ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-15-ரத்ன சாமான்ய பத்ததி -மணிப் போது படலம் -ஸ்லோகங்கள் -481-520–

உத் அர்ச்சிஷ: தே ரங்கேந்த்ர பாதாவநி பஹிர் மணீந்
அந்தர்மணி ரவம் ஸ்ருத்வா மந்யே ரோமாஞ்சித ஆக்ருதீந்—-481-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன் மீது இழைக்கப்பட்டுள்ள இரத்தினங்களின் ஒளியானது,
ஒளிக்கம்பிகள் போன்று காணப்படுகின்றன. இதனைக் காணும்போது உன் உள்ளே இருக்கின்ற இரத்தினங்களின்
நாதத்தைக் கேட்டு இவை மயிர்க்கூச்சல் எடுத்தது போன்று தோன்றுகிறது.

ஸ்ரீ பாதுகையே உன் மேல் இழைத்து இருக்கும் இரத்தினங்களின் காந்தி உள்ளே இருக்கும் ரத்னங்களின்
சப்தத்தால் ஏற்பட்ட மயிர்க் கூச்சல் போல் இருக்கிறது –
ஸ்ரீ பாதுகை -ஆழ்வார் -சப்தம் -அவர் ஸ்ரீ ஸூ க்திகள் -காந்தி -அவற்றின் தாத்பர்யம் -என்றவாறு –

————————————————————–

விதேஹி சௌரே: மணி பாதுகே த்வம்
விபத்யமாநே மயி ரஸ்மி ஜாலை:
ஆஸீததாம் அந்தக கிங்கராணாம்
வித்ராஸநாத் வேத்ரலதா விசேஷாந்—-482-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது அந்திம காலத்தில், எனது அருகில் யம தூதர்கள் வந்து என்னை அச்சுறுத்தக்கூடும்.
அப்போது அவர்களை அச்சம் செய்யும் வகையில் விரட்டக்கூடிய பிரம்புகளாக உன்னில் இருந்து ஒளிக்கற்களை உண்டாக்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே அந்திம காலத்தில் யம தூதர்கள் என்னை அணுகா வண்ணம் ணீ எழுந்து அருள வேண்டும் –
உன் மீது உள்ள இரத்தினங்களின் காந்தியைப் பிரம்புகள் என நினைத்து அவர்கள் ஓடும் வண்ணம் செய்து அருள வேண்டும்-

———————————————————————

முகுந்த பாதாவநி மத்ய நாட்யா
மூர்த்தந்யயா நிஷ் பததோ முமுக்ஷோ:
ஆ ப்ரஹ்ம லோகத் அவலம்ப நார்த்தம்
ரத்நாநி தே ரஸ்மிகணம் ஸ்ருஜந்தி—-483-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தலையின் நடுவில் உள்ள நாடியின் மூலம் வெளிக்கிளம்பி, பரமபதம் செல்கின்ற
முமுக்ஷுவிற்கு உனது ஒளிக்கற்றைகள் அனைத்தும் கயிறுகள் போன்று பிடித்துக் கொண்டு செல்வதற்காக உண்டாகின்றன.

ஸ்ரீ பாதுகையே நடுநாடி எனும் ப்ரஹ்ம ரந்திர நாடி வழியாக கிளம்பி மோஷத்தைப் பெற விரும்பும் ஆத்மாவுக்கு
உன்னுடைய ரத்னங்கள் ப்ரஹ்ம லோகம் வரை பிடித்துச் செல்வதற்கு ஏற்ற ரஸ்மி -கயிறு -களின் கற்றையை ஸ்ருஷ்டிக்கின்றன —

———————————————————————–

அஸூர்ய பேத்யாம் ரஜநீம் ப்ரஜாநாம்
ஆலோக மாத்ரேண நிவார யந்தீ
அமோக வ்ருத்திர் மணி பாத ரக்ஷே
முரத்விஷோ மூர்த்திமதீ தயா த்வம்—-484-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மக்களின் ஸம்ஸார பந்தம் என்னும் இரவுப்பொழுதை நீக்க ஸூரியனால் இயலாது.
இந்த இருளை உன்னுடைய ஒளி மூலம் மிகவும் எளிதாக நீ விலக்குகிறாய். ஆக, தடை இன்றி ஸஞ்சாரம் செய்கின்ற
ஸ்ரீரங்கநாதனின் கருணை என்பது வடிவம் எடுத்ததோ என்று எண்ணும்படியாகவே நீ உள்ளாய்.

இங்கு பாதுகையை ஸ்ரீரங்கநாதனின் தயாதேவி என்று உருவகம் செய்கிறார். ஸ்ரீநிவாஸனின் தயாதேவியைக்
குறித்து தயாசதகம் அருளிச்செய்த ஸ்வாமி தேசிகன், ஸ்ரீரங்கநாதனின் தயாதேவியைக் குறித்து
பாதுகாஸஹஸ்ரம் அருளியதாகக் கொள்ளலாம்.

ஸ்ரீ பாதுகையே சூரியனாலும் போக்க முடியாத அஜ்ஞ்ஞானம் என்கிற இருட்டை உன் காந்தி போக்கடிக்கிறது –
உன் கடாஷ விசேஷத்தை நோக்கும் போது நீ எம்பெருமானின் கருணையின் அவதாரம் என்றே தோன்றுகிறது –

—————————————————————-

ரங்கேஸ பாதாவநி தாவகாநாம்
ரத்ந உபலாநாம் த்யுதய: ஸ்புரந்தி
ஸ்ரேய: பலாநாம் ஸ்ருதி வல்லரீணாம்
உபக்நசாகா இவ நிர்வ்யபாயா:—-485-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மக்களுக்கு வேண்டிய புருஷார்த்தம் என்னும் பழங்களை
அளிக்கின்ற கொடிகளாக வேதங்கள் உள்ளன. அந்த வேதங்கள் படர்வதற்கு ஏற்ற கொழுகொம்புகளாக
உனது இரத்தினக் கற்களின் ஒளிக்கீற்றுகள் உள்ளன.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய காந்தியானது வேதங்கள் ஆகிற கொடிகள் வளர உதவும் கொள் கொம்பு போல் இருக்கிறது –

————————————————————-

கஸ்யாபி பும்ஸ: கநகாபகாயா:
புண்யே ஸலீலம் புளிநே சயாளோ:
ஸமீப வ்ருத்திர் மணி பாதுகே த்வம்
ஸம்வாஹயந்தீவ பதம் கரை: ஸ்வை:—486-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தூய்மையான மணல் மேட்டைக் கொண்டுள்ள காவிரியின் கரையில்
மிகவும் உல்லாஸமாக, தனித்து விளங்கும் அழகிய மணவாளன் சயனித்துள்ளான்.
அவனது திருவடிகளை உனது ஒளி என்னும் திருக்கரங்களால் பிடித்து விட்டபடி நீ அவன் அருகில் உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க விமானத்தில் பள்ளி கொண்டு அருளும் பெரிய பெருமாளுக்கு அவர் திருவடியில் இருக்கும்
உன்னிடம் இருந்து உண்டாகும் காந்தி உன் கிரணங்களால் அவர் திருவடிகளைப் பிடித்து விடுவது போல் இருக்கிறது –

————————————————————————-

தித்ருக்ஷ மாணஸ்ய பரம் நிதாநம்
ஸ்நேஹாந் விதே யோக தசா விசேஷே
ஸம்வித் ப்ரதீபம் மணி பாத ரக்ஷே
ஸந்துக்ஷயந்தீவ மரீசயஸ் தே—-487-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மிகவும் உயர்ந்த செல்வமாகிய ஸ்ரீரங்கநாதனைக் காண வேண்டும்
என்று விரும்பும் யோகி ஒருவன், தனது பக்தியை நெய்யாக்கி, யோகம் என்னும் திரியை இட்டு, ஞானம் என்னும்
விளக்கை ஏற்ற முயல்கின்றான். உன்னுடைய ஒளியானது, அந்த விளக்கு நன்றாக எரியும்படித் தூண்டிவிடுகிறது.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானை த்யானித்து அவரைப் பார்க்க நினைப்பவர்க்கு ஞானம் ஆகிற விளக்கின் ஒளியை
உன் இரத்தின காந்திகள் தூண்டி விடுவன போல் இருக்கின்றன –

————————————————————

ஸமாதி பாஜாம் தநுதே தவ்தீயா
ரங்கேஸ பாதாவநி ரத்ந பங்க்தி:
ஸ்தானம் ப்ரயாதும் தமஸ: பரம் தத்
ப்ரதீப க்ருத்யாம் ப்ரபயா மஹத்யா—-488-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ப்ரக்ருதி மண்டலம் என்னும் இருளுக்கு அப்பால் உள்ள
பரமபதம் செல்வதற்கு யோகிகள் முனைகின்றனர். அப்படி அவர்கள் செல்வதற்கு உதவும் தீவட்டிகளின் செயலை
உனது இரத்தினக் கற்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் செய்கின்றன.

ஸ்ரீ பாதுகையே -த்யானம் பண்ணிப் பரம பதத்தை அடைய வேண்டும் என்று இருப்பவர்களுக்கு
உன் உயர்ந்ததான ரத்ன காந்தி தீவட்டி போல் இருந்து பிரக்ருதியின் இருளைப் போக்கி அருளுகிறது –

————————————————————————-

பத்நாஸி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
மந்யே யதார்ஹம் மணி ரஸ்மி ஜாலை:
ஸேவாநதாநாம் த்ரிதசேஸ்வராணாம்
சேஷாபடீம் சேகர ஸந்நி க்ருஷ்டாம்—-489-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் தங்கள் தலை சாய்ந்து,
அதனைத் தொடுவதற்காக வணங்கியபடி தேவர்கள் நிற்கின்றனர். இவர்களது தலையில் உனது இரத்தினக்கற்களின்
ஒளிக்கீற்றுகள் மூலமாக பரிவட்டத்தை நீ கட்டுகிறாய் என எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே உன்னை சேவிக்க வரும் தேவர்களுக்கு நீ உன் ரத்ன காந்தியால் பரி வட்டம் கட்டுவது போல் இருக்கிறது –
திருவாய்மொழியின் ஆழ்ந்த பொருள்களை அவரவர் தம்தம் ஸூஹ்ருதத்தின் அளவுப்படி உணர்கின்றனர் என்றவாறு –

—————————————————————————

பஜந்தி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
ப்ரகல்பயந்த: விவிதாந் புமர்த்தாந்
உத் அர்ச்சிஷஸ் சிந்தயதாம் ஜநாநாம்
சிந்தாமணி த்வம் மணயஸ் த்வதீயா:—-490-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனையே எப்போதும் த்யானித்தபடி உள்ளவர்களுக்கு,
அவர்களுக்கு ஏற்ற புருஷார்த்தங்களை அளிக்கவல்லதாக உனது இரத்தினங்கள் உள்ளன.
இதனால் இவை சிந்தாமணியின் தன்மையை அடைகின்றன.
(சிந்தாமணி என்பது ஸ்வர்க்கத்தில் உள்ள பொருளாகும். இது கேட்பதையும் நினைப்தையும் அளிக்கவல்லதாகும்)

ஸ்ரீ பாதுகையே உன் மீது பதிக்கப் பட்டுள்ள ரத்தினங்கள் சிந்தா மணியைப் போல் தியானம் பண்ணுமவர்
கேட்டதைக் கொடுக்கின்றன -திருவாய்மொழி யாதாம்ய அர்த்தங்களை உணர்ந்தவர்கட்கு சகல புருஷார்த்தங்களும் கிட்டும் –

—————————————————————-

நாதஸ்ய தத்தே நதராஜ கந்யா
பாதும் ஸூபாந் பாத நக இந்து ரஸ்மீந்
மணி ப்ரபாபி: ப்ரதிபந்ந பக்ஷாம்
லீலாச கோரீம் இவ பாதுகே த்வாம்—-491-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளின் நகக் கண்கள் சந்த்ரன் போன்று
குளிர்ந்த வெண்மையான ஒளியை வீசுகின்றன.
நதிகளின் தலைவனாகிய ஸமுத்திரராஜனின் புத்ரியான ஸ்ரீரங்கநாச்சியார்,
சிறந்த இரத்தினங்களின் ஒளியை வீசுகின்ற உன்னை,
தான் விளையாட வைத்துள்ள சகோரபக்ஷி போன்று அவனது திருவடிகளில் அணிவிக்கிறாள்.

சகோர பக்ஷி என்பது சந்திரனின் குளிர்ந்த ஒளியை மட்டுமே உண்ணும் தன்மை கொண்டதாகும்.
இங்கு பாதுகையை இந்தப் பறவைக்கு உருவகம் செய்கின்றார்.
இந்தப் பாதுகை என்ற பறவையை, ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்கள் என்னும் சந்த்ரனில் இருந்து வெளிவரும்
ஒளியைப் பருகும் பொருட்டு, ஸ்ரீரங்கநாச்சியார் அணிவிக்கிறாள் என்றார்.

ஸ்ரீ பாதுகையே மகா லஷ்மி உன்னைப் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிக்கிறாள் –
உன் மீதுள்ள இரத்தினங்களின் காந்தி இருபுறமும் பரவி இறக்கை போல் இருக்கிறது –
எம்பெருமான் திருவடியாகிய சந்த்ரனுடைய அம்ருத மயமான கிரணங்களைப் பானம் செய்ய அடைந்த
சகோர பஷி போலே நீ விளங்குகிறாய் –

——————————————————————————

ஜநஸ்ய ரங்கேஸ்வர பாதுகே த்வம்
ஜாத அநுகம்பா ஜநயஸி அயத்நாத்
ஆக்ருஷ்ய தூராத் மணி ரஸ்மி ஜாலை:
அநந்ய லக்ஷ்யாணி விலோசநாநி—492-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை தரிசிக்க வரும் அடியார்களின் கண்களை,
உன்னுடைய கருணையை வெளிப்படுத்தும் இரத்தினக்கற்களின் ஒளி மூலமாக, மிகவும் எளிதாக,
தூரத்தில் இருந்தே கவர்ந்து இழுக்கிறாய். இதனால் அவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருமேனி உட்பட
வேறு எதனையும் காணாமல், உன்னை மட்டும் காணும்படிச் செய்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே மக்கள் இடத்தில் கருணை கொண்டு நீ உன் இரத்தின காந்தியால் வெகு தூரத்தில் இருந்தே அவர்களை ஆகர்ஷித்து
உன்னையும் பெருமாளையுமே பார்க்கும் படியாகச் செய்து விடுகிறாய் -ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளே ரத்தினங்கள் –

—————————————————————————

ரங்கேஸ பாதாவநி தாவகீநை:
ஸ்ப்ருஷ்டா: கதசித் மணி ரஸ்மி பாசை:
காலஸ்ய கோரம் ந பஜந்தி பூய:
காராக்ருஹ அந்தேஷு கச அபிகாதம்—-493-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளிக்கீற்றுகள் என்னும்
கயிறுகளால் ஒரு முறை தீண்டப் பெற்றவர்கள், யமனின் சிறைச்சாலையில்
பயங்கரம் சூழ்ந்த சாட்டை அடிகளை எப்போதும் பெறுவதில்லை.

ஸ்ரீ ரங்க நாதனின் ஸ்ரீ பாதுகையே -உன்னுடைய இரத்தின காந்தி ஒருமுறையாவது ஒருவர் மேல் பட்டால் அவர் நரகமாம்
சிறையினுள் யமனுடைய சாட்டை யடியைப் பெறுவதில்லை –

திருவாய்மொழி தாத்பர்யம் ஒரு முறை உணர்ந்தவர் தியானத்தாலோ சரணா கத்தியாலோ ஸ்ரீ பரம பதம் அடைவர் –

—————————————————————–

ரத்நாநி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
த்வத் ஆஸ்ரிதாநி அப்ரதிகை: மயூகை:
ஆஸேது ஷீணாம் ஸ்ருதி ஸூந்தரீணாம்
விதந்வதே வர்ண நிசோள லக்ஷ்மீம்—-494–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
ஸ்ரீரங்கநாதனின் அருகில் எப்போதும் வேதங்கள் என்னும் பெண்கள் சூழ்ந்து நின்றபடி உள்ளனர்.
அவர்களது பல நிறங்களுடன் கூடிய ரவிக்கைகள் போன்ற அழகை, தடை இல்லாத
உனது இரத்தினக் கற்களின் ஒளிக் கீற்றுகள் உண்டக்குகின்றன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ருதிகள் -ஆகிற பெண்கள் உன்னை அடைந்து வணங்குகின்றனர் –
உன் பல வண்ணம் உள்ள இரத்தினங்கள் அவர்களுக்குப் பல வண்ணங்களில் ரவிக்கை அணிவிப்பது போல் இருக்கின்றது –

திருவாய் மொழியால் வேதங்களும் பெருமை பெற்றன என்றவாறு –

———————————————————————–

நித்ரா ரஸ ப்ரணயிநோ மணி பாத ரக்ஷே
ரங்கேஸ்வரஸ்ய ஸ்விதம் ப்ரதிபத்யமாநா
சய்யா பணீந்த்ரம் அபிதோ பவதீ விதத்தே
ரத்ந அம்ஸூபிர் யவநிகாம் தர்ஸநீயாம்—-495–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் சயனிக்கும் நேரம் வருகிறது. அப்போது நீ செய்வது என்ன?
அவனது அருகில் சென்று, அவனது படுக்கையாக உள்ள ஆதிசேஷனுக்கு நான்கு பக்கங்களிலும்,
உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி மூலமாக, ஒளி வீசும் திரையைக் கட்டுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் பள்ளி கொண்டு அருளும் காலத்தில் உன் ரத்தின காந்திகள் நான்கு புறமும் பரவி
திரையிட்டது போலே இருக்கின்றன -ஆழ்வார் திவ்ய ஸூக்தியால் எம்பெருமானும் ஆனந்தம் அனுபவிக்கிறார் –

—————————————————————-

ஸத்ய: த்வத் உத்க்ரஹதசா நமித ஆக்ருதீநாம்
ஸ்ரஸ்த அம்ஸூகம் நிஜருசா மணி பாதுகே த்வம்
பத்மா ஸஹாய பரிவார விலாஸி நீநாம்
பட்டாம் ஸூகை: இவ பயோதரம் ஆவ்ருணோஷி—-496-

இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அதிகாலைப் பொழுதில் ஸ்ரீரங்கநாதன் திருக்கண் விழித்தவுடன்,
உன்னை ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான அவனது திருவீதிகளில் சேர்ப்பதற்காக,
உன்னை எடுப்பதற்கு அங்குள்ள பணிப்பெண்கள் வேகமாகக் குனிகின்றனர்.
அப்போது அவர்களின் மேல் ஆடைகள் விலக, அவர்களின் ஸ்தனங்களை மறைக்கும் பட்டுத்துணி போன்று,
உனது ஒளியை அவர்கள் மீது வீசுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே -உன்னை எழுந்து அருளப் பண்ணுவதற்காக கைங்கர்ய பற்கள் குனிகிறார்கள்
அப்பொழுது அவர்கள் மேல் வஸ்த்ரம் நகர்வதால் உன் ரத்தின காந்தி அவர்கள் மேல் போர்த்தி மானத்தைக் காக்கின்றது –
சேதனர்கள் மனம் கலங்கினாலும் ஆழ்வார் திவ்ய ஸூ க்திகள் தெளிவடையச் செய்யும் என்றவாறு –

——————————————————————————-

தேவஸ்ய ரங்க வஸதே: புரத: ப்ரவிருத்தை:
உத்தூத விஸ்வ திமிராம் மணி ரஸ்மி ஜாலை:
மந்யே மதீய ஹ்ருதய ஆயதந ப்ரவேச
மங்கள்ய தீப கணிகாம் மணி பாதுகே த்வாம்—497-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் முன்பாக எழுத்தருளியுள்ள நீ,
எங்கும் பரவுகின்ற உனது இரத்தினக் கற்களின் ஒளி மூலமாக, சுற்றியுள்ள அனைத்து இருளையும் நீக்குகிறாய்.
எனது மனம் என்னும் வீட்டில் ப்ரவேசம் செய்யும் ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்றும் சிறு விளக்காகவே நான் உன்னை எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே உலகம் எங்கும் பரவியுள்ள இருட்டைப் போக்கக் கூடியது உன் ரத்தின காந்தி –
அப்படிப்பட்ட உன்னை என் மனம் ஆகிற சிறிய வீட்டில் ஸ்ரீ ரங்க நாதன் பிரவேசிப்பதற்கு முன்னதாக
ஏற்றி வைக்கப்பட்ட மங்கள விளக்காக நினைக்கிறேன் –

——————————————————

ஆகீர்ண ரத்ந நிகராம் மணி பாதுகே த்வாம்
ரங்கேஸ் வரஸ்ய லலிதாம் விபணிம் ப்ரதீம:
யத் ஸம்ஸ்ரயேண பவதி ஸ்திர பக்தி மூல்யம்
கைவல்யம் அத்ர ஜகதாம் க்ரய விக்ர யார்ஹம்—-498-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இரத்தினக் குவியலைப் பரப்பி வைத்துள்ள உன்னை
ஸ்ரீரங்கநாதனின் அழகான கடைத்தெரு என்றே எண்ணுகிறோம்.
இந்தக் கடைத்தெருவை அடைவதன் மூலமாக, நழுவாத பக்தி என்னும் விலையைக் கொடுத்து,
மோக்ஷம் என்பதை வாங்க இந்த உலகினரால் இயல்கிறது. இப்படியாக கொடுத்து – வாங்கும் இடமாக நீ உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே இரத்தினங்களின் கூட்டத்தை உடையவளான உன்னை ஸ்ரீ ரங்க நாதன்
ஏற்படுத்திய கடைத் தெருவாக நினைக்கிறேன் –
எம்பெருமானைப் பல ஜன்மங்கள் தியானித்து அடையத் தகுந்த மோஷத்தை ஜனங்கள் இங்கு சுலபமாக வாங்கி விடுகிறார்கள் –

———————————————————————————

வ்யங்க்தும் க்ஷமம் பகவத: ஜகத் ஈஸ்வரத்வம்
வஜ்ராங்குச த்வஜ ஸரோருஹ சக்ர சிஹ்நம்
ஆஸ்லிஷ்ய நிர்ப்ரருசிம் மணி பாதுகே த்வாம்
ஆஸீத் அநாபரண ஸுந்தரம் அங்க்ரி பத்மம்—-499-

இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அனைத்து உலகங்களுக்கும் ஈச்வரனாக உள்ளவன்
ஸ்ரீரங்கநாதனே ஆவான் என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்தும் விதமாக, அவனது திருவடிகளில்
வஜ்ராயுதம், அங்குசம், கொடி, தாமரை சக்ரம் போன்ற அடையாளங்கள் காணப்படுகின்றன.
இப்படிப்பட்ட அவனது இணைந்த திருவடிகள் உன்னை அணைத்துக் கொண்டு,
உன்னில் இருந்து வெளிவரும் ஒளி மூலம், வேறு எந்த ஆபரணமும் அணியாமலேயே மிகுந்த அழகாக உள்ளன.

ஸ்ரீ பாதுகையே -எம்பெருமான் உடைய திருவடிகள் ஒரு சக்ரவர்த்திக்கு உரிய ரேகைகளைத் தாங்கியவை –
இருப்பினும் அவை மற்ற எந்த ஆபரணத்தையும் நாடாது -உன்னை மட்டும் அடைந்து அழகாக விளங்குகின்றன –

————————————————————

ரத்ந ப்ரபா படல சக்ர மநோஹரா த்வம்
பத்ம ஆருணம் பதம் இதம் த்வயி ரங்க பர்த்து:
மந்யே தத் ஏதத் உபயம் மணி பாத ரக்ஷே
சக்ராப்ஜ மண்டலம் அகிஞ்சந ரக்ஷணார்ஹம்—500-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! இரத்தினக்கற்களில் இருந்து வெளிவரும்
ஒளி என்னும் வட்டம் மூலம் நீ மிகவும் அழகாக உள்ளாய்.
ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற சிவந்த அழகான திருவடிகள் எப்போதும் உன் மீது உள்ளன.
இதனைக் காணும் போது வேறு கதியில்லாதவர்களுக்குச் சாஸ்திரங்கள் கூறும் சக்ராப்ஜ மண்டலம் என்றே நான் எண்ணுகிறேன்.

கதியில்லாதவர்களுக்கு உபாயமாக சாஸ்திரத்தில் சக்ராப்ஜ மண்டலம் என்பது கூறப்பட்டுள்ளது.
வட்டம் ஒன்றை வரைந்து, அந்தச் சக்ர வடிவத்தில் கோடுகள் கிழித்து, அதன் நடுவில் தாமரை மலர்களை எழுதி,
அதனைப் பூஜிக்க வேண்டும் என்பர். இதனை இங்கு உருவகம் செய்கிறார்.

ஸ்ரீ பாதுகையே உன் ரத்தினங்கள் உடைய காந்தி ஒரு வட்டம் -சக்ரம் -போலவும் அதன் நடுவில்
எம்பெருமானுடைய திருவடிகள் செந்தாமரை புஷ்பம் போலவும் இருக்கின்றது –
இந்த சந்நிவேசம் தத் காலத்தில் பக்தி பண்ணத் தகாதவர்களுடைய காப்பாற்றுதலுக்குத் தகுந்த சக்ராப்ஜ மண்டலமாக அமைகின்றது

—————————————————————-

த்ராஸாத் ஸ்வயம் ப்ரணமதாம் தநுஜேஸ்வராணாம்
ஸங்க்யேஸ் அவலூந சிரஸம் அபி மௌளி ரத்நை:
ஆயோஜயதி அநுகலம் மணிபாதுகே த்வாம்
ஸைரந்த்ரிகேவ முரவைரி க்ருபாண தாரா—-501-

உயர்ந்த மணிகள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் நந்தகம் என்னும் வாளுக்குப் பயந்து பல அசுர அரசர்கள்
தாங்களாகவே பணிந்து நிற்பர். ஒரு சிலர் தங்களாகவே பணியாமல், யுத்த பூமியில் தலை அறுக்கப்பட்டுப் பணிவர்.
இவர்கள் இருவருடைய க்ரீடங்களில் உள்ள இரத்தினக்கற்கள் உனக்கு அலங்காரமாக வைக்கப்படும்.
இந்தச் செயலைச் செய்யும் பணிப்பெண் போன்று ஸ்ரீரங்கநாதனின் வாள் உள்ளது.

ஸ்ரீ மணி பாதுகையே எம்பெருமானுடைய கத்தியின் கூர் உனக்கு ரத்னங்களை சமர்ப்பித்து அலங்கரிக்கும் பணிப்பெண் ஆகிறது –
பயத்தால் பணிந்து சரண் புகுந்த அசூர ராஜர் கிரீட ரத்னங்களையும் பணியாது போர் புரியும் அவரைத் தலை அறுத்து
அவருடையவற்றையும் இந்தக் கூர் முனை தானே கொணர்கிறது –

——————————————————–

ஆஸ்கந்தநாநி விபுதேந்த்ர சிகாமணீநாம்
த்வாம் ஆஸ்ரிதாநி அஸுர ஸூதந பாத ரக்ஷே
ரத்நாநி தே ஸ்துதி ஸுவர்ண பரீக்ஷணார்த்தே
நூநம் பஜந்தி நிகஷோ பலதாம் கவீநாம்—-502-

அசுரர்களின் சத்ருவான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை வந்து வணங்கும் தேவர்களின் க்ரீடங்களில்
உள்ள இரத்தினக்கற்களை, உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினக்கற்கள் கவர்ந்து இழுக்கின்றன
(அல்லது அந்த இரத்தினங்களைப் பாதுகையில் உள்ள இரத்தினங்கள் மிதிக்கின்றன என்றும் கொள்ளலாம்).
இந்த இரத்தினங்கள் மேலும் செய்வது என்னவென்றால் – உன்னைப் பற்றிய துதிகள் இயற்றும் கவிஞர்களின்
அக்ஷரங்கள் (சொற்கள்) என்னும் தங்கத்தைச் சோதிக்கும் உரைகல்லாகவும் உள்ளன என்பது நிச்சயம்.

அசூர சத்ருவின் ஸ்ரீ பாதுகையே -உன்னுடைய ரத்னக் கற்கள் தேவர் தலைவர்கள் முடி மணிகளை மிதிக்கும் -ஏன் எனில்
உன்னை அலங்கரிக்கும் ரத்னங்கள் தாம் உயர்ந்தவை -அவை உன் ச்துதிகளில் உள்ள நல்ல அஷரங்களை-தங்கத்தின் மாற்றி –
பரீஷை செய்வதில் உரைகள் ஆகின்றன -ஸ்ரீ பாதுகையில் உள்ள ரத்னங்களைப் பற்றிய ஸ்தோத்ரமே உயர்ந்தது என்னும் போலும் –

————————————————————–

பாதாவநி ப்ரணயிநாம் ப்ரதிபாதித அர்த்தாம்
க்ரீடா ஸரோஜம் இவ சௌரி பாதம் வஹந்தீம்
ப்ரத்யுப்த ரத்ந நிகர ப்ரதிபந்ந சோபாம்
பஸ்யாமி ரோஹணகிரே: அதி தேவதாம் த்வம்—-503-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை அண்டி நிற்பவர்களுக்கு ஏற்றத்தை நீ அளிக்கிறாய்.
அவனுடைய தாமரை போன்ற அழகான திருவடிகளை, தாமரை மலர் போன்று உனது விளையாட்டின் பொருட்டு வைத்துள்ளாய்.
எண்ணற்ற இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட அழகுடன் விளங்குகின்றாய்.
இப்படியாக உன்னைக் காணும்போது இரத்தின மலைக்கு அதிபதி தேவதை என்றே எண்ணுகிறேன்.

இரத்தின மலைக்கு ரோஹணம் என்று பெயர் உண்டு. வெள்ளி மலையானது கைலாயம் என்னும்,
தங்க மலை மேரு என்று பெயர் பெற்றது போன்றதாகும். இந்த இரத்தின மலையின் தேவதை என்று பாதுகையைக் கொண்டாடுகிறார்.

ஸ்ரீ பாதுகையே உன் அன்பர்களுக்கு வேண்டியதை எல்லாம் வழங்குவாய் -நீ பெருமாள் திருவடி தாமரையை சுமப்பது
திருக் கையில் லீலா சரோஜம் போலே தோன்றுகிறது
ரத்னங்கள் சம்ருத்தியால் உன்னிடம் இழைக்கப்பட்டு உள்ளன
அதனால் சிறந்த சோபை -இத்தன்மைகள் எல்லாம் கொண்ட ணீ மேருவின் அதிஷ்டான தேவதையோ என்று தோன்றும் –

—————————————————–

யாமேவ ரத்ந கிரணைர் மணி பத ரக்ஷே
சூடாபதே தநு ப்ருதாம் பவதீ விதத்தே
சக்ராதி தைவத சிகாமணி ரஜ்ய மாநை:
தாமேவ தே ப்ரகட யந்தி பதைர் அபிக்யாம்—-504-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நீ மனிதர்களின் தலையில் சிறந்த அழகை ஏற்படுத்துகிறாய்.
அந்த மனிதர்களை வணங்கும் இந்திரன் முதலான தேவர்களின் க்ரீடங்களில் உள்ள இரத்தினங்கள்,
அந்த அழகைத் தாங்கள் பெற்று, அவற்றை வெளிப்படுத்துகின்றனர்.
(ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை ஆராதிப்பவர்களை தேவர்களும் வந்து வணங்குகின்றனர் என்று கருத்து).

ஸ்ரீ மணி பாதுகையே எந்த மனிதர்கள் உடைய தலைகளில் நீ அமர்ந்து
உன் ரத்னங்களால் ஒரு சோபை உண்டாக்குகிறாயோ
அதே சோபை அந்த மனிதர்கள் உடைய பாதங்களுக்கும் ஏற்படுகிறது
தேவர்கள் தம் ரத்ன கிரீடங்கள் உடன் அவர்களுடைய பாதங்களில் வணங்குவதால் –
அந்த மனிதர்கள் உடைய-பாதங்களும் ஒளி விடுகின்றனவே –
சந்த தேவா -நித்ய ஸாம்யம் அன்றோ –

கிருஷ்ண கர்ணாம்ருதம் -ருக்மிணி பிராட்டி கிருஷ்ணன் -கோவர்த்தந தாரி -உன்னைக் கொண்டாடி –
நீ ஏழு நாள்கள் தூக்கியத்துக்கு
உன்னை சதா எனது மார்பில் தரிக்கும் என்னைப் பாடிக் கொண்டாட வேண்டாமோ
நான் பெரியவன் -நீ பெரியாய் என்பதை யார் அறிவர் -நம்மாழ்வார் –
உன்னையே தரிக்கும் பாதுகையைத் தரிக்கும் அடியார்கள் சிரஸ்ஸூ -அவர்கள் அன்றோ பெரியவர்கள் –

———————————————————–

ரத்ந அங்குரை: அவிரளா மணி பாத ரக்ஷே
பாகோந்முகை: பரிகதா புருஷார்த்த ஸஸ்யை:
தேவேந ரங்க பதிநா ஜகதா விபூத்யை
கேதாரி கேவ க்ருபயா பரி கல்பிதா த்வம்—-505-

உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இரத்தினங்கள் என்னும் முளைகள் நிறைந்துள்ளதும், நான்கு விதமான புருஷாத்தங்கள்
என்னும் பயிர்களால் சூழப்பட்டுள்ளதும் ஆகிய நிலையில் நீ உள்ளாய். இப்படியாக உன்னைக் காணும் போது,
ஸ்ரீரங்கநாதன் என்ற அரசன், தன் நாட்டின் மக்கள் வாழ்விற்காகக் கருணையுடன் பயிரிட்ட வயல் போன்று காணப்படுகிறாய்.

ஸ்ரீ மணி பாதுகையே நீ ஒரு கழனி போலவும் நெருக்கமாய் இட்டுள்ள ரத்னங்கள் பயிர் முளை போலவும்
ரத்னக் கதிர் முற்றிய தான்யக் கதிர் போலவும் தோன்றும் –சர்வலோக அரசன் ஸ்ரீ ரங்க நாதன் –
கருணையுடன் அகில உலகங்களும் ஜீவிக்க வேண்டும் என்பதற்காகவே தர்மார்த்த காம மோஷங்கள் ஆகிற சகல
புருஷார்த்தங்களையும் விளைவிக்க வல்ல இந்த வயலைப் பயிர் செய்து உபகரித்து இருக்கிறான் போலும் –

——————————————————————

நிர்தூத மோஹதிமிரா: தவ ரத்ந தீபை:
நிர்விச்ய மாந விபவம் நத ராஜ புத்ர்யா
ப்ரத்யக் ஷயந்தி நிகமாந்த நிகூடம் அர்த்தம்
பாதாவநி த்வயி நிவேசித பவபந்தா:—-506

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் மீது அன்பு வைத்தவர்கள், உன்னில் காணப்படும் இரத்தினக் கற்களின்
ஒளி மூலம் தங்களது அறியாமை என்னும் இருள் நீங்கப் பெறுகின்றனர். இதனால் அவர்களுக்கு மேலும் கிட்டுவது
என்னவென்றால் – திருப்பாற்கடலின் பெண்ணாகிய ஸ்ரீரங்கநாச்சியாரால் அனுபவிக்கப்படும் பெருமைகள் கொண்டவனும்,
வேதாந்தங்களில் மறைபொருளாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீரங்கநாதனைக் காண்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன்னிடத்தில் பக்தி பண்ணுமவர்க்கு நன்மை எத்தனை பாராய் -உன்னுடைய ரத்னங்கள் விளக்குகளாய் நின்று
அவர்கள் உடைய அஜ்ஞ்ஞான இருட்டைப் போக்கி விடும் -அவர்கள் இப்போது பெரிய பிராட்டி அனுபவிக்கும் பெருமைகளை உடையவனை
வேதாந்தங்களில் மறைந்து இருக்கும் பரம் பொருளைத் தம் இதயத்தால் காண்பர் –

————————————————————–

ரத்நோபல ப்ரகர ஸம்பவ ஏஷ தூராத்
ரங்காதி ராஜ சரணாவநி தாவகீந:
ஆர்த்ர அபராத பரிகிந்ந தியாம் ப்ரஜாநாம்
ஆஸ்வாஸ நார்த்த இவ பாதி கரப்ரஸார:—-507-

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! அன்றாடம் புதிதாகக் குற்றம் செய்து விட்டு, அதற்காக வருந்தி,
ஸ்ரீரங்கநாதனின் அருகில் வந்து வணங்கித் தயங்கியபடி சிலர் நிற்கிறார்கள். அவர்களைத் தேற்றி,
அவர்களை அருகில் அழைப்பதற்காக நீட்டும் கரங்கள் போன்று உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி உள்ளது.

ஸ்ரீ பாதுகையே -வெகு தூரத்திலேயே நின்று கொண்டு புதிது புதிதாக அபராதம் செய்து கொண்டு அதனால் கூசி இருப்பவரைக் கூட
உன் ரத்னங்களின் ஒளி வீச்சு எட்டி யடைந்து அவரைக் கை நீட்டி அழைத்து ஆறுதல் சொல்லுவது போல் தோன்றுகிறது –

———————————————————–

வ்யாமுஹ்யத: விஷயி பாலம்ருகாந் மதீயாந்
ஸம்ஸார கர்ம ஜநிதாஸு மரீசி காஸு
பாதாவநி ப்ரகுண ரத்ந மரீசி ஜாலை:
ஆக்ருஷ்ய விஸ்ரம்ய கேசவ காந்தி ஸிந்தௌ—508-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸம்ஸாரம் என்பது கோடை காலமாகத் தோன்றுகிறது; இதில் உலக விஷயங்கள்
என்பவை கானல் நீராக உள்ளன. இந்தக் கானல் நீரை உண்மை என்று மயங்கிக் கிடக்கும் புலன்கள் என்ற மான் குட்டிகளை,
உனது இரத்தினக்கற்களின் ஒளி என்னும் கயிறு கொண்டு நீ கட்ட வேண்டும். அதன் பின்னர், அந்தப் புலன்களை இழுத்துச் சென்று,
ஸ்ரீரங்கநாதனின் திருமேனி அழகு என்னும் கடலில் இளைப்பாறும்படிச் செய்ய வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே சம்சாரம் ஒரு கடும் கோடை – வியர்த்து வெந்து தண்ணீர் தேடுபவர் கண்டு நிற்பது கானல் நீர் இடத்தில்
அவ்வளவு மோஹ மயக்குகள் எல்லாம் இந்த்ரியங்கள் ஆகிற மான்களால் அவை தறி கெட்டுப் பல திசைகளிலும் பறந்து ஓடுமே -என் செய்ய
உன்னுடைய ரத்ன கிரணங்கள் ஒரு வலை போல் விரிந்து வளைத்து இழுத்துப் பிடித்துப்
பகவானுடைய தேஜோ நதியில் அமிழ்த்து என்னைக் களைப்பு தீரச் செய் –

————————————————————–

அந்தர் நிதாய முநிபி: பரிரக்ஷ்ய மாணாம்
ஆத்மீய ரஸ்மி குணிதாம் மணி பாத ரக்ஷே
ரங்கேஸ பாத கமல ப்ரதிபந்ந முத்ராம்
நீவீம் அவைமி பவதீம் நிகமாந்த வாசாம்—-509-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை முனிவர்கள் தங்கள் மனதிலேயே எப்போதும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
உன்னுடைய இரத்தினங்களில் இருந்து வெளிவரும் ஒளிக்கீற்றுகள், உன்னை அவ்விதம் கட்டி வைக்கும் கயிறுகள் போன்று உள்ளன.
அந்தக் கயிற்றில் வைக்கப்படும் முத்திரை போன்று ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் உள்ளன.
இப்படியாக உள்ள உன்னைக் கண்டால் வேதாந்தங்கள் என்னும் இரத்தினக்குவியல் நிறைந்த மூட்டை என்றே தோன்றுகிறது.

ஸ்ரீ மணி பாதுகையே முனிவர்கள் ஆதரத்துடன் முடித்து வைத்துக் காக்கும் ஒரு பண மூட்டையாக உன்னைச் சொல்லலாம் போலும் –
ரத்னக் கற்கள் வெளியிடும் ஒளிக் கதிர்கள் தாம் கட்டும் கயிறுகள்
பெருமாள் அடிக்கமலம் தான் மேலிடப் பெற்ற முத்ரை போலும்-
இந்தப் பண முடிப்பு வேதாந்த வாக்குகளை யன்றோ உள்ளடக்கி யுள்ளது —

————————————————————————————

ராமஸ்ய ரங்க வஸதேஸ் சரண அநுஷங்காத்
காஷ்டாம் கதாம் புவந பாவநதாம் ததாநா
பாதாவநி ப்ரஸூர ரத்ந சிலா நிபத்தா
ஸம்ஸார ஸந்தரண ஸேதுர் அஸி ப்ரஜாநாம்—-510-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கவிமானத்தைத் தனது இருப்பிடமாக உடைய இராமனின் திருவடித் தொடர்பு
என்னும் உயர்த்தியை நீ அடைந்துள்ளாய். இதற்கு மேல் வேறு எந்தவிதமான உயர்வும் இல்லை என்று நிலையை அடைந்து,
மிகவும் தூய்மையான நிலையை அடைந்துள்ளாய். பலவிதமான இரத்தினக்கற்களால் நீ கட்டப்பட்டுள்ளாய்.
இப்படியாக உள்ள நீ ஸம்ஸாரத்தில் உள்ள மக்கள் தங்கள் துன்பங்களைக் கடக்க உதவும் அணையாக உள்ளாய்.

இங்கு பாதுகையை சேதுவாகக் கூறுகிறார். சேது அணை அயோத்திவாஸியான இராமனின் திருவடித் தொடர்பு உள்ளதாகும்,
பாதுகை ஸ்ரீரங்கவாஸியான இராமனின் திருவடித் தொடர்பு கொண்டது; அது கற்களால் கட்டப்பட்டது,
பாதுகை இரத்தினக்கற்களால் கட்டப்பட்டது; சேதுபாலம் கடலைக் கடக்க உதவியது, பாதுகை ஸம்ஸாரக் கடலை கடக்க உதவுகிறது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடி சம்பந்தம் உனக்கு உயர்வற உயர்வு ஒன்றைத் தருகிறது –
பரம பாவனையான உனக்கு ரத்னக் கற்களால் அலங்கரணம் பொருத்தமே –
நீ ஜனங்களுக்கு சம்சாரத்தைக் கடக்கும் படிப் பாலமாக இருந்து உதவுகிறாய் அல்லவா –

————————————————————-

திவிஷந் மகுடேஷு ஸஞ்சரந்த்யா:
ப்ரசுரஸ் தே மணி பாதுகே ப்ரகாச:
திவி ரங்கபதே: மஹோத்ஸவார்த்தம்
விததா வந்தந மாலி கேவ பாதி—-511-

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் திருவீதி வலம் வரும்போது, அவனை அனைத்து தேவர்களும்
வானத்தில் நின்றபடி வணங்குகின்றனர். அப்போது உன்னுடைய ஒளியானது அவர்களின் க்ரீடங்களில் இருந்து வெளிப்படுகின்றது.
இதனை காணும்போது, வானத்தில் அரங்கனுக்குக் கட்டப்பட்ட தோரணம் போன்று உள்ளது.

ஸ்ரீ மணி பாதுகையே -நீ வந்து வணங்குகின்ற தேவர்களின் க்ரீடங்களின் மீது வைக்கப்பட்டு அப்படியொரு சஞ்சாரம் நடக்கையில்
உன்னுடைய ரத்னங்கள் வெளிப்படுத்தும் ஒளி மிக்க பல நிறக் கதிர்கள் ஸ்ரீ ரங்க நாதனுடைய உத்சவத்திற்காக
ஆகாசத்தில் கட்டப்பட்டு நிற்கும் வர்ணத் தோரணங்கள் போலக் காட்சி அளிக்கின்றன —

——————————————————————–

ப்ரபவந்தி தவீயஸாம் ஸ்வபாவாத்
தவ ரத்நாநி முகுந்த பாத ரக்ஷே
அயஸாமிவ ஹந்த லோஹ காந்தா:
கடிநாநாம் மநஸாம் விகர்ஷணாய—512–

ஸ்ரீரங்க நாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ஒரு சிலர் ஸ்ரீரங்கநாதன் வீதியில் வலம் வரும்போது,
வீட்டை விட்டு வராமல் இருப்பார்கள். அவர்களது இரும்பு போன்ற மனங்களை, தூரத்தில் இருந்தே இழுக்க வல்ல
காந்தம் போன்று உன்னுடைய இரத்தினக் கற்கள் சாமர்த்தியம் கொண்டவையாக உள்ளவனவே!

ஸ்ரீ பாதுகையே உன் ரத்னங்கள் தூரத்தில் இருப்பவர்கள் உடைய கடின நெஞ்சுக்களையும் ஆகர்ஷித்து விடும் –
காந்தம் இரும்பை இழுத்துக் கொள்வது போல தன் இயல்பாகவே இது –

————————————————————

பரிபஸ்யதி தேவி ரங்கநாதே
ரஹஸி த்வம் ஸவிதே நிவிஸ்ய லக்ஷ்ம்யா:
பரிபுஷ்யஸி ரத்நதாமபி: ஸ்வை:
அநஸூயேவ மநோஜ்ஞம் அங்கராகம்—513–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதன் இரவில் ஸ்ரீரங்கநாச்சியாருடன் ஏகாந்தமாக எழுந்தருளி உள்ளான்.
அப்போது உன்னுடைய அழகான இரத்தினக்கற்களின் ஒளி கொண்டு, ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனியில்
அழகான பூச்சைப் பூசுகிறாய்.
இதனைக் காணும்போது, இராமன் பார்த்திருக்க சீதைக்கு அநஸூயை சந்தனம் பூசியது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகா தேவியே –ஏகாந்தமாக இருக்கையில் உன் ரத்னங்களின் கிரணங்கள் பெரிய பிராட்டிக்கு ஒரு சந்தனப் பூச்சு
வழங்கு கின்றனவோ -இது பெருமாள் ஸ்ரீ ரங்க நாதன் பார்த்துக் கொண்டு இருக்கையில் நடப்பது –
அத்ரியின் பத்னி அனஸூயை சீதைக்கு அணிகலன் பூட்டி பூச்சு சாத்தினதைப் போலே இதுவும் –

———————————————————————

தவ ரத்ந கர அர்ப்பிதம் நவீநம்
பரிக்ருஹ்ய ஸ்திரம் அம் ஸூகம் மநோஜ்ஞம்
ஜரதம் ஸூகவத் ஸுகேந தோஹம்
க்ருதிந: கேசவ பாதுகே த்யஜந்தி—-514-

ஸ்ரீரங்க நாதனின் பாதுகையே! புண்ணிய ஆத்மாக்கள் உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி என்னும்
கைகளால் நீ கொடுத்துள்ள புதியதும் நிலையாக உள்ளதும் ஆகிய அழகான திவ்ய சரீரத்தை (உயிர் பிரியும்போது)
எடுத்துக் கொள்கின்றனர். இவர்கள், தங்களது மனித உடலைக் கிழிந்த துணி போன்று கவலைப்படாமல் விடுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே நீ உன் கரங்களால் -உன் ரத்னங்களின் ஒளிக் கதிர்களால் -கைங்கர்யம் செய்யும் புண்யாத்மாக்களின் மீது
ஒரு புது வஸ்திரத்தைப் போர்த்தவும் அதன் காரணமாக அவர்கள் தம் சரீரத்தை ஒரு கிழிந்த வஸ்த்ரத்தைக் கழற்றுவது போல்
அநாயாசாமாக விடக் கூடியவர்கள் ஆகிறார்கள் –

———————————————————————-

அபிதோ மணி பாதுகே நிபத்தை:
க்ருத ஸம்ஸ்கார விசேஷம் ஆத்மரத்நை:
குருதே பவதீ பதம் முராரே:
கடிநே அஸ்மிந் ஹ்ருதி மே நிவேச யோக்யம்–515–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய நான்கு பக்கங்களிலும் கடினமான இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மீது ஸ்ரீரங்கநாதனின் திருவடியை வைத்துப் பழக்கப்படுத்துகிறாய். ஏன் என்றால் –
அப்போதுதான் அவன் எனது கடினமான மனதில் தனது திருவடியை வைக்க இயலும்.
இப்படியாகவே நீ அவன் திருவடிகளை பழக்கப்படுத்துகிறாய்

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் உடைய திருவடி உன் மீது பலவித ரத்னங்கள் இழைக்கப் பட்டு இருக்கும் இடத்தில்
வைத்துச் சொர சொரப்பான தன்மையைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்று அதனால் கடினமான
என் இதயத்திலும் அடி வைக்கப் பழக்கப் பட்டதாக ஆகும் -இது நீ செய்யும் உதவி –

———————————————————————————

நிஜ ரத்ந கர அஞ்சலைர் மதீயாந்
அபராதாந் அவதூய தத்த ஸாம்யா
ரமயா ஸஹிதஸ்ய ரங்க பர்த்து:
பதயோ: அர்ப்ய பாதுகே ஸ்வயம் மாம்—-516-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி என்னும் கைகள் கொண்டு எனது குற்றங்களை நீக்கி,
என்னை உன் போன்று ஆக்கவேண்டும். அதன் பின்னர் ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியுள்ளவனான
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் என்னை நீயே சமர்ப்பிக்கவேண்டும்.

ஸ்ரீ பாதுகையே உன் ரத்னங்களின் கிரணங்கள் உன் கைகள் போலாம் -அவற்றின் நுனியால் என் அபராதங்களைத் துடைத்து
அவனுக்கும் உனக்கும் சமமானவனாக என்னை யாக்கி அருளி
திவ்ய தம்பதியின் சந்நிதியில் -மிதுனத்தில் -என்னை நீயே தானாகவே சமர்ப்பித்து விடுவாயாக –

————————————————————————-

ரஸ்மி ஜால பரிவேஷ பந்துரா
ரங்க பூமதி ரத்ந பாதுகே
விஸ்வ லோசந விஹங்க ஹாரிணீ
வாகுரேவ விததா விராஜஸே—517–

ஸ்ரீரங்கராஜனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களில் இருந்து வரும் ஒளி
என்னும் கயிறுகளால் நீ இருக்கமாகக் கட்டப்பட்டு உள்ளாய். இப்படியாக இன்பமாக உள்ள நீ,
இந்த உலகத்தினரின் கண்கள் என்னும் பறவைகளைப் பிடிக்க உதவும் பொறி போன்று உள்ளாய்.

பறவைகளைப் பிடிக்க ஒரு கூண்டைத் தயாரித்து, அதனை நன்றாகக் கட்டி வைத்திருப்பார்கள்.
இங்கு பாதுகையை அந்தக் கூண்டு என்றார். நமது கண்களைப் பறவைகள் எனவும்,
இரத்தினங்களில் இருந்து வெளிவரும் ஒளிகள் கயிறுகள் என்றும் கூறுகிறார்.

ஸ்ரீ மணி பாதுகையே உன் ரத்னங்கள் வெளியிடும் ஒளி வட்டங்கள் உன்னைச் சுற்றி அழகான கயிறு வலைகள் போல் காட்சி அளிக்கும் .-
நீ மக்களின் கண்கள் ஆகிற பஷிகளை பிடிக்க வென்று வைக்கப்பட்ட பொறி போலவும்
அக்கயிறு வலைகளை உன்னை இடத்தில் பொருத்தி வைக்கக் கட்டப் பட்டவை போலும் தோன்றும் –

————————————————————————

மானஸ அம்புஜ விகாஸ ஹேதுபி:
ஸேவிதா மணி கணை: ப்ரபாகரை:
பாதுகே வஹஸி ஸத்பிர் ஆஸ்ரிதாம்
தேவி விஷ்ணு பத ஸம்பதம் நவாம்—-518-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதனை அடைந்தவர்களின் மனம் என்னும் தாமரை மலர்வதற்குக் காரணமாக
உன்னுடைய இரத்தினக் கற்கள் ஸூரியன்கள் போன்று உள்ளன. இத்தகைய ஸூரியனை வணங்கியபடி உள்ள
அந்த அடியார்கள் அனைவரும், நக்ஷத்ரங்கள் போன்று ஒளியுடன் உள்ளனர்.
இப்படியாக ஸ்ரீரங்கநாதனின் ஆகாயம் போன்ற திருவடிகளின் அழகை நீ அடைகிறாய்.

ஸ்ரீ மணி பாதுகா தேவியே -உன் ரத்னங்களின் பெருத்த ஒளி வெளியீடு உன்னில் அவ்வளவு ஸூ ர்யர்கள் இருப்பது போல் காட்டும் .
இந்த ஸூர்யர்கள் பக்தர் மனச் ஆகிற தாமரைகளை மலரச் செய்பவை -பெரியோர்கள் உன்னை ஆஸ்ரயிக்கின்றனர்-
ஆகவே நீயும் ஆகாசத்தின் சோபா சம்பத்தைப் பெற்று விளங்குகிறாய் –
ஆனால் இந்த ஆகாசம் ஒரு புதிய வகை போலும் -பல ஸூ ர்யர்கள் பல நஷத்ரங்கள் ஒரே சமயம் சேர்ந்து இருக்கக் காணலாம் –
விஷ்ணுபதம் -பெருமாள் /திருவடி –ஆகாசம் /சத் -பெரியோர் நஷத்ரம் –

——————————————————————————–

அதிசயித பணீஸ் வரஸ்ய சௌரே:
ஸ்வயம் அதிரூடே பதோபதாந பார்ஸ்வா
மணி வலய ஜுஷா கரேண மந்தம்
ஸ்ப்ருசஸி பதாவநி பாதயோர் யுகம் தத்—-519–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷன் மீது சயனித்துள்ள பெரிய பெருமாளின் திருவடிகளை நீ அடைந்து,
அந்தத் திருவடிகளின் அருகிலே அமர்கிறாய். உன்னுடைய இரத்தினக்கற்களின் ஒளி என்ற வளையல்களை
அணிந்த திருக்கரங்களால், அவனது திருவடிகள் இரண்டையும் மெதுவாக வருடுகிறாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஆதிசேஷப் படுக்கையில் கண் வளர்ந்து அருளுகிறார் –
நீ அவர் திருவடித் திண்டுக்கு அருகில் உள்ளாய்-பிராட்டி வளையல் அணிந்த கைகளால் பெருமாள் திருவடிகளைப்
பிடித்து விடும் போது நீயும் உன் ரத்னங்கள் சிதற விடும் கிரணங்களால் ஆன வளையங்கள் பெற்ற
உன் கைகளால் மெல்லத் தொடுகிறாய் போலும் –

—————————————————————————-

பவத் யந்தே த்வம் ப்ரண தஸ்ய ஜந்தோ:
ததோகோ: அக்ரஜ் வலநம் த்வத் ப்ரகாசை:
யதோ நாட்யா மத்யமயா விநிர்யந்
கதிம் விந்தேத் சேசவ பாத ரக்ஷே—-520-

அழகான கேசங்களைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
உன்னை ஆராதித்தபடி உள்ள மனிதனின் இதயம் என்ற பகுதியானது, அந்திம நேரத்தில் உன்னுடைய
இரத்தினங்களின் ஒளி மூலமாக மிகவும் பிரகாசமாக உள்ளது.
இந்த வெளிச்சம் காரணமாக, அதன் நடுவில் உள்ள நாடி மூலம் வெளியே கிளம்பும் ஜீவன்,
அர்ச்சிராதி மார்க்கத்தை அடைகிறான்.

இதயத்தில் இருந்து பல நாடிகள் தலைக்குச் செல்கின்றன. அவற்றில் ஒன்று மட்டும் உச்சந்தலைக்குச் செல்கிறது.
இதற்கு ஸுஷும்நா நாடி என்று பெயர். இந்த நாடி வழியே வெளிக்கிளம்பும் ஜீவன் மட்டுமே அர்ச்சிராதி மார்க்கமாக,
ஸ்ரீவைகுண்டம் அடைகிறான். பல நாடிகள் இதயத்தில் உள்ளதால், வெளிக்கிளம்பும் ஜீவனுக்கு
இந்த குறிப்பிட்ட நாடி எது என்று அறிவதற்கு, பாதுகையின் இரத்தினக்கற்கள் ஒளியிட்டுக் காண்பிக்கின்றன என்றார்.

ஸ்ரீ பாதுகையே உன்னை வணங்கினவன் ஒருவனுடைய அந்திம கால நிலையில் ஜீவன் ஹ்ருதயத்தில் இருந்து புறப்பட்டு
ஸூஷூம் நா நாடியில் புக ஒளி தந்து வழி காட்டுகிறது உன் ரத்னங்களின் ஒளி –
அப்படித்தான் ஜீவன் அர்ச்சிராதி மார்க்கத்தை அடைகிறான் –

——————————————————————-

அசிதில பரிணத்தா ரஸ்மி ஜாலை: மணீநாம்
துரதிகம் தமம் ந: பாரம் ஆரோபயந்தீ
கமல நயநம் ஆத்யம் கர்ணதாரம் ததாநா
பவஸி பவ பயோத: பாதுகே போத பாத்ரீ—-521–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களின் ஒளிக்கீற்றுகள் என்னும் கயிறு மூலம் நீ
கெ ட்டியாகக் கட்டப்பட்டிருக்கிறாய். ஸம்ஸாரம் என்ற கடலில் அக்கரையாகவும், அடைவதற்குக் கடினமாக உள்ளதும்
ஆகிய ஸ்ரீவைகுண்டத்திற்கு எங்களை நீ இட்டுச் செல்கிறாய். அனைத்திற்கும் முன்பாக உள்ள,
தாமரை போன்ற கண்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதனை கப்பலின் மாலுமியாகக் கொண்டுள்ளாய்.
இப்படியாக உள்ள நீ ஸம்ஸாரம் என்ற கடலைக் கடக்க உதவும் கப்பல் போன்று உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே எங்களை சம்சார சாகரத்தை தாண்ட வைக்கும் மரக்கலம் நீ —
மரக்கலத்தைக் கட்டி வைத்து இருக்க உதவும் கயிறுகள்
உன் ரத்னங்கள் வெளியிடும் கிரணங்களின் கற்றைகள் –
இந்த கடினமான கரை சேர்த்தல் ஆகிற படகு யாத்ரைக்கு உதவுபவன்
ஆதி நேதா -சிறந்த கப்பல் தலைவன் -செந்தாமரைக் கண்ணன் –

—————————————————————————-

மணிகண கிரணை: தே கல்ப்பிதே குல்மபேதே
ம்ருகயு: இவ குரங்கீம் த்வாம் புரஸ்க்ருத்ய பவ்யாம்
ஊரதி சரண ரக்ஷே பக்தி பாச அவருத்தம்
ஹ்ருதய ஹரிணயூதம் ப்ராணிநாம் ரங்கநாத:—-522–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்டுள்ள இரத்தினக்கற்களின் ஒளியானது
ஒரு புதர் போன்று உள்ளது. அந்தப் புதரில் அமர்ந்துள்ள வேடன் போன்று ஸ்ரீரங்கநாதன் உள்ளான்.
அவன் செய்வது என்ன? பெண் மான் போன்ற அழகான உன்னை முன்னே நிறுத்துகிறான்.
இதன் மூலம், பக்தி என்னும் கயிறு கொண்டு கட்டப்பட்ட மக்களின், இதயங்கள் என்னும் மான்களை பிடித்துக்கொண்டு போகிறான்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் என்ன செய்கிறார் -அவர் ஒரு வேடன் -உன் ரத்னக் குழுவின் கதிர்க் கூட்டம் ஒரு புதர் –
அதில் நீ யாகிற அழகிய பெண் மான் -உன்னைக் கொண்டு பக்த ஹ்ருதயங்கள் ஆகிற அநேக மான்களை வசீகரித்து
பக்திக் கயிற்றால் அவற்றைக் கட்டிப் பிடித்து இழுத்துப் போகிறார் –

—————————————————————————

பரிசித பதமூலா பாதுகே ரங்கிணஸ் த்வம்
ப்ரபவதி புஜ மத்யே கௌஸ்துப: அயம் ததாபி
பவதி ப்ருசம் அதஸ்தாத் தேஜஸா பவ்ய பூமநா
சலபித துரிதாநாம் தாவகாநாம் மணீநாம்—-523-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே ! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளின் கீழே நீ எப்போதும் உள்ளாய்.
ஆனால் கௌஸ்துப மணியோ அவனது திருமார்பில் உயர்ந்த இடத்தில் உள்ளது.
ஆயினும், கௌஸ்துப மணி என்பது அழகான ஒளி பரப்புவதை மட்டுமே செய்கிறது.
உனது கற்களில் இருந்து வெளிப்படும் ஒளியானது, அனைவரின் பாவங்களையும் போக்குவதாக உள்ளது.
ஆகவே உயர்ந்த இடத்தில் உள்ளபோதிலும் கௌஸ்துப மணியானது, உன்னுடைய இரத்தினக்கற்களைக் காட்டிலும் தாழ்வான தாகவே உள்ளது.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் உடைய திருவடியின் கீழே எப்போதும் இருப்பவள் –
கௌஸ்துபமணியோ அவர் திரு மார்பில் உயரத்தில் -ஆயின் என்ன –
தனது ரத்னங்களின் தேஜஸ்ஸினால் ஆஸ்ரிதர் பாபங்களை விட்டில் பூச்சிகளை விளக்கு பொசுக்குவது போல்
ஷணத்தில் எரித்து ஒழிக்க வல்ல நீ உன் ரத்னங்கள் எங்கே
கௌஸ்துப மணி எங்கே -அது தாழ்ந்ததாகி விடுகிறது –

———————————————————————————

கல்பஸ்ரேணீ திந பரிணதௌ ஜந்து ஜாலே ப்ரஸுப்தே
விஷ்வக் வ்யாப்தே ஜகதி தமஸா பாதுகே தாத்ருசேந
ஸ்த்யாந ஆலோகைஸ் தவ மணி கணை: வாஸ கேஹ ப்ரதீபா
ஸம்பத்யந்தே ஸஹ கமலயா ஜாகரூகஸ்ய யூந:—-524–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பல கல்ப காலங்களின் வரிசையான ஒரு பகல் பொழுதின் முடிவில் ஜீவராசிகள்
அனைத்தும் துன்பம் அடைந்தபோது, இந்த உலகம் முழுவதும் இருளால் எங்கும் சூழப்பட்டு காணப்படும்.
அப்போது உணர்வற்றுக் கிடக்கும் ஜீவராசிகளின் அருகில், அவற்றின் தாய் தகப்பன் போன்று
ஸ்ரீரங்கநாச்சியாருடன் ஸ்ரீரங்கநாதன் விழித்தபடி இருப்பான். இப்படியாக அவர்கள் உள்ள இடத்தில் ஒளி வீசும் விளக்குகளாக,
உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினக் கற்கள் ஒளிர்ந்தபடி இருக்கின்றன.

ஸ்ரீ பாதுகையே -பிரம்மாவின் பகல் முடிகிறது -பிரளய ராத்திரி -ஒரே இருள் மயம்-ஜீவ ராசிகள் ப்ரஜ்ஞை யற்று ஜடமாய்க் கிடக்கும்
மகா லஷ்மியும் பெருமாளும் மட்டுமே இருக்கும் சமயம் -அவர்கள் யுவர் -நித்ய யுவர் –
அவர்கள் இன்புற உன் ரத்னங்கள் நெருக்கமான ஒளிக்கதிர் வீசி விளக்குப் போலே உதவுகிறாய் –

——————————————————————————-

ஸ்ரீரங்க இந்தோ: சரண கமல த்வந்த்வ ஸேவா வலேபாத்
ஆரூடாயாம் த்வயி மக புஜாம் ஆநதாந் மௌளி பாகாந்
தேஷாம் சூடாமணிபி: அநகை: தாவகாநாம் மணீநாம்
கேசாகேசி ப்ரபவதி மித: த்ராஸ லேச உஜ்ஜிதாநாம்—-525-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளின் தொடர்பு காரணமாகக் கர்வம் கொள்ளும் நீ,
அவனது திருவடிகளை வணங்கும் தேவர்களின் தலைகளில் அச்சம் கொள்ளாமல் ஏறுகிறாய்.
அப்போது சற்றும் தோஷம் இல்லாத உன்னுடைய இரத்தினக்கற்களுக்கும், தேவர்களின் தோஷம் இல்லாத க்ரீடங்களில் உள்ள
இரத்தினக் கற்களுக்கும் தலைமுடியைப் பிடித்த சண்டை ஏற்படுகிறது.
(இரத்தினங்களில் புள்ளிகள் இருந்தால் அந்த தோஷத்திற்கு த்ராஸம் என்று பெயர்.
அந்த தோஷம் இங்கு பாதுகையில் உள்ள இரத்தினங்களுக்கு இல்லை என்கிறார்).

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடித் தாமரை தொண்டு செய்கிற கர்வம் போலும்
நீ தேவர் கிரீடங்கள் உன் முன் தாழ்ந்து நிற்கையில் அவை மீது ஏறுகிறாய்
உன் ரத்னங்கள் பயமற்றவை -ரத்னக் கற்களுக்கு இருக்கக் கூடிய தோஷம் இல்லாதவை –
அவை க்ரீடக் கற்களுடன் குடுமி பிடிச் சண்டை போடும் போலும் –

————————————————————

த்வத் ரத்ன உபல ரஸ்மி பஞ்ஜர தநுத்ராணம் ஸ்திரம் பிப்ரத:
மாதர் மாதவ பாதுகே ந து புநர் ஹஸ்தை: ஸ்ப்ருசந்தி ஆகுலை:
தூர உத்ஸிக்த தூராட்ய ஜிஹ்மக பில த்வா: பால கோபாநல
ஜ்வாலா மித்ர கடோர வேத்ரலதிகா தத்த அர்த்த சந்த்ரம் வபுஸ்–526-

ஸ்ரீரங்கநாச்சியாரைத் திருமார்பில் கொண்ட பெரியபெருமாளின் பாதுகையே! தாயே! உன்னுடைய இரத்தினக்கற்களின்
ஒளி என்னும் உறுதியான கலசத்தை ஒரு சிலர் தரித்து நிற்கக்கூடும். இப்படிப்பட்டவர்கள் –
கர்வம் போன்ற தாழ்வான குணங்கள் கொண்டுள்ள பணக்காரர்கள் என்னும் பாம்புகள் வசிக்கின்ற, மாளிகைகள் எனப்படும்
பொந்தின் அருகில் சென்று, அந்தப் பொந்தின் வாயில் காப்போனின் கோபம் என்னும் தீயைக் கக்குகின்ற பிரம்பினால்,
சந்த்ரகலை போன்ற கழுத்தில் கை வைத்துத் தள்ளப் படுகின்ற உடலைத் தொடமாட்டனர்.

ஸ்ரீ பாதுகையே -தாயே -உன் ரத்னங்களின் கிரணக் கூடு ஒரு ஸ்திரமான கவசம் ஆகும் -அதைத் தரிப்பவருக்கு அச்சம் இல்லை –
அவர்கள் பணம் கேட்கப் பரபரக்கும் கைகளோடு கொடிய பாம்பு எனத் தக்க தனிகன் இடம் போய் நின்று
கோபக் கனலுடன் காவலன் உடைய கொடும்பிரம்பினால் கழுத்தைப் பிடித்துத் தள்ளப் படுவதை
அதனால் தன் உடம்பில் படிந்த தட்ட வேண்டி இருப்பதை எய்துவது இல்லை –

————————————————————————–

ஸம்வர்த்த உதித ஸூர்ய கோடி ஸத்ருசீம் ரங்கேஸ பாதாவநி
ப்ரஸ்தௌஷி ப்ரதியத்ந ரத்ந நிகர ஜ்யோதிஸ் சடாம் உத்படாம்
தந் மந்யே ததநந்ய ஸூரி பரிஷந் மத்யே நிவேசாய ந:
தாத்ருக் வாஸரஸே அபி பேத்தும் அசிராத் அஸ்மாகம் அந்தம் தம:—-527–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ப்ரளய காலத்தில் உதிக்கின்ற கோடி ஸூரியன்களைக் காட்டிலும்,
உனக்கு அலங்கரமாக உள்ள இரத்தினக்கற்களின் ஒளியானது அதிகமாகவே உள்ளது.
இப்படியாக உனது ஒளியை எங்கும் பரவச் செய்கிறாய். இதற்குக் காரணம் என்னவென்றால் – மனிதர்களாகிய எங்களுக்கு,
இந்த உலக வாழ்க்கையில் மட்டுமே அதிகமான மகிழ்ச்சி உள்ளது. ஆனாலும் உன்னைத் தவிர வேறு
எதனையும் கருத்தில் கொள்ளாத ஆதிசேஷன், கருடன் போன்ற நித்யசூரிகளின் நடுவில் எங்களையும்
நிலை நிறுத்த நீ முடிவு செய்தாய் போலும். இதற்கு இருக்கவேண்டிய தகுதிகளை உண்டாக்கும் பொருட்டு,
எங்களுக்குள் இருக்கும் அறியாமை என்னும் இருளை நீக்குவதற்காகவே நீ இப்படி ஒளிர்கிறாய் என்று எண்ணுகிறேன்.

ஸ்ரீ ரெங்க நாத ஸ்ரீ பாதுகையே உன் அலங்கார ரத்னங்களின் பேரொளி பிரளய காலத்து இருளில் கோடி ஸூர்யர்கள் உதித்தால் போல் உள்ளது –
இந்த ஒளி வீச்சு எங்கள் உள் இருளைப் போக்கவோ -ஆம் -இந்த பிரகிருதி மண்டலத்திலேயே இருக்க ஆசை கொண்டு இருப்பவர் நாங்கள்
அப்படி இருந்தும் பெருமாளைத் தவிர வேறு எதையும் லஷ்யம் செய்யாத பரமை காந்திகள் -நித்ய ஸூரிகள் -ஆழ்வார்கள் -கோஷ்டியில்
எங்களை வைக்க வேண்டும் என்று உடனே எங்கள் உள் இருள் போக வேண்டும் என்று நீ இப்படி ஒளி வீசுகிறாய் என்று தோன்றுகிறது –

——————————————————————————-

ஸலீலம் விந்யஸ்ய த்வயி சரண ரக்ஷே நிஜ பதம்
யத்ருச்சா நிஷ் க்ராந்தே விஹரதி ஹரௌ ரங்க ரஸிகே
திசா ஸௌதாந் அஷ்டௌ ஜநயஸி ததா நிர்ப்பர மிளந்
மணிச் சாயா மாயா கந கடித கேது வ்யதிகராந்—-528-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! ஸ்ரீரங்கத்தில் எப்போதும் வசிப்பதை இன்பமாக எண்ணும் ஸ்ரீரங்கநாதன்,
உன் மீது தனது திருவடிகளை வைத்தபடி ஸஞ்சாரம் செய்வதை உல்லாசமாகவே செய்கிறான்.
சில நேரங்களில் திடீரென்று உன்னைச் சாற்றிக்கொண்டு நம்பெருமாள் வெளியில் வரும்போது, உன்னுடைய
இரத்தினக் கற்களின் ஒளியானது எட்டுத் திசைகளிலும் உள்ள மாட மாளிகைகளில் பரவி நிற்கிறது.
இப்படி நெருக்கமாக உள்ள அந்த ஒளி வெள்ளத்தைக் காணும்போது, நம்பெருமாள் எழுந்தருளும் நேரத்தில்
கட்டப்படும் கொடிகள் போன்று தோன்றுகிறது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் எப்போது உல்லாச சஞ்சாரத்திற்காக உன் மீது திருவடியை வைத்தாலும்
உடனே நீ உன் ஒளிக் கற்றைகளை நெருக்கமாக வெளியிட வானம் எட்டுத் திசைகள் எங்கணுமே
மாட மாளிகையாக கொடி கட்டி வரவேற்பு ஏற்பாடு செய்தால் போலாகிறது –

———————————————————

மஹார்க்கை: ஆஸ்லிஷ்டாம் மணி பிரவதூத த்யுமணிபி:
கதம் சித் க்ஷேத்ரஜ்ஞை: அதிகதபதாம் அம்ப! பவதீம்
முகுந்தேந த்ராதும் பத கமல மூலே விநிஹிதாம்
நிராபாதாம் மந்யே நிதிம் அநக வாசாம் நிரவதிம்—-529-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! மிகவும் விலை உயர்ந்ததாகவும், சூரியனையும் தாழச்செய்கின்ற ஒளியுடன் கூடிய
இரத்தினக் கற்களைக் கொண்டதாகவும், பெருமை அறிந்தவர்களால் மிகவும் கடினத்துடன் கண்டு பிடிக்கப்பட்டதாகவும்,
இதனைப் பாதுகாப்பதற்காகவே ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளில் வைக்கப்பட்டதாகவும் உள்ள நிதி போன்று நீ உள்ளாய்.
மற்றவர்களால் எளிதில் கவர இயலாத நிதியாக உள்ள உன்னை, வேதவாக்குகள் என்கிற நிதியாகவே எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகைத் தாயே சூர்யனையும் தோற்கடிக்கும் பிரகாசம் உயர்ந்த விலை மதிப்பு -இத்தகைய ரத்னங்கள் உன்னிடத்தில் உள்ளன –
இடம் தெரிந்தவரே பிரயாசப் பட்டுக் கண்டு உணரக் கூடும்
பெருமாள் தன் திருவடியின் கீழ் வைத்துக் காப்பது – யாரும் அபஹரிக்க முடியாதது –
அப்படிப்பட்ட உன்னை வேத நிதியாக எண்ணுகிறேன் –

—————————————————————-

தாபத்ரயம் நிருந்தே
பசதி கஷாயாந் விசோஷயதி பங்கம்
தேஜஸ் த்ரிதயம் இதம் தே
சங்கே ரங்கேந்த்ர பாதுகே தேஜ:–530–

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய மூன்றும் சேர்ந்தது போன்று உனது ஒளி உள்ளது.
இந்த ஒளியானது – மக்களின் மூன்று விதமான துன்பங்களையும் நீக்குகிறது; மனதின் அறியாமையை எரித்து விடுகிறது;
பாவங்களை உலர வைக்கிறது. இப்படியாகவே உனது ஒளி உள்ளதாக நான் எண்ணுகிறேன்.

மூன்று விதமான துன்பங்கள் என்பது ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம் மற்றும் ஆதிபௌதிகம் என்பதகும்.
இதில் ஆத்யாத்மிகம் என்பது உடலில் உண்டாகும் நோய் போன்றவை;
ஆதிதைவிகம் என்பது மழை, காற்று போன்ற இயற்கை அழிவுகள்;
ஆதிபௌதிகம் என்பது மற்றவர்களால் ஏற்படும் துன்பங்கள் ஆகும்.
பாதுகையின் ஒளியானது இவற்றை நீக்குவதால் சந்திரன்;
அறியாமையை எரிப்பதால் அக்னி;
பாவங்களை உலர்த்துவதால் ஸூரியன் என்று கொள்ள வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே உனது ஒளி சந்தரன் அக்னி சூர்யன் என்ற மூன்று ஒளிப் பொருள்களையும் ஒத்து வெளிவருவதாம்
தாபத்ரயத்தைப் போக்கும் குளிர்ந்த சந்தரன்
கஷாயங்களைக் காச்சுவது -மன அழுக்குகளை எரிப்பது -அக்னி -சேற்றை உலர்த்வது ஸூர்யன்
ஆகவே இம் மூன்று தன்மைகளும் உன் ஒளியில் உள்ளன –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: