தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6-
விலஷண விக்ரக விசிஷ்டன் சர்வேஸ்வரன் திருவடிகளில் பந்தவான் –பாகவதர் -பாத தூளி கொண்டு
தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!-பெற்றதால் –
பால்யை இவள் என்று வார்த்தை கேளாமல் -ஆட்டம் நிறுத்தாமல்
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;-பெருகி வருகிறது
மீளப் பரிகாரம்
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு-நீல ரத்னம் போலே -அத்தையும் விஞ்சி
நிறம் -ஆச்சார பூதன் -பக்தர்கள்
சேஷத்வ சம்பந்த ஞானம் அறிந்தவர்
தவளப் பொடி சுத்தமான
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.அணிவிக்க தொடங்கும் போதே
இவ்வணங்குக்கே-இந்த திவ்ய பெண்ணுக்கு -இதுவே ஆச்வாசதுக்கு ஹேது
அழகுக்கு ஈடுபட்ட இவளுக்கு இதிலே அகப்பட்டார் உடைய அனுபந்தமே பரிகாரம்
‘தாய்மார்களே, நீங்கள் தவிர்வது ஒரு காலம் இல்லாமலே அணங்கு ஆடுகின்றீர்கள்; வியாதியும் மேலும் மேலும் மிகுகின்றது
என்னும் இதுவேயல்லாமல் நீங்கிற்றில்லை; நீலமணி போன்ற அழகிய நிறம் வாய்ந்த மாயனுடைய அடியார்களுடைய
பாததூளியைக்கொண்டு அணிவதற்கு முயற்சி செய்தால், அதுவே இவள் உற்ற நோய்க்கு அருமருந்தாகும்;
அது ஒழிய இந்தப் பெண்ணிற்கு வேறு ஒரு பரிஹாரம் இல்லைகண்டீர்.
‘அன்னைமீர்! நீர் தணியும் பொழுது இன்றி அணங்கு ஆடுதிர்; பிணியும் பெருகும். இது அல்லால் ஒழிகின்றது இல்லை,’ என்க.
நீறு – புழுதி; தூளி. மற்று – பிறிது என்னும் பொருளில் வந்தது. கண்டீர் – முன்னிலையசை; தேற்றமுமாம்.
இந்தப் பெரிய முயற்சி எல்லாம் வேண்டா; ‘தவளப்பொடி’ என்று சொன்னது இன்னது என்று விசேடித்து,
‘அதனைச் செய்ய முயன்ற அளவிலே இவள் நோய் தீரும்,’ என்கிறாள்.
அன்னைமீர்! நீர் தணியும் பொழுது இன்றி அணங்கு ஆடுதிர் –
விலக்குவார் உளர் ஆகையாலே, ‘இன்ன போது தவிரச் சொல்லுவர்கள்’ என்று அறியாமையாலே,
உச்சி வீடு விடாதே அவர்கள் ஆடத் தொடங்கினார்கள்.
பிணியும் ஒழிகின்றது இல்லை –
காரணம் தொடர்ந்து நிற்கையாலே காரியமான நோயும் தொடர்ந்தே நிற்கின்றது.
பெருகும் இது அல்லால் –
கிண்ணகப் பெருக்குப் போலே மேன் மேலும் கிளர்ந்து வாராநின்றது.
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின் –
நீலமணிபோலே அழகிய நிறத்தையுடையனாய், குணங்களாலும் செயல்களாலும் ஆச்சரியத்தையுடைய சர்வேசுவரனுடைய
அடியார்களுடைய பாத தூளியைக் கொண்டு வந்து அணிய முயன்றால்.
‘ஒழுக்கத்தால் உயர்ந்த குலத்தில் பிறந்த பழி ஆகையாலே கழுவாயைக் கனக்க விதித்தோமத்தனை;
பாததூளியினுடைய பிரபாவத்தைப் பார்த்தால் இவையெல்லாம் வேண்டா;
முயலுதல் மாத்திரம் அமையும்,’ என்பாள்,
‘அணிய முயலின்’ என்கிறாள்.
‘தொண்டர் அடிப்பொடி ஆட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே!’ என்றாரே-குலசேகரப்பெருமாள்- அன்றோ?
நலம் தரும் காரியங்களில் நினைதல் மாத்திரமே அமையும்; தீமை தரும் காரியங்களில் வர்ஜனமே வேண்டும்.
வண்டரும் சுண்டர் ( செண்டர் என்பர் ) என்கிறவர்களுக்கு –த்ரவ்யம் சேமிக்க வைக்கும் கைங்கர்ய பரர்-ராமானுஜர் நியமித்தவர்கள் –
அரையன் சொன்ன வார்த்தைக்குப் பிள்ளை உறங்கா வில்லிதாசர் பரிஹாரம் செய்தபடியை இங்கே நினைப்பது. ‘என்றது
என் சொல்லியவாறோ?’ எனின், அகளங்க நாட்டாழ்வான் இவர்களுக்கு அமணன் பாழியிலே சிங்கத்தைக் காட்டித்
‘திருமுற்றம்; திருவடி தொழுங்கோள்,’ என்ன, அவர்களும் மெய் என்று திருவடி தொழுது,
‘அது அமணன் பாழி’ என்று அறிந்தவாறே மோஹித்து விழ,
பிள்ளை உறங்கா வில்லி தாசர் தம் ஸ்ரீ பாத தூளியை அவர்களுக்கு இட,
உணர்ந்து எழுந்திருந்த உண்மை வரலாற்றினை உணர்த்தியபடி.
திருக்கொட்டாரத்தின் அருகே கைந்நிரை கட்டிக் கொண்டிருக்கிற நாளிலே, சீயர் இத்திருவாய்மொழி அருளிச்செய்கிறாராய்
இப்பாசுரத்தளவிலே வந்தவாறே, ‘
தேர்ப்பாகனார்க்கு’ என்று நோய்க்கு நிதானம் சொன்னாளாகில், அத்தேர்ப்பாகனை யிட்டு நீக்கிக்கொள்ளாமல்,
‘மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின்’ என்று இதனைப் பரிஹாரமாகச் சொல்லுவான் என்?
நோய்க்குக் காரணம் ஒன்றும் பரிஹாரம் ஒன்றுமேயாயோ இருப்பது?’ என்று நான் (நம்பிள்ளை) கேட்டேன்;
‘மோர்க்குழம்பு இழியாதே மோஹித்துக் கிடந்த சமயத்தில் சுக்கு இட்டு ஊதிப் பின்பு மோர்க்குழம்பு கொடுத்துப் பரிஹரிப்பாரைப் போலே,
‘தேர்ப்பாகனார்க்கு’ என்ற போதே அவரைக் கொடுவந்து காட்டப்பெறாமையாலே, முற்பட இவ்வழியாலே தேற்றிப் பின்னை
அவரைக் கொடு வந்து காட்டுவதாகக்காணும்’ என்று அருளிச்செய்தார்.
(சுக்கு ஸ்லாங்க்யம் -மாறன் திரு அடி நீரை விட தமர் திரு அடி நீர் ஸ்ரேஷ்டம் என்றவாறு )
‘அழகு சீலம் முதலியவைகளாலே ஆயிற்று இவள் மோஹித்தது; நீங்களும் அழகு சீலம் முதலியவைகளிலே
தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாததூளியைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்பாள்,
‘மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு’ என்கிறாள்.
‘பொடி படத் தீரும்’ என்றபடி.
மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே –
பொடி பொடி யாகத்தீரும் என்றுமாம் –
இஃது அல்லது பரிஹாரம் இல்லாதபடியான மேன்மையை உடைய இவளுக்கு இதனையே பரிஹாரமாகப் பாருங்கோள்.
——————————————————————————
அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-
சத்தை அழிந்து -ஆச்சர்ய பூதன் சர்வேஸ்வரன் -சேஷ பூதர் வைதிக அக்ரேசர் -ஆஸ்ரயிங்கோள்
அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,-நிஷித்த -வஸ்துக்கள்
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக் கப்படும் அன்னைமீர்!தேவதா ஆவேசம் -தலை விரித்து -ஆட
உணங்கல்-உலர்த்திய நெல் – கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?-உணற்ற போட்டும் நெல் -கழுதை உதடு
ஆட்டம் கண்டு கொண்டு இருந்தால் என்ன பயன் -சாப்பிட்டதை பார்த்தேன் –
சாப்பிடப் போகிறது பார் என்றாயே -அதனால் பார்த்தேன்
ஸ்வரூபம் நாசம் ஆகும் என்றவாறு -சத்தையே அழியும்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே
சுணங்கை -பாட பேதம் -துணங்கை–கூத்து பெயர் -சுணங்கை–சூர்ணம்
மாயப் பிரான்-ஆஸ்ரித குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்து உபகரித்தவன்
மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே-வைதிக அக்ரேசர் பாகவதர்களை வணங்கும் படி
‘இப்பெண்ணினுடைய நோய்க்கு அரிய மருந்தாகும் என்று நினைத்து, அங்கே ஓர் ஆட்டினையும் கள்ளினையும் வைத்துத் துதித்துத்
துணங்கை என்னும் கூத்தினை ஆடி உங்களுடைய தோள்களை வருத்துகின்ற தாய்மார்களே! காய்கின்ற நெல் கெட,
அதனைத் தின்னுகின்ற கழுதையினுடைய உதடு ஆடுகின்ற ஆட்டத்தைக் கண்டு கொண்டு இருப்பதனால் பயன் யாது?
மாயப்பிரானுடைய அடியார்களாகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை வணங்குங்கோள்,’ என்றவாறு.
பராய் – துதித்து. ‘துணங்கை’ என்பது, கூத்து வகைகளுள் ஒன்று; ‘துணங்கை – சிங்கி; என்னை?
‘பழுப்புடை இருகை முடக்கி யடிக்க, தொடக்கிய நடையது துணங்கை யாகும்,’ என்பது (சிலப்.) அடியார்க்கு நல்லாருரை.
உணங்கல் – காயவைத்துள்ள நெல். வேதம் வல்லார் – வேதங்களிலே வல்ல ஸ்ரீ வைஷ்ணவர்கள்.
‘மற்றைத் தேவர்களைப் பற்றினால் இவளுடைய அழிவே பலித்துவிடும்; இவள்
பிழைக்க வேண்டி இருந்தீர்கோளாகில், ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றுங்கோள்,’ என்கிறாள்.
அணங்குக்கு அரு மருந்து என்று –
தெய்வத்தன்மையையுடைய இவளுக்குத் தகுதியான பெறுதற்கு அரிய மருந்து என்று.
‘இவள் வேறுபட்ட சிறப்பினையும் அறிந்திலீர்கோள்’ என்பாள், ‘அணங்குக்கு’ என்கிறாள்.
அணங்கு –
தெய்வப் பெண்; ‘சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர்’ என்னக்கடவதன்றோ?
அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் –
தாழ்ந்த பொருள்களைத் துதித்து. பராய் – பராவி; பிரார்த்தித்து.
துணங்கை எறிந்து –
துணங்கை என்பது ஒரு கூத்து விசேடம். எறிதல் – இடுதல். ‘ஆடல் இட்டு’ என்றபடி.
துணங்கைக் கூத்து என்று கைதட்டி ஆடுவதொரு கூத்து உண்டு; அதனைச் சொல்லிற்றாதல்;
அன்றிக்கே, மஞ்சட் பொடியைக் கையிலே பிடித்து ஒருவர்க்கு ஒருவர் எறிந்து ஆடுவது ஒன்று உண்டு. அதனைச் சொல்லிற்றாதல்.
நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் –
பகவானிடத்தில் செய்த அஞ்சலி மாத்திரமும் ‘இறைவனுடைய நீர்மையாலே மிகை’ என்று இருக்கக்கூடிய
நீங்கள் படும் எளிவரவே இது! ‘தொழுது எழுதும் என்னும் இது மிகை’ என்றே அன்றோ இவர்கள் இருப்பது?
சம்பந்தம் உணர்த்தும் பதிகம் -தோழி -பிரணவார்த்தம்
-உபாய நிரபேஷன்-கை கூப்புச் செயலும் கூடாதே -நமஸ்-தாயார் நிலை -என்பதால் -இப்படி இருக்கக் கடவ நீங்கள் என்றவாறு
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன் –
ஜீவனத்திற்குச் சாதனமாய் இருக்கின்ற நெல்லானது அழிந்துபோகும்படிக்குத் தகுதியாக, அதனைத் தின்னுகிற கழுதையினுடைய
உதட்டின் செயலைக் கண்டிருந்தால் என்ன பிரயோஜனம் உண்டு?
அப்படியே இவளைக் கொண்டு வாழ்வதற்கு இருக்கிற நீங்கள் இவளுக்கு அழிவினை உண்டாக்கக் கூடியதான
வேறு தேவதைகளின் சம்பந்தமுடையாருடைய செயல்களைக் கண்டுகொண்டிருக்கிற இதனால் என்ன பிரயோஜனம் உண்டு?
பிரயோஜனம் இல்லாமை மாத்திரமே அன்று; அழிவே சித்திப்பது.
அன்றிக்கே,
உணங்கல் கெட – இவளுடைய உணங்குதல் கெட; ‘இவள் இளைப்புத் தீர’ என்றபடி.
கழுதை – பேயை, கழுது – பேய். உதடு ஆட்டம் கண்டு என் பயன் – நீங்கள் ஆடும் கள்ளும் பிரார்த்தித்துக் கொடுக்க,
அது அதனை உண்ணும்போது அதனுடைய உதடு ஆடுகிறபடியைக் கண்டிருப்பதனால் என்ன பயன் உண்டு?’ என்று
ஐயன் திருக்குருகைப் பெருமாள் அரையர் நிர்வஹிப்பர். ‘கழுது பேயும் பரணும்’ என்னக் கடவதன்றோ?
‘இதில் பிரயோஜனம் இல்லையாகில், பிரயோஜனத்தினை உடையதாய் இருக்குமதனைச் சொல்லாய்,’ என்ன,
வணங்கீர்கள் –
அவர்கள் திருவடிகளிலே விழுப்பாருங்கோள். ‘‘அவர்கள்’ என்றது யாரை?’ என்ன,
மாயப்பிரான் தமர் வேதம் வல்லாரை –
ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனுடைய குணங்களிலே ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை.
‘எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் யானே,’ என்றும்,
‘எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ என்றும்,
(ஒத்தின் பொருள் முடிவும் இதுவே )
எல்லாச்சொற்களுக்கும் எவரிடத்தில் தாத்பரியமோ அந்தக் கோவிந்தனை வணங்குகிறோம்,’ என்றும் சொல்லுகிறபடியே
வேத தாத்பரியம் கைப்பட்டிருக்குமவர்கள் ஆதலின், ‘வேதம் வல்லார்’, என்கிறது.
‘வேதம் வல்லார்’ என்று இங்குக் கூறுதற்குக் கருத்து என்?’ என்னில்,
‘வேறு தெய்வங்களின் சம்பந்தமுடையார் புகுந்து சிகிச்சை செய்வதற்குப் பரிஹாரமே அன்றோ இவள் சொல்லப் புகுந்தது?
அதில்,‘அவனை ஒழிந்தது ஒரு தேவதைக்குத் தனித்து ஓர் உயிர்ப்பு இல்லை;அவனே உத்தேஸ்யம்,’ என்று
இருக்குமவர் காலிலே விழுங்கோள்,’ என்று கூறுதல். (பரன் திறம் அன்று பல்லுலகீர் தேவம் ஒன்றும் இல்லையே )
‘தேவதைகள்தோறும் தனித்தனியே காரியம் உண்டு’ என்று இராமல்,
‘எல்லாச் சொற்களும் ஒரே பொருளைச் சொல்லுவது’ என்று இருக்குமவர்களைப் பற்றப் பாருங்கோள் என்கிறாள்’ என்றபடி.
—————————————————————————————————
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-
பாகவத புருஷகார மாகக் கொண்டு -முதலில் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்ற சொல்லி –
இதில் இவர்களை முன்னிட்டு சூரி சேவ்யனைப் பற்ற சொல்கிறாள்
வேதம் வல்லார்களைக் கொண்டு -வேத தாத்பர்யம் அறிந்த -உபாய நிரபேஷன் என்று அறிந்து -கைங்கர்யமே புருஷார்த்தம்
விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து,-நித்ய சூரிகள் -சேவ்யன்
இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,-விலஷண நோய்
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,-ஸ்வரூப ஹானி -இதர தேவதைகள் சப்தங்கள் –
அகர்தவ்யங்கள் செய்து –
நடுவே நடுவே ஆராதனா சாமக்ரியை -தூவி
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–முழவு வாத்ய கோஷம் பண்ணி
இவள் உடன் அனுபந்தம் பாசம் உடைய நீங்கள் -பிரபன்ன குடிக்கு இழுக்கு ஆகுமே
‘வேதத்திலே வல்லவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைக்கொண்டு நித்தியசூரிகளுக்குத் தலைவனான சர்வேசுவரன் திருவடிகளை வணங்கி,
இவளுடைய நோயாகிய இதனைத் தீர்த்துக் கொள்ளாமல், சிறு தெய்வங்கள் பக்கல் சென்று குற்றமுள்ளவற்றைச் சொல்லிச் செய்யத்
தகாத காரியங்களைச் செய்து, கள்ளினை வீட்டிற்குள்ளே கலந்து தூவிக் கீதத்தோடு கூடின முழவென்னும் வாத்தியத்தை அடித்து
நீங்கள் அணங்கு ஆடுதல் இக்குடிக்கு இழுக்கேயாம்,’ என்றவாறு.
‘வேதம் வல்லார்களைக் கொண்டு பாதம் பணிந்து தீர்த்துக்கோடல் தக்கது,’ என்க. அங்ஙனமன்றி,
‘போய்ப் பறைந்து செய்து தூவி ஆடுதல் கீழ்மையாம்,’ என்க. ஏதம் – குற்றம். பறைந்து – சொல்லி. கலாய் -கலந்து.
‘ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு சர்வேசுவரன் திருவடிகளிலே சரணம் புக்கு இவளுடைய
நோயைத் தீர்த்துக்கொள்ளுதலை விட்டு, புன்சிறு தெய்வங்களைப் பற்றுதல் உங்களுக்குக் கீழ்மையை விளைக்கும்,’ என்கிறாள்.
வேதம் வல்லார்களைக் கொண்டு –
‘சர்வேசுவரனே பலமும் பலத்தை அடைதற்குரிய வழியும்,’ என்கிற வேத தாத்பரியம் கைப்பட்டவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு என்றது,
‘வேறாக, ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்,’ என்கிறபடியே,
அவர்கள் காலிலே விழப்பெறில் விரைவில் நோய் தீர்தல் கூடும். அது கூடாதே அன்றோ? -இது உலகில் நடை பெறாதே –
தம்மைப் போன்றவர்களாக நினைத்திருக்கையாலே ருசி விசுவாசங்கள் அவர்கள் பக்கல் கனக்கப் பிறவாதே அன்றோ?
ஆன பின்னர், அவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு அவனைப் பற்றுதற்குப் பாருங்கோள் என்கிறாள்,’ என்றபடி.
இங்கு இருக்கும் நாள்களுக்குப் புருஷகாரமாக முமுக்ஷூக்கள் உளர்; அங்குதானே நித்தியசூரிகள் உளரே அன்றோ?
‘அந்த அமாநவன் முத்தர்களைப் பரம்பொருளிடம் சேர்ப்பிக்கின்றான்,’ என்கிறபடியே,
அவர்கள் கொடுபுக்கு இருத்தலே அன்றோ அவ்வோலக்கத்தில் இருப்பது?
வேதம் வல்லார்களைக் கொண்டு சர்வேசுவரன் திருப்பாதம்’ என்னாதே,
‘விண்ணோர் பெருமான் திருப்பாதம்’ என்று அருளிச்செய்வதனால்
நித்தியசூரிகளும் புருஷகாரமாய் இருப்பவர்கள் என்பது தோன்றுகிறது;
அதனை விளக்குகிறார், ‘இங்கிருக்கும்’ என்று தொடங்கி.
இவர்கள் இருவரும் புருஷகாரமாய் இருப்பது, முமுக்ஷூத்வ அவஸ்தையிலும், முத்த அவஸ்தையிலும் ஆம்.
‘அவர்கள் புருஷகாரமாய் இருப்பர்களோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அந்த அமாநவன்’ என்று தொடங்கி. இது, சாந்தோக்யஉபநிட. 4 : 15.
அமாநவனைச் சொன்னது, நித்திய சூரிகளுக்கும் உபலக்ஷணம்.
இங்கு, ‘முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள’ என்ற தமிழ் மறை அநுசந்திக்கத் தகும். இது, திருவாய். 10. 9 : 8.
விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி திருவடிகளிலே பணிந்து. இவள் நோய் இது தீர்த்துக்கொள்ளாது –
நோய் கொண்டவள் இவள்; நோய்தான் இது; இதற்குத் தகுதியான பரிஹாரத்தைச் செய்யாமல்.
போய் –
நம்முடைய நிலைக்கு மிக்க தூரமாய் உரியது அல்லாதது ஒன்றிலே கைகழியப் போய்.
ஏதம் பறைந்து –
உங்களுக்குக் குற்றமானவற்றை நீங்கள் சொல்லி.
அல்ல செய்து –
செய்யக் கூடியது அல்லாததைச் செய்து.
கள் ஊடு கலாய்த் தூஉய் –
அசுத்தமான பொருள்களைக் கொண்டு வீடு முழுதும் கலந்து தெளித்து. தூய்மை இல்லாத பொருள்களைத் தீண்டுதலைப்
போன்றது ஒன்றே அன்றோ, வேறு தெய்வங்களினுடைய சம்பந்தமும்? ‘விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து இவள் நோய்
இது தீர்த்துக்கொள்ளாது’ என்கையாலே, அவனைக் கொண்டு பெறுதற்குப் பாராமல், அவனுக்குப் புறம்புமாய் யான் எனது என்னும்
செருக்குகளை உட்கொண்டதான கிரியா கலாபங்களாலே பெறுதற்குப் பார்க்கையும் அதனைப் போன்றது ஒன்றே ஆயிற்று என்பதனைத் தெரிவித்தபடி.
அற மேலாய் இருக்கும் மருந்தே அன்றோ இவள் சொல்லிற்று? அதனை அன்றோ இவர்கள் விரும்புதல் இன்றி நிற்கிறது?
கீதம் முழவு இட்டு –
தண்ணிதான கீதத்தோடே கூடின முரசுகளை ஒலிப்பித்து.
நீர் அணங்கு ஆடுதல் –
பகவானுடைய குணங்களை அனுபவிக்கின்ற அனுபவத்தாலே ‘உண்டு களித்தேற்கு உம்பர் என்குறை?’ என்னக்கூடிய
நீங்கள் தெய்வம் ஏறினவர்களாய்க்கொண்டு ஆடுவது.
கீழ்மையே –
‘சாலத் தண்ணிது. உங்கள் அளவில் போகுமது அன்று; உங்கள் வழிக்கும் கொத்தை’ என்றபடி. ஊடு -உள்ளே.
———————————————————————————-
கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9-
ஸ்வ தந்தரமாக பண்ணும் நிஷ் பிரயோஜனமான -பார்க்க மாட்டோம் –
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளில் மங்களா சாசனம் பண்ண வேண்டும் என்கிறாள்
கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்-நிகர்ஷம் -நீசன் சொல்லும் படி வாத்ய அனுவ்ருத்தி பண்ணி
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;தேவதாந்திர உத்கர்ஷம் சொல்லி -நிஷ்பலம்
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;சப்த சப்த சப்தச -ஷேமம்-இதுவே –
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.-ஸ்வரூப பிராப்தம்
-மரபை மாற்றாமல் சுலபன் -திருவடிகளை மங்களா சாசனம் பண்ணுமின் –
‘அங்குத் தாழ்ந்த மகனாலே அடிக்கப்படுகின்ற முழவின்கீழே இருந்துகொண்டு, குற்றமுள்ளன பலவற்றைச் சொல்லிக்கொண்டு,
நீங்கள் உங்கள் கீழ்மையினாலே அணங்கு ஆடுகின்ற பொய்யை நான் காணமாட்டேன்; எழுவகைப்பட்ட பிறப்புகளுக்கும் பாதுகாவலாம்;
இதுவே இந்நோய்க்கும் மருந்தாகும்; ஆதலால், முறையாகக் கண்ணபிரானுடைய திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கள்,’ என்றவாறு.
‘நீர் கீழ்மையினால் அணங்கு ஆடும் பொய்’ எனக் கூட்டுக. ‘கண்ணபிரானுடைய கழல் உன்னித்து வாழ்த்துமின்,’ என மாறுக. நாழ்மை : குற்றம்.
‘நீங்கள் செய்கின்ற பயன் இல்லாத காரியங்களை நான் காணமாட்டேன்; பிழைக்க வேண்டும் என்று
இருந்தீர்கோளாகில், கிருஷ்ணன் திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கள்,’ என்கிறாள்.
கீழ்மையினால் –
உங்கள் தண்மையினாலே; இவர்களுக்குத் தண்மையாவது, இராஜச தாமச குணங்களாலே மறைக்கப்பட்டிருத்தல்.
‘ஆகையால் அன்றோ இக்காரியம் செய்கிறார்கள்?’ என்றபடி.
அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின்கீழ் –
‘இன்ன இடத்தான், இன்னான்’ என்று சொல்ல ஒண்ணாத ஒரு சண்டாளன் அடிக்கிற முரசின் கீழே புக்கிருந்து.
நாழ்மை பல சொல்லி –
அவற்றுக்கு இல்லாத ஏற்றங்களைப் பலவும் சொல்லி; என்றது,
‘உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்’ என்று சர்வேசுவரனைச் சொல்லுமாறு போலே,
‘இவன் இன்னது செய்தான், இன்னது செய்தான்,’ என்று சொல்லா நிற்பர்களேயன்றோ? – அதனைத் தெரிவித்தபடி.
நாழ் என்பது குற்றத்திற்கும் இல்லாததனைச் சொல்லுகைக்கும் ‘நான்’ என்று அபிமானித்திருக்கைக்கும் பேர்.
நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் –
நீங்கள் தெய்வம் ஏறினவர்களாய்க்கொண்டு ஆடுகின்ற இப்பொய் என்கண்களுக்கு ஒரு பொருளாய்த் தோற்றுகிறது இல்லை.
‘பலவகைப்பட்ட பொருள்கள் இல்லை,’ -ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொள்ளாத வஸ்துவே இல்லையே -என்கிறபடியே,
‘அவனை ஒழிந்தது ஒரு தெய்வத்திற்கு அவன் துணை இன்றித் தானே ஒரு பொருளாய் இருக்கும் தன்மை உண்டு,’ என்று
இருக்கில் அன்றோ அவர்கள் செய்வது ‘மெய்’ என்று தோற்றுவது?
‘நாங்கள் செய்கிறவை பொய்யாகில், நீ சொல்லுகிறது மெய்யாய் எவ்வளவு பலிக்கும்?’ என்ன
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் –
எல்லாப் பிறவிகளிலும் காவலாம்; ஒரு நன்மை உண்டானால், அதனை
ஏழ் ஏழாகச் சொல்லக் கடவதன்றோ? அதனால், ‘ஏழ்மை’ என்கிறாள்.
அன்றிக்கே,
‘தண்ணிதான பிறவி’ என்னலுமாம். ஏழ்மை – தண்மை. ‘நாங்கள் பிறவிகளிற் காவலாமதுவோ தேடுகிறது?
இவள் நோய்க்குப் பரிஹாரம் அன்றோ? அதனைச் சொல்லாதே மற்று ஒன்றைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘
ஆகில், சம்பு அறுத்து ஆர்க்கைக்குப் போக வேண்டுமோ?
இந்நோய்க்கும் ஈதே மருந்து –
அடி பற்றின மருந்து அன்றோ? ஊழ்மையில் – முறையிலே; ஊழ் – முறை.
அன்றிக்கே,
நீங்கள் செய்கிறவை போலன்றிக்கே, முறையிலே செய்ததாகவுமாம்.’
கண்ணபிரான் கழல் உன்னித்து வாழ்த்துமின் –
‘உபகாரகனான கிருஷ்ணன் திருவடிகளை வாழ்த்தப் பாருங்கோள். ‘அடிக்கழஞ்சு பெறும் மருந்தேயன்றோ அது?
அது செய்யுமிடத்தில் எல்லாரும் ஒக்க நினைத்து வாழ்த்தப்பாருங்கோள்,’ என்பாள், ‘வாழ்த்துமின்’ எனப்
பன்மை வாய்பாட்டாற் கூறுகின்றாள்.
இப்படிச் செய்யவே, எல்லாப் பிறவிகளிலும் பாதுகாவலாய் இவள் நோய்க்கும் பரிஹாரமாம்;
மேலும், செய்யத்தக்கதனைச் செய்தவர்களும் ஆவோம்.
‘பகவான் தம்மை நினைத்த அளவில் மங்களத்தைக் கொடுக்கிறார்,’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம்.
—————————————————————–
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-
காட்டு மன்னார் அங்கு –நாட்டு மன்னார் இங்கு –ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன் –
ஆழ்வார் திரு உள்ளம் அறிந்து மா முனிகள் -சமர்ப்பித்து அருளினார்
கபிஸ்தலம் -பாசுரமும் முன்னோர் சமர்ப்பித்தவை -நேராக பெயர் இல்லாமல் -ஆற்றங்கரை கிடந்த -என்பதையே கொண்டே –
பொழுது போக்கும் ஆழ்வார் அருளிச் செயல்களிலே கொண்டவர்கள் இவர் –
உலகம் ஏத்தும் –குண பால -கிழக்கே -திருக்கண்ணபுரம் -காட்டு மன்னார் கோயில் -கிழக்கே யானையாக -பெரியவாச்சான் பிள்ளை –
நீங்கள் ஸ்துதித்த போதே ஆச்வத்தையாகும் -நித்ய வேத பிரதிபாத்யனான -மன்னப் படும் மறை வாணன்
பரமை காந்தியான இவள் -ஏக அந்தம் ஒன்றே முடிவு
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;-நினைக்க மாட்டாள் -தொழுவது மட்டும் இல்லை என்று இல்லை
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!-பரிவாலே கலங்கி அவைஷ்ணவ வியாபாரம்
உங்களுக்கு அபிமதம் -பகவத் பரிசர்யா உபகரணம் அன்றோ உங்கள் தோல் விசித்ரா தேக சம்பந்தி
ஈஸ்வரனுக்கு அன்றோ நிவேதனம் பண்ண வேண்டும்
குலைத்து ஆடும்படி படா நின்றன
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி-வேதம் பிரதானதையா பிரதிபாத்யன் -கொடுத்தவனும் அவனே சொல்லப்படுபவனும் அவனே
ஆஸ்ரிதர்க்கு நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்
தஷிண த்வாரகை -பிரசித்தி -சதஸ்-பிராபல்யம் புண்ய ஷேத்ரங்களுக்கு –
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.-சொன்னால் -சம காலத்திலேயே -பிரபுத்தியையாய் தொழுது -ந்ருத்தம் பண்ணுவாள் –
‘சர்வேசுவரனை அல்லாமல் வேறு ஒரு தெய்வத்தை நினைந்து வணங்கமாட்டாள் இவள்; இங்ஙனமிருக்க, உங்களுக்கு
விருப்பமானவற்றையெல்லாம் சொல்லி, உங்களுடைய தோள்களை வருத்திக்கொள்ளுகின்ற தாய்மார்களே!
என்றும் நிலைத்திருக்கின்ற வேதங்களால் சொல்லப்படுகின்றவனும் வளப்பம் பொருந்திய துவாரகைக்கு அரசனுமான
சர்வேசுவரனைத் துதி செய்யுங்கள்; துதி செய்த அளவிலே அவனைத் தொழுது ஆடுவாள்,’ என்றவாறு.
‘உன்னித்துத் தொழாள்’ என்க. ‘சொல்லிக் குலைக்கப்படும் அன்னைமீர்’ என்க. மன்னுதல் – நிலை பெறுதல்
‘இவளுக்குக் கிருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்தியத்தை நினைத்து,
அவனை ஏத்துங்கோள்; இவள் பிழைப்பாள்,’ என்கிறாள்.
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் –
தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அறியாள் இவள்.
‘தொட்டில் பருவமே தொடங்கிப் பரம சினேகிதராய் இராநின்றார்’ என்கிறபடியே,
பிறை தொழும் பருவத்திலும் பிறை தொழுது அறியாள்.
பிறரை தொழுது அறியாள் -சந்தரன் தலையில் கொண்ட ருத்ரனை தொழ மாட்டாள் என்றுமாம் —
பிறை பல் முளைக்கும் பொழுதும் என்றுமாம் –
‘முலையோ முழுமுற்றும் போந்தில; பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே!’ என்று
நீங்கள் ஆச்சரியப்படும்படி அன்றோ அவ்விளமைப்பருவத்திலும் இருந்தது? –
சாதனா பக்தி இல்லை சாத்திய பக்தியும் இல்லை -சஹஜ பத்தி –
இனி, ‘இப்போது பர்வதத்தை விட்டுப் பதர்க்கூட்டத்தைப் பற்றுமோ? ஆகையாலே,
இன்னார்க்கு இன்னது பரிஹாரம் என்று ஒன்று இல்லையோ? அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ?
முழங்கால் தகர மூக்கிலே ஈரச்சீரை கட்டுமாறு போலேயன்றோ நீங்கள் செய்கிற பரிஹாரம்?
வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள் என்றபடி
‘அநந்ய தைவத்வம் –
‘வேறும் பற்றக்கூடிய ஒரு தெய்வம் உண்டு, அது காப்பாற்றுகிறது,’ என்று நினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு.
ஸஹபத்நியா –
என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர் புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கைநீட்டப் புகுமத்தனை போக்கி,
பெரிய பெருமாள் தாம் உத்தேசியமாகப் புக்கு அறியேன். (ஸஹ பதன்யா விசாலாக்ஷி நாராயணன் உபகமனத் )
இயம்க்ஷமாச –
இராவணன் பலவாறாகப் பிதற்றிய வார்த்தைகளையும் இராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும்
பொறுத்திருந்ததும் ‘அவருடைய ஓர் இன்சொல் கேட்கலாம்’ என்று கண்டாய்.
பூமௌச ஸய்யா –
‘இத் தரைக்கிடை கிடந்ததும் தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘அவருடைய மடியில் இருப்பு
ஒருகால் சிந்திக்குமோ?’ என்னுமதனாலே கண்டாய்.
நியமஸ் தர்மமே –
‘காப்பாற்றும் தர்மம் அவர் தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது,
‘பத்துத் தலைகளையுடையவனே! எரிக்கப்படுவதற்குத் தகுந்தவனே! எனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய ஒளியால்
உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று இராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை நினைத்து’ என்றபடி.
பதிவிரதாத்வம் –
‘சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்,’ என்றவருடைய விரதம் ஒழிய,
‘எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.
விபலம் மம இதம் –
தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது போலே?’ என்னில்,
மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ –
‘நான் என்னை மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்றவர்க்கும் உண்டே அன்றோ மனிதத் தன்மை?
அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது,
‘தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’ என்னில்,
மம இதம் –
‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் பிராட்டி.
நும் இச்சை சொல்லி –
உங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி; என்றது, ‘பொருளின் உண்மையைப் பார்த்தாலும் இவளைப் பார்த்தாலும்
வேறு தெய்வங்களின் சம்பந்தம் பொறாததாய் இருந்ததே அன்றோ? இனி உள்ளது உங்களுக்குத் தோற்றிய
வார்த்தைகளைச் சொல்லுகையாயிற்றே அன்றோ?’ என்றபடி.
நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் –
துர்விருத்தர் செய்வதை விருத்தவான்கள் செய்வர்களோ?
‘தோள் அவனை அல்லால் தொழா’ என்றே அன்றோ நீங்கள் சொல்லுவது?
ததேக சேஷத்வம் –விருத்தவான்கள் -பஞ்ச சம்ஸ்காரம் பண்ணாத துர்வ்ருத்தர்கள் –
ஆதலால், நீங்கள் இவற்றுக்கு வேறுபட்டவர்களாமவர்கள் அல்லிரே,’ என்றபடி. ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்ன,
மன்னப்படு மறைவாணனை –
நித்தியமான வேதங்களாலே சொல்லப்படுகையாலே வந்த ஏற்றத்தினையுடையவனை;
மன்னப்படுதல் -நித்தியமாய் இருத்தல். என்றது, மனிதனுடைய புத்தியினாலே உண்டானவை அல்லாமையாலே,
வஞ்சனை முதலான தோஷங்கள் இன்றிக்கே, முன்னே முன்னே உச்சரித்துப் போந்த கிரமத்திலே
பின்னே பின்னே உச்சரித்து வருகின்ற தன்மையைப் பற்றச் சொன்னபடி.
அன்றிக்கே
‘மன்னுகையாவது, பயிலுதலாய், ஓதுகின்ற விதியின்படி வந்துகொண்டிருக்கும்
வேதங்களால் சொல்லப்படுகின்றவனை’ என்னுதல்.
ஆக, ‘ஆகமம் முதலானவைகளில் சொன்னவற்றைக்கொண்டோ பரிஹரிக்கப் பார்ப்பது?
வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி
அஷட் கரணம் கேட்காமல் மூன்றாவது ஆள் கேட்காமல் காலஷேபம் -வேத அத்யாயனம் –
வண் துவராபதி மன்னனை –
கேட்டார் வாய்க் கேட்டுப் போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து அவதரித்தவனை.
‘நீரிலே புக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே, தேர்ப்பாகனார்க்கு மோஹித்த இவளை,
வண் துவராபதி மன்னன் திருநாமத்தைச் சொல்லித் தெளியச் செய்யப் பாருங்கோள்,’ என்பாள்,
‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்கிறாள்.
32 சேவை -மூல மூர்த்தி முதல் சேவை பரவாசு தேவன் -உத்சவர் -32 சேவை ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் –
32 சேவைகள் கொடுத்த -வண்மை –வண்டு வராத -செண்பகா ஷேத்ரம் –
ஏத்துமின் –
வாய் படைத்த பிரயோஜனம் பெற ஏத்துங்கோள். ‘
சீர் பரவாது, உண்ண வாய்தான் உறுமோ ஒன்று?-பெரிய திருவந்தாதி -51-’ என்று அன்றோ நீங்கள் சொல்லுவது?
மிண்டர் பாய்த்து உணும் சோற்றை விலக்கி நாயக்கி இட்டு -இவர்களுக்கு புல்லைத் திணிமின் -திருமாலை –
ஏத்துதலும் தொழுது ஆடும்
– நீங்கள் செய்யத்தகும் காரியத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகுமளவே அன்று;
‘பிறகு அவன் அச்சம் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே
ஏத்தின உடனேயே தெளிவையுடையவளாய்த் தொழுது ஆடுவாள். உணர்த்தி உண்டானால் செய்வது அது போலே காணும். என்றது,
‘தரித்து ஆடுதற்குத் தக்க ஆற்றலையுடையவளும் ஆவாள்,’ என்றபடி.
விழிக்கும்- தொழுது ஆடு என்னாமல் –சொல்ல வேண்டியது இல்லை இவளுக்கு –
உணர்த்தி உண்டானால் இத்தையே செய்பவள் அன்றோ -தரித்து -வியாபரிப்பாள்-என்றவாறு –
மன்னார் குடி ஸ்ரீ ராஜமன்னார் சமர்ப்பித்து அருளினார் மணவாள மா முனிகள்-தெற்கு த்வாராபதி
—————————————————-
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே.–4-6-11-
விக்ருதராய் அனுபவிப்பார் பகவத் விச்லேஷாதி துக்கம் அடையார்
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த-அஞ்சலி பண்ணி -சேஷத்வ ஞானத்தால்
உஜ்வலமான மாலே மணி வண்ணா -கைங்கர்யமாக தொழுவதும் ஆடுவதும்
விஸ்லேஷ துக்க ரூப வியாதி ஷமிக்கும் படி
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-தேவதாந்திர ஸ்பர்சம் வராத குறை இல்லாத
பகவத் சேஷத்வ பிரதை-ஸ்வரூபாதிகள் ஒன்றும் குறை இல்லாத பகவத் பிரபாவம் சொல்லும் திருவாய்மொழி
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்-வெறி யாட்டும் துறை -அர்த்த அனுசந்தாபம் செய்து
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே-துக்கம் இல்லாத ஸ்வ பாவம் –
பிரேம பாரவச்யத்தால் -பகவத் விஸ்லேஷ துக்கம் -தந் நிவர்த்தமாக தேவதாந்திர ஸ்பர்சம் பெரும் பெரிய துக்கமும் வாராது
மயங்கின நிலையிலும் தேவதாந்திர ஸ்பர்சம் வராது என்றவாறு
நல்லது பண்ணுவதாக நினைத்து தப்பு -திருதராஷ்ட்ரன் கைகேயி போலே இந்த திருத் தாயாரும் -செய்தாளே
‘பரிசுத்தமான நீலமணி போன்ற நிறத்தையுடைய சர்வேசுவரனுக்குத் தொழுதும் ஆடியும் அடிமை செய்து நோய் தீர்ந்த,
குற்றமில்லாத இயல்பான புகழையுடைய வளப்பம் பொருந்திய திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபராலே சொல்லப்பட்ட
குற்றம் இல்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள் வெறியாட்டுச் சம்பந்தமான இவை பத்துப் பாசுரங்களையும் தொழுது
ஆடிப்பாடுதற்கு வல்லவர்கள் துக்கத்தின் தன்மையும் இல்லாதவர்கள் ஆவார்கள்,’ என்றவாறு.
‘தொழுது ஆடித் தீர்ந்த சடகோபன்’ என்றும், ‘வழுவாத தொல்புகழையுடைய சடகோபன்’ என்றும் தனித்தனியே கூட்டுக.
‘பாட வல்லார் துக்கம் இலர்,’ என்க. சீலம் – தன்மை.
‘இத்திருவாய்மொழியை மனப்பூர்வமாகக் கற்க வல்லவர்கள், தாம் பிரிந்து பட்ட துன்பம் படாமல் பலத்திலே சேர்வர்,’ என்கிறார்.
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த –
இதற்கு, ‘மோஹித்தவள் சிறிது தெளிந்தவாறே, மோர்க்குழம்பு குடித்தாள், தரித்தாள், கண் விழித்தாள்,
வார்த்தை சொன்னாள்,’ என்பார்களே அன்றோ?’ அது போன்று காணும்,’ என்று அம்மங்கி அம்மாள் பணிப்பர்.
பின்பு பிறந்த மிகுந்த மயக்கத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது.
மேல் ‘சீலம் இல்லாச் சிறியன்’ என்னும் திருவாய்மொழி யாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவே பிறந்தது.
இந்தத் தோழி தானும் அறிந்திலள் காணும் பகவானுடைய பெருமையை. அவர்களை ‘ஏத்துங்கோள்’ என்றாளே அன்றோ?
அது வேண்டாதே, தான் ‘ஏத்துங்கோள்’ என்ற இது தானே அமைந்தது இவள் உணருகைக்கு.
பகவானுடைய பெருமை புறம்புள்ளார்க்கு அறிய ஒண்ணாததைப் போன்று, உட்புகுந்தாராய் அறிந்தாராய்
உள்ளவர்கட்கும் ‘இவ்வளவு’ என்று அறிய ஒண்ணாததாய்க் காணும் இருப்பது.-தனக்கும் தன் தன்மை அறியாதவன் அன்றோ –
முன்பு மயக்கம் -அழுகை இல்லை
தெளிந்தாள்-சம்ச்லேஷம் இல்லையே என்று கூவுவாள் அடுத்த பதிகம் -நடுவு நிலை இல்லையே இவளுக்கு
தோழி வார்த்தை கேட்டதுமே தெளிந்தாள் -திரு நாம சங்கீர்த்தனம் –
நமனும் முத்கலனும் பேச நரகமும் ஸ்வர்க்கமும் ஆகும் நாமங்கள் உடைய நம்பி பிரபாவம் தோழியும் அறிய வில்லையே –
வழுவாத தொல்புகழ் –
வழுவாத தொல் புகழாவது, மயங்கிக் கிடக்கிற நிலையிலும் வேறு தெய்வங்களின் சம்பந்தமும்
அத்தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தமும் அவ் வப்பொருள்களின் தன்மையால் விநாசத்திற்கு ஹேதுவாய்,
அவ்வாறு மயங்கிக் கிடக்கிற நிலையிலும் பகவானுடைய திருப்பெயரும் அவன் அடியார்களுடைய சம்பந்தமும்
பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயிலே நிலைநின்ற புகழ்.
ஒருவன் வைஷ்ணவனாகையாவது, இது. ‘சர்வேசுவரன் ரக்ஷகன்’ என்று ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்டு விட்டு,
வேறு தெய்வங்களின் சம்பந்தமும் பாகவதர் அல்லாதார் சம்பந்தமும் உண்டாகுமே யானால்,
வைஷ்ணவன் ஆவதற்கு விரகு இல்லை கண்டீர்.
முன் பகுதியை அநுசந்தித்தால் இத்தலையால் ஒரு துரும்பு நறுக்கவும் தகுதி இல்லாதபடியாய் இருக்கும்;
பின் பகுதியை நினைத்தால், இளைய பெருமாளைப்போலே கண்ணுறங்கவும் விரகு இல்லையாய் இருக்கும்;
ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்டு விட்டு-த்வயம் -சரம ஸ்லோகம்
பூர்வார்த்தம் -துரும்பு நறுக்க பிராப்தி இல்லை -உபாயமாக
உத்தரார்த்தம் -உறங்க விரகு இல்லை-கைங்கர்யமாக அனைத்தும் பண்ண வேணுமே –
‘கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்?’ என்றே அன்றோ இருப்பது?
‘சொரூபம் இது’ என்று அறிந்தால் சொரூபத்திற்குத் தகுதியான கைங்கரியமும்
அதற்கு விரோதியானவற்றைக் காற்கடைக் கொள்ளுமதுவும்
இல்லையாகில், ஞானம் பிறந்தது இல்லையாமித்தனையே அன்றோ? இஃது இல்லையாகில்,
ஆழ்வார்கள் போன வழியிலே சேர்ந்திலனாமித்தனை.
அவகாத ஸ்வேதம் போலே ஆனுகூல்ய சங்கல்பம் அங்கங்கள் -பிரபத்திக்கு அங்கமாக கொள்ளக் கூடாது -என்றவாறு-
‘திருவடிதன் நாமம், மறந்தும் புறந்தொழாமாந்தர்’ என்றும்,
‘திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’ என்றும்,
‘எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே’ என்றும்,-எண்ணும் கோஷ்டியில் இருக்க வேண்டும் –
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்’ என்றும் அன்றோ இவர்கள்படி?
பல காலங்களாக இவன் சூழ்த்துக்கொண்ட பாவங்கள் போகையும், நித்திய கைங்கரியம் பெறுகையுமாகிற
இப் பேற்றுக்கு இவ்வளவாகிலும் செய்யாதிருக்க விரகு உண்டோ?
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் –
இவ்வாத்துமாவுக்கு அறிய வேண்டிய அர்த்தங்களில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன வெறி விஷயமான இப்பத்தும்.
‘வெறி விலக்கு’ என்று ஒரு துறை உண்டு; அதாவது, விரஹ சுரத்தாலே நோவுபடுகிறவளுக்கும்
ஆடு அறுப்பது, கள் உகுப்பது, பலியிடுவதாகப் பரிஹரிக்கப் புக, தோழியானவள்,இது ஒரு விஷயத்தில்
பாவபந்தம் அடியாக வந்த நோயாயிற்று; மற்று ஒன்றால் அன்று,’ என்று அவர்கள் செய்கின்றவற்றை விலக்குவது.
தொழுது அடிப்பாட வல்லார் –
பெண்பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்கு உள்ள பிரியம் ‘இது கற்றார்க்கும் உண்டு’ என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.
துக்க சீலம் இலர்களே –
மோஹித்த விடத்து வேறு தெய்வங்களினுடைய சம்பந்தம் உண்டாகையும்,
பாகவத சம்பந்தம் இன்றிக்கே ஒழிகையுமாயிற்றுத் துக்கமாவது.
அஃது இல்லாமையே தன்மையாக உடையர் ஆவர்.
சீலம் – தன்மை.
————————————————————
திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
தத் உசிதஜ்ஞ தே வாரிதா ஏ ஷூத்ர தேவ
முகதா பரிகாரஷட்கே அலப்ய ஸ்வாபேஷ்ய-
சடஜித் வியசநாத் விசம்யே
ஸ்வப்ன உபமாத் -அனுபவாத் -அமுதோப்ய லப்ய
தத் உசிதஜ்ஞ- இறைவ -உசித ஞானம் உள்ளவர்கள் வாக்கால் – தோழிகள் -வாக்கால்
தே வாரிதா -அவர்கள் தோழிகளால் -தாய்மார்கள் – விலக்கப்பட்டார்கள் –
ஏ ஷூத்ர தேவ முகதா பரிகார -அவர்கள் செய்யும் பரிகாரம் ஸூத்ர தேவதா முகமாக இருப்பதால்
ஷட்கே -ஆறாவது திருவாயமொழியால்
அலப்ய ஸ்வாபேஷ்ய-சடஜித் வியசநாத் விசம்யே–அறிவற்று மயங்கி -விரும்பியது கிட்டாமல் –
பாஹ்ய சம்ஸ்லேஷம் இல்லையே -ஸ்வப்னமாக போனதே –
ஸ்வப்ன உபமாத் -அனுபவாத் -அமுதோப்ய லப்ய-நன்கு அனுபவித்தார் மானஸ சாஷாத்காரம் கீழே –
அந்ய தேவதைக்கு அகப்படாமல் -நிரசித்து – -சர்வ சரண்யத்வம் இதில் குணம் –
அன்யா தேவதா ஸ்பர்ச நிவர்த்தகத்வம் என்றுமாம்
—————————————————————-
திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –
இச்சாத் சாரத் யோகாத் பிரகரண நவநாத்
ஸ்ரீ துளச்யாட்ய மௌலே-ஸ்துத் அங்க்ரியோ பாத தூள்யா
ஸ்வ ஜன பஜன தத் பாத தூளி நமோபி தன் மூல
ஸ்வ அங்க்ரி நுத்யா தத் இதர பஜந தியாக பூர்வே
1–இச்சாத் சாரத் யோகாத் –போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த் தேர்ப் பாகனார்க்கு
2-பிரகரண நவநாத் –திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க–சங்கு சக்கரம் -ஸ்தோத்ரத்தால்-
3-4–ஸ்ரீ துளச்யாட்ய மௌலே-ஸ்துத் அங்க்ரியோ –மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்-என்றும்
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன்-என்றும் அருளிச் செய்த படியே
ஸ்துதி திரு நாம சங்கீர்த்தனத்துக்கும் உப லக்ஷணம் -3/4/பாசுரம் சேர்த்து
5-பாத தூள்யா –தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.
6–7—ஸ்வ ஜன பஜன தத் பாத தூளி நமோபி –மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே-என்றும்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே-என்றும் அருளிச் செய்த படியே –
8–9-தன் மூல ஸ்வ அங்க்ரி நுத்யா –வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,–என்றும்
கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே-என்றும் அருளிச் செய்த படியே
10-தத் இதர பஜந தியாக பூர்வே–உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
அந்ய தேவதா சம்பந்த நிவர்த்தகம் -தேவதாந்த்ர தத் அடியார் தியாக பூர்வகமாக அவனை அவன் அடியார் மூலம் –
——————————————————-
திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 36-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–
தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால்
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய -நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்—36-
சாத்மிக்க சாத்மிக்க கொடுப்பவன் உடனே பிரிந்தானே –
ஒர்ப்பாதும் இன்றி-அசங்க்யேவ சங்கதி
—————————————————-
அவதாரிகை –
இதில்
பிரணயித்வ குண விசிஷ்ட வஸ்துவை பிரத்யஷமாக
அனுபவிக்கப் பெறாமல்
பிரகிருதி விக்ருதியாய் மோஹித்துக் கிடக்க –
பிரேம பரவசர் பிரதிகிரியை பண்ணத் தேட
அத்தை பிரபுத்த ஸூஹ்ருத்துக்கள்-இது அநநுரூபம் -என்று
அறிந்து அனுரூபமான
நிதானத்தையும்
தத் பரிகாரத்தையும்
விதிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் உண்டான அனுபவம் மானச அனுபவ மாத்ரமாய்
பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
தம் தசையைத் தாம் அறியாதபடி மோஹித்துக் கிடக்க
பரிசர வர்த்திகளான பரிவர்கள்-அத்தைக் கலங்கி
சர்வான் தேவான் நமஸ் -யந்தியின் படியே
பரிவின் கனத்தாலே பரிஹரிக்க ஒருப்பட
இவர் பிரகிருதி அறிந்த ஸ்ரீ மதுரகவி பிரக்ருதிகளான
பிரபுத்த ஸூஹ்ருத்துக்கள்
அத்தை விலக்கி
உசித பரிஹாரத்தை விதித்துச் சொல்லுகிறபடியை
கலந்து பிரிந்த தலைமகள்
அறிவு அழிவு கண்டு கலங்கி
பரிவின் கனத்தாலே -தேவதாந்திர பரையாய்
பிரதிபன்ன பாஷிணியான கட்டுவிச்சி பாசுரம் கொண்டு
வெறி யாட்டாலே
பரிஹரிக்க தேடுகிற தாய்மாரை நோக்கி
இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள்
நோயின் நிதானத்தை நிரூபணத்தாலே அறிந்தாளாய்க் கொண்டு
கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனைக் கொண்டே பரிஹரிக்கும் அது ஒழிய
நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல
தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்கும்
தத் சம்பந்தி ஸ்பர்சத்துக்கும்
தேர் பாகனாரான வண் துவாராபதி மன்னனை ஆஸ்ரயித்து
மாயன் தமர் அடி நீர் கொண்டு அணியுங்கோள் என்று
வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிற
தீர்ப்பாரை யாமினி — யில் தாத்பர்யத்தை
தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் -என்று துடங்கி
அருளிச் செய்கிறார்-
—————————————–
வியாக்யானம்–
தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் –
மண்ணை இருந்து துழாவில்-4-4-
மயல் பெரும் காதலானது தீர
வீற்று இருந்து ஏழ் உலகில்-4-5- கலந்த சர்வேஸ்வரன் –
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய –
பிரிகைக்கு ஹேது நிரூபணம்
அத்யல்பமும் ஆராயாமல்
பெருக்காறு வற்றி அடி சுடுமா போலேயும்
அபிஷேக மகோத்சவம் குலைந்து அரண்ய பிரவேசம் ஆனால் போலேயும்
உடனே பிரிய
பேதை நின்னைப் பிரியேன் -என்னுதல்
பொருட்கோ பிரிவன-என்னுதல்
செய்யாமல்
கலந்த கலவி கனவு என்னலாம் படி அசங்கிதமாக அகல
நேர்க்க –
நேர்க்க அறிவழிந்து –
சத்ருக்ந அநந்தாச்தித-என்னும்படி பரத ஆழ்வான் நின்றால் போலே நில்லா
மோஹித்தால் போலே மோஹித்து –
நேர்க்க அறிவு அழிகை யாவது –
மண்ணை இருந்து துழாவியில் காட்டிலும்
அறிவு கலங்கி
அங்கு
காணவும்
கேட்கவும்
பேசவும்
பின் செல்லவும்
ஷமையாய் இருந்தாள்-
இங்கு
குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்து
மதி எல்லாம் உள் கலங்கி மயங்கி இறே கிடக்கிறது
உற்றாரும் அறக் கலங்க –
யேது ராமஸ்ய ஸூஹ்ருதயஸ் சர்வே தே மூட சேதச -என்னும்படி
அத்தைக் கண்ட அன்னையரும்
தோழியரும்
தொடக்க மானவரும்
மிகவும் அறிவு கலங்கிக் கிடக்க
ஸ்ரீ கௌசல்யாரைப் போலே மங்களா சாசன பரையான மாதா
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமச்யார்த்தேய யசச்வின-
என்னும்படியே எத்தை யாகிலும் செய்து
இவளை மீட்கத் தேட –
அவ்வளவில் தேவ தாந்திர பரையாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி
அதுக்குப் பரிஹாரமாக சொல்லுகிற
ஆடும் கள்ளும் இறைச்சியும் கரும் சோறும் செஞ்சோறும்
ஆகிய நிந்த்ய த்ரவ்யங்களாலே
இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதைகளைக் கண்டு
இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள் அத்தை நிஷேதித்து
தேர்ப் பாகனாற்கு இவள் சிந்தை துழாய் த்திசைக்கின்றதே -என்று
பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம் –
நோய்க்கு நிதானத்தையும்
அதுக்கு பரிஹாரமாக
சங்கு சக்கரம் -என்று இசைக்கும் படியையும்
மாயப் பிரான் கழல் வாழ்துதலையும்
பெரும் தேவன் பேர் சொல்லும் படியையும்
களிறு அட்ட பிரான் திரு நாமத்தால் தவளப் பொடி கொண்டு நீர் இட்டிடுமின் -என்றும்
மாயன் தமரடி நீறு கொண்டு அணிய முயலில் -என்றும்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரை -என்றும் –
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் -என்றும்
வண் துவாராபதி மன்னனை ஏத்துமின் -என்றும்
சொன்ன படியைக் கேட்டு
தொழுது ஆடி
தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து
நோய் தீர்ந்த பிரகாரத்தை -பேர் கேட்டு அறிவு பெற்றாள் -என்கிறது –
மாறன் சீலம் –
ஆழ்வார் ஸ்வபாவம் இது வாயிற்று -(மயங்கின நிலையிலும்)
செவிக்கு இனாத கீர்த்தியை கேட்டு சத்தயா பாதகமாகவும் –
செவிக்கு இன்பம் ஆவதும் செங்கண் மால் நாமம் -என்கிற
கேசவன் கீர்த்தியைக் கேட்டு சத்தை பெறவுமே இறே இருப்பது-
———————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-