ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-21-பிம்ப பிரதிபிம்ப பத்ததி -ஸ்லோகங்கள் -711-730–

கடந்த ஆறு பத்ததிகளில் பாதுகையில் உள்ள இரத்தினங்களைப் பற்றி விரிவாகக் கூறினார்.
இனி அந்த இரத்தினக்கற்களில் காணப்படும் பிரதிபிம்பங்கள் (images) பற்றிக் கூற உள்ளார்.

சௌரே: ஸூந்தாந்த நாரீணாம் விஹார மணி தர்ப்பணம்
ப்ரஸத்தே: இவ ஸம்ஸ்தாநம் பத த்ராணம் உபாஸ்மஹே—-711-

ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளிட்ட ஸ்ரீரங்கநாதனின் பிராட்டிகள் விளையாட உதவுகின்ற இரத்தினக் கண்ணாடி போன்றும்,
தெளிவு என்பதே வடிவம் எடுத்தது போன்றும் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நாம் உபாஸிக்கிறோம்.

பகவானுடைய திவ்ய நாயிகைகள் தாம் வேடிக்கையாக முகம் பார்க்கக் கண்ணாடியாக உதவி செய்வதும்
அருள் ஆகிற தெளிவிற்கே ஒரு உருவம் வாய்த்தது போலத் தோன்றுவதான ஸ்ரீ பாதுகையை உபாசிக்கிறோம் –

————————————————————————–

கமலாபதி பாதுகே கதாசித்
விஹசேந்த்ரஸ் த்வயி பிம்பிதோ விபாதி
ஸவிலாஸ கதே அபி ரங்க பர்த்து:
நிஜம் ஆத்மாநம் இவ உபதாது காம:—712–

ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஒரு ஸமயம் கருடன் உனது இரத்தினக்கற்களின் முன்பாக நின்று,
அதில் பிரதிபிம்பமாகத் தான் தெரிய வேண்டும் என்று எண்ணினான். இதன் காரணம் –
ஸ்ரீரங்கநாதனின் ஒய்யார நடையில் கூட தனது சரீரம் அவனுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எண்ணினான் போலும்.

தரையில் ஸஞ்சாரம் செய்யும்போது பாதுகைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, கருடனுக்குக் கிடையாது.
அப்படிப்பட்ட காலங்களில் தானும் பயன்பட வேண்டும் என்ற எண்ணிய கருடன், தனது உருவம் பாதுகையில் உள்ள
இரத்தினங்களில் பிரதிபிம்பமாக விழவேண்டும் என்று எண்ணினான்.

ஸ்ரீ பாதுகையே பெரிய திருவடி எப்பொழுதோ தான் பெருமாள் தம் மேல் ஏறி சஞ்சரிக்கையில் உன்னில் தன் நிழல் -பிரதிபிம்பம் விழக் காண்பான் –
அதனால் போலும் பெருமாளின் உல்லாச நடைகளின் போதும் உன்னருகில் நின்றும் உன்னில் பிம்பம் நிழலாக விழுந்து
அங்கனம் தன்னை வாகனமாக சமர்ப்பிக்க கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறான் போலும் –

கமலாபதி – மஹாலக்ஷ்மிக்கு பர்த்தா! – விஹகேந்திரன்: கருடன் – பிம்பதி: பிரதிபலிக்கின்றார்.

பாதுகையினைப் பெருமாள் தம் திருவடியில் சாற்றிக்கொண்டு சஞ்சாரத்திற்கு எழுந்தருளுகின்றார்.
கருடனுக்கு உடனே ஏக்கம் தன் பேரில் பெருமாள் எழுந்தருளவில்லையே என்று! உடனே அது
என்ன செய்கின்றது? தன் மீது ஏறி சஞ்சரிக்கவேண்டும் என்ற ஆசையினால் பாதுகையினுள்ளே
உட்புகுந்தது போலிருக்கின்றதாம்! இதனால் பாதுகையில் கருடனும் பிரதிபலிக்கின்றது என்கிறார் ஸ்வாமி தேசிகர்!

——————————————————————————–

மணி பங்க்திஷு தே திசாம் அதீசா:
ப்ரதி பிம்பாதி நிஜாநி வீக்ஷமாணா:
அபியந்தி முகுந்த பாதுகே த்வாம்
அதிகாராந்தர ஸ்ருஷ்டி சங்கயேவ—713–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களில் அஷ்டதிக் பாலகர்கள் தங்கள் பிரதிபிம்பத்தைக் காண்கின்றனர்.
இதனைக் கண்டவுடன் அவர்கள் தங்கள் மனதில், ”ஸ்ரீரங்கநாதன் நம்மைப் போன்று மற்றோர்
அஷ்டதிக் பாலகர்களைப் படைத்துவிட்டானோ”, என்று சந்தேகம் கொண்டபடி உன்னிடம் வருகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய பலவித ரத்ன வரிசைகளில் தங்கள் பிம்பம் விழுவதைக் காணும் இந்த்ரன் முதலான திக்பாலர்கள்
இப்படிப் புதிய திக் பாலர்கள் தாம் நியமிக்கப்பட்டு விட்டார்களோ என்று அஞ்சி உன்னை ஆஸ்ரயிக்கின்றனர் –

—————————————————————————

மணி மௌளி சதேந பிம்பதேந
ப்ரணதாநாம் பரித: ஸுர அஸுராணாம்
முரபித் மணி பாதுகே மஹிம்நா
யுகபத் தேஷு ஸமர்ப்பிதேவ பாஸி—714–

முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே!
உன்னை வணங்கும் தேவர்கள் நான்கு புறங்களிலும் நின்று, தங்கள் க்ரீடங்களைத் தாழ்த்தி வணங்குகின்றனர்.
அப்போது அவர்களின் க்ரீடங்கள் உன்னில் உள்ள இரத்தினங்களில் பிரதிபலிக்கின்றன. இதனைக் காணும்போது,
உன்னுடைய எல்லையற்ற சக்தி காரணமாக, ஒரே நேரத்தில் அந்த க்ரீடங்கள் அனைத்திலும் வைக்கப்பட்டவள் போன்று விளங்குகிறாய்.

ஸ்ரீ மணி பாதுகையே தேவர் அ சூரர் எல்லோருமாகச் சுற்றி நாற்புறங்களிலும் நின்று வணங்கும் போது அத்தனை பேர் முடிகள்
அவர்கள் க்ரீடங்களில் ஸ்ரீ பாதுகையின் பிரதிபிம்பம் விழுந்து ஒரே சமயத்தில் அவ்வளவு க்ரீடங்களின் மேலும்
ஸ்ரீ பாதுகை சேவை சாதிப்பது ஸ்ரீ பாதுகையின் மகிமையால் போலும் என்று நினைக்க வைக்கிறது –

——————————————————————————

உபநீதம் உபாயநம் ஸுரேந்த்ரை:
ப்ரதி பிம்பச்சலத: த்வயி ப்ரவிஷ்டம்
ஸ்வயம் ஏவ கில ப்ரஸாத பூம்நா
ப்ரதி க்ருஹ்ணாஸி முகுந்த பாதுகே த்வம்—-715-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்த்ரன் உள்ளிட்ட தேவர்கள் மூலமாக உனக்குக் கொண்டு வரப்பட்ட உபஹாரங்கள்
(பழம் முதலானவை), உன்னுடைய இரத்தினக்கற்களில் பிரதிபலிக்கின்றன.
இதனைக் காணும்போது, உன்னுடைய கருணை காரணமாக அவர்களிடமிருந்து அந்தப் பொருள்களை
நீ நேரடியாகவே பெற்றுக் கொள்வது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே தேவர் தலைவர்கள் உபஹாரங்கள் உடன் வந்து பணிந்து நிற்கவும் அந்த உபஹாரங்கள் உன் மீது பிரதிபிம்பமாக விழுவதாகிற
வியாஜத்தினால் நீயே உன் கிருபையின் பெருமையால் அவற்றை ஏற்றுக் கொள்கிறாய் என்று ஒரு கல்பனைச் சித்திரம் தோற்றும் –

—————————————————————

ரங்கேஸ் வரஸ்ய நவ பல்லவ லோபநீயௌ
பாதௌ கதம் நு கடிநா ஸ்வயம் உத்வஹேயம்
இதி ஆகலய்ய நியதம் மணி பாதுகே த்வம்
பத்மாஸ்தரம் வஹஸி தத் ப்ரதி பிம்ப லக்ஷாத்—716–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ”புதிய தளிர் போன்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மென்மையாக உள்ளன.
இவற்றை எனது கடினமான பரப்பு மீது (இரத்தினக்கற்கள் உள்ளதால் பாதுகையின் மேல்பரப்பு சற்றே கடினமாக உள்ளது)
எப்படி வைத்துக் கொள்வேன்?”, என்று நீ யோசிக்கிறாய். இதனால்தான் அந்தந்த திருவடிகளின் பிரதிபிம்பம்
என்ற தாமரை மலர் போன்றுள்ள விரிப்பை, உன் மீது விரித்துக் கொண்டு , அதன் மீது ஸ்ரீரங்கநாதனை வைத்துக்கொள்கிறாய் போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் திருவடித் தாமரைகளை உன் மீது வைக்க இருக்கும் நிலையில் உன் மீது அது பிரதி பிம்பமாக விழுந்து
நீ ஏதோ உன் மீது ஒரு தாமரை மலரைப் பரப்பி வைத்தால் போல் உள்ளது -ஆம் அது செய்து இருக்கிறாய்
நமது கடினமான ரத்னக் கற்கள் பரப்பின் மீது பெருமாளின் அதி ஸூ குமாரமான திருவடிகளை எப்படி வைக்க இசைய முடியும்
என்ற கவலை ஆதரம் இவற்றினால் என்று ஆராய்ந்து போலும் –

——————————————————————————

பாதார்ப்பணத் ப்ரதம: ஹரி தஸ்ம ரம்யே
மத்யே தவ ப்ரதிபலந் மணி பாத ரக்ஷே
மந்யே நிதர்சயதி ரங்கபதிர் யுகாந்தே
ந்யக்ரோத பத்ர சயிதம் நிஜமேவ ரூபம்—717–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸஞ்சாரம் செய்வதற்காக உன் மீது திருவடியை வைத்து ஸ்ரீரங்கநாதன்
எழுவதற்கு முன்பாக, உன்னில் இருக்கும் பச்சை நிற இரத்தினங்களில் பிரதிபலிக்கிறான்.
இதனைக் காணும்போது, ப்ரளய காலத்தில் ஆலிலை மீது சயனித்துள்ள தனது உருவம் இப்படித்தான்
இருக்கும் என்று எங்களுக்கு அவன் காண்பிப்பதாக நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ மணி பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் திருவடிகளை உன் மீது வைப்பதற்காகச் சற்று குனிகிற சமயம் உனது மரகதக் கற்கள்
ஆகிற கண்ணாடி அதன் நடுவில் அவர் பிரதிபிம்பம் முழுவதுமாக விழுகிறது -அப்போது நான் கற்பனை செய்வது இங்கன் ஆகும்
பெருமாள் ஒரு காலத்தில் ஆலிலையில் சயனித்து இருந்த காட்சியை அவருக்கே நீ இப்போது எடுத்துக் காட்டுகிறாய் –

———————————————————————————————————

யாத்ரா அவஸாநம் அதிகச்சதி ரங்கநாதே
விஸ்ராணய ஸி அநுபதம் மணி பாதுகே த்வம்
ப்ராய: ப்ரயாண ஸமயே ப்ரதி பிம்பிதாநாம்
தீர்த்தாவகாஹம் அபரம் த்ரிதசேஸ்வராணாம்—718–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய உத்ஸவங்களின் இறுதி நாளில், தேவர்கள் தங்கள் உலகிற்கு
மீண்டும் புறப்படத் தொடங்குகின்றனர். அப்படி அவர்கள் புறப்படும்போது, அவர்களின் பிரதிபிம்பம் உன்னில் தெரிகிறது.
இதனைக் காணும்போது, அவர்கள் மற்றோரு முறை நீராடிச் செல்வதை நீ உண்டாக்கிக் கொடுப்பதாகத் தோன்றுகிறது.

ஸ்ரீ மணி பாதுகையே ஒவ்வோர் உத்சவத்தின் நிறைவிலும் உன்னிடம் விடை பெற்றுப் போகும் சமயத்தில் தேவர்கள் தலைவர்கள் பணிய
அவர்கள் பிம்பம் உன்னில் பிரதிபலிக்கிறது -பாவநமான உன்னில் புகுந்து புறப்பட இது நடப்பது போலும்
இது ஒரு அவப்ருத ஸ்நானம் போன்ற நீராட்டம் -முன்பு ஸ்நானம் செய்திருந்தாலும் உத்சவ பூர்த்தியில் இது உசிதம்-
நீ இப்படிச் செய்விக்கிறாய் போலும் –

————————————————————————————–

உச்சாவசேஷு தவ ரத்ந கணேஷு மாத:
வேதா: ப்ரயாண ஸமயே ப்ரதி பிம்பித அங்க:
ஆசங்கதே மது பிதோ மணி பாதுகே த்வாம்
ஆகாமி கல்ப்ப கமலாஸந பங்க்தி கர்ப்பாம்—719-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! நான்முகனின் சரீரமானது, அவன் தனது உலகிற்குப் புறப்படும் நேரத்தில்,
எல்லையற்ற இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட உன்னில், பலவாகப் பிரதிபலிக்கிறது. இதனைக் கண்ட நான்முகன்,
இனி வரப்போகும் கல்பங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள நான்முகன்களின் வரிசையை நீ உனக்குள் கொண்டுள்ளாயோ
என்று எண்ணுகிறான் (ஒவ்வொரு கல்பத்திலும் ஒரு நான்முகன் ஏற்படுவான்).

ஸ்ரீ மணி பாதுகை தாயே உன் மீதுள்ள பல விதமான மணி கணங்களில் தன் பிரதிபிம்பத்தைக் கண்ட பிரம்மா
அவர்கள் எதிர் வரும் கல்பங்களுக்கான பிரம்மாக்கள் தாமோ என்று ஐயம் உறுகிறான் –

——————————————————————–

ஆலோல ரஸ்மி நியதாம் மணி பாதுகே த்வாம்
ஆருஹ்ய ஸஞ்சரதி ரங்க பதௌ ஸலீலம்
அந்த: புரேஷு யுகபத் ஸுத்ருசோ பஜந்தே
டோளாதி ரோஹண ரஸம் த்வயி பிம்பி தாங்க்ய—720–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி என்னும் கயிறுகளால்
கட்டப்பட்ட ஊஞ்சல் போன்ற உன் மீது, ஸ்ரீரங்கநாதன் அந்தப்புரங்களில் ஸஞ்சரிக்கிறான்.
அப்போது உன்னிடம் பிரதிபலிக்கப்பட்ட பிராட்டிமார்களின் உருவங்களைக் காணும்போது,
ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரும் ஊஞ்சல் ஆடும் இன்பத்தை அடைவதாகத் தோன்றுகிறது.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் அந்தப்புரம் போகவும் உன் கிரணங்கள் ஊஞ்சலை யாட்ட உதவும் கயிறுகளாகவும்
நீயே உன் பலவித மணிகளே ஊஞ்சலாகவும் இருக்கும் -அந்தப்புரத்து மாதர் அருகில் வரவும் தம் பிரதிபிம்பத்தைக் காணவும்
தாம் ஏதோ ஊஞ்சல் ஆடுவதாகவும் திருப்தி பெறக் கூடும் -ஊஞ்சலை யாட்டுபவன் ரங்க ரசிகன் தான் –

————————————————————————-

காலேஷு ராகவ பதாவநி பக்திநம்ர:
கார்யாணி தேவி பரத: விநிவேதயம்ஸ்தே
த்வத் ரத்ந பிம்பி ததயா அபி முஹு: ஸ்வகீயாம்
ராஜாஸந ஸ்த்திதிம் அவேக்ஷ்ய ப்ருசம் லலஜ்ஜே—721-

இராமனின் பாதுகையே! உனக்கு அந்தந்த காலங்களில் பக்தியினால் வணங்கியபடி,
செய்ய வேண்டியவற்றைச் செய்தபடி பரதன் உள்ளான். உன்னிடம் அடுத்த வேலை என்ன என்று
விண்ணப்பம் செய்வதற்காக உன் முன்பு பரதன் நிற்கும் போது, உனது இரத்தினக்கற்களில்
தனது உருவத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறான். அதில் தான் ஸிம்ஹாஸனத்தில் உள்ளதை பிரதிபிம்பமாகக் காண்கிறான்.
இதனைக் கண்டு மிகவும் வெட்கம் அடைந்தான்.

ஸ்ரீ மணி பாதுகையே நீ சிம்ஹாசனத்தில் வீற்று இருக்க ஸ்ரீ பரதாழ்வான் அவ்வப்போது பக்தியோடு
வினயத்தோடு வணங்கி உன்னிடம் விண்ணப்பிக்கிறான் –
அப்போது அவன் பிரதிபிம்பம் உன்னில் விழவும் தானே சிம்ஹாசனத்தில் அமர்ந்து இருப்பதான எண்ணம் தோன்றவும்
தான் மிகவும் வெறுத்து இருந்த இந்த நிலை ஏற்பட்டுப் போயிற்றே என்று வெட்கம் உறுகிறான் –

———————————————————————————————————

ப்ரத்யாகதே விஜயிநி ப்ரதமே ரகூணாம்
விந்யஸ்யதி த்வயி பதம் மணி பாத ரக்ஷே
ரத்நௌக பிம்பித நிசாசர வாநராம் த்வாம்
பூர்வக்ஷணஸ்த்த்தம் இவ புஷ்கரம் அந்வபஸ்யந்—-722–

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! அரக்கர்களை வென்று திரும்பிய ரகுகுலத்தின் சிகரமான இராமன்,
உன் மீது தனது திருவடிகளை மீண்டும் வைத்தான்.
அப்போது அங்கு சுற்றி நின்ற ராக்ஷஸர்கள், வானரர்கள் என்ற பலரும் உனது இரத்தினக்கற்களில் பிரதிபலித்தனர்.
இதனைக் காணும்போது, இராமன் உன்னைச் சாற்றிக் கொள்வதற்கு முன்பு இருந்த புஷ்பக விமானம் போன்று காணப்பட்டாய்
(இலங்கையில் இருந்து இராமனுடன் புஷ்பக விமானத்தில் ராக்ஷஸர்கள், வானரர்கள் போன்ற பலரும் வந்தனர். இதனைக் கூறுகிறார்).

ஸ்ரீ மணி பாதுகையே தன் வனவாசம் முடிந்து வெற்றியுடன் திரும்பும் ஸ்ரீ ரகு ஸ்ரேஷ்டன் உன் மேல் திருவடிகளை வைக்கிறான்
உனது மணிகளில் சுற்றி நின்ற சகல ராஷசர்களும் வானரர்களும் பிம்பமாக விழுகிறார்கள்
ஜனங்கள் புஷ்பக விமானத்தில் இருந்த காட்சியை உன்னில் காணலாயிற்று -நீயே புஷ்பக விமானம் போலே –

—————————————————————-

வையாகுலீம் சமயிதும் ஜகதோ வஹந்த்யா
ரக்ஷாதுராம் ரகுதுரந்தர பாத ரக்ஷே
ப்ராஜ்யம் யச: ப்ரசுர சாமர பிம்பலக்ஷாத்
ப்ராயஸ் த்வயா கபளிதம் ப்ரதி பூபதீ நாம்—723–

ரகு குலத்தினரால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமன் கானகம் சென்று பின்னர்
இந்த உலகைக் காப்பாற்றும் திறன் உள்ளவர்கள் இல்லாத காரணத்தினால் பெருங்குழப்பம் உண்டானது.
அப்போது உலகைத் தாங்கும் பொறுப்பை நீ ஏற்றாய். அப்போது உன்னில் உள்ள இரத்தினக்கற்களில்,
உனக்கு வீசப்பட்ட சாமரங்களின் பிரதிபிம்பங்கள், பலவாகக் காட்சி அளித்தன.
இதனைக் காணும்போது பல எதிரி அரசர்களின் புகழை நீ விழுங்கியது போன்று இருந்தது.

ஸ்ரீ ராகவ பாத ரஷையே -உலகுக்கு அரக்கர்கள் இடம் இருந்து ஏற்பட்ட துக்கத்தைப் போக்க சுமையை நீ ஏற்றுக் கொண்டாய்-
உனக்கு சாமரங்கள் வீசுகின்றனர் -அதன் நிழல் உன் மணிகளின் மீது விழவும் நீ ஏதோ வெண்மையான ஒன்றை
எதிரி அரசர்களின் புகழை- கபளீகரம் செய்தால் போல் தோற்றுமாம்-புகழுக்கு நிறம் வெண்மை எனபது கவி மரபு –

——————————————————————————-

ப்ரதிதிசம் உபயாதே தேவி யாத்ரா உத்ஸவார்த்தம்
த்வயி விஹரண காலே பிம்பிதே ஜீவலோகே
வஹஸி மணி கணைஸ் த்வம் பாதுகே ரங்க பர்த்து:
கபளித ஸகலார்த்தம் காஞ்சித் அந்யாம் அவஸ்தாம்—724–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைதேவியே! ஸ்ரீரங்கநாதன் திருவீதிகளில் ஸஞ்சாரம் செல்வதற்காகப் புறப்பட்டவுடன்,
அவனை வணங்க அனைத்து திசைகளில் இருந்தும் பல உயிர்களும் வந்து நிற்கின்றன.
அவற்றின் உருவங்கள், உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினக்கற்களில் ப்ரதிபலிக்கின்றன. இதனைக் காணும்போது,
ஸ்ரீரங்கநாதன் அனைத்தையும் விழுங்கிய நிலையில் உள்ள தன்மையை நீ காண்பிக்கிறாய் (ப்ரளயகால நிலை) போலும்.

ஸ்ரீ பாதுகா தேவியே பெருமாள் புறப்பாடாகி அங்கங்கே பல திசைகளில் நின்றும் குழுமி இருந்த பக்தர்கள் உனிடத்தில் பிரதிபலிப்புப் பெறுவது
நீ என்னவோ அகில பிரபஞ்சகத்தையும் உண்டு வயிற்றில் வைத்துக் காட்டுவது போல்
பெருமாள் பிரளய காலத்தில் உண்டு ஆலிலை மீது கிடந்ததை நினை ஊட்டும் –

————————————————————————————

பகவதி கருடஸ் தே வாஹநஸ்தா: ஸுரேந்த்ர:
த்வயி விநிஹிதபதே பூமிமேவ ஆஸ்ரயந்தி
தத் அபி சரணரக்ஷே ரத்ந ஜாலே த்வதீயே
ப்ரதி பலித நிஜங்கா: துல்ய வாஹா பவந்தி—-725-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் கருட வாகனத்தில் வீற்றுள்ளபோது,
மற்ற தேவர்கள் தங்கள் தங்கள் வாகனங்களில் அமர்ந்தபடி உள்ளனர். ஸ்ரீரங்கநாதன் உன் மீது திருவடிகள் வைத்து நின்றவுடன்,
அவர்கள் பூமியை அடைந்துவிடுகின்றனர் (வாகனங்களில் இருந்து இறங்கி விடுகின்றனர்).
ஆனால் உனது இரத்தினக்கற்களில் அவர்களின் ப்ரதிபிம்பம் காணப்படுவதால், ஒரே போன்று வாகனம் உள்ளதாகத் தோன்றுகிறது.

ஸ்ரீ பாதுகையே பகவான் பெரிய திருவடி மீது எழுந்து அருளி இருந்து சஞ்சரிக்கும் வேளையில்
மற்ற தேவர்கள் தலைவர்கள் தத்தம் வாகனங்களில் மீது வீற்று இருப்பர்-
ஆனால் பகவான் இறங்கி உன் மீது நிற்கையில் அவர்கள் பூமியின் மீது நின்றாலும் உன் மீது ஏற்படும் பிரதிபலிப்பு
அவர்களும் பகவானுக்கு சமானமாக ஸ்ரீ பாதுகையில் இருப்பது போல் தோற்றும் –

————————————————————————–

ஸ்வச்ச ஆகாரம் ஸுர யுவதய: ஸ்வ ப்ரதிஸ்சந்த லக்ஷ்யாத்
காஹந்தே த்வாம் ப்ரணதி ஸமயே பாதுகே ஸாபிமாநா:
ஸ்த்ரீ ரத்நாநாம் பரிபவ விதௌ ஸ்ருஷ்டி மாத்ரேண தக்ஷாம்
நீசை: கர்த்தும் நரஸகமுநே: ஊர்வசீம் ஊரு ஜாதாம்—726–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நரன் என்னும் முனிவரின் தோழரான நாராயண முனிவரின் தொடையில் இருந்து
தோன்றியவள் என்ற உற்பத்திக் காரணத்தினால் ஊர்வசி என்பவள், மற்ற பெண்களை அவமானப்படுத்தியபடி நின்றாள்.
அவளது கர்வத்திற்குத் தாழ்மை ஏற்படுத்தும் பொருட்டு தேவலோகப் பெண்கள் உன்னை வணங்கி நின்றனர்.
அப்போது, தெளிந்த உருவம் கொண்ட உனக்குள் தங்களின் பிரதிபிம்பம் உண்டாகிறது என்ற பெருமையுடன் உன்னுள் புகுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே தேவ ஸ்திரீகளில் ஊர்வசி கர்வம் மிக்கவள் -ஸ்ரீ நாராயண முனிவரின் தொடையில் இருந்து உண்டானவள்
என்று சொல்லி மற்ற ஸ்திரீ ரத்னன்களைப் பரிபவப் படுத்துவாள் -அந்த தேவ ஸ்திரீகள் உன்னை வணங்கவும்
உன்னில் பிரதிபலிப்பு ஏற்படவும் வாய்ப்புக் கிடைத்தது -இது உன் ஸ்வ இச்சமான பரப்பினால் –
இப்பொழுது அவர்கள் ஊர்வசியை ஹேளனம் செய்ய முடிகிறது -நீ ஒரு தடவை தொடையில் இருந்து பிறந்தாய்
நாங்கள் பெருமாள் ஸ்ரீ பாதுகையில் புகுந்து புறப்படுகிறோம் -நினைத்த போது எல்லாம் -என்று –

————————————————————————————-

ஸ்வேச்சாகேளி ப்ரிய ஸஹசரீம் ஸ்வச்ச ரந்த அபிராமாம்
ஸ்தாநே ஸ்தாநே நிஹித சரணோ நிர்விசந் ரங்கநாத:
ஸஞ்சாராந்தே ஸஹ கமலயா சேஷசய்யாதிரூடஸ்
த்யக்த்வாபி த்வாம் த்யஜதி ந புந: ஸ்வ ப்ரதிச்சந்த லக்ஷயாத்—727–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுக்கு மிகவும் அன்பான தோழியாகவும், தோஷங்கள் இல்லாத இரத்தினங்களால்
அழகு சேர்க்கப்பட்டவளாகவும் நீ உள்ளாய். இப்படிப்பட்ட உன்னைச் சாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கநாதன்,
பல இடங்களில் ஸஞ்சாரம் செய்கின்றான். உன் மீது தனது திருவடிகளை வைத்தவனாக, தனது விருப்பப்படி லீலைகள் செய்கின்றான்.
முடிவில் உன்னை விட்டு, ஸ்ரீரங்கநாச்சியாருடன் தனது ஆதிசேஷன் என்ற படுக்கையில் ஏறிய போதிலும்,
உன்னில் காணப்படும் தனது பிரதிபிம்பம் காரணமாக, உன்னை விட்டுப் பிரியாதவனாகவே ஆகிறான்.

ஸ்ரீ பாதுகையே உன் மீது பல இடங்களிலும் நடக்கிறார் -எல்லா இடங்களிலும் நீ அவருக்கு விட ஒண்ணாத தோழி –
பிரியமானவள் -நிர்மலமான ரத்ன பூஷிதை கூட -சஞ்சார முடிவில் உன்னை விட்டு மஹா லஷ்மியோடு கூட
திரு அநந்த ஆழ்வான் மீது ஏறும் போது மட்டும் என்ன உன்னை விட முடிகிறதா -அவர் தான் உன்னில் பிரதிபிம்பமாக இருக்கிறாரே –

———————————————————————

த்வாம் ஏவ ஏகாம் அதிகதவத: கேளி ஸஞ்சார காலே
பார்ஸ்வே ஸ்த்தித்வா விநிஹித த்ருசோ: பாதுகே அநந்ய லக்ஷ்யம்
த்வத் ரத்நேஷு ப்ரதி பலிதயோ: நித்ய லக்ஷ்ய ப்ரஸாதா
பத்மா பூம்யோ திசதி பவதீ பாதஸேவாம் முராரே:—-728–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தனது உல்லாஸமான ஸஞ்சார காலங்களில் மிகவும் தெளிவாக உள்ள
உன்னை மட்டுமே பற்றியவனாக ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்கிறான்.
அப்படி அவன் ஸஞ்சரம் செய்கையில் அவன் அருகில் அமர்ந்தபடி, உன் மீது மட்டுமே தங்கள் கண்களை வைத்து,
வேறு எதனையும் பாராமல், அவனது உபயநாச்சிமார்கள் வீற்றுள்ளனர்.
அப்போது அவர்களின் பிரதிபிம்பங்கள் உனது இரத்தினக்கற்களில் தெரிகிறது.
இதன் மூலம், நீ ஸ்ரீரங்கநாதனுக்குச் செய்யும் திருவடி கைங்கர்யத்தை அவர்களுக்கும் அளிக்கிறாய் போலும்
(அதாவது, அவர்களும் அந்தப் பாதுகையில் பிரதிபலிப்பதால், அவர்களும்
ஸ்ரீரங்கநாதனுக்குப் பாதுகைகள் போன்றே நின்று கைங்கர்யம் செய்கின்றனர்).

ஸ்ரீ பாதுகையே நீ அருள் மிக்கவள் -தெளிவும் உடையவள் நீ -பிராட்டிகளுக்கு அருளும் திறன் என்னே -பெருமாள் சஞ்சார காலத்தில்
உன்னையே பற்றுகிறார் -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமி தேவி பக்கங்களில் இருக்கிறார்கள் அத்தனையே –
சயன காலத்தில் திருவடிகளைப் பிடித்து விடும் திருப்பாத சேவை தற்போது தங்களுக்குக் கிடைக்காமல் போயிற்றே –
ஸ்ரீ பாதுகையின் பாக்கியம் என்னே என்ற நினைவில் உன்னிலேயே கண்ணாய் இருக்கிற இரு தேவியாரும் பிரதிபிம்மமாக விழுகிறார்கள்
இப்பொழுது அவர்கள் கோரிய ஸ்ரீ பாத சேவை கிடைத்த தாயிற்றே –

——————————————————————————-

ஏகாம் ஏக: கில நிரவிசத் பாதுகே த்வாரகாயாம்
க்ரீடா யோகீ க்ருத பஹுதநு: ஷோடச ஸ்த்ரீ ஸஹஸ்ரே
ஸூத்தே தேவி த்வத் உபநிஹிதே பிம்பித: ரத்ந ஜாலே:
புங்க்தே நித்யம் ஸ கலு பவதீம் பூமிகாம் ஸஹஸ்ரே—729–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! துவாரகையின் பதியான க்ருஷ்ணன், இந்த உலகில் பல லீலைகள் செய்தவனாக,
யோகியாக, பல சரீரங்களை எடுத்தவனாக, பதினாறாயிரம் பெண்களை, ஒருத்தியை ஒருவனாக நின்று அனுபவித்தான்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் இங்கு உன் மீது இழைக்கப்பட்ட பலவிதமான இரத்தினங்களில்,
பல பிரதிபிம்பங்களாக நின்று, தனது பல்லாயிரம் உருவங்கள் மூலம்,
உன்னை அனைத்துக் காலங்களிலும் அனுபவித்து மகிழ்கிறான் போலும்.

ஸ்ரீ பாதுகா தேவியே விளையாட்டில் முனைப்புள்ள ஸ்ரீ கிருஷ்ணன் திருத் துவாரகையில் பதினாறாயிரம் ஸ்திரீகளை மகிழ்வித்தான் –
ஒவ்வொருவரோடும் ஒருருவில் விளையாடி பல சரீரங்கள் எடுத்துக் கொண்டான் -இப்பொழுதும் உன்னில் உள்ள பல பல ரத்னங்களிலும்
பிரதிபலிக்கப்பட்டு பல்லாயிரம் உருவங்கள் பெற்று உன்னை மட்டுமே சதா காலமும் அனுபவிக்கிறான் –

———————————————————————

ஹரி பத நகேஷு பவதீ ப்ரதிபலதி தவ ஏதத் அபி ரத்நேஷு
உசிதா மித: பதாவநி பிம்ப ப்ரதி பிம்பிதா யுவயோ:—730-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்களை நீ பிரதிபலிக்கிறாய்.
அவனது திருவடியானது உன்னுடைய இரத்தினங்களில் பிரதிபலிக்கிறது.
இப்படியாக நீங்கள் இருவரும் (திருவடி, பாதுகை) பிம்பமும், பிரதிபிம்பமாக உள்ள நிலையானது வெகு பொருத்தமாகவே உள்ளது.

ஸ்ரீ பாதுகையே பகவான் திருவடி திரு நகங்களில் நீ பிரதிபலிப்பதும் அந்தத் திருவடிகளே உன் ரத்னங்களில் பிரதிபலிப்பதும்
ரொம்பப் பொருத்தமாக அமைகின்றன –திருவடி திருப் பாதுகை என்ற நீங்கள் இருவரும் பிம்ப பிரதிபிம்பமாய் அமைந்துள்ளது நன்று –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: