திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-4-

நாலாம் திருவாய் மொழியில்
கீழ் மநோ வாக் காயங்களாலே அனுபவிக்கப் பாரித்த இவர்க்கு ஈஸ்வரன் அப்போதே வந்து முகம் காட்டாமையாலே
ஆற்றாமை மேலிட்டு ஆண் பெண்ணாய் ஒரு பிராட்டி தசையை ப்ராப்தராய் -அவள் பேச்சாலே தம்முடைய தசையை அவனுக்கு அறிவிக்கிறார்
ஆர்த்தோ வா யதிவா திருப்த -என்கிற விஷயம் முகம் காட்டாது ஒழிவான் என் என்னில்
தன்னை புஜிக்கைக்கு ஈடான விடாய் பிறக்கைக்காக-பிஷக்குகள் வியாதிக்ரசர்க்கு போஜன நிரோதம் பண்ணுமா போலே எழ நின்றான் –
ஆனால் பிராட்டிமார் தசை பிறந்தபடி எங்கனே என்னில் -அனன்யார்ஹ சேஷத்வத்தாலும் -அந்த சேஷத்வம் அடியாக
அவனோடு கலந்தால் பிராட்டிமார்க்கு உண்டான ரசம் பிறக்கையாலும்
தத் ஏக போகத்வத்தாலும் பிரியில் தரியாமை-நச சீதா த்வயாஹீ நா நாசம் அஹமபி ராகவ -என்று பிராட்டியோடு ஒத்து இருக்கையாலும்
பிராட்டிமாரோடு சாம்யம் யுண்டாகலாம்-
ஆனால் பிராட்டி தானாகப் பேசுவான் என் என்னில் –
தாமரை திருவடிகளுக்குப் போலியாய் இருக்க -ஸூ சத்ருசம் ஆகையாலே மண் விண் முழுது அளந்த ஒண் தாமரை -என்று
தாமரையாகப் பேசுகிறாப் போலே இங்கும் பிராட்டியாகப் பேசுகிறது
ராஜ ருஷி ப்ரஹ்ம ருஷியானபின்பு ஷத்ரியம் பின்னாட்டிற்று இல்லை இ றே -எதிர்த்தலையில் பும்ஸ்வத்தை அழித்து-பெண் உடை உடுத்தும் படி இ றே
அவனுடைய புருஷோத்தமத்வம் இருப்பது
ஆகையாலே இயற்கையிலே புணர்ந்து -அது தான் தெய்வப் புணர்ச்சி யாகையாலே தைவம் பிரிக்கப் பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிறாள் ஒரு பிராட்டி
அவன் தானே வரப் பற்றாமையாலே -அவன் வராமைக்கு அடி நம் பக்கல் உண்டான அபராதம் என்று பார்த்து -அவனுடைய
அபராத சஹத்வத்தை அறிவிக்கவே வரும் என்று -தன் உத்யானத்திலே பஷிகளைத் தூது விடுகிறாள் –
ஆனால் பஷிகளைத் தூது விடுவான் என் என்னில் -பேர் அளவுடையரான சக்கரவர்த்தி திருமகனும் பிராட்டியும்
யுக்தாயுக்த நிரூபணம் ஷமர் அன்றிக்கே
அசோகசோகாபநுதே-என்றும் -ஹம்ஸ காரண்ட வா கீர்ணாம்-என்றும் -சர்வாணி சரணம்யாமி ம்ருக பஷி கணா நபி என்றார்கள் இ றே
அப்படியே இவளும் -இவை நம் வார்த்தை அறியா -என்று பார்க்க மாட்டாதே -கமன சாதனமான சிறகு உண்டு -என்ற இவ்வளவைப் பார்த்து தூது விடுகிறாள்
பட்டர் -சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்து -வானர ஜாதி வீறு பெற்றால் போலே காண்-ஆழ்வார்கள் அவதரித்து பஷி ஜாதி வீறு பெற்றபடி –
தன்னுடைய சேஷத்வத்தை அனுசந்தித்தால் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று அவன் செய்தபடி கண்டு இருக்கலாம்
அத்தலையில் வைலஷண்யத்தை அனுசந்தித்தால் தூது விட்டு அல்லது இருக்க ஒண்ணாது
இவருக்கு யாத்ருச்சிக சம்ச்லேஷமாவது -அநாதி காலம் இவரைத் தன்னோடு சேர விடுகையிலே அவசர ப்ரதீஷனாய்ப் போந்த ஈஸ்வரன்
இவர் பக்கலிலே அப்ரதிஷேதம் உண்டாவதொரு அவகாசம் பெற்று அவன் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற இது –
இவருக்கு விச்லேஷமாவது -அந்த ஜ்ஞானம் பேற்றோடு தலைக் கட்டாமை –

——————————————————————————————-

முதல் பாட்டிலே
தன் கண் வட்டத்திலே சேவலோடு கலந்து இருக்கிற தொரு நாரையைப் பார்த்து
-நீ அவனுக்கு என் தசையை அறிவிக்க வேணும் -என்கிறாள்

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவா வென்று எனக்கு அருளி
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

அஞ்சிறைய –
பிரஜைக்கு தாய் முலையிலே கண் ஓடுமா போலே தனக்கு உபகாரமான சிறகிலே யாயிற்று முற்படக் கண் வைத்தது –
ஆச்சார்யனுடைய ஞானத்தை அனுமித்து சிஷ்யன் உபசத்தி பண்ணுமா போலே கடகருடைய பரிகரவத்தையை அறிந்து பற்ற வேணும் இ றே
அம் -என்று அழகு –சிறை -என்று சிறகு -அழகிய சிறகை யுடைய தன்னைப் போலே உறாவி இராதே
-சேவலோட்டை சம்ச்லேஷத்தாலே செந்தலித்து இருக்கை
ச பங்காம நலங்காராம் விபத்மாமிவ பதமி நீம் -என்று இ றே தன் தசை –

மட நாராய் –
சம்ச்லேஷத்தாலே துவண்டு தூது போகைக்கு யோக்யமாய் இருக்கை
நாண் மடம் அச்சம் -என்று ஸ்த்ரீத்வமாய்-பிரியில் வியசனம் அறியும் தன் இனத்தைப் பார்த்து சொல்லுகிறாள் என்னவுமாம் –

அளியத்தாய் நீயும்

இத்தசையில் அறியும் அனுக்ரஹ சீலையான நீயும்
நின் அஞ்சிறைய சேவலுமாய்
நீ இட்ட வழக்காய் நல்ல கமனத்தை யுடைத்தான சேவலுமாய் –
சேவலைப் பற்றுவது -பேடை முன்னாக வென்றும் -ஆர்த்த ரஷணம் பண்ணுவதும் ஒரு மிதுனம் என்று இருக்கிறாள் –

ஆவா வென்று எனக்கு அருளி
என் தசையைப் பார்த்து ஐயோ ஐயோ என்று
ஏஹி பஸ்ய சரீராணி -என்று தன் வடிவைக் காட்டுகிறாள்
அருளி -கிருபை பண்ணி
இரப்புக்குச் செய்தாகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி –
விக்ராந்தஸ்த்வம் சமர்த்தச்வம் ப்ராஜ்ஞச்த்வம் வா நரோத்தம –
எங்களை ஸ்தோத்ரம் பண்ணுகிறது என் -அங்கே சென்றால் எல்லாரும் சாம்யாபன்னராய் இருக்கையாலே தெரிய ஒண்ணாது
அடையாளம் என் என்று இருக்கிறவனவாகக் கொண்டு சொல்லுகிறாள் –

வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு –
வெவ்விய சிறகை யுடைய பெரிய திருவடியை த்வஜமாக எடுத்தவருக்கு
வரும் போது பிரத்யஷத்தை நிரசித்துக் கொண்டு வரும்படியைச் சொல்லுகிறது
சா மத்வ நித்வஸ் தசமஸ்த பாதகம் –
உயர்க்கை யாகிறது -வஹிக்கையாய்
அக்ரூர க்ரூர ஹ்ருதய -என்னுமா போலே தன்னைப் பிரித்துச் சடக்கென கொண்டு போன கொடுமையைச் சொல்லிற்று ஆகவுமாம்

என் விடு தூதாய்ச்
பெரு மிடுக்கரான பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனை தூது விட்டால் போலேயோ
அபலையாய் அத்யார்த்தை யான நான் விட வன்றோ போகிறது
பரார்த்தமாக தூது போகை கிடப்பது ஒன்றோ –

சென்றக்கால்
அவன் பக்கலில் அன்றோ செல்லுகிறது
உங்கள் வழிப் போக்குத் தானே அடிக் கழஞ்சு பெறாதோ –

வன்சிறையில்
பிரணயிநி பாடு நின்றும் வந்தவர்களை சிறையிடுவான் ஒரு மூர்க்கனும் உண்டோ
இனி சிறை யாகிறது -இவர்கள் வார்த்தையை அநாதரிக்கை
இவர்களைக் கண்ட போதே துணுக் என்று -மதுரா மதுராலாபா கிமாஹ மமபாமி நீ -என்னாமை இ றே

அவன் வைக்கில்
நைவ தம்சான் நமசகான் -என்று ஆதரியாது ஒழியுமோ
வைக்கில்
அநாதரிக்க பிரசங்கம் இல்லை -சிரஸா வஹிக்கும் என்று கருத்து –

வைப்புண்டால் என் செய்யுமோ –
அங்கனே யாகில் அது உங்கள் பேறு அன்றோ –
பரார்த்தமாகச் சிறை இருக்கை கிடப்பது ஒன்றோ -என்று இருக்கிறாள்
தேவ ஸ்த்ரீகளுக்காக தான் சிறை இருந்தவள் இ றே –

——————————————————————————————————

இரண்டாம் பாட்டில்
சில குயில்களைக் குறித்து அவன் பக்கல் சென்றால் சொல்லும் பாசுரத்தைச் சொல்லுகிறாள் –
நாரைகளைத் தூது போக வேணும் என்று அர்த்தித்தாள்-அவை போனால் சொல்லு வார்த்தையை சில குயில்களைக் குறித்துச் சொல்லுகிறாள்
அந்ய துபக்ராந்தம் அந்யதா பதிதமாய் இருந்ததீ -என்னில் -இவ்வசங்கத பாஷணம் பண்ணிற்று இளலாகில்
விஷய வை லஷண்யத்துக்கு நமஸ்காரம் இ றே

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு –
விஸ்லேஷ தசையிலே தான் வரும் தனையும் இவள் தரித்து இருக்கைக்காக -ஆத்மாத்யீங்கள் எங்கேனும் கிடக்கிலும்
உன்னது அன்றோ என்கிற வார்த்தையாலே என்னுடையவர் என்கிறாள்
ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் கலவியாலும் சிவந்த திருக் கண்களை யுடையவர்
இவை எல்லாம் இவள் அனுபவித்தவை இ றே
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வர் யமும் -மூன்றாம் திருவாய் மொழியிலே வாத்சல்யமும் இத் திருவாய் மொழியிலே கலவியும் –

பெருமானார்க்கு –
ஸ்வ பாவிகமான பௌஷ்கல்யத்துக்கு மேலே தன்னைத் தோற் பித்தத்தால் வந்த மேணானிப்பைச் சொல்லுகிறாள் –
சம்ச்லேஷதசையிலே ச்நேஹகமாக நோக்கி -அந் நோக்காலே என்னை அடிமை கொண்டவனுக்கு என்றுமாம் –

என் தூதாய்
அந் நோக்குக்கு இலக்காய்-இன்று வெறும் தரையான என் தூதாய்

என் செய்யும் உரைத்தக்கால்
அவனோடு கூட்டச் சொல்லுகிறேனோ -ஒரு வார்த்தை சொன்னால் என்ன சேதமுண்டு -ஆர்த்த ரஷணம் சிலருக்கு கிடைப்பது ஒன்றோ

இனக் குயில்காள் –
இனமாய் இருப்பார்க்கு -தனியாய் இருப்பாரைக் கூட்ட வேண்டாவோ

நீரலிரே-
நானும் அவனும் சேர இருந்த போது -போது போக்கக் கடவர்கள் அல்லீர்களோ –
நீர்மைக்கு நீங்கள் என்னும் அத்தனை அன்றோ -என்னவுமாம்
போனால் சொல்லும் பாசுரம் அறியாமல் இருக்கிறவனவாகக் கொண்டு சொல்லுகிறாள் –

முன் செய்த முழு வினையால் –
அநாதி கால சஞ்சிதமான பாபத்தாலே -பாபம் சாவதியாதல் -பாபம் பண்ணின காலம் சாவதி யாதனால் அன்றோ என் கையில் என்னைக் காட்டித் தருவது
இதிகாசம் -பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே -தெற்கு ஆழ்வானும்-கோளரி ஆழ்வானும் என்று இருண்டு திருப்பதியார் உண்டு
கோளரி ஆழ்வான் சதாசார பரனாய் இருக்கும் -தெற்கு ஆழ்வான் மேல் எழத் திரியும்
ஒரு விசேஷ திவசத்திலே இருவரும் சேர்ந்த அளவிலே கோளரி ஆழ்வான் தெற்கு ஆழ்வானை
இன்று ஆகிலும் ஒரு முழுக்கு இட மாட்டாயோ -என்ன -என்னுடைய பாபம் தெற்கு ஆழ்வார் கையில்
திரு ஆழி யாலே போக்கப் போமது ஒழிய ஓர் இரண்டு முழுக்கால் போம் அதன்று காண் என்ன
அத்தைக் கேட்டு இவனை மேல் எழ விசாரித்தோமே-என்று வித்தராய் அருளினார் பட்டர் –

திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ-
திருவடியின் கீழ் அந்தரங்க வ்ருத்தி பண்ணுகைக்கு ஏற்கவே ப்ரவர்த்திக்க பெறாத நான் அகன்றே போம் அத்தனையோ –
முன் செய்ய முயலுகை யாவது -அதுக்கு ஈடான பாக்யத்தைப் பண்ணுகை
க்ரியதாமித மாம்வத -என்றும் – முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்றும் சொல்லுகிறபடியே கண் வட்டத்தில் நின்று
பண்ணுகைக்கு ஈடாக முயலாத நான் அகன்றே போம் இத்தனையோ என்றுமாம்
தந்தாமுக்கு என்ன ஓன்று இல்லாதார் தய நீயர் அன்றோ என்று கருத்து
த்வத்க்ருபா சங்கு சந்தீ-என்னக் கடவது இ றே –

விதியினமே
விதி என்று பாபமாய் -விதியை யுடையோம் –பாவியோம் என்றபடி
கீழே முழு வினை என்று சொல்லிற்றே-என்னில் மகா பாபத்தைப் பண்ணின பாவியோம் என்றபடி
பாவமே செய்து பாவியானேன் -என்னக் கடவது இ றே
அன்றிக்கே
எங்கள் தலையில் குற்றத்தை இசைந்த பின்பும் அகலும் அத்தனையோ -என்றுமாம்
இனம் -இன்னம் -விதி -உன் கருத்து

——————————————————————————————————-

மூன்றாம் பாட்டில்
அத்தலையில் இரக்கத்தால் என் பாபம் போகை தவிர்ந்தால் அனுபவ வி நாச்யம் அன்றோ என்று
சொல்லுங்கோள் என்று சில அன்னங்களை அர்த்திக்கிறாள்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய வன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-

விதியினால் பெடை மணக்கும் –
என் பாக்யத்தால் பேடையோடே சம்ச்லேஷிக்கும் –
பேடையின் கருத்து அறிந்து உகப்பிக்கும்
என் ஆற்றாமைக்கு மேலே -நீங்களும் பிரிந்து இருந்து -உங்களைக் கூட்டுகையிலே யத்னம் பண்ண வேண்டாது ஒழிந்தது என் பாக்யம் இ றே
உங்கள் பாக்யத்தால் இ றே சம்ச்லேஷமே யாத்ரையாக பெற்றது என்னவுமாம்

மென்னடைய வன்னங்காள்-
சம்போகத்தாலே வந்த துவட்சியால் ஆகர்ஷகமான நடையை யுடையவையாகை –
தாரை யுடைய புறப்பாடு போலே இருந்ததீ உங்கள் புறப்பாடும் –

மதியினால்
ஔதார்யம் என்பதொரு குணம் உண்டாகையாலே மகாபலியை அழிக்க ஒண்ணாது –
இந்த்ரன் ராஜ்யம் பெற வேணும் என்று புத்தி யோகத்தால் தன்னை அர்த்தி ஆக்கினான் –

குறள் –
பால் செல்லச் செல்ல ரசிக்குமா போலே சிறுகின வடிவு ஆகர்ஷகம் ஆனபடி
மாணாய்
உண்டு என்ற போதோடு இல்லை என்ற போதோடு வாசி அற முக மலர்ந்து போம்படி இரப்பிலே தகண் ஏறின படி

உலகிரந்த
தன்னதான பூமியை அவனதாக்கி அவன் பக்கலிலே பெற்றானாய் இருக்கை
கள்வர்க்கு
அப்படிப்பட்ட வஞ்சகருக்கு -என்பர் ஆளவந்தார்
அன்று அச்செயல் செய்ததும் -அக்குண சேஷ்டிதங்களாலே என் நெஞ்சை அபஹரித்து ஈடு படுத்துகைக்காக இ றே -என்பர் எம்பெருமானார்

மதியிலேன்
பிரிவை பிரசங்கித்த அளவிலே போகாதே கொள்ளும் என்று ஓர் உக்தியால் விலங்கிட்டு வைக்கலாய் இருக்க
அதுவும் கலவியில் ஒரு வகையோ என்று இருந்த மதி கேடியான என்னுடைய –
வல்வினையே மாளாதோ வென்று
பாக்யவதி யாகையாலே அனுபவ விநாச்யமான பாபத்தைப் பண்ணினாள் சிந்தயந்தி –
நான் பண்ணின பாபத்துக்கேயோ முடிவு காணாது ஒழிகிறது
தத் சித்த விமலாஹ்லத-இத்யாதி -இவர் தம்மை தீர்க்க சிந்தயந்தி என்று இ றே நம் முதலிகள் சொல்வது –

ஒருத்தி
ஒருத்தி என்னவே இன்னாள் என்று தானே அறிகிறான் இ றே
உபய விபூதியிலும் இப்பாடு பட்டாள் இவள் ஒருத்தியுமாயிற்று
நித்ய விபூதியில் உள்ளார் விச்லேஷம் அறியார்கள்
சம்சாரிகள் விஷய ப்ரவணராய் அறியார்கள் –

மதி எல்லாம் உள் கலங்கி-
நீர் கொடுத்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கிற்று என்று சொல்லுங்கோள் –

மயங்குமால் –
இப்போது அறிவு போயிற்று ஆகில் பின்பு அறிவு உண்டாகிறது என்று இராமே முடியும் தசை யாயிற்று என்னுங்கோள் –

என்னீரே –
உங்கள் அவயத்தை பரிஹரியுங்கோள் -அறிவித்தால் பின்பு அவத்யம் அவனது இ றே

—————————————————————————————————–

நாலாம் பாட்டில்
என் பிரகிருதி அறிந்து வைத்து இறங்காதே போகட்டுப் போனவர்க்குச் சொல்லலாவது உண்டோ -என்று
நைராச்ராயம் தோற்ற சொல்லி -பின்னையும் சாபல அதிசயத்தாலே சில மகன்றில்களைக் குறித்து என்னிடையாட்டம் அவனுக்கு
அறிவிக்கிறி களோ -அல்லி களோ -என்கிறாள்
மகன்றில்கள் என்று அன்றில்களிலே ஓர் அவந்திர பேதம்

என்நீர்மை கண்டிரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-

என்நீர்மை கண்டிரங்கி இது தகாது என்னாத
என் பிரகிருதி மார்த்வத்தைக் கண்டு வைத்து -ஐயோ என்று இது பிரிவு தகாது என்னாதவர் இவள் பிரகிருதி மார்த்வத்தைக் கண்டால்
நிர்க்குணர்க்கும் இரங்க வேண்டிக் காணும் இருப்பது– ஆனால் இப்போது இவள் பிரிவை அவன் கண்டானோ என்னில்
கலக்கிற போது அணைக்கைக்காக கை நெகிழ்ந்த போது அதுவும் பொறாத படி அறியும் இ றே
ஊருண் கேணி –புல்லிக் கிடந்தேன் –

என் நீல முகில் வண்ணர்க்கு-
அடியில் வடிவைக் காட்டியாயிற்று அனன்யார்கை ஆக்கிற்று
இவ்வடிவில் உள்ளது அகவாயிலும் உண்டாகப் பெற்றிலோம்
சில பதார்த்தங்கள் உருவு அழகியதாய் -அகவாய் நஞ்சாய் இருக்குமா போலே காணும் –

என் சொல்லி யான் சொல்லுகேனோ
என்ன பாசுரத்தைச் சொல்லி உங்களுக்கு நான் சொல்லி விடுவது
என் தசையைக் கண்டு இரங்காதவர்-உங்கள் பேச்சைக் கேட்டோ இரங்கப் புகுகிறார்
கண்டவர்க்கு சொல்லி விடுவது ஒரு பாசுரம் உண்டோ
அதவா கிந்த தலாபை அபராக்ரியதாம் கதா -என்று நிராசை ஆனவர்கள் -அப்யசௌ மாதரம் த்ரஷ்டும் சக்ருதப்யா கமிஷ்யதி -என்றால் போலே
பின்னையும் தன் ஆற்றாமையாலே நல்குதிரோ நல்கீரோ -என்கிறாள் –

நன்னீர்மை
நற்சீவன்
ஜீவந்தீம் மாம் யதா ராம

இனி
பாடு ஆற்றலாவது எல்லாம் ஆற்றினாள்-இனித் தாங்க மாட்டாது

யவர் கண் தங்காது
சேஷியான உம்முடைய பக்கலிலே தங்கில் தங்கும் இத்தனை
என்று ஒரு வாய்ச் சொல்
என்று ஒரு வார்த்தை சொல்லு

நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –
நன்றான நீல நிறத்தை யுடைய மகன்றில்காள் -உங்களுக்கு நிறம் அவனைப் போலே இரா நின்றது
-உள்வாயும் அவனைப் போலேயாய் அநாதரிக்கப் புகுகிறி களோ –
அன்றிக்கே இத்தலையில் முகம் காட்டின உங்கள் ஸ்வ பாவத்தாலே நல்குதிரோ என்கிறாள் –

——————————————————————————————————

என்னை உபேஷித்தால் -சர்வ ரஷகத்வத்தால் பூர்ணனான தன்னுடைய நாராயணத்வம் விகலம் ஆகாதோ
என்று அருவி என்று ஒரு குருகை அபேஷிக்கிறாள்

நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படைப்பை இறை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

நல்கித்தான்
விபூதி ரஷணம் பண்ணும் போது-கர்த்தவ்ய புத்தியால் அன்றிக்கே பேறு தன்னதாகக் கிடீர் ரஷிப்பது
எனக்குத் தன் பக்கல் உண்டான வ்யாமோஹம் தனக்கும் தன் விபூதியில் உண்டாயிற்று ரஷிப்பது
ச்நேஹமாக
தான் அபேஷிப்பார் இன்றிக்கே இருக்கத் தானே ரஷிக்குமவன் –

காத்து அளிக்கும்
காப்பதும் செய்து -கிருபை பண்ணுவதும் செய்யும் –

பொழில் ஏழும்
பூமியாய் நித்ய விபூதிக்கும் உப லஷணம் –

வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ
ரஷகன் அநாதரித்தாலும் விட மாட்டாத படியான பாபத்தை பண்ணின எனக்கயோ நாள்கள ஆகாதது
நாட்டுக்கு இட்ட நினைப்பும் அந்தப்புரத்துக்கு அரிதாக வேணுமோ –

நாரணனைக் கண்டக்கால்
குணங்களில் ஞானானந்த அமலத்வங்கள் நிரூபகம் ஆனால் போலே யன்றோ சப்தங்களில் இத்திருநாமம்
இத்தாலே நிரூபிதமான வஸ்து வுக்கு சில விசேஷங்களைச் சொல்லுகிறது அத்தனை அன்றோ மற்றைத் திரு நாமங்கள்
நாரங்களில் ஓன்று குறைந்தாலும் தன் கார்யம் ஒறுவாம் அன்றோ
என் சத்தையில் அபேஷை இல்லையாகிலும் தன் சத்தையில் அபேஷை இல்லையோ என்று சொன்னேன் என்று சொல்லுங்கோள் –

மல்கு நீர்ப் புனல் படைப்பை
மிக்க நீரை யுடைத்தான-நீர் நிலங்களிலே கொடித் தோட்டங்களிலே
திருவடியைப் போல் கடல் கண்டு தேங்க வேண்டாவே உனக்கு –

இறை தேர் வண் சிறு குருகே
உன்னுடைய சஹசரத்துக்கு கொடுக்கைக்காக இறை தேடும் ஸ்வ பாவம் இ றே உள்ளது
உபவாசக்ருசையாய் இருக்க நினையாதே இருக்கும் அவனைப் போல் அன்றே
கார்ய காலத்திலெ சிறுக வேண்டாவே உனக்கு –

மல்கு நீர்க் கண்ணேற்கு
தய நீய தசையை ப்ராப்தையாய் இருக்கிற எனக்கு
தனக்கு நிரூபகம் அது போலே காணும் –

ஓர் வாசகம் கொண்டு அருளாயே –
ஒரு மாற்றம் கேட்டுச் சொல்ல வேணும்
ஓர் வாசகம் -அவன் வேண்டா என்னும் வார்த்தையும் அமையும்
அருளாயே
சொல்ல வேணும் என்னும் ஸ்தானத்திலே அருள வேணும் என்கிறது
எதிர்தலை திர்யக் ஆக்கவுமாம் -தான் ஜனக குலத்தில் பிரக்க்கவுமாம் –
இவ்விஷயத்தில் உபகாரகரை இங்கன் அல்லது சொல்ல விரகில்லை –

————————————————————————————-

இத்தனை தண்ணியரோடு கலந்து வரும் நிறக் கேட்டில் நாராயணத்வம் விகலமாக அமையும் என்னில்
அதுவும் விகலமாகாதே-என் சத்தையும் கிடந்தாதாம் படி ஒரு விரகு சொல்கிறேன் –
அத்தைச் செய்யக் சொல் என்று ஒரு வண்டை அபேஷிக்கிறாள் –

அருளாத நீர் அருளி அவராவி துவராமுன்
அருளாழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருளாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே –1-4-6-

அருளாத நீர் –
அவள் பக்கல் அருளக் கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்து இருக்கிற நீர் -மயர்வற மதிநலம் அருளினன்-என்று ஓரடி போகமாட்டாதே நெஞ்சு உருகின இவர்
அருளாத நீர் என்னும் போதைக்கு என்ன அபஸ்மார விசேஷம் அறிகிலோம் -என்று பிள்ளான் –
அருளாத நீர் என்று திரு நாமம் சாற்றுகிறாள் -என்று சீயர்

அருளி
அவள் தய நீய தசையைக் கண்டு அருள வேணும் –
இதுக்கு முன்பு இப்படி தய நீயர் இல்லாமையாலே கிருபை பண்ணாது இருக்கிற நீர் என்னவுமாம்

அவராவி துவராமுன்
அருளும் போது அவள் முடிவதற்கு அருள வேணும் –
ஜீவந்திம் மாம் யதா ராமஸ் சம்பாவயதி கீர்த்திமான் -தத்த்வயா ஹ நுமன் வாஸ்யோ வாசா தர்ம மவாப் நுஹி
அருளே நிரூபகமான ஸ்வரூபம் உம்மது -நிர்த்தயர்க்கும் ஐயையோ என்ன வேண்டும்படி அவளது தசை
அருளாது ஒழியும் படி எங்கனே –

அருளாழிப் புட்கடவீர்
என்னைப் பற்றி வந்தார் என்னும் நிறக்கேடு தமக்கு பிறவாதபடி
அழகு செண்டேற -என்னுதல்-
ஆனைக்கு அருள் செய்ய என்னுதல்
ஒரு வியாஜத்தாலே எங்கள் தெருவே வழி போக அமையும்
நாங்களும் ஜாலகரந்த்ரத்தாலே காண எங்களுக்கு அருளினீர் ஆகவுமாம்
அருள் கடலான புள்
வெஞ்சிறைப் புள் -என்றால் கொடு போகையாலே
இப்போது வரவுக்கு உடலாகையாலே -அருளாழிப் புள் என்கிறாள் –

ஒருநாள் என்று
பல நாள் ஒரு தெருவே போகா நின்றால் -இது வெறுமன் அன்று என்று இரார்களோ என்னில் -ஒரு நாள் அமையும்
அருளாழி அம்மானைக் கண்டக்கால்
பெரிய திருவடி யுடைய கிருபையும் மிகை என்னும் படி என்றோ அவன் நீர்மை இருப்பது
அருள் கடலான சர்வேஸ்வரன் -அவன் பக்கல் அருள் மறுத்தாலும் மறுக்காத திரு வாழி என்று திரு வாழிக்கு விசேஷணம் ஆகவும் –

இது சொல்லி அருள்
அருளாழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று வார்த்தையைச் சொல்லி அருள வேணும் –

அருளாழி வரி வண்டே
கம்பீர ஸ்வ பாவத்தையும் -சரீரத்தில் வரியையும் யுடைய வண்டு -என்னுதல்
வட்டமான வரியை யுடைய வண்டு என்னுதல்
ஸ்ரமஹரமாய் அழகிதான வண்டு என்னுதல்
வட்டமாகப் பறக்கிறது என்னுதல்
கடகருடைய ஆத்மகுணத்தோ பாதி ரூப குணமும் உத்தேச்யம் என்கை

யாமும் என் பிழைத்தோமே
இவ்வளவும் செய்யாமைக்கு -நாங்கள் என்ன பிழை செய்தோம்
தாமே யன்றிக்கே நாங்களும் செய்த குற்றம் உண்டோ
பிரணயி நிக்கு குற்றமாவது பிரிந்தாலும் ஆறி இருக்கி இ றே

————————————————————————————————-

தம்முடைய அபராத சஹத்வத்துக்கும் நிலம் அன்றோ -என் பிழை என்று அவர்க்கு அறிவி என்று தன் கிளியை நோக்கிச் சொல்லுகிறாள்
இத்திருவாய் மொழிக்கு நிதானமான பாட்டாயிற்று இது –

என் பிழை கோப்பது போலப் பனிவாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே யான் வளர்த்த நீயலையே –1-4-7-

என் பிழை கோப்பது போலப்
எலும்பிலே துளைத்து நூலைக் கோக்குமா போலே

பனிவாடை
பாவ கப்ரதிமோ வவௌ-என்கிறபடியே பண்டு குளிர்ந்து போரும் வாடை இப்போது பாதகம் ஆகிறபடி

ஈர்கின்ற
ஈரா நின்றது -விரஹ க்ருசையாய் இருக்கிறதின் மேலே பாதக வர்க்கம் நலிகிற படி
பத்மசௌ கந்திகவஹம்

என் பிழையே நினைந்து அருளி
வாடை நலிந்த படி போராது என்று கீழாண்டை சிகையை யாயிற்று கணக்கு இடுகிறது
அவிஜ்ஞ்ஞாதா வாகை தவிர்ந்து இப்போது சஹாஸ்ராம்சு -என்கிறபடியே தோஷத்தில் சர்வஜ்ஞ்ஞாராய் யாயிற்று இருக்கிறது

அருளாத திருமாலார்க்கு
என் பிழை பார்த்துக் கை விட்டு -ந கச்சின் ந அபராத்த்யாதி -என்னும் அவளோடு அணைய இருக்கிறாரோ
நம் அபராதங்களைப் பொறுப்பிக்கும் பிராட்டி சந்நிதியில் அறிவி என்னவுமாம்
அபராதங்களைக் கணக்கு இடுகைக்கு அவளும் கூட்டுப் போல காண் -என்றும் சொல்வர்

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு
ஸ்வாமியான உம்முடைய தகவினுக்கு என்ன தப்புச் செய்தாள்
அபராத சஹத்வம் ஆகிறது -ஷமை-அதுக்கு அடியான தயை -தகவாகிறது
என் பிழை அநாதி கால ஆர்ஜிதம் ஆனாலும் தம்முடைய ஷமைக்கு எவ்வளவு போரும்
கிம் கோப மூலம் மனுஜேந்திர கஸ்தேன சந்திஷ்ட்ட திவாங்நிதேச

திருவடியின் தகவினுக்கு
இழவு-பேறு தம்மதாம் படியான குடல் தொடக்கு உண்டாய் இருக்க குற்றத்தைக் கணக்கு இட்டது அமையாதோ
பிராப்திக்குப் போராது -ஷமைக்கும் போராது –

என்று ஒரு வாய்ச் சொல்
ஒரு வார்த்தை சொல்லு

என் பிழைக்கும் இளங்கிளியே
பருவத்தாலும் நிறத்தாலும் வாயின் பழுப்பாலும் பேச்சின் இனிமையாலும் சர்வதா சத்ருசம் ஆகையாலே
உன் வடிவைக் காட்டி எலும்பை இழைக்கிற நீ ஒரு வார்த்தை சொன்னால் என்ன தப்பு உண்டாம் என்னவுமாம்

யான் வளர்த்த நீயலையே
கலந்தார் செய்யுமவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ
நிவாகர் அல்லாத ஸ்வ தந்த்ரர் செயலை நீயும் செய்யவோ

———————————————————————————–

தன் தசையைக் கண்டு உறாவுகின்ற தன் பூவையைக் குறித்து தன்னுடைய அவசாதத்தைச் சொல்லுகிறாள்

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோயெனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-7-7-

நீயலையே
என் அவசாதத்தைச் சென்று சொல் என்ன -செருக்கு அடித்து இருந்தாய் நீ யன்றோ -இதுக்குச் சொன்னாளோ என்னில்
கீழில் அவற்றுக்குச் சொல்லிற்று எல்லாம் இதுக்கும் சொல்லிற்று என்று இருக்கிறாள் -கலக்கத்தின் மிகுதியால்
இன்று என் அவசாதத்தைக் கண்டு தளர்ந்து இருக்கிற நீ யன்றோ அன்று செருக்கு அடித்தாய் என்றுமாம் –

சிறு பூவாய் –
உன் பால்யம் நம் கார்யம் கெடுத்தது இல்லையோ-

நெடுமாலார்க்கு –
சர்வேஸ்வரன் என்னுதல்
ஆஸ்ரிதர் பக்கல் அதி வ்யாமுக்தன் என்னுதல்

என் தூதாய்
அன்று அவன் வ்யாமோஹத்துக்கு இலக்காய்-இன்று வெறும் தரையாக இருக்கிற என் தூதாய் –

நோயெனது நுவல் என்ன-
நோயைச் சொல் என்ன -இவள் நோய் என்றால் வியாவர்த்தமாய் யாயிற்று இருப்பது
ஸ்ரீ பரதாழ்வான் நோய் என்றால் சாதுர்த்திகமாய் இராதே
ஜடிலம் –
புத்ரவ்யாதிர் நதே கச்சித்
சம்சாரிகளுக்கு சப்தாதி விஷயங்களில் இழவு பேறாகையாலே பகவத் விச்லேஷம் அறியார்கள்

நுவலாதே இருந்து ஒழிந்தாய்-
நோய் அறியாமை சொல்லாது இருந்தாய் இல்லை
நான் ஏவாமை அன்று
செல்வப் பிள்ளைத்தனம் அடித்து இருந்தாய் அத்தனை இ றே
அத்தலையில் வ்யாமோஹம் அது
இத்தலையில் நோவு இது
இரண்டு தர்மியையும் ஓர் உக்தி மாத்ரத்தாலே நோக்கலாய் இருக்க வன்றோ நீ ஆறி இருந்தது

சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் –
அது போகிறேன் என்று உத்யோகித்தது –
இனி யாரை நோக்கப் போகிறாய் என்கிறாள்
சமுதாய சோபையோடு கூடின அழகிய நிறத்தை இழந்தேன்

இனியுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–
இனி உனக்கு செய்ய அடுப்பது -உன் பிரகிருதி அறிந்து வளர்ப்பாரைத் தேடுகை காண்
சரம தசையில் தம்முடைய திரு ஆராதனப் பிள்ளையைப் பார்த்து -வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே-
என்று அருளிச் செய்தார் பெரிய திருமலை நம்பி –

————————————————————————————————-

முன்புத்தை வாடை போல் இன்றிக்கே -தன்னை முடிக்க அவன் வரக் கடவ வந்ததாகத் தோற்றிற்று ஒரு வாடையைப் பார்த்து
தனக்கு சேஷமான வஸ்து இங்கனே முடிந்து போம் அத்தனையோ என்று அவனுக்கு அறிவித்தால்
அவன் உபேஷித்தான் ஆகில் பின்னையும் நான் இராமே முடிக்க வேணும் என்று இரக்கிறாள்

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்று இருத்தல் வினை யற்றது என் செய்வதோ –
ஊடாடு பனி வாடாய் உரைத்தீராய் எனதுடலே –1-4-9-

நாடாத மலர் நாடி –
அபி நிவேசத்துக்கு ஈடாகத் தேட வரிதான புஷ்பங்களைத் தேடி -எண்டிசையும் உள்ள பூக் கொண்டு -என்னுமா போலே

நாடோறும்
விச்சேதியாத படி
கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெரும் வஸ்துவுக்கு விச்சேதம் ஸ்வரூப ஹானி இ றே

நாரணன் தன் வாடாத மலர் அடிக்கீழ்
சர்வ ஸ்வாமி யானவனுடைய ஏக ரூபமான செவ்விப் பூ போலே இருந்துள்ள திருவடியின் கீழே
அகிஞ்சித்கரமான வன்றும் விட ஒண்ணாத படி நிரதிசய போக்யமான திருவடிகள்

வைக்கவே வகுக்கின்று
ஸ்ருஷ்டச்த்வம் வன வாசாய -என்னுமா போலே இதுக்காக வாயிற்று இவனை உண்டாக்கிற்று
வைக்க
சேர்க்க
சேஷ பூதனுக்கு கிஞ்சித் காரத்தாலே ஸ்வரூப லாபம் ஆனால் போலே சேஷிக்கும் கிஞ்சித் கரிப்பித்து கொண்டு அத்தாலே இ றே ஸ்வரூப சித்தி

வீடாடி வீற்று இருத்தல் வினை யற்றது
வீடு என்று விச்லேஷம்
ஆடுகை -அதிலே அவஹாகிக்கை
வீற்று இருத்தல் -அதிலே மூர்த்தாபிஷிக்தனாகை
வினை -நல்வினை
அறுகை -ஷயிக்கை
விச்லேஷத்திலே அவஹாகித்து -அதிலே மூர்த்தாபிஷிக்த மாம்படி பாஹ்ய ஹீனனான இருப்பு
பாஹ்ய ஹீனனான இவ்வாத்மவஸ்து என்னவுமாம் –
வீறு என்று வேறுபாடே உறவுமுறையாரோடு தொற்றுகைக்கும் உம்மைப் பிரிந்து இருக்கைக்கும் ஈடான இப் போலா இருப்பு என்னவுமாம்
எமராலும் பழிப்பு உண்டு இங்கு என் தம்மால் இழிப்பு உண்டு -என்னும்படியே

என் செய்வதோ –
என் செய்யுமோ
எதுக்காக என்னவுமாம்
இது ஓர் இருப்பும் அல்ல -இதுக்கு ஓர் பிரயோஜனமும் இல்லை என்றபடி

ஊடாடு பனி வாடாய்
ஊடு என்று உள்ளு
ஆடுகை -சஞ்சரிக்கை
அந்தரங்கமாக சஞ்சரிக்கை
அங்கோடு இங்கோடு அந்தரங்கமாய்க் கொண்டு சஞ்சரிக்கிற குளிர்ந்த காற்றே
சம்ச்லேஷ தசையிலே எனக்குப் பாங்காக சஞ்சரித்த நீ யன்றோ -என்றும் சொல்லுவர்

உரைத்து
அவனும் என் ஸ்வரூபத்தை விச்மரிக்கையாலே உங்களை வரக் காட்டினாநித்தனை
வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று -என்கிற பாசுரத்தைச் சொல்லி

ஈராய் எனதுடலே –
அவனால் வரும் நித்ய கைங்கர்யமும் வேண்டா -என்று உபேஷித்தான் ஆகில் அவசியம் வந்து ஈர்ந்து போக வேணும்
எனதுடலே
அவனோட்டைப் பிரிவுக்கும் நெஞ்சு இளையாத இந்த சரீரத்தை முடிக்க வேணும்
இப்போது இருப்பு தேட்டம் ஆனால் போலே அப்போது முடிவு தேட்டமாம் இ றே –

—————————————————————————————————————————

கீழ் பிரஸ்துதமான சேஷத்வத்தை நினைத்து பற்றுகிற திரு உள்ளத்தை -நம் கார்யம் உறுதி படும் தனையும் என்னைக் கை விடாதே கொள் -என்கிறாள்.
கீழே தூத பிரகரணம் ஆகையாலே மனசைத் தூது விடுகிறாள் என்பாரும் உண்டு

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே -1-4-10-

உடல் ஆழிப் பிறப்பு-
சக்ர ரூபமான சரீரங்க ளிலே பிறப்பு

வீடு -மோஷம் –
இப்போது மோஷம் என் என்னில் -மோஷார்த்தம் இ றே சிருஷ்டி

உயிர் முதலா
நித்தியமான ஆத்மாவை உண்டாக்குகையாவது சரீரத்தோடு கூட்டுகை

முற்றுமாய்
இவை முதலான எல்லா வற்றையும் உண்டாக்குகைக்காக
முற்றுமாய் என்கிறது பஹூச்யாம் என்கிற சுருதி சாயையால்
அசங்க்யேயமான சரீரங்களையும் சரீரஸ்தமான யுடைய ஜென்மத்தையும் ஆத்மாவையும்
இவை முதலான எல்லாவற்றையும் உண்டாக்குக்கைக்காக என்றுமாம்
அப்போது ஆழி என்று காம்பீர்யமாய் அபரிச்சின்ன மான சரீர பேதங்கள் என்றபடி

கடலாழி நீர் தோற்றி
அகாதமான நீரை யுடைத்தான கடலைத் தோற்றுவித்து -அப ஏவ சசர்ஜா தௌ-என்கிறபடியே ஏகார்ணவத்தை சிருஷ்டித்து

அதனுள்ளே கண் வளரும்
இப்பால் உண்டான ஸ்ருஷ் ட்யாதிகளுக்காக அதிலே கண் வளரும்
இப்போது காரணத்வம் சொல்லுகிறது –
இத்தை உண்டாக்கினவன் அறிவித்தால் விடான் என்கைக்காக –

அடலாழி அம்மானைக்
ஆஸ்ரித விரோதி நிரசன சீலமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரனை
கண் வளரும் அடலாழி அம்மானை என்று காரண அவஸ்தையிலும் நித்ய விபூதி விக்ரஹம் திவ்யாயுதம் இவற்றினுடைய சத்பாவம் சொல்லிற்று
கண்டக்கால் இது சொல்லி
கீழ் வைக்கவே வகுக்கின்று -என்ற வார்த்தையைச் சொல்லி

விடலாழி
விடாதே கொள் -கம்பீரமான -சுழன்று வருகிற
மட நெஞ்சே வினையோம்
பவ்யமான நெஞ்சே -பேதை நெஞ்சே –
அவன் தொடங்கின கார்யத்துக்கு இன்று நாம் வழி பார்த்து இருக்கும் படி பாபத்தைப் பண்ணின நாம்
ஒன்றாம் அளவே
நம் கார்யம் ஓர் அறுதி பிறக்கும் தனையும்
சாயுஜ்யம் ப்ரதிபன்னா யே-என்கிறபடியே அவனோடு சேர்ந்து விடும் அளவும் என்றுமாம் –

அடலாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி வினையோம் ஒன்றாம் அளவே-என்னை விடேல்
தூதான போது அவனைக் கண்டக்கால் இது சொல்லி நம் கார்யம் அறுதி படும் அளவும் அவனை விடாதே கொள் -என்று அந்வயம்

———————————————————————–

நிகமத்தில்
இத்திருவாய்மொழி கற்றோர் பரமபதத்தில் முக்ய பிராப்தமான மஹா சம்பத்தைப் பெறுவர்-என்கிறார் –

அளவியன்ற வேழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் ஆய்ந்து உரைத்த
அளவியன்ற யந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-

அளவியன்ற வேழ் உலகத்தவர் பெருமான் –
ததோ தத்ருசுராயந்தம் விகாசி முக பங்கஜம் -என்கிறபடியே தம் இழவுதீர வந்து தோற்றின படியை அருளிச் செய்கிறார் –

அளவியன்ற
அபரிச்சேத்ய மஹிமா யாகையாலே இவ்வளவிலே வந்து முகம் காட்டுகைக்கு ஈடான ஜ்ஞானாதி குண பூரணன் -என்கை

வேழ் உலகத்தவர் பெருமான்
நாராயணத்வம் விகலம் ஆகாதபடி சர்வேஸ்வரன் ஆனான்
ஏழு உலகத்தவர் என்று தம்மையும் கூட்டிக் கொள்ளுகிறார்

கண்ணனை
இவ்வளவில் முகம் காட்டிற்று இலன் -என்ற குறை தீருகையாலே ஆஸ்ரித ஸூ லபனானவன்
பத்துடை அடியவரில் கிருஷ்ணாவதாரத்தில் அனுபவிக்கப் பார்த்து அது கிடையாமையாலே தூது விட்டார் ஆகையாலே
இங்கு முகம் காட்டின கிருஷ்ணன் என்னவுமாம் –

வளவயல் சூழ் வண் குருகூர்ச்
வளவிதான வயல் சூழ்ந்து நிரதிசய போக்யமான ஊர்
இவர் உறாவின போது -அபிவ்ருஷா பரிம்லாநா -என்கிறபடியே உறாவின ஊர் இவர் தரித்த வாறே
அகால பலி நோ வ்ருஷா -என்கிறபடியே தளிரும் முறிவும் ஆனபடி

சடகோபன் ஆய்ந்து உரைத்த
கிட்டி உரைத்த –அதாகிறது மானசமான கிட்டுதலாய் -ப்ரேமார்த்ரசித்தராகை

அளவியன்ற யந்தாதி ஆயிரத்துள்
அபரிச்சேத்யனானவனையும் தனக்குள்ளே ஆக்கவற்றாய் அந்தாதியான ஆயிரம்
இப்பத்தின் வளவுரையால் பெறலாகும்

வளவுரை -நற்சொல்லு
பாலைக் குடிக்க நோய் போமா போலே
இத்திருவாய் மொழியின் இனிய சொல்லாலே பெறலாம்

வானோங்கு பெரு வளமே
வான் என்று -பரம பதமாய் -பரமபதத்தில் விஸ்த்ருமாய்-நிரதிசயமான சம்பத்தைப் பெறுவார்கள்
பிதா கிருஷி பண்ணி வைத்தால் புத்ரனுக்கு பலத்தில் அந்வயமாம் போலே
இப்பத்தையும் கற்றவர்களுக்கு இவர் தூது விட்டு பட்ட க்லேசம் பட வேண்டா
இவர் பேற்றைக் கொடுக்கும் இப்பத்து

—————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: