ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-8-நிர்யாதநா பத்ததி -மீட்சிப் பத்ததி -ஸ்லோகங்கள் -211-240-

அபிஷேகோத்ஸவாத் தஸ்மாத் யஸ்யா நிர்யாதநா உத்ஸவ:
அத்யரிச்யத தர்ம வந்தே பவ்யாம் பரத தேவதாம்—-211-

அனைவராலும் போற்றுபடியாக பாதுகையின் பட்டாபிஷேகம் விளங்கியது.
அந்த விழாவைக் காட்டிலும் இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியவுடன்,
இராமனிடம் பாதுகையை பரதன் மீண்டும் சமர்ப்பித்த விழா மிகவும் கோலாகலமாக இருந்தது.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நான் ஆராதிக்கிறேன்.

பெருமாளுடைய ஸ்ரீ பாதுகைக்கு நடந்த பட்டாபிஷேக உத்சவத்தைக் காட்டிலும் ஸ்ரீ பரதாழ்வான்
பதினான்கு வருடங்கள் கழித்து பெருமாளிடம் அத்தை ஒப்புவித்த மகோத்சவம் சிறப்பாக இருந்ததே –
ஸ்ரீ பாரதாழ்வானுக்கு பிரதான தேவதையான் அந்த ஸ்ரீ பாதுகையை வணங்குகிறேன் –

—————————————————————————–

உபாஸ்ய வர்ஷாணி சதுர் தச த்வாம்
உத்தாரிகாம் உத்தர கோஸலஸ்தா:
ஸநந்த நாத்யைரபி துர் விகாஹம்
ஸந்தாநிகம் லோகம் அவாபுர அக்ர்யம்—-212–

பாதுகையே! வடக்கு கோஸலை நாட்டில் உள்ள மக்கள் உன்னை பதினான்கு வருடங்கள் வணங்கி வந்தனர்.
இதனால் அவர்களுக்குக் கிட்டியது என்ன?
ஸநந்தனர் போன்ற உயர்ந்தவர்களாலும் அடைய இயலாத ஸாந்தாநிக லோகத்தை அவர்கள் எளிதாக அடைந்தனர்.

ஸ்ரீ பாதுகையே கோசல தேசத்தவர்கள் பதினான்கு வருடங்கள் உனக்குப் பணிவிடைகள் செய்து
சனக சனந்த நாதியரால் கூட அடைய முடியாததான பெரும் பதத்தை அடைந்தனர் –

——————————————————————

பாதாவநி ப்ரத்யயித: ஹநூமாந்
ஸீதாம் இவ த்வாம் சிரவிப்ர யுக்தாம்
ப்ரணம்ய பௌலஸ்த்ய ரிபோ: உதந்தம்
விஜ்ஞாபயாமாஸ விநீத வேஷ:–213–

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
சீதையைப் போன்றே நீயும் இராமனை வெகு காலம் பிரிந்திருந்தாய்.
இதனை உணர்ந்த இராமன் உன்னிடம் (பரதனிடம்) அனுமானை அனுப்பினான்.
இராமனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அனுமான், உன்னிடம் வந்து சீதையைப் போன்றே உன்னை வணங்கி,
இராவணனின் சத்ருவான இராமன் கூறி யனுப்பியதைக் கூறினார்.

ஸ்ரீ பாதுகையே ராவணனை வென்று பெருமாள் எழுந்து அருளும் விஷயத்தை சிறிய திருவடி
சீதையிடம் தெரிவித்தது போலே வணக்கத்துடன் உனக்குத் தெரிவித்தார்
சீதையைப் போலே நீயும் எம்பெருமானைப் பிரிந்து வாடியதால் சீதைக்கு சமமான ஸ்தானம் உனக்கு வழங்கினார் –

————————————————————————-

தவ அபிஷேகாந் மணி பாத ரக்ஷே
மூலே நிஷேகாதிவ வ்ருத்தி யோக்யாத்
ஜஹு: ததைவ த்ரித சாங்கநாநாம்
ப்ரம்லாநதாம் பத்ர லதாங்குராணி—214-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே!
இலைகள் வளர்வதற்கு ஆதாரமாக வேரில் ஊற்றப்பட்ட நீர் உள்ளது.
உன் மீது உனது பட்டாபிஷேகத்தின் போது சேர்க்கப்பட்ட நீர் எவ்விதம் உள்ளது என்றால் –
அசுரர்களின் தொல்லை இன்றி தேவர்கள் தங்கள் தேவ லோக மங்கையர் உடலில் எழுதும்
சித்திர இலைகள் மீண்டும் தோன்ற வழி செய்தது.

தேவ ஸ்திரீகள் தங்கள் உடலில் அலங்காரத்திற்காக இலை கொடி முதலியவற்றை எழுதிக் கொண்டு இருந்தனர் –
ஸ்ரீ பாதுகையே உனக்குப் பட்டாபிஷேகம் ஆனதும் அவை வாட்டம் இன்றி நன்கு படர்ந்து தளிர்ந்து விளங்கலாயின
இதனால் தேவர்கள் தங்களுக்கு இனி தீங்கு இல்லை என்று மகிழ்ந்தனர் –

——————————————————————————————-

ஸர்வத: த்வத் அபிஷேக வாஸரே
ஸம்யக் உத்த்ருத ஸம்ஸத கண்டகே
ராகவஸ்ய விபிநேஷு பாதுகே
யத்ர காமகமதா வ்யவஸ்திதா—-215-

பாதுகையே! உனக்கு எப்போது பட்டாபிஷேகம் செய்வித்தனரோ, அந்த நேரத்தில் இருந்து,
அனைத்து இடங்களிலும் இருந்த விரோதிகள் அனைவரும் முள் போன்று நீக்கப்பட்டனர்.
அவர்கள் அளித்து வந்த துன்பங்களும் நீக்கப்பட்டன.
இதனால் தான், நீ இல்லா விட்டாலும், இராமன் கானகத்தில் தன் விருப்பப்படி எங்கும் சஞ்சாரம் செய்ய முடிந்தது
(இதன் கருத்து – பாதுகை நாட்டை ஆண்ட காரணத்தால், நாட்டைப் பற்றிய கவலை இல்லாமல் இராமன் சென்றான்).

ஸ்ரீ பாதுகையே நீ பட்டாபிஷேகம் பண்ணிக் கொண்டது முதல் உலகத்தில் சத்ருக்கள் இல்லாமலும்
பாதைகளில் முற்கள் இல்லாமலும் ஆனதே
பெருமாள் அதனால் தண்ட காரணத்தில் நினைத்த இடத்தில் சஞ்சாரம் செய்தார்
ஆழ்வார் உடைய உபதேச மகிமையால் ஜனங்கள் காம க்ரோதங்களை வென்று பகவானை நினைத்தார்கள் –

————————————————————————————

கிம் சதுர்தசபி: ஏவ வத்ஸரை:
நித்யம் ஏவ மணி பாதுகே யுவாம்
பாதயோஸ் த்ரிபுவந ஆதிராஜ்யோ:
யௌவராஜ்யம் அதி கச்சதம் ஸ்வயம்—216–

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே!
பதினான்கு வருடங்கள் மட்டுமா நீங்கள் (இரண்டு பாதுகைகள்) அரசாளப் போகிறீர்கள்?
இராமனின் திருவடிகள் அனைத்து உலகங்களுக்கும் சக்ரவர்த்தியாக உள்ளன.
ஆகவே, நீங்கள் எப்போதும் இளவரசர்களாக இருந்து வருவீர்கள்.

ஸ்ரீ பாதுகைகளே நீங்கள் இருவரும் பதினான்கு வருஷங்கள் மட்டும் தான் அரசாண்டீர்கள் எனபது இல்லை –
பெருமாள் திருவடிகள் எப்பொழுதும் மூவுலகுக்கும் ராஜாவாக இருக்கும் போது
நீங்கள் இருவரும் எப்பொழுதுமே யௌவராஜ்யம் பெறப் போகிறீர்கள் அன்றோ –

——————————————————————–

ராமஸ்ய ராக்ஷஸ வதத்வரிதஸ்ய காலே
பாதாவநி ப்ரகடயந் இவ பார்ஷ்ணி குப்தம்
ஆசித்ர கூடம் அதி கம்ய சசம்ஸ வார்த்தாம்
அவ்யாஹத த்வத் அபிஷேக ம்ருதங்க நாத:—217-

திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உனது பட்டாபிஷேகத்தின் போது ஏற்பட்ட மத்தளங்களின் ஓசை
தடையில்லாமல், இராமன் அப்போது இருந்த சித்ரகூடம் வரை சென்று கேட்டது.
அரக்கர்களை அழிப்பதில் முனைந்துள்ள இராமனிடம் அந்த ஓசையானது,
“நாம் இங்கு நாட்டைப் பாதுகாப்போம். நீவிர் முன் சென்று உமது செயல்களைத் தொடரலாம்”,
என்று கூறுவது போன்று இருந்தது.

ஸ்ரீ பாதுகையே -உனக்கு பட்டாபிஷேகம் செய்த போது வாத்தியங்கள் முழங்கின –
அவை சித்ர கூடம் வரையில் சென்று பெருமாளை அஸூர வதத்திற்கு தேவரீர் எழுந்து அருளலாம் –
நாங்கள் பின் பக்க பலமாக இதோ வந்து விட்டோம் என்று சொல்வது போல் இருந்தது –

————————————————————————

பத்ராணி தேவி ஜகதாம் ப்ரதிபாதயிஷ்யந்
ப்ராகேவ யேந பவதீம் பரதோ அப்யஷிஞ்சத்
மந்யே கபீஸ்வர விபீஷணயோர் யதாவத்
ஸந்தந்யதே ஸ்ம தத ஏவ கிலாபிஷேக:—218–

பாதுகையே! இந்த உலகம் முழுவதற்குமான நன்மைகளை, அவற்றுக்கு அளிக்க விரும்பிய காரணத்தினால்,
பரதன் உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான்.
அதனால் அல்லவோ சுக்ரீவன், விபூஷணன் போன்றவர்களுக்கு முறைப்படி பட்டாபிஷேகம் நிறைவேறியது.
இதனால், உலகின் நன்மைகளும் பெருகின.

ஸ்ரீ பாதுகையே உலகம் எல்லாம் ஷேமத்தை அடைய ஸ்ரீ பரதாழ்வான் உனக்குப் பட்டம் கட்டினார் –
அதனாலேயே ஸூக்ரீவன் விபீஷணன் இவர்களுடைய பட்டாபிஷேகமும் மேன்மேல் எனச் சிறப்பாக தொடர்ந்து நடந்தன –

————————————————————————-

ஸம்பித்யமாந தமஸா ஸரயூ உபநீதை:
ஸம்வர்த்திதை: தவ சுபை: அபிஷேகதோயை:
மந்யே பபூவ ஜலதி: மணி பாத ரக்ஷே
ராம அஸ்த்ர பாவக சிகாபி: அசோஷணீய:—219-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
தமஸா என்னும் நதி, ஸரயூ என்னும் நதி ஆகிய இரண்டின் நீரும் சேர்த்து உனக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த நதிகள் இரண்டும் கடலில் சென்று கலக்கின்றன. இதனால்தான் இராமன் தனது அக்னி போன்ற
அஸ்திரங்களைக் கடலில் செலுத்திய போதிலும் கடல் வற்றாமல் உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

ஸ்ரீ பாதுகையே தமஸா நதியும் சரயூ நதியும் உன் பட்டாபிஷேக ஜலத்தைக் கடலில் சேர்த்தன –
அதனாலேயே கடலை வற்றச் செய்ய பெருமாள் விட்ட ஆக்னேயாஸ்திரம் நிஷ் பலம் ஆயிற்று –
ஆசார்யனுடைய ஸ்ரீ பாத தீர்த்தம் பெற்றவனை எம்பெருமானுடைய நிக்ரஹாஸ்த்ரமும் பாதிக்காது –

———————————————————————-

பாதாவநி த்வத் அபிஷேசந மங்களார்த்தம்
பேரீசதம் ப்ருசம் அதாட்யத யத் ப்ரதீதை:
ஆகர்ண்ய தஸ்ய ஸஹஸா துமுலம் நிநாதம்
லங்கா கவாட நயநாநி நிமீலிதாநி—-220-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
உன்னுடைய பட்டாபிஷேகம் என்னும் மங்கள கரமான நிகழ்வின் போது, நூற்றுக் கணக்கானவர்கள் பெரிதாக வாத்தியம் ஒலித்தனர்.
இந்த ஓசை இலங்கை வரை கேட்டது. இதனைக் கேட்ட இலங்கையின் கதவுகள் மூடப்பட்டன.

ஸ்ரீ பாதுகையே உனது பட்டாபிஷேகத்தின் போது அடிக்கப் பட்ட நூற்றுக் கணக்கான பேரிகைகளின் நாதத்தைக் கேட்டு
இலங்கையினுடைய கதவுகள் ஆகிற கண்கள் மூடப் பட்டன –
பெருமாள் நிர் மூலம் செய்வதற்கு முன்பே இலங்கை பாழடைந்து விட்டது –

—————————————————————-

தாப உத்கம: த்வத் அபிஷேக ஜல ப்ரவஹை:
உத்ஸாரிதஸ் த்வரிதம் உத்தர கோஸலேப்ய:
லேபே சிராய ரகு புங்கவ பாத ரக்ஷே
லங்காவரோத ஸுத்ருசாம் ஹ்ருதயேஷு வாஸம்—-221-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன் மீது பட்டாபிஷேகத்தின் போது சேர்க்கப்பட்ட புனித நீரானது,
வடக்குக் கோஸலை நாட்டில் இராமனின் பிரிவால் ஏற்பட்டிருந்த தாபத்தைத் தீர்த்தது.
பின்னர் அந்த வெள்ளம் அங்கிருந்து கிளம்பி, இலங்கையை அடைந்து, அங்குள்ள பெண்களின் மனதை அடைந்து, நீண்ட காலம் இருந்தது.

ஸ்ரீ பாதுகையே உனக்கு அபிஷேகம் செய்தவுடன் அயோத்யா நகரத்து மக்களின் நெஞ்சில் இருந்த தாபம் போய்
லங்கா பட்டணத்து பெண்களின் நெஞ்சில் நிலை பெற்றது –

——————————————————————-

ஆவர்ஜிதம் விதிவிதா மணி பாத ரக்ஷே
பத்மாஸந ப்ரிய ஸுதேந புரோஹிதேந
ஆஸிந் நிதாநம் அபிஷேக ஜலம் த்வதீயம்
நக்தஞ்சர ப்ரணயிநீ நயநோதகாநாம்—-222-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து சாஸ்திரங்களை அறிந்தவரும்,
நான்முகனின் ப்ரியமான புத்திரரும், குலகுருவும் ஆகிய வசிஷ்டர் மூலம், உன் மீது புனிதமான நீர்
பட்டாபிஷேகத்தின்போது சேர்க்கப்பட்டது.
இந்த நீரே, அரக்கர்களின் மனைவிகளின் கண்களில் இருந்து வெளிவரும் கண்ணீராக மாறியது.

ஸ்ரீ பாதுகையே -சாஸ்திரங்கள் அறிந்தவரும் பிரம்மாவின் புத்திரருமான வசிஷ்டரால் உனக்கு
பட்டாபிஷேகம் செய்யப்பட தீர்த்தம் ராஷசர்களுடைய மனைவியர் அழுகைக்கு மூல காரணம் ஆயிற்று –

—————————————————————-

தேவி த்வயா ஸ்நபந ஸம்பதி ஸம்ஸ்ரிதாயாம்
தக்தே புரே தசமுகஸ்ய வலீமுகேந
ஆஸித் தத: ப்ரப்ருதி விஸ்வ ஜந ப்ரதீதம்
அத்ப்யோ அக்நி: இதி அவிததம் வசநம் முநீநாம்—-223-

பாதுகாதேவியே! உனது பட்டாபிஷேகத்தின் போது சேர்க்கப்பட்ட புனித நீர் முதலானவை இலங்கை வரை சென்றது.
இராவணனின் இலங்கை நகரம், அனுமனால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
வேதங்களின் கூறப்பட்ட “நீரில் இருந்து நெருப்பு உண்டானது” என்னும் வரியானது,
இந்த நிகழ்வுகள் மூலம் மக்களுக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டது.

ஸ்ரீ பாதுகையே உனக்கு திரு அபிஷேகம் நடந்தது -அதனாலேயே திருவடியால் இலங்கையை கொளுத்த முடிந்தது
ஜலத்தில் நின்றும் அக்னி உண்டாகிறது என்கிற ரிஷிகளின் வாக்கு அது முதல் உண்மை ஆயிற்று –

———————————————————————

ஆயோத்யகைஸ் த்வத் அபிஷேக ஸமித்த ஹர்ஷை:
ஆத்மாபிதா: ஸ்ருதி ஸுகம் நநு தே ததாநீம்
ராமஸ்ய ராக்ஷஸ சிரோ லவநே அபி அசாம்யந்
யேஷாம் த்வநிர் விஜய சங்க ரவோ பபூவ—-224-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது பட்டாபிஷேகத்தின்போது முழங்கப்பட்ட சங்குகளின் நாதம்,
அயோத்தி மக்களின் காதுகளில் இன்பமாகப் புகுந்து, அவர்களுக்கு பெரும் மகிழ்வு உண்டாக்கியது.
ஆனால் அதே சங்குகளின் ஒலியானது, இராமன் அரக்கர்களின் தலையை அறுக்கும் காலம் வரை
இலங்கையில் ஓயாமல் ஒலித்து நின்று, இராமனின் வெற்றியை அறிவிப்பதாக இருந்தன.

ஸ்ரீ பாதுகையே உனக்குப் பட்டாபிஷேகம் செய்த போது அயோத்யா வாசிகள் மிக்க மகிழ்ந்து சங்கு ஊதினார்கள்
பெருமாள் ரஷசர்களை வதம் செய்யும் வரை அது தங்கி அவருக்கு ஜய சப்தமாயிற்று –

——————————————————————

ப்ரதயிதும் அபிஷேகம் பாதுகே தாவகீநம்
துரித சமநதக்ஷே துந்துபௌ தாட்யமாநே
ஸபதி பரிக்ருஹீதம் ஸாத்வஸம் தேவி நூநம்
தசவதந வதூநாம் தக்ஷிணைர் நேத்ர கோசை:—225-

பாதுகாதேவியே! உன்னுடைய பட்டாபிஷேகம் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதால்,
அயோத்தி முழுவதும் வாத்தியங்கள் முழங்கின. இவை மூலம் அனைத்து இடங்களிலும் உள்ள பாவங்கள் அகன்றன.
இலங்கையில் உள்ள இராவணனின் மனைவிமார்களுடைய வலது கண்கள் அந்த ஒலிக்கேற்றாப் போல் துடித்தபடி நின்றன
(பெண்களின் வலது கண் துடிப்பது தீமைக்கு அறிகுறி என்று கருத்து).

ஸ்ரீ பாதுகையே உனது பட்டாபிஷேகத்துக்காக துந்துபிகள் கோஷித்தன
அதைக் கேட்ட ராவணனுடைய மனைவிகளின் வலது கண்கள் அபசகுனமாகத் துடித்தன –

——————————————————

ரகுபதி பத ரக்ஷே ரத்ந பீடே யதா த்வாம்
அகில புவந மாந்யம் அப்ய ஷிஞ்சத் வஸிஷ்ட:
தஸமுக மஹிஷீபிர் தேவி: பாஷ்பாயிதாபி:
ஸ்தந யுகம் அபிஷேக்தும் தத் க்ஷணாத் அந்வமம்ஸ்தா—-226–

ரகு குலத்தின் நாயகனான இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகாதேவியே!
அனைத்து உலகங்களும் போற்றும்படியான தகுதி உள்ளவள் நீ ஆவாய். இப்படிப்பட்ட உன்னை வசிஷ்டர் இரத்தினக் கற்களால்
இழைக்கப்பட்ட ஸிம்ஹாஸனத்தில் அமர வைத்து, பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
அந்த நேரத்திலேயே இராவணனின் மனைவிமார்களின் கண்ணீர், அவர்களின் ஸ்தனங்களை நனைத்தபடி நின்றன.

ஸ்ரீ பாதுகையே உனக்கு வசிஷ்டர் திரு அபிஷேகம் பண்ணி வைத்து உடனேயே ராவணனுடைய மனைவியர்கள்
அழும்படியாக உத்தரவு செய்தாய் –

ஆழ்வார் திரு வவதரித்ததும் இந்த்ரியங்கள் உடைய கெட்ட பிரவ்ருத்திகள் ஒழிந்தன –

————————————————————————–

ராம அஸ்த்ராணி நிமித்த மாத்ரம் இஹ தே லப்த அபிஷேகா ஸதீ
ரக்ஷஸ் தத் க்ஷபயாஞ்சகார பவதீ பத்ர ஆஸநஸ்தாயிநீ
யத் தோஷ்ணாம் அதிவேல தர்பதவது ஜ்வாலா ஊஷ்மளாநாம் ததா
நிஷ்பிஷ்டை: கலதௌ தசைல சிகரை: கர்ப்பூர ஸூர்ணாயிதம்—227-

நம்பெருமாளின் பாதுகையே! இராவணனின் புஜங்கள் இரண்டும் அக்னியின் ஜ்வாலை போன்று இருந்தன.
அவன் கைலாய மலையை அப்படிப்பட்ட புஜங்களால் உயர்த்தியபோது, தீயில் இட்ட கர்ப்பூரம் போன்று,
கைலாய மலையின் சிகரங்கள் பொடியாகிவிட்டன. இப்படிப்பட்ட வலிமை உடைய இராவணனை
இராமன் தனது அஸ்திரம் மூலம் அழித்தான் என்பது பெயரளவில் மட்டுமே! உண்மையாக நடந்தது என்ன?
ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தபடி நீயல்லவா இராமனின் பாணங்கள் கொண்டு இராவணனை அழிந்தாய்?

ஸ்ரீ பாதுகையே கைலாய மலையைக் கையில் ஏந்தி அதன் முடிகளைக் கற்பூரப் பொடிகளாகச் செய்த பராக்கிரம சாலியான ராவணனை
நீ சிம்ஹாசனத்தில் அமர்ந்து இருந்த படியே கொன்று ஒழித்தாய் -பெருமாள் பானங்கள் வ்யாஜங்களாக மட்டும் ஆயின –

————————————————————————————

ஸ்ருத் வைவம் ஹனுமன் முகாத் ரக்பதே பிரத்யாகதிம் தத்ஷணாத்
ஆஸீ தத் பரதா நுவர்த்த நவசாத் ஆருட கும்பஸ் தலாம்
காலோன்நித்ர கதுஷ்ணதாந மதி ராமாத்யத்த் விரே பத்வநி
ச்லாகாசாடு பிரஸ்து தேவ பவதீம் ச்த்ருஞ்ஜய குஞ்ஜர

ஸ்ருத்வா ஏவம் ஹநுமந் முகாத் ரகுபதே: ப்ரத்யாகதிம் தத் க்ஷணாத்
ஆஸீதத் பரத அநுவர்த்தன வசாத் ஆரூட கும்பஸ்தலாம்
கால உந்நித்ர கதுஷ்ண தாந மதிரா மாத்யத் த்விரேப த்வநி
ஸ்லாகாசாடுபிர் அஸ்து தேவ பவதீம் சத்ருஞ்ஜய: குஞ்ஜர:—-228–

பாதுகையே! இராமனின் வருகை குறித்து அனுமன் மூலமாகப் பரதன் அறிந்து கொண்டான்.
இந்தச் செய்தியை உன்னிடம் கூறிய பரதன், நீ உடனே இராமனிடம் எழுந்தருளவேண்டும் என்று விண்ணப்பம் செய்தான்.
இதனைக் கேட்ட நீ, உடனே பட்டத்து யானை மீது அமர்ந்தாய். நீ அமர்ந்தவுடன் அந்த யானைக்கு ஏற்பட்ட மகிழ்வு
காரணமாக மெதுவான உஷ்ணத்துடன் கூடிய மதநீர் பெருகியது.
அந்த மத நீரில் வந்து அமர்ந்த வண்டுகள் பெரும் ரீங்காரம் செய்தன.
இதனைக் காணும்போது யானை உன்னைத் துதித்தது போன்று காணப்பட்டது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் மீண்டும் எழுந்து அருளும் போது விஷயத்தை திருவடி உனக்கு விக்ஞாபித்து ஸ்ரீ பரதாழ்வான்
பெருமாளை தர்சிக்க வேண்ட பட்டத்து யானையின் மீது ஏறிய போது அந்த யானை தான் பெருக்கிய மத ஜலத்தை
பருக வந்த வண்டுகளின் ரீங்காரம் உனது புகழ் வார்த்தைகளைக் கொண்டு உன்னை ஸ்துதிப்பதாகவே இருந்தது –

——————————————————————–

ப்ரத்யாக தஸ்ய பவதீம் அவலோக்ய பர்த்து:
பாதாரவிந்த ஸவிதே பரதோப நீதாம்
பூர்வ அபிஷேக விபவ அப்யுசிதாம் ஸபர்யாம்
மத்யே ஸதாம் அக்ருத மைதில ராஜ கன்யா—-229-

பெரியபெருமாளின் பாதுகையே! இராமன் அயோத்தி திரும்பியவுடன் அவனுடைய தாமரை போன்ற அழகான
திருவடிகளின் அருகே பரதன் உன்னைச் சமர்ப்பணம் செய்தான். தனது கணவனான இராமனின் திருவடிகளின்
அருகில் வைக்கப்பட்ட உன்னை ஜனகனின் மகளான சீதை பார்த்தாள்.
இராமனுக்கு முன்பாகவே பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட உன்னைப் பெருமையுடன் கண்ட அவள்,
அங்கிருந்த அனைத்துப் பெரியவர்களும் பார்த்து நிற்க, உனக்கு ஏற்ற மரியாதைகளைச் செய்தாள்
(சீதையும் பாதுகையும் இராமனைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சீதைக்கு முன்பாக பாதுகைகள் ஸிம்ஹாஸனத்தில்
அமர்ந்ததால் பாதுகைக்கு ஏற்றம் அதிகம். ஆகையால் சீதை வணங்கினாள் என்று கருத்து).

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ பரதாழ்வான் மீண்டும் உன்னை பெருமாள் திருவடிகளில் சமர்ப்பித்த போது ஜகன் மாதா சீதா பிராட்டி முன்பே
பட்டாபிஷேகம் ஆன உனக்கு ஏற்ற மரியாதையை மகான்களின் மத்தியில் செலுத்தினாள் –

——————————————————–

ஸம்ப்ரேக்ஷ்ய மைதிலி ஸுதா மணி பாத ரக்ஷே
ப்ரத்யுத்க தஸ்ய பவதீம் பரதஸ்ய மௌளௌ
நிர்திச்ய ஸா நிப்ருதம் அஞ்ஜலிநா புரஸ்தாத்
தராதிகா: ப்ரிய ஸகீ: அசிஷத் ப்ரணந்தும்—-230-

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! இராமன் முன்பாக பரதன் உன்னைத் தனது தலையில்
எழுந்தருளிப் பண்ணிக் கொண்டு வந்தான். இதனைப் பார்த்த சீதை தனது கைகள் குவித்து உன்னை வணங்கி,
தனது கண் ஜாடை மூலம் தன் தோழிகளான தாரை போன்றவர்களையும் உன்னை வணங்குமாறு கூறினாள்.

ஸ்ரீ பாதுகையே பெருமாளை எதிர் கொண்டு அழைக்க வந்த ஸ்ரீ பரதாழ்வான் சிரசில் உன்னைக் கண்டதும் பிராட்டி கை கூப்பி
உன்னைச் சுட்டிக் காட்டி தாரை முதலிய பெண்களை உன்னை சேவிக்கும் படி உத்தரவு செய்தாள் –

—————————————————————————–

துல்யே அபி தேவி ரகுவீர பத ஆஸ்ரயத்வே
பூர்வ அபிஷேகம் அதிகம்ய கரீயஸீ த்வம்
தேநைவ கல்வ பஜதாம் மணி பா தரக்ஷே
ரக்ஷ: ப்லவங்கம் அபதீ பவதீம் ஸ்வ மூர்த்நா—-231-

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
இராமனின் திருவடிகளை மட்டுமே அண்டி உள்ளவள் நீ ஆவாய். ஆனாலும் இராமனுக்கு முன்பாகவே பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டு,
அவன் ஸிம்ஹாஸனத்தில் நீ அமர்ந்தாய். இதனால் நீ பெரிதும் உயர்ந்தவள் ஆனாய்.
அதனால்தான் உன்னை விபீஷணன் போன்றவர்கள் போற்றி நின்றனர், தங்கள் தலைகளில் உன்னை ஏற்றனர்.

ஸ்ரீ பாதுகையே ஸூக்ரீவன் விபீஷணன் ஆகியவர் பெருமாள் திருவடியை உன்னைப் போல அடைந்து இருந்தாலும் நீயே உயர்ந்தவள் –
ஆகவே தான் அவர்கள் உன்னை தங்கள் சிரசில் வைத்து வணங்கினார்கள் –
ஏன் எனில் நீ முன்னமே திரு பட்டாபிஷேகம் செய்யப் பெற்றவள் அன்றோ –

———————————————————————

நிர்வ்ருத்த ராக்ஷஸசமூ ம்ருகயா விஹார:
ரங்கேஸ்வர: ஸ கலு ராகவ வம்ஸ கோப்தா
வம்ஸ க்ரமாத் உபநதம் பதம் ஆததாந:
மாந்யம் புநஸ் த்வயி பதம் நிததே ஸ்வகீயம்—–232-

அழகிய மணவாளனின் பாதுகையே! ரகு வம்சத்தை நிலை நிறுத்தவும், அரக்கர்களின் படையை வேட்டை ஆடுவது
போன்று எளிதாக ஒரு விளையாட்டாக அழிப்பதற்காகவும் இராமனாக அவதரித்தவன் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
அவன் உன்னிடம் இருந்து தனது பட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு,
மிகவும் உயர்ந்த தனது திருவடிகளை உன்னிடம் மீண்டும் அளித்தான்

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் பெருமாளாக திருவவதரித்து ராஷசர்களை கொன்று
தன் அவதார கார்யம் முடிந்து தன் பரம்பரையாக வந்த பட்டத்தை ஏற்றுக் கொண்டு
தன் சொத்தாகிய சிறந்த திருவடிகளை உனக்கு மறுபடி தந்தார் –

————————————————————————————–

தத்தாத்ருசோ: சரணயோ: ப்ரணிபத்ய பர்த்து:
பௌராஸ் த்வயா வித்ருதயோ: ப்ரதிபந்ந ஸத்த்வா:
ப்ராப்த அபிஷேக விபவாம் அபி பாதுகே தவாம்
ஆனந்த பாஷ்ப ஸலிலை: புந: அப்ய ஷிஞ்சந்—-233–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைத் தனது திருவடிகளில் மீண்டும் தரிக்கப்பெற்ற இராமன் அழகு பெற்றான்.
இப்படியாக உள்ள தங்கள் சக்ரவர்த்தியான இராமனின் திருவடிகளில் அந்த நாட்டு மக்கள் விழுந்து வணங்கி,
மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். உனக்கு பட்டாபிஷேகத்தின்போது புண்ணிய நீர் சேர்க்கப்பட்ட போதிலும்,
இப்போது தங்கள் ஆனந்தக் கண்ணீர் கொண்டு மக்கள் மீண்டும் உனக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தனர்.

ஸ்ரீ பாதுகையே முன்னர் அனுபவித்த வாறு பெருமாள் திருவடிகளை ஒரு சேரக் காண்போமா என்று ஏங்கி இருந்த மக்கள்
உங்களைத் திருவடிகளோடு சேர்த்துப் பார்த்ததும் கண்ணீர் பெருக்கி மறுபடி உனக்கு அபிஷேகம் செய்தார்கள் –

—————————————————————————————

மாதஸ் த்வயைவ ஸமயே விஷமே அபி ஸம்யக்
ராஜந்வதீம் வஸுமதிம் அவலோக்ய ராம:
ஸஞ்ஜீவநாய பரதஸ்ய ஸமக்ர பக்தே:
ஸத்ய ப்ரதி ஸ்ரவதயா ஏவ சகார ராஜ்யம்—-234–

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே!
இராமன் கானகம் சென்ற காலகட்டமானது மிகவும் இக்கட்டானது ஆகும்.
அந்த நேரத்தில் நாட்டை ஆள்வதற்கு ஏற்றவள் நீ என்று அறிந்து, உனக்குப் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
கானகத்தில் இருந்து மீண்டும் நாடு திரும்பிய இராமன், தன்னை விட நீயே உயர்ந்தவள் என்று அறிந்திருந்தான்.
ஆயினும், தான் பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை என்றால், உறுதியான சபதம் கொண்ட பரதன்,
தன்னை மாய்த்துக் கொள்வான் என்று உணர்ந்து, அவனைப் பிழைக்க வைப்பதற்காக அல்லவோ பட்டம் ஏற்றுக் கொண்டான்?

ஸ்ரீ பாதுகையே ராஜ்ய பாரத்தை துன்ப நிலையிலும் வகிப்பதில் உனக்கு உள்ள திறமையை நன்கு உணர்ந்தும்
பெருமாள் ஸ்ரீ பாரதாழ்வானுக்கு செய்த உறுதி மொழியைக் காத்து அவனை உயிர்ப்பிக்கவே பட்டத்தை ஒப்புக் கொண்டார் –

—————————————————————————————

பாதாவநி ப்ரதிகதஸ்ய புரீம் அயோத்யாம்
பௌலஸ்த்ய ஹந்து: அபிஷேக ஜல அர்த்ர மூர்த்தே:
அம்ஸே யதார்ஹம் அதி வாஸ்ய நிஜைர் யஸோபி:
கஸ்தூரி கேவ நிஹிதா வஸுதா த்வயைவ—-235–

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! அயோத்தியை மீண்டும் அடைந்த இராமனின் திருமேனி,
உனது பட்டாபிஷேக நீரால் நனைக்கப்பட்டது. இராவணனை வதம் செய்து முடித்த இராமனின் தோள்கள் மீது,
நீ இத்தனை நாட்கள் உனது பெருமை விளங்கத் தாங்கி நின்ற பூமியை, எளிதான கஸ்தூரி போன்று இறக்கி வைத்தாய்
(பூமியை ஆள்வது என்பது இராமனுக்கும் பாதுகைக்கும் ஓர் அலங்காரம் போன்று அழகுக்கு மட்டுமே ஆகும்,
பாரம் ஆகாது. இதனால்தான் கஸ்தூரி என்றார்).

ஸ்ரீ பாதுகையே ராவணனைக் கொன்று பெருமாள் திரு பட்டாபிஷேகம் பண்ணிக் கொண்ட போது உன்
கீர்த்தியால் வாசனை பெற்ற பூமியை அவர் திருத் தோளின் மீது கஸ்தூரி போல வைத்தாய் –

———————————————————————-

யா அளௌ சதுர் தச ஸமா: பதிவிப்ரயுக்தா
விஸ்வம்பரா பகவதீ வித்ருதா பவத்யா
விந்யஸ்ய தாம் ரகுபதேர் புஜசைல ஸ்ருங்கே
பூயோ அபி தேந ஸஹிதாம் பவதீ பபார—236–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அயோத்தியானது தனது கணவனான இராமனை பதினான்கு ஆண்டுகள் பிரிந்து இருந்தது.
அப்போது நீ அந்த நாட்டை ஆறுதலாகத் தாங்கி நின்றாய்.
இராமன் அயோத்தி திரும்பியதும் அவனது மலைகள் போன்ற தோள்களில் அந்த நாட்டை மீண்டும் ஏற்றினாய்.
அதன் பின்னர் அவனுடன் சேர்ந்து நின்று காணப்பட்ட பூமியைத் தாங்கி நின்றாய்.

ஸ்ரீ பாதுகையே முதலில் பதினான்கு வருடங்கள் பூமியை மட்டும் தாங்கிய நீ பிறகு பெருமாள் தோளின் மீது
அதை வைத்து அவனுடன் அதையும் சேர்த்து தாங்கினாய் –

————————————————————————————

நிஸ்தீர்ண துங்க ஜலதே: அநகஸ்ய தேவி
த்வத் ஸம்ப்ரயுக்த ரகுநாத பதாந்வயேந
ஸத்ய ஸநந்தன முகை: அபி துர் நிரீக்ஷா
ஸாம்ராஜ்ய ஸம்பத் அபரா பரதஸ்ய ஜஜ்ஞே—-237–

பாதுகாதேவியே! உன்னுடன் தொடர்பு கொண்டதால் உயர்ந்த இராமனின் திருவடிகள் மூலமாகப் பரதன்
தனது துக்கம் என்ற பெரிய கடலை எளிதாகக் கடந்தான். இதன் மூலம் தூய்மை அடைந்த பரதன்,
ஸநந்தர் போன்றவர்கள் கூடக் காண இயலாத தேஜஸ் அடைந்தான்.
இதனால் பக்தர்களுக்குச் சக்ரவர்த்தி போன்றவன் என்ற பட்டம் பெற்றான்.

ஸ்ரீ பாதுகையே உன்னை மறுபடி பெருமாள் இடம் சமர்ப்பித்து ஸ்ரீ பரதாழ்வான் துக்கம் என்ற மஹா சமுத்ரத்தைத் தாண்டினார்
சனக சனந்தனாதி யோகிகளாலும் காண இயலாத தாஸ்ய சம்பத்தை பெற்று பக்த சிரோமணி யானார் –

———————————————————————-

நிகர்த்ய தேவி பரத அஞ்ஜலி பத்ம மத்யாத்
பூய: ஸமாகதவதீ புருஷோத்தமேந
பத்மேவ பத்ரம் அகிலம் மணி பாத ரக்ஷே
ப்ராதுஸ் ஸகார பவதீ ஜகதாம் த்ரயாணாம்—-238-

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பெரியபெருமாளின் பாதுகா தேவியே!
பரதனின் கைகள் தாமரை மலர் போன்று குவித்து இருந்தன.
அதன் நடுவில் இருந்து நீ வெளிக் கிளம்பி இராமனின் திருவடிகளை அடைந்தாய்.
இப்படியாக தாமரையில் இருந்து வெளிப்பட்ட மஹாலக்ஷ்மி போன்று மூன்று உலகங்களுக்கும் ஏற்ற நன்மைகளைச் செய்தாய்.

ஸ்ரீ பாதுகையே துர்வாச ரிஷியின் சாபத்தால் லஷ்மீ இந்திர லோகத்தை விட்டு விலகி
பின்பு திருப் பாற் கடலின் நின்றும் தோன்றி பெருமாளை ஆஸ்ரயித்து
லோகங்களுக்கு ஷேமத்தை செய்தது போலே நீயும் பெருமாளை மறுபடி அடைந்து
மூ வுலகங்களுக்கும் ஷேமத்தைச் செய்து அருளினாய் –

——————————————————————–

ரகுபதிம் அதிரோப்ய ஸ்வோசிதே ரத்ந பீடே
ப்ரகுணம் அபஜதாஸ்த்வம் பாதுகே பாத பீடம்
ததபி பஹுமதி: தே தாத்ருஸீ நித்யம் ஆஸீத்
க்வ நு கலு மஹிதாநாம் கல்ப்யதே தாரதம்யம்—-239–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமன் அயோத்தி திரும்பியவுடன் அவனுக்கு ஏற்ற இடமாகிய
இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட ஸிம்ஹாஸனத்தை அவனுக்கு அளித்தாய்.
ஆயினும் உனக்கு முன்பிருந்த மரியாதைகளும் கொண்டாட்டங்களும் எப்படி மாறுபடும்.
உன்னை அண்டியவர்களுக்கு ஏற்றத் தாழ்வு எவ்விதம் உண்டாகும்?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் பட்டத்தை அடைந்த பிறகு நீ கீழே திருவடி மேடையிலே தான் இருந்தாய்
ஆனாலும் அனைவரும் உன்னை முன் போலவே கொண்டாடினார்கள்
பெருமை பெற்றவர்கள் எங்கு இருந்தால் என்ன –

—————————————————————-

அநுவ்ருத்த ராமபாவ: சங்கே நிர்விஷ்ட சக்ரவர்த்தி பதாம்
அதுநா அபி ரங்கநாத: ஸ சமத்காரம் பதேந பஜதி த்வாம்—240

பெரியபெருமாளின் பாதுகையே! நீ உயர்ந்த சக்ரவர்த்திப் பதவியை வகித்தவள் ஆவாய்.
அதனால்தான் இராமனாகப் பிறந்த ஸ்ரீரங்கநாதன் மிகவும் புத்திகூர்மையுடன் உன்னை எப்போதும்
தனது திருவடிகளில் வைத்துள்ளான் என்று எண்ணுகிறேன்
(அர்ச்சையில் உள்ள விக்ரஹங்களில் திருவடிகளில் பாதுகை இருப்பதில்லை.
ஆயினும் ஸ்ரீரங்கநாதன் மட்டுமே தனது திருவடிகளில் பாதுகையுடன் உள்ளதைக் காணலாம்)

ஸ்ரீ ராமாவதாரத்தில் சக்கரவர்த்தினியாக இருந்த உன்னை ஸ்ரீ ரங்க நாதன் திருவடிகளால் தொடக் கூசி தன்னையும்
பெருமாளாகவே நினைத்து தன் உடலை வணங்கி சாதுர்யமாகத் திருவடிகளிலே உன்னை தரிக்கிறான் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: