ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு
———————————————————————————-
சிறப்புத் தனியங்கள்
பன்னிரு திருநாமம் திருவாத்தி யூர்ப் பரன் பாதம் என்று
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத்
தென்னந்தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி யீந்தான்
மின்னுரு நூல் அமர் வேங்கட நாதன் நம் தேசிகனே –
கார்கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்து இருத்தி
ஏர்கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணையடி சேர்
சீர்கொண்ட தூப்புல் திருவேங்கட ஆரியன் சீர் மொழியை
யார் கொண்டு போற்றினும் நம்மால் பதத்தை யடைவிக்குமே —
—————————————————————
கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும்
தேசுடை யாழிகள் நான்குடன் செம்பசும் பொன்மலை போல்
வாசி மிகுத்து எனை மங்காமல் காக்கும் மறையதனால்
ஆசை மிகுத்த வயன் மக வேதியில் அற்புதனே –1–
தேவதை -கேசவன் -நிறம் -பொன் -ஆயுதம் -நான்கு சக்கரம் -திசை -கிழக்கு -புண்டர ஸ்தானம் -நெற்றி –
—————————————————————————–
நாரணனாய் நல்வலம் புரி நாலும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே யுதரமும் மேற்கும் நின்றும்
ஆரன நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பில் மழை முகில் போல் நின்ற மாயவனே –2-
வாரண வெற்பில் -ஸ்ரீ ஹஸ்த கிரியில் –
தேவதை -நாராயணன் -நிறம் -நீளம் –ஆயுதம் -நான்கு சங்கம் -திசை -மேற்கு -புண்டர ஸ்தானம் -வயிறு –
—————————————————————————————
மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும்
ஓதும் முறைப்படி ஏந்தி யுரத்திலும் மேலும் அழகிப்
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும்
தூதனும் நாதனும் ஆய தொல் அத்திகிரிச் சுடரே –3-
தேவதை -மாதவன் -நிறம் -இந்திர நீலம் –ஆயுதம் -நான்கு கதைகள் -திசை ஊர்த்வ திசை புண்டர ஸ்தானம் -மார்பு –
———————————————————————————————
கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட்கழுத்தும் நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு அருளும்
பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற ப்ன்னியனே –4-
தேவதை -கோவிந்தன் -நிறம் -சந்தரன் -ஆயுதம் -நான்கு வில் –திசை -தெற்கு -புண்டர ஸ்தானம் -உட் கழுத்து –
——————————————————————————————————
விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று
மாட்டவிழ் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும்
கட்டெலழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே –5–
தேவதை -விஷ்ணு –நிறம் -தாமரைத் தாதின் நிறம் –பொன்னிறம்
-ஆயுதம் -நான்கு கலப்பை -திசை -வடக்கு -புண்டர ஸ்தானம் -வயிற்றின் வலப்புறம் –
——————————————————————————————————–
மது சூதன் என் வலப்புயம் தென்கிழக்கு என்று இவற்றில்
பதியாய் இருந்து பொன் மாதுறை பங்கய வண்ணனுமாய்
முதுமா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால்
மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே –6–
தேவதை -மது சூதனன் -நிறம் -தாமரை -ஆயுதம் -நான்கு உலக்கை -திசை தென் கிழக்கு -புண்டர ஸ்தானம் -வலது புஜம் –
————————————————————————————————-
திரிவிக்கிரமன் திகள் தீ நிறத்தான் தெளிவுடை வாள்
உருவிக் கரங்களில் ஈர் இரண்டு ஏந்தி வலக் கழுத்தும்
செருவிக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் இறை
மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடு மன்னவனே –7-
தேவதை -த்ரிவிக்ரமன் –நிறம் -அக்னி -ஆயுதம் -நான்கு வாள் -திசை -தென்மேற்கு -புண்டர ஸ்தானம் -கழுத்தின் வலப்புறம் –
————————————————————————————-
வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச்
சேம மரக்கலம் செம்பவி ஈர் இரண்டால் திகழும்
நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே –8-
தேவதை -வாமனன் –நிறம் -இளம் ஸூ ர்யன்–ஆயுதம் -நான்கு வஜ்ரம் -திசை -வட மேற்கு -புண்டர ஸ்தானம் -வயிற்றின் இடது புறம் –
———————————————————————————————-
சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப்புயமும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும்
ஆராவமுது அத்தி மா மலை மேல் நின்ற வச்சுதனே –9-
தேவதை -ஸ்ரீ தரன் -நிறம் -வெண் தாமரை -ஆயுதம் -நான்கு பட்டாக் கத்தி -திசை வட கிழக்கு -புண்டர ஸ்தானம் -இடது புஜம் –
—————————————————————————————————-
என்னிடிகேசன் இறை கீழ் இடக்கழுத்துஎன்று இவற்றில்
நல் நிலை மின்னுருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும்
பொன்னகில் சேர்ந்து அலைக்கும் புனல் வகை வடகரையில்
தென்னன் உகந்து தொழும் தேன வேதியர் தெய்வம் ஒன்றே –10-
தேவதை -ஹ்ருஷீ கேசன் –நிறம் -மின்னல் -ஆயுதம் -நான்கு சம்மட்டி
இடம் -கீழ்ப்பாக்கம் -புண்டர ஸ்தானம் -கழுத்தின் இடப்புறம்
————————————————————————————————
எம் பற்ப நாபனும் என் பின் மனம் பற்றி மன்னி நின்று
வெம்பொற் கதிரவன் ஆயிரம் மேவிய மெய்யுருவாய்
அம் பொற் கரங்களில் ஐம்படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும்
செம்பொற் திரு மதிள் சூழ் சிந்து ராசலச் சேவகனே –11-
தேவதை -பத்ம நாபன் –நிறம் -ஸூ ர்யன்–ஆயுதம் -சக்கரம் சங்கு வாள் வில் தண்டு -என்னும் ஐந்து ஆயுதங்கள்
ஸ்தானம் -மனஸ்-புண்டர ஸ்தானம் -பின்புறம் –
——————————————————————————————-
தாமோதரன் என் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு
ஆமோ தரம் என ஆகத்தின் உட்புறம் பிற்கழுத்தும்
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும்
மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரின் மரகதமே –12-
தேவதை -தாமோதரன் –நிறம் -உதிக்கின்ற ஸூ ர்யன் -பட்டுப்பூச்சி நிறம்
ஆயுதம் -நான்கு பாசங்கள் -இடம் -சரீரத்தின் உட்புறமும் வெளிப்புறமும் -புண்டர ஸ்தானம் -கழுத்தின் பின்புறம் –
————————————————————————
கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த விம் மூன்று நான்கும்
தித்திக்கும் எங்கள் திரு வத்தி யூரைச் சேர்பவர்க்கே –13–
—————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply