திருமந்திரச் சுருக்கு –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்- –

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

—————————————————————————————————-

நாவலர் மறை நால் ஓன்று நலம் திகழ் மறை ஓன்று ஓராது
ஆவலிப்பு அலைக்கும் மோகத்து அழுந்தி நின்று அலமர்கின்றீர்
தூவலம் புரியாம் ஒன்றில் துவக்கமாம் வண்ணம் ஒன்றால்
காவல் என்று அகரத்து அவ்வாய்க் கருத்து யுறக் காண்மின் நீரே –1-

நாவலர் மறை நால் ஓன்று நலம் திகழ் -நாவிலே மலர்ந்து நிற்கின்ற நான்கு வேதங்களின் சாரமும் பொருந்திய
பெருமையுடன் விளங்குகின்ற –
மறை ஓன்று ஓராது -ஒரு ரகஸ்யமாகிய திரு அஷ்டாஷரத்தை அர்த்தத்துடன் ஆராய்ந்து அறியாமல்
ஆவலிப்பு அலைக்கும் மோகத்து -கர்வத்தால் விளைந்த அஜ்ஞானத்தில்
அழுந்தி நின்று அலமர்கின்றீர்-அழுந்திக் கிடந்தது கரை ஏற வழி அறியாது தவிக்கும் சேதனர்களே
தூவலம் புரியாம் ஒன்றில் -பரிசுத்தமான வலம் புரிச் சங்கம் போன்ற உருவம் உடைய பிரணவத்தில்
துவக்கமாம் வண்ணம் ஒன்றால் -முதலில் உள்ள அகாரம் ஆகிய ஓர் எழுத்தினால் உணர்த்தப்படும் பொருள்
காவல் என்று -ரஷிக்கும் தன்மை என்று அதனை
அகரத்து அவ்வாய்க் -அகாரத்தில் அவ் என்ற வினைப்பகுதி அடியாக
கருத்து யுறக் காண்மின் நீரே -நீங்கள் மனத்தில் பதியுமாறு அறிந்து கொள்க –

————————————————————————————————–

இளக்கமில் மயக்கம் தன்னால் எனக்கு யான் எனக்கு உரியன என்னும் ‘
களக்கருத்து ஒன்றே கொண்டு கடுநரகு அடைந்து நின்றீர்
விளக்கும் அவ்வெழுத்தில் நாலாம் வேற்றுமை ஏற்றி வாங்கித்
துளக்கமில் அடிமை பூண்டு தூயராய் வாழ்மின் நீரே–2-

இளக்கமில் -நெகிழ்ச்சி இல்லாத -அதாவது திண்ணியதான
மயக்கம் தன்னால் எனக்கு யான் எனக்கு உரியன என்னும் ‘-அஜ்ஞ்ஞானத்தால் நான் ஸ்வ தந்த்ரன் என்ற
களக்கருத்து ஒன்றே கொண்டு -கள்ளத் தன்மையான மதியையே கொண்டு
கடுநரகு அடைந்து நின்றீர் -கொடிய நரகத்திற்கு ஒப்பான சம்சாரத்தை அடைந்து நின்றவர்களே
விளக்கும் அவ்வெழுத்தில் -பகவத் ஸ்வரூபத்தை விளக்கிக் காட்டுக்கிற அந்த அகாரத்தின் மேல்
நாலாம் வேற்றுமை ஏற்றி வாங்கித் -நான்காம் வேற்றுமை உருபை ஏற்றி விலக்கி
துளக்கமில் அடிமை பூண்டு -மாறுபாடு இல்லாத சேஷத்வத்தை ஏற்றுக் கொண்டு
தூயராய் வாழ்மின் நீரே-பரிசுத்தராய் நீங்கள் வாழ்வீர்களாக
அஹங்காரம் குலைந்து உஜ்ஜீவிக்கப் பெறலாம் என்றவாறு –

—————————————————————————————-

அப்பொருள் இகந்து மற்றும் அழித்து அழிந்து எழுவார் தாளில்
இப்பொருள் இகந்த வன்பால் இரங்கினீர் வணங்கி வீழ்ந்தீர்
உப்பொருள் உள்ளி மற்றோர் உயிர் தனக்கு உரிமை மாற்றி
எப்பொருள் பயனும் ஈது என்று எண்ணினீர் எழுமின் நீரே –3–

அப்பொருள் இகந்து -அகாரார்த்தமான எம்பெருமானை சரண் அடையாமல்
மற்றும் அழித்து -அவனை அடைவதால் பெரும் மற்றப் பலன்களையும் -ப்ரீதி காரிய கைங்கர்யங்களையும் – விலக்கி
இப்பொருள்-இந்தப் பலன்களையும்
இகந்த வன்பால் இரங்கினீர்-இழந்த மகா பாபத்தால் மனம் தளர்ந்தவர்களாகி
அழிந்து எழுவார் தாளில் -அழிவதும் பிறப்பதுமே இயற்கையாக உள்ள தேவதாந்த்ரங்களின் பாதங்களிலே
வணங்கி வீழ்ந்தீர் -வணங்கி அதோகதி அடைந்தவர்களே
உப்பொருள் உள்ளி-உகாரத்தின் பொருளை ஆராய்ந்து
அவனைத் தவிர இதர விஷய சம்பந்தம் அறுப்பதே உகாரார்த்தம் -சகல சாஸ்த்தாரத்தங்களின் சாரார்த்தமும் இதுவே
மற்றோர் உயிர் தனக்கு -எம்பெருமானைத் தவிர மற்ற எந்த ஜீவனுக்கும்
உரிமை மாற்றி -அடியனாம் தன்மையை விட்டு
எப்பொருள் பயனும் ஈது என்று -சகல விஷயங்களின் பலனும் இந்த அனுசந்தானமே என்று
எண்ணினீர் எழுமின் நீரே -உறுதியாக நினைத்தவர்களாய்-நீங்கள் உஜ்ஜீவியுங்கோள் –

—————————————————————————————————-

என்றும் ஓர் ஏதம் இன்றி இரவியும் ஒளியும் போலே
ஒன்றி நின்று உலகு அளிக்கும் உகம் இகந்து அடிமை வைத்தீர்
ஓன்று மூன்று எழுத்தாய் ஒன்றும் ஒன்றில் ஒன்றுடைய முன்னே
ஒன்றிய இரண்டை யுள்ளி யுளரென யும்மின் நீரே–4-

என்றும் ஓர் ஏதம் இன்றி -எக்காலத்திலும் ஓர் தீங்கும் இல்லாது
இரவியும் ஒளியும் போலே -சூர்யனும் அவனது பிரகாசமும் போலே
ஒன்றி நின்று -கூடியே இருந்து
உலகு அளிக்கும் -சர்வ லோகத்தையும் ரஷித்து அருளும்
உகம் இகந்து அடிமை வைத்தீர் -பிராட்டி எம்பெருமான் ஆகிய மிதுனத்தை விட்டு எம்பெருமான் ஒருவனுக்கே
அடிமையை இசைந்தவர்களே
ஓன்று மூன்று எழுத்தாய் ஒன்றும் ஒன்றில் -உச்சரிக்கும் போது ஒரு பதமாய் -மூன்று அஷரங்களாக சேர்ந்து நிற்கும் -ஒப்பற்ற பிரணவத்தில்
ஒன்றுடைய முன்னே ஒன்றிய -மகாரம் என்னும் ஓர் அஷரத்தின் முன்பே சேர்ந்து நிற்கின்ற
இரண்டை யுள்ளி -அகார உகாரங்கள் ஆகிற இரண்டு அஷரங்களை அர்த்தத்துடன் ஆராய்ந்து –
உகாரார்த்தம் பிராட்டி யுடன் சேர்ந்த -எம்பெருமான் என்றவாறு –
யுளரென யும்மின் நீரே-பிறந்த பயன் பெற்றவர் என்னும்படி நீங்கள் உஜ்ஜீவியுங்கோள் –

——————————————————————–

தத்துவம் அறு நான்கோடு தனியிறை யன்றி நின்ற
சித்தினை யுணராது என்றும் திரள் தொகையாகி நின்றீர்
மத்தனைத் தனியிடாதே மையிலா விளக்கமாக்கி
உத்தமன் அடிமையான வுயிர் நிலை யுணர்மின் நீரே –5-

தத்துவம் அறு நான்கோடு -இருபத்து நான்கு தத்துவங்களும்
தனியிறை யன்றி நின்ற -அத்விதீயமான சர்வேஸ்வரனும் ஆகிய இவற்றில் வேறுபட்டு நின்ற
சித்தினை யுணராது -ஜீவா ஸ்வரூபத்தை அறியாமல்
என்றும் திரள் தொகையாகி நின்றீர் -எப்பொழுதும் ஒன்றாகத் திரண்ட பல அசேதனப் பொருள்களின் கூட்டமாக நின்ற சேதனர்களே
மத்தனைத் -மகாரத்தின் பொருளாகிய ஜீவனை
தனியிடாதே-பிரித்து விடாமல் –
மையிலா விளக்கமாக்கி -குற்றம் அற்ற ஜ்ஞான ஸ்வரூபனாக உணர்ந்து
உத்தமன் -புருஷோத்தமனான எம்பெருமானுக்கு
அடிமையான வுயிர் நிலை -சேஷம் ஆகும் ஜீவனுடைய ஸ்வரூபத்தை
யுணர்மின் நீரே -நீங்கள் அறிவீர்களாக –

பிரணவ அர்த்தம் உணர்ந்து -சரீரமே ஆத்மா என்கிற மயக்கம் நீங்கி
ஜீவாத்மா ஸ்வ தந்த்ரன் என்கிற அவி விவேகமமும் ஒழிந்து
எம்பெருமானுக்கே சேஷம் என்று அனுசந்தித்து உஜ்ஜீவிக்கலாம் என்றவாறு –

————————————————————————————————–

தனது இவை யனைத்துமாகத் தான் இறையாகும் மாயன்
உனது எனும் உணர்த்தி தாராது உமக்கு நீர் உரிமை யுற்றீர்
எனதிவை யனைத்தும் யானே யிறை எனும் இரண்டும் தீர
மன எனும் இரண்டில் மாறா வல்வினை மாற்றுவீரே –6-

தனது இவை யனைத்து மாகத் -இந்த சகல வஸ்துக்களும் தனக்கு சேஷமாய் நிற்க
தான் இறையாகும் மாயன் -தான் எல்லாவற்றையும் ஆளும் ஈச்வரனாய் நிற்கின்ற அதிசயச் செய்கை யுடைய
உனது எனும் உணர்த்தி தாராது -எல்லாம் உனக்குச் சேஷம் என்னும் நினைவை செய்யாமல்
உமக்கு நீர் உரிமை யுற்றீர்-உங்களுக்கு நீங்களே உரிமை பூண்டு நிற்கும் சேதனர்களே நீங்கள்
எனதிவை யனைத்தும் யானே யிறை எனும் இரண்டும் தீர -இந்த சகல வஸ்துக்களும் எனக்குச் சேஷம் -நான் ஸ்வ தந்த்ரன் –
என்ற இரண்டு மயக்கமும் ஒழிந்திட
மன எனும் இரண்டில்-நம என்னும் இரண்டு அஷரத்தின் அர்த்தத்தை அனுசந்திப்பதால்
மாறா வல்வினை மாற்றுவீரே-வேறு ஒன்றினாலும் அழியாத வழிய கர்மங்களை ஒழிப்பீர்களாக-

——————————————————————–

அழிவிலா வுயிர் கட்கெல்லாம் அருக்கனாய் அழியா ஈசன்
வழி எல்லா வழி விலக்கும் மதி எழ மாய மூர்த்தி
வழு விலா திவை யனைத்தும் வயிற்றில் வைத்து உமிழ்ந்த மாலை
நழுவிலா நாரவாக்கினான் அடி நீர் நணுகுவீரே –7-

அழிவிலா வுயிர் கட்கெல்லாம் -அழிவு இல்லாமல் நித்தியமாய் உள்ள ஜீவாத்மா எல்லாவற்றுக்கும்
அருக்கனாய் அழியா ஈசன்
வழி எல்லா வழி விலக்கும் மதி எழ -நல் வழி யல்லாத தீய வழியில் புகாமல் விலக்குகின்ற-விவேகம் வ்ருத்தியாகும் படி செய்ய வல்ல
மாய மூர்த்தி -அதிசயமான திருமேனி யுடையவனும்
ந்ரு-என்னும் வினைப்பகுதியில் இருந்து நர ஆகும் பொது எல்லா பிராணிகளையும் நல்ல வழியில் செலுத்துமவன்-என்றவாறு
வழு விலா திவை யனைத்தும் -இவ்வுலகம் அனைத்தும் குறைவு படாது
வயிற்றில் வைத்து-பிரளய காலத்தில் தந் திரு வயிற்றில் அடக்கி
உமிழ்ந்த மாலை -மறுபடியும் சிருஷ்டி காலத்தில் படைத்தவனுமான எம்பெருமானை
நழுவிலா நாரவாக்கினான் -நாராயண சப்தத்தை விட்டுப் பிரியாத நாரம் என்னும் பதத்தால்
நாடி நீர் நணுகுவீரே -அனுசந்தித்து நீங்கள் அவனை அடைவீர்களாக –

————————————————————————————

வயனம் ஓன்று அறிந்து உரைப்பார் வன் கழல் வணங்க வெள்கி
நயனம் உள்ளின்றி நாளும் நள்ளிருள் நண்ணி நின்றீர்
அயனம் இவ்வனைத்துக்கும் தானவனைக் கவனம் என்னப்
பயனுமாய்ப் பதியுமான பரமனைப் பணிமின் நீரே –8–

வயனம் ஓன்று அறிந்து உரைப்பார் -ஒப்பற்ற வேதத்தின் அர்த்தத்தை தாம் நன்கு அறிந்து பிறர்க்கு உபதேசிப்பவர்களான ஆச்சார்யர்களின்
வன் கழல் வணங்க வெள்கி -வலிய திருவடிகளை வணங்குவதற்கு வெட்கம் அடைந்து
நயனம் உள்ளின்றி-உள் நயனம் இன்றி -உட்கண் ஆகிய ஜ்ஞானம் இல்லாமல்
நாளும் நள்ளிருள் நண்ணி நின்றீர் -எப்பொழுதும் அடர்ந்த அஜ்ஞ்ஞானம் ஆகிய இருளை அடைந்து இருந்தவர்களே
தான் இவ்வனைத்துக்கும்-எம்பெருமானாகிய தான் இந்த சகல ஆத்மாக்களுக்கும்
அயனம் -உபாயம் –
அவை -அந்த சகல சேதன அசேதனங்களும்
தனக்கு அயனம் என்ன-ஈஸ்வரனாகிய தனக்கு பிரவேசிக்கப்படும் வஸ்து என்று கூறும்படி
பயனுமாய்ப் பதியுமான பரமனைப் பணிமின் நீரே -பலனுமாய் -ஆதாரமுமான சர்வேஸ்வரனை நீங்கள் வணங்குமின் –

தத் புருஷ சமாசம் -நாரானாம் அயனம் –வேற்றுமைப் புணர்ச்சி -நாரங்களுக்கு அயனமாய் இருப்பவன் -உபாயமாய் இருப்பவன் -என்றபடி
சேதன அசேதனங்களுக்கு இருப்பிடம் ஆனவன் -என்றவாறு
அயனம் -பலன் -உபாயம் -ஆதாரம் மூன்று பொருள்கள்

பஹூ வ்ரீஹி சமாசம் -நாரா அயனம் யஸ்ய –
அவற்றை தனக்கு இருப்பிடமாகக் கொண்டவன் என்றவாறு – அன்மொழித் தொகை –
நாரங்களை அயனமாக யுடையவன் -பிரவேசிக்கப் படும் வஸ்து -என்ற பொருளில்
பஹிர் வ்யாப்தி என்றும் அந்தர்வ்யாப்தி இரண்டும் உண்டே –

———————————————————————————————-

உயர்ந்தவர் உணர்ந்தவாற்றால் உவந்த குற்றேவல் எல்லாம்
அயர்ந்து நீர் ஐம் புலன்கட்கு அடிமை பூண்டு அலமர்கின்றீர்
பயந்து இவை அனைத்தும் ஏந்தும் பரமனார் நாமம் ஒன்றில்
வியந்த பேரடிமை தோற்றும் வேற்றுமை மேவுவீரே –9-

உயர்ந்தவர் -ஜ்ஞானம் முதலியவற்றால் சிறந்து நிற்கும் பெரியோர்
உணர்ந்தவாற்றால் -சாஸ்த்ரங்களை ஆராய்ந்து நிச்சயித்த பிரகாரத்தால் –
உவந்த குற்றேவல் எல்லாம் -ஆச்சார்யர்கள் திரு உள்ளம் உகந்த கைங்கர்யங்களை எல்லாம்
அயர்ந்து-மறந்து
நீர் ஐம் புலன்கட்கு அடிமை பூண்டு அலமர்கின்றீர் -இந்த்ரியங்களுக்கு தொண்டு பட்டு தடுமாறி நிற்கின்றவர்களே
பயந்து இவை அனைத்தும்-சகல வஸ்துக்களையும் சிருஷ்டித்து
ஏந்தும் பரமனார் -ரஷித்து அருளும் சர்வேஸ்வரன் உடைய
நாமம் ஒன்றில் -அத்விதீயமான நாராயணன் என்ற திரு நாமத்தின் மீது நின்று
வியந்த பேரடிமை -விலஷணமான பெரிய கைங்கர்யத்தை
தோற்றும் வேற்றுமை மேவுவீரே -அறிவிக்கும் நான்காம் வேற்றுமை யுருபை இசைவீர்களாக –

நான்காம் வேற்றுமை யுருபு -ஆய -இந்த கைங்கர்யத்தை காட்டும் -அதன் அர்த்தம் ஆராய்ந்து அனுபவிக்க முற்படுங்கள் –

—————————————————————————————————

எண்டிசை பரவும் சீரோர் எங்களுக்கு ஈந்த வெட்டில்
உண்டவாறு உரைப்பார் போல ஒன்பது பொருள் உரைத்தோம்
மண்டு நான்மறையோர் காக்கும் மா நிதி யிவை யனைத்தும்
கண்டவர் விள்ளார் விள்ளக் கருதுவார் காண்கிலாரே –10-

மண்டு நான்மறையோர் -பெருமை மிக்க வேதார்த்தங்களைக் கற்று உணர்ந்த நம் ஆச்சார்யர்கள்
கண்டவர் விள்ளார் -நன்கு உணர்ந்தவர்கள் ஸூ லபமாய் வெளியிட மாட்டார்கள்
விள்ளக் கருதுவார் காண்கிலாரே -ஸூ லபமாய் வெளியிடக் கருதுமவர் இவ்வர்த்தங்களை நன்கு உணர்ந்தவர் ஆகமாட்டார்கள்-

———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: