ அனுபவம் –
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்-வஸ்த்ரம் -குறைந்து -கோமணம் -மட்டுமே -வெட்கம் போகாமல் –
முன் அளவில் தொங்கும் படி -சபலத்துடன் -அந்த ஸ்திரீகள் அநாதாரத்துடன் -ஆசா பலத்தால் பின்னும் அங்கே செல்வர்
இது தான் இவர்கள் நிலைமை -ஆதலால்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.-பேர் சொல்வதே வாழ்ச்சி -ஆஸ்ரிதருக்கு தன்னையே
அனுபவிக்கக் கொடுக்கும் -திரு நாமம் சொல்லி –
கிருபாதீனன்-பற்றி வாழும்

‘திருவருள் புரிதல் வேண்டும் என்று கூறுகின்ற அழகிய மிருதுவான கூந்தலையுடைய பெண்களோடு அழகிய குளிர்ந்த பரந்த பூக்களாலான
படுக்கையிலே சேர்க்கையால் உண்டான இன்பமாகிய அமுதை உண்டவர்கள், அந்நிலை கெட்டு, துணி முன்னே தொங்கவும் பெண்டிர் பலர்
இழித்துக் கூறவும் செல்லுவார்கள்; ஆதலால், நீலமணி போன்று பிரகாசிக்கின்ற திருமேனியையுடைய நம் மாயவனது
திருநாமத்தைச் சொல்லி வாழுங்கோள்,’ என்கிறார்.
‘என்னும் குழலாரோடு பூம்பள்ளியிலே இன்ப அமுது உண்டார்’ என்க. உண்டார் – பெயர். ‘உண்டார் செல்வர்’ என முடிக்க.
‘நால இழிப்பச் செல்வர்’ என்க. செல்வர் – முற்று.
இப்பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும் வியாக்கியானம் இன்பச் சுவையிலே தோய்ந்தது;
நவில்தொறும் இன்பம் பயப்பது. ‘அம் சீதம் பைம்பூம்பள்ளியிலே கிடக்கும் அணி மென்குழலாரைப் பார்த்துத் ‘திருவருள் பணிமின்’ என்னும் இன்ப அமுது உண்டார்’என்றும், கலவி இன்ப அமுது உண்டார்’ என்றும் தனித்தனியே கூட்டிப் பொருள் காணல் வேண்டும் என்பது அப்பெரியார் திருவுள்ளம்.
இதனை வியாக்கியானத்தில் காணலாகும்.

‘செல்வ நிலையைப் போன்றே மகளிருடைய சேர்க்கையும் நிலை அற்றது,’ என்கிறார்.

‘பணிமின் திருவருள் என்னும் அணி மென் குழலார்’ என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிப்பர்கள்;
இவர்கள் நிர்வாஹத்தில் ‘என்னும்’ என்னும் எச்சம் ‘குழலார்’ என்னும் பெயருக்கு அடைமொழி.
பட்டர், அங்ஙன் அன்றிக்கே,‘திருவருள் பணிமின் என்னும்’ என்னும் இதனை ‘இன்பக் கலவி அமுது உண்டார்’ என்றதனோடே சேர்த்து அருளிச் செய்வர்.
பணிமின் திருவருள் என்னும் – தான் இராச்சியத்தை அவர்களுக்குப் படுக்கைப்பற்று ஆக்கி, அவர்களைப் படுக்கையிலே வைத்துத் தான்
தாழ நின்று ‘திருவுள்ளத்தில் கிடக்கிறதை அருளிச்செய்யலாகாதோ?’ என்னும்; தன்னைத் தொழுது வணங்குகின்றவர்கள் புறம்பே உண்டே?
இனி. இன்பச் சுவையாவது, தான் இவர்களுக்குத் தாழ நிற்கையே அன்றோ?
அடி சேர் முடியனராகி இருந்தவன் இவளுக்கு அடிமை என்று தாள நின்று ரசிகத்வம் காட்டுகிறான் என்றவாறு -பட்டர்
அம் சீதம்பைம்பூம்பள்ளி –
காட்சிக்கு இனியதாய்க் குளிர்ந்து பரந்த பூக்களாலே செய்யப்பட்ட படுக்கையிலே
‘அவன் இப் படுக்கையிலே வைத்துத் ‘திருவருள் பணிமின்’ என்றால், அவர்கள் செய்வது என்?’ என்னில்,
அணி மென்குழலார் –
அவன் கொண்டாடுகிற கொண்டாட்டத்தில் விருப்பம் இன்றி, ஆபரணத்தைத் திருத்துவது குழலைப் பேணுவது ஆகா நிற்பர்கள்.
இன்பக்கலவி அமுது உண்டார் –
அவர்களுடைய அந்த ஊடலை முதலாகக் கொண்டதான கலவியால் வந்த ஆனந்த அமிருதத்தை உண்டவர்கள்.
அன்றிக்கே, ‘விருப்பம் இன்மையாகிற அமிருதத்தை உண்டவர்கள்’-அநாதர அமிருத பானம் உண்டவர்கள் – என்னுதல்.
‘அல்லி மலர் மகள் போக மயக்குகளைப் பின்பற்றுகிறார்கள்’ என்பதனைத் தெரிவித்தபடி.
வேறு ஒருவன் வந்து அவர்களைக் கொண்டு சென்று இன்பக்கலவி அமுது உண்ணாநிற்குமோ? இவன் பின்னைத் தன்னுடைய சரீரத்தைக்
காப்பதற்காக அவர்கள் பக்கலிலே சென்று இரக்கத் தொடங்கும்.
துணி முன்பு நால –
‘அந்தத் திரிஜடன் -பெருமாள் இடம் கோ தானம் வாங்கிப் போனவன் – பிராஹ்மணன் மனைவியின் வார்த்தையைக் கேட்டு உடுத்துவதற்குப்
போராத துணியை உடுத்திக்கொண்டு புறப்பட்டான்,’ என்கிறபடியே, பின்பு கொண்டு இணைக்க எட்டம் போராமையாலே முன்னே தொங்கா நிற்கும்.
பல் ஏழையர்தாம் இழிப்ப –
இவன்பக்கல் தங்களுக்கு உண்டான அன்பு தோன்றச் செத்துக் காட்டுவர்கள் முன்பு; இப்போது, தங்களை வைத்துக் கொண்டு
இருப்பவனுக்குப் பிரியமாக, இவன் இன்பத்தை அனுபவிப்பதற்குத் தகுதி இல்லாதவன் என்பதனையும்,
இவனிடத்துள்ள உலோபத் தன்மையையும் சொல்லி விருப்பம் இல்லாத சொற்களைக் கூறாநிற்பார்கள். இவர்கள் தாம் பலர் ஆதலின்,
‘பல் ஏழையர்’ என்கிறார்.
செல்வர் –
‘நம்மிடத்துள்ள அன்புத்தளை அன்றோ இவர்களை இங்ஙனம் சொல்லச் செய்கிறது?’ என்று,
அவர்கள் கூறிய வார்த்தைகளையும் புத்தி பண்ணாதே செல்வார்கள்; என்றது, ‘முன்பு ‘திருவருள் பணிமின்’ என்ற போது ஊடல்
காரணமாகக் கூறிய வார்த்தையைப் போன்றதாக இதனையும் நினைத்துச் செல்வர்,’ என்றபடி.
‘நன்று; இன்பத்தை அனுபவிப்பதற்குத் தகுதி இன்றிக்கே இருக்க, செல்லுதற்குக் காரணம் என்?’ எனின்,
‘கிழத்தன்மை அடைந்தவனுக்குத் தலைமயிர்கள் உதிர்கின்றன; பற்கள் விழுகின்றன; கண்களின் பார்வை குறைகின்றது;
ஆசை ஒன்று மாத்திரம் ஒருவிதக் கேடும் இன்றி இருக்கின்றது,’ என்னக் கடவது அன்றோ?-கிருஷ்ண த்ருஷ்ணா வாகக் கூடாதோ –
‘ஆன பின்பு, ‘பக்தாநாம் – ‘பக்தர்களுக்காகவே என்று இருக்கிற உடம்பைப் பற்றப் பாருங்கோள்’ என்கிறார் மேல் :
மணி மின்னு மேனி –
நீலமணி போன்று காந்தியையுடைத்தான திருமேனி;
அன்றிக்கே,
‘நீலமணியைக்காட்டிலும் விஞ்சின அழகையுடைத்தான திருமேனி’ என்னுதல்.
‘நன்று; திருமேனி பத்தர்களுக்காகவே இருக்குமோ?’ எனின், ‘இரண்டு சரீரங்களைக் கொடுத்து உதவிய மகாத்துமாவான
அந்த அனுமானுக்கு, விலக்காதது ஒரு சமயத்தைப்பெற்று, என்னால் கொடுக்கப்பட்டதான இந்த ஆலிங்கனமானது
எல்லாக் கொடைக்கும் சமானமாகக் கடவது என்று கொடுக்கும்படி அன்றோ?

பக்தாநாம் -என்கிற உடம்பு -அடியவர்க்கு ஜிதந்தே ஸ்தோத்ரம் ‘தேவரீருடைய திவ்யாத்ம சொரூபமானது தேவரீருக்கு அன்று; திவ்ய
மங்கள விக்கிரஹமும் தேவரீருக்கு அன்று; திருவாழி முதலானஆயுதங்களும் தேவரீருக்கு அன்று; அப்படியிருந்தும், திவ்ய மங்கள
விக்ரஹத்தையுடையவராகவே இருக்கிறீர்; தேவரீர் பத்தர்களுக்காகவேபிரகாசிக்கின்றீர்,’ என்பது அச்சுலோகத்தின் பொருள்.

ஸ்ரீராமா. யுத். 1 : 13. இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் பின்வருமாறு :
ஏஷ : – தாம் அனுபவித்துத் தமக்கு ரசித்தது என்று பிறர்க்குக் கொடுப்பாரைப் போலே; இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ’:
(விஷ்ணு புரா. 6. 5 : 84.) என்னக் கடவதிறே. ‘இச்சா க்ருஹீதம்’ என்கையாலே, கர்ம நிபந்தனம் அல்ல என்று தோற்றுகிறது;
‘அபிமதம்’என்கையாலே, தனக்கும் போக்கியம் என்று தோற்றுகிறது;
சர்வ ஸ்வபூத : –இது ஒழிய மற்றொன்றைக் கொடுத்தாலும் இது கொடாததால் வரும் குறை கிடக்குமே? திருமேனியைக் கொடுக்கவே
எல்லாம் கொடுத்ததாமிறே; சர்வ அபாஸ்ரயமாயன்றோ திருமேனிதான் இருப்பது! மற்றுக் கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான வியாவிருத்தி தோற்றி இருக்கிறது
பரிஷ்வங்கோ ஹநூமத : – அமிருதாசிக்குப் புல்லையிட ஒண்ணாதே!பிறந்தது குரங்கு ஜாதி -நம்மை சேவிக்க அன்றோ பிறந்தான் –
ஸ்ரீ வைகுண்டம் -புல் ஸ்தானம் –
ஸ்நேஹோமே பரம : – (உத்தரராமாயணம்) – என்று இவ்வுடம்பை விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே.
மயா காலமிமம் பிராப்ய தத்த: ‘இவன் ஒன்று கொள்வான் ஒருவன் அல்லன்; நாம் இவனுக்கு ஒன்று கொடுக்கப் பெறுவதுகாண்,’ என்று
குறைபட்டிருந்தவர், இவன் விலக்காததொரு சமயம் பெற்று இப்படிக் கொடுத்துக்கொண்டு நின்றார்.
தஸ்ய மஹாத்மந : – ஒரு படி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனை போக்கி, இரண்டு உடம்பு கொடுத்தவனுக்கு ஓர் உடம்பு தரம் அன்றிறே.
வேணி உத்க்ரதனத்திலே பிராட்டி ஒருப்பட்ட அன்று அவளை உளள் ஆக்கினான்;
‘அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே’ (ஸ்ரீராமா. யுத்.) என்ற பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி இவர்க்கு இரண்டு உடம்பு
கொடுத்தானிறே அவன். அவன் பல படி உபகரிக்கையாலே இவர் ஒருபடி உபகரித்தார்,’ என்பது.

நம் மாயவன் –
அடியார்கள் விஷயத்தில் அவன் இருக்கும்படி எல்லை காணப்போமோ? ‘இப்பேற்றுக்குச் செய்ய வேண்டுவது என்?’ எனில்,
பேர் சொல்லி வாழ்மினோ –
செய்ய வேண்டிய முயற்சி இவ்வளவே; பின்னை வாழ்வோடே தலைக்கட்டும். வாழ்க்கைக்கு ஒரு பேரோ!
‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்னும்படி அன்றோ இது தன்னுடைய இனிமை இருப்பது?
பேரே வாழ்க்கை என்றவாறு -பேர் சொல்வது உபாயம் இல்லையே
கெடும் இடராய –கேசவா என்ன -நாளும் கொடு வினை –தமரும் குறுககில்லார்

————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: