பகவத் விஷயம் காலஷேபம் -83- திருவாய்மொழி – -3-9-6….3-9-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-

ஸ்ரீ யபதிக்கே எல்லாம் சேரும் -அந்தராத்மா -நேராக பாடலாமே
வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
விசேஷ ஜ்ஞானம் படைத்த நீங்கள் -உடம்பு வருத்தி பாடுவதை விட
உடம்பு வருத்தி கூலி வேலை செய்வதே தேவலை -தேக யாத்ரா சேஷமாக-உஜ்ஜீவனம் -சப்தம் இல்லை
ஜீவனம் தான் -இவர்கள் அபிப்ப்ராயத்தால் உஜ்ஜீவனம் என்கிறார்
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
பிரவாஹ நித்தியமான இந்த லோகத்திலே -ஸ்ரீ மான்களாக இருப்பார் இப்போது இல்லை
ஆழ்வார் ஆராய்ந்து சொல்ல -எப்போதும் இல்லை -ஆராய்ந்தேன் -நேற்று வரை பகவத் விஷயம் பார்த்து இருந்தேன்- இப்போது நோக்கினேன்
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
உங்கள் உங்கள் இட்டா தெய்வம் -ருசிக்கு அனுகுணமாக -குல தெய்வம் –
சப்தங்களுக்கு அவர்கள் இஷ்டம் இல்லை -சர்வ சப்த வாச்யன் ஒருவனே
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.-திருமாலுக்கு சேரும் -ஒளி படைத்த -அப்ரதிகதம் தடுக்கப்படாத -தேஜஸ் –
உங்களுக்கு பகவத் குண சௌர்யம் திருட்டே பலம் -என்றவாறு –
சப்த அர்த்தங்கள் இரண்டுமே ஸ்ரீ யபதிக்கே சேரும் –

‘புலவீர்! வாருங்கோள்; உங்களுடைய சரீரத்தை வருத்திக் கைத்தொழில் செய்து உஜ்ஜீவியுங்கோள்;
நிலை பெற்ற இந்த உலகத்தில் செல்வமுடையார் இலர்; இப்போது நோக்கினோம்; உங்களுடைய இனிய கவிகளைக்கொண்டு
உங்கட்கு இஷ்டமான தெய்வத்தைத் துதித்தால், அக்கவிகள் மிகச்சிறந்த ஒளி பொருந்திய முடியையுடைய என் திருமகள் கேள்வனுக்குச் சேரும்,’ என்கிறார்.
முதலடியில், ஆழ்வார் அருளிச்செய்யும் உபாயம் ஊன்றிக் கவனித்தற்குரியது. மன் – நிலைபேறு. வியாக்கியானம் காண்க.

‘ஜீவனத்தின்பொருட்டு மனிதர்களைக் கவி பாடுகிறோம்’ என்ன, ‘புல்லரைக் கவிபாடி வாழ்வதிலும்
உடம்பு நோவப் பணி செய்து வாழ்தல் நன்று,’ என்கிறார்.

புலவீர் வம்மின் –
நல்லது அறியும் நீங்கள் வாருங்கோள்; காட்டுத்தீயிலே அகப்பட்டாரை மடுவைக் காட்டி அழைப்பாரைப் போன்று ‘வாருங்கோள்’ என்கிறார்.
‘எங்களை நீர் அழைக்கின்றது என்? எங்கள் இல் வாழ்க்கை நடக்க வேண்டாவோ, பிறரைக் கவி பாடியாகிலும்?’ என்ன,
மெய்யே-உண்மையாக -சரீர -வாழ வேண்டினாலும் உங்கள் தரம் குலைய வாழ வேண்டுமோ? உங்கள் தரம் குலையாமல் வாழ ஒண்ணாதோ?
நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ –
உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் வாழப் பாருங்கோள்.
இதற்கு, ‘கோட்டை சுமத்தல், புற் சிரைத்தல் செய்யமாட்டீர்களோ?’ என்று எம்பார் அருளிச்செய்வர்.
‘அத்தால் எங்கட்கு வேண்டுவன பெற்று வாழமுடியாதே! பிறரைக் கவி பாடினால் எங்களுக்கு வேண்டுவன பெற்று வாழலாம்,’ என்ன
அது ஆகுமே அன்றோ, பெற்றால்?

இம் மன் உலகில் செல்வர் இல்லை இப்போது நோக்கினோம்-
ஆற்றுப்பெருக்கின் தன்மையைப் போன்று நித்தியமான இந்த உலகத்தில் உங்கள் கவி கேட்டு இக்கவிக்குத் தரமாகத் தருகைக்கு
வள்ளல்களாய் இருக்கும் ஸ்ரீமான்கள் இல்லை; ‘இவர்கள் நெஞ்சு கன்றக் கவி பாடுகிற இதற்குப் பயன் உண்டோ?’ என்று
இப்போது ஆராய்ந்து பார்த்தோம்; ஒருவரும் இலராய் இருந்தது. செல்வர் முன்பும் இலர் ஆதலின், ‘இப்போது இல்லை’ என்ன வேண்டா;
ஆதலின், ‘செல்வர் இல்லை இப்போது நோக்கினோம்’ எனச் சொற்களை மாற்றிப் பொருள் உரைக்கப்பட்டது.
‘ஆயின், ‘இப்போது நோக்கினோம்’ எனின், முன்பு நோக்கிற்றிலரோ?’ எனின், ‘முன்பு இவர்தாம் உலக வாழ்க்கையில்
கண்வைக்குமவர் அன்றே? இவர்கள் வறிதே துக்கப்படுகிறார்களோ? ஏதேனும் பயன் உண்டோ? என்று இப்போது பார்த்தோம்,’ என்கிறார்.
அர்த்தாந்தரம் -செல்வர் இல்லை இப்பொது நோக்கினோம் -/ செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் -இரண்டும் இல்லை
முன்பே மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் –இப்போது தான் உங்கள் அனர்த்தம் கண்டு நோக்கினேன்

‘நன்று; மனிதர்களில் அன்றோ இல்லாதது? தேவர்கள் மனிதர்களில் வேறுபட்டவரே; இக்கவிகளைக்கொண்டு
எங்களுடைய இஷ்ட தெய்வங்களைத் துதிக்கிறோம்,’ என்ன,
நும் இன் கவி கொண்டு நும் நும் இஷ்டா தெய்வம் ஏத்தினால் –
உங்களுடைய இனிய கவிகளைக்கொண்டு, இராஜஸராயும் தாமஸராயும் இருக்கிற உங்களுக்குப் பொருந்தும் இராஜஸராயும்
தாமஸராயும் உள்ள தெய்வங்களைத் துதித்தால். அது,
செம் மின் சுடர் முடி என் திருமாலுக்குச் சேரும்
– தடையில்லாத (எங்கும் பரந்த) பிரகாசமான ஒளியையுடைய ஆதி ராச்சியத்திற்கு அறிகுறியான திருமுடியையுடைய
திருமகள் கேள்வன் பக்கலிலே சேரும்; நீங்கள் சில ஏற்றங்களைச் சொல்லி அன்றோ கவி பாடுவது? அவை அவர்களைச் சாரமாட்டா;
‘தாமரைக் கண்ணான்’ என்றால், அது உள்ள இடத்தே போம்; விரூபாக்ஷகன் பக்கல் போகாதே? மற்றும்,
‘சர்வாதிகன், சமஸ்த கல்யாண குணாத் மகன், சர்வ ரக்ஷகன்’ என்றாற்போலே அன்றோ கவி பாடுவது?
அவை சென்று சேர்வன அவை உள்ள இடத்திலே அன்றோ? ஆகையால், உங்களுக்குக் கிடைக்கும் பலன் சௌரியமே.
அன்றிக்கே,
‘என் திருமாலுக்குச் சேரும்’ என்பதற்கு, ‘உங்கள் நினைவு ஒழிய, கவியின் இயற்கையாலும் திருமகள் கேள்வனைச் சேரும்’ என்னுதல்.
என்றது, ‘‘ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே, ஞானமாகில் அவனையே நோக்குமாறு போன்று
கவிகளானவை சொற்களின் சேர்க்கையாய் இருக்கையாலே எல்லாச் சொற்களுக்கும் பொருளாக உள்ளவன் அவன் ஆகையாலும் அவனுக்கே சேரும்,’ என்றபடி.
ஆதலால், எல்லாச் சொற்களும், சரீரமும் அந்தச் சரீரத்தால் அபிமானிக்கப்படுகின்றவனான உயிரும்
அந்த உயிருக்குள் அந்தர்யாமியான பரமாத்துமாவுமான இக்கூட்டத்துக்கு வாசகங்கள் ஆகையாலே விசேடியப் பிராதான்யத்தாலே
அவனையே சொல்லினவாம்.
அசித்துக்கும் சித்துக்கும் பரமாத்மாவுக்கும் ஒரு சொல் -சொல்ல மூன்றுக்கும் சம பிரதானம் இல்லை -பரமாத்மாவுக்கே பிரதானம் –
‘எவர்கள், பிதிரர்களையும் தேவர்களையும் அக்கினியோடு கூடின பிராமணர்களையும் பூஜிக்கின்றார்களோ,
அவர்கள், எல்லாப் பூதங்கட்கும் அந்தரியாமியாய் இருக்கிற விஷ்ணுவையே பூஜித்தவர்கள் ஆவர்கள்,’ என்பது ஸ்மிருதி.

——————————————————————————————

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-

ஸ்துத்யமான குணங்கள் திரு நாமம் -பூரணமாக உடையவன் -அவனே -ஷூத்ர விஷயம் போய்க் கவி பாடேன்
சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்-தகுதியான -புகழ் சேர்ந்த -வள்ளல் தன்மை -அத்தால் வந்த குணப்ரத்தை கீர்த்தி
எல்லை இல்லாத அத்விதீய -கணக்கில்லாத
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான்கிலேன்;-
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,-மேகம் ஒத்த கை -மலை போன்ற தோள்கள்
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே-பூமியில் வளப்பமான பொய்-பேசுகிறீர்கள்
மெய் கலவாத புதுப் பொய்கள்
பூர்ண விஷயம் பகவானைப் பற்றி இருக்கும் நான் சக்தன் அல்லன் –

தகுதியான கொடையும் புகழும் எல்லை இல்லாமல் இருக்கின்றவனை, ஒப்பற்ற ஆயிரம் திருப்பெயர்களையுமுடைய பெருமானை அல்லாமல்
கைகள் மேகத்தைப் போன்றவை வலிய தோள்கள் பெரிய மலையை ஒத்தவை என்று பூமியில் தூறு போலப் பயன் அற்று இருக்கின்ற
ஒருவனைப் பார்த்து மெய் கலவாத பசும்பொய்களைப் பேசுவதற்கு யான் தகுதியுடையேன் அல்லேன்,’ என்கிறார்.
பிரானை அல்லால் பாரில் ஓர் பற்றையை ‘மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள்’ என்று
பச்சைப் பசும்பொய்கள் பேச யான் கிலேன்,’ எனக் கூட்டுக.
மற்று – பிறிது என்னும் பொருளில் வந்தது–கிலேன் – ஆற்றில் உடையேன் அல்லேன். பற்றை – சிறு தூறு.

வழி பறிக்கும் நிலத்தில் தன்கைப்பொருள்கொண்டு தப்பினவன் மகிழுமாறு போன்று, இவர்களைப் போல அன்றிக்கே
பகவானை ஒழிய வேறு சிலரைக் கவிபாடுகைக்கு நான் ஆற்றலன் அன்றிக்கே ஒழியப் பெற்றேன்,’ என்று பிரீதர் ஆகிறார்.

சேரும் கொடை புகழ் எல்லை இலானை –
கொடையாலே சேர்ந்த புகழுக்கு எல்லை இல்லாதவனை.
அன்றிக்கே,
தகுதியான கொடையால் உண்டான புகழுக்கு எல்லை இல்லாதவன்’ என்னுதல். என்றது, ஒருவன் ஒருவனுக்கு ஒரு
பசுவினைக் கொடுத்தானாகில், ‘இவனுக்கு இதற்கு அடி என்?’ என்று இருப்பர்கள்; பெருமாள் சிங்காசனமும்
ஸ்ரீ சத்ருஞ்சயனும் அகப்படக் கொடுத்து வெறுவியராய் நின்ற அளவிலே திரிஜடன் வந்து யாசிக்க,
சரயூநதி தீரத்துக்கு இவ்வருகுபட்ட பசுக்களை அடையக் கொண்டு போ,’ என்று கொடுக்க,
பெருமாள் கொடுத்தாராகில் சேரும்’ என்றார்கள் அன்றோ? அப்படியே, ‘தகுதியான கொடையால் வந்த புகழுக்கு எல்லை இல்லாதவன்’ என்றபடி.

ஓர் ஆயிரம் பேரும் உடைய பிரானை –
கவி பாடுமிடத்தில் ஒன்று இரண்டு பேராய், அவைதாமும் ‘ஐலபில:’-சுருதி கடுமை- என்றாற்போலேயாய், ஒரு பாட்டில் அடங்காதபடி இருத்தல் அன்றியே
நினைத்தபடி பாசுரமிட்டுக் கவி பாடலாம்படி பல பல திருநாமங்களை உண்டாக்கி வைத்த மஹோபகாரகனை.
ஓர் ஒன்றே கவி பாடுகைக்கு விஷயம் போரும்படி இரண்டாவது வேண்டாததாய் இருத்தலின், ‘ஓர் ஆயிரம்’ என்கிறார்.
உத் ஒன்றையே விரிக்க தானே ஆயிரம் திருவாய்மொழிகளும்
அவற்றை இவர்க்குப் பிரகாசிப்பித்த உபகாரகன் ஆதலின், ‘பிரானை’ என்கிறார். இவ்விஷயத்தை ஆயிற்றுக் கவி பாடுகிறது.
அல்லால் மற்று யால் கிலேன் –
இவனை ஒழிய வேறு ஒருவரைக் கவி பாட ஆற்றலன் ஆகின்றிலேன்.-‘எவைதாம் நீர் மாட்டாமல் ஒழிகிறவை?’ என்ன,
கை மாரி அனைய –
கொடுக்கைக்கு முதல் இன்றிக்கே இருக்கிறான் ஒருவனை, கொடையில் மேகத்தை ஒக்கும் என்கை.
கைம்மாறு கருதாது கொடுக்கையும், கொடுக்கப் பெறாதபோது உடம்பு வெளுக்கையும் முதலானவைகள் மேகத்தின் தன்மையாம்.
கை என்றது, கொடை.
திண் தோள் மால் வரை ஒக்கும் –
கொடையை நினைத்துத் தேம்புகிற தோளைக் குறித்து, ‘கொடுத்துப் பணைத்திருக்கிறது’ என்றும்,
இத்தோள் நிழலிலே அன்றோ உலகம் அடங்க வாழ்ந்து கிடக்கிறது?’ என்றும்.
பாரில் ஓர் பற்றையை –
பூமியிலுள்ளார் சிலராய், பற்றையாய் இருக்கின்றவர்களை. என்றது, ‘முளைத்து எழுந்து தீந்து போவன சில சிறு தூறுகள் உள அன்றே?
அப்படியே, பிறந்தது தொடங்கி இருக்கின்ற வரையிலும் தனக்கு உறுப்பாதல் பிறர்க்கு உறுப்பாதல் செய்யாதவர்கள்’ என்பதனைக் குறித்தபடி.
போக பூமியில் சிலராகில் பொருந்தினும் பொருந்தும்’ என்பார், ‘பாரில் ஓர் பற்றை’ என்கிறார்.
அன்றிக்கே,
பாரில் ‘பற்றையை’ என்பதற்கு, பார் என்பது,நத்தமாய்,-இருப்பிடமாய் – அதனால் ஒரு குடிப்பற்றைக் கூறுகிறது என்றும்,
இல்’ என்பது, இல்லாமையைக் கூறுகிறது என்றும், பற்றை என்பது, கைப்பட்டதை இறுகப் பிடித்து ஒருவர்க்கு ஒன்றும்
ஈயாதவர்களைக் கூறுகிறது என்றும் பொருள் கூறுவாருமுளர்.
ஆயின்,‘திருணசமன்’ -புல்லுக்கு சமன் -என்று கூறப்படும் வழக்கு உளது ஆதலின், மேலதே பொருள்.
பச்சைப் பசும்பொய்கள் பேச – மெய் கலவாத பொய்களைச் சொல்ல.
ஆயிரம் பேரும் உடைய பிரானை அல்லால் மற்று, பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேச யான் கிலேன்,’ என்க.
ஜிஹ்வா நம-ஜீவா பிரபு என்று என்று -ஸ்ரீ வல்லபேதி –ஆசைப்படும் என்றவாறு –

கவி பாடுமிடத்தில் ஒன்றிரண்டு பேராய், அதுதானும் ‘ஐலபில:’என்றாற்போலேயாய்’ என்னும் இவ்விடத்தில்,

‘மூவர் கோவையும் மூவிளங்கோவையு ம்பாடிய என்றன் பனுவல் வாயால்‘எம்மையும் பாடுக’ என்றனிர்;
நும்மை யாங்ஙனம் பாடுகன் யானே? களிறு படு செங்களம் கண்ணிற் காணீர்;
வெளிறு படு நல் யாழ் விரும்பிக் கேளீர்; புலவர் வாய்ச்சொல் புலம்பலுக்கு இரங்கீர்:
இலவ வாய்ச்சியர் இளமுலை தோயீர்; உடீஇர், உண்ணீர், கொடீஇர், கொள்ளீர்;
ஒவ்வாக் கானத் துயர் மரம் பழுத்த துவ்வாக் கனியெனத் தோன்றினிர் நீரே.’-என்ற செய்யுளை ஒப்பு நோக்கலாகும்.

————————————————————————————

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-

பரம பிராப்ய பூதன் கண்ணனைப் பாட -அவனைப் பெற ஆசை கொண்ட நான் -ஷூத்ரரை கவி பாட வல்லேன்
வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை-மூங்கில் -குணங்களை விட அதிக குணங்கள் –
கொண்ட பசுமை திரட்சிக்கும் செவ்வைக்கும் -தோள்கள்
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்-ஸ்வரூப அனுபந்தி -புகழ் -தனித் தனியே அபரிச்சின்னமாய்
-எண்ணிக்கையும் இல்லாத -வந்தேறி இல்லை -இப்படி நெடும் காலம் போய்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,-சரீரம் தொலைத்து -பரம பிராப்யம் -திருவடித் தாமரைகளில் சேர்ந்து
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?-இப்படி ஆசை கொண்ட நான் –
திருவடிக்கீழ் புகும் காதலன் -ஆழ்வாருக்கு திருநாமம் -வேட்கை அன்பு அவா பெரும் காதல் –
பிரக்ருதியில் அகப்பட்டும் மனிசரை
பகவத் ஸ்துதிக்கே ஆன என் வாய் -கொண்டு பாடேன் -நான் பாடினாலும் என் வாய் பாடாதே
முடியானே பின்பு கரணங்கள் ஸ்வ தந்தரமாக செயல் படுமே

பசுமையாலும் திரட்சியாலும் செவ்வையாலும் மூங்கிலைக்காட்டிலும் மேம்பட்டுத் தனக்குத்தானே ஒத்த தோள்களை
உடையவளான தப்பின்னைப் பிராட்டிக்குக் கேள்வனான இறைவனுடைய எல்லை இல்லாதனவான பொருந்திய
பெரிய புகழைப் பாடிக்கொண்டே சென்று சரீரத்தைக் கழித்து அவனுடைய தாள் இணையில் புகுகின்ற காதலையுடையனான யான்,
அழியக்கூடிய இம்மனிதர்களை என் வாய்கொண்டு என் சொல்ல வல்லேன்?’ என்கிறார்.

வேயின் – ‘இன்’ ஐந்தாம் வேற்றுமை உறழ்பொரு. புரைதல் – ஒத்தல். ‘மணாளன்’ என்பது, ‘மணவாளன்’ என்பதன் திரிபு.
வாய்கொண்டு என் சொல்ல வல்லேன்?’ என மாறுக.

‘நான் பிறரைக் கவி பாடுவேன் என்னிலும், என் வாயானது அவனை ஒழியப் பாடாது,’ என்கிறார்.
‘நப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளனுமாய் எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமானவனுமான சர்வேசுரவனைக் கவிபாடி
இச்சரீரத்தைக் கழித்து இதன் பின்னர் அடிமைக்கு ஈடாய் இருப்பது ஒரு சரீரத்தைப் பெற்று அவனுக்கு அடிமை செய்ய வேண்டும்
என்று ஆசைப்பட்டு இருக்கிற யான் என் வாயைக் கொண்டு நீர்க்குமிழி போலே இருக்கிற புல்லரைக் கவி பாட வல்லேனோ?’ என்கிறார்.

வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்வைக்கும் வேயிலும் விஞ்சின அழகையுடைத்தாய் ஒன்றற்கு ஒன்று ஒத்ததான
தோள்களையுடைய நப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளன் ஆனவனை. மலிதல்-மிகுதல்.
பிறரைக் கவி பாடுகைக்குத் தகுதியான இச்சரீர சம்பந்தத்தை அறுக்கைக்கும் வேறுபட்ட சிறப்பினையுடைய
சரீர சம்பந்தத்தைப் பெற்றுத் திருவடிகளிலே அடிமை செய்வதற்கும் புருஷகாரமான நப்பின்னைப்பிராட்டி’ என்கை.
அவள் சேர்ந்திருக்கும் சேர்த்தியிலே கவி பாடி, யான் -திரு வில்லா -வேறு சிலரைக் கவி பாடவோ?’ என்கை. என்றது,
இனி, கை கழியப் போக வல்லரோ, பிராட்டி கைப்புடையிலே -மத்யம ஸ்தானம் –நின்று கவி பாடுகிறவர்?’ என்றபடி.
அவள் செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவன் ஆதலின், ‘பின்னைக்கு மணாளன்’ என்கிறார்.
ஆய –
ஆயப்பட்டு இருக்கை; என்றது, தாழ்வுகட்கு எதிர்த்தட்டாய் இருக்கை.
அன்றிக்கே, ‘ஆய’ என்றது, ‘ஆன’ என்றாய், ‘சொரூபத்தோடு பொருந்தியிருக்கிற’ என்னுதல்.

பெரும்புகழ் –
சரீர குணத்தோடு ஆத்தும குணத்தோடு வாசி அற ஒரோ ஒன்றே எல்லை இல்லாமல் இருக்கை.
எல்லை இலாதன –
இப்படிப்பட்ட குணங்கள் கணக்கு இன்றி இருத்தல். -கீர்த்திமை பாடிப்போய் -அஷய கீர்திஷ்ய -தாரை
பாடிப் போய்க் காயம் கழித்து –
சக்கரவர்த்தி மக்களுடைய காவல் நிமித்தம் சுற்றும் பயணம் திரிந்து முத்தின் குடை நிழலிலே இருந்து சரீரத்தால்
முதுமைப்பருவத்தை அடைந்தார்,’ என்றது போன்று,
அஜ மகாராஜர் வானப்ரஸ்தானம் சென்று தசரதரத்தை 16 வயசில் பட்டாபிஷேகம் செய்தார் –
-இவர் -60000 வருஷம் பிரஜைகளை ரஷணம் செய்து காயம் கழித்தான்
பகவானுடைய குணங்களைப் பிரீதியினாலே தூண்டப் பட்டவனாய்க்கொண்டு சொல்லி -இதுவே வாழ்க்கையாகச் சரீரத்தை விட்டு.
அவன் தாள் இணைக் கீழ்ப் புகும் காதலன்
இந்தச் சரீரத்தைக் கழித்த பின்னர், ஆத்தும அனுபவம் பண்ணியிருத்தல், வேறு பிரயோஜனங்களைக் கொள்ளுதல் செய்ய இராமல்,
அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய் முலைக் கீழே போய் ஒதுங்கும் இளங்குழவியைப் போன்று
திருவடிகளின் கீழே ஒதுங்குவேன் என்னும் ஆசையை யுடைய யான்.

மாய மனிசரை –மாய -அநித்யமான
பிறப்போடே முடிகின்ற அழிவினையுடையவர்களை. என்றது, ‘பாடத் தொடங்கின கவி முடிவதற்கு முன்னே முடியும் மனிதரை’ என்றபடி
உத்பத்தி உடன் வியாப்தியான விநாசம் -போனால் தானே பிழைக்கும் -அங்கே வாழ -பிறக்கும் பொழுதே முடிந்து போனதே இங்கே வாழ்வதால் –
என் வாய் கொண்டு என் சொல்ல வல்லேன் –
கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறது இல்லை’ என்பார், ‘வாய்கொண்டு சொல்ல வல்லேன்’ என்கிறார்.
முடியானே’ என்ற திருவாய்மொழியிற்கூறப்படுகிற கரணங்கள் ஆகையாலே
கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறதில்லை’ என்கிறார்.
வேறே சிலர், ‘வாக்காலே பாடினால் பாடலாம்’ என்பார், ‘என் வாய் கொண்டு’ என்கிறார்.
தம்முடைய வாய்கொண்டு பாட முடியாமைக்கு ஏது, ‘மனம் முன்னேவாக்குப் பின்னே’ என்பது. ‘அங்கே காதலைப் பண்ணி’ என்றது,
மனம்ஈசுவரனிடத்தில் காதலோடு இருக்க’ என்றபடி.
மனம் முன்னே வாக்குப் பின்னே’ என்னக் கடவதன்றோ? அங்கே காதலைப்பண்ணிப் புறம்பே சிலரைக் கவி பாடப் போமோ?
ஆசைப்படுவது ஒரு விஷயமாய், பேசுவது ஒரு விஷயமாய் இருக்குமோ?
எல்லா இந்திரியங்களுக்கும் அடி, மனம் அன்றோ?
அதனைத் தொடர்ந்து சொல்லுமத்தனை அன்றோ மற்றைய உறுப்புகள்? இப்போது இப்படிச் சொல்லுகைக்குக் காரணம் என்?’என்னில்,
பிறரை நிஷேதிக்கும் பிரகரணத்தில் சுய அனுஷ்டானம் சொல்வது -பிராப்தி – ‘சம்பந்தம் ஒத்திருக்கப் புறம்பே சிலர்
சிலரைக் கவி பாடக் காண்கையாலே, நான் முந்துற முன்னம் இதினின்றும் தப்பப்பெற்றேன்,’ என்கிறார்.

———————————————————————–

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

பரம புருஷார்த்தம் அருளுபவன் -சாத்மிக்க சாத்மிக்க -அவனே விஷயமாய் இருக்க இதர ஸ்தோத்ரம் அதிகரிக்க உத்யோகிக்க மாட்டேன்
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;-அப்ராப்தமான மனிசரை பாட மாட்டேன்
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;-மீமாம்சை =விசாரம் -ஆய்ந்து உரைக்கப்பட்ட
ஆனந்தாதி குணங்கள் -ஔதாரன் -கவி பாடுவார் நெஞ்சு தம் வசத்தில் இருக்கப்பண்ணும் திரு ஆழி –
அசாதாரணமாக விஷயமாக உள்ளான்
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்-அதீத தேஜஸ் -இங்கும் அர்ச்சாவதார அனுபவம் கொடுத்து
அங்கும் பகவத் -பர விபூதியையும் -சேனாபதி ஆழ்வான் போலே இவரை நியமித்து -அன்று ஈன்ற கன்று இடம் வாத்சல்யம்
கண்டு கொள் -ஆராய்ந்து நிர்வகிக்க -கைங்கர்ய ஜனித மோஷ ஆனந்தம்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.-ருசியை விளைவித்து -நின்று நின்று -பொறுக்கப் பொறுக்க-

வாயால் மனிதர்களைப் பாட வந்த புலவன் யான் அல்லேன்; ஆராயப்பட்ட குணங்களைக் கொண்ட வள்ளலாகிய
ஆழிப்பிரான் எனக்கே இருக்கின்றான்; ஒளியையுடைய இவ்வுலகத்தில் இன்பத்தையும் கொடுத்து, பரமபதத்தையும்
நீ கண்டு கொள்வாய் என்று கைங்கரிய சுகத்தையும் முறையாகக் கொடுப்பான்,’ என்கிறார்.
கவியேன் – கவியைப் பாடுகிறவன்; புலவன். ‘ஆய் சீர் கொண்ட’ என் மாறுக. ‘சாய்’ என்பது, ‘சாயை’ என்பதன் திரிவு;
சாயை – ஒளி. ‘வீடு’ என்பது, ஈண்டு ஆகுபெயராய்க் கைங்கரியத்தைக் காட்டிற்று. ‘நின்று நின்று தரும்,’ என மாறுக.

‘பெருவள்ளல் ஆனவன் என் கவிக்குத் தன்னை விஷயமாக்கி வைத்த பின்பு, மற்றையோரைத் துதித்தற்கு அதிகாரி அல்லேன்,’ என்கிறார்.

வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் –
வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர்.
இது சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக வாயினைப் படைத்தபடியே’ என்பது நேர்ப்பொருள்; சிலேடை: துதிப்பதற்கு உறுப்பாக
வாயினைப் பெற்று என்பது வேறும் ஒரு பொருள்.
இறைவனைத் துதிப்பதற்காகவே ‘நா’ படைக்கப்பட்டது என்பதனை. அவன் தன்னைஏத்துகைக்குத் தந்த வாயைக்கொண்டு
புல்லரைக் கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன்; ‘நான் பிறரைக் கவி பாடினால் என்னைப் படைத்ததனால்
ஆய பயனை அவன் பெற்றானாம்படி என்? படைப்பிற்குப் பயன் பகவானை அடைதலேயோ?’ எனின்,
தன்னை உத்தேசித்தே அன்றோ படைப்பு? ‘புத்திரனே! அழகாலே துவக்க வல்ல ஸ்ரீ ராமபிரானிடத்தில் மிக்க பற்றுதலையுடைய நீ,
காட்டில் வசிக்கும்பொருட்டே உண்டுபண்ணப்பட்டாய்;உடன் பிறந்தவனான ஸ்ரீ ராமபிரான் சீதையோடு போகும்போது குறிக்கோள்
இல்லாமல் இராதே,’ என்றாள் தேவி சுமித்திரை.
ஸ்ரீராமா. அயோத். 40 : 5. இச்சுலோகத்திற்கு வியாக்கியாதாஅருளிச்செய்த பொருள் பின் வருமாறு:
ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய
ஐயரையும் ஆச்சியையும் அநுவர்த்தித்துப் பெருமாள் காடேற எழுந்தருளா நின்றார்;
நானும் அவரை அநுவர்த்தித்துப் போகிறேன்,’என்று இளைய பெருமாள்
அறிவிக்க, ‘உமக்கு முடி வேணும் என்று அபேக்ஷை உண்டாகில், முடி சூடுகைக்கு யோக்கியனாயிருப்பான் ஒருவன்வேணும்’ என்றதற்கு ஈடாக
நோன்பு நோலேனோ? அவரை அநுவர்த்திக்கைக்காக அன்றோ நான் உம்மைப் பெற்றது? –உன் அடியை அவர் முடியில் சேர்க்கைக்கு
ஸூஹ்ருஜ்ஜநேராமே – ஸ்வநுரக்த: –
உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று உண்டோ?
அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை செய்யுமவரிறே.
செவியே கண் கண்ணே செவி யாக கொண்ட ஆதி சேஷன் அன்றோ
அன்றிக்கே,
ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே –
‘கருமுகை மாலையை வெயிலிலே இட்டாற்போலே, பெருமாள் தம் சௌகுமார்யம் பாராதே பித்ரநுவர்த்தநம் பண்ணிக் காட்டிலே
போகாநின்றார்; என் புகுகிறதோ!’ என்று வயிறு எரிந்திருக்கின்ற ஸூஹ்ருஜ் ஜநங்களுக்கு நல்லீரிறே.
‘ஸூஹ்ருஜ்ஜனம்’ என்றது,
திருத்தாயார் தொடக்கமான படை வீட்டில் உள்ளாரை. ‘அவர்களுக்கு வேர்ப்பற்றான இவரை நோக்கித் தாரீர்’ என்றுமாம்.
ராமே – நடக்கை மிகையாம்படி, வெறுமனே இருந்தாலும் ஆகர்ஷ்கமான வடிவழகையுடையவர்,
ராமே ப்ரமாதம்மாகார்ஷீ: – ‘பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த்த:’ (ஸ்ரீராமா. பாலா. 18 : 27.)என்று, அவதார காலமே
தொடங்கி அந்வயத்தில் தரித்து வியதிரேகத்தில் தரியாதவர்க்கு இன்றாக ஒரு பிரமாதம் புகுருகைக்கு ஒரு சங்கை
இல்லையிறே; சம்பாவிதமானது ஒன்றைச் சொல்லுகிறாளாக வேணுமே.
பிராதரி கச்சதி – அவர் உம்முடைய முன்னே நடப்பர் கிடீர்; அவ்வழகிலே கண்வைத்து, நீர் அதிகரித்ததற்குச் சோர்வு பிறவாதபடி குறிக்கொள்ளும்.
அக்ரத: ப்ரயயௌ – (ஸ்ரீராமா. ஆர. 11 : 1.) நடைச் சக்ரவத்துப் பிடிக்கலாம்படி.
கானகம் படி யுலாவி யுலாவிக் —மேனகையோடு திலோத்தமை யரம்பை உருப்பசி யாரவர் வெள்கி மயங்கி
-ஆடல் பாடல் அவை மாறினார் தாமே –பெரியாழ்வார்திருமொழி, 3. 6 : 4.
என்னைப் படைத்து அவனைப் பாட வைத்து –அவன் தாளிணை அடைய வைக்கவே -தன் பயனாகவே சிருஷ்டி-

ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப்பிரான் எனக்கே உளன் –
‘நீர் ‘அவனைக் கவி பாடக் கடவேன்’ என்று இருந்தாலும், ‘அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வாக்குகள் பேச முடியாமல்
திரும்புகின்றனவோ’ என்கிறபடியே, ‘வேதங்களும் பேச முடியாமல் மீளும்படியான பரமன் அன்றோ அவன்?
அவனைக் கவி பாடப் போமோ?’ என்ன, ‘அவன், ‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே,
தன்னை எனக்கு ஆக்கிவைத்தான்; எனக்குக் கவி பாடக் குறை என்?’ என்கிறார்.

ஆய் கொண்ட சீர் –
ஆராயப்பட்ட சீர். என்றது, குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாக இருக்கிற கல்யாண குணங்கள்.
வள்ளல் –
பரம உதாரன்.
ஆழிப்பிரான் –
இக்குணங்களைக் காத்து ஊட்ட வல்ல கருவியை உடையவன்.
எனக்கே உளன் –
என் கவிக்கே தன்னை விஷயம் ஆக்கினான்.
ஆழிப்பிரான் –
தானும் தன் ஆயுதமுமாய் இருக்கிற இருப்பை நான் கவி பாடலாம்படி எனக்கு விஷயம் ஆக்கினான்.
‘வலக் கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை,
மலக்கு நா உடையேற்கு மாறு உளதோ இம்மண்ணின் மிசையே’ என்பர் பின்னும்.

சாய்கொண்ட இம்மையும் சாதித்து
ஒளியையுடைத்தான இவ்வுலக சுகத்தையும் தந்து. சாய் – ஒளி. கொள். கொள்கை – உடைத்தாகை.
மோக்ஷசுகத்திலும் நன்றாம்படி இவ்வுலகத்திலே தன் அனுபவமே வாழ்க்கையாம்படி செய்து தந்தான் ஆதலின்,
‘சாய் கொண்ட இம்மை’ என்கிறார்.
இவ்வுலக இன்பங்களோடு மேலுள்ளவற்றோடு வாசியற அவனே சாதனமாக இவர் பெறுபவராதலின் ‘இம்மையும் சாதித்து’ என்கிறார்.
வானவர் நாட்டையும் –
அடையக்கூடிய தேசம் நித்தியசூரிகள் இட்ட வழக்காய் இருக்கும்; ஆதலின், ‘வானவர் நாடு’ என்கிறார்.
இதனால், ஸ்ரீ வைகுண்டநாதன் பரமபதத்தில் குடியிருப்பாரைப் போன்று இருக்கின்றான் என்பதனைத் தெரிவித்தபடி.
தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள்’ என்னுமதுவும் தன் பக்கலிலேயாய் இருக்கிறது.
பவத் விஷய வாசிநா -ரிஷிகள் சொன்னது போலே -நித்யஸூரிகள் நாடே வானவர் நாடு –
நீ கண்டுகொள் என்று –
‘தேவரீர், பொக்கிஷத்தையும் பசுக்கொட்டிலையும் நகரத்தையும் பலத்தையும் பார்த்தருள வேண்டும்;
தேவரீருடைய ஒளியால் எல்லாம் பத்துமடங்கு அதிகமாக என்னால் செய்யப்பட்டது,’ என்கிறபடியே,
ஸ்ரீ பண்டாரத்தை வளர்த்து வைத்து, பெருமாள் மீண்டும் எழுந்தருளின போதே ஸ்ரீ பரதாழ்வான் காட்டிக் கொடுத்தாற்போலே
வானவர் நாட்டை நீ கண்டுகொள்’ என்கிறார்.
க்ருதம் தசகுணம் மயா -ஸ்ரீ பாதுகையின் மகத்வத்தால் பத்தாக்கி கொடுத்தானே -ஆழ்வாரால் வளர்க்கப்பட்ட வானவர் நாடு –

‘‘வானவர் நாடு’ என்று வைத்து, ‘நீ கண்டுகொள்’ என்று இவனுக்கு முன்பே உள்ளது ஒன்றனைக் காட்டிக்கொடுத்தாற் போன்று
சொல்லக் கூடுமோ?’ எனின், முன்பே அங்கு உளரான நித்தியசூரிகளோடு இன்று புக்க இவனோடு வாசி அற்று இருக்கின்றான் ஆதலின்,
அங்ஙனம் அருளிச்செய்கிறார். ‘அதற்கு அடி என்?’ என்னில், ‘அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றைக்
காற்கடைக் கொள்ளும் பசுவின் தன்மையைப் போன்ற வாத்சல்யத்தின் மிகுதியே காரணம்’ என்க.
‘ஏ வீரனே! நீ சிறிது வருத்தமுற்று இருந்தால் சீதையால் தான்எனக்கு என்ன பயன்?’ என்றார் பெருமாள். என்று
இப்படி அன்போடே சொல்லி. வீடும் தரும் – கைங்கரிய சுகத்தைத் தரும். ‘முக்தி: மோக்ஷோ மஹாநந்தா:’ என்பது நிகண்டு.

நின்று நின்றே –
‘இப்படி முழுக்கக் கொடுத்தாலும் ‘இவனுக்கு நாம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்று திரௌபதியானவள் நீண்ட தூரத்தில்
வசிக்கின்ற என்னை நினைத்துக் ‘கோவிந்தா!’ என்று அழுதாள் என்பது யாது ஒன்று உண்டோ, அது வட்டியின்மேல் வட்டி ஏறின
கடன் போலே என்னுடைய மனத்தினின்றும் நீங்கவில்லை,’ என்கிறபடியே, திருவுள்ளத்திலே மிறுக்குப்பட்டிருக்கும்,’ என்று நம் ஆசாரியர்கள் நிர்வஹிப்பார்கள்.
அன்றியே,
‘சொன்னவற்றை அடைவு அடைவே தரும்’ என்று கூறுவாறும் உளர். என்றது, ‘முதலில், இவ்வுலக இன்பத்தை அனுபவிப்பித்துப் பின்பு
ஒரு தேச விசேஷத்தைக் காட்டிக் கொடுத்துப் பின்பு கைங்கரிய சுகத்தைக் கொடுக்கும்,’ என்றபடியாம்.
அன்றியே,
‘இவ்வுலகத்தில் தன் அனுபவத்தின் நிறைவையும், பேறாகிய பரமபதத்தையும், அங்கே கைங்கரிய சுகத்தையும் தருமிடத்தில்
பொறுக்கப் பொறுக்கத் தரும்’ என்னலுமாம்.

‘மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே?
நாராயணா என்னா நாஎன்ன நாவே?’-(சிலப். ஆய்ச். குர.)

——————————————————————-

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

ஸ்துத்யர்த்தமான-கரண களேபர பிரதனான -வனுக்கு கவியான பின்பு -வேறு ஒருவரை பாடுகை அனுரூபம் அன்று
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்-காலதத்வம் உள்ள அளவும் தனது வசத்தில் ஆக்கிக் கொள்ளும் -சரீரம்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,-நீண்ட காலம் கழித்து -பெருமாளை சேவித்து -நேராக கண்டு -அபரோஷித்து
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு-நெஞ்சு பொருந்தி -சிருஷ்டி தோறும் -கவியான எனக்கு –
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?-காலம் உள்ளதனையும் வேறு ஒருவரை பாடுவது தகுதியோ –
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி -ஆழ்வார் உடைய சிறந்த திரு நாமம் அன்றோ இது –

காலமுள்ள வரையிலும் இடைவிடாதே நின்று இன்ப துன்பங்களை அனுபவிக்கின்ற இச்சரீரத்தை நீங்கிச் சென்று,
பல காலம் கழிந்த பின்னராயினும் நம்மைக் கண்டு பிறப்பினைஇவர்கள் நீக்க வேண்டும் என்று நினைத்துப் படைக்குந்தோறும்
பொருந்தி உலகத்தைப் படைத்தவனுடைய கவியான எனக்குக் காலம் உள்ள வரையிலும் மற்று ஒருவரைக் கவி பாடுகை தகுமோ?’ என்கிறார்.
சென்று சென்றாகிலும் கண்டு, நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய், சன்மம் கழிப்பான் எண்ணி, ஒன்றி ஒன்றி
உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு’ எனக் கூட்டுக.
கண்டு நீங்கிப் போய்ச் சன்மம் கழித்தல், சேதனர் தொழில். எண்ணுதல், இறைவன் தொழில். ‘எண்ணிப் படைத்தான்’ என்க.

சர்வேசுவரன் கவியான எனக்குப் பிறரைத் துதிக்கும் உறுப்பு ஏற்றது அன்று,’ என்கிறார்.

பல நாள் நின்று நின்று –
பல காலம் இடைவிடாதே. உய்க்கும் – செலுத்தும். என்றது, ‘இவ்வாத்துமாவுக்கு விரோதமாக நடத்தும்’ என்றபடி.
இவ்வுடல் –
கூற்றம் கண்டாற் போன்று அச்சத்திற்குக் காரணமாய் இருக்கிறபடி.-தன்னைக் கண்டால் பாம்பைக் கண்டால் போலே –
‘இவ்வுடல்’ என்றதனால் இப்பொழுது இருக்கிற சரீரத்தையும், இதனைப் போன்ற முன்புள்ள சரீரங்களையும் நினைக்கின்றார்.
‘முன்புள்ள சரீரங்களையும் ‘இவ்வுடல்’ என்றதனால் சொல்லும்படி என்?’ என்னில்,
முன்புள்ள சரீரங்களும் இவ்வுடல் போலே இடையீடு இன்றி ஒரே அனுபவம் உள்ளவனவாகத் தோன்றுகிறதாயிற்று இவர்க்கு.
சஜாதீயம் -பிறப்பு கர்மம் -பொது தானே இவற்றுக்கு -வர்த்தமான -சரீரம் நீங்கி தானே மோஷம் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
ஈஸ்வரன் -இவ்வுடலைக் கொண்டு சாதனம் பண்ணி உடலைக் கழிப்பான் என்று நினைப்பான் -அன்றோ –
ஆகாமி சரீரங்கள் கழிப்பான் -சரணாகதி ஆனபின்பு -பிறவாமை ஏற்படும் –
அனைத்து பிறவிகளிலும் செய்த கர்மங்களுக்கு பிராயாச்சித்தம் செய்து இப்பொழுது தானே முடிக்கிறோம்
கர்மங்கள் கோவையாக அனைத்திலும் வருமே -சன்மம் கழிப்பான் -மேல் உண்டாக கடவ சரீரம் கழிப்பான் என்பதற்காக –
அதனால் இவ்விடல் -முன்புள்ள வர்த்தமான -முன்பு உள்ள அனைத்தையும் கழிப்பான்
என்று எண்ணியே இப்பிறவியை கொடுத்து அருளுகிறான் -என்றபடி –
இப்படி கொள்ளும் அன்றே இந்த ஜன்ம சமாஸ்ரயணத்தால் முந்திய கர்மாக்களும் நிவ்ருத்தி ஆகும் –

நீங்கிப் போய் –
விட்டுப் போய்.
சென்று சென்றாகிலும் –
ஒன்று அல்லா ஒரு பிறவியிலேயாகிலும்.
கண்டு –
நம்மை இவன் கண்டு.
சன்மம் கழிப்பான் எண்ணி –
பிறவியின் சம்பந்தம் அறும்படி செய்ய வேண்டும் என்று நினைத்து.
அன்றிக்கே,
சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி’ என்பதற்கு, ‘நெடுங்காலம் கூடவாகிலும் நம்மை அறிந்து
இவை பிறவிகளிற் புகாதபடி பண்ணவேண்டும் என்று சிந்தித்து’ என்று பொருள் கூறலுமாம். இப்பொருளுக்கு,
சென்று சென்றாகிலும்’ என்பதனை ஒரு சொல் நீர்மையதாகக் கொள்க.
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –
‘சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா’ என்கிறபடியே, ஒருகால் படைத்துப் பலியாவிட்டால் சோம்பிக் கைவாங்காதே
ஒருப்பட்டு ஒருப்பட்டு உலகங்களைப் படைத்தவனுடைய; கிருஷிகன் ஒருகால் பயிர் செய்து, பதர்த்தால் பின்பும் பயிர் தன்னையே
செய்யுமாறு போன்று, இவனும் ‘ஒருநாள் அல்லா ஒரு நாளாலும் ஆம்’ என்றே அன்றோ படைப்பது?
‘இறைவனைக் கிருஷிகனாகவும், உலகத்தை வயலாகவும் கூறலாமோ?’ எனின், ‘பத்தி உழவன் பழம்புனமே’ அன்றோ இது?
ஒரு நாள் அல்லா ஒரு நாளாகிலும் நம்மை அறிந்து, பல நாளும் இடைவிடாதே
இவ்வாத்துமாவுக்கு விரோதமாக நடத்துகிற இச்சரீரத்தை விட்டுப்போய்,
இனி இவ்வாத்துமாக்கள் பிறவாதபடி பண்ண வேண்டும் என்று நினைத்து ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் ஆயிற்று.
சத்ய சங்கல்பன் -நினைவு தப்பாது என்ற துளி எண்ணம் இருந்து ஆபிமுக்யலேசம் காட்டினால்
கூட்டிக் கொண்டு தனது தாள் இணைக் கீழ் இருத்துவான் –
உலகம் படைத்தான் கவி ஆயினே்ற்கு –
அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷி பலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு.
என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே –
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ?
‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில்,
பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவு தானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ?
ஒரு நாளிலேயே பலிக்குமது என்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான்
கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும்
இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் ‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும்,
‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப் பற்றிக்
கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம்.
வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல்.
அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்

கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப்
பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது
ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
அருளிச்செய்கிறார்.இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது.
இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று
தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச்செய்கிறார்.

————————————————————————

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-

கிருஷி பலிக்க இந்த திருவாய்மொழி -ஜன்மம் இல்லை -பலம் அருளிச் செய்கிறார் -அசேவ்ய சேவை தேவதாந்திர பாசனம் பண்ணும் ஜன்மம் வாராதே
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு-பெரும் புகழ் ஏற்கும் -நால்வருக்கும் -குண ப்ரதை-நித்ய சூ ரிகள் அவனுக்கு ஏற்க –
நிர்வாகன்- சுலபன் -அவதரித்த
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-ச்ரோதாக்களுக்கு -ஏற்ற -அனுரூபமான -ஞானாதி குண பிரதி உடைய ஆழ்வார் –
அழகிய திரு நகரி –
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து-குணாதி பிரதிபாதிதமான -அனுரூபமான -ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் எடுத்து விளக்கிச் சொல்ல –
லஷணம் -அமைப்பாக -பகவத் ச்தோத்ரமே பண்ணச் சொல்லும் இதுவே ஏற்கும் -ஸ்வரூப அனுரூபமான
இதர ஸ்துதி ஹேதுவாக ஜன்மம் கிட்டாது

‘தகுதியான பெரும்புகழையுடைய வானவர் ஈசனான கண்ணன் விஷயமாக, தகுதியான பெரிய புகழையுடைய வளப்பம் பொருந்திய
திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த தகுதியான பெரிய புகழையுடைய ஆயிரம் பாசுரங்களுள் தகுதியான
பெரிய புகழையுடைய ஒப்பற்ற இப்பத்துப் பாசுரங்களையும் சொல்ல வல்லவர்கட்குப் பிறவி இல்லை,’ என்றபடி.
‘ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் ஏற்கும் பெரும் புகழ் ஓர் இவை பத்தும்’ எனக் கூட்டுக.

‘இத்திருவாய்மொழியின் இயல் மாத்திரத்தைக் கற்றவர்கட்கு, பிறரைக் கவி பாடத் தகுதியான பிறவி இல்லை,’ என்கிறார்.

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
தகுதியான மிக்க புகழையுடையவனாய், நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனாய், அம் மேன்மையோடே வந்து அவதரித்து மனிதத் தன்மையிலே
பரத்துவத்தை யுடையவன் தனக்கு. ‘மனிதத் தன்மையில் பரத்துவம் சொல்லப்பட்ட இடம் உண்டோ?’ எனின்,
ஸ்ரீ கீதையில் ஒன்பதாம் ஓத்திலே நின்று மனிதத் தன்மையிலே பரத்துவத்தைப் பரக்கப் பேசாநின்றதே அன்றோ?
ராஜ்ய வித்யா குஹ்யா வித்யா -சு மாகாத்ம்யம் -9 அத்யாயம் –
ஏற்கும் பெரும்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல் –
‘அவன் உபய விபூதிகளை யுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று -சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால்
அதற்குப் போரும் படியிருக்கிற ஆழ்வார் அருளிச்செய்த.

ஏற்கும் பெரும்புகழ் ஆயிரம்
‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன,’ என்னும்படியான பரம்பொருளை
விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம்.
ஏற்கும் பெரும்புகழ் ஓர் இவை பத்தும்-
ஆயிரத்திலும் இப்பத்து, தகுதியான பெரும்புகழையுடைத்து. என்றது,
‘இவ்வாத்துமாவினுடைய சொரூபத்துக்குச் சேராத வகையிலே பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்றும்,
சொரூபத்திற்குத் தகுதியாக அடையத்தக்க பரம்பொருளைக் கவி பாட வம்மின்’ என்றும் சொன்ன பத்து ஆகையாலே,
சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் தகும்படி இருக்குமாயிற்று.
சன்மம் இல்லை –
நித்தியசூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே?
பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?
பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.
அநிஷ்ட நிவ்ருத்தி மட்டுமே சொல்லி -இஷ்ட பிராப்தி சொல்ல வில்லை –
உபதேசம் இங்கு உள்ளாருக்குத் தான் -லீலா விபூதி கழிவதே முக்கியம் இவர்களுக்கு –
அஜீர்ணம் தொலைந்தால் தானே அக்காரவடிசில் -மோஷ பிராப்தி சொல்ல வந்தவர் அல்லர் இவர் இந்த திருவாய்மொழியில்

தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன் பாவிற் சிறந்த திருவாய் மொழி பகர் பண்டிதனே:
நாவிற் சிறந்த அம் மாறற்குத் தக்க நன்னா வலவன் பூவிற் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.’–என்பது சடகோபரந்தாதி, சிறப்புப்பாயிரம்.

——————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அந்யஸ் தவேன-மற்று ஒருவரை -சோறு கூரைக்காக
விஷயான் அதிகந்து இச்சன் -ஆசைப்பட்டு குப்பை கிளர்ந்த செல்வம்
ஆலோக்ய –ஆராய்ந்து
விச்மிருத ஜனித விசனோ தயாளு –மறந்து-பர அனர்த்தம் கண்டு பொறுக்க மாட்டாமல்
தஸ்மான் நிவார்யா மனுஜான் விபலா –பிறவி எடுத்த பயன் -சொல்லி -பலிக்காமல் -இருக்க
ச சௌரே அன்யேஷூ அனர்ஹ கரணம் –யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் –
கரணங்கள் அனன்யார்ஹ கரண வஸ்தவ்யம்-இந்த பதிக கல்யாண குணம் -ஹ்ருஷீகேசத்வம்
வேறு இடங்களில் ஈடுபாடததை இதில் சொல்லி -அடுத்த 3-10- அவனுக்கே ஆளாகும் பேறு அருளிச் செய்கிறார்

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ரம்யாஸ் ஸ்தாநாத் யோகாத் –ரம்யமான ஸ்தானம் -ரமணீயம்
அமித விபவத–ஸ்ரமஹரமான திருக் குறுங்குடி சம்பத்
சதபத பிராபகத்வாத் -அர்ச்சிராதி போம் வழி சத்பதம்
சமயக் சாயுஜ்ய தானாத் – சாம்யா பத்தி அருளுபவர்
அநக விதாரநாத்-வோதில மணி வண்ணன்
சர்வ சேஷித்வ சிந்நாத்-சுடர் முடி எம் திரு மாலுக்கே சேரும்
பிரக்யாதா ஆக்யா சகஸ்ரம் –ஆயிரம் பேருந்தை பிரான்
அவதரண ரசகை -பின்னைக்கு மணாளன்
புக்தி முக்த்யாதி பிரதன் -இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் கண்டு கொள்
த்ரை லோக்யா சிருஷ்டி யாதி -ஒருவனே ஸ்தோத்ரம் பண்ண யோக்யன்

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 29-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

சொன்னாவில் வாழ் புலவீர் சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும்
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்—————-29-

மாறும் சன்மம் கிட்டும் -குருகூர் மன்னன் அருளால் –

——————————————————————————

அவதாரிகை –

இதில்
அசேவ்ய சேவை அநர்த்தம் என்றும்
பகவத் சேவை பிராப்தம்
என்று பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
முடியானேயில் முடியாத ஆசை யுடையராய்க் கூப்பிட்டவர்
தம் கூப்பீட்டுக்கு துணையாவார் யுண்டோ என்று
லௌகிகரை பார்த்த இடத்தில்
அவர்கள் பகவத் அர்ஹ கரணங்களைக் கொண்டு
சூத்திர மனுஷ்யர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு
அது பொறுக்க மாட்டாமல்
இப்படி வகுத்த விஷயத்தை விட்டு
அப்ராப்த விஷயத்தை கவி பாடுகை ஈடல்ல -என்று அவர்களுக்கு
ஹிதம் அருளிச் செய்ய
மீளவும் அவர்கள் பழைய நிலைகளிலே நிற்க
அவர்களை விட்டு
ஸ்வ லாபத்தைச் சொல்லி ப்ரீதராகிற
சொன்னால் விரோத-தத்தின் அர்த்தத்தை தொடுத்து
சொன்னாவில் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————————————–

வியாக்யானம்–

சொன்னாவில் வாழ் புலவீர் –
பகவத் ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு பரிகரமான
நாக்கைக் கொண்டு
அவனை ஸ்துதித்து
உப ஜீவிக்கிற
புலவீர்காள்
நீங்கள் விசேஷஞ்ஞர் அல்லீர்கோளோ-

சோறு கூறைக்காக மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும்-
அசன ஆச்சாத நாதிகளாய் யுள்ள சூத்திர பிரயோஜனதுக்காக
ஷயிஷ்ணுக்களான
சூத்திர மனுஷ்யரைக் கவி பாடி
ஸ்தோத்ரம் பண்ணுகையால் என்ன பிரயோஜனம் சித்திக்கும் –
திருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் ஒன்றுமே சித்தியாது –
அனர்த்தமே சித்திக்கும் -என்றபடி –
என்னாவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள் -என்று
அருளிச் செய்ததை நினைக்கிறது
கோ சஹச்ர பிரதாதாரம் –
ச சர்வானர்த்தி நோ த்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நந்த்யச –
என்னும் விஷயம் அன்றே

என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் –
திருவேங்கடத்து என்னானை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே-என்றும் –
என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்றும் –
ஓராயிரம் பேருமுடைய பிரானை யல்லால் மற்று யான் கிலேன் -என்றும்
பாடிப் போய் காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதலன்-என்றும்
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய் கொண்டே -என்றும்
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்றும்
உலகம் படைத்தான் கவி -என்றும்
தம்முடைய அந்ய விஷய வ்ருத்தி நிவ்ருத்தியையும்
ஸ்வ வ்ருத்தியான பகவத் ஸ்தோத்ர பிரவ்ருத்தியையும்
முன்னிட்டு
திருமாலவன் கவியான என்னோடு கூட –
என் திருமாலான ஸ்ரீ யபதியை
கவி சொல்ல வம்மின்
என்று பரோபதேசம் பண்ணி
பரோபதேச நிரபேஷமாக திருந்தின தம் படியையும் பேசினவராய் –

குருகூர் மன்னருளால் மாறும் சன்மம் –
திரு நகரிக்கு நாதரான ஆழ்வார் அருளாலே
அந்ய சேஷத்வத்துக்கு அடியான ஜன்மம் கழியும்
கண்டு சன்மம் கழிக்க வேண்டிற்று ஆழ்வாருக்கு –
இவர்களுக்கு சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்று
ஆழ்வார் அருளாலே பிறவிப் பெரும்கடல் சுவறிற்று-
த்ருஷ்டே பராபரே -கண்டு பேறு ஆழ்வாருக்கு -நமக்கு இத்தை சொல்லியே பேறு
மாறுகை யாவது -ச வாசனமாகப் போகை-
இவையுமோர் பத்தேற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே -என்று
இறே இத் திருவாய் மொழிக்கு பல ஸ்ருதியும் –

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: