பகவத் விஷயம் காலஷேபம் -75- திருவாய்மொழி – -3-5-6….3-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-

அவதாரத்திலும் -அவதார கந்தத்திலும் உள்ள -வ்யூஹ -போக்யதையை -அறிந்து விக்ருதராய் உள்ளார்களைக் கொண்டாடுகிறார்
முன் பாசுரங்கள் நிந்தனை -மேல் வாழ்த்துகிறார் –
முதல் ஐந்து பதிகங்கள் நாயகிபாவனை -அடுத்த ஐந்து பதிகங்கள் ஆண் பாவனை திருக்கண்ண புரம்
-முதல் ஐந்து பாசுரங்கள் திருக்கல்யாணம் முன் -அடுத்த ஐந்தும் ஆனபின்பு வாரணம் ஆயிரம் பதிகம் –
மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த-உபேந்த்ரன் -தேவாதி மத்ஸ்ய கூர்மாதி
என்னின்ற யோனியுமாய் பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்-அத்விதீயன் -மேல் விழுந்து -உப மானம் அபிமானம் இல்லா -அத்யந்த வியாவ்ருத்தன்
கர்மாதீன ஜன்ம ராஹித்யம் –
தடங்கடல் சேர்ந்த பிரானைக்-இடமுடைத்த ஷீராப்தி
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்-கட்டியைத் தேனை அமுதை-கண்ட போதே உண்ண -கோதில்லாத சாற்றை
-சர்வ காலம் வைக்கும் கட்டி -சர்வ ரச சமவாய தேனை -அமுதை –
-சதுர்வித -போஜ்யம் -பேயமாயும் குடிக்க -கடித்து -லேகியம் நக்கி சுவைத்து -சோஷ்யம் –
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்-நிகர்ஷ புத்தி பண்ணாத -தாழ்ச்சி பொறாமை த்வேஷம் இல்லாமல்
சீல சௌலப்யாதிகளை ஸ்தோத்ரம் பண்ணி முழுது உணர் நீர்மையினாரே.-

மனிதர்களும் தேவர்களும் விலங்கு தாவரங்களுமாகி ஆச்சரியமான இப்பிறவிகளிலே பிறந்த தனியனும், பிறப்பு இல்லாதவனும்,
பெரிய கடலிலே சேர்ந்திருக்கின்ற உபகாரகனும், பழம் கரும்பின் சாறு சாற்றின் கட்டி தேன் அமுது இவை போன்ற இனியனுமான
எம்பெருமானை வெறுப்பு இல்லாமல் துதித்து ஆனந்த மேலீட்டினால் நடனம் செய்யுமவர்கள் எல்லாவற்றையும் அறிந்த அறிவுள்ளவர்கள் ஆகின்றார்கள்.
‘ஆகிப் பிறந்த தனியன்’ என்க. முழுது உணர் நீர்மையினார்-முற்றறிவினர். குனிப்பார்-வினையாலணையும் பெயர்,

‘ஈசுவரனுடைய இனிமையைச் சொன்னால் உளமும் செயலும் வேறுபட்டவர்கள் ஆவார்களாகில்,
அவர்கள் எல்லா அறிவின் பலமும் கைவந்தவர் ஆவார்கள்,’ என்கிறார்.

மனிசரும் மற்றும் முற்றுமாய் –
‘தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் இவற்றின் நடுவே அவதரித்தவனாய்’ என்கிறபடியே,
மனிதர் தேவர்கள் சொல்லப்படாத விலங்கு தாவரங்கள் எல்லாமாய்.-குப்ஜா மரமாகவும் –
மாயப் பிறவி பிறந்த
– ஆச்சரியமான பல அவதாரங்களை எடுக்குமவன்.
கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய் இருந்து கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறக்கமாட்டாத பிறவிகளிலே பிறக்கின்றானாதலின், ‘மாயப்பிறவி’ என்கிறது.
‘ஒரு காரணமும் இல்லாமல் காரணமுடையார்க்கும் அவ்வருகே பிறக்க வல்லவன்’ என்பதாம்.
தனியன் –
இப்படி அவதரித்தும், போகும் அன்று உடுத்த ஒலியலோடே-கட்டின வஸ்த்ரத்துடன் – ஆயிற்றுப் போவது.
‘சேர்ந்து போனார் ஒருவரும் இலரோ?’ எனின், தொடர்ந்து செய்த இவ்வவதாரங்களிலே இராமாவதாரம் ஒன்றிலும்
‘நாலிரண்டு பேர் கூடப்போனார்கள்’ என்று கேட்டோமித்தனையே யன்றோ? -அவர் பட்ட பிரயத்னத்துக்கு இது நாலிரண்டு போலே என்றவாறே –
‘சேர்ந்து போனார் இலரேயாயினும், இங்கிருந்த நாளில் பரிவருண்டோ?’ எனின்,
‘இவன் நமக்காகப் பிறந்தான்’ என்று நினைக்கைக்கும் ஒருவரும் இலரே அன்றோ?
பிறந்த அது தன்னையே குற்றமாக விரித்துப் பேசுகின்றவர்களேயன்றோ உளராவது?

பிறப்பிலி தன்னை –
இப்படிப் பிறருக்காக அவதரித்தால் அவ்வவதாரத்தால் பயன் முழுதும் பெறாதே ஒழிந்தாலும்,
‘நாம் வருந்தியும் இது பலித்தது இல்லையே!’ என்று கைவாங்குகை யன்றி,இவர்களுக்கு ஒன்றுஞ் செய்யப்பெற்றிலோம்’ என்று,
பிறந்திலனாய்ப் பிறக்கைக்கு ஒருப்பட்டானாய் இருப்பவன்.
தடங்கடல் சேர்ந்த பிரானை –
இன்னமும் பிறக்கைக்குத் தவயோகம் பண்ணுகிறபடி.
திருப்பாற்கடலிலே அநிருத்த உருவமாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதாரத்திற்கு மூலமேயன்றோ?
‘வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை’ என்றார் ஸ்ரீஆண்டாள்.
இவர்கள் பிறவி என்னும் பெருங்கடலைப் போக்குகைக்காக அன்றோ அவன் கடலிலே வந்து கிடக்கிறது?
கனியை –
கடல் பழுத்தபடி. அன்றி, ‘பாலிலே பழுத்த படி’ என்னுதல்
அங்குச் சாய்ந்து கிடக்கிற போதை வடிவழகால் வந்த இனிமையை ‘சர்வரஸ:’ என்று ஒரு சொல்லாலே சொல்லமாட்டார்;
எல்லாம் சொல்லப்புக்கால் சொல்லித் தலைக்கட்டமாட்டார்;
அவற்றால் போதரும் கூற்றிலே வைத்துச் சிலவற்றைச் சொல்லுமித்தனை, ஆகையாலே, ‘கனியை’ என்கிறார்.

கனியை கரும்பினின் சாற்றை கட்டியை தேனை அமுதை
– கண்ட போதே நுகரவேண்டும் கனியும், கோது அற்ற இனிய கருப்பஞ்சாறும், உடல் முழுதும் ரசத்தையுடைய கட்டியும்,
எல்லா ரசமும் சேர்ந்திருக்கிற தேனும் நுகர்கின்றவனை என்றும் உள்ளவனாகச் செய்யும் அமுதமும் போலே இனியனானவனை.
கண்ட போதே நுகரலாம்படியாய், அதுதான் கோதுகழிந்த ரசாமிசமாய், அதுதன்னைத் திரட்டினதாய், அதுதான் பருகலாம்படியாய்,
இனிமையேயன்றிச் சாவாமல் காக்கமதாய் இருக்கையைத் தெரிவித்தபடி. மேல் திருவாய்மொழியில் ‘நலங்கடல் அமுதம்
என்கோ!’ என்று தொடங்கி அனுபவித்த இனிமை பின் நாடின படி இது.

முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் –
பகவானுடைய குணங்களைக் கேட்டால் அசூயை பண்ணாமல் ஏத்திக் குனிப்பவர்கள்;
‘ஆனால் ஈசுவரனிடத்தில் அசூயை பண்ணுவர்களோ?’ எனின், தன்னைப் போல்வான் ஒருவனுக்கு ஓர் உயர்வு சொல்லுகையன்றிக்கே
, ஈசுவரனுக்கு ஓர் உயர்வு சொன்னால் அது பொறாதேயன்றோ இருப்பது? குணம் கண்ட இடத்தே குற்றங்களை ஏற்றுகிறவர்கள் பலரேயன்றோ?
ஆதலால், அவதார சௌலப்யமாகிற இம்மஹா குணத்திலே இறைமைத்தன்மை இல்லை என்ற குற்றத்தை ஏற்றாமல் என்கிறார்.
‘நம்முடைய சொரூப ரூப குண விபூதிகளைச் சொன்னவிடத்தில் சிவீல் என்று இருந்திலை;
உன்தனை அதிகாரிகளைக் கண்டிலோம்; இன்னம் சொல்லிச் சொல்லாதவைகளையும் சொல்லும்படி கிட்ட வாராய்,’ என்றானேயன்றோ ஸ்ரீ கீதையில்?

‘ஆனால், அனுகூலர் அசூயை பண்ணுவர்களோ?’ எனின், சங்கநிதி பதுமநிதிகளைக் கொண்டு வந்து கொடுத்து,
கடலைச் செறுத்துப் படைவீடு செய்து, தங்கள் எதிரிகளோடே புறப்பட்டு மார்விலே அம்பு ஏற்று, இப்படி ரக்ஷியாநின்றால், சோறு சுட்டவாறே,
‘இது ஒரு கிருஷ்ணனும், நடுவில் பெருங்குடியாட்டமும் என் என்பதுதான்?’ என்னாநிற்பர்கள்.
மேலும், ‘காக்குந் தன்மை என்பது ஒரு சொல் அளவேயாய் இவர்களுக்கே தாழ்வு செய்து திரிந்தேன்;
நல்லது கண்டால், எனக்கு என்று இராமல் பகுத்திட்டு ஜீவித்துப் போந்தேன்; இங்ஙனம் இருக்கவும், இவர்கள்
கூறும் கொடுஞ்சொற்களை எல்லாம் பொறுத்துப் போந்தேன்,’ என்றான் அன்றோ? மேலும், ஒரு மணி கெட்டு யாரேனும் கொண்டுபோக,
கிருஷ்ணன் தலையிலே ஏறிட, நம்பி மூத்தபிரானும் இது சுட்டித் தீர்த்தயாத்திரை போகவேண்டும்படி இருந்ததேயன்றோ?
இனி, ‘முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்’ என்பதற்கு, முனிவாகிறது, வெறுப்புத் தன்மையாய், அது இன்றிக்கே
ஒழிகையாவது, கலங்குகையாய், அடைவு கெட்டு ஏத்திக் குனிப்பார் என்று பொருள் கூறுவாரும் உளர்.
முழுது உணர் நீர்மையினாரே –
1- ‘ஒன்றை (பரம்பொருளை) அறிந்ததனாலே எல்லாம் அறிந்தவர் ஆகிறார்கள்,’ என்கிறபடியே,
அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆகிறார்கள்; அவர்கள் முற்றறிவினர்கள் ஆகிறார்கள்:
2-ஞானபலமான இது -ஏத்திக் குனிப்பது-உண்டான போதே
ஞான விசேடத்தில் இல்லாதது இல்லையன்றே? ‘ஆயின், மனத்தின்கண் உள்ள ஞானத்தை அறிந்தவாறு என்?’ எனின்,
அவர்கள் சரீரத்தில் பிறந்த விகாரத்தைக்கொண்டே அவர்களுடைய ஞானமிகுதியை அறியலாம்.
‘குற்றமாக … பேசுகின்றவர்களே’ என்றது, சாபத்தாற்பிறந்தான் என்பது போன்றவற்றைக் கூறல்.
‘கோதண்டத் தானத்தன் வாள்கதை நேமியன் கோலவட வேதண்டத் தானத்தன் இன்னிசை யான்மண்ணும் விண்ணுமுய்ய
மூதண்டத் தானத் தவதரித் தானெனின் முத்தி;வினைத் தீ்தண்டத் தானத் தனுவெடுத் தானெனில் தீநரகே.’– என்றார் பிள்ளைப்பெருமாளய்யங்கார்.

——————————————————————————–

நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!–3-5-7-

ஆஸ்ரித பஷபாதத்துக்கு ஈடு படாதார்-பாகவதர்களுக்கு என்ன உறுப்பு
நீர்மை இல் நூற்றுவர் வீய -இரக்கம் இல்லாததே காரணம் இவர்கள் வீய -பந்துக்கள் உடன் உண்ணாத –
ஐவர்க்கு அருள் செய்து நின்று-நிரவதிக கிருபை -சர்வவித பந்துவாக நின்று -கிருஷ்ணாஸ்ரைய -நாத –
பார் மல்கு சேனை அவித்த-18 ஔஷனி களையும் முடித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி-நிரதிசய ஔஜ்வல்யம் -குணா சௌந்த்ரய வித்தராய் -பிரேம பரவசராய்
நீர் மல்கு கண்ணினர் ஆகி-உருகி
நெஞ்சம் குழைந்து நையாதே-சிதிலமாகி -இருக்காமல்
ஊன் மல்கி மோடு பருப்பார-மாம்ச -வளர்ந்து -பிடரியில் பிசல் பருக்கும் படி –
உத்தமர்கட்கு என் செய் வாரே!-ஞானாதிகர் -பாகவதர்களுக்கு -அநுயுக்த ஸ்வ பாவர் -என்ன செய்வார் –

‘நற்குணம் இல்லாத துரியோதனன் முதலிய நூற்றுவரும் அழிய, பாண்டவர்கட்குத் திருவருள் புரிந்து நின்று, பூமியில் நிறைந்த
சேனையை அழித்த பரஞ்சோதியை நினைத்து ஆனந்தத்தால் கூத்தாடி நீர் நிறைந்த கண்களையுடையவர்களாகி மனம் கட்டுக் குலைந்து
சரீரமும் நிலை குலையாமல் சதை மிகும்படியாக வயிற்றினை வளர்ப்பவர்கள், உத்தமர்களான பாகவதர்கட்கு என்ன காரியத்திற்கு உறுப்பாவர்?’ என்கிறார்.
‘அருள் செய்து நின்று வீய அவித்த பரஞ்சுடர்’ என்றும், ‘நினைந்து ஆடிக் கண்ணினராகிக் குழைந்து நையாது பருப்பார்’ என்றும் கூட்டுக.
‘மல்கி’ என்பது, செய்வென் எச்சத் திரிபு. மல்கு கண் – வினைத்தொகை. ‘என் செய்வாரே’ என்றது, ‘ஒன்றுக்கும் பயன்படார்’ என்பதனைக் குறிக்க வந்தது.

‘அடியார்களிடத்தில் பக்ஷபாதம் உடைமையாகிற மஹாகுணத்தில் ஈடுபடாமல் சரீரத்தை வளர்க்கின்றவர்களாய்த் திரிகின்றவர்கள்,
வைஷ்ணவர்களுக்கு எதற்கு உறுப்பாகப் பிறந்தார்கள்?’ என்கிறார்.

நீர்மை இல் நூற்றுவர் வீய –
ஒருபடியாலும் ஒரு நீர்மை இல்லாத துரியோதனன் முதலியோர் முடிந்து போம்படிக்குத் தகுதியாக. என்றது,
முற்படச் சஞ்சயனைப் போகவிட்டு, பின் தான் தூது சென்று, ‘இவர்களையும் அவர்களையும் சேர விடலாமோ?’ என்று பார்த்த இடத்து,
அவர்கள் ஒருபடியாலும் இசையாமல், ‘எங்கள் பந்துக்கள் ஜீவிக்கில் நாங்கள் ஜீவிப்பது இல்லை; அவர்கட்கு ஒரு குடியிருப்பும் கொடோம்;
நாங்கள் பலர் ஆகையாலே பூமிப்பரப்பு அடங்கலும் எங்களுக்கே இடம் போருமித்தனை; அவர்களுக்குக் கிருஷ்ணனும் தருமமும் உண்டு;
அதற்குப் பலமான சுவர்க்கத்தை அனுபவிக்கக்கடவர்கள்; நாங்கள் பூமியை ஆளுவோம்,’ என்று வன்சொற்களைச் சொல்ல, அவர்கள்
நெற்றியைக் கீறிப் பார்த்த இடத்தில் இரத்தம் பொசியாமையாலே, ‘அவர்களை அழியச் செய்வோம்,’ என்று பார்த்தான்.
பாண்டவர்களைப் பாதுகாத்தற்குக் காரணம், ‘நாங்கள் பந்துக்களையொழிய ஜீவிப்பது இல்லை’ என்றது.
’நம்மால் இராச்சியமும் போகங்களும் சுகங்களும் யாருக்காக விரும்பப்படுகின்றனவோ’ என்றபடியே,
‘நாட்டார் பொருள் தேடுவதும் இராச்சியங்கள் சம்பாதிக்கிறதும் எல்லாம் பந்துக்களும் தாங்களும் கூட ஜீவிக்கைக்கு அன்றோ?
ஆன பின்னர், நாங்கள் பந்துக்களைக் கொன்று ஜீவிக்கப் பார்க்கிலோம் என்னும் நீர்மையாலேயாயிற்று; அவர்கள் இங்ஙன் அன்றிக்கே
, ‘இவர்களுக்கு ஒரு கோல் குத்து நிலமும் கொடுப்பது இல்லை; அவர்கள் ஜீவிக்கில் நாங்கள் ஜீவியோம்,’ என்ன,
‘இவர்கள் அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் இருந்தார்கள்; இவர்களை அழியச் செய்யாவிடின் விபூதியும் அழியும்,’
என்று பார்த்து அதற்குத் தகுதியாக ஒருப்பட்டான்,’ என்றபடி.

ஐவர்க்கு அருள் செய்து –
தான் அல்லது தஞ்சம் இல்லாத பாண்டவர்களுக்கு. -‘பாண்டவர்கள் கண்ணனையே சரணமாக அடைந்தவர்கள்;
கண்ணனையே துணையாக உடையவர்கள்; கண்ணனையே நாதனாக உடையவர்கள்; பூர்ணசந்திரன் நக்ஷத்திரங்களுக்குத் தலைவனாய்
இருத்தலைப் போன்று, அந்தப் பாண்டவர்களுக்குக் கண்ணன் சிறந்த உபாயமாய் இருக்கிறான்,’ என்பது பாரதம்.
‘மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனாத்தனனுமான கிருஷ்ணன், தர்மபுத்திரனுக்கு மந்திரியாயும் பாதுகாப்பவனாயும் சினேகிதனாயும்
இருப்பதனால், அந்தத் தருமனுக்கு வெற்றி கொள்ள முடியாதது யாது உளது?’ என்கிறபடியே, அவர்கள் இழந்த பரிகரம் எல்லாம்
தானேயாய் நின்றானாதலின், ‘நின்று’ என்கிறது. பார் மல்கு சேனை அவித்த – பூமி நெளியும்படிக்குத் தகுதியாக மிகைத்துவந்த
அசுரகூட்டங்களை விளக்கை அவித்தாற்போன்று, பிணங்காணவொண்ணாதபடி முடித்துப் போகட்ட.
பரஞ்சுடரை –
‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்றார்களே? அதற்காக, சேநாதூளியும் முட்கோலும் சிறுவாய்க்கயிறும் தேருக்குக் கீழே நாற்றின
திருவடிகளும் சிறு சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற நிலையைச் சொல்லுகிறது.
ஆதி யம் சோதி உரு -ஏஷ நாராயண ஷீராப்தி நாதனே இவன்-

நினைந்து ஆடி –
அவன் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்குங் குணத்தை அநுசந்தித்து,
ஈசுவரன், தன்னையும் தன் விபூதியையும் அடியார்களுக்கு உடைமையாக்கி யன்றோ வைப்பது?

அடியார்களுக்கு உடைமை ஆக்கி வைக்கும் என்றதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘ஆயிரத்தளியிலே’ என்று தொடங்கி. ஆயிரத்தளி – பழையாறை
– நாதன்கோயில் – நந்திபுரவிண்ணகரம் என்னும் தலம். இங்கே சோழர்களும், பின்னர்ப் பல்லவர்களும், பின்னர்ச் சோழர்களும் சில காலம் இருந்து
அரசாண்டனர். இராஜா – கி.பி. 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த சோழ அரசன்.-கிருமி கண்ட சோழன் –
ஆயிரத்தளியிலே இராஜா இருக்கச்செய்தே பெரிய நம்பியையும் ஆழ்வானையும் நலிந்தானாய், ஆழ்வான் மடியிலே சாய்ந்து கிடக்கச்செய்தே,
பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளினார்; அவ்வளவிலே ‘ஒருவரும் இல்லாதாரைத் தகனம் பண்ணக்கடவோம்,’ என்று
திரிகிறார் சிலர் அங்கே வந்து, ஆழ்வானைக் கண்டு, ‘ஒருவன் உண்டிறே’ என்று போகப் புக, ஒருவரையும் ஒரு குறை
சொல்லியறியாதவன், ‘வாரிகோள் மாணிகள்! வைஷ்ணவனுமாய் ஒருவனும் இல்லாதான் ஒருவனைத் தேடிப் பிரதிபத்திபண்ண
இருக்கின்றீர்களோ நீங்கள்? ஈசுவரனும் ஈசுவர விபூதியும் வைஷ்ணவனுக்குக் கிஞ்சிக்கரிக்க இருக்க,
வைஷ்ணவனுமாய் அறவையுமாயிருப்பான் ஒருவனை நீங்கள் எங்கே தேடுவீர்கள்?’ என்றானாம்.

ஸ்ரீ வைஷ்ணவன் -அநாதி இல்லையே ச நாதன் அன்றோ -ஜென்மத்துக்கு பிரயோஜனம் -ஸ்ரீ வைஷ்ணவனுக்கு உறுப்பாக
-கூரத் ஆழ்வான்-மாருதி ஆண்டான் மூலம் அனுப்பி அருளிச் செய்த ஸ்லோகம்
அஷ்டகாக அஷ்ட அத்யாயி -வையாகரனிகள் -தீ விஷய -அஸ்தி -நாஸ்தி -திஷ்டன் -மனுஷ்யாணாம் –
ஆஸ்திகன் -நாஸ்திகன் -திஷ்டன் -பூர்வம் -மத்யம் -பச்சிம -யதீஸ்வரன் -துரந்தவன்-பின்னால் உள்ள -பூர்வம் பிரதமம் –
கிருமி கண்ட சோழன் நாஸ்திகன் –
உன் சேவை எப்படி கிடைக்குமோ -என்று கேட்பது போலே
ஆந்தர அபிப்ராயம் -மத்யம நமஸ் – -பெருமானுக்கு கிங்கரன்
பகவத் பக்தன் -பாகவத பக்தன் -பிரணவம் -பாகவத சம்பந்தம் தெளிந்தபின்பு தானே நாராயண கைங்கர்யம் சித்திக்கும் -என்றவாறு
அஷ்டாஷர-தீ விஷய -ஸ்வரூப -உபாய -புருஷார்த்த -ஞானம் -த்ரிவித நிஷ்டன் -மத்யமபத ஏக தேச -ஷட்யந்தமான
மகார வாஸ்ய உபாய விரோதி –
பூர்வம் மாம்-ஸ்வரூப நிஷ்ட மாம் -அடியேனை -கிழக்கு தேசத்தில் உள்ளவர் -பிரணவம் நிஷ்டர் -இரண்டும்
மன் நாசாயா முயற்சிக்கிறது -இங்கு அர்த்தம் –
ஹே பச்சிம -ஹே கைகர்யா நிஷ்டர் -மேலேதேசத்தில் உள்ள பாஷ்யகாரர் -என்றுமாம் –
திருதிய பத -நாராயணாய -கைங்கர்யம் பண்ணி ஆனந்தப்பிபது புருஷார்த்த விரோதி -நலிகிறது
பாகவத ஆச்சார்யா கைங்கர்ய அலாபத்தால் ஞானமே வியர்த்தம்
போக்கி கொடுத்து அருளும் -என்கிறார் -திரு உள்ளம் உகந்தார் –

அவ்வநுசந்தானம் இருந்தவிடத்தே இருக்கவொட்டாமையால் ஆடி
நீர் மல்கு கண்ணினராய் –
‘பகவானுடைய அனுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்த கண்ணீரையுடையனாய், மயிர்க்கூச்சோடு கூடின சரீரத்தையுடையனாய்,
எப்பொழுதும் பரமாத்துமாவின் குணங்களால் ஆவேசமடைந்தவனாய் இவ்விதமாய் எல்லா மக்களாலும் பார்க்கத் தக்கவனாய்
இருப்பான் ஞானியானவன்,’ என்கிறபடியே, கண்ணநீரை இட்டு நிரூபிக்க வேண்டும்படியான கண்ணையுடையராய்.
நெஞ்சம் குழைந்து நையாதே –
சரீரம் நிலை குலைதலேயன்றி மனமும் கட்டுக்குலைந்தவர்களாய் நைந்துபோகாமல்.
ஊன் மல்கி மோடு பருப்பார் –
மாமிச அளமாம்படி சரீரத்தைப் பருக்கச்செய்து, கனத்த பிசல்களும் நெடிய வலிய சரீரங்களுமாய் இருக்குமவர்கள்.
உத்தமர்கட்கு என் செய்வாரே –
பகவானுடைய குண அநுசந்தானத்தாலே மெலிகின சரீரத்தையுடையராய் இருந்துள்ள மஹா புருஷர்களுக்கு ஒருவருக்கொருவர் உணர்த்திக்
கொள்வதற்கு உசாத்துணை ஆவார்களோ? ‘பிறப்பிற்குப் பிரயோஜனம் வைஷ்ணவர்களுக்கு உறுப்பாமதுவே,’ என்கிறார்.

—————————————————————————————

வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே.–3-5-8-

அர்ச்சாவதரமாய் சுலபன் ஈடுபட்டவர்கள் -3-3- திருவங்கட முடையானின் -சர்வாத்மா பாவம் அனுபவித்து -தொடர்ந்து -இங்கும் –
நிந்தித்து -கொண்டாடி இங்கும் -ஈடுபட்ட பிரவ்ருதிகள் -உடையவர்கள் நித்யரால் ஆராதிக்கப் படுவர்
வார் புனல் அம் தண் அருவி-தர்ச நீய குளிர்ந்த அருவிகள்
வட திரு வேங்கடத்து எந்தை-ஸ்வாமி யுடைய
பேர் பல சொல்லிப் பிதற்றிப்-ஸ்வரூப ரூப குண விபூதி விஷயமான திரு நாமங்களை -அடைவு கெட பிதற்றி –
பித்தர் என்றே பிறர் கூற-பிறர் சொல்லும் படி
ஊர் பல புக்கும் புகாதும்-மனுஷ்யர் நடையாடும் இடங்களிலும் நடை யாடாத இடங்களிலும் சென்று
உலோகர் சிரிக்க நின்று ஆடி-பரவசராய் நின்று ஆடி -உலோகர் பைத்தியம் போலே போலே
ஆர்வம் பெருகிக் குனிப்பார்-ஈடுபட்டு -ஆடி
அமரர் தொழப்படுவாரே.-நித்ய அனுபவ பரரான நித்ய ஸூரிகள் கொண்டாடுவார்
நான் கொண்டாட -இவர் தாம் செய்யாமல் -உத்கர்ஷமான அவர்கள் செய்வார் என்கிறார் –

‘ஒழுகுகின்ற தண்ணீரையுடைய அழகிய குளிர்ந்த அருவிகள் நிறைந்த வடதிருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற
எந்தையினுடைய பல திருப்பெயர்களைச் சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்று பிறர் கூறும்படி பல ஊர்களிலே புகுந்தும்புகாமலும்
உலக மக்கள் சிரிக்கும்படியாக நின்று ஆடி அன்பு பெருகி நடனம் செய்கின்றவர்கள் தேவர்களாலே தொழப்படுவார்கள்,’ என்கிறார்.

‘புக்கும் புகாதும் எந்தையின் பெயர்களைச் சொல்லிப் பிதற்றி நின்று ஆடிப் பெருகிக் குனிப்பவர் அமரர் தொழப்படுவார்,’ என்றும்,
‘பித்தர் என்றே பிறர் கூற உலோகர் சிரிக்க நின்று ஆடிக் குனிப்பவர்’ என்றும் கூட்டுக.
‘வடக்கின்கணுள்ள திருவேங்கடம்’ என்க. அமரர் – ‘அமரர்களால்’ என மூன்றனுருபு விரிக்க.

‘திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுவாரைக் கொண்டாடுகைக்கு நாம் யார்?
நித்தியசூரிகள் அன்றோ அவர்களைக் கொண்டாடுவார்கள்?’ என்கிறார்.

வார் புனல் அம் தண் அருவி வடக்குத் திருவேங்கடத்து எந்தை
– ஒழுகாநின்றுள்ள புனலையுடைத்தாய், காட்சிக்கு இனியதாய், சிரமத்தை நீக்குவதாயுள்ள அருவிகளையுடைத்தான
வடக்குத் திருமலையில் வந்து நின்றான் என் ஸ்வாமி.
பேர் பல சொல்லிப் பிதற்றி –
அவனுடைய திருநாமம் பலவற்றையும் அடைவுகெடச் சொல்லி. 2சொரூப ரூப குணங்களுக்கு வாசகமாயும், விபூதிக்கு
வாசகமாயுமுள்ள பெயர்கள் பலவாதலின், ‘பேர் பல’ என்கிறார். என்றது, 3தாம் ‘ஒழிவில் காலத்’திலும்,
‘புகழும் நல் ஒருவனி’லுமாகச் சொன்னவற்றைச் சொல்லுகிறார் என்றபடி.
அசாதாரணமான திரு நாமங்களையும் சாதாரணமான திரு நாமங்களையும் -ஈசன் -வானவர்க்கு -அந்தமில் புகழ்
-வானவர் ஆதி -பங்கயக்கண்ணன் -விபூதி அதிஸ்புடம்-
ஒழிவில் காலம்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவரீசன்’ ‘ஈசன் வானவர்க்கு’ என்பன, ஸ்வரூப வாசகம்;
‘காரெழில் அண்ணல்’ ‘கருமாணிக்கம்’ என்பன,ரூப வாசகம்; ‘திருவேங்கடத்து அந்தமில் புகழ்’ என்றது, குணவாசகம்;
‘புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியில் ‘வானவராதி என்கோ’என்றது, ஸ்வரூப வாசகம்; ‘பங்கயக் கண்ணன்’ என்றது,
ரூப வாசகம்; ‘புகழும் நல் ஒருவன்’ என்றது, குணவாசகம்.
பித்தர் என்றே பிறர்கூற –
பகவானுடைய குணங்களைக் கேட்டால் விகாரமில்லாதவர்களாய் இருக்குமவர்கள்,
‘‘பொருவில் சீர்ப் பூமி என்கோ!’ என்னா, ‘கண்ணனைக் கூவுமாறே’ என்பது; ‘குன்றங்கள் அனைத்தும் என்கோ!’ என்னா,
‘பயங்கயக் கண்ணனையே, என்பது; ‘ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே’ என்பதாகா நின்றார்;
இவர் பித்தரோ?’ என்று தம்மைப் பிறர் சொல்லுமாறு போன்று ‘இவர்கள் பித்தரோ?’ என்று சொல்லும்படி.
‘அத்தா அரியே என்று உன்னை அழைக்கப் பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை’ என்றும்,
‘பேயரே எனக்கு யாவரும்; யானும் ஓர் பேயனே எவர்க்கும்’ என்றும் சொல்லுகிறபடியே, அவர்கள் செயல் இவர்கட்கு
அடைவு கேடாய்த் தோன்றுமாறு போன்று, இவர்கள் செயலும் அவர்கட்கு அடைவு கேடாய்த் தோன்றுமே அன்றோ?
வைஷ்ணவர்கள் அங்கீகாரம் பெறுமதிலும் வைஷ்ணவர்கள் அல்லாதார் ‘இவன் நமக்கு உடல் அல்லன்’ என்று
கைவிடுகைதான் உத்தேஸ்யமாதலின், ‘பிறர் கூற’ என்கிறார்.
இராவணன் ‘இராக்கதர் குலத்தில் தள்ளுண்ட உன்னை’ என்றதனை உத்தேஸ்யமாக நினைத்திருந்தான் அன்றோ ஸ்ரீ விபீஷணாழ்வான்?
மிளகாழ்வான் வார்த்தை: இராஜா அகரம் வைக்கிறானாய் அங்கே செல்ல,‘உமக்குப் பங்கு இல்லை’ என்ன,
‘அது என்? வேதபரீக்ஷை வேணுமாகில் அத்தைச்செய்வது, சாஸ்திரப் பரீட்சை வேணுமாகில்
அத்தைப் பரீக்ஷிப்பது,’ என்ன, ‘உமக்கு அவையெல்லாம் போதும்; அதற்கு உம்மைச்சொல்ல வொண்ணாது,’ என்ன,
‘ஆனால், எனக்குக் குறை என்?’ என்ன, நீர் வைஷ்ணவர் அன்றோ? ஆகையாலே காண்,’ என்ன, புடைவையை முடிந்து
ஏறிட்டுக் கூத்தாடினான் ஆயிற்றுத் தன்னை அவர்கள் கைவிட்டதற்கு; ஆதலால், வைஷ்ணவர் அல்லாதாரான மற்றையோரால்
‘இவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்’ என்று தள்ளப்படுவதே வேண்டுவது.

‘மாணிக் கனகம் புரைமேனி மாலுக்கு வார்சடையோன்–பாணிக் கனகம் பலி யொழித்தானுக்குப் பச்சைத்துழாய்
ஆணிக் கனக முடியலங்காரனுக்கு அண்டமெல்லாம்-பேணிக் கனகனுக்குப் பித்தரானவர் பித்தரன்றே.’— என்றார் திவ்வியகவியும்

ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி ஆர்வம் பெருகக் குனிப்பார் –
மனிதர்கள் உள்ள இடத்தோடு இல்லாத இடத்தோடு வாசியற எங்கும் புக்கு, இவ்வாசியறியாத உலகத்தார், ‘இவன் செய்யும்படி என்?’ என்று சிரிக்க
, அதுவே தாளமாக நின்று ஆடி, அன்பானது மேன்மேல் எனக் கரை புரண்டு குனிக்குமவர்கள்.
அமரர் தொழப்படுவாரே –
நித்திய சூரிகளாலே கொண்டாடப் பெறுவர். ‘பகவானுடைய சந்நிதியிலே இருந்து ’அஹமந்நம் அஹமந்நம்’ என்கிறபடியிலே
இருந்து களித்தாடுவது பாடுவதான நித்தியசூரிகள் இவர்களைக் கொண்டாடுவார்கள்,’ என்கிறார்.

தேடுகின்றனை ஐம்பொறிகளுக் கிரை; தேடியுங் கிடையாமல் –வாடுகின்றனை; வீடுசென் றென்றினி மருவுவை மடநெஞ்சே!
ஆடு கின்றிலை; அழுகிலை; தொழுகிலை; அரங்கனைக் கரங்கூப்பிப் பாடு கின்றிலை;
நினைகிலை பதின்மர்தம் பாடலின் படியாயே.’- என்பது திவ்வியகவியின் செய்யுள்.

நேதம் விது–அநிதம் வித் –அநிதம் விதா ந சமுத்யசேத் ப்ரஹ்ம ஞானம் இல்லாதவர் உடன் சஹவாசம் பண்ணுவதோ
உணவு அருந்தவோ கூடாது –சாதுக்கள் சேர தர்மம் வளரும் -அவைஷ்ணவர்கள் சேர மோஹமே வளரும் –
தண்ணீரில் பாசி சேர்ந்து வீண் ஆவது போலே -ஸ்பர்சம் -சங்கம் -கூட இருந்து பேசினால் தர்மம் ஆச்சாரயம் போகும் –
பனை மரம் கீழே பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பாரே -சத்துக்கள் கூடவே கூடி மற்ற சங்கம் தவிர் –

—————————————————————————-

அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .–3-5-9-

கைவல்யார்த்தியை விட்டு -அவன் உபதேசம் கேட்டு திருந்த மாட்டானே –
உபயவிபூதி நாதனை -யோக ஜனித பக்தி விகார உக்தர் அன்றியே -அது இல்லாதார்க்கும் -அவர்களை கணிசித்தும் –
அவர்கள் அடைய நினைந்ததை எண்ணாமல் –
அவர்களுக்கும் பக்தி தானே உபாயம் -பிராப்யம் தானே தப்பு அவர்களுக்கு -இதனால் அல்லாதார் -பிரித்து –
சாத்தியம் என்ற எண்ணத்துடன் செய்ய வேண்டும் -சாதனா புத்தியாக கூடாது –
பிரபத்தி நிஷ்டன் அடுத்த பாசுரம் –
அமரர் தொழப் படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை-நிரதிசய போகய பூதன் -சேஷியாக உபகருத்தவன்
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக-ஸ்திரமாக வைத்து -பரம சாம்யா பத்தி பெரும் படி –
பகவல் லாபார்த்தி தான் -பரம சாம்யாபத்தி அடைவான் –
எதோ உபாசனம் ததோ பலம் –
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய-நிலை நின்று -பக்தி நிஷ்டர்கள் -கைவல்யார்த்தி தவிர -என்பதால் ஒழிய –
அல்லாதவர் எல்லாம் அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமம்மே.–
யோக ஜன்ய பக்தி கைவராதவர்கள் எல்லாரும் -சாதனமாக பண்ணாமல் -ப்ரீதி தூண்ட -சாத்திய -சித்தமான –
அவனை வைக்க அவனே முயல்கின்றானே -அத்தை உணர்ந்து -ஞான விசேஷ தசையே பக்தி -பக்தி ரூபாபன்ன ஞானம்
பக்தி பாகம் பிறவாதார்களும் இத்தை செய்வதே கருமம் –

அமரர்களாலே தொழப்படுகின்றவனை, எல்லா உலகத்தார்க்கும் உபகாரகனை, நிலையாக மனத்தினால் யோகத் தைச் செய்து
அவ்விறைவனோடு சமமாக அமரத் துணிய வல்லவர்களான கேவலர்களை ஒழிய, மற்றையோர் எல்லாம் அமர வேண்டும்
என்று நினைந்து எழுந்து ஆடிப் பாடுவதே செய்யத் தக்க காரியமாம்.
பிரானை மனத்தினுள் யோகு புணர்ந்து அவனோடு சமமாக அமரத் துணிய வல்லவர் – கேவலர்.
ஒன்றாக – சமமாக. ‘அல்லாதவர் எல்லாம் நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமம்.’ என முடிக்க. அலற்றுவது – தொழிற்பெயர்.

‘கைவல்ய புருஷார்த்தத்தை எடுத்து, -வேங்கடத்து எந்தை -’சீலம் முதலான குணங்களோடு கூடின இறைவனைப் பற்றாமல்
மின்மினிபோலே இருக்கிற ஆத்தும அனுபவமாத்திரத்திலே நிற்பதே!’ என்று அவர்கள் செயலுக்கு இரங்கி, அவர்களை ஒழிந்தாரை
எல்லாம் பகவானுக்கு-வேறுபட்ட இலாபங்களைப் ‘புருஷார்த்தம்’ என்று இராமல், பகவானுடைய குணங்களை அநுசந்தித்து
உரையும் செயலும் வேறுபட்டவராய் ஆடுவது பாடுவது ஆகுங்கோள்; இதுவே செய்யத்தக்க காரியம்,’ என்கிறார்.
பெரியாழ்வார் -அவர்களையும் விடக் கூடாது என்று கூப்பிடுவாரே அனைவரையும் சேர்த்து மங்களா சாசனம் பண்ண வேண்டிய பாரிப்பாலே –

அமரர் தொழப்படுவானை –
பிரமன் உருத்திரன் முதலியோர்கட்கும் அவ்வருகான நித்தியசூரிகளாலே தொழப்படுகிறவனை.
அனைத்து உலகுக்கும் பிரானை அமர மனத்தினுள் யோகு புணர்ந்து –
நெஞ்சிலே ஊன்றியிருக்கும் படி யோகாப்பியாசத்தைக் கனக்கப் பண்ணி.
அவன்தன்னோடு ஒன்றாக அமரத் துணிய வல்லார்கள் ஒழிய –
இறுதிக்காலத்தில் வந்தவாறே, அவனோடே இவ்வாத்தும வஸ்து சமானம் என்று புத்தி பண்ண வல்ல தாழ்ந்தவர்களை ஒழிய.
‘ஒன்றாக’ என்பதற்குச் ‘சமானமாக’ என்பது பொருள். ‘‘ஒன்றாக’ என்பது, சமானம் என்னும் பொருளைக் காட்டுமோ?’ என்னில்,
‘எல்லாப் பொருள்களிலும் இருக்கிற என்னை எவன் ஒருவன் ஒன்றாக இருக்கும் தன்மையை அடைந்தவனாய்ப் பூஜிக்கின்றானோ,
அவன் எப்பொழுதும் என்னிடத்திலே இருக்கிறான்,’ என்று ஒன்றாயிருக்குந்தன்மையைச் சொல்லி, பின்னர் அதுதன்னை
மீண்டும் எடுத்துச் சொல்லும் இடத்தில் ‘மதுசூதநா! எந்த யோகமானது சமமாக உள்ள தன்மை என்று உன்னால் சொல்லப்பட்டதோ,
அது செய்ய முடியாததாய் இருக்கிறது,’ என்று ‘சமமாக உள்ள தன்மை’ என்று சொல்லப்பட்டதன்றோ?
ஒன்றாக -ஐக்யாபத்தி -அத்வைதிகளை விலக்குகிறார்-எனபது இல்லை -அவர்கள் செய்வது யோகம் இல்லை –
ஒன்றாக -கைவல்யார்த்தி விரும்பும் சுத்தி -என்றவாறே -ஹேயரை ஒழிய –ஏகத்வம் -சப்தம் -கண்ணன் -சாம்யம் -அர்ஜுனன் –
ஆக, இறுதிக்காலத்தில் இவ்வாத்துமா அவனோடு ஒத்த சுத்தியை உடைத்தாக நினைக்க வல்ல துணிவுள்ள கேவலரை ஒழிய’ என்றபடி.

இனி, இவ்விடத்தில், ‘விலக்ஷண அதிகாரிகளைச் சொல்லிற்றாக்கி, ‘அல்லாதவரெல்லாம்’ என்கிற இடம்,
பத்தி செய்ய அதிகாரம் இல்லாதவர்களெல்லாம் அவனை அநுசந்தித்துப் பாடுவது ஆடுவது ஆகுங்கோள் என்பதனைக் கூறுகின்றது
என்று பொருள் கூறினாலோ?’ என்னில், அங்ஙனம் கூற ஒண்ணாது; மேலே ‘ஓதி உணர்ந்தவர் முன்னா’ என்றதனால்,
பகவானுடைய குணங்களைக் கேட்டால் வேறுபடாது இருப்பவர்களாயின், அவர்கள் பிறவி தொழில் முதலியவற்றால் எத்தனையேனும்
நன்மையுடையராகில் அவர்கள் மக்கள் அல்லர் என்றும் சொல்லி, பிறவி தொழில் முதலியவற்றால் தண்ணியரேயாகிலும்
பகவானுடைய குணங்களை அநுசந்தானாம் பண்ணி வேறுபாட்டினையடையும் தன்மையராகில் அவர்கள்
‘முழுதுணர் நீர்மையினார்’ என்றும் சொல்லி இவர்களைக் கொண்டாடியும் அவர்களை ‘என் சவிப்பார் மனிசரே’ என்று நிந்தித்தும்
வருகிற இடம் ஆகையாலே, இங்கு, ‘சர்வேசுவரனை அடைந்து அற்பப் பிரயோஜனங்களைக்கொண்டு அகலப்போகிறவர்கள் மக்கள் ஆகார்,’
என்றதே பொருள் ஆக வேண்டும்.
அல்லாதவர் எல்லாம் – கேவலம் ஆத்தும அநுசந்தானத்தைப் பண்ணி, சீலம் முதலான குணங்களோடு
கூடின இறைவனிடத்திலே நெஞ்சு போகாதபடி நெஞ்சை இறுகப் பிடிக்க வல்ல தாழ்ந்தவர்கள் நீங்க மற்று உள்ளார் எல்லாம்.
யாத்ருச தாத்ருச -நின்ற நின்ற நிலையிலே வாரும் -பக்தியிலே குறைந்தார்களும் மிக்கார்களும் -என்றவாறு –
அமர நினைந்து எழுந்து அலற்றுவதே கருமம் –
வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்களாய் இறைவனை நெஞ்சிலே பொருந்த அனுசந்தித்து, அவ் வனுசந்தானத்தாலே
வந்து மகிழ்ச்சி கொண்டு கிளர, அக்கிளர்த்தியோடே ஆடி அடைவு கெட ஏத்தும் இதுவே செய்யத்தக்க காரியம்.

——————————————————————————————

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10-

விலஷண விக்ரகம் உக்தன் -அநந்ய சாதனரான அநந்ய பிரயோஜனர் -அன்புக்கு பரவசமாக விக்ருதராய் –
கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்-சாதான -சாத்தியம் -அவன் இட்ட வழக்கு –
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை-தர்ச நீயமான -தன்னையே உபாய உபேயமாக பற்றுபவர்களுக்கு
-சுபாஸ்ரயமான -பூர்ண கடாஷம் -வாத்சல்யன் -நித்ய சூரிகளுக்கு போலே அனுபாவ்யம்
ஒருமை மனத்தினுள் வைத்துஉள்ளம் குழைந்து எழுந்து ஆடி-அவனே பிராப்யம் என்ற -ஆகார த்வயத்துக்கு ஈடுபட்டு நெகிழ்ந்த நெஞ்சை -கொண்டு ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து-பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–பெருமை -நாங்கள் பெற்ற பாக்கியம் கர்வம் விட்டு -பிரபல விரோதி
-அதன் அடியாக வரும் லஜ்ஜை -மேலே
நாண்-வெட்கமும் தவிர்ந்து -தாய் தந்தை பேர் சொல்ல என்ன வெட்கம்
பேதைமை தவிர்ந்து -உலகோர் சிரிப்பார் -என்று உங்களுக்கு உள்ளே இருக்காமல் -அவர்களும் திருந்த வாய்ப்பு வருமே
பர சம்ருத்தி ஏக -ஆழ்வார் போலே
பரவசப்படுவது நிகர்ஷம் என்ற நினைவு பேதைமை -நாகரிகர் நடுவில் பண்ணுவதோ –பேதைமை தவிர்ந்து -செல்வர் நாகரிகர் -ஆழ்வார்
வைகுண்ட மா நகர் மற்றது கை யதுவே -என்ற விஸ்வாசம் வேண்டுமே -குணக் கூட்டங்களை அக்ரமாகப் பேசி பிதற்றுமின்
அநந்ய சாதனர்க்கும் -பிரபன்னர் -சேஷத்வ -சாரச்ய காரிதமான பாரவச்யம் உத்தேச்யம்

கருமங்களும் கருமங்களால் அடையப்படும் பலன்களுமாகி அவற்றிற்குக் காரணமுமாய் இருக்கின்றவனை, அழகிய நீலமணி
போன்ற நிறத்தை உடையவனை, செங்கண் மாலினை, தேவர்களுக்கு உபகாரகனை ஒன்றுபட்ட மனத்திலே வைத்து
மனம் குழைந்து எழுந்து ஆடி, பெருமையும் நாணமும் தவிர்ந்து, அறிவின்மையும் நீங்கி அடைவு கெடப் பாடுமின்.
‘வைத்து குழைந்து எழுந்து ஆடி தவிர்ந்து, தீர்ந்து பிதற்றுமின்,’ என்க. ‘பேதைமை தீர்ந்து பிதற்றுமின்,’ என மாறுக.

மேலே கேவலரை நிந்தித்தார்; இப்பாசுரத்தில், ‘வேறு பிரயோஜனங்களைக் கருதாதவராய் அவன் குணங்களை அநுசந்தித்து
உரையும் செயலும் வேறுபட்டவர் ஆகுங்கோள்; உங்கட்கு இதுவே புருஷார்த்தம்,’ என்கிறார்.

கருமமும் கருமபலனும் ஆகிய –
புண்ணிய பாவ ரூபமான கர்மங்களுக்கும் கர்மபலங்களுக்கும் ஏவுகின்றவனாய்;
கருமங்கள் உண்டானாலும் கருமங்களைச் செய்கின்றவன் ஒருவன் வேணுமே? ஆதலின். ‘கருமங்களைச் செய்கின்றவனுமாயிருக்கின்றான்’ என்பார்
‘கருமமும் ஆகிய’ என்கிறார்; என்றது, ‘கருமங்களைச் செய்கின்றவன் வழியாகக் கருமங்களை நிர்வஹிக்கிறவன்’ என்றபடி.
கருமங்களைச் செய்தாலும் அவற்றிற்கு ஒருவன் பலன் கொடுக்காத போது அவை பழுதையைப் போன்று கிடக்கு மத்தனையே யன்றோ,
அவை அசேதநக்கிரியை ஆகையாலே? ஆதலால், ‘அவற்றிற்குப் பலத்தைக் கொடுக்கின்றவனுமாய் இருக்கிறான்,’ என்பார்,‘கரும பலனுமாகிய’ என்கிறார்.
ருசி உண்டாக்கி -கர்த்தாவுக்கு விக்நம் வாராமல் -இவனை நியமித்து -கர்த்தாவுக்கு அந்தர்யாமியாய் செய்விப்பனும்
செய்வார்களை செய்வேனும் யானே என்னும் –
காரணன்தன்னை –
புண்ணியங்களைச் செய்யத் தூண்டவும் பாவங்களைப் போக்கவும் அவற்றிற்குப் பலன் கொடுக்கவும் ஒரு தலைவன் வேண்டுமே?
அவற்றிற்குக் காரணனாயும் உள்ளவனை.
திரு மணிவண்ணனை –
உபாசகனுக்கு விக்கிரஹத்தைப் பற்றுக்கோடாகச் -சுபாஸ்ரயமாய் -சொல்லாநின்றதேயன்றோ? ஆதலின், அவனுக்கு உத்தேஸ்யமாய் இருந்துள்ள
விக்கிரஹத்தையுடையவனை; ஒளி மிக்கிருந்துள்ள நீலமணி போலே சிரமத்தைப் போக்குகிற வடிவையுடையவன் என்றபடி. திரு – ஒளி.
செம் கண் மாலினை –
அகவாயில் வாத்சல்யத்துக்குப் பிரகாசகமான திருக்கண்களையுடையவனை;
காரணப் பொருளுக்கு இலக்ஷணமாகத் தாமரைக்கண்ணனாய் இருக்குந் தன்மையை விதியாநின்றதேயன்றோ?
தேவ பிரானை –
அவ்வடிவழைகையும், அக்கண்ணழகையும் நித்தியசூரிகளை அனுபவிப்பிக்குமாறு போன்று என்னை அனுபவிப்பித்து,- எனக்கு உபகாரகன் ஆனவனை
ஒருமை மனத்தினுள் வைத்து –
ஒரு பிரயோஜனத்துக்காக அன்றி, நெஞ்சிலே இருக்கை தானே பிரயோஜனமாக நெஞ்சிலே வைத்து.
இதனால், மேற் பாசுரத்திலே பிரயோஜநாந்தர பரரை நிந்தித்தார் என்னுமிடம் தோன்றுகிறதே அன்றோ?
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பேதைமை தீர்ந்து பிதற்றுமின்
– இப்படி வேறு பலனைக் கருதாதவராய் நெஞ்சிலே வைத்தவாறே, அகவாய் நெகிழ்ந்து அந்த நெகிழ்ச்சியோடே இருந்த இடத்தில் இராமல் ஆடி,
‘பகவானுடைய குணங்களைக் கேட்டார் உரையும் செயலும் வேறுபட்டவராதல் விக்ருதராய் -நமக்குப் போருமோ?
‘எல்லாவளவிலும் நம் அகவாய் ஒருவர்க்கும் தெரியாதபடி மறைத்துக்கொண்டு இருக்க வேண்டாவோ?’ என்றிருக்கிற அறிவு கேட்டையும்,
இவற்றை அடையப் பொகட்டு, அடைவுகெட ஏத்துங்கோள். இதுவே உங்களுக்குப் புருஷார்த்தம் என்கிறார்.

————————————————————–

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-

பலமாக அனுபவ விரோதி நிவ்ருத்தியை அருளிச் செய்கிறார்
தீர்ந்த அடியவர் தம்மைத்-உபாயம் உபேயம் என்று தீர்ந்த அடியவர் -உறுதி உடன் –
திருத்திப் பணிகொள்ள வல்ல-பிரதிபந்தக நிவ்ருத்தி பூர்வகமாக பரபக்தி பர ஞானம் பரம பக்திகளையும் கொடுத்து நித்ய கைங்கர்யம்
ஆர்த்த புகழ்அச் சுதனை-சர்வ சக்தி உக்தன் -குனக்கூட்டங்கள் -ஆஸ்ரிதரை நழுவ விடாதவன்
அமரர் பிரானைஎம் மானை-நித்ய சூ ரிகளைப் போலே நம்மை ஆக்கும் உபகாரகன்
வாய்ந்த வளவயல் சூழ்தண்-சர்வ சம்பத்
வளம்குரு கூர்ச்சட கோபன்-நிர்வாககர்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்-நிந்தை -புகழ் இரண்டையும் நேர்மையாக அருளிய
அரு வினை நீறு செய்யுமே.-பஸ்மம் ஆக்குமே -விக்ருதராகாதாகப் பண்ணும் மகா பாபங்களைப் போக்கும் –

அவனே உபாயமும் உபேயமும் என்று உறுதி பூண்ட அடியவர்களை அவர்களுடைய தடைகளைப் போக்கி அடிமை கொள்ளும்
ஆற்றலையுடைய புகழ் நிறைந்த அச்சுதனை, அமரர் பிரானை, எம்மானை, வளப்பம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த குளிர்ந்த
வளப்பத்தையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களுள்
இப்பத்துப் பாசுரங்களும் போக்கற்கரிய தீவினைகளைச் சாம்பலாக்கும்.
தீர்ந்த அடியவர் – எல்லாவற்றையும் விட்ட அடியவர்; தீர்தல் – விடுதல். ‘தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும்’ என்பது தொல்காப்பியம்.
அச்சுதன் – அடியார்களை நழுவ விடாதவன். நீறு – சாம்பல்; ‘சாம்பரைப் பூசித் தரையிற்புரண்டு நின்தாள் பரவி’ என்பது தேவாரம்.
நேர்தல் – கூறுதல். ‘வாய்ந்த சடகோபன்’ எனக் கூட்டுக. இப்பாசுரம் இடையின எதுகையால் வந்தது.

‘இத்திருவாய்மொழி கற்றார், பகவானுடைய குணங்களை அநுசந்தானம் பண்ணினால், விகாரம் இல்லாதவராய் இருக்கைக்கு
அடியான மஹாபாவத்தை இதுதானே அடியோடு போக்கும்,’ என்கிறார்.

தீர்ந்த அடியவர்தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல –
‘பிராப்பியப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்;
அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகையாவது, அவர்களுடைய பிராப்பியப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும்,
‘முகப்பே கூவிப் பணிகொள்வானாய் குறைவற்ற கல்யாண குணங்களை யுடையவனாய்,
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருந்தாலும் -கிரியதாம் இதி மாம் வத -என்ன வேண்டுமே –
ஆர்த்த புகழ் அச்சுதனை
‘தன்னை அடைந்தாரை நழுவவிட்டான்’ என்னும் வார்த்தையை ஒரு நாளும் கேட்டு அறியாதவனை.
அமரர் பிரானை எம்மானை –
சமுசாரத்தின் வாசனை சிறிதும் இல்லாதவரான நித்தியசூரிகளைக் கொள்ளும் அடிமையைத் தன்பக்கல் ஆசை சிறிதுமின்றிக்கே
இருக்கிற என்னைக் கொண்டவனை. இதனால், அடியார்களை நழுவவிடாதவன் என்னும் தன்மை கேட்டார் வாய்க் கேட்டு
அன்றிக்கே, தம் பக்கலிலே அநுஷ்டான பர்யந்தமாகக் கண்டு சொல்லுகிறார் என்பது போதரும்.
வாய்ந்த –
பகவானுடைய குணங்களைச் சொல்லுகையும் அச் சொல்லுகை ஒழியச் செல்லாமையுமாகிற இவ்வளவே யன்றி,
பகவானுடைய குணங்களைக் கேட்டால் விகாரமில்லாமல் இருப்பாரை நிந்தித்தும், உரையும் செயலும் வேறுபடுகின்றவர்களாய்
இருப்பாரைக் கொண்டாடியும் போரும்படி அவ்விஷயத்திலே மூழ்கிச்சொன்ன. வாய்கை – கிட்டுகை.
வளம் வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சடகோபன் நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து
வயலுக்குச் சொல்லுகிற சிறப்பையும் நகரங்களுக்குச் சொல்லுகிற சிறப்பையும் உடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
அருளிச்செய்த ஒப்பற்ற ஆயிரத்திலும் இப்பத்து. பகவானுடைய குண அநுசந்தானத்தாலே உரையும் செயலும் வேறுபட்டவராய்க்கொண்டு
சொன்ன ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்து என்பார்,
‘வாய்ந்த சடகோபன் நேர்ந்த இப்பத்து’ என்கிறார்.
அருவினை நீறு செய்யும் –
பகவானுடைய குணங்களைக் கேட்டால் வேறுபடாதே திண்ணியராய் இருக்கைக்கு அடியான மஹாபாவங்களைச் சாம்பல் ஆக்கும்.

———————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பூர்வேண புருஷார்த்த சீம்னா தாஸ்யம் விதிநா -புகழும் நல் ஒருவன் -வாசா கைங்கர்யம் –தாஸ்யம் விதி
ஹர்ஷ பிரகர்ஷ விவசா-ஆனந்தம் மிக்கு
கலு பஞ்சமே –
சக ஆனந்த நைகி -சம்ப்ரம ந்ருத்தங்கள் -ஆனந்தத்துக்கு போக்குவீடாக ஆடிப் பாடி
அவிக்ருதான் -விநி நிந்த மூர்க்கான்-மூர்க்கர்களை நிந்தித்து
சௌரே குணேஸ்து விக்ருதான் பிரசசச்ய பூயக-நன்கு கொண்டாடி பாடி
ஹர்ஷ பிரகர்ஷ – பிரகர்ஷ பிரதத்வம் கல்யாண குணம் காட்டிய திரு வாய் மொழி

—————————————————————-

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

க்ராஹா க்ரஸ்த்தே மோஷே–முதலையால் பீடிக்கப்பட்ட
ஸூ ர ரிபு தமனே -அசுரர்களுக்கு தீங்கு
கோகுல தராண கார்யே -கல் மாரி
கோதார்த்தா-நீளார்த்தா–வம்பு அவிழ் கோதை -நீளா அர்த்தமே -நப்பின்னை நீளா பிராட்டி அம்சம்
சஅகித மதன -சாது சனம் -காஞ்சனை காய்ந்த
சிந்து பர்யங்க யோகே
ஷோணி பாரே வ்யாபோகே -பார் மல்கு சேனை அவித்து
ஷிதிதர வசதௌ-உயர்ந்த -வட திருவேங்கடம் வாசம்
நிர்ஜரா -ஆராத்யதாம் -அமரர்களால் தொழப் படுவான்
விச்வாரம்பேஜ -காரணம் தன்னை -விஸ்வத்துக்கு ஆரம்பம்
சௌரே –

——————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 25-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் -அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும் மாறன் பால்
தேடரிய பத்தி நெஞ்சே செய்————-25-

—————————————————————————–

அவதாரிகை –

அடிமை செய்வாரை ஸ்துதித்தும்
செய்யாதாரை நிந்தித்தும் போருகிற
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்-

அது எங்கனே எண்ணில்
இப்படி வாசிகமாக அடிமை செய்யப் பெற்ற ஹர்ஷ பிரகர்ஷத்தாலே
இவ்வடிமையைக் காற்கடைக் கொண்டு உடம்பை வளர்த்துக் கொண்டு
திரியும் கழனி மிண்டரைப் பொடிந்தும்
பகவத் குண அனுபவத்தால் வந்த களிப்பிக்கு போக்கு விட்டு
ஆடுவதும் பாடுவதும் ஆகிற அடிமை செய்யும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டாடியும்
ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற மொய்ம்மாம் பூம் பொழிலின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
மொய்ம்பாரும் மாலுக்கு -இத்யாதியாலே-

—————————————————————————-

வியாக்யானம்–

மொய்ம்பாரும் மாலுக்கு –
சமஸ்த ஜகதாகார தயா சக்தியால்
சம்ருத்தனான சர்வேஸ்வரனுக்கு
சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வங்களாலே இறே
பொய்கை முதலைக்கு சிறை விடுத்து
கைம்மாவுக்கு அருள் செய்து அடிமை கொண்டதுவும் –
கூர் வேல் கொடும் தொழிலன் போலே எறும்புக்கு வேல் -இவனது பாரிப்பு

முன்னடிமை செய்து உவப்பால் –
முன்
புகழும் நல் ஒருவனில்
வாசிகமாக அடிமை செய்த அந்த ஹர்ஷத்தாலே –

அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் –
பக்தியாலே
கைங்கர்யம் பண்ணுமவர்களை-
அதாவது –
ஓதி உணர்ந்தவர் -என்றும்
முனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர் நீர்மையினார் -என்றும்
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவார் -என்று ஆதரித்தும் –
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நருத்யந்தி கேசித் -என்றது இறே –
அன்பிலா மூடரை நிந்தித்தும் -மொழிந்து அருளும்-
பக்தி இல்லா பாவிகளான அஞ்ஞரை அநாதரித்து நிந்தித்தும்
அதாவது
எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் -என்றும்
மண் கொள் உலகில் பிறப்பார் வல் வினை மோத அலைந்து -என்றும்
அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்தது உழைக்கின்ற வம்பர் -என்றும்
தம் பிறப்பால் பயன் என்ன சாது சனங்கள் இடையே -என்றும்
என் சவிப்பார் மனிசரே -என்றும்
உத்தமர்கட்கு என் செய்வார் -என்றும் இறே அருளிச் செய்தது –
மார்க்கம் பிரதர்சய -என்னும் படி இறே
அதனுள் புகாதாரை அநாதரித்த படி
மாறன் பால் தேடரிய பத்தி நெஞ்சே செய் –
இப்படி அஞ்ஞர் ஆனவர்களை நிந்தித்து
அவர்களை அசத் கர்மங்களின் நின்றும் நிவர்த்திக்கப் பார்த்த ஆழ்வார் விஷயத்திலே
பெறற்கு அரியதான பக்தியை
மனஸே
பண்ணு-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: