பகவத் விஷயம் காலஷேபம் -84- திருவாய்மொழி – -3-10-1….3-10-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

மேல் திருவாய்மொழியிலே பிறரைக் கவி பாடுகிறவர்களைப் பகவானிடத்தில் மீட்கப் பார்த்து, அவர்கள் மீளாது ஒழிய,
‘இவர்களைப் போலே ஆகாமல் யான் முதன் முன்னம் பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளை உடையவனாகப் பெற்றேன்,’ என்கிறார்;
‘பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளையுடையவனான அளவேயோ?
பகவானைத் துதிப்பதற்குத் தக்க உறுப்புகளை உடையவனாகவும் பெற்றேன்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில்.
‘முடியானே’ என்ற திருவாய்மொழியில், தாம் அவனை அனுபவிக்கக்கோலி, அது பெறாமையாலே,
தாமும் தம்முடைய உறுப்புகளும் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார்;
தாம் பகவத் விஷயத்திலே கூப்பிடுகிறது போன்று, சமுசாரிகள் மனைவி மக்கள் முதலியவர்களைப் பற்றிக் கூப்பிடுகிறபடியை நினைத்து,
அவர்கள் கேட்டினைக் கண்டவாறே தமக்கு- ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் பிறந்த இழவு -தானே பேறாய்த் தோன்றிற்று.

அதற்கு மேலே, ‘அடியார்களின் பொருட்டுக் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களைப் போன்று சமுசாரிகள் நடுவே அவர்களோடு
ஒத்த வடிவைக்கொண்டு அவதரித்த திவ்விய அவதாரங்களையும் அவதாரங்களில் செய்த திவ்விய செயல்களையும் வடிவழகையும்
ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தியையும் திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தியையும் அகடிதகடநா சாமர்த்தியத்தையும் ஆகிய இவற்றை
எல்லாம் அனுபவிக்கப்பெற்றேன்; எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.

இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘சன்மம் பலபல செய்து’ என்றுதனை நோக்கித் ‘திவ்விய அவதாரங்களை’ என்றும்,
‘மாளப்படைபொருத’ என்றதனை நோக்கித் ‘திவ்விய செயல்களை’ என்றும்.
‘எங்கும் அழகு அமர்’ என்பது போன்றவைகளை நோக்கி ‘வடிவழகை’ என்றும்,
‘மட்டவிழ் தண்ணம் துழாயான்’ என்றதனை நோக்கி, ‘ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும்,
‘சங்கொடு சக்கரம் வில்’ என்பன போன்றவைகளைத் திருவுள்ளம் பற்றித் ‘திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும்,
‘துக்கம் இல் ஞானம்’ என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘அகடித கடநா சாமர்த்தியத்தை’ என்றும் அருளிச்செய்கிறார்.

—————————————————————————

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-

அவதார முகத்தால் ஆஸ்ரித ரஷணம் -பற்றினதால் குறை இல்லை
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் -கிருபாதீனம் -தேவாதி ஜாதி -ஓர் ஒன்றில் அவாந்தர பேதமும் –
சங்கல்பம் மாத்ரம்-இல்லாமல் விஷயமாம் படி
இதர சஜாதீயனாக வந்து அவதரித்து -ப்ராதுர்பாவித்து -சாது பரித்ராண-துஷ்ட நிக்ரகம்
சங்கொடு சக்கரம் வில்-தன்னில் பிரியாத சங்கு சக்கரம்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு-கை விட்டு போகாத நந்தகம்
வாழ் வீசும் பரகாலன் -எதிரிகளை அளிக்கும் பொழுது கை விடாத நந்தகம் –
புள் ஊர்ந்து-கருடவாகனம் நடாத்தி
உலகில் வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத-ஈரம் இல்லாத –
படைகளை அணி வகுத்து பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.-சௌர்ய வீர்ய பராக்ரமங்கள் -சௌலப்யாதி அடியவர் இடம்
தேசாந்திர காலாந்திர தேகாந்த்ரங்களிலும் இப்படி அனுபவம் இல்லை என்னும் படி
அபரிமித -அவன் வைபவம் அனுபவித்து முடித்தார் -அவன் மயர்வற மதிநலம் அருளிய பெருமை –
அர்ஹ கரண ஹர்ஷம்

‘பல பல பிறவிகளை எடுத்துக் கண்களுக்குப் புலனாகி, சங்கம் சக்கரம் வில் ஒளி பொருந்திய உலக்கை ஒளி பொருந்திய
வாள் தண்டு இவற்றைக் கையில் தரித்துக்கொண்டு, கருடப்பறவையினை வாகனமாகக் கொண்டு, வலிமை பொருந்திய
அரக்கர்களும் அசுரர்களும் படைகளோடு இறக்கும்படி போர் செய்த நன்மையையுடைய சர்வேசுவரனுடைய
நற்குணங்களைத் துதிக்கப்பெற்ற நான், ஒரு குறையும் இல்லாதவனேயாவேன்’ என்கிறார்.
‘செய்து வெளிப்பட்டுக் கொண்டு பொருத நன்மையுடையவன்’ என்றும், ‘ஊர்ந்து பொருத நன்மையுடையவன்’ என்றும் கூட்டுக.
‘மாளப் பொருத’ என்க. இப்பாசுரத்தில் இறைவனுடைய ஐந்து ஆயுதங்களும் கூறப்பட்டிருத்தல் காணலாம்.
உலக்கை – பலராமனுக்குரிய படை. இச்செய்யுள் இனவெதுகையாய் அமைந்தது.

இத்திருவாய்மொழியிற்சொல்லுகிற பொருளைச் சுருக்கமாக அருளிச்செய்கிறார்;
‘திவ்விய ஆயுதங்களோடே அவன் வந்து அவதரிக்கும்படியைச் சொல்லப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘அடியார்களைக் காத்தற்பொருட்டு பல அவதாரங்களைச் செய்து அவர்கள் விரோதியை அழிக்கின்ற எம்பெருமானுடை
நற்குணங்களைப் புகழப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் கூடப் பிறவாத பிறவிகளை ஏறிட்டுக் கொண்டு வந்து
காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப் பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
அன்றிக்கே,
‘சர்வேசுவரனாய் மேன்மை அடித்து இவற்றோடே தோய்வு இன்றி இருக்கை அன்றிக்கே இவை பட்ட இடரைத் தானும் ஒக்க
வந்துபட்டுக் காக்கின்றவனாய் இருக்கிறபடியைச் சொல்லப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை,’ என்கிறார் என்னுதல்.
என்றது, ‘இனியது விஞ்சின இடங்களில் மிகவும் ஆழங்காற்படுகைக்கு உடலாமித்தனை அன்றோ?’ என்றபடி.
இவ்வவதாரம் அடி அறியுமவர்கள் நிர்ஹேதுக கிருபையால் -அவ்வருகு போக மாட்டார்கள் -பரத்வத்துக்கு போக மாட்டார்கள்
பரிஜா நந்தி யோநிம்-ஜன்ம கர்ம மே திவ்யம் என்று அவனும் தலை குலுக்கி -நெஞ்சு உளுக்கி அன்றோ இருப்பான் –
தீமதாம் அக்ரேசர்-பிறந்தவாறும் -என்றவாறே வித்தராய் இருப்பார்
ஞானாதிகர் -என்பதாலே ஆழ்ந்து போவார்கள் –

சன்மம் பலபல செய்து
ஓர் அவதாரத்தைச் சொன்னால், ‘எத்திறம்!’ என்று ஈடுபடுகின்றவர், பல அவதாரங்களைப் பொறுக்க மாட்டார் அன்றோ? அதனால், ‘பல’ என்கிறார்.
‘கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பிறவிக்கு எல்லை காண்கின்றோம்; கர்மங்கட்குக் கட்டுப்படாதவன்
பிறவிக்கு எல்லை காண்கின்றிலோம்,’ என்பார், ‘பலபல’ என்கிறார்.
தன்னுடைய பிறவிகளைத் தானே சொல்லப் புக்காலும் ‘பஹூநி – பல’ என்னும்படி அன்றோ இருக்கிறது?
ஆக, கர்மம் காரணமாக வரும் பிறவிகட்கு எல்லை உண்டு; திருவருள் காரணமாக வரும் பிறவிக்கு எல்லை இல்லை,’ என்றபடி.
அன்றிக்கே, ‘தேவர்கள் முதலான பிறவி பேதங்களையும் அவாந்தர பேதங்களையும் கருதிப் ‘பலபல’ என்கிறார்,’ என்னலுமாம்.
தோன்றுகிற அளவேயன்றி, கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் செய்தால், ‘பிறகு பன்னிரண்டாவது மாதமாகிய
சித்திரை மாதத்தில் நவமி திதியில் ஸ்ரீராமனைப் பெற்றாள்’ என்கிறபடியே, பன்னிரண்டு மாதங்கள் கர்ப்பவாசம் செய்து வந்து
அவதரித்தானாதலின், ‘செய்து’ என்கிறார். ‘பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப்பாங்கினால்’ என்றார்கள் அன்றோ பெற்றவர்களும்?
அன்றிக்கே,
‘உலகிற்கு எல்லாம் தமப்பனான சர்வேசுவரன், தனது ஒவ்வொரு பிறவியிலும் தன் புத்திரர்களைத் தான் தமப்பனாக
உடையவனாய் இருக்கிறான்; அந்தச் சர்வேசுவரனுடைய அவதாரத்தின் பெருமையை அறிவில்லாதவர்கள் அறியார்கள்,’ என்கிறபடியே,
‘எல்லாப் பொருள்கட்கும் காரணனாய் இருக்கின்ற தான் தன்னுடைய காரியங்களிலே ஒரு பொருளுக்குத்
தான் காரியமாக வந்து அவதரிக்கின்றான்,’ என்பார், ‘செய்து’ என்கிறார் என்னலுமாம்.

வெளிப்பட்டு –
‘கண்களுக்குக் காணப்படுமவன் அலன்’ என்கிற தன்னைக் கண்களுக்கு விஷயமாக்கி. என்றது, ‘இச்சரீரத்தோடு சம்பந்தம் இல்லாத
கண்களாலே எப்பொழுதும் காணக்கூடிய வடிவை ஊன் கண்களுக்கு விஷயமாக்கிக் கொண்டுவந்து காட்டுகை.
‘என்றேனும், கட்கண்ணாற் காணாத அவ்வுருவை’ அன்றோ கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்?’ என்றபடி.
‘எப்போதும் செல்லுகிற இடத்தில் நிதி கண்டு எடுப்பாரைப் போன்று, இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய திருமேனியை
இதர சாதிகளின் தன்மையை உடையதாக்கி வந்து அவதரிக்கின்றான்’ என்பார், ‘
இதனால், அவதரிக்கும்போது திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிக்கின்றான் என்பதனைத் தெரிவித்தபடி.

‘ஸ்ரீ சத்துருக்நாழ்வான், அப்போது தாய் மாமனான யுதா ஜித்தினுடைய வீட்டிற்குச் செல்லுகின்ற ஸ்ரீ பரதாழ்வானால்
அழைத்துச் செல்லப்பட்டார்,’ என்கிறபடியே, இறைவனை விட்டுப் பிரியாத ஒற்றுமையைத் தெரிவிப்பார், ‘சங்கொடு’ என்கிறார்.
‘நல்லாரைக் காத்தற்கும் பொல்லாரைப் போக்கற்கும் சங்கு ஒன்றே போதியதாக இருக்க, சக்கரத்தையும் கொண்டு வந்தான்’ என்பார்,
‘சங்கொடு சக்கரம்’ என்கிறார். -ஸ்ரீ பரத ஆழ்வான் திருச்சங்கு அம்சம் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் திருச்சக்கர அம்சம் –
ஒரு கொத்துக்கு ஒருவரைக் கொண்டு வருதலோடு அமையாது, வில்லையும் கொண்டு வந்தானாதலின், ‘சக்கரம் வில்’ என்கிறார்.
ஆதித்யானாம் -விஷ்ணு போலே -ஒரு கொத்துக்கு ஓன்று சொல்லி இல்லாமல் -அது அர்ஜுனனுக்கு சரி- ஆழ்வாருக்கு போதாதே
கருதும் இடம் பொரும்படி ஞானத்தாலே மேம்பட்டிருப்பவர்களாதலின், ‘ஒண்மையுடைய உலக்கை’ என்கிறார். ஒண்மை – அறிவு.

கையில் திவ்விய ஆயுதங்களைக் கண்டால், ‘இவற்றைப் போருக்குக் காரணமாகத் தரித்துக்கொண்டிருக்கிறான்,’ என்று
இருப்பர்கள் சமுசாரிகள்; அவ்வாறு அன்றி, நித்தியசூரிகள், ‘அழகிற்குக் காரணமாகத் தரித்துக்கொண்டிருக்கிறான்’ என்று இருப்பர்கள்;
இவரும் அவர்களிலே ஒருவர் ஆகையாலே, -விண்ணுளாரிலும் சீரியர் -அழகிற்குக் காரணமாகவே கொண்டு, ‘ஒள்வாள்’ என்கிறார். ஒண்மை – அழகு.
‘ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற்போலே ஆயிற்று வடிவும் திவ்விய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது,’ என்றபடி.
ஆக, இங்கு நின்றும் போவார்க்கு அடையத் தக்கவர்களான நித்தியசூரிகளோடே கூட வந்து அவதரிக்கிறான் என்பதனையும்,
அவ்வாறு அவதரிப்பதுவும் கண்டு அனுபவித்த பின்னர், ‘அடியார்கள் குழாங்கனை உடன் கூடுவது என்றுகொலோ!’ என்று
பிரார்த்திக்க வேண்டாதபடி அவர்களோடே கூடக் காட்சி கொடுக்கைக்காக என்பதனையும் தெரிவித்தபடி.

புள் ஊர்ந்து –
இதுவும் ஒரு சேர்த்தி அழகு; பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போன்று அன்றோ இருப்பது?
உலகில் –
இவ்வழகுதான் ஒரு தேசவிசேஷத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்குமது அன்றோ? அங்ஙனம் இருக்கவும் அவ்வழகினை இங்கே
அனுபவிக்கும்படி செய்தானாதலின், ‘உலகில்’ என்கிறார்.
வன்மையுடைய அரக்கர் அசுரரை –
இவ்வழகைக் கண்டு நெஞ்சு நெகிழாதவர்களான இராக்கதர்களையும் அசுரர்களையும். தமக்கு நினைதொறும் சொல்லுந்தொறும்
நெஞ்சு இடிந்து உகுகின்றதாதலின், இவ்விஷயத்தில் தம்முடைய மென்மை போன்று எல்லார்க்கும் இருக்குமோ என்பார்,-
அரக்கர்களுக்கு நெஞ்சு நெகிழ்ச்சி இல்லாமை சித்தமாயிருக்க,‘வன்மையுடைய’ என்று விசேடிப்பதற்குத் தாத்பர்யம் அருளிச்செய்கிறார்,
‘தமக்கு நினைதொறும்’ என்று தொடங்கி.
‘நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு நெடிந்துகும்! வினைகொள்சீர் பாடிலும் வேம் எனது ஆருயிர்!
சுனை கொள் பூஞ் சோலைத்தென் காட்கரை என்னப்பா! நினைகிலேன் நான்உனக்கு ஆட்செய்யும் நீர்மையே!’என்பது இவருடைய ஸ்ரீசூக்தி,
‘வன்மையுடைய அரக்கர்’ என்கிறார். அவனைக் காணாத போது ‘ஈஸ்வரோகம் – ‘ஈசுவரன் ஆகின்றேன்’ என்று இருக்கலாம்;
திவ்விய ஆயுதங்களோடே அழகிய வடிவழகைத் திருவடி திருத்தோளிலே கண்டால், ‘சரணம்’ என்னுதல், எழுத்து வாங்குதல் செய்கை அன்றியே
எதிர் இடுவதே பையல்கள்!’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘அழகுக்கு இலக்காய் வாழமாட்டாது, அம்புக்கு இலக்காய் முடிந்து போவதே!’ என்கிறார் என்றபடி.

மாளப் படை பொருத –
அவர்கள் முடிந்து போம்படி ஆயுதத்தாலே பொருத.
அன்றிக்கே,
‘போர்க்களத்தே பொருத’ என்னலுமாம்.
நன்மை உடையவன் –
போர்க்களத்தில் ஆரோதமடித்தல் ‘தன்னுடைய பிள்ளைகள்’ என்று அன்பு பாராட்டுதல் செய்யாதே,‘அடியார்களுக்குப் பகைவர்கள் என்று அழியச்செய்த நன்மையுடையவன்.
அன்றிக்கே,
நன்மையாவது – நினைவினாலே செய்யாமல், அவதரித்துப் போரைச் செய்து முடித்த நன்மை ஆகவுமாம்.
‘மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில், தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையும் இறே’ என்றார் அன்றோ இவர்தாம்?
‘அடியார்கட்குப் பகைவர் என்று அழித்தாலும், அது கொலை அன்றோ?’ எனின், யாகத்தில் செய்யப்படுகின்ற உயிர்க் கொலைகளில்
கை கூசினான் ஆகில், பிராயஸ்சித்தம் பண்ண வேண்டும் என்னா நின்றதே அன்றோ?
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் –
அவனுடைய மங்களம் பொருந்திய நற்குணங்களை முறை கேடாகச் சொல்லப்பெற்ற நான். பரவுதல் – அடைவு கெடக் கூறுதல்.
ஓர் குறைவு இலன் –
ஒரு குறையும் உடையேன் அல்லேன்.
1-முதலிலே சமுசாரிகளைப் போன்று அறியாதொழிதல்,
2-அவதரித்துக் கண்ணுக்கு இலக்காய்ப் பாசுரமிட்டுப் பேச நிலமன்றிக்கே இருத்தல்,
3-சிசுபாலன் முதலியோர்களைப் போன்று ‘நம்மிலே ஒருவன்’ என்று தாழ்வாகப் பேசி முடிந்து போதல்.
4- ஸ்ரீ விஸ்வரூபத்தில் அருச்சுனனைப் போன்று நீச்சு நீராதல் -கரை காண ஒண்ணாமல் -இன்றிக்கே இறைவனைப் புகழ்ந்தவர் ஆதலின்,
‘ஓர் குறைவிலன்’ என்கிறார்.
அன்றிக்கே,
‘அவன் எல்லா விதமான கல்யாண குணங்களை பரமாத்துமாவோடு கூட அனுபவிக்கின்றான்,’ என்கிறபடியே,
‘பரமபதத்திலே அனுபவிக்கக் கூடிய குணங்களின் அனுபவத்தை இங்கே அனுபவிக்கப்பெற்ற எனக்குப்
‘பரமபதத்திற் போகப்பெற்றிலேன்’ என்ற குறை உண்டோ?’ என்கிறார் என்னுதல்.

——————————————————–

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2-

விரோதி நிரசன அர்த்தமாக -அவதார மூலமாக -ஷீரார்ணவ -சாயி உடைய ரஷணமார்த்த பிரவ்ருத்தியால் வந்த புகழை
ப்ரீதி பூர்வகமாக -விச்சேதம் குறை இல்லாமல் அனுபவிக்கப் பெற்றேன்
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்-மிடுக்கன் -ஏறி -ஈச்வரத்வ ஸூ சக திருக் கண் அழகு
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்-மலரும் படி -சிந்தித்துக் கொண்டே உறங்குவான் போல்
-அத்விதீயமான தனது திவ்யாத்மா ஸ்வரூப அனுசந்தானம்
யோகம் -சேருவதால் மார்க்கம் -கல்யாண குணங்களையும் த்யாநிப்பார் -கூரத் தாழ்வான்
நித்யோதித சாந்தோதித தசைகள் – ஸ்வரூப குண தியானம் -நினைக்க நினைக்க தான் சிருஷ்டித்து -கரண களேபரங்கள் கொடுத்து அருளி –
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே
கிடையை விட்டு ஆகதோம் மதுராம் புரிம் -கிருஷ்ணனாய் அவதரித்து
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்-கத்ரு-நாக மாதா -விநதை-முட்டை சீக்கிரம் குத்தி -மூக்கு கறை-அலங்காரம் –
விரோதி நிரசன கறை என்றுமாம் –பெரிய திருவடி நாயனாரை நடத்தி –
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு -விஜய ப்ரதை -பரிபூரணம் -விச்சேதம் -இலனே-குறையும் இல்லை

‘குறைவு இல்லாத பெரிய பாற்கடலிலே வலிமை பொருந்திய ஆதிசேடன்மேல் ஏறி, தனது அழகிய செந்தாமரை மலர் போன்ற
கண்களாலே உறங்குகிறவனைப் போன்று ஒப்பற்ற யோகத்தைக் கூடிய, ஒளியையுடைய நீலமணி போன்ற நிறத்தையுடையவனான
கண்ணபிரான், கறை தோய்ந்த மூக்கையுடைய கருடப் பறவையைச் செலுத்தி அசுரரைக் கொன்ற அம்மான்,
அவனுடைய நிறைந்த புகழை ஏத்தியும் பாடியும் ஆடியும் செல்கின்ற நான் ஒரு தடையினை உடையேன் அல்லேன்,’ என்கிறார்.
‘ஏறிப் புணர்ந்த வண்ணன்’ என்றும், ‘கடாவிக் காய்ந்த அம்மான்’ என்றும் கூட்டுக. ‘பொருள் சேர் புகழ்’ ஆதலின், ‘நிறைபுகழ்’ என்கிறார்

முதற்பாசுரத்தில் திருவவதாரங்களைச் சொன்னார்; இப்பாசுரத்தில், ‘திருவவதாரத்துக்கு மூலமாகத் திருப்பாற்கடலிலே கண்வளர்ந்து,
அங்குநின்றும் ஸ்ரீ வசுதேவ குமாரனாய் வந்து திருவவதாரம் செய்து, அடியார்களுடைய பகைவர்களை அழியச்செய்த
கிருஷ்ணனுடைய புகழைப் பேசப்பெற்ற எனக்கு ஒரு தட்டு இல்லை,’ என்கிறார்.

குறைவு இல் தடம் கடல் –
இதனால், ‘நானே அன்று; என்னிலும் குறைவு அற்றார் உளர்’ என்றபடி.
குணம் பாடி பாடி குறைவற்றவன் நான்
பாஹ்ய சம்ச்லேஷத்தால் குறை இல்லாத திருப் பாற் கடல் என்றவாறு
குறைவு இல்லாமல் கண்வளர்ந்தருளுவதற்கு இடமுடைத்தான கடல். ‘தடம் கடல்’ என்றவர், ‘குறைவு இல் தடம் கடல்’ என்கிறார்;
ஈண்டுக் குறைவு இல்லாமையாவது, ‘திருமேனி நீ திண்டப் பெற்று, மாலும் கருங்கடலே என் நோற்றாய்’ என்னுமாறு போன்று,
அவனுடைய பரிசத்தால் குறைவு அற்று இருக்கை. யசோதைப்பிராட்டி ஸ்ரீ கிருஷ்ணனைத் தன் மடியிலே வளர்த்தி உவக்குமாறு போன்று,
சர்வேசுவரனைத் தனக்குள்ளே இட்டுக்கொண்டு அத்தாலே உவந்து குறைவு அற்று இருக்கை

கோள் அரவு ஏறி –
திருமேனியினுடைய பரிசத்தால் தனக்குமேல் ஒன்று இல்லாததான ஒளியை உடையனான திருவனந்தாழ்வான் மேலே ஏறி.
கோள் – ஒளி. அன்றிக்கே, ‘‘கோள்’ என்று மிடுக்காய், சர்வேசுவரனும் சர்வேசுவரியும் கூடித் துகையாநின்றால் பொறுக்கைக்கு ஈடான,
தரிக்கும் ஆற்றலையுடைய திருவனந்தாழ்வான்’ என்னலுமாம்.
பிரக்ருஷ்ட விஜ்ஞ்ஞான –ஏக தாமினி -‘சிறந்த ஞானத்துக்கும் ஆற்றலுக்கும் இருப்பிடமான ஆதிசேடன்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்
மென்மை நாற்றம் குளிர்த்தி இவற்றை இயற்கையாக உடையவன் ஆதலின், ‘அரவு’ என்கிறார்.
தன் கோலம் செந்தாமரைக்கண் உறைபவன் போல –
வெறும்புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய், எல்லாச் செல்வங்கட்கும் அறிகுறியாய், பெரிய பிராட்டியாருடைய கலவியால்
வந்த ஆனந்தத்திற்கு அறிகுறியாய், அப்போது அலர்ந்த செவ்வித்தாமரையை உவமை சொல்லலாம்படி அழகியதாய்ச் சிவந்து இருந்துள்ள திருக்கண்கள்.
கண் உறைகை – கண் வளர்ந்தருளுகை. என்றது, கண்ணுறங்குதல் என்று பேராய், உலகத்தைக் காக்கும் சிந்தனையோடு கூடியவனாய் இருத்தல்.
ஓர் யோகு புணர்ந்த –
‘எல்லா ஆத்துமாக்களும் நம்மைக் கிட்டிக் கரைமரம் சேர்தற்கு உரிய விரகு யாதோ?’ என்று இவற்றைக் காத்தலுக்கு
உரிய வழியைச் சிந்தை செய்தல்; அன்றிக்கே, இப்படிக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தவாறே
அந்நினைவு பொறாமையாலே நாக்கு உலரும்; அப்போது, கர்ப்பூரத் திரள் வாயிலே இடுவாரைப் போலே
‘வாசுதேவனாகிய தன்னைச் சிந்தித்துக் கொண்டு’ என்கிறபடியே, தன்னைத்தானே சிந்திப்பான்; ‘அவ்வாறு சிந்தித்தலைக் கூறுகிறார்’ என்னலுமாம்.
இப்படித் தன்னைத் தானே நினைத்தவாறே காத்தற்கு உரிய உபாயம் தோன்றுமே? தோன்றினவாறே கண்ணனாய் அவதரித்தான் என்கிறார் மேல்:

ஒளி மணி வண்ணன் கண்ணன் –
ஒளியையுடைய நீலமணி போலே இருக்கிற வடிவையுடைய கிருஷ்ணன். ‘காக்கப்படும் பொருள்களைத் தன் வடிவழகாலே
கரைமரம் சேர்க்கைக்காகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்’ என்றபடி. ‘ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோ’ என்றார் பட்டர்பிரானும்.
கறை அணி புள்ளைக் கடாவி –
பகைவர்களைக் கொன்று, கறை கழுவக் காலம் இல்லாது இருத்தலின் கறை ஏறி அதுவே ஆபரணமாக இருக்கும் மூக்கையுடைய புள்ளைச் செலுத்தி.
அன்றிக்கே,
‘கறை அணி புள்’ என்பதற்குத் தாயான விந்தை, ‘புத்திரன் முகம் காணவேண்டும்’ என்னும் ஆசையின் மிகுதியாலே
முட்டையாய் இருக்கிற பருவத்தில் ஒரு காரியத்தைச் செய்தாளாய், அத்தால் ஓர் அடையாளம் பிறந்து, அவ்வடையாளம், எம்பெருமானுக்கு
இருக்கும் ஸ்ரீ வத்ஸத்தைப் போன்று ஆபரணமாய் இருத்தலின், அதனை ஆபரணமாக உடைய புள் என்னலுமாம்.
திருமேனியினுடைய பரிசத்தால் திமிர்ந்து செல்லாது நிற்றலின், தேர் முதலிய பொருள்களை நடத்துமாறு போன்று வடிம்பிட்டுத் தாக்கி
நடத்த வேண்டி இருத்தலின், ‘கடாவி’ என்கிறார்.
‘தேவரீருடைய திருவடிகள் தாக்குவதால் தன்மேல் உண்டாகின்ற தழும்புகளின் அழகையுடைய பெரிய திருவடி’ என்னக் கடவதன்றோ?

அசுரரைக் காய்ந்த –
இப்படிப் பெரிய திருவடியை நடத்தா நின்றுகொண்டு அசுரக்கூட்டங்களை அழிப்பித்த.
‘அடியாருடைய இன்பத்துக்குக் காரணமாக இருக்கும் கருவியே அடியார்களுடைய விரோதிகளை அழிப்பதற்கும் கருவி’ என்கை.
அம்மான் –
இப்படிச் சிறியதைப் பெரியது நலியாதபடி நோக்கும் நிருபாதிக சேஷி.
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே –
‘இத்தகைய பாதுகாத்தலால் குறைவற்ற புகழைப் பிரீதியின் மிகுதியினாலே ஏத்தியும் பாடியும் பத்தி பாரவஸ்யத்தாலே இருந்த இடத்தில்
இராமல் ஆடியும் வாழ்கின்ற நான், பகவானுடைய இன்பத்துக்கு ஒரு தடையை உடையேன் அல்லேன்,’ என்கிறார். முட்டு – விலக்கு.

—————————————————————————–

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3-

ஷட் ரசம் -நிரவதிக சர்வ பிரகார போக்யதை -அனுபவித்த -நான் மனப்பீடை கிலேசம் இல்லேன் –
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
ஒரு தனி போகம் -ஒரு தனி நாயகன் -மூ உலகுக்கும் உரிய -த்ரிவித சேதன அசேதனங்களுக்கு -தடங்கல் இல்லாத
பஹு வித போகம் -அத்விதீய பிரதான நாயகன்
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
அந்தர் பஹிச்ய ரச கனமான கரும்புக்கட்டி -நல்-ஒவ் ஒன்றிலும் சேர்த்து
சர்வ ரச சமவாயமான தேன்-அனைத்துடன் மது -நித்ய போக்யமான அமிர்தம் –
ஸ்வா பாவிக ரசமான பால் -அப்பொழுதே நுகர பக்வமான கனி -கணு தோறும் இனிமையான கரும்பு
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப் -போக்யதா ஸூசகம் -மதுச்யந்தியாய் விகசிதமான
திருத் துழாய் அலங்க்ருதமான திருமுடி
போக்யத்வ சேஷித்வம் தோற்று -ஆட்பட்ட பின்பு
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே–லௌகிக அனுபவத்தால் வரும் -தாழ்ச்சி -துக்கம் இல்லை
அனுபவம் பரிபூரணம் -பெற்ற நான்
இதர விஷய -அலாப -வைகல்ய-விச்சேதம் -துக்கம் – எனது மனத்தில் இல்லேன் –
சேஷித்வமும் போக்யதும் சாதாராணம் -நாயகன் -கட்டியும் மூ உலகமும் அனுபவிக்க –

‘தடை இல்லாத பல போகங்களையும் மூன்று உலகங்கட்குமுரிய ஒப்பற்ற முதன்மையையுமுடைய இறைவனை,
வெல்லக்கட்டியை, தேனை, அமுதை, நல்ல பாலினை, பழத்தினை, கரும்பினை, தேனோடு மலர்கின்ற குளிர்ந்த
அழகிய திருத்துழாய் மாலையைத் தரித்த முடியையுடையவனை வணங்கி, அவனிடத்தில் அடிமைப்பட்ட பின்னர் யான்
என் மனத்தின்கண் சிறிதும் துன்பமுடையேன் அல்லேன்’ என்கிறார்.
மட்டு – தேன். இறை – சிறிது. ‘மூவுலகுக்கு உரிய ஒரு தனி நாயகன்’ என மாறுக.
‘மூவுலகுக்கு உரிய கட்டியை’ எனக் கட்டிக்கு அடைமொழி ஆக்கலுமாம்.

‘சர்வேசுவரனுடைய இனிமையைச் சொல்லுவதால் உண்டாகும் பிரீதியின் நிர்ப்பந்தத்தாலே அவனுக்கு அடிமை செய்கையிலே இழிந்த
எனக்குச் சிற்றின்ப விஷயங்களின் ஆசையால் வரும் மனத்தின் துக்கம் இல்லை,’ என்கிறார்.

முட்டு இல் பல் போகத்து மூவுலகுக்கு உரிய ஒரு தனி நாயகன் –
சில நாள் சென்றவாறே முட்டுப்படுதல் இன்றி,-ஐஸ்வர்யம் கைவல்யம் போல் அல்லாமல் – எல்லை இல்லாத இன்பங்களை உடையவனாய்,
ஒத்தாரும் மிக்காரும் இல்லாத தனி நாயகன். என்றது,-கை விட காரணமே இல்லையே -சர்வ லோக சரண்யன் அன்றோ —
‘எந்த நாதனால் மூன்று உலகமும் நல்ல நாதனை உடையன ஆகுமோ, அந்த இராமபிரான் தகுந்த நாதன்,’ என்கிறபடியே,
-சர்வ சப்தத்துக்குள் என்னை விலக்க முடியாது -சரண்யன் சப்தத்தில் இருந்து பெருமாளை விலக்க முடியாது –
சத்ரு கிரஹத்தில் –அகால காலம் -ராஷச ஜாதி -வந்தான் போன்ற குற்றங்கள் என்னிடம் சொல்லலாம் -இது போலே குற்றங்களை
ஆராய்வான் என்கிற குற்றம் பெருமாளுக்கு இல்லையே -ஆகவே நிவேதயதே மாம் ஷிப்ரம்
தன்னை நாயகன் என்றால், பின்னர் இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கை.
பிரமன் சிவன் முதலானோர்கட்கும் முதன்மை சொல்லுவார்கள் ஆதலின், அவர்களை வேறுபடுத்துவதற்காக ‘ஒரு தனி நாயகன்’
அன்றிக்கே,
‘மூவுலகுக்கு உரிய கட்டியைத் தேனை அமுதை நன்பாலைக் கனியைக் கரும்புதன்னை’ என்று கூட்டலுமாம்.
இதனால், இனிமையும் எல்லார்க்கும் பொதுவாய் இருக்கையைத் தெரிவித்தபடி. ‘அந்தப் பரம்பொருள் சுவை உருவம்’ என்கிறபடியே,
உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறச் சுவையின் கனமாய் இருத்தலின்’ ‘கட்டியை’ என்கிறார். ‘தேனை’ என்கிறார்,-ரசோவை சஹ அன்றோ –
கட்டியின் வன்மை தவிர்ந்திருத்தலின். சாவாமல் காப்பதுமாய் வேறுபட்ட சிறப்பையுடைய இனிய பொருளுமாய் இருத்தலின், ‘அமுதை’ என்கிறார்.
விலஷணர்கள் -வீத ராகம் இல்லாத முமுஷுக்கள் அனுபவிக்கும் அமுதம் அன்றோ
ஞானிகள் அல்லாதார்க்கும் இனியனாய் இருத்தலின், ‘பாலை’ என்கிறார்.
கண்ட போதே நுகரலாம்படி பக்குவமான பலமாய் இருத்தலின், ‘கனியை’ என்கிறார்.
கைதொட்டுச் சுவைப்பிக்க வேண்டும் குற்றம் இன்றி இருத்தலின், ‘கரும்புதன்னை’ என்கிறார்.
மேற்கூறியவை எல்லாம் உவமையாகத் தக்கன அல்ல ஆதலின்,
தன்னை-அவ்வப்பொருள்களையே சொல்லுகிறார். ‘சர்வரஸ:’ என்பது மறை மொழி.-ஆக, இவருடைய அறுசுவை இருக்கிறபடி-

மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை –
தேன் பெருக்கு எடுக்கின்ற திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை உடையவனை.
இதனால் அடைப்படுகின்ற இறைவனுடைய சொரூபத்தைத் தெரிவித்தபடி.
வணங்கி அவன் திறத்துப்பட்ட பின்றை –
காலயவனவன் சராசந்தன் முதலியவர்களைப்போன்று படைவீட்டை அடைமதிட்படுத்தி வந்து கிட்டுதல் அன்றி, முறையிலே அவன் பக்கலில்
சேர்ந்த பின்பு. இதனால் ‘வணங்கிக் கொண்டு அவன் திருவடிகளிலே கிட்டுதல் அடியவனுக்குச் சொரூபம்’ என்பதனைத் தெரிவித்தபடி.
இறை ஆகிலும் –
மிகச் சிறிதாயினும். யான் மற்றைப் பொருள்களிலே விருப்பம் இல்லாத யான்.
என் மனத்துப் பரிவு இலன் –
‘இந்த ஆத்துமாவானது ஆனந்த உருவமான பரம்பொருளை அடைந்து ஆனந்தத்தை உடையதாகின்றது,’ என்கிறபடியே,
‘பரமபதத்திற்குச் சென்றால் பூர்ண அனுபவம் பண்ணலாவது, இங்கே இருந்து குறைய அனுபவியாநின்றேன்’ என்னுமதனாலே
வரும் மனத்தின் துக்கம் உண்டோ எனக்கு?’ என்கிறார்.

காலயவனன் : இவன், யவன தேசத்து அரசன்; சராசந்தன்: இவன், மகததேசத்து அரசன்; இவர்கள் யாதவர்மேற்படை எடுத்தற்காக வந்து,
மதுரையை முற்றுகையிட்டனர்; இவர்களுடைய துன்பத்தினின்றும் யாதவர்களை நீக்குவித்தற்காகவே மேலைச் சமுத்திரத்தில் துவாரகை என்ற
நகரை உண்டாக்கினான் கண்ணபிரான்.
‘மறியா எழுந்திரை மாநீர் மதுரையில் மன்னவரைக் குறியாதவன் படை வந்த அந்நாள் செழுங் கோகனகப்
பொறி யாடரவணைத் தென்னரங்கா!ஒரு பூதரும் அங்கு அறியாவகைத் துவராபதிக்கே எங்ஙன் ஆக்கினையே?’

———————————————————————–

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-

போக பிரதிபந்தக சமஸ்த விரோதி நிவர்த்தகன் -ஆஸ்ரிதரை கை விடாத அவனைப் பற்றி வருத்தம் இல்லாமல்
பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த-சிவன் ஏதத் வ்ரதம் மம-சொல்லி ஓடிப் போனானே
-அபிமானம் உடன் – திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்-இத்தால் அபிமானம் கொண்டான்
-தேவ சேனாபதி சுப்ரமங்கன் -கந்தன் -கார்த்திகேயன் -சரவணா பொய்கை நாணல் புதர் –
அக்னியும் -யுத்தம் -என்பதை செய்யோம்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து-பெரிய திருவடியை நடாத்திய ஆச்சார்யா பூதன்
ஆயன் -பரதவன் ஆயனாகி வந்ததே மாயன்
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே-அரி சூதன விரோதி நிரசன -ஆஸ்ரிதர் கை விடாத -ஏக தேசமும் வருத்தம் இல்லை

அநிருத்தனைச் சிறை வைத்த அக்காலத்தில் ‘வாணாசுரனைத் துன்பம் இன்றிப் பாதுகாப்போம்’ என்று கூறிப் படையோடும் எதிர்த்து வந்த
சிவபெருமானும் அவனுடைய மகனான சுப்பிரமணியனும் அதற்கு மேலே நெருப்பும் போரிலே அழியும்படியாக, பொருகின்ற சிறகுகளையுடைய கருடப்பறவையை ஏறிச் செலுத்திய மாயனை, ஆயனை, அழகிய சக்கரத்தையுடைய அரியினை, அடியார்களை நழுவவிடாதவனைப் பற்றி யான் சிறிதேனும் துன்பம் இல்லாதவன் ஆனேன்.
காத்தும் – ஒருமையின்கண் வந்த உயர்வுப்பன்மை. ‘தொலையக் கடாவிய மாயனை’ எனக்கூட்டுக. இலன் – குறிப்பு வினைமுற்று.

‘வேறு தேவர்களைப் பற்றினார்க்கு அவர்கள் தஞ்சம் அல்லர் என்னுமிடத்தையும், தன்னைப் பற்றினவர்களைத் தான் விட்டுக்கொடான்
என்னுமிடத்தையும் காட்டின இவனைப்பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.

‘பரிவு இன்றி வாணனைக் காத்தும்’ என்றது,
அநிருத்தாழ்வான் நிமித்தமாகக் கிருஷ்ணன் படை எடுத்துப் புறப்பட்ட அளவில், வாணன் சிவபிரான் பக்கலிலே சென்று,
‘கிருஷ்ணன் நமக்கு எதிரியாக வருகிறான்,’ என்று சொன்னவாறே, ‘தலையில் வைத்த பூ வாடாமல் வருத்தம் அற
வாணனைக் காக்கக் கடவோம்’ என்று சொன்னான் ஆயிற்று, வீட்டிற்குள்ளே இருந்து தம் தம் வீரத்தைப் பேசுவோரைப் போலே;
இச்சக்கரவர்த்தி திருமகன் ‘என்னை அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்’ என்கிறானோ?
அன்று –
அநிருத்தாழ்வானைச் சிறையில் வைத்த அன்று. படையொடும் வந்து எதிர்ந்த – ‘தனக்கு வெற்றி நிச்சயம்’ என்று
அது காண்கைக்குச் சேனையைத் திரட்டிக்கொண்டு வந்த. ‘முண்டன் நீறன்’ என்ற திருப்பாசுரம் இங்கு அநுசந்திக்கத் தகும்.
இனி, ‘படை’ என்பதற்கு, ‘ஆயுதம்’ என்று பொருள் கூறலுமாம். ‘சூலத்தைத் தரித்த சிவன், கிருஷ்ணனால் போரில்
எழுப்பப்படுகின்ற பல வகையான சப்தங்களைக் கேட்டு மயக்கத்தை அடைந்தான்,’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம்.

‘தன் வறுமையை முன்னிட்டு அஞ்சலியைக் கொண்டுவந்து கிட்டுதற்குத் தக்க பரம்பொருளை இப்படி ஆயுதத்தோடு
எதிர் இடுகைக்குக் காரணம் என்?’ என்ன, ‘திரிபுரம் செற்றமை’ என்கிறார் மேல்:
திரிபுரம் செற்றவனும் –
முப்புரங்களை எரித்த செயலாலே உண்டான செருக்கினை உடையவன் ஆகையாலே. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்
,கடல் கடைகிறகாலத்தில் எட்டு வடிவு கொண்டு நின்று கடைந்தது போன்று,
கடல் கடைகிற காலத்தில் எட்டு வடிவு கொண்டு நின்றதனை,
‘ஓருரு வெற்பைத் தரித்தது; தானவர் உம்பருள்ளாய் ஈருகு நின்று கடைந்தது; வேலை யிதனிடையோர்
பேருரு இன்னமு தோடே பிறந்தது: பெண்மை கொண்டுஓர் நாருரு நின்றது; அரங்கா! இதுஎன்ன நற்றவமே!’-(திருவரங்கத்து மாலை, 25)
முப்புரங்களை எரித்த சமயத்திலே வில்லுக்கு மிடுக்காயும்,
நாணிக்குத் திண்மையாயும், அம்புக்குக் கூர்மையாயும், சிவனுக்கு உள்ளுயிராயும் இருந்து எதிரிகளைத் தலை சாயும்படி செய்து
முப்புரத்தை அழித்துக் கொடுத்தான்; அச்செயலை அறியாமல் அறிவில்லாதவர்கள் அதனை அவன் தலையில் வைத்துக் கவி பாட
, அதனைத் தானும் கேட்டு ‘உண்மையே அன்றோ’ என்று மயங்கி,
‘அது செய்த நமக்கு இவனை வெல்லத் தட்டு என்?’ என்று வந்து எதிர் இட்டான் ஆயிற்று என்றபடி.
ஆவாய் அதன் கன்றாய் அந்தரியாமிப் பொருளாய் ஏவாய் நிலைநின்ற எம்பெருமான் – காவானேல்
போரும் பொருமோ? புராந்தகன் என்றே பேரும் சீரும் பெறுமோ சிவன்?’–என்றார் திவ்விய கவி.
மகனும் –
தந்தையான சிவன் வளர்ந்த பின்பு செய்தவற்றைப் பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்து இளமறியாய்ப்
பெருமிடுக்கனாய்த் தேவசேனாபதியான சுப்பிரமணியனும். பின்னும்
அங்கி யும் –
அவனுக்குமேல் நாற்பத்தொன்பது அக்கினிகளும்.
போர் தொலைய –
போரிலே மாள. இதனால், ‘சிவபிரான் தன்னை அடைக்கலமாகப்
பற்றினாரை ஆபத்து வந்தவாறே காட்டிக் கொடுத்து ஓடுவான்,’ என்பதனையும்,
‘சர்வேசுவரன் தன்னைப் பற்றினாரை எல்லா அளவிலும் பாதுகாப்பான்,’ என்பதனையும் தெரிவித்தபடி.
மோடி யோட அங்கி வெப்பும் மங்கி யோட ஐங்கரன் முடுகி யோட முருகன் ஓட முக்கண் ஈசன் மக்களைத்
தேடி யோட வாணன் ஆயி ரம்பு யங்கள் குருதிநீர் சிந்தி யோட நேமி தொட்ட திருவ ரங்க ராசரே!’–என்றார் திவ்ய கவியும்.

பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை –
பகைவர்கள் மேலே பொருகிற சிறகுகளையுடைய பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்ல ஆச்சரியத்தையுடையவனை.
இங்கு ஆச்சரியமாவது, வாணனுடைய கரத்தைக் கழித்து, அவனை இறையிலி செய்து, நாட்டுக்குத் தானே நின்று இறையான ஆச்சரியம்.
– ‘வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்’ அன்றோ?
ஆயனை –
அவன் தோற்றதும் தன் தரம் குலையாதே நிற்கிற நிலையிலே; -இவன் வென்றதும் தன்னைத் தாழவிட்ட இடத்திலே.
பொன் சக்கரத்து அரியினை –
அனுகூலர்க்கு விரும்பத்தக்க திருவாழியைத் தரித்துப் பகைவர்களுக்குச் சிரமப்பட்டும் காண முடியாதவனை.
‘ஓ கிருஷ்ணனே! ஓ கிருஷ்ணனே! நீண்ட திருக்கைகளையுடையவனே! புருஷோத்தமனாயும் எல்லாரையும் நியமிக்கின்றவனாயும்
பிறப்பு இறப்பு இல்லாதவனாயும் எல்லார்க்கும் மேலானவனாயும் இருக்கும் தன்மையை அறிவேன்,’ என்கிறபடியே,
தோள்வலி-அவர் வலிமை – இவனது வலி – கண்ட பின்பு ஆயிற்றுச் சர்வேசுவரன் என்று அறிந்தது.
அச்சுதனை –
அடியார்களை நழுவ விடாதவனை.
சிவபிரான், தன்னை அடைந்த வாணனைக் கைகழிய விட்டு ஓடினான் அன்றோ?
சடையான் ஓட அடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவன்’ அன்றோ இவன்? தலைமையாவது, வாணனைக் கைம்முதல்
அறுத்துத் தலை அழியாமல் வைத்த தலைமை
. ஆக, இதனால், அநிருத்தாழ்வானுக்காக மார்விலே அம்பு ஏற்கையாலே
‘அடியார்கட்குத் தஞ்சம்’ என்று நம்புதற்குத் தட்டு இல்லை என்று தெரிவித்தபடி.
பற்றி யான் இறையேனும் இடர் இலனே –
இவனைப் பற்றின எனக்குச் சிறிது துக்கமும் இல்லை. ‘‘பேரன்’ என்று இருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலு நாள்
சிறையில் இருக்க வேண்டிற்று;
‘அடியேன்’ என்று பற்றின எனக்கு அதுவும் வேண்டிற்று இல்லை,’ என்பார், ‘இறையேனும் இடர் இலன்’ என்கிறார்.

———————————————————————————

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-

அர்த்தியான வைதிகன் உடைய -சரீர நாசம் -அங்கு ஆத்மா ஸ்வரூப நாசம் இல்லாமல் -அர்த்தித்த அர்த்தம் அருளுவான்
இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்-கர்ம அனுஷ்டானம் -மத்யான சந்த்யா வந்தனம் பண்ண திரும்பி வந்தானே
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்-மண் -கடம் -தங்கம் -சங்கிலி -கார்யம் காரணம் -அவஸ்தை கார்யம் தாண்டாதே
மரம் பஞ்ச பூதம் பிரகிருதி -திண்ணிய -கார்ய வர்க்கம் தாண்டி -விரஜை கரைக்கு -கார்ய ரூப சைதில்யம் காரண அந்வயத்தில்-போகாமல் -கடாவி ஓட்டிப் போய்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை-தன்னைதான தேசத்தில் -வைதிகன் பிள்ளைகள் நால்வரையும்
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.-துயர் போக்கினவனை பற்றி நான் துயர் ஆற்றேன்
காலம் இல்லா தேசம் –
ரேவதி ரைவதர் பெண் -ப்ரஹ்மா இடம் ஜாதகம் -பலராமன் -பெண் உயரம் 8 அடி –பிள்ளை 6 அடி குள்ளமாக்கி கல்யாணம் –
இங்கே அதே நாள் -உள்ள போன -அதே சரீரம் –ஒரு பிரகாரத்திலும் சம்சார கிலேசம் இல்லாமல் பெற்றேன்

‘ஒரு நாளிலே ஒரு முகூர்த்தத்திலே, துன்பம் இல்லாமல், எல்லா உலகங்கட்கும் அப்பால் படர்ந்த புகழையுடைய அருச்சுனனும் பிராமணனும்
தன்னுடன் ஏறி வரும்படியாகத் திண்ணிய தேரைச் செலுத்தி, ஒளிப்பிழம்பாய் உள்ள தனது பரமபதத்தில் தங்கியிருந்த பிராமணனுடைய
பிள்ளைகளைச் சரீரத்தோடும் கொண்டுவந்து கொடுத்த இறைவனை அடைக்கலமாக அடைந்து சிறிதும் துயர் உடையேன் அல்லேன்,’ என்கிறார்.
‘இன்றி ஏறக் கடவி கொண்டு கொடுத்தவன்’ என்றும், ‘கழியக் கடவி கொண்டு கொடுத்தவன்’ என்றும் முடிக்க,
கொடுத்தவன் – வினையாலணையும் பெயர்.

பிராமணனுடைய புத்திரன் நிமித்தமாகச் சென்ற செலவைக் கூறிக்கொண்டு, ‘இவனைப்பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை,’ என்கிறார்.

இடர் இன்றியே –
ஒரு வருத்தமும் இல்லாமல்.
ஒரு நாள் –
ஒரே நாளில் செய்யும் தீக்ஷையையுடைய யாகத்திலே.
ஒரு போழ்தில் –
காலையில் செய்ய வேண்டிய யாக காரியங்களைச் செய்து முடித்து நடுப்பகலில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடிப்பதற்கு முன்னே.
எல்லா உலகும் கழிய –
ஆவரணங்கள் ஏழற்கும் அப்பாற்பட. படர் புகழ் பார்த்தனும் – புகழையுடைய அருச்சுனனும்.
‘மூன்று உலகங்களுக்கும் நாதனும் ஜனார்த்தனனுமான ஸ்ரீ கிருஷ்ணன் எவனுக்கு மந்திரியாயும் பாதுகாப்பவனாயும் சிநேகிதனாயும் இருக்கிறானோ’ என்கிறபடியே, கிருஷ்ணனையே எல்லாவித உறவுமாகப் பற்றினவன் ஆதலின், ‘படர் புகழ்ப் பார்த்தன்’ என்கிறார்.
வைதிகனும் –
கிருஷ்ணன் திருவடிகளிலே எல்லை இல்லாத பத்தியையுடைய பிராமணனும். உடன் ஏற – தன்னோடே கூட ஏற.
திண் தேர் கடவி –
இவர்களைத் தேரிலே ஏற்றிக்கொண்டு, காரியத்தின் தன்மை குலையாமல், மூலகாரணமான பிரகிருதி முடிவாகத் தேருக்குத்
திண்மையைக் கொடுத்து நடத்தி. -மண் பிண்டமாய் இருக்கும் நிலையிலும் குடம் தொடர்வதைப் போலே.

சுடர் ஒளியாய் நின்ற –
எல்லை இல்லாத ஒளி உருவமாய் ஒரே தன்மையாய் நின்ற. ஒளி – அழகு.
தன்னுடைச்சோதியில்
– தனக்கே உரியதான சிறப்பையுடைய பரமபதம். அன்றிக்கே, ‘தன்னுடைய ஒளி வெள்ளம் இட்டாற்போன்று இருக்கின்ற பரமபதம்’ என்னலுமாம்.
‘சூரியன் சந்திரன் அக்கினி இவர்களைக் காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகிற, மஹாத்துமாவான நாராயணனுடைய
வைகுண்டமானது தன்னுடைய ஒளியினாலே தேவர்கள் முதலியோர்களாலும் காண்டற்கு அரியதாகி விளங்குகிறது,’ என்கிறபடியே,
ஆயிரம் கோடி அக்கினி ஆதித்தியர்களுடைய ஒளியை ஓடவைத்து ஒரு தேசமாக வகுத்தாற் போலே இருக்கையாலே
இவர்களுக்குக் கண்கொண்டு பார்க்க வொண்ணாது; ஆகையாலே, மூலப்பகுதியின் அளவிலே இவர்ளை நிறுத்தி,
தன் நிலமாகையாலே தானே போய்ப் புக்கான். தண்ணீரிலே மீன் உலாவுமாறு போன்று தேசிகரே புகவேண்டும் நிலம் அன்றோ அது?-கீதாச்சார்யன் அன்றோ

வைதிகன் பிள்ளைகளை –
பிரமாணனுடைய புத்திரர்களை.
உடலொடும் கொண்டு கொடுத்தவனை –
காலத்தால் உண்டாகின்ற மாறுபாடு ஒன்றும் இல்லாத தேசமாகையாலே, கொண்டுபோகிற போதைப் படியில் ஒன்றும்
குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்.-பால உடலோடும் –
அன்றிக்கே,
‘பூசின மஞ்சளும், உடுத்தின பட்டும், இட்ட சவடிப் பூணுநூலும், இட்ட காது பணிகளுமான ஒப்பனையில் ஒன்றும்
குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்’ என்னுதல்.
‘பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்களாகில், இப்போது இவை எல்லாம் உண்டோ?’ என்று பட்டரைக் கேட்க, ‘ரிஷி புத்திரர்கள்
ஆகையாலே பிறக்கிற போதே அவற்றோடே பிறப்பர் காணும்’ என்று அருளிச்செய்தார்.
பற்றி ஒன்றும் துயர் இலனே –
கடலில் நீரை மலையின்மேலே ஏற்றுமதுவே வருத்தமுள்ளது; மலையில் உள்ள நீரைக் கடலுக்குக் கொண்டு வருமன்று
ஒரு வருத்தம் இல்லையே? அப்படியே, அங்குப் புக்காரை இங்கே மீட்கையாகிறது அவன் திருவுள்ளத்தோடு சேராதது;
இங்குள்ளாரை அங்கே கொண்டுபோகை யாயிற்று அவன் திருவுள்ளத்திற்குப் பொருந்துவது.புத்திரன் நிமித்தமாக விரும்பியதைப் போன்று அன்றி,
சொரூபத்திற்குத் தகுதியாக அவன் திருவுள்ளத்துக்குப் பொருந்தின செயலை ஆசைப்பட்ட எனக்கு ஒரு துக்கம் உண்டோ?’ என்கிறார்.
கர்ம சம்பந்தம் அற்றுப் போகாமையாலே ஆயிற்று இவர்களுக்கு மீள வேண்டிற்று. ‘ஆயின், கர்ம சம்பந்தம் அற்றார் போகக்கூடிய
தேசத்திலே இவர்கள் சென்றபடி என்?’ என்னில், ‘நாய்ச்சிமார் தங்கள் சுவாதந்தரியம் காட்டுகைக்காக இவர்களை அங்கே அழைப்பித்தார்கள் ஆயிற்று.
அன்றிக்கே,
‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று தொடங்கி, ‘மங்கவொட்டு’ என்று மடிபிடித்துக் கூப்பிடும்படி சமுசாரத்தில் விரக்தி பிறந்தும்,
‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும், ‘மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும்,
‘அதனிற்பெரிய என் அவா’ என்றும் இப்படிப் பகவத் விஷயத்தில் கண்ணழிவு அற்ற பக்தி விளைந்து போக ஆசைப்படுகிற
எனக்கு ஒரு துக்கம் இல்லை’ என்கிறார் என்னுதல்.

தாளாற் சகம்கொண்ட தார்அரங்கா!பண்டு சாந்திபன் சொல் கேளாக் கடல் புக்க சேயினை மீட்டதும், கேதமுடன்
மாளாப் பதம்புக்க மைந்தரை மீட்டதும், மாறலவே மீளாப் பதம்புக்க மைந்தரை நீ அன்று மீட்டதுவே?’ என்றார் திவ்விய கவியும்.

————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: