ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-20-இந்திர நீல பத்ததி -நீல மணி படலம் -ஸ்லோகங்கள் -681-710-

இங்கு நீலக்கற்களைப் பற்றி மட்டுமே கூறுகிறார்.

———

ஹரிணா ஹரி நீலைச்ச ப்ரதி யத்நவதீம் ஸதா
அயத்ந லப்ய நிர்வாணாம் ஆஸ்ரயே மணி பாதுகாம்—681-

ஸ்ரீரங்கநாதனாலும், இந்த்ரநீலக்கற்களாலும் அலங்கரிக்கப்பட்டபடி பாதுகைகள் உள்ளன.
அந்தப் பாதுகைகளை அண்டினால் எந்தவிதமான சிரமமும் இன்றி மோக்ஷம் கிட்டுகிறது.
இப்படிப்பட்ட ரத்னமயமான பாதுகையை நான் அடைகிறேன்.

ஸ்ரீ பாதுகைக்கு அலங்காரம் ஒப்பனை கிடைப்பது -பகவானாலும் இந்திர நீல மணிகளாலும் தான் -இதையே ஹரியாலும் ஹரி நீல ரத்னங்களாலும் -என்றது –
இந்த அலங்காரமும் நித்யம் -முயற்சியும் நித்யம் -ஸ்ரீ பாதுகை வெறுமனே ஒதுங்கி இராமல் சஞ்சாரத்தில் ஈடுபடுகிறதே –
அதே சமயம் உண்மையில் முயற்சி செய்வது திருவடிகள் தாமே -ஆகவே முயற்சி இல்லாமலே -முயன்று கிடைக்கப் பெறும் பலனைப் பெற்றுத் தரும் –
அந்த ஸ்ரீ பாதுகையை சரணாக அடைகிறேன் –

—————————————————————————–

ஹரி ரத்ந மரீசயஸ் தவ ஏதே
நவ நீலீ ரஸ நிர் விசேஷ வர்ணா
ஸ்ருதி மூர்த்தநி சௌரி பாத ரக்ஷே
பலித அநுத்பவ பேஷஜம் பவந்தி—-682-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உனது இந்திர நீலக்கற்களின் ஒளியானது, அவிரிச்சாயம் போன்று,
அந்தச் சாயத்திற்கும் ஒளிக்கும் வேறுபாடு இல்லாமல் உள்ளது. இந்த ஒளி என்னும் சாயம் மூலமாக,
ஸ்ருதிகளின் தலைகள் நரைத்துப் போகாமல், மருந்து பூசப் பெற்றதாக ஆகின்றன.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய இந்திர நீல மணிகளின் ஒளி புதியதோர் நீலச் சாயமாகச் செயல்படும் –
ஸ்ருதிகளின் சிரஸ்ஸில் நரை உண்டாகாமல் இருக்கும் படி ஒரு மருந்தாக ஆகிறது
இதனாலேயே மிகப் பழையதான வேதங்கள் -வேத மாதர் -நரை கிழட்டுத் தனம் ஏற்படாமல் நித்ய யுவதிகளாக இருக்கை சாத்யம் ஆகிறது –

———————————————————————————-

அளகைரிவ பிம்பிதை: ஸ்ருதீநாம்
ஹரிநீலை: ஸ்ருஜஸி த்வம் உந்மயூகை:
கமலாதயி தஸ்ய பாத ரக்ஷே
கருணா உதந்வதி சைவல ப்ரரோஹாந்—683-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியைக் காணும்போது, வேதப் பெண்களின் அழகான
தலைமுடிகள் உன் மீது படர்ந்துள்ளது போன்று தோற்றம் அளிக்கிறது. இவை மூலம், ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான
ஸ்ரீரங்கநாதனின் கருணை என்னும் ஸமுத்திரத்தில் உள்ள பாசிமுளைகளை நீ உண்டாக்குகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே வேத மாதர் குனிந்து உனக்கு நமஸ்காரம் செய்யும் போது அவர்கள் முன் கூந்தல் உன்னில் பிரதிபலிக்க
அது தான் நீல மணிகளின் சோபையாகத் தோற்றுமோ என்று ஐயம் ஏற்படும் -கருணைக் கடலான பெருமாள் ஒரு கலக்கமும் இல்லாது இருக்கிறாரே –
அக்கடலை சுத்தம் செய்து வைப்பது ஒரு பாசி அன்றோ -அதன் முளைகள் தாமோ இந்திர நீல மணிக் கதிர்கள் என்று பிரமிக்க வைக்கும் –

——————————————————————————–

அநகை: ஹரி நீல பத்த்தீநாம்
ப்ரதமாநைர் மணிபா துகே மயூகை:
அதரீ குருக்ஷே ரதாங்க பாணே:
அமிதாம் ஊர்த்த்வம் அவஸ்தி தஸ்ய காந்திம்—-684–

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது அழகாக
எங்கும் பரவியபடி உள்ளது. இந்த ஒளி மூலம் உன் மீது எழுந்தருளியுள்ள, சக்கரம் ஏந்திய
ஸ்ரீரங்கநாதனின் அளவற்ற ஒளியை, சற்றே தாழ்ந்து காணும்படிச் செய்கிறாய்.

ஸ்ரீ மணி பாதுகையே நீல மணிகளின் உஜ்ஜ்வலத் தன்மை அழகியதாகவும் -நன்றாகப் பரவியதாகவும் இருந்து
உன் மீது இருக்கும் சக்ர பாணியான பெருமாளின் அளவற்ற காந்தியைக் கூடத் தாழச் செய்து தோற்கடிக்கிறது –

—————————————————————————————

சரணாவநி பாதி ஸஹ்ய கந்யா
ஹரி நீல த்யுதிபிஸ் தவ அநுவித்தா
வஸுதேவ ஸுதஸ்ய ரங்க வ்ருத்தே:
யமுநேவ ஸ்வயம் ஆகதா ஸமீபம்—685–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள் ஒளியுடன் தொடர்பு கொண்ட காவேரி நதியானது,
வஸுதேவரின் பிள்ளையான கண்ணனின் அருகாமையைத் தேடி வந்த யமுனை போன்று, கறுத்து காணப்படுகிறது.

ஸ்ரீ பாதுகையே உனது இந்திர நீலக் கற்கள் தனம் காந்தியால் காவேரியையே கருக்க வைத்து விட்டன –
ஸ்ரீ ரகத்தில் இருக்கும் அந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்காக வேண்டி யமுனையே வந்து விட்டது என்று நினைக்க வைக்கிறது –

———————————————————————–

அவதீரித தேவதாந்த ராணாம்
அநகைஸ் த்வம் மணி பாதுகே மயூகை:
ஹரி நீல ஸமுத்பவை: விதத்ஸே
ஹரி ஸாரூப்யம் அயத்நதோ ஜநாநாம்—686-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனைத் தவிர மற்ற தேவதைகளை அண்டாமல் உள்ள மக்களுக்கு,
உனது இந்த்ரநீலக் கற்கள் செய்வது என்ன வென்றால் – ஸ்ரீரங்கநாதனின் கறுத்த நிறத்தை ஒத்த நிறமாக
அவர்களை உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளி மாற்றுகிறது.

ஸ்ரீ மணி பாதுகையே பாரமாய் காந்திக்களுக்கே உரியதாகிய சாரூப்யம் அனாயாசமாக எல்லா ஜனங்களுக்கும் அளித்து அருளுகிறாய்-
உன் இந்திர நீல மணிகளில் இருந்து வெளிப்படும் காந்தி அந்த ஜனங்களை நீல நிறத்தவராகப் பெருமாளை ஒக்க ஆக்குகிறதே –

——————————————————————–

நேத்ரேஷு பும்ஸாம் தவ பாத ரக்ஷே
நீலாஸ்ம பாஸா நிஹித அஞ்ஜநேஷு
ஸ்ரியா ஸமம் ஸம்ஸ்ரித ரங்ககோச:
நிதி: ஸ்வயம் வ்யக்திம் உபைதி நித்யம்—687-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது
புதையலைக் காண உதவும் மை போன்று உள்ளது. இப்படிப்பட்ட உயர்ந்த மை தடவப்பட்ட கண்களைக் கொண்ட மனிதர்களுக்கு,
ஸ்ரீரங்கநாச்சியாருடன் சேர்ந்துள்ள ஸ்ரீரங்கவிமானம் என்னும் பெட்டியில் காணப்படும்
ஸ்ரீரங்கநாதன் என்னும் புதையல், தானாகவே எப்போதும் புலப்பட்டபடி உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உனது நீல ரத்னங்கள் பார்க்கிற ஜனங்களுடைய கண்களுக்கு ஒரு மை போலாகுமோ -ஏன் என்றால்
ஸ்ரீ ரங்க ஷேத்ரத்தில் மஹா லஷ்மியோடு கூடிய இந்த மஹா நிதி எப்போதும் தானாகவே வ்யக்தமாகிறதே –

————————————————————————–

அபங்குராம் அச்யுத பாத ரக்ஷே
மாந்யாம் மஹாநீல ருசிம் த்வதீயாம்
நிஸ்ரேய ஸத்வார கவாடிகாயா:
சங்கே ஸமுத்பாடந குஞ்சிகாம் ந:—-688-

அடியார்களை நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே உன்னுடைய
இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது அழியாமல், ஒடியாமல், போற்றத்தக்கதாக உள்ளது. இந்த ஒளியானது தலையில் விழும்போது,
அங்குள்ள ப்ரஹ்மதந்த்ரம் என்னும் த்வாரம் வழியாக மேல்நோக்கிக் கிளம்பும் ஆத்மாவானது மோக்ஷத்தை அடையும்போது,
அந்த பரமபதத்தின் கோட்டை வாசல் கதவைத் திறக்கும் சாவி போன்று உள்ளது.

ஸ்ரீ அச்யுத பாதுகையே -உன் நீலக் கற்களின் காந்தி தடைப் படாதது –
அது மோஷ வாசல் கதவுக்கு ஒரு திறவு கோலாக நினைக்கிறேன் –

—————————————————————————

ஜீவயதி அம்ருத வர்ஷிணீ ப்ரஜா:
தாவகீ தநுஜவைரி பாதுகே
கோர ஸம்ஸரண கர்ம நாசிநீ
காளிகேவ ஹரி நீல பத்ததி—689-

அசுரர்களின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் வரிசையானது,
மேகங்களின் வரிசை போன்று உள்ளது. இது மோக்ஷம் என்னும் அமிர்த மழையைப் பொழிவதாகவும்,
கடுமையான ஸம்ஸாரம் என்னும் கோடை காலத்தைப் போக்கச் செய்வதாகவும் உள்ளது.
இப்படியாக இந்தக் கற்கள் மக்களைப் பிழைக்க வைக்கிறது.

ஸ்ரீ பாதுகையே உனது இந்திர நீல மணிகளின் ஒளிக் கதிர் வரிசை மேக வரிசை போல மேகம் எப்படிக் கடுமையான
கோடையைப் போக்குமா அது போலே இது மோஷம் ஆகிற அம்ருதத்தை வர்ஷித்து சம்சாரம் ஆகிற கோடையைப் போக்கும் –

—————————————————————————————————

சதம கோபல பங்க மநோ ஹரா
விஹரஸே முரமர்த்தந பாதுகே
மணி கிரீட கணேஷு திவௌகஸாம்
மது கரீவ மநோ ரம பங்க்திஷு—690-

முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் முன்பாக தேவர்களின் க்ரீடங்கள் அழகாக,
வரிசையாகக் காணப்படுகின்றன. அந்தக் க்ரீடங்களில் உள்ள இரத்தினக்கற்களை மலர்கள் என்று எண்ணி
மொய்க்கும் வண்டுகளாக, உனது இந்த்ரநீலக் கற்களின் வரிசைகள் உள்ளன.
இப்படியாக பெண் வண்டு போன்று நீ விளையாடுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே தேவர்கள் தம் கிரீடம் குனியப் பணிந்து நிற்கின்றனர் -உன் இந்திர நீலக் கற்கள் உன்னை மிக அழகியதாய்ச் செய்யும்
நீ கிரீடங்கள் கூட்டத்தில் ஒவ்வொன்றாக சஞ்சரிக்கும் போது ஒரு பெண் வண்டு தனக்குப் பிரியமான பூ வகைகளில் தங்கி ரசிப்பது போல் இருக்கும் –

———————————————————————-

அந்விச்சதாம் கிமபி தத்வம் அநந்ய த்ருஸ்யம்
ஸம்யக் ப்ரகாச ஜநநீ த்ருத க்ருஷ்ண ரூபா
பாதாவநி ஸ்புரஸி வாஸவ ரத்ந ரம்யா
மத்யே ஸமாதி நயநஸ்ய கநீநிகேவ–691–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்திரநீலக் கற்கள் மூலம் நீ இன்பமாகவும், மற்றவர்களுக்கு நல்ல அறிவை அளிப்பவளாகவும்,
ஸ்ரீரங்கநாதனின் திருமேனி நிறத்தை அடைந்தவளாகவும் உள்ளாய். ஸ்ரீரங்கநாதனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும்,
மற்ற பலன்களையும் எண்ணிப் பார்க்காதவர்களால் காணக் கூடியவனாக உள்ள உயர்ந்தவனான
ஸ்ரீரங்கநாதனை – த்யானம் செய்பவர்களின் த்யானம் என்ற கண்ணின் நடுவில் உள்ள கருப்பு விழி போல் நீ நின்று, காண்பிக்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமானின் திரு மேனியைத் தாங்குகிறாய் -கறுப்பாகவும் உள்ளாய் -இந்த நிறம் இந்திர நீலக் கற்களாலே வரும் –
மற்றவர்க்குக் காண ஒண்ணாத மெய்ப்பொருள் யாது ஓன்று உண்டோ அதை யோகியர் காண்பது உனது உதவியால் –
அவர்கள் யோகக் கண்ணின் கரு விழி நீ தான் என்ன வேணும் –
நீ காட்டித் தந்த பின் உன் மேல் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனை யோகியர் காண முடியும் –

—————————————————————–

மாத: ஸலீலம் அதிகம்ய விஹார வேலாம்
காந்திம் ஸமுத்வஹஸி காஞ்சந பாதுகே த்வம்
லக்ஷ்மீ கடாக்ஷ ருசிரை: ஹரி நீல ரத்நை:
லாவண்ய ஸிந்து ப்ருஷ தைரிவ ரங்கதாம்ந:—-692–

தங்கமயமான பாதுகையே! தாயே! நீ உல்லாஸமாக ஸ்ரீரங்கநாதனுடன் ஸஞ்சாரம் செய்கின்ற காலத்தைப் பார்த்தால்,
ஸமுத்திரத்தின் கரையை அடைந்தது போன்று உள்ளது. உன்னுடன் இருக்கின்ற ஸ்ரீரங்கநாதனின் அழகு என்பதாகவே
அந்த ஸமுத்திரம் உள்ளது. அங்கு வீசி எறிகின்ற அலைகள் போன்று ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் உள்ளது.
உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள், அந்த ஸமுத்திரத்தின் அலைகள் போன்று உள்ளன. இப்படியாக நீ ஓர் ஒப்பற்ற அழகைப் பெறுகிறாய்.

ஸ்ரீ பாதுகைத் தாயே -பெருமாள் உல்லாசமாக உன் மீது ஏறி சஞ்சரிக்கிறார் -பெருமாளின் அழகாகிற கடல் -அதில் நீர்த் திவலைகள் –
இவை பிராட்டி கடாஷம் போல் அழகியவை -குளிர்த்தி யுடையவை –
இந்தத் திவலைகள் உன் மீது தெறித்து தான் இப்போது இந்திர நீலக் கல்லின் காந்தி உண்டாகிறதோ –

————————————————————————————

க்லுப்த அவகுண்டந விதி: மணி பாத ரக்ஷே
நீலாம்சுகைஸ் வலபிதஸ்ம ஸமுத்பவைஸ் தே
ஸங்கஸ்சதே முநி ஜநஸ்ய மதிஸ் ஸமாதௌ
ராத்ரௌ ஸமஸ்த ஜகதாம் ரமணேந லக்ஷ்ம்யா:—-693-

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனைத் த்யானித்தபடி உள்ள முனிவர்களின் புத்தியானது
ஒரு பெண் போன்று உள்ளதாக வைப்போம். அவர்கள் த்யானிக்கும் நேரம் என்பது இரவு நேரம் போன்று உள்ளது.
அந்த நேரத்தில், அந்தப் பெண், உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளி என்னும் கருப்புத் துணியால்
தன்னை மூடிக்கொண்டு, ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனை அடைகிறாள்.

ஸ்ரீ மணி பாதுகையே சமஸ்த ஜகத்துக்கும் இரவு வேளை-அது யோகியின் சமாதிக்கு உகந்ததாம் –
ஆகவே யோகிகளின் புத்தி என்கிற அபி சாரிகை வகையிலான மாது முக்காடிட்டு
முழுதும் மூடிக் கொண்டு யாரும் அறியாதபடி போகிறாள் -லஷ்மீ பதியோடு சேர்வதற்கு –
அவளுக்கு இப்படி ரஹச்யமாக போக உதவுவது உன் இந்திர நீலக் கற்களில் இருந்து வரும் ஒரு நீலப் போர்வையே –

—————————————————————

த்ரஷ்டும் கதாசந பதாவநி நைவ ஜந்து:
சக்நோதி சாஸ்வத நிதிம் நிஹிதம் குஹாயாம்
க்ருஷ்ண அநுரூப ஹரி நீல விசேஷ த்ருஸ்யா
ஸித்தாஞ்ஜநம் த்வம் அஸி யஸ்ய ந தேவி த்ருஷ்டே:–694–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகை தேவியே! ஸ்ரீரங்கநாதனுடன் இருப்பதற்குத் தகுதி கொண்டதான இந்த்ரநீலக் கற்களுடன்
கூடியவளாக நீ மிகவும் அழகாகக் காணப்படுகிறாய். மறைந்துள்ள புதையல்களைப் பார்ப்பதற்குக் கண்களில்
தடவிக் கொள்ளும் மை போன்ற நீ, யார் ஒருவனுடைய கண்களில் பூசப்படாமல் உள்ளாயோ – அப்படிப்பட்ட மனிதர்களால்,
தங்கள் இதயம் என்ற குகைக்குள் அந்தர்யாமியாகப் புதையல் போன்றுள்ள ஸ்ரீரங்கநாதனை எப்போதும் காண இயலாது என்பது நிச்சயம்;
அந்த நிதியைக் காண்பதற்கான சக்தி உள்ளவனாக அவன் ஆகவே மாட்டான்.

ஸ்ரீ பாதுகா தேவியே -நீ ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு ஏற்ற இந்திர நீலக் கற்களால் விசேஷ அழகுடன் இருக்கிறாய் –
கறுப்பாகவும் தகுதியாகவும் உள்ள உயர்ந்த இந்திர நீலம் போல் இருக்கிறாய் –
எவன் ஒருவன் உன் உதவி பெற வில்லையோ -நீ தானே மறைந்தவற்றை காண வல்ல கண் மையாக உதவி அருளுகிறாய்
அவன் தன் இதயக் குகையில் மறைந்து நிற்கும் அழியாப் பெரு நிதியை காண்பது எங்கே –

———————————————————————————–

ப்ரத்யேமி ரங்க ந்ருபதே: மணி பாதுகே த்வாம்
க்ருஷ்ண அந்தரங்க ருசிபி: ஹரி நீல ரத்நை:
விஸ்வ அபராத ஸஹநாய பதம் ததீயம்
விஸ்வ அம்பராம் பகவதீம் ஸமயே பஜந்தீம்—-695-

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருமேனி நிறத்திற்கு
ஒத்தபடியான இந்த்ரநீலக் கற்கள் கொண்டு நீ காணப்படுகிறாய். ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்தவர்கள்
செய்த குற்றங்கள் அனைத்தையும் நீ பொறுத்துக் கொள்கிறாய். இப்படியாக நீ நிறத்தில் மட்டுமே அல்லாமல்,
குணத்திலும் ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளை அடைத்து நிற்கின்ற பூமிப்பிராட்டியே என்று நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ மணி பாதுகையே -இந்திர நீலக் கற்களால் நீயும் அவனைப் போலே கறுப்பாக உள்ளாய் –
தன்னால் தாங்கப்படும் அத்தனை ஜீவ ராசிகள் உடைய குற்றங்கள் அனைத்தையும் பொறுத்து அருள வேண்டும் என்ற கோரிக்கை யுடன்
பெருமாள் திருவடியை ஆச்ரயித்து இருக்கும் உன்னை ஸ்ரீ பூமிப் பிராட்டி என்றே நான் சொல்லுவேன்
வேதமும் பூமியின் நிறம் கருப்பு என்று சொல்லுமே –

——————————————————————-

மத்வா மஷீம் பரிமிதாம் பவதீ ததந்யாம்
வைகுண்ட பாத ரஸிகே மணி பாதுகே ஸ்வாந்
அங்க்தே ஸ்வயம் கிரண லேபிபி: இந்த்ரநீலை:
ஆசாதடேஷு லளிதாந் அபதாந வர்ணாந்—696-

ஸ்ரீவைகுண்டநாதனான பெரியபெருமாளின் திருவடிகளுடைய சுவையை அறிந்த பாதுகையே!
இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டவளே! உன்னுடைய மேன்மைகளை எழுதுவதற்கு இந்த்ரநீலக் கற்களின் ஒளி தவிர,
மற்ற ஒளிகளாக உள்ள மை போதாது என்று எண்ணினாய் போலும். அதனால்தான் அனைத்துத் திசைகள் என்னும் காகிதங்களில்,
இன்பமாக உள்ள உன் சரிதங்களை, உன்னில் பதிக்கப்பட்ட இந்த்ரநீலக் கற்களின் ஒளி என்னும் மை கொண்டு, நீயாகவே எழுதுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே -பகவான் உடைய திருவடிகளை செவ்வி குறையாமல் ரஷிக்க முற்படுகிற நீ -இந்திர நீலங்கள் இன்றி
மஞ்சள் போன்ற ஏதோ ஒரு மையானால் அதை எல்லாம் தவிர்த்து -அது அல்பமாகும் என்று தள்ளிவிட்டு –
திக்குகள் அடங்கலும் இந்திர நீல ஒளியைக் கொண்டு அழகாகப் பூசி வைத்து இருக்கிறீர்கள்
அழகான புகழ்ச் சொற்களை தாமே செய்து இருக்கிறீர்கள் —
ஆழ்வார் பெருமாள் திருவடிகளைப் பற்றிச் சொன்னவை எல்லாம் அவர் ஸ்வரூபமான ஸ்ரீ பாதுகைகளை
ஏறிட்டுச் சொல்வதே பொருந்தும் என்றவாறு –

————————————————————————————

வலமதந மணீநாம் தாமபிஸ் தாவகாநாம்
மதுரிபு பத ரக்ஷே வாஸரை: அவ்யபேதா
அபிஸரண பராணாம் வல்லவீநாம் ததாஸீத்
சமித குரு பயார்த்தி: சர்வரீ காசித் அந்யா—-697-

மது என்னும் அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! க்ருஷ்ணனாகிய ஸ்ரீரங்கநாதனிடம் போகத் துடித்த
கோபிகைகள், அச்சப்பட்டு, மிகுந்த சிரமத்துடன் வீட்டிலேயே சிலர் அடங்கினர். அப்படிப்பட்ட அச்சத்தை நீங்குவதற்காக,
பகலிலேயே உண்டான இரவுப் பொழுதை உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது உண்டாக்கியது
(கண்ணனுடன் இருந்த அந்த இரவு கூட முடிந்து விடும், ஆனால் ஸ்ரீரங்கநாதனின் பாதுகை உண்டாக்கிய
இந்த இரவு முடியாது, ஆகவே எப்போதும் ஸ்ரீரங்கநாதனுடன் இருக்கலாம் என்று கருத்து).

ஸ்ரீ பாதுகையே -நீ உன் இந்திர நீலக் கற்களின் ஒளியைக் கொண்டு பகலை இரவாக்கினாய் -எதற்காக
யாரும் அறியாமல் ஸ்ரீ கண்ணன் இடம் போகத் துடித்த கோபி போக இருள் வேண்டி இருந்தது –
செயற்கையான இரவு -அஞ்சாமல் ஸ்ரீ கிருஷ்ணன் உடன் கலக்க முடிந்ததே –

————————————————————————————

சதமக மணி பங்கை: உந்மயூகைர் திசந்தீ
சரணம் உபகதாநாம் ரங்க நாதேந ஸாம்யம்
ப்ரதயஸி ஜகதி த்வம் பாதுகே ஹைதுகாநாம்
உபநிஷத் உபகீதாம் தத்க்ரது ந்யாய வார்த்தாம்—-698-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பெரியகோயிலுக்கு வந்து உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் சரணாகதி செய்தவர்கள்,
உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளி காரணமாக, ஸ்ரீரங்கநாதனின் திருமேனியை ஒத்த நிறத்தை அடையும்படி நீ செய்கிறாய்.
இப்படியாக ஹேதுவாதம் செய்பவர்களுக்கு, உபநிஷத் கூறும் தத்க்ரது ந்யாயத்தை நீ உணர்த்தியபடி உள்ளாய்.

எம்பெருமானை நாம் எவ்விதம் உபாஸனை செய்கிறோமோ, அவ்விதமாகவே நாம் அடைவோம் என்பது உபநிஷத் கருத்து.
இதற்கு தத்க்ரது ந்யாயம் என்று பெயர். இதனை ஒப்புக் கொள்ளாதவர்கள் ஹேதுவாதிகள் ஆவர்.

ஸ்ரீ பாதுகையே உன் இருப்பிடம் வந்தவர்களுக்கு -உன்னுடன் சரண் அடைந்தவர்களுக்கு -நீ உன் இந்திர நீலக் கற்களின் காந்தியைக் கொண்டு
பெருமாள் உடன் சாம்யம் தரும் நீல நிறத்தை அளித்து அருள்கிறாய்
உலகில் கேள்வி கேட்டுக் காரணம் வினவத் துளைப்பவர்களுக்கும் இங்கனம்- தத்க்ரது நியாயத்தைப் பிரகாசப் படுத்துகிறாய்
ஜீவன் எப்படி பர ப்ரஹ்மத்தை உபாசிக்கிறானோ அப்படியே ஆகிறான் என்கிற நியாயம் –

‘சரணம் உபகதாநாம்’ உன்னையே சரணம் என்றடைந்தவர்களுக்கு
‘ரங்கநாதேந சாம்யம்” ஸ்ரீரங்கநாதன் போல் ஆவதை ‘திசந்தீ’ கொடுக்கின்றாய்!

பாதுகையில் இந்திரநீலகற்கள் இழைக்கப்பெற்றுள்ளன. இதனுடைய வர்ணம் பெருமாளுடைய
திருமேனி காந்தி போலுள்ளது. இந்த காந்தி ஸேவிக்க
வருகின்றவர்களையும், பெரியபெருமாளைப் போல் கருப்பாக்கி விடுகின்றது.

உபநிஷத்துக்களில் ஒரு முக்கியமான விஷயம் சொல்லப்பட்டுள்ளது.
ஒருவன் தான் தனக்கு ஒரு ஸங்கதி வரவேண்டும் – இடைவிடாது அதைப்பற்றியே நினைத்தால்,
முயற்சித்தால், அது அவனுக்கு வந்துவிடுமென்று சொல்கின்றது.

ஆழ்வார்களின் பாசுரங்களிலுள்ள கருத்துக்களையறிந்து அதன்படி பக்தியுடன் இருந்தால், பக்தி பண்ணினால்,
பிறப்பு இறப்பில்லாத உலகமாகிய, பரந்தாமனின் உலகினை அந்த ஜீவன் அலங்கரிக்கும்!

‘ஸம்ஸர்கஜா தோஷகுணா பவந்தி’ என்று ஒரு ஸம்ஸ்கிருத பழமொழி!

அதாவது நம் சேர்க்கை எப்படியிருக்கின்றதோ அது போன்று குணமும் அமையும் என்று பொருள்.
நல்லவரோடு சேரின் நல்ல குணம். கெட்டவரோடு சேர்ந்தால் கெட்ட குணம். நல்ல ஆச்சார்யனிடத்து பக்தியோடு
அவர் சொல்படி பணிவோமாயின், நாம் பெருமாளின் கிருபைக்கு எளிதில் பாத்திரமாகின்றோம்.
நல்ல ஆச்சார்யர்களின் சொல்படி கேட்கின்றார் பெருமாள்.

———————————————————–

பரிசரதி விதௌ த்வாம் பாதுகே ரங்க பர்த்து:
பத ஸரஸிஜ ப்ருங்கை: பாஸுரை: இந்த்ர நீலை:
ப்ரகடித யமுநா ஔகா பக்தி நம்ரஸ்ய சம்போ:
பரிணமயஸி சூடா விஷ்ணு பத்யா: ப்ரயாகம்—-699-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை நான்முகன் வந்து வணங்கி நிற்கும்போது சிவனும் அப்படியே செய்கிறார்.
ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில் மொய்க்கின்ற வண்டுகள் போன்று உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள் உள்ளன.
இவை யமுனையின் ப்ரவாஹம் போன்று கறுத்து காணப்படுகின்றன. உன்னை வணங்கும் சிவனின் தலையில்
இந்த யமுனை நதியும் பாய்ந்து, அங்குள்ள கங்கைக்கு யமுனையின் சேர்க்கையை நீ உண்டாக்குகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திரிகிரமனாக உலகு அளந்த போது ப்ரஹ்மா உனக்குத் திருவாராதனம் செய்தான்
அவன் சேர்த்த தீர்த்தத்தை பக்தியோடு ஏற்று சிவன் கங்கையை உலகுக்கு தந்தான்
உன் நீலக் கற்கள் பெருமாள் திருவடிகளைச் சுற்றும் கரு வண்டுகளோ என்று தோற்றம் அளிக்கும்
இந்த நீலக் கற்கள் யமுனையைப் பிறப்பித்தன -கங்கா யமுனை சேர்க்கையினால் பிரயாகையையும் உண்டாக்கினாய்

————————————————————————-

பதகி ஸலய ஸங்காத் பாதுகே பத்ரள ஸ்ரீ :
நக மணிபி: உதாரை நித்ய நிஷ்பந்ந புஷ்பா
சதமக மணி நீலா சௌரி லாவண்ய ஸிந்தோ:
நிபிடதம தமாலா காபி வேலாவநீ த்வம்—700-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் சிறிய திருவடிகள் சிவந்த துளிர்கள் போன்று, இலைகள் நிரம்பியதாகத் தோன்றுகிறது;
பெருமை மிகுந்த வைரங்கள் போன்று காணப்படும் அவன் திருவடி நகங்கள் – மலர்கள் எப்போதும் உள்ளதாகத் தோன்றுகிறது;
உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள் கருமையாக உள்ளன. இப்படியாக ஸ்ரீரங்கநாதனின் அழகு என்ற
ஸமுத்திரத்தின் கரையில் காணப்படும் காடு போன்று நீ உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே உன்னை பகவான் ஆகிற லாவண்யக் கடலின் கரையில் உள்ள ஒரு பச்சிலை மரம் நிறைந்த காடாகச் சொல்ல வேணும் –
திருவடிகளாம் தளிர்களால் நல்ல இலைச் செல்வம் பெற்றது -ஒளி வெள்ளம்
பெருக்கும் திரு நகங்கள் ஆகிற மணிகள் பூக்கள் ஆகும் -எப்போதும் புஷ்பித்து இருப்பவை
இந்திர நீலங்களின் கருப்பு காட்டில் அடர்த்தியைச் சொல்லும் –

—————————————————————

த்வயி விநிஹிதம் ஏதத் கேபி பஸ்யந்தி மந்தா:
சதமக மணி ஜாலம் சார்ங்கிண: பாத ரக்ஷே
வயம் இதம் இஹ வித்ம: ப்ராணிநாம் பாவுகாநாம்
ஹ்ருதய க்ருஹ குஹாப்ய: பீதம் அந்தம் தமிஸ்ரம்–701–

சார்ங்கம் என்னும் வில் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை நன்றாக உணராதவர்கள், உன்னிடம் காணப்படும்
கற்களை வெறும் இந்த்ரநீலக் கற்கள் என்றே காண்கின்றனர். ஆனால் நாங்கள் இவற்றை எப்படிப் பார்க்கிறோம் என்றால் –
உன்னை உபாஸிப்பவர்களின் மனம் என்னும் குகையில் காணப்படும் அறியாமை என்னும் இருளை நீ
குடித்த காரணத்தால் உண்டான இருள் (கருமை) என்று எண்ணுகிறோம்.

ஸ்ரீ பாதுகையே உன் மேல் விளங்கும் நீல ஒளிக்குக் காரணம் உன்னில் இழைக்கப் பெற்றுள்ள இந்திர நீலக் கற்கள் தாம் என்பர்
சிற்றறிவாளர்-அப்படி அன்று –அது உன்னை உபாசிக்கும் ஜனங்களுடைய ஹ்ருதயம் ஆகிற இல்லத்தின் குகையில் சூழ்ந்து இருந்த
அக இருளை நீ குடித்து விட்டு இருக்கிறாயே அதனால் ஏற்பட்டது என்று நாம் சொல்வோம் –

——————————————————————

க்லுப்த ச்யாமா மணிபி: அஸிதை: க்ருஷ்ண பக்ஷேண ஜுஷ்டா
ஸ்ரேய: பும்ஸாம் ஜநயஸி கதிம் தக்ஷிணாம் உத்வஹந்தீ
தேந ஆஸ்மாகம் ப்ரதயஸி பரம் பாதுகே தத்வ வித்பி:
மௌளௌ த்ருஷ்டாம் நிகம வசஸாம் முக்தி கால அவ்யவஸ்தாம்—702-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது இந்த்ரநீலக் கற்களால் நீ கருத்த நிறம் கொண்டு, இரவுப்பொழுது போன்று உள்ளாய்.
க்ருஷ்ணனுக்கு வேண்டியவர்களால் வணங்கப்படுகிறாய் (க்ருஷ்ணபக்ஷத்தால் அடையப் பெற்றாய்).
சிறந்த நடையைக் கொண்டுள்ளாய் (தக்ஷிணாயனம்).
இப்படியாக உன்னைப் பற்றிய உண்மை அறிந்த அனைவருக்கும் மோக்ஷம் உண்டாக்குகிறாய்.
இதனால் உபநிஷத் கூறுவது போன்று முக்தி அடைவதற்கு பகல் நேரம், சுக்லபக்ஷம், உத்தராயணம் என்பது
அவசியம் என்னும் விதிமுறைகள், உன்னை அடைந்தவர்களுக்கு இல்லை என்று எங்களுக்கு உணர்த்துகிறாய்.

ஸ்ரீ பாதுகையே நீல மணிகளால் நீல ஒளியைப் பெற்றும் பக்தர்களால் ஆஸ்ரயிக்கப் பெற்றும் சிறந்த நடை யுடையவளாய் விளங்கும் நீ –
இரவை உண்டாக்கி ஸ்ரீ கிருஷ்ண பஷத்தினால் அடையைப் பெற்று தஷிணாயனத்தை அடைந்த நீ -மனிதர்க்கு முக்தி அளிப்பவள் எனபது
தத்வம் உணர்ந்த பெரியோர்கள் கூறுவது -உபநிஷத் நியமித்த முக்தி சாதனமான பகல் -ஸூ க்ல பஷம் -உத்தராயணம் -என்ற இவை
இந்த வகை வரையறை கிடையாது என்று எங்களுக்கு விளக்கப் பட்டது -நீ சொல்வது மூலம் இது தெரிகிறதே –

மணிபி:’ இந்திரநீலக்கல்லுகளாலே – ‘அஸிதை:’ கருப்பாயிருக்கின்ற – ‘க்ருஷ்ணபக்ஷேஷூ:’ கிருஷ்ணபட்சத்தாலே –
‘ஜூஷ்டா:’ ஸேவிக்கப்பட்டவள்‘முக்தி காலாவ்யவஸ்தாம்” : – மோக்ஷத்திற்காக கட்டுபாடில்லாமை.

பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள இந்திரநீலக்கல்லினால் கருப்பாயிருக்கின்றாய். இது கிருஷ்ணபட்சத்தினைப் போலுள்ளது.
தக்ஷிணாயணம் போலுள்ளது. ஆயினும் மோக்ஷம் வேண்டி உன்னிடத்தில் கைங்கர்யம் செய்பவர்கள் அவர்கள்
எந்த காலத்தில் இறந்தாலும் மோக்ஷம் உண்டு என்பதனைத் உணர்த்துகின்றாய்!.

உபநிஷத்துக்கள், ‘ஒருவன் பக்தி, பிரபத்தி போன்றவற்றைக் கடைப்பிடிப்பானாயின் அவன் ராத்ரியில் இறந்தாலும்,
தக்ஷிணாயணம் ஆகிய காலங்களில் இறந்தாலும் மோக்ஷம் உண்டு. இதனைக் கடைப்பிடிக்காது மற்ற
உபாயங்களை கடைப்பிடிப்பவர்கள் இந்த காலங்களில் இறந்தால் நல்லகதி கிடையாது” என்கிறது.

இந்திரநீலக்கல் ராத்ரி போன்று இருண்டிருந்தாலும், கிருஷ்ணபட்சம், தக்ஷிணாயணம் போன்றிருந்தாலும்
தன்னை அண்டியவர்களுக்கு மோக்ஷம் அளிக்கக்கூடியது.

ஆழ்வாரின் பாசுரங்களை பக்தியோடு அனுசந்திப்பவர் எந்த காலத்தில் இறந்தாலும் மோக்ஷம் கண்டிப்பாக உண்டு.
அவர்களுக்கு இந்த மோக்ஷமானது சொந்த வீடு போன்றது.

ஆழ்வார்களின் அவதாரத்தினாலேயும், அவர்கள் பாசுரங்களினாலும்தான், சாந்தி, பக்தி, விரக்தி, தயை, பொறுமை,
நல்ல புத்தி போன்ற நல்லகுணங்கள் இவ்வுலகில் விளங்குகின்றது.

பாதுகையில் பதிக்கப்பெற்றுள்ள இந்திரநீலக்கல்லின் காந்தி இருட்டு போலிருக்கின்றது.
இந்த இருட்டு அதனை ஸேவிக்கின்றவர்களின் அஞ்ஞானமாகின்ற இருட்டைப் போக்குகின்றது.

காலில் தைத்த முள்ளை, முள்ளால் எடுப்பது போன்று, பெருமாளை அடையமுடியவில்லையே என்று ஏக்கத்துடன்
ஆழ்வார்கள் பாடிய, இந்திரநீலக்கற்கள் போன்று, பாசுரங்கள், அதனைக் கற்போரின், பொருள் உணர்ந்தோரின்
அஞ்ஞானம் என்கிற மற்றொரு இருட்டினைப் போக்குகின்றது.

—————————————————————————–

ஸத்பிர் ஜுஷ்டா ஸமுதித விது: ஜைத்ர யாத்ரா விநாதேஷு
ஆதந்வாநா ரஜநிம் அநகாம் இந்த்ர நீல அம்ஸூ ஜாலை:
சித்ரம் க்யாதா குமுத வநத: பாதுகே புஷ்யஸி த்வம்
வ்யாகோசத்வம் விபுதவநிதா வக்த்ர பக்கேரு ஹாணாம்—703-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸாதுக்கள் என்னும் நக்ஷத்திரங்களால் அடையப்படுகிறாய்;
வெற்றியை மட்டும் உண்டாக்கவல்ல உல்லாஸ ஸஞ்சாரம் செய்கின்ற ஸ்ரீரங்கநாதன் என்ற சந்த்ரனைக் கொண்டுள்ளாய்;
இந்த்ரநீலக் கற்களின் குவியல் மூலமாக தோஷம் இல்லாத இரவுப்பொழுதை உண்டாக்குகிறாய்;
இரவில் மலர்கின்ற ஆம்பல் மலர்களுக்கு நீ தேவதையாக உள்ளாய். இப்படியாக உள்ள நீ தேவலோகப் பெண்களின்
முகங்கள் என்னும் தாமரை மலரையும் மலரச் செய்கிறாய். என்ன வியப்பான செயல் இது?

ஸ்ரீ பாதுகையே உனது உல்லாச சஞ்சாரம் -பகவான் ஆகிற சந்தரன் உதயம் -சாதுக்கள் நஷத்ரங்கள் குழுமி இருப்பது –
இந்த யாத்ரை நிச்சயம் விஜய யாத்ரை தான் -ஏன் சந்தரன் -நஷத்ரங்கள் விளங்குவதால் –
நீலக் கற்கள் நல்ல இருட்டை உண்டாக்கி யுள்ளன -அல்லிகள் காடாக மலர்ந்து உள்ளன -தேவ மாதரின் முகத்தாமரை மலர்ந்து உள்ளது –
இரவில் தாமரை -என்ன ஆச்சர்யம் -எல்லாம் நன்று உன் விஜயம் பூவுலகத்திற்கும் சந்தோஷம் விளைவிப்பதாயிற்றே –

—————————————————————————————–

நித்யம் லக்ஷ்மீ நயநருசிரை: சோபிதா சக்ர நீலை:
ஸாளக்ராம க்ஷிதிரவ ஸூபை: சார்ங்கிண: தர்சயந்தீ
ஸாகேதாதே: ஸமதிக குணாம் ஸம்பதம் தர்ச யந்தீ
முக்தி க்ஷேத்ரம் முநிபி: அகிலை: கீயஸே பாதுகே த்வம்—704-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள், ஸ்ரீரங்கநாச்சியாரின் அழகான திருக்கண்கள் போன்று காணப்படுகின்றன.
அவை மூலம் நீ, ஸ்ரீரங்கநாதனின் ஒரு வித மூர்த்தியான ஸாளக்ராம உருவங்களைக் காண்பிக்கிறாய்
(இந்த்ரநீலக் கற்கள் ஸாளக்ராமங்களைப் போன்று உள்ளன என்கிறார்). இதனால் நீ ஸாளக்ராம க்ஷேத்ரம் போன்று விளங்குகிறாய்.
மோக்ஷம் அளிக்கவல்ல அந்த க்ஷேத்ரத்தைக் காட்டிலும் நீ அதிகமான சிறப்புடையவளாக உள்ளாய்.
இதனால் அனைத்து முனிவர்களாலும் முக்திக்ஷேத்ரம் என்றே பாடப்படுகிறாய்.

நமது இல்லத்தில் பன்னிரண்டு ஸாளக்ராம மூர்த்திகள் இருந்தாலே அது ஸாளக்ராம க்ஷேத்ரம் எனப்படும்.
ஆனால் பாதுகையில் பல இந்த்ரநீலக் கற்கள் ஸாளக்ராமங்களாகவே உள்ளதால்,
பாதுகை உள்ள இடம் முக்திக்ஷேத்ரம் என்றே கொண்டாடப்படலாம்.

ஸ்ரீ பாதுகையே நீ சாளக்ராம ஷேத்ரம் -அது பெருமாள் மூர்த்திகளால் நிறைந்து நிற்பது -மங்கள கரமானது –
அயோத்யை முதலிய முக்தி தரும் நகர் ஏழையும்விட மிக்க மேன்மை பெற்றது -உனக்கும் அதை ஒத்த பெருமை உண்டே
-உன் இந்திர நீல மணிகள் பிராட்டியின் திருக் கண்கள் போல் உள்ளன –
சகல முனிவர்களும்-நீ சிறப்பானதொரு முக்தி ஷேத்ரம் என்று – உன்னைப் போற்றுவராயினர் –

———————————————————

பாத ந்யாஸ ப்ரிய ஸஹ சரீம் பாதுகே வாஸ கேஹாத்
த்வாம் ஆருஹ்ய த்ரி சதுர பதம் நிர்கதே ரங்கநாதே
அந்தஸ் ஸ்நிக்தை: அஸுர மஹிளா வேணி விக்ஷேப மித்ரை:
ஸ்யாமஸ் சாயம் பவதி பவநம் சக்ர நீல அம்சுபி: தே—705–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தனது திருவடிகளை எடுத்து வைக்கின்ற செயலுக்கு நீ ப்ரியமான தோழியாக உள்ளாய்.
தனது சயன அறையில் இருந்து எழுகின்ற ஸ்ரீரங்கநாதன், உன் மீது தனது திருவடிகளை வைத்து, மூன்று நான்கு அடிகள் நடக்கிறான்.
அப்போது, அழகான தேவலோகப் பெண்களின் அவிழ்ந்த, அலை போன்றுள்ள கூந்தல் போன்று காணப்படும்
உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது, திருவரங்கம் பெரியகோயில் முழுவதும் பரவி, எங்கும் நீல நிறமான ஒளி உள்ளதாகச் செய்கிறது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் அடிவைக்க உதவும் பிரிய தோழி நீ -சயன அறையில் நின்று புறப்பட்டு இரண்டு மூன்று அடிகள் வைத்து
எழுந்து அருளின போது-அங்கு எல்லாம் ஒரே நீல ஒளி வெள்ளம் –
மணம் கமிழ் கூந்தல் -அஸூர மாதருடையது -அவிழ்ந்து அலைகின்றதோ என்று எண்ண வைக்கும் –

————————————————————————

யா தே பரிஹ்யாங்கணம் அபியத: பாதுகே ரங்க பர்த்து:
ஸஞ்சாரேஷி ஸ்புரதி விததி: சக்ரநீல ப்ரபாயா:
விஷ்வக்ஸேந ப்ரப்ருதிபி: அஸௌ க்ருஹ்தே வேத்ர ஹஸ்தை:
ப்ரூவிக்ஷேபஸ் தவ திவிஷதாம் நூநம் ஆஹ்வாந ஹேது:—706–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலங்களில் உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது
எங்கும் பரவி நிற்கிறது. இதனைப் பார்த்தால் எப்படி உள்ளது என்றால் – கையில் பிரம்பு வைத்துக் கொண்டுள்ள
விஷ்வக்ஸேநர் போன்றவர்களால் ஸ்ரீரங்கநாதனை வந்து வணங்கும்படியாக,
தேவர்களை அழைப்பதற்குக் காரணமாக உள்ள புருவ அசைவு போன்று உள்ளது.

இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது பாதுகையின் புருவ நெறிப்பு போன்று உள்ளது. இந்தச் செயல் மூலம் பாதுகை,
விஷ்வக்சேநர் போன்றவர்களுக்குக் கட்டளை இடுகிறாள். உடனே விஷ்வக்சேநர் போன்றவர்கள்,
”நம்பெருமாள் புறப்பாடு ஆகிவிட்டது”, என்று அறிந்து, தேவர்களை அழைக்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே -சஞ்சாரத்திற்காகப் பெருமாள் சயன அறையை விட்டு வெளி வருகையில் ஒரு நீல ஒளி அங்கு நிறைந்து நிற்குமே
அது உன் இந்திர நீலக் கற்களில் இருந்து வந்ததாயினும் அது உன் புருவ நெறிப்பு என்று ஸ்ரீ பிரம்பு பிடித்த
விஸ்வக்சேனர் முதலியோர் தேவர்களை அழைக்க அது ஆணை என்று கொள்வர் என்று தோன்றுகிறது –

———————————————————————–

அக்ஷ்ணோ: அஞ்ஜந கல்பநா யவநிகா லாஸ்ய ப்ரஸூடே: கதே:
சித் கங்கா யமுநா முகுந்த ஜலதே வேலா தமாலாடவீ
காந்தா குந்தள ஸந்ததி: ஸ்ருதி வதூ கஸ்தூரி காலங்க்ரியா
நித்யம் ரத்ந பாதாவநி ஸ்ப்புரதி தே நீலாமணி ஸ்ரேணிகா—-707–

இரத்தினமயமான பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது ஆறுவிதமான செயல்களைச் செய்கிறது.
அவையாவன – ஸ்ரீரங்கநாதனை அண்டி நிற்பவர்களின் கண்களுக்கு மை தடவுகிறது;
ஸ்ரீரங்கநாதனின் ஒய்யார நடை என்பதற்கு முன்பாக (புறப்பாட்டுத் திரை) இடப்படும் திரையாக உள்ளது;
அறிவு என்ற கங்கைக்கு யமுனை போன்று உள்ளது; ஸ்ரீரங்கநாதனின் அழகு என்ற ஸமுத்திரத்தின் கரையில் உள்ள பாசி போன்று உள்ளது;
ஸ்ரீரங்கநாச்சியார் முதலான பிராட்டிகளின் முன்நெற்றி முடி போன்று உள்ளது;
ஸ்ருதிகள் என்னும் பெண்கள் இட்டுக் கொள்ளும் கஸ்தூரி திலகம் போன்று உள்ளது.

ஸ்ரீ மணி பாதுகையே உன்னுடைய நீலக் கல் வரிசை என்னே -அதை எண்ண வென்று வர்ணிப்பது –
சேவிக்க வரும் பக்தர்களின் கண்கள் இட்டப் பெற்ற மையோ -பகவானுடைய உல்லாச திருநடைக்கு
நாட்டியத் திரை அரங்கில் தொங்கும் திரையோ -பக்தர் மனத்தில் சுரக்கும் அறிவாகிற கங்கைக்கு யமுனையோ
பகவான் ஆகிற கடல் புறத்தின் கரையில் வளர்ந்த பச்சிலைக் காடோ அல்லது
பிராட்டிகளுடைய முன் நெற்றி முகட்டில் படியும் மயிர்க் கற்றையா -வேதப் பெண்டிரின் கஸ்தூரி அலங்காரமோ எது –

———————————————————————————-

நிரந்தர புரந்தரோ பல புவம் த்யுதிம் தாவகீம்
அவைமி மணி பாதுகே ஸரணி ஸங்கிநீம் ரங்கிண:
ததீய நவ யௌவந த்விரதமல்ல கண்டஸ்த்தலீ
களந் மதஜளஞ்ஜளா பஹுள கஜ்ஜள ஸ்யாமிகாம்—708–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மிகவும் நெருக்கமாக பதிக்கப்பட்ட உனது இந்த்ரநீலக் கற்களின்
ஒளியானது ஸ்ரீரங்கநாதன் செல்லும் வழி எங்கும் பரவுகிறது. இதனைக் காணும்போது எப்படி உள்ளது என்றால் –
ஸ்ரீரங்கநாதனின் இளமை என்னும் பெரியயானையின் கன்னங்களில் பெருகி நிற்கின்ற மதநீரானது,
அங்கு உறைந்து கெட்டியாகக் காணப்படும் மை போன்று உள்ளது.

ஸ்ரீ மணி பாதுகையே நெருங்கி இழைந்து உள்ள நீலக் கற்களின் நெடு வீச்சு நீ பரப்புகிறாயே–அதை இப்படி வர்ணிக்கலாம் போலும்
பெருமாளின் புதிய யௌவனம் ஆகிற பெரு யானையின் கன்னங்களில் பெருகிய மத ஜலத்தில் திடமாக உறைந்த கசடு என்கிற மையோ –

———————————————————————————–

ப்ரதீமஸ் த்வாம் பாதாவநி பகவதோ ரங்க வஸதே:
கநீபூதாம் இத்தம் பத கமல மாத்த்வீ பரிணதீம்
ஸ்புரந்த: பர்யந்தே மதகரிம நிஸ்பந்த மதுப
ப்ரஸக்திம் யத்ரைதே விதததி மஹா நீல மணய:—709–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்க விமானத்தில் சயனித்துள்ள ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளில்
பெருகும் தேன் கெட்டியாக நிற்பது போன்றே உனது உருவம் உள்ளது என்று எண்ணுகிறோம்.
இப்படிப்பட்ட உன்னிடம் காணப்படும் பல இந்திரநீலக் கற்கள், இந்தத் தேனின் சுவைக்காக வந்து மொய்த்தபடி,
அசையாமல் உள்ள வண்டுகள் போன்றே காணப்படுகின்றன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடித் தாமரைகளில் இருந்து பெருகும் தேனே உறைந்து உரு பரிணமித்தது தான் நீயோ என்று தோன்றும் –
அந்தத் தேனை பக்கத்தில் நின்று சுவைத்த வண்டுகள் தாம் இந்த நீலக் கற்களோ -அப்படித் தான் இருக்க வேண்டும் –

————————————————————————————-

நமதாம் நிஜ இந்த்ரநீல ப்ரபவேந முகுந்த பாதுகே பவதீ
தமஸா நிரஸ்யதி தம: கண்டகம் இவ கண்ட கேநேவ—710–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பது போன்று, கருமையாகக் காணப்படும்
உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளி மூலமாகவே நீ உன்னை வணங்குகின்றவர்களின் அறியாமை என்னும் இருளை நீக்குகிறாய்.

ஸ்ரீ முகுந்த ஸ்ரீ பாதுகையே முல்லை முள்ளினால் தான் எடுக்க வேண்டும் அல்லவா -அதே போல வணங்கும் எங்கள் அகத்து இருளை
உன் இந்திர நீலக் கற்களின் ஒளி கொண்டு தான் -இருள் போன்ற கறுப்பானதாயிற்றே-நீக்க வேண்டும் அம்மா –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: