ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருப் பேரனாரான கோனேரி அப்பன் ஐயங்கார் அருளிய- ஸ்ரீ ரங்க நாயகி ஊஞ்சல் –

தனியன் –

அண்டப் பந்தரில் பற்று கால்களாக அறிவு விட்டம் கரணம் சங்கிலிகள் ஆக
கொண்ட பிறப்பே பலகை வினை அசைப்போர் கொடு நரகம் ஸ்வர்க்கம் பூ வெளிகள் தம்மில்
தண்டல் இல் ஏற்றம் இறக்கம் தங்கல் ஆக தடுமாறி இடர் உழக்கம் ஊசல் மாற
தொண்டர்க்கு ஆம் மணவாளர் பேரர் கூடித் தொகுத்திட்டார் திருவரங்கத்து ஊசல் தானே —

———————————————————–

காப்பு –

முருகூரும் மகிழ் மாலை அணியும் மார்பன் முத்தமிழன் கவித்தலைவன் முனிவர் வேந்தன்
திருகூரு மனத்திருள் நீக்குதய பானு சி பராங்குச யோகி திரு நா வீறன்
அருகூருந் தண் பொருணை வழுதி நாடன் அக்கமலம் பாடினான் அன்ன மேறி
குருகூரன் சடகோபன் காரி மாறன் கோகனக மலரடியின் குணங்கள் போற்றி –

———————————————–

நீராழி நிறத்த ரங்கர் அடிகள் வாழ நெடு மகுடப் பணிவாழக் கருடன் வாழப்
பேராழி செலுத்திய சேனையர் கோன் வாழப் பேய் பூதன் பொய்கை முதல் பதின்மர் வாழ
ஓர் ஆழிக் கதிர் வாழத் திங்கள் வாழவும் அடியார் மிக வாழ உலகம் வாழச்
சீராழி சங்கு கதை சிலை வாள் வாழச் சீரங்க நாயகியார் ஆடீர் ஊசல் –1-

—————————————-

துங்க மலர்ப் பந்தரின் கீழ்ப் பதும ராகத் தூண் நிறுத்தி வயிர விட்டம் தொகுத்து மீதில்
தங்க நெடும் சங்கிலி விட்டு அதில் மாணிக்கத் தவிசு புனைந்து அலங்கரித்த ஊசல் மீதில்
மங்கல நாண்திருவாவார் ஆடீர் ஊசல் மதில் அரங்கர் தமக்கு இனியார் ஆடீர் ஊசல்
செங்கமல மாளிகையார் ஆடீரூசல் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –2-

———————————————

கடிமலரும் மதுகரமும் குழலில் ஆடக் கத்தூரி யுடன் வேர்வும் முகத்தில் ஆட
நெடு விழியும் மணித்தோடும் செவியில் ஆட நேர் வளையும் சூடகமும் கரத்தில் ஆட
வடமணியும் கண்டிகையும் தனத்தில் ஆட மாகலையும் மேகலையும் மருங்கில் ஆட
திடமறையும் பரிபுரமும் பதத்தில் ஆடச் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –3-

———————————-

கலை மடந்தை வணங்கி ஒரு வடம் தொட்டு ஆட்டக் கற்புடைய வள்ளி ஒரு வடம் தொட்டு ஆட்ட
மலை மடந்தை பரிவில் ஒரு வடம் தொட்டு ஆட்ட வானவர் கோன் மடந்தை ஒரு வடம் தொட்டு ஆட்ட
அலர் மடந்தை நில மடந்தை உலகம் வாழ அருள் மடந்தை பொருள் மடந்தை அழகார் நெற்றிச்
சிலை மடந்தை திருமடந்தை ஆடீரூசல் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –4-

————————————————————————-

காரனைய திருவரங்க மணவாளர்க்குக் கண் களிப்ப மனமுருக அறிவு சோர
மூரல் எழப் புளகமுரப் புயல் பூரிப்ப முகம் மலர மெய் குழைய மோகமேற
ஆராமுதே பசும் கிளியே முத்தே பொன்னே அன்னமே என்னம்மே அழகின் பேறே
சீரிய சிற்றிடை அணங்கே ஆடீரூசல் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –5–

——————————————————————————

வீறு பொய்கை பூதத்தார் இருபால் ஞான விளக்கேந்த மயிலையர் கோன் வியந்து காண
மாறன் மறைத் தமிழ் மதுரகவி நின்றேத்த வாழ் குல சேகரன் பாணன் கலியன் போற்ற
ஆறு சமயத் திருத்தோன் அருகில் வாழ்த்த அணி புதுவை வேதியன் பல்லாண்டு பாடத்
தேறு தொண்டர் அடிப்பொடி தார் அடியில் சூட்டச் சீரங்க நாயகியார் ஆடீரூசல் -6-

———————————————————————————–

நாதமுனி தவமாக மாறன் பாட நயந்து எழுத வேதன் எழுத்து அழிந்தவாறும்
போதன் எதிராசன் வளை யாளி மண்ணோர் புயத்து எழுதக் கூற்றின் எழுத்து அழிந்தவாறும்
ஏதமில் கூரத் தாழ்வான் பதக்கு உண்டு என்றே எழுதிட வாதியர்கள் எழுத்து அழிந்தவாறும்
தீதில் குணத் தடியார்கள் திரண்டு வாழ்த்தச் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –7–

———————————————————————————

தருக்குடனே உமது திரு வுளத்துக் கேற்கத் தங்கள் தங்கள் பணிவிடைகள் தலை மேற்கொண்டு
வருக்கமுடன் பத்து வகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ்
அருக்கன் என முடி விளங்க அழகு வீர அண்டர்கள் பூ மலை பொழிய அடியார் போற்றச்
செருக்கி விளையாடி உகந்து ஆடீரூசல் சீரங்க நாயகியார் ஆடீரூசல் -8-

————————————————————————————–

மின் தாவு கொடி மதில் சூழ் கூர வேந்தன் வேதா சாரியன் அன்னை ஆடீரூசல்
பின்றாத பர சமயக் குறும்பு அறுக்கும் பெரிய நம்பி உளத்து உறைவார் ஆடீரூசல்
கந்தாடைக் குலத்தில் வரும் அழகான் வாழக் கருணை விழிக் கடை யருள்வார் ஆடீரூசல்
செந்தாரும் பசுந்தாரும் புடையுலாவச் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –9–

——————————————————————

ஆரணம் சேர் வில்லிபுத்தூர் உறையூர் வாழ அவதரித்த நாயகியார் ஆடீரூசல்
பேரணி பூண் அழகுடையார் தாமே என்னும் பெண்டுகள் தம் நாயகியார் ஆடீரூசல்
நாரணர் பூரணர் பெரிய பெருமாள் எங்கள் நம் பெருமாள் நாயகியார் ஆடீரூசல்
தேரணியும் நெடு வீதி புடை சூழ் கோயில் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –10-

———————————————————-

கோல மந்தா நிலவுலவ அதனால் ஆடும் கிஒகனத்து இருந்தாடும் அன்னம் போல
மாலரங்கர் திருமேனி வண்மை யாலும் மழை முகில் கண்டு உகந்தாடும் மயிலும் போலே
வேலை கடைந்திட அதனில் எழுந்த போது வெண்டிரை மேல் அசைந்தாடும் வீறு போலச்
சீலமுடன் மாணிக்கத் தவிசில் ஏறிச் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –11-

————————————————

குடமாடிச் சீராடி வெண்ணெய்க்காடிக் குரவை தனிப் பிணைந்தாடிக் கோளாராவின்
படமாடி விளையாடும் அந்நாள் அந்தப் பரமன் உரத் திருந்தாடும் படியே போலே
வடமாடக் குழையாட இடை தள்ளாட வளையாட விளையாடி மாலை யாடத்
திட மாடக் கொடி யாடத் திகழும் கோயில் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –12–

—————————————————————

கொந்தாரும் குழலசைய ஆடீரூசல் குல மகரக் குழை யசைய ஆடீரூசல்
நந்தாரும் கரமசைய ஆடீரூசல் நல்கிய நூல் இடையசைய ஆடீரூசல்
சந்தாருந் தன மசைய ஆடீரூசல் தரள மணி வடமசைய ஆடீரூசல்
செந்தாளில் சிலம்பசைய ஆடீரூசல் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –13–

——————————————————–

கரிய குழலசையும் என வண்டார்ப்பக் கழை யணி தோள் அதிரும் எனத் தொடிகள் ஆர்ப்ப
மரு மலர்க்கை அலங்கும் என வளைகள் ஆர்ப்ப வடிவம் எலாம் வருந்தும் என மறைகள் ஆர்ப்ப
இரு முலைகள் குலுங்கும் என வடங்கள் ஆர்ப்ப இடை ஒசிந்தே இறும் என மேகலைகள் ஆர்ப்பத்
திருவடிகள் சிவக்கும் எனச் சிலம்பும் ஆர்ப்பச் சீரங்க நாயகியார் ஆடீரூசல் -14

————————————————————————

மேவிய பங்கயன் தவம் செய்து இறைஞ்சும் கோயில் வேணி யரன் புராண நூல் விளம்பும் கோயில்
தாவு திரைக் காவேரி புடை சூழ் கோயில் சந்திர வாவியின் மருங்கு தழைத்த கோயில்
பாவளர் சத்தாவரணம் உடைய கோயில் பணி அணி சேர் ஓங்காரமான கோயில்
தேவம் தொழும் திருவரங்கம் பெரிய கோயில் சீரங்க நாயகியார் ஆடீரூசல் –15–

—————————————————-

தற் சிறப்பு பாசுரம் –

தார் அரங்கத் திருவரங்கர்க்கு ஊசல் பாடிச் சாத்தினான் பேரன் எனும் தன்மையாலும்
ஆரும் கண்டே தெளியும் அவன் சொல் பாட்டின் அதிசயத்தை அறிவன் என்னும் ஆசையாலும்
பார் எங்கும் புகழ் வேத வியாச பட்டர் பதம் பணி கோனேரியப்பன் புன் சொல்லாகச்
சீரங்க நாயகியார்க்கு ஒரு பத்தைந்து திரு ஊசல் திரு நாமம் செப்பினானே –

————————————————————————-

மங்கை பாகன் சடையில் வைத்த கங்கையார் பதத்து நீர் வசை மேவு முனிவனுக்கு மைந்தனான தில்லையோ
செங்கையால் இரந்தவன் கபாலம் ஆர் அகற்றினார் செய்ய தாளின் மலரரன் சிரத்திலான தில்லையோ
வெங்கண் வேழ மூலம் என்ன வந்தது உங்கள் தேவனோ வீறு வாணன் அமரில் அன்று விறல் அழிந்ததில்லையோ
அங்கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ ஆதாலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே –

துளவ துளவ எனச் சொல்லும் சொல் போச்சே அளவில் நெடு மூச்சும் ஆச்சே முளரிக்
கரம் கால் குளிர்ந்தனவே கண்ணும் பஞ்சாச்சே இரங்காய் அரங்கா இனி –

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் -திருவரங்கத் தமுதனார் உடைய திருப்பேரனார்-
ஸ்ரீ பராசர பட்டர் -1122-1174-இவருடைய அந்தரங்க சிஷ்யர் ஆவார் இவர் –

இவரை புகழ்ந்து புலவர் புராணச் செய்யுள்கள் இவருடைய பெருமையை எடுத்து ஓதும் –

தென்கலை வயிணவன் செகம் எலாம் புகழ இன்கவிப் பிரபலன் இணையில் பட்டர் தம்
நன் கணத் தினர்களில் ஒருவன் நாரணன் பொன் கழல் அன்றி மற்று ஒன்றும் போற்றிலான் —

மருவழகிய மணவாள தாசன் என்று ஒரு பெயர் புனைந்தவன் உரைக்கும் ஓர் சொலால்
பொருள் பல தரும் கவி பொறிக்கும் பொற்பினில் பெருமிதம் எனப் பலர் பேசும் பெற்றியான்

செவ்விய சொற்சுவை சிறிதும் தேர்ந்திடாது அவ்வியப் போர் போரும் அவர்கள் அன்றி மற்று
எவ்வியல் புலவரும் இசைந்து நாள் தொறும் திவ்விய கவி எனச் செப்பும் கீர்த்தியான்

தேனையும் அமுதையும் அனைய தீஞ்சொல் ஓர்ந்து ஆனையின் கன்று என அமைக்கும் பாடலா
ஏனைய பாடல் ஒன்றேனும் ஒதிலான் பூனை போல் வஞ்சனைப் புந்தி கொண்டிலான்

சிவனை நிந்தனை செய்தவனே என இவனைச் சிற்சில இளம் சைவர் ஏசுவார்
அவன் தன் மாயவன் ஆகத்தில் பாதி என்று உவந்து பாடிய பக்க்களும் உள்ளவே

என்று என்றும் உனதிட்ட தெய்வத்தையே நன்று என்று எத்திடல் ஞானிகள் சம்மதம்
அன்று என்று ஓத ஒண்ணாத தனால் அவன் குன்று என்று அச்சுதனை குறிக் கொண்டதே

சைவரில் சிலர் தாமரைக் கண்ணனை வைவ தொப்ப வைணவ வள்ளலை நிந்தனை செய்வதுண்டு மதம் கொண்ட சிந்தையால்

திரிவு சொல் திறம் தேடித் தினம் தினம் அரியின் மேல் கவி பாடிடும் அந்தணன்
கரி வலம் செய் கருவை மன் றன்னிலும் பெரிது நிந்தனை பேசிலன் உண்மையே

வளங்கு லாந்துறை மங்கல வாகன் போல் உளங்கனன்றி அரி யன்பர் ஒருவரும்
களம் கறுத்தவ ராயிரர்க் காதுதல் விளங்கொர் பாடல் விளம்பிலர் மெய்ம்மையே

—————————————————————————-

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோனேரி அப்பன் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: