திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி -1-1-

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

முதல் பாட்டுக்கு கருத்து
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணாத் மகனாய்
அக்குணங்களுக்கும் நிறம் கொடுக்க வற்றான திவ்ய தேக யுக்தனாய்
ஸ்ரீ யபதியாய் -இந்த சௌந்த்ர்யாதிகளுக்கு போக்தாக்களான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் இருந்து வைத்து
தன்னுடைய நிரவதிக கிருபையாலே என்னுடைய தோஷாகரத்வத்தைப் பாராதே என்னுடைய அஜ்ஞ்ஞானம் எல்லாம் நீங்கும் படியாக
ஸ்வ விஷய பக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தை நிர்ஹேதுகமாக சாதரனாய் கொண்டு தந்து அருளினான்
ஆனபின்பு அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் என்று திரு உள்ளத்தோடு கூட எம்பெருமானுக்கு அடிமை செய்கையிலே பிரவ்ருத்தர் ஆகிறார்
இத்தால் பிரபந்த ஆரம்பத்திலே வஸ்து நிர்தேச நமஸ்காரங்களும் பண்ணப் பட்டனவாய் விழுந்தது –

உயர்வற உயர் நலம் உடையவன் –
ஆனந்த வல்லியில் சொல்லுகிறபடியே ஒரோ குணத்தின் சந்நிதியிலே வியதிரிக்த சகல அர்த்தகதமான எல்லாப் படியாலும் உள்ள எல்லா உயர்த்தியும்
ஆதித்ய சந்நிதியிலே நஷத்ராதிகளைப் போலே யுண்டாய் –அவற்றை இல்லை என்னலாம் படியாய் அவை தனக்கு
அவதி உண்டாய் இருக்கை அன்றிக்கே கால தத்வம் உள்ளதனையும் அனுசந்தியா நின்றாலும் மேல் மேல் என உயர்ந்து
காட்டா நிற்பனவான கல்யாண குணங்களை யுடையான்
நலம் என்ற இடத்தில் –ஏக வசனம் -குண ஜாதி பரம்
நலம் ஆவது குண விபூத்யாதிகளை அனுபவிக்கையாலே வந்த ஆனந்த குணம் ஆகவுமாம் –
ஆனந்தம் என்று ஆனந்த ஸ்ருதிகளில் பிரசித்தம்
குண நிரபேஷமாக தானே விலஷணமாய் -தன்னைப் பற்றி குணங்கள் நிறம் பெறும்படியான திவ்யாத்ம ஸ்வரூபத்தின் யுடைய
உபநிஷத் பிரசித்தியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

அவன் –
முன்பு சொன்ன நன்மைகளில் காட்டில் மேல் பட்டதொரு நன்மை சொல்லுகைக்காக –அவன் -என்று நிர்தேசிக்கிறது –
இப்படியே மேல் அவன் அவன்களுக்கும் பொருள்
அவன் -என்று பலகால் சொல்லுகிறதுக்கு கருத்து -இப்பாட்டில் பிரதி பாதிக்கிற குணங்கள் தனித்தனி ஈஸ்வரத்வ சாதகங்கள் என்று தோற்றுகைக்காக-
மயர்வற –
ஸ்வ விஷயத்தில் எனக்கு அநாதியாய் வருகிற அஜ்ஞ்ஞானம் எல்லாம் போம்படி
மதி நலம் –
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம்
அருளினன்-
இத்தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுகமாக தன்  கிருபையாலே தந்து அருளினான் –
எனக்குத் தந்து அருளினான் என்னாது ஒழிவான் என் என்னில்-அசந்நேவ ச பவதி -என்று சொல்லுகிற கணக்காலே பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே

அயர்வறும் அமரர்கள் அதிபதி
பகவத் ஜ்ஞானத்துக்கு விச்சேதம் இல்லாமை ஸ்வ பாவமாய் -அவ்வனுபவதுக்கு ஒரு நாளும் விச்சேதம் இன்றிக்கே இருக்கிற நித்ய ஸூரிகளுக்கு ஸ்வாமி-
அமரர்கள் என்கிற பஹூ வசனத்துக்கு முக்யார்த்தத்வம் ப்ராப்தம் ஆகையாலே அவர்கள் தங்களுக்கு எண்ணில்லை என்கிறது –

துயரறு சுடரடி –
துயர் அறும் ஸ்வ பாவமாய் -அப்ராக்ருத தேஜோ ரூபமான திருவடிகளை
திருவடிகளுக்கு துயர் உண்டோ என்னில் ஆஸ்ரிதர் உடைய துயர் திருவடிகளுக்குத் துயர்
அவனைத் தொழுது எழு என்னாதே திருவடிகளைத் தொழுது எழு என்பான் என் என்னில்
ஸ்தனந்த்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே அடியவனானவனுக்கு திருவடிகளிலே தலை மடுக்கை முறைமையாகையாலே –

தொழுது எழு
அடிமை யால் அல்லாது செல்லாத் தன்மையாய் இருக்கச் செய்தே -அநாதி காலம் அடிமை இழந்து உறாவி
இல்லாதார் கணக்காய் இருக்கிற நீயே எம்பெருமானுடைய திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவீ

என் மனனே
எம்பெருமானோடு ப்ரத்யா சன்னமான திரு உள்ளத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு என் மனனே என்கிறார் –

சன்மாத்ரமே வஸ்து என்கிற வாதமும்
ஜீவ பரர்களுடைய பேதம் ஔபாதிகம் -மோஷ தசையில் எல்லாம் ஓன்று -என்கிற வாதமும்
இவருக்கு சித்தாந்தம் அன்று என்னும் இடம் வியக்தம் இப்பாட்டில் -பரராமவர்களுக்கு விருத்தம் ஆகையால்

இப்பாட்டில் அவன் அவன் என்கிற மூன்று பர்யாயத்திலும் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று
வாக்ய பேதம் பண்ணி யோஜிப்பர்–நமோ நம-இத்யாதி ச்லோகவத் பிரதி விசேஷணம் ஈடுபடுகையாலே –

————————————————————————–

இரண்டாம் பாட்டில்
அகில ஹேய ப்ரத்ய நீகதையாலும் -கல்யாணை கதாநதையாலும் -சேதன அசேதனங்களில் காட்டில் அத்யந்த விலஷணமாய்
ஜ்ஞானாநந்தங்களே தனக்கு வடிவாய் -முதல் பாட்டில் அனுபவித்த குணங்களுக்கு ஆச்ரயமாய் இருந்துள்ள
நிஷ்க்ருஷ்டமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை சோபான க்ரமத்தாலே அனுபவிக்கிறார்

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணரளவிலன்
யோக அப்யாசத்தாலே மனசில் உண்டான அவித்யாதி தோஷங்கள் எல்லாம் போம் காட்டில்
விகசிதமாய் மேல் மேல் எனக் கிளரா நின்றுள்ள மானஸ ஜ்ஞான கம்யமான ஆத்மாவின் படி அல்லாதான்
பொறியுணர் யவையிலன்
இந்த்ரியங்க ளால் அறியப்படும் ப்ராக்ருத பதார்த்தங்களின் யல்லாதான்
சேதனரில் காட்டில் விலஷணன் என்ற போதே அசேதன வைலஷண்யம் சொல்லிற்று ஆகாதோ என்னில்
அவனோடு ஒவ்வாமைக்கு அசேதனனோடு சேதனனோடு ஒரு வாசி இல்லை என்னும் இடம் சொல்லுகைக்காக த்ருஷ்டாந்தயா சொல்லிற்று
சேதன அசேதனங்களில் காட்டில் விலஷணன் என்ன அமையாதோ
அவற்றைக் காணும் பிரமாணங்களால் காண முடியாது என்பான் என் என்னில்
ஏக பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை என்று கொண்டு அத்யந்த வைலஷண்யம் தோற்றுகைக்காக –

இனன்-
என்கிறது இப்படிப்பட்டான் என்கிற மேல் சொல்லக் கடவ படியைச் சொல்லுகிறது –

உணர் முழு நலம்
கட்டடங்க ஜ்ஞானமும் -ஆனந்தமுமாய் இருக்கும் –

எதிர் நிகழ கழிவினும் இனன் இலன்
பூத பவிஷ்யத் வர்த்தமான கால த்ரயத்திலும் ஒத்தார் இலன்
சேதன அசேதன வைலஷண்யம் முதலிலே சொல்லிற்று இ றே
மீளவும் தன்னோடு ஒத்தார் இல்லார் என்பான் என் என்னில்
திரள ஒப்பு இல்லையே யாகிலும் ஒருவகையாலும் ஒத்தாரை இல்லாதான் என்கிறது -என்றார்கள் சிலர்
அதுவும் சேதன அசேதன வைலஷண்யம் சொன்ன போதே சொல்லிற்றாம்
ஆனபின்பு அவனோடு ஒவ்வாது என்று சொல்லுகைக்கு சத்ருசமாய் இருப்பதொரு பதார்த்தத்தை யுடையான் அல்லன் என்கிறது –

மிகு நரையிலனே
மிகு நரை இல்லாதான்
ஒத்தாரை இல்லாத நிலத்திலே மிக்காரை இல்லான் என்கிறது -மிக்கார் சம்பவியாப் போலே ஒத்தாரும் சம்பவியாது என்று தோற்றுகைகாக

எனன் உயிர்
இங்கனே இருக்கிற இவன் எனக்குத் தாரகன் –

————————————————————————–

முதல் பாட்டில் சொன்ன -நித்ய விபூதி உக்தனான எம்பெருமானுக்கு லீலார்த்தமான ஜகத் விபூதி யோகத்தை சொல்லுகிறது

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் நலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

இலனது உடையனிது என நினைவரியவன் நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
ஒன்றைச் சுட்டி அத்தை யுடையன் அல்லன் என்னில் ஐஸ்வர்யத்தில் சிறிது குறைந்து தோற்றும் –
ஒன்றைச் சுட்டி இத்தை யுடையன் என்னில் இது ஒழிய அல்லாது எல்லாம் இவனது அல்லாமையாலே அத்யல்ப விபூதிகனாம்
இவ்விரண்டு படியாலும் கருத முடியாதவன் –
பின்னை எங்கனே சொல்லுவது என்னில் -கீழில் லோகங்களிலும் மேலில் லோகங்களிலும் உண்டான சேதன அசேதனங்களையும் எல்லாம் யுடையவன்
நிலமும் விசும்பும் என்று கீழும் மேலும் உண்டான லோகங்கள் எல்லா வற்றுக்கும் உப லஷணம்
உருவினன் அருவினன் என்றால் சேதன அசேதனங்கள் உடையவன் என்னும் பொருளுக்கு வாசகம் ஆமோ என்னில்
காராயின காள நன் மேனியினன்-என்றால் போலே இதுவும் வாசகமாம் –

புலனொடு புலன் நலன் ஒழிவிலன் பரந்த வந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே
பிரமாண கோசரமான பதார்த்தங்களோடு அந்தராத்மதயா கலந்து நின்றானே யாகிலும்
அவற்றின் தோஷங்கள் தன் பக்கல் தட்டாத படியாய் இப்படி எல்லா பதார்த்தங்களிலும் வியாபித்து இருப்பதும் செய்து
இந்த லீலா விபூதியோடு முதல் பாட்டில் சொன்ன அத்யந்த விலஷண தமமாய் அந்தரங்க தமமாய் இருந்துள்ள நித்ய விபூதியை யுடையனாய்
அத்விதீயன் ஆனவனை அநாதிகாலம் சம்சாரத்திலே மங்கி பகவத் பக்தி கந்த ரஹிதரான நாம் பரிபூர்ணமாக அனுபவிக்கப் பெற்றோம் என்று திரு உள்ளத்தோடு கூட
மன்யே ப்ராப்தாச்மா தம் தேசம் -என்ற ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே ப்ரீதராய் விஸ்மிதர் ஆகிறார்

————————————————————————–

இத் திருவாய் மொழியில் -சேஷித்த பாட்டுக்களால் இம் மூன்றாம் பாட்டில் பொருளே விஸ்தரிக்கப் படுகிறது –
நாலாம் பாட்டு -நாநா விதமான சொற்களாலே சொல்லப்படுகிற எல்லாப் பதார்த்தங்களின் உடைய
ஸ்வரூப ஸ்வ பாவம் பகவத் அதீநம் என்று சாமாநாதி கரண்யத்தாலே சொல்லுகிறது

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

நாம் அவன் இவன் உவன்
தம்தாமையையும் -தூரச்தனையும் -சந்நிஹிதனையும் -அதூர விப்ரக்ருஷ்டனையும் சொல்லுகிறது
அவள் இவள் உவள்-
தூரச்தையாயும் சந்நிஹிதையாயும் -அதூர விப்ரக்ருஷ்டையாயும் -வினவப் படுமவளுமான ஸ்திரீ லிங்க பதார்த்தங்களைச் சொல்லுகிறது
தாம் அவர் இவர் உவர்
பூஜ்யராய் உள்ளாரில் தூரச்தராயும் சந்நிஹிதராயும் அதூர விப்ரக்ருஷ்டராயும் உள்ளாரைச் சொல்லுகிறது
அது விது வுது வெது
தூரச்தமாயும் சந்நிஹிதமாயும் அதூர விப்ரக்ருஷ்டராயும் வினவப் படுவதுமான நபும்சக பதார்த்தங்களைச் சொல்லுகிறது
வீமவை யிவை வுவை
நச்வரமான பதார்த்தங்களில் சந்நிஹிதமாயும் அதூர விப்ரக்ருஷ்டமாயும் தூரச்தயுமாயும் உள்ள பதார்த்தங்களைச் சொல்லுகிறது
அவை நலம் தீங்கிவை
அவற்றில் நல்லனவும் தீயனவும்
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே
ஆகக் கடவனவும் -பண்டே யானவையும் ஆய்நின்ற பதார்த்தங்களே அவரே
இப்பாட்டில் சொன்ன பிரயோஜகங்கள் ஓர் இடத்தில் உண்டாய் ஓர் இடத்திலே இன்றிக்கே ஒழிந்தவை இல்லாத இடத்தில் யோக்யமானவை கூட்டிக் கொள்ளக் கடவது

————————————————————————–

அஞ்சாம் பாட்டில் சகல பதார்த்தங்கள் உடைய ஸ்திதியும் எம்பெருமானாலே என்கிறது –

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
தம்தம் ப்ரக்ருத் அனுகுணமாக விவித பல அபி சந்தியை யுடைய அதிகாரிகள் தந்தாம் அறிந்த மார்க்க பேதங்களாலே
தங்களுடைய அபேஷித பல பரதனா சக்தரான அவ்வவ தேவதைகளை
இவர்களே நமக்கு அசாதாராண ஸ்வாமிகள் என்று ஆச்ரயிப்பார்கள் –

அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதி வழி யடைய நின்றனரே –
ஆஸ்ரயணீயர் ஆஸ்ரயிக்கிற வர்களுடைய அபேஷிதம் செய்கைக்கு குறை யுடையார் அல்லர்
ஆச்ரயிக்கிறவர்கள் ஆச்ரயணீயரை வித்யுக்த்த பிரகாரமே ஆச்ரயிக்கவும்
அவர்கள் அவர்களுக்கு பல பிரதான சக்தராகவும் சர்வேஸ்வரன் அந்தராத்மதயா நின்றான் –

————————————————————————–

சேதன அசேதனாத்மக சமஸ்த வஸ்துக்களுடைய சமஸ்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் பகவத் சங்கல்ப அதீநம் -என்கிறது –

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

அநேக பிரகாரனாய் இருக்கையாலே -ஒரு பிரகாரத்தைச் சொல்லி இதுவே படி என்று ஒரு நாளும் பரிச்சேதிக்க அரியனாய்
அபரிச்சேத்யைக ஸ்வரூபனாய்-இப்படி ஸூ த்ருட பிரமாண சித்தனாய் யுள்ளவர்
எம் -என்று ஸ்வ லாபத்தைச் சொல்லுகிறது
நாலாம் பாட்டில் ஸ்வரூபதா ததீந்யம் சித்தம் ஆகையாலே இப்பாட்டில் பிரவ்ருத்தி நிவ்ருத்யம்ச தத் அதீன்யத்திலே தாத்பர்யம் ஆயிற்று
அருணயா பிங்காஷயா சோமாங்க்ரீணாதி-என்கிற இடத்தில் ஆருண் யாதிகளே விதயம் ஆனால் போலே –

————————————————————————–

கீழ் மூன்று பாட்டிலாக –
சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகள் பகவத் அதீனம் என்று சாமா நாதி கரண்யத்தாலும்–வையதி கரண்யத்தாலும் பேசி
அந்த சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனமான ஜகத் -ஈச்வரகளுக்கு உண்டான சரீர சரீரி பாவ சம்பந்தத்தைச் சொல்லுகிறது –
ஜகத்தின் உடைய ஸ்வரூப ஸ்திதி த்யாதிகள் பகவத் அதீனம் ஆகையால் இந்த ஜகத்து அவனுக்கு சரீரம் என்கிறது என்றும் சொல்வர்

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதும் யாய்
ஸ்வ கார்யமான பூத சதுஷ்ட்யங்கள் உண்டாவதற்கு முன்பே உண்டாய் -அவை நசித்தாலும் தான் சில நாள் நிற்குமதான ஆகாசம்
முதலான பூத பஞ்சகங்களையும் உபாதானமாகக் கொண்டு கார்யமாய் விஸ்த்ருதமாகா நின்றுள்ள
தேவாதி பதார்த்தங்களை எல்லாம் உண்டாக்கி –
இங்கு ஆகாசதுக்குச் சொன்ன தார்ட்ட்யம் லோகாயதாதி மத நிராசபரம்
எரியாவது -தேஜஸ் ஸூ
வளியாவது -காற்று –

யவை யவை தொறும் உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே
அவ்வவ பதார்த்தங்கள் தோறும் சரீரத்தில் ஆத்மாவைப் போலே தாரகனுமாய் நியந்தாவுமாய் கொண்டு
வ்யாப்ய பதார்த்தங்களுக்கு தெரியாமே வியாபித்து -அவ்வளவு அன்றிக்கே அப்பதார்த்தங்கள் உடைய புறம்பும் வியாபித்து
காலத்திலே இவற்றை சம்ஹரிப்பதும் செய்த சர்வேஸ்வரன்
முதல் பாட்டு தொடங்கி சொன்ன படியே பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய்
அபாதித பிரமாணமும் ஆகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாய்
ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே -என்றும் கேட்டே வருகையாலே ஸ்ருதி என்று சொல்லப் படுகிற வேதத்திலே
பிரதிபாத்யனாய்க் கொண்டு உளன் –
தாம் அனுசந்தித்த அர்த்தத்துக்கு ஸ்ருதியை சாஷியாகச் சொல்லுகையாலே ஸ்ருதியில் சொல்லுகிற
ஸ்ரீ யபதித்வமும் நாராயண சப்த வாச்யத்வமும் அனுசந்தித்தாராக வேணும்
இவ்வர்த்தத்தில் நிர்தோஷ ஸ்ருதியே பிரமாணமாக பிடிக்கையாலே வேத விருத்தரான பாஹ்யரும்
ஜகத் ஈஸ்வரர்களுக்கு அந்யதா சம்பந்தம் சொல்லும் குத்ருஷ்டிகளும் அர்த்தாத் பிரதிஷிப்தர் ஆனார்கள்

——————————————————-

இப்பாட்டில் இப்படி ஸ்ருதி சித்தனான சர்வேஸ்வரன் ஆகிறான் சிருஷ்டி சம்ஹார கர்த்தாக்களாக பிரசித்தரான
ப்ரஹ்ம ருத்ராதிகளிலே ஒருவன் ஆனாலோ என்று சொல்லுகிற குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள்

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய-
ப்ரஹ்மாதிகள் அறிய ஒண்ணாத ஸ்திதியை யுடைத்தாய் இருந்த பிரகிருதி தொடக்கமாக மேல் உள்ள ப்ராக்ருத பதார்த்தங்கள்
எல்லா வற்றுக்கும் வரிஷ்டமான காரணமாய்
விண் -என்று ப்ராக்ருதி கார்யமான ஆகாச வாசி சப்தத்தை காரணமான பிரக்ருதியிலே பிரயோகிக்கிறார் –

அவை முழுதுண்ட –
ஈஸ்வரனாலும்-அவன் காட்டிய வழியை யுடைய ப்ரஹ்மாவாலும் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ருத்ரனால் சம்ஹார்யம் ஆவது ஏக தேசம் –
சம்ஹர்த்தாவான ருத்ரன் தன்னையும் -அவனுக்கு நிலம் அன்றிக்கே இருந்துள்ள மஹதாதிகளையும் அகப்பட சம்ஹரித்தவன்

பரபரன்
அவன் காட்டின வழியாலே ஏகதேச சிருஷ்டியையும் ஏக தேச சம்ஹாரத்தையும் பண்ணுகையாலே
அஸ்மத் தாதிகளைக் காட்டில் பரராய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நிலம் அல்லாத
சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகையாலே அவர்களுக்கும் பரன் என்றவாறு –

புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –
ருத்ரன் திரிபுர தஹனம் பண்ணினான் என்றும் -ப்ரஹ்மா வைதிக ஜ்ஞானத்தை தேவர்களுக்கு
உபதேசித்தான் என்றும் அவர்களுக்கு பிரசித்தியைக் கொடுத்து
அந்தராத்மாவாக நின்று தானே அவ்வுபகாரங்களை லோகத்துக்கு பண்ணினால் போலே
சமஸ்த சிருஷ்டி சம்ஹாரங்களையும் தானே செய்து அருளுகையாலே வேறேயும் சிலர்
சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுவார் உண்டு என்று சொல்ல முடியாது –

———————————————————————-

இப்படி பிரமாணமும் பிரமேயமும் ஒருபடி உளவாகக் கொண்டு ஈஸ்வர ஸ்வரூபத்திலும்-ஈஸ்வர விசேஷணத்திலும்
விபிரதிபத்தி பண்ணின வாதிகளை எல்லாம் நிராகரித்து
பிரமாணமும் இல்லை பிரமேயமும் இல்லை -சர்வமும் சூன்யம் -ஆதலால் வேதமும் இல்லை -வேத ப்ரமேயமாயும் யுள்ள ஈஸ்வரனும்
-அவனுடைய விபூதியையும் உள்ள ஜகத்தும் இல்லை -என்கிற சூன்யவாதியை நிராகரிக்கிறது

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

எங்கனே என்னில்
சூன்யவாதியான உன்னைக் கேட்போம் -ஈஸ்வரனை இல்லாமையை சாதிக்க நினைக்கிற நீ நினைத்த பொருளை
ஒரு வாக்யத்தாலே பிரதிஜ்ஞை பண்ணி -பின்னை ஹேதுவாலே அத்தை சாதிக்க வேணும் இ றே-
அவ்விடத்தில் நீ ஹேது சொல்லுவதற்கு முன்பே உன் பிரதிஜ்ஞையைக் கொண்டு ஈஸ்வரன் உளன் என்னும் இடமே சாதிப்பன் –
அதுக்காக ஈஸ்வரனுடைய இன்மையை பிரதிஜ்ஞை பண்ணுவது உளன் என்ற சொல்லாலேயோ -இலன் என்ற சொல்லாலேயோ -என்ன
இப்படிக் கேட்கைக்கு கருத்து என் என்னில் –உளன் என்ற சொல்லால் இன்மையைக் காட்ட ஒண்ணாதாப் போலே
இலன் என்ற சொல்லாலே நீ காட்ட நினைத்த இன்மை காட்ட ஒண்ணாது என்றவாறு –அது எங்கனே என்னில்
உண்டு என்ற சொல்லாலும் இல்லை என்ற சொல்லாலும் லோகத்தில் யாதொரு பொருள் விளையக் கண்டோம்
அப்பொருளே உன் சொற்களுக்கும் பொருளாக வேணும் இ றே
கண்டு அறியாததொரு பொருளை இச்சப்தங்கள் காட்ட மாட்டாது இ றே –
லோகத்தில் குடம் உண்டு என்றால் குடம் என்று சொல்லப் படுகிற பொருள் உண்மை எனபது ஒரு தர்மத்தை யுடைத்து என்று தோற்றா நின்றது
அவ்விடத்தில் குடமாவது -மண்ணாலே பண்ணிற்று ஓன்று -அதினுடைய உண்மையாவது மண்ணும் உருளையும் அன்றியே
இரண்டுக்கும் நடுவில் அவஸ்தையாய் வாயும் வயிறும் உடைத்தான மண்ணாய் இருக்கை
இப்படியால் ஈஸ்வரன் உளன் என்னில் உளனாய் வரும் -இச் சொல்லால் அவனுடைய இன்மையைக் காட்ட ஒண்ணாது –
இப்படி ஈஸ்வரன் உளன் என்னவே -ஐஸ்வர்யத்தை ஒழிய ஈஸ்வரன் உளனாகக் கூடாமையாலே அவனுடைய விபூதியான ஜகத்தும் உண்டாம்
-ஆமிடத்திலும் அவனுக்கு சரீரமாயே உளதாம் -இப்பொருள் அவன் உருவம் இவ்வுருவுகள் -என்ற இடத்தில் சொல்லப் பட்டது –

இனி ஈஸ்வரன் இலன் என்ற சொல்லாலே -அவனுடைய இன்மை காட்ட நினைத்தாய் ஆகில் -இல்லை என்ற பொருளிலும்
லோகத்தில் கண்டபடி பொருள் கொள்ள வேணும்
லோகத்தில் குடம் இல்லை என்றால் -இங்கு இல்லை என்னுதல் -இப்போது இல்லை என்னுதல்-மண் உருளையாய் இருந்து
குடமாய் பிறந்தது இல்லை என்னுதல் -தளர்ந்து ஓடுகளாய் கிடந்தது என்னுதல் -இவ்வளத்தில் ஓன்று பொருளாகக் கண்டோம்
இப்படி அன்றியே வெறுமனே குடம் இல்லை என்னில் எங்கும் எப்படியும் குடம் இல்லை என்று சொல்லிற்றாக வேணும் –
அப்படியாகில் எப்படியும் குடம் என்று ஓன்று அறிய உபாயம் இல்லை யாகையால் குடம் என்று சொல்லவும் கூடாது -நினைக்கவும் கூடாது –
ஆதலால் ஓன்று இல்லை என்பானுக்கு ஒருபடியாய் இன்றியே மற்றப்படியால் யுண்டாக இசைய வேணும்
ஆதலால் இங்கு இல்லை என்றது -அப்பாலே யுண்டு என்றவாறு -இப்போது இல்லை என்று மற்றப் போது யுண்டு என்றவாறு
குடம் இல்லை என்றது மண் உருளை யாதல் ஓடுகளாய் ஆதல் இருந்தது என்றவாறு
-இப்படியால் இன்மை யாவது மற்றொரு படியால் உண்மையாகத் தோற்றிற்று

இப்படியால் ஈஸ்வரன் இல்லை என்றானுக்கும் அவன் தன்னையும் அவன் ஐஸ்வர் யங்களையும் ஒருபடியால் உளவாகக் கொண்டு –
அப்படியால் உண்மை என்ற சொல்லாலே சொன்னானாக வேணும்
ஆதலால் உளன் என்ற சொல்லால் அவனும் அவன் ஐஸ்வர் யமும் சித்தித்தால் போலே இலன் என்ற சொல்லாலும்
அவன் தன்னுடைய உண்மையும்-அவன் ஐஸ்வர் யத்தின் உண்மையும் சித்தமாய் வந்தது
இப்பொருள் -உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் -என்றத்தால் சொல்லப் பட்டது
அவன் அருவம் என்றது -அபாவம் என்ற சொல்லாலே சொல்லப் பட்டதான உளதாய் இருந்த அது என்றவாறு

இப்படியால் உண்மையும் இன்மையும் ஆகிறன உள்ள வஸ்துவுக்கே இரண்டு குணமாய் முடிந்தன –
ஆதலால் ஈஸ்வரன் உளன் என்றாதல் -இலன் என்றாதல் -இரண்டு படியாலும் உளனாம்
இவ்வழி யாலே வேதம் உண்டாயிற்று -அதில் சொன்னபடியே அவன் தான் எங்கும் பரந்து உளன் ஆனான்
-இப்பொருள் இப்பாட்டில் மேல் இரண்டு அடியாலும் சொல்லுகிறது -இப்பாட்டு ஆழ்வான் யோஜித்த படி –

——————————————————————-

கீழ்ச் சொன்ன பகவத் வ்யாப்தியினுடைய சௌகர்யத்தை அருளிச் செய்கிறார் –

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென
பரந்த குளிர்ந்து இருந்த கடலில் ஜல பரமாணு தோறும் அசங்குசிதமான அண்ட அவகாசித்தில் போலே வியாபித்து இருக்கும்
நில விசும்பு ஒழிவறக் கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே-
இப்படி எல்லா பூதங்களிலும் -பௌதிகமான ஷூத்ர சரீரங்களிலும் -தத் அந்தர்வர்த்திகளாய்-ஸ்வயம் பிரகாசமாய் உள்ள
ஆத்மாக்கள் தோறும் அன்யைரத்ருஷ்டனாய்க் கொண்டு சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்
இவற்றை எல்லாம் தன் திரு வயிற்றிலே வைத்து சம்ஹரித்தவன் கிடீர் பரமாணுக்களிலும் வியாபித்து இருக்கிறான் என்று கருத்து

————————————————————-

நிகமத்தில்
சமஸ்த கல்யாண குணகரனாய்-நிரவதிக க்ருபாம்போதியாய் -தனக்கு சத்ருசமான திவ்ய தேஹத்தை யுடையனாய் –
ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணைகதா நத்வங்களாலே சேதன அசேதனங்களில் காட்டில் அத்யந்த விலஷண ஜ்ஞானானந்த ஸ்வரூபனுமாய்
ஸ்வ அதீனமான அசேஷ சித் அசித் ஸ்வரூப ஸ்திதி சேஷ்டைகளை யுடையனாய் சமஸ்த ஜகத்தையும் சரீரதயா சேஷமாக யுடையனாய்
அப்ரதிபஷமாம் படி வேத பிரதிபாத்யனாய் வேதங்களில் பரராகச் சொல்லுகிற ருத்ராதிகளுக்கும் பரனாய்
பிரமாணமும் இல்லை பிரமேயமும் இல்லை என்கிற சூன்ய வாதிகளால் அவிசால்யமான தன்மையை யுடையனாய் பரமாணுக்கள் தோறும் புக்கு
அணு தரனாய் வியாபிக்க வல்லனாய் ஸ்ரீ யபதியாய் நாராயணான சர்வேஸ்வரனை தத் பிரசாத லப்தையான ஜ்ஞான த்ருஷ்டியாலே சாஷாத் கரித்து
தத் அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே தனக்குத் தானே பிறந்து இவனுடைய ஏவம் வித பரத்வ பிரதிபதகமாய்
சப்தச் சேர்த்தியையும் அர்த்த பௌஷ்கல்யத்தையும் யுடைத்தாய் இருந்துள்ள இப்பத்தும் எம்பெருமான் திருவடிகளிலே பரிசர்யாரூபமாக பிறந்தன என்கிறார் –

கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

ஸ்வ பாவமான பூத பஞ்சகங்களையும் -தத் உபலஷிதமான கார்ய வர்க்க நித்ய விபூத்யாதிகளையும்
யுடையவன் ஆகையாலே –சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே
கரவிசும்பு -என்னும் இடத்துக்கு -அல்லாத பூதங்களில் காட்டில் அச்சதயா கரந்து இருக்கை என்றும் சொல்லுவர்
திண்மை சொல்லிற்று ஆகவுமாம்
நிரனிறை என்கிற இடத்துக்கு -அர்த்த பௌஷ்கல்யமும்-சப்த பௌஷ்கல்யமும்
பாதபத்தோ அஷர சமஸ்த அந்த்ரீலய சமன்வித -என்றால் போலே சொல்லும் பொருளும் இசையும் தாளமும் அந்தாதியும் அடைவே நிறுத்தப் படுகை என்றும் சொல்லுவர்
பரன் அடி மேல் சொன்ன இவ்வாயிரத்து இப்பத்தும் மோஷ ப்ரதம் என்றும் சொல்லுவார்கள் –

——————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: