ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திரு அழகர் அந்தாதி -26-50–

நண் இன நாக முடி மேல் நடித்து என்னை நாசம் அறப்
பண்ணின நாகமும் பாரும் அளந்தன பண்டு தம்பி
மண்ணினன் ஆக வனம் போயின வளர் சோலை
மலைக் கண் இனன் ஆகம் கரியான் சிவந்த கழல் இணையே –26-

வளர் சோலை மலைக் கண் இனன் -ஓங்கி வளர்ந்த திருமால் இருஞ்சோலை மலையில் உதித்த சூரியன் போலே விளங்குபவனும்
ஆகம் கரியான் -சிவந்த கழல் இணையே —
ஆகம் கரியான் சிவந்த கழல் இணை -தொடை முரண் அணி –
நண் இன நாக முடி மேல் நடித்து -காளியன் மேல் நடனம் செய்து அருளி
என்னை நாசம் அறப் பண்ணின
நாகமும் பாரும் அளந்தன-மேல் உலகத்தையும் பூமியையும் அளந்து அருளின
கம் -சுகம் -அஃது இல்லாதது அகம் -துக்கம் -அது இல்லாத இடம் நாகம் -ஸ்வர்க்கம் –
பண்டு தம்பி மண்ணினன் ஆக வனம் போயின -ஸ்ரீ ராமாவதாரத்தில்
ஸ்ரீ பரத ஆழ்வான் நில உலகத்துக்கு அரசாட்சிக்கு உரியவன் ஆகுமாறு தாம் வனவாசம் சென்றன –

—————————————————————————-

தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கல் –

கழலப் புகுந்த வளை அறியார் என் கருத்து அறியார்
அழலப் புகன்று ஒறுப்பார் அன்னைமார் அறுகாற் சுரும்பு
சுழலப் புனைந்த துழாய் மார்பர் மாலிருஞ்சோலை என்னார்
தழல் அப்புவர் என் தனங்களிலே சந்தனங்கள் என்றே –27-

அன்னைமார்-என் தாய்மார்கள்
கழலப் புகுந்த வளை அறியார் -என் கைகளின் நின்றும் கழன்று விழத் தொடங்கிய வளையல்களின் தன்மையை உணரார் –
என் கருத்து அறியார் -என் காதலை உள்ளபடி உணரார் –
அழலப் புகன்று ஒறுப்பார் -என் மணம் கொதிக்க கடும் சொற்களை கூறி வருந்துவார்கள் –
அறுகாற் சுரும்பு சுழலப் புனைந்த துழாய் மார்பர் மாலிருஞ்சோலை என்னார் –
ஒரு தரமேனும் சொல்லார் -தலைவரது திவ்ய பரிமளத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
ஷட்பத நிஷ்டரான சாரக்ராஹிகள் விரும்பி நாடும் இனிமையை தமது திருமேனியில் கொண்டவர் –
தழல் அப்புவர் என் தனங்களிலே சந்தனங்கள் என்றே –

——————————————————–

தனத்துக்கு அராவிய வேல் விழிக்கு ஏக்கற்று தையலரால்
தினம் துக்கர் ஆகித் திரிவார் பலர் சிலர் செங்கமல
வானத்துக் கராசலம் காத்தாற்கு சோலை மலையில் நின்ற
கனத்துக்கு அராவணை யாற்கு எம்பிராற்கு உள்ளம் காதலரே –28-

தனத்துக்கு -மகிளிரது ஸ்தனங்களுக்கும்
அராவிய வேல் விழிக்கு ஏக்கற்று-கண் அழகுக்கும் ஏங்கி
வெல்வது வேல் விளிப்பது விழி -காரணக் குறி
தையலரால் தினம் துக்கர் ஆகித் திரிவார் பலர்-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து திரிபவர் என்றபடி
சிலர் செங்கமல வானத்துக் கராசலம் காத்தாற்கு -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்து அருளிய
சோலை மலையில் நின்ற கனத்துக்கு -காளமேகம் போன்றவனும்
அராவணை யாற்கு எம்பிராற்கு உள்ளம் காதலரே –

————————————————————

காதலைப் பத்தினி மேல் வைத்த நீசக் கரு நிருதன்
மாதலைப் பத்தியை மண்ணில் இட்டாய் நின்னை வாழ்த்தும் தொண்டர்க்கு
ஈதலைப் பத்தியைச் செய்வோர்கள் வாழும் இட வெற்பா
தீது அலைப்பத் தியங்கித்திரி வேற்கு அருள் செய்தருளே –29-

காதலைப் பத்தினி மேல் வைத்த நீசக் கரு நிருதன் -கீழ் மகனான -இராவணன் -கரிய அரக்கனுடைய
மாதலைப் பத்தியை -மா தலைப் பத்தியை -பெரிய தலை வரிசையை –
மண்ணில் இட்டாய்
நின்னை வாழ்த்தும் தொண்டர்க்கு ஈதலைப்-அடியார்க்கு வேண்டுவன கொடுத்தலையும் –
அவர்கள் பக்கலில் பத்தியைச் செய்வோர்கள் வாழும் இட வெற்பா -ருஷப கிரியில் எழுந்து அருளி இருப்பவனே
எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும் சீர்த் தென் திரு மாலிருஞ்சோலையே-
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி யுன் பொன்னடி வாழ்க வென்று இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மால் இருஞ்சோலை எந்தாய் –
திவ்ய தேசங்களுக்கு அழகாகிறது -அநந்ய பிரயோஜனராய் அத்தலைக்கு மங்களா சாசனம் பண்ணுபவர்கள் வர்த்திக்கை –
தீது அலைப்பத் தியங்கித்திரி வேற்கு -தீ வினை வருத்த-அதற்கு மாறு ஒன்றும் செய்ய மாட்டாதே கலங்கி அலைபவனான எனக்கு
அருள் செய்தருளே —

——————————————————————–

அருள் தருமம் கை விடாது ஏத்தும் அன்பருக்கு அன்பர் எல்லில்
இருள் தரும் அம்கை எறி ஆழியார் இசைக் கின்னரரும்
கெருடரும் மங்கையரும் வாழ் இடப கிரியில் கல்லா
முருடரும் அங்கு அயல் எய்தில் அன்றே அவர் முத்தர் அன்றே –30-

அருள் தருமம் கை விடாது ஏத்தும் அன்பருக்கு அன்பர் –
கருணையும் தர்மத்தையும் கை விடாது ஸ்துதிக்கும் அன்பர்கள் இடத்தில் அன்பை யுடையவரும்
எல்லில் இருள் தரும் அம்கை எறி ஆழியார்
இசைக் கின்னரரும் கெருடரும் மங்கையரும் வாழ் இடப கிரியில்
ஸ்வர்க்க லோகம் விட்டு இங்கேயே வருபவர்கள் என்றவாறு
கல்லா முருடரும் அங்கு அயல் எய்தில் அன்றே அவர் முத்தர் அன்றே —
கல்லா மூடர்கள் வந்தால் அப்பொழுதே அங்கேயே அவர்கள் முக்தர்கள் ஆவாரே கல்லா வேடர்கள் என்றுமாம் –
மாலிருஞ்சோலை யயன் மலை யடைவது கருமமே -மாலிருஞ்சோலை புறமலை சாரப் போவது கிறியே-
பசை அற்றால் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே –

———————————————————————–

முத்தர் அன்றே நின் கழல் ஒரு கால் கை முகிழ்க்கப் பெற்றோர்
பித்தர் அன்றே நினக்கே பித்தர் ஆகில் பிரமன் கம் கை
வைத்து அரன் தேய்துயர் தீர்த்தாய் நின் சோலை மலை மருவும்
பத்தர் அன்றே பரிவால் என்னை ஆளும் பரமர்களே –31–

பிரமன் கம் கை வைத்து அரன் தேய்துயர் தீர்த்தாய்-பிரமன் தலையை கையில் வைத்துக் கொண்டு சிவபிரான் பட்ட துன்பத்தை தீர்த்து அருளினாய்
நின் கழல் ஒரு கால் கை முகிழ்க்கப் பெற்றோர் -உனது திருவடி இணைகளை ஒரு தரம் கை கூப்பித் தொழப் பெற்றவர்கள்
முத்தர் அன்றே -அன்றே முத்தர் -அப்பொழுதே முத்தி பெற்றார் ஆவார் –
நினக்கே பித்தர் ஆகில்-பக்திப் பித்து ஏறியவர்கள்
பித்தர் அன்றே
நின் சோலை மலை மருவும் பத்தர் அன்றே -அன்றோ –
பரிவால் என்னை ஆளும் பரமர்களே –அன்பினால் என்னை ஆளும் மேலோர் ஆவார்
பகவத் சேஷத்வத்தின் எல்லை யாகிறது பாகவத சேஷத்தளவும் வருகை இறே-

———————————————————————–

பரந்தாமரை திரு மாலிருஞ்சோலைப் பரமரை கால்
கரம் தாமரை அன்னகார் நிறத்தாரை கடல் கடக்கும்
சரம் தாம் மரை திரி கான் போய் இலங்கைத் தலைவன் பத்துச்
சிரம் தாம் அரைக் கணத்து எய்தாரை எய்தற்குத் தேர் மனமே –32-

மனமே -நெஞ்சை நோக்கி ஹிதம் உரைக்கிறார் –
பரந்தாமரை -பரம் தாமத்தை உடையவரும்
திரு மாலிருஞ்சோலைப் பரமரை
கால் கரம் தாமரை அன்ன-கருமுகில் தாமரை காடு பூத்து -கம்பர்
கார் நிறத்தாரை
கடல் கடக்கும் சரம் -சமுத்திர ராசனை வென்ற ஆற்றலை யுடைய அம்பினால் –
கடம் குஞ்சரம் -என்று கொண்டு மதத்தை யுடைய யானைகளும் மான்களும் சஞ்சரிக்கும் வனம் என்றுமாம்
தாம் மரை திரி கான் போய் -தாவுகின்ற மான்கள் சஞ்சரிக்கும் வனத்திலே சென்று -மரை -மான்களில் சாதி ஓன்று
காணும் கடலும் கடந்து போய் என்றுமாம் –
இலங்கைத் தலைவன் பத்துச் சிரம் அரைக் கணத்து எய்தாரை
தாம் எய்தற்குத் தேர் -சரணம் அடையத் துணிவு கொள்வாய் –
எய்தாரை எய்தற்கு -முரண் தொடை –

———————————————————————

தேராய் இரவு பகல் இரை தேடுவை தீமை நன்மை
பாராய் இரங்குவ பாவையரால் பண்டு மாவலியால்
சோராய் இரந்தவனை திருமால் இருஞ்சோலை நின்ற
பேர் ஆயிரம் உடையானை நெஞ்சே -என்று பேணுவையே –33-

நெஞ்சே
தேராய் இரவு பகல் இரை தேடுவை
தீமை நன்மை பாராய்
இரங்குவ பாவையரால் -பாவையர் பால் -பாட பேதம்
பண்டு மாவலியால் சோராய் இரந்தவனை
திருமால் இருஞ்சோலை நின்ற பேர் ஆயிரம் உடையானை -என்று பேணுவையே –
மனத்தைப் பார்த்து அருளிச் செய்து உலகோருக்கு ஹிதம் அருளுகிறார் –

—————————————————————————–

தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறுதல்

பேணிக் கவித்த வரைக் குடையாய் பெரியோர் பதின்மர்
ஆணிக் கவித்த தமிழ் மாலை கொண்டாய் அழகா கரிய
மாணிக்க வித்தக மா மலையே வண் துளவுக்கு அல்லரல்
பாணிக்கு அவித்து அடங்காது வெங்காமப் படர் கனலே –34–

பேணிக் கவித்த வரைக் குடையாய்-ஆயர்கள் இடமும் ஆ நிரைகள் இடமும் பேணி எடுத்துப் பிடித்த கோவர்த்தன கிரியை கையிலே கொண்டவனே
பெரியோர் பதின்மர் ஆணிக் கவித்த தமிழ் மாலை கொண்டாய் -சிறந்த அருளிச் செயல்களை கொண்டவனே
ஆணிப்பொன் ஆணி முத்து போலே ஆணிக் கவித்த தமிழ் மாலை என்கிறார்
அழகா
கரிய மாணிக்க வித்தக-ஞானத்தை யுடைய – மா மலையே
வெங்காமப் படர் கனலே-வெவ்விய காதல் ஆகிய மேன்மேல் பரவும் நெருப்பானது
வண் துளவுக்கு அல்லரல் -பாணிக்கு அவித்து அடங்காது
நீரினால் தணிக்கப் பட்டு அடங்கி விட மாட்டாது
விரகதாபம் தீயினும் வெவ்வியதே
உரு வெளித் தோற்றத்தாலே தலைவனை முன்னிலைப் படுத்தி அருளிச் செய்கிறார் –

———————————————————————

பிரிவாற்றாத தலைவி சந்திரனை நோக்கி இரங்கிக் கூறுதல் –

படர் ஆகுவால் குவிய குழல் ஊதிய பாலர் ஐயம்
அடர் ஆகு வாகனன் தாதைக்கு இட்டார் அலங்காரர் துழாய் க்கு
இடர் ஆகு வார் பலர் காண் தமியேனை எரிப் பது என் நீ
விடராகு வாய்க் கொண்டு உடல் சுட்டுக் கான்றிட்ட வெண் திங்களே –35–

விடராகு வாய்க் கொண்டு -விடம் ராகுவாய்க் கொண்டு
உடல் சுட்டுக் கான்றிட்ட-உடம்பைச் சுடுதலால் பொறுக்க மாட்டாத உமிழ்ந்து விடப் பெற்ற
வெண் திங்களே –
படர் ஆ -மேய்வதற்கு பல இடங்களில் பரவிச் சென்ற பசுக்கள்
குவால் குவிய -தொகுதியாக ஓர் இடத்திலே வந்து சேரும்படி
குழல் ஊதிய பாலர் -ஆய்ப்பிள்ளையாய் வளர்ந்தவரும்
ஐயம் அடர் -பிச்சை ஏற்றதால் வருந்திய
ஆகு வாகனன் தாதைக்கு -பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட விநாயகன் தந்தை சிவபிரானுக்கு
இட்டார்-ஐயம் இட்டார் –
அலங்காரர் துழாய் க்கு இடர் ஆகு வார் பலர் காண் -பலர் உளர் அன்றோ –
தமியேனை எரிப் பது என் நீ –
திங்கள் -ஸ்வா பதேசத்தில் -விவேகம் –மாயா காரியமான தாமச குணம் கவிந்து கொள்ள முயலவும் –
அதற்கு அகப்படாது அதனை ஒழித்து விளங்கும் சுத்த ஞானம் என்றவாறு
என்னை மாத்ரம் வருத்துவது என்னோ -அலாப தசையில் விவேகமும் பாதகம் ஆகுமே

—————————————————————————–

திங்கள் அப்பா நின்ற செந்தீக் கொழுந்தின் செழும் சங்கு போ
லும் களப்பாவை உருகுவது ஓர் கிலர் உம்பர் எல்லாம்
எங்கள் அப்பா எமைக்காவாய் என உலகு ஈர் அடியால்
அங்கு அளப்பான் வளர்ந்தார் சோலை மா மலை ஆதிபரே –36–

உம்பர் எல்லாம்
எங்கள் அப்பா எமைக்காவாய் என
உலகு ஈர் அடியால் அங்கு அளப்பான் வளர்ந்தார்
சோலை மா மலை ஆதிபரே —
செழும் சங்கு போலும் களப்பாவை-கழுத்தை யுடைய இத்தலைவி
திங்கள் அப்பா நின்ற செந்தீக் கொழுந்தின் உருகுவது-
சந்திரன் பூசி இடுகின்ற அக்னி சுவாலையினால்-நிலாவினால் கரைந்து வருவதை
ஓர் கிலர் -அறிகின்றார் இல்லை -அறிவார் ஆயின் வெளிப்படையாக வந்து இவளை திரு மணம் செய்து கொள்வாரே
விவேக விளக்கத்தால் இவள் படும் துயரை அருளிச் செய்கிறார்
பாஞ்ச ஜன்யம் போன்ற தொனி யுடையவள் -பரத்வத்தை விளக்கி
பரசமய வாதிகளுக்கு அச்சைத்தை விளைவித்து அவர்களைத் தோற்பிக்கும் என்றவாறு

———————————————————————————

ஆதி அராவில் துயில் அலங்காரர் அழகர் அன்பு ஆம்
வேதியர் ஆவுதி வீற்று இருப்பார் அண்டம் மீது இருக்கும்
சோதியர் ஆவின் பின் போந்தாரை அன்றித் தொழேன் உடலைக்
காதி அராவினும் பொன் மா மகுடம் கவிக்கினுமே –37-

ஆதி அராவில் துயில் அலங்காரர் அழகர்
அன்பு ஆம் வேதியர் ஆவுதி வீற்று இருப்பார் -ஆகுதிகளில் வீற்று இருப்பவரும் -யஞ்ஞாங்கன் -யஞ்ஞ வாஹனன் -யஞ்ஞ சாதனன் அன்றோ
அண்டம் மீது இருக்கும் சோதியர் -பரஞ்சோதியானவர்
ஆவின் பின் போந்தாரை அன்றித் -இவரைத் தவிர -மற்று ஒருவரை
தொழேன் உடலைக் காதி அராவினும் பொன் மா மகுடம் கவிக்கினுமே —
உடலை கூறு செய்து அராவி வருத்தினாலும் -பொன் மயமான பெரிய கிரீடத்தை சூட்டினாலும் தொழ மாட்டேன்

————————————————————————-

கவித்தானை மன்னற்கு நட்பு ஆய முடி கவித்தானை அன்று
புவித்தானை வற்றப் பொழி சரத்தானை பொருது இலங்கை
அவித்தானை மாலிருஞ்சோலை நின்றானை அழகனை முன்
தவித்து ஆனை வா என வந்தானை பற்றினென் தஞ்சம் என்றே –38–

கவித்தானை மன்னற்கு நட்பு ஆய -கவி தானை -வானர சேனைகளை யுடைய சுக்ரீவனுக்கு நண்பன் ஆகி
கபி -விகாரம் அடைந்து கவி யாயிற்று
முடி கவித்தானை -அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து அருளினவன்
கவித்தானை மன்னற்கு நட்பாய் முடி கவித்தானை -சொல் நயம் காண்க
அன்று
புவித்தானை வற்றப் -புவிக்கு ஆடையாகிய கடல் தபிக்கும் படி
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை நிலா மா மகள் -திருமங்கை ஆழ்வார்
பொழி சரத்தானை-பிரயோக்கிக்கத் தொடங்கிய ஆக்னேயாஸ்த்ரம் யுடையவன்
பொருது இலங்கை அவித்தானை
மாலிருஞ்சோலை நின்றானை அழகனை
முன் தவித்து ஆனை வா என வந்தானை
பற்றினென் தஞ்சம் என்றே -சரணம் அடைந்தேன் -தஞ்சம் -ரஷகம் என்றுமாம் –

——————————————————————————

தஞ்சம் தனம் என்று தேடி புல்லோர் தையலார் கடைக்கண்
வஞ்சம் தனம் கொள்ள வாளா இழப்பர் மதி உடையோர்
செஞ்சந் தனப் பொழில் மாலிருஞ்சொலைத் திரு நெடுமால்
நெஞ்சம் தனக்கு உவப்பாக நல்கா நிற்பார் நேர் படினே –39-

தஞ்சம் தனம் என்று தேடி புல்லோர்
தையலார் கடைக்கண் வஞ்சம் தனம் கொள்ள -கடைக் கண்ணின் வஞ்சனையும் ஸ்தனங்களின் பொலிவும் கவர்ந்து கொள்ளும்படி
வாளா இழப்பர்
மதி உடையோர்
நேர் படினே-தமக்குப் பொருள் கிடைத்தால்
செஞ்சந் தனப் பொழில் மாலிருஞ்சொலைத் திரு நெடுமால்
நெஞ்சம் தனக்கு உவப்பாக நல்கா நிற்பார் –உபயோக்கிப்பார்கள்
பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யங்களில் விநியோகித்து க்ருதார்த்தர் ஆவார் –

———————————————————————–

நேர் ஆய ஏதனை நெஞ்சு இடந்தாய் நெடுஞ்சோலை மலைக்
கார் ஆய வேதனை முன் படைத்தாய் நின் கழற்குத் தொண்டு என்று
ஆராயவே தனைப் புண் பிறப்பு ஓயும் அவா வழியின்
பேர் ஆய வேதனை இல் உழைப் போரும் பிழைப்பர்களே –40-

நேர் ஆய ஏதனை-தனக்கு எதிராய் நின்ற குற்றத்தை யுடைய இரணியனை
நெஞ்சு இடந்தாய்
நெடுஞ்சோலை மலைக் கார் ஆய -இடைப்பிள்ளையாய் –
வேதனை முன் படைத்தாய் நின் கழற்குத் தொண்டு என்று ஆராயவே தனைப் புண் பிறப்பு ஓயும்
அவா வழியின் பேர் ஆய வேதனை இல் -பெரிய தொகுதியான துன்பங்களை தருகின்ற இல் சம்சார பந்தத்தில்
வேதனையில் உழல்வோர் என்றுமாம்
உழைப் போரும் பிழைப்பர்களே –அகப்பட்டு வருந்துபவர்களும் உய்வார்கள் –

———————————————————————-

தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல் –

பிழைத்தலை யான் எண்ணிப் பேசுகின்றேன் இப்பிணி மற்று ஒன்றால்
மழைத்தலை வார் குழலீர் தணியாது வருணனை முன்
அழைத்து அலை அங்கு அடைத்தார் அலங்காரர் அலங்கல் நல்கீர்
முழைத்தலை நின்று மலயா நிலம் வந்து மோதும் முன்னே –41–

மழைத் தலை வார் குழலீர் -சிரசிலே மேகம் போன்ற நீண்ட கூந்தலை யுடையவர்களே –
எம்பெருமானை தலையால் வணங்கி தலை பெற்ற பயன் பெரும் பெற்றதால் சிறப்பித்து அழைக்கிறாள்
பிழைத்தலை யான் எண்ணிப் பேசுகின்றேன்
இப்பிணி மற்று ஒன்றால் தணியாது
முழைத்தலை நின்று மலயா நிலம் வந்து மோதும் முன்னே —
மலய மாருதம் ஆகிய தென்றல் காற்று அந்த மல பர்வதத்தின் குகையின் இடத்து நின்று வந்து தாக்குவதற்கு முன்பே –
வருணனை முன் அழைத்து அலை அங்கு அடைத்தார்
அலங்காரர் அலங்கல் நல்கீர்
மலயக் குன்றின் குல மா முழையில் குடி வாழ் தென்றல் புலியே இரை தேடுதியோ -கம்பர்
மாலை யம் தண் அம் துழாய் கொண்டு சூட்டுமினே -ஆழ்வார் –

—————————————————————————-

மோது ஆக வந்தனை மூட்டு இலங்கேசன் முடிந்து விண்ணின்
மீது ஆக வந்தனை வில் எடுத்தே விடை வெற்பில் நின்ற
நாதா கவந்தனைச் செற்றாய் உனை அன்றி நான் மறந்தும்
தீ ஆக வந்தனை செய்யேன் புறம் சில தேவரையே –42–

விடை வெற்பில் நின்ற நாதா -விருஷ கிரியில் நின்று அருளும் ஸ்வாமியே
கவந்தனைச் செற்றாய் –
மோது ஆக வந்தனை -ஒருவர் உடன் ஒருவர் தாக்கிச் செய்வதான போரை
மூட்டு இலங்கேசன் -வலிய யுண்டாக்கி நடத்திய இராவணன்
முடிந்து விண்ணின் மீது ஆக வந்தனை வில் எடுத்தே
உனை அன்றி நான் மறந்தும்
தீ ஆக வந்தனை செய்யேன் புறம் சில தேவரையே –மறந்தும் புறம் தொழா மாந்தர் –

———————————————————————————

தேவரை யாதல் மனிதரை யாதல் செழும் கவிதை
நாவரை யாமல் நவிலுகிற்பீர் நம்மை ஆளும் செம் பொன்
மேவு அரை யானை இருஞ்சோலை வேங்கடம் மெய்யம் என்னும்
மா வரையானை ஒருவனையே சொல்லி வாழுமினே –43-

தேவரை யாதல் மனிதரை யாதல் செழும் கவிதை நவிலுகிற்பீர் –
நாவரை யாமல் -நாவால் இன்னாரை பாட வேண்டும் இன்னாரை பாட கூடாது என்கிற வரைமுறை இல்லாமல்
நம்மை ஆளும் செம் பொன் மேவு அரை யானை இருஞ்சோலை வேங்கடம் மெய்யம் என்னும் மா வரையானை
ஒருவனையே சொல்லி வாழுமினே -பேரின்ப வாழ்வு பெற்று உய்யுமின் –

—————————————————————————-

வாழும்மின் பங்கயச் சுந்தர வல்லி மணாளன் வெற்பைச்
சூழுமின் பந்தித்த தொல் வினை தீர்ந்து உய்ய தொங்கல் சுற்றும்
தாழும் இன்பஞ்சணை மேல் மடவார் தடமா முலைக்கே
வீழும் இன்பம் கருதி துன்ப யோனியில் வீழ்பவரே –44–

தொங்கல் சுற்றும் தாழும்
இன்பஞ்சணை மேல் -இன் பஞ்சு அணை மேல்
மடவார் தடமா முலைக்கே வீழும்
இன்பம் கருதி துன்ப யோனியில் வீழ்பவரே —
பந்தித்த தொல் வினை தீர்ந்து உய்ய –
வாழும்மின் பங்கயச் சுந்தர வல்லி மணாளன் வெற்பைச்
சூழுமின்–வாழும் மின்னல் போலே நித்ய அநபாயினி -சுந்தர வல்லி தாயார் கேள்வன் உடைய
மாலிருஞ்சோலை திருமலையை பிரதஷிணம் செய்மின்
வலம் செய்து வைகல் வலம் கழியாதே வலம் செய்யு மாய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -ஆழ்வார்

——————————————————————————

வீழ மராமரம் எய்தார் மதி தவழ் வெற்பை நெஞ்சே
தாழ் அமர் ஆடச் சமன் குறு கான் இச் சரீரம் என்னும்
பாழ் அமராமல் பரகதி எற்றுவர் பார்க்கில் விண்ணோர்
வாழ் அமரா வதியும் நரகாம் அந்த மா நகர்க்கே –45-

நெஞ்சே
வீழ மராமரம் எய்தார்
மதி தவழ் வெற்பை -மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை பதியது ஏத்தி எழுவது பயனே –
பரிபூர்ண சந்திர மண்டலத்தாலே அலங்க்ருதமான திருமலை-ஓங்கின சிகரம் என்றுமாம் –
சூற் பெண்டுகள் சுரம் ஏறுமா போலே சந்தரன் தவழ்ந்து ஏறா நின்றுள்ள சிகரத்தை யுடைய திருமலை –
தாழ் -வணங்குவாய் –
அதனால் யாது பயன் என்னில்
அமர் ஆடச் சமன் குறு கான்-அந்திம காலத்தில் போர் செய்து வென்று உயிரைக் கவர யம பகவான் அருகில் வருதலும் செய்யான்
மால் அடிமை கொண்ட அனந்தரத்து உம் பேர் நினைக்கவும் கூற்று அஞ்சுமே –
அன்றியும்
இச் சரீரம் என்னும் பாழ் அமராமல் -சரீரம் ஆகிய பாழிலே பொருந்தாத படி -மீண்டும் பிறப்பு இல்லாமல்
பரகதி எற்றுவர்
பார்க்கில் -ஆலோசித்திப் பார்க்கும் இடத்தில்
விண்ணோர் வாழ் அமரா வதியும் நரகாம் அந்த மா நகர்க்கே –
தேவர்கள் வாழும் ஸ்வர்க்கமும்-அமராவதி ஸ்வர்க்க லோக ராஜதானி – இந்த ஸ்ரீ வைகுண்டத்துக்கு முன்னே நரகு போலே ஆகுமே
அந்த மா நகர்க்கு -திருமால் இருஞ்சோலைக்கு என்றுமாம் –

—————————————————————————–

நகரமும் நாடும் புரந்தவர் நண்ணலரால் வானமும்
சிகரமும் நாடும் சிறுமை கண்டோம் மஞ்ஞை தேன் இசைகள்
பகர முன் ஆடும் பனிச்சோலை வெற்பில் நிற்பார்க்கு கஞ்சன்
தகர முன் நாள் துகைத்தார்க்கு அறிந்தீர்கள் சரண் புகுமே –46–

நகரமும் நாடும் புரந்தவர் -பட்டணங்களையும் தேசங்களையும் ஆண்ட அரசர்கள்
நண்ணலரால் வானமும் சிகரமும் நாடும் சிறுமை கண்டோம்
பகைவர்களால் அடித்துத் துரத்தப் பட்டு
காட்டியும் மலைச் சிகரத்தையும் தேடிச் செல்லும் எளிமையை கண்டோம் –
அதனால் அதில் ஆசை விட்டு -அறிந்தீர்கள்-அறிய வேண்டுபவற்றை அறிந்தீர்களே
மஞ்ஞை தேன் இசைகள் பகர–முன் ஆடும் -வண்டுகள் கீதங்கள் பாட -மயில்கள் எதிரிலே கூத்தாடப் பெற்ற
வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆடும் சோலை –
பனிச்சோலை வெற்பில் நிற்பார்க்கு -குளிர்ந்த திரு மாலிருஞ்சோலை யிலே நின்று அருளி சேவை சாதிப்பவரும்
கஞ்சன் தகர முன் நாள் துகைத்தார்க்கு
சரண் புகுமே–
வெம் மின் ஒளி வெயில் கானம் போய் குமைதின்பர்கள் செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ -நம்மாழ்வார் –

——————————————————————————–

சரணியன் ஆகத் தனை நினைந்தாரைத் தன் போலே வைக்கும்
அரணியன் நாகத்து அணையான் அரங்கன் அழகன் எம் கோன்
இரணியன் ஆகம் இடந்தான் கதை அன்றி ஈனர் தங்கள்
முரண் இயல் நாகத்தும் புன்குரல் ஓரி முதுக் குரலே –47-

சரணியன் ஆகத் தனை நினைந்தாரைத் தன் போலே வைக்கும்
அரணியன் -பாதுகாப்பாய் உள்ளவன் –
மணியாழி வண்ணன் உகந்தாரை தன் வடிவாக்கும் என்றே துணையாழிய மறை சொல்லும்
சாலோக்யம் -சாமீப்யம் -சாரூப்யம் சாயுஜ்யம் –
நாகத்து அணையான் அரங்கன் அழகன் எம் கோன்
இரணியன் ஆகம் இடந்தான் கதை அன்றி -திவ்ய சரித்ரம் அன்றி
ஈனர் தங்கள் முரண் இயல் நாகத்தும் புன்குரல்
பிற சமயத்தார் மாறு பாடு பொருந்திய நாவினால் பிதற்றும் இழிவான சொற்களை –
ஓரி முதுக் குரலே –கிழ நரி ஊளையிடும் பெரும் குரல் போலே செவிக்கு இன்னாததாய் வெறுக்கத் தக்கதாய் இருக்கும்
கேட்பார்கள் கேசவன் கேர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ
நாகத்துப் பாய்ந்தான் கதை அன்றி வெவ்வினைகள் துன்ன பல் நாகத்து பொய்ந்நூல் புகா என் துளைச் செவிக்கே –

———————————————————————————

முது விருந்தா வனத்து ஆநிரை மேய்த்தவர் முன் விதுரன்
புது விருந்து ஆனவர் மால் அலங்காரர் பொலாங் கழல் ஆம்
மது இருந்தாமரைக்கு ஆளாய் இரார்க்கு மது நுட்ப நூல்
எது இருந்தாலும் அதனால் விடா இங்கு இரு வினையே –48–

முது விருந்தா வனத்து -பழைய பிருந்தாவனத்திலே
ஆநிரை மேய்த்தவர்
முன் விதுரன் புது விருந்து ஆனவர்
மால் அலங்காரர் பொலாங் கழல் ஆம் -பெருமை யுடைய அழகரது அழகிய திருவடிகள் ஆகிய
மது இருந்தாமரைக்கு -தேன் கொண்ட பெரிய தாமரை மலர்களுக்கு
ஆளாய் இரார்க்கு
மது நுட்ப நூல் எது இருந்தாலும் -எது பயின்று தேறப் பெற்றாலும்
அதனால் விடா இங்கு இரு வினையே —

——————————————————————————–

தலைவி வெறி விலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

வினை யாட்டியேன் கொண்ட வெங்காம நோய் வெறியாட்டினும் இச்
சினை ஆட்டினும் தணியாது அன்னைமீர் செய்ய பூங்கமல
மனையாட்டி நாயகன் மாலிருஞ்சோலை மலைச் சிலம்பாற்று
எனை ஆட்டி வாரும் சொன்னேன் எந்த நோயும் எனக்கு இல்லையே –49-

அன்னைமீர்
வினை யாட்டியேன் கொண்ட வெங்காம நோய் வெறியாட்டினும்
இச் சினை ஆட்டினும் -உறுப்புக்களில் குறை இல்லாத இந்த ஆட்டைப் பலி கொடுத்ததாலினும்
சினையாடு கர்ப்பம் கொண்ட ஆடு என்றுமாம்
தணியாது
செய்ய பூங்கமல மனையாட்டி நாயகன்
மாலிருஞ்சோலை மலைச் சிலம்பாற்று -நூபுர கங்கை என்னும் திவ்ய நதியிலே
எனை ஆட்டி வாரும் சொன்னேன் எந்த நோயும் எனக்கு இல்லையே —
வெறியாட்டினும் இச்சின்னை யாட்டினும் தணியாது சிலம்பாற்று எனையாட்டி வாரும் -சொல் நயம் சொல் பின் வரு நிலை –
ஸ்ரீ பாத தீர்த்தம் -அடியார் பாத தூளியே பாவனம் -ஸ்ரீ பாகவதர் களுடைய சம்பந்தமே பரிகாரம் –

—————————————————————————-

வண்டு விடு தூது

எனக்கு ஆவி அங்கும் உடல் இங்கும் ஆகி இருப்பதை சந்
தனக்கா இயங்கும் தமர வண்டீர் சொல்லும் தத்துவ நூல்
கனக்காவியம் கவி வல்லோர் புகழ் அலங்கார னுக்கு
வனக்காவி அம் கண்ணி மா மலராள் மணவாளனுக்கே –50–

சந் தனக்கா இயங்கும் -சந்தனம் கா இயங்கும் -சந்தன சோலைகளில் சஞ்சரிக்கும் தன்மை யுள்ள
தமர வண்டீர் -தமரம் -வண்டுகள் ஒலிக்கும் ஓசைக்கு பெயர்
எம்பெருமானை நாடி -சர்வ கந்தன் சர்வ ரசம் உள்ளவன் -திவ்ய தேசங்கள் எல்லாம் தீர்த்த யாத்ரை செய்து அனுபவிக்கும் ஆச்சார்யர்கள் –
தத்துவ நூல் -தத்வ சாஸ்திரங்களிலும்
கனக்காவியம் -பெரிய காவியங்களிலும்
புகழ் அலங்கார னுக்கு -ஸ்துதிக்கப் பெற்ற அழகருக்கு
வனக்காவி அம் கண்ணி மா மலராள் மணவாளனுக்கே-நீலோற்பல மலர் போன்ற அழகிய திருக் கண்கள் யுடைய பெரிய பிராட்டியார் கேள்வனுக்கு
எனக்கு ஆவி அங்கும் உடல் இங்கும் ஆகி இருப்பதை
சொல்லும் –
எனது உயிர் அத்தலைவன் இடமும் உடம்பு மாதரம் இங்கே இருக்கும் செய்தியைச் சொல்லுமின் –

——————————————————————————-

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: