ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கடத்தந்தாதி -26-50-

அஞ்சு அக்கர வட மூலத்தன் போதன் அறிவு அரிய
செஞ்சக்கர வட வேங்கட நாதனை -தேசத்துள்ளீர்
நெஞ்சக் கரவடம் நீக்கி இன்றே தொழும் நீள் மறலி
துஞ்சக் கரவடம் வீசும் அக்காலம் தொழற்கு அரிதே –26-

அஞ்சு அக்கர வட மூலத்தன் -பஞ்சாஷர மந்திரத்துக்கு உரியவனும் -ஆல மரத்தின் அடியில் வீற்று இருந்த சிவபிரானும்
அகஸ்த்ய புலஸ்திய தஷ மார்கண்டேயர் -என்றும் சனகர் சனந்தனர் சனத்குமாரர் சனத் ஸூ ஜாதர்-என்பர்
இந்த நால்வருக்கும் ஞான உபதேசம் செய்தான் என்பர்
போதன் -பிரமதேவனும்
அறிவு அரிய செஞ்சக்கர வட வேங்கட நாதனை
-தேசத்துள்ளீர்
நெஞ்சக் கரவடம் நீக்கி இன்றே தொழும் -மனத்தில் உள்ள வஞ்சனையை ஒழித்து இப்பொழுதே நீங்கள் வணங்குங்கள் –
ஏன் என்றால்
நீள் மறலி -பெரிய வடிவம் உடைய யமன்
துஞ்சக்-நீங்கள் இறக்கும் படி
கரவடம் வீசும் அக்காலம் தொழற்கு அரிதே –தன் கையில் கொண்ட பாசாயுதத்தை
உங்கள் மேல் வீசும் அந்த அந்திம காலத்தில் வணங்குவதற்கு இயலாது –

—————————————————————-

தொழும் பால் அமரர் தொழும் வேங்கடவன் சுடர் நயனக்
கொழும் பாலனை ஒரு கூறு உடையான் நந்த கோபன் இல்லத்து
அழும் பாலன் ஆகிய காலத்து பேய்ச்சி அருத்து நஞ்சைச்
செழும் பால் அமுது என்று உவந்தாற்கு என் பாடல் சிறக்கும் அன்றே –27–

தொழும் பால் -அடிமைத் தனத்தால் – அமரர் தொழும் வேங்கடவன்
சுடர் நயனக் கொழும் பாலனை -நெருப்புக் கண்ணை கொழுமை யுள்ள நெற்றியில் யுடையனான சிவபிரானை
ஒரு கூறு உடையான் -தனது திரு மேனியில் வலப் பக்கத்தில் கொண்டவனும்
நந்த கோபன் இல்லத்து அழும் பாலன் ஆகிய காலத்து பேய்ச்சி அருத்து நஞ்சைச்
செழும் பால் அமுது என்று உவந்தாற்கு என் பாடல் சிறக்கும் அன்றே-

————————————————————————

சிறக்கும் பதம் தருவார் திருவேங்கடச் செல்வர் செய்ய
நிறக்கும் பதம் தொழுது உய்ய எண்ணீர் -நெறியில் பிழைத்து
மறக்கும் பதந்தியும் சேலும் அசுணமும் வண்டினமும்
பறக்கும் பதங்கமும் போல் ஐவரால் கெடும் பாதகரே –28–

மறக்கும் பதந்தியும் -மறம் கும்பம் தந்தியும் -கோப குணத்தையும் மஸ்தகத்தையும் யுடைய யானையும்
யானை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும் -தீராக் கோபம் கொண்டதால் மறம் என்கிறார் –
சேலும் -மீனும்
அசுணமும்- அசுணம் என்னும் பறவையும் -அசுணம் மான் வகை என்றும் சொல்வர் –
வண்டினமும் -வண்டு வகைகளும்
பறக்கும் பதங்கமும்-பறக்கின்ற விட்டில் பறவையும்
போல்
நெறியில் பிழைத்து -நன்னெறியின் நின்றும் தவறி
ஐவரால் கெடும் பாதகரே –பஞ்ச இந்த்ரியங்களால் அழியும் தீ வினையை யுடையவர்களே –
யானை பரிசத்தால் -பெண் யானை மேல் உள்ள ஆசையால் -ஊற்று இன்ப ஆசையால் -அழியும்
மீன் வாய் என்னும் பொறிக்கு உரிய சுவை இன்பத்தால் அழியும் –
அசுணம் வேய்ங்குழல் ஓசையின் இனிமையில் வசப்பட்டு பரவசப்பட பறை ஓசை கேட்டு இறக்கும் -செவி -ஓசை இன்பத்தால் அழியும்
வண்டு கந்தத்தால் அழியும் -விட்டில் பூச்சி விளக்கில் கண் பொறி ஒளி யின் மேல் ஆசையால் அழியும்
சிறக்கும் பதம் தருவார் திருவேங்கடச் செல்வர் செய்ய
நிறக்கும் பதம் தொழுது உய்ய எண்ணீர் –

—————————————————————————–

பாதம் அரா உறை பாதளத் தூடு பகிரண்டத்துப்
போது அமர் ஆயிரம் பொன் முடி ஓங்கப் பொலிந்து நின்ற
நீதமர் ஆனவருக்கு எவ்வாறு -வேங்கடம் நின்றருளும்
நாத மராமரம் எய்தாய் முன் கோவல் நடந்ததுவே –29-

வேங்கடம் நின்றருளும் நாத
மராமரம் எய்தாய்
பாதம் அரா உறை பாதளத் தூடு -திருவடிகள் பாம்புகள் வசிக்கின்ற பாதாள லோகத்திலும்
போது அமர் ஆயிரம் பொன் முடி-சூட்டிய மலர்கள் பொருந்திய அழகிய ஆயிரம் திரு முடிகள்
பகிரண்டத்து ஓங்கப் பொலிந்து நின்ற -இவ்வண்ட கோளத்தின் மேன் முகட்டுக்கு வெளியிலும் வளர்ந்து தோன்ற
-விஸ்வ ரூபத்தில் -விளங்கி நின்றவனான –நீ
தமர் ஆனவருக்கு -நின் அடியார்களான முதல் ஆழ்வார்களுக்கு கட்சி அருளும் பொருட்டு
எவ்வாறு -முன் கோவல் நடந்ததுவே – அவர்கள் இருந்த இடமான திருக் கோவலூருக்கு நடந்து அருளியது எங்கனமோ
-அடியார் நெருக்கு உகந்த பெருமான் –

——————————————————————–

நடைக்கு அலங்கார மடவார் விழிக்கு நகைக்கு செவ்வாய்க்கு
இடைக்கு அலங்கு ஆர முலைக்கு இச்சையான இவன் என்று என்னை
படைக்கலம் காணத் துரந்தே நமன் தமர் பற்றும் அன்றைக்கு
அடைக்கலம் காண் அப்பனே அலர் மேல் மங்கை அங்கத்தனே –30-

அப்பனே அலர் மேல் மங்கை அங்கத்தனே —
நடைக்கு -அலங்கார மடவார் -இயற்கையும் செயற்கையுமான அழகுகளை யுடைய இல மன்கையறது நடை அழகுக்கும்
விழிக்கு நகைக்கு செவ்வாய்க்கு -கண் அழகுக்கும் -புன்சிரிப்பின் அழகுக்கும் -சிவந்த வாயின் அழகுக்கும்
இடைக்கு-இடையின் அழகுக்கும்
அலங்கு ஆர முலைக்கு-புரளுகின்ற ஹாரங்கள் அணிந்த ஸ்தனங்களின் அழகுக்கும்
இச்சையான இவன் என்று என்னை -விரும்பி ஈடுபட்ட இவன் என்று நினைத்து
நமன் தமர் படைக்கலம் -யமதூதர் ஆயுதங்களை
காணத் துரந்தே பற்றும் அன்றைக்கு-நான் கண்டு அஞ்சும் படி என் மீது பிரயோகித்து
என்னைப் பிடித்துக் கொண்டு போகும் அந்த அந்திம காலத்தில்
அடைக்கலம் காண் – என்னை ரஷிக்க இன்றே உனக்கு அடைக்கலப் பொருள் ஆகிறேன் காண் –

———————————————————————

அங்கம் அலைக்கும் வினையால் அலமரவோ உனக்கும்
அம் கமலைக்கும் அடிமைப் பட்டேன் அரவு ஆனபரி
அங்க மலைக் குடையாய் அக்கராவுடன் அன்று அமர் செய்
அங்க மலைக்கு முன் நின்றருள் வேங்கடத்து அற்புதனே –31-

அரவு ஆனபரி அங்க -அரவான பர்யங்க -ஆதி சேஷன் ஆகிய கட்டிலை யுடையவனே –
மலைக்குடையாய் -கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்தவனே
அக்கராவுடன் அன்று அமர் செய் -அந்த முதலையுடன் அக்காலத்தில் பொற் செய்த
அங்க மலைக்கு முன் நின்றருள் -அங்கம் மலைக்கு -அவயவங்களை யுடைய மலை போன்றதான
யானைக்கு எதிரில் சென்று நின்று ரஷித்து அருளினவனே
வேங்கடத்து அற்புதனே
அங்கம் அலைக்கும் வினையால் அலமரவோ உனக்கும் அம் கமலைக்கும் அடிமைப் பட்டேன்-

——————————————————————

அற்ப ரதத்து மடவார் கல்வியும் ஆங்கு அவர்கள்
நல் பரதத்து நடித்தலும் பாடலும் நச்சி நிற்பார்
நிற்ப ரத்தத்துக் கதிர் தோயும் வேங்கடம் நின்றருளும்
சிற் பரதத்துவன் தாள் அடைந்தேன் முத்தி சித்திக்கவே –32-

அற்ப ரதத்து மடவார் கல்வியும் -சிற்றின்பத்தையே யுடைய இள மகளிரது சேர்க்கையும்
ஆங்கு அவர்கள் நல் பரதத்து நடித்தலும் பாடலும் நச்சி நிற்பார்-பேதையர்
நிற்ப -நிற்க -நான் அவர்களோடு சேராமல்
முத்தி சித்திக்கவே –
ரத்தத்துக் கதிர் தோயும் வேங்கடம் -ரதத்து கதிர் தோயும் வேங்கடம் -சூரியன் தவழப் பெற்ற திருவேங்கடம் திருமலையில்
நின்றருளும் சிற் பரதத்துவன் -சித் பரதத்வன் -ஞான மயமான பரம் பொருள் -தாள் அடைந்தேன் –
ஜீவாத்மா தத்தவத்தை விட மேம்பட்ட பரமாத்மா என்றவாறும் –

—————————————————————–

சித்திக்கு வித்து அதுவோ இதுவோ என்று தேடி பொய்ந்நூல்
கத்திக் குவித்த பல் புத்தகத்தீர் கட்டுரைக்க வம்மின்
அத்திக்கு இத்தனையும் உண்ட வேங்கடத்து அச்சுதனே
முத்திக்கு வித்தகன் என்றே சுருதி முறையிடுமே -33-

சித்திக்கு வித்து அதுவோ இதுவோ என்று தேடி
பொய்ந்நூல் கத்திக்-தொண்டை நோகக் கதறிப் படித்து
குவித்த பல் புத்தகத்தீர்
கட்டுரைக்க வம்மின் -முத்திக்கு உண்மையான பொருளை உறுதியாக நான் சொல்ல வந்து கேண்மின் –
உம்மால் முடிந்தால் வாதிட வரலாம் என்றுமாம்
பரமாத நிரசனம் பண்ணி ஸ்வ மத ஸ்தாபனம் செய்ய வல்லவன் என்ற அத்யவசாயம் உண்டே
அத்திக்கு இத்தனையும் உண்ட-கடல் சூழ்ந்த உலகம் முழுவதையும் பிரளய காலத்தில் உட்கொண்டு அருளிய
வேங்கடத்து அச்சுதனே முத்திக்கு வித்தகன் என்றே சுருதி முறையிடுமே –
சரணம் அடைந்தவர்களை ரஷித்து கை விடாதவன் -அச்சுதன் அவனே –

—————————————————————–

முறையிடத் தேசம் இலங்கை செற்றான் முது வேங்கடத்துள்
இறை இடத்தே சங்கு உடையான் இனி என்னை ஆண்டிலனேல்
தறை இடத்தே உழல எல்லாப் பிறவி தமக்கும் அளவு
உறை இடத் தேய்ந்திடும் இவ்வந்தி வானத்து உடுக்குலமே –34-

தேசம் முறையிடத் இலங்கை செற்றான்
முது வேங்கடத்துள் ‘இறை
இடத்தே சங்கு உடையான்
இனி -சரணம் அடைந்த பின்பும் -என்னை ஆண்டிலனேல்
தறை இடத்தே உழல எல்லாப் பிறவி தமக்கும்
அளவு உறை இடத் -உறையிட்டுத் தொகை செய்தற்கு
தேய்ந்திடும் இவ்வந்தி வானத்து உடுக்குலமே –மாலைப்பொழுதில் வானத்தில் விளங்கும்
இந்த நஷத்ர கூட்டம் எல்லாம் போதாது -குறைந்திடும்
இராமன் கை யம்பும் உதவும் படைத்தலைவர் அவரை நோக்கின் இவ்வரக்கர் வம்பின் முலையாய்
உறை இடவும் போதார் கணக்கு வரம்புண்டோ -கம்பர்

———————————————————————-

உடுக்கும் உடைக்கும் உணவுக்குமே உழல்வீர் இன் நீர்
எடுக்கும் முடைக்குரம்பைக்கு என் செய்வீர் இழிமும் மதமும்
மிடுக்கும் உடைக்குஞ்சரம் தொட்ட வேங்கட வெற்பர் அண்ட
அடுக்கும் உடைக்கும் அவர்க்கு ஆட்படுமின் அனைவருமே -35-

உடுக்கும் உடைக்கும் உணவுக்குமே உழல்வீர்
இன் நீர் எடுக்கும் முடைக்குரம்பைக்கு -முடை நாற்றம் யுடைய உடம்புகளை பிறவிகளை ஒழிக்க –
ஒன்பது வாசல் தானுடைக் குரம்பை -திருமங்கை ஆழ்வார்
என் செய்வீர் -என்ன உபாயம் செய்வீர்கள்
இழிமும் மதமும் -இழி மும் மதமும் -ஒழுகின்ற மூன்று வகை மத ஜலங்களும் -இரண்டு கன்னங்கள் குறி ஓன்று ஆக மூன்று மதங்கள்
கர்ண மதம் கபோல மதம் பீஜ மதம் என்றுமாம் –
மிடுக்கும் உடைக்குஞ்சரம் -வலிமையையும் யுடைய யானையை -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை
தொட்ட -அபய பிரதானம் செய்து அருளி அதன் தலை மேல் தனது திருக்கையை வைத்து தொட்டு அருளிய
வேங்கட வெற்பர்
அண்ட அடுக்கும் உடைக்கும் -சங்க்ரஹ காலத்தில் அழித்து அருளும் – -அவர்க்கு ஆட்படுமின் அனைவருமே –

ஆடிய சிரசின் மீதில் அரி மலர்க்கையை வைத்து வாடினை துயரம் எய்து மனம் ஒருமித்து நம்மை நாடினை இனியோர்
நாளும் நாசமே வாராது என்று நீடிய உடலைக் கையால் தடவின நெடிய மால் –

————————————————————————-

வரும் மஞ்சு ஆனவன் ஒருவனையே உன்னி வாழ்ந்தும் தொண்டீர்
கருமம் சனனம் களைந்து உய்ய வேண்டில் கருதிற்று எல்லாம்
தரும் அஞ்சன வெற்பன் தாள் தாமரையைச் சது முகத்தோன்
திரு மஞ்சனம் செய் புனல் காணும் ஈசன் சிரம் வைத்தே –36-

வரும் மஞ்சு ஆனவன் ஒருவனையே உன்னி வாழ்ந்தும் -மழை பொழிய வருகிற நீர் கொண்ட
காள மேகம் போன்ற திருமாலையே த்யானித்து ஸ்துதியுங்கோள்
தொண்டீர்
கருமம் சனனம் களைந்து உய்ய வேண்டில்
கருதிற்று எல்லாம் தரும் அஞ்சன வெற்பன் தாள் தாமரையைச் சது முகத்தோன் திரு மஞ்சனம் செய்
புனல் காணும் ஈசன் சிரம் வைத்தே –
புனல் காண் நும் ஈசன் சிரம் வைத்தே -என்று பிரித்தும் கொள்ளலாம் –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து –மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
கரை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கிக் கதிர்முக மணி கொண்டு இழி புனல் கங்கை
அண்ட கோளகைப் புறத்ததாய் யகிலம் யன்று அளந்த புண்டரீக மென் பதத்திடை பிறந்து
பூ மகனார் கொண்ட தீர்த்தமாய் யரன் கொளப் பகிரதன் கொணர மண்டலத்து வந்தடைந்த இம்மாநதி -கம்பர்

——————————————————————————

சிரம் தடிவான் இவனோ என்று அயன் வெய்ய தீய சொல்ல
கரம் தடிவான் தலை கவ்வ பித்து ஏறலின் கண்ணுதலான்
இரந்து அடி வீழ துயர் தீர்த்த வேங்கடத்து எந்தை கண்டீர்
புரந்து அடியேனைத் தன் பொன் அடிக்கீழ் வைக்கும் புண்ணியனே –37-

சிரம் தடிவான் இவனோ என்று அயன் -அஜந -திருமால் இடம் இருந்து தோன்றிய பிரமன் -வெய்ய தீய சொல்ல
அத்தைக் கேட்ட சிவன் உடைய கை
கரம் தடிவான் தலை கவ்வ
அது பற்றி
பித்து ஏறலின் கண்ணுதலான் இரந்து அடி வீழ துயர் தீர்த்த வேங்கடத்து எந்தை கண்டீர்
புரந்து-பாதுகாத்து – அடியேனைத் தன் பொன் அடிக்கீழ் வைக்கும் புண்ணியனே -பரிசுத்த பரதெய்வம் –

——————————————————————————

புண்ணியம் காமம் பொருள் வீடு பூதலத்தோர்க்கு அளிப்பான்
எண்ணி அம் காமன் திருத்தாதை நிற்கும் இடம் என்பரால்
நண்ணி அங்கு ஆம் அன்பரைக் கலங்காத் திரு நாட்டு இருத்தி
மண் இயங்காமல் பிறப்பு அறுத்து ஆளும் வடமலையே –38-

நண்ணி அங்கு ஆம் அன்பரைக் -விரும்பி தன்னிடத்து வந்து சேர்கின்ற பக்தர்களை
கலங்காத் திரு நாட்டு இருத்தி
மண் இயங்காமல்-மீண்டும் நிலா உலகத்தில் உழலாத படி
பிறப்பு அறுத்து ஆளும் வடமலையே —
அம் காமன் திருத்தாதை
புண்ணியம் காமம் பொருள் வீடு பூதலத்தோர்க்கு அளிப்பான்-சதுர்வித புருஷார்த்தங்களை கொடுத்து அருள
எண்ணி நிற்கும் இடம் என்பர் -சான்ட்ரொஎ -ஆல் -ஈற்று அசைச்சொல்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
திருவேங்கட மா மழை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே –

————————————————————————-

வடம் அலை அப்பன்னகம் சேர்ந்தவன் இடை மங்கை கொங்கை
வடம் அலையப் பன் அரும் போகம் துய்த்தவன் மாயன் கண்ணன்
வடமலை அப்பன் அடி போற்றி ஐவர் மயக்கு கர
வடம் அலையப் பன்னிரு நாமம் நாவின் மலக்குவனே –39-

இது யமகச் செய்யுள் –
வடம் அலை அப்பன்னகம் சேர்ந்தவன் –
வடம் -ஆலிலையிலும் –
அலை அப்பன்னகம் -திருப்பாற் கடலில் அந்த ஆதிசேஷன் இடத்தில் சேர்ந்து கண் வளர்ந்து அருளினவன்
இடை மங்கை கொங்கை வடம் அலையப் -இடையர் ஆயர் குலப் பெண்ணான நப்பின்னை பிராட்டி ஸ்தனங்களில் அணிந்த ஹாரங்கள் அசையும் படி
பன் அரும் போகம் துய்த்தவன் -அளவிறந்த இன்பத்தை அனுபவித்தவனும்
மாயன் கண்ணன் வடமலை அப்பன் அடி போற்றி-திருவடிகளை ஸ்துதித்து
ஐவர் மயக்கு கர வடம் அலையப் -பஞ்ச இந்த்ரியங்கள் மனத்தை மயங்கச் செய்கிற வஞ்சனை ஒழியுமாறு
பன்னிரு நாமம் நாவின் மலக்குவனே– துவாதச திரு நாமங்களை நாவினால் விடாமல் சொல்வேன் –
மலக்குதல் -உச்சரித்து அடிப்படுத்தல் -பயிற்றுதல்

————————————————————————–

மலங்கத் தனத்தை உழன்று ஈட்டி மங்கையர் மார்பில் வடம்
அலங்கத் தனத்தை அணைய நிற்பீர் அப்பன் வேங்கடத்துள்
இலங்கு அத்தன் அத்தை மகன் தேரில் நின்று எதிர் ஏற்ற மன்னர்
கலங்க தன் நத்தைக் குறித்தானைப் போற்றக் கருதுமினே –40-

மலங்கத்-மனம் கலங்கும் படி – தனத்தை உழன்று ஈட்டி-பலவிடத்தும் அலைந்து சேர்த்து
மங்கையர் மார்பில் வடம் அலங்கத் தனத்தை அணைய நிற்பீர் அப்பன் வேங்கடத்துள் இலங்கு அத்தன்
அத்தை மகன் தேரில் -பாகனாய் -நின்று எதிர் ஏற்ற மன்னர் கலங்க தன் நத்தைக் குறித்தானைப் போற்றக் கருதுமினே —
பாஞ்சஜன்யம் ஊதி முழக்கிய எம்பெருமான்

———————————————————————-

கருத்து ஆதரிக்கும் அடியேனைத் தள்ளக் கருதிக் கொலோ
திருத்தாது அரிக்கும் ஐவர்க்கு இரை ஆக்கினை செண்பகத்தின்
மருத்தாது அரிக்கும் அருவி அறா வட வேங்கடத்துள்
ஒருத்தா தரிக்கும் படி எங்கனே இனி உன்னை விட்டே –41-

கருத்து ஆதரிக்கும் அடியேனைத் -மனத்தில் உன்னையே விரும்புகின்ற தாசனான என்னை
தள்ளக் கருதிக் கொலோ –
திருத்தாது -ஆட்கொண்டு சீர் திருத்தாமல்
அரிக்கும் ஐவர்க்கு இரை ஆக்கினை -கெடுக்கும் பஞ்ச இந்த்ரியங்களுக்கு என்னை உணவாக்கி விட்டாய்
செண்பகத்தின் மருத்தாது அரிக்கும் -மரு-வாசனையுள்ள -தாது -மகரந்தப் பொடிகளை -அரித்துக் கொண்டு வரும்
செண்பகம் -மரத்துக்கும் புஷ்பத்துக்கும் பெயர்
அருவி அறா வட வேங்கடத்துள் ஒருத்தா -அத்விதீயன்
தரிக்கும் படி எங்கனே இனி உன்னை விட்டே -உன்னை அன்றி உய்யும் வகை எவ்வாறோ –
அநந்ய கதித்வத்தை வெளியிட்டு அருள்கிறார் –

———————————————————————-

உன்னைக் கரிய மிடற்றன் அயன் முதல் உம்பர் எல்லாம்
பொன்னைக் கரி ஒத்த போதும் ஒவ்வார் புகழ்க் கோசலை ஆம்
அன்னைக்கு அரிய முத்தே அப்பனே உன்னை அன்றி பின்னை
முன்னைக் கரி அளித்தாய்க்கு உவமான மொழி இல்லையே –42-

புகழ்க் கோசலை ஆம் அன்னைக்கு அரிய முத்தே –அப்பனே
பொன்னைக் கரி ஒத்த போதும் -கரி பொன்னை ஒத்த போதும்
உன்னைக் கரிய மிடற்றன் அயன் முதல் உம்பர் எல்லாம் ஒவ்வார்
ஆதலால்
முன்னைக் கரி அளித்தாய்க்கு
உன்னை அன்றி பின்னை உவமான மொழி இல்லையே –ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ நீ

————————————————————————-

இல்லைக் கண்டீர் இன்பம் துன்பம் கண்டீர் கண்ட ஏந்திழையார்
சொல்லை கண்டு ஈர் அமுது என்னும் தொண்டீர் தொல் அசுரன் நிறம்
கல் ஐக் கண்டீரவத்தை திரு வேங்கடவக் காவலனை
மல்லைக் கண் தீர் தரத் தேய்த்தானை வாழ்த்துமின் வாழுகைக்கே –43-

கண்ட ஏந்திழையார் -கண்ணுக்கு இலக்காகிய தரித்த ஆபரணங்கள் யுடைய மகளிரது
சொல்லை கண்டு ஈர் அமுது என்னும்
தொண்டீர் -அவர்கட்கு தொண்டு பூண்டு ஒழுகுபவர்களே
இல்லைக் கண்டீர் இன்பம்-அவ்வாறு ஒழுகுதலில் உண்மையான இன்பம் இல்லை ஏற்று அறிவீர்கள்
துன்பம் கண்டீர் -பலவகைத் துன்பமே உண்டு என்றும் அறிவீர்கள்
வாழுகைக்கே -இனி நீங்கள் பேரின்ப வாழ்வு பெறுகைக்காக
தொல் அசுரன் நிறம் -பழமையான இரணியாசுரனுடைய மார்பை
கல்-கீண்ட -கல்லுதல் -இடத்தல் –
ஐக் கண்டீரவத்தை -அழகிய நரசிங்க மூர்த்தி யானவனும் -கண்டம் -கழுத்து -அரவம் -ஓசை -மிடற்றில் தொனி யுடையவன்
திரு வேங்கடவக் காவலனை -காவலன் -அரசன் –காத்த வில் வலவன் -காவல் அன் -ரஷிக்கும் தொழில் கொண்டவன்
மல்லைக் கண் தீர் தரத் தேய்த்தானை -மல்லர்களை கண் கெடும்படி சிதத்தவனை -கண்ணோட்டம் இல்லாமல் என்றுமாம் –
வாழ்த்துமின் –பல்லாண்டு பாடி ஸ்துதியுமின்-

—————————————————————————–

கைத்தனு மோடுஇசை வெற்பு எனக் காண வெவ்வாணன் என்னும்
மத்தன் நுமோடு இகல் செய்வன் என்றே வந்துவை உறு வேல்
அத்தனும் மோடியும் அங்கியும் ஓட என் அப்பனுக்குப்
பித்தனும் ஓடினன் அங்கத்துத் தான் என்றும் பெண்ணன் என்றே –44-

கைத்தனு மோடுஇசை வெற்பு எனக் காண-கையில் ஏந்திய வில்லானது உயர்ச்சி பொருந்திய மலை போலத் தோன்ற
வெவ்வாணன் என்னும் மத்தன் -கொடிய பாணாசுரன் என்கிற உன்மத்தன்
நுமோடு இகல் செய்வன் என்றே வந்து
என் அப்பனுக்குப்
வை உறு வேல் அத்தனும் -கூர்மை மிக்க வேலாயுதத்தை ஏந்திய முருகனும்
மோடியும் -துர்க்கையும் -அங்கியும் -அக்னியும் ஓட
பித்தனும் ஓடினன் -சிவனும் ஓடினான்
அங்கத்துத் தான் என்றும் பெண்ணன் என்றே -உடம்பில் பெண்ணை உடையவன் என்று சொல்லிக் கொண்டே –
பெண் என்றால் பேயும் இரங்குமே-

——————————————————————————

பெண் ஆக்கு விக்கச் சிலை மேல் ஒருதுகள் பெய்த பொற்றாள்
அண்ணாக்கு விக்கல் எழும் போது எனக்கு அருள்வாய் பழிப்பு
நண்ணாக் குவிக்கச்சு இள முலைப் பூ மகள் நாயகனே
எண் ஆக குவிக்கக் குழல் ஊதும் வேங்கடத்து என் கண்ணனே –45–
பழிப்பு நண்ணாக் -யாதொரு நிந்தனையும் அடையாத
குவிக்கச்சு இள முலைப் பூ மகள் நாயகனே
எண் ஆக குவிக்கக் குழல் ஊதும்-பசி நிரைகள் கூட்டத்தை ஒருங்கு சேர்க்கும் பொருட்டு குழல் ஊதும்-
வேங்கடத்து என் கண்ணனே –
பெண் ஆக்கு விக்கச் சிலை மேல் ஒருதுகள் பெய்த பொற்றாள்
அண்ணாக்கு விக்கல் எழும் போது -அந்திம காலத்தில்
எனக்கு அருள்வாய்
திருவடியே வீடாய் இருக்கும் -தாள் எனக்கு அருள்வாய் –

————————————————————————-

கண் நனையேன் நெஞ்சு உருகேன் நவைகொண்டு என் கண்ணும் நெஞ்சும்
புண் அணையேன் கல் அணையேன் என்றாலும் பொற் பூங்கமலத்
தண் அனையே நல்ல சார்வாக வேங்கடம் சார்ந்து மணி
வண்ணனையே அடைந்தேற்கு இல்லையோ தொல்லை வைகுந்தமே –46-

கண் நனையேன் நெஞ்சு உருகேன் நவைகொண்டு என் கண்ணும் நெஞ்சும்
புண் அனையேன் கல் அணையேன் என்றாலும் –
இளகாத மனஸ் உடையேன் என்றாலும் ஆனந்த பாஷ்பம் பெறாத ஊனக் கண்களின் இழிவு தோன்ற
கல் போன்ற மனசும் புண் போன்ற கண்ணும் கொண்டேன் ஆகிலும்
நவை குற்றம் -நெஞ்சு உருகாமையும் கண் நனையாமையும் என்றுமாம்
பொற் பூங்கமலத் தண் அனையே நல்ல சார்வாக -பெரிய பிராட்டி யாரையே சார்வாக கொண்டு
வேங்கடம் சார்ந்து மணி வண்ணனையே அடைந்தேற்கு இல்லையோ தொல்லை வைகுந்தமே -கிடையாமல் போகுமோ-

————————————————————————-

வைகுந்தம் ஆய விழி மாதர் வேட்கையை மாற்றி என்னை
வைக்கும் தம் ஆய வினை நீக்கிய முத்தர் மாட்டு இருத்தி
வை குந்தம் மாய ஒசித்தாய் வட திரு வேங்கடவா
வைகுண்ட மாயவனே மாசு இலாத என் மா மணியே –47-

வை குந்தம் ஆய விழி மாதர் வேட்கையை மாற்றி -கூரிய வேல் படை போன்ற
கண்கள் யுடைய மகளிர் பக்கலில் உண்டான ஆசையை எனக்கு ஒழித்து
என்னை வைகும் தம் ஆய வினை நீக்கிய முத்தர் மாட்டு இருத்தி -வை
தங்கிய தமது தொகுதியான கர்மத்தை போக்கிய முக்தர்களில் ஒருவனாக இருக்கச் செய்து அருளாய்
குந்தம் மாய ஒசித்தாய்
வட திரு வேங்கடவா
வைகுண்ட மாயவனே
மாசு இலாத என் மா மணியே —என் தன் மாணிக்கமே -திருவிருத்தம்

———————————————————————-

பிரிவாற்றாகத தலைவியின் துயர் கண்ட செவிலித்தாய் இரங்கல் –

மணி ஆழி வண்ணன் உகந்தாரைத் தன் வடிவு ஆக்கும் என்றே
துணி ஆழிய மறை சொல்லும் தொண்டீர் அது தோன்றக் கண்டோம்
பணி யாழின் மென்மொழி மாலாகி பள்ளி கொள்ளாமல் சங்கோடு
அணி ஆழி நீங்கி நின்றாள் வேங்கடேசனை ஆதரித்தே –48-

தொண்டீர்
மணி ஆழி வண்ணன் உகந்தாரைத் தன் வடிவு ஆக்கும் என்றே
துணி ஆழிய மறை சொல்லும்
சாலோக்யம் -சாமீப்யம் -சாரூப்யம் -சாயுஜ்யம் -போன்ற சாம்யா பத்தி அருள்வான் என்று பொருள்களை துணிந்து கூறும் வேதங்கள் சொல்லும்
அது தோன்றக் கண்டோம் -அத்தை இங்கே கட்புலனாக தெரியப் பார்த்தோம்
எங்கனம் எண்ணின்
பணி யாழின் மென்மொழி -நுனி வளைந்த வீணையின் இசை மென்மையான சொற்களை யுடைய இப்பெண்
வேங்கடேசனை ஆதரித்தே-
அவனைப் போலவே
மாலாகி– பள்ளி கொள்ளாமல் –சங்கோடு அணி ஆழி நீங்கி நின்றாள் –
ஆசை –மயக்கம்– பள்ளி கொள்ளாமை -சயனத் திருக் கோலம் இல்லாமல் நின்ற திருக்கோலமாகி –
சங்கு சக்கரங்களை தொண்டைமான் சக்கரவர்த்தி இடம் கொடுத்து நீங்கி நின்றமை –
செம்மொழிச் சிலேடை யாக சாதித்து அருள்கிறார்

———————————————————————

ஆதரிக்க பட்ட வாள் நுதல் மங்கையர் அங்கை மலர்
மீ தரிக்கப் பட்ட நின் அடியே வெள் அருவி செம்பொன்
போது அரிக்கப் பட்டம் சூழ் வேங்கட வெற்ப போர் அரக்கர்
தீது அரிக்க பட்ட கானகத்தூடு அன்று சென்றதுவே –49-

வெள் அருவி -வெண்ணிறமான நீர் அருவிகள்
செம்பொன் போது அரிக்கப் பட்டம் சூழ் -சிவந்த பொன்னையும் -மலர்களையும் அரித்துக் கொண்டு வர -நீர் நிலைகள் சூழப் பெற்ற
வேங்கட வெற்ப
பட்ட வாள் நுதல் -பொற் பட்டத்தை யணிந்த பிரகாசமான நெற்றியை யுடைய
மங்கையர் -பட்டத்து மனைவியர்
ஆதரிக்க -அன்பு செய்யவும் –
அங்கை மலர் மீ தரிக்கப் பட்ட நின் அடியே -அழகிய தாமரை மலர் போன்ற தங்கள் கைகளின் மீது தாங்கவும் பெற்ற உனது திருவடியே
அன்று -அந்நாளில்
போர் அரக்கர் தீது அரிக்க -போர் செய்ய வல்ல இராவணன் போன்ற இராக்கதர்களால் ஆகிய தீங்கை அளிப்பதற்கு
பட்ட கானகத்தூடு சென்றதுவே –உலர்ந்த காட்டினூடே சென்றது –

————————————————————————–

கிள்ளை விடு தூது –

சென்ற வனத்து அத்தை மைந்தரை வாழ்வித்து தீய மன்னர்
பொன்ற அனத்தத்தைச் செய்த பிரான் புகழ் வேங்கடத்துள்
நின்றவன் அத்தத்துஜ ஆயுதன் பாதத்துஎன் நேசம் எல்லாம்
ஒன்ற வனத்தத்தை காள் உரையீர் அறம் உண்டு உமக்கே –50-

வனத்தத்தை காள் -வனம் தத்தை காள் -அழகிய கிளிகளே
சென்ற வனத்து -பன்னிரண்டு வருஷம் வனவாசம் சென்ற காட்டின் இடத்து
அத்தை மைந்தரை வாழ்வித்து-குந்தி புத்ரர்கள் ஆகிய பாண்டவரை தீங்கின்றி வாழச் செய்து
பின்பு
தீய மன்னர் பொன்ற அனத்தத்தைச் செய்த பிரான் -துரியோதனன் முதலிய அரசர்கள் அழியுமாறு அவர்களுக்கு கேட்டை விளைத்த பிரபுவும்
அத்தத்துஜ ஆயுதன்-திருக்கைகளில் பஞ்ச ஆயதங்களை ஏந்தியவனும்
புகழ் வேங்கடத்துள் நின்றவன்- பாதத்து என் நேசம் எல்லாம்
ஒன்ற உரையீர் -பொருந்தச் சொல்லுங்கோள்
அறம் உண்டு உமக்கே -உங்கட்கு புண்ணியம் உண்டு

————————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: