பகவத் விஷயம் காலஷேபம் -82- திருவாய்மொழி – -3-9-1….3-9-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

இப்படித் தம் இழவுக்குக் கூப்பிடுகிற இது தவிர்ந்து தங்கள் இழவுக்குக் கூப்பிடும்படி செய்தார்கள் சம்சாரிகள்.
தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாய்க் கேட்டார் எல்லாம் நீராகும்படி கூப்பிட்டார் மேல் திருவாய்மொழியில்;
‘பருகிக் களித்தேனே!’2-3-9- என்கிறபடியே, பகவானை அனுபவித்து அதனால் களித்துப் பின்பு ஒருவர்க்கு ஒருவர் உணர்த்திக் கொள்வதற்கு
‘அடியார்கள் குழாங்களை உடன்கூடுவது என்றுகொலோ!’ 2-3-10-என்று நித்தியசூரிகள் திரளிலே புகத்தேடியது போன்று,
இவர் இழவாலே கூப்பிட்ட பின்னர் ‘இந்த இழவுக்குக் கூட்டு ஆவார்கள் அன்றோ?’ என்று சம்சாரிகளைப் பார்த்தார்;
அவர்கள் பேற்றுக்குக் கூட்டு இல்லாததைப் போன்று இழவுக்கும் கூட்டு இன்றிக்கே இருந்தார்கள்;
இதர தேவதா பிராவண்யத்தாலும் –விபரீத சாஸ்திர நிஷ்டர் ஆகையாலும் –சப்தாதி விஷய பிராவண்யத்தாலும்
–இதர ஸ்தோத்ரம் பண்ணுகையாலும் கூட்டு அல்லர்
‘அறியார் சமணர்; அயர்த்தார் பவுத்தர்;சிறியார் சிவப்பட்டார்,’ என்கிறபடியே,
பொருத்தம் இல்லாதவைகளைச் சொல்லுவாரும்,
பிரத்யபிஜ்ஞ அர்ஹமாம்படி ஒரு சேதனனைக் கொள்ளாமல் ஞான சந்தானத்தைக் கொள்ளுவாரும்,
தன்னைப் போன்று ஒரு க்ஷேத்ரஞ்சனையே ‘ஈசுவரன்’ என்று இருப்பாரும்,
வேறு தெய்வங்களைப் பற்றியிருப்பாரும்,
‘அவர்கள் தாங்கள் முற்றறிவினர்’ என்னும்படி ஐம்புல இன்பங்களைப் பற்றி அவற்றைப் பெறுகைக்காகப்
பிறரைக் கவி பாடித் திரிகின்றவர்களுமாய் இருந்தார்கள்.

அவர்களைக் கண்டவாறே, வாளேறு படத்தேள் ஏறு மாயுமாறு போன்று தம் இழவை மறந்தார்; பிறர் கேட்டினைக் கண்டால்
அதனை நீக்கிப் பின்பு தம் இழவை நீக்க நினைப்பார் ஒருவர் ஆகையாலே, ‘இவர்கள் கேட்டினை நீக்கி இவர்களையும்
கூட்டிக் கொண்டு போவோம்’ என்று அவர்களுக்குப் பரமஹிதமான நல்வார்த்தை அருளிச்செய்ய,
அவர்கள் அது கேளாமல் பழைய படியே நிற்க, அவர்களை விட்டுத் தம் நிலையிலே போருகிற இவர்,
அவர்களில் தமக்கு உண்டான வேறுபட்ட சிறப்பினைப் பேசிக் கொண்டு போருகிறார்.

அவர்கள் தாம், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உடையனாய், திருமகள் கேள்வனாய், பேரழகன் ஆகையாலே
கவி பாடுகிறது பொய் சொல்லிற்று ஆகாதே கவிக்கு விஷயம் போரும்படியாய், இவன் பாடின கவியைக் கேட்பித்துக் கொண்டாடுகைக்கு ஈடாகக்
‘கேட்டு ஆரார் வானவர்கள்’ என்றும், ‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள்’ என்றும் சொல்லுகிற பரிஜனங்களையுடையவனாய்,
கவி பாடினார்க்கு வழங்குகைக்கு ‘வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என் வள்ளல்’ என்கிறபடியே, பரம வள்ளலாய்,
அவர்களுக்குக் கொடுக்கைக்கு உபய விபூதி ஐஸ்வர்யத்தை உடையனாய், ‘வல்லது ஓர் வண்ணம் சொன்னால்,
அதுவே உனக்கு ஆம் வண்ணம்’ என்கிறபடியே, இவன் யாதேனும் ஒன்றைச் சொன்னாலும் தன்னையே சொல்லியதாம்படி எல்லாச் சொற்களாலும்
குறிக்கப்படுகின்ற பொருள் தானேயானவனாய், பாடின கவி கேட்பிக்க இருந்த இடம் தேடிப்போய் அருமைப்பட வேண்டாதே,
‘எங்கும் உளன் கண்ணன்’ என்கிறபடியே, எல்லா வகையாலும் அண்மையில் இருப்பவனாய், சுலபனுமாய், கவி பாடினார்க்குப் போகம்
மோக்ஷம் முதலிய எல்லாப் பேறுகளையும் கொடுக்கின்றவனாய், அவை கொடாவிடிலும் தன்னைக் கவி பாடுகைதானே பிரயோஜனம்
போரும்படி இருக்கிற சர்வேசுவரனாய் உள்ள இறைவன் நிற்க அவனை விட்டு;
கவி பாடுகைக்கு ஈடான நன்மைகள் ஒன்றும் இன்றியே
தலையில் மயிர் இல்லாதான் ஒருவனைப் ‘பனி இருங்குழலன்’ என்றும், இளிகண்ணனைத் ‘தாமரைக்கண்ணன்’ என்றும்
இப்புடைகளிலே ஆயிற்றுக் கவி பாடுவது; கவி பாடினால் தான் தருவது ஒன்று இல்லாமையாலே நூறு கற்றையாதல்
ஒரு பொய்த்தரவாதல் ஆயிற்று எழுதுவது; வார்த்தை -பதின் கலம்-வழியில் ஓர் எண் கலம் -கூட்டில் அறு கலம் -கொடுப்பது முக்கலம்
-ஆள் கலம் போக்கி பதர் கலம் போக்கி நான் ஒரு கலம் பெற்றேன் -போலே-கல்லாத ஒருவனை கற்றான் என்றேன் –
போர் முகம் அறியானை புலியே என்றேன் -இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய் -போலே-
இவன்தான் பலநாள் கூடி நெஞ்சு கன்றக் கவிபாடித் துணையாய் உள்ளவர்களையும்
கூட்டிக்கொண்டு செல்லுவதற்குள் ‘அவரே மாண்டார்’ என்று எதிரே வரும்படி நிலை நில்லாதாருமாய்,
ஆக, இருந்தும் இழவாய்ப் போயும் இழவாய் இப்படி அவனுக்கு இழவோடே தலைக்கட்டும்படியாய்; கவி பாடி ஒரு பயன் பெறாது
ஒழிகை அன்றிக்கே, கவி பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளையிட்டு, இருமருங்கும் துய்யான்’ என்னுமாறு
-தூயவன் -தாய் தந்தை பக்கமும் -என்றவாறு -போன்றே அன்றோ கவி பாடுவது?‘ஆனால், வருவது என்?’ என்னில்,
பிறப்பிலே சில குறைகள் உண்டாய் இருக்குமே இவன் தனக்கு? மறந்தவற்றை அன்றோ இது கேட்ட உலகத்தார் நினைப்பது?
அவனுடைய தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே தாழ்வினை விளைவிக்கின்றவர்களாய்,
பாடத் தகாதாரைக் கவி பாடுகையாலே மேல் நரகமாய், ‘இன்னானைக் கவி பாடினவன் அன்றோ இவன்?’ என்று,
‘தீண்டாதே கடக்கப்போ’ என்னும்படியாய் இருக்கிற புல்லர்களைக் கவி பாடித் திரிகிற படியைக் கண்டு;

ஆத்துமா இறைவனுக்கு அடிமையாய் இருக்க, அவனுக்கே உரியனவான உங்களுடைய உறுப்புகளைக்கொண்டு
பிறரைத் துதித்தல் ஈடு அன்று’ என்று நலத்தை அருளிச்செய்ய, இராவணனுக்கு விபீடணன் முதலியோர் சொன்ன நலம் போலே
அது பலியாது ஒழிய, ‘நலம் சொல்லவும் செவி தாழாத இவர்களோடு ஒத்த சம்பந்தம் அன்றோ நமக்கு உள்ளது?’ என்று பார்த்து
‘இவர்கள் நடுவே இத்தேசத்தில் இச்சரீரத்தோடே வாசிக்கிற நாம் முந்துற முன்னம் பகவானுக்குத் தக்கனவான
உறுப்புகளையுடையோமாகப் பெற்றோம் அன்றே!’ என்று, வழி பறிக்குமிடத்துத் தம் கையிற் பொருள் கொண்டு
தப்பிப் போனார் மகிழுமாறு போன்று தமக்கு -‘உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு’-உண்டான வேறுபாட்டினை
நினைந்து தம் இலாபத்தைப் பேசிப் பிரீதியோடே தலைக்கட்டுகிறார்.

ஆயிர மாமறைக்கும் அலங் காரம், அருந்தமிழ்க்குப் பாயிரம், நாற்கவிக்குப் படிச் சந்தம், பனுவற்கெல்லாம்
தாய்,இரு நாற்றிசைக்குத் தனித் தீபம்,தண்ணங் குருகூர்ச்சேய் இரு மாமரபும்செவ்வி யான்செய்த செய்யுள்களே.’என்பது சடகோபரந்தாதி.

‘திங்களின் இளங்குழவிச் செம்மல் இவன் என்றும் செய்ய பரிதிக்குழவி ஐயன் இவன் என்றும்
தங்களின் மகிழ்ந் திருகுலத்தரசர் தாமும் தனித்தனி உவப்பதொர் தவப்பயனு மொத்தே.’ என்றார் சயங்கொண்டார். (கலிங்கத்துப் பர. 238.)

——————————————————————-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

ஸ்துதிப்பிக்கைகாக -சந்நிதி பண்ணிய உபகாரகன் -தனது மதம் சொல்லி -அனுஷ்டானம் பின் பற்றி வருவார்களே –
சொன்னால் விரோதம் இது,-இதர ஸ்தோத்ரம் தவிர -அபிமததுக்கு விரோதமாக இருந்தாலும் சொல்லுவேன்
ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!-காது கொடுத்தால் போதும் -அனைவரையும் கூப்பிடுகிறார்
அனைவரும் அர்ஹர்-ஆழ்வார் உபதேசம் கேட்க
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்-என் நா படைத்த -சத்திக்கு இனிய கவி பெருமானுக்கு
ஸூவ போக்த்ருத்வ புத்தி இல்லாமல் அனன்யார்ஹ சேஷ பூதன் -வேறு ஒருவருக்கு கொடுக்க
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து-வண்டுகள் -மதுபான ப்ரீதியால் ரீங்காரம் -ஆலத்தி வழிக்கும் படி -திருமலையில்
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.-கவி பாட விஷயம் -அப்பன் -பரிசிலாக தன்னையே தரும் உபகாரகன்
பிராப்தன் -சுவாமி -இக்கவி பாட்டாலே தான் உளனாக இருக்க -சத்தை பெறுகிறார் –
பரோபதேசம் பண்ணும் படி பிரபன்ன ஜன கூடஸ்தர் -பெருமை கொடுத்து இருக்க -அவன் இப்படி

‘நான் இந்த நலத்தைச் சொன்னால் உங்களுக்கு விரோதமாகவே இருக்கும்; ஆயினும் சொல்லுவன் கேளுங்கள்:
வண்டுகள் தென்னா தென்னா என்று ஒலிக்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற என் யானையும் என் அப்பனும் ஆய
எம்பெருமான் உளனாய் இருக்க, என் நாவினின்றும் வருகின்ற இனிய கவிகளை யான் ஒருவர்க்கும் கொடேன்,’ என்கிறார்.
‘இது சொன்னால் விரோதம்’ என மாறுக. என் ஆனை – எனக்கு யானை போன்றவன். ‘உளனாக யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்’ எனக் கூட்டுக.

மனிதர்களைக் கவி பாடுகை உங்களுக்கு நன்மை அன்று என்று உபதேசம் செய்யப் புகுந்தவர், அவர்களுக்கு ருசி பிறக்கைக்காக,
‘நான் இருக்கிறபடி பார்த்தீர்கள் அன்றோ?’ என்று தம்முடைய மதத்தை அருளிச்செய்கிறார்.

இது சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன் –
1-வேறு ஒரு பிரயோஜனத்தைக் கருதினவர்களாய்க் கவி பாடுகிற உங்களைக் ‘கவி பாடாதே கொள்ளுங்கோள்’ என்று கூறுதல்,
உம்தம் பிரயோஜனத்தைத் தவிர்த்தலேயன்றோ? ‘நம் பிரயோஜனத்துக்கு இழவாக வார்த்தை சொல்லுகின்றானே!’ என்று
விரோதமாய்த்தலைக்கட்டும் அன்றே உங்களுக்கு? ஆயிருக்கவும் சொல்லுகிறேன்,’ என்கிறார்.
அன்றிக்கே,
2-‘காலையிலும் நடுப்பகலிலும் மாலையிலும் தேவா என்றும், கோவிந்தா என்றும் சொல்லுகின்றவர்கட்கு ஏதேனும் குறை உண்டோ?
இருந்தால் சொல்லப்படட்டும்,’ என்கிறபடியே, திருநாமத்தைச் சொன்னால் உடனே இடிவிழும் என்று வரும் கேட்டினைச் சொல்லுங்கோள்;
இன்றேல் திருநாமத்தைச் சொல்லுதல் செய்யுங்கோள்,’ என்றான் அன்றோ ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் அசுரர் குழந்தைகளை?
அப்படியே, இது உங்களுக்குக் ‘கேட்டினைத் தருவது’ என்று அறியப்பட்டதாய் இருந்ததேயாகிலும் சொல்லுகிறேன்,’ என்னுதல்.
அன்றிக்கே,
3-‘காதுகளின் மூலத்தில்’ என்கிறபடியே, ‘அரசனுடைய மனைவியின் மேல் வைக்கும் விருப்பம் விலக்கத்தக்கது,’ என்பது போன்று,
ஓலக்கத்திற் சொல்லும் வார்த்தையன்று இது. சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்பதாகவும்
அமுத வெள்ளம் அன்பின் தேன் போலே அவன் இருக்க என் வாயாற்சொல்ல ஒண்ணாது;
ஆகையாலே, நான் சொன்னால் அது எனக்கு விரோதமாம் அன்றோ?
இங்ஙனம் இருக்கவும், சொல்லும்படி அன்றோ இருக்கின்றது நீங்கள் நிற்கிற தீய நெறியின் தன்மை?’ என்னுதல்.

ஆகிலும் சொல்லுவன் –
ஆயிருக்கவும் சொல்லுகிறேன். ‘நன்று; இப்படி இருக்கவும் சொல்லுகிறது என்?’ என்னில்,
நீங்கள் சமம் தமம் முதலிய குணங்களோடு கூடினவர்களாய்ச் சமிதை தரித்த கைகளையுடையவர்களாய் வரச்சொல்லுகிறேன் அன்றே?
உங்கள் கேட்டினைப் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிறேன்;
அனுவ்ருத்தி பிரசன்னாச்சார்யர் போலே இல்லாமல் கிருபா மாத்ரா பிரசன்னாச்சார்யர் போலே சொல்லுவேன் என்கிறார் –
ஆகையால் அதற்குப் பரிகாரம் பிறக்குமளவும் சொல்லுகை தவிரேன். என்றது, நீங்கள் உங்களுக்கு விருப்பமான வற்றினின்றும்
மீளமாட்டாதது போன்று, நானும் உங்களுக்கு உரிய நன்மையைச் சொல்லுவதினின்றும் மீளமாட்டாதபடி என்கிறார் என்றபடி.

கேண்மினோ –
‘இது கேட்ட பின்னர் நடைமுறை அளவும் வரவேண்டும் அன்றோ?’ என்று அஞ்ச வேண்டா; செவி தாழ்க்க அமையும்; அதனைச் செய்ய வேண்டா.
‘அது என்?’ நலத்தை விரும்பியே அன்றோ சொல்லுகிறது?’ என்னில், கேட்கவே, மக்கள் ஆகையாலே மேல் விழுவர்கள் அன்றோ?
ஆசையோடு அடையத் தக்கவாய் வருமவற்றுக்கு நாம் சொல்லவேண்டா; –
ராகம் அடியாக -வர வேண்டுமே -விதிக்கிறது என்பதால் இல்லை
ஸ்ரோதவ்யா-விதித்து -கேட்டு – மனனம் -இதுவும் விதி -மேலே ராக பிராப்தம் -இடைவிடாமல் -நினைத்து மேலே -தியானம் –
ஆகையால், நாம் அதனை விதித்தோம் ஆகிறது என்? என்று? ‘கேண்மின்’ என்கிறார்.
‘கடலோசைக்குச் செவி புதையாதே கேட்கின்றமை உண்டன்றே?
அவ்வோபாதியாகிலும் கேண்மின்,’ என்பார், ‘கேண்மினோ’ என்கிறார்.
அர்த்த ஞான பர்யந்தமாகவும் வேண்டாம் -அனுஷ்டானமும் வேண்டாம் ஒ என்பதால் -கடல் ஓசைக்கு காது கொடுப்பது போலே இவை
கேடு எல்லார்க்கும் ஒத்திருக்கையால், எல்லார்க்கும் சொல்லுகிறார் ஆதலின், ‘கேண்மின்’ எனப் பன்மை வாய்பாட்டால் அருளிச்செய்கின்றார்.
பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப் போன்று பகவத் விஷயத்தைக் கேட்பதற்குக் கால் பிடிக்கிறார் இவருடைய செல்லாமையாலே-

என் நா –
இவர்கள் யாருக்கு உரிமைப்பட்டவர்களோ, இவர்களுடைய செல்வமும் அவருடையது,’ என்கிறபடியே,
நான் அவனுக்கு அடிமை ஆகையாலே, எனக்குக் கரணமாய் — அவனுக்கு அடிமை ஆன என் நா.
‘வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே’ என்னும்படியான நா ஆதலின், ‘என் நா’ என அதனோடு ஒரு சம்பந்தத்தைக் கொண்டாடுகிறார்.
‘என்னைப் போலே நாவால் காரியம் கொண்டார் உளரோ?’ என்கிறார் என்றபடி.
இன் கவி –
இவர் கவியை ஈசுவரன் கேட்டு மகிழ்ந்தவனாய் இனியனாக, அவ்வழியாலே தமக்கு இனியதாய் இருக்கிறபடி.
தலைவனுக்கு இனியதான வழியாலே அன்றோ அடிமையாக உள்ளவனுக்கு இனியதாவது? ‘ஆயின், தொண்டு செய்கிற அடியவனுக்கு
இனிமைக்குக் காரணம் உண்டோ?’ எனின், ஆண் பெண் இருவர் கலவாநின்றால், இரண்டு தலைக்கும் உள்ள இன்பம், சேஷ சேஷிகள்
பரிமாற்றத்திலும் உண்டே அன்றோ?
அன்றிக்கே,
அவனுக்கு இனியதாய் அவ்வழியாலே தனக்கு இனியதாகை அன்றோ அடியவனாக உள்ளவனுக்கு வாசி என்னுதல்?

யான் –
அவனுக்கே உரிய அடியவனாய் இருக்கிற யான்.
இதனை நினைத்தே அன்றோ மேல் ‘யஸ்யை தே – இவர்கள் யாருக்கு உரிமைப்பட்டவர்களோ’ என்றது?
ஒருவர்க்கும் கொடுக்கிலேன் –
‘ஒருவர்க்கும் கொடுக்கிலேன்’ என்னும் இது, மேலே கூறிய அத்யந்த பாரதந்திரியத்தோடு சேர்ந்ததாய் இல்லையே?
‘புறம்பு ஒருவர்க்கும் கொடேன்’ என்கையாலே, ‘இறைவன் விஷயத்தில் கொடுப்பேன்,’ என்கிறார் ஆவர்;
தனக்கு என்று ஒன்று உண்டாய்க் கொடுப்பது கொள்ளுவது ஆதல் சேருமோ சொரூபத்துக்கு?’ என்னில்,
அடியிலே இறைவன், நினைந்து அறியும் ஆற்றலையும் தொழில் செய்தல் செய்யாமைக்குரிய சத்தியையும் கொடுத்து வைத்தால், பின்னர்
‘நான் கொடுத்தேன்’ என்னலாம் அன்றோ? இறைவனுடைய பொருளை ‘நான் என் பொருளைக் கொடுத்தேன்’ என்னலாம்படி அன்றோ சம்பந்தம் இருப்பது?
கோதானத்திலே பிதா புத்திரன் கையில் நீர் வார்த்துக் கொடுத்து, மீளவும் அவன் கொடுக்க, அவன் கையிலே தான் பெற்றானாய்
இருக்குமாறு போன்று, இவனும் தனக்கே உரித்தான செல்வத்தைத் தந்தானாய், இவன் சர்வஸ்வதானம் பண்ணத் தான் பெற்றானாக
நினைத்திருக்கும் இறைவனுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார்.
‘என்னால் தன்னை இன் தமிழ் பாடிய’ என்கிறபடியே, தான் இவரையிட்டுப் பாடுவித்து, இவர் தன்னைப் பாடினாராக
நினைத்திருக்குமவன் அன்றோ இறைவன்?
‘நன்று; ‘யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்’ என்கைக்குக் காரணந்தான் என்?’ என்னில்,
‘அல்லாதார் புறம்பு உள்ளார்க்குத் தங்கள் கவியைக் கொடுத்து வைக்கையாலே, யான் ஒருவர்க்கும் கொடுக்க மாட்டேன்,’ என்கிறார்.
ஆக, ‘இதனால், வழி கெடப் போகிற நீங்கள், ஒருவன் வழியே போகாநின்றால் ‘நாமும் அப்படியே போகவேண்டும்’ என்று இருக்க வேண்டாவோ
மக்கட் பண்பு இருந்தால்? நான் இருக்கிறபடி கண்டீர்களே அன்றோ? அப்படியே அன்றோ உங்களுக்கும் இருக்க அடுப்பது?’ என்கிறார் என்றபடி.
தென்னா தெனா என்று வண்டு முரல் –
முரன்றது இசையாய் விழுந்தாற்போலே ஆயிற்று, இவரும் பகவானை அனுபவித்தலால் உண்டாகும் உவகைக்குப் போக்கு விட்டது கவி ஆயிற்று,’ என்றபடி
பறவைகளோடு முமுக்ஷீக்களோடு அவன்தன்னோடு வாசி அறத் தென்னா தெனா’ என்னுமித்தனை.
பகவானுடைய அண்மையில் இருப்பார் எல்லார்க்கும் இதுவே பாசுரமானால், அவன் தனக்குச் சொல்ல வேண்டாவே அன்றோ?
‘தென்னா என்னும் என் அம்மான்’ அன்றோ அவன்?

திருவேங்கடத்து என் ஆனை –
வேதத்தைக்காட்டிலும் ஸ்ரீராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே, ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தைக்காட்டிலும்
தாம் கவிபாடின விஷயத்திற்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறார். எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன்.
யானை பெறக் கவி பாடுமவர்காணும் இவர்; இவர் கவி பாடிக் கட்டின யானை ஆயிற்று அவன்; கவி பாடினவர்கட்குத் தன்னை ஒழிய
வேறு ஒரு யானையைக் கொடுத்து விடுமவன் அல்லன் ஆதலின், ‘என்ஆனை’ என்கிறார்.
ஆக, ‘வண்டுகளானவை மதுபானப் பிரீதியாலே தென்னா தெனா என்று ஆளத்தி வைப்பாரைப்போலே ஒலிக்கிற திருமலையிலே
அண்மையில் இருப்பவனாய் எனக்கு யானை போலே அனுபவிக்கத் தக்க பொருளாய் உள்ளவனை’ என்றபடி. அவ்வண்டுகளோடே
சகோத்திரிகளாய் அனுபவிக்கிறார்.-சகோதரிகள் -சபர்வதம் —

என் அப்பன் –
நாட்டார் பிறரைக் கவி பாடித் திரியாநிற்க, அவர்களுக்கும் நன்மை சொல்ல வல்லேன் ஆம்படி பண்ணின மஹோபகாரகன்.
எம்பெருமான் – தீமையே செய்யினும் விட ஒண்ணாத சம்பந்தம்.
உளன் ஆகவே –
‘ஆஸயா யதிவா ராம: – ஸ்ரீ ராமபிரான் மீண்டும் என்னைக் கூப்பிடுவாரோ என்னும் ஆசையால் அங்கே இருந்தேன்,’ என்பது
போன்று பிரார்த்திக்கப்படுமவன் என் வாயாலே ஒரு சொற்கேட்டுத் தான் உளன் ஆகாநிற்க, நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?
அன்றிக்கே,
‘அஸந்நேவ – இல்லாதவன் ஆகிறான்’ என்கிறபடியே, ‘தன்னைக் கிட்டாத அன்று சமுசாரி சேதநருடைய இருப்பு இல்லாதது போன்று,
தான் என்னைக் கிட்டாத அன்று தன் இருப்பு இல்லையாம்படி அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ?’ என்னுதல்.
அன்றிக்கே,
‘அவன் என்னைக் கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளுகைக்காக இங்கே வந்து நிற்கிற நிலை என்னாவது,
நான் புறம்பே போய் ஒருவரைக் கவி பாடினால்?’ என்னுதல்.
‘ஆன பின்னர், என்னைப் போலே இருக்கை காணுங்கோள் உங்களுக்கும் அடுத்திருப்பது’ என்கிறார் என்றபடி.

————————————————————————————

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-

சௌலப்யாதி குணங்கள் உடன் -திருக்குறுங்குடியில் -குல நாதன் -குல தெய்வம் விட்டு மனிசரை பாடி என்ன பயன்
உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை-தன்னை -அசத்சமனாக -அசந்நேவ -பகவத் ஞானம் இல்லாமல் –
தெரிந்து இருந்தீர்கள் ஆகில் மற்றவர்களை பாட மாட்டீர்கள் அன்றோ -தனக்கு இன்றியே இருக்க தன்னதாக நினைக்கும் சூத்திர செல்வம்
அஹங்கார மமகாரங்கள் கொண்டு
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்-இறுமாந்து இருக்கும் -தாழ்ந்த மானிடரை கவி பாடி என்ன பயன் –
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே-நீர் நிலைகள் நிரந்த -பரமார்த்தமான –
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே-சௌலப்ய குணம் போன்றவற்றை பிரகாசப்படுத்திக் கொண்டு நித்ய சந்நிதி -பேர் உபகாரன் –

குளங்கள் நிறைந்திருக்கின்ற கழனிகள் சூழ்ந்துள்ள இடம் அகன்ற நல்ல குறுங்குடியில் சௌலப்யம் முதலிய குணங்களைப்
பிரகாசிப்பித்துக்கொண்டு நித்தியவாசம் பண்ணுகின்ற எந்தையை எந்தைக்குப் பெருமானை ஒழிய, தன்னை உள்ளவனாகவே கொண்டு
ஒரு பொருளாக எண்ணித் தன் செல்வத்தை மிக உயர்ந்ததாக மதித்திருக்கும் இம்மானிடத்தைக் கவி பாடுவதால் பயன் யாது?
‘தன்னை ஒன்றாக எண்ணி மதிக்கும் இம்மானிடம்’ என்க. ‘என்’ என்பது ஈண்டு இன்மை குறித்து நின்றது
குளன் – குளம் என்பதன் போலி. ‘பெம்மானை ஒழிய, கவி பாடி என்?’ எனக் கூட்டுக.

‘என்றும் உள்ளதுமாய் நிறைந்திருப்பதுமான செல்வத்தையுடையவனாய், சொரூப ரூப குணங்களால் நிறைந்தவனுமாய்,
அடையத் தக்கவனுமான சர்வேசுவரனை விட்டு, ஒரு சொல் சொல்லுகைக்கும் -பாத்தம் – விஷயம் இல்லாத செல்வமுமாய்,
அது தானும் நிரூபித்தால் நிலை நில்லாமையாலே பொய்மையுமாம் அது தனக்குப் பற்றுக்கோடும் தேடிப் பிடிக்க வேண்டும்படியாய்
இருக்கிற புல்லரைக் கவிபாடி என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.

உளன் ஆகவே எண்ணி –
1-இலன் ஆகவே அறுதியிட்டு இருக்கிறார் ஆயிற்று இவர். ‘அந்தப் பரம்பொருளைத் தவிரப் பலவகைப்பட்ட பொருள்கள் ஒன்றும் இல்லை,’ என்கிறபடியே,
அவனுக்குப் புறம்பாய் இருப்பது ஒரு பொருள் இல்லை என்று இருக்கும்படியாலே.
அவனைத் தவிர -ஸ்வ தந்தரமாக வஸ்து இல்லையே -அவனைச் சார்ந்து இல்லாமல் ஒன்றும் இல்லையே –
2-‘நினைக்கின்ற காலத்திலும் அவனை உளன் ஆக நினையாத போது ‘இவனும் இல்லாதவன் ஆகிறான்’ -அசந்நேவ பவதி -என்கிறபடியே,
தாம் உளர் அன்றிக்கே இருப்பர் அன்றோ? அவனை ‘உளன்’ என்று நினைத்துத் தான் உளனாக வேண்டியிருக்க,
அவனை ‘இலன்’ என்று தான் உளனாக விரகு இல்லையே?’ என்றபடி. தான் உளன் ஆகையாவது, பிரஹ்மஞானம் உண்டாகை அன்றோ?
3-தன்னைக் கட்டிக் கொண்டு போகாநிற்க, ‘எந்தக் காரணத்தால் மஹாத்துமாவான பெருமாளோடு விரோத உணர்ச்சி உண்டாயிற்றோ,
அந்தக் காரணத்தால் இலங்கை என்ற நகரமும் இல்லை; நீங்களும் இல்லை; இராவணனும் இல்லை,’ என்றானே அன்றோ திருவடி?
பரதந்த்ரனாக -இருக்க -ஸ்வ தந்த்ரன் என்று நினைப்பதும் –
ப்ரஹ்ம ஞானம் இல்லாத போதும் இருப்பதாக நினைத்தும் –
அநித்தியமான தன்னை நித்தியமான வஸ்து -என்றும் -மூன்றும் சொன்னபடி –

ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன்மேலே ஒரு மேரு நிற்கிறதாகவும் நினைக்குமாறு போன்று குவாலாக மதிக்கிறான் என்பார், எண்ணி’ என்கிறார்.
தன்னை –
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய்’ என்கிறபடியே,
உளன் என்று இசைந்ததால் -நல் நெஞ்சு
நீ தெரியாமல் இருந்த அன்றும் உள்ளவன் -உத்தமன் -நம் இசைவை எதிர் பார்த்து இருந்தானே –
‘அவன் நமக்கு உளன் காண்’ என்றால் பின்னை அச்சம் அற்றவனாய் மார்விலே கைவைத்து உறங்கலாம்படி இருப்பான்
ஒருவனை உளன் என்றுதான் நினைக்கிறானோ? தன்னுடைய உண்மை அவனுடைய உண்மையாலேயாய் இருக்க,
அவனை ஒழிய ‘பிரஹ்மத்தை இல்லை என்று அறிகிறானாகில் அவனும் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே, இன்றியே இருக்கிற தன்னை.
ஒன்றாக –
போரப் பொலிய நினைத்து.
தன் செல்வத்தை –
‘ஸதி தர்மிணி தர்மா: – தர்மி உண்டானால் தர்மம் இருக்கும்,’ என்கிறபடியே, தான் உண்டானால் அன்றே தர்மம் உண்டாவது?
தன்னையே தேடிப்பிடிக்க வேண்டும்படியாயிருக்கத் தனக்கு ஒரு செல்வம் உண்டாக நினைக்கிறான் அன்றோ?
வளனா –
‘வளமாக’ என்றபடி. அதாவது, ‘அழகியதாக’ என்னுதல், ‘மேலாக’ என்னுதல்.
‘இறைவன் செல்வத்துக்கும் மேலாய் அன்றோ தன் செல்வத்தை நினைத்திருக்கிறான்?’ என்றபடி.
மதிக்கும் –
தானே இதனைக் குவாலாக மதிக்குமித்தனையே அன்றோ? புறம்பே இதனை ஒன்றாக நினைத்தற்கு
இவனைப்போன்ற மாக்கள் இல்லை என்றபடி.
கல்பிரஹ்மதேசத்திலே கரிகாற்சோழ பிரஹ்மராயன் திருவாய்மொழிக்கு வியாக்கியானம் செய்தேன்’ என்று சீயர்க்குக் காட்ட,
அவன் பக்கல் உண்டாகும் சில பயன்களை நினைத்து, பிள்ளையை
‘நீர் இதனைக் கேட்டு இவனைப் பெருமைப்படுத்தும்’ என்று அருளிச்செய்ய,
அவரும் கேட்டு, ‘ஆழ்வார் திருவுள்ளத்தை அடி ஒற்றி அவர் போன வழியே போம்படியே!’ என்ன,
‘ஆ! ஆ! பிள்ளை, ஆழ்வார்க்கும் எனக்கும் வாசி புத்தி பண்ணிற்றிலீரே?
கிராம காரியம் செய்து இடையிலே இதுவும் செய்ய வேண்டிற்றே எனக்கு’ என்றான்.

இம்மானிடத்தை –
மேலே உரித்து வைத்தாரே அன்றோ அவர்கள் தன்மையை? அறிவு இல்லாத பொருள்களைச் சொல்லும்படியிலே சொல்லுகிறார்;
தன்னை மெய்யாக அறியாதவன் –உண்மையாக -அவனுக்கு சரீரமாக -அறிவு இல்லாத பொருள்களுக்குச் சமமானவன் ஆகையாலே
மனிதன் என்று சொல்லவும் பாத்தம் காண்கின்றிலர் காணும்.
கவி பாடி என் –
இவர்கள் மறைத்திட்டு வைக்கிற குற்றங்களைப் பிரபந்தமாக்கி வெளியிட்டால் உங்களுக்கு என்ன பிரயோஜனம் உண்டு?

குளன் ஆர் கழனி –
விளைநிலங்களைக் காட்டிலும் ஏரிக்கட்டே விஞ்சி இருக்குமாயிற்று. இல்லையாகில், சாவி போம் அன்றோ?
இதனால், காப்பாற்றப்படுகின்ற பொருள்களைக்காட்டிலும் இறைவனுடைய பாதுகாக்கும் தன்மையே விஞ்சின ஊர் என்பதனைத் தெரிவித்தபடி.
குளன் – குளம். ஆர்தல் – மிகுதல்.–ரஷ்ய வர்க்கத்தை விட ரஷண பாரிப்பு மிகு இருக்குமே –
கண்ணன் குறுங்குடி –
சர்வேசுவரன் ‘என்னது’ என்று அபிமானித்து வசிக்கும் நகரம்.
‘கண் நல் குறுங்குடி’ என்று பிரித்துப் பொருள் கூறுவார்கள் தமிழ் அறிஞர்கள்;
அப்போது ‘இடமுடைத்தாய் நன்றான திருக்குறுங்குடியிலே’ என்பது பொருள்.
மெய்ம்மையே உளனாய – கவிகளில் கேட்டுப்போமித்தனையேயாய்த் தன் பக்கல் ஒரு நன்மையும் இன்றிக்கே இருக்கை அன்றியே
சொன்னவை எல்லாம் மெய்யே பத்தும் பத்தாகக் காணலாம்படி இருக்கும் ஸ்வாமி. இவ்விஷயத்தில் அர்த்தவாதம் இல்லை;
புறம்பே உள்ளவற்றில் அர்த்தவாதம் அல்லது இல்லை. இவ்விஷயத்தில் உள்ளன எல்லாம் சொல்லி முடியா;
புறம்பே உள்ளவற்றில் சொல்லலாவது இல்லை.-சொல்ல ஒண்ணாது இவன் விஷயத்தில்

எந்தையை –
நான் கவி பாடுகைக்குத் தன் குணங்களைப் பிரகாசிப்பித்து வைத்த உபகாரகனை.
அன்றிக்கே,
‘கவிபாடுகைக்கு வகுத்த விஷயமானவன்’ என்னுதல்.
‘திருக்குறுங்குடியிலே சொன்ன குணங்களெல்லாம் பத்தும் பத்தாக உடையனாய், நமக்கு நாதனுமாய்’ என்றபடி.
எந்தை பெம்மானை ஒழியவே –
சம்பந்தம் தம்மளவோடு முடிவு பெறாமையாலே,
‘என் குலநாதன்’ என்கிறார்.
‘எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாக இருப்பவனாய் -அடையத் தக்கவனுமான இவனை ஒழிய, குணம் என்பது சிறிதும்
இன்றிக்கே மிகச் சிறியருமாய் -அடையத் தகாதவருமாய் -இருக்கிற மனிதரைக் கவிபாடி என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.

———————————————————————————————————————-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

நித்ய ஸூரிகள் சேவ்யனான-பிராப்ய பூதன்
ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்-யாவதாத்மபாவி –
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்-கைங்கர்யத்தை -அர்ச்சிராதி -பிராப்யம் -மூன்றும் வழி-
நமக்கு சேஷி -நித்ய ஸூரிகள் சேவ்யன் -அவனை நிற்க வைத்து
கருட வாகனனும் நிற்க சேட்டை –செல்வம் பார்த்து இருக்கின்றீரே
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!-கழிய -வான் -மேல் கவி -லோகம் தாண்டி உயர்ந்த -அறிவுடையீர் -கிராந்தி தர்சி -கவி -வரும் காலம்
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?-தாழ்வதற்கு கார்யம் செய்கிறீர்களே -கீழே விழ -பற்றாசு இல்லா மனிச ஜாதி பாடி என்ன பயன் –

புலவீர்காள்! சிறிதும் இடையீடு இல்லாத பலப்பல ஊழிக்காலமெல்லாம் நிலை நின்று அனுபவிக்கும்படி செல்லுகின்ற வழியைத் தருகின்ற,
நம்முடைய வானவர் தலைவனை ஒழிய, புறம்பே சென்று, மிக மிக நல்லவான உயர்ந்த கவிகளைக்கொண்டு உங்களைத் தாழ்வாக
நினைத்துச் சிறிய மனிதர்களைப் பாடுதலால் ஆகும் பயன் என்?
‘ஒன்று ஒழிவு இல்லாத’ என மாறுக. நங்கள் என்பதில் ‘கள்’ அசை நிலை. ‘கழிய மிக நல்ல வான்’ என்ற அடைமொழிகள்
கவியின் உயர்வினைப் புலப்படுத்த வந்தன. ‘ஓர் மானிடம்’ என்றவிடத்து ‘ஓர்’ என்பது சிறுமையைப் புலப்படுத்த வந்தது.

‘வேறுபட்ட மிக்க சிறப்பினை உடையவனாய் உபகாரகனாய் இருக்குமவனை ஒழிய, அற்ப மனிதரைக் கவி பாடுவதனால்
என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.

ஒன்று ஒழிவு இல்லாத பல் ஊழி தோறு ஊழி நிலாவ –
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையும் இடைவிடாமல் -பரம பதத்தில் தங்கும்படி. என்றது, ’மீண்டும் வருகிறான் இல்லை’ என்கிறபடியே,
உயிர் உள்ள காலம் வரையிலும் சரீரத்தின் சம்பந்தம் அற்று வழுவிலா அடிமை செய்கைக்கு’ என்றபடி.
காலத்தால் வேறுபாடு இல்லாத தேசத்திலே (பரமபதத்தில்) அனுபவத்தைச் சொல்லாநிற்கச்செய்தேயும், காலம் நடையாடும் தேசத்திலே
வாழ்கின்றவர் ஆதலின், ‘பல் ஊழிதோறு ஊழிநிலாவ’ என்று காலத்தை மாட்டேற்றிச் சொல்லுகிறார்.
போம் வழியைத் தரும் –
1-‘போய் அனுபவிக்குமது அளவிற்கு உட்பட்டது’ என்னும்படி தனக்குமேல் ஒன்று இல்லாததான இனிமையையுடைய அர்ச்சிராதி மார்க்கத்தைத் தரும்.
அன்றிக்கே,
2-‘தன்னைக் கிட்டும் வழியைத் தரும்’ என்னுதல்; கிட்டும் வழியைத் தருதலாவது, தானே வழியும் ஆதல்.
அன்றிக்கே,
3-‘வழி’ என்பது ‘பெறுகிற பேறு’ என்னுதல். ‘பெறுகிற பேறு’ என்னும் போது, தான் போம் நெறியாய், அதாவது,
என்றும் ஒக்கப் பின் சென்று நடக்கையே தன்மையாய், இயற்கையான கைங்கரியத்தைச் சொல்லுகிறது.
ஈசன் நிலாவ –பல் ஊழி தோறு ஊழி-ஒழிவில்லாமல் போம் வழியை அனுவர்த்தன -சஹஜ தாஸ்யம் -கைங்கர்யம் -என்றவாறு

நங்கள் வானவர் ஈசனை நிற்க –
‘புணைகொடுக்கிலும் போக ஒட்டார்’ என்கிற பேற்றைக் கவி பாடினார்க்கு அவன் கொடுத்தாலும்,
‘இவன் செய்ததற்கு நாம் செய்தது போருமோ?’ என்று மேன்மேல் எனக் கொடுப்பிக்குமவர்களை உடையவனை விட்டு
அன்றிக்கே,
அவன், ‘இவன் ஒரு சொல் சொல்ல வல்லவனே!’ என்று காலத்தை எதிர் நோக்கினவனாய் – வானவர் ஈசன்- நிற்க என்னுதல்.
போய்-
புறம்பே பாடுகைக்கு விஷயம் தேடிப் போய்.
அன்றிக்கே,
‘இவன் கவி பாடி வாராநின்றான்’ என்று கேட்டவாறே கழியப் போம், இவன் கவி கேட்டு யாதேனும் தான் கொடுக்க
ஆக, அவன் போக இவன் போகப் போகா நிற்குமித்தனை ஆதலின், ‘போய்’ என்கிறார் என்னுதல்.
கழிய போய்- அவன் ஓடிப்போய் -இவன் தேடிப்போய் -அவன் ஓட இவன் துரத்த –
‘ஆஜகாம – வந்தார்’ என்கிறபடியே, பகவத் விஷயத்தில் ஓர் அடி வாராநின்றவாறே வேறு ஒருவர் வீட்டினின்றும் தன் வீட்டிலே
புகுந்தாற்போலே இருக்கும்; வேறே சிலரைப் பற்றி அருகே இருக்கிலும் கழியப் போயிற்றதாய் இருக்குமாதலின், ‘போய்’ என்கிறார் என்னுதல்.

கழிய –
‘கவி, பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளை இட்டுச் சொல்லுகையாலே அவனிடத்தில் அடங்காததாய் இருக்கும் அன்றே?
ஆகையாலே, அவனை விட்டுக் கழிய’ என்னுதல்.
அன்றிக்கே,
‘இவன் யாரைச் சொல்லுகிறது? நம்மை அன்றோ?’ என்று கலங்கியிருப்பான்;
-ஆகையாலே, அச்சொற்பொருள்கள் அவனை விட்டுக் கழிய’ என்னுதல். என்றது, ‘அவனுக்கு இல்லாதனவற்றை இட்டுப் பாடினால்,
அவற்றை உடையவனை அன்றோ அக்கவிகள் காட்டும்?’ என்றபடி.
மிக நல்ல –
எத்தனையேனும் நன்றான.
வான் கவி –
கனத்த கவி. அதாவது, 1‘சேர்க்கப்பட்ட தொகை சந்தி இவைகளையுடையதும்’ என்கிறபடியே,
சொற்செறிவுடைத்தாய் இருக்கை. ஆக, ‘மிகவும் நல்லவாய் அரணியவான கவிகளைக்கொண்டு’ என்றபடி.

புலவீர்காள் –
இக்கவிக்கும் பாட்டு உண்கிறவர்களுக்கும் வாசி அறியும் நீங்கள். என்றது, ‘விசேடித்துச் சொல்லப்படுகின்ற அறிவினையுடைய
நீங்கள் இப்படிச் செய்யத் தக்கவர்களோ?’ என்கிறார் என்றபடி,
இழியக் கருதி –
அறிவுடையரானால் நின்ற நிலைக்கு மேலே ஓர் ஏற்றம் தேடிக்கொள்ளுமது ஒழிய, கீழே போய் மிகத்தாழ்ந்த நிலைக்குச் செல்லத் தேடுவார் உண்டோ?
ஓர் மானிடம் பாடல் – மிகச்சிறிய மனிதனைப் பாடல்.
என் ஆவது –
உங்களுக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயோ, கவிக்குத் தகுவதாயோ? எதற்காகப் பாடுகிறீர்கள்?’ என்கிறார்.
புலவீர்காள் -உங்கள் விசேஷ ஞானத்துக்கு சேருமோ
மானிடம் -பாடுவதில் நன்மை உண்டோ
இழிய -தாழ்ச்சி வேற வருமே
வான் கவி -கவிக்கும் அனுரூபம் இல்லையே –

————————————————————————————————

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-

சர்வாதிகன் ஒழிய -அஸ்திர மனுஷ்யர் கவி பாடி என்ன பயன்
என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!-சொல்லுக்கும் பொருளுக்கும் வாசி அறிவீர்களே
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!-பாடும் பாட்டுக்கள் இருக்கும் வரை இருக்காத இவர்களை –
பாரிப்பாலே பெரியதாக எண்ணுவீர் -இருந்ததாகிலும் எத்தனை நாளைக்கு இருக்கும் -அஸ்திரம் அன்றோ
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,-பேர் ஒளி-ரத்ன அபிஷேகம் -பரமபத வாசிகளுக்கு சத்தாதி ஹேது பூதன் -சர்வாதிகன் –
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.-சாம்யா பத்தி மோஷம் கொடுப்பாரே
தனக்கு அனன்யார்ஹம் ஆக்கி-வேறே எங்கும் கவி பாடாமல் -ஜன்மம் முடித்து -பிறரை பாடும் ஜன்மம் கொடுக்காது –

புலவீர்காள்! ஆவது என்? அழிந்து போகின்ற மனிதர்களைப் பாடிப் படைக்கும் பெரிய பொருள் எத்தனை நாள்களுக்குப் போதும்?
ஒளி பொருந்திய மணி முடியைத் தரித்த விண்ணவர் தாதையைப் பாடினால் தனக்கே உரியவனாக நினைத்துப் பிறவி அறும்படியும் செய்வான்.
மன்னுதல் – நிலைபெறுதல். விண்ணவர் – நித்திய சூரிகள். தாதை – தமப்பன்.

‘கவி பாடினார்க்குத் தன்னோடு ஒத்த வரிசையைக் கொடுக்குமவனைக் கவி பாடுமது ஒழிய,
குறைந்த ஆயுளையுடைய புல்லரைக் கவி பாடிப் பெறுவது என்?’ என்கிறார்.

என் ஆவது –
ஒன்றும் ஆவது இல்லை. ஒரு பிரயோஜனத்துக்காக அன்றோ பிறரைக் கவி பாடுகிறது நீங்கள்? அதில் நீங்கள் நினைக்கிறது கிடைக்காது.
‘ஆனால் கிடைப்பது என்?’ என்னில், மேலே கூறிய தண்மையே கிடைப்பது. உங்கள் நினைவால் சில பொருட்பேறு,
என் நினைவால் செல்வத்தின்பொருட்டு மிகத்தாழ்ந்த நிலையில் விழுதலேயாம்.
அர்த்த சித்தியை எதிர் பார்த்து போகிறீர் – அர்த்த ஸ்திதி நினைத்து அதபதிக்க வேண்டுமே –
‘ஒன்றும் இல்லை என்பது என்? கவி பாடுவாரும் பாடினவர்களுக்குக் கொடுப்பார்களுமாய் அன்றோ போருகிறது?’ எனின்,
எத்தனை நாளைக்குப் போதும் –
‘இல்லை’ என்றதனைப் போன்றதேயாய் அன்றோ அதுதான் இருப்பது? நிரூபித்தால் கவி பாட்டு இட்டிறையாய் அன்றோ இருப்பது? என்றது,
‘கவி கேட்பித்தற்குத் துணையாய் உள்ளவர்களையும் கூட்டிக் கேட்பித்துப் பெறுமதுவும், கவி பாடின நாள்களில் பிழைப்பதற்குப்
பணையம் வைத்த பொருள்களை மீட்கவும் போராதபடி அன்றோ இருப்பது?’ என்றபடி.
புலவீர்காள் –
உங்கள் விசேடமான அறிவிற்குப் போருமோ இது? ‘பாடின கவியின் நேர்மை இது, பேறு இது, இதற்கு இது போரும்,
போராது’ என்று நீங்களே அறிய வேண்டாவோ?’ என்கிறார். இனி, ‘புலவீர்காள்’ என்பதற்குச் ‘சொற்பொருள்களின் வாசி அறியுமவர்களே!’ என்னுதல்.

மன்னா மனிசரை –
சிறிது உண்டாய் அற்பமாகிலும் நீங்கள் பெறுவது, நீங்கள் செல்லுமளவும் அவர்கள் தாம் இருக்கில் அன்றே?
‘அவரே மாண்டார்’ என்று எதிரே வருவரே!
பாடிப் படைக்கும் பெரும்பொருள் –
‘இந்தத் திருமகள் கேள்வன் குறைவு அறக் கொடானோ?’ என்று பழிக்கிறார்.
மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால் –
நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனானவனைக் கவி பாடினால். ‘பாடிக்கொண்டேயிருக்கின்றார்கள்’ என்கிறபடியே,
கவி பாடி முடி சூடி இருக்கின்றவர்கள் அன்றோ? ஆதலின், ‘ஒளி மிக்க மணிகளையுடைய முடியுடை வானவர்’ என்பார்,
‘மின்னார் மணிமுடி விண்ணவர்’ என்கிறார். இதனால், ‘சென்று காணும் திரள் கவி பாடி முடி பெற்றவர்கள்’ என்றதனைத் தெரிவித்தபடி.
‘கேட்டு ஆரார் வானவர்கள்’ என்கிறபடியே, கவி பாடிச் சென்றவர்களுக்கு ஓலக்கம் கொடுத்துக் கொண்டாடிக் கேட்பிப்பாரும் அவர்கள் என்பார்,
‘விண்ணவர் தாதை’ என்கிறார். ‘பாடுதலே பிரயோஜனம்போரும்’ என்பார், ‘பாடினால்’ என்கிறார்.
இனி, முடி இறைவனுக்கே அடை ஆகும்போது, ‘கவி பாடினார்க்குக் கொடுக்கச் சூடின முடி’ என்கை.-சடை முடி இல்லை –
தான் சூடி கொண்டு இருக்கும் முடியையே அருளுவான் -தானாகவே -சாம்யா பத்தி அருளுவான் –பீதகவாடை உடுத்தி களைந்தன ஆசைப்படுவோமே –

தன்னாகவே கொண்டு –
‘என்னுடைய உருவம் முதலானவைகளை அடைந்தவர்கள்’ என்றும், ‘மேலான ஒப்புமையை அடைகிறார்கள்’ என்றும்,
‘தம்மையே ஒக்க அருள்செய்வர்’ என்றும் கூறப்படுகின்றவாறே தன்னோடு ஒக்கச் செய்து.
அன்றிக்கே,
‘தனக்கே உரியவனாகக் கொண்டு’ என்னுதல்.
சன்மம் செய்யாமையும் கொள்ளும் –
பின்னர் ஒருவன்கீழே இருந்து கவிபாடுகைக்கு அடியான பிறவியைப் போக்கும்.
கவி பாடுகைக்கு அடி பிறவி ஆதலின், ‘சன்மம் செய்யாமையும் கொள்ளும்’ என்கிறார்.
அரசபுத்திரன் தலையில் முடியை வைத்துப் பின்னை விலங்கு வெட்டி விடுமாறு போன்றும், ஸ்ரீ விபீஷணாழ்வானை முடி சூட்டிப் பின்பு
இராவணனைக் கொன்றாற்போலவும், நித்திய சூரிகள் தரத்தைக் கொடுத்துப் பின்னை சமுசார சம்பந்தத்தை அறுப்பான் ஆதலின்,
‘தன்னாகவே கொண்டு சன்மஞ் செய்யாமையும் கொள்ளும்’ என்கிறார்.

—————————————————————————————

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5-

நிஷ்பிரயோஜனம் –கொள்ளும் பயன் இல்லை -குப்பை போலே செல்வம் -அவனோ சர்வ பல ப்ரதன் -வேண்டிற்று எல்லாம் தரும் –
கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை-தோஷமே தோற்றும் -இங்கு
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!-புகழ்ந்து உங்கள் சத்யவாக்யம் இழந்து –
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் -கவிக்கு பிரயோஜனம் தான் பெறவும்
உங்களுக்கு கொடுக்கவும் கவிக்கு விஷயமாகவும் குறை இல்லாதவன் -கோதுஇல்
என்வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ-வாரும் -தாரதம்யம் பாராமல் -பிரத்யுபகாரம் கருதாமல் –
எனக்கு தன்னையே தந்த கற்பகம்
உபகாரம் கொடுக்கா விடிலும் விட ஒண்ணாத அழகன் –
கவி சொல்ல சீக்கிரம் வாருமின்

நீங்கள் அடையக்கூடிய பயன் ஒன்றும் இல்லை; குப்பையைக் கிளறினாற்போன்ற இழிக்கத் தக்கதான செல்வத்தை மிக
அதிகமாகப் புகழ்ந்து உங்களுடைய வாக்கின் வன்மையை இழக்கின்ற புலவீர்காள்! கவி பாடுதற்குப் பொருளாகக் கொள்ளுவதற்கு வேண்டிய
குணங்கள் எல்லாம் குறைவு இல்லாதவன்; நீங்கள் விரும்பின அனைத்தையும் தருவான்; குற்றம் இல்லாத வள்ளல்;
மணி போன்ற நிறத்தையுடையவனான இறைவனைக் கவி சொல்ல வாருங்கள்.
இரண்டாம் அடியில் ‘வள்ளல்’ என்பது, புகழ்ச்சியின் மிகுதியைக் குறிக்க வந்தது. வேண்டிற்றெல்லாம் – ஒருமை பன்மை மயக்கம்.

‘உபகாரகரும் அன்றிக்கே, கவி பாடுகிறவர்களுக்குத் தாழ்வு உண்டாகும்படி இழிந்தவர்களுமாய் இருக்கின்றவர்களைக் கவி பாடாதே,
எல்லா நற்குணங்களையும் உடையனுமாய் விரும்புவன எல்லாவற்றையும் கொடுக்கின்றவனுமான சர்வேசுவரனைக் கவி பாட வாருங்கள்,’ என்கிறார்.

கொள்ளும் பயன் இல்லை –
‘பிறரைக் கவி பாட இழிகின்றது அவர்கள் உத்தேஸ்யராய் அன்றே? ஒரு பிரயோஜனத்துக்காகவே; அது இல்லை’ என்கிறார். என்றது,
‘நீங்களும் இசையவே கவிபாடுதலே பிரயோஜனம் அன்றே? பிரயோஜனத்தை விரும்புகின்றவர்களாகவே கவி பாடுகிறது;
அது இல்லை என்னாவே, மீளுவர் என்று பார்த்து முந்துற முன்னம் ‘இல்லை’ என்கிறார்’ என்றபடி.
நெஞ்சு கன்றக் கவி பாடுகிற இதற்கு பெரிய இலாபம்காணும் ‘கொள்ளும் பயன் இல்லை’ என்கை. என்றது, ‘கொள்ளக் கூடியது ஒரு
பிரயோஜனம் இல்லை என்கை’ என்றபடி. ஆக, உங்களுக்காக ஒரு பிரயோஜனம் இல்லையாய் இருந்தது.
‘தங்களுக்கு ஒரு பயன் இல்லையேயாகிலும், பிறருடைய நன்மைக்காகவும் செய்யத் தொடங்கலாம் அன்றே? அதுதான் உண்டோ?’ எனின்,
‘குப்பை கிளர்த்து அன்ன செல்வத்தை’ என்கிறார்;
‘குப்பையைக் கிளறினாற் போலே இருக்கின்ற செல்வத்தை’ என்றது, ‘மறைந்து கிடக்கிற குற்றங்களை வெளியிடுகையாலே
அவர்களுக்குத் தாழ்வினை விளைவிக்கக் கூடியதாமித்தனை. குப்பையைக் கிளறினால் உள் மறைந்து கிடக்கிற கறைச்சீரை
முதலாக உள்ளவை அன்றோ வெளிப்படுவன? ஆகையால்,அவர்களுக்குத் தாழ்வினை விளைவிக்கக்கூடியதாம் அளவன்றிக்கே,
தங்களுக்கும் தூய்மை இல்லாதவற்றைத் தீண்டுதலாகிய குற்றம் உண்டாம்,’ என்கை.
வள்ளல் புகழ்ந்து –
உதாரமாகப் பாடி. என்றது, ‘அவன் தனக்கும் ஒரு நன்மை இன்றிக்கே பிறர்க்கும் உறுப்பு அன்றிக்கே இருக்கவும்,
அவனுக்கு நன்மை உண்டாகிறதாகவும் அதுதான் தம் பயனுக்கு அடியாய் இருக்கிறதாகவும் நன்றாகப் புகழ்ந்து’ என்றபடி.

நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் –
நீங்கள் கொள்ளும் பயன் இதுவே. ‘இரண்டும் இல்லை’ என்று சொன்னார் அன்றோ முன்னர்? ஆகையாலே,
நீங்கள் ‘வாக்மின்கள் – எளிதிற்கவி பாடுமவர்கள்’ என்ற பிரசித்தியை இழக்குமித்தனை?
அன்றியே,
‘வாய்மை என்று மெய்யாய், நாடு அறிய இல்லாத அர்த்தங்களைச் சொல்லுகையாலே பொய் சொன்னீர்களாமத்தனை நீங்கள்’ என்னுதல்.
புலவீர்காள் – ‘பேறு இழவு அறியும் நீங்கள் செய்யுமதுவோ இது? உங்கள் நன்மை நான் சொல்லவேண்டி இருப்பதே!
வர்ண ஆஸ்ரமங்களுக்குச் சேருமோ நீங்கள் செய்கிறவை? எல்லாச் சொற்களுக்கும் பொருளாய் இருப்பவன் அவன்
ஆனால், அந்தச் சொற்கள் தமக்குச் சேருமோ?’ என்கிறார்.
‘நன்று; நாங்கள் கவி பாடுகின்றவர்களைக்காட்டிலும் நீர் சொல்லுகின்ற தலைவனுக்கு நன்மை உண்டோ?’ என்னில்,
கொள்ளக் குறைவிலன் –
மேலே கூறிய இரண்டனையும் மாறாடிச் சொல்லுகிறார், ‘கொள்ளும் பயனும் உண்டு; குப்பை கிளர்த்தன்ன செல்வமும் அன்று’ என்று.
நீங்கள் யாவை யாவை சில ஏற்றங்களை இட்டுக் கவி பாடுகின்றீர்கள்? அவற்றை ஏற்குமிடத்தில் ஒரு குறையுடையவன் அல்லன்!
எல்லா நற்குணங்களையும் உடையவன்.
வேண்டிற்று எல்லாம் தரும் –
‘கொள்ளும் பயனும் பெரிது,’ என்கிறார்;
நீங்கள் கவி பாடினால் போக மோக்ஷங்கள் வேண்டுமவை எல்லாம் தரும். என்றது,
‘இவனை ஒழிந்தார் ஒருவனுக்கு ஒன்றைக் கொடுத்தால், கொள்கின்றவனுக்கு மற்றொன்று விருப்பமானால்,
அது கொடுக்க மாட்டார்களே அன்றோ? இவனிடத்தில் விரும்புகிறவர்கள் தாழ்வாலே இழக்கில் இழக்குமித்தனை;
அவன் தரமாட்டாமையாலே இழக்க வேண்டா,’ என்றபடி
‘மோக்ஷத்தைத் தருபவரான பகவான், தியானம் செய்கின்றவர்களுக்கு இவ்வுலகில் விருப்பமானவற்றையும்,
சுவர்க்கங்களில் உள்ள பேறுகளையும், சுவர்க்கத்தில் உள்ளவர்களால் சேவிக்கப்படுகின்ற அந்தப் பரமபதத்தையும் கொடுக்கிறார்’,
‘விஷ்ணு பகவான் எல்லாப் பலன்களையும் கொடுக்கிறார்’ என்பன விஷ்ணு தர்மம்.

கோது இல் –
ஒருவனுக்கு ஒன்று கொடுக்குமிடத்தில் குற்றம் அற்று இருக்கும். கொடைக்குக் கோது ஆவது,
‘கால தேச பாத்திரங்கள் பார்த்துக் கொடுத்தல், கொடுத்த பின்னர், ‘கொடுத்தோம்’ என்னும் செருக்குத் தோன்ற நிற்றல்,
கொள்ளுகின்றவனுக்குக் கைம்மாறு தேடி நெஞ்சாறல் படும்படியாகக் கொடுத்தல். ‘நீர் இதனை அறிந்தபடி என்?’ என்ன,
என் வள்ளல் –
நான் அனுபவத்தைச்சொல்லுகிறேன்.
மணி வண்ணன் –
கொள்ளும் பயனும் இன்றியே செல்வமும் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாதபடி ஆயிற்று வடிவழகு.
உருவத்தின் தோற்றத்தைக் கண்டு மேல் விழா நின்றது அன்றோ புறம்பு? வடிவழகு கண்டு கவி பாடினாலும் இவனையே பாட வேண்டும்;
கைக்கூலி கொடுத்து விரும்பாநின்றது அன்றோ உருவத்தின் தோற்றங்களையும்?
கொடுத்து கொள்ளாதே கொண்டதுக்குக் கைக்கூலி கையூட்டு கொடுக்க வேண்டும் -ஓன்று நூறாயிரம் கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன்
மணி வண்ணன்தன்னைக் கவி சொல்ல வம்மின் – நான் சொல்லுகிற படியை உடையவனைக் கவி பாட வாருங்கோள்.
‘பிற்காலியாதே கடுகப் புகுரப் பாருங்கோள்’ என்பார், ‘வம்மின்’ என்கிறார்.

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: