ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-22-காஞ்சனா பத்ததி -பொற் படலம் -ஸ்லோகங்கள் -731-750-

கல்யாணா ப்ரக்ருதிம் வந்தே பஜந்தீம் காஞ்சந ஸ்ரியம்
பத அர்ஹாம் பாதுகாம் சௌரே: பத ஏவ நிவேசிதாம்—-731-

அனைத்து உலங்களுக்கும் ஏற்ற நன்மையை அளிக்கவல்ல ஸ்வபாவம் கொண்டவளும், தனிப்பட்ட மேன்மையை அடைந்தவளும்,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ளதற்குத் தகுதி கொண்டவளும், எப்போதும் ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளில் வைக்கப்பட்டுள்ளவளும் ஆகிய பாதுகையை நான் வணங்குகிறேன்.

தங்க மயமானதும் தனிப்பட்ட சிறப்பைப் பெற்றதுமான ஸ்ரீ பாதுகையை வணங்குகிறேன் –
அது திருவடிக்கு மிகப் பொருத்தமாய் அமைந்து திருவடியிலேயே பொருந்தி உள்ளது –
அது மங்கள ஸ்வரூபம் ஆனது -ஒப்பற்ற லஷ்மி அவள் -அந்த பெரிய பிராட்டியாரோடும் பெருமாளோடும் சமஸ்தானம் பெற்று விடுகிறது
ஸ்ரீ லஷ்மியும் ஸ்ரீ பாதுகையும் பெருமாளுடைய சரீரத்தில் இடம் பெற்றுள்ளனர் -அந்த ஸ்ரீ பாதுகைக்கு நமஸ்காரம் –

————————————————————————————–

மதுஜித் தநு காந்தி தஸ்கராணாம்
ஜலதாநாம் அபயம் விதாது காமா
சபலேவ ததங்கிரிம் ஆஸ்ரயந்தீ
பவதி காஞ்சந பாதுகே விபாதி—-732–

தங்கமான பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் அழகான திருமேனி நிறத்தை அபஹரித்த மேகங்கள் பயந்து நின்றன.
அவன் திருவடிகளில் வந்து அவை பணிகின்றன. அவற்றின் பயங்களை நீக்க எண்ணிய நீ,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்த மின்னல் போன்று காணப்படுகிறாய்.

ஸ்ரீ தங்கப் பாதுகையே நீ பகவானுடைய திரு மேனி ஒளியையும் நீல வர்ணத்தையும் திருடிய மேகங்கள்
பயந்து தூது அனுப்பின மின்னல் போல் நீ அவன் திருவடிகளிலே விளங்குகிறாய் –

—————————————————————————————–

நிக க்ஷீக்ருத ரம்ய க்ருஷ்ண ரத்நா
பவதீ காஞ்சந ஸம்பதம் வ்யநக்தி
பரிபுஷ்யதி பாதுகே யதீக்ஷா
ஸஹஸா ந: ஸம லோஷ்ட காஞ்சந த்வம்—-733-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் என்னும் அழகான நீல நிற உரைகல்லை வைத்துக் கொண்டு,
உன்னை இழைத்துக் காண்பித்து நிற்கிறாய்.
இதனால் எங்களுக்கு இந்தப் பூமியில் உள்ள தங்கம் அனைத்தும் ஓட்டாஞ்சில்லுக்குச் சமமாகவே தோன்றுகின்றன
(பாதுகையின் தங்கம் மட்டுமே தங்கம், மற்றவை தங்கம் அல்ல எனத் தோன்றுகிறது. அதாவது பாதுகையே உயர்ந்தது,
மற்ற அனைத்தும் ஒரே போன்று தாழ்ந்ததே எனறு கருத்து).

ஸ்ரீ பாதுகையே நீ பொன்னால் ஆனவள் -நீல நிறத்ததான உறைகல் பெருமாள் -நன்றாகத் தேய்த்து
உயர்ந்த மாற்று என்று நிர்ணயிக்கப் பட்டு இருக்கிறாய்
உன்னில் கறுப்பு ரத்னம் உள்ளது -ஸ்ரீ கிருஷ்ண ரத்னமும் உன்னில் தான் நிலை கொண்டு உள்ளது
உன்னை சேவித்தால் உடனே உலகில் உள்ள மற்ற பொன் எல்லாம் மண் கட்டிக்கு சமானம் என்ற நிதர்சனக் கருத்து வளர்கிறது –

—————————————————————————————————-

ஸுரபி: நிகமைஸ் ஸமக்ர காமா
கநக உத்கர்ஷவதீ பதாவநி த்வம்
திசஸி ப்ரதிபந்ந மாதவஸ்ரீ
அநிசோந்நித்ரம் அசோக வைபவம் ந:—734–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வேதங்களின் வாசனை நிரம்பியவளாக,
உயர்ந்த குணங்கள் நிறைந்தவளாக, தங்கத்தின் மேன்மையைக் கொண்டவளாக,
ஸ்ரீரங்கநாதனின் ஸம்பத்தைப் பெற்றவளாக நீ உள்ளாய். இதனால் நீ எப்போதும் மலர்ந்தபடி,
துக்கம் என்பதே இல்லாத தன்மையை எங்களுக்கு அளிக்கிறாய்.

இங்கு வேதங்களின் வாசனை என்பதை வஸந்தகாலம் என்றும்,
ஸ்ரீரங்கநாதனின் ஸம்பத்து என்பதை வைகாசி மாதம் என்றும் பொருள் கொள்வர்.
இப்படிக் கொள்ளும் போது, துக்கம் இல்லாத தன்மை என்பதை அசோக (அசோக = அ + சோக = சோகம் இல்லாத)
மரங்களின் செழிப்பு என்று பொருள் கொள்வர்.

ஸ்ரீ பாதுகையே நீ வேத மணம் கமழ்பவள் -சர்வ அபீஷ்டங்களையும் அளிப்பவள் -தங்கத்தின் சிறப்பை உடையவள்
திருமால் என்னும் பெரும் செல்வத்தைப் பெற்றவள் -நீ எங்களுக்கு எப்போதும் குறையாத்தான துக்க மின்மையைத் தந்து இருக்கிறாய்
ஸூரபி கனக மாதவ அசோகா -சிலேடைச் சிறப்பு ஸ்ரீ ஸூக்திகள்
நீ வசந்த காலம் .காமங்களை வளர்க்கிறாய் சம்பகம் அசோகா மரம் முதலியவை செழித்து உள்ளன
வைகாசி மாத சிறப்பையும் வழங்குகிறாய் என்ற பொருள்கள் த்வனிக்கும்

——————————————————————————–

ஸதி வர்ண குணோ ஸுவர்ண ஜாதே:
ஜகதி க்யாதம் அஸௌரபாத் அவர்ணம்
ஸ்ருதி ஸௌரப சாலிநா ஸ்வஹேம்நா
பவதீ சௌரி பதாவநி வ்யுதாஸ்த்த்தத்–735–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தங்கத்திற்கு உயர்ந்த பளபளப்பு என்னும் தன்மை உள்ள போதிலும்,
அதற்கு வாசனை இல்லை என்ற குறைபாடு உலகில் உண்டு.
இந்தக் குறையை வேதங்களின் வாசனையுடன் கூடிய உனது தங்கம் கொண்டு நீ போக்கினாய் போலும்.

ஸ்ரீ பகவானின் ஸ்ரீ பாதுகையே பொன் என்ற ஜாதிக்கு நிறச் சிறப்பு மாற்றுச் சிறப்பு உண்டு -வாசனைச் சிறப்பு கிடையாது என்பர்
இதனாலே தான் பொன் மலர் நாற்றம் உடைத்து -என்று விசேஷித்துப் புகழ்வர்-இப்படி ஒரு அபவாதம் –
மணம் இன்மை பெருமை இன்மை இருக்கிறதே அத்தை நீக்க வென்றே போலும் நீ வேத மணம் கமழ விளங்குகிறாய்
தங்கத்துக்கு அபவாதமும் போயிற்று –

அஸெரபாத்: வாசனையில்லாததாலே
அவர்ணம்: அபவாதம்
தங்கம் மிக மிக உயர்ந்த வஸ்து. பளபளப்போடு சதா மிளிரக்கூடியது. ஆயினும் அதற்கு ஏதேனும் நல்ல மணமுண்டோ?
ஒரு வாசனையுமில்லாதது. இது ஒரு குறைதானே! ஆனால் இந்த குறையை பாதுகையிலுள்ள தங்கம் போக்கடித்தது.
ஏனெனில் அது வேத வாசனையோடு கூடியது!.
இந்த உலகில் எத்தனையோ மதங்களிருக்கின்றது. ஆனால் வைணவம் அளவுக்கு சரியான ஆதாரங்களும், யுக்திகளும்,
உலகத்தின் அனுபவங்களுக்கு ஒத்திருக்கையும் பெரும்பாலுமில்லை.
ஆழ்வாராதிகளாலே, ஆச்சார்யர்களாலே நடத்தப்பட்ட நம்முடைய வைணவத்திற்கு எல்லாம் ஒத்திருக்கின்றது.
ஆழ்வார்களின் பிரபந்தங்கள் எல்லா வேதங்களுடைய சாரம்! எல்லா வேதங்களுடைய அர்த்தம்!.

——————————————————————

ப்ரதிபந்ந மயூர கண்ட தாம்நா
பரி ஸூத்தேந பதாவநி ஸ்வகேந
கமலா ஸ்தந பூஷணோசிதம் தத்
பவதீ ரத்நம் அலங்கரோதி ஹேம்நா—-736–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய தங்கம் என்பது மயில் கழுத்தின் நிறம்
கொண்ட தூய்மையான தங்கமாக உள்ளது. இப்படிப்பட்ட தங்கத்தைக் கொண்டு நீ செய்வது என்ன?
ஸ்ரீரங்கநாச்சியாரின் ஸ்தனங்களுக்கு ஆபரணமாக உள்ள இரத்தினக் கல்லை (இந்த இரத்தினக்கல் = ஸ்ரீரங்கநாதன்)
உன்னில் பதித்துக்கொண்டு, அந்த இரத்தினத்தை (ஸ்ரீரங்கநாதனை) மேலும் அழகுபடுத்துகிறாய்.

இரத்தினக் கல்லானது தங்கத்தில் பதிக்கப்பட்டால் மேலும் அழகாகக் காணப்படும்.
இங்கு ஸ்ரீரங்கநாதனை இரத்தினக்கல்லாகக் கூறுகிறார்.
அவன் தங்கமயமான பாதுகையில் மேலும் அழகாக உள்ளான் என்கிறார்.

ஸ்ரீ பாதுகையே மயில் கழுத்தின் மின்னொளி கொண்ட சுத்தமான பொன் நீ –ஸ்ரீ பகவானோ லஷ்மியின் திரு மார்பை
அலங்கரிக்க வேண்டிய உயர்வு கொண்ட ரத்னம் -ஆகவே நீ அந்த ரத்னம் ஆகிற ஸ்ரீ பெருமாளை அலங்கரிப்பது பொருத்தம் –

மயூரகண்ட: மயில் கழுத்து
தாம்நா: பளபளப்பை உடைத்தாயிருக்கின்ற.
பாதுகையில் மயில்கழுத்தினைப் போன்று பளபளக்கும் இந்திரநீலகற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதனைப்பார்க்கும் போது குற்றமில்லாத தங்கத்தினால் மஹாலக்ஷ்மீயின் கழுத்தினை அலங்கரிக்கக் கூடிய அவளுக்கு
மகிழ்ச்சித் தரக்கூடிய பெருமாளாகின்ற ரத்னங்களை இழைத்து அலங்கரிப்பது போலுள்ளதாம்.

——————————————————————-

காந்த்யா பரம் புருஷம் ஆப்ரணகாத் ஸுவர்ணம்
கர்த்தும் க்ஷமா த்வம் அஸி காஞ்சந பாத ரக்ஷே
அந்யாத்ருசீம் திசஸி யா விநதஸ்ய தூராத்
ஆரக்வதஸ்பக ஸம்பதம் இந்து மௌளே–737–

தங்கமயமான பாதுகையே! உன்னுடைய எல்லையற்ற ஒளி மூலமாக ஸ்ரீரங்கநாதனை, அவனது திருவடி நகம் முதல் தலை வரை
தங்கமயமாக மின்னும்படிச் செய்யும் சக்தியைப் பெற்றுள்ளாய்.
சிவன் உன்னைத் தள்ளி நின்று வணங்கும்போது, அவனது தலையில் உள்ள சந்திரன் மீது உன் தங்கத்தின் ஒளி விழுகிறது.
இதனால் அந்தச் சந்த்ரன் கொன்றை மலர்க்கொத்து போன்று காணப்படுகிறான்.

ஸ்ரீ தங்கப் பாதுகையே உனது பொன்னொளி பெருமாளை நகம் முதல் முழுத் திருமேனியையுமே நல்ல பொன்னாக ஆக்க வல்லது –
இதில் ஆச்சர்யம் இல்லை -ஏன் எனில் தூரத்தில் வணங்கும் சந்திர மௌளியான சிவனுடைய தலையில் உள்ள சந்த்ரனையே
பொன்னிறமான கொன்றைப் பூங்கொத்து போலாக்குகிறாயே-

———————————————————————–

சந்த்ராக்ருதி: கதம் அகல்பயதாஸ் ததாநீம்
வைமாநிக ப்ரணயிநீ நயந அம்புஜாநாம்
விக்ராந்தி கால விததேந நிஜேந தாம்நா
பாலாதபம் பலிவிமர்த்தந பாதுகே த்வம்—738–

மஹாபலியை அடக்கிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தங்கமயமான (சந்திரன்) உருவம் கொண்ட நீ,
ஸ்ரீரங்கநாதன் உலகம் அளந்தபோது, உலகம் முழுவதும் உனது ஒளியானது பரவும்படிச் செய்தாய்.
அப்போது தேவலோகப் பெண்களின் முகங்கள் என்னும் தாமரைகள் மலரும்படியான இளம் வெய்யிலை எப்படி உண்டாக்கினாய்?
(சந்த்ர ஒளி தாமரையை மூடி விடும். ஆனால் இங்கு முகத் தாமரைகள், சந்த்ர ஒளி கண்டதும் எப்படி மலந்தன?
அதில் சூரிய ஒளி எப்படிக் கலந்தது? என்கிறார்).

பலியை அடக்கிய ஸ்ரீ பெருமாளின் ஸ்ரீ பாதுகையே அன்று திருப் பாதத்துடன் உலகம் முழுதும் ஏறி உன் காந்தியினால்
தேவ ஸ்திரீகளுக்கு முக மலர்ச்சி தந்தது -எங்கனமோ -நீ பொன் அதாவது சந்த்ராக்ருதி -அதாவது சந்திரனுடைய வடிவு கொண்டவள் –
அது சூர்யனுடைய இளம் வெயிலைத் தந்து அந்த மாதர் முகங்கள் ஆகிற தாமரைகளை மலர்விப்பது எப்படி சாத்யம் –

————————————————————————

லேபே ததாப்ரக்ருதி நூநம் இயம் பவத்யா:
காந்த்யா கவேரதநயா கநகாபகாத்வம்
யாவந் முகுந்த பத ஹேம பதாவநி த்வம்
புண்யம் விபூஷி தவதீ புளிநம் ததீயம்—-739-

ஸ்ரீரங்கநாதனின் தங்கமயமான பாதுகையே! நீ எப்போது காவேரியின் தூய்மையான மணற் குன்றான திருவரங்கத்தை
அலங்கரித்தாயோ அது முதல், காவேரியானது உன்னுடைய தொடர்பு பெற்று,
தங்கமயமான ஆறாக உள்ள தன்மையை அடைந்தது என்பது நிச்சயம்.

ஸ்ரீ பெருமாளின் ஸ்ரீ தங்கப் பாதுகையே ஸ்ரீ பெருமாள் திருக் காவேரிக் கரையில் எழுந்து அருளி நீ அந்தப் புனித மணலை
அலங்கரித்தது என்றைக்கோ அன்று முதல் தான் காவேரிக்குப் பொன்னி அல்லது கநகாபகா என்ற பெயர் ஏற்பட்டது எனபது நிச்சயம் –

கவேரதநயா: கவேரன் என்கின்ற ராஜாவின் குமாரத்தியான காவிரியே!
கநகாபகாத்வம்: தங்க ஆறாக பளபளக்கின்றாய்!

ஹே பாதுகே! உன்னுடைய தங்க காந்தி, கவேரன் என்கின்ற ராஜாவின் மகளான காவிரி ஆற்றின் மேல்
பட்டவுடன் அது தங்க ஆறாக, அதாவது, பொன்னியாக மாறியது.

இங்கு ‘பொன்னிசூழ் திருவரங்கத்தினை’ – நாம் காவிரிக்கு ஒப்பாக எடுத்துக்கொள்வோம்.
நம்மாழ்வாரும், திருவாய்மொழியும் – ‘பாதுகை மற்றும் பாதுகையின் காந்தி’.

பெருமாள் என்றால் பெரும் (பெரிய) ஆள் (புருஷன்). அவனைத் தவிர மற்றவர்களெல்லாம் பெண் தான்.
இந்த பெருமாள் பெரிய பெருமாளானது, பெருமாளான சாக்ஷாத் ஸ்ரீராமபிரானே ஆராதித்த படியினால்,
பெருமாளே இந்த பெருமாளை ஆராதித்த படியினால் பெரிய பெருமாள். நம் எல்லாரையும் கரை சேர்க்க திருவரங்கத்தில்
காவிரிக் கரையில் காத்திருக்கின்ற படியினால், நம்பெருமாள். அப்படியிருந்தாலும் ஸ்ரீநம்மாழ்வாரால் பாடப்பட்ட படியால்தான்,
நம்மாழ்வாரே பாதுகையாய் அமர்ந்தபடியால் தான் இவருக்கு இவ்வளவு பெருமையும்!

———————————————————————-

சித்ரம் ஸரோஜ நிலயா ஸஹிதஸ்ய சௌரே:
வாஸோ சிதாநி சரணாவநி ஸம்விதித்ஸோ:
ஸத்யோ விகாஸம் உபயாந்தி ஸமாதி பாஜாம்
சந்த்ராதபேந தவ மாநஸ பங்கஜாதி—-740-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியவனாகிய ஸ்ரீரங்கநாதன்
வசிப்பதற்கு ஏற்ற இடமாக முனிவர்களின் மனம் என்னும் தாமரைகளை நீ அமைக்க விரும்புகிறாய்.
இதனால் உனது தங்கமயமான ஒளியை, நிலவின் ஒளி போன்று வீசுகிறாய்.
இதனால் அவர்களின் மனம் என்னும் தாமரைகள் உடனேயே மலர்ந்து விடுகின்றன.
என்ன வியப்பு! (இங்கு வியப்பு என்றால் – சந்த்ரனின் ஒளியால் தாமரை மலர்தல் ஆகும்).

ஸ்ரீ பாதுகையே பெருமாள் பிராட்டியுடன் கூட யோகிகளின் மனத்தில் எழுந்து அருளப் போகிறார் –
நீ பெருமாள் வாசத்திற்கு ஏற்றவையாக இருக்க வேண்டும் என்று உன்னுடைய நிலாவினால் -உன் தங்க ஒளியால் –
அவர்கள் மனத் தாமரைகளை மலர்விக்கிறாய்-இது ஓர் ஆச்சர்யம் –

———————————————————–

த்வயி ஏவ பாதம் அதிரோப்ய நவம் ப்ரவாஹம்
நாதே பதாவநி நிசாமயிதும் ப்ரவ்ருத்தே
ஆத்மீய காஞ்சநருசா பவதீ விதத்தே
ஹேமாரவிந்த பரிதாம் இவ ஹேம ஸிந்தும்—-741–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காவேரியில் வருகின்ற புது வெள்ளத்தைக் காண்பதற்கு (ஆடி 18)
உன் மீது தனது திருவடிகளை வைத்தபடி ஸ்ரீரங்கநாதன் காவேரியின் கரைக்கு எழுந்தருளுகிறான்.
அப்போது உனது தங்கமயமான ஒளி மூலமாக நீ காவேரியை கடாக்ஷிக்கிறாய்.
இதனால் காவேரி எங்கும் பொற்றாமரைகள் நிரம்பியது போன்று செய்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் உன் மேல் திருவடியை வைத்துக் காவேரி புது வெள்ளத்தை -பதினெட்டாம் பெருக்கை
கடாஷிக்க எழுந்து அருளுகிறார் -அப்போது உன் பொன்னிற ஒளி அந்த பொன்னி யாற்றில் பொற்றாமரைகள்
நிறைந்து நிற்பதான காட்சியை உண்டாக்குகிறது –

——————————————————————–

விஹரதி புளிநேஷு த்வத் ஸகே ரங்கநாதே
கநக ஸரித் இயம் தே பாதுகே ஹேம தாம்நா
வஹதி ஸலில கேளி ஸ்ரஸ்த சோள அவரோத
ஸ்தந கலச ஹரித்ரா பங்க பிங்காம் அவஸ்தாம்—742–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடன் எப்போதும் சேர்த்தே காணப்படும் ஸ்ரீரங்கநாதன்,
காவேரியின் மணல்களில் ஸஞ்சாரம் செய்யும்போது, உனது தங்கமயமான ஒளியில் காவேரி ஜலக்ரீடை செய்கிறாள்.
அப்போது அந்த நிலையைக் காணும்போது – சோழ நாட்டுப் பெண்களுடைய ஸ்தனங்களில் பூசப்பட்ட
மஞ்சள் குழம்பானது கரைந்து, எங்கும் படர்ந்த நிலையைக் காவேரி கொண்டது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உன் துணையோடு ஸ்ரீ ரங்க நாதன் திருக் காவேரியின் மணல் திட்டுகளில் சஞ்சரிக்கிறார் –
உன் பொன்னிறம் காவேரி நீரில் கரைந்து ஒரு பிரமையை உண்டாக்கும் -அந்த நிறம் சோழ அரசனின் அந்தப்புரத்து மாதர்
ஜல க்ரீடையின் போது கரைந்த மார்பு மஞ்சள் குழம்போ என்று எண்ண வைக்கும் –

————————————————————

ஸுரபி நிகமகந்தா ஸௌம்ய பத்மா கரஸ்தா
கநக கமலநீவ ப்ரேக்ஷ்யஸே பாதுகே த்வம்
ப்ரமர இவ ஸதா த்வாம் ப்ராப்த நாநா விஹார
சதமகமணி நீல: ஸேவதே சார்ங்க தந்வா—743–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் அழகிய திருக்கைகள் போன்று காணப்படும்
சந்தர புஷ்கரணியில் (தாமரைக்குளத்தில்) உள்ள பொன் தாமரைக் கொடி போன்று நீ உள்ளாய்.
உன் மீது எப்போதும் வேதங்களின் வாசனை வீசியபடி உள்ளது.
அனைத்து இடங்களிலும் ஸஞ்சாரம் செய்கின்ற ஸ்ரீரங்கநாதன், இந்த்ர நீலம் போன்று கறுத்த திருமேனி உடையவனாக,
ஒரு வண்டு போன்று, தாமரையாக உள்ள உன்னை அடைகிறான்.

ஸ்ரீ பாதுகையே நீ வேத மணம் கமழும் தாமரைக் கொடி அல்லவோ –
பொன் தாமரைக் கொடி-மஹா லஷ்மியின் திருக் கரத்தில் உள்ளது போலே
சந்திர புஷ்கரணியில் அலர்ந்த பூவுடைய கொடி என்றும் சொல்லலாம் –
பெருமாள் பலவித சஞ்சாரங்கள் செய்து உன்னையே சுற்றுகிறார் -அவரும் இந்திர நீலம் போல் கறுத்தவர் –
கரு வண்டு தாமரையைச் சுற்றிச் சுற்றி வருமே –

————————————————————————

கநகருசிர வர்ணாம் பாதுகே ஸஹ்ய ஸிந்து:
ஸ்ரியம் இவ மஹநீயாம் ஸிந்து ராஜஸ்ய பத்நீ
ஸ்வயம் இஹ ஸவிதஸ்தா ஸௌம்ய ஜாமாத்ரு யுக்தாம்
உபசிரதி ரஸேந த்வாம் அபத்யாபிமாநாத்—-744-

ஸ்ரீரங்கநாதானின் பாதுகையே! தங்கம் போன்று அழகான தன்மைகள் கொண்டு,
ஸ்ரீரங்கநாதன் என்னும் மாப்பிள்ளையுடன் கூடியவளாக நீ உள்ளாய்.
இப்படிப்பட்ட உன்னை, ஸ்ரீரங்கநாச்சியார் போன்றே, தன்னுடைய பெண்ணாகவே காவேரி எண்ணுகிறாள்.
ஸமுத்ர ராஜனின் பத்னியாகிய காவேரி, ஸ்ரீரங்கத்தில் இருந்தபடி உன்னைத் தனது பெண்ணாகக் கருதி உபசரிக்கிறாள்.

ஸ்ரீ பாதுகையே கடல் அரசன் மனைவி காவேரி எனபது மரபு -இந்த ஸ்ரீரங்கத்தில் தன் பெண்ணும் அவளுடைய
தங்க நிறமுடைய அழகிய மணவாளனும் தன்னருகில் வந்த பொழுது உன்னைத் தன் பெண் போலக் கருதி
மிக்க ஆதரத்தோடு உபசரிக்கிறாள் போலும் -நீயும் அவள் பெண் லஷ்மி போல் இருக்கிறாயே -அதனால் –

————————————————————————————————-

அநுகலம் உபஜீவ்யா த்ருச்யஸே நிர்ஜராணாம்
த்ரிபுர மதந மௌளௌ சேகரத்வம் ததாஸி
ப்ரதிபதம் அதிகம்ய ப்ராப்த ஸ்ருங்காஸி சௌரே:
தத்பி சரணரக்ஷே பூர்ண சந்த்ராக்ருதிஸ் த்வம்–745–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஒவ்வொரு நொடியும், தேவர்களுக்கு ஆகாரமாக உட்கொள்ளத் தக்கவளாக நீ காணப்படுகிறாய்.
சிவனின் தலையில் பூர்ணமான அலங்காரமாக உள்ள தன்மையை அடைகிறாய்.
ஸ்ரீரங்கநாதனின் ஒவ்வொரு அடிவைப்பையும் நீ அடைந்து, சீரிய முனைகளைப் பெற்றுள்ளாய்.
இப்படி உள்ள போதிலும் நீ பூர்ண சந்த்ரனாக, தங்க மயமாக உள்ளாய்.

சந்த்ரனின் கலையில் அமிர்தம் உள்ளதால் அதனைத் தேவர்கள் பருகிறார்கள்; இதனால் சந்த்ரன் பூர்ணமாக இருக்க முடியாது.
சிவனின் தலையில் உள்ள சந்த்ரன் பூர்ணசந்த்ரன் அல்ல. ஒவ்வொரு நொடியும் சந்த்ரன் தேய்வதால், பூர்ணமாக இருக்க முடியாது.
ஆனால் பாதுகைகள் சந்த்ரன் போன்றே உள்ளபோதும், பூர்ணமாக உள்ளாள் என்கிறார்.

ஸ்ரீ பாதுகையே உனக்கும் சந்த்ரனுக்கும் உள்ள பொருத்தம் என்னே –
நீ ஒவ்வொரு ஷணமும் ரஷணத்திற்காக தேவர்களால் ஆஸ்ரயிக்கப் படுகிறாய் –
சிவன் தன் தலையில் பூஷணம் போல் ஏற்றுக் கொள்கிறான் –
பகவான் வைக்கும் ஒவ்வொரு திருவடி வைப்பினாலும் மேன்மை பெறுகிறாய் –
சந்த்ரனோ ஒவ்வொரு கலையாகத் தேவர்களுக்கு உணவாகிறான் .
அவன் சிவன் தலைக்கு பூஷணம் -பிரதமை திதியில் முனைப் பாகம் தோன்றக் காண்கிறான்
ஆயினும் நீ முழுச் சந்திரன் உருவாக அன்றோ இருக்கிறாய் -நீ தங்க மயமாய் இருக்கிறாய் –
பூர்ண சந்தரன் -முழுத் தங்கம் என்ற பொருளும் உண்டே –

———————————————————————————————

கநகமபி த்ருணாம் யே மந்வதே வீத ராகா:
த்ருணம் அபி கநகம் தே ஜாநதே த்வத் ப்ரகாசை:
மதுரிபு பதரக்ஷே யத் த்வத் அர்த்தோபநீதாந்
பரிணமயஸி ஹைமாந் தேவி தூர்வாங்குராதீந்—-746–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகை தேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே!
ஒரு சிலர், ஸ்ரீரங்கநாதன் மீது கொண்ட ஆசை காரணமாக, மற்ற ஆசைகளைத் துறந்து,
தங்கத்தைக் கூட அற்பமான புல்லாக எண்ணுவார்கள்.
ஆனால் அவர்கள் புல்லைக்கூட தங்கமாக எண்ணும்படிச் செய்கிறாய். எப்படி?
அவர்களால் உனக்குச் சமர்ப்பணம் செய்யப்படும் அருகம்புல் போன்றவற்றை,
உனது ஒளியால் தங்கமயமாக மாற்றி விடுகிறாய் அல்லவோ?

ஸ்ரீ பெருமாள் உடைய ஸ்ரீ பாதுகையே எந்த பற்று அற்றவர்கள் வேறு எதிலும் பற்று இல்லாதவர் –
பொன்னைக் கூடப் புல்லென மதிப்பரோ
அவர்கள் உன் ஒளிகளால் நீ அளித்த அறிவினால் புல்லையும் பொன்னாகக் கருதுவர் போலும் –
உன் பொன்னொளி உனக்கு அர்ச்சனையில் சமர்ப்பிக்கப் படும் அறுகம் புல்லைத் தங்கமாக வன்றோ ஒளிரச் செய்கிறது –

—————————————————————————————

விஸூத்திம் அதிகச்சதி ஜ்வலந ஸங்கமாத் காஞ்சநம்
விதந்தி ச ஜகந்தி தத் ந கலு தத் விபர்யஸ்யதி
கதம் கநக பாதுகே கமல லோசநே ஸாக்ஷிணி
த்வயைவ பரி ஸூத்ததா ஹுதபுஜ: அபி ஜாகட்யதே—747–

தங்கமயமான பாதுகையே! தங்கம் என்பது அக்னியில் இடப்படும்போது மிகுந்த தூய்மையை அடைகிறது.
இதனை உலகில் உள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள். இந்த விதி மாறுபடாமல் உள்ளது.
ஆனால் அழகான கண்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதன் பார்த்துக் கொண்டு நிற்கையில்,
ஆராதனத்தின் முடிவில், உன்னை அக்னியின் தலையில் வைக்கும்போது, அந்த அக்னி தூய்மைப் பெறுவது எப்படி?
(அக்னியால் தங்கம் தூய்மை அடையாமல், தங்கமயமான பாதுகையால் அக்னி தூய்மை அடைவதைக் கண்டு வியக்கிறார்).

ஸ்ரீ தங்கப் பாதுகையே -பொன் புடமிடப் பட்டுத் தூய்மை எய்துவது அக்னி மூலம் -இதை எல்லா உலகும் அறிந்து உள்ளது –
இது மாறாததன்றோ-ஆயினும் கூட பெருமாள் சாஷி போலே பார்த்துக் கொண்டு இருக்கும் போதே பொற் பாதுகையான உன்னால்
அக்னி தேவன் தன் தலை மேல் உன்னைக் கொள்வதன் மூலம் –பரிசுத்தி எய்துகிறானே அது எங்கனம் கூடும் –

——————————————————————————–

தார ஆஸங்க ப்ரதித விபவாம் சாருஜாம் பூநதாபாம்
த்வாம் ஆரூட: த்ரிதச மஹிதம் பாதுகே ரங்கநாத:
ஸஞ்சாரிண்யாம் ஸுரசிகரிண: தஸ்துஷா மேகலாயாம்
தத்தே மத்தத் விரத பதிநா ஸாம்ய கக்ஷ்யாம் ஸமீக்ஷ்யாம்—748–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முத்துக்களின் தொடர்பால் ஏற்பட்ட மிகுந்த பெருமை, அழகான தங்கமயமான
ப்ரகாசம் போன்ற தன்மைகள் கொண்ட நீ, தேவர்களால் கொண்டாடப்பட்டபடி உள்ளாய்.
இப்படிப்பட்ட உன் மீது நின்றபடி ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யும் போது,
தங்க மயமான மேரு மலையின் தாழ்வாரையில் நிற்கின்ற மதம் பிடித்த யானையின் உயர்ந்த தன்மையை அவன் அடைகிறான்
(இங்கு பாதுகை = மேருமலை, ஸ்ரீரங்கநாதன் = மேருமலையில் நிற்கும் யானை).

ஸ்ரீ பாதுகையே முத்துக்களோடு இணைந்த நீ பொன்னொளி வீச தேவர்கள் எல்லாம் புகழ விளங்குகிறாய் –
உன் மீது ஏறி நிற்கையில் பெருமாள் சஞ்சரிக்கையில் ஏதோ சஞ்சரிக்கின்ற மேரு மலைத் தாழ் வரையில் நஷத்ரங்கள் மின்ன
ஒரு மத்த கஜம் பைய ஊர்வது போல் அன்றோ தோற்றம் ஏற்படுகிறது -தாரா நஷத்ரம் –தார -முத்து –

————————————————————————————————-

கநக ருசிரா காவ்ய அக்யாதா சநைஸ் சரண உசிதா
ஸ்ரித குரு புத பாஸ்வத் ரூபா த்விஜாதிப ஸேவிதா
விஹித விபவா நித்யம் விஷ்ணோ: பதே மணிபாதுகே
த்வம் அஸி மஹதீ விஸ்வேஷாம் ந: ஸூபா க்ரஹமண்டலீ—-749–

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே!
தங்கமயமான காரணத்தால் சிவந்தும் (செவ்வாய் = அங்காரகன் போன்று),
இராமாயணம் போன்ற காவியங்களால் (சுக்கிரன்) கூறப்பட்டும்,
மெதுவான ஸஞ்சாரத்திற்கு (சனி) ஏற்றபடியும்,
ஆசார்யன் மற்றும் வித்வான்களால் (குரு, புதன்) அடையப்பட்டபடியும்,
பளபளப்பான திருமேனி கொண்டும் (சூரியன்),
அந்தணர்களால் போற்றப்பட்டும் (சந்த்ரன்),
ஸ்ரீரங்கநாதனின் திருவடியில் (ஆகாசம்) நீ எப்போதும் மேன்மையை ஏற்படுத்தியபடி உள்ளாய்.
இப்படியாக உள்ள நீ எங்களுக்கு எப்போதும் நன்மை அளிக்கவல்ல நவக்ரஹங்களின் கூட்டமாகவே உள்ளாய்
(இதனால் பாதுகையே நவக்ரஹம் என்பதும், அந்தக் கூட்டம் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் எப்போதும் உள்ளன என்றும் கருத்து).

ஸ்ரீ மணி பாதுகையே அழகிய பொன்னிறம் -ஸ்ரீ ராமாயாணாதி காவிங்களில் புகழப் பெற்று உள்ளாய்-
மெதுவாக சஞ்சரிக்கிறாய் -ஆசார்யர்கள் வித்வான்கள் ஆஸ்ரயிக்கின்றனர்-
உன் ஒளி சூர்யனை நிகர்க்கும் -அந்தணப் பெரியோர் ஆராதிகின்றனர் -எப்போதும் பகவான் திருவடியில் நின்று விளங்குகிறாய் –
பொன் போன்ற சிவந்த அங்காரகன் ஆகிற செவ்வாய் -காவ்யன் எனப்படும் சுக்ரன் -சனைஸ்சரன் என்கிற சனி -குரு மற்றும் புதன்
சூர்யன் சந்தரன் இவர்கள் எல்லாம் சஞ்சரிப்பது விஷ்ணு பதம் என்கிற ஆகாச மண்டலத்தில் -இவர்கள் சிலர் சில பொழுது அஸூபராய் இருக்க நேரும்
நீ ஒரு ஸூபமான கிரஹங்களின் தொகுப்பாக விளங்குகிறாய் -நீ எப்போதுமே ஸூபமே தான் விளைவிப்பாய் –

ஹே! பாதுகே! உன்னிடத்தில் மஹா காவ்யங்களான இராமயணம், பாரதம் முதலான காவ்யங்கள் உன்னைப் போற்றுகின்றது!.
பெருமாள் மகிழ்வோடு சஞ்சரிப்பதற்கு நீ உதவியாய் உள்ளாய்! சூரியனைக்கு மேல் தேஜஸ்ஸோடு யிருக்கின்றாய்!
உண்மையான ஆச்சார்யர்கள், வித்வான்கள் பலரும் உன்னை ஸ்தோத்திரம் பண்ணுகின்றார்கள்!
உன்னாலே பெருமாளுடைய திருவடிக்கு விசேஷ ஏற்றம் உண்டாகின்றது!. நீ எல்லாவித உபத்ரவங்களையும்,
நவக்ரஹங்களினால் ஏற்படும் தோஷங்களையும், போக்கி எல்லா சௌக்யங்களையும் அருளுகின்றாய்!

—————————————————————————————————

ப்ரஜ்வலித பஞ்ச ஹேதி: ஹிரண்மயீம் த்வாம் ஹிரண்ய விலயார்ஹ:
ஆவஹது ஜாத வேதா: ஸ்ரியம் இவ ந: பாதுகே நித்யம்—750–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சக்கரம் முதலான ஐந்து ஆயுதங்களை ஏற்தியபடி,
ஹிரண்யன் போன்றவர்களை அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதன் உள்ளான்.
இப்படிப்பட்ட அவன், தங்கமயமான உன்னை, அவனுக்குச் செய்யும் கைங்கர்யச் செல்வமாக உள்ள உன்னை,
எங்களுக்கு எப்போதும் தந்தருள வேண்டும்.

அக்னியிடத்தில் செல்வம் வேண்டவும் -எனபது சாஸ்திரம் -பெருமாள் இடத்தில் ஸ்ரீ பாதுகையை எங்களுக்கு அருள்க என்று
வேண்டுவதே இசைந்த பொருத்தம் -ஸ்ரீ பாதுகையே அக்னி ஐந்து ஜ்வாலைகளை யுடையது
பொன்னை உருக்கும் -அந்த அக்னி தங்கமயமான உன்னை செல்வத்தைப் போலே -நீயே பெரும் செல்வம் –
எங்களுக்கு எப்போதும் தந்து அருள வேணும் – ஜாத வேதன் என்பவன் அக்னி மட்டும் அல்ல -பெருமாளும் கூட
அவர் திவ்ய பஞ்ச ஹேதிகளை – திவ்ய பஞ்சாயுதங்களை வைத்து இருப்பவர் –
பொன் பெயரோன் எனப்பட்ட ஹிரண்யனை அழித்தார்
அவர் பொன் மயமான உன்னை-காஞ்சன திருப் பாதுகையை செல்வம் என்று பெரும் ஸ்ரீ என்று எங்களுக்கு
எப்பொழுதுமே தந்து அருள வேணும் –

எப்போதும் அக்னி போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தங்கமயமான பாதுகையே! தங்கமாயிருக்கின்ற உன்னை
எங்களுக்கு எப்போதும் கொடுக்க வேணும்!
சாஸ்திரங்கள் அக்னியை த்யானித்தால் ஸம்பத் உண்டாகும் என்கிறது.
உன்னைத் தியானிக்கும் எங்களுக்கு நல்லதொரு ஆச்சார்யனை அருளுவாயாக!

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: