திருச் சிறப்பு பாசுரம் -தனியன் –
திரு கவி மங்கை மணவாள வள்ளல் செந்தேன் றுளித்து
முருகவிழ் தென் திருமாலிருஞ்சோலை மலை முகுந்தற்கு
இருகவின் தாள்களில் சூடும் அந்தாதியின் ஈரைம்பதில்
ஒரு கவி கற்கினும் ஞானமும் வீடும் உதவிடுமே –
திருகவி -திவ்ய கவி என்றபடி
திருகு ஆவி -மாறுபாடு வஞ்சனை இல்லாத -என்றுமாம் –
கவின் -அழகிய
இரு தாள் -உபய பாதம்
ஞானமும் வீடும் -நல்லுணர்வும் பரமபதமும்
உதவிடும் -தவறாது கொடுக்கும் –
ஆக்கியோன் பெயரும் -பிரபந்த பெயரும் -நுதலிய பொருளும் -பயனும் இந்த தனியனில் அருளிச் செய்து அருளுகிறார் அபியுக்தர் –
————————————————————–
காப்பு –
அங்கத் தமிழ் மறை ஆயிரம் பாடி அளித்து உலகோர்
தங்கட்கு வீடருளும் புருடோத்தமன் தண் வகுளத்
தொங்கற் பராங்குசன் தாளிணை மாலிருஞ்சோலை மலைச்
சங்கத் தமிழ் அழகர் அந்தாதி நடாத்தலைக் கொள்வனே –
அங்கத் தமிழ் மறை-ஆறு அங்கங்கள் கொண்ட திராவிட வேதங்கள் ஆயிரம் பாடி
அளித்து -மதுர கவிகள் -நாத முனி போன்றோர்களுக்கு உபதேச முகமாக அளித்து
உலகோர் தங்கட்கு வீடருளும் புருடோத்தமன் தண் வகுளத்
தொங்கற் பராங்குசன் தாளிணை-
புருஷ ச்ரேஷ்டர் -மகிழம் பூ மாலை தரித்த -நம்மாழ்வார் உடைய உபய பாதத்தை -வகுளாபரணர்
மாலிருஞ்சோலை மலைச் சங்கத் தமிழ் அழகர் அந்தாதி நடாத்தலைக் கொள்வனே –
தண் தமிழ் சங்கத் தனி இறைவனே -என்று தமிழ்ச் சங்கத் தலைவரான திருமால் இருஞ்சோலை அழகர் விஷயமான
அந்தாதி விக்னம் இல்லாமல் முடித்து தந்து அருளுமாறு தளை மேல் கொண்டு வணங்குவேன்
சங்கத்து அழகர் -திருப் பாஞ்ச ஜன்யம் தரித்த அழகர் என்றுமாம்
கிளர் ஒளி இளமை திருவாய் மொழியும் நம்மாழ்வார் திருவாய்மொழி விக்னம் இல்லாமல் நடாத்தி அருள
திருமால் இருஞ்சோலை விஷயமாக அருளிச் செய்தார் –
——————————————————————–
நீர் ஆழி வண்ணனை பாலாழி நாதனை நின்மலனை
சீர் ஆழி அம்கைத் திருமகள் கேள்வனை தெய்வப் புள் ஊர்
கூர் ஆழி மாயனை மால் அலங்காரனை கொற்ற வெய்யோன்
ஓர் ஆழித் தேர் மறைத்தானை எஞ்ஞான்றும் உரை நெஞ்சமே –1–
நீர் ஆழி வண்ணனை -நீர் மயமான கடல் போன்ற கரிய திரு நிறம் உடையவனை
பாலாழி நாதனை-திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளும் நாதனை
நின்மலனை
சீர் ஆழி அம்கைத் திருமகள் கேள்வனை -அழகிய மோதிரம் அணிந்த கைகளை யுடைய பெரிய பிராட்டியார் கேள்வனை
தெய்வப் புள் ஊர் கூர் ஆழி மாயனை
மால் அலங்காரனை -பெருமை பொருந்திய அழகரை
கொற்ற வெய்யோன்
ஓர் ஆழித் தேர் மறைத்தானை எஞ்ஞான்றும் உரை நெஞ்சமே —
மதி தவழ் குடுமி மால் இருஞ்சோலை பதியது ஏத்தி எழுவது பயனே –
வாக்கின் செயலை மனத்தில் ஏற்றி உரை நெஞ்சமே என்கிறார்
ஆழி -கடல் /மோதிரம் /ஸ்ரீ சக்ரத் தாழ்வான் /பொருளில் மூன்று அடிகளிலும் அருளிச் செய்கிறார் –
————————————————————————
உரை மாற்றம் உண்டு என் பொறி ஐந்தும் உன்னிடத்து அன்றி உண்ணும்
இரை மாற்றம் வேண்டும் இதுவே என் விண்ணப்பம் என் அப்பனே
உரை மாற்று அளவு அற்ற பொன் உடுத்தாய் வில் எடுத்து இலங்கை
வரை மாற்றலரைச் செற்றாய் அழகா கரு மாணிக்கமே –2-
உரை மாற்று அளவு அற்ற பொன் உடுத்தாய்
உரை கல்லிலே உரைத்து நோக்கத் தக்க மிகச் சிறந்த பொன்மயமான பீதாம்பரத்தை தரித்து
வில் எடுத்து இலங்கை வரை மாற்றலரைச் செற்றாய் அழகா கரு மாணிக்கமே —
உரை மாற்றம் உண்டு
அடியேன் உன் பக்கல் சொல்லும் சொல் ஓன்று உளது -அது யாது எனில் –
என் பொறி ஐந்தும் உன்னிடத்து அன்றி உண்ணும் இரை மாற்றம் வேண்டும்
இதுவே என் விண்ணப்பம்-என் அப்பனே –
பொய்ந்நின்ற ஞானமும் –அடியேன் செய்யும் விண்ணப்பமே -நம்மாழ்வார் அருளிச் செய்தது போலேயும்
சொல்லின் தொகை கொண்டு –இராமானுச இது என் விண்ணப்பமே -திருவரங்கத்து அமுதனார் -போலேயும் அருளிச் செய்கிறார்
விஷயாந்தரங்களில் மூழ்கி அழியாத படி உண்ணும் சோறு இத்யாதி வாசுதேவஸ் சர்வம்
-தாரக போஷாக போக்யாதிகள் எல்லாம் நீயேயாம் படி அருள வேண்டும் என்கிறார் –
———————————————————————
மாணிக்க நகம் புரை மேனி மாலுக்கு வார் சடையோன்
பாணிக் கனகம் பலி ஒழித்தானுக்கு பச்சைத் துழாய்
ஆணிக் கனக முடி அலங்காரனுக்கு அண்டம் எல்லாம்
பேணிக்கு அனகனுக்கு பித்தர் ஆனவர் பித்தர் அன்றே –3-
மாணிக்க நகம் -மாணிக்க மானதொரு மலையை
கருமாணிக்கம் -முந்திய பாசுரத்தில் மாணிக்கம் அடை
மொழியை இங்கே வருவித்துக் கொண்டு –
கரு மாணிக்கக் குன்றத்து தாமரை போலே திருமர்வு கால் கண் கை செவ்வி உந்தி யானே -ஆழ்வார்
நகம் -நடவாதது -அசலம் -மலை
புரை மேனி மாலுக்கு -ஒத்த திருமேனி யுடைய திருமாலுக்கு
வார் சடையோன் -நீண்ட கபர்த்தம் என்னும் சடை யுடைய சிவபிரானது
பாணிக் கனகம் பலி ஒழித்தானுக்கு-கையிலே ஒட்டிக் கொண்ட -பெரிய அல்லது பாரமான
பிரம கபாலத்தைக் கொண்டு -இரக்கிற பிச்சையை -நீக்கி அருளியவனும்
அண்டம் எல்லாம் பேணிக்கு -ஆண்ட கோலங்களை விரும்பிப் பாதுகாத்து அருளியவனும் –
அனகனுக்கு-தோஷம் இல்லாதவனும் ஆகிய
பச்சைத் துழாய் ஆணிக் கனக முடி அலங்காரனுக்கு -ஆணிப் போனால் செய்த திரு அபிஷேகம் சூடிக் கொண்டவனுக்கு
பித்தர் ஆனவர் பித்தர் அன்றே –பக்திப் பித்துக் கொண்டவர் -விஷயாந்தரங்களில் காதல் பித்தர் போலே இகழத் தக்கவர் இல்லையே
அரங்கனுக்கு அடியார்களாகி அவருக்கே பித்தராமவர் பித்தர் அல்லர்கள் மற்றியார் முற்றும் பித்தரே -குலசேகர ஆழ்வார் –
——————————————————————-
பித்து அரும்பா நின்ற நெஞ்சனை வஞ்சனை பேர் உலகோர்
கைத்து அரும்பாவி எனும் கடையேனை கடைக் கணியாய்
முத்தரும் பாரும் தொழும் அழகா வண்டு மூசும் துழாய்ப்
புத்தரும்பு ஆர் முடியாய் அடியாரைப் புரப்பவனே –4-
முத்தரும் பாரும் -இவ்வுலகத்தாரும் -தொழும் அழகா
வண்டு மூசும் -மொய்க்கப் பெற்ற -துழாய்ப்
புத்தரும்பு ஆர் முடியாய்
அடியாரைப் புரப்பவனே –பாதுகாத்து அருள்பவனே
பித்து அரும்பா நின்ற நெஞ்சனை -விஷயாந்தரங்களில் ஆசைப்பித்து உண்டாகுகிற மனத்தை உடையேனாக இருந்தாலும்
வஞ்சனை -வஞ்சனை யுடையேனாக இருந்தாலும் -பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று கொண்ட கள்வனாக இருந்தாலும்
பேர் உலகோர் கைத்து அரும்பாவி எனும் கடையோனை -கொடிய பாவி என்று பெரிய உலகோர் பலரும் வெறுத்து இகழும் படி நீசனாக இருந்தாலும்
அரும் பாதகன் -பொய்யன் -காமுகன் -கள்வன் –என்று சொல்லிக் கொண்டார் -திரு வேங்கடத்து அந்தாதி –
கடைக் கணியாய்-நீ கடாஷித்து அருள வேண்டும் –
கடையேனைக் கடைக்கணியாய் -சொல் நயம் –
—————————————————————–
புரந்தரன் ஆம் எனப் பூபதி ஆகி புகர் முகமாத்
துரந்து அரசு ஆளில் என் நல் குரவு ஆகில் என் தொல் புவிக்கு
வரம் தர மாலிருஞ்சோலை நின்றார்க்கு என் மனத்துனுள்ளே
நிரந்தரமாய் அலங்காரர்க்கு இங்கு ஆட்பட்டு நின்ற பின்னே –5–
தொல் புவிக்கு வரம் தர மாலிருஞ்சோலை நின்றார்க்கு
அலங்காரர்க்கு இங்கு-இவ்விடத்தில் -இம்மையில் –
என் மனத்துனுள்ளே நிரந்தரமாய் ஆட்பட்டு நின்ற பின்னே –
புரந்தரன் ஆம் எனப் பூபதி ஆகி புகர் முகமாத்
துரந்து அரசு ஆளில் என்
இவன் இந்திரனே யாவன் என்று எல்லாரும் சொல்லும்ன்படி செம்புள்ளி கள் உள்ள முகத்தை யுடைய
பட்டத்து யானையை ஏறி நடாத்தி அரசு ஆண்டால் என்ன
நல் குரவு ஆகில் என் -வறுமைப் பட்டால் என்ன –
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் –அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே –
———————————————————————-
நின்ற பிராணன் கழலும் முன்னே நெஞ்சமே நினையாய்
சென்ற பிராயம் வம்பே சென்றதால் திரு மங்கை கொங்கை
துன்று அபி ராமனை சுந்தரத் தோளனை தோளின் மல்லைக்
கொன்ற பிரானை அடைந்து அடியாரொடும் கூடுகைக்கே –6-
நெஞ்சமே
சென்ற பிராயம் வம்பே சென்றது
இனி ஆயினும்
நின்ற பிராணன் கழலும் முன்னே
திரு மங்கை கொங்கை துன்று அபி ராமனை
சுந்தரத் தோளனை -ஸூ ந்தர பூஹூ
தோளின் மல்லைக் கொன்ற பிரானை
அடைந்து அடியாரொடும் கூடுகைக்கே –
நினையாய்
ஆல் -ஈற்று ஆசை
————————————————————————–
கூடுகைக்கும் சரமத்து அடியேற்குக் கொடிய வஞ்சச்
சாடு உகைக்கும் சரணம் தர வேண்டும் தடத்து அழுந்தி
வாடுகைக் குஞ்சரம் காத்தீர் விண் வாழ்க்கைக்கும் வாள் அரக்கர்
வீடுகைக்கும் சரம் கோத்தீர் விடை வெற்பின் வித்தகரே –7-
தடத்து அழுந்தி வாடுகைக் குஞ்சரம் -யானையைக் -காத்தீர்
விண் வாழ்க்கைக்கும் -தேவர்கள் வாழும் படியாகவும் -வாள் அரக்கர் வீடுகைக்கும் சரம் கோத்தீர்
கொடிய வஞ்சம் சாடு உகைக்கும் சரணம் -சகடாசுரனை உதைத்து அழித்த திருவடிகள் என்றுமாம்
விடை வெற்பின் வித்தகரே -வ்ருஷபகிரி ஆகிய திருமால் இருஞ்சோலை திருமலையில் எழுந்து அருளி இருக்கும் ஞான ஸ்வரூபியே –
தர்மமும் ஒரு உரு தாங்கி -ரிஷப உரு தாங்கி -மாலைப்பத்தியில் அன்று அலைப்பட்ட
ஒருமை ஓங்கிய மாலிருஞ்சோலை சூழ் நாட்டின் பெருமை யாவரே பேசுவார் –
கூடுகைக்கும் சரமத்து -உடம்பை வெறுத்து உயிர் நீங்கும் அந்திம காலத்தில்
அடியேற்குக்
கொடிய வஞ்சச் சாடு உகைக்கும் சரணம் தர வேண்டும் –
———————————————————————–
பாங்கி வெறி விலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல் –
வித்தகர் உம்பர் அரசு ஆனவனும் விதியும் கங்கை
மத்தகரும் பரவும் அலங்காரர் மழை கொண்ட கார்
ஒத்த கரும் பரஞ்சோதியர் நாமம் உரைத்து அன்னைமீர்
இத்தகரும் பர தெய்வமும் கூத்தும் விட்டு ஏத்துமினே –8-
அன்னைமீர்
இத்தகரும் -இ தகரும் -இந்த ஆட்டுக் கடா பலியும்
பர தெய்வமும்-வேறு தெய்வத்தை வழி படுதலும்
கூத்தும் -வெறியாட்டு ஆட்டுவித்தலும்
விட்டு -ஒழித்து
வித்தகர் -ஞான ஸ்வரூபி –
உம்பர் அரசு ஆனவனும் விதியும் கங்கை மத்தகரும் பரவும் அலங்காரர் –
இந்திரன் பிரமன் சிவன் ஸ்துதித்து வணங்கி வழிபடப் பெற்ற அழகரும்
மழை கொண்ட கார் ஒத்த கரும் பரஞ்சோதியர் நாமம் உரைத்து
ஏத்துமினே
ஒருங்காகவே யுலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெரும் தேவன் பேர் சொல்ல கிற்கில் இவளைப் பெறுதீரே -நம்மாழ்வார் –
—————————————————————————-
ஏத்துமின் பத்தியினால் எட்டு எழுத்தும் இணை யடிக்கே
சாத்துமின் பத்திரத் தண் அம் துழாய் மதி தாங்கி கஞ்சம்
பூத்து மின்பத்தி செயும் பச்சை மா முகில் போல் அழகர்
காத்தும் இன்பத்தில் இருத்தியும் வைப்பர் கருணை செய்தே –9-
ஏத்துமின் பத்தியினால் எட்டு எழுத்தும் இணை யடிக்கே
இனிமையான பக்தி யுடன் அஷ்டாஷர திருமந்தரம் உச்சரியுமின்
சாத்துமின் பத்திரத் தண் அம் துழாய்
இங்கனம் செய்வீர் ஆனால்
மதி தாங்கி -சந்திர மண்டலத்தை மேலே சுமந்து -திருமுக மண்டலத்துக்கும்
கஞ்சம் பூத்து -தாமரை மலர்கள் தன்னிடத்தே பூக்கப் பெற்று -கண் கால் கை வாய் உந்தி -என்ற அவயவங்கள் –
மின்பத்தி செயும் -மின்னல்கள் ஒழுங்காகத் தோன்றப் பெற்ற -அணிந்துள்ள திரு ஆபரணங்கள் ஒளி
பச்சை மா முகில் போல்-கரிய திருமேனி
இல் பொருள் உவமை –
அழகர் காத்தும் இன்பத்தில் இருத்தியும் வைப்பர் கருணை செய்தே –பேரின்பத்தில் நிலை நிறுத்தியும் பரமபதத்தில் வைத்து அருள்வர் –
—————————————————————-
செய்தவர் ஆக வருந்தியும் தீர்த்தத் துறை படிந்தும்
கைதவர் ஆகமம் கற்றும் என் ஆம் கடற்பார் மருப்பில்
பெய்த வராகவனை மால் அலங்காரனை பேர் இலங்கை
எய்தவ ராகவ என்று ஏத்த நீங்கும் இரு வினையே –10-
செய்தவர் ஆக வருந்தியும் -தவத்தை யுடையவராக உடலும் உள்ளமும் வருந்தியும் -செய்த தவம் -செவ்விய தவம் என்றுமாம்
தீர்த்தத் துறை படிந்தும் –
கைதவர் ஆகமம் கற்றும்-வஞ்சகர்களான பிற மதத்தர்வர்கள் யுடைய ஆகம நூல்களை ஓதி யுணர்ந்தும்
என் ஆம் -யாது பயன் யுண்டாம்
கடற்பார் மருப்பில் பெய்த வராகவனை -ஸ்ரீ வராஹ நாயனாராக திரு வவதாரம் செய்து அருளினவனை –
பருமை யுடையது பார் -பார்க்கப் படுவது பார் -காரணப் பொருள் –
மால் அலங்காரனை -பெருமை உள்ள அழகரை
பேர் இலங்கை எய்தவ ராகவ
என்று ஏத்த நீங்கும் இரு வினையே —
——————————————————————
தலைவியின் ஆற்றாமையை தோழி தலைவனுக்கு கூறல் –
வினைக்கும் மருந்து அரிக்கும் பிணி மூப்புக்கும் வீகின்ற வே
தனைக்கும் மருந்து அன்ன தாள் அழகா செய்ய தாமரை அங்
கனைக்கும் அருந்து அமுதே அருளாய் நின்னைக் காதலித்து
நினைக்கும் அருந்ததி தன் உயிர் வாழ்க்கை நிலை பெறவே –11-
வினைக்கும்-புண்ய பாப ரூபா கருமங்களுக்கும்
மருந்து அரிக்கும் பிணி மூப்புக்கும் -மருந்துக்கு வசப்படாமல் அழியும் படி செய்யும் நோய்கள் கிழத் தன்மைக்கும்
இவற்றை ஒழிப்பதற்கும்
வீகின்ற வே தனைக்கும் -மரண வேதனையை போக்குதற்கும்
மருந்து அன்ன -பிணி பசி மூப்பு மரணத் துன்பங்களை நீக்க வல்ல தேவாம்ருதத்தை போன்ற
தாள் அழகா
செய்ய தாமரை அங்கனைக்கும் அருந்து அமுதே-அங்கனா -அழகிய அங்கங்கள் உடைய திருமகளுக்கும் நுகர்தற்கு உரிய அமிர்தமாக உள்ளவனே
அருளாய் நின்னைக் காதலித்து நினைக்கும் அருந்ததி தன் -அருந்ததி போன்ற -இவளது – உயிர் வாழ்க்கை நிலை பெறவே —
வெளிப்படையாக வந்து தோன்றி இவளை திருமணம் செய்து கைக் கொள்ள வேண்டும் என்கிறாள் தோழி –
மானச சாஷாத்காரம் மட்டுமே போதாது என்கிறாள் -பெரிய பிராட்டியாரைப் போலே இவளையும் நித்ய அநபாயினி ஆக்கி அருள வேணும் -என்கிறாள் –
————————————————————————————–
நிலையாமை ஆன உடலும் உயிரும் நினைவும் தம்மில்
கலையா மையானம் கலக்கு முன்னே கங்கை வைத்த சடைத்
தலை ஆம் ஐ ஆனனன் தாமரையான் தொழும் தாள் அழகன்
அலை ஆமை ஆனவன் மாலிருஞ்சோலை அடை நெஞ்சமே –12-
நெஞ்சமே –
நிலையாமை ஆன உடலும்
உயிரும் நினைவும் தம்மில் கலையா
மையானம் -மயானம் -கலக்கு முன்னே -அடைவதற்கு முன்பே
கங்கை வைத்த சடைத் தலை ஆம் ஐ ஆனனன் -ஐம் முகனான சிவனும்
சக்தியோஜாதம் -வாம தேவம் -அகோரம் -தத் புருஷம் -ஈசானாம் -ஐந்து முகங்கள் –
தாமரையான் -பிரமனும்
தொழும் தாள்
அழகன்
அலை ஆமை ஆனவன் -திருப் பாற் கடலுள் ஸ்ரீ கூர்ம வடிவாய் திரு அவதரித்தவனும்
மாலிருஞ்சோலை அடை –விரும்பி உட்கொண்டு தியானிப்பாய் –
பயனல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே புயன் மழை வண்ணர்புரிந்து உறை கோயில்
மயன் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை அடைவது கருமமே –
——————————————————————————
நெஞ்சம் உருக்கும் உயிர் உருக்கும் தொல்லை நீள் வினையின்
வஞ்சம் முருக்கும் பவம் முருக்கும் வள் துழாய் அழகர்
கஞ்ச முருக்கு மலர் வாய்த் திரு நண்பர் கஞ்சனுக்கு
நஞ்சம் உருக்குவளை ஆழி அன்னவர் நாமங்களே –13-
கஞ்ச முருக்கு மலர் வாய்த் திரு நண்பர்
தாமரை மலரில் வீற்று இருக்கும் -பசாலம் பூ போன்ற சிறந்த திருவாயை யுடைய திருமகளுக்கு கேள்வன்
கஞ்சனுக்கு நஞ்சம்
உருக்குவளை ஆழி அன்னவர் -நீலோற்பல மலரையும் கடலையும் ஒத்த திருமேனி யுடையவர் –
குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமால் -பெரியாழ்வார்
நஞ்ச முருக்கும் வளை யாழி யன்னவர் -என்ற பாடம் கொண்டு கஞ்சனுக்கு விஷமாய் தோன்றியவரும்
உலகத்தை வளைந்துள்ள கடலைப் போன்ற எம்பெருமான் என்றும்
சங்கினை யுடைய கடல் போன்றவர் என்றுமாம் –
வள் துழாய் அழகர் நாமங்களே-செழிப்பான திருத் துழாய் மாலையைத் தரித்த அழகர் யுடைய திரு நாமங்கள்
நெஞ்சம் உருக்கும் உயிர் உருக்கும்
தொல்லை நீள் வினையின் வஞ்சம் முருக்கும் -வஞ்சனையை அழிக்கும்
பவம் முருக்கும் -பிறப்பை ஒழிக்கும்-
—————————————————————————-
நாமங்கள் ஆவி நழுவும் தனையும் நவின்று அவரைத்
தாமங்களாவி- தாம் அங்கு அளாவி -மனத்துள் வைப்பார் தண்டலை யின் அகில்
தூமங்கள் ஆவி மணம் நாறும் மாலிருஞ்சோலை அன்பர்
சேமம் களாவின் கனி அனை யார் பதம் சேருவரே –14-
நாமங்கள் ஆவி நழுவும் தனையும் நவின்று
அவரைத் தாமங்களாவி- திரு நாம சங்கீர்த்தனம் செய்து
தாம் அங்கு -திருமாலிருஞ்சோலை -அளாவி –அடைந்தது பற்றி
மனத்துள் வைப்பார் -தியானித்து
தண்டலை யின் -சோலைகளிலே
ஆவி -குளங்களிலே -ஹவிஸ் திருமணம் என்றுமாம்
அகில் தூமங்கள் மணம் நாறும் மாலிருஞ்சோலை
மாடுயர்ந்து ஓமப்புகை கமழும் தண் திருவல்ல வாழ் -போலே
தூமம் கள் ஆவி -அகில் புகை –தேன் -ஹவிஸ் புகை -மணம் கமழும் என்றுமாம்
அன்பர் -அனைத்து உயிர்கள் இடத்திலும் அன்பரையும்
சேமம் -ரஷகராயும் -இன்ப மயமானவர் என்றுமாம்
களாவின் கனி அனை யார் பதம் சேருவரே -களாப் பழம் ஒத்த எம்பெருமான் திருவடிகளை சேருவர்
கனங்கனி வண்ணா கண்ணா -திருமங்கை ஆழ்வார்
த்ரிகரணங்களாலும்-மனம் மொழி காயம் -தியானித்து திருநாமம் சங்கீர்த்தனம் செய்து வணங்கி அவன் அடி சேர்வர்
திருவடியே வீடாகும் –
———————————————————————————–
சேரா தகாத நரகு ஏழ் தலை முறை சேர்ந்தவர்க்கும்
வாராது அகாதம் வசை பிணி பாவம் மறி கடல் முன்
தூராத காதங்கள் தூர்த்தானை மாலிருஞ்சோலையில் போய்
ஆராத காதலுடன் பணி வீர் என் அழகனையே –15-
ஆராத காதலுடன்-போய் -ஆராத காலத்துடன் பணிவீர் -மத்திம தீபமாக -கொண்டு
மாலிருஞ்சோலையில் போய்
முன்
மறி கடல்
தூராத காதங்கள் தூர்த்தானை -எவராலும் எந்நாளிலும் தூர்க்கப்படாத
அநேக காத தூரம் அளவும் குரங்குகளால் தூரத்து மலையால் அணை கட்டி
என் அழகனையே –
பணி வீர்-
அங்கனம் வணங்கினால்
ஏழ் தலை முறை சேர்ந்தவர்க்கும்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் -பகவத் பிரபாவம் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லக் கீழும் மேலும் வெள்ளம் இடும் –
தகாத நரகு சேரா –
வாராது அகாதம் வசை பிணி பாவம் -ஆள்;அமான கடப்பதற்கு அரிய-பளிப்பும் நாடும் தீ வினையும் நேரிடாது –
————————————————————————
பாங்கி விடு தூது —
அழக்கன்றிய கருங்கண் ணிக்குக்கண்ணி அளித்திலரேல்
வழக்கு அன்றி முன் கொண்ட வால் வளை கேளும் மறுத்தது உண்டேல்
குழக்கன்றின் பின் குழல் ஊது அலங்காரர்க்கு கோதை நல்லீர்
சழக்கு அன்றில் வாய் பிளந்தால் உய்யலாம் என்று சாற்றுமினே –16-
கோதை நல்லீர்
அழக்கன்றிய கருங்கண் ணிக்கு-கண்ணீர் விட்டு அழுதலினால் கன்றிப்போன கருமையான கண்களை யுடைய இம்மகளுக்காக
கண் -ஞான வைலஷண்யம்
க்கண்ணி அளித்திலரேல்-தலைவர் தமது மாலையைக் கொடாராயின் -நிரதிசய ஆனந்தத்தை தந்திலர் ஆகில் –
கணனிக்கு கண்ணி அளித்திலர் ஆகில் -சொல் நயம் -சொல் பின் வரு நிலை அணி –
வழக்கு அன்றி முன் கொண்ட வால் வளை கேளும் –
நியாயமாக வன்றி முன்பு இவள் இடம் இருந்து வலியக் கவர்ந்து கொண்ட ஒள்ளிய வளையல்களைத் தரும்படி கேளுங்கள்
கைப் பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர் செய்ப் புரள வோடும் திரு வரங்க செல்வனார் –
எம்மானார் என்னுடைய கழல் வளையை தாமும் கழல் வளையே யாக்கினரே –
வளை -அனன்யார்ஹதா சிஹ்னம்
மறுத்தது உண்டேல் -அவற்றையும் தாராது அவர் தடை சொல்வது யுண்டானால் –
குழக்கன்றின் பின் குழல் ஊது அலங்காரர்க்கு –
இளமையான கன்றுகளின் பின்னே புல்லாங்குழலை ஊதிச் சென்ற அழகப பிரானார் ஆகிய அத்தலைவர்க்கு
சழக்கு அன்றில் வாய் பிளந்தால் உய்யலாம் என்று சாற்றுமினே –
குற்றத்தை யுடைய அன்றில் பறவையின் வாயைக் கிழித்தால் தான் இவள் பிழைத்தல் கூடும் என்று சொல்லுங்கோள் –
————————————————————————-
தலை மகனது மடலூர்தல் துணிவைத் தோழி செவிலுக்கு உணர்த்தல் –
சாற்றுக் கரும்பனை கூற்று என்னும் ஆசை தமிழ் மலையைக்
காற்றுக்கு அரும்ப நையும் கண் படாள் அலங்காரற்கு அண்டர்
ஏற்றுக்கு அரும்பு அனையக் கொங்கையாள் கொண்ட இன்னலுக்கு
மாற்றுக் கரும்பனை அல்லாது வேறு மருந்து இல்லையே –17-
இம் மங்கை
சாற்றுக் கரும்பனை -கரும்பை வில்லாக யுடைய மன்மதனை
கூற்று என்னும் -யமன் என்று சொல்லுவாள்
ஆசை தமிழ் மலையைக் காற்றுக்கு -தமிழ் வளர்த்த பொதிய மலையில் நின்றும் தோன்றுவதுமான தென்றல் காற்றுக்கு
அரும்ப நையும் -அரும் பல் நையும் -அது சிறியதாக வீசும் பொழுது எல்க்லாம் வருந்துவாள்
கண் படாள் -நள் இரவிலும் உட்படத் துயில் கொள்வது இல்லை
ஆகவே
அண்டர் ஏற்றுக்கு-தேவர்களில் சிங்கம் போன்ற
அலங்காரற்கு -அழகருக்கு -அழகப பிரான் விஷயமாக –
அரும்பு அனையக் கொங்கையாள் கொண்ட –
கோங்கு அரும்பை தாமரை அரும்பை வடிவில் ஒத்த ஸ்தனங்களைக் கொண்ட இவள் கொண்ட
இன்னலுக்கு
மாற்றுக் கரும்பனை அல்லாது -மடலூர்தல் அல்லாமல்
வேறு மருந்து இல்லையே –காதல் நோயைத் தீர்க்க வேறு பரிகாரம் இல்லை –
————————————————————————
மருந்து உவந்தார் தொழும் மாலிருஞ்சோலை மலை அழகர்
அருந்துவம் தாரணி என்று அயின்றார் அடல் ஆயிர வாய்
பொருந்து வந்து ஆர் பணிப் பாயார் விதுரன் புது மனையில்
விருந்து உவந்தார் அடியார்க்கு இல்லை நோயும் வெறுமையுமே –18-
அருந்துவம் தாரணி என்று அயின்றார் -பூமியை உண்போம் என்று உண்டு அருளியவரும்
அடல் ஆயிர வாய் பொருந்து வந்து ஆர்-காற்றை உணவாகக் கொள்ளும் – பணிப் பாயார்
விதுரன் புது மனையில் விருந்து உவந்தார்-கிருஷ்ணன் பொன்னடி சாத்தப் பட்டதால் புதுமனை –
மருந்து உவந்தார் தொழும் மாலிருஞ்சோலை மலை அழகர் -சாவா மருந்தான அமிர்தத்தை விரும்பி உண்ட தேவர்கள் வணங்கப் பெற்ற அழகர்
அமரரோடு கோனும் சென்று திரிசுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலை யதே -பெரியாழ்வார்
அடியார்க்கு இல்லை நோயும் வெறுமையுமே –
———————————————————————–
தலை மகன் இளமைக்குச் செவிலி இரங்குதல்
வெறுத்தவரை கஞ்சனை செற்றுளார் விடை வெற்பர் வெங்கண்
கறுத்த வரைக்கு அஞ்சல் என்று வந்தார் கனகாம் பரத்தைப்
பொறுத்த அரைக்கு அஞ்சன மேனிக்கு ஆவி புலர்ந்து உருகிச்
சிறுத்த வரைக் கஞ்சம் கூப்பும் என் பேதைக்கு என் செப்புவதே –19-
வெறுத்தவரை கஞ்சனை செற்றுளார் -தன்னை வெறுத்தவர்களையும் கஞ்சனையும் கொன்றிட்டவரும்
வெங்கண் கறுத்த வரைக்கு அஞ்சல் என்று வந்தார்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரைந்து வந்து ரஷித்தவரும்
விடை வெற்பர்-விருஷப கிரியில் எழுந்து அருளி இருக்கும் அழகர்
கனகாம் பரத்தைப் பொறுத்த அரைக்கு -கனக அம்பரம் -பீதாம்பரம் தரித்த திரு வரியின் அழகைக் குறித்தும்
அஞ்சன மேனிக்கு ஆவி புலர்ந்து உருகிச் -ஈடுபட்டு உயிர் வருந்தி கரைந்து
சிறுத்த வரைக் கஞ்சம் கூப்பும்-வரை சிறுத்த கஞ்சம் -உத்தம லஷனமான ரேகைகளை யுடைய
சிறிய தாமரை மலர் போன்ற திருக்கைகளைக் கவித்து தொழும்
என் பேதைக்கு என் செப்புவதே –என் பெண்ணின் நிலைமையைக் குறித்து ஒன்றும் சொல்லத் தரம் இல்லை -என்றபடி –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயேல்-
———————————————————————
செப்போ தனம் செழுந்துப் போ செவ்வாய் என்று சேயிழை யார்க்கு
ஒப்பு ஓத நெஞ்சு உருகித் திரிவீர் கனல் ஊதை மண் விண்
அப்பு ஓதனம் என்று அமுது செய்தார் அலங்காரர் பொற்றாள்
எப்போது அனந்தல் தவிர்ந்து ஏத்த நீங்கள் இருக்கின்றதே –20-
-தனம் செப்போ –ஸ்தனங்கள் செப்போ –
செழுந்துப் போ செவ்வாய் -செழும் துப்போ -சிவந்த வாய் செழுமையான பவளமோ
என்று சேயிழை யார்க்கு -ஒப்பு ஓத நெஞ்சு உருகித் திரிவீர் வடிவும் நிறமும் பற்றி உவமைகள் எடுத்துச் சொல்லி
நெகிழ்ந்து கரைந்து வீணே திரிகின்றவர்களே
கனல் ஊதை மண் விண் அப்பு ஓதனம் என்று அமுது செய்தார்
அக்னி-காற்று -நிலம் -ஆகாயம் -நீர் -ஆகிய பஞ்ச பூதங்களை உணவாக உட்கொண்ட
அலங்காரர் -அழகருடைய
பொற்றாள் எப்போது அனந்தல் தவிர்ந்து –தூக்கம் சோம்பல் -தாமச குணம் ஒழிந்து –ஏத்த நீங்கள் இருக்கின்றதே
—————————————————————————-
இருக்கு அந்தரத்து அனைவோர்களும் ஓதி இடபகிரி
நெருக்கம் தரத்தனை ஏத்த நின்றானை நிறத்த துப்பின்
உருக் கந்தர் அத்தனைத் துன்பு ஒழித்தானை உலகம் உண்ட
திருக் கந்தரத்தானை அல்லாது எண்ணேன் ஒரு தெய்வத்தையே –21—
-அந்தரத்து அனைவோர்களும் -மேல் உலகில் உள்ள எல்லா தேவர்களும்
இருக்கு ஓதி -வேத வாக்யங்களைச் சொல்லி
இடபகிரி நெருக்கம் தரத்தனை ஏத்த நின்றானை -ரிஷப கிரி -திருமாலிருஞ்சோலை நெருக்கம் உண்டாகுமாறு
திரண்டு தன்னை ஸ்துதிக்க நின்றானை
நிறத்த துப்பின் உருக்-நிறம் விளங்கப் பெற்ற சிறந்த பவளம் போன்ற வடிவு நிறத்தை யுடைய
கந்தர் அத்தனைத் -முருகக் கடவுளுக்கு தந்தையாகிய சிவபிரானுக்கு
துன்பு ஒழித்தானை -துன்பம் ஒழித்து அருளிய
உலகம் உண்ட திருக் கந்தரத்தானை -திருக்கண்டத்தை -அல்லாது எண்ணேன் ஒரு தெய்வத்தையே –
————————————————————————–
தெய்வம் பல அவர் நூலும் பல அவை தேர் பொழுதில்
பொய் வம்பு அல என்று தோன்றும் புல்லோர்கட்கு போத நல்லோர்
உய்வம் பலனும் அவனே என்று ஓதி உணர்வர் நெஞ்சே
கொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலைக் கொண்டலையே –22-
நெஞ்சே
தெய்வம் பல
அவர் நூலும் பல
அவை தேர் பொழுதில் பொய் வம்பு அல என்று தோன்றும் புல்லோர்கட்கு
அவற்றை ஆராய்ந்தால் பொய்மை யுடையவை பயன் அற்றவை அல்ல என்று அற்பர்களுக்குத் தோன்றும்
போத நல்லோர் -நல்ல ஞானம் உடைய நல்லவர்களோ –
உய்வம் -இவ்வழி எல்லா வழி செல்லாது நல் வழி சென்று உய்யக் கடவோம்
பலனும் அவனே -உபாயம் மட்டும் அல்ல உபேயமும் அவனே என்று –
என்று ஓதி உணர்வர்
கொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலைக் கொண்டலையே —
நிறமும் பயனும் பற்றி வந்த உவமை ஆகு பெயர் —
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் -சோலை மலைக் கொண்டலை –
புயன் மழை வண்ணர் புரிந்து உறை கோயில் மயன் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை –
————————————————————————–
கொண்டு அலையா நிற்கும் ஐம் புலக் கோள் மகரங்களின் ஈர்ப்பு
உண்டு அலை ஆர் பிறவிக் கடல் மூழ்குவர் உத்தமனை
தண்டலை ஆர் திரு மாலிருஞ்சோலைத் தனிச் சுடரை
புண் தலையால் வணங்கார் அணங்கு ஆர் வினை போக என்றே –23-
உலகில் பேதைகளாய் உள்ளவர்கள்
கொண்டு அலையா நிற்கும் ஐம் புலக் கோள் மகரங்களின்-ஈர்ப்பு உண்டு
மனத்தை தம் வசமாகக் கொண்டு வருத்தி நிற்கிற ஐம்புலன்கள் ஆகிய வலிய சுறா மீன்களினால் ஈர்ப்பு உண்டு -இழுக்கப் பட்டு
அலை ஆர் பிறவிக் கடல் மூழ்குவர்
உத்தமனை
தண்டலை ஆர் திரு மாலிருஞ்சோலைத் தனிச் சுடரை
புண் தலையால் -தசை பொருந்திய தங்கள் தலைகளைக் கொண்டு –
வணங்கார் அணங்கு ஆர் வினை போக என்றே –துன்பம் நிறைந்த தமது கர்மங்கள் ஒழிவனவாக -என்று நமஸ்கரிக்க மாட்டார்கள் –
—————————————————————————-
என்று உதரம் கலந்தேன் அற்றை நான்று தொட்டு இற்றை வரை
நின்று தரங்கிக் கின்றேற்கு அருள்வாய் நெடும் கான் கடந்து
சென்று தரங்கக் கடல் தூரத்து இலங்கையில் தீயவரைக்
கொன்று தரம் குவித்தாய் சோலை மா மலைக் கோவலனே –24–
நெடும் கான் கடந்து சென்று
தரங்கக் கடல் தூரத்து
இலங்கையில் தீயவரைக் கொன்று தரம் குவித்தாய்
சோலை மா மலைக் கோவலனே –பசுக்களை காக்க வல்லவன் –உயிர்களைக் காக்க வல்லவன் கோபாலன் -மருவி –
என்று உதரம் கலந்தேன் -தாயின் வயிற்றில் வந்து புகுந்தேனோ –
அற்றை நான்று தொட்டு இற்றை வரை
நின்று தரங்கிக் கின்றேற்கு -இடைவிடாது அலைகின்ற எனக்கு
அருள்வாய் -இங்கனம் இனி மேல் அலையாத படி கருணை புரிவாய் –
——————————————————————————–
கோவலன் பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலை மலைக்
காவலன் பாற் பாடல் கண் துயில் மால் அலங்காரன் என்றே
பாவல் அன்பால் பணிவார் அணி வானவர் ஆகி மறை
நாவலன் பார்ப்பதி நாதன் நண்ணாப் பதம் நண்ணுவரே –25-
கோவலன்-ஆயனாய் வளர்ந்தவன் –
பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலை மலைக் காவலன்-குஞ்சுகள் உடனே மயில்கள் சூழப் பெற்ற குளிர்ந்த திருமால் இருஞ்சோலைக்கு தலைவன்
பாற் பாடல் கண் துயில் மால்
அலங்காரன்
என்றே
பாவல் அன்பால் -பணிவார்–பரவுதல் உடைய மிக்க பக்தியினால் அப்பெருமானை வணங்கி
அணி வானவர் ஆகி-மறுமையிலே அழகிய முக்தர்களாகி
மறை நாவலன் பார்ப்பதி நாதன் நண்ணாப் பதம் நண்ணுவரே –வேதம் வல்ல நாவை நாவை யுடையவனான பிரமனும்
பார்வதி நாயகனான சிவபிரானும் அடைய மாட்டாத பரமபதத்தை அடைவார்கள் –
கோவலன் -கோபாலன்
காவலன் -லோக சம்ரஷகன்
மறை நாவலன் –
நண்ணாப் பதம் நண்ணுவர் -தொடை முரண் அணி –
————————————————————————————
கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply