ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகர் ஊஞ்சல் –

ஸ்ரீ ரங்க நாயகர் ஊசல்

ஸ்ரீ ரங்க நாயகரைப் பற்றிய ஊசல் -என்றவாறு –
ஊசலாவது ஆச்ரிய விருத்ததலில் ஆதல் -கலித் தாழ் இசையால் ஆதல் –
ஆடீர் ஊசல் -ஆடாமோ ஊசல் -ஆடுக ஊசல் என ஒன்றால் முடிவுற அருளிச் செய்வது –

—————————————–

தனியன் –

அண்டப் பந்தரில் பற்று கால்களாக அறிவு விட்டம் கரணம் சங்கிலிகள் ஆக
கொண்ட பிறப்பே பலகை வினை அசைப்போர் கொடு நரகம் ஸ்வர்க்கம் பூ வெளிகள் தம்மில்
தண்டல் இல் ஏற்றம் இறக்கம் தங்கல் ஆக தடுமாறி இடர் உழக்கம் ஊசல் மாற
தொண்டர்க்கு ஆம் மணவாளர் பேரர் கூடித் தொகுத்திட்டார் திருவரங்கத்து ஊசல் தானே —

அண்டப் பந்தரில்-உலகமாகிய பந்தலில்
பற்று கால்களாக -பாசமே தூண்கள் ஆகவும்
அறிவு விட்டம் -அறிவே சங்கிலியை மாட்டும் உத்தரமாகவும்
கரணம் சங்கிலிகள் ஆக -இந்திரியங்கள் சங்கிலிகள் ஆகவும்
கொண்ட பிறப்பே பலகை-எடுத்த பிறப்பே ஊஞ்சல் பலகை யாகவும்
வினை அசைப்போர் -இரு வினைகளே ஆட்டுபவர்கள் ஆகவும்
கொடு நரகம் ஸ்வர்க்கம் பூ -ஆகிய வெளிகள் தம்மில்-வெளியிடங்களில் செல்லுகையும்
தண்டல் இல் ஏற்றம் இறக்கம் தங்கல் ஆக -தடையின்றி ஏறுதலும் -இறங்குதலும் -நிலை பெறுதலும் ஆகவும்
இப்படி
தடுமாறி -அலைந்து
இடர் உழக்கம் ஊசல் மாற -துன்பம் அனுபவிக்கும் ஊசல் ஆட்டம் நீங்கும்படி
தொண்டர்க்கு ஆம் மணவாளர் பேரர் கூடித்தொகுத்திட்டார் திருவரங்கத்து ஊசல் தானே —

அழகிய மணவாள தாசரும் அவரது திருப் பேரனாரான கோனேரி அப்பன் ஐயங்காரும் சேர்ந்து இந்த பிரபந்தம் பாடி அருளினார்கள் –
இந்த தனியன் இந்த பிரபந்தத்துக்கும் -ஸ்ரீ ரங்க நாயகியார் ஊசல் -என்ற அடுத்த பிரபந்தத்துக்கும் சேர்ந்து அருளப் பட்டது
இத்தை ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்தார் –
அடுத்ததை ஸ்ரீ கோனேரி அப்பன் ஐயங்கார் அருளிச் செய்தார்

————————————————

காப்பு –

புதுவை நகர்ப் பட்டர் பிரான் சரண்கள் போற்றி பொய்கை பூதன் பேயார் பாதம் போற்றி
சது மறைச் சொல் சடகோபன் சரணம் போற்றி தமிழ்ப் பாணன் தொண்டர் அடிப் பொடி தாள் போற்றி
முது புகழ் சேர் மழிசையர் கோன் பதங்கள் போற்றி முடிக் குல சேகரன் கலியன் கழல்கள் போற்றி
மதுர கவி எதிராசன் கூரத் தாழ்வான் வாழ்வான பட்டர் திருவடிகள் போற்றி —

————————————————————————

திரு வாழ திரு ஆழி சங்கம் வாழ திரு அனந்தன் கருடன் சேனையர் கோன் வாழ
அருள் மாறன் முதலாம் ஆழ்வார்கள் வாழ அளவில் குணத்து எதிராசன் அடியார் வாழ
இரு நாலு திரு எழுத்தின் ஏற்றம் வாழ ஏழ் உலகும் நான் மறையும் இனிது வாழ
பெரு வாழ்வு தந்தருள் நம் பெருமாள் எங்கள் பெரிய பெருமாள் அரங்கர் ஆடீர் ஊசல் –1-

————————————————–

உயரவிட்ட கற்பகப் பூம் பந்தர் நீழல் ஒண் பவளக் கால் நிறுவி ஊடு போட்ட
வயிரவிட்டத்து ஆடகச் சங்கிலிகள் நாற்றி மரகதத்தால் பலகை தைத்த ஊசல் மீதே
தயிரிலிட்ட மத்து உழக்கும் வெண்ணெய்க்கு ஆடி தட மறுகில் குடமாடி தழல் வாய் நாகம்
அயரவிட்டு அன்றாடிய நீர் ஆடீர் ஊசல் அணி அரங்க நம்பெருமாள் ஆடீர் ஊசல் –2-

ஆடகச் சங்கிலிகள் -பொற் சங்கிலிகள்-
தட மறுகில் -பெரிய தெருக்களில்-
வெண்ணெய்க்கு ஆடி -வெண்ணெய் பெறுவதற்கு -வெண்ணெய் பெற்ற ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக என்றுமாம் –

——————————————-

மீன் பூத்த விசும்பது போல் தரளம் கோத்து விரித்த நீலப்பட்டு விதானம் தோன்ற
வான் பூத்த கலை மதி போல் கவிகை ஓங்க மதிக்கதிர் போல் கவரி இரு மருங்கும் வீச
கான் பூத்த தனிச் செல்வன் சிலையுள் மின்னல் கரு முகில் போல் கணமணி வாசிகையின் நாப்பண்
தேன் பூத்த தாமரையாள் மார்பில் ஆட தென் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –3-

மீன் பூத்த விசும்பது போல் -நஷத்ரங்கள் விளங்கும் ஆகாசம் போலே
தரளம் கோத்து விரித்த நீலப்பட்டு விதானம் தோன்ற -முத்துக்கள் கோக்கப் பட்ட பரப்பிய நீலப் பட்டினால் இயன்ற விதானம்
வான் பூத்த கலை மதி போல் கவிகை ஓங்க -பூர்ண சந்தரன் போலே வெண் கொற்றக் குடை உயர்ந்து விளங்க
மதிக்கதிர் போல் கவரி இரு மருங்கும் வீச -வெண் சாமரங்கள்
கான் பூத்த தனிச் செல்வன் சிலையுள் -கற்பகக் காட்டில் விளங்கும் இந்திரன் தனுசில் மத்தியில் தோன்றும்
கரு முகில் மின்னல் போல் கணமணி வாசிகையின் நாப்பண் -நவ ரத்னங்களால் இயன்ற மாலையின் இடையிலே
தேன் பூத்த தாமரையாள் மார்பில் ஆட தென் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல்-

————————————————————————–

பூசுரரும் புரவலரும் வான நாட்டுப் புத்தேளிர் குழுவும் அவர் பூவை மாரும்
வாசவனும் மலரவனும் மழு வலானும் வணங்குவான் அவசரம் பார்த்து இணங்கு கின்றார்
தூசுடைய கொடித் தடந்தேர் மானம் தோன்று அச்சுடர் இரண்டும் பகல் விளக்காத் தோன்ற தோன்றும்
தேசுடைய திருவரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –4-

பூசுரரும்-பூமியில் தேவர்கள் போலே விளங்கும் பிராமணர்களும்
புரவலரும் -காக்கும் தொழில் செய்யும் அரசர்களும்
வான நாட்டுப் புத்தேளிர் குழுவும் -தேவர்கள் கூட்டமும்
அவர் பூவை மாரும் -அவர்கள் மனைவியரும்
வாசவனும் மலரவனும் மழு வலானும் -இந்திரன் பிரமன் சிவனும் -ஆகிய இவர்கள் யாவரும்
வணங்குவான் அவசரம் பார்த்து இணங்கு கின்றார்
தூசுடைய கொடித் தடந்தேர் -சீலையினால் இயன்ற துவசங்கள் கட்டிய பெரிய தேரின் மீதும்
மானம் தோன்று -விமானத்தின் மீதும் காணப்படுகின்ற -முதல் குறை பட்டு விமானம் மானம் ஆயிற்று –
அச்சுடர் இரண்டும் பகல் விளக்காத் தோன்ற
தோன்றும் தேசுடைய திருவரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல்-

————————————————————————————

மலை மகளும் அரனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட வாசவனும் சசியும் ஒரு வடம் தொட்டு ஆட்ட
கலை மகளும் அயனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட கந்தனும் வள்ளியும் கலந்து ஓர் வடம் தொட்டு ஆட்ட
அலை மகரப் பாற் கடலுள் அவதரித்த அலர் மகளும் நில மகளும் ஆயர் காதல்
தலை மகளும் இரு மருங்கில் ஆட எங்கள் தண் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –5-

—————————————————————————–

திருவழுதி வளநாடன் பொருனைச் சேர்ப்பன் சீ பராங்குச முனிவன் வகுளச் செல்வன்
தரு வளரும் குருகையர் கோன் காரி மாறன் சடகோபன் தமிழ் வேதம் ததியர் பாட
கருணை பொழி முக மதியம் குறு வேர்வு ஆட கரிய குழல் கத்தூரி நாமத்து ஆட
அருகிருக்கும் தேவியர்கள் அது கொண்டாட அணி அரங்கத்து எம்பெருமான் ஆடீர் ஊசல் –6-

——————————————————————-

வையம் ஒரு பொன் தகட்டுத் தகளியாக வார் கடலே நெய்யாக அதனுள் தேக்கி
வெய்ய கதிர் விளக்காக செஞ்சொல் மாலை மெல்லடிக்கே சூட்டினான் மேன்மையாட
துய்ய மதி மண்டலத்தின் மறுவே ஒப்பச் சோதி விடு கத்தூரி துலங்கு நாமச்
செய்ய திரு முகத்து அரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –7-

கீழே தமிழ் வேதம் ததீயர் பாட என்று அருளிச் செய்ததால் இங்கும் மேலும் அங்கனமே பொருள்
பொய்கையாழ்வார் தேவரீர் மேன்மையைப் பாடவும் -ததீயர் பொய்கையாழ்வார் மேன்மையைப் பாடவும் -என்றுமாம் –

——————————————————————

அன்பு என்னும் நன் பொருள் ஓர் தகளியாக ஆர்வமே நெய்யாக அதனுள் தேக்கி
இன்புருகு சிந்தை இடுதிரியா ஞானத்து இலகு விளக்கு ஏற்றினான் இசையைப் பாட
பொன் புரையும் புகழ் உறையூர் வள்ளி யாரும் புதுவை நகர் ஆண்டாளும் புடை சேர்ந்து ஆட
முன்பிலும் பின்பு அழகிய நம்பெருமாள் தொல்லை மூ வுலகுக்கும் பெருமாள் ஆடீர் ஊசல் –8-

——————————————————-

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் என்ற திகழ் அருக்கன் அணி நிறமும் திகிரி சங்கும்
இருள் கொண்ட கருங்கங்குல் இடையே கோவல் இடை கழியில் கண்ட பிரான் ஏற்றம் பாட
மருக்கொண்ட கொன்றையான் மலரின் மேலான் வானவர் கோன் முதலானோர் மகுட கோடி
நெருக்குண்ட தாள் அரங்கர் ஆடீர் ஊசல் நீளைக்கு மணவாளர் ஆடீர் ஊசல் –9-

———————————————————————-

நான்முகனை நாரணனே படைத்தான் அந்த நான்முகனும் நக்க பிரானைப் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி அறிவித்தேன் என்று யார்க்கும் வெளியிட்ட பிரான் இயல்பைப் பாட
பால் முகம் ஆர்வளை நேமி படைகள் காட்ட பாசடைகள் திரு மேனிப் படிவம் காட்ட
தேன் முக மா முளரி அவயவங்கள் காட்ட செழும் தடம் போல் அரங்கேசர் ஆடீர் ஊசல் –10-

பால் முகம் ஆர்வளை நேமி படைகள் காட்ட-பால் போன்ற வெண் நிறத்தை கொண்ட சங்குப் பூச்சிகளும்
சக்கர வாகப் பறவைகளும் திவ்யாயுதங்களைக் காட்ட
பாசடைகள் திரு மேனிப் படிவம் காட்ட -பசிய தாமரை இலைகள் திருமேனி நிறத்தை காட்டா நிற்கவும்
தேன் முக மா முளரி அவயவங்கள் காட்ட -சிறந்த தாமரை மலர்கள் திரு அவயவங்களைக் காட்டா நிற்கவும் –

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களாய் சோதிச் செவ்வாய் முகிழதா
சாயச் சாமத் திருமேனி தாண் பாசடையாத் தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே -திருச் சந்த விருத்த பாசுரத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார்

—————————————————————–

மருள் இரிய மறம் இரிய அனைத்து உயிர்க்கும் மயல் இரிய வினை இரிய மறையின் பாடல்
இருள் இரிய என்று எடுத்துத் தொண்டர் தங்கள் இடர் இரிய உரைத்த பிரான் இட்டம் பாட
அருள் இரிய அறம் இரிய உலகை ஆண்ட ஆடகத்தோன் அகம் பரன் என்று அபிமானித்த
பொருள் இரிய சொல் இரிய மார்வம் கீண்ட பொன்னி சூழ் திரு வரங்கர் ஆடீர் ஊசல் –11–

மருள் இரிய-அஞ்ஞானம் நீங்க –
மறம் இரிய-கொடுமை நீங்க
மயல் இரிய -அஞ்ஞானத்தால் விளையும் மதி மயக்கம் நீங்க
வினை இரிய-இரு வினைகளும் நீங்க –
அருள் இரிய -கருணை இல்லாமல் போக
அறம் இரிய உலகை ஆண்ட-தர்மம் விலகும் படி மூ உலகங்களையும் தானே அரசாண்ட
ஆடகத்தோன்-இரணியன்
அகம் பரன் என்று அபிமானித்த பொருள் இரிய -நான் தான் பர தேவதை என்று செருக்கி இருந்த தன்மை ஒழிய
சொல் இரிய -அப்பொருள்களுக்கு இடமாகிய சொற்களும் ஒழியும்படி –
மார்வம் கீண்ட -இரணியனது மார்வம் கீண்டிய மாத்ரத்திலே அகம் பரன் என்ற சொல்லும் பொருளும் ஒழிந்தன என்றவாறு –

————————————————————-

அரன் என்றும் அயன் என்றும் புத்தன் என்றும் அலற்றுவார் முன் திரு நாரணனே ஆதி
பரன் என்று மறை உரைத்து கிழி அறுத்த பட்டர் பிரான் பாடிய பல்லாண்டு பாட
கரன் என்ற மாரீசன் கவந்தன் என்ற கண்டகரார் உயிர் மடியக் கண்டு இலங்கா
புரம் வென்ற சிலை அரங்கர் ஆடீர் ஊசல் புகழ் உறையூர் வல்லியோடு ஆடீர் ஊசல்-12–

கண்டகன் -கொடியவன் என்றவாறு –

—————————————————————————

மருமாலைப் பசுந்துளவத் தொடைகளோடு வைகறையில் வந்து திருத் துயில் உணர்த்தித்
திரு மாலை திருவடிக்கே சூட்டி நிற்கும் தரு மண்டங்குடிப் பெருமான் சீர்மை பாட
பெருமாலை அடைந்து உலகம் மதி மயங்க பேணாதார் படக் கதிரோன் காணாது ஏக
ஒரு மாலை பகலில் அழைத்து ஒளித்த நேமி ஒளி உள்ளார் அரங்கேசர் ஆடீர் ஊசல் –13-

மருமாலைப்-திருமகளோடு மருவிய திருமாலை –
மருமாலை பசுந்துளவத் தொடைகளோடு-நறு மணம் உள்ள மாலைகள் ஆகிய திருத் துழாய் மாலைகள் உடன் என்றுமாம் –
பெருமாலை அடைந்து உலகம் மதி மயங்க -உலகோர் பெரிய மயக்கம் அடைந்து அறிவு கலங்கியும்
பேணாதார் படக்-பகைவர்கள் அழியவும் –

——————————————————————

கார் அங்கத் திரு உருவம் செய்ய பாத கமலம் முதல் முடி அளவும் கண்டு போற்ற
சாரங்க முனியை ஊர்ந்து அமலன் ஆதி தனை உரைத்த பாண் பெருமாள் தகைமை பாட
ஆரம் கொள் பாற் கடல் விட்டு அயன் ஊர் ஏறி அயோத்தி நகர் இழிந்து பொன்னி ஆற்றில் சேர்ந்த
சீ ரங்க மணவாளர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –14-

ஆரம் கொள் பாற் கடல் விட்டு -முத்துக்களை யுடைய திருப் பாற் கடலை விட்டு நீங்கி –

———————————————————————————

விழி பறித்து வெள்ளியை மா வலியை மண்ணும் விண்ணுலகும் பறித்த குறள் வேடத்து உம்மை
வழி பறித்து மந்திரம் கொண்டு அன்பர் தங்கள் வல்வினையைப் பறித்த பிரான் வண்மை பாட
சுழி பறித்த கங்கை முடி அடியில் தோயத் தொழுது இரக்கும் முக்கணன் நான் முகனைச் செய்த
பழி பறித்துப் பலி ஒழித்தார் ஆடீர் ஊசல் பள்ளி கொண்ட திரு அரங்கர் ஆடீர் ஊசல் –15–

விழி பறித்து வெள்ளியை -சுக்ராச்சார்யாரது ஒற்றைக் கண்ணை குத்திக் கிளறி –
உம்மை -அழகிய வயலாலி மணவாளராக
வழி பறித்து மந்திரம் கொண்டு-திரு மணம் கொல்லையில் சென்ற போது இடை வழியே மடக்கி
அன்பர் தங்கள் வல்வினையைப் பறித்த பிரான் வண்மை பாட -திருமங்கை ஆழ்வார் உடைய சிறந்த பாடல்களைப் பாட -ததீடர் பாடா நிற்க –
விழி பறித்து மண்ணும் விண்ணுலகும் பறித்த –தேவரீர் இடத்தே திருமங்கை ஆழ்வார் வழி பறித்து
அன்பர் தங்கள் வல்வினையைப் பறித்த பிரான் -சொல் நயம் –
மாவலி இடம் இரந்த தேவரீர் சிவபிரானது இரத்தலை போக்கினீர் -சொல் நயமும் -சொல் பொருள் பின் வரு நிலை அணி –

————————————————————————

போதனார் நெட்டு எழுத்தும் நமனார் இட்ட குற்று எழுத்தும் புனல் எழுத்தாய்ப் போக மாறன்
வேதம் ஆயிரம் தமிழும் எழுதி அந்நாள் மேன்மை பெறு மதுரகவி வியப்பைப் பாட
ஓதம் ஆர் மீன் வடிவாய் ஆமை ஏனத்து உருவாகி அரி குறள் மூ இராமராகி
கோது இலாக் கண்ணனாய் கற்கி ஆகும் கோயில் வாழ் அரங்கேசர் ஆடிர் ஊசல் –16-

போதனார் நெட்டு எழுத்தும் -பிரமன் விதித்து எழுதிய நெட்டு எழுத்தும் -பிறப்பு முதல் இறப்பு வரை
எழுதிய விதி என்பதால் நெட்டு எழுத்து என்கிறார்
நமனார் இட்ட குற்று எழுத்தும்-எமன் எழுதிய குற்று எழுத்தும் -சித்ரகுப்தன் பாவத்தை மாத்ரம்
குறித்த எழுத்து என்பதால் குற்று எழுத்து என்கிறார்
புனல் எழுத்தாய்ப் போக -நீரில் எழுதிய எழுத்துக்கள் போலே மறையும் படி –
மாறன் வேதம் ஆயிரம் தமிழும் எழுதி அந்நாள் மேன்மை பெறு மதுரகவி வியப்பைப் பாட –
தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் மூவுருவில் இராமனாய் கண்ணனாய் கற்கியாய்
முடிப்பான் கோயில் –அரங்கமே -பெரியாழ்வார் திருமொழியை அடி ஒற்றி பின் இரண்டு அடிகள் அருளிச் செய்கிறார் –

———————————————————-

ஆர் அமுதின் இன்பமிகு சடகோபன் சொல் ஆயிரமும் தெரிந்து எடுத்தே அடியார்க்கு ஓதி
நாரதனும் மனம் உருக இசைகள் பாடும் நாதமுனி திருநாம நலங்கள் பாட
பாரதனில் பாரதப் போர் முடிய மூட்டி பகை வேந்தர் குலம் தொலைய பார்த்தன் தெய்வத்
தேரதனில் வரும் அரங்கர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகியோடு ஆடீர் ஊசல் –17–

நாதமுனி திருநாம நலங்கள் பாட -எம்பெருமானது திருநாம வைபவத்தை புலப்படுத்தும் பாடல்கள் –
ஸ்ரீ மன் நாத முனிகளது திரு நாம சிறப்பை என்றுமாம் –

——————————————————————

வம்பமரும் சிகை முந்நூல் தரித்த ஞானி வாதியரை வெல் ஆளவந்தார்க்கு அன்பாம்
எம்பெருமானார்க்கு எட்டும் இரண்டும் பேசி இதம் உரைத்த பெரிய நம்பி இரக்கம் பாட
தும்புரு நாரதர் கீதம் பாட தொண்டர் குழாம் இயல்பாட சுருதி பாட
நம்பெருமாள் திருவரங்கர் ஆடீர் ஊசல் நான்முகனார் தாதையார் ஆடீர் ஊசல் –18-

வம்பமரும் சிகை முந்நூல் தரித்த ஞானி-விசிஷ்டாத்வைத சன்யாசிகளுக்கு அசாதாராண சிஹ்னங்களான சிகையும் முந்நூலும் -என்றபடி
வம்பமரும் புதுமை பொருந்திய -ஆக்கி யாழ்வானை வென்ற வ்ருத்தாந்தம் ஸூ சிப்பிக்கிறார்
அவரது மூன்று குறைகளையும் போக்கி அருளிய எம்பெருமானார் என்பதால் -அன்பாம் எம்பெருமானார் -என்கிறார்

——————————————————

ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க் கோலம் போல் அழிய முனிந்து அறு சமயம் அகற்றி எங்கள்
செங்கோலே உலகு அனைத்தும் செல்ல முக்கோல் திருக்கையில் கொள் எதிராசன் செயத்தைப் பாட
சங்கு ஓலம் இடும் பொன்னித் துறையின் நின்றே தவழ்ந்து ஏறி மறுகு தொறும் தரளம் ஈனும்
நம் கோயில் நம் பெருமாள் ஆடீர் ஊசல் நக்கன் மூதாதையர் ஆடீர் ஊசல் –19–

ஐங்கோலும் -மன்மதன் உடைய பஞ்ச பானங்களும்
ஒரு கோலும் -அத்வைதி சன்யாசிகள் உடைய ஏக தண்டமும்
நீர்க் கோலம் போல் அழிய முனிந்து அறு சமயம் அகற்றி எங்கள்
செங்கோலே-செவ்விய ஆட்சியே -ஸ்ரீ வைஷ்ணவ மதமே
தரளம் ஈனும் -முத்துக்களை பெறுவதற்கு இடமான
நக்கன் மூதாதையர் -சிவபிரானுக்கு பாட்டனார்

————————————————————–

அவத்தப் புன் சமயச் சொல் பொய்யை மெய் என்று அணி மிடறு புழுத்தான் தன் அவையின் மேவி
சிவத்துக்கு மேல் பதக்கு உண்டு என்று தீட்டும் திருக் கூர வேதியர் கோன் செவ்விட பாட
பவத்துக்கம் பிணி நீங்க நரகம் தூர பரம பதம் குடி மலிய பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனி வாய்க் கரிய மேனி நம்பெருமாள் அரங்கேசர் ஆடீர் ஊசல் –20-

கிரிமி கண்ட சோழன் -சிவாத் பரதரம் நாஸ்தி -த்ரோணம் அஸ்தி தத பரம் –

————————————————————————————
சந்து ஆடும் பொழில் பூதூர் முக்கோற் செல்வன் தன் மருகனாகி இரு தாளுமான
கந்தாடைக் குலதீபன் முதலியாண்டான் கடல் ஞாலம் திருத்தி யருள் கருணை பாட
கொந்தாரும் துளவாட சிறை வண்டாட குழலாட விழி ஆட குழைக்காது ஆட
நந்து ஆட கதை ஆட திகிரி ஆட நல் மாடத் திருவரங்கர் ஆடீர் ஊசல் -21-

————————————————————————————
திருக் கலியன் அணுக்கர் திருப்பணி செய் அன்பர் சீ ரங்க நான் மறையோர் உள்ளூர்ச் செல்வர்
தருக்கும் இசைப் பிரான்மார் பார் அளந்தார் பாதம் தாங்குவோர் திருக் கரகம் தரித்து நிற்போர்
இருக்கு முதல் விண்ணப்பம் செய்வோர் வீரர்க்கு இறையவர்கள் சீ புண்டரீகர் மற்றும்
பெருக்கம் உள்ள பரிசாரங்கள் தொழுது ஆட்செய்ய பிரமமாம் திருவரங்கர் ஆடீர் ஊசல் –22-

திருக் கலியன் அணுக்கர் -குறட்டு மணியக்காரர் முதலியபிரதான கைங்கர்ய பரர்கள்
தருக்கும் இசைப் பிரான்மார் -இசை பாடுவதில் சிறந்தோரான இசைப்பிரான்–
திருப்பணி செய் அன்பர் -இப்போது ஆயனார் கொத்து -நீர் தெளித்தல்
சீ ரங்க நான் மறையோர் -அத்யாபகர்
உள்ளூர்ச் செல்வர் -ஸ்தல த்தா
இருக்கு முதல் விண்ணப்பம் செவோர் -பட்டர்
வீரர்க்கு இறையவர் -வாளும் கையுமாய் எம்பெருமான் திரு மேனிக்கு காவல் புரிபவர்
ஸ்ரீ புண்டரீகர் திருப் பந்தம் பிடிக்கும் தாச நம்பிகள்
ஆகிய பத்து கொத்து பரிஜனங்களும்
மற்றும் பெருக்கம் உள்ள பரிசாரங்கள் -மற்றும் மிகத் தொகுதியான அனைத்து கொத்து பரிஜனங்களும் –
வேத்ர பாணி யுத்யோகம் -சம்ப்ரதி யுத்யோகம் -அமுதுபடி அளந்து கொண்டு வரும் யுத்யோகம் போன்றவை –

———————————————————————-

உடுத்திரளோ வானவர்கள் சொரிந்த பூவோ உதித்து எழுந்த கலை மதியோ உம்பர் மாதர்
எடுத்திடு கர்ப்பூர ஆரத்தி தானோ யாம் தெளியோம் இன்று நீள் திருக்கண் சாத்திப்
படுத்த திருப் பாற் கடலுள் நின்று போந்து பாமாலை பூமாலை பாடிச் சூடிக்
கொடுத்த திருக் கோதையுடன் ஆடீர் ஊசல் கோயில் மணவாளரே ஆடீர் ஊசல் –23–

உடுத்திரளோ -நட்சத்ரங்களின் கூட்டங்களோ –

————————————————————————–

வென்றி வேல் கரு நெடும் கண் அசோதை முன்னம் வேர்வாட விளையாடும் வெண்ணெய் ஆட்டும்
குன்று போல் நால் தடம் தோள் வீசி ஆடும் குரவைதனைப் பிணைந்து ஆடும் கோள் அறு ஆட்டும்
மன்றினூடு உவந்து ஆடும் மரக்கால் ஆட்டும் வலி அரவில் பாய்ந்து ஆடும் வடு இல் ஆட்டும்
அன்று காணா இழந்த அடியோம் காண அணி அரங்க ராசரே ஆடீர் ஊசல் –24–

——————————————————————

ஆரணங்கள் ஒரு நான்கும் அன்பர் நெஞ்சும் அணி சிலம்பும் அடிவிடாது ஊசல் ஆட
வாரணங்கு முலை மடவார் கண்ணும் வண்டும் வண் துளவும் புயம் விடாது ஊசல் ஆட
காரணங்களாய் அண்டர் அண்டம் எல்லாம் கமல நாபியில் படைத்துக் காத்து அழிக்கும்
சீரணங்கு மணவாளர் ஆடீர் ஊசல் சீ ரங்க நாயகனார் ஆடீர் ஊசல் –25–

ஆரணங்கள் ஒரு நான்கும் -நான்கு வேதங்களும் அவன் ச்வரூபத்தையே அடிவிடாமல் சொல்லும் –
மடவார் கண்ணும் -அவன் திருத் தோள்கள் அழகையே பார்த்து இருக்குமே அதனால் அவர்கள் கண்கள் ஊசல் ஆடும் –

———————————————————–
அடித்தலத்தில் பரிபுரமும் சிலம்பும் ஆட அணி மார்பில் கௌத்துவமும் திருவும் ஆட
தொடித் தலத்தில் மணி வடமும் துளவும் ஆட துணைக்கரத்தில் சக்கரமும் சங்கும் ஆட
முடித்தலத்தில் கரும் குழலும் சுரும்பும் ஆடமுகமதியில் குறு வேர்வும் குழையும் ஆட
கடித்தலத்தில் அரை நாணும் கலையும் ஆட காவிரி சூழ் அரங்கேசர் ஆடிய ஊசல் –26-

அடித்தலத்தில் பரிபுரமும் -கிண்கிணிகள்
தொடித் தலத்தில் -திருத் தோள்களில் –

——————————————————-
பரந்து அலைக்கும் பாற் கடலுள் பசும் சூல் கொண்டல் படிந்ததென கிடந்த படி படி மேல் காட்டி
வரம் தழைக்க இரண்டு ஆற்றின் நடுவே தோன்றி மண் உலகை வாழ வைத்த வளத்தைப் பாட
புரந்தரற்கும் பெருமாளே ஆடீர் ஊசல் போதனுக்கும் பெருமாளே ஆடீர் ஊசல்
அரன் தனக்கும் பெருமாளே ஆடீர் ஊசல் அணி அரங்கப் பெருமாளே ஆடீர் ஊசல் –27-

—————————————————————–
உடுமாய கதிர் உதிர சண்ட வாயு உலகு அலைப்ப வடவை சுட உத்தி ஏழும்
கெடுமாறு திரி தருகால் உயிர்கள் எல்லாம் கெடாது வயிற்ருள் இருந்தும் கீர்த்தி பாட
நெடுமாயப் பிறவி எல்லாம் பிறந்து இறந்து நிலத்தோடும் விசும்போடும் நிரயத்தோடும்
தடுமாறித் திரிவேனை அருள் செய்து ஆண்ட தண் அரங்க நாயகனார் ஆடீர் ஊசல் –28-

உடுமாய-நஷத்ரங்கள் அழிந்து ஒழியவும்
கதிர் உதிர-சூர்யா சந்த்ரர்கள் உதிரவும்
சண்ட வாயு -பிரசண்ட மாருதம்
உலகு அலைப்ப
வடவை சுட -வடவாமுகாக்னி எரித்து அழிக்கவும்
உததி ஏழும் -கடல்கள் ஏழும்
கெடுமாறு -இவ்வண்டம் எல்லாம் அழியும் படி –

———————————————————–

முருகன் உறை குறிஞ்சித் தேன் முல்லை பாய முல்லை நிலத் தயிர் பால் நெய் மருதத்து ஓட
மருத நிலக் கொழும் பாகு நெய்தல் தேங்க வரு புனல் காவிரி சூழ்ந்த வளத்தைப் பாட
கரு மணியே மரகதமே முத்தே பொன்னே கண் மணியே ஆர் உயிரே கனியே தேனே
அருள் புரிவாய் என்றவர் தம் அகத்துள் வைகும் அணி அரங்க மாளிகையார் ஆடீர் ஊசல் –29-

காவேரி பாயப் பெற்ற நான்கு நிலங்களையும் அருளிச் செய்கிறார் –

—————————————————————-

புண்டரிகத் தவன் தவம் செய்து இறைஞ்சும் கோயில் புரி சடையோன் புராணம் செய்து ஏத்தும் கோயில்
பண்டு இரவி குலத்து அரசர் பணிந்த கோயில் பரிந்து இலங்கைக் கோன் கொணர்ந்து பதித்த கோயில்
மண்டபமும் கோபுரமும் மதிலும் செம்பொன் மாளிகையும் தண்டலையும் மலிந்த கோயில்
அண்டர் தொழும் திருவரங்கம் பெரிய கோயில் அமர்ந்து உறையும் பெருமானார் ஆடீர் ஊசல் –30-

சிவபிரான் ஸ்ரீ ரங்க மகாத்ம்யத்தை நாரத பகவானுக்கு அருளிச் செய்ததை புராணங்கள் கூறும் –

———————————————————————-

அருவரங்கள் தரு பராங்குசனே ஆதி ஆழ்வார்கள் தம்பிரான் ஆடீர் ஊசல்
இருவர் அங்க ஒளிக்கு அகலா இருள் அகற்றும் எதிராசன் தம்பிரான் ஆடீர் ஊசல்
தருவரங்கர் நீள் பொழில் கூரத்து வேதா சாரியனார் தம்பிரான் ஆடீர் ஊசல்
திருவரங்கத்து அணி அரங்கன் திரு முற்றத்துத் தெய்வங்கள் தம்பிரான் ஆடீர் ஊசல் –31-

—————————————————————–

உணராத முதலை இளங்குதலைச் சொல்லை உளமுருகித் தந்தை தாய் உவக்கு மா போல்
தணவாமல் கற்பிப்பார் தம் சொற் கேட்டுத் தந்தை உரைத்தத்தை ஆதரிக்குமா போல்
பணவாள் அரா முடி மேல் படி ஏழ் போற்றும் பட்டர் திருத் தாட்கு அடிமைப் பட்ட காதல்
மணவாள தாசன் தன் புன் சொல் கொண்ட மதில் அரங்க மணவாளர் ஆடீர் ஊசல் –32–

——————————————————————–

தற்சிறப்புப் பாசுரம்

போதாரு நான் முகனே முதலா யுள்ள புத்தேளிர் தொழு நாதன் புவனிக்கு எல்லாம்
ஆதாரமாம் தெய்வ மான நாதன் அனைத்து உயிர்க்கு நாதன் அணி யரங்க நாதன்
சீதார விந்த மலர்த் திரு வினாதான் திரு ஊசல் திரு நாமம் ஒரு நால் எட்டும்
வேதா சாரிய பட்டர்க்கு அடிமையான வெண் மணிப் பிள்ளைப் பெருமாள் விளம்பினானே —

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: