ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-31-நிர்வேத பத்ததி -உருக்கப் படலம் -வைராக்கியம் வெறுப்பு ஆற்றாமை வெளிப்படுத்தும் உருக்கப் படலம் -ஸ்லோகங்கள் -951-970-

ப்ரபத்யே பாதுகாம் தேவீம் பர வித்யாம் இவ ஸ்வயம்
யாம் அர்ப்பயதி தீநாநாம் தய மாநோ ஜகத் குரு:—-951-

அனைத்து உலகிற்கும் முதல் ஆசார்யனாக உள்ள ஸ்ரீரங்கநாதன் மிகவும் கருணையுடன், துன்பம் உற்றவர்கள் உய்யும்
விதமாகச் செய்வது என்னவென்றால் – மோக்ஷ ஸாதனமான பக்தி மற்றும் ப்ரபத்தி என்னும் ஞானம் போன்ற
தனது பாதுகைகளைத் தானாகவே அளிக்கிறான். அந்தப் பாதுகைகளை நான் சரணம் அடைகிறேன்.

ஜகத்துக்கு முதல் குருவான ஸ்ரீ யபத்தி தன் கருணையினால் வருத்தமுற்று இருக்கும் கதி அற்றவருக்கும் உரிய
பர வித்யை என்ற மோஷ சாதனமாகிற வித்தையாக
எந்த ஒரு ஸ்ரீ பாதுகையைத் தானே வழங்கி அருளி இருக்கிறானோ அந்த ஸ்ரீ பாதுகா தேவியை உபாயமாகப் பற்றுகிறேன் –

ப்ரபத்யே=உபாயமாக நம்புகிறேன் (நான் அனுபவித்து கொண்டிருக்கும் ஸம்ஸாரதுக்கம் நீங்குவதற்கான) —
பரவித்யா=மோக்ஷத்திற்கு உதவக்கூடிய அறிவு (பக்தி, ப்ரபத்தி) – ஸ்வயம்=தாமாகவே முன்வந்து —
யாம் அர்ப்பயதி=யாதொரு பாதுகையின் மூலமாய் கொடுக்கின்றாரோ –
தீநாநாம்=ஸம்ஸாரத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் – தயமாநோ=தயவுள்ளவராய்

பகவான் ஸம்ஸரத்தில் உழன்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்ற ஜீவாத்மாக்கள் கடைத்தேற, மோக்ஷம் பெறுவதற்காக
உண்டான அறிவை அதாவது பக்தி மற்றும் சரணாகதி என்கிற ஞானத்தினை வேதங்கள் மூலமாய் ஏற்படுத்தி வைத்துள்ளார்.
இந்த அறிவிற்கு “பரவித்யை“ என்று பெயர். ஆச்சார்யன் மூலமாய் இந்த பரவித்யையை ஆஸ்ரிதர்கள் அடைவது போன்று,
ஆழ்வார் ஆச்சார்யனின் மற்றொரு ரூபமான பாதுகையும் மோக்ஷஸாதனமே!.
ஸ்ரீசடாரியான பாதுகையை நாம் சாதிக்கப்பெறுவதும் மோக்ஷஸாதனமே!
இத்தகைய மஹிமைகள் பொருந்திய எங்களைக் காப்பாற்றுவதற்காக அவதரித்த பாதுகா தேவீ!
என்னை இன்னுமும் ஸம்ஸாரத்தில் தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றாயே? நான் என்ன செய்வேன்,.!
இது உன்னுடைய குணத்திற்கு அழகாகுமா..? ஆகையால் உன்னை சரணமாக அடைகின்றேன்..!
என்னுடைய ஸம்ஸாரபந்த்த்தினை அடியோடு போக்கி சாஸ்வதமான பரமபுருஷார்த்தத்தினை எனக்கு நீ அருள வேண்டும் ..!

——————————————————————————————–

அபி ஜந்மநி பாதுகே பரஸ்மிந்
அநகை: கர்மபி: ஈத்ருசோ பவேயம்
ய இமே விநயேந ரங்க பர்த்து:
ஸமயே த்வாம் பதயோஸ் ஸமர்ப் பயந்தி—-952-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அந்தந்த காலங்களில் ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகர்கள் உன்னை அவனது திருவடிகளில்
மிகவும் அன்புடன் ஸமர்ப்பணம் செய்கிறார்கள். எனது அடுத்த பிறவியில் இவர்கள் போன்று
ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகராகப் பிறந்து உனக்கு கைங்கர்யம் செய்வேனோ?

ஸ்ரீ பாதுகையே அந்தந்த உரிய சந்தர்ப்பங்களில் பெருமாள் ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடிகளில் மிகுந்த வினயத்தோடு
உன்னை சமர்ப்பிக்கும் பாக்கியம் பெற்ற கைங்கர்ய பரர் உண்டே -அவர்களில் ஒருவனாக அடுத்த ஜன்மத்தில் நான் ஆக வேண்டும்
குற்றம் அற்ற கர்மங்களால் அன்றோ அது நடக்கும் -அப்படி ஆகும் படி நீயே அருள வேண்டும் –

ரங்கபர்த்து:=ஸ்ரீரங்கநாதனுடைய – பதயோ:=திருவடிகளிலே – விநயேந=மிகுந்த பணிவோடு –
ஸமயே=அந்தந்த உசிதமான சமயங்களில் (அதாவது நித்யபடி ஆராதனத்தில் ஆறு காலங்களிலும் மற்றும்
சஞ்சாரங்களின் போது அந்தந்த மண்டபங்களிலும்) — ய=யாதொரு – இமே= அர்ச்சகர்கள் –
கர்மபி:= காரியங்களாலே — ஸமர்ப்பயந்தி = ஸமர்ப்பிக்கின்றார்களோ – இத்ருசோ = இவர்களைப் போன்றவனாக –
பரஸ்மிந் ஜந்மநி=அடுத்த ஜன்மத்தில் – அபி பவேயம்= ஆவேனா..?

“ஹே! பாதுகே! நீ எனக்கு மோக்ஷம் கொடுத்தால் கொடு அல்லது கொடுக்காவிட்டால் எனக்கு அடுத்த ஜன்மத்திலாவது
ஸ்ரீரங்கநாதனுக்கு கைங்கர்யம் செய்யும் அர்ச்சகராய் பிறக்கச் செய்! இந்த அர்ச்சகர்களைப் போல மிகுந்த ப்ரீதியுடனும்
பவ்யத்துடனும் உன்னை ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளில் தடங்கலில்லாமல் அந்தந்த உசித காலங்களில் ஸமர்ப்பிக்கிறது
முதலிய கைங்கர்யங்கள் கிடைக்குமாயின் அதுவே எனக்கு மோக்ஷம்!. அதற்கும் கூட நான் கொடுத்து வைக்கவில்லையே!
எனக்கு அந்த பாக்யம் இந்த ஜன்மத்தில் இல்லாது போயிற்றே! எங்கிருந்தாலும் உனக்கு இடைவிடாது
கைங்கர்யம் பண்ணுவதுதானே மோக்ஷம்! அதற்காகத்தானே அங்கு (பரமபதம்) போகிறது –
அது இங்கேயே (ஸ்ரீரங்கத்தில்) கிடைத்து விட்டால் எவ்வளவு பாக்யசாலியாவேன் நான்!“

ஸ்ரீரங்கம் கோவிலின் பூஜை முறைகள் ஓளபகாயநர். சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் என்ற
ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரியில் பகவானால் உபதேசிக்கப்பட்டமையால் இது ‘ராத்ரி ஆகமம்“ –
இது ஐந்து(பஞ்ச) ரிஷிகளுக்கு ஐந்து நாட்கள் உபதேசிக்கப்பட்டமையால் “பாஞ்சராத்ர ஆகமம்” என்று திருப்பெயர்.
ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம் நிர்த்தாரணமாய் முதலிலேயே சொல்லிவிடுகின்றது.. ”….
ஓளபகாயந சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக: மௌஜ்யாயநஸ் ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா: ..’’
இவர்கள்தான் இந்த பாஞ்சராத்ர ஆகமத்தின் ப்ரவர்த்தகர்கள் அதாவது இந்த பூஜை முறைக்கு அதிகாரமானவர்கள் என்று.
இதன்படியேதான் இன்று வரை இந்த ஐந்து கோத்ரங்களில் வந்த வழிமுறையினர்தான் பூஜைகளைச் செய்து வருகின்றனர்.
இதைத் தவிர ஸ்ரீரங்கம் கோவிலில் கடைப்பிடிக்கப்படுவது “ஸ்ரீசுக்ல யஜூர்” வேதமாகும்.
அர்ச்சகர்கள் அனைவருமே சுக்ல யஜூர் வேதிகள் – இதில் காண்வ சாகை பிரிவினர்.
ஒருவன் ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராய் ஆவதற்கு முதலில் இந்த தகுதியோடு பிறக்க வேண்டும்.
இதற்கு பின் நிறைய கற்க வேண்டியதுள்ளது.

—————————————————————————-

பரிவர்த்தயிதா பிதா மஹாதீந்
த்வம் இவ அநந்தம் அஸௌ வஹதி அநேஹா
அதுநாபி ந ஸௌரி பாதுகே த்வாம்
அநக ஆலம்பநம் நாப்யுபைதி சித்தம்—-953-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது பாட்டன், அவனுக்குப் பாட்டன் என்று தொடங்கி நான்முகன் வரையுள்ள
பல உயிர்களும் மாற்றி மாற்றி ஸம்ஹாரம் செய்யப்பட்டும், ஸ்ருஷ்டி செய்யப்பட்டும் செய்வதான காலச்சுழற்சி என்பது,
நீ ஸ்ரீரங்கநாதனை தாங்கியபடி உள்ளது போன்று, எல்லையற்ற காலமாக இயங்கி வருகிறது.
ஆயினும் எனது மனமானது, த்யானிக்கத் தகுந்த மிகவும் உயர்ந்த வஸ்துவாக உள்ள உன்னைக் கைக்கொள்ளாமல் இருக்கிறதே!

ஸ்ரீ பெருமாளின் ஸ்ரீ பாதுகையே அநாதியாக எத்தனை காலம் போயிற்று -எத்தனை ப்ரம்மாதிகள் மாறி மாறி வந்து போயாயிற்று –
நீ எப்படி அநாதி காலமாய் முடிவின்றியும் பெருமாளை வஹித்து வருகிறாயே -அப்படியே இந்தக் காலமும் கூட ப்ரவஹித்துப் போகிறதே
நானோ இன்னும் உன்னைத் துணையாக பிடிப்பாக உயர்ந்த ஸூபாஸ்ரயமாக பிடித்துக் கொள்ள வில்லையே -அந்தோ –

————————————————————

கமலாத்த் யுஷிதே நிதௌ நிரீஹே
ஸுலபே திஷ்டதி ரங்க கோச மத்யே
த்வயி தத் ப்ரதி லம்பநே ஸ்திதாயாம்
பரம் அந்விச்சதி பாதுகே மந: மே—-954-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்ககநாச்சியாரால் எப்போதும் வாஸம் செய்யப்படுவதாகவும், உலக விஷயங்கள்
மீது உள்ள ஆசைகளை நீக்குவதாகவும், மிகவும் எளிதாக அடையக்கூடியதாகவும் உள்ள ஸ்ரீரங்கநாதன் என்ற மிகப் பெரிய புதையல்,
ஸ்ரீரங்கவிமானம் என்ற இடத்தில் உள்ளது. அந்தப் புதையலை அடைய உதவும் மந்திரவாதி போன்று நீ உள்ளாய்.
இப்படி நீங்கள் இருவரும் உள்ளபோது, உங்களை நாடாமல் எனது மனம் வேறு எதனையோ தேடுகிறதே!

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் ஆகிற பெரும் நிதி -தாமரைச் செல்வியான ஸ்ரீ யுடன் சேர்ந்து இருக்கிறது -ஆசை அற்றது
அவாப்த சமஸ்த காமன் -அந்த ஸ்ரீ ரங்க விமானத்தின் கீழே மறைவாகப் போல எக்காலத்துக்கும் நான்
ஆச்ரயித்துப் பயன் பெற வென்றே நிலையாக நிற்கிறது -அதை நான் அடைய நீயும் உதவ இருக்கிறாய் –
இருந்த போதும் என் மனஸ் அதற்கு வேறான எதிரியான திருவில்லா மற்றதோர் ஒன்றைத் தேடி அலைகின்றதே -அந்தோ –

——————————————————————–

யத்யபி அஹம் தரளதீ: தவ ந ஸ்மரேயம்
ந ஸ்மர்த்தும் அர்ஹதி கதம் பவதீ ஸ்வயம் மே
வத்ஸே விஹார குதுகம் கலயதி அவஸ்தா
கா நாம கேசவ பதாவநி வத்ஸல்யா–955–

அழகான தலைமுடி கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உலக விஷயங்களில் மேயும் கன்று போன்ற புத்தியுடையவன் என்பதால்,
பசுவாகிய உன்னை நான் எண்ணாமல் இருக்கக்கூடும். தனது கன்று வெகுதூரம் சென்று விளையாட எண்ணும்போது,
பசுவின் நிலை எப்படி இருக்கும்? அந்தப் பசு எவ்விதம் தனது கன்றைத் தேடிச் செல்லுமோ
அது போன்று, நீயாகவே என்னை எண்ணி வரவேண்டும்.

ஸ்ரீ பெருமாளின் பாதுகையே -அப்படி நான் சஞ்சல சித்தனாய் உன் நினைவின்றி இருந்து இருப்பேனாகிலும் நீ எப்படி
என்னை நினைக்காது உதாசீனம் செய்யலாகும் -கன்று விளையாட்டுக்காக வெகுதூரம் அகன்று போனாலும்கூட ஈன்ற தாய்
வத்சலையாக என்ன செய்யும்-அது போலே நீயும் செய்திருக்க வேண்டாவோ –

தரளதீ:=சபலபுத்தியுடையவனான – அஹம்=நான் – தவ=உன்னை – நஸ்மேரயம் யத்யபி=நினைக்காமலிருக்கலாம் –
பவதீ=நீயாவது – ஸ்வயம்=தானாகவே – மே=என்னை — நஸ்மர்த்தும்=நினைக்காமலிருப்பதற்கு – கதம்=எப்படி –
அர்ஹதி=தகுந்தவளாகிறாய்? – வத்ஸே=கன்றானது – விஹார=விளையாட்டிலே – குதுகம்=ஆர்வமாய் –
கலயதி=(துள்ளி குதித்து) விளையாடும் போது – வத்ஸலாயா:=கன்றினிடத்தில் ஆசையுள்ள தாய்பசு —
நாம=எப்படியெல்லாம் – அவஸ்தா=அவதிப்படுகின்றது.

புதிதாக ஒரு பசு கன்றினை ஈன்றுகின்றது. அந்த கன்றனாது துள்ளி குதித்து தாய்பசுவினை விட்டு சில அடிகள்
நகர்ந்தால் கூட தாய்பசுவானது படாதபாடு பட்டுவிடும்!. உறுமும்..! கன்றைத் தொடர்ந்து ஓடும்..!
கன்றுக்கு என்ன ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தினால் கன்றுக்கு அருகே வருபவர்களை முட்டப் போகும்..!
ஒரு மிருகத்திற்கு இவ்வளவு வாத்ஸல்யம் இருக்கின்றதே! எல்லையில்லாத ஞானம், தயை, வாத்ஸல்யம் முதலிய
குணங்களையுடைய ஹே! பாதுகையே! நீ என்னிடத்தில் எப்படியிருக்க வேண்டும்..?

என்னுடைய ஜன்மாந்திரத் தொடர்பினால் வந்த பாபவாஸனையினால், இந்த உலகப்பற்று நீங்காமல்,
ஆசையுடையவனாய், பற்றுடையவனாய்,ஸம்ஸார கடலில் போக்யதாபுத்தியினால் உழன்று, உன்னை விட்டு விலகி
நான் ஓடினால் கூட, நீ அந்த தாய்பசுவினைப் போன்று என்னை துடர்ந்து வந்து , உன் கடாக்ஷத்தினால் என் பாபங்களைப் போக்கி,
வைராக்கியமான மனதையளித்து, என் மனதை உன்னிடத்திலேயே நிலைக்கொள்ளுமாறு வைத்திருக்க வேண்டாமா..?
இவ்விதம் செய்யாமல் என்னை ஒதுக்கி வைப்பது உனக்கு அழகா..? இது தகுமா..?

இந்த ஸம்ஸாரருசி என்பது வெறும் ஞானத்தினால் போகாது. பகவத் அனுக்கிரஹம் ஒன்றினால் மட்டுமே நீங்கும்.
இந்த பகவத் அனுக்ரஹத்தினை ஆச்சார்யன் சம்பந்தமானது மிகவும் எளிதாக ஆக்கும்.
ஆச்சார்யனது வாத்ஸல்யம் இருந்தால் பகவத் அனுக்ரஹம் பரிபூர்ணம்.

—————————————————————————

மாதர் முகுந்த கருணாம் அபி நிஹ்நுவாநாத்
கிம் வா பரம் கிமபி கிஷ்பிஷதோ மதீயாத்
காடம் க்ருஹீத சரணா கமநாபதேசாத்
தத் ப்ரேரண ப்ரணயிநீ தவ சேத் ந லீலா—956-

தாயே! ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே (கடந்த ச்லோகத்தில் “நீயாகவே தேடி வர வேண்டும்”, என்று கூறியவுடன்
பாதுகைகள், ”நான் உன்னைத் தேடி வரவில்லை என்றால் உனது பாவமே அதற்குக் காரணம்”, என்றாள்.
உடனே ஸ்வாமி அவளிடம், “உனது லீலைகள் என் பாவங்களை விட வலிமையானது அல்லவோ?”, என்கிறார்)
ஸஞ்சாரம் என்பதைக் காரணமாகக் கொண்டு ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை நீ கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாய்.
இப்படியாக அவனைப் புறப்படத் தூண்டியபடி உள்ளாய். இத்தனை உயர்ந்தவையாக உனது லீலை இல்லை என்றால் –
ஸ்ரீரங்கநாதன் தானாகவே என் மீது செலுத்துகின்ற கருணையை மறுக்கின்ற அளவிற்கு உள்ள
எனது பாவங்களை விட உயர்ந்த வஸ்து வேறு என்ன உள்ளது? (உனது கருணை மட்டுமே எனது பாவங்கள் நீக்கவல்லது)

ஸ்ரீ பாதுகா தாயே -என் பாபங்கள் வலியவை என்பாயோ -சஞ்சாரம் என்ற சாக்கில் பெருமாள் திருவடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு
அவனை என் விஷயத்தில் ஏவி உதவக் கூடிய உன் லீலை ஓன்று இல்லை என்றால் என் நிலை என்ன ஆகும் –
என் பாபங்கள் வலிதானாலும் உன் கருணையை இன்னும் நம்பி இருக்கிறேன் என்றதாயிற்று –

——————————————————————————

க்ஷீபா அஸி காஞ்சந பாதாவநி கைடபாரே
பாதாரவிந்த மகரந்த நிஷேவணேந
தேவி த்வதந்திக ஜுஷ: கதம் அந்யதா மே
தீநாக்ஷராணி ந ஸ்ருணோஷி தயாதிகா த்வம்—957-

தங்கமயமான பாதுகையே! கைடபன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்ற தாமரையில் உள்ள
தேனைப் பருகி மயக்கம் கொண்டு நீ உள்ளாய். இவ்விதம் நீ மயக்கம் கொள்ளாமல் தெளிந்த நிலையில் இருந்தாய் என்றால் –
கருணை நிரம்பிய நீ, எனது வருத்தம் நிறைந்த சொற்களைக் கேட்காமலா இருந்திருப்பாய்
(நீ கேட்காத காரணத்தால் அரங்கனின் திருவடி அழகில் மயங்கி உள்ளாய் என்று கருத்து).

ஸ்ரீ தங்கப் பாதுகை தேவியே பெருமாளின் திருவடித் தாமரைத் தேனை நிறையக் குடித்து மயங்கிக் கிடக்கிறாய் போலும் –
உன் அருகில் இருந்து கொண்டு புலம்பும் என் எளிய சொற்களை கருணை நிறைந்த நீ
எங்கனம் காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்கக் கூடும் –

——————————————————-

மாதஸ் த்வத் அர்ப்பித பரஸ்ய முகுந்த பாதே
பத்ரே தராணி யதி நாம பவந்தி பூய:
கீர்த்தி: ப்ரபந்ந பரிரக்ஷண தீக்ஷிதாயா:
கிம் ந த்ரபேத தவ காஞ்சந பாத ரக்ஷே—-958–

என் தாய் போன்ற தங்கமயமான பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உன்னால் ஸமர்ப்பிக்கப்பட்ட,
மோக்ஷத்தின் உபாயமான பக்தி என்பதைச் சரியாகச் செய்யவேண்டிய பொறுப்பைச் சுமர்த்தப்பட்டவனாகிய எனக்கு –
அதன் பின்னரும் நன்மை அல்லாத தீமைகளே தொடர்ந்து வருகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
அப்படி என்றால், சரணம் அடைந்தவர்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற விரதம் கொண்டுள்ள
உனது கீர்த்தியானது வெட்கம் கொள்ளாதோ? (அதற்குக் பயந்தாவது நீ காப்பாற்றவேண்டாமோ)

ஸ்ரீ தங்கப் பாதுகைத் தாயே முகுந்தன் திருவடிகளில் என் பரம் உன்னால் சமர்ப்பிக்கப் பெற்றதாயிற்றே –
அப்படி இருக்க -எனக்கு அமங்கலம் நிகழ்ந்திடுமே யாகில் அனைவரையும் ரஷிக்க வ்ரதம் பூண்டு இருக்கும்
உன் கீர்த்திக்கு அன்றோ பழுதாகும் -அதற்கு வெட்கம் ஏற்படாதோ –

———————————————————————-

தௌவாரிக த்விரஸந ப்ரபலாந்தராயை:
தூயே பதாவநி துராட்ய பில ப்ரவேசை:
தத் ரங்கதாம நிரபாய தந உத்தராயாம்
த்வய்யேவ விஸ்ரமய மங்க்ஷு மநோரதம் மே—959-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பாம்பின் புத்துக்கள் போன்று இந்த உலகில் உள்ள தீமை நிறைந்த செல்வந்தர்களின் வீடுகள் உள்ளன.
அந்த வீடுகளின் வாயிலில் உள்ள வாயிற்காப்போன் பாம்பு போன்றே உள்ளான்.
இப்படிப்பட்ட இடையூறுகளால் நான் பலமுறை துயரப்படுகிறேன். ஸ்ரீரங்கநாதன் என்ற அழிவற்ற பெரும் செல்வத்தை
நீ எப்போதும் தாங்கியபடி உள்ளாய். இப்படிப்பட்ட உன்னிடம் நிலையாக இருக்கும்படி எனது ஆசை என்ற தேரைச் செலுத்தி வருவாயாக.

ஸ்ரீ பாதுகையே -என் வருத்தம் இது தான் -வாழ்க்கை நடத்தப் பணம் வேண்டுமே என்று துஷ்டப் பிரபுக்கள் இடங்கள் ஆகிய பாம்பு புற்றுக்களுக்குள்
நுழைய முற்பட்டு வாயில் காப்போன்கள் ஆகிய பாம்புகளால் எனக்கு ஏற்படக் கூடிய நிலையை நினைந்து வருந்துகிறேன்
ஸ்ரீ ரங்க நாடகனே அழிவில்லாத பெரும் தனம் -அது உயர்வு மிக்க உன்னிடத்தில் நிலையாக உள்ளது
என் மநோ ரதம் உன்னிடத்திலேயே இளைப்பாறும் படி சீக்ரமாகவே அருளுவாயாக –

————————————————————————————–

வ்யாமுஹ்யதாம் த்ரிவித தாபமயே நிதாகே
மாயா விசேஷ ஜநிதாஸு மரீசிகாஸு
ஸம்ஸ்ப்ருஷ்ட சௌரி சரணா சரணாவநி த்வம்
ஸ்தேயா ஸ்வயம் பவஸி நஸ் சரமே புமர்த்தே—960–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம் மற்றும் ஆதிதைவிகம்
என்ற மூன்று விதமான வேதனைகள் நிறைந்த கோடைகாலம் போன்று இந்த ஸம்ஸாரம் உள்ளது,
இந்தக் கோடையில், ப்ரக்ருதியின் மூன்று குணங்களானவை கானல்நீரைப் போன்று தோன்றி, எங்களை மயக்கியபடி உள்ளன.
இந்த நேரத்தில் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் வருடியபடி உள்ள நீயே,
உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷ விஷயத்தில் எங்களிடம்,
”இந்தத் திருவடிகளைப் பாருங்கள் – இதுதான் உயர்ந்த மோக்ஷம். இது நிச்சயம் கிட்டும்”, என்று கூறுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே சம்சாரம் ஒரு கடும் கோடை -தாபத்ரயம் வருத்தும் -மூல பிரக்ருதியின் விளைவு களான குண வகைகளால்
ஏற்படும் சப்தாதி விஷயங்களில் ஈடுபட்டு அலைகிற மனம் பின் அவை கானல் நீர் என்று உணர்ந்து துயர் உறும்
நீ பெருமாள் திருவடியை நன்றாகத் தொட்டுக் கொண்டு இது தான் உத்தம புருஷார்த்தம் என்று காட்டித் தந்து –
சந்தேஹங்களை விலக்கி அது நமக்கு கிடைக்கும் என்று காட்டி அருளுகிறாய் –

——————————————————————————————

அச்சேத்யயா விஷய வாகுரயா நிபத்தாந்
தீநாந் ஜநார்த்தந பதாவநி ஸத்பதஸ்த்தா
ப்ராய: க்ரமேண பவதீ பரிக்ருஹ்ய மௌளௌ
காலேந மோசயதி ந: க்ருபயா ஸநாதா—-961-

ஜனங்களால் எப்போதும் வேண்டப்படும் ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
அறுத்துக் கொண்டு வெளியே வர இயலாதபடி இருக்கின்ற உலக விஷயங்கள் என்னும் வலையில் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம்.
அப்போது உனது கருணை காரணமாக நீ ஆகாய மார்க்கமாக வருகிறாய்.
சரியான கால கட்டத்தில் மேலே நின்றபடி எங்கள் தலையைப் பிடித்து, அந்த வலையில் இருந்து இழுத்து, எங்களை விடுவிக்கிறாய்.

ஸ்ரீ பெருமாளின் பாதுகையே -சப்தாதி விஷயங்கள் -வலிமையான வலை -அதில் சிக்கித் தவிக்கிற எம்மை கருணை உடன்
நீ ஒவ்வொருவர் தலையிலும் அமர்ந்து வரிசையாக வலையில் இருந்து விடுவிக்கிறாய்
நாங்கள் தீனர் -நீ பரமபதத்தில் இருந்து எமக்காக இறங்கி வந்து எம்மை விடுவித்து உய்விக்கிறாய்-

———————————————————————————-

ஸம்வாஹிகா சரணயோர் மணி பாத ரக்ஷே
தேவஸ்ய ரங்கவஸதேர் தயிதா நநு த்வம்
கஸ்த்வாம் நிவாரயிதும் அர்ஹதி யோ ஜயந்தீம்
மாதஸ் ஸ்வயம் குணகணேஷு மம அபராதாந்—-962-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! ஸ்ரீரங்கவிமானத்தைத் தனது ஆஸ்தானமாகக் கொண்ட
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் தாங்கியபடி உள்ள ப்ரியமானவள் நீ அல்லவோ?
எனது குற்றங்களுக்காக ஸ்ரீரங்கநாதன் என்னைத் தண்டிக்க முற்பட்டாலும்,
எனது குற்றங்களைச் சட்டென்று குணங்களாக நீ மாற்றிக் காட்டி,
அவனது தண்டிக்கும் செயலைத் தடுக்கிறாய். இப்படிப்பட்ட உன்னை வேறு யார் தடுக்கக்கூடும்?

ஸ்ரீ மணி பாதுகை தாயே -நீ எம்பெருமான் திருவடிகளைப் பிடித்து விடும் பிரிய நாயகி யாயிற்றே –
நீசனான என் குற்றங்களைப் பெருமாள் பொறுத்து அருள்வது
அவர் ஷமை கருணை வாத்சல்யம் போன்ற குணங்களை பிரகாசப்படுத்துமே
நீ அத்தைச் செய்ய தூண்டுவதை யாரால் தடுக்க துணிவார் -எனக்காகச் செய்து அருளுவீர் அம்மா –

————————————————————————————–

கிம் வா பவிஷ்யதி பரம் கலுஷ ஏக வ்ருத்தே:
ஏதாவதா அப்யநு பஜாதம் அநேஹஸா மே
ஏகம் ததஸ்தி யதி பஸ்யஸி பாதுகே தே
பத்மா ஸஹாய பத பங்கஜ போக ஸாம்யம்—-963-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இது நாள் வரை நான் பாவங்கள் செய்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டபடி உள்ளேன்.
இவற்றின் பலனாகிய துன்பமோ இன்பமோ இனிப் புதிதாக எதுதான் எனக்கு ஏற்படப் போகிறது?
ஆனால் நீ என்னை உற்று நோக்கினால் போதுமானது. அதன் மூலம், இதுவரை எனக்குக் கிட்டாமல் உள்ள ஒன்று கிட்டிவிடும்.
அது என்னவென்றால் – ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளை
உனக்கு சமமாக நின்று நானும் அனுபவிக்கும் நிலையே ஆகும்.

ஸ்ரீ பாதுகையே -உன் கடாஷத்தினால் சாம்யாபத்தி அடையும் படி அருள வேண்டும் –
இது நாள் வரை பல காலமாக நாநாவித பாபங்களை செய்து போந்தேன்-கடாஷித்து அருளுவாய் –

——————————————————————-

விவித விஷய சிந்தா சந்ததா பிச்சரம்
ஜனித கலுஷமித்தம் தேவி துர்வாச நாபி
பத சரசிஜ யோஸ்த்வம் பாதுகே ரங்க பர்த்து
பரிமள பரிவாஹை பாவனைர் வாச யேதா –964–

விவித விஷய சிந்தா ஸந்ததாபி: சிரம் மாம்
ஜநித கலுஷம் இத்தம் தேவி துவாஸநாபி:
பத ஸரஸிஜயோ: த்வம் பாதுகே ரங்க பர்த்து:
பரிமள பரிவாஹை: பாவநைர் வாஸயேதா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! உலக விஷயங்கள் என்னும் பலவிதமான சிந்தனைகளின் வாஸனைகள் காரணமாக
நான் பாவங்கள் என்னும் அழுக்கு சூழ நிற்கிறேன். இந்த நாற்றம் தீரும்படியாக,
ஸ்ரீரங்கநாதனின் திருவடித்தாமரையின் வாசனை வெள்ளம் மூலம் என்னை நறுமணம் வீசும்படிச் செய்வாயாக.

ஸ்ரீ பாதுகா தேவியே உலகில் பலவித விஷயங்களில் சிந்தையைத் தொடர்ச்சியாகப் பரவ விட்டேன் –
அதனால் ஏற்பட்ட துர்வாசனை என்னைச் சிக்கென பிடித்து பாபியாக்கி விட்டதே –
நீ அந்த துர் வாசனையைப் போக்கி ஸ்ரீ ரங்க நாதனின் திருவடித் தாமரைகள் தரும் பரிசுத்தி தரத் தக்க
பரிமள வெள்ளங்களால் என்னை மணக்கச் செய்து அருள்வாயாக –

——————————————————————–

சரணம் அதிகத: த்வாம் சார்ங்கிண: பாத ரக்ஷே
ஸக்ருதபி விநியுக்தம் த்வத் ஸபர்யாதிகாரே
புநரபி சதமேநம் ஹஸ்தம் உத்தாநயேயம்
தநமத முதிதாநாம் மாநவாநாம் ஸமாஜே—-965-

சார்ங்கம் என்னும் வில்லைக் கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
உன்னையே சரணம் என்று புகுந்த நான், ஒருமுறையாவது உன்னை ஆராதிக்கப் பயன்படுத்தப்பட்ட
எனது கையை, செல்வம் அதிகமாக உள்ள காரணத்தினால் கர்வத்துடன் ஆனந்தமாக உள்ள
மனிதர்களின் முன்பாக எவ்விதம் நீட்டி நிற்பேன்?

ஸ்ரீ பெருமாளின் திருப்பாதுகையே நான் உன்னைச் சரண் அடைந்தவன் –
இந்தக் கையால் ஒரு தரமாவது உனக்கு கைங்கர்யம் செய்து இருப்பேன்
இதை மறுபடி ஒரு மனிதன் முன் நீட்டி உதவி கேட்பேனோ -நிச்சயம் மாட்டேன் –

—————————————————————————————–

யதி கிமபி ஸமீஹே கர்ம கர்த்தும் யதாவத்
ப்ரதிபதம் உபஜாதை: ப்ரத்யவேயாம் நிமித்தை:
அவதிரஸி யதி த்வம் தத்ர நைமித்திகாநாம்
சரணம் இஹ கிம் மே சௌரி பாதாவநி ஸ்யா:—966-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சாஸ்த்ரங்கள் விதிக்கின்ற கர்மங்களை நான் அனுஷ்டிக்க முயற்சி செய்யும் போது
பலவிதமான தவறுகள் அடிக்கடி ஏற்பட, இதனால் குற்றம் நிறைந்தவன் ஆகிறேன்.
இப்படிப்பட்ட தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக நீயே உள்ளாய்.
இப்படி நீ உள்ளபோது, கர்மங்களை நான் கடைப்பிடிக்காமல் உள்ள நேரத்திலேயே நீ ஏன் என்னைக் காப்பாற்றக் கூடாது?

ஸ்ரீ பாதுகா தேவியே சாஸ்த்ரத்தில் சொல்லும் கர்மாக்கள் செய்ய முயலுகையில் மந்திர தந்திர ஆசராதிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டே
அப்படி குற்றவாளன் ஆகி அதற்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டியன் ஆகிறேன்
அதிலும் தவறு என்றால் -இப்படி நீள வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லாவற்றுக்கும் முடியும் இடம் நீயே ஆகிறாய் –
அதை விட கர்மாநுஷ்டானம் செய்யத் தொடங்காத நிலையிலேயே நீ என் எனக்கு சரணம் ஆகலாகாது
அது தானே தரம் -செய்து அருள்வாய் –ஸ்ரீ கிருஷ்ண பாதுகாப்யாம் நம -பிராயச்சித்த ஸ்மரணம் செய்வது உண்டே –

—————————————————————————————————–

அந்தர்லீநை: அகபரிகரை ஆவிலா சித்த விருத்தி:
சப்தாதீநாம் பரவசதயா துர்ஜயாநி இந்த்ரியானி
விஷ்ணோ: பாத ப்ரணயிநி சிராத் அஸ்ய மே துக்க ஸிந்தோ:
பாரம் ப்ராப்யம் பவதி பரயா வித்யயா வா த்வயா வா—-967-

எங்கும் நிறைந்தவனான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மீது மிகவும் ஆசை கொண்ட பாதுகையே!
எனது மனதிற்குள் நிறைந்துள்ள பாவங்களின் காரணமாக மனம் மிகவும் கலங்கியே நிற்கிறது.
இந்த்ரியங்கள் அனைத்தும் சப்தம் போன்ற அவற்றின் விஷயங்களுக்கு வசப்பட்டு நிற்பதால், வெல்ல இயலாதபடி உள்ளன.
இத்தகைய எனது துக்கம் நீங்குவது என்பது
பக்தியின் மூலமா (ஸ்ரீரங்கநாதனிடம் எல்லையற்ற ப்ரியம்),
ப்ரபத்தி மூலமா (ஸ்ரீரங்கநாதனிடம் அசைக்க இயலாத நம்பிக்கை)
அல்லது உன்னைச் சரணம் அடைவதன் மூலமா?

என் உள்ள அழுந்தி இருக்கும் பாப வாசனை மநோ விருத்தியைக் கலக்கி விடுகிறது –
இந்த்ரியங்கள் யாவம் சப்தாதி விஷயங்கள் வசப்பட்டுக் கிடக்கின்றன -வெல்ல ஒண்ணாதவை-
ஸ்ரீ பாதுகையே பெருமாளின் திருவடியின் பற்று மிக்க காதலியே இந்தக் கடலை நீந்த
பரவித்யை என்று சொல்லப்படும் பக்தியாலேயா அல்லது உன்னாலாலா –
உன்னிடத்தில் சரணாகதி யாலேயே தானே -என்றவாறு

—————————————————————

கோமாயூநாம் மலய பவநே தஸ்கராணாம் ஹிமாம்சௌ
துர் வ்ருத்தாநாம் ஸுசரி தமயே ஸத்பதே த்வத் ஸநாதே
தத்வஜ்ஞாநே தரள மநஸாம் சார்ங்கிண: பாத ரக்ஷே
நித்யோத் வேகோ பவதி நியதே: ஈத்ருசீ துர்விநீதி:—968–

சார்ங்கம் என்ற வில்லை உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
குள்ள நரிகளுக்கு தென்றல் காற்றும், திருடர்களுக்குக் குளிர்ந்த கிரணங்கள் கொண்ட பௌர்ணமி நிலவும் பிடிக்காமல் உள்ளது.
தீய நடத்தை உள்ளவர்களுக்கு உன்னையே தெய்வமாக எண்ணியபடி பின்பற்றக் கூடிய தர்ம மார்க்கம் என்பது பிடிக்காமல் உள்ளது.
தடுமாறும் மனதைக் கொண்டவர்களுக்கு, உண்மையான ஞானம் அறிவதில் வெறுப்பு உள்ளது.
இப்படியாக அல்லவோ தெய்வத்தின் போக்கு உள்ளது?

பேற்றுக்கு த்வரிக்கை ஏன்- என்று ஸ்ரீ பாதுகா தேவி அருளிச் செய்ய இந்த ஸ்லோஹம்
ஸ்ரீ பெருமாளின் திருப் பாதுகையே குள்ள நரிகள் தென்றலை ரசிக்க மாட்டார் –
திருடர்கள் குளிர்ந்த நிலக் காலத்தை வெறுப்பர் –
உன்னை தெய்வம்,ஆகி கொண்டாடி தர்மம் மிகு சன்மார்க்கத்தில் துர்ஜனர் ஈடுபடார் –
சஞ்சல புத்தி உள்ளவர் தத்வ ஜ்ஞான லாபத்தில் ஸ்ரத்தை கொள்ள மாட்டார் -வெறுப்பர் –அஞ்சுவர்
இது எல்லாம் விதியின் கொடுமை -இனி என்னை இங்கே வையாதே –

——————————————————————————————-

காலே ஜந்தூந் கலுஷ கரணே க்ஷிப்ரம் ஆகார யந்த்யா:
கோரம் நாஹம் யம ப்ரிஷதோ கோஷமா கர்ண யேயம்
ஸ்ரீமத் ரங்கேச்வர சரணயோ: அந்தரங்கை: ப்ரயுக்தம்
ஸேவாஹ்வாநாம் ஸபதி ஸ்ருணுயாம் பாதுகா ஸேவக இதி —969-

கலுஷ=கலங்கியிருக்கின்ற – கரணே=இந்திரியங்களுடைய – காலே=செத்துப் போகிற காலத்திலே –
ஜந்துாந்=ஜந்துக்களை (ஜீவன்களை) – க்ஷிப்ரம்=சீக்கிரமாக – ஆகாரயந்த்யா:=அழைக்கிறதாயிருக்கின்ற –
யமபரிஷத:=யமக் கூட்டத்தினுடைய – கோரம்=பயத்தையுண்டுப் பண்ணுவதான – கோஷம்= இரைச்சலை –
அஹம்=நான் – நாகர்ணயேயம்=கேட்கமாலிருக்க வேண்டும். – ஸ்ரீமத்=மஹாலக்ஷ்மியோடு கூடிய –
ரங்கேஸ்வர=ஸ்ரீரங்கநாதனுடைய – சரணயோ:=திருவடிகளுக்கு – அந்தரங்கை:=அந்தரங்கமாய் –
ப்ரயுக்தம்= சொல்லப்படுகின்ற – பாதுகாஸேவகேதி= பாதுகா ஸேவகரே என்று – ஸேவா=ஸேவைக்காக –
ஆஹ்வானம்=பகவத் ஸந்நிதிக்குள் அருளப்பாடிட்டு (என்னை)அழைப்பதை – ஸபதி=சீக்கிரமாக –
அஹம்=நான் – ச்ருணுயாம்=கேட்கவேண்டும்.

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது புலன்கள் ஒடுங்கி நிற்கின்ற அந்திம காலத்தில்,
”உடனடியாக வா”, என்று மனிதர்களை விரட்டுகின்ற யமகிங்கரர்களின் பயங்கரமான ஓசையை நான் கேட்காமல் இருக்கவேண்டும்.
ஸ்ரீரங்கநாச்சியாருடன் சேர்ந்துள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்பவர்களால்,
”அந்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகா ஸேவகனை அழைத்து வா”, என்ற அருளப்பாட்டை வெகு விரைவாக நான் கேட்க வேண்டும்.

ஸ்வாமி தேசிகனுக்கு உபயவேதாந்தாசார்யர், கவிதார்க்கிக ஸிம்ஹம், ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் போன்ற
பல விருதுகள் திருவரங்கத் திவ்யதம்பதிகளால் அளிக்கப்பட்டது.
ஆனால் தனது அந்திம காலத்தில் அந்தப் பெயர்கள் கூறி அழைப்பதை ஸ்வாமி பெரிதாக எண்ணவில்லை.
மாறாக “பாதுகா ஸேவகன்” என்ற பெயரையே விரும்புகிறார்.

ஸ்ரீ பாதுகையே அந்திம காலத்தில் இந்த்ரியங்கள் யாவும் கலங்கி ஓய்ந்து விடும் –
யமபடர் பெரிய இரைச்சல் என் காதில் கேட்காமல் இருக்க அருள வேண்டும்
ஸ்ரீ ரங்க நாதனுடைய அந்தரங்க கைங்கர்ய பரர் என்னை சேவைக்காக கூப்பிட –
ஸ்ரீ பாதுகா சேவகரே வாரும் -என்று கூவுவது சீக்ரமாக நான் கேட்கும் படி அருள வேணும் –

ஹே பாதுகே! உன்னுடைய அனுக்ரஹத்தினால் எனக்கு இந்த சரீர சம்பந்தமானது சீக்கிரத்தில் நீங்கப் போகின்றது..!
அந்த சமயத்தில் எனக்கு நீ செய்ய வேண்டிய ஒரு காரியத்தினை நான் இப்போதே வேண்டிக் கொள்கின்றேன்..!
என்னுடைய இந்திரியங்கள் யாவும் செயலிழந்து போனாலும் போகலாம்.!
இறக்கும் தருவாயில் பகவானுடைய நாமத்தினைச் சொல்வதற்கோ நினைப்பதற்கோ முடியாமல் போனலும் போகலாம்..!
அந்த சமயத்தில் யமதூதர்கள் வந்து “பாபி! சீக்கிரம் கிளம்பு..” என்று பயங்கரமாக அதட்டி ஆர்ப்பரிக்கும் படியாக இருக்கக் கூடாது.
நான் வாங்கிய விருதுகள் எதுவும் என் மரணத்தின் போது உதவாது. நீ இப்போதே, நான் உன்னை ஸேவிக்க வரும் போது
“ஸ்ரீமத் ரங்கநாத பாதுகா ஸேவகருக்கு அருளப்பாடு” என்று அரங்கனின் மூலஸ்தானத்தில் கைங்கர்யம் செய்பவர்களால்
அருளப்பாடிட்டு அழைக்கும்படிச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அழைக்கப் பெறுவேனாயின் உலகத்தாரிடையே இந்த பெயர் பிரபலமாகும்.
என் உயிரானது பிரிய தவிக்கும் போது என் பக்கத்திலுள்ள ஜனங்கள் “ஸ்ரீமத்ரங்கநாத பாதுகா ஸேவகரின் உயிரானது
தவித்துக் கொண்டிருக்கின்றது.” என்று எனக்கு வழங்கப்பட்ட இந்த பெயரையும் சேர்த்துச் சொல்லுவார்கள்.
இதனைக் கேட்கும் யம தூதர்கள், “நல்லவர்களோ கெட்டவர்களோ பகவானை ஆஸ்ரயித்தவர்களின் (ஸ்ரீவைஷ்ணவர்களின்)
ஸமீபத்தில் கூட போகதீர்கள். அது மிகவும் அபாயமானது” என்ற எமதர்மராஜாவின் ஆக்ஞைப்படி விலகி ஓடிவிடுவார்கள்.
யமவாதனை என்னை வாட்டமலிருக்க இதுவே உபாயம்.!ஆகையினால் நீ அப்படிச் செய்ய வேணும்..!

————————————————————————————-

பாஷாண கல்பம் அந்தே பரிசித கௌதம பரிக்ரஹ ந்யாயாத்
பதிபத பரிசரணார்ஹம் பரிணமய முகுந்த பத ரக்ஷிணி மாம்—-970–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது அந்திம காலத்தில் கல்லைப் போன்று நான் எந்தவிதமான நினைவும் இன்றிக் கிடப்பேன்.
அந்த நிலையில் நான் உனக்கு முன்பே பழக்கமான கௌதம முனிவரின் பத்னியாகிய அகலிகை போன்று கிடப்பேன்.
அவளை நீ எப்படிப் பிழைக்க வைத்து, அவளது கணவனின் பணிவிடையில் ஈடுபடுத்தினாயோ,
அது போன்று என்னையும் எனது பதியான ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்யும்படிச் செய்வாயாக.

ஸ்ரீ முகுந்த திருப் பாதுகையே அந்திம சமயத்தில் கல் போலக் கிடக்கிற என்னை நீ எப்படி அனுக்ரஹிக்க வேண்டும் என்று சொல்கிறேன்
நாம் நன்கு அறிந்த ஸ்ரீ கௌதம பத்னியான அஹல்யையின் கதையில் போலே பெருமாள் திருவடி பட்டு –
என் பதியான எம்பெருமானுடைய கைங்கர்யத்துக்குத் தக்கபடி அமைய நீ அருள வேணும் –

நிர்வேத பத்ததி ஸம்பூர்ணம்

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: