ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-24-த்வந்த்வ பத்ததி -இரட்டைப் படலம் -ஸ்லோகங்கள் -761-780-

இரண்டாகப் பாதுகைகள் உள்ளதை வர்ணிக்கிறார். ப்ரணவ மந்திரத்தின் அம்சமாகவே இவை உள்ளன என்கிறார்.

———

ப்ரபத்யே பாதுகாரூபம் ப்ரணவஸ்ய கலா த்வயம்
ஓதம் மிதம் இதம் யஸ்மிந் அநந்தஸ்யாபி தத்பதம்—-761-

ப்ரணவத்தின் ரூபமாகவே உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகை இணையை நான் சரணம் அடைகிறேன்.
இந்த இணையில் அற்பமான ஜீவனும், எல்லையற்ற ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபமும் கோர்க்கப்பட்டுள்ளது.

ஜீவன் என்பவன் அனைத்தையும் காக்கும் ஸர்வேச்வரனைச் சேர்ந்தவன் என்று ப்ரணவம் கூறுகிறது.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தாங்கும் பாதுகைகள் ஜீவர்களின் தலையில் வந்து அமர்ந்து,
இவர்கள் ஸ்ரீரங்கநாதனைச் சார்ந்தவர்கள் என்று உணர்த்துவதாகக் கூறுகிறார்.
ஆக இரண்டும் (ப்ரணவம், பாதுகைகள்) ஒரே தன்மை கொண்டவை என்கிறார்.

பிரணவம் ஸ்ரீ பாதுகா ரூபமாக ஓர் இணையாக -ஒரு த்வயமாக உள்ளது -அந்த இணையில் மகாரார்த்தமான ஜீவாத்மாவும்
அகாரார்த்தமான அனந்தனான பகவானும் சேர்ந்து உள்ளன
மிகக் குறைந்த அளவுள்ள ஜீவாத்மா -பரிமாணம் அளவிட்டுச் சொல்ல ஒண்ணாத பகவான் -இவை இரண்டும் கோக்கப் பட்டுள்ளன
பகவான் ஸ்வரூபமும் திருவடியும் கூடச் சேர்ந்து உள்ளன –
எப்படி அகார மகாரங்கள் பிரணவத்தில் சேர்ந்து உள்ளனவோ அத்தகைய ஸ்ரீ பாதுகையை சேவிக்கிறேன் –

—————————————————————————————–

மணி பாதுகயோர் யுகம் முராரே:
மம நித்யம் விததாது மங்களாநி
அதி க்ருத்ய சராசரஸ்ய ரக்ஷாம்
அநுகம்பா க்ஷமயோர்: இவ அவதார:—-762-

அசைபவை, அசையாமல் உள்ளவை போன்ற இரு தன்மைகள் கொண்ட இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு,
ஸ்ரீரங்கநாதனுக்குத் தயை மற்றும் பொறுமை ஆகிய குணங்கள் உண்டு.
இந்தக் குணங்களின் உருவம் போன்றே உள்ள ஸ்ரீரங்கநாதனின் இரண்டு இரத்தினமயமான பாதுகைகள்,
என் விஷயத்தில் எப்போதும் நன்மைகளைச் செய்யவேண்டும் (ஒரு பாதுகை தயை, ஒரு பாதுகை மன்னிக்கும் தன்மை அளிக்கின்றன).

ஜங்கம -ஸ்தாவரங்களாலான இவ்வுலகத்தின் ரஷண கார்யதிற்காகவே அவதரித்தவை இரண்டு ஸ்ரீ பாதுகைகளும்
அவையே தயை ஷமை ஆகிய கல்யாண குணங்களின் மறு உருவங்கள்
இந்த இரண்டு ரத்ன பாதுகைகளும் எனக்கு சுபங்களை எப்போதும் செய்து அருளுக –

——————————————————————-

சரணௌ மணி பாதுகே முராரே:
ப்ரணதாந் பால யிதும் ப்ரபத்யமாநம்
விபதாம் இவ தைவ மாநுஷீணாம்
ப்ரதிகாரம் யுவயோர் த்வயம் ப்ரதீம:—-763-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகளே! இந்த உலகில் உள்ளவர்களுக்கு மனிதர்களாலும் தேவர்களாலும் வருகின்ற
ஆபத்தை நீக்குவதற்காகவே நீங்கள் உள்ளீர்கள் (இரண்டு பாதுகைகள்).
இப்படியாக உள்ள நீங்கள், உங்களை வந்து வணங்குபவர்களைக் காப்பாற்றுவதற்காகவே,
நீங்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்ததாக நாங்கள் எண்ணுகிறோம்.

ஸ்ரீ மணி பாதுகையே நீவீர் இருவரும் பகவானுடைய திருவடிகளை அணைந்து இருப்பது -வணங்கினவர்களைக் காப்பதற்காக –
ஓன்று ஆதி தெய்விக-தேவர்கள் இடம் இருந்து வரும் விபத்துக்களுக்கும்
இன்னொன்று ஆத்யாத்மிக -மனிதர்கள் இடத்தில் இருந்து வரும் விபத்துக்களுக்கும் ஏற்ற பரிஹாரம் என்று சொல்லலாம் போலும் –

—————————————————————————-

முரபித் மணி பாதுகே பவத்யோ:
விஹிதோ நூநம் அஸௌ மிதோ விபாக:
பஜதாம் அபரஸ்பர ப்ரியாணாம்
அவிரோதாய ஸுர அஸுரேஸ்வராணாம்—764-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! உங்களுக்குள் பரஸ்பரம் உள்ள இந்த இரண்டு என்னும் தன்மையானது,
உங்களை வந்து வணங்குகின்ற, ஒருவருக்கொருவர் நட்பு இல்லாமல் உள்ள,
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கலகம் ஏற்படாமல் இருப்பதற்காக உள்ளது போலும்.

பெருமாளின் ஸ்ரீ இரட்டை பாதுகைகளே -நீங்கள் இப்படி இரண்டாய்ப் பிரிந்து நிலை நிற்பது -வந்து சேவிக்கும்
தேவர் அசுரர் என்ற இரண்டு கட்சிகளுக்கும் -எவை எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டு இருக்குமோ
அந்த இரண்டிற்கும் கலஹம் ஏதும் வராமல் இருக்கவோ என்று தோன்றும் –

————————————————————————————-

அஹிதோந் மதநாய ஸம்ஸ்ரிதாநாம்
அலம் ஆலோக வசேந ஸப்ததோ வா
கரயோஸ்ஸ ரதாங்க பாஞ்ச ஜந்யௌ
மதுஹந்துஸ் பதயோஸ்ஸ பாதுகே யே—-765–

ஸ்ரீரங்கநாதனின் திருக்கரங்களில் உள்ள சங்கும் சக்கரமும், தங்கள் நாதம் மூலமும் ஒளி மூலமும்
அடியார்களின் விரோதிகளையும், அவர்களின் திட்டங்களையும் நாசம் செய்கின்றன.
இவை போன்றே, அவனது திருவடிகளில் உள்ள பாதுகைகள் துயரங்களை நீக்கப் போதுமானவையாக உள்ளன.

ஆஸ்ரிதருக்கு வரும் கஷ்டங்களைப் போக்க ஒளி ஒலி மூலம் திருக்கைகளில்
திரு சங்காழ்வான் திருச் சக்கரத்தாழ்வான் இரண்டும் முறையே உதவும்
அதே போலதே திருவடிகளில் உள்ள ஸ்ரீ பாதுகைகள் கூட -அவை இரண்டுக்குமே -பிரகாசம் -இனிய நாதம் இரண்டும் உண்டே –

————————————————————————-

அவதீரித ஸாது பத்ததீநாம்
அலஸாநாம் மதுவைரி பாதுகே த்வே
இதரேதர ஸாஹசர்ய மித்தம்
ப்ரதிபந்நே இவ தைவ பௌருஷே ந:—766–

முன்னோர்கள் கூறிய ஸத் மார்க்கத்தைக் கைவிட்டவர்களும், சோம்பேறிகளாகவும் உள்ள எங்களைப் போன்றவர்களுக்கு,
மது என்ற அசுரனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் இரண்டு பாதுகைகளும் செய்வது என்னவென்றால் –
ஒன்றுக்கொன்று துணையாக நிற்பதான தெய்வத்தின் செயல்கள், மனிதர்களின் செயல்கள் போன்று
இந்தப் பாதுகைகள் நின்று, எங்களுக்கு உதவுகின்றன.

ஸ்ரீ பாதுகைகளே நாங்கள் சாதுக்களின் வழியை விட்டு ஒழிந்தவர்கள்-சோம்பேறிகளும் கூட –
எங்களுக்கு நீவீர் இரண்டு இணைந்து உதவுவது தெய்வ சக்தி புருஷ முயற்சி இரண்டும் வேண்டும்
என்று எடுத்துக் காட்டி அருளுவது போல் உள்ளது –

—————————————————————————-

பார்ஸ்வயோஸ் ஸரஸிஜா வஸுந்தரே
பாதயோஸ் ஸ மணி பாதுகே யுவாம்
ஸந்நிகர்ஷத நசேத் மது த்விஷஸ்
கிம் கரிஷ்யதி க்ருத ஆகஸாம் கண:—767–

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகைகளே! மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனுக்கு இரு பக்கங்களிலும்
மஹாலக்ஷ்மியும், பூமிப்பிராட்டியாரும் உள்ளனர். இப்படியாக அந்தப் பிராட்டிமார்களாக நீங்கள் (பாதுகைகள்)
ஸ்ரீரங்கநாதன் அருகே இல்லாமல் போனால், பாவம் செய்பவர்களின் கூட்டம் என்ன செய்யும்?

ஸ்ரீ மணி பாதுகைகளே பெருமாளுடைய இரண்டு பக்கங்களிலும் முறையே மகா லஷ்மியும் -கருணை காட்டுமின் -என்பவளும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியும் -பொறுத்துக் கொள்க என்பவளும் -திருவடிகளில் இருவரும் இல்லாமல் போய் இருந்தால்
பாபிகளுடைய கூட்டங்களுக்குக் கதி விமோசனம் ஏது-

—————————————————————————-

பாதுகே பவ பய ப்ரதீ பயோ:
பாவயாமி யுவயோஸ் ஸமாகமம்
ஸக்தயோர் தநுஜவைரிணர் பதே
வித்யயோர் இவ பராவராத் மநோ:–768–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! அசுரர்களின் சத்ருவான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ள நீங்கள்,
ஸம்ஸார பயத்திற்குச் சத்ருவாக உள்ளீர்கள். இப்படியாக உள்ள உங்கள் இருவரது சேர்க்கையைக் காணும் போது,
பரை மற்றும் அபரை என்ற வித்யைகளின் சேர்க்கை என்றே நான் எண்ணுகிறேன்.

பலவிதமான சாஸ்திரங்களைக் கற்று, அவனை அடைவதற்கான செயல்களில் ஈடுபட உதவுவதற்கு அபரவித்யை என்று பெயர்.
எம்பெருமானைப் பற்ற உதவும் அவனது உபாஸனம் என்பதற்குப் பரவித்யை என்று பெயர்.

ஸ்ரீ பாதுகைகளே சம்சார பயத்தைப் போக்க வல்லவர் நீவிர் -நீங்கள் இருவரும் பெருமாளுடைய திருவடிகளைச் சேர்ந்து இருப்பது
அபரவித்யை -ரிக் வேதாதிகளை இருந்து ஆசார்ய முகமாக ஏற்பட்ட ப்ரஹ்ம ஞானம் -பரவித்யை-அந்த ஞானம் கொண்டு
பகவத் உபாசனம் பண்ணிப் பக்தி யோகம் மூலம் பெருமாளை அடையும் முயற்சி -என்ற இரண்டின் இணையோ என்று சொல்லத் தோன்றும் –

————————————————————–

ரங்க ஸீமநி ரதாங்க லக்ஷ்மண:
சிந்தயாமி தபநீய பாதுகே
சாப தோஷ சமநாய தத் பதே
சக்ரவாக மிதுநம் க்ருதாஸ்பதம்—769-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் சக்கரத்தை அடையாளமாகக் கொண்டுள்ள
ஸ்ரீரங்கநாதனின் தங்கமயமான பாதுகைகளான உங்களைக் காணும்போது –
சாபத்தின் பரிஹாரமாக அவனுடைய கோயிலில் வாஸம் செய்யும் சக்ரவாகப் பக்ஷிகளின் ஜோடி என்றே நான் எண்ணுகிறேன்.

இராமன் சீதையைப் பிரிந்து துன்பம் காரணமாகக் குயிலைத் தாய் வளர்க்காது, சக்ரவாகப் பறவைகள் இரவில் சேரக் கூடாது
போன்ற சாபங்களை இட்டான். இதனை இங்கு கூறுகிறார். எந்தவிதமான சாபமும் ஸ்ரீரங்கத்தில் வாஸம் செய்து,
ஸ்ரீரங்கநாதனை அண்டியபடி நின்றால் நீங்கும் என்பது உட்கருத்து.

ஸ்ரீ ரங்க நாதனின் பொற் பாதுகைகளே -உங்களைப் பார்க்கும் போது இரவில் பிரிந்தே இருக்க வேண்டும் என்று சபிக்கப் பட்ட
சக்ரவாகப் பறவை தம்பதி அந்த சாபத்தைப் போக்கிக் கொள்ள வென்றே சக்ர பாணியாய் -அதையே அடையாளமாகக் கொண்டுள்ள –
நிற்கும் பெருமாளுடைய திருவடிகளைச் சரணமாக அடைந்துள்ள பஷிகள் என்று தோற்றம் ஏற்படுகிறது –

—————————————————————-

மாநயாமி ஜகதஸ் தமோ பஹே
மாதவஸ்ய மணி பாதுகே யுவாம்
தக்ஷிணோத்தர கதிக்ரம் உசிதே
பத்ததீ இவ மயூக மாலிந:—770-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகில் உள்ள அஞ்ஞானம் என்னும் இருளை நீக்குபவர்களாக உள்ள
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! தக்ஷிணாயம், உத்தராயணம் என்னும் சூரியனின் தெற்கு வடக்கு மார்க்கங்கள் போன்றே
உங்களை நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகைகளே உலகின் இருளைப் போக்க சூர்யன் கதி தஷிணாயணம் உத்தராயணம் என்றும் இரண்டை ஏற்றது –
அதே போலே மக்கள் துயரைப் போக்கப் பெருமாளின் சஞ்சாரம் வலது புறம் இடது புறம் என்ற ரீதியில் நடப்பது உதவுகிறது –
அதற்கு உதவும் உங்கள் இருவரையும் ஸூர்ய கதி போலே எண்ணுகிறேன் –

———————————————————-

ரங்கநாத பதயோ: அலங்க்ரியா
ராஜதே கநக பாதுகா த்வயீ
தத் விபூதி யுகளீவ தாத்ருசீ
ச்சந்ததஸ் ஸம விபாகம் ஆஸ்ரிதா—-771–

ஸ்ரீரங்கநாதனின் அழகான திருவடிகளுக்கு அலங்காரமாக விளங்குகின்ற தங்கமயமான பாதுகைகள் இரண்டும் –
அவனுடைய விருப்பத்தினால் ஒரே போன்ற பிரிவை அடைந்துள்ள அவனது லீலாவிபூதி, நித்யவிபூதி போன்று உள்ளன.

ஸ்ரீ ரங்க நாதன் திருவடிகளுக்கு அலங்காரமான இந்தப் பாதுகைகள் இரண்டும் பெருமாளுடைய
ஐஸ்வர்யமான போக -நித்ய விபூதி என்று லீலா விபூதி என்ற இரண்டும் போலே –
ஆனால் த்ரிபாத் -முக்கால் -கால் -என்று அவற்றின் பரிணாமம் இருப்பது போல் அன்றி
அவை இரண்டும் தம்மிஷ்டப்படி சம மானாகவே அமைந்து உள்ளன –
உபய விபூதியில் உள்ளோர் இவ்விரண்டையும் சமமாகவே ஆஸ்ரயிக்கலாம் படி யுள்ளது என்றவாறு –

———————————————————————–

ஸாக்ஷாத் பதம் மதுபிதஸ் ப்ரதிபாத யந்த்தௌ
மாந உபபத்தி நியதே மணி பாதுகே த்வே
அந்யோந்ய ஸங்கதி வஸா த் உபபந்ந ஆசர்யாம்
ஆஜ்ஞாம் ஸ்ருதி ஸ்ம்ருதி மயீம் அவதாரயாமி—772–

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகள் இரண்டும் அவனது திருவடிகளை நாம் காணும்படிச் செய்கின்றன.
அவனுடைய ஸ்வரூபத்தை நமக்கு உள்ளது உள்ளபடி அறிவிக்கின்றன. வேதங்கள் என்னும் ப்ரமாணங்களாலும், தர்க்கங்களாலும்
நிச்சயிக்கப்பட்ட பெருமை கொண்டவையாக உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து அழகான நடையை கொண்டதாக உள்ளன.
இப்படிப்பட்ட பாதுகைகள் ஸ்ருதிகள், ஸ்ம்ருதிகள் என்பதான ஸ்ரீரங்கநாதனின் கட்டளைகள் என்றே நான் எண்ணுகிறேன்.

பகவானுடைய ஸ்ரீ பாதுகைகள் ஸ்ருதி ஸ்ம்ருதி என்பதாய் ஒன்றான பகவத் ஆஜ்ஞை என்றே சொல்ல வேண்டும் –
ஸ்ருதி ஸ்ம்ருதி இரண்டும் நமக்கு பகவானுடைய ஸ்வரூபத்தை நேராகச் செவ்வனே அறிவிப்பவை –
அவை பிரமாணம் என்று நிச்சயிப்பது அதற்கான பிரமாணத்தாலும் உரிய தர்க்கத்தாலும் தான்
அந்த இரண்டையும் கொண்டு தான் நமக்கு உரிய தம அனுஷ்டானக் கடமைகள் என்ன வென்று அறிகிறோம் –
அதே போலே இரண்டு ஸ்ரீ பாதுகைகளும் பகவான் திருவடியை -பகவானுடைய ஸ்தானத்தைக் கூட நமக்குக் காட்டி அருளும் ப்ரத்யஷமாக –
அவற்றின் பெருமையைப் பற்றி பிரமாணங்கள் தர்க்கம் என்ற இரண்டையும் கொண்டு அறிகின்றோம்
பகவானின் சஞ்சாரம் அவை இரண்டும் இணைந்து செயல் பட்டே நடக்கிறது –

——————————————————————–

விஸ்வ உபகாரம் அதிக்ருத்ய விஹார காலேஷு
அந்யோந்யதஸ் ப்ரதமம் ஏவ பரிஸ் புரந்த்யோ:
த்ருஷ்டாந்த யந்தி யுவயோர் மணி பாதரக்ஷே
திவ்யம் ததேவ மிதுநம் திவிஷந் நிஷேவ்யம்–773-

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகைகளே! இந்த உலகங்களுக்குச் செய்யவேண்டிய நன்மைகளைக் கருத்தில் கொண்டு,
ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின் போது ”நான் முந்தி, நீ முந்தி” என்று போட்டி போட்டுக்கொண்டு நீங்கள் முன்னே வருகிறீர்கள்.
இதனால், நான்முகன் தொடக்கமான அனைத்து தேவர்களாலும் ஆராதிக்கப்படுகின்ற திருவரங்கத்தின்
திவ்யதம்பதிகளாகவே உங்களைப் பலரும் கூறுகின்றனர் போலும்.

இந்த உலகத்தைக் காப்பாற்றுவதில் எப்போதும் ஸ்ரீரங்கநாதனுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் போட்டி உள்ளது.
யார் முதலில் சென்று காப்பாற்றுவது என்பதே ஆகும்.
இது போன்றே, ஸ்ரீரங்கநாதனின் இடது பாதுகையும் வலது பாதுகையும் போட்டி போடுகின்றன என்கிறார்.

ஸ்ரீ மணி பாதுகைகளே அகில உலகின் நன்மைக்காக வென்றே நீங்கள் சஞ்சாரம் மேற் கொள்வது –
அப்போது ஓன்று முன்னே உடனே இன்னொன்று முன்னே என்று போட்டி போலே எடுத்து வைக்கப் படுகிறீர்கள் –
உங்களுக்கு உவமை -சர்வ தேவர்களாலும் வணங்கப்படும் பெருமாள் பிராட்டி யாகிய திவ்ய தம்பதிகள் தாம்
இருவருமே நான் முன்னே நான் முன்னே என்று ரஷணத்துக்கு போட்டி போட்டிக் கொண்டு இருப்பார்கள் –
திரு அவதாரங்களிலும் அப்படியே –

—————————————————————————

த்வாவேவ யத்ர சரணௌ பரமஸ்ய பும்ஸ:
தத்ர த்விதா ஸ்திதவதீ மணி பாதுகே த்வம்
யத்ரைவ தர்ஸயதி தேவி ஸஹஸ்ர பாத்த்வம்
தத்ர அபி நூநம் அஸி தர்ஸித தாவதாத்மா—774-

இரத்தினங்களால் இழைக்கப்பட்ட பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதனாக நிற்கும் பரமபுருஷனுக்கு இரண்டு திருவடிகள் உள்ளபோது,
நீ இரண்டாக உள்ளாய். ஆனால் வேதங்களில் கூறியபடி, ஆயிரம் திருவடிகளைக் கொண்டவனாக ஸ்ரீரங்கநாதன் நிற்கையில்,
நீ அத்தனை பாதுகைகளாகத் தோன்றுகிறாய் என்பது நிச்சயம்.

ஸ்ரீ மணி பாதுகா தேவியே -பரம புருஷன் இரண்டே திருவடிகள் உடன் இருக்கும் போது இரண்டு ஸ்ரீ பாதுகைகளாக இருக்குப்பீர்
அவன் ஆயிரம் திருவடிகள் உடன் கூடிய தோற்றம் எடுத்துக் கொள்கையில் அத்தனை உருவங்கள் எடுத்துக் கொள்கிறீர் –

———————————————————————–

பர்யாயதோ கதி வசாத் மணி பாத ரக்ஷே
பூர்வா பரத்வ நியமம் வ்யதி வர்த்த யந்த்யௌ
மந்யே யுவாம் மஹதி விஷ்ணு பதே ஸ்புரந்த்யௌ
ஸந்த்யே ஸமஸ்த ஜகதாம் அபி வந்த நீயௌ—775–

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகைகளே! ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யும்போது நீங்கள் இருவரும் மாறிமாறி வருவதால்,
”இது முன்னே, இது பின்னே” என்று என்ற கட்டுப்பாடு தாண்டியபடி உள்ளீர்கள்.
ஸ்ரீரங்கநாதனின் உயர்ந்த, பரந்த ஆகாசம் போன்ற திருவடிகளில் நீங்கள் உள்ளீர்கள். இப்படியாக உள்ள உங்களைக் காணும் போது,
அனைத்து உலகங்களும் உபாஸிக்கத் தகுந்த ப்ராதஸ் ஸந்த்யை மற்றும் ஸாயம் ஸந்த்யை என்று நான் எண்ணுகிறேன் (காலை நேரம், மாலை நேரம்).

ஸ்ரீ மணி பாதுகைகளே அகில உலகும் உபாசித்தாக வேண்டிய -காலை மாலை சந்த்யைகள் போல் விளங்கு கின்றீர்களே –
சஞ்சார காலத்தில் எவர் முன்பு திருவடி வைத்தார் என்று சொல்ல முடியாத படியாய் இருக்கும்
அந்த சந்த்யைகள் ஆகாசத்தில் வெளியாகின்றன -நீங்கள் ஸ்ரீ விஷ்ணு பதத்தில் உள்ளவர்கள் –
நீங்களும் அகில உலகமும் உபாசிக்க உரியவர்கள் –

——————————————————————————-

அஸ்ராந்த ஸஞ்சரணயோ: நிஜ ஸம்ப்ர யோகாத்
அம்லாநதாம் சரண பங்கஜயோர் நிசந்த்யௌ
மாந்யே யுவாம் ரகு பதேர் மணி பாத ரக்ஷே
வித்யே பலாம் அதி பலாம் ச விசிந்துயாமி—776–

இராமனுடைய இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகளே! இடைவிடாமல் நடக்கின்ற இராமனின் திருவடித் தாமரைகள்
வாடிவிடாமல் இருக்கக்கூடிய தன்மையை நீங்களே அளிக்கிறீர்கள். இதனால் நீங்கள் வணங்கத்தக்கவர்களாக உள்ளீர்கள்.
இதனைக் காணும்போது, விஸ்வாமித்திரர் இராமனுக்கு உபதேசித்த பலை மற்றும் அதிபலை என்னும் மந்த்ரங்களாகவே
நீங்கள் உள்ளீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனின் ஸ்ரீ பாதுகைகளே ஓயாமல் நடந்து அருளும் பகவத் திரு பாதங்களுக்கு வாடுதல் இல்லாத தன்மையைத்
தர வல்லவையாய் உபாஸ்யரான உங்கள் இருவரையும் ராஜ குமாரர்களுக்கு களைப்பு ஏற்படாமல் இருக்க வழங்கப்பட
பலை-அதி பலை -என்ற இரண்டு மந்த்ரங்களாகச் சொல்லலாம் போலும் –

———————————————————————————–

அந்தர் மோஹாத் அவிதிதவதாம் ஆத்ம தத்வம் யதாவத்
பத்யாம் இத்தம் பரிசிதவதாம் பாதுகே பாபலோக்யாம்
நித்யம் பக்தேர் அநு குணதயா நாத பாதம் பஜந்த்யௌ
நிஷ்டே ஸாக்ஷாத் ஸ்வயம் இஹ யுவாம் ஜ்ஞாந கர்மாத்மிகேந:—-777–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! மனதிற்கு எற்ற நன்மைகளை அறியக்கூடிய தெளிவு இல்லாத காரணத்தினால்,
ஜீவாத்மா-பரமாத்மாக்கள் பற்றிய உண்மையை, உள்ளது உள்ளபடி அறியக்கூடிய அறிவு அற்றவர்களாக நாங்கள் உள்ளோம்.
மேலும் நரகங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய வழிகளைப் பழகிக் கொண்டவர்களாகவே நாங்கள் உள்ளோம்.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்த நீங்கள், எங்களுக்கு எப்படி உள்ளீர்கள் என்றால் –
எங்களுக்கு இந்த உலகில் பக்தியோகம் கிட்டவேண்டும் என்பதற்காக ஞானயோகம் மற்றும் கர்மயோகம் என்பவையாகவே
நீங்கள் வடிவு கொண்டதாக உள்ளீர்கள்.

ஸ்ரீ பாதுகைகளே -நாங்கள் ஆத்மஜ்ஞானம் பரமாத்மா ஜ்ஞானம் இல்லாமல் இருளில் உள்ளோம் -அறியாமையால் தத்தளித்து
நரகத்திற்குப் போகும் வழியிலேயே போய்ப் போய்ப் பழகி விட்டோம் -அப்படிப்பட்ட எங்களுக்கு சர்வகாலமும் பக்திக்கு ஏற்ற படியாகப்
பெருமாள் திருவடியைச் சேர உதவுபவை நீவிர் தாம் -இவ்வுலகில் நீவிர் தாம் எங்களுக்கு சாஷாத் ஜ்ஞான கர்ம நிஷ்டைகள் –

——————————————————————

ந்யஸ்தம் விஷ்ணோர் பதம் இஹ மஹத் ஸ்வேந பூம்நா வஹந்த்யோ:
ஆம்நாயாக்யாம் அவிஹத கதிம் வர்த்த யந்த்யோர் நிஜ ஆஜ்ஞாம்
ஆஸந்நாநாம் ப்ரணய பதவீம் ஆத்மநா பூர யந்த்யோ:
த்ரை ராஜ்யஸ்ரீ: பவதி ஜகதாம் ஜக ராஜ்யே பவத்யோ:—-778–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! உங்கள் மீது வைக்கப்பட்ட மிகவும் உயர்ந்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தாங்கி நிற்கிறீர்கள்.
இதனால் மிகுந்த பெருமையுடன் உள்ளீர்கள். வேதங்கள் என்னும் உங்கள் கட்டளைகளைத் தடைபடாத செல்வாக்கு கொண்டதாக
இந்த உலகில் நிலை நாட்டுபவர்களாக உள்ளீர்கள். உங்கள் அருகில் வந்தவர்கள் விரும்பும் பொருள்களை,
அவர்கள் கேட்காமலேயே, நீங்களாகவே நிரப்புகிறீர்கள்.
இப்படியாக நீங்கள் இந்த உலகிற்கு ஒரே சக்ரவர்த்தியாக உள்ள போதிலும், தோற்றம் காரணமாக இரண்டு சக்ரவர்த்திகளாக உள்ளீர்கள்.

ஸ்ரீ பாதுகைகளே உங்கள் மீது வைக்கப் பட்ட ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடியைத் தாங்கியது –
பெருமாளுடைய ஆஜ்ஞை யாகிற வேத மார்க்கத்தைத் தடையின்றி நடத்துவது
அண்டினவர்களின் ஆசையை நிறைவேற்றி வைப்பது -இது எல்லாம் நீங்கள் அன்று போல் இன்றும் ஒரே விதமாக
நடத்திக் கொடுக்கிறபடியால் உலகத்தை ஆள்பவர் இருவர் என்ற தோற்றம் இருந்தாலும் ஓர் அரசேயாக நடத்துகிறீர்கள் –

—————————————————-

அப்ராப்தாநாம் உபஜநயத: ஸம்பதாம் ப்ராப்திம் ஏவம்
ஸம்ப்ரப்தாநாம் ஸ்வயம் இஹ புந: பாலநார்த்தம் யதேதே
ஸாக்ஷாத் ரங்கக்ஷிதிபதி பதம் பாதுகே ஸாதயந்த்யௌ
யோக க்ஷேமௌ ஸுசரிதவசாத் மூர்த்தி மந்தௌ யுவாம் ந:—-779-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! எங்களால் இதுவரை பெறப்படாமல் இருந்துள்ள ஐஸ்வர்யத்தை
நாங்கள் அடையும்படிச் செய்கிறீர்கள் (இது யோகம் எனப்படும்).
இதுவரை நாங்கள் அடைந்துள்ளதைக் காப்பாற்றுதலுக்கு நீங்களாகவே பெரும் முயற்சி எடுத்துக் கொள்கிறீர்கள் (இது க்ஷேமம் என்பதாகும்).
உங்களுக்கு என்று வைத்துக் கொள்ளாமல், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எங்களுக்கே அளிக்கின்ற உங்களைக் காணும்போது,
எங்கள் புண்ணியம் காரணமாக நாங்கள் பெற்ற யோகமும், க்ஷேமமும் வடிவெடுத்தது போன்றே உள்ளது.

ஸ்ரீ பாதுகையே நீவிர் இதுவரையில் பெறப்படாத செல்வங்களை இப்படி நாங்கள் காணும்படி பெற்றுத் தருகிறீர்கள் –
பெறப் பட்ட வற்றின் சேமிப்பிற்கும் தாமே ப்ரத்யயனம் செய்கிறீர்கள் –
சாஷாத் ஸ்ரீ ரங்க நாதன் ஸ்தானத்தை எங்களுக்கு சாதித்துக் கொடுத்து அருளுகிரீர்கள்
ஆகவே நீங்களே எங்கள் புன்யத்தின் விளைவாக உருவெடுத்த யோக ஷேமங்கள்-

———————————————————————–

பத்த ஹரி பாத யுகளம் தபநீய பாதுகே யுவயோ:
மோசயதி ஸம்ஸ்ரிதாநாம் புண்யாபுண்யமய ஸ்ருங்கலா யுகளம்—-780–

தங்கமயமான பாதுகைகளே! உங்களது இந்த இணை என்பது இரண்டாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை ஒன்றாகக் கட்டுகிறது.
இந்த இணையே, உங்களை அண்டியவர்களின் புண்ணியம் மற்றும் பாவம் என்னும் சங்கிலிகளின் பிணைப்பை விடுவிக்கின்றன.

ஸ்ரீ தங்கப் பாதுகைகளே நீங்கள் ஒரு இரட்டையாக வகவானுடைய திருவடி இணையைக் காட்டிச் சேர்ந்து இருக்கின்றீர்
ஆனால் உம் இணை ஆஸ்ரித ஜனங்களின் புண்ய பாபம் ஆகிற சங்கிலியின் இரட்டையைக் கழற்றிப் போடுகிறதே –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: