கண்ணி நுண் சிறுத் தாம்பு -2- நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-

——————————–

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வாருடைய ஏற்றம் ஓர் உக்தியாலே இச் சரீரரத்தோடே அனுபவிக்கலாம் என்கிறார் –

நாவினால் நவிற்று –
மன பூர்வோ வாக் உத்தர -என்கிற அதுவும் வேண்டா இ றே இங்குத்தைக்கு
எல்லாக் கரணங்களால் ப்ரவர்த்தித்தார் பெரும் பேற்றைக் காணும் இவர் வாக்கு ஒன்றாலும் பெற்றது
பிரத்யஷே குரவஸ் ஸ்துத்யா-என்கிறபடியே பகவத் விஷயத்தில் உபாகாரகரை ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அன்றோ நாக்கு கண்டது –

இன்பம் எய்தினேன்-
ரசத்தின் எல்லையைப் பற்றினேன்
சுழி பட்டோடும் சுடர்ச்சோதி வெள்ளம் அரை வயிறு என்னும் படி இ றே இவர் பெற்ற பேறு-

இவர் பெற்ற லாபம் என் என்னில்
மேவினேன் அவன் பொன்னடி
கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழல் -என்றும்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலேவே -என்றும் சொல்லுகிற படியே எல்லாம் இவர்க்கு இங்கே யாகிறது

மெய்ம்மையே
இது எத்தனை குளிக்கு நிற்கும் என்னில் -விஜ்ஞாபநமிதம் சத்யம் –
இமையோர் தலைவா மெய் நின்று என்றார் ஆழ்வார்
குருகூர் நம்பி பொன்னடி மேவினேன் மெய்ம்மையே -என்கிறார் இவர் –

தேவு மற்று அறியேன் –
வேண்டா என்கிறேன் அன்று
வ்யுத்பத்தி இல்லாமை
பாவோ நான்யத்ர கச்சதி -அன்யத்ர என்றால் போலே மற்று அறியேன் என்கிறார்
விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு

குருகூர் நம்பி
ஆழ்வாரையும் உகந்து அவருக்கு ஆஸ்ரயணீய வஸ்துவையும் உகக்கும்படி அன்று இ றே ஆழ்வாருடைய பூர்த்தி இருக்கும் படி

பாவின் இன்னிசை –
பாவிலே பூண்ட இனிய இசை –
ஐஸ்வர் யத்தை அல்ப அஸ்தரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்ம பிராப்தியை அபுருஷார்த்தம் என்று கழித்து
ஸ்திரமுமாய் பரம போக்யமுமான பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து-அவரோடு சம்பந்தித்த விஷயத்தையும் ரசாச்ராயம் அன்று கழித்து
அத்தோடு சம்பந்தித்த இசையே எனக்கு உத்தேச்யம் என்கிறார் –
தெய்வத் தண்ணம் துழாய் த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும்
கொண்டு வீசுமினே -இத்யாதியில் படியே பகவத் சம்பந்தம் போகப் போக நிறம் பெறுகிற படி – ( ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் -வடக்கே உத்சவங்ககள் இல்லை நின்ற மண் உத்தேச்யம் என்ற உணர்வு வேண்டுமே )

பாடித் திரிவனே –
ரசாயன சேவை பண்ணித் திரிவாரைப் போலே இது காணும் இவருக்குத் தாரகமாய் சஞ்சரிக்கப் பண்ணுகிறது –

——————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வாருடைய பாசுரமே தமக்கு தேக யாத்ரையாம் படி தாரகமான படி சொல்லுகிறார் –

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும்-என்று ப்ரஸ்துதமானது தன்னையே அனுபாஷிக்கிறார்
நாவினால் நவிற்று
மனஸ் சஹகாரம் இல்லை என்கிறார் –
பிரத்யஷே குரவஸ் ஸ்துத்யா -என்கிறபடியே -பகவத் விஷயத்தில் உபகாரகரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவதைக் கொண்டு
அந்தக் கார்யம் கொள்ளப் பெற்றேன் என்கிறார் என்னவுமாம் –
ஈஸ்வரன் சிருஷ்டிக்கு பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் நான் ஒருவனுமே என்கிறார்
இன்பம் எய்தினேன்
வீவில் இன்பம் மிக வெள்ளை நிகழ்ந்தணன் என்று ஆழ்வார் அவ்விஷயத்தில் பெற்ற பேற்றை இவ்விஷயத்தில் உக்தி மாத்ரத்தாலே பெற்றேன் என்கிறார்
ஒரு கரணத்தாலே ஒரு பாபத்தைப் பண்ணினால் ஒரு கல்பம் நரகானுபாவம் பண்ணி கல்பாந்தரமும் நரகானுபவம் பண்ண வேண்டும்படி யாய்த்து இருப்பது
அப்படிக்கு யோக்யமான கரணத்தாலே நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்தேன் –

மேவினேன் அவன் பொன்னடி-
ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளே உத்தேச்யமாகப் பொருந்தினேன் -ப்ராபித்தேன் என்கை-

எங்கனே பொருந்தினபடி என்னில்
மெய்ம்மையே-பொருந்தினேன்
இவரை உபகாரக கோடியிலே யாக்கி வேறு ஓன்று உத்தேச்யமாய்க் கிட்டினவாறே அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே
ஆழ்வார் திருவடிகளே உத்தேச்யமாகப் பொருந்தினேன்
இங்கு இருக்கும் நாள் அஜ்ஞாதஜ்ஞாபநத்தாலே உபகாரகராகவும் பகவத் விஷயத்துக்கு புருஷகாரமாகக் கொண்டும் அவ்வருகே சென்றால்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவா என்கிறபடியே சாத்யவிவ்ருத்தி ரூபத்தாலே உத்தேச்யராகவும் இவர் தம்மையே பற்றினேன் –

தேவு மற்று அறியேன் –
ஆழ்வாரை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டு என்று அறியேன் –
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொன்னார் -தேவு மற்று அறியேன் -என்கிற இடம் வ்யதிரே கத்தாலே சொல்லுகிறார்
மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்
ஐஸ்வர்யம் என்ன -ஆத்மலாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான
ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –

குருகூர் நம்பி-
இவரையும் பற்றி வேறே ஒரு வஸ்துவையும் பற்றும் படியோ இவருடைய பூர்த்தி இருப்பது
குருகூர் நம்பி பா -என்றது கண்ணி  நுண் சிறுத் தாம்பு என்னுதல்-திருவாய்மொழி என்னுதல் –
திருவாய் மொழி தன்னில் குருகூர் சடகோபன் என்றார் இ றே
அவ்வழியாலே யாய்த்துத் திருவாய்மொழி தன்னையும் இவர் ஆதரிப்பது

பாவின் இன்னிசை பாடித் திரிவனே
இயலோடு சேரப் புணர்ப்புண்ட இன்னிசை
உம்முடைய தேக யாத்ரை நடப்பித்துப் போரும்படி என் என்னில் ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு
இவற்றைச் சொல்லி இதுவே தாரகமாக அத்தாலே சஞ்சரிப்பன்

பாடித் திரிவனே
நாம தமர் தலைகள் மீதே நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று தன்னுடைய கதி நிவ்ருத்தியைப் பண்ண வல்லார் உண்டோ -என்றுமாம் –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம்-

ஆழ்வார்கள் பகவத் விஷயத்திலே ஆச்சார்ய பிரதிபத்தி பண்ணிப் போந்தார்கள் –
இவர் ஆச்சார்ய விஷயத்திலே பகவத் பிரதிபத்தி பண்ணிப் போருகிறவர் ஆய்த்து-
பகவத் விஷயத்திலும் ஆழ்வாருக்கு உண்டான வாசி
யதி சக் நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித-இத்யுக்த்வாத நிஜம் கர்ம சா சகார குடும்பி நி-என்கிறபடியே இடைச்சி கட்டி
வல்லை யாகில் நான் கட்டின கட்டை அவிழ்த்துப் போய்க் காண்-உன் துறு துறுக்கைத் தனத்தாலே அறப் பட்டதீ-என்று
கையாலும் வாயாலும் கட்டி கறப்பன கடைவன குவாலாகையாலே பெரிய திரு நாளிலும் சந்த்யா வந்தனம் முட்டாமல் நடத்துவாரைப் போலே
அவள் தன்  கார்யத்திலே போந்தாள் என்று சொல்லுகையாலே ஓர் அபலை கட்ட அது அவிழ்க்க மாட்டாமல் இருந்தான் –
கட்டினவர்களே இரங்கி அவிழ்க்க வேணும் என்று இ றே அவன் நினைவு அப்படியே ஆழ்வாரும் இவனுடைய சௌசீல்ய குணத்தாலே கட்டுண்டு
எத்திறம் என்று போக மாட்டாமல் இருந்தார்
இவர் அப்படி அன்றிக்கே ஆழ்வார் ஈடுபட்ட அபதானத்தை அனுசந்தித்து இருக்கச் செய்தேயும் அதில் ஆழம் கால் படாதே
அத்தை விட்டு ஆழ்வாருடைய போக்யதையிலே நின்றவர் ஆய்த்து –
கீழ்ப்பாட்டிலே நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே -என்று ஆழ்வார் பக்கல்
ஸ்ம்ருதி சாரச்யத்தையும் சங்கீர்த்தன சாரச்யத்தையும் சொல்லக் கேட்டவர்கள்
நாட்டார் அடைய பகவத் விஷயத்தையே ஸ்மர்த்த வ்யமாகவும் சங்கீர்த்த நீயமாகவும் சொல்லா நிற்க நீர் ஆழ்வாரை இவை இரண்டுமாக
அனுசந்திப்பான் என் பகவத் விஷயத்திலேயும் அன்வயிக்கப் பார்த்தாலோ வென்ன அதுக்கு இப்பாட்டாலே உத்தரம் சொல்லுகிறார் –
தாம்தாம் பற்றின விஷயத்தை விட்டுப் புறம்பு சில போக வேண்டுவது-1- அவ்விஷயம் இஹ லோக ஸூக ஜனகம் அல்லவாயாதல்-2--பர லோக ஸூ கத்துக்கு சாதனமன்றாயாதல்–3- பற்றினவர்கள் இவ்விஷயத்தை ஒழிய வேறே ஒரு ஸ்வாமி யுண்டாக நினைத்து இருத்தல் -4-கால ஷேப விஷயம் அல்லாமையாலே யாதல் அன்றோ—-அதில் -1-எனக்கு இஹ லோக ஸூ க ஜனகரும் ஆழ்வாரே-2 -பர லோக ஸூ கத்துக்கு சாதனமும் ஆழ்வாரே-3-எனக்கு ஸ்வாமி யும் ஆழ்வாரே -4-கால ஷேப விஷயமும் ஆழ்வாரே -ஆனபின்பு பகவத் விஷயத்திலே அன்வயிக்க வேண்டுகிறது என் என்கிறார் –நான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம் –1-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்-2-மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே-3-தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி-4-பாவின் இன்னிசை பாடித் திரிவனே-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
நான் பெற்ற பேற்றைப் பார்க்க மாட்டீர்களோ –
நாவினால் நவிற்று
நவிற்றும் போது நா வேண்டி இருக்கச் செய்தே நாவினால் நவிற்று என்கைக்கு அடி மனஸ் சஹகாரம் வேண்டாத படி
அவசே நாபி யன்நாம்னி கீர்த்திதே -என்கிறபடியே வாக் மாத்ர உச்சாரணத்தாலே ஆனந்தம் சித்தித்தது என்கைக்காக –

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்-
இப்படியே அன்றிக்கே பகவத் விஷயத்தில் புறம்புள்ள இந்த்ரியங்களை மனசிலே அடக்கி மனசைக் கொண்டு போய்
ஸூபாஸ்ரயத்திலே வைத்து பின்பு அநவரத பாவனை யுண்டாய் அது தானே சமாதி பர்யந்தம் ஆனால் இ றே
ந விவேதாத்மநோ காத்ரம் தத்ஸ்ம்ருத்யாஹ்லாத சம்ஸ்தித -என்று ஆனந்தம் சித்திப்பது
ஆழ்வார் தமக்கு அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினேன் என்று இத்தனை செய்ய வேண்டிற்று –

இன்பம் எய்தினேன்
இன்னவகைப்பட்ட இன்பம் என்னாமையாலே பஹூ விதமான ஆனந்தத்தை எய்தினேன் –
எய்தப் பெற்றேன் –
எனக்கு லப்த்வா நந்தி பவதி என்ன வேண்டிற்று இல்லை
நவிற்று இன்பம் எய்தினேன் -எய்தினேன் –
பகவத் விஷயத்தைப் பற்றினார்க்கு ஆனந்தம் காலாந்தரபாவி
இங்கு அப்படி அன்றிக்கே எய்தி விட்டேன்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
அநவரத பாவனையாலும் ஆனந்தம் வேண்டிற்று இல்லை
அனுபவத்தாலும் ஆனந்தம் உண்டாக வேண்டிற்று இல்லை-

ஆனால் இப்போது அன்றோ இந்த இன்பத்தை விரும்பினீர் -சரீர விநியோக சமாந்தரம் பிறக்கும் ஆனந்த சித்திக்கு
ஒரு சாதனத்தைப் பற்ற வேணும் -அதுக்கு சாதனமாக லோக விக்ராந்த சரணங்களை ஆஸ்ரயிக்க வேண்டாவோ என்ன
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
அதுவாகில் அதுக்கும் ஆழ்வார் தம்முடைய திருவடிகளையே உபாயமாகப் பற்றினேன்
அவன் பொன்னடி
யாதொரு விஷயத்தை நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -அவனுடைய திருவடிகளை-பிராப்யம் ஆனது தானே ப்ராபகமும் ஆய்த்து
அவன் பொன்னடி
அது போலே உலகம் அளந்த பொன்னடியாய்- ஊர்ப் பொதுவாய் -எல்லார் தலையிலும் இருக்குமதன்றிக்கே
இத்திருவடிகள் த்ரைவித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணமாய் இருக்கும்
வ்ருத்த ஜனங்கள் ஆகிறார் உத்தரபாக நிஷ்டரானவர்கள்-( ப்ராப்யம் முதலிலே -ஆனந்தம் கொடுத்து -அதிலே பிராப்பகமும் அந்தர் கதம்  -நாவினால் நவிற்று ஆரம்பம் -அவன் பொன்னடி -வாசி -உலகம் அளந்தவன் பொன்னடியில் -)
பொன்னடி-
நான் தொட்டுப் பரிமாறினாலும் தோஷம் வாராத திருவடிகள்
மேவினேன்
பகவத் விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் என்று
வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டிற்று
இங்கு அப்படி அன்றிக்கே சக்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது
அவன் பொன்னடி மேவினேன்
பகவத் விஷயத்தில் போலே
த்வமேவோபாய பூதோ மே பவ -த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று
அபரோஷித்து ஆஸ்ரயிக்க வேண்டாத படி எங்கேனும் இருந்து ஆஸ்ரயிக்கலாம் படியான அவனுடைய திருவடிகளை –அவன் பொன்னடி மேவினேன்-(உன் பொன்னடி -சொல்ல வில்லையே அவன் -பொன்னடி -எங்கு இருந்தாலும் சொல்லி பெறலாமே )
ஒரு புருஷகார புரச்சரமாக வன்றிக்கே தந் நிரபேஷமாக ஆஸ்ரயித்தேன்-இங்கே நஞ்சீயர் ஆஸ்ரம ச்வீகாரம் பண்ணின அனந்தரம்-அனந்தாழ்வான் -வேர்த்த போது குளித்து பசித்த போது உண்டு பட்டர் திருவடிகளே சரணம் என்று எங்கே இருந்தாலும்
ப்ராப்திக்குக் கண் அழிவு உண்டோ -ஆயிருக்க கைங்கர்யத்துக்கு விரோதியாய் இருப்பதொரு வேஷத்தைக் கொண்டு என் செய்தீரானீர் -என்று-அருளிச் செய்த வார்த்தையை அனுசந்திப்பது
மேவினேன்
அத்தோடு பொருந்தி விட்டேன்-இனி வேறு ஒரு கால் இருக்கைக்கு இடம் இல்லாத படி பொருந்தி விட்டேன்
நாவினால் நவிற்றி இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி
இத்தைப் பின் சென்று இ றே ஆளவந்தாரும் ஆச்சார்ய விஷயத்தில்
அதர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ சரணம் மதஈயம் என்றது –

மேவினேன் அவன் பொன்னடி என்றீர் -அந்த ஆஸ்ரயணத்தை
சா தேவேச்மின் பிரயுஜ்யதாம் -என்கிறபடியே சர்வ ஸ்வாமியான ஈஸ்வர விஷயத்தில் பிரயோகிக்க வேண்டாவோ என்ன
தேவு மற்று அறியேன்-
நான் அப்படி இருப்பதொரு ஸ்வாமி யுண்டாக வ்யுத்பத்தி பண்ணி வைக்கில் அன்றோ வேண்டுவது
தேவு மற்று அறியேன்
தேவு அறிவன் -ஆழ்வாரை ஒழிய வேறு அறியேன் -சாஸ்திரம் காட்டித் தந்தது அன்றோ தெய்வம் ஆவது -அது தானே
ஆச்சார்ய தேவோ பவ என்று விதித்ததே
தேவு மற்று அறியேன்
தேவதா வ்யுத்பத்தி யுள்ள விடத்தே யன்றோ தேவதா பிரதிபத்தி உள்ளது
ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை
ஆனால் என்னப்பன் என்று கீழே பகவத் விஷயத்தை ஸ்வாமி யாக அனுசந்தித்தீரே என்ன
அது ஆழ்வார் ஆதரித்த விஷயம் என்று ஆதரித்தேன் இத்தனை போக்கி தேவதா பிரதிபத்தி பூர்வகமாகச் சொன்னேன் அன்று
அநந்ய தைவத்வமியம் சாமா ச -என்று அநந்ய தைவதத்தை யுடைய பிராட்டி பெருமாளுக்கு எடுத்துக் கை நீட்ட-பெரிய பெருமாள் பாடு புகுமா போலே இவ்வர்த்தம் நாங்கள் விச்வசிக்கும் படி என் என்ன
மெய்ம்மையே
இது சத்தியமே
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன்
ஸ்ரீ சடகோபனைத் தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்லுவார் உண்டோ

ஆனால் கால ஷேபத்துக்கு பகவத் விஷயத்தைப் பற்றிக் காலம் போக்க வேணும் காணும் என்ன
குருகூர் நம்பிபாவின் இன்னிசை பாடித் திரிவனே-
எனக்கு கால ஷேப விஷயம் உங்களைப் போலே ஓன்று இரண்டாய் இருந்ததோ -ஆயிரம் பிரகாரம் இல்லையோ
குருகூர் நம்பி
கவி பாடுகைக்கு இடம் படி
வால்மீகிர்ப் பகவான் ருஷி -என்கிறபடியே பூரணரான ஆழ்வார்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் -என்கிறபடியே
ஸ்துதய விஷயத்துக்குப் பரத்வ சௌலப்ய பூர்த்தி-ஸ்தோத்ரு விஷயத்துக்கு ஞான பக்தி பூர்த்தி
கண்டு கொண்டேன் கண்ணிணை யாரக் களித்து இ றே -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொல்லிற்று –

இன்னிசை
பாடுகிற போதே கூடக் கிளம்பின நல்லிசையை
பாடி –பா திரிகை -சந்தஸ்ஸை கூட்டுகை போதே கூடக் கிளம்பின நல்லிசை என்றபடி
அனுபவித்துக் கொண்டு பாடி
குருகூர் நம்பி இன்னிசை பாடி
பகவத் பிரதிபாதகம் என்று அன்று இவர் திருவாய் மொழியைப் பாடிற்று -ஆழ்வார் அருளிச் செய்தது என்றாயிற்று –
உயர்வற உயர் நலம் உடையவன் -வண் புகழ் நாரணன் -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் –
என் செய்ய தாமரைக் கண் பெருமானார் -என்று பாடா நிற்கச் செய்தும் பகவத் விஷயத்தோடு உறவற்று இ றே இவர் பாடுகிறது

திரிவனே
அங்குப் போனால் அன்றோ ஏதத் சாம காயன் நாஸ்தே என்றிருக்க வேண்டுவது -இங்கு அப்படி அன்றிக்கே விஸ்ருங்கலாமாகத் திரியா நிற்பன்
திரிவேனே
இது எனக்கு கால யாத்ரை –
ஆகையால்
1-ஸூக பூதரும் -2-சாதனா பூதரும் -3-ஸ்வாமி யும் -4-காலஷேப விஷயமும் -( நான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம் – )ஆழ்வாரே என்று-பகவத் விஷயத்தோடு அந்வயிக்கத் தேடினவர்களுக்கு உத்தரம் சொன்னாராய் நின்றது

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: