ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கடத்தந்தாதி -76-100-

ஞானக் கண் தா கனவு ஒக்கும் பவம் துடை நஞ்சு இருக்கும்
தானக் கண்டா கனற்சோதி என்று ஏத்தும் வன் தாலமுடன்
வானக் கண் தா கன வண்ணா என்று ஒது ஒலி வந்து அடையா
ஈனக் கண்டா கனற்கு ஈந்தான் பர கதி என் அப்பனே –76-

நஞ்சு இருக்கும் தானக் கண்டா -விஷம் தங்கும் இடம் -கழுத்தை யுடையவனே –
கனற்சோதி -அனல் பிழம்பின் வடிவமானவனே -கனச்சோதி-திரண்ட சோதி வடிவம் ஆனவனே –
ஞானக் கண் தா –
கனவு ஒக்கும் பவம் துடை-பிறப்பை ஒழித்து அருள்வாய் -கண்ட கனாவின் பொருள் போல் யாவும் பொய் அன்றோ
என்று ஏத்தும் -என்று சொல்லி சிவ பிரானைத் துதிக்கிற
வன் தாலமுடன் -வழிய நாவுடன் கூடி
வானக் கண் தா கன வண்ணா என்று ஒது ஒலி வந்து அடையா –
விஷ கண்டா தழல் வண்ணா என்று துதிப்பவன் முகில் வண்ணா -என்ற
செவிக்கு இனிய காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் -திருச்சந்த விருத்தம்
சொல்லைக் கேட்காமல்
திருமாலைத் துதிக்கும் ஓசை தனது செவிகளில் வந்து நுழையப் பெறாத
ஈனக் கண்டா கனற்கு ஈந்தான் பர கதி என் அப்பனே —

————————————————————————–

என் அப்பன் ஆகத்துப் பொன் நூலன் வேங்கடத்து எந்தை துயில்
மன் அப்பன் நாகத்துக்கு அஞ்சல் என்றான் பல் மணி சிதறி
மின்னப் பல் நாகத்துப் பாய்ந்தான் கதை அன்றி வெவ்வினைகள்
துன்னப் பல் நா கத்துப் பொய்ந்நூல் புகா என் துளைச் செவிக்கே –77–

என் அப்பன் ஆகத்துப் பொன் நூலன்-பொன்னால் ஆகிய யஜ்ஞ்ஞோபவீதம் தரித்தவன்
ஆகத்தில் தாயாரையும் பொன் நூலூஅலையும் தரித்தவன் என்றுமாம்
வேங்கடத்து எந்தை துயில் மன் அப்பன்-கண் வளர்ந்து அருள கடலை யுடையவன் -அப்பில் துயில் மன்னுபவன் –
நாகத்துக்கு அஞ்சல் என்றான் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அபய பிரதானம் பண்ணி அருளியவன்
பல் மணி சிதறி மின்னப் பல் நாகத்துப் பாய்ந்தான்-பல முடிகளிலும் பல மாணிக்கம் தெறித்து
மின்னல் போலே விளங்கும் பற்களை யுடைய காளியன் பாம்பின் மேலே வலியப் பாய்ந்தவன்
கதை அன்றி -திவ்ய சேஷ்டிதங்கள் பற்றிய கதைகளை தவிர
வெவ்வினைகள் துன்னப்-கொடிய வினைகள் நெருங்க
பல் நா கத்துப் பொய்ந்நூல் புகா என் துளைச் செவிக்கே —
பர சமயத்தாரது-பல நாக்குகள் கத்தும் பொய்யான சமய நூல்கள் பொருள்கள் எனது செவித் துளையில் நுழையாது
பெரியார்கள் இடம் நுண்ணிய பொருளைக் கேட்கவே துளைச் செவி என்கிறார்

———————————————————————-

நாரை விடு தூது

செவித்தலை வன்னியன் சூடு உண்ட வேய் இசை தீப்பதும் யான்
தவித்து அலை வன்மயலும் தமர் காப்பும் தமிழ்க் கலியன்
கவித்தலைவன் திரு வேங்கடத்தான் முன் கழறுமின் பொன்
குவித்து அலை வந்து உந்து கோனேரி வாழும் குருகினமே –78-

பொன் குவித்து அலை வந்து உந்து கோனேரி வாழும் குருகினமே —
நீங்கள் செய்த பாக்கியம் எனக்கு கிட்ட வேண்டுமே -நானும் திருவேங்கடமுடையான் உடைய கோனேரியில் வாழ வேண்டாவோ
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே –அங்குத்தை வாசம் தானே போக ரூபமாய் இருக்கும் என்கை-
வன்னியன் சூடு உண்ட வேய் இசை-நெருப்பில் சுடப்பட்ட மூங்கிலின் ஆகிற புல்லாங்குழலின் இசைப் பாட்டு –
செவித்தலை தீப்பதும் -எனது காதுகளின் இடத்தைச் சுடுவதையும் –
தீங்குழல் ஈருமாலோ -நெருப்பு போலே சுடும் வேய்ங்குழல் ஓசை என்றுமாம்
யான் தவித்து அலை வன்மயலும்-யான் விரக தாபம் கொண்டு வருந்துகிற வலிய எனது மோகத்தையும்
தமர் காப்பும் -பாங்கியர் செவிலியர் முதலிய உற்றார் சைத்ய உபசாரம் செய்து எனது பாதுகாக்கும் வகையும்
தமிழ்க் கலியன் கவித்தலைவன் -நாலு கவிப் பெருமாள் -என்று விருது வாசிக்கத் தக்க
திருமங்கை ஆழ்வார் திவ்ய ஸூகத்திகளுக்கு பாட்டுடைத் தலைவனான திரு வேங்கடத்தான் முன் கழறுமின்
பிரபஞ்ச விஷய வெறுப்பும் பகவத் விஷய அனுபவத்தில் ஆர்த்தியும் தோன்ற அருளிச் செய்கிறார்

——————————————————————————

குருகூரர் அங்க மறைத் தமிழ் மாலை குலாவும் தெய்வ
முருகு ஊர் அரங்கர் வட வேங்கடவர் முன் நாள் இலங்கை
வரு கூரர் அங்கம் துணித்தார் சரணங்கள் வல்வினைகட்கு
இரு கூர் அரங்கள் கண்டீர் உயிர்காள் சென்று இரவுமினே –79-

உயிர்காள்-பிராணிகளே
குருகூரர் அங்க மறைத் தமிழ் மாலை -திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த ஆறு பிரபந்தங்கள் ஆகிய அங்கங்கள் யுடைய
சிஷை வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -போல்வன –
நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு தமிழ் வேதமாகிய பா மாலைகளில்
குலாவும் தெய்வ முருகு-பொருந்திய தெய்வத் தன்மை யுள்ள தெய்வ மணம்
ஊர் அரங்கர் -வீசப்பெற்ற ஸ்ரீ ரங்க நாதரும்
முன் நாள் இலங்கை வரு கூரர் அங்கம் துணித்தார்
வட வேங்கடவர்
சரணங்கள் வல்வினைகட்கு இரு கூர் அரங்கள் கண்டீர் -கூரிய வாள் விசேஷங்கள் ஆகும்
சென்று இரவுமினே -அவன் இடம் சென்று பிராரத்து அருள் பெறுவீர் –

——————————————————————————

இரணிய நாட்டன் இரணியன் ஈர் ஐந் தலையன் கஞ்சன்
முரணிய கோட்டின் நகத்தின் சரத்தின் முன் தாளின் துஞ்சத்
தரணியில் குத்தி இடந்து எய்து உதைத்தவன் சர்ப்ப வெற்பன்
அரணிய கேழல் அரி ராகவன் கண்ணன் ஆகி வந்தே –80-

சர்ப்ப வெற்பன் -சேஷ கிரியில் எழுந்து அருளி இருப்பவனான திருமால் –
அரணிய கேழல் -அரண் போலே ரஷிக்கும் தன்மை யுள்ள வராக மூர்த்தியும்
அரணிய -காட்டில் சஞ்சரிக்கும் என்றுமாம்
அரி-சிங்கப் பிரானும்
ராகவன்-சக்ரவர்த்தி திருமகனும்
கண்ணன் -ஸ்ரீ கிருஷ்ணனாகவும்
ஆகி வந்தே -திருவவதரித்து -முறையே
இரணிய நாட்டன் -ஹிரண்யாஷன்-பொன்னிறமான கண்கள் கொண்டவன் நாட்டம் -கண்
இரணியன்
ஈர் ஐந் தலையன்
கஞ்சன்
முரணிய கோட்டின் -வலிமை யுள்ள கொம்பினாலும்
நகத்தின்-நகங்களினாலும்
சரத்தின் -அம்புகளாலும் -கரத்தின் -பாட பேதம் -கைகளால் அம்பு தொடுத்து என்றபடி
முன் தாளின் -முந்தி நீட்டிய திருவடிகளாலும்
துஞ்சத்
தரணியில்
குத்தி
இடந்து
எய்து
உதைத்தவன்
நிரல் நிறை அணி யாக அருளிச் செய்கிறார் –

————————————————————————-

வந்தித்து இருக்கு மறை போற்றும் வேங்கட வாண மலர்
உந்தித் திருக் குங்குமம் அணி மார்ப உள் வஞ்சனையும்
புந்தித் திருக்கும் வெகுளியும் காமமும் பொய்யும் விட்டுச்
சிந்தித் திருக்குமது எக்காலம் யான் உன் திருவடியே –81-

வந்தித்து போற்றும் -போற்றி வணங்கி -துதிக்கப் பெற்ற
இருக்கு மறை -ருக் போன்ற வேதங்களால்
-வேங்கட வாண
மலர் உந்தித் திருக் குங்குமம் அணி மார்ப -திரு உந்திக்கமலம் -பெரிய பிராட்டியார் -குங்குமச் சாந்து அணிந்த திரு மார்ப
உள் வஞ்சனையும் -மனத்தில் அடங்கிய வஞ்சனைகளையும்
புந்தித் திருக்கும்-அறிவின் மாறுபாட்டையும்
வெகுளியும் -கோபத்தையும்
காமமும்
-சிற்றின்ப ஆசையையும்
பொய்யும் –
விட்டுச் சிந்தித் திருக்குமது எக்காலம் யான் உன் திருவடியே-

———————————————————————

திருவடி வைக்கப் புடவி பற்றாது அண்டம் சென்னி முட்டும்
கருவடிவைக் கலந்து ஆற்றா எண் திக்கும் கடல் மண் கொள்வான்
பொரு வடிவைக் கனல் ஆழிப் பிரான் புனல் ஆழி கட்டப்
பெரு வடிவைக் கண்ட அப்பன் எவ்வாறு அடி பேர்ப்பதுவே –82-

பொரு வடி -போர் செய்கின்ற -பலவகைப் பட்ட திவ்யாயுதங்களில் -தேர்ந்து எடுத்த
வைக்-கூர்மையான
கனல் ஆழிப்-அக்னியைச் சொரிகிற சக்ராயுதத்தை யுடைய
பிரான் -தலைவனும்
ஆழி கட்டப் -சமுத்ரத்தை அணை கட்டிக் கடக்க
புனல் பெரு வடிவைக் கண்ட -அக்கடலின் நீர் மிக்க வற்றுதலை அடையும் படி செய்து அருளிய
அப்பன்-திருவேங்கடமுடையான்
திருவிக்கிரம அவதாரம் செய்து அருளிய காலத்தில்
திருவடி வைக்கப் புடவி பற்றாது
அண்டம் சென்னி முட்டும்
கருவடிவைக் கலந்து ஆற்றா எண் திக்கும்
இங்கனம் பெரு வடிவு கொண்ட திருமால்
கடல் மண் கொள்வான் -கடல் சூழ்ந்த உலகத்தில் மூன்று அடி அளந்து கொள்வதற்காக
எவ்வாறு அடி பேர்ப்பதுவே –
பெருமை அணி கொண்டு அருளிச் செய்கிறார் –

——————————————————————–

பேர் ஆனைக் கோட்டினைப் பேர்த்தானை வேங்கடம் பேணும் துழாய்த்
தாரானை போதானைத் தந்தானை எந்தையை சாடு இறப் பாய்ந்து
ஊர் ஆனை மேய்த்து புள் ஊர்ந்தானை பஞ்சவர்க்கு உய்த்து நின்ற
தேரானை நான் மறை தேர்ந்தானை தேரும் நும் தீது அறுமே –83-

பேர் ஆனைக் கோட்டினைப் பேர்த்தானை
வேங்கடம் பேணும் துழாய்த் தாரானை
போதானைத் தந்தானை
எந்தையை
சாடு இறப் பாய்ந்து -சகடா சுரனை முறியும் படி தாவி உத்தைத்து
ஊர் ஆனை மேய்த்து -பசுக்களை மேய்த்து
புள் ஊர்ந்தானை
பஞ்சவர்க்கு உய்த்து நின்ற தேரானை
நான் மறை தேர்ந்தானை
தேரும் நும் தீது அறுமே -அறிந்து ஸ்துதியுங்கோள் -உங்கள் துன்பங்கள் நீங்கும்
பேரானை -பேர்த்தானை என்றும் -தாரானை தந்தானை -என்றும் -ஊரானை ஊர்ந்தானை -தேரானை தேர்ந்தானை –
விரத ஆபாச அலங்காரம் -முரண் விளந்தழிவணி -சொல்லிலும் பொருளிலும் முரணுதல் முரணே

தொலைந்தானை ஓதும் தொலையானை யன்னை சொல்லால் மகுடம் கலைந்தானை ஞானக் கலையானை
யாய்ச்சி கலைத் தொட்டிலோடு அலைந்தானை பாலின் அலையானை
வாணன் கை யற்று விழ மலைந்தானை சோலை மலையானை
-வாழ்த்து எண் மட நெஞ்சமே -திரு அழகர் திரு வந்தாதி –83-

மாத் துளவத் தாரானை வேட்கை எல்லாம் தந்தானை
மும்மதமும் வாரானை யன்று அழைக்க வந்தானை
காரான மெய்யான யன்பருக்கு மெய்த்தானை
கண் கை கால் செய்யானை வேலை யணை செய்தானை
வையம் எல்லாம் பெற்றானை காணப் பெறாதானை
கண் மலைக்கு கற்றானைக் காத்ததொரு கல்லானை
யற்றார்க்கு வாய்ந்தானை சம்பவள வாயானை
மா முடியப் பாய்ந்தானை யாடரவப் பாயானை -திருநறையூர் நம்பி மேக விடு தூது

———————————————————————

அறுகு ஊடு கங்கை தரித்தான் அயன் அழைத்தாலும் இச்சை
அறு கூடு மால் அடியார் அடிக்கே அப்பன் வேங்கடவன்
மறுகு ஊடு மாதர் ஏறி பூண் எறிக்கும் மதில் அரங்கன்
மறு கூடு நம்மை மருவாமல் வாழ்விப்பன் மா மனமே –84-

மா மனமே -சிறந்த மனமே -பந்த மோஷங்களுக்கு மனமே காரணம் -கொண்டாடி விளிக்கிறார்
அறுகு ஊடு கங்கை தரித்தான் -முடியில் சூடிய அறுகம் புற்களின் இடையே கங்கையையும் தரித்தவனும்
அயன் -பிரமனும்
அழைத்தாலும்-வலிய வந்து தம்மிடம் சேருமாறு கூப்பிட்டாலும்
இச்சை அறு -விருப்பம் கொள்ளாது ஒழிவாய்
கூடு மால்அடியார் அடிக்கே –
அங்கனம் சேர்ந்தால் –
ஊடு மாதர் ஏறி பூண் –மறுகு-எறிக்கும் மதில் அரங்கன்
தம் கணவர் உடன் பிணங்கி மகளிர் கழற்றி எறிந்த ஆபரணங்கள் எடுப்பவர் இல்லாமல் வீதிகளிலே கிடந்தது ஒலி வீசப் பெற்றதும்
மதிள்கள் சூழ்ந்ததுமான ஸ்ரீ ரங்கத்தை யுடைய
அப்பன் வேங்கடவன்
மறு கூடு நம்மை மருவாமல் வாழ்விப்பன் –
பறவை தங்கும் கூடு போன்று உயிர் தங்கும் உடல் –
யமகம் முன் இரண்டு அடிகளிலும் பின் இரண்டு அடிகளிலும் காணலாம் –

————————————————————————-

மாமன் அங்காந்த வல் வாய்ப் புள்ளை ஏவமடித்து பித்தன்
நா மனம் காந்த அன்று ஓட எய்தான் நறும் பூங்கொடிக்குத்
தாமன் அம் காந்தன் திருவேங்கடத்து எந்தை தாள்களில் என்
தீ மனம் காந்தம் கவர் ஊசி போல் என்று சேர்வதுவே –85-

மாமன் -மாமனான கம்சன்
அங்காந்த வல் வாய்ப் புள்ளை ஏவ -பகாசுரனை ஏவ
மடித்து -அதனைக் கொன்று
பித்தன் நா மனம் காந்த அன்று ஓட எய்தான்-சிவன் தன நாவில் பொருந்திய நீர் வற்றுமாறு பாணாசுர யுத்தத்தில் ஓடும்படி எய்தவனும்
நா மன் அம் காந்த -நா உலர என்னும் படி
நறும் பூங்கொடிக்குத் தாமன் அம் காந்தன்
திருவேங்கடத்து எந்தை
தாள்களில் என் தீ மனம் காந்தம் கவர் ஊசி போல் என்று சேர்வதுவே —
இரும்பைக் காந்தம் இழுக்கின்ற வாறு எனைத் திரும்பிப் பார்க்க ஒட்டாமல் திருவடிக் கரும்பைத் தந்து அருள்வாய் என்கிறார் –

————————————————————-

சேரும் மறுக்கமும் நோயும் மரணமும் தீ வினையின்
வேரும் அறுக்க விரும்பி நிற்பீர் வட வேங்கடத்தே
வாரும் மறுக்க அறியான் எவரையும் வாழ அருள்
கூரும் மறுக் கமலை அணி மார்பன் கைக் கோதண்டனே –86–

சேரும்-கரும கதியால் வந்து அடைகின்ற
மறுக்கமும் -மனக் குழப்பங்களும்
நோயும் மரணமும்
தீ வினையின் வேரும் -கொடிய கருமத்தின் மூலத்தையும்
அறுக்க விரும்பி நிற்பீர்– வட வேங்கடத்தே வாரும்
மறுக்க அறியான் எவரையும் -சரணம் அடைந்த எவரையுமே மறுக்காத சரணாகத வத்சலன்
வாழ அருள் கூரும் -அடியார் அனைவரும் வாழ கருணை பொழிபவன்
மறுக் -ஸ்ரீ வத்சம் மறுவையும் -கமலை -பெரிய பிராட்டியாரையும் அணிந்த -அணி மார்பன் கைக் கோதண்டனே —

———————————————————————————————————-

கோதண்டத்தான் நந்தன் வாள் கதை நேமியன் கோல வட
வேதண்டத்தான் அத்தன் இன் இசையான் மண்ணும் விண்ணும் உய்ய
மூதண்டத் தானத்து அவதரித்தான் எனில் முத்தி வினைத்
தீது அண்டத்தான் அத்தனு எடுத்தான் எனில் தீ நரகே –87-

கோதண்டத்தான் நந்தன் வாள் கதை நேமியன்
கோல வட வேதண்டத்தான் -அழகிய திருவேங்கட திருமலை யுடையவன்
அத்தன்-எல்லா உயிர்கட்கும் தலைவன்
இன் இசையான்-வேய்ங்குழல் இனிய இசையை யுடையவன் -இனிய புகழை யுடையவன் என்றுமாம் –
மண்ணும் விண்ணும் உய்ய மூதண்டத் தானத்து அவதரித்தான்
எனில் -மெய்ம்மை உணர்ந்து சொன்னால்
முத்தி -பரமபதம் கிட்டும் -அவதார ரகஸ்ய ஞானமே முக்தி தரும் என்றதாயிற்று
வினைத் தீது அண்ட -ஊழ் வினையின் தீமை வந்து தொடர -கர்ம வசித்தால் நம்மைப் போலே அவனும்
த்தான் அத்தனு எடுத்தான் -தான் அந்த தேகத்தை எடுத்தான் என்று உண்மை உணராமல்
எனில்-சொன்னால்
தீ நரகே –கொடிய நரகமே நேரும்
தராதலத்து மீனவதார முதலானவை வினையின்றி இச்சையானவதாரறிவர் அவரே முத்தராமவரே -திரு அழகர் திருவந்தாதி –

—————————————————————-

நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு நாரியர் மேல்
விரகம் அடங்க மெய்ஞ்ஞானம் வெளி செய வீடு பெற
உரகம் மடங்க நடித்த பொற்றாள் இன்று என் உச்சி வைப்பாய்
வரகமடம் கயல் ஆனாய் வடமலை மாதவனே –88–

வரகமடம் கயல் ஆனாய்-வரம் கமடம் கயல் ஆனாய் -சிறந்த ஆமை மீன் திருவவதாரம் செய்து அருளினாய்
வர -தனித்து சிறந்தவனே என்றுமாம்
வடமலை மாதவனே —
நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு
நாரியர் மேல் விரகம் அடங்க -மகளிர் விஷயமான உண்டாகும் ஆசை தணியவும்
மெய்ஞ்ஞானம் வெளி செய-தத்வ ஞானம் தோன்றவும்
வீடு பெற -பரமபதம் கிடைக்கவும்
உரகம் மடங்க நடித்த பொற்றாள் இன்று என் உச்சி வைப்பாய் -காளியன் தலை மடங்கும்படி நடனம் செய்த திருவடிகளை

காளியன் பொய்கை களங்கப் பாய்ந்திட்டவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

—————————————————————-

மாதிரம் காதல் மனை வாழ்க்கை என்று எண்ணி வான் பொருட்டு
மாதிரம் காதம் பல உழல்வீர் இன்னும் மைந்தன் என்று ஓர்
மாது இரங்காத படி வணங்கீர் அரிமா வொடு கைம்
மா திரங்காது அமர் செய்கின்ற சேட மலையினையே –89-

காதல் மனை வாழ்க்கை-மனையாள் உடன் கூடிய இல்லத்து வாழ்தலை
மாதிரம் -மிக்க நிலை யுள்ளத்து –
என்று எண்ணி
அதற்கு உபயோகமாக
வான் பொருட்டு -மிக்க செல்வத்தை ஈட்டுதற் பொருட்டு
மாதிரம் காதம் பல உழல்வீர் -திக்குகள் தோறும் அநேக காத தூரம் சுற்றி அலைபவர்களே –
இன்னும் மைந்தன் என்று ஓர் மாது இரங்காத படி –
இன்னமும் உங்களைப் புத்திரன் என்று ஒரு பெண் அன்பு செய்யாத படி -பிறப்பு அற்று முக்தி பெறுமாறு
வணங்கீர் அரிமா வொடு கைம் மா திரங்காது அமர் செய்கின்ற சேட மலையினையே –
சிங்கங்கள் உடன் யானைகள் பின் வாங்காமல் போர் செய்யப் பெற்ற
சேஷ கிரி திருவேங்கட திருமலையில் எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமானை வணங்குகள் –

———————————————————————————————

மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று மா மறை நூல்
கலையினர் அக்கருடன் இந்திராதியர் காட்ட செய்யும்
கொலையினர் அக்கருடன் ஏறும் வேங்கடக் குன்றர் என்றால்
உலையின் அரக்கு அருள் தந்திலர் ஏனும் என் உள் அவர்க்கே –90-

மா மறை நூல் கலையினர் -பிரம தேவரும்
அக்கருடன் -அக்கர் உடன் -ருத்ராஷ மாலை /எலும்பு மாலையை தரித்த சிவ பிரானும் ஆகிய இரு மூர்த்திகள் உடன்
முனிவர்கள் யஷர்கள் என்றுமாம்
இந்திராதியர் -இந்த்ரிரன் முதலிய தேவர்கள்
மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று காட்ட –
மலைகள் போலே அரக்கர்கள் உக்கிரம் கொண்டு ஓங்கினார்கள் என்று சொல்லி முறையிட
செய்யும் கொலையினர் -செய்த அவ்விராக்கதர் வாதத்தை யுடையரான
அக்கருடன் ஏறும் வேங்கடக் குன்றர் என்றால் -என்று சொன்னால்
அருள் தந்திலர் ஏனும் -என் உள் அவர்க்கே –உலையின் அரக்கு -நெகிழ்ந்து உருகும் –
விரக வேதனை உற்ற தலைவின் கூற்று –

——————————————————————

தோழி தலைமகனை ஏதம் கூறி இரவு வரல் விலக்கல் –

உள்ளம் அஞ்சாய்வலியாய் வலியார்க்கும் உபாயம் வல்லாய்
கள்ளம் அஞ்சு ஆயுதம் கை வரும் ஆயினும் கங்கு லினில்
வெள்ள மஞ்சு ஆர் பொழில் வேங்கடக் குன்றினில் வீழ் அருவிப்
பள்ளம் அம்சாரல் வழி வரில் வாடும் இப்பாவையுமே –91–

நீ
உள்ளம் அஞ்சாய்
வலியாய்
வலியார்க்கும் உபாயம்– கற்பிக்கும் படி –வல்லாய் –
கள்ளம் -களவும் -அஞ்சு ஆயுதம் -பஞ்சாயுதங்களும் உனக்கு கை வரும்
ஆயினும்
கங்கு லினில் -வெள்ள மஞ்சு ஆர் பொழில் வேங்கடக் குன்றினில் வீழ் அருவிப் பள்ளம் -அம்சாரல் வழி வரில்-
அழகிய மலைப் பக்கத்து வழியே நீ வந்தால்
வாடும் இப்பாவையுமே –நின் வரவை எதிர்பார்த்து இருக்கும் இப்பென்னும் வருந்துவாள்
ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி துறை -என்பர் -வெளிப்படையாக வந்து திருக்கல்யாணம் செய்வதை வலியுறுத்தி அருளுகிறார்
பெரியாழ்வார் போலே அதிசங்கை யுடன் அருளிச் செய்கிறார் –

—————————————————————

பாவை இரங்கும் அசோதைக்கு முத்து பதுமச் செல்விக்கு
ஏவை இரண்டு அன்ன கண்மணி நீலம் இடு சரணப்
பூவை இரந்தவர்க்கு இன்ப வளம் புல் அசுரர்க்கு என்றும்
மா வையிரம் திரு வேங்கடத்து ஓங்கும் மரகதமே –92–

திரு வேங்கடத்து ஓங்கும் மரகதமே-பச்சை நிறமும் ஒளியையும்பற்றி –
பாவை இரங்கும் அசோதைக்கு-சித்திர பிரதிமைகளும் இந்த அழகு இல்லையே என்று இரங்கும் படியான அழகு வாய்ந்த யசோதைக்கு
முத்து -அருமையால் முத்து போன்றும் –
பதுமச் செல்விக்கு -தாமரை மலராள்- திருமகளுக்கு
ஏவை இரண்டு அன்ன கண்மணி நீலம்-இரண்டு அம்புகளைப் போன்ற கண்களில் உள்ள கரு விழிகள் போலும்
இடு சரணப் பூவை இரந்தவர்க்கு -திருவடித் தாமரையை இரந்தவர்களுக்கு
இன்ப வளம்-பேர் இன்பப் பெருக்காம்
புல் அசுரர்க்கு என்றும் மா வையிரம் -பெரும் பகையாம் –
திரு வேங்கடத்தில் ஓங்கும் மரகதமே -யசோதை பிராட்டிக்கு முத்தாகவும் பெரிய பிராட்டியாருக்கு நீல மணியாகவும்
அடியார்க்கு பவளமாகவும் -அசுரர்க்கு வைரமாகவும் -பஞ்ச ரத்னங்களையும் அருளிச் செய்கிறார் –பல படப் புனை அணி –

——————————————————————-

மரகதத்தைக் கடைந்து ஒப்பித்தது ஒத்தன வாழ்த்தினர் தம்
நரகதத்தைத் தள்ளி வைகுந்தம் நல்கின நப்பின்னை ஆம்
விரகதத்தைக்கு விடை ஏழ் தழுவின வேங்கடவன்
குரகதத்தைப் பிளந்தான் தோள்கள் ஆகிய குன்றங்களே –93-

குரகதத்தைப் பிளந்தான் -குதிரை வடிவாய் வந்த கேசி என்னும் அசுரனை வாய் பிளந்து அழித்தவனான
ஒற்றைக் குளம்பால் செல்லும் குரகதம் -குதிரை
வேங்கடவன்
தோள்கள் ஆகிய குன்றங்களே –
மரகதத்தைக் கடைந்து ஒப்பித்தது ஒத்தன-நிறம் ஒளி-திரண்டு உருண்டு நெய்ப்புடை பற்றி
வாழ்த்தினர் தம் நரகதத்தைத் தள்ளி வைகுந்தம் நல்கின நப்பின்னை ஆம் விரகதத்தைக்கு விடை ஏழ் தழுவின –

—————————————————————-

குன்றுகள் அத்தனையும் கடல் தூராக் குவித்து இலங்கை
சென்று களத்து அனைவோரையும் மாய்த்து திருச் சரத்தால்
அன்று களத்தனை அட்டானை அப்பனை ஆய் மகள் தோள்
துன்று களத்தனை ஏத்த வல்லார்க்கு இல்லை துன்பங்களே –94-

குன்றுகள் அத்தனையும்-மலைகளை எல்லாம்
கடல் தூராக் குவித்து -கடல் தூர்ந்திடும்படி -வானரங்களைக் கொண்டு கொணர்ந்து ஒருங்கு சேர்த்து அணை கட்டி
இலங்கை சென்று களத்து அனைவோரையும் மாய்த்து –
திருச் சரத்தால் -ப்ரஹ்மாசத்ரத்தால்
அன்று களத்தனை-கள்ளத்தனான இராவணனை – அட்டானை
அப்பனை
ஆய் மகள் தோள் துன்று களத்தனை -நப்பின்னை பிராட்டி யுடைய திருக் கைகளால் தழுவப் பட்ட கழுத்தை யுடையவனை
ஏத்த வல்லார்க்கு இல்லை துன்பங்களே –

————————————————————–

துன்பம் களையும் சனனம் களையும் தொலைவு அறு பேர்
இன்பம் களையும் கதி களையும் தரும் எங்கள் அப்பன்
தன்பங்கு அளையும் படி மூவரை வைத்து தாரணியும்
பின்பு அங்கு அளையும் இழுதும் உண்டானுடைப் பேர் பலவே –95–

மூவரை வைத்து-பிராட்டி -பிரமன் -சிவன் மூவரையும்
தன்பங்கு அளையும் படி-தனது திருமேனியில் பாகங்களில் பொருந்தும்படி
தாரணியும் -கல்பாந்த காலத்திலேயே பூமியையும்
பின்பு அங்கு அளையும் இழுதும் -பிறகு திருவாய்ப்பாடியிலே ஸ்ரீ கிருஷ்ணனாய் தயிரையும் நெய்யையும்
உண்டான் -எங்கள் அப்பனுடைப் பேர் பலவே
துன்பம் களையும்
சனனம் களையும்
தொலைவு அறு பேர் இன்பம் களையும் கதி களையும் தரும் -நீங்காத நிரதிசய இன்பங்களையும் பரம பத பிராப்தியையும் அளிக்கும் –
உண்டான் அடிப்பேர் பல -திருவடிகள் திருநாமங்களால் பலவே -குரு பரம்பரையை ஸூ சிப்பிக்கிறார் என்றுமாம்
குலம் தரும் இத்யாதி -திருநாம மகிமையை அருளிச் செய்கிறார் –

—————————————————————-

தலைவனைப் பிரிந்த தலைவி கடலை நோக்கி இரங்கிக் கூறல் –

பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவ அப்பன்
நலகு அளைக்கு முன் உண்டான் நின் மாட்டும் நணுகிலனோ
உலகு வளைக்கும் கடலே நின் கண் முத்து உகுத்து இரங்கி
இலகு வளைக் குலம் சிந்தி துஞ்சாய் இன்று இரா முற்றுமே –96-

நின் கண் முத்து உகுத்து -உன் கண்களில் நின்று முத்துப் போன்ற நீர்த்துளிகளை சொரிந்து -உன்னிடம் இருந்து முத்துக்களைச் சிந்தி –
இரங்கி -புலம்பி -ஒலித்து
இலகு வளைக் குலம் சிந்தி -விளங்கும் கை வளையல்களின் வரிசையைக் கீழே சிந்தி -விளங்கும் சங்குகளின் கூட்டத்தை வெளியே சிதறி
இன்று இரா முற்றுமே -இன்று இராப் பொழுது முழுவதும்
துஞ்சாய் -தூங்குகின்றாய் இல்லை -அமைதி கொண்டு இருக்கின்றாய் இல்லை –
பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவ அப்பன்
பல நீலோற்பல மலர்களின் இடையிடையே சில செந்தாமரை மலர்கள் பூத்தது போன்ற திருமேனியை யுடைய சுவாமியான
நலகு அளைக்கு முன் உண்டான் -அளைக்கு முன் நல கு உண்டான் -கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெய் உண்பதற்கு முன்பே
கல்பாந்தரத்திலே நல்ல பூமியை விழுங்கிய தலைவன்
நின் மாட்டும் நணுகிலனோ -உலகு வளைக்கும் கடலே –
என் இடத்தில் போலே உன்னிடத்திலும் வந்து சேர்ந்திலனோ-
செம்மொழிச் சிலேடை உவமை அணியில் அருளிச் செய்கிறார்
யாமுற்றது உற்றாயோ வாழி கனை கடலே -நம்மாழ்வார் –

——————————————————————

நீட்டித்து வந்த தலைவனொடு தலைவி ஊடிப் பேசுதல் –

முற்றிலை பந்தை கழங்கை கொண்டு ஓடினை முன்னும் பின்னும்
அற்றிலை தீமை அவை பொறுத்தோம் தொல்லை ஆலின் இளங்
கற்றிலை மேல் துயில் வேங்கடவா இன்று உன் கால் மலரால்
சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே –97-

தொல்லை ஆலின் இளங் கற்றிலை மேல் -ஆலம் கன்றின் இளம் தளிர் மேல்
துயில் வேங்கடவா-ஆஸ்ரித ரஷணத்தில் ஊற்றம் உடையாய் என்றவாறு
முன்னும்-முன்னமும்
நீ எம்முடைய
முற்றிலை -சிறு முற்றத்தையும்
பந்தை -பந்தையும்
கழங்கை-விளையாடுவதற்கு உரித்தான கழற்காய் களையும்
கொண்டு ஓடினை -எடுத்துக் கொண்டு ஓடினாய் –
பின்னும் அற்றிலை தீமை-பின்பும் எம் பக்கல் தீமை செய்வதை ஒழித்தாய் இல்லை
அவை பொறுத்தோம்
இன்று உன் கால் மலரால் சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே –
மின்னிடை மடவார்கள்- – ஊடல் திருவாய்மொழி –இதற்கு மூலம்
ஸ்வா பதேசத்தில் முற்றில் -கொள்வான தவிர்வன ஆய்ந்து உணர்வும் விவேக ஞானம்
பந்து -சரீரம் முக்குணம் போலே-செந்நூல் வெண்ணூல் கருநூல் – மூன்று வகை கயிறுகளால் ஆனதால் –
விழுந்தும் எழுந்தும் சுழன்றும் உழன்றும் -விரும்பவவும் வெறுக்கவும் தக்க உடம்பு என்றவாறு
கழங்கு -ஐம்பொறிகள் -சிறுத்து ஐந்தாய் இருக்கும் விளையாட்டு கருவிகள் –
சிற்றில் -சிற்றின்பத்துக்கு உரிய பிரபஞ்ச வாழ்க்கை
உனது திருவடி ச்பர்சத்தால் இத்தை ஒழித்து-பெரு வீடான பரமபதத்தை தந்து அருள்வாய் என்றவாறு
இடையீடுள்ள உனது அனுபவமாயின் எனக்கு வேண்டா -என்கிறார் –

——————————————————————————-

அரும்பாதகன் பொய்யன் காமுகன் கள்வன் அருள் சிறிதும்
அரும்பாத கல் நெஞ்சன் ஆறாச் சினத்தான் அவாவில் நின்றும்
திரும்பாத கன்மத்தன் ஆனேற்கு சேடச் சிலம்பு அமர்ந்து அ
திரும் பாத கஞ்சம் தரில் அது காண் உன் திருவருளே –98–

அரும்பாதகன் பொய்யன் காமுகன்
கள்வன்-பண்டே யுன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று கொண்டேனை கள்வன் என்று -நூற்று எட்டு திருப்பதி அந்தாதி
அருள் சிறிதும் அரும்பாத கல் நெஞ்சன்
ஆறாச் சினத்தான்
அவா வினின்றும் திரும்பாத கன்மத்தன் -ஆசைகளில் இருந்து மீளாத கருமத்தை யுடையவன்
அவா வென்ப வெல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா அப்பிறப்பீந்தும் வித்து –
ஆனேற்கு
சேடச் சிலம்பு அமர்ந்து அதிரும் பாத கஞ்சம் தரில் அது காண் உன் திருவருளே –
-சிலம்பு -மலை -திருவேங்கட திருமலையில் எழுந்து அருளும்
பாத தண்டைகள் ஒலிக்கப் பெற்ற நினது திருவடித் தாமரைகளைக் கொடுத்தால் -அது வன்றோ உனது மேலான கருணை –
சேஷகிரியில் நின்ற திருவடித் தாமரைகள் என்றுமாம் –

—————————————————————————

திருமந்திரம் இல்லை சங்கு ஆழி இல்லை திரு மண் இல்லை
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் செம்பொன் தானவனை
மருமம் திரங்கப் பிளந்தான் வடமலை வாரம் செல்லீர்
கருமம் திரண்டதை எத்தால் களையக் கருதுதிரே –99–

பேதைச் சனங்களே உங்கள் பக்கல்
திருமந்திரம் இல்லை
சங்கு ஆழி இல்லை-சங்கு சக்கர முத்திரை இல்லை
திரு மண் இல்லை -திருமான் காப்பும் இல்லை
மந்த்ரம் தாபம் புண்டரம் மூன்றும் அருளிச் செய்தது மற்றை நாமம் யாகம் இரண்டுக்கும் உப லஷணம்
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் -சரணாகதி தர்மத்தை நிலையாக சிறிதும் செய்து பயின்றீர் இல்லை
செம்பொன் தானவனை மருமம் திரங்கப்-மார்பு வருந்த – பிளந்தான்
வடமலை வாரம் செல்லீர் -திருவேங்கட திருமலை அடிவாரம் -சென்றீர் இல்லை –
கருமம் திரண்டதை எத்தால் களையக் கருதுதிரே –மலை போலே பெரும் தொகுதியாக குவிந்து உள்ள -திரண்ட கர்மங்களை எவ்வாறு களைவீர் –
அவைஷ்ணவர்களை பரம காருண்யத்தால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகுமாறு அருளிச் செய்கிறார் உஜ்ஜீவன உபாயமாக –

———————————————————————–

கருமலையும் மருந்தும் கண்ணும் ஆவியும் காப்பும் அவன்
தரும் அலை உந்திய பேரின்ப வெள்ளமும் தாய் தந்தையும்
வருமலையும் திருப்பாலாழியும் திரு வைகுந்தமும்
திரு மலையும் உடையான் எனக்கு ஈந்த திருவடியே –100-

வருமலையும்-பொருந்திய திருக் கடல் மலை என்கிற ஸ்தலத்தையும்
பிரளய பெரும் கடல் என்றுமாம்
திருப்பாலாழியும்-திருப் பாற் கடலையும்
திரு வைகுந்தமும்
திரு மலையும் உடையான்
எனக்கு ஈந்த திருவடியே –அடியேனுக்கு அருளிய திருவடிகள் –
அடியேனுக்கு –
கருமலையும் மருந்தும் -பிறவி நோயை ஒழிக்கிற
மருந்தும் மருந்தாம் கரு வல்லிக்கு -நூற்று எட்டு திருவந்தாதி –
திருவடியை மருந்து என்றதற்கு ஏற்ப பிறவியை நோய் என்று அருளிச் செய்கிறார்
ஏக தேச உருவக அணி
கண்ணும் -இன்றியமையாதது -அருமை பாராட்டி கண் என்கிறார்
ஆவியும் -உயிரும்
காப்பும் -பாதுகாவலும்
அவன் தரும் அலை உந்திய பேரின்ப வெள்ளமும் –
வெள்ளம் என்றதற்கு ஏற்ப அலை உந்திய -என்கிறார்
அவன் பரம பதத்தில் தந்து அருளும் அலைகளை எறிகிற பேர் ஆனந்தப் பெருக்காய் இருக்கும்
தாய் தந்தையும் -தாய் தந்தையருமாம் -அன்புடன் ஆவன செய்தலால் –
பலபடப்புனை – அணியில் அருளிச் செய்த ஈற்றுப் பாசுரம்-

————————————————————————-

தற்சிறப்புப் பாசுரம் –

மட்டளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்குத்
தொட்டளை யுண்ட பிரானுக்கு அன்பாம் பட்டர் தூய பொற்றாள்
உள் தளை யுண்ட மணவாள தாசன் உகந்து உரைத்த
கட்டளை சேர் திரு அந்தாதி நூறு கலித் துறையே –

பட்டர் தூய பொற்றாள் உள் -திரு பராசுர பட்டர் திருவடித் தாமரைகளிலே
தாள் உள் -திருத் தாளின் இடத்து மனப் பிணிப்பு பொருந்தியவர் என்றுமாம்
தளை யுண்ட -பக்தியினால் ஆகிய சம்பந்தம் பெற்ற -அந்தரங்க சிஷ்யரான –
மணவாள தாசன்-அழகிய மணவாள தாசன்
உகந்து உரைத்த கட்டளை சேர் திரு அந்தாதி நூறு கலித் துறையே –
தொட்டளை யுண்ட பிரானுக்கு-அளை தொட்டு உண்ட பிரானுக்கு -வெண்ணெயை கையினால் எடுத்து அமுது செய்து அருளிய பிரபுவான
மட்டளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்குத்
வாசனை நிறைந்த சோலைகள் சூழ்ந்த வடக்கின் கண் உள்ள திருவேங்கட திருமலையில்
நித்ய வாசம் செய்து அருளும் எம்பெருமானுக்கு –
அன்பாம்-பிரியமாம் –

—————————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: