ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-14-நாத பத்ததி -இனிய நாத பத்ததி -ஸ்லோகங்கள் -381-480-

ஸ்ருதீநாம் பூஷணாநாம் தே
சங்கே ரங்கேந்த்ர பாதுகே
மித: ஸங்கர்ஷ ஸஞ்ஜாதம்
ரஜ: கிம் அபி சிஞ்ஜிதம்—-381-

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! உன் மீது பலவிதமான இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
நம்பெருமாள் சஞ்சாரம் செய்யும் போது, அவை ஒன்றன் மீது ஒன்று மோதியபடி, உருண்டு சப்தம் எழுப்புகின்றன.
இதனைக் காணும் போது, வேதங்கள் ஒன்றுடன் ஒன்று உரைதலால் ஏற்படும் தூசிகள் போன்று உள்ளன.

நம்பெருமாள் வீதியில் சஞ்சாரம் செய்யும் போது, அதனைக் காண நிற்பவர்கள் மீது
பாதுகையின் தூசிகள் விழுந்து நன்மை அளிக்கின்றன.
ஆனால் ஒரு சிலர் வீட்டை விட்டு வெளியில் வர இயலாத சூழ்நிலை இருக்கலாம்.
அவர்களுக்கு பாதுகையின் ஒலியானது நன்மை அளிக்கிறது.

ஸ்ரீ பாதுகையே உன்னிடத்தில் ரத்தினங்கள் இழைக்கப் பட்டுள்ளன –
பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு நடக்கும் போது அவை சப்திக்கின்றன –
அவை உனக்கு அலங்காரமான வேதங்கள் உடைய –சாகை– கொடி -கோஷம் -போல் தோன்றுகின்றன –

—————————————————————

முரபித் மணி பாதுகே பவத்யா:
ஸ்துதிம் ஆகர்ணயதாம் மயா நிபத்தாம்
அவதீர யஸீவ மஞ்ஜு நாதை:
அசமத்கார வசாம்ஸி துர் ஜநாநாம்—-382-

முரன் என்ற அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
உன்னைப் பற்றிய இந்த ஸ்துதியை நான் கூறும் போது, ஒரு சில துர்மதி கொண்டவர்கள் இதனை தூஷித்துப் பேசக் கூடும்.
அந்தச் சொற்களை நீ உனது அழகான இசை போன்று எழும் சப்தம் கொண்டு அடக்குகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய நியமனத்தினால் உன்னைப் பற்றி ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
உன் மகிமை அறியாத துஷ்டர் செய்யும் தூஷணையை உன் அழகான நாதத்தாலே நீயே தடுக்கிறாய் போலும் –

———————————————————-

விஹிதேஷு அபிவாதநேஷு வேதை:
கமந உதீரித கர்ப்ப ரத்ந நாதா
மதுரம் மது வைரி பாத ரக்ஷே
பவதீ ப்ரத் யபி வாதநம் விதத்தே—-383-

மது என்னும் அரக்கனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்திற்கு முன்பாக வேதங்கள் உனக்கு அபிவாதநம்
(சிறியவர்கள் பெரியவர்களை வணங்கும் போது, தான் இன்ன கோத்ரம், தனது பெயர் இன்னது போன்ற விவரங்களைக் கூறுதல்)
செய்தபடி உள்ளன. அப்போது உனது இரத்தினக் கற்களின் இனிமையான நாதம் மூலம்,
அவர்களுக்கு ப்ரதி அபிவாதநம் (ஆசி கூறுதல்) செய்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே சஞ்சார காலத்தில் உன்னுள் இருக்கும் ரத்தினங்கள் சப்திக்கின்றன-
நான்கு வேதங்களும் உன்னை சேவித்து அபிவாதனம் செய்யும் போது
ஆயூஷ்மான் பவ -என்று நீ அவைகட்கு பதில் சொல்வது போல உன் நாதம் த்வநிக்கின்றது –

———————————————————————

ஸ்வததே கிம் இஹ ஏவ ரங்கநாத:
மயி திஷ்டந் யதி வா பதே பரஸ்மிந்
இதி ப்ருச்சஸி தேவி நூநம் அஸ்மாத்
மதுரைஸ் த்வம் மணி பாதுகே நிநாநை:—384-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இனிமையான நாதம் எப்படி உள்ளது என்றால் –
என் மீது உறைகின்ற ஸ்ரீரங்கநாதன் உங்களுக்குப் பிடித்தபடி உள்ளானா அல்லது
ஸ்ரீரங்க விமானத்தில் உள்ள அவன் உங்களுக்குப் பிடித்தபடி உள்ளானா அல்லது
பரம பதத்தில் உள்ளவன் உங்களுக்குப் பிடித்தபடி உள்ளானா – என்று நீ அனைவரிடமும் கேட்பது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உன் தொனியைக் கேட்கும் போது நீ எங்களைப் பார்த்து பெருமாள்
ஸ்ரீ ரங்கத்தில் எழுந்து அருளி இருக்கும் போது நன்றாக இருக்கிறதா
அல்லது இப்பொழுது என் மீது எழுந்து அருளி உலா வரும் பொழுது நன்றாக இருக்கிறதா அல்லது
பரம பதத்தில் இருப்பது நன்றாக இருக்கிறதா என்று கேட்பது போலே இருக்கிறது –

————————————————————————————————–

அவரோக தஸ்ய ரங்க பர்த்து:
கதிஷு வ்யஞ்ஜித கர்ப்ப ரத்ந நாதா
ப்ரதி ஸம்ல்லபஸீவ பாதுகே த்வம்
கமலா நூபுர மஞ்ஜு சிஞ்ஜிதாநாம்—385-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் அந்தப் புரத்திற்கு ஸ்ரீரங்கநாதன் சஞ்சாரமாக வருகிறான்.
அப்போது உன்னிடமிருந்து இனிய ஒலி எழுகிறது. இதனைக் கேட்கும்போது எவ்விதம் உள்ளது என்றால் –
அந்தப்புரத்தில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடிகளில் உள்ள தண்டைகள் எழுப்பும் ஒலிக்கு, நீ பதில் அளிப்பது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன்னைச் சாத்திக் கொண்டு அந்தப் புரத்திற்கு எழுந்து அருளும் போது மஹா லஷ்மி எதிர் கொண்டு வருகிறாள் –
அவள் திருவடிச் சிலம்பின் நாதத்திற்கு உன் நாதம் பதில் சொல்வது எதிர் நாதம் போல் தோன்றும் –

——————————————————————————-

முரபித் சரணாரவிந்த ரூபம்
மஹித ஆனந்தம் அவாப்ய புருஷார்த்தம்
அநகை: மணி பாதுகே நிநாதை:
அஹம் அந்நாத: இதீவ காயஸி தவம்—-386-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளின்
வடிவுக்கு ஏற்றபடி நீ உள்ளாய். அவனது திருவடிகளின் தொடர்பு மூலம் பேரானந்தம் கொண்டு விளங்குகிறாய்.
இதன் மூலம் நீ பெரும் பேறு பெற்றாய் . உன்னுடைய இனிமையான ஒசை மூலம்,
”நான் ப்ரஹ்மம் என்ற அன்னத்தை அனுபவிப்பவள்”, என்று பாடுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாளுடைய திருவடித் தாமரையின் உருவத்தைப் பெற்று இருப்பதால் நீ பேரானந்தம் அடைந்து
அந்த புருஷார்த்தத்தை அடைந்த மகிழ்ச்சியால் முக்தர்கள் போலே
அஹம் அந்நாத என்று குற்றம் இல்லாத உன் நாதத்தால் பாடுகிறாய் போலும் –

————————————————————————————–

மதுவைரி பதாம்புஜம் பஜந்தீ
மணி பாதாவநி மஞ்ஜு சிஞ்ஜிதேந
படஸீவ முஹு: ஸ்வயம் ப்ரஜாநாம்
அபரோபஜ்ஞம் அரிஷ்ட சாந்தி மந்த்ரம்—-387-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளை
நீ அடைந்து, இன்பமாக உள்ளாய். அப்போது உன்னிடம் இனிமையான நாதம் எழுகிறது. இது எப்படி உள்ளது என்றால் –
இந்த உலகில் உள்ள மக்களின் அனைத்துத் துன்பங்களை நீக்கி, யாருக்கும் தெரியாத ஒரு மந்திரத்தை நீ உச்சரிப்பது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் எழுந்து அருளும் போது உண்டாகும் உன் சப்தம்
ஜனங்களுடைய எல்லை அற்ற துன்பத்தைப் போக்கும் மந்திரம் போலே ஒலிக்கிறது –

பிறவித் துன்பத்தைப் போக்கும் உயர் மந்திரமே திருவாய் மொழி -என்றதாயிற்று –

—————————————————————————————————–

ஸ்ருதிபி: பரமம் பதம் முராரே:
அநிதங்காரம் அநேவம் இதி உபாத்தம்
இதம் இத்தம் இதி ப்ரவீஷி நூநம்
மணி பாதாவநி மஞ்ஜுபி: ப்ரணாதை:–388-

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எப்படிப்பட்டவை என்று
வேதங்கள் கூற முற்பட்டபோது, அவை அந்தத் திருவடிகள்
இது எனக் கூற இயலாது, இப்படிப்பட்டது என்று கூற இயலாது – என்றே கூறுகின்றன.
ஆனால் உனது இனிய நாதங்கள் மூலம் நீ அவன் திருவடிகள் இவை, இப்படிப்பட்டது – என்று தெளிவாகக் கூறுவது உண்மையே.

ஸ்ரீ பாதுகையே பெருமாளுடைய ஒப்புயர்வற்ற ஸ்வரூபத்தையும் ஸ்ரீ வைகுண்டத்தின் ஸ்வரூபத்தையும்
இப்படிப் பட்டது என அறிய முடியாது என்று வேதம் சொல்கின்றது -அப்படிப்பட்ட ரஹஸ்யமான விஷயங்களை
உன்னுடைய இனிய நாதம் இப்படிப் பட்டது என்று தெளியச் சொல்லி விடுகிறது –

—————————————————————————————–

முநய: ப்ரணிதாந ஸந்நிருத்தே
ஹ்ருதி ரங்கேச்வர ரத்ந பாதுகே த்வாம்
விநிவேஸ்ய விபாவயந்தி அநந்யா:
ப்ரணவஸ்ய ப்ரணிதிம் தவ ப்ரணாதம்—-389-

ஸ்ரீரங்கநாதனின் இரத்தின மயமான பாதுகையே! யோகிகள் தங்கள் மனதை, தங்களது யோகாப்யாஸம் மூலம்
மற்ற விஷயங்களில் செல்லாதபடி நிலை நிறுத்துகின்றனர். அப்படிப்பட்ட மனதில் உன்னை த்யானிக்கின்றனர்.
மற்ற தேவதைகளையோ, மற்ற பலன்களையோ நாடாமல், ப்ரணவத்திற்கு ஆதாரமாக உள்ள
உனது நாதத்தை மட்டுமே த்யானிக்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே யோகிகள் ஏகாக்ரமாக உன்னை மனத்தில் இருத்தி உன் சப்தத்தை
ஓங்காரத்திற்கு சமமாக எண்ணித் தியானிக்கிறார்கள்-

———————————————————————————————–

மதுரம் மணி பாதுகே ப்ரவ்ருத்தே
பவதீ ரங்க ந்ருபதே விஹார காலே
அபயார்த்த்நயா ஸமப்யு பேதாந்
அவி ஸம்வாதயதீவ மஞ்ஜு நாதை:–390-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலத்தில் பலரும் அவன் அருகில் வந்து,
தங்களுக்கு அபயம் அளிக்க வேண்டி நிற்கின்றனர். அப்போது நீ செய்வது என்ன?
உன்னுடைய இனிமையான நாதம் மூலம், “அபயம் அளிக்கப்பட்டது”, என்று கூறுகிறாய் அல்லவோ?

ஸ்ரீ பாதுகையே சஞ்சார காலத்தில் ஜனங்கள் பெருமாள் இடத்தில் தங்களுக்கு அபயம் வேண்டிப் பிரார்த்திக்க
நீ உன் சப்தத்தால் அப்படியே ஆகட்டும் என்று கூறுவது போல் இருக்கிறது –

——————————————————————————————

ஸ்ரவஸோ: மம பாரணம் திசந்தீ
மணி பாதாவநி மஞ்ஜுலை: பரணாதை:
ரமயா க்ஷமயா ச தத்த ஹஸ்தம்
ஸமயே ரங்க துரீணம் ஆநயேதா:– –391-

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
என்னுடைய அந்திம காலத்தில் நீ செய்ய வேண்டியது என்னவென்றால் –
மஹா லக்ஷ்மியாலும், பூமா தேவியாலும் கைகள் தாங்கப்பட்டுள்ள ஸ்ரீரங்கநாதனை உனது இனிமையான நாதம்
என் காதுகளில் இதமாக ஒலிக்கும்படி அழைத்து வரவேண்டும்.

ஸ்ரீ பாதுகையே என் அந்திம காலத்தில் ஸ்ரீ தேவி பூமி தேவியுடன் ஸ்ரீ ரங்க நாதனை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்து
என் காதுகளை உன் இன்பமான நாதத்தாலே திருப்தி செய்து அருள வேண்டும் –

————————————————————————————

அநுயாதி நித்யம் அம்ருதாத் மிகாம் கலாம்
தவ ரங்க சந்த்ர மணி பாது ஜங்க்ருதம்
ஸ்ரவஸா முகேந பரிபுஜ்ய யத் க்ஷணாத்
அஜராமரத்வம் உபயாந்தி ஸாதவ:—-392-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
சந்த்ர கலை என்ற அமிர்தத்தை ஒக்கும்படி உன்னுடைய ஜம் என்ற சப்தம் உள்ளது.
சந்த்ர கலை என்னும் அமிர்தத்தைப் பருகினால் மூப்பு மற்றும் மரணம் ஆகிய நிலைகள் ஏற்படாது.
அது போன்றே உன்னுடைய நாதத்தைக் காது என்ற முகம் கொண்டு பருகினால்,
கிழட்டுத் தன்மையையும் மரணம் அற்ற தன்மையையும் நொடிப் பொழுதில் அளிக்கிறது.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய ஜங்காரம் அமுத ஸ்வரூபமான சந்திர கலையை ஒத்து இருக்கிறது
பெரியோர் உன் நாதத்தை கேட்டால் மோஷம் சித்திக்கும் என்கிறார்கள்
ஆகையால் இரு விதமாகவும் அமிருதத்தை ஒத்து இருக்கும் உன் நாதம் நித்யானந்தத்தைத் தருகிறது –

————————————————————————–

பருஷைர் அஜஸ்ரம் அஸதாம் அநர்த்தகை:
பரிவாத பைசுந விகத்தந ஆதிபி:
மது கைடபாரி மணி பாதுகே மம
ச்ருதி துஷ் க்ருதாநி விநிவாரய ஸ்வநை:—-393-

மது மற்றும் கைடபன் ஆகிய இரண்டு அசுரர்களையும் அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
மற்றவர்கள் பற்றிக் கூறப்படும் புறங்கூறும் சொற்கள், தற் புகழ்ச்சி, மற்றவர்களைத் தூஷிக்கும் சொற்கள் ஆகியவை போன்று
எந்தப் பலனும் இல்லாத சொற்களின் ஓசைகள் காரணமாக எனது காதுகள் பாவம் நிறைந்துள்ளன.
உனது இனிமையான நாதம் மூலம் இந்தப் பாவங்களை நீ நீக்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே மஹா பாபிகள் பொறுக்க முடியாதபடி சாதுக்களை நிந்தித்தும் கோள் சொல்லியும்
தங்களைத் தாங்களே ஸ்துதித்தும் வருகிறார்கள்
இவைகளைக் கேட்டு துன்புற்ற என் காதுகளின் பாபங்களை உன் நாதம் கழிக்க வேண்டும் —

———————————————————————————–

பாதுகே பரிஜநஸ்ய தூரத:
ஸூசயந்தி கலு தாவகா: ஸ்வநா:
லீலயா புஜகதல்பம் உஜ்ஜத:
ஸ்ரீமத: த்ரி சதுராந் பத க்ரமாந்—-394-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நம்பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்தருளுகிற சமயத்தில்,
உனது இனிமையான நாதமானது அவனுக்குக் கைங்கர்யம் செய்பவர்களின் காதுகளில் விழுகின்றன.
தனது லீலைக்காக ஆதிசேஷனை விட்டு எழுந்து ஸஞ்சரிக்கும் ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தை
இவ்விதமாக உனது ஒலி தெரிவிக்கிறது அல்லவா?

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் திருப் பள்ளியில் இருந்து எழுந்து நடந்து எழுந்து அருளி வருவதைத் தூரத்தில் இருக்கும்
பரிஜனங்களுக்கு உன்னுடைய நாதம் அறிவிக்கின்றது –
அதை அறிந்து அவர்களும் கைங்கர்யம் செய்வதற்கு சித்தர்கள் ஆகிறார்கள் –

——————————————————————

தேவி தைத்ய தமநாய ஸத்வரம்
ப்ரஸ்தி தஸ்ய மணி பாதுகே ப்ரபோ:
விஸ்வ மங்கள விசேஷ ஸூசகம்
சாகுநம் பவதி தாவகம் ருதம்—395-

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே!
அனைத்து அசுரர்களை அழிக்கும் எண்ணத்துடன் நம்பெருமாள் புறப்படுகிறான்.
அப்போது அவனுக்கு அனைத்து வெற்றியையும் உண்டாக்க வல்ல ஸூபமான சகுனங்களை எழுப்பும்
பறவைகளின் ஒலியானது, உனது சப்தம் மூலமாக வெளிப்படுகிறது.

ஸ்ரீ பாதுகையே அசூர நிரசனதிற்காக எம்பெருமான் வெகு வேகமாக புறப்படும் போது
உன் இனிய நாதம் பஷியின் சப்தம் போல் ஸூப சகுனமாக ஒலிக்கிறது –

——————————————————————————

தாதும் அர்ஹஸி ததா மம ஸ்ருதௌ
தேவி ரங்க பதி ரத்ந பாதுகே
விஹ்வலஸ்ய பவதீய சிஞ்ஜிதம்
ஸ்வாது கர்ண ரஸநா ரஸாயநம்—396-

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகா தேவியே!
மரண காலத்தில் வேதனையுடன் உள்ள எனது காதுகள் என்ற நாக்கில், இனிமை அளிக்கும் விதமாக,
மருந்து போன்ற உன்னுடைய நாதத்தை அளிக்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே அந்திம காலத்தில் என் இந்த்ரியங்கள் எல்லாம் கலங்கி இருக்கும் .
அப்போது பகவானுடைய நினைவு வந்தால் ஜீவன் சரீரத்தை விட்டு பகவான் இடம் சென்று சேருவான்
உன்னுடைய இனிய சப்தம் என் காதில் பட்டு எனக்கு அந்த நினைவு வர வேண்டும் –

————————————————————–

அஹம் உபரி ஸமஸ்த தேவதாநாம்
உபரி மம ஏஷ: விபாதி வாஸுதேவ:
தத் இஹ பர தரம் ந கிஞ்சித் அஸ்மாத்
இதி வதஸீவ பதாவநி ப்ரணாதை:—397-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து தேவதைகளுக்கும் நான் (பாதுகை) மேலானவளாக உள்ளேன்.
எனக்கு மேல் வாஸுதேவனாகிய நம்பெருமாள் உள்ளான்.
இந்த உலகில் நம்பெருமாளை விட உயர்ந்த வஸ்து வேறு எதுவும் இல்லை – என்று நீ
உனது இனிய நாதங்களால் கூறுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே நீ உன்னுடைய நாதங்களால் என்னை வணங்கும் தேவர்கள் அனைவருக்கும் மேலே நான் இருக்கிறேன் –
எனக்கு மேலே வாஸூ தேவன் இருக்கிறான் -அவனுக்கு மேலே ஒருவரும் இல்லை –
ஆக அவனே பர தமன் என்று அறிவிப்பவள் போல் உள்ளாய்-

—————————————————————————-

அவநத விபுதேந்த்ர மௌளி மாலா
மது மத சிக்ஷித மந்த்ர ப்ரயாதா
ப்ரதயஸி பரிரப்த சௌரி பாதா
மணிகலஹேந வியாத ஜல்பிதாநி—398-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை வணங்கிப் பணியும் தேவர்களின் தலைகளில் உள்ள மாலைகளின்
மதுவை நீ பருகுகிறாய் போலும். அதனால் ஏற்பட்ட மயக்கம் காரணமாக நீ மெதுவாக நடக்கிறாய்.
நம்பெருமாளின் திருவடிகளை எப்போதும் அணைத்தபடி, உன் மீது உள்ள இரத்தினக் கற்கள்
ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ள, இப்படியாக மது உண்ட மயக்கத்தில் பேசுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உன்னை வணங்கி இருக்கும் தேவ ஸ்ரேஷ்டர்கள் உடைய க்ரீடங்களில் இருக்கிற பூக்களின் தேனைப் பருகியதால்
மந்தமான நடை கொண்டு எம்பெருமானின் திருவடிகளை அணைத்துக் கொண்டவளாய்
உன் இனிய நாதத்தால் உயர்ந்த கருத்துக்களை பிரகாசப் படுத்துகிறாய் –

—————————————————————————————-

ஆஸ்தாநேஷு த்ரிதச மஹிதாந் வர்த்தயித்வா விஹாராந்
ஸ்தாநே ஸ்தாநே நிஜ பரிஜநம் வாரயித்வா யதார்ஹம்
வாஸாகாரம் ஸ்வயம் உபஸரந் பாதுகே மஞ்ஜு நாதாம்
ஆபர்யங்காத் ந கலு பவதீம் ரங்கநாத: ஜஹாதி–399-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
சபா மண்டபங்களில் தனக்கு நடத்தப்படும் உபசாரங்களை ஏற்றபடி உள்ள ஸ்ரீரங்கநாதன்,
மீண்டும் அந்தமபுரம் திரும்பும் போது செய்வது என்ன?
அவர்களில் யார் யாரை எந்த எந்த இடங்களில் நிறுத்த வேண்டுமோ அங்கங்கு நிறுத்தியபடி செல்கிறான்.
இனிமையான நாதம் உடைய உன்னை மட்டும் தன்னுடன் தனது கட்டிலைச் சென்று அடையும் வரை அவன் விடுவதில்லை.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் பல பேர் சேவிக்கும் படியாக பெரிய சபைகளில் எழுந்து அருளி பிறகு உள்ளே எழுந்து அருளுகிறார் –
ஏனைய கைங்கர்ய பரர்களை அவரவர் இடங்களில் நிறுத்தி விட்டு இனிய நாதத்துடன் இருக்கும்
உன்னை மட்டும் படுக்கை அரை வரை கூட்டிப் போகிறார் –

திருவாய்மொழி கோஷ்டி சாற்று முறை ஆஸ்தானத்துக்கு உள்ளேயே நடைபெறும் –

——————————————————————————————–

அந்தர் ந்யஸ்தைர் மணி பிருதிதம் பாதுகே ரங்க பந்தௌ
மந்தம் மந்தம் நிஹித சரணே மஞ்ஹுளம் தே நிநாதம்
பச்யந்த்யாதி க்ரம பரிணதே: ப்ராக்தநீம் தாம் பராயா:
மன்யே மித்ரா வருண விஷயாத் உச்சரந்தீம் அவஸ்தாம்—-400-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் வெதுவாகத் தனது திருவடியை வைக்கும் போது,
உன்னுள்ளே இருக்கின்ற இரத்தினக்கற்கள் சப்தம் செய்கின்றன. இந்த இனிய நாதம் எப்படி உள்ளது என்றால்,
பஸ்யந்தீ என்ற முதல் அவஸ்தையை உடைய சப்தங்களைக் கொண்ட,
நாபிக் கமலத்தில் இருந்து வெளியே எழும் முதல் அவஸ்தை போன்று உள்ளது.

நாபியில் இருந்து கிளம்பும் காற்றானது சப்தமாக வெளி வருகிறது. இந்தச் சப்தம் நான்கு நிலைகளில் உள்ளது –
பரா, பச்யந்தி, மத்யமா மற்றும் வைகரி என்பதாகும். முதல் மூன்றும் நமது காதுகளால் நாம் கேட்கக் கூடிய சப்தங்கள் ஆகும்.

ஸ்ரீ பாதுகையே உன்னிடத்தில் பெருமாள் மெதுவாய்த் திருவடி வைக்கும் போது உன் குமிழியில் உள்ள ரத்னங்கள்
மிருதுவாக சப்தம் செய்கின்றன -அது சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட சப்தத்தின் நான்கு அவஸ்தைகளுக்குள் –
பரா -என்கிற முதல் அவஸ்தை போல் உள்ளது
மித்ரா வருணா தேவதைகள் ஆட்சி செய்யும் தொப்புள் பகுதியில் இருந்து வரும் நாதம் போல -உள்ளது –

——————————————————————————————-

ப்ரக்யாதாநாம் பரிஷதி ஸதாம் காரயித்வா ப்ரதிஜ்ஞாம்
ப்ராயேண த்வாம் ப்ரதித விபவாம் வர்ணயந்தீ மயா த்வம்
பாதந்யா ஸக்ரமம் அநுகுணாம் ப்ராப்ய ரங்காதி ராஜாந்
பத்ய ஆரம்பாந் கணயஸீ பரம் பாதுகே ஸ்வைர் நிநாதை:—-401-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் புகழுடைய பெரியவர்கள் நிறைந்த கூட்டத்தில் உன்னைப் பற்றிய
ஆயிரம் ஸ்லோகங்களை இயற்றுகிறேன் என்று என்னைச் சபதம் செய்ய வைத்தாய்.
இதன் மூலம் எங்கும் புகழ் கொண்ட நீ, என் மூலமாக உனது புகழை மேலும் புகழ்ந்து கொண்டாய்.
ஒவ்வொரு ஸ்லோகமும் இயற்ற இயற்ற, நம்பெருமாள் திருவடிகளை எடுத்து வைப்பதற்கு ஏற்றபடி உள்ள
உனது நாதம் கொண்டு ஒன்று, இரண்டு என்று லோகங்களின் தொடக்கத்தை எண்ணுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரெங்க நாதன் எழுந்து அருளும் போது உன்னிடம் இருந்து சப்தம் உண்டாகிறது –
ஒரு இரவுக்குள் ஆயிரம் ஸ்லோகங்கள் பிரசித்தமான மண்டபத்தில் பண்ணும் படியாக என்னை நியமித்து
நீயே அவைகளை ஓன்று இரண்டு என எண்ணுவது போலே அந்த சப்தம் அமைந்து உள்ளது –

—————————————————————

விஷ்ணோர்: அஸ்மிந் பத ஸரஸிஜே வ்ருத்தி பேதைர் விசித்ரை:
ஐதம் பர்யம் நிகம வசஸாம் ஐக கண்ட்யேந ஸித்தம்
இத்தம் பும்ஸாம் அநி புணதியாம் பாதுகே த்வம் ததேவ
ஸ்ப்ருஷ்ட்வா ஸத்யம் வதஸி நியதம் மஞ்ஜுநா சிஞ்ஜிதேந—402-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து உபநிஷத்துக்களும் சேர்ந்து நின்று ஒரே குரலாக, தங்களது வெவ்வேறு
ஆற்றல்கள் மூலமாக, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பற்றியே பேசுகின்றன.
இந்தச் சப்தமானது உனது இனிய நாதத்தை ஒத்துள்ளது. இதனை இவ்விதம் அறியாமல் உள்ளவர்களுக்கு,
தாமரை மலர் போன்ற நம்பெருமாளின் திருவடிகளைத் தொட்டு, உனது நாதம் மூலமாகவே சத்தியம் செய்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் உன்னை சாற்றிக் கொண்டு எழுந்து அருளுகிற காலத்தில் நீ செய்யும் சப்தம் எம்பெருமானே
வேதங்களும் உபநிஷத்துக்களும் பிரதிபாதிக்கும் தெய்வம் என்று அவர் திருவடிகளையே தொட்டு சத்யம் செய்வது போல் இருக்கிறது –

—————————————————————–

ஆம்நாயை: த்வாம் அநிதரபரை: ஸ்தோதும் அப்யுத்யதாநாம்
மந்யே பக்த்யா மதுவிஜயிந: பாதுகே மோஹ பாஜாம்
சிக்ஷா தத்த்வ ஸ்கலித வசஸாம் சிக்ஷயஸ்யேவ பும்ஸாம்
மாத்ராதீநி ஸ்வயம் அநுபதம் மஞ்ஜுபி: ஸ்வைர் நிநாதை:—-403-

மது என்ற அசுரனை வெற்றி கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்கள் அனைத்தும் உன்னைத் தவிர
மற்ற யாரையும் உயர்வாகக் கூறுவதில்லை. அப்படிப்பட்ட வேதங்கள் கொண்டு உன்னைக் கூறியபடி வரும்போது,
நடுவில் உன் மீது கொண்டுள்ள ப்ரியம் காரணமாக வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறியபடி உள்ளன.
அப்போது அவர்களுக்கு எழுத்துக்களில் உள்ள குறில், நெடில் முதலானவற்றைப் பற்றிய விளக்கத்தை
உனது இனிமையான நாதம் மூலம் புரிய வைக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உயர்ந்த பரதத்வம் ஆகிய எம்பெருமானை வேதங்கள் ஸ்துதிக்கின்றன-
மஹான்கள் அவர் குண நலன்களின் உயர்வில் ஈடுபட்டு இடையில் மயக்கம் உற்று ஸ்துதிக்க முடியாமல் தடுமாறும் போது
உன் நாதம் சரியான சொற்களை அவர்களுக்குச் சொல்லி வைப்பது போல் இருக்கிறது –

————————————————————————————

லக்ஷ்மீ காந்தம் கமபி தருணம் ரத்யாய நிஷ்பதந்தம்
ராகாத் த்ரஷ்டும் த்வரித மநஸாம் ராஜதாதீ வதூநாம்
ப்ரத்யா தேசம் பஜதி மதுரை: பாதுகே சிஞ்ஜிதைஸ்தே
சேதோஹாரீ குஸுமதநுஷ: சிஞ்ஜிநீ மஞ்ஜுநாத:—-404-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான நம்பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு
திருவரங்கத்தின் வீதிகளில் ஸஞ்சாரமாக வருகிறான். மிகவும் அழகான இளைஞனாக உள்ள அவனைக் காண ஆசை கொண்டு,
திருவரங்கத்தின் பெண்கள் ஓடி வருகின்றனர். அவர்களது மனதை இவ்விதம் காமதேவன் தனது வில் கொண்டு சப்தம் செய்கிறான்.
அவனது வில்லின் ஓசையானது, உன் இனிமையான நாதத்தின் மூலம் தள்ளப்பட்டு விடுகிறது.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் சௌந்தர்யத்தின் உருவாகத் திருவீதியில் எழுந்து அருளும் போது பெண்கள்
ஆவல் கொண்ட மனத்தவர்களாக தரிசனத்திற்கு வீட்டில் இருந்து வருகின்றனர் –
அப்பொழுது அவர்கள் மனத்தைக் கவர வரும் மன்மதன் புஷ்ப தனுசைத் தட்டி நாண் ஒலி எழுப்புகிறான் –
ஸ்ரீ பாதுகா தேவியே அப்பொழுது உன்னுடைய நாதங்கள் அந்த நாண் ஒலியை விரட்டி விடுகின்றன –
இவர்களும் காமத்தில் இருந்து விடுபட்டு உன்னையே தொடர்கிறார்கள் –

——————————————————————————-

ரங்காதீசே ஸஹ கமலயா ஸாதரம் யாயஜூகை:
ஸாரம் திவ்யம் ஸவநஹ விஷாம் போக்தும் ஆஹூயமாநே
நேதீயோபிர் நிகம வசஸாம் நித்யம் அம்ஹ: ப்ரதீபை:
ப்ரத்யாலாபம் திசதி பவதீ பாதுகே சிஞ்ஜிதை: ஸ்வை:—405-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! யாகம் இயற்றுபவர்கள் அந்த வேள்வியின் அவிர்பாகத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீரங்கராச்சியாருடன் கூடியுள்ளவனான ஸ்ரீரங்கநாதனை அழைக்கின்றனர். அப்போது நீ செய்வது என்ன?
அனைத்து வேதங்களுக்கும் ஒப்பாக உள்ளவையும், கேட்ட மாத்திரத்தில் அனைத்துப் பாவங்களையும்
தொலைப்பதாக உள்ளதும் ஆகிய உனது இனிய நாதம் மூலம்,
அவர்களிடம், “இதோ! நம்பெருமாள் வந்து விட்டான்”, என்று அறிவிப்பதாக உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே யாகம் செய்பவர்கள் ஹவிஸ்ஸை ஸ்வீகரிக்க தாயார் உடன் எம்பெருமானை அழைக்கிறார்கள்
நீ உண்டு பண்ணுகிற தொனி வருகிறேன் என அதற்கு பதில் சொல்வது போல் இருக்கிறது –

—————————————————————————–

உபாஸ்ய நூநம் மணி பாதுகே த்வம்
ரங்கேச பாதாம்புஜ ராஜ ஹம்ஸீம்
பத்யு: ப்ரஜாநாம் அலபந்த பூர்வம்
மஞ்ஜுஸ்வநம் வாஹந ராஜ ஹம்ஸா:—406-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நம்பெருமாளின் திருவடிகளில் நீ ராஜ ஹம்ஸமாகத் திகழ்கிறாய்.
உனது இனிமையான நாதத்தின் மூலம், உன்னை உபாஸனம் செய்த ப்ரம்மனின் அன்னங்கள்,
அழகான குரலைப் பெற்றன போலும்.

ஸ்ரீ பாதுகையே பிரம்மாவுடைய வாகனமான ராஜ ஹம்சங்கள் எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளுக்கு
ஹம்ஸம் போன்ற உன்னை ஆராதித்து இனிமையான சப்தத்தை அடைந்து உள்ளன –

————————————————————————————-

அநாதி மாயா ரஜநீ வசேந
ப்ரஸ்வாப பாஜாம் ப்ரதி போத நார்ஹம்
பஸ்யாமி நித்யாதி வாஸரஸ்ய
ப்ரபாத நாந்தீமிவ பாதுகே த்வாம்—407-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தொடக்கம் என்பதே இல்லாத மாயை போன்றும், எப்போதும் இரவு என்னும்படியாக
உள்ளதும் ஆகிய ஸம்ஸாரத்தில் துன்பம் அடைந்தபடி அனைவரும் உள்ளனர்.
இவர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய காலை நேரம் என்னும் மோக்ஷத்தை அறிவிக்கும் ஸூப்ரபாதம் போன்று உனது நாதம் உள்ளது.

ஸ்ரீ பாதுகையே பிரகிருதி என்ற ராத்ரியில் அகப்பட்டு நாங்கள் துன்புற்று இருக்கிறோம் –
உன் இனிய நாதம் ஜனங்களை எழுப்பி எப்போதும் பகலாக இருக்கும் மோஷத்திற்கு அழைத்துச் செல்ல
மங்கள வாத்தியம் வாசிப்பது போல் இருக்கிறது -நிலையான இன்பத்தின் ஸூபாரம்பமாக இருக்கிறது –

————————————————————-

ஸ்ரூணோது ரங்காதிபதி: ப்ரஜாநாம்
ஆர்த்த த்வநீம் க்வாபி ஸமுஜ்ஜிஹாநம்
இதீவ மத்வா மணி பாதுகே த்வம்
மந்த ப்ரசாரைர் ம்ருது சிஞ்ஜிதாஸி—408-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! நம்பெருமாளை நீ உன் மீது எழுந்தருளப் பண்ணிக் கொண்டு செல்கிறாய்.
அப்போது ஒரு சிலர் மிகுந்த வருத்தத்தில் இருந்தபடி நம்பெருமாளிடம் தங்கள் குறைகளைக் கூறக் கூடும்.
அவர்கள் கூறுவது அவன் செவிகளில் விழாமல் போய் விடுமோ என்று எண்ணி, மெதுவாக சப்தம் எழுப்பியபடி நீ செல்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே சேதனர்கள் சம்சார துக்கத்தினால் எழுப்பும் அபயக் குரல் எம்பெருமான் திருச் செவிகளில் பட வேண்டும்
என்று நீ மெதுவாக சப்தித்துக் கொண்டு செல்கிறாய் போலும்

———————————————————————

அந்தே மம ஆர்த்திம் சமயிஷ்ய தஸ்தாம்
அக்ரே ஸராணி ஆபதத: முராரே:
ஸ்ரமோ பபந்ந: ஸ்ருணுயாம் பவத்யா:
சீதாநி பாதாவநி சிஞ்ஜாதாநி—-409-

ஸ்ரீரங்க நாதனின் பாதுகையே! எனது அந்திம காலத்தில் மிகவும் களைப்புடன் நான் உள்ள போது,
அந்தத் துன்பத்தை நீக்க நம்பெருமாள் மிகவும் வேகமாக ஓடி வருவான்.
அப்போது அவனுக்கும் முன்பாக ஓடி வரும் உனது இனிமையான நாதத்தை நான் கேட்பேனாக.

ஸ்ரீ பாதுகையே கடைசிக் காலத்தில் நான் அதிகமாக ஸ்ரமப்படுவேன் –
அப்போது பெருமாளுடன் நீ எழுந்து அருளும் போது உன் இனிய சப்தம் என் சிரமத்தை போக்க வேண்டும் –

——————————————————–

ஸ்வாதூநி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
ஸ்ரோத்ரை: பிபந் தஸ்தவ சிஞ்ஜிதாநி
பசந்தி அவித்யா உபசிதாந் அசேஷாந்
அந்தர் கதாந் ஆத்ம வித: கஷாயாந்—-410-

ஸ்ரீரங்க நாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! சிறந்த ருசியுடன் கூடிய உன்னுடைய மருந்து போன்ற நாதங்களை,
தங்களை முழுவதுமாக உணர்த்தவர்கள் தங்கள் காதுகளால் பருகுகின்றனர்.
இதனால் தங்களது அறியாமையால் உள்ளே வளர்ந்துள்ள உலக விஷயங்களின் மீதுள்ள ஆசை என்பதை அவர்கள் எரித்து விடுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே அதிக இன்பமாய் இருக்கும் உன் நாதத்தைக் கேட்ட மகாநீயர்கள் அவித்யையினால் உண்டான
தங்கள் மனதில் உள்ள ராக த்வேஷாதி தோஷங்களை ஒழிக்கிறார்கள் –

———————————————————————

அவைமி ரங்காதிபதே: ஸகாசாத்
அவேக்ஷ மாணேஷு ஜநேஷு ரக்ஷாம்
உதார நாதாம் மணி பாதுகே த்வாம்
ஓம் இதி அநுஜ்ஞாக்ஷரம் உத் கிரந்தீம்—-411-

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! மிகவும் கம்பீரமான முறையில் நம்பெருமாள்
உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்தருளுகிறான். அப்போது ஏற்படும் உனது சப்தம் எவ்விதம் உள்ளது தெரியுமா?
தங்கள் துன்பத்தை நீக்க வேண்டும் என்று நம்பெருமாளிடம் வேண்டுபவர்களிடம், “அப்படியே ஆகட்டும்”, எனக் கூறுவது போல் உள்ளன.

ஸ்ரீ பாதுகையே ஜனங்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று ஸ்ரீ ரங்க நாதனைக் கேட்கிற காலத்தில்
உன் இனிய சப்தம் அப்படியே ஆகட்டும் என்று சொல்வது போல் இருக்கிறது –

——————————————————————————-

மதுத் விஷ: ஸ்வைர விஹார ஹேது:
மஞ்ஜு ஸ்வநாந் சிக்ஷயஸீவ மாத:
பர்யந்த பாஜோர் மணி பாத ரக்ஷே
பத்மா தரண்யோர் மணி நூபுராணி—-412-

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! தாயே! மது என்ற அரக்கனின் சத்ருவாகிய நம்பெருமாளின்
இரு பக்கமும் அமர்ந்துள்ள ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய இருவரின் தண்டைகள் இனிமையான ஒலி எழுப்புகின்றன.
நம்பெருமாளுடன் உன் விருப்பப்படி ஸஞ்சாரம் செய்யும் நீ, உனது இனிய நாதத்தை அந்தத் தண்டைகளுக்குக் கற்றுக் கொடுத்தாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதனுடைய சஞ்சார காலத்தில் உன் இனிய நாதத்தைக் கேட்டால் பக்கத்தில் உள்ள
ஸ்ரீ தேவி பூமி தேவி யுடைய திருவடித் தண்டைகளுக்கு சப்தங்களைப் பழக்கி வைப்பது போல் இருக்கிறது –

—————————————————————————

ப்ராஸ்தா நிகேஷு ஸம்யேஷு ஸமாகதேஷு
ப்ராப்தா பதம் பரிசிதம் த்விஜ புங்கவேந
புஷ்ணாஸி ரங்க ந்ருபதே: மணி பாதுகே த்வம்
புண்யாஹ கோஷம் இவ கர்ப்ப மணி ப்ரணாதை:—-413-

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்ய வேண்டிய கால கட்டங்களில்,
பறவைகளில் உயர்ந்தவனான கருடனால் அடிக்கடி அடையப்படும் திருவடிகளை நீ அடைகிறாய்.
உன்னுள் இருக்கும் இரத்தினக்கற்கள் அப்போது இனிமையான நாதம் ஏற்படுத்துகின்றன.
இதனைக் காணும் போது க்ஷேமம் அளிக்க வல்ல மந்திரங்களை நீ கூறுவது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் உடைய சஞ்சார காலத்தில் உன்னுள் இருக்கும் இரத்தினங்களின் சப்தங்களைக் கேட்கிற போது
பகவானுக்கு ஷேமங்களை உண்டு பண்ண ஸ்வஸ்தி மந்த்ரங்களை நீ ஜபிப்பது போல் இருக்கிறது –

————————————————————-

ஆர்த்த த்வநே: உசிதம் உத்தரம் அந்த காலே
கர்ணேஷு மஞ்ஜு நிநதேந கரிஷ்ய ஸீதி
வாஸம் பஜந்தி க்ருதிநோ மணி பாத ரக்ஷே
புண்யேஷு தேவி புளிநேஷு மருத் வ்ருதாயா:—-414-

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! தங்களது இறுதி காலத்தில் பெரியவர்கள்,
மிகவும் தூய்மையான காவேரியின் மணல்கள் நிறைந்த ஸ்ரீரங்கத்தில் வாஸம் செய்கின்றனர். ஏன் தெரியுமா?
தங்களது முடிவு காலத்தில் ஏற்பட வுள்ள வேதனை காரணமாக எழுப்பும் துன்ப ஒலிகளை,
உன்னுடைய செவிகளில் உள் வாங்கி, அவர்களுக்கான மறு மொழியை உனது நாதத்தினால் அளிப்பாய் என்பதால் ஆகும்.

ஸ்ரீ பாதுகையே பாக்யசாலிகள் சம்சாரத் துன்பம் பெறாமல் செய்யும் அபயக் குரலுக்கு நீ உன் இனிய ஒலியினால் பதில் அளிப்பாய் என்று
தம்முடைய அந்திம காலத்தில் புண்யமான காவேரியின் மணலில் அதாவது ஸ்ரீ ரங்கத்தில் வசிக்கின்றனர் –

—————————————————-

தூத்யே பலேர்விமதநே சகடஸ்ய பங்கே
யாத்ரா உத்ஸவேஷு ச விபோ: ப்ரதிபந்ந ஸக்யா
வீராயிதாநி பிருதோ பஹிதாநி நூநம்
மஞ்ஜுஸ்வநை: ப்ரதயஸே மணி பாதுகே த்வம்—-415-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான்;
மஹாபலிச் சக்ரவர்த்தியின் கர்வத்தை அடக்கினான்; சகடாஸுரனை முறித்தான். இப்படியாக அவன் நடந்திய வீரச் செயல்கள்
காரணமாக அவனுக்கு ஏற்பட்ட பட்டப் பெயர்களை, அவன் திருவடிகளை விட்டு எப்போதும் பிரியாமல் உள்ள நீ,
உனது இனிய நாதங்கள் மூலம் கூறியபடி உள்ளாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் தர்ம புத்திரருக்காகத் தூது போன சந்தர்ப்பத்திலும்
பலி சக்ரவர்த்தியை அடக்கிய போதும் -சகடாசூரனை முறித்த போதும் உத்சவ காலங்களிலும்
எப்போதும் பிரியாத சிநேகத்தை நீ உடைத்தாய் இருக்கிறாய் –
உன் இனிய நாதத்தால் எம்பெருமானுடைய இப்படியான வெற்றிகளை பிரசித்தப் படுத்துகிறாய் –

——————————————————————

ஸ்தோதும் ப்ரவ்ருத்தம் அபி மாம் நிகம ஸ்துதாம் த்வாம்
வ்யாஸஜ்யமாந கரணம் விஷயேஷு அஜஸ்ரம்
அந்தர் மணி த்வநிபி: அச்யுத பாத ரக்ஷே
ஸம்போதயஸி அநுகலம் ஸஹஜ அநு கம்பா—416-

அடியார்களை நழுவ விடாத ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்களில் துதிக்கப்பட்ட உன்னை நான் துதிக்கத் தொடங்குகிறேன்.
ஆயினும் நான் அந்தத் துதிகளில் கவனம் செலுத்தாமல், உலக விஷயங்களில் நாட்டம் கொண்டபடி உள்ளேன்.
இதனைக் கண்ட நீ, என் மீது இயல்பாகவே தயையுடன் உள்ளவளான நீ, செய்வது என்ன –
உன்னுடைய இரத்தினக் கற்களின் இனிமையான நாதம் மூலம் எனது கடமையை நினைவு படுத்தியப்படி உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே வேதங்களால் ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட உன்னை ஸ்துதி செய்யும் இந்த மகத்தான கார்யத்தை ஏற்ற நான்
இந்த்ரியங்களுக்கு வசப்பட்டு இருக்கும் நேரம் நீ உன் இரத்தினங்களின் நாதத்தால் என் கடமையை நினைவூட்டுகிறாய்
என்னைத் தெளிவுறச் செய்கிறாய் –

———————————————————————–

தேவஸ்ய தாந வரிபோ: மணி பாத ரக்ஷே
ப்ரஸ்தாந மங்கள விதௌ ப்ரதிபந்த நாதாம்
மா பைஷ்ட ஸாதவ இதி ஸ்வயம் ஆலபந்தீம்
ஜாநே ஜகத் த்ரிதய ரக்ஷண தீக்ஷிதாம் த்வாம்—-417-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அசுரர்களுக்கு சத்ருவாக நம்பெருமாள் உள்ளான்.
அவனுடைய ஸஞ்சாரம் என்ற சுப செயலின் இனிமையான நாதத்தை நீ அடைகிறாய்.
மூன்று உலகங்களையும் காப்பதில் நீ உறுதியுடன் உள்ளாய் போலும். அதனால் தான் உனது நாதம் மூலம்,
”நல்லவர்களே! நீங்கள் அஞ்ச வேண்டாம்”, என்று கூறுகிறாய் என நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே உத்சவ காலங்களிலே எம்பெருமான் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்து அருளுகிறார் –
மூன்று உலகங்களையும் காப்பாற்றுவதில் நோக்கு உள்ளவளாக இருக்கும் உன்னுடைய நாதம்
நல்லவர்களே பயப்பட வேண்டாம் என்று சொல்வதாக நினைக்கிறேன் —

——————————————————————————–

ஸ்வச்சந்த விப்ரம கதௌ மணி பாதுகே த்வம்
பாதாரவிந்தம் அதிம்கம்ய பரஸ்ய பும்ஸ:
ஜாதஸ்வநா ப்ரதி பதம் ஜபஸீவ ஸூக்தம்
வித்ராவணம் கிமபி வைரிவரூதிநீநாம்—-418-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! நம்பெருமாள் தனது விருப்பத்தின்படி ஸஞ்சாரம் என்ற
விளையாட்டைச் செய்தபடி உள்ளான். நீ அப்போது அவனது திருவடிகளை அடைந்து, இனிமையான நாதம் உண்டாகப் பெற்றாய்.
அவன் அருகில் வர முயற்சிக்கும் அவனது சத்ரு சேனைகளை, அவன் அருகில் வர விடாமல்,
உனது நாதம் மூலம் ஏதோ ஒரு மந்திரத்தை ஜபிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே பரம புருஷனுடைய விளையாட்டான சஞ்சார காலத்தில் தாமரை போன்ற அவன் திருவடியை அடைந்து
சத்ரு சைன்யங்களைத் துரத்தக் கூடிய மந்திரங்களை அடி வைப்பு தோறும் ஜபிக்கிறாய் போலும்

திருவாய்மொழியை அத்யயனம் செய்து மனதில் பதித்தால் கோபாதி சத்ருக்கள் ஒழியும் –

—————————————————————————-

ரக்ஷார்த்தம் ஆஸ்ரித ஜநஸ்ய ஸமுஜ்ஜிஹாநே
ரங்கேஸ்வரே சரதி சேஷ புஜங்க தல்பாத்
நாதாஸ்தவ ஸ்ருதி ஸுகா மணி பாத ரக்ஷே
ப்ரஸ்தாந சங்கநி நாதாத் ப்ரதமே பவந்தி—-419-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் சரத் காலத்தின் போது (ஐப்பசி மாதம்)
தன்னை அண்டியவர்களைக் காப்பதற்காக ஆதிசேஷன் என்ற படுக்கையை விட்டு எழுகிறான்.
அப்போது அனைவரின் காதுகளுக்கும் இனிமையாக உள்ள உனது நாதங்கள்,
அவனது புறப்பாடு நேரத்தில் ஊதப்படும் சங்கின் ஒலியை விட முந்தியதாக ஒலிக்கின்றன.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஆஸ்ரிதர்களை காப்பாற்ற சரத் காலத்தில் சேஷன் ஆகிற படுக்கையில் இருந்து
உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்து அருளுகிறார் –
அப்போது உன்னிடம் இருந்து உண்டாகும் சப்தம் சங்கம் முதலிய வாத்திய சப்தங்களுக்கும் முந்தினதாக இருக்கிறது –

——————————————————-

நித்யம் பதாம் புருஹயோ: இஹ கோபிகாம் த்வாம்
கோபீ ஜந ப்ரிய தமோ மணி பாத ரக்ஷே
ஸம்பந்ந கோஷ விபவாம் கதிபி: நிஜாபி:
ப்ரீத்யேவ ந த்யஜதி ரங்க ஸமாஸ்ரிதோபி—-420-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! கோபிகைகளுக்கு மிகவும் ப்ரியமானவனாகிய நம்பெருமாள்,
தனது ஸஞ்சாரங்கள் முடிந்து ஸ்ரீரங்க விமானத்தை அடைந்த பின்னரும் உன்னை விடுவதில்லை.
மிகவும் இனிமையான நாதம் கொண்ட உன்னை அவன் கோபிகை என்றே கருதி யுள்ளான் போலும்.

ஸ்ரீ பாதுகையே கோபிகைகளுக்குப் பிரியனான எம்பெருமான் தன் திருவடிகளுக்கு கோபிகையாக -ரஷ்கையாக -இருப்பதால்
உன்னை ஒரு போதும் ப்ரீதியினால் விடுவது இல்லை -உன் நடையினால் நீ கோஷ விபவம் -ஒலியின் பெருமை –
நிறைந்து உள்ளாய் -ஆகவே ஸ்ரீ ரங்கத்தை அடைந்து இருந்தும் ஸ்ரீ ரங்க நாதன் உன்னை விடுவது இல்லை –

————————————————————–

ப்ராய: பதாவநி விபோ: ப்ரணதார்த்தி ஹந்து:
ப்ரஸ்தாந மங்கள விதௌ ப்ரதம உத்யதாநி
த்வத் சிஞ்ஜிதாநி ஸபதி ஸ்வயம் ஆர பந்தே
காலோசிதாந் கனக காஹள சங்க நாதான்—-421-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தன்னை வணங்கி நிற்பவர்களின் துயரம் அனைத்தையும் நீக்குபவனாகிய
நம்பெருமாள் ஸஞ்சாரம் செய்யத் தயாராகிறான்.
அந்த சுப நேரத்தை குறிக்கும் வகையில் உனது இனிமையான நாதங்கள் எழுகின்றன.
இதனைக் கேட்ட எக்காளம், சங்கு ஆகிய வாத்தியங்கள் ஒலிக்கத் தொடங்குகின்றன.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு புறப்படும் போது முதலில் உண்டாகும் உன் சப்தம்
பிரயாணத்திற்கு வேண்டிய எக்காளம் சங்கம் பேரி இவைகளின் சப்தங்கள் போல் இருக்கிறது –

ஆழ்வார் திவ்ய ஸூக்தியை முறைப்படி சேவித்தால் பதினெட்டு வாத்தியங்களின் நாதத்தை காட்டிலும் இன்பமாக இருக்குமே –
பாவின் இன்னிசை பாடித் திரியலாமே –

———————————————————————————-

ஆம்ரேடித ஸ்ருதி கணைர் நிநதை: மணீநாம்
ஆம்நாய வேத்யம் அனுபாவம் அபங்குரம் தே
உத்காஸ்யதம் நியதம் இச்சஸி ஸாம காநாம்
காந ப்ரதாநம் இவ சௌரி பதாவநி த்வம்–422-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்களால் அறியக்கூடிய உன்னுடைய மேன்மையைக் குறித்து
சாம வேதம் அறிந்தவர்கள் கூறியபடி உள்ளனர்.
நீ அவர்களின் வேதத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு மேலும் சங்கீதம் கற்றுக் கொடுக்க விரும்புகிறாய் போலும்.
அதனால் தான் உனது இரத்தினக்கற்கள் கொண்டு இனிய ஒலி எழுப்பியபடி உள்ளாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் உன்னுடன் சஞ்சாரம் செய்யும் போது உண்டாகும் உன் நாதம்
பெருமைகளைக் கூறி சாம கானம் செய்யும் மகாநீயர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது போல் இருக்கிறது –

—————————————————————

ரத்யாஸு ரங்க ந்ருபதே மணி பாத ரக்ஷே
த்வத் கர்ப்ப ரத்ந ஜநித: மதுர: ப்ரணாத:
ஸந்தர்சந உத்ஸுக தியாம் புர ஸுந்தரீணாம்
ஸம்பத்யதே ஸ்ரவண மோஹன மந்த்ர கோஷ:—423-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
நம்பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு திருவரங்கத்தின் திருவீதிகளில் ஸஞ்சாரம் செய்கிறான்.
அப்போது உன்னுள்ளே இருக்கும் இரத்தினக் கற்கள் இனிமையான நாதம் செய்கின்றன.
இதனைக் கேட்ட அங்கிருந்த பெண்களின் காதுகள், எதிரில் நிற்கும் நம்பெருமாளையும் மறந்து, அந்தச் சப்தத்தில் மயங்கி நின்றன.

ஸ்ரீ பாதுகையே திரு வீதியில் பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்து அருளும் போது உண்டாகும் இனிய நாதம்
மற்றைய விஷயங்களை மடியச் செய்யும் மந்த்ரமாக ஆகிறது –

———————————————————————-

ஆகஸ்மிகேஷு ஸமயேஷு அபவார்ய ப்ருத்யாந்
அந்த:புரம் விசதி ரங்க பதௌ ஸலீலம்
வ்யாமோஹநேந பவதீ ஸுத்ருசாம் அதீதே
மஞ்ஜுஸ்வநேந மதநோபநிஷத் ரஹஸ்யம்—-424-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திரு வீதிகளில் ஸஞ்சாரமாகச் சென்று கொண்டிருக்கும் நம்பெருமாள்
திடீரென அதனை நிறுத்தி விட்டு, தனது அந்தப்புரத்தில் நுழையக் கூடும்.
அந்த நேரத்தில் அவன் அவ்வாறு வருவதை, நீ முன் கூட்டியே உனது நாதந்தினால் அறிவிக்கிறாய்.
இதனால் அங்குள்ள பிராட்டிகளுக்கு மன்மத சாஸ்த்ரங்களை ஓதி, அவர்களை மயங்க வைக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் எதிர்பாராது பிராட்டியின் சந்நிதியில் பிரவேசிக்கும் போது இன்பமான உன் நாதத்தால்
மன்மத வேதாந்தத்தின் அபூர்வமான பொருளை பிராட்டிக்கு சொல்லித் தருகிறாய் –

——————————————————————-

யாத்ரா விஹார ஸமயேஷு ஸமுத்திதம் தே
ரங்காதிபஸ்ய சரணாவநி மஞ்ஜு நாதம்
பர்யாகுல இந்த்ரிய ம்ருக க்ரஹணாய பும்ஸாம்
ஸம் மோஹநம் சபர கீதம் இவ ப்ரதீம:—-425-

ஸ்ரீரங்ககநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
மான்களைப் பிடிப்பதற்காகக் கானகத்தில் வேடர்கள் இனிய இசையை எழுப்புவது வழக்கம் ஆகும்.
இது போன்று நம்பெருமாள் வீதிகளில் ஸஞ்சாரம் வரும்போது நீ செய்வது என்ன?
எங்கள் போன்றவர்களின் புலன்கள் என்னும் மானைப் பிடிக்க, உனது நாதம் என்னும் இனிய இசையை
எழுப்பியபடி வருகிறாய் என்றே நாங்கள் கருதுகிறோம்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானால் தரப்பட்ட கண் முதலிய இந்த்ரியங்கள் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடாமல் கெட்ட வழிகளில் செல்கின்றன –
வேடன் பாட்டுப் பாடி அலைந்து திரியும் மான்களை மறைந்துள்ள குழியில் வீழ்த்துப் பிடிப்பது போல்
உன் நாதம் எங்கள் இந்த்ரியங்களைக் கட்டுப் படுத்துகிறது –

திருவாய்மொழியை அர்த்தத்துடன் அனுசந்தானம் செய்பவர் மனம் கெட்ட வழிகளில் செல்லாது –

———————————————————————–

ப்ராயேண ஸஹ்ய துஹிது: நதராஜ கன்யா:
ஜாமாது: ஆகமந ஸூசநம் ஈஹமாநா
மஞ்ஜு ப்ரணாத ஸுபகை: மணி பாதுகே த்வாம்
அந்தர்யுதாம் அக்ருத யௌதக ரத்ந கண்டை:—-426-

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! காவேரியின் மாப்பிள்ளையான நம்பெருமாள்,
காவேரியின் கரைக்கு வருவதை, காவேரிக்கு அறிவிக்க ஸ்ரீரங்கநாச்சியார் விரும்பினாள்.
இதனால் தனக்குச் சீதனமாக வந்த உயர்ந்த இரத்தினக் கற்கள் பலவற்றையும் உனது குமிழுக்குள் வைத்து,
நீ வரும்போது இனிமையான நாதம் ஏற்படும்படிச் செய்தாள் போலும்

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் எழுந்து அருளும் போது உன்னுள் இருக்கும் ரத்தினங்கள் இன்பமாக சப்திக்கின்றன –
அதைப் பார்க்கும் போது ஸ்ரீ மஹா லஷ்மி சமுத்திரத்தின் பத்னியாகிய தன் தாயாராகிய காவிரிக்கு அவள்
மாப்பிள்ளையின் வரவை அறிவிக்க உன் குமுழியில் ரத்தினங்களை இட்டாளோ எனத் தோன்றுகிறது

தாயார் தன் இயற்கையின் கருணையால் உயர் குணங்கள் ஆகிய ரத்தினங்களை ஆழ்வாருக்குக் கொடுத்தாள் –
அதுவே திருவாய் மொழியாகிய இனிய நாதத்தை ஏற்படுத்தியது –

—————————————————————————–

நித்யம் விஹார ஸமயே நிகம அநுயாதை:
விக்ஷேப தாண்டவித கர்ப்ப மணி ப்ரஸூதை:
நாதை: ஸ்வயம் நரக மர்த்தந பாத ரக்ஷே
நாத அவஸாந நிலயம் வதஸீவ நாதம்—-427-

நரகாசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
ஸஞ்சார காலங்களில் நம்பெருமாள் வேதங்கள் தன்னைப் பின் தொடர வருகிறான்.
அந்த வேதங்கள் மூலமாக, உனது உள்ளே இருக்கும் இரத்தினங்கள் அசைகின்றன.
அப்போது எழும் இனிய நாதம் மூலம், ஸ்ரீரங்கநாதன் அந்த நாதத்தின் முடிவில் உள்ளவன் என்று கூறுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே யோகிகள் எம்பெருமானை சாஷாத்காரம் செய்யத் த்யானம் செய்யும் போது சரீரத்துள் ஒரு சப்தம் உண்டாகிறது –
அந்த சப்தம் நிற்கிற சமயத்தில் எம்பெருமான் சேவை சாதிக்கிறார்
எம்பெருமான் சஞ்சார காலத்தில் உண்டாகும் உன் சப்தம் இந்த செய்தியைத் தெரிவிப்பது போல் இருக்கிறது –

———————————————————————————–

ஸாதாரணேஷு யுவயோர் மணி பாத ரக்ஷே
தேவஸ்ய தாநவ ரிபோ: த்ரிஷு விக்ரமேஷு
அத்யாபி சிஞ்ஜித மிஷாத் அநுவர்த்தமாநம்
ந்யூநாதி கத்வ விஷயம் கலஹம் ப்ரதீம:—-428-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உங்கள் இரண்டு பேருக்கும் (இரண்டு பாதுகைகள்) அசுரர்களின் சத்ருவான
ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகள் பொதுவாகவே உள்ளன.
அப்படி இருந்தும், அவன் த்ரிவிக்ரமனாக உயர்ந்தபோது வைத்த மூன்று அடிகள் விஷயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக,
உங்கள் இருவருக்கும் அடிக்கடி சச்சரவு உள்ளது போலும்.
இதனையே உனது நாதமாக நாங்கள் எண்ணியபடி உள்ளோம் .

ஸ்ரீ பாதுகையே பெருமாள் எழுந்து அருளும் போது உண்டாகும் உன் சப்தத்தைக் கேட்டால் நீங்கள் இரண்டு பேரும்-ஸ்ரீ பாதுகைகள் இரண்டும் –
சண்டை இடுவது போல் இருக்கிறது -த்ரிவிக்ரம திரு வவதாரம் செய்த போது ஒரு திரு அடிக்கு பூமி -ஒரு திருவடிக்கு ஆகாயம்
மறு திருவடிக்கு மஹா பலியின் சிரஸ் என ஒரு ஸ்ரீ இரண்டும் மற்ற ஒரு ஸ்ரீ பாதுகைக்கு ஒன்றுமாக முறை வந்ததால்
நீங்கள் சண்டையிடுகிறீர்கள் போலும் –

————————————————————————————-

ப்ராய: பதாவநி விபோ: ப்ரணய அபராதே
மாந க்ரஹம் சமயிதும் மஹிஷீ ஜநாநாம்
உச்சாரயந்தி நிநதை: தவ கர்ப்ப ரத்நாநி
உத் காதம் அக்ஷரம் உபாஸ்ரய பாரதீநாம்—429-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாரிடம் சரியாகப் பழகாமல் இருந்தால் அவளுக்குக் கோபம் வந்துவிடுகிறது.
இந்தக் கோபம் என்னும் பிசாசை எது விரட்டுகிறது? உன்னுடையை இனிய நாதங்களே ஆகும். எப்படி?
அந்த நாதங்கள் மூலம், உன்னையே அண்டியுள்ள வேதங்களின் தொடக்க எழுத்தான ப்ரணவம் உச்சரிக்கப்படுகிறது.
இதனாலேயே அந்தப் பிசாசு ஓடி விடுகிறது.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் மீதுள்ள அத்யந்த அன்பினால் பிராட்டிக்கு அவர் மீது கோபம் வருகிறது –
உன்னைச் சாற்றிக் கொண்டு எம்பெருமான் பிராட்டியிடம் நெருங்கி எழுந்து அருளும் போது நீ உன் நாதத்தால்
பிரணவத்தை உச்சரித்து அவள் கோபம் என்னும் பிசாசத்தைப் போக்கி விடுகிறாய் –

————————————————————————————–

அந்த: சரேஷு பவநேஷு ஜுதேஷு அபிஜ்ஞா:
ப்ருத்யங்முகீம் பரிணமய்ய மந:ப்ரவ்ருத்திம்
ஆஸ்வாத யந்தி ஸரஸம் மணி பாத ரக்ஷே
நாத அவஸாந ஸமயே பவதீ நிநாதம்—-430-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
யோகம் செய்பவர்கள் தங்களுக்குள் இருக்கும் ப்ராண வாயுவை வசப்படுத்திய பின்னர்,
அந்தப் ப்ராணவாயு இயங்கும் சப்தமானது சற்றே நிற்கிறது.
அந்த நேரத்தில் அவர்கள் உனது இனிய நாதத்தைக் கேட்டு மிகவும் அனுபவித்தபடி உள்ளனர்.

ஸ்ரீ பாதுகையே யோகிகள் எம்பெருமானைத் த்யானம் பண்ணுகிற காலத்தில் முதலில் உள்ளே பிராண வாயுவின் சப்தம் புலப்படுகிறது –
அது நிற்கும் காலத்தில் எம்பெருமானை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வரும் உன்னுடைய இன்பமான நாதத்தை அனுபவிக்கிறார்கள் –

—————————————————————————————

தாக்ஷிண்யம் அத்ர நியதம் நியதா ஸுதாஸ்மிந்
இதி உத்கத: நியதம் அச்யுத பாத ரக்ஷே
ப்ரத்யேக ஸம்ச்ரித பதஸ்துதயே பவத்யோ
ஸங்கர்ஷ வாத இவ மத்ய மணிப்ரணாத:—431-

அடியார்களை நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
உங்களுக்குள் இருக்கும் இரத்தினக் கற்கள் ஒன்றுடன் மோதிக் கொள்ளும்போது எழும் நாதம் எவ்விதம் உள்ளது என்று தெரியுமா?
நம்பெருமாளின் இடது திருவடியில் அமிர்தம் உள்ளது என்று இடது பாதுகையும்,
வலது திருவடியில் அளவு கடந்த தாக்ஷிண்யம் (வேண்டுவதை மறுக்க இயலாத தன்மை) உள்ளது என்று வலது பாதுகையும் கூறி,
போட்டி இடுவது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உனது சப்தத்தைக் கேட்கும் போது நீவிர் இருவரும் உங்களை அடைந்த திருவடிகளின்
உயர் நலன்களைப் பற்றிச் சண்டை இடுவது போல் இருக்கிறது -அதாவது
வலது திருவடியில் வலதாக இருக்கை என்கிற தாஷிண்யமும்–
இடது திருவடியில் தவறாமல் -வாம பதாங்குஷ்ட நாஹா சீதாம்சு கலாட் திவ்ய அம்ருத ரசம் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ஸூக்திகள்-
அம்ருதம் இருக்கிறது என்பதும் –

————————————————————————————–

ஸஞ்சார கேளி கலஹாயித கர்ப்ப ரத்நா
ஸாம் ஸித்திகம் ஸகல ஜந்துஷு ஸார்வ பௌமம்
ரக்ஷார்த்தி நாம் ப்ரதய ஸீவ பதாவநி த்வம்
ரங்கேவரஸ்ய நிரவக்ரஹம் ஆந்ரு சம்ஸ்யம்—-432-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸஞ்சாரம் என்றும் விளையாட்டு மூலம்
தன்னுள் இருக்கும் இரத்தினக் கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதும்படியாக ,
இவ்விதம் அந்தக் கற்களை உன்னுள் இயற்கையாக வைத்துள்ளவளே! இந்தச் சப்தம் மூலம் –
அனைவரும் அறிந்ததும், தடங்கல் இல்லாமல் உள்ளதும், அனைத்து உயிர்களிடத்தில் வெளிப்படுவதும் ஆகிய
ஸ்ரீரங்கநாதனின் கருணையை, அனைவருக்கும் கூறுகிறாய் போலும் .

ஸ்ரீ பாதுகையே நீ உன் இனிய நாதத்தால் மக்கள் எல்லோருக்கும் தடை இன்றிப் பாயும் எம்பெருமான்
கருணையைக் குறித்து பிரகாசப் படுத்துகிறாய் -யாவரையும் அவர் திருவடிகளை ஆஸ்ரயிக்கும் படி செய்கிறாய் –

————————————————————————

ப்ராப்தும் பரம் புரிசயம் புருஷம் முநீநாம்
அப்யஸ்யதாம் அநுதினம் ப்ரணவம் த்ரிமாத்ரம்
ஸ்ரீரங்கநாஜ சரணாவநி சிஞ்ஜிதம் தே
சங்கே ஸமுந்நயன ஸாம விசேஷ கோஷம்—-433-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய இனிமையான நாதம் எவ்விதம் உள்ளது என்றால் –
அனைவரிலும் உயர்ந்தவனாகவும், நம் இதயத்தில் அந்தர்யாமியாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீரங்கநாதனை அடைய
மூன்று மாத்திரைகள் அளவுள்ள ப்ரணவத்தை அன்றாடம் ஜபிக்கிறார்கள் அல்லவா,
அந்த யோகிகளை அவனிடம் அழைத்துப் போகும் ஸாமங்களின் இனிய நாதமாக உள்ளது என்று நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே ரிஷிகளும் முனிவர்களும் பெருமாளை அடைவதற்கு பிரணவ மந்த்ரத்தை த்யானிக்கிறார்கள்-
மூன்று மாத்ரைகளுடன் உச்சரித்து அவனை அப்படிப் பட்டவன் என சாம கானம் செய்து கொண்டே
பெருமான் இடத்தில் அழைத்துப் போவதாக சாஸ்திரம் கூறுகிறது –
உன் நாதம் அந்த சாமகானம் போலே இருக்கிறது -திருவாய் மொழியை பக்தியுடன் கேட்கிறவர்கள் பெருமாளை அடைகிறார்கள் –

——————————————————————

நித்யம் ஸமாஹிததியாம் உபதர்ச யந்தீ
நாகேசயம் கிமபி தாம் நிஜ ஊர்த்வ பாகே
ஹ்ருத் கர்மணிகாம் அநுகதா மணி பாதுகே த்வம்
மஞ்ஜுஸ்வநா ஸ்புரஸி வாக் ப்ரமரீ பரேவ—-434-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மற்ற விஷயங்களில் தங்கள் புத்தியைத் திருப்பாமல்,
தங்கள் வசப்பட்டுள்ள புத்தியுடன் உள்ளவர்களுக்கு நீ செய்வது என்ன?
அவர்களது இதயத்தின் நடுவில் உள்ள ஹ்ருதய கமலத்தில், ஆதிசேஷன் மீது சயனித்துள்ளபடி இருக்கும்
தேஜஸ்ஸான பெரியபெருமாளை, உன் மீது அவன் உள்ளபடி காண்பிக்கிறாய்.
இப்படியாக நீ வேதங்கள் என்னும் வாக்கை இடைவிடாமல் ஒலிக்கின்ற பெண் வண்டு போன்றுள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே நீ வேதம் ஆகிற பெண் வண்டு என்று கூறினால் பொருத்தமாக இருக்கும் –
நீயும் உன் இனிய நாதத்தால் வேதத்தின் தலையான உபநிஷத் பெருமாளை தெரிவிப்பது போல உன் மீது
சேஷ சாயியான எம்பெருமானை உடையவளாய் அவரைப் பரம புருஷார்த்தமாக எல்லோருக்கும் தெரிவிக்கிறாய் –

——————————————————————–

மாநேஷு தானவ ரிபோ: மணி பாத ரக்ஷே
த்வாம் ஆஸ்ரிதேஷு நிகமேஷு அவதீரிதேஷு
மஞ்ஜு ஸ்வநை: வதஸி மா ஏவம் இதி இவ மாத:
வேலாம் விலங்கயிஷத: மநுஜாந் நிரோத்தும்—-435-

தாயே! அசுரர்களின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே!
உன்னுடைய இனிமையான ஒலியைக் கேட்கும் ஒரு சிலர், ப்ரமாணங்களாக உள்ள வேதங்களையே ஒதுக்க நினைக்கின்றனர்.
இப்படியாகக் கட்டுப்பாட்டை மீறும் அவர்களை தடுப்பதற்காக, உன்னுடைய இனிமையான நாதம் மூலம்,
“இது போன்று செய்தல் கூடாது”, என்று உணர்த்துகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உன்னை அடைந்து இருக்கிற வேதங்கள் ஆகிற பிரமாணங்கள் பௌத்தர் ஜைனர் முதலியவர்களால்
அநாதரவு செய்யப்பட போது மீற நினைப்பவரை இவ்வாறு அன்று -என்று இன்பமான உன் நாதத்தால் தடுக்கிறாய் போலும் –

—————————————————————————

க்ரந்தத்ஸு காதர தயா கரண வ்யபாயே
ரங்க உபசல்ய சயிதேஷு ஜநேஷு அலக்ஷ்யம்
ஆஸீதஸி த்வரிதம் அஸ்கலித அநுகம்பா
மாதேவ மஞ்ஜு நிநதா மணி பாதுகே த்வம்—-436-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! திருவரங்கத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள்,
தங்களது இந்திரியங்கள் உடலை விட்டு நீங்கும் காலத்தில், பயம் காரணமாக அழக்கூடும்.
அப்போது என்றும் தவறாத தயை குணம் உடைய நீ, அவர்களது தாய் போன்று,
இனிமையான ஒலியுடன் கூடியவளாக மிகவும் வேகமாக, அவர்கள் அருகில் ஓடி வருகிறாய்

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக் கோடியில் பிராணன் போகும் சமயத்தில் பயத்தால் ஒன்றும் தோன்றாமல்
அழும் ஜனங்களுக்கு நீ தடை யற்ற தயையால் இன்பமாக சப்தித்துக் கொண்டு தாயார் போலே அருகே செல்கிறாய் –
ஸ்ரீ ரங்க திவ்ய ஷேத்ரத்தில் வாசம் செய்யும் பக்தர்களுக்கு -அத்தையே வியாஜ்யமாகக் கொண்டு
பரம புருஷார்த்தத்தையே அருளுகிறாய்-

———————————————————————-

பாஸ்வத் ஸுவர்ண வபுஷாம் மணி பாத ரக்ஷே
பத்மா ஸஹாய பத பத்ம விபூஷணா நாம்
மஞ்ஜீர சிஞ்ஜித விகல்பித மஞ்ஜு நாதா
மஞ்ஜூஷி கேவ பவதீ நிகமாந்த வாசாம்—-437-

உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் ஸ்வர்ணமயமாக உள்ளன.
ஸ்ரீரங்க நாச்சியாரின் நாயகனான அவனது தாமரை போன்ற மென்மையான அந்த திருவடிகளுக்கு
ஆபரணங்கள் போன்று வேதாந்த வாக்கியங்கள் உள்ளன.
அப்படிப்பட்ட வேதாந்த வாக்கியங்களை வைக்கும் பெட்டி போன்று நீ உள்ளாய்.
இப்படிப்பட்ட உன்னுடைய இனிமையான நாதம், அவனது திருவடிச் சிலம்பின் தண்டை போன்று இனிமையாக ஒலிக்கின்றன.

ஸ்ரீ பாதுகையே சிலம்புத் தண்டை போலே இன்பமான நாதமுடைய நீ ஸ்ரீ யபதியின் திருவடிகளுக்கு
அலங்காரமான வேதங்களுக்குப் பெட்டி போலே விளங்குகிறாய் –

———————————————————————

ரங்கேஸ பாத கமலாத் த்வத் அதீந வ்ருத்தே:
அந்யேஷு கேஷுசித் அலக்ஷ்யம் அநந்ய வேத்யம்
ஆம்நாய கூடம் அபஹிர் மணிபி: க்வணத்பி:
நேதீல ஸாம் ப்ரதயஸிவ நிஜாநுபாவம்—438-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய பெருமைகள் என்பது உனக்கு, உன்னுடன் மிகுந்த நட்புடன் உள்ள
ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளுக்கு மட்டுமே தெரியும். இதனை மற்ற எந்த வஸ்துக்களாலும் அறிய இயலாது.
இதனை யாரும் காண இயலாதபடி, வேதங்களில் மறைத்து வைக்கப் பட்டுள்ளது.
இப்படிப்பட்ட உனது பெருமையை ஸ்ரீரங்கநாதனிடம் தலைவணங்கி நிற்பவர்கள் தலையில் உன்னை வைக்கும் போது,
உன் உள்ளே இருக்கின்ற இரத்தினக் கற்களின் நாதம் மூலமாக அவர்களுக்குத் தெரியப் படுத்துகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே
உன்னுடைய இனிய நாதம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு உன் பெருமையை எடுத்துச் சொல்வது போல் இருக்கிறது –
உன் பெருமை உன் அதீனமான திருவடிகளுக்கு மட்டுமே உண்டு –
உன்னாலும் எம்பெருமானாலும் மட்டுமே உணரக் கூடிய அப்பெருமை வேதங்களில் மறைந்து இருக்கிறது –

——————————————————————–

கால உபபந்ந கரண அத்யய நிர் விசேஷ்டே
ஜாத ஸ்ரமே மயீ ஜநார்த்தன பாத ரக்ஷே
ஆஸ்வாஸநய புரத: ப்ரஸரந்து மாத:
வார்த்தா ஹராஸ் தவ ரவா: சமித ஆர்த்தய: மே—-439-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! என்னுடைய அந்திம காலத்தில் புலன்களின்
தளர்ச்சி காரணமாக நான் அசைவில்லாமல் துன்பத்துடன் கிடக்கக்கூடும்.
அப்போது என்னை சமாதாநம் செய்வதற்காக நீ வருவாய். ஆனால் உனக்கு முன்பாக உன்னுடன் இனிமையான சப்தங்கள்,
”இதோ! ஸ்ரீரங்கநாதனைப் பாதுகைகள் கொண்டு வருகின்றன”, என்று எனக்கு ஆறுதலாக முன்னே கேட்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே அந்திம காலத்தில் இந்த்ரியங்கள் ஒடுங்கி நான் சிரமப்படும் போது
எம்பெருமான் உன்னைக் காப்பாற்றுகிறார் என்று கூறி என்னை சமாதனாப்படுத்துக –

————————————————————————-

ஸம்ரக்ஷணாய ஸமயே ஜகதாம் த்ரயாணாம்
யாத்ராஸு ரங்க ந்ருபதே: உபதஸ்து ஷீஷு
ஸம்பத்ஸ்யதே ஸ்ருதி ஸுகைர் மணி பாத ரக்ஷே
மங்கல்ய ஸூக்தி: அநகா தவ மஞ்ஜுநாதை:—440–

பொருள் – இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகளே! இந்த மூன்று உலகங்களையும் காப்பதற்காக ஸ்ரீரங்கநாதன்
அவ்வப்போது, ஆங்காங்கு ப்ரயாணம் செய்கிறான்.
அப்போது வேதங்களை விட இனிமையாக உள்ள உன்னுடைய நாதங்கள் எழுகின்றன.
இவை, தோஷங்கள் இல்லாத ஸூப சகுனத்தை விளக்குகின்ற சொற்களாக உள்ளன.

ஸ்ரீ பாதுகையே மூன்று லோகங்களையும் காப்பாற்றப் பெருமாள் எழுந்து அருளுகிறார் –
அந்தந்த காலத்தில் உன் இனிய நாதத்தால் குற்றம் இல்லாமல் இருக்கிற மங்கள வாசகத்தை நீ ஏற்படுத்துகிறாய்
மூவுலகமும் ஷேமம் அடைகின்றன –

————————————————————————

கர்போபலைர் கமன வேகவசாத் விலோலை:
வாசாலிதா மதுபிதோ மணிபாதுகே த்வம்
ப்ரஸ்தௌஷி பாவித தியாம் பதி தேவயாநே
ப்ரஸ்தாந மங்களம் ம்ருதங்க விசேஷ கோஷம்—-441–

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
ஸ்ரீரங்கநாதனின் அழகான நடையின் வேகத்தால் உன் உள்ளே இருக்கின்ற இரத்தினக் கற்கள், அங்கும் இங்கும் அசைந்து,
ஓசை எழுப்புகின்றன. இந்த ஓசை எப்படி உள்ளது என்றால் –
ஸ்ரீரங்கநாதனிடம் கொண்டு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தில் புத்தியை வைத்துள்ளவர்கள்,
அந்த வழியில் கிளம்புவதற்கான சிறந்த மிருதங்கத்தின் ஒசையை நீ உண்டாக்குவது போல் உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உன்னிலிட்ட ரத்தினங்கள் சப்திக்கின்றன –
சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட உபாயங்களில் ஒன்றை அனுஷ்டித்து அர்ச்சிராதி வழியாக ஆத்மா யாத்ரை கிளம்பும் போது
அந்த யாத்திரைக்கு நீ மிருதங்கம் வாசிப்பது போல் இருக்கிறது –

———————————————————-

பர்யங்கம் ஆஸ்ரித வதோ மணி பாதுகே த்வம்
பாதம் விஹாய பரி கல்பித மௌந முத்ரா
ஸ்ரோதும் ப்ரபோ: அவஸரம் திசஸீவ மாத:
நாபீ ஸரோஜ சயித அர்ப்பக ஸாமகீதிம்—-442-

உயர்ந்த கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகை தாயே! சயனிப்பதற்கான கட்டிலை அடைந்த ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளை விட்டு, பேசாமல் உள்ள நிலையை நீ அடைகிறாய். ஏன் என்றால்
ஸ்ரீரங்கநாதனின் திருநாபியில் உள்ள தாமரையில் படுத்துள்ள அவனது குழந்தையான நான்முகனின் ஸாம கானத்தை
ஸ்ரீரங்கநாதன் கேட்பதற்கான சந்தர்ப்பத்தை நீ அளிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் சயனதிற்கு சங்கல்பித்துக் கொள்ளும் போது நீ மௌனம் வகித்து
நாபி கமலத்தில் இருக்கும் பிரம்மாவின் சாம கானத்தை பெருமாள் கேட்டு இன்புறுவதற்கு வேண்டிய அவகாசத்தைத் தருகிறாய்
நீ சப்தித்துக் கொண்டு இருந்தால் அவன் செய்யும் சாம கானத்தைக் கேட்க முடியாதன்றோ –

——————————————————————–

போகாய தேவி பவதீ மணி பாத ரக்ஷே
பத்மா ஸஹாய அதிரோப்ய புஜங்க தல்பே
விஸ்வஸ்ய குப்திம் அதி க்ருத்ய விஹார ஹீநா
வாசம்யமா கிமபி சிந்தயதீவ கார்யம்—-443-

இரத்தின மயமான பாதுகா தேவியே! தாமரையில் உதித்த ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனை,
ஆதிசேஷன் என்ற படுக்கையில் சுகமாக சயனிப்பதற்காக எழுந்தருளச் செய்தாய்.
அதன் பின் மௌனமாக இருந்து கொண்டு, இந்த உலகத்தை எப்படிக் காப்பது என்று,
ஏதோ ஒரு செயலைப் பற்றி எண்ணுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே சஞ்சார காலம் அல்லாத காலங்களில் ஆதி சேஷன் ஆகிய படுக்கையில் எம்பெருமானை ஏற்றி வைத்து
நீ மௌனமாக இருக்கிறாய் -உலக ஷேமத்தைப் பற்றிக் கவனத்துடன் அப்போது சிந்திக்கிறாய் போலும் –

—————————————————————————-

நித்ய ப்ரபோத ஸுபகே புருஷே பரஸ்மிந்
நித்ராம் உபேயுஷி தத் ஏக விஹார சீலா
மஞ்ஜு ஸ்வநம் விஜஹதீ மணி பாதுகே த்வம்
ஸம்வேசம் இச்சஸி பரம் சரண அந்திகஸ்தா—-444-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! எப்போதும் விழித்தபடி உள்ள உயர்ந்தவனான,
பரம்பொருளான ஸ்ரீரங்கநாதன் உறங்கும்போது, நீ செய்வது என்னவென்றால் –
அவன் ஸஞ்சாரம் செய்யும்போது அந்த நடைக்கு ஏற்றாப்போல் இனிமையான நாதம் எழுப்பி நிற்பவள்,
அவனது திருவடியின் அருகில் நின்று உறங்குவதையும் ரசிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் தூங்குவது போலே பாவித்து சயனித்துக் கொண்டு இருக்கும் போது அவனது வியாபாரத்தையே
அனுஷ்டிக்கும் நீயும் அவனது திருவடி பக்கத்தில் தூங்குவது போலே சயனித்துக் கொண்டு இருக்கிறாய் –

——————————————————————–

லாஸ்யம் விஹாய கிமபி ஸிதிதம் ஆச்ரயந்தீ
ரங்கேஸ்வரேண சஹிதா மணி மண்டபேஷு
மஞ்ஜு ஸ்வநேஷு விரதேஷு அபி விஸ்வம் ஏதத்
மௌநேந ஹந்த பவதீ முகரீ கரோதி—445-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடன் கூடியவளாக, அவனது அழகான நடை என்னும் நாட்டியத்தைக்
கொண்டவளாக நீ செல்கிறாய். அப்போது உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட மண்டபங்களில் ஸ்ரீரங்கநாதன் சற்றே நிற்கிறான்.
அந்த நேரத்தில் இனிமையான ஓசைகள் எழுகின்றன. அந்த ஓசைகள் ஓய்ந்த பின்னர்,
சில நொடிகள் உண்டாகும் மௌனத்தினால், உலகத்தினரை அதிகமாகப் பேச வைக்கிறாய் போலும். என்ன வியப்பு!

நம்பெருமாள் பெரியகோவிலில் ஸஞ்சாரம் செய்யும்போது, ஆங்காங்குள்ள மண்டபங்களில் சற்று நிற்கிறான்.
நின்ற வேகத்தில், பாதுகைகளின் உள்ளே இருக்கின்ற இரத்தினக்கற்கள் பலத்த ஒலியை எழுப்பி அடங்குகின்றன.
அப்போது அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்கின்ற மக்கள், அரங்கனையும் பாதுகைகளையும் வெகுவாகப் புகழ்ந்து கூறுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே நீ எம்பெருமானுடன் எழுந்து அருளுகிற காலத்தில் நடுவில் உபய மண்டபத்தில் சற்று நிற்கிறாய் –
அப்போது நீ மௌநம் வகித்து நீ எழுந்து அருளிய அழகை சேவித்த ஜனங்கள் அவனைப் பற்றிப் பெருமையாகப் பேசும்படிச் செய்கிறாய் –

————————————————————————-

விஸ்மாபிதேவ பவதீ மணி பாத ரஷே
வைரோசநேர் விதரணேந ததாவிதேந
ஏதாவதா அலமிதி தேவி க்ருஹீத பாதா
நாதம் த்ரிவிக்ரமம் அவாரய தேவ நாதை:—446-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகாதேவியே! விரோசனன் என்பவனின் புத்திரனாகிய மஹாபலியின்
தாராள குணம் கண்டு நீ வியப்பு அடைந்தாய். மூன்று அடிகளால் உலகம் அளந்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை
நீ பிடித்துக் கொண்டு, உனது நாதத்தால், “போதும் போதும்”, என்றாய்.

மூன்றாவது அடியால் மஹாபலியின் தலையில் திருவடியை வைத்து அழுத்தியவுடன், இத்தனை தாராள குணம்
படைத்தவனை மேலும் துன்புறுத்தக்கூடாது என்று எண்ணி, ஸ்ரீரங்கநாதனின் திருவடியைப் பாதுகை தடுத்தது என்று கருத்து.

ஸ்ரீ பாதுகையே மஹா பலி பெரும் தன்மையுடன் கேட்டதைக் கொடுத்தான் –
இதைப் பற்றி ஆச்சரியப் பட்ட நீ எம்பெருமான் திருவடியைப் பிடித்துக் கொண்டு
இவ்வளவு போதும் என்று தடுப்பது போல் இருக்கிறது உன் நாதம் –

———————————————————————-

ஸாமாநி ரங்க ந்ருபதி: ஸரஸம் ச கீதம்
லீலா கதேஷு விநிவாரயதி ஸ்வ தந்த்ர:
ஸ்ரோதும் தவ ஸ்ருதி ஸுகாநி விசேஷவேதீ
மஞ்ஜூநி காஞ்சந பதாவநி சிஞ்ஜிதாநி—447-

தங்க மயமான பாதுகையே! அனைத்து வஸ்துக்களின் தன்மைகளை அறிந்துள்ள ஸ்ரீரங்கராஜன்,
தனது விருப்பப்படி உற்சாகமாக ஸஞ்சாரம் செய்கிறான். அப்போது தனது பின்னே கேட்கின்ற ரசம் நிறைந்த
ஸாம கானங்களையும், ஸங்கீதத்தையும் சற்றே நிறுத்துகிறான். ஏன் என்றால் –
கேட்பதற்கு இனிமையாகவும், காதுகளுக்கு இன்பம் அளிக்கவல்லதாகவும் இருக்கின்ற உனது இனிமையான நாதம்,
எங்கும் கேட்பதற்காக ஆகும்.

ஸ்ரீ பாதுகையே உன் உயர்வை அறிந்த பூரண சுதந்திரனான ஸ்ரீ ரங்க நாதன் சாம கானத்தையும்
வீணை பாட்டு முதலியவைகளையும் நிறுத்தி விட்டு உன் நாதத்தைக் கேட்கிறார் –
பெருமாள் மூல ஸ்தானத்திற்கு எழுந்து அருளும் போது பராயணம் பாட்டு இவை இருக்காதே –

————————————————————————-

தத்தாருசீம் ப்ரதயதா ருசிராம் ஸ்வரேகாம்
வர்ண அதிகேந மது ஸூதன பாத ரக்ஷே
பஸ்யந்தி சித்த நிகஷே விநிவேஸ்ய ஸந்தோ
மஞ்ஜு ஸ்வநேந தவ நைகமிகம் ஸுவர்ணம்—-448-

மது என்று அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நன்மை விரும்பும் சாதுக்கள் தங்களது மனதில்
வேதங்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கநாதனையும், உன்னுடைய இனிமையான நாதங்களையும்,
சாதாரண எழுத்துக்களில் இருந்து மாறுபட்டதான எழுத்துக்கள் கொண்ட வேதங்களையும்
மனம் என்னும் உரைகல்லில் வைக்கின்றனர்.
இப்படிப்பட்ட மனம் என்ற உரை கல்லில், இந்த மூன்றில் எது சிறந்தது என்று ஆராய்ந்து பார்க்கின்றனர்.
அப்படிப் பார்க்கும்போது உயர்ந்த எழுத்துக்களை விட மாறுபட்டதான வேதங்களைக் காட்டிலும்,
ஸ்ரீரங்கநாதனைக் காட்டிலும், மாறுபட்ட உனது இனிய நாதத்தையே மிகவும் உயர்ந்ததாகக் கொள்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே ஜீவ பரமாத்மா ஸ்வரூபம் தெரிந்தவர்கள் உன் நாதத்தையும் எம்பெருமானைப் பிரதிபாதிக்கும்
வேதத்தையும் மனம் என்ற உரை கல்லில் உறைத்துப் பார்க்கிறார்கள்
வேதத்தையும் வேத ப்ரதிபாத்யமான எம்பெருமானைக் காட்டிலுமே ஆழ்வார் திவ்ய ஸூக்தி சுவை மிக்கது –

—————————————————————————–

முக்தஸ்ய ஹந்த பவதீம் ஸ்துவதோ மம ஏதாநி
ஆகர்ணய நூநம் அயதாயத ஜல்பிதாநி
இத்தம் வத த்வம் இதி சிக்ஷயிதும் ப்ரணாதாந்
மஞ்ஜூந் உதீரயஸீ மாதவ பாதுகே த்வம்–449-

ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியுள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஏதும் அறியாதவனாகிய, முட்டாளாகிய எனது
பிழை நிறைந்த சொற்கள் கொண்டு உன்னைத் துதிக்கிறேன். உன்னுடைய இனிமையான நாதங்கள் மூலம் என்னிடம்,
”இந்தச் சொற்களை நீ இவ்விதம் கூறுவாயாக”, என்று என்னைத் திருத்தும் பொருட்டு இனிமையான நாதம் எழுப்புகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உன் சப்தத்தைக் கேட்கிற போது உன்னைப் பற்றி எதுவும் அறியாத நான் தாறுமாறாகத் ஸ்துதிக்கும் போது
சரியான ஸ்துதி முறைகளை எனக்குச் சொல்லித் தருவது போல் இருக்கிறது –

————————————————————————————

ஆதௌ ஸஹஸ்ரம் இதி யத் ஸஹஸா மயா உக்தம்
துஷ்டூஷதா நிரவதிம் மஹிம அர்ணவம் தே
ஆம்ரேடயஸி அத கிம் ஏதத் ம்ருஷ்யமாணா
மஞ்ஜு ஸ்வநேந மதுஜித் மணி பாதுகே த்வம்—-450-

மது என்ற அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே!
முன்பு ஒரு காலத்தில் உன்னைப் பற்றித் துதிக்க ஒப்புக் கொண்டேன். எல்லையற்ற கடல் போன்ற உன்னுடைய
பெருமைகளைத் துதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால்,
சட்டென்று 1000 ஸ்லோகம் கொண்டு துதிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதனைக் கேட்ட நீ
உன்னுடைய இனிமையான நாதம் கொண்டும், “எனது பெருமை ஆயிரம்தானா, ஆயிரம்தானா”, என்று
மீண்டும் மீண்டும் கேட்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உன்னை சேவிக்க வந்த காலத்தில் எல்லை யற்ற கடல் போன்ற உன் பெருமையில் ஈடுபட்டு
ஆயிரம் ஸ்லோஹம் கவனம் பண்ணுவதாகச் சொன்னேன் பரபரப்பாக நான் கூறியதை பரிகசித்து
நீ ஆயிரம் ஸ்லோகங்கள் பண்ணலாமா ஆயிரம் போதுமா என்று உன் நாதத்தால் கேட்பது போல் இருக்கிறது –

—————————————————————————-

பரிமித பரிபர்ஹம் பாதுகே ஸஞ்சரிஷ்ணௌ
த்வயி விநிஹித பாதே லீலயா ரங்கநாதே
நியமயதி விபஞ்சீம் நித்யம் ஏகாந்த ஸேவீ
நிசமயிதும் உதாராந் நாரதஸ்தே நிநாதாந்—-451-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தன்னுடைய திருவடிகளை உன் மீது வைத்து, குடை முதலான
தன்னுடைய வஸ்துக்களுடன் உல்லாசமாக ஸஞ்சாரம் செய்கின்றான். நாரதர் எப்போதும் ஸ்ரீரங்கநாதனை,
அவன் ஏகாந்தமாக உள்ள போது சேவிப்பவர் ஆவார். அப்படிப்பட்ட நாரதர், ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார நேரத்தில்,
தன்னுடைய வீணையை நிறுத்தி விடுகிறார். இதன் காரணம் – உன்னுடைய கம்பீரமான நாதத்தைக் கேட்பதற்கே ஆகும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஏகாந்த காலங்களில் குடை சாமரம் இவற்றைக் குறைவாகக் கொண்டு எழுந்து அருளுகிறார் –
அச் சமயங்களில் தேவ ரிஷியான நாரதர் உன் இனிய நாதத்தைச் செவி மடுக்கத் தன் வீணையை மீட்டாமல் நிறுத்துகிறார்

தேவ ரிஷியும் கூட ஆழ்வாரின் திவ்ய ஸூக்தியைக் கொண்டாடுகிறார் –

—————————————————————–

விஹரதி விசிகாயாம் ரங்கநாதே ஸலீலம்
கமந வச விலோலை: கர்ப்ப ரத்நை: க்வணந்த்யா:
மணி வலய நிநாதை: மஞ்ஜுலைஸ் தே திசந்தி
ப்ரதி வசநம் உதாரம் பாதுகே பௌரநார்ய:—-452-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் திருவரங்கத்தின் மாட வீதிகளில் மகிழ்ச்சியுடன் வலம் வருகிறான்.
அப்போது உன்னுடைய உள்ளே இருக்கின்ற இரத்தினங்கள், “நம்பெருமாள் வந்தான்”, என்று அறிவிப்பதாக ஒலித்தபடி உள்ளன.
அப்போது அங்கு ஓடி வரும் திருவரங்கத்தின் பெண்களின் கைகளில் இருக்கின்ற அழகான கற்கள் பதிக்கப்பட்ட
வலையல்களின் உள்ளே இருக்கின்ற மணிகள் இன்பமாக ஓசை எழுப்புகின்றன.
இவை உன்னிடம், “இதோ வந்தோம்”, என்று மறுமொழி கூறுவது போல் உள்ளன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் விளையாட்டாக எழுந்து அருளும் போது உன்னுள் இனிய சப்தத்திற்கு
பட்டணத்து பெண்கள் எம்பெருமானை சேவிக்க ஓடி வருகிறவர்களாகத் தங்கள் கைகளில் உள்ள
ரத்தின வளைகளின் சப்தத்தால் பதில் சொல்கிறார்கள் –

————————————————————————

அநுக்ருத ஸவநீய ஸ்தோத்ர சஸ்த்ராம் நிநாதை:
அநுகத நிகமாம் த்வம் ஆஸ்திதோ ரங்கநாத:
அநிதர விபுதார்ஹம் ஹவ்யம் ஆஸ்வாத இஷ்யந்
விசதி சரண ரக்ஷே யஞ்ஜவாடம் த்விஜாநாம்—-453-

சரணம் அடைவதற்கு ஏற்றதாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
மற்ற தேவதைகளுக்கு ஏற்க இயலாத அவிர்பாகத்தைச் சுவைப்பதற்காக, அந்தணர்கள் யாகம் செய்கின்ற இடத்திற்கு
ஸ்ரீரங்கநாதன் வருகிறான். அப்படி அவன் வரும்போது, அந்த யாகங்களுக்கு ஏற்ற சஸ்த்ரம் என்னும் மந்த்ரம்
ஆகியவை ஒலிப்பது போன்று, உன்னுடைய இனிமையான நாதமும் கேட்கின்றன.

ஸர்வேச்வரன் யாகங்களின் அளிக்கப்படும் அவிர்பாகத்தை, அங்கு முழங்கப்படும் வேத ஒலிகள் கொண்டு ஏற்கிறான் என்று கருத்து.
இங்கு வேத ஒலிகளுடன் பாதுகை உள்ளது. ஆக பாதுகையே வேதம் என்றாகிறது.
இப்படிப்பட்ட வேதமாகிய பாதுகையில் நின்று அவிர்பாகத்தை ஏற்கிறான்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானையே ஆராத்யனாக வரித்து வேதியர் செய்யும் யாகசாலையில் ஹவிஸ்சைப் பெற
உன்னை அணிந்து எம்பெருமான் பிரவேசிக்கிறார்
அந்தக் காலத்தில் உண்டாகும் உன் சப்தங்கள்
ஸ்தோத்ரம் சஸ்த்ரம் என்ற யாக மந்திரங்கள் போலவும் இதர வேதங்கள் போலவும் உள்ளன –

ஹே! பாதுகையே! இராத்திரியில் இந்த க்ரந்தத்தைப் பண்ணும்படி நியமித்தாய்!
(தேசிகருக்கு ‘கவிதார்க்கிஹ சிம்மம்” என்ற விருதின் பெயரில் ஏற்பட்ட பொறாமையில் இந்த கட்டாயம் தேசிகருக்கு ஏற்பட்டது!
இதனை அவர் பாதுகையின் நியமநம் என்று ஏற்கின்றார். இந்த மனோபாவம் – பக்தி முக்யம். விரோதம் முக்யமல்ல.
நமக்கு விரோதமாய் கஷ்டங்கள் ஏற்படினும், அதுவும் பகவத் ஸங்கல்ப்பம் என்று ஏற்றுக் கொள்வேமேயாயின்,
மன கஷ்டமுமில்லை! பகையுமில்லை! பரந்தாமன் பார்த்துக் கொள்வான் அனைத்தையும்!)
உன்னுடைய சப்தம் போல (இங்கு அவர் பாதுகையின் சப்தம் என்று கூறுவதற்கு ‘ஆழ்வார்களின் ஸூக்திகளைப் போல என்று பொருள்)
பெருமாளுக்கு மிகவும் இன்பமான வார்த்தைகள் தாமதமின்றி என் மனதில் தோன்றி அதிவேகமாய்
(குறைந்த பட்ச அவகாசமேயுள்ளதால் பாதுகையினை அவசரப்படுத்துகின்றார்) என் வாக்கில் வரும்படியாக
நீ தயை செய்ய வேண்டும்! இதன் ஸ்வாரஸ்யத்தாலே தாயாருக்கும் பெருமாளுக்கும் தூக்கம் மறந்து போய்
ஸபையிலே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கின்றார்.
தம் பக்தர்களைக் கரை சேர்ப்பதுதானே பாதுகையின் அவதார நோக்கம். கவிமழையை பொழிய வைக்கின்றாள்.
ஒரு ஜாமத்திற்குள் 1008 பா பூக்கள்! ஒரு கருவிதான் தேசிகர்! கரு பாதுகையின் கருணைதான்!

எப்படி ஸ்வாமி ஸ்ரீ இராமானுஜர் மறுபிறப்பில் மணவாள மாமுனியாய் அவதரித்தாரோ, அது போன்று
ஸ்வாமி நம்மாழ்வார், மீண்டும் இறப்பு, பிறப்பற்ற பாதுகையாகவேயானார்.

நம்மாழ்வாராய் இருந்த சமயம் இவர் சிறப்பை வெளிப்படுத்த – மதுரகவி! பாதுகையாய் அவதரித்தப் போது – ஸ்வாமி தேசிகர்!
பெருமாளின் பாதுகையில் வெளுப்பு, சிகப்பு, கருப்பு முதலான பல வர்ணங்களில் ரத்னங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதைப் பார்த்த ஸ்வாமி தேசிகருக்கு பெருமாள் க்ருதயுகத்தில் வெளுப்பாயும், த்ரேதாயுகத்தில் சிகப்பாயும்,
துவாபரயுகத்தில் மஞ்சளாயும், கலியுகத்தில் கருப்பாயும் ஸேவை சாதித்தருளும் நம்பெருமாள் இதையெல்லாம்
ஒரே காலத்தில் தம் திருவடி கீழே காண்பிப்பது போலுள்ளது என்கிறார். (சதுர் யுகத்திற்கும் இவர்தானே அதிபதி!)

நவரத்னங்கள் எனப்படும் (ரத்னம், வைடூர்யம், வைரம்,மாணிக்கம்,நல்முத்து, பவழம், கோமேதகம், புஷ்பராகம், நீலம், மரகதம்)
ஒன்பது ரத்னங்களில் பாதுகையானது அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ஸ்வாமி தேசிகர்,
பாரத, கிம்புருஷ, ஹரிவர்ஷ, இளாவிருத, பத்ராசல, கேதுமால, ரம்ய, ஹிரண்மய, குரு என்று
ஒன்பது பாகமாயுள்ள இந்த பரந்த பூமி பிறந்தகத்தினை யடைந்தது போல் ஆசையாக பெருமாள்
திருவடிகளை யடைந்தது போலுள்ளது என்று ரசிக்கின்றார்.

———————————————————————————-

சரண கமலம் ஏதத் ரங்க நாதஸ்ய நித்யம்
சரணம் இதி ஜநாநாம் தர்ஸ யந்தீ யதாவத்
ப்ரதிபதம் அபி க்ருத்யம் பாதுகே ஸ்வாது பாவாத்
அநுவததி பரம் தே நாதம் ஆம்நாய பங்க்தி:—-454-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற இந்தத் திருவடிகளே அனைவருக்கும் எப்போதும்
ரக்ஷகம் என்று மக்களுக்கு வேதங்கள் உணர்த்துகின்றன. ஆனால் இதனை வேதங்கள் தாமாகவே கூறுவது அல்ல.
ஸ்ரீரங்கநாதனின் ஒவ்வொரு அடி வைப்பிலும் உண்டாகும் இனிமையான உன்னுடைய நாதம் கொண்டு,
இந்தக் கருத்தை நீ கூறுகிறாய். இதனையே வேதங்கள் அனுவாதம் செய்கின்றன.

ஒருவர் கூறுவதை மீண்டும் கூறுதல் என்பது அனுவாதம் எனப்படும். இங்கு ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே தஞ்சம்
என்பதைப் பாதுகைகள் கூற, அதனையே வேதங்கள் மீண்டும் கூறுகின்றன என்று கருத்து.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடி தான் எல்லோரையும் காப்பாற்றுகிறது என்று சொல்கிற சகல
வேதங்களும் மிக இன்பமான உன் சப்தங்களை அனுசரித்தே சொல்கின்றன –

————————————————————————————-

ரஹித புஜக தல்பே த்வத் ஸநாதே ப்ரஜாநாம்
ப்ரதிபய சமநாய ப்ரஸ்திதே ரங்கநாதே
ப்ரதம உதயமாந: பாதுகே தூர்ய கோஷாத்
ப்ரதிபலதி விநாத: பாஞ்ச ஜந்யே த்வதீய:—-455–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷன் மீது சயனிப்பதை விடுத்து, மக்களின் பயத்திற்கான காரணங்களை நீக்குவதற்காக
ஸ்ரீரங்கநாதன் உன்னுடன் புறப்படுகிறான். அப்போது எழுகின்ற வாத்திய ஒலிகளுக்கும் முன்பாக
உன்னுடைய இனிமையான நாதம் எழுகிறது. அந்த நாதம், ஸ்ரீரங்கநாதனின் திருக்கரத்தில் உள்ள
பாஞ்சஜன்யம் என்ற சங்கின் மீதும் எதிரொலிக்கிறது.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் ஜனங்களுடைய கஷ்டத்தைப் போக்க ஆதி சேஷனை விட்டுப் புறப்படுகிறார் –
அப்போது முதலில் உன் நாதம் தான் உண்டாகி அவருடைய ஸ்ரீ சங்கத் தாழ்வான் இடம் பிரதி த்வநிக்கிறது
பிறகு தான் வாத்ய சப்தங்கள் உண்டாகின்றன –

———————————————————————-

வகுள தர தநு: த்வம் ஸம்ஹிதாம் யாம் அபஸ்ய:
ஸ்ருதி பரிஷதி தஸ்யா: சௌரபம் யோஜயந்தீ
ஹரி சரண ஸரோஜ ஆமோத ஸம்மோதிதாயா:
ப்ரதிபத ரமணீயா: பாதுகே தே நிநாதா:—-456–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில் எழுகின்ற வாசனை காரணமாக
நீ மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாய். அந்த இன்பம் காரணமாக, உன்னுடைய ஒவ்வொரு அடி வைப்பிலும்
இனிமையான நாதங்கள் உண்டாகின்றன. நீ வகுளாபரரான நம்மாழ்வாராக அவதரித்து
எந்தத் திருவாய்மொழியை அருளிச் செய்தாயோ, அவைகளின் சாரத்தையே அல்லவோ வேதங்கள் கூறுகின்றன
(திருவாய்மொழி வேதங்களின் சாரம் அல்ல, வேதங்களே திருவாய்மொழியின் சாரங்கள் என்னும் நயம் காண்க).

ஸ்ரீ பாதுகையே நம்மாழ்வாரின் திவ்ய மேனியை உடைத்தான நீ பெருமாள் உடைய தாமரை மலரை ஒத்த திருவடி வாசனையால்
மணம் பரப்பும் உன் திரு அடி வைப்பு தோறும் திருவாய் மொழியை வேதங்கள் உடைய கூட்டத்தில் சேர்க்கிறாய்
ஸ்ரீ மன் நாராயணன் திருவடிகளே பரம புருஷார்த்தம் என்பதை வேதங்களும் திருவாய் மொழியும் சமானமாக ப்ரதி பாலிக்கின்றன —

——————————————————————————

தநு தநய நிஹந்து: ஜைத்ர யாத்ரா அநுகூலே
சரத் உபகம காலே ஸஹ்யஜாம் ஆபதந்தி
ஸ்ருதி மதுரம் உதாரம் சிக்ஷிதும் தே நிநாதம்
பரிஹ்ருத நிஜ வாஸா: பாதுகே ராஜ ஹம்ஸா:—-457-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தனு என்பவளின் பிள்ளைகளான அசுரர்களை அழிக்கின்ற வெற்றி ஸஞ்சாரம் செய்வதற்கான
சரத் ருது காலம் வந்துவிட்டது. அப்போது உயர்ந்த அன்னப் பறவைகள் தம்முடைய இருப்பிடத்தை விட்டு,
காவிரிக்குப் பறந்து வருகின்றன. ஏன் என்றால் – ஸ்ரீரங்கநாதன் உன்னைச் சாற்றிக்கொண்டு நடக்கின்ற
அந்த நேரத்தில் எழுகின்ற, இனிமையானதும் கம்பீரமானதும் ஆகிய உன்னுடைய நாதத்தைக் கற்றுக் கொள்வதற்கு ஆகும்.

ஸ்ரீ பாதுகையே சரத் காலத்தில் எம்பெருமான் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்து அருளுகிறார் –
ஹம்சங்கள் எனத் தக்க உயர்ந்த குணம் உடைய பெரியோர் உன் இன்பமான சப்தத்தை பழக்கிக் கொண்டு
சத்வ குணம் மேலிட வேண்டி தங்கள் இருப்பிடம் விட்டு ஸ்ரீ ரங்கம் வருகின்றனர் –

———————————————————————————

விஹரண ஸமயேஷு ப்ரத்யஹம் ரங்க பர்த்து:
சரண நக மயூகை: ஸோத்தரீயா விசுத்தை:
பரிணமயஸி நாதம் பாதுகே கர்ப்ப ரத்நை:
தமயிதுமிவ சிஷ்யாந் தீர்க்கிகா ராஜ ஹம்ஸாந்—-458-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் அன்றாடம் ஸஞ்சாரம் செய்யும் போது, தூய்மையாக உள்ள அவனது
திருவடி நகங்களின் ஒளியானது உன் மீது வெண்மையான மேல் ஆடையைப் போன்று விழுகிறது.
இதனைக் காணு ம்போது ஆசார்யன் போன்று நீ உள்ளாய். யாருக்கு என்றால் –
பெரியகோவிலில் இருக்கின்ற திருச்சுற்றுக்களில் காணப்படும் அன்னங்களுக்கு, நல்ல விஷயங்களை உன் உள்ளே
இருக்கின்ற இரத்நக்கற்களின் நாதம் மூலம் கற்பிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் தினமும் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்து அருளுகிறது வழக்கம் –
அது எம்பெருமான் திருவடி நகங்களின் காந்தியால் நீ உத்தரியம் தரித்துக் கொண்டு உன்னை அண்டிய ராஜ ஹம்சங்களை ஒத்த
சிஷ்யர்களான பெரியோர்க்கு நல்ல விஷயங்களை மட்டுமே கற்பிக்க வேண்டி அவர்களைக் கண்டிப்பது போல் இருக்கிறது –

——————————————————————-

பரிஷதி விரதாயாம் பாதுகே ரங்க பர்த்து:
பரிஜநம் அபவார்ய ப்ரஸ்திதஸ்ய அவரோதாந்
மணி நிகர ஸமுத்யந் மஞ்ஜுநாத உபதேசாத்
அபிலபஸி யதார்ஹம் நூநம் ஆலோக சப்தம்—-459-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தன்னுடைய திருமண்டபத்திலிருந்து புறப்பட்டவுடன் அங்குள்ள
ஊழியர்களை உன்னுடைய நாதத்தின் ஒலி மூலம் புறப்பட்டச் சொல்லுகிறான். அதன் பின்னர் அந்தப்புரத்திற்குப் புறப்படும்
ஸ்ரீரங்கநாதனுக்கு உனது இரத்தினக் கற்களின் மூலம் எழுகின்ற இனிமையன நாதம் கொண்டு,
“ஸ்ரீரங்கநாத விபோ ஜய விஜயீ பவ”, என்று கூறுகிறாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் சபையில் எழுந்து அருளி இருந்து பிறகு அந்தப் புரத்துக்கு ஏகாந்தமாக எழுந்து அருளுகிறார்
அப்போது நீ உன் சப்தத்தால் ஜய சப்தங்கள் -ஜய விஜயீ பவ -ஸ்வாமி எத்சரிகை -என்பன
போன்ற சப்தங்களைக் கூறுவது போல் இருக்கிறது –

—————————————————————————–

குரு ஜந நியதம் தத் கோபிகாநாம் ஸஹஸ்ரம்
திநகர தநயாயா: ஸைகதே திவ்ய கோப:
வசம் அநயதீ அயத்நாத் வம்ச நாத அநுயாதை:
தவ கலு பதரக்ஷே தாத்ருசைர் மஞ்ஜுநாதை:—-460-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! யமுனையில் மணல் குன்றுகளில், பெரியோர்களால் அடக்கப்பட்ட ஆயிரம் கோபியர்களைக்
கண்ணன் தன்னுடைய புல்லாங்குழலின் நாதத்தால் பின் தொடர வைத்தான் என்று கூறுகின்றனர்.
ஆனால் அவர்களை உன்னுடைய இனிமையான நாதத்தால் அல்லவோ கண்ணன் எளிதாக வசப்படுத்திக் கொண்டான்?

இதுவரை பாதுகைகளின் நாதத்தை வர்ணிக்கின்ற ப்ரகரணம் (context) முடிந்தது.
இந்த ஸ்லோகம் முதல், ஸ்ரீரங்கநாதன் அளிக்கின்ற ஹிதம் என்னும் மோக்ஷ உபாயம் குறித்துக் கூறப்படும் ப்ரகரணம் தொடங்குகிறது.
மோக்ஷ உபாயத்தைக் கண்ணனாக நின்று சரம ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதன் உபதேசித்ததால் இந்த ஸ்லோகத்தில் க்ருஷ்ணாவதாரத்தைக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே திருவாய்ப்பாடியில் கண்ணன் ஆயிரக் கணக்கான கோபிகளைக் குழல் ஓசையினால் தன வசப் படுத்தினான் என்பர் –
அப்படி அன்று -குழல் ஓசையையும் விஞ்சிய உன் நாதத்தினால் தான் கண்ணன் கோபிகளைத் தன் வசம் ஆக்கினான்
வீட்டுப் பெரியோர் தடுத்தும் அவர்கள் வீட்டு வேலைகளை மறந்து கண்ணன் இடத்தில் ஓடி வந்தார்கள் -அந்தப் பெருமை உன் நாதத்திற்கே –

————————————————————————————-

நிஜபத விநிவேசாத் நிர்விசேஷ ப்ரசாராந்
பரிணமயதி பக்தாந் ரங்கநாதோ யதா மாம்
இதி விஹரண காலே மஞ்ஜு சிஞ்ஜா விசேஷை:
ஹிதம் உபதிசஸீவ ப்ராணிநாம் பாதுகே த்வம்—-461–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீ அனைவரிடமும், “ஸ்ரீரங்கநாதன் என் (பாதுகை) போன்றவர்களைத் தன்னுடைய
திருவடியில் வைப்பதன் மூலம், அவர்களுக்கும் என்னைப் போன்று அவனுடன் சேர்ந்து ஸஞ்சாரம் செய்யும்படியான
நிலையை அளிக்கிறான்”, என்று உன்னுடைய இனிமையான நாதங்கள் மூலம் நன்மையை உபதேசிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் உன்னைச் சாற்றிக் கொண்டு சஞ்சரிக்கும் காலத்தில் நீ மிக நல்ல செய்தியைத் தெரிவிக்கிறாய்-
தன்னிடத்தில் ஆசை கொண்டவர்களுக்குத் தன்னுடைய பதத்தை எம்பெருமான் எனக்குத் தந்தது போலத் தருகிறார் என்று கூறுவது போல் இருக்கிறது –
தன்னுடைய பதமே பரமபதம் -திருவடியை என் மேல் வைத்து இதுவே பரமபதம் என்று காட்டி அருளுகிறான் –

————————————————————————————————

அயமயமிதி தைஸ்தை: கல்பிதாந் அத்வ பேதாந்
ப்ரதிபதம் அவலோக்ய ப்ராணிநாம்
சடுல மணி கலாபை: சௌரி பாதாவநி த்வம்
முகரயஸி விஹாரை: முக்தி கண்டாப தாக்ர்யம்—-462-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முக்தி அடைவதற்கு இதுவே சிறந்த வழி, இதுவே சிறந்த வழி என்று பல மதங்களால்
அடிக்கடிக் கூறப்படும் பல்வேறு முரணான மார்க்கங்களைக் கண்டு மக்கள் கலங்கி நிற்கின்றனர்.
உன்னுடைய அசைகின்ற இரத்தினங்களின் நாதம் மூலமாக மோக்ஷத்திற்கான ராஜமார்க்கம்,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே என்று கூறுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே மோஷத்தை அடையும் வழி குறித்துப் பலரும் பலவிதமாயும் சொல்கிறார்கள் –
ஆனால் நீயோ கலங்கிய மனதிற்கு இதமாக ஸ்ரீ மன் நாராயணனை ஆஸ்ரயிப்பது தான்
மோஷத்திற்கான வழி என்று சொல்லி அருளுகிறாய்-

——————————————————————————————-

பத கமலம் உதாரம் தர்ச யந்தீ முராரே:
கல மதுர நிநாதா கர்ப்ப ரத்நை: விலோலை:
விஷம விஷய த்ருஷ்ணா வ்யாகுலாநி ப்ரஜாநாம்
அபிமுகயஸி நூநம் பாதுகே மாநஸாநி—-463-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அசைகின்ற உன்னுடைய இரத்தினக்கற்களின் இனிமையான நாதம் மூலம்
ஸ்ரீரங்கநாதனின் கருணை மிகுந்த திருவடித் தாமரைகளை மக்களுக்குக் காண்பிக்கிறாய்.
இதன் மூலம் உலக விஷயங்களில் கொண்ட ஆசை என்னும் கானல்நீர் காரணமாக கலங்கி நிற்கும் மனிதர்களின்
மனம் என்னும் விலங்குகளை, உன்னைக் காணும்படிச் செய்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே கானல் நீரைப் போன்ற ஆசையால் கலங்கி இருக்கும் மக்களை உன் நாதத்தால் தெளிவித்து
வேண்டிய பலன்களைத் தரக் கூடிய எம்பெருமான் திருவடிகளைக் காட்டுகிறாய் –
அவற்றையே ப்ராப்யமாகக் கொள்ளச் செய்து அருளுகிறாய் –

—————————————————————————————-

மதுரிபு பதரக்ஷே மந்த புத்தௌ மயீத்வாம்
அநவநி மஹிமாநம் த்வத் ப்ரஸாதாத் ஸ்துவாநே
மணி நிகர ஸமுத்தை: மஞ்ஜுநாதை: கவீநாம்
உபரமயஸி தாம்ஸ்தாந் நூநம் உத்ஸேக வாதாந்—-464-

மது என்ன அரக்கனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அற்பமான அறிவுள்ள நான், எல்லையற்ற பெருமை
நிறைந்த உன்னை, உன்னுடைய அருள் காரணமாகத் துதிக்கிறேன். அந்த நேரத்தில் எனது சொற்களைத் தூஷிக்கின்ற
பல கவிஞர்களின் கர்வம் நிறைந்த சொற்களை உனது இரத்தினக்கற்கள் மூலம் ஏற்படும்
இனிமையான நாதம் கொண்டு நீ அடக்குறாய் என்பது உண்மை.

ஸ்ரீ பாதுகையே எல்லை யற்ற உன் பெருமையை உன் கருணையால் சிற்று அறிவு படைத்த நான் பாடப் புகுந்தேன் –
செருக்குக் கொண்ட கவிகள் என் வார்த்தைகளைத் தூஷிக்கும் போது உன் நாதத்தால் அவர்களைத் தடுக்கிறாய் –

—————————————————————

சரணம் உபகதே த்வாம் சார்ங்கிண: பாத ரக்ஷே
ஸக்ருதிதி விதி ஸித்தம் த்யக்து காமே விமோஹாத்
ப்ரசலித மணிஜால வ்யஞ்ஜிதை: சிஞ்ஜிதை: ஸ்வை:
அலமலம் இதி நூநம் வாரயஸி ஆதரேண—465–

சார்ங்கம் என்னும் வில்லை உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை ஒருமுறை சரணாகதி செய்தாலே
போதுமானது என்று விதிக்கப்பட்ட சாஸ்திரம் அறியாமல் சரணாகதி செய்தவன், மீண்டும் சரணாகதி செய்ய முனைகிறான்.
அப்போது வேகமாக அவனைத் தடுக்க நீ முயலும்போது அசைகின்ற உனது இரத்தினக் கற்களின் நாதம் கொண்டு,
“போதும் போதும்”, என்று மிகுந்த ஆசையுடன் தடுக்கிறாய் என்பது நிச்சயம்.

ஸ்ரீ பாதுகையே சரணா கதி ஒரு பயனுக்காக ஒரு முறையே செய்யத் தக்கது -அடிக்கடி செய்யத் தக்கதன்று என்ற
சாஸ்திர வரம்பை மீறி உன்னைச் சரணம் அடைந்தவர் மீண்டும் சரணா கதி செய்யப்புக முன் செய்த சரணா கதியே போதும் –
மேலும் வேண்டாம் என்று உன் நாதங்களால் ஆதரத்துடன் நீ அவர்களைத் தடுக்கிறாய் போலும் –

—————————————————————————

விகல கரண வ்ருத்தௌ விஹ்வல அங்கே விலக்ஷம்
விலபதி மயி மோஹாத் பிப்ரதீ சௌரி பாதம்
பரிசரம் அதிகந்தும் பஸ்ய பாதாவநி த்வம்
ப்ரதி பயம் அகிலம் மே பர்த்ஸயந்தீ நிநாதை:—-466–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! என்னுடைய புலன்கள் அனைத்தும் தளர்ந்து, உடல் முழுவதும் குன்றி, அறிவு இழந்து,
யாரைக் குறித்து எதனைக் கூறுவது என்று புரியாமல், எதனையோ கூறி அழும் காலம் உண்டாகலாம்.
அப்போது ஸ்ரீரங்கநாதனின் திருவடியை நீ தரித்துக் கொண்டு, உன்னுடைய இனிமையான நாதங்கள் மூலம்
எனக்கு உண்டாகின்ற அனைத்து விதமான பயத்தின் காரணங்களை,
அவை பயந்து ஓடும்படியாக விரட்டியவாறு நீ எனக்கு அருகில் வரவேண்டும்.

ஸ்ரீ பாதுகையே இந்திரியங்கள் போய் முழுவதுமாக தளர்ந்து நான் கதறுகிற போது எனக்குப் பயத்தை உண்டு பண்ணுபவைகளை
உன் நாதங்களால் மிரட்டிய படி எம்பெருமானுடன் நீ என் சமீபம் வர வேண்டும் –

————————————————————————

கரண விகம காலே கால ஹுங்கார சங்கீ
த்ருதபதம் உபகச்சந் தத்த ஹஸ்த: ப்ரியாப்யாம்
பரிண மயது கர்ணே ரங்கநாத: ஸ்வயம் ந:
ப்ரணவம் இவ பவத்யா: பாதுகே மஞ்ஜுநாதம்—-467-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! என்னுடைய புலன்கள் அடங்குகின்ற அந்திம காலத்தில் யமன் என்னிடம் வந்து
”ஜும்” என்று அதட்டுவானே என்ற சந்தேகம் ஸ்ரீரங்கநாதனுக்கு எழுகிறது. அதனால், அந்த நேரத்தில் தன்னுடைய
இரண்டு பிராட்டிகளும் கை கொடுக்க, மிகவும் வேகமாக என்னிடம் ஓடி வந்து, எனது காதில் ப்ரணவத்தின்
ஓசை போன்ற உன்னுடைய அழகான நாதத்தைக் கேட்கும்படிச் செய்யவேண்டும்.

ஸ்ரீ பாதுகையே என் அந்திம காலத்தில் ஸ்ரீ ரங்க நாதன் உபய நாச்சிமாருடன் யம படர்களின் கொடிய பேச்சுக்கள் என் காதில்
விழாமல் இருக்க வேண்டி வேகமாக எழுந்து அருளி உன் இன்ப நாதம் என் காதில் பிரணவம் போல் ஒலிக்குமாறு செய்து அருள வேண்டும் –

——————————————————————-

கமல வந ஸகீம் தாம் கௌமுதீம் உத்வஹந்தம்
ஸவிதம் உபநயந்தீ தாத்ருஸம் ரங்க சந்த்ரம்
ப்ரளய தின ஸமுத்தாந் பாதுகே மாமகீநாந்
ப்ரசமய பரிதாபாந் சீதளை: சிஞ்ஜிதை: ஸ்வை:—-468–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மரணம் சம்பவிக்கின்ற நேரத்தில் என்னுடைய வேதனைகளை நீ போக்கவேண்டும்.
எப்படி என்றால் – தாமரைக் காட்டின் தோழியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் என்னும் நிலவை வைத்துக் கொண்டிருக்கிற
ஸ்ரீரங்கநாதனை என் அருகில் எழுந்தருளப் பண்ண வேண்டும்.
இதன் மூலம் குளிர்ந்த உன்னுடைய நாதங்கள் மூலமாக எனது வேதனைகளை நீக்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே அந்திம தருணத்தில் சரீரத்திலும் மனத்திலும் பலவித பரிபவங்கள் உண்டாகும்
அப்போது இள நிலவை ஒத்த மகா லஷ்மியை அடைந்த ஸ்ரீ ரங்க விமானத்திற்கு சந்த்ரனாகிய எம்பெருமானை
என்னருகில் கூட்டி வந்து அவரது சந்திர காந்தியாலும் உன் இனிய நாதத்தாலும் என்னைக் குளிர வைக்க வேண்டும் –

——————————————————————————-

ப்ரஸமயது பயம் ந: பஸ்சிம ஸ்வாஸகாலே
ரஹஸி விஹரணம் தே ரங்க நாதேந ஸார்த்தம்
நியதம் அநுவிதத்தே பாதுகே யத் நிநாத:
நிகில புவந ரக்ஷா கோஷணா கோஷலீலாம்—-469–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின்போது உண்டாகும் உன்னுடைய நாதங்கள்,
“ நிச்சயம் அனைத்து உலகங்களையும் காப்பேன் ”, என்று பறைசாற்றுவது போல் உள்ளது.
இப்படிப்பட்ட இந்த சப்தமானது, என்னுடைய இறுதி மூச்சு வெளியில் கிளம்பும்போது, யாரும் அறியாதபடி அங்கு வருகின்ற
ஸ்ரீரங்கநாதனுடன் கூடியபடி இருந்து, எனது பயத்தை நீக்கி விடுகிறது.

சரணாகதி செய்தவன் இறக்கின்ற காலத்தில், அங்கு வேறு யார் கண்ணிலும் புலப்படாத வகையில்
ஸ்ரீரங்கநாதனைப் பாதுகை அழைத்து வந்து சேவை சாதிப்பாள் என்பதைக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே உலகம் எங்கும் உன் நாதத்தால் எம்பெருமான் எல்லா உலகங்களையும் ரஷிப்பவர்-என்று நீ கூறி இருக்கிறாய் –
அதனால் என் அந்திம காலத்தில் என்னிடத்தில் ரஹச்யமாக வந்து என் பயத்தைப் -பாபத்தைப் -போக்கி அருள வேண்டும் –

—————————————————–

த்ரிக விநிஹித ஹஸ்தம் சிந்த யித்வா க்ருதாந்தம்
கதவதி ஹ்ருதி மோஹம் கச்சதா ஜீவிதேந
பரிகலயது போதம் பாதுகே சிஞ்ஜிதம் தே
த்வரயிதும் இவ ஸஜ்ஜம் த்வத் விதேயம் முகுந்தம்—-470-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உடலை விட்டு ப்ராணனுடன் கூடிய மனம், எனது கழுத்தில் கையை வைத்து அழுத்துகின்ற
யமனை எண்ணி மயக்கம் அடைந்துவிடும். அப்போது உன் வசப்பட்டுள்ள ஸ்ரீரங்கநாதனை வேகமாக வரச்செய்கின்ற
உன்னுடைய நாதம், எனக்கு நல்ல ஞானத்தை அளிக்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே என் அந்திம காலத்தில் யம படர்கள் வந்து நலிவார்கள் என்று அஞ்சி நான் மயங்கி விடுவேன் –
நாழி யாகிறது -புறப்பட வேண்டாமா என்று எம்பெருமானை அப்பொழுது அவசரப் படுத்துகிற
உன் சப்தம் எனக்கு நல்ல ஞானத்தைத் தர வேண்டும் –

—————————————————————————-

உபக்நம் ஸம்வித்தே: உபநிஷத் உபோத்காத வசநம்
தவ ஸ்ராவம் ஸ்ராவம் ஸ்ருதி ஸுபகம் அந்தர் மணிரவம்
விஜ்ரும்பந்தே நூநம் மது மதந பதாவநி மம
த்ரவீபூத த்ராக்ஷா மதுரிம துரீணா: ப்ரணிதய:—-471–

மது என்ற அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அறிவு என்ற கொடியானது படர்வதற்கு ஏற்ற
கொழுகொம்பாக உபநிஷத்துக்கள் உள்ளன. அந்த உபநிஷத்துக்களின் முன்னுரையாக, செவிக்கு இனிய
உன்னுடைய உள்ளே இருக்கின்ற இரத்தினக்கற்களின் நாதங்கள் உள்ளன.
அதனைக் கேட்டுக்கேட்டு நன்கு கரைந்த திராக்ஷை பழத்தின் இனிமையைச் சுமக்கின்ற சொற்கள்
மேலும்மேலும் வெளிவருகின்றன என்பது நிச்சயம்.

ஸ்ரீ பாதுகையே -உன் நாதம் ஞானம் என்ற கொடிக்குக் கொழு கொம்பாகவும் உபநிஷத்துக்கு முன்னுரையாகவும் இருக்கிறது-
அப்படிப்பட்ட உன் நாதத்தை அடிக்கடிக் கேட்டதால் ரசப் பெருக்கு ஏற்பட்டு
உன்னைத் துதிக்க இனிய வார்த்தை எல்லை இல்லாமல் எனக்கு ஏற்படுகிறது –

————————————————————–

விலாஸை: க்ரீணந்தோ நிகில ஜந சேதாம்ஸி விவிதா:
விஹாரா: தே ரங்க க்ஷிதி ரமண பாதாவநி முஹு:
விகாஹந்தாம் அந்தர்மம விலுடத் அந்தர் மணி சிலா
கலாத்கார வ்யாஜ க்ஷரத் அம்ருத தாரா தமநய:—-472-

திருவரங்கத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் உள்ளே இருக்கின்ற
இரத்தினக் கற்கள் தங்களது விளையாட்டுக்கள் மூலம் அனைவரது மனதையும் வசப்படுத்தி விடுகின்றன.
அவை எழுப்புகின்ற, “களுக், களுக்”, என்ற ஒலியின் இனிமையால் அம்ருத ப்ரவாஹம் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட உனது ஸஞ்சாரங்கள் என் மனதில் புகவேண்டும்.

ஸ்ரீ பாதுகையே நீ சஞ்சரிக்கும் போது ரத்தினங்கள் கல கல என்று சப்திக்கின்றன –
பெயருக்கு கல் என்கிறதே ஒழிய அமிர்த தாரையைப் போல் யாவரையும் தன் வசம் இழுக்கின்றது
கஜ கதி சிம்ஹ கதி சர்ப்ப கதி என்ற அமிர்தம் போன்ற உன் சஞ்சார நாதம் என் மனசில் எப்போதும் பிரவேசிக்க வேண்டும் –

——————————————————————-

ஸ்ருதி ஸ்ரேணீ ஸ்தேய ஸ்ருதி ஸுபக சிஞ்ஜா முகரிதாம்
பஜேம த்வாம் பத்மா ரமண சரண த்ராயிணி பரம்
ந முத்ரா நித்ராண த்ரவிண கண விஸ்ராண நதசா
விசால அஹங்காரம் கமபி கந ஹுங்கார பருஷம்—-473–

ஸ்ரீரங்கநாச்சியாருக்கு மகிழ்வை ஏற்படுத்தும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
வேதவரிகளுக்கு, பலரும் முரண்பட்ட பொருளைக் கூறி விவாதம் செய்ய முற்படும் போது, உன்னுடைய நாதம் மூலம்
செவிக்கினிய தீர்ப்பை நீயே அளிக்கிறாய். இப்படிப்பட்ட உன்னையே நாங்கள் வணங்கி நிற்போம்.
அற்பமான சிறு பொருளைக்கூட ஒரு சிலர் அரக்கு முத்திரை இட்டு, பாதுகாத்து வைத்தபடி,
அதனை ஏதோ ஓர் அற்பமான காரணத்தினால் மற்றவர்களுக்குச் சிறிது வழங்கக்கூடும்.
அந்த நேரத்தில், “தான் தாம் செய்கிறோம்”, என்று கர்வம் காரணமாக, அனைவரையும் அதட்டி,
பயத்தை உண்டாக்குகின்ற மனிதர்களை நாங்கள் அண்ட மாட்டோம்.

ஸ்ரீ பாதுகையே உன் இனிய நாதம் வேதங்களுக்கு மனம் வந்தபடி செய்யப்படும் தவறான
வ்யாக்யானங்களைத் தீர்த்து வைத்து தீர்ந்த பொருளைத் தர வல்லது –
உன் நாதத்திலேயே என் மனம் எப்போதும் லயித்து இருக்க வேண்டும்
செல்வச் செருக்குக் கொண்ட அல்பர் இடத்தில் உதவி நாடி நான் போகாமல் இருக்க வண்டும் –

————————————————————————————————–

தவ ஏதத் ஸ்ரீரங்கக்ஷிதிபதி பதத்ராயிணி ந்ருணாம்
பவதி ஆக: சிந்தா ரண ரணக பங்காய ரணிதம்
சரீரே ஸ்வம் பாவம் ப்ரதயதி யதா கர்ணநவசாத்
ந ந: கர்ணே பாவீ யம மஹிஷ கண்டா கண கண:—-474–

ஸ்ரீரங்கநாதனின் திருவடியைக் காப்பாற்றும் பாதுகையே! மனிதர்கள் தாங்கள் செய்த தவறுகளை எண்ணி
மிகுந்த அச்சம் கொள்ளும்போது, உன்னுடைய இனிய நாதம் அவர்களது பயத்தைப் போக்க ஏதுவாக உள்ளது.
இந்த உடலானது தனது இயல்பான அழிவை அடையும் காலத்தில், உன்னுடைய இந்த நாதத்தைக் கேட்பதன் காரணமாக,
எங்கள் காதுகளில் யமனின் வாகனமாக உள்ள எடுமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் கண கண என்னும் ஓசை கேட்காமல் போய்விடும் .

பாதுகையை அண்டியவர்கள் வாழும் காலத்தில் மற்றவர்களை எதிர்பார்த்து வாழாமல், எந்தவிதமான
அச்சமும் இன்றி வாழ்வார்கள் என்று கடந்த ச்லோகத்தில் கூறினார்.
இங்கு, உயிர் பிரியும் நேரத்திலும் பயம் அற்று இருப்பார்கள் என்றார்.

ஸ்ரீ பாதுகையே ஒருவன் தன் குற்றத்தை நினைத்து நடுங்குகிற போது உனது இனிய நாதம் அந்த பயத்தைப் போக்குகிறது –
காரணம் யாது எனில் உன்னுடைய சப்தத்தை ப்ரீதியுடன் கேட்பவர் காதில்
யமனுடைய வாகனமான எருமை கழுத்தில் தாங்கும் மணியின் சப்தம் படாதன்றோ –

————————————————————————-

பரித்ரஸ்தா புண்யத்ரவ பதந வேகாத் ப்ரதமத:
க்ஷரத்பி: ஸ்ரீரங்க க்ஷிதி ரமண பாதாவநி ததா
விதாமாஸுர் தேவா: பலிமதந ஸம்ரம்பம் அநகை:
ப்ரணாதைஸ் தே ஸத்ய: பத கமல விக்ராந்தி பிஸூநை:—-475-

ஸ்ரீரங்கத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடியைக் காப்பாற்றும் பாதுகையே!
த்ரிவிக்ரம அவதாரம் செய்த காலத்தில், மஹாபலியின் புண்ணிய காலம் கழிந்து அவன் மண்ணுலகில் விழும் காலம் வந்ததை,
த்ரிவிக்ரமனாக அறிவிக்கும் வகையில், அவனது திருவடித் தாமரையில் உள்ள குற்றமற்ற உனது இனிய நாதம் மூலம் தெரிவித்தாய்.
இதனால் தேவர்கள், ஸ்ரீரங்கநாதன் த்ரிவிக்ரமான நின்று மஹாபலியை அடக்குகின்ற செயலை அறிந்தனர்.

மனிதர்கள் மட்டும் அல்லாமல், தேவர்களுக்கும் பயம் உண்டு. அவர்களின் பயத்தையும் நீக்குவதாகப்
பாதுகைகளின் செயல்கள் உள்ளதைக் காண்பிக்கிறார்.

ஸ்ரீ பாதுகையே திரிவிக்கிரம திருவவதார காலத்தில் பிரம்மா எம்பெருமானுடைய திருவடியை அலம்பினார் –
அது நதியாக பிரவகித்தது -உன் இனிய நாதத்துடன் கூடிய திருவடி வாய்ப்பைக் கவனித்து தேவர்கள் தங்கள் சரணாகதியை
ஏற்ற எம்பெருமான் மகா பலியிடம் இருந்து தங்களைக் காப்பாற்ற திருவவதாரம் எடுத்து அருளியதை அறிந்தனர் –

———————————————————————–

ஸ்வேஷு ஸ்வேஷு பதேஷு கிம் நியமயஸி அஷ்டௌ திசாம் ஈஸ்வராந்
ஸ்வைராலாபகதா: ப்ரவர்த்தயஸீ கிம் த்ரய்யா ஸஹாஸீநயா
ரங்கேசஸ்ய ஸமஸ்த லோக மஹிதம் ப்ராப்தா பத அம்போருஹம்
மா பைஷரீதி மாம் உதீரயஸி வா மஞ்ஜுஸ்வநை: பாதுகே—-476-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து உலகங்களும் போற்றுகின்ற ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற அழகிய
திருவடிகளை அடைந்து நீ வீற்றுள்ளாய். அங்கு இருந்தபடியே இனிமையான நாதம் எழுப்பியபடி உள்ளாய்.
இதன் மூலம் – இந்த்ரன் உள்ளிட்ட எட்டுத் திசையின் காவலர்களை, அவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று
பணியாற்றும்படி உத்தரவு இட்டபடி உள்ளாயோ? அல்லது ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் எப்போதும் அமர்ந்துள்ள
வேதங்களுடன் உரையாடியபடி உள்ளாயோ? அல்லது என்னிடம், “அஞ்சவேண்டாம்”, என்று கூறுகிறாயோ?

ஸ்ரீ பாதுகையே உன் இனிய நாதம் ஏக காலத்தில் பல வேலைகளைச் செய்து அருளுகிறது –
இந்திராதி திக்பாலர்களைத் தங்கள் பட்டங்களில் இருக்கும் படி உத்தரவு செய்கிறது –
உன்னுடன் கூட இருக்கும் வேதங்களோடு வார்த்தை சொல்லிக் கொண்டே
பயப்படாதே என்று எனக்கும் தைர்யம் சொல்வது போலே இருக்கிறாய் –

———————————————————————————————

ரங்கே தேவி ரதாங்கபாணி சரண ஸ்வச்சந்த லீலாஸகி
ஸ்தோக ஸ்பந்தித ரம்ய விப்ரம கதி ப்ரஸ்தாவகம் தாவகம்
கால உபாகத கால கிங்கர சமூ ஹுங்கார பாரம்பரீ
துர்வார ப்ரதி வாவதூகம் அநகம் ஸ்ரோஷ்யாமி சிஞ்ஜாரவம்—-477-

சக்கரத்தைத் திருக்கரத்தில் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடன் இனிமையாக விளையாடி மகிழும்
அதன் தோழியான பாதுகையே! ஸ்ரீரங்கத்தில் எப்போதும் உல்லாஸமாக ஸஞ்சாரம் செய்கின்ற நம்பெருமாளின்
ஸஞ்சாரத்தை சிறுகச்சிறுக அசைந்தபடி நீ அறிவிக்கிறாய். இப்படிப்பட்ட உனது நாதம் என்ன செய்யவேண்டும் தெரியுமா –
எனது அந்திம காலத்தில் எண்ணற்ற யமதூதர்கள் தொடர்ந்து என்னை அதட்டியபடி இருப்பார்கள்.
அவர்களால் மறுமொழி கூற இயலாதபடி, குற்றமற்றதாக ஒலிக்கவேண்டும். இதனை நான் கேட்டபடி இருப்பேனாக.

தனது அந்திம காலம் திருவரங்கத்திலேயே கழியவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். யம தூதர்கள் வரும்போது,
பாதுகைகளின் ஓசைகள் நம்பெருமாள் வருவதை அறிவிக்க வேண்டும் என்று விண்ணம்பம் செய்கிறார்.

ஸ்ரீ பாதுகையே நான் மிகப் பாபியான படியால் யமபடர்கள் அந்திம காலத்தில் ஆயிரக் கணக்கில் வந்து என்னை அதட்டுவார்கள்
அந்த சமயத்தில் உன் இனிய நாதத்தை நான் ஸ்ரீ ரங்கத்தில் கேட்டு இருக்க அருள வேண்டும் –

—————————————————————-

த்வத் சிஞ்ஜாரவ சர்க்கரா ரஸ ஸதாஸ்வாதாத் ஸதாம் உந்மதா
மாதர் மாதவ பாதுகே பஹுவிதாம் ப்ராய: ஸ்ருதி: முஹ்யதி
ஸாராஸார ஸக்ருத் விமர்ஸந பரிம்லந அக்ஷர க்ரந்திபி:
க்ரந்தைஸ் த்வாம் இஹ வர்ணயாமி அஹம் அதஸ் த்ராஸ த்ராபா அபவர்ஜித:—478–

ஸ்ரீரங்கநாச்சியாரைத் திருமார்பில் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! பல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்த
அறிஞர்களின் காதுகள், அவற்றை விட மிகவும் இனிமையானதும், சர்க்கரைப்பாகு போன்றதும் ஆகிய
உனது நாதத்தின் சுவையை விடாமல் பருகி, மயக்கம் அடைந்து நிற்கின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட நான், எவ்விதமான அச்சமோ அல்லது நாணமோ இல்லாமல்,
”இந்தச் சொற்கள் நல்லவையா தகாதவையா”, என்று மீண்டும் ஒருமுறை ஆராயாமல்,
எழுத்துக்களின் சேர்க்கை கொண்ட ச்லோகங்களால் உன்னைத் துதித்து விடுகிறேன்.

இங்கு “விமர்சந பரிம்லாந” என்ற பதத்திற்கு – ”மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல்” ,
“ விமர்சிக்க முயன்றாலே வாடிவிடும் சொற்கள்” – என்று இரு பொருள் கொள்ளலாம்.
முதல் பொருளில் மேலே உள்ள கருத்து உள்ளது. இரண்டாவது பொருளில் –
தன்னுடைய எழுத்துக்கள் மிகவும் அற்பமானவை என்றும், அவற்றை ஒருமுறை யாராவது விமர்சிக்க முயன்றாலே
அவை வாடிவிடும்படியான தன்மை கொண்டவை என்றும் கூறுவதாகக் கொள்ளலாம்.

ஸ்ரீ பாதுகையே அதிகம் தெரிந்த பெரியவர்கள் கூட உன் நாதத்தைக் கேட்டு மயங்கி விடுகிறார்கள்
என்னுடைய ஸ்லோகங்களில் உள்ள தோஷங்களை விமர்சிக்கவும் முடியாத படியான மயக்கம் அது
ஆகவே பயமும் வெட்கமும் இன்ற நான் துதிக்க முற்படுகிறேன் –

——————————————————————-

தவ அம்ப கில கேலதாம் கதிவசேந கர்ப்பாஸ் மநாம்
ரமா ரமண பாதுகே கிமபி மஞ்ஜுபி: சிஞ்ஜிதை:
பதிஸ்துதி விதாயிபி: த்வதநு பாவ ஸித்தாந்திபி:
ஸயூத்ய கலஹாயிதம் ஸ்ருதிசதம் ஸமாபத்யதே—-479-

ஸ்ரீரங்கநாச்சியாருக்கு இனிமையானவனாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரம் காரணமாக
ஒலிக்கின்ற இனிமையான இரத்தினக்கற்கள் கொண்ட உனது பெருமை என்பது, அவனது திருவடிகளைக் காட்டிலும்
உயர்ந்தவையே என்று வேதங்கள் முழங்குகின்றன. ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாராட்டித் துதிப்பவர்களுடன்
இந்தச் சூழ்நிலையில், வேதங்கள் ஏனோ முரணாகப் பேசி, கலகம் செய்கின்றன.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் புகழ்ந்து ச்லோகம் இயற்றுவதாக ஒருவர் கூற, ஸ்வாமி தேசிகன் பாதுகைகளைப் புகழ்ந்து
ஸ்லோகம் இயற்றுவதாகக் கூற – இப்படித்தான் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம் உண்டானது.
இங்கு திருவடிகளைப் பற்றிப் புகழ்ந்து ஸ்லோகம் இயற்ற முயன்றவரால் சில நூறு ஸ்லோகம் கூட இயற்ற முடியவில்லை.
ஆகவே வேதங்கள் கூட அவருக்குக் கைக்கொடுக்காமல், கலகம் செய்ததோ என்று வியக்கிறார்.

ஸ்ரீ பாதுகையே நீ சஞ்சரிக்கும் போது உன்னுள் இருக்கும் ரத்னங்கள் ஒன்றோடு ஓன்று மோதி சப்திக்கின்றன –
அது வேதத்தில் சில வாக்யங்கள் எம்பெருமான் உடையவும் மற்றும் சில வாக்யங்கள் அவர் தாசர்கள் உடையவும் பெருமையை
சமமானமாகக் கூறுவதால் தமக்குள் சண்டையிடுவது போல் இருக்கிறது -நாதம் இரண்டையும் சமன்வயப்படுத்துகிறது –

——————————————————————————-

க்ஷிபதி மணி பாத ரக்ஷே நாதைர் நூதம் ஸமாஸ்ரித த்ராணே
ரங்கேஸ்வரஸ்ய பவதீ ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷண விளம்பம்—-480-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தனது அடியார்கள் தன்னிடம், ” என்னைக் காக்கவேண்டும்”, என்று
விண்ணப்பம் செய்யவேண்டும் என்று ஸ்ரீரங்கநாதன் எதிர்பார்க்கிறான்.
இத்தகைய அவனது எண்ணத்தை உனது நாதங்களால் நீக்கி, அவன் காப்பாற்றும் காலதாமதத்தைக் குறைத்து விடுகிறாய்.

எம்பெருமான் கருணை உள்ளவன் என்றாலும், ”என்னைக் காப்பாய்” என்று ஒருவன் கூறாதவரையில்
அவன் ஏதும் செய்யமாட்டான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனைக் கண்ட பாதுகை,
“இது என்ன விபரீதம்! அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் காப்பது நம் கடமை அல்லவோ?”, என்று
திருவரங்கனைத் துரிதப்படுத்தி விடுகிறாள் என்கிறார்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் தன்னை அடைந்தவர்களைத் தடையின்றி காப்பாற்றுகிறார்
என் விஷயத்தில் கால தாமதம் இருக்குமானால் உன் நாதத்தால் நீ அத்தை போக்கி அருளுகிறாய் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: