ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-6-அதிகார பரிக்ரஹ பத்ததி -உரிமைக் கோட் பத்ததி-ராஜ்ய அதிகாரம் -ஸ்லோகங்கள் -141-180-

அபீஷ்டே பாதுகா ஸா மே யஸ்யாஸ் ஸாகேத வாஸிபி:
அந்வய வ்யதிரேகாப்யாம் அந்வயமீயத வைபவம்—-141-

பாதுகை இல்லாதபோதும், அவள் உள்ள போதும் எப்படிப்பட்ட தாழ்வுகளும், பெருமைகளும் ஏற்படுகிறது
என்பதை அயோத்தி மக்கள் அறிந்து கொண்டனர்.
இப்படிப்பட்ட பாதுகை எனக்கு எஜமானியாக உள்ளாள்.

அந்வயம் என்பது மழைக்குப் பின்னர் பயிர் விளையும் என்பது போன்றதாகும்.
வ்யதிரேகம் என்பது மழை இல்லையானால் பயிர் இல்லை என்பதாகும்.
இது போன்று பாதுகை இருந்ததால் பரதன் ராஜ்ஜியம் ஆண்டான்;
பாதுகை இல்லாத காரணத்தினால் இராமனுக்கு ராஜ்யம் கிட்டவில்லை, கானகத்தில் இருந்தான்.

ஸ்ரீ பாதுகை திரு அயோத்தியில் இருந்த போது மகோத்சவமாக இருந்தது –
பெருமாள் உடன் ஸ்ரீ தண்டகாரண்யம் எழுந்து அருளின போது துன்பம் சூழ்ந்தது –
மறுபடி மீண்டும் எழுந்து அருளியதும் மகோத்சவமாக இருந்தது கண்டு
ஸ்ரீ பாதுகையின் பிரபாவம் உணர்ந்தார்கள் –
அந்த ஸ்ரீ பாதுகையே எனக்கு அதீஸ்வரீ-

————————————————————————

மோசித ஸ்திர சராந் அயத்நத:
கோஸலாந் ஜந பதாந் உபாஸ்மஹே
யேஷு காம்ச்சந பபூவ வத்ஸராந்
தைவதம் தநுஜ வைரிபாதுகா—-142-

இந்தக் கோசல நாட்டில், அசுரர்களின் சத்ருவான இராமனின் பாதுகைகள் ஆராதிக்கப்பட்டு ஆட்சி செய்து வந்தன.
அப்போது அந்த நாட்டில் உள்ள பலரும் மிகவும் எளிதாக, எந்த விதமான யோகங்களும் பெறாமல்,
ஸம்ஸாரத்தைக் கடந்து மோக்ஷம் பெற்றனர். அப்படிப்பட்ட கோசல நாட்டைத் த்யானிப்போமாக.

பாதுகைகள் நாட்டை ஆட்சி செய்தபோது, அந்த நாட்டில் வாழ்ந்தவர்கள் எவ்வித மோக்ஷ உபாயங்களும் இன்றி,
மோக்ஷம் கைகூடப் பெற்றனர். இப்படிப்பட்ட அந்தப் புண்ணிய பூமியான கோசல நாட்டை வணங்குவோம் என்றார்.

கோசல தேசத்தில் சில வருஷங்கள் ஆட்சி செய்த ஸ்ரீ பாதுகை தான் பெற்ற அதிகாரத்தைக் கொண்டு
திரு அயோத்யையில் இருந்த புல் பூண்டுக்கும் கூட கர்ம யோகாதி பிரயாசை இன்றியே மோஷம் தந்து விட்டது
அப்படிப்பட்ட கோசல தேசத்தை கொண்டாடி அடைவோம் –

—————————————————————————————-

ஸாம்ராஜ்ய ஸம்பதிவ தாஸ ஜநோசிதா த்வம்
ராமேண ஸத்ய வசஸா பரதாய தத்தா
ஸ த்வாம் நிவேச்ய சரணாவநி பத்ர பீடே
ப்ருத்வீம் புபோஜ புபுஜே ச யச: விபூதிம்—-143-

எம்பெருமானின் திருவடிகளை காப்பாற்றும் பாதுகையே!
ஸத்ய வாக்கு கொண்டவனாகிய இராமனால், அடியார்களுக்கு அளிக்கப்படத் தகுந்தவளாகிய நீ,
ராஜ்ய லக்ஷ்மியாகப் பரதனிடம் அளிக்கப்பட்டாய்.
இப்படியாக வந்த உன்னைப் பரதன் உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் எழுந்தருளச் செய்தான்.
இதன் மூலம் இந்த உலகைக் காத்தான். இதனால் ஒப்பற்ற புகழ் பெற்றான்.

இங்கு பரதன் புகழ் பெற்றான் என்று கூறுவதன் கருத்து என்ன?
பாதுகையை இராமனிடம் பெற்று, அவளை அரியணையில் பரதன் அமர்த்தவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியென்றால் – இராமனின் அரியணையைப் பரதன் அபகரித்தான் என்னும் பழி அல்லவா வந்திருக்கும்?
ஆனால் பாதுகையை அரியணையில் எழுந்தருளச் செய்ததால், இங்கு புகழ் அல்லவா கிட்டியது!

ஸ்ரீ பாதுகையே உன்னை சிம்ஹாசனத்தில் ஏற்று ஸ்ரீ பரதாழ்வான் தான் உனது ஏவுதலில் ஆஜ்ஞை செய்து
அளவற்ற கீர்த்தியையும் ஆளும் அதிகாரத்துடன் பெற்றான் –

ஆசார்ய பக்தி உள்ளவன் அரசனைப் போன்ற செல்வமும் கீர்த்தியும் பெறுகிறான் என்றவாறு –

—————————————————————————–

போகாந் அநந்ய மநஸாம் மணி பாதுகே த்வம்
புஷ்ணாஸி ஹந்த பஜதாம் அநுஷங்க ஸித்தாந்
தேநைவ நூநம் அபவத் பரதஸ்ய ஸாதோ
அப்ரார்த்திதம் தத் இஹ ராஜ்யம் அவர்ஜ்ஜநீயம்—-144-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே!
உன்னை விட்டு வேறு எங்கும் தங்கள் மனதைத் திருப்பாமல், உன்னை மட்டுமே த்யானிப்பவர்களுக்கு நீ செய்வது –
அவர்கள் கேட்காமலேயே பல நன்மைகளை ஏற்படுத்துகிறாய். என்ன வியப்பு இது!
இதனால் தான் மிகவும் உத்தமனான பரதனுக்கு அவன் கேட்காமலேயே,
உலகைக் காப்பாற்றும் ராஜ்யப் பொறுப்பு வந்து சேர்ந்தது அல்லவா?

எந்தப் பலனையும் எதிர்பாராமல் பாதுகையைத் த்யானித்தபடி உள்ளவர்கள் மிகவும் உயர்ந்த பலனை,
அவர்கள் கேட்காமலேயே அடைந்து விடுகின்றனர்.
இதற்கு ஏதேனும் சான்று உண்டா? உண்டு, பரதன் விஷயத்திலேயே இது நடந்தது என்றார்.

ஸ்ரீ பாதுகையே உன்னை ஆராதித்து அநந்ய பிரயோஜனராய் உள்ளவர்களுக்கு
தானாகவே அனைத்து போகங்களும் வந்து சேர்கின்றன –
இவ்வாறு ஸ்ரீ பரதாழ்வானுக்கு ராஜ்ய அதிகாரம் அவன் கேட்காமலேயே விட முடியாததாக வந்து சேர்ந்தது –

——————————————————————–

ராம ப்ரயாண ஜநிதம் வ்யபநீய சோகம்
ரத்நாஸநே ஸ்திதவதீ மணி பாத ரக்ஷே
ப்ருத்வீம் நிஜேந யசஸா விஹித உத்தரீயாம்
ஏகாத பத்ர திலகாம் பவதீ விதேநே—-145-

ஸ்ரீ பாதுகையே ரத்ன சிம்ஹாசனத்தில் வீற்று இருந்து நீ பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் சென்றமையால்
உண்டான பூமியின் வருத்தத்தை போக்கி உன் கீர்த்தியான வஸ்த்ரத்தினால் அவருக்கு மேலாடை அணிவித்து
வெண் கொற்றக் குடையினால் திலகமும் அணிவித்தாய் –

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
நீ இராமனை விட்டுப் பிரிந்து வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டாய்.
ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து இராமனைப் பிரிந்த உலகின் துக்கத்தை நீக்கினாய் .
உனது கீர்த்தி என்பதையே பூமிக்கு உடையாக உடுத்தி விட்டாய்.
உனது ஆட்சி என்ற வெண் கொற்றக் குடையை, நெற்றியில் பொட்டு போன்று பூமியை இட்டுக் கொள்ளச் செய்தாய்.

இங்கு இராமனைப் பிரிந்த துன்பம் தாங்காமல் அயோத்தி மண்ணானது வருந்துவதைக் கூறுகிறார்.
பூமியாகிய இவள் அந்தத் துன்பம் தாளாமல் சரியாக ஆடை உடுத்துவதில்லை,
நெற்றியில் பொட்டும் வைத்துக் கொள்வதில்லை.
பாதுகையும் இராமனைப் பிரிய நேரிட்டபோது, இதே துன்பங்களை அடைந்தாள்.
ஆயினும் தனது துயரத்தை மறைத்துக் கொண்டு அயோத்திக்கு உதவினாள்.

——————————————————————————–

ராம ஆஜ்ஞயா பரவதீ பரிக்ருஹ்ய ராஜ்யம்
ரத்நாஸநம் ரகு குல உசிதம் ஆஸ்ரயந்தீ
சுத்தாம் பதாவநி புந: பவதீ விதேநே
ஸ்வாதந்த்ர்ய லேச கலுஷாம் பரதஸ்ய கீர்த்திம்—-146-

எம்பெருமானின் திருவடிகளைக் காப்பவளே! பாதுகையே!
இராமனின் ஆணையை ஏற்றுக் கொண்ட நீ, ரகு வம்சத்திற்கு மட்டுமே உரித்தான ஸிம்ஹாஸனத்தை அடைந்து,
பட்டத்தை ஏற்றுக் கொண்டாய்.
இராமனின் சொல்லையும் சமாதானங்களையும் கேட்காமல் இருந்த பரதன் சற்று கலக்கம் அடைந்திருந்தான்.
அந்தக் கலக்கம் நீங்கும்படியாகவும், கீர்த்தி பெறும்படியாகவும் நீ செய்தாய்.

இராமனின் ஆணையை பரதன் மீறினான், பரதன் தன் விருப்பப்படி ஸ்வதந்திரமானவனாக செயல்பட்டான்
என்ற பழிச்சொல் பரதனுக்கு வராமல், புகழை வந்து சேரும்படியாகப் பாதுகை செய்தாள்.

ஸ்ரீ பாதுகையே -நீ பெருமாள் உடைய ஆஜ்ஞையைப் படிந்து ரகு வம்சத்தவர்களுக்கு உரிய ரத்னாசனத்தில் அமர்ந்தாய் –
ஸ்ரீ பரதாழ்வனோ பெருமாள் நியமித்தும் அரசேற்க மறுத்தான் –
அதனால் உண்டான ஸ்வாதந்த்ர்யத்தினால் கலங்கி இருந்த கீர்த்தி இப்பொழுது உன்னால் பரிசித்தம் ஆயிற்று –
ஸ்ரீ பரதாழ்வான் உடைய பிடிவாதம் கண்டு முதலில் ஜனங்கள் வருந்தினாலும்
பிறகு உண்டான அதன் பலனைக் கண்டு ஸ்ரீ பரதாழ்வானை புகழ்ந்தனர் –

———————————————————————————-

பௌலஸ்த்ய வீர வதநஸ்த பகா வஸாநாத்
புஷ்பாணி தண்ட கவ நேஷு அபசேதும் இச்சோ:
ரக்ஷா துரம் த்ருதவதீ மணி பாதுகே த்வம்
ராமஸ்ய மைதில ஸுதா ஸஹிதே ப்ரசாரே—-147-

இரத்தினக் கற்கள் கொண்ட பாதுகையே! இராவணனின் தலைகள் என்ற மலர்களைப் பறிக்க இராமன் எண்ணினான்.
இதனால் அல்லவா அவன் சீதையுடன் தண்டகாரண்யம் புகுந்து, அங்கிருந்த மலர்களைக் கொய்தபடி இருந்தான்?
அந்த நேரத்தில் நீ பூமியின் பாரத்தைச் சுமக்கும் வகையில் ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தாய்.
இதனால் தான் இராமன் கவலை இன்றி கானகத்தில் ஸஞ்சாரம் செய்தான்.

மலரைக் கொய்வதற்கு எந்தவிதமான பெரும் முயற்சியும் அவசியம் இல்லை, மிகவும் எளிதாகவே கொய்யலாம்.
இங்கு இராமன் இராவணனின் தலைகளை அது போன்று எளிதாகக் கொய்ய எண்ணினான் என்று கூறுவதன் மூலம் –
இராமனின் வலிமையை உணர்த்தினார். இராமன் தனது நாட்டுப் பொறுப்புகளை பாதுகையிடம் ஒப்படைத்ததால்,
எந்த விதமான கவலையும் இன்றி இருந்தான்.
இராமனுக்கு இப்படி என்றால், நாமும் நமது சுமைகள் பாதுகையிடம் ஒப்படைக்கலாம் அல்லவோ?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ராவணனுடைய தலைகளைக் கொத்தாக கொய்வதற்காக முன்னோடியாக
ஸ்ரீ தண்டகா வனத்தில் கர தூஷணாதிகளின் உதிரித் தலைகளைக் கொய்ய விரும்பி
ஸ்ரீ சீதா பிராட்டி யுடன் சென்ற போது அவன் ஏற்க வேண்டிய ராஜ்ய பாரத்தை நீ ஏற்றாய் அன்றோ –

—————————————————————-

பாதாவநி ப்ரசல சாமர ப்ருந்த மத்யே
பத்ராஸந ஆஸ்தர கதா பவதீ விரேஜே
ஆகீர்ண திவ்ய ஸலிலே கடகே ஸுமேரோ:
அம்போஜி நீவ கலஹாயித ஹம்ஸ யூதா—-148-

எம்பெருமானின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
அசைந்து கொண்டுள்ள சாமரங்களின் நடுவில் ஸிம்ஹாஸனம் உள்ளது. அதன் மீது இருந்த மெத்தையில் நீ அமர்ந்துள்ளாய்.
இதனைக் காணும்போது எவ்விதம் இருந்தது என்றால் – தங்க மயமாக உள்ள மேரு மலையின் அடிவாரத்தில் உள்ள குளத்தில்,
தாமரை மலர்கள் அசைந்தபடி உள்ளன; அவற்றின் மீது உள்ள அன்னங்கள் சண்டையிடுவதைப் போன்று இருந்தது.

இங்கு மேரு மலையை ஸிம்ஹாஸனம் என்றும், குளத்தின் நீர்ப்பரப்பு என்பதை மெத்தை என்றும்,
தாமரை என்பதைப் பாதுகை என்றும், அன்னம் என்பதை பாதுகைக்கு வீசப்படும் சாமரங்கள் என்றும் கொண்டார்.

ஸ்ரீ பாதுகையே தங்க சிம்ஹாசனத்தில் அசையும் இரு சாமரங்களின் நடுவில் வீற்று இருக்கும் நீ மேரு மலையின்
தாழ் வரையில் உள்ள சண்டையிடும் ஹம்சங்களை இரு பக்கமும் கொண்ட தாமரை ஓடை போல் விளங்குகிறாய் –

————————————————————————-

மாந்யே ரகூத்வஹ பதே மணி த்வாம்
விந்யஸ்ய விக்ரஹ வதீம் இவ ராஜ்ய லக்ஷ்மீம்
ஆலோலம் அக்ஷவலயீ பரதோ ஜடாவாந்
ஆலம்ப்ய சாமரம் அநந்ய மநா: ஸிஷேவே—-149-

மாணிக்கக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
இராமானின் இடத்தில் உன்னைப் பரதன் அமர வைத்தான். இதனைக் காணும் போது, ராஜ்ய லக்ஷ்மியே உருவம் எடுத்து
ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருந்தது போன்று நீ காணப்பட்டாய்.
அந்த நேரத்தில் தலையில் ஜடாமுடியும், கையில் ஜப மாலையும் உள்ள பரதன்,
தனது மனதை வேறு எங்கும் செலுத்தாதபடி, உன்னைத் த்யானித்தபடி சாமரம் வீசினான்.

இராமன் பூண்ட தவக் கோலத்தைப் பரதனும் உடனேயே கொண்டான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

ஸ்ரீ மணி பாதுகையே ராஜ்ய லஷ்மியின் உருக் கொண்டவள் போன்ற உன்னை ரகு வம்ச சிம்ஹாசனத்தில்
எழுந்து அருளச் செய்து ஜடை தரித்து ஸ்ரீ பரதாழ்வான் உன்னையே த்யானித்து உனக்குச் சாமரம் போட்டார் –

——————————————————————————————-

ப்ராப்தே திவம் தசரதே பரதே விலக்ஷே
பர்யாகுலேஷு ப்ருசம் உத்தர கோஸலேஷு
த்வம் சேத் உபேக்ஷி தவதீ க இவ அபவிஷ்யத்
கோபாயிதும் குஹ சகஸ்ய விபோ: பதம் தத்—-150-

தசரதன் ஸ்வர்க்க லோகம் அடைந்தார். அவர் உயிர் நீங்க, தானே காரணம் என்று வெட்கப்பட்ட பரதன்,
ஸிம்ஹாஸனம் ஏற்காமல் இருந்தான். இதனைக் கண்ட அயோத்தி மக்கள் அனைவரும் கலங்கி நின்றனர்.
அப்போது நீயும் ஸிம்ஹாஸனத்தில் அமராமல் இருந்திருந்தால்,
குகனின் நண்பனான இராமனின் ஸிம்ஹாஸனத்தை அலங்கரித்து, அயோத்தியை யார் தான் காப்பாற்ற இயலும்?

இங்கு பாதுகையின் பெருந்தன்மை வெளிப்படுகிறது. பரதன் தனது வெட்கம் என்னும் சுயநலம் கருதி நாட்டைக் கைவிட்டான்.
ஆனால் பாதுகையோ, இராமனைப் பிரிவது மிகவும் கடினமான செயலாக இருந்த போதிலும்,
நாட்டைக் காப்பாற்றும் பொருட்டு, தனது சுயநலத்த எண்ணாமல், அயோத்திக்கு வந்தாள்.

ஸ்ரீ பாதுகையே தசரதரும் ஸ்வர்க்கம் சென்று ஸ்ரீ பாரதாழ்வானும் புறக்கணித்த உடன்
கோசல ராஜ்யத்தை நீ மட்டும் ஏற்காது போனால் யார் காப்பாற்றுவார் –

—————————————————————————————–

ப்ராது: யதம்ப வரஹாத் பரதே விஷண்ணே
தாக்ஷிண்யம் ஆஸ்ரிதவதீ மணி பாதுகே த்வம்
ஆஸீத் அசேஷ ஜகதாம் ஸ்ரவண அம்ருதம் தத்
வாசால காஹளஸஹம் பிருதம் ததா தே—-151-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! தாயே! தனது தமையனான் இராமனின் பிரிவு காரணமாகப் பரதன்
மிகவும் துயரம் கொண்டான். அவனுக்காக நீ மீண்டும் அயோத்தி வந்தாய். இவ்விதம் வந்த நீ ஸிம்ஹாஸனம் ஏற்றாய்.
அப்போது எக்காளம் போன்ற வாத்தியங்கள் முழங்கின. இவை உலகினர் அனைவருக்கும்,
அவர்கள் காதுகளுக்கு இன்பம் அளிப்பதாகவும், உனது புகழைப் பறை சாற்றுவதாகவும் அமைந்தன.

பரதனுக்காகவே பாதுகைகள் அயோத்திக்கு வந்ததாகக் கூறுகிறார். இந்த வரவைக் கொண்டாடும் பொருட்டு,
சக்ரவர்த்திகளுக்கு அளிக்கும் மரியாதைகளான எக்காளம் முழங்குதல் முதலானவை காணப்பட்டதாகக் கூறுகிறார்.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் பிரிவால் வாடிய ஸ்ரீ பாரதாழ்வானுக்காக நீ பரிவுடன் பட்டத்தை ஏற்ற போது
மங்கள வாத்தியங்களின் முழக்கம் -திருச் சின்ன ஒலி -பிருதங்களைக் கூறுவது போலே
இருந்து மக்களின் காதுகளுக்கு இனியதாக இருந்தது –

——————————————————————————

ராஜ்யம் ததா தசரதாத் அநு ராமத: ப்ராக்
பிப்ராணயா சரண ரக்ஷிணி வீத கேதம்
துல்யாதிகார பஜநேந பபூவ தந்யோ
வம்சஸ் த்வயா அம்ப மநு வம்ஸ மஹீ பதி நாம்—-152-

சரணம் என்று புகுந்தவர்கள் அடையும் இடமான திருவடிகளைக் காப்பவளே! தாயே! பாதுகையே!
தசரதனுக்கு பின்னால் இராமன் ஸிம்ஹாஸனம் அமரவில்லையே என்ற வருத்தத்தை நீ போக்கினாய்.
அந்த ஸிம்ஹாஸனத்தை இராமனுக்கு முன்பாக நீ அலங்கரித்தாய். இராமனுக்குப் பின் வந்த மனுகுலத்து அரசர்கள் அனைவரும்,
நீ அமர்ந்து ஆண்ட ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்ததால் மிகவும் பெருமை பெற்றனர்.

இங்கு பாதுகையால் இக்ஷ்வாகு குலத்தின் ஸிம்ஹாஸனத்திற்குப் பெருமை உண்டானது என்றார்.
இக்ஷ்வாகு குலத்தில் உதித்த இராமனால் அந்த குலத்திற்குப் பெருமை, இராமனின் பாதுகைகளால் அந்த ஸிம்ஹாஸனத்திற்குப் பெருமை,
இக்ஷ்வாகு குலதனமான ஸ்ரீரங்கநாதனுக்கு இராமனால் ஆராதிக்கப்பட்டவன் என்பதால் பெருமை –
ஆக, இப்படியாக இராமனாலேயே இக்ஷ்வாகு குலத்திற்குப் பல பெருமைகள் உண்டாயின.
அந்த இராமனின் ஸிம்ஹாஸனத்தின் மூலம், பின்னே வந்த அரசர்களுக்குப் பெருமை ஏற்பட்டது.

ஸ்ரீ பாதுகையே தசரதற்குப் பிறகும் ஸ்ரீ ராமனுக்கும் முன்னும் நீ அரசாட்சியை ஏற்றது அந்த மனு வம்சத்திற்கு
ஓர் விசேஷ பாக்கியம் ஆயிற்று –

ஸ்ரீ நம்மாழ்வார் பிரதம ஆச்சார்யராக பெற்றது நமது குரு பரம்பரைக்கு ஏற்றம் அன்றோ –

———————————————————————–

வர்ஷாணி தாநி வ்ருஷளோ ந தபாம்ஸி தேபே
பாலோ ந கச்சித் அபி ம்ருத்யு வசம் ஜகாம
ராஜ்யே தவ அம்ப ரகு புங்கவ பாத ரக்ஷே
ந ஏவ அபரம் ப்ரதி விதேயம் அபூத் ப்ரஸக்தம்—-153-

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாப்பவளே! நீ அயோத்தியை ஆண்ட போது –
மற்ற வர்ணத்தினர்கள் யாரும் தவம் இயற்றவில்லை (அந்தணன் தவிர); எந்தக் குழந்தையும் இறந்து போக வில்லை;
ப்ராயச்சித்தம் தேடும் அளவிற்கு எந்தவிதமான குற்றமும் நிகழவில்லை.

பாதுகையின் ஆட்சியில் எந்தவிதமான குற்றங்களோ அல்லது தோஷங்களோ அயோத்தியைத் தீண்டவில்லை என்றார்.
மக்கள் நிறைவாக இருந்தால், நாட்டில் குற்றங்கள் குறைவது இயல்பே ஆகும்.
இந்த நிலை பாதுகைகள் நாட்டை ஆண்டபோது காணப்பட்டதாகக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஆட்சி காலத்தில் தன் வர்ணாஸ்ரம தர்மத்தை மீறி ஒருவன் தவம் செய்த காரணத்தால்
ஒரு குழந்தை இறக்க நேரிட்டது -உன் ஆட்சி காலத்தில் இது போன்ற தோஷம் எதுவும் நேர வில்லையே –

—————————————————————–

விஸ்வம் த்வத் ஆஸ்ரித பதாம்புஜ ஸம்பவாயாம்
யஸ்யாம் ப்ரதிஷ்ட்டிதம் இதம் மணி பாத ரக்ஷே
ஆஸீத் அநந்ய சரணா ஸமயே யதாவத்
ஸ அபி த்வயா வஸுமதீ விஹித ப்ரதிஷ்ட்டா—-154-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! இந்தப் ப்ரபஞ்சம் மிகவும் பெரியது. ஆயினும் இது, இப்போது உன்னால்
காக்கப்படும் திருவடிகளில் இருந்து தோன்றிய பூமியில், பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டது. ஏன் ?
இராமன் கானகம் சென்றபோது உன்னைத் தவிர காக்க ஆளில்லாமல் நின்ற பூமியை நீ காப்பாற்றி வந்தாய்.
அதனால் அல்லவோ ப்ரபஞ்சமானது இந்தப் பூமியில் அடைக்கலமாக வைக்கப்பட்டது?

ப்ரபஞ்சத்தில் ஒரு பகுதியாக உள்ள பூமியை நாடி, ப்ரபஞ்சமே வந்தது என்றார்.
இதன் காரணம் பாதுகையின் பாதுகாப்பு இங்கு மட்டுமே உள்ளது என்பதால் ஆகும்.

ஸ்ரீ பாதுகையே -எம்பெருமான் திருவடியினின்றும் உண்டான ஸ்ரீ பூமி தேவி பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளியதால்
ஆதரவற்று இருந்த போது அவன் திருவடி சம்பந்தம் பெற்ற உன்னால் அன்றோ காப்பாற்றப் பட்டது –

—————————————————————-

ப்ராயேண ராம விரஹ வ்யதிதா ததாநீம்
உத்ஸங்கம் ஆஸ்ரிதவதீ தவ ராஜ்ய லக்ஷ்மீ:
தாம் ஏவ தேவி நநு ஜீவயிதும் ஜலார்த்ராம்
அங்கீசகார பவதீ பரதோப நீதாம்—-155-

தாயே! பாதுகாதேவீ ! இராமன் கானகம் புறப்பட்டவுடன் அயோத்தி என்ற ராஜ்யலக்ஷ்மி மயக்கம் அடைந்து சாய்ந்தாள்.
அவள் உன் மடி மீது வந்து சேர்ந்தாள். அப்போது பரதன் உனக்கு வீசிய விசிறியின் ஈரம் மூலமாகவே
ராஜ்ய லக்ஷ்மியின் மயக்கம் தெளிய வைத்தாய் அன்றோ?

உன்னைச் சரணம் புகுந்த ராஜ்ய லக்ஷ்மியை நீ காக்க எண்ணினாய். இதனால் தான் நீ, பரதனின் விசிறியை ஏற்க முன் வந்தாய் அல்லவா?
“பரதனின் விசிறியை ஏற்க முன் வந்தாய்” – என்பதன் கருத்து என்ன? பொதுவாக மன்னர்களுக்கு விசிறி வீசுவது வழக்கமாகும்.
இங்கு பாதுகை அரியணையில் அரசியாக அமர முன் வந்தாள் என்பதை இவ்விதம் ஸூசகமாகக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் பிரிவால் வருந்திய ராஜ லஷ்மீ உன் மடியில் விழுந்தாள்-
அவளைப் பிழைப்பூட்ட நீ ஸ்ரீ பரதாழ்வான் உடைய குளிர்ந்த சாமர கைங்கர்யத்தை ஏற்றாய் –
ஆச்சாயர் சிஷ்யனுடைய ஷேமதிற்காகவே அவன் உபசாரத்தை ஏற்கிறார் என்றவாறு –

—————————————————————–

வீர வ்ரத ப்ரணயிநி ப்ரதமே ரகூணாம்
ப்ராப்தே சிராய பரதே வ்ரதம் ஆஸிதாரம்
த்யக்த்வா பதாவநி ததா விவிதாந் விஹாராந்
ஏகாஸிகா வ்ரதம் அபூர்வம் அவர்த்தயஸ் த்வம்—-156-

பாதுகையே! இராமன் தனது தந்தையின் வாக்கைக் காப்பாற்றவும், உலகைக் காப்பதற்காக அசுரர்களை அழிக்கவும் சபதம் மேற்கொண்டான்.
இவற்றை முடிக்கும் வரை அயோத்தி திரும்புவதில்லை என்ற விரதம் பூண்டான். அனைத்து விஷயங்களும் அருகில் உள்ள போதும்,
அவற்றை அனுபவிக்கப் போவதில்லை என்று பரதன் விரதம் பூண்டான். நீ செய்தது என்ன –
இராமனின் திருவடிகள் மீது மிகவும் ப்ரியம் உள்ள நீ, அவற்றைத் துறந்து,
ஒரே இடத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுதல் என்ற விரதம் பூண்டாய்.

இங்கு இராமன் பூண்ட விரதமும், பரதன் பூண்ட விரதமும் எப்படிப்பட்டது என்றால் – தங்களுக்குப் ப்ரியமான எதனையும்
இழக்காமலேயே பூண்ட விரதமாகும். ஆனால் பாதுகையின் விரதம் அப்படிப்பட்டது அல்ல.
தனக்கு மிகவும் விருப்பமான திருவடிகளை விட்டுப் பிரிந்த பின்னரே, பாதுகை அயோத்திக்கு வந்தாள்.
ஆக இவளது விரதம் அல்லவோ மேலானது?

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் துஷ்டர்களை சம்ஹரிப்பதே த்ருட வ்ரதமாகக் கொண்டு ஸ்ரீ தண்ட காரண்யத்தில் சஞ்சரித்தார் –
ஸ்ரீ பரதாழ்வான் பிடிவாதமாக பட்டத்தை மறுத்து கடின வ்ரதத்தை மேற்கொண்டார்
நீயோ எப்பொழுதும் சஞ்சரிப்பது என்ற உன் ஸ்வ பாவத்தை விட்டுப்
பதினான்கு வருடங்கள் ஒரே இடம் இருந்து ரஷிக்கும் வ்ரதத்தை மேற்கொண்டாய் –

————————————————————————————

காகுத்ஸ்த்த பாத விரஹ ப்ரதிபந்ந மௌநாம்
நிஷ்ப்பந்ததாம் உப கதாம் மணி பாத ரக்ஷே
ஆஸ்வாஸயந் இவ முஹு: பரதஸ் ததாநீம்
சீதைர் அவீஜயத் சாமர மாருதைஸ் த்வாம்—157-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இராமனின் பிரிவைத் தாங்க இயலாமல் நீ மிகவும் சோகம் அடைந்தாய் போலும்.
அதனால் தான் அசையாமல், மௌனமாக நீ அமர்ந்தாய் போலும். இப்படியாக உள்ள உன்னைச் சமாதானம் செய்யும் பொருட்டு,
பரதன் சாமரம் கொண்டு அடிக்கடி குளிர்ந்த காற்றை வீசியபடி இருந்தான்.

இராமனை விட்டுப் பிரிந்த சோகத்தைப் பாதுகையால் தாங்க இயலவில்லை. எனவே அடிக்கடி மூர்ச்சையாகி நின்றாள்.
அப்போது பரதன் சாமரம் கொண்டு குளிர்ந்த காற்று வீசி, மூர்ச்சையைத் தெளிய வைத்தபடி இருந்தான்.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் திருவடியைப் பிரிந்து நீ பேச்சு மூச்சற்றவள் போல் இருந்தாய் –
அப்பொழுது ஸ்ரீ பரதாழ்வான் குளிர்ந்த சாமரம் வீசி உன்னை ஆஸ்வாசப் படுத்தினார் அன்றோ –

——————————————————————————-

யத்ர க்வசித் விஹரதோ அபி பதார விந்தம்
ரக்ஷ்யம் மயா ரகுபதே: இதி பாவயந்த்யா
நிஸ் ஷேமேவ ஸஹஸா மணி பாத ரக்ஷே
நிஷ் கண்டகம் ஜகதிதம் விததே பவத்யா—-158-

இரத்தின கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! “இராமன் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தாலும் அவனது
திருவடிகளைக் காக்கும் பொறுப்பு என்னுடையது”, என்று நீ எண்ணுகிறாய் போலும்.
அதனால் தான் இந்த உலகம் முழுவதும் விரோதிகள் இல்லாமல் உள்ளனர்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் எங்கு எழுந்து அருளினாலும் அவர் திருவடிகளைக் காப்பது உன் கடமை என்று நினைத்து
லோகத்தில் ஓர் இடத்திலும் சத்ருக்கள் -முள் -இல்லாமல் பண்ணி விட்டாய் –

ஆசார்யர் எல்லாருக்கும் நல்வழி காட்டி பெருமாள் இடத்தில் ப்ரீதி உண்டு பண்ணுகிறார் -என்றபடி –

—————————————————————-

ராமம் த்வயா விரஹிதம் பரதம் ச தேந
த்ராதும் பதாவநி ததா யத் அபூத் ப்ரதீதம்
ராமாநுஜஸ்ய தவ ச அம்ப ஜகத் ஸமஸ்தம்
ஜாகர்த்தி தேந கலு ஜாகரண வ்ரதேந—-159-

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே! உன்னைப் பிரிந்த இராமனை, இலட்சுமணன்
எப்போதும் விழித்துக் கொண்டு காப்பது என்ற விரதம் பூண்டான். இராமனைப் பிரிந்த உள்ள பரதனையும், நாட்டையும்
காப்பது என்று நீ உறுதி பூண்டாய். இதனால் அன்றோ இந்த உலகங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளன?

இராமனைக் கானகத்தில் கண் உறங்காமல் இலட்சுமணன் காத்தான். இது அவனுடைய தாயின் ஆணையாகும்.
அவள் இலட்சுமணனிடம், “இராமனின் நடை அழகில் மயங்கி நின்றுகூட நீ அவனைக் காக்காமல் இருந்துவிடாதே”, என்றாள்.
இராமனை இலட்சுமணன் எப்படிக் காத்தானோ, அதைவிட அதிகமாகப் பாதுகை பரதனைக் காக்க முடிவு செய்தாள்.
பரதனை மட்டும் அல்லாமல், அவனது நாட்டையும் காப்பாற்றினால் அல்லவோ, முழுமையான காப்பாற்றுதல் ஆகும்?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன்னை விட்டுப் பிரிந்து அவதி உற்ற போது இளைய பெருமாள்
அவரைக் கண்ணும் கருத்துமாக விழித்து இருந்து காப்பாற்றினார்
பெருமாளைப் பிரிந்த ஸ்ரீ பாரதாழ்வானையும் நீயும் அது போலவே விழித்து இருந்து ரஷித்தாய்-
உங்கள் இருவரின் விழிப்பினால் உலகம் முழுவதும் விழிப்பு அடைந்து இருக்கிறது

பாகவதர்களாலேயே பெருமானுக்கும் உலகோர்களுக்கும் ஷேமம் என்றவாறு –

———————————————————————————————

அந்த:புரே பரிஜநை: ஸமய உபயாதை:
அபி அர்ச்சிதா பவஸி யா விநயோபபந்நை:
ஸா கோஸலேஸ்வர பாதாவநி பூபதீநாம்
ஸங்கட்டநம் மகுட பங்க்திபி: அந்வபூஸ் த்வம்—160-

கோஸல தேசத்தின் ராஜாவாகிய இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
நீ அந்தப்புரத்தில் உள்ள நேரங்களில், அங்கு உள்ள வேலையாட்களால் மிகவும் மரியாதையுடன் நடத்தப்படுகிறாய்.
ஸிம்ஹாஸனத்தில் வந்து அமர்ந்தவுடன், பல அரசர்களின் க்ரீடங்கள் உன் மீது இடித்தபடி (தலை சாய்த்தபடி) நிற்க,
நீ கம்பீரமாக வீற்றுள்ளாய்.

பாதுகையிடம் உள்ள மரியாதை மற்றும் பயம் காரணமாகப் பல அரசர்களும் மிகவும் வேகமாக ஓடி வந்து,
மென்மையாகப் பாதுகையில் விழுவதற்குப் பதிலாக, வேகமாக வந்து விழுகின்றனரே!
பாதுகைக்குத் துன்பம் ஏற்படப் போகிறதே என்று வருத்தம் கொள்கிறார்.

ஸ்ரீ பாதுகையே நீ அந்தப்புரத்தில் இருந்த போது கைங்கர்ய பரர்கள் மட்டும் உன்னை ஸூகமாய் இருக்கும் படிப் பூஜித்தார்கள்
சிம்ஹாசனத்தில் எழுந்து அருளியவுடன் உன்னை அரசர்கள் எல்லாம் வணங்கும் போது அவர்கள் அணிந்துள்ள
கிரீடங்கள் உன்னை நெருங்க அதையும் ஸூகமாக அனுபவித்தாய் –

————————————————————–

ப்ராப்ய அதிகாரம் உசிதம் புவநஸ்ய குப்த்யை
பத்ராஸநம் பரத வந்திதம் ஆஸ்ரயந்த்யா
மத்யே அவதீர்ணம் இவ மாதவ பாத ரக்ஷே
மாதஸ் த்வயாபி மநு வம்ச மஹி பதீ நாம்—-161-

தாய் போன்ற பாதுகையே! இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு நீ இராமனால் நியமிக்கப்பட்டாய்.
பரதனால் ஆராதிக்கப்பட்டு ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தாய். உன்னை இவ்விதம் காணும் போது
மநு குலத்தில் உதித்த பேரரசி போன்று, அந்தக் குலத்திற்குப் பொருத்தமாகவே உள்ளாய்.

அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாமல் வேறு யாரும் ஸிம்ஹாஸனத்தில் அமர இயலாது.
ஆனால், பாதுகைக்கு இராமனின் தொடர்பு உள்ளது, பரதனின் ஆராதனை உள்ளது.
ஆகவே இவள் அரியணையில் அமர்வது பொருத்தமே என்றார்.

ஸ்ரீ பாதுகையே -நீ சிம்ஹாசனத்தை அலங்கரித்தது மனு வம்ச ராஜாக்களுக்குள் மிகவும் பொருத்தமாகவும் இருந்தது –
பெருமாள் மனு வம்சத் தரசர்களின் நடுவே பெருமாள் திருவவதரித்து திரு அயோத்தியை அரசாண்டு
உலகத்தை ரஷித்தது போல் இப்போது அரசாள்வதால்
நீயும் மனு வம்சத்தார சர்களின் நடுவில் ஒருவராக அவதாரம் செய்துள்ளாய் போலும்

ஆழ்வார் ஆசார்ய குரு பரம்பரையில் சேர்ந்து குரு பரம்பரைக்கு அலங்காரம் செய்து அருளினது போலவே –

——————————————————————–

ராஜாஸநே ரகு குலோத்வஹ பாத ரக்ஷே
நீராஜநம் ஸம்பவத் ஸம்யோசிதம் தே
ஸ்லாகா வசேந பஹுச: பரிகூர்ணிதாபி:
ஸாமந்த மௌளி மணி மங்கள தீபிகாபி:—162-

ரகு குலத்தில் உதித்த இராமனின் பாதுகையே! உன்னைக் கொண்டாடுவதற்காக உனது ஸிம்ஹாஸனத்தைச் சுற்றி
பல அரசர்கள் நின்றனர். அப்போது அவர்கள் க்ரீடங்களில் உள்ள இரத்தினக் கற்களின் ஒளியானது
உன் மீது அசைந்தபடி காணப்பட்டது. இதனைக் காணும்போது உனக்கு மங்கல ஹாரத்தி எடுப்பது போன்று இருந்தது.

பாதுகை அயோத்தி நகரத்தை ஆட்சி செய்து வந்த நேர்த்தியைக் கண்டு பல அரசர்களும் மயங்கி நின்றனர்.
இதனை ஆமோதித்தபடி அவர்கள் தங்கள் தலைகளை அசைத்தனர். இதனால் அவர்களின் க்ரீடங்களில்
பதிக்கப்பட்ட கற்களின் ஒளியானது பாதுகைக்கு ஹாரத்தி எடுப்பது போன்று காணப்பட்டது.

ஸ்ரீ பாதுகையே நீ அரசாளும் பாங்கைக் கண்டு அண்டை தேசத்து அரசர்கள் தங்கள் மகுடங்களை அசைத்து பாராட்டினார்கள் –
அப்பொழுது அவற்றினின்று வீசும் ரத்ன காந்தியால் உனக்கு மங்கள ஹாரத்தி எடுப்பது போல் இருந்தது –

ஆசார்யர் க்ருத்யங்கள் நம்மாழ்வார் மூலம் உலகம் அறிந்து அவரை கொண்டாடுகிறது என்றவாறு –

—————————————————–

ப்ருத்வீ பதீநாம் யுகபத் க்ரீடா:
ப்ரத்யர்த்திநாம் ப்ராணிதும் அர்த்திநாம் ச
ப்ராபுஸ் ததா ராகவ பாத ரக்ஷே
த்வதீயம் ஆஸ்த்தாநிக பாத பீடம்—-163-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ அயோத்தி நாட்டின் ஸிம்ஹாஸனத்தில் விற்றிருந்த போது
உன்னை எதிர்க்க முயன்ற அரசர்கள் தோற்றனர். ஒரு சில அரசர்கள் உன்னை வணங்கி நின்றனர்.
இவ்வாறு உள்ள இருவகையான அரசர்களின் க்ரீடங்களும் ஒரே போன்று உனது ஆஸ்தானத்தை அடைந்தன.

ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து, கால்கள் வைக்கும் இடம் என்பது ஆஸ்தானம் எனப்படும். எதிர்த்துத் தோற்ற அரசர்களையும்,
“அவர்கள் அரசர்கள்” என்னும் மரியாதை அளித்து, அவர்களையும் மற்றவர்களைப் போன்றே நடத்திய விதம் வெளிப்படுவது காண்க.
இந்தப் பண்பு மிகவும் முக்கியமானதாகும்.

ஸ்ரீ பாதுகையே நீ அரசாண்ட சமயம் தாங்கள் உயிர் பிழைக்க சரண் அடைந்த அரசர்கள் அனைவரும்
பகைமை பூண்டு அழிக்கப் பட்ட அரசர்கள் இப்படி இருவகையினரது கிரீடங்களும் ஒரே சமயத்தில்
உனது சிம்ஹாசனத்தின் கீழ் வைக்கப்பட்ட திருவடி பீடத்தை அடைந்து இருந்தன —

——————————————————————-

ப்ரணம்ய ரங்கேஸ்வர பாத ரக்ஷே
தூரோபநீதை: உபதா விசேஷை:
ஸபா ஜயந்தி ஸ்ம ததா ஸபாயம்
உச்சைஸ் தராம் உத்தர கோஸலாஸ் த்வாம்—-164-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! நீ அயோத்தியில் ஸிம்ஹாஸனம் ஏறி கம்பீரமாக
ஆட்சி செய்து கொண்டிருந்தாய். அப்போது வடக்கு கோசல நாட்டில் உள்ள மக்கள் பலரும் அயோத்தி வந்தனர்.
வெகுதூரத்தில் இருந்து வந்த அவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த உயர்ந்த காணிக்கைகளை
உன்னிடம் சமர்ப்பித்து வணங்கி நின்றனர்.

ஸ்ரீ ரங்கேஸ்வர பாதுகையே நீ ராஜ்ய பரிபாலனம் செய்த காலத்தில் வெகு தொலைவான பிரதேசங்களில் இருந்து
காணிக்கைகளைக் கொணர்ந்து உன்னைப் பூஜிக்கிறார்கள் –

——————————————————————

அபாவ்ருத த்வாரம் அயந்த்ரி தாஸ்வம்
ரங்கேஸ பாதாவநி பூர்வம் ஆஸீத்
த்வயா யத்ருச்சா ஸுக ஸுப்த பாந்த்தம்
ராமே வநஸ்த்தே அபி பதம் ரகூணாம்—-165-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாப்பவளே! பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் நீ ஸிம்ஹாஸனத்தில்
அமர்ந்திருந்த போது நிகழ்ந்தது என்ன? பகைவர்கள் யாரும் வருவது இல்லாமல் உள்ளதால்
அயோத்தியின் கோட்டைக் கதவுகள் திறந்தே கிடந்தன. யானைப்படை, குதிரைப்படை ஆகியவற்றில் உள்ள யானைகளும் குதிரைகளும்
கட்டி வைக்கப்படாமல், அயோத்தியின் வீதிகளில் சுற்றின.
அந்த நாட்டின் அரசனான இராமன் கானகத்தில் உள்ள போதிலும், பாதுகா இராஜ்ஜியம் காரணமாக,
எந்தவிதமான கவலையும் இன்றி வழிப் போக்கர்கள் வந்து உறங்கிச் சென்றபடி நாடு இருந்தது.

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் போனதும் கோட்டை வாயில் திறந்தும்
குதிரை முதலியன கட்டுவாரின்றி திரிந்து கொண்டும் இருந்தன –
நீ பட்டம் ஏற்ற பிறகும் வழிப் போக்கர்கள் கவலையின்றி ஸூகமாக நினைத்த இடத்தில் தங்குகின்றனர் –
ஆதலால் கோட்டை வாயிலில் பூட்டவோ குதிரைகளை கட்டவோ அவசியம் இருக்கவில்லை -திருடர் பயமில்லை –

————————————————————————-

அநந்ய பக்திர் மணி பாதுகே த்வாம்
அபி அர்ச்சயந் தாசரதிர் த்வீதீய:
விகல்ப்யமாந: ப்ரதமேந கீர்த்யா
வந்த்ய: ஸ்வயம் வ்யோம ஸதாம் பபூவ—166-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! எந்த ஒரு பயனும் எதிர்பார்க்காமல், உன்னிடம் மட்டுமே பக்தி கொண்டு,
பரதன் உன்னை மட்டுமே வணங்கி நின்றான். இதனால் தசரதனின் இரண்டாவது புத்திரனான அவனை,
முதல் பிள்ளையான இராமானுக்குச் சமமாகவே அனைவரும் கருதினர்.
இப்படியாகப் பரதன் தேவர்களுக்குச் சமமானவனாகவே வணங்கப்பட்டான்.

ஸ்ரீ பாதுகையே வேறு பலன் கருதாமல் உன்னையே பூஜித்ததனால் ஸ்ரீ பரதாழ்வான் பெருமாளுக்கு நிகராக
தேவர் உள்ளிட்ட யாவராலும் கொண்டாடப் படப்பட்டான் –

உண்மையான ஆசார்ய பக்தி உள்ளவன் பகவானுக்கு சாம்யமாக கொண்டாடுவார்கள் என்றபடி –

————————————————————————–

அரண்ய யோக்யம் பதம் அஸ்ப்ரு சந்தீ
ராமஸ்ய ராஜார்ஹ பதே நிவிஷ்டா
ஆஸ்த்தாந நித்யா ஸிகயா நிராஸ்த்த:
ஸ்வர்கௌகஸாம் ஸ்வைர கதேர் விகாதம்—-167-

பாதுகையே! இராமனின் திருவடிகளை நீ தொடாதவளாக, ஸிம்ஹாசனத்தில் அமர்ந்து விட்டாய்.
இவ்வாறு நீ எங்கும் நகராமல் இருந்த காரணத்தினால், தேவர்களுக்கு அசுரர்களிடம் இருந்த பயம்
நீங்கப் பெற்று எங்கும் சஞ்சரிக்க இயன்றது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடிகளைப் பிரிந்து நீ எங்கும் சஞ்சரியாமல் நிலையாக சிம்ஹாசனத்தில் இருந்து கொண்டே
ராஷசர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட சஞ்சாரத் தடையையும் உபத்ரவத்தையும் போக்கினாய் –

——————————————————————-

ராஜாஸநே சேத் பவதீ நிஷண்ணா
ரங்கேஸ பாதாவநி தந்ந சித்ரம்
யத்ர அதிரூடா: க்ரமஸ: புரா த்வாம்
உத்தம் ஸயந்தே ரகு ஸார்வ பௌமா:—-168-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! இக்ஷ்வாகு போன்ற அரசர்கள் அமர்ந்த ஸிம்ஹாசனத்தில்
நீ அமர்ந்த காரணத்தில் எந்த ஒரு வியப்பும் இல்லை – காரணம்,
அவர்கள் உன்னைத் தங்கள் தலையில் தாங்கியபடி ஸிம்ஹாசனத்தில் அமர்ந்தனர்.
உன்னையே தங்கள் தலைக்கு அலங்காரமாக வைத்துக் கொண்டனர்.
அப்படி அவர்கள் தலையில் அமராமல் நேரடியாக ஸிம்ஹாசனத்தில் நீ அமர்வதில் என்ன வியப்பு உள்ளது?

ஸ்ரீ பாதுகையே இஷ்வாகு போன்றோர் அலங்கரித்த சிம்ஹாசனத்தில் பெருமாள் ஸ்ரீ பாதுகையான உன்னை
எழுந்து அருளப் பண்ணலாமோ என்று கேட்பது நியாயம் இல்லை -ஏன் எனில்
உனக்கு முன் இந்த ஆசனத்தில் இருந்த ரகு வம்சத்தரசர்கள் உன்னை சிரசில் அணிந்து கொண்டாடுகிறார்களே
அவர்கள் உட்கார்ந்து அனுபவித்த சிம்ஹாசனத்திலேயோ உன்னை வைப்பது என்று வேண்டுமானால் கேட்கலாம் –
அதுதான் நியாயம் ஆகும் –

——————————————————-

பத்ராஸநம் சேத் பரிவ்ருத்தம் ஆஸீத்
தேவி ஷணம் தக்ஷிண தோமுகம் தே
கதம் பவேத் காஞ்சந பாத ரக்ஷே
ராமஸ்ய ரக்ஷ: ம்ருகயா விஹார;—-169-

பொன்மயமான பாதுகாதேவியே! நீ உனது ஸிம்ஹாசனத்தை ஒரு நொடிப்பொழுது தெற்குத் திசை பார்த்தபடி இட்டிருந்தால் போதுமானது.
இவ்வாறு நீ செய்திருந்தால் இராமன் இலங்கை சென்று அரக்கர்களை அழிப்பது என்ற லீலையே இல்லாமல் போய் இருக்கும் அல்லவா?
(இராமனின் செயலை பாதுகையே செய்திருப்பாள் என்றார்).

ஸ்ரீ பாதுகையே நீ மட்டும் உன் சிம்ஹாசனத்தைத் தெற்கு முகமாகச் சிறிது திருப்பி இருந்தால் கூட பெருமாள்
ராவணாதி நிரசனமாக சென்ற இலங்கையில் ஒரு அரக்கனும் அகப்பட்டு இருக்க மாட்டான் –

———————————————————————-

யாவத் த்வயா ராகவ பாத ரக்ஷே
ஜிகீஷிதா ராக்ஷஸ ராஜ தாநீ
மாலேவ தாவத் லுளிதா மதாந்தை:
உத்யாந சாகாம்ருக யூதபைஸ்தே—-170-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இரு கால கட்டங்களில் இலங்கை நகரத்தை வெல்ல வேண்டும் என்று நீ விரும்பினாய்.
அப்போது கொழுத்த வானர வீரர்கள் மூலமாக இலங்கை நகரமானது, மலர்கள் போன்று கசக்கி வெல்லப்பட்டது
(இராவணன் சீதையை அபகரித்தான் என்று அறிந்தவுடன் நீ பரதனின் சேனையை அனுப்ப எண்ணினாய்.
ஆனால் உனது எண்ணம் காரணமாகவே வானர வீரர்கள் அச்செயலை முடித்துவிட்டனர் என்று கருத்து).

ஸ்ரீ பாதுகையே இலங்கையை ஜெயிக்க வேண்டும் என்று சங்கல்பித்தாய் -உடனே உன் தோட்டத்து
கிஷ்கிந்தையைச் சார்ந்த வானரர்களால் ஒரு மாலையைப் போலே இலங்கை பிய்த்து அழிக்கப் பட்டது அன்றோ –

——————————————————————————–

மஹீஷிதாம் ராகவ பாத ரக்ஷே
பத்ராஸ நஸ்த்தாம் பவதீம் ஸ்ப்ரு சந்த:
பூர்வம் ததாத்வே நியதே அபி பூய:
கல்யாணதாம் ஆநசிரே கிரீடா:—-171-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ சிம்மாசனத்தில் வீற்றிருந்தபோது,
உன்னை அரசர்களின் தலையில் உள்ள கிரீடங்கள் (அவர்கள் உன்னை வணங்கும்போது) தொட்டன.
அவை முன்பே தங்கமாக உள்ள போதிலும், உன்னைத் தொட்ட பின்னர் மட்டுமே உயர்ந்த பலனைப் பெற்றன.

ஸ்ரீ பாதுகையே உன்னைத் தொடாமல் நின்ற அரசர்கள் உடைய மகுடங்கள் கல்யாணமாகவே தங்கமாகவே இருந்தன –
உன்னைத் தொட்டு வணங்கியதால் அவை மேலும் கல்யாணம் அடைந்து ஷேமத்தை தருவனவாகவும் பரிணமித்தன

நல்ல புண்யசாலியானாலும் ஆசார்ய சம்பந்தம் ஏற்பட்ட பிறகே ஷேமம் உண்டாகிறது –

————————————————————————

அநிச்சத: பாண்டரம் ஆத பத்ரம்
பித்ரா விதீர்ணம் மணி பாத ரக்ஷே
ஆஸீத் த்வத் அர்த்தம் வித்ருதேந தேந
சாயா ஸமக்ரா பரதஸ்ய மௌளௌ—173–

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! தனது தந்தையான தசரதன் தனக்கு அளித்த
வெண்மையான குடையை பரதன் மறுத்தான்.
ஆயினும் உனக்காக அவன் அந்த வெண்கொற்றக் குடையைப் பிடித்தபடி உள்ளான்.
அந்தக் குடையின் நிழல் அவன் தலை மீது அழகாக விழுந்தபடி உள்ளது.

ஸ்ரீ பாதுகையே தகப்பனால் கொடுக்கப்பட்ட வெண் குடையை வேண்டாம் என்று வெறுத்து ஸ்ரீ பரதாழ்வான்
உனக்காக அதைப் பிடித்ததனால் அதன் முழு நிழலும் அவன் சிரசில் இருந்தது –

—————————————————————

பாதுகே ரகுபதௌ யத்ருச்சயா
ப்ரஸ்திதே வன விஹார கௌதுகாத்
ஆதி ராஜ்யம் அதி கம்ய தே யுவாம்
அக்ஷதம் வஸுமதீம் அரக்ஷதம்—173-

ஏ பாதுகே! இராமன் எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல், காட்டில் வாசம் செய்யும் மகிழ்வு கொண்டு புறப்பட்டான்.
அந்த நேரத்தில் நீயும் பரதனும் அயோத்தியை அடைந்து, இந்தப் பூமிக்கு எந்த விதமான குறையும் இன்றி பார்த்துக் கொண்டீர்கள்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருள அப்போது பட்டத்தை ஏற்றுக் குறைவின்றி நீ ஆட்சி செய்தாய் –

சதாசார்யன் சேதனனை கைவிடமாட்டார் என்பதை காட்டி அருளினாய் –

———————————————————–

ரகுவீர பதாநுஷங்க மாத்ராத்
பரி பர்ஹேஷு நிவேசிதா யதி த்வம்
அதிகார திநே கதம் புநஸ் தே
பரிவாராஸ் தவ பாதுகே பபூவு:—174-

பாதுகையே! இராமனுடைய திருவடித் தொடர்பு உனக்குக் கிட்டியது. இதனால் உன்னை அவனுடைய குடை, சாமரம்
போன்று பொருள்களுடன் ஒப்பிட இயலாது. இவ்விதம் ஒப்பிடலாம் என்றால், நீ சிம்மாசனம் அமர்ந்த போது
அந்தக் குடை, சாமரம் போன்றவை உனக்கு ஏவல் செய்யும் பொருள்களாக எவ்விதம் வந்தன?

ஸ்ரீ பாதுகையே பெருமாளுக்கு உபயோகிக்கப் படும் சத்ர சாமரங்கள் போலே ஒன்றாக உன்னையும் சேர்ப்பது தகாது –
நீ பட்டம் ஏற்ற போது அவை உனக்கும் பகவானுக்கு போலே உபசார உபகரணங்களாக உபயோகப் பட்டன அல்லவா –

பகவானைப் போலவே ஆசார்யரும் சமமாக உபாசிக்கப் பெற்றவர் –

———————————————————————–

புருஷார்த்த சதுஷ்ட யார்த்தீநாம்
பரிஷத் தே மஹிநா வஸிஷ்ட முக்யை:
க்ரய விக்ரய பட்டணம் ப்ரஜாநாம்
அபவத் காஞ்சந பாதுகே ததாநீம்—-175-

பொன் மயமான பாதுகையே! நீ சிம்மாசனத்தில் அமர்ந்த போது உனது அரச சபையானது வசிஷ்டர் முதலான
பல மஹரிஷிகளால் பெரிதும் போற்றப்பட்டது. தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய
நான்கு பலன்களையும் விரும்பும் மக்கள், அவை மிகவும் எளிதாக உனது சபையில் கிட்டியது என்று வந்தனர்.
இதனால் உனது சபை வியாபார ஸ்தலம் போன்று காணப்பட்டது.

ஸ்ரீ பொன் மயமான பாதுகையே வசிஷ்டாதி மகாநீயர்களாலே கொண்டாடப்பட்ட உன் சபை
சதுர்வித புருஷார்த்தங்களையும் வாங்கவும் விற்கவுமான பட்டணம் ஆயிற்று –

——————————————————–

மநுஜத்வ திரோஹி தேந சக்யே
வபுஷா ஏகேந விரோதி நாம் நிராஸே
அபஜத் பரதாதி பேதம் ஈச:
ஸ்வயம் ஆராதயிதும் பதாவநி த்வாம்—176-

திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மனிதனாகப் பிறந்து, ஒரே உடல் எடுத்து மட்டுமே இராவணன் போன்றோரை
இராமன் வதம் செய்வது இயலும். ஆயினும் ஏன் பரதன் போன்று பல உடல்கள் எடுத்துத் தோன்றினான்?
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையான உன்னை ஆராதிக்க அல்லவா இவ்விதம் பகவான் தோன்றினான்
(பகவானே பாதுகையை ஆராதித்தான் என்று கருத்து. எப்படி? தனது பக்தையான பாதுகையை, தானே ஆராதித்துக் கொண்டாடினான்)?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் தான் ஒருவனாகவே திருவவதரித்து ராஷசர்களைக் நிரசிக்க வல்லவனாய் இருந்தும்
உனக்கும் தானே கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிற ஆசையினாலேயே ஸ்ரீ பரதாழ்வான் போன்றோரை பிரிந்தார் –

————————————————————–

மகத அங்க கலிங்க வங்க முக்யாந்
விமதாந் ரந்த்ரக வேஷிண: ஸஸைந்யாந்
ரகு புங்கவ பாதுகே விஜிக்யே
பரதஸ் சாஸநம் உத்வஹந் பவத்யா:—-177-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் அயோத்தியைக் கைப்பற்ற
மகதம், அங்கம், போன்ற நாட்டின் அரசர்கள் முனைந்தனர். அப்போது சிம்மாசனம் அமர்ந்த
உனது ஆணை மூலமாக அவர்களைப் பரதன் தனது படைகளுடன் சென்று வென்றான்.

ஸ்ரீ பாதுகையே உன் நியமனத்தாலே ஸ்ரீ பரதாழ்வான் மகத அங்க கலிங்க முதலான தேசத்து
சகல சத்ருக்களையும் ஜெயித்தார் –

——————————————————————

அநிதர வஹநீயம் மந்த்ரி முக்யைர் யதா தத்
த்வயி விநிஹிதம் ஆஸீத் ஸூர்ய வம்சாதி ராஜ்யம்
ரகு பதி பத ரக்ஷே ரத்ந பீடே ததாநீம்
ஸ்ரியம் இவ தத்ருஸூஸ் த்வாம் ஸாதரம் லோக பாலா:—-178-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமன் கானகம் புகுந்த பின்னர் அயோத்தியை
அந்நாட்டு உயர்ந்த மந்திரிகளால் கூட ஆள முடியவில்லை. யாராலும் சுமக்க இயலாத ராஜ்ய பாரத்தை உன்னிடம் வைத்தனர்.
ஸூரிய வம்சத்தின் அரச சிம்மாசனத்தில் நீ அமர்ந்த போது தேவர்களும் அரசர்களும், இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட
சிம்மாசனத்தில் நீ அமர்ந்ததைக் கண்டு மகிழ்ந்தனர்.
மஹாலக்ஷ்மி திருப்பாற்கடலில் உதித்தபோது அவளைப் போற்றியது போன்று, உன்னைப் போற்றி நின்றனர்.

ஸ்ரீ பாதுகையே -ஸூமந்திரர் முதலிய மந்திரிகள் மற்ற ஒருவராலும் தாங்க முடியாத ஸூர்ய வம்சப் பட்டத்தை உனக்குத் தர
அதை அலங்கரித்த போது சாஷாத் மஹா லஷ்மியாகவே உன்னை தேவர்களும் திக் பாலர்களும் சேவித்தார்கள் –

————————————————————————————

பரிஹ்ருத தண்டகாத்வ கமநம் பத ரக்ஷிணி தத்
பரிணத விஸ்வ ஸம்பத் உதயம் யுவயோர் த்விதயம்
ரகுபதி ரத்ன பீடம் அதிருஹ்ய ததா விததே
வ்யபகத வைரிபூப நிலயம் வஸுதா வலயம்—-179-

பெரியபெருமாளின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! இராமன் தண்டகாரண்ய வனத்திற்கு வந்த போது,
நீங்கள் இருவரும் (இரு பாதுகைகள் – ஒரு ஜோடி) அவனுடன் சஞ்சாரம் செய்யாமல் அயோத்திக்குத் திரும்பினீர்கள்.
இராமனின் கற்கள் இழைத்த சிம்மாசனத்தில் அமர்ந்த நீங்கள் இருவரும்,
அனைத்து உலகங்களையும் விருத்தி அடையும்படிச் செய்தீர்கள்.

ஸ்ரீ பாதுகையே நீ திரும்பி வந்து பட்டத்தை ஏற்று சகல லோகங்களையும் ஷேமத்தையும் தந்து
சத்ருக்களை அடியோடு இல்லாமலும் செய்து விட்டாய் –

————————————————————-

ப்ராப்த உதயா ததாநீம்
கிம் அபி தம: தத் நிராகரோத் பவதீ
தநுரிவ மனுகுல ஜநுஷாம்
ப்ரஸவித்ரீ ரத்ந பாதுகே ஸவிது:—180-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமன் கானகம் புகுந்த போது நீ அரச பதவி ஏற்கும்
உதயம் என்பதை அடைந்தாய். ஆக மநுகுலத்தின் அரசர்களுக்கு ஆதாரமாக உள்ள ஸூரியன் போன்று நீ ஆனாய்.
இதன் மூலம் எங்கும் உள்ள இருளை நீக்கினாய்.

ஸ்ரீ பாதுகையே நீ பட்டத்தை ஏற்று ஜனங்களுக்கு இருந்த மகத்தான துக்கத்தை
ஸூர்யன் இருளைப் போக்குவது போலப் போக்கி அருளினாய் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: