திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -1-3-

மூன்றாம் திருவாய் மொழியில்
லோகத்திலே கண்ணாலே கண்டு கையாலே யாயிற்று பஜிக்கலாவது –
இரண்டு படியும் அன்றிக்கே அதீந்த்ரியனான சர்வேஸ்வரனை அதி ஷூத்ரனான நாங்கள் பஜிக்கும் படி எங்கனே என்னில்
எம்பெருமான் நிரதிசய போக்யன் என்று கேட்ட மாத்ரத்திலே அவனைக் காண வேணும் என்று அபிநிவேசம் பிறந்தால் அவர்களுக்கு காணலாம் படி
தன்னுடைய சௌசீல்யாதி குண பலாத்க்ருதனாய்க் கொண்டும்
அப்ராக்ருத திவ்ய தேஹத்தோடும்-ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாகவும் -தத் விரோதி நிரசன அர்த்தமாகவும்
தன்னுடைய சங்கல்ப்பத்தாலே நிஹீனமான மனுஷ்யாதிகளோடு சஜாதீயனாய் ராம கிருஷ்ணாதி ரூபேண யுகம் தோறும் திரு வவதாரம் பண்ணி யருளா நிற்கும் –
பரத்வ தசைகளில் காட்டில் திரு வவதாரங்களிலே தன்னுடைய கல்யாண குணங்கள் நிறம் பெறும்-
இவ்வவதார ரகச்யத்தின் உடைய சீர்மை ஒருவர்க்கும் அறிய அரிது
சில தார்மிகர் ஏரியைக் கல்லினால் சிலருக்கு ஜீவன ஹேதுவாய் சிலருக்கு அநர்த்த ஹேதுவாமா போலே
இத்திரு வவதாரங்கள் அனுகூலர்க்கு உஜ்ஜீவன ஹேதுவாய் பிரதி கூலர்க்கு எதிரிட்டு அழிகைக்கு ஹேதுவாம் என்று தொடங்கி
ஸ்ரீ கீதையில் சதுர்த் தாத்யத்தில் அருளிச் செய்த படி சௌலப்யத்தைப் பேசி -இப்படி ஸூ லபன் ஆகையாலே ஆஸ்ரயணம் கூடும் -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

—————————————————————————

முதல் பாட்டில்
எம்பெருமானுடைய சௌலப்யத்துக்கு உதாஹரணத்தைப் பேசுகைக்காக-திரு வவதாரங்களை முன்னோட்டுக் கொண்டு
ஆழ்வார் பரோப தேசாத்ருதராய் கிருஷ்ணனுடைய நவநீத சௌர்ய சாரித்ரத்திலே அகப்பட்டு அழுந்துகிறார் –

பத்துடை யடியவர்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

பத்துடை யடியவர்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
பத்து -என்கிறது -பக்தியை
வித்தகன் –
ஆஸ்ரித பவ்யனாய் இருக்கிற இருப்பிலே சத்ருக்களுக்கு கணிசிக்க முடியாதே இருக்கும் விஸ்மய நீயன்

மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
பெரிய பிராட்டி யாராலும் ஆசைப் படப் படுவானே விலஷணமான -பிரசித்தனான -பெறுதற்கு அரிய ஸ்வாமி

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு -எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –
யசோதைப் பிராட்டி ஆயாசித்துக் கடையா நிற்க சாபல அதிசயத்தாலே அந்த வெண்ணெய் களவு காண்கிற தசையிலே
உரஸ் தலத்திலே -உரலோடு கட்டுண்டு -உரலோடு தன்னோடு வாசி இல்லாதபடி இருந்து ஏங்கின சௌலப்யம்
எத்திறம் -என்றது இது என்னபடி என்று தாம் ஈடுபடுகிறார்
உரத்தை யுடைய விடை என்னவுமாம் -பேறு மிடுக்கு என்றவாறு –

———————————————————————————————

இரண்டாம் பாட்டில்
எம்பெருமானுடைய சௌலப்யத்தை அனுசந்தித்து விவசரான ஆழ்வார் பிரக்ருதிஸ்த்தராய்
ப்ரஸ்துதமான சௌலப்யத்தை சப்ரகாரமாக உபதேசிக்கிறார் –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

எளிவரும் இயல்வினன்
எல்லாருக்கும் ஒக்க எளியனாம் ஸ்வ பாவன்
நிலை வரம்பில பல பிறப்பாய்
உத்க்ருஷ்ட யோநி-அபக்ருஷ்ட யோநி என்று இன்றிக்கே -உத்க்ருஷ்ட சேஷ்டிதம்-அபக்ருஷ்ட சேஷ்டிதம் -என்று இன்றிக்கே இருந்துள்ள
பல ஜன்மங்களையும் யுடையனாய்
இவை இரண்டு பொருளையும் நிலை இல்லாமை யாக்கி வரம்பு இல்லாமைக்கு பொருளாக
திரு வவதாரங்களிலே பரத்வத்தை ஆவிஷ் கரிக்க வேண்டிலும் ஆவிஷ் கரிக்கும் என்றுமாம் –

ஒளி வரு முழு நலம் –
திரு வவதாரந்களிலே நிறம் பெறும்படியான பூர்ணமான கல்யாண குணங்கள்
முதலில கேடில
அக்குணங்கள் தான் இன்ன நாள் தொடங்கி உண்டாயிற்று என்றாதல் -இன்ன நாள் முடியும் என்றாதல் சொல்ல ஒண்ணாதே நித்தியமாய் உள்ளன
வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
மோஷம் ஆகிற தெளிவைத் தரும் ஸ்வ பாவம் தொடக்கமான எல்லா வற்றோடும் கூட
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன்
ஆஸ்ரித பரித்ராணம் தன் பேறாகக் கொண்டு அவர்கள் இட்ட வழக்காய்-அநாஸ்ரிதர்க்கு எட்டாதே இருக்கும்
அமைந்தே —
இங்கனே சமைந்து –

———————————————————————————————————–

சர்வேஸ்வரனான நாராயண னுடைய ஸ்லாக்யமான ஜன்ம ரகஸ்யம் அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று என்கிறார்

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற உயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநிலமதுவாம்
அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே –1-3-3-

இன்னபடி அனுஷ்டிக்க இன்ன பலத்தைத் தரும் என்னும் வியவஸ்தை வுடைய தர்ம மார்க்கம் எல்லா வற்றாலும்
எல்லார்க்கும் மேல் படுவதும் செய்து
இன்னபடியாக வென்றால் அப்படியுண்டாம் சமைவை யுடைத்தான சிருஷ்டி சம்ஹாரம் அவாந்தர சம்ஹாரம் ஆகிற இவை
மிகவும் கை வந்து இருக்கும் சமைவை யுடைய ப்ரஹ்மாதிகளும் மற்றும் உண்டான அசேதனங்கள் எல்லாமும் சேதனர் எல்லாரும்
இவை எல்லாம் தனக்கு சேஷமாகையாலே இவை தான் என்னலாம் படியான சமைவை யுடைய நாராயணனுடைய –

—————————————————————————

இப்படி இருக்கிற திவ்ய அவதாரங்கள் ஒருவருக்கும் நிலம் அன்றோ என்னில்
இது எல்லாம் ஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸூ லபனாய் -அநாஸ்ரிதற்கு அத்யந்த துர்லபமாய் இருக்கும் என்கிறார் –

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய வெம்பெருமான்
பேரும் ஒரு உருவமும் உளதில்லை யிலதில்லை பிணக்கே–1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
எத்தனையேனும் அறிவுடையாரே யாகிலும் அநாஸ்ரிதரால் ஒரு ஸ்தூல ஆகாரமும் அறிய அரியனாய்
ஒன்றும் அறிவிலர் ஆகிலும் ஆஸ்ரிதர்க்கு இப்படிப்பட்டான் என்று பரிச்சேதிக்கலாம் படி இருக்கும் ஸ்வ பாவனாய்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய வெம்பெருமான்
தன் குண சேஷ்டி தாதிகளுக்கு வாசகமான அநேகத் திரு நாமங்களையும் மற்றும் அநேக விக்ரஹங்களை யுமுடையவன்
பேரும் ஒரு உருவமும் உளதில்லை யிலதில்லை பிணக்கே –
இப்பேர்களில் ஒரு பேரும் ஒரு வடிவும் மாதரம் கூட அநாஸ்ரிதர் இல்லை என்று இருப்பர்-
ஆஸ்ரிதர் இவை எல்லாம் உண்டு என்று இருப்பர் –
இப்படி நித்ய விப்ரதிபன்னமாய் இருக்கும்
பலகாலும் -எம்பெருமான் -என்று -ஆஸ்ரிதற்கு எளியனாய் அநாஸ்ரிதர்க்கு அரியனான படியை அனுசந்தித்து இருக்கிற படி –

———————————————————————————–

இப்படி அவன் தூரச்தனே யாகிலும் -ஆஸ்ரயிப்பார்க்கு துர்லபன் என்னும் இடத்தை பரிஹரித்து
ஆழ்வார் -ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படியே பக்தி யோகத்தாலே எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறி யுள்ளி யுரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் யாதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு
உணக்கு மின்பசை யற அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன்
ஷட் சமயங்களுக்கும் -வைதிக சமயத்துக்கும் -அந்யோந்ய விரோதத்தால் உள்ள பிணக்கு அறும்படி
வேத மார்க்கத்தாலே ஆராய்ந்து அருளிச் செய்த பரம உதாரன் –

அந்தமில் யாதியம் பகவன்
தனக்கு அந்தம் இன்றி எல்லார்க்கும் தான் ஆதியாய் -ஸ்வ பாவிகமாய் -ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி கல்யாண பரி பூர்ணன்
இங்கனே சொல்லிற்று -இவன் சொல்லியதை விஸ்வசிக்கலாம் படி இவனுடைய ஆப்ததமத்வம் தோற்றுகைக்காக-

வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்கு மின்பசை யற
பக்தியோகத்தை நிரந்தரமாக அனுஷ்டித்து -பாஹ்ய விஷயங்கள் ஆகிற விரோதிகளைத் தவிர்த்து அவற்றின் ருசியையும் சவாசனமாக விடுங்கோள் –
ஆஸ்ரிதர்க்கு இனிதாய் இருந்ததே யாகிலும் இத்தைப் பெரு வருத்தமாகக் கொள்ளும் பகவத் அபிப்ராயத்தாலே -தவ நெறி -என்கிறது

அவனுடைய யுணர்வு கொண்டு யுணர்ந்தே —
பக்தி ரூப தத் விஷய ஜ்ஞானத்தாலே யாதல்
அவன் அருளிச் செய்த சரம ஸ்லோக உக்தமான உபாய ஜ்ஞானத்தாலே யாதல்

——————————————————————————–

சர்வேஸ்வரன் ஸூ லபன் ஆகைக்காக ப்ரஹ்ம ருத்ராதிகளோடு சஜாதீயனாக திருவவதாரம் பண்ணுகையாலே
சமாஸ்ரயணீயன் இன்னான் என்று நிர்ணயிக்க ஒண்ணாமே பழைய துர்லப்த்வ சங்கை மீளவும் பிரசங்கிக்க
மூர்த்தி த்ரய நிர்ணய உபாயத்தைச் சொல்லிக் கொண்டு அந்த தௌர்லப்யத்தை பரிஹரிக்கிறார்

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த வின்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை யுணர்வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

உணர்ந்து உணர்ந்து
வீப்சையாலே ஆத்மாவுக்கு ஜ்ஞாத்ருத்வம் ஆகந்துகம் அன்று
ஸ்வா பாவிக நித்ய தர்மம் -என்கிறது –

இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த வின்நிலைமை
ஸ்வ ஞான பிரபையாலே -பத்து திக்கும் வியாபித்து பிரகிருதி வியுக்தமாய்க் கொண்டு இப்படி இருக்கிற ஆத்மாவின் நிலைமையை –

உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை யுணர்வரிது உயிர்காள்-உணர்ந்து உணர்ந்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
ஸ்ரவண மன நாதி களாலே சாஷாத் கரிக்கக் கூடிலும் சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ராதிகளோடு ஒக்கத் தன்னை
சங்கோ சித்து கொண்டு நிற்கையாலே இவர்களில் ஈஸ்வரன் இன்னான் என்று அறிகை அரிது –

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே —
குண ரூப நாமாதிகளாலும் -தத் பிரதிபாதகமான பிரமாணங்களாலும் இவர்கள் மூவரிலும் எவன் ஈஸ்வரன் என்று மிகவும் ஆராய்ந்து
ஈச்வரதயா நிர்ணீதன் ஆனவனை மன நாதிகளாலே ஹிருதயத்திலே பிரதிஷ்டிதனாம் படி அனுசந்தித்து ஆஸ்ரயியுங்கோள் –

————————————————————————

மந்த ஆயுஸ் ஸூ க்களான நீங்கள் நிர்ணய உபாயங்களாலே மூவரிலும் இன்னான் பரன் என்று நிர்ணயித்து
ஈச்வரதயா நிர்ணீதனான இன்னானை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

ஓன்று எனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே –1-3-7-

ஓன்று எனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற -நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
மூர்த்தி த்ரயத்துக்கும் ஆத்மா ஒருவனோ -பலரோ –பலரானால் அவர்களில் பிரதானன் எவன் என்று
அறிய ஒண்ணாத படியை யுடையராய் நின்ற
நன்று எழில் நாரணன்
தன் வடிவைக் கண்டால் தானே ஈஸ்வரன் என்று தோற்றும்படி நல்ல எழிலை யுடைய நாராயணன்
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே —
சொன்ன மூன்று வகையாலும் விசத்ருசமாய் யுள்ள இவர்களைப் பஷபதியாதே

——————————————————————————————————-

எம்பெருமானுடைய பஜநீயன் ஆகைக்கு நிதானமான ஸ்ரீ யபதித்வத்தைச் சொல்லா நின்று கொண்டு
பஜன உபக்கிரம காலத்திலே பஜன விரோதி சர்வ கர்ம நிவ்ருத்தியும் உண்டாம் என்கிறார் –

நாளும் நின்றடு நம் பழமை அங்கொடு வினையுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனகமல மறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–1-3-8-

நாளும் நின்றடு நம் பழமை அங்கொடு வினையுடனே மாளும் ஓர் குறைவில்லை –
நாள் தோறும் இடைவிடாதே நலியா நின்றுள்ள பழையதாய் மிகவும் க்ரூரமான நம்முடைய கர்மங்கள் ஆரம்பிக்கத் தொடங்கின வாறே நிச் சேஷமாக நசிக்கும் –
சர்வ இஷ்டங்களும் பூரணமாம்
மனனகமல மறக் கழுவி நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
ஈஸ்வரன் இவனோ -மற்றையவர்களோ -என்று தொடக்கமான மனசில் உள்ள சம்சயங்களும் போக்கி
ஸ்ரீ மானாய் ஸ்வாமியான எம்பெருமானுடைய ஆஸ்ரிதம் அபராதம் பாராத திருவடிகளை நாடொறும் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–
நெடும் காலம் கூட சாதிக்க வேண்டும் பக்தி யோகத்தை சாதிக்க காலமும் கரணபாடவமும் இன்றிக்கே
சரம தசா பன்னரானவர்கள் இழந்தே போம் இத்தனையோ என்னில்
அத்தசையிலே யாகிலும் ப்ரணமாதிகளில் ஒன்றிலே உபக்ரமித்து அவ்வளவிலே தான் முடியில் அதுவே பரம பக்தியிலும் நன்று

——————————————————————————————-

சர்வேஸ்வரனான தான் ஸ்வ விபூதி பூத லோகங்களிலே வந்து திருவவதாரம் பண்ணுகிறது ஆஸ்ரிதர் கண்டு அனுபவிக்கைக்காக என்கிறார்

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெருத்துந்தித்
தலத்து எழுதிசை முகன் படைத்த நல்லுலகும் தானும்
புலப்பட பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே –1-3-9-

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெருத்துந்தித் தலத்து எழுதிசை முகன் படைத்த
திரிபுரஹநாதி சமர்த்தனான ருத்ரன் எம்பெருமானுடைய தஷிண பார்ஸ்வத்தை ஆஸ்ரயித்து இருக்கும்
எழுச்சியை யுடைய திசைமுகன் படைத்த லோகமும் தானும் அசங்கு சிதமாக இருக்கிறது திரு நாபி கமலத்திலே –
இவை இவர்களுடைய சர்வ பிரகார ரஷைக்கும் உப லஷணம்

நல்லுலகும் தானும்
புலப்பட பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
நல் உலகமாவது -எம்பெருமானுக்கு வந்து திருவவதாரம் பண்ணி ஆஸ்ரிதரோடு சம்ச்லேஷிக்கு ஈடான தேசம் –

சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள-
இவனுடைய குணங்களைப் பேசப் புக்கால் பேசி முடிக்க ஒண்ணாது –
ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கும் என்றுமாம் –

இவையவன் துயக்கே-
ஏவம்வித ஸ்வ பாவன் என்று எல்லாரும் அறியாது ஒழிவான் என் என்னில் -தன் பக்கல் விமுகரானவர்களுக்கு
அறிய ஒண்ணாத படி சந்தேக விபரீத ஜ்ஞானங்களை எம்பெருமான் பிறப்பிக்கையாலே –

————————————————————————-

ஜல ஸ்தல விபரீதங்கள் பாராதே எல்லார் தலையிலும் பொருந்துவதாய் -தனக்கும் அயத்ன லப்தமாய் -நிரதிசய போக்யமான
திரு வுலகு அளந்து அருளின எம்பெருமானுடைய திருவடிகளை மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பாரிக்கிறார் –

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியனவல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –1-3-10-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும் மயக்குடை மாயைகள் வானிலும் பெரியனவல்லன்
நிர்தோஷ அந்த கரணர் ஆகையாலே சமயக் ஜ்ஞானவாங்களான தேவர்களை அறிவு கெடுக்கும் படி தெரியாத
குண சேஷ்டிதங்களோடு கூடின திவ்ய அவதாரங்கள் ஆகிற மஹா ஆச்சர்யங்களைப் பண்ண வல்லவன்

புயல் கரு நிறத்தனன்
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே கறுத்த நிறத்தை யுடையான்

பெரு நிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
அநந்ய பிரயோஜனராய் –
மநோ வாக் காயங்களாலே அனுபவிக்கப் பெற்றேன் -என்றும் சொல்லுவர்

——————————————————————————————————-

நிகமத்தில் இப்பத்தும் அறிவார் -முந்துற அயர்வறும் அமரர்கள் வரிசையைப் பெற்று
-பின்னை சம்சார நிகில விச்சேதத்தை பெறுவார்கள் என்கிறார் –

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

தேவ ஜாதி அனுபவித்து வாழ அபிஷூ பிதமாம் படி கடலைக் கடந்தவனை
அமர்ந்து இருந்துள்ள பொழிலின் வளர்த்தியையுடைய திருக் குருகூர்ச் சடகோபனுடைய
அந்தரங்க வ்ருத்திகளாய் -ரச கனமான ஆயிரம் திருவாய் மொழியிலும் இவை பத்தும் அப்யசித்தவர்கள்

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: