ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி -1-சோழ நாட்டுத் திருப்பதிகள் —1-40–

தனியன் -சிறப்புப் பாசுரம் –

ஏற்ற மணவாளர் இசைத்தார் அந்தாதி வெண்பா
தோற்றக் கேடில்லாத தொன் மாலைப் போற்றத்
திருப்பதியா நூற்று எட்டினையும் சேவிப்போர்
கருப்பதியா வண்ணம் உண்டாக –

மணவாளர் -ஆக்கியோன் திருநாமம்
அந்தாதி வெண்பா -நூல் பெயரும் யாப்பும்
கருப்பதியா வண்ணம் தொல் மாலைப் போற்ற -நுதலிய பொருளும் பயனும் -அருளிச் செய்யப் படுகிறது
கருப்பதியா வண்ணம் -கரு பதியா வண்ணம் -மீண்டும் தாயின் கர்ப்பத்தில் பொருந்தாத வண்ணம் –

————————————————————–

காப்பு –

ஆழ்வார்கள் பன்னிருவர்

பொய்கை பூதன் பேயார் பொன் மழிசைக் கோன் மாறன்
செய்ய மதுரகவி சேரர் பிரான் வையகம் எண்
பட்டர் பிரான் கோதை தொண்டர் பாதப் பொடி பாணன்
கட்டவிழ் தார் வாட் கலியன் காப்பு –

வையகம் எண் -உலகோரால் நன்கு மதிக்கப்படும் –
கட்டவிழ் தார் வாட் கலியன் காப்பு -அரும்புகளின் முறுக்கு விரிந்த மாலையைத் தரித்த வாட்படையை ஏந்திய திரு மங்கை யாழ்வார்
தார் முள்ளி மலர் மாலை என்றுமாம் -முள்ளிச் செழு மலரோ தாரான் =

—————————————————————

நம்மாழ்வார் –

பிறவாத பேறு பெறுதற்கு எஞ்ஞான்றும்
மறவா திறைஞ்சு என் மனனே துறவாளன்
வண் குருகூர் வாவி வழுதி வளநாடுடைய
தண் குருகூர் நம்பி திருத் தாள் –

——————————————————————–

உடையவர் –

முன்னே பிறந்து இறந்து மூதுலகிற் பட்ட எல்லாம்
என்னே மறந்தனையோ என் நெஞ்சே சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி —

————————————————————————-

கூரத் தாழ்வான் –

முக்கால மில்லா முகில் வண்ணன் வைகுந்தத்தது ‘
எக்காலம் செல்வான் இருக்கின்றேன் தக்கார் எண்
கூரத் தாழ்வான் அடியைக் கூடுதற்கு நாயடியேன்
போரத் தாழ்வான சடம் போட்டு —

முக்கால மில்லா முகில் வண்ணன் வைகுந்தத்தது ‘-முக்காலம் இல்லா -முகில் வண்ணனுக்கும் ஸ்ரீ வைகுண்டத்துக்கும் விசேஷணம்
தக்கார் எண் -பெரியார்களால் நன்கு மதிக்கப் பெற்ற –
போட்டு —பேரும் சுமை என்பதால் -சடம் போட்டு -உடம்பை விட்டு

—————————————————————————

பட்டர் –

நான் கூட்டில் வந்தவன்றே நானறியா நன்மை எல்லாம்
தான் கூட்டி வைத்த நலந்தான் கண்டீர் -ஆம் கூட்டச்
சிட்டருக்கு வாய்ந்த திருவரங்கன் இன்னருளால்
பட்டருக் காட்பட்ட பயன் –

ஆம் கூட்டச் சிட்டருக்கு வாய்த்த திரு வரங்கன்-இன்னருளால்
திரள் திரளாக யுள்ள பெரியோர்கட்கு -கருணை செய்யுமாறு வாத்சல்யத்துடன் -பொருந்திய இருக்கும்
திருவரங்கன் யுடைய இனிமையான நிர்ஹேதுக கிருபையினால்
சித்தர் சிஷ்டர் நல்ல ஒழுக்கம் உடையவர் -என்றபடி

———————————————————————

திருப்பதிகளின் வகை –

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்–

நடு நாடு -தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திவ்ய தேசங்கள்
தொண்டை -தொண்டர்கள் நிறைந்த தேசம் -தொண்டை நில மகட்கு முக்கிய அங்கம்

—————————————————————–

1–திருவரங்கம் பெரிய கோயில் –

சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என்
சோர்வந்த சொல்லில் சுருங்குமோ ஆர்வம்
ஒருவர் அங்கு அங்கு ஒயில் உகந்து அவரை ஆள்வான்
திரு அரங்கம் கோயில் சிறப்பு -1-

ஆர்வம் ஒருவர் அங்கு அங்கு ஒயில் -ஒருவர் அந்த அந்த விஷயங்களில் பலவகையான உலகப் பற்றுக்களில் ஆசை ஒழிந்தால் –
உகந்து அவரை ஆள்வான் -அவ்வாறு பற்று அற்ற அன்பரை விரும்பி அடிமை கொள்ளும் எம்பிரான் உடைய
திரு அரங்கம் கோயில் சிறப்பு -பெருமையை
சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என் சோர்வந்த சொல்லில் -குற்றம் பொருந்திய சொற்களில் -சுருங்குமோ
நான்முகன்-முதலில் வழிபட்ட திருவரங்கம் என்பதாலும் எம்பெருமான புதல்வன் என்பதாலும் -சீர் வந்த உந்தித் திசை மகன் என்கிறார் –

——————————————————————

2– திரு உறையூர்

சிறப்புடைய செல்வத் திருப்பதிகள் போலே
மறப்புடைய நாயேன் மனத்துள் உறப் போந்து
அறம்தையா நின்ற அரங்கா திரு வாழ்
உறந்தையாய் இங்கு உறைந்தது ஒது —

மறப்புடைய நாயேன்-ஸ்வ ஸ்வாமி ஸ்வரூபம் அறிந்தும் மறந்த நாயேன் என்றபடி -மறந்தேன் உன்னை முன்னம்
சம்பந்தம் ஸ்வா பாபிகம் ஆகையாலே முன்பு நெடு நாள் மறந்து போகச் செய்தேயும் சில நாள் ஸ்மரித்து மறந்தால் போலே இருக்கத் தோற்றிற்று
மனத்துள் உறப் போந்து -மனத்திலே நன்றாக எழுந்து அருளி இருந்து
அறம் தையா நின்ற -தர்மத்தை பதியுமாறு செய்து அருளிய
அரங்கா
திரு வாழ் உறந்தையாய் -திரு நித்ய வாசம் செய்து அருளும் திரு உறையூரில் எழுந்து அருளி இருப்பவனே
திருவரங்கனே இங்கே அழகிய மணவாளனாய் ஸ்ரீ கமல வல்லித் தாயார் உடன் எழுந்து அருளி இருப்பதால் -அரங்கா திரு வாழ் உறந்தையாய்-என்கிறார்
திருப் பாண் ஆழ்வார் திரு வவதரித்த ஸ்ரீ யுடைத்தாதாகையாலே திரு என்கிறார் என்றுமாம்
சிறப்புடைய செல்வத் திருப்பதிகள் போலே -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடைய திருப்பதிகள் போலே
இங்கு -எனது மனத்துள் -உறைந்தது ஒது —

———————————————————————–

3-திருத் தஞ்சை –

ஓதக்கேள் நெஞ்சே உனக்கும் இது நன்று எனக்கும்
மேதக்க நன்மை இதின் வேறு இல்லை போதப்
பெருந்தஞ்சை மா மணியைப் பேணி வடிவம்
பொருந்து அஞ்சை மா மணியைப் போற்று —

ஓதக்கேள் நெஞ்சே உனக்கும் இது நன்று –எனக்கும் மேதக்க நன்மை இதின் வேறு இல்லை
போதப் பெருந்தஞ்சை மா மணியைப் பேணி -நன்றாக விரும்பி ஸ்துதித்து
வடிவம் பொருந்து -அவன் திருமேனியில் பொருந்திய
அஞ்சை -பஞ்சாயுதங்களையும்
மா -பெரிய பிராட்டியாரையும்
மணியைப் -கௌஸ்துபம் ரத்னத்தையும்
போற்று –வாழ்த்துவாயாக
தஞ்சை மா மணி -பெருமாள் திருநாமம் –தஞ்சை மா மணிக் கோயில் –
அஞ்சை -ஐந்து வகை -பரத்வாதிகள் என்றுமாம் –

—————————————————————————-

4-திருவன்பில் –

போற்றி செய வோர் குடைக் கீழ்ப் பொன்னாடும் இந்நாடும்
நால் திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை தோற்றம் இலா
எந்தை அன்பில் ஆதி இணைத் தாமரை அடிக்கே
சிந்தை அன்பிலாதார் சிலர் –4-

தோற்றம் இலா எந்தை –அன்பில் ஆதி -முதலாவார் மூவர் யம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் –
இணைத் தாமரை அடிக்கே -சிந்தை அன்பிலாதார் சிலர் —
போற்றி செய -யாவருக்கும் தமக்கு வாழ்த்து கூற
வோர் குடைக் கீழ்ப் பொன்னாடும் இந்நாடும் நால் திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை -யாதொரு நன்மையையும் கிட்டாது

—————————————————————————-

5-திருக் கரம்பனூர்

சிலமா தவம் செய்தும் தீ வேள்வி வேட்டும்
பலமா நதியில் படிந்தும் உலகில்
பரம்ப நூல் கற்றும் பயன் இல்லை நெஞ்சே
கரம்பனூர் உத்தமன் பேர் கல் -5-

நெஞ்சே-
சிலமா தவம் செய்தும் -சில பெரிய தவங்களை செய்தும்
தீ வேள்வி வேட்டும் -ஹோம அக்னி யுடைய யாகத்தை செய்தும்
பலமா நதியில் படிந்தும்
உலகில் பரம்ப நூல் கற்றும்
பயன் இல்லை
கரம்பனூர் உத்தமன் பேர் கல் -புருஷோத்தமன் திருநாம சங்கீர்த்தனம் செய்வாய்
புருஷோத்தமன் ஏக தேசம் உத்தமர் கோயில் -என்ற திருநாமம் –
கதம்ப மகரிஷிக்கு பிரத்யஷம் என்பதால் கரம்பனூர்

————————————————————————-

6-திரு வெள்ளறை-

கல் இருந்தான் தந்தை கமலத்தோன் அக்கமலத்
தில் இருந்தான் தந்தை அரங்கேசன் என்றே தொல்லை மறை
உள் அறையா நின்றமையால் உள்ளமே கள்ளம் இன்றி
வெள்ளறையான் தானே விரும்பு –6-

உள்ளமே
கல் இருந்தான் தந்தை கமலத்தோன் -கைலாச மலையில் இருக்கும் சிவபிரான் உடைய தந்தை பிரமதேவன்
அக்கமலத் தில் இருந்தான் தந்தை
அரங்கேசன்
என்றே தொல்லை மறை உள் அறையா நின்றமையால் கள்ளம் இன்றி வெள்ளறையான் தானே விரும்பு —
ஸ்வேதாத்ரி –

—————————————————————–

7-திருப் புள்ளம் பூதங்குடி –

விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும்
அரும்பரம வீடு அடைவீர் பெரும் பொறிகள்
கள்ளம் பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள்
புள்ளம் பூதங்குடியில் போம் –7-

பெரும் பொறிகள்-இந்த்ரியங்கள் -பெரும் பொறி என்றவாறு –
கள்ளம் பூதம் குடி கொள் காயமுடையீர் -கள்ளம் -வஞ்சனை குணம் பூதம் -பஞ்ச பூதங்கள் -பொருந்த பெற்ற சரீரத்தை
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை –
அடிகள் புள்ளம் பூதங்குடியில் போம் -எம்பெருமான் விரும்பி எழுந்து அருளி இருக்கும் இந்த திவ்ய தேசம் சேருமின் -சேர்ந்தால்
விரும்பினவை எய்தும்
வினை அனைத்தும் தீரும்
அரும்பரம வீடு அடைவீர்
ஜடாயு மகா ராஜருக்கு பிரத்யஷமான திவ்ய தேசம் –

————————————————————————

8-திருப் பேர் நகர் –

போம்மானை எய்து பொரும் ஆனைக் கொம்பு பறித்து
ஆம் ஆனை மேய்த்து உவந்த அம்மானை தாமச்
செழும் திருப் பேரானை சிறு காலே சிந்தித்து
எழுந்து இருப்பேற்கு உண்டோ இடர் -8-

போம்மானை எய்து -மாயமானை அம்பு கொடு எய்தும்
பொரும் ஆனைக் கொம்பு பறித்து -குவலயாபீடம் யானையின் தந்தங்களை பிடுங்கியும்
ஆம் ஆனை மேய்த்து -மந்தையாகத் திரண்ட பசுக்களை மேய்த்தும்
உவந்த அம்மானை
தாமச் செழும் திருப் பேரானை -செழும் திருப் பேரான் தாமத்தானை – –
சிறு காலே சிந்தித்து எழுந்து இருப்பேற்கு உண்டோ இடர் –

போமானை பெருமானை ஆமானை அம்மானை -சொல் நயம் –

———————————————————————–

9-திருவாதனூர்-

இடர் ஆன ஆக்கை இருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது என்னார் அமலன்
ஆதனூர் எந்தை அடியார் –9-

அமலன்
ஆதனூர் எந்தை
அடியார் —பக்தர்கள் -இடர் ஆன ஆக்கை இருக்க முயலார் –
மடவார் மயக்கின் மயங்கார்
கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார்-ஸ்வர்க்க லோகமும் விரும்பார்
நான் எனது என்னார் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் அருளுகிறார் –
காமதேனுக்கு பிரத்யஷம் -என்பதால் திரு ஆதனூர் -திரு நாமம் –

————————————————————————

10-திரு அழுந்தூர் –

அடியாராய் வாழ்மின் அறிவு இலாப் பேய்காள்
செடி ஆர் வினை அனைத்தும் தீரும் முடிவில்
செழுந்தூரத் தன் எனினும் செங்கண் மால் எங்கள்
அழுந்தூர் அத்தன் அணியன் ஆம் –10-

அடியாராய் வாழ்மின் அறிவு இலாப் பேய்காள்
அவ்வாறு செய்தால்
செடி ஆர் வினை அனைத்தும் தீரும் –
செங்கண் மால் எங்கள் அழுந்தூர் அத்தன்
செழுந்தூரத் தன் எனினும்
முடிவில் -அந்திம காலத்தில் அணியன் ஆம்-
கருடாரூடனாய் சேவை சாதித்து தானே வழித் துணையாகி நல் கதியில் கூட்டி செய்து அருளுவான்
தேர் அழுந்தூர் -உபரிசரவஸ் தேர் -ரிஷிகள் சாபத்தால் அழுந்தப் பெற்ற திவ்ய தேசம் –

—————————————————————————

11- திருச் சிறு புலியூர் –

ஆ மருவி மேய்த்த அரங்கர் எதிர் ஆர் நிற்பார்
தாம் மருவி வாணனைத் தோள் சாய்த்த நாள் சேமம்
உறு புலி ஊர் வன் தோல் உடையான் உடைந்தான்
சிறு புலியூர் எந்தை மேல் சென்று –11-

அரங்கர் தாம் மருவி வாணனைத் தோள் சாய்த்த நாள் சேமம் உறு-அந்த பாணாசுரனுக்கு காவலாக அமைந்தவனான
புலி ஊர் வன் தோல் உடையான் -புலித் தோலை ஆடையாக யுடைய சிவபிரான்
சிறு புலியூர் எந்தை மேல் சென்று-
உடைந்தான் -தோற்று ஓடினான்
ஆதலால் –
ஆ மருவி மேய்த்த எதிர் ஆர் நிற்பார்
அவர் இவர் என்று இல்லை யணங்க வேள் தாதைக்கு எவரும் எதிர் இல்லை கண்டீர்
உவரிக் கடல் நஞ்சமுண்டான் கடன் என்ற வாணற்கு உடன் நின்று தோற்றான் ஒருங்கு
உடையான் உடைந்தான் -சொல் நயம் -முரண் தொடை அணி –

————————————————————

12-திருச்சேறை –

சென்று சென்று செல்வம் செருக்குவார் வாயில் தொறும்
நின்று நின்று தூங்கும் மட நெஞ்சமே இன் தமிழைக்
கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே பேறு ஆகச்
சேறைக்கு நாயகன் பேர் செப்பு –12-

சென்று சென்று செல்வம் செருக்குவார் வாயில் தொறும்
நின்று நின்று
தூங்கும் -சோர்வை அடைகின்ற
மட நெஞ்சமே -அறியாமை யுடைய நெஞ்சமே
நீ
இன் தமிழைக்
கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே
பேறு ஆகச் சேறைக்கு நாயகன் பேர் செப்பு —
எம்பெருமான் நாய்ச்சியார் விமானம் தீர்த்தம் நிலம் -பஞ்ச சார ஷேத்ரம் -திருச் சேறை-
காவேரி தவம் இருந்து கங்கையை விட சிறப்பு பெற்றாள்

——————————————————————

13-திருத் தலைச் சங்க நாண் மதியம் –

செப்புங்கால் ஆதவனும் திங்களும் வானும் தரையும்
அப்பும் காலும் கனலும் ஆய் நின்றான் கைப்பால்
அலைச் சங்கம் ஏந்தும் அணி அரங்கத்து அம்மான்
தலைச் சங்க நாண் மதியத்தான் –13–

கைப்பால் -கையின் இடத்தில்
அலைச் சங்கம் -அலைகளை யுடைய கடலின் இடத்தில் தோன்றிய பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கத்தை
ஏந்தும் அணி அரங்கத்து அம்மான்
தலைச் சங்க நாண் மதியத்தான் —
செப்புங்கால்
ஆதவனும் திங்களும் வானும் தரையும் அப்பும் காலும் கனலும் ஆய் நின்றான்-எங்கும் பரவி நிற்பான் ஆவான்

———————————————————————-

14- திருக் குடந்தை –

தானே படைத்து உலகத் தானே அளித்து நீ
தானே அழிக்கும் தளர்ச்சியோ வானில்
திரு மகுடம் தைக்கச் சிறு குறளாய் நீண்ட
பெரும குடந்தைக் கிடந்தாய் பேசு –14-

திரு மகுடம் தைக்கச் -அழகிய கிரீடம் முட்டும் படி –

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -திருமழிசைப் பிரான் –

———————————————————————–

15-திருக் கண்டியூர்

பேசவரின் தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக வாய்
கேசவனைக் காண்க விழி கேட்க செவி ஈசனார்
உண்டி ஊர் தோறும் உழன்று இரவாமல் தவிர்த்தான்
கண்டியூர் கூப்புக என்கை –15-

வாய் -எனது வாயானது -பேசவரின்-பேசத் தொடங்கினால் – தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக
கேசவனைக் காண்க விழி- கேட்க செவி-
ஈசனார் -சிவ பெருமானை ஊர் தோறும் உழன்று-உண்டி- இரவாமல்-யாசிக்க ஒட்டாமல் -தவிர்த்தான் -அவன் சாபத்தை நீக்கி அருளிய
கண்டியூர் கூப்புக என்கை –திருக் கண்டியூர் திவ்ய தேசத்தை நோக்கி என் கை குவித்து அஞ்சலி செய்யட்டும் –
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்து வணங்கு மின்கள் தண் மலரால்
சூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை –கை கூப்பி மதித்து -திருமழிசைப்பிரான்
அரன் சாபம் தீர்த்த பெருமாள் -பிண்டியார் மண்டை ஏந்தி -பிறர் மனை திரி தந்து உண்ணும் உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும் கண்டியூர்
சிவபிரான் சாபம் கண்டனம் செய்ததால் திருக் கண்டியூர் -திரு நாமம் –

————————————————————————–

16-திரு விண்ணகர் -ஒப்பிலியப்பன் சந்நிதி –

கையும் உரையும் கருத்தும் -உனக்கே அடிமை
செய்யும் படி நீ திருத்தினாய் ஐயா
திரு விண்ணகராளா சிந்தையிலும் எண்ணேன்
பெரு விண்ணகர் ஆளும் பேறு –16-

கையும் உரையும் கருத்தும் -கைகளும் வாக்கும் எண்ணமும் -முக்கரணங்களையும்-
பெரு விண்ணகர் ஆளும் பேறு –பெருமை பெற்ற தேவ லோகத்தை ஆளும் பேற்றை
சிந்தையிலும் எண்ணேன்–ஒரு பொருட்டாக மனசாலும் நினைக்க மாட்டேன் –

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் –

————————————————————————————–

17-திருக் கண்ணபுரம் –

பேறு தரினும் பிறப்பு இறப்பு நோய் மூப்பு
வேறு தரினும் விடேன் கண்டாய் ஏறு நீர்
வண்ண புரத்தாய் என் மனம் புகுந்தாய் வைகுந்தா
கண்ண புரத்தாய் உன் கழல் –17-

ஏறு நீர் வண்ண புரத்தாய் -அலைகள் கரை மேல் புரளப் பெற்ற நீரை யுடைய கடல் போன்ற
கரு நிறத்தைக் கொண்ட திரு மேனியை யுடைய வனே
என் மனம் புகுந்தாய்
வைகுந்தா
கண்ண புரத்தாய்
நீ அடியேனுக்கு
பேறு தரினும்
அல்லது என்னை பரிசோதிக்க -பிறப்பு இறப்பு நோய் மூப்பு வேறு தரினும்
உன் கழல் –விடேன் கண்டாய் –

எல்லா தசையிலும் விட மாட்டாத திண் கழல் அன்றோ –
உபாய அத்யவசாயம்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த துன்பம் தரு நிரயம் பல சூழில் என் –இராமானுசன் என்னை ஆண்டனனே –
பஞ்ச ஸ்ரீ கிருஷ்ண ஷேத்ரங்கள் -திருக் கண்ணபுரம் -திருக் கண்ண மங்கை -திருக் கண்ணங்குடி –திருக் கபிஸ்தலம் -திருக் கோவலூர் –
உத்பலாவதாகம் -விமானம் -பலம் மாமிசம் -அது சோஷிக்கப் பெற்றவர் -உத்பலர்-தேகத்தை உபேஷிக்கும் முமுஷுக்கள்
அவர்களை ரஷிக்கும் எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் திவ்ய தேசம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
திருக் கண்வபுரம் -இன்னும் ஒரு திரு நாமம்

——————————————————————————–

18-திருவாலி –

கழன்று போம் வாயுவினைக் கட்டாமல் தீர்த்தம்
உழன்று போய் ஆடாமல் உய்ந்தேன் அழன்று
பொரு வாலி காலன் பரகாலன் போற்றும்
திருவாலி மாயனையே சேர்ந்து –18-

கழன்று போம் வாயுவினைக் கட்டாமல் தீர்த்தம்
உழன்று போய் ஆடாமல் உய்ந்தேன் –

அழன்று பொரு வாலி காலன் -கோபித்து போர் செய்த வாலிக்கு காலனாய் இருந்தவனும்-
பரகாலன் போற்றும் திருவாலி மாயனையே சேர்ந்து
உபாயமாகப் பற்றிதனால்
கழன்று போம் வாயுவினைக் கட்டாமல்-பிராணாயாமத்தால் மூச்சுக் காற்றை அடைக்காமலும்
தீர்த்தம் உழன்று போய் ஆடாமல் -வருந்தி பல இடங்களிலும் சென்று புண்ய தீர்த்தங்களில் நீராடாமலும்
உய்ந்தேன் -நற்கதி பெற்றேன் –

எம்பெருமானை திருமகள் ஆலிங்கனம் செய்த ஸ்தலம் என்பதால் திருவாலி –

—————————————————————————–

19-திரு நாகை –

சேர்ந்து உனக்குக் குற்றேவல் செய்திலன் என் சிந்தையில் நீ
ஆர்ந்ததற்கு ஓர் கைம்மாறு அறிகிலேன் பூந்துவரை
மன்னா கை ஆழி வலவா வலம் புரியாய்
தென் நாகாய் அருளிச் செய் –19-

பூந்துவரை மன்னா
கை ஆழி வலவா -வலது திருக்கையில் திரு ஆழி ஏந்தியவனே -திரு ஆழியை பிரயோக்கிப்பத்தில் வல்லவன் என்றுமாம்
வலம் புரியாய்
தென் நாகாய்-நாக ராஜனுக்கு பிரத்யஷம்
சேர்ந்து உனக்குக் குற்றேவல் செய்திலன்
அவ்வாறு இருக்கவும் -நிர்ஹேதுகமாக -பரம காருண்யத்தால் –
என் சிந்தையில் நீ ஆர்ந்ததற்கு ஓர் கைம்மாறு அறிகிலேன்
அருளிச் செய் —

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-உனக்கோர் கைம்மாறு நான் ஒன்றிலேன் -எனதாவியும் உனதே

————————————————————————

20-திரு நறையூர் –

செய்ய சடையோன் திசை முகத்தோன் வானவர் கோன்
ஐயம் அறுத்து இன்னம் அறியாரே துய்ய
மரு நறை ஊர் வண் துழாய் மாயோன் செவ் வாயான்
திரு நறையூர் நின்றான் செயல் –20-

துய்ய மரு நறை ஊர் வண் துழாய் மாயோன் -பரிசுத்தமான -நறு மணமும் தேனும் பொருந்திய
செழிப்பான திருத் துழாய் அணிந்த மாயோன்
செவ் வாயான்
திரு நறையூர் நின்றான் செயல் –
செய்ய சடையோன் திசை முகத்தோன் வானவர் கோன்
ஐயம் அறுத்து இன்னம் அறியாரே- நிஸ் சந்தேகமாய் இன்னும் அறியார்களே –

எம் பெம்மானை ஆரே அறிவார் அது நிற்க -நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை யயன்-
ஆரே அறிவார் அனைத்து உலகம் உண்டு உமிழ்ந்த பேர் ஆழியான் தன் பெருமையை கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான்
ஸூகந்த கிரி -நறு மனம் மிக்க ஸ்தலம் -திரு நறையூர் –நாச்சியார் கோயில் -கல் கருடன் பிரசித்தம்
திரு மங்கை ஆழ்வாருக்கு திரு இலச்சினை செய்து அருளிய பெருமாள் –

—————————————————————–

21-திரு நந்திபுர விண்ணகரம்

செயற்கு அரிய செய்வோமைச் செய்யாமை -நெஞ்சே
மயக்குவார் ஐவர் வலியால் நயக்கலவி
சிந்தி புர விண்ணகரம் என்பர் திருச் செங்கண் மால்
நந்தி புர விண்ணகரம் நாடு –21-

நெஞ்சே
செயற்கு அரிய செய்வோமைச் –
செய்யாமை மயக்குவார் ஐவர் வலியால்
நயக்கலவி சிந்தி -சிற்றின்பத்தையே எப்போதும் நினைப்பாய்
புர விண்ணகரம் என்பர் -ஸ்வர்க்க லோகம் அரசாள்வாய் என்று துர்போதனை செய்வர்
அவற்றுக்கு வசப்படாமல் -அவற்றைக் கொள்ளாமல் –
திருச் செங்கண் மால் நந்தி புர விண்ணகரம் நாடு —

நந்தி தேவருக்கு பிரத்யஷம் -நாதன் கோயில் –

————————————————————

22-திரு இந்தளூர் –

நாடுதும் வா நெஞ்சமே நாராயணன் பதிகள்
கூடுதும் வா மெய்யடியார் கூட்டங்கள் சூடுதும் வா
வீதி யிந்தளத்த கிலின் வீசு புகை வாசம் எழும்
ஆதி இந்தளூரான் அடி –22-

நாடுதும் வா நெஞ்சமே நாராயணன் பதிகள்
கூடுதும் வா மெய்யடியார் கூட்டங்கள்
சூடுதும் வா வீதி யிந்தளத்தகிலின் வீசு புகை வாசம்-தூபக் கால்களில் போக விடப்பட்ட
அகில் கட்டைகளில் நின்றும் வீசும் புகையின் நறுமணம்
எழும் ஆதி இந்தளூரான் அடி –அடித் தாமரைகளை சூடுவோம் வா

ஸூகந்த வனம் -சந்தரன் சாபம் நீங்கப் பெற்ற ஸ்தலம் –

——————————————————————–

23-திருச் சித்திர கூடம்

அடியால் உலகு எல்லாம் அன்று அளந்து கொண்ட
நெடியானைக் கூடுதியேல் நெஞ்சே கொடிது ஆய
குத்திர கூடு அங்கி கொளுந்தா முன் கோவிந்தன்
சித்திர கூடம் கருதிச் செல் –23–

நெஞ்சே-தில்லை திரு சித்ர கூடம் சென்று சேர்மின்களே -திருமங்கை ஆழ்வார் உபதேசித்தால் போலே இவரும் அருளிச் செய்கிறார்
அடியால் உலகு எல்லாம் அன்று அளந்து கொண்ட நெடியானைக் கூடுதியேல்
கொடிது ஆய குத்திர -இழி குணத்தைக் கொண்ட –
கூடு -இந்த சரீரத்தை –
அங்கி -அக்னியானது -கொளுந்தா முன்
கோவிந்தன் -ஸ்ரீ கோவிந்த ராஜன் எழுந்து அருளி இருக்கின்ற
கோவிந்தன் -பசுக்களைக் காத்தவன் /உயிர்களை அடிமையாகக் கொண்டவன் /சூர்ய மண்டலத்தில் தங்கி இருப்பவன் /
வேதத்தை ஹம்ச ரூபியாக பிரமனுக்கு உபதேசித்தவன் /ஸ்ரீ வராஹ நாயனாராக பூமியை இடந்து அருளினவன்
சித்திர கூடம் கருதிச் செல் —

சித்திர கூடம் -விசித்ரமான சிகரங்களைக் கொண்ட ஸ்தலம் -ஸ்ரீ ராம பிரானுக்கு பாங்காக இருந்த சித்ர கூடம் போலேவே
இந்த திவ்ய தேசமும் பாங்காக இருக்கும் என்றவாறு
வீற்று இருந்த உத்சவ பெருமாள் சித்ர கூடத்தில் ஸ்ரீ ராமபிரான் வீற்று இருந்து அருளினால் போலவே –
மூலவர் ஷீராப்தி நாதன் போலே சயன திருக் கோலம் -சிவ பிரான் நடனத்தை ஆமோதித்திக் கொண்டு எழுந்து அருளி உள்ளார்
தில்லை மரங்கள் அடர்ந்த காடு -தேவர்களும் முனிவர்களும் சூழக் கொலு வீற்று இருந்த சபை –

———————————————————————-

24-திருச் சீராம விண்ணகரம் –

செல்லும் தொறும் உயிர்ப்பின் செல்லும் இரு வினையை
வெல்லும் உபாயம் விரும்புவீர் தொல் அரங்கர்
சீராம விண்ணகரம் சேர்மின் பின் மீளாத
ஊர் ஆம் அவ் விண்ணகரம் உண்டு –24-

செல்லும் தொறும் -உடலை விட்டுப் உயிர் போகின்ற இடங்களில் எல்லாம்
உயிர்ப்பின் செல்லும்-அந்த உயிர் பின்னே விடாதே தொடர்ந்து செல்லும்
இரு வினையை -நல்வினை தீ வினை இரண்டு வினைகளையும்
வெல்லும் உபாயம் -கடத்தற்கு தக்க வழியை
விரும்புவீர்
தொல் அரங்கர்
சீராம விண்ணகரம் சேர்மின்
பின் மீளாத ஊர் ஆம் அவ் விண்ணகரம் உண்டு —

காழிச் சீ ராம விண்ணகர் சேர்மினே -என்று திருமங்கை ஆழ்வார் உபதேச பரமாக அருளிச் செய்வது போலே இவரும் அருளிச் செய்கிறார்
சக்கரவர்த்தி திருமகன் எழுந்து அருளி உள்ள திவ்ய தேசம் என்பதால் சீராம விண்ணகரம் –
காளி வாசம் செய்கிற ஸ்தலம் என்பதால் காழிச் சீராம விண்ணகரம் –

————————————————————————

25–திருக் கூடலூர் –

உண்டு கேட்டு உற்று மோந்துப் பார்க்கும் ஐவர்க்கே
தொண்டு படலாமோ உன் தொண்டனேன் விண்டு இலங்கும்
ஆடல் ஊர் நேமி முதல் ஐம்படையாய் அன்பு உடையாய்
கூடலூராய் இதனைக் கூறு –25-

விண்டு இலங்கும் -விட்டு விட்டு பிரகாசிக்கும்
ஆடல் ஊர் -வெற்றி பொருந்திய
நேமி முதல் ஐம்படையாய்
அன்பு உடையாய் -உயிர்கள் உடைய நிர்ஹேதுக கிருபையை உடையவனே
கூடலூராய்
உன் தொண்டனேன் -உனக்கு அடியேனான நான் -அவ்வாறு அடிமையாய் இருத்தலை விட்டு
உண்டு கேட்டு உற்று மோந்துப் பார்க்கும் ஐவர்க்கே
தொண்டு படலாமோ
இதனைக் கூறு-

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -வாஸூதேவஸ் சர்வம் -சர்வ ரச சர்வ கந்த –
தேவர்கள் கூட்டமாக வந்து எம்பெருமானை சேவிக்கும் ஸ்தலம் என்பதால் திருக் கூடலூர் –

——————————————————————————

26-திருக் கண்ணங்குடி –

கூறு புகழ்த் தன் அடிக்கே கூட்டுவனோ இன்னம் எனை
வேறுபடு பல் பிறப்பில் வீழ்த்துவனோ தேறுகிலேன்
எண்ணம் குடியாய் இருந்தான் நின்றான் கிடந்தான்
கண்ணங்குடியான் கருத்து –26-

எண்ணம் குடியாய் -எனது மனத்தை வாழும் இடமாகக் கொண்டு
இருந்தான் நின்றான் கிடந்தான் -அந்த நெஞ்சிலே வீற்று இருந்து அருளியும் நின்று அருளியும் கிடந்தது அருளியும்-செய்து அருளுபவனும்
நூற்று எட்டு திவ்ய தேசங்களில் உகக்கும் உகப்பாய் அடியார்கள் நெஞ்சில் வைக்கும் பித்தன் அன்றோ
அங்குத்தை வாசம் சாதனம் இங்குத்தை வாசம் சாத்தியம்
கண்ணங்குடியான் -திருக் கண்ணங்குடியில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானும்
என்னை -அடியேனை –
கூறு புகழ்த் தன் அடிக்கே கூட்டுவனோ -வேதங்களில் சிறப்பித்துக் கூறப்படும் கீர்த்தியை யுடைய தனது திருவடிகளிலே சேர்த்துக் கொள்வானோ
அன்றி
இன்னம் எனை
வேறுபடு பல் பிறப்பில் வீழ்த்துவனோ -மக்கள் தேவர் விலங்கு புள் ஊர்வன நீர் வாழ்வான ஸ்தாவரங்கள்-ஏழு வகைப் பிறப்புக்கள்
தேறுகிலேன் கருத்து -அவன் திரு உள்ளம் அறியேனே —

நிரந்குச ஸ்வ தந்த்ரன் அன்றோ –
பின் பிறக்க வைத்தனன் கொல் அன்றி நின்று தன் கழற்கு அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் ஆழியான் –
என் திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே –
கண்ணன் வாழ்கின்ற ஸ்தலம் என்பதால் திருக் கண்ணங்குடி –
உறங்காப் புளி -ஊறாக் கிணறு -காயா மகிழ் –தீரா வழக்கு -திருக் கண்ணங்குடி –

—————————————————————–

27-திருக் கண்ண மங்கை –

கருத்தினால் வாக்கினால் நான்மறையும் காணா
ஒருத்தனை நீ நெஞ்சே உணரில் பெருத்த முகில்
வண்ணம் அம்கை கண் கால் வனசம் திரு அரங்கம்
கண்ணமங்கை ஊர் என்று காண் –27-

நெஞ்சே-
கருத்தினால் வாக்கினால் நான்மறையும் காணா ஒருத்தனை-அத்விதீயன் -ஈடும் எடுப்பும் இல்லா தனி மா தெய்வம் –
நீ உணரில்
அவனுக்கு –
பெருத்த முகில் -வண்ணம்
அம்கை கண் கால் வனசம் -செந்தாமரை மலர்களாம்
திரு அரங்கம் கண்ணமங்கை ஊர் -இருப்பிடம் -என்று காண் —

வேத புருஷனுக்கும் எட்டாத ஸ்வரூபம் அன்றோ -யதோ வாசோ நிவர்த்தந்தே –
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை -கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -திரு நின்றவூர் பத்தராவிப் பெருமாளையும் சேர்ந்து
என்னைப் பெற்ற தாயாரால் நினைவூட்டப்பபெற்று மீண்டும் -முன்பு திருக் கடல் மல்லையில் இருந்து அருளியது போலே –
மங்களா சாசனம் பண்ணுகிறார் திரு மங்கை ஆழ்வார்

———————————————————————-

28-திருக் கவித்தலம் –

காணியும் இல்லமும் கைப் பொருளும் ஈன்றோரும்
பேணிய வாழ்க்கையும் பேர் உறவும் சேணில்
புவித் தலத்தில் இன்பமும் பொங்கு அரவம் ஏறிக்
கவித் தலத்தில் கண் துயில்வோன் காண் –28-

அடியேனுக்கு
காணியும் இல்லமும் கைப் பொருளும் ஈன்றோரும்
பேணிய வாழ்க்கையும் பேர் உறவும்
சேணில் புவித் தலத்தில் இன்பமும் -மறுமையிலும் இம்மையிலும் உண்டாகக் கூடிய இன்பங்களும்
சேணமேல் உலகம் –
பொங்கு அரவம் ஏறிக் கவித் தலத்தில் கண் துயில்வோன் காண் –
போகய போக உபகரண போக ஸ்தானங்கள் ஆகிய யாவும் எனக்கு எம்பெருமான் திருவடிகளே -என்றபடி –

புஜங்க சயனத்தில் கண் வளர்ந்து அருளுகின்றான் திருக் கபிஸ்தலத்தில்
அஸ்தானே பய சங்கை பண்ணும் -பொங்கு அரவம் –
திருவடிக்கு பிரத்யஷம் என்பதால் திருக் கபிஸ்தலம் -என்ற திரு நாமம் –

—————————————————————————-

29-திரு வெள்ளியங்குடி –

கால் அளவும் போதாக் கடல் ஞாலத் தோர் கற்ற
நூல் அளவே அன்றி நுவல்வார் ஆர் கோலப்
பரு வெள்ளி அம் குடியான் பாதக ஊண் மாய்த்த
திரு வெள்ளி யங்கு டியான் சீர் –29-

கோலப் பரு வெள்ளி அம் குடியான்-அழகிய பெரிய கைலாசம் என்னும் வெள்ளி மலையை வாழும் இடமாக கொண்ட சிவபிரானது
பாதக ஊண் மாய்த்த
திரு வெள்ளி யங்குடியான் சீர் —
கால் அளவும் போதாக் கடல் ஞாலத் தோர் -திரு விக்கிரம திருவவதாரத்தில் -திருவடிக்கு போதாத கடல் சூழ்ந்த நில உலகத்தில் உள்ளவர்களில்
கற்ற -தாம் படித்து அறிந்த
நூல் அளவே அன்றி நுவல்வார் ஆர் -நூல்களின் அளவாக கூறுவதே அல்லாமல் முழுதும் உணர்ந்து சொல்ல வல்லவர் யாவர் உளர் –
அவனது திருக் கல்யாண குணங்களை முழுவதும் தெரிவிக்கும் நூல்கள் இல்லையே
திருவடி அளவையே காண முடியாத பூமி சீர் முழுவதையும் எவ்வாறு காண மாட்டுவர் –

த்ரிபாத் விபூதி என்பதால் நான்கில் ஒரு பங்கே லீலா விபூதி
சுக்ராசார்யருக்கு பிரத்யஷம் என்பதால் திரு வெள்ளியங்குடி
பார்க்கவபுரி -என்றும் திருநாமம் உண்டு –

——————————————————————–

30-திருமணி மாடக் கோயில் –

சீரே தரும் கதியில் சேருகைக்கு நான் உன்னை
நேரே வணங்கினேன் நெஞ்சே நீ பாரில்
அணி மாடக் கோயில் அரங்கனார் நாங்கூர்
மணி மாடக் கோயில் வணங்கு –30-

நெஞ்சே
சீரே தரும் கதியில் சேருகைக்கு
நான் உன்னை -பந்த மோஷ இரண்டுக்கும் ஹேதுவான உன்னை
நேரே வணங்கினேன்
நீ
பாரில் அணி மாடக் கோயில் அரங்கனார் நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு —

நெஞ்சமே நல்லை நல்லை யுன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –
நாங்கூர் -நாக புரி -11- திவ்ய தேசங்கள் சேர்ந்த திரு நாங்கூர் –
அழகிய உபரிகை வீடுகள் நிறைந்த ஸ்தலம் என்பதால் திரு மணி மாடக் கோயில்

———————————————————–

31-திரு வைகுந்த விண்ணகரம் –

வணங்கேன் பிற தெய்வம் மால் அடியார் அல்லாக்
குணங்கேடர் தங்களுடன் கூடேன் இணங்கி நின்று
வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவேன் ஈது அன்றோ
வைகுந்த விண்ணகர வாழ்வு –31-

நான்
வணங்கேன் பிற தெய்வம்
மால் அடியார் அல்லாக் குணங்கேடர் தங்களுடன் கூடேன் இணங்கி நின்று
வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவேன்
சிறந்தார்க்கெழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன் -பூதத்தாழ்வார்
ஈது அன்றோ -இவ்வாறு அடியார் உடன் கூடி இருந்து ஸ்துதித்தல் அன்றோ
வைகுந்த விண்ணகர வாழ்வு -அடியார் நிலாகின்ற வைகுந்தம் என்றபடி –

ஞானமும் வ்ரக்தியும் சாந்தியும் யுடையனாய் இருக்கும் பரம சாத்விகனோடு சஹவாசம் பண்ணுகை-
ஸ்ரீ வைஷ்ணவ அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதம்
இங்கும் ஸ்ரீ வைகுண்டம் போலே வீற்று இருந்த திருக் கோலம் என்பதால் திரு வைகுந்த விண்ணகரம் என்ற திரு நாமம் ஆயிற்று –

—————————————————————-

32-திரு அரிமேய விண்ணகரம் –

வாழும் அடியார் மட நெஞ்சே நம் அளவோ
தாழும் சடையோன் சது முகத்தோன் பாழிக்
கரிமேய விண்ணகரக் காவலோன் கண்டாய்
அரிமேய விண்ணகரத் தார்க்கு –32-

மட நெஞ்சே-
அரிமேய விண்ணகரத் தார்க்கு-
வாழும் அடியார் -அடியாராக வாழ்கின்றவர்கள்
நம் அளவோ
தாழும் சடையோன்
சது முகத்தோன்
பாழிக் கரிமேய விண்ணகரக் காவலோன் -பலம் பொருந்திய ஐராவத யானை மேல் செல்லும் இந்திரன்
கண்டாய்

திரு அரி மேய விண்ணகரம் -அரி பொருந்திய விண்ணகரம் –
அரி -அழகு /திருமால் /குரங்கு /சிங்கம் /தவளை /மூங்கில் பல பொருள்கள் உண்டே

————————————————————–

33-திருத் தேவனார் தொகை –

ஆர்க்கும் வலம் புரியால் அண்டமும் எண் திசையும்
கார்க்கடலும் வெற்பும் கலங்கினவால் சீர்க்கும்
திருத் தேவனார் தொகை மால் செவ்வாய் வைத்து ஊதத்
தருத் தேவனார் தொகையும் சாய்ந்து –33-

சீர்க்கும் -சிறப்புப் பெற்ற
திருத் தேவனார் தொகை மால்
பாரிஜாத வருஷத்தை தேவ லோகத்தில் நின்றும் பேரத்துக் கொண்டு கொணரும் போது
செவ்வாய் வைத்து ஊதத்
ஆர்க்கும் வலம் புரியால்
தருத் தேவனார் தொகையும் சாய்ந்து –கற்பக தருவின் நிழலில் வசிக்கும் தேவர்கள் கூட்டமும் மூர்ச்சித்து விழ
அண்டமும் எண் திசையும் கார்க்கடலும் வெற்பும் கலங்கினவால்
தேவர்கள் சபை கூடின இடம் -திருத் தேவனார் தொகை –

—————————————————————————–

34-திரு வண் புருடோத்தமம் –

சாய்ந்த திரு அரங்கம் தண் வேங்கடம் குடந்தை
ஏய்ந்த திரு மால் இருஞ்சோலை பூந்துவரை
வண் புருடோத்தமம் ஆம் வானவர்க்கும் வானவன் ஆம்
ஒண் புருடோத்தமன் தன் ஊர் –34-

ஏய்ந்த -திரு உள்ளத்துக்கு பாங்காக –
புருஷோத்தமன் எழுந்து அருளி உள்ள வளப்பம் உள்ள திருப்பதி யாதலால் திரு வண் புருடோத்தமம் –

————————————————————————

35-திருச் செம்பொன் கோயில் –தலைவி ஆற்றாமை மிகுதியால் மடலூரத் துணிதல் –

ஊர்வேன் மடலை ஒழிவேன் மடம் நாணம்
சேர்வேன் கரிய திருமாலை பார் அறிய
அம்பொன் செய் கோயில் அரங்கன் அணி நாங்கூர்ச்
செம்பொன் செய் கோயிலினில் சென்று –35-

பார் அறிய மடம் நாணம் ஒழிவேன் -ஊர்வேன் மடலை –
சேர்வேன் கரிய திருமாலை -அம்பொன் செய் கோயில் அரங்கன்
அணி நாங்கூர்ச் செம்பொன் செய் கோயிலினில் சென்று —

———————————————————————————

36–திருத் தெற்றி யம்பலம்

சென்றது காலம் திரை நரை மூப்பு ஆன இனி
என்று கொல் சாவு அறியேன் என் நெஞ்சே கன்றால்
உருத்து ஏற்றி அம்பலத்தை ஓர் விளவின் வீழத்தான்
திருத் தெற்றி யம்பலத்தைச் சேர் –36-

என் நெஞ்சே-நமக்கோ
சென்றது காலம்
திரை நரை மூப்பு ஆன இனி என்று கொல் சாவு அறியேன்
ஆதலால்
கன்றால்-இளம் கன்றைக் கொண்டு உருத்து -கோபித்து –
ஏற்றி அம்பலத்தை -அம் பலத்தை -அழகிய ஆசூர வேஷத்தை கொண்ட அழகிய பழத்தை –ஓர் விளவின் வீழத்தான்
திருத் தெற்றி யம்பலத்தைச் சேர் —
நின்ற பிராணன் கழலும் முன்னே நெஞ்சமே நினையாய் –
திவ்ய தேச த்யானமே விரோதிகளைப் போக்கித் தரும் –

—————————————————————————–

37–திரு மணிக்கூடம் –

சேராது முன் செய்த தீ வினை பின் செய்ததுவும்
வாராது இனி நீ மட நெஞ்சே நேராக்
குருமணிக் கூடத்து ஆனைக் கொம்பு பறித்தானை
திரு மணிக் கூடத்தானைச் செப்பு –37-

மட நெஞ்சே
நேரா -எதிர்த்து
குருமணிக் கூடத்து ஆனைக் கொம்பு பறித்தானை -சிறந்த இரத்தினங்கள் இழைத்த கூடத்தில் இருந்த பட்டத்து யானையின்
கொம்புகளை வேரோடு பிடுங்கி அதனை அழித்தவனும் –
சிறந்த முத்துக்கள் தோன்றுதற்கு இடமான யானைத் தந்தம் என்றுமாம்
திரு மணிக் கூடத்தானைச் செப்பு —
அவ்வாறு நீ செய்தால் -இனி –
சேராது முன் செய்த தீ வினை-
பின் செய்ததுவும் வாராது இனி -ஆகாம்யமும் அபுத்தி பூர்வகமாக செய்யும் பாபமும் இனி அணுகாது –

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பு –
வாக்கு மனஸ் காயங்களால் அனுபவிக்க வேணும் என்கிறது மிகை -விரோதி போகைக்கு-உக்திக்கு மேலே வேண்டா என்கை-
அவன் இவன் அனுகூலித்தவாறே-பூர்வாகத்தை -ஞானம் வருதற்கு முன்பே -செய்த பாவத்தை விஸ்மரிக்கும் –
உத்தர ராகத்துக்கு அவிஜ்ஞ்ஞாதா -அறியாதவன் ஆம் -இனி யார் அனுபவிப்பார் -அவன் பொறுத்தேன் என்னத் தீரும் அத்தனை இறே
திருநாமத்தை ஒரு தரம் உச்சரித்த மாத்ரத்திலே அனைத்து வினைகளும் போம்
கெடும் இடராய வெல்லாம் கேசவா என்னத் தீருமே

—————————————————————————

38–திருக் காவளம்படி-

செப்பென் மனிதருக்கு என் செஞ்சொல் தமிழ் மாலை
கைப்பேன் பிற தெய்வம் காண்பாரை எப்போதும்
காவளம் பாடித் திருமால் கால் தாமரை தொழுது
நா வளம் பாடித் திரிவேன் நான் –38-

நான்
எப்போதும்
என் செஞ்சொல் தமிழ் மாலை -தேவாதி தேவனை பாடும் திவ்ய பிரபந்தம் என்பதால் செஞ்சொல் தமிழ் மாலை என்கிறார்
செப்பென் மனிதருக்கு –
கைப்பேன் பிற தெய்வம் காண்பாரை –பந்த ஹேதுவான பிற தெய்வம் காண்பாரை வெறுப்பேன்
காவளம் பாடித் திருமால் கால் தாமரை தொழுது
நா வளம் பாடித் திரிவேன் –வளமாக கவி பாடி கொண்டு யாதொரு கவலையும் இன்றி இனிது காலம் கழிப்பேன் –
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே -கொண்டாடும் நெஞ்சு உடையார் அவர் எங்கள் குல தெய்வமே –

———————————————————————————

39-திரு வெள்ளக் குளம் –

நான் அடிமை செய்ய விடாய் நான் ஆனேன் எம்பெருமான்
தான் அடிமை கொள்ள விடாய் தான் ஆனான் ஆனதற்பின்
வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம்
உள்ளம் குளம் தேனை ஒத்து –39-

நான் அடிமை செய்ய விடாய் நான் ஆனேன்
எம்பெருமான் தான் அடிமை கொள்ள விடாய் தான் ஆனான் ஆனதற்பின்
வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம்
உள்ளம் குளம் தேனை ஒத்து –மனத்தில் சக்கரைப் பாகையும் தேனையும் போன்று ஓன்று சேர்ந்து எங்கள் வேட்கை தனியப் பெற்றோம் –

பயிர்த்தலையிலே குடிசை கட்டிக் கொண்டு இருக்கும் க்ருஷிகன் அன்றோ -அர்ச்சாவதாரம் பூர்ணம் புஷ்கலம் –
தேங்கின மடுக்கள் போலே —
வைமுக்யத்தை மாற்றி
ருசியை விளைவித்து
ருசி பிறந்தால் உபாயமுமாய்
உபாய பரிக்ரகாம் பண்ணினால் போக்யமுமாய் இருக்குமே
தனித்தனி இனிமையாய் இரண்டு விடாயும் இருப்பதால் சக்கரைப் பாகு தேன் என்கிறார் –

—————————————————————–

40-திருப் பார்த்தன் பள்ளி –

ஒத்து அமரர் ஏத்தும் ஒளி விசும்பும் பாற் கடலும்
இத்தலத்தில் காண்பு அரிய என் நெஞ்சே சித்து உணர்ந்த
தீர்த்தன் பள்ளிக்கு இருந்து செப்ப வெளி நின்றானைப்
பார்த்தன் பள்ளிக்குள் பணி –40-

என் நெஞ்சே
ஒத்து -ஓன்று கூடி
அமரர் ஏத்தும் ஒளி விசும்பும் -பரமபதமும் -பாற் கடலும்
இத்தலத்தில் காண்பு அரிய –
அந்தர்யாமித்வம் விபவம் இரண்டுக்கும் இவை உப லஷணம்
த்ருஷார்த்தனுக்கு தேசாந்தரத்தில் போக வேண்டாத படி நிற்கிற இடம் தன்னிலே உண்டாய் இருக்கச் செய்தேயும்
கொட்டும் குந்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது குடிக்கக் கிடையாத பூதாக ஜலம் போலே யாயிற்று
கண்டு பற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டவனுக்கு ஹ்ருதயத்திலே இருக்கச் செய்தேயும் கட்கிலீ என்கிற படியே
கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அஷ்டாங்க யோக ரூப த்யானத்தாலே காண வேண்டும்படியான அந்தர்யாமித்வம்
ஆவரண ஜலம் போலே -அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆராமுது -பரத்வம் —இத்யாதி -தேங்கின மடுக்கள் போலே
கோயில்களிலும் கிருஹங்களிலும் கண்ணுக்கு எல்லாருக்கும் இலக்காம் படி -பின்னானார் வணங்கும் ஜோதி அர்ச்சாவதாரம் –
ஆதலால் –
சித்து உணர்ந்த தீர்த்தன் -ஜீவாத்மாவின் உண்மையான ஸ்வரூபம் உணர்ந்த ஸ்ரீ ப்ரஹலாத ஆழ்வான்
சென்று சென்று பரம் பரமாய் தேக இந்த்ரிய மன பிராண புத்தி விலஷணமாய்
அஜடமாய் –ஆனந்த ரூபமாய் -நித்தியமாய் -அணுவாய் -அவ்யக்தமாய் -அச்சிந்த்யமாய் -நிரவயவமாய் -நிர்விகாரமாய் -ஜ்ஞான ஆஸ்ரயமாய்
ஈஸ்வரனுக்கு நியாம்யமாய் தார்யமாய் சேஷமாய் இருக்கும் என்று அறிகை –
பள்ளிக்கு இருந்து செப்ப -சிறுவனாய் இருக்கும் பொழுதே -எங்கும் உளன் -என்று மறுமொழி கூற
வெளி நின்றானை -அது கேட்டு வெகுண்டு அளந்திட்ட தூணை இரணியன் தட்ட ஆங்கே அப்பொழுதே ஸ்ரீ நரசிங்கமாகி -வெளித் தோன்றிய
பார்த்தன் பள்ளிக்குள் பணி –

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: