தலைவி செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்
உண்ட மருந்து கைக்கும் அன்னை மீர் மதன் ஓர் ஐந்து அம்பும்
கொண்டு அமர் உந்து கைக்கும் குறு காமுனம் கொவ்வைச் செவ்வாய்
அண்டம் அருந்து கைக்கும் திறந்தான் அப்பன் போல் பரியும்
எண் தமரும் துகைக்கும் பொடி காப்பு இடும் இன்று எனக்கே –51-
தலைவி செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்
உண்ட மருந்து கைக்கும் -உன்னப் படுகிற அமிர்தமும் எனக்கு கசக்கும்
அன்னை மீர் -தாய்மார்களே
மதன் ஓர் ஐந்து அம்பும் கொண்டு அமர் உந்து கைக்கும் குறு காமுனம் –
மன்மதனும் ஒப்பற்ற ஐந்து அம்புகளையும் கொண்டு அமர் உந்துகைக்கு குறுகா முன்னம்
இன்று எனக்கே
கொவ்வைச் செவ்வாய் அண்டம் அருந்து கைக்கும் -திறந்தான்-வெண்ணெய் உண்ணவும்
அண்டங்களை கல்பாந்தத்தில் விழுங்கவும் திருவாயைத் திறந்தான்
அப்பன் போல் பரியும் -திருவேங்கடமுடையான் போலே உயிர்கள் பக்கல் அன்பு கொள்ளுகின்ற
எண் தமரும் துகைக்கும் பொடி காப்பு இடும் -மதிக்கத்தக்க அடியார்கள் மிதிக்கின்ற திருவடித் துகளை காப்பாக இடுங்கோள்
தானே நோயையும் நோயின் காரணத்தையும் நோய் தீர்க்கும் மருந்தையும் அம்மருந்தை பிரயோகிக்கும் விதத்தையும் உணர்த்துகிறாள்
தாராயினும் –மண்ணாயினும் கொண்டு வீசுமின் போலே
மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின் மாற்றில்லை இவ் வணங்குக்கே
————————————————————————
எனக்குப் பணியப் பணி ஒரு கால் இரு காலும் நல்க
உனக்குப் பணி இங்கு இருவேம் பணியில் என் ஓர் பணியும்
நினக்குப் பணி வித்துக் கொண்டு உம் பணி நீ பணித்திலை என்
தனக்குப் பணி வெற்பின் மீது ஓங்கி நின்ற தனிச் சுடரே –52-
பணி வெற்பின் மீது-சேஷகிரியின் மேல் ஓங்கி நின்ற தனிச் சுடரே –சூர்யா சந்திர அக்னிகளிலும் மேம்பட்ட பரஞ்சோதி அன்றோ நீ
எனக்குப் பணியப் பணி ஒரு கால்-ஒரு கால் பணிய எனக்கு பணி -ஒரு தரம் வணங்குவதே எனக்கு தொழில்
இரு காலும் நல்க உனக்குப் பணி -உனது திருவடி இணைகளை அருளுவது உனக்கு உரிய க்ருத்யம்
இங்கு இருவேம் பணியில்-இவ்வாறு குறித்த நம் இருவர் வேலைகளிலும்
என் ஓர் பணியும் நினக்குப் பணி வித்துக் கொண்டு -ஒரு கால் பணிதல் ஆகிய எனது தொழிலை மாதரம் உனக்கு நீ செய்வித்துக் கொண்டு
உம் பணி நீ பணித்திலை என் தனக்குப் -இரு காலையும் நல்குதல் ஆகிய உனது தொழிலை நீ செய்கின்றாய் இல்லை –
—————————————————————————
தலைவியின் பிரிவாற்றாமை கண்ட செவிலி இரங்கல் –
தனித் தொண்டை மா நிலத்தே புரிவார்க்கு அருள் தாள் உடையாய்
தொனித் தொண்டைமான் நெடுவாய் பிறந்தாய் துங்க வேங்கடவா
முனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி நல்கி என் மூரல் செவ்வாய்க்
கனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி கோடல் கருமம் அன்றே –53-
தனித் தொண்டை புரிவார்க்கு-ஒப்பற்ற அடிமைத் தொழில் செய்யும் மெய்யடியார்க்கு
மா நிலத்தே -பெரிய நில உலகத்திலே
அருள் தாள் உடையாய் -தந்து அருளுகிற திருவடிகளை யுடையாய் -பரம பதத்தை யுடையவனே –
தொனித் தொண்டைமான் -கனைக்கின்ற குரலை யுடைய தொண்டையை யுடைய குதிரையினது
நெடுவாய் பிறந்தாய் -பெரிய வாயைப் பிளந்தவனே
துங்க -உயர்ந்த -வேங்கடவா -நீ
முனித் -ராஜரிஷி -தொண்டை மான் கையில் சங்கு ஆழி நல்கி
என் மூரல் செவ்வாய்க் கனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி கோடல் –
புன்சிரிப்பு உள்ள சிவந்த வாயாகிய தொண்டைப் பழத்தை யுடைய மான் போன்றவளான என் மகளது கைகளில் உள்ள
சங்கு ஆழிகளை -வளையல்கள் மோதிரங்களை கவர்ந்து கொள்ளுதல்
கருமம் அன்றே –செய்யத்தக்க செயல் அன்றே
கைப் பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் –திருவரங்கச் செல்வனார் -நாச்சியார் திருமொழி –
—————————————————————————
பிரிவாற்றாத தலைவி பிறை கண்டு வருந்துதல்
கரு மாதவா இருந்து ஆவன செய்து என் கருத்து இருளைப்
பொரும் ஆதவா விருந்தா வனத்தாய் பொற் சவரி என்னும்
ஒரு மாது அவா விருந்தா வனக்கா உயர் வேங்கடத்து எம்
பெருமா தவா இரும் தாவு அனல் ஏயும் பிறைக் கொழுந்தே –54-
கரு மாதவா -என் கருத்து இருந்து ஆவன செய்து
இருளைப் பொரும் ஆதவா-அகவிருள் அஜ்ஞானம் ஒழித்து அருளிய சூர்யன் போன்றவனே
விருந்தா வனத்தாய்- பொற் சவரி என்னும் -உத்தம குணம் உள்ள சபரி என்னும்
ஒரு மாது அவா விருந்தா
வனக்கா உயர் வானம் கா– உயர் சோலைகள் உயர்ந்து இருக்கப் பெற்ற
வேங்கடத்து எம் பெருமா
தவா இரும் தாவு அனல் ஏயும் பிறைக் கொழுந்தே –இளம் பிறை கெடாத பெரிய தாவி எரிகின்ற நெருப்பை ஒத்து சுடுகின்றதே
ஞான உதயம் -பிறைக் கொழுந்து –
——————————————————————–
பிறை மாலையால் ஒரு பேதை நைந்தாள் அந்த பேதைக்கு நின்
நறை மாலை தா என்று மானிடம் பாடிய நா வலர்காள்
நிறை மாலை அற்று கவி மாலையால்நினையீர் திரு வெள்
ளறை மாலை வேங்கடத்தே உறை மாலை அரங்கனையே –55-
பிறை மாலையால் -பிறை சந்த்ரனது தோற்றம் உடைய மாலைப் பொழுதினால்
ஒரு பேதை நைந்தாள்
அந்த பேதைக்கு நின் நறை மாலை-வாசனை யுள்ள மாலை – தா என்று
மானிடம் பாடிய-அகப்பொருள் துறை அமைத்து -மனிதர்கள் மேல் கவி பாடிய -நா வலர்காள் -புலவர்களே
நிறை மாலை அற்று -இங்கனம் உங்கள் மனத்தில் நிறைந்த மயக்கத்தை நீக்கி –
கவி மாலையால் நினையீர்-பா மாலை கொண்டு பாடுவீராக – திரு வெள்ளறை மாலை வேங்கடத்தே உறை மாலை அரங்கனையே —
மானிடத்தைக் கவி பாடி என் -நம்மாழ்வார் -மனுஷ்யர் என்று சொல்லவும் பாத்தம் காண் கிறிலர் காணும் –
அசேதனங்களை சொல்லும் படியிலே சொல்லுகிறார் -தன்னை மெய்யாக அறியாதவன் அசித் ப்ராயன் இ றே-
——————————————————————-
அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுய
கரம் கண்ண மங்கை நறையூர் கடல் மலை கச்சி கண்ண
புரம் கண்டியூர் தஞ்சை மாலிருஞ்சோலை புல்லாணி மெய்யம்
தரங்கம் பரமபதம் வேங்கடேசற்குத் தானங்களே –56-
திருவரங்கம் முதல் ஸ்ரீ வைகுண்டம் வரை 17 திவ்ய தேசங்களை அடை மொழி இல்லாதபடி அழகாக அருளிச் செய்கிறார் –
—————————————————————–
தான அல் நாக மருப்பு ஒசித்தானுக்கு தான் உகந்தது
ஆன வல் நாக முடியில் நின்றானுக்கு தாள் வணங்காத்
தானவன் ஆகம் இடந்தானுக்கு ஆள் என்று தனை எண்ணா
தான் அவனாக நினைந்திருப்பாற்கு என்றும் தான் அவனே –57-
தான அல் நாக மருப்பு ஒசித்தானுக்கு -மதத்தை யுடைய இருள் பொன்ற கரு நிறம் உள்ள குவலையா பீடம் என்னும்
யானையின் தந்தங்களை ஓடித்தவனும்
நாகம் -யானை -நகத்தில் மலையில் வசிப்பதால் காரணப் பெயர்
தான் உகந்தது ஆன வல் நாக முடியில் நின்றானுக்கு -வல் நாகம் -வழிய திருவேங்கட திருமலையில் –
தாள் வணங்காத் -திருவடிகளை வணங்காத -தானே தெய்வம் என்று செருக்கி இருந்த
தானவன் ஆகம் இடந்தானுக்கு -இரணியன் மார்பை பிளந்த -ஆள் என்று தனை எண்ணா தான் அவனாக நினைந்திருப்பாற்கு -விபரீத ஞானிக்கு
என்றும் தான் அவனே-எப்பொழுதும் பயன் படாமல் இருப்பான் என்றவாறு
நியாமகன் தாரகன் சேஷி என்ற நினைவு இல்லாமல் –
இதுவும் யமக அணிப் பாசுரம் –
————————————————————————-
தானவர் ஆகம் தடிவார் வடமலைத் தண் அம் துழாய்
ஞான வராகர் தரும் அண்டம் யாவையும் நண்ணி அவர்
கால் நவராக விரல் தோறும் அத்திக் கனியின் வைகும்
வானவர் ஆக இருப்பார் அவற்றுள் மசகங்களே –58-
தானவர் ஆகம் தடிவார்
வடமலைத் தண் அம் துழாய் ஞான வராகர்
தரும் -படைத்த அண்டம் யாவையும் -அண்ட கோலங்கள் எல்லாம்
அவர் கால் நவராக விரல் தோறும் -புதிதாய் செந்நிறமாய் தோற்றும் விரல்கள் தோறும்
அத்திக் கனியின் -நண்ணி -வைகும் -அத்திப் பழங்கள்-அந்த மரத்தில் ஒட்டிக் கிடத்தல் போலே -பொருந்தித் தங்கும் –
வானவர் ஆக இருப்பார் அவற்றுள் மசகங்களே –அந்த அண்டங்களில் வசிக்கும் தேவர்கள்
அம்மரத்தில் உள்ள அத்திப் பழங்களில் மொய்த்துக் கிடக்கும் கொசுக்கள் போலே இருப்பர்-
ஆழிப்பிரான் அடிக்கீழ் உத்பவித்து அழியும் பரவையில் மொக்குகளைப் போலே பலகோடி பகிர் அண்டமே –
எம்பெருமானது விராட் ஸ்வரூபத்தின் பெருமையையும் மற்றைத் தேவர்களின் சிறுமையையும் அருளிச் செய்த வாறு
—————————————————————————
பாங்கி வெறி விளக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்
மசகம் தரம் என்னல் ஆய நிலையா உடல் வாழ் உயிரை
அசகம் தர வல்லதோ அன்னைமீர் அண்டம் உண்டு உமிழ்வா
ரிசசுந்தர வண்ணர் வேங்கட வாணர் இலங்கையர் கோன்
தெகந்தரம் அறுத்தார் திருப் பேர் சொல்லும் தீங்கு அறவே –59-
அன்னைமீர்
மசகம் தரம் என்னல் ஆய-கொசுவுக்கு சமமானது என்று சொல்லத் தக்கதாய்
நிலையா உடல் வாழ் உயிரை
அசகம் தர வல்லதோ -ஆட்டின் தலையானது கொடுக்க வல்லதோ -இல்லையே ‘-ஆடு பலி கொடுத்தல் கார்ய கரம் ஆகாதே
வெறி விலக்கு -துறை
இனி நீங்கள் –
தீங்கு அறவே –இத்தளைவிக்கு நேர்ந்துள்ள துன்பம் நீங்குமாறு
அண்டம் உண்டு உமிழ் வாரிச கந்தர வண்ணர் –உண்டு உமிழ்ந்து -தாமரை பூத்த தொரு மேகம் பொன்ற -வடிவுடையவர்
வேங்கட வாணர்
கந்தரம் -நீரை உட்கொண்ட மேகம் என்ற பொருளில்
இலங்கையர் கோன் தெச கந்தரம் -பத்து தலைகளையும் -அறுத்தார் திருப் பேர் சொல்லும்-தீங்கு அர சொல்லும் என்று இயையும் –
கந்தரமகழுத்து -தலையைத் தரிப்பது -என்றவாறு
காக்கும் கடவுளின் திருநாம சங்கீர்த்தனமே தக்க பரிஹாரம் என்றவாறு –
————————————————————————–
தீங்கு அடமால் அத்தி முன் நின்று காலிப்பின் சென்ற கொண்டல்
வேங்கடமால் கழலே விரும்பார் விலை மாதர் மல
ஆம் கடம் மால் செய மாலாய் அவர் எச்சில் ஆகம் நச்சி
தாங்கள் தமால் அழிவார் இருந்தாலும் சவப் பண்டமே –60-
தீங்கு அடமால் அத்தி முன் நின்று -முதலையினால் உண்டான துன்பத்தை அழிக்க-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் எதிரிலே வந்து நின்று அருளிய பெருமான்
ஹஸ்தீ -அத்தி –
காலிப்பின் சென்ற கொண்டல்
வேங்கடமால் கழலே விரும்பார்
விலை மாதர் மல ஆம் கடம் மால் செய -மலமாம் கடம் மால் செய -அசுத்தம் நிறைந்த பாண்டம் பொன்ற உடம்பில் மயக்கத்தைச் செய்ய
மாலாய் அவர் எச்சில் ஆகம் நச்சி -மயக்கம் கொண்டு எச்சில் ஆகிய உடம்பை விரும்பி
தாங்கள் தமால் அழிவார் -தங்கள் குணக் கேட்டினாலேயே அழிவார்கள்
இருந்தாலும் சவப் பண்டமே -இறவாமல் பூமியில் இருந்தாலும் பிணமாகிய பொருளே யாவார் –
————————————————————-
பண்டை இருக்கும் அறியாப் பரம பதத்து அடியார்
அண்டை இருக்கும் படி வைக்கும் அப்பனை அண்டத்துக்கும்
தண் தையிருக்கும் மலர்ந்த செவ்வாயனை தாள் வணங்கா
மண்டை யிருக்கும் விடுமோ சனன மரணமுமே –61-
பண்டை இருக்கும் அறியாப் -பழைமையான வேதங்களும் முழுதும் அரிய மாட்டாத
பரம பதத்து அடியார் அண்டை இருக்கும் படி வைக்கும் அப்பனை-
நித்ய முத்தர்கள் உடன் தம் அடியாரை ஒரு கோவையாக வைத்து அருளும் திருவேங்கடமுடையானை
அண்டத்துக்கும் தண் தையிருக்கும் மலர்ந்த செவ்வாயனை -தையிர்-இடைப்போலி -தயிர் என்றபடி
தாள் வணங்கா மண்டை யிருக்கும் -வணங்கா தலையை உடைய உங்களுக்கு
விடுமோ சனன மரணமுமே –பிறப்பும் இறக்கும் நீங்காது என்றபடி –
—————————————————————–
மரணம் கடக் குஞ்சரம் நீங்க வாழ்வித்து வல் அரக்கர்
முரண் அங்கு அடக்கும் சர வேங்கடவ கண் மூடி அந்தக்
கரணம் கடக்கும் சரமத்து நீ தருகைக்கு எனக்கு உன்
சரணம் கடக்கும் சரண் வேறு இல்லை தந்து தாங்கிக் கொள்ளே –62-
மரணம் கடக் குஞ்சரம் நீங்க வாழ்வித்து -மதத்தை யுடைய யானை -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்து
வல் அரக்கர் முரண் அங்கு அடக்கும் சர
வேங்கடவ
கண் மூடி அந்தக் கரணம் கடக்கும் சரமத்து -அந்திம தசையில்
நீ தருகைக்கு எனக்கு -எனக்கு நீ அளிக்க
உன் சரணம் கடக்கும் சரண் வேறு இல்லை தந்து தாங்கிக் கொள்ளே
-உன் திருவடி அன்றி வேறு ரஷகம் இல்லை -அதனை அளித்து அருளி என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாய் என்றபடி
உன் சரண் அல்லால் சரண் இல்லை என்றபடி –
—————— —————————————————-
தாங்கு அடல் ஆழி வளை தண்டு வாள் வில்லில் தானவரை
ஈங்கு அட வீசி குறித்து அடித்து துணித்து எய்து வெல்லும்
பூங்கடல் வண்ணன் நிலை கிடை வந்தது போக்கு இடுப்பு
வேங்கடம் வேலை அயோத்தி வெங்கானகம் விண்ணுலகே –63–
தாங்கு அடல் -வலிமை யுடைய -ஆழி வளை தண்டு வாள் வில்லில் -பஞ்சாயுதங்களால் முறையே
தானவரை ஈங்கு அட -அழிக்குமாறு
வீசி -சுழற்றி வீசியும்
குறித்து -ஊதி முழக்கியும் –
அடித்து-அடித்தும்
துணித்து -அறுத்தும்
எய்து வெல்லும் -அம்பு எய்து ஜெயிக்கும்
பூங்கடல் வண்ணன் நிலை-நின்ற திருக்கோலமுமாய் – கிடை -கிடந்த திருக்கோலமுமாய் –
வந்தது -வந்து திருவவதரித்த இடமும் –
போக்கு -நடந்து அருளிய இடமும் –
இடுப்பு -வீற்று இருந்த திருக் கோலமாயும்
முறையே
வேங்கடம் -வேலை -திருப் பாற் கடலும் -அயோத்தி வெங்கானகம் – விண்ணுலகே —
இராமனாயும் கிருஷ்ணனாயும் வந்து -வெங்கான கம் போக்கு -தண்ட காரண்யம் -பிருந்தாவனம் நடந்து –
————————————————————————-
உலகம் தர உந்தி பூத்திலையேல் சுடர் ஓர் இரண்டும்
இலகு அந்தரமும் புவியும் எங்கே அயன் ஈசன் எங்கே
பலகந்தரமும் உணவும் எங்கே பல் உயிர்கள் எங்கே
திலகம் தரணிக்கு என நின்ற வேங்கடச் சீதரனே –64-
தரணிக்கு திலகம் என நின்ற வேங்கடச் சீதரனே-திருமாலே –
திருமகளை மார்பில் அகலகில்லேன் இறையும் என்று தரிப்பவன் சீதரன் –
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே -திருவாய் மொழியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார்
ஸ்திரீகளுக்கு பூரணமான ஆபரணம் போலே யாய்த்து பூமிக்கு திருமலை –
உலகம் தர -சிருஷ்டிக்க -உந்தி பூத்திலையேல்
சுடர் ஓர் இரண்டும் -சந்திர சூரியர்களும்
இலகு அந்தரமும் -அவை விளங்கும் ஆகாயமும்
புவியும் எங்கே
அயன் ஈசன் எங்கே
பலகந்தரமும் உணவும் எங்கே -பல மேகங்களும் -அவற்றால் ஆகிற உணவுகளும் எவ்விடத்தே தோன்றும்
பல் உயிர்கள் எங்கே –
சராசரப் பொருள்கள் யாவுமே உளவாகாது என்றவாறு –
————————————————————————
சீவார் கழலை இரண்டையும் செப்பு என்று தீங்கு உளவி
னாவார்கழலைப் பயில் செங்கையார் நலம் பேணும் ஐவர்
ஆவார் கழல் ஐ இரண்டாம் அவத்தையின் அன்று எனக்கு உன்
பூவார் கழலை அருள் அப்பனே அண்ட பூரணனே –65-
அப்பனே அண்ட பூரணனே –அண்டம் முழுவதிலும் வியாபித்து நிறைந்து இருப்பவனே –
கழலைப் பயில் செங்கையார்-கழற்சிக்காயை யாடுகிற சிவந்த கைகளை யுடையவர்களான மகளிரது –
கவலை இல்லாமல் விளையாடுபவர் என்றும்
விளையாட்டினால் ஆடவரை வசீகரிப்பவர் என்றுமாம்
சீவார் கழலை இரண்டையும் -சீ ஒழுகுகின்ற கல்லைக் கட்டியாகிய ஸ்தனங்கள் இரண்டையும்
செப்பு என்று -கிண்ணங்கள் என்று புனைந்து உரைத்து
தீங்கு உள வினாவார்-அவர்கள் இடம் உள்ள தீமைகளை விசாரித்து அறியாதவர்களாய் –
தீங்கு உள வினாவார் -தீங்கு விளைக்கும் சொற்களை யுடைய மகளிர் என்றுமாம் -இனா -பரிகாச வார்த்தைகள் என்றுமாம்
இன்னா -இனியவை இல்லாதவை என்றுமாம்
தீம் குளம் வினாவார் -இனிமையான வெல்லம் பொன்ற சொற்களை யுடையவர்
தீங்கு உளவின் ஆவார் -கொடிய வஞ்சனையில் பொருந்தி இருப்பவர்
தீம் குழலின் நாவர்-இனிமையான பேச்சுகள் யுடையவர்
நலம் பேணும் -அவர்கள் உடைய இன்பத்தை விரும்புவர்களாய்
ஐவர் ஆவார் -பந்த இந்த்ரியங்கள்
கழல் -தம் தம் ஆற்றல் ஒழியப் பெறுகிற
ஐ இரண்டாம் அவத்தையின் அன்று -பத்தா
நினைவு -பேச்சு -இரங்கல் -வெய்து உயிர்த்தல் -வெதுப்பு -துய்ப்பன தெவிட்டல் -அழுங்கல்-மொழி பல பிதற்றுதல் -மிகு மயக்கு -இறப்பு
காட்சி –அவா -சிந்தனை –அயர்ச்சி -அலற்றல்-நாண் ஒழிதல் -திகைத்தல் -மோகம் -மூர்ச்சை -இறந்துபடுதல் என்றுமாம் –
அந்நாளில்
எனக்கு உன் பூவார் கழலை அருள் -தந்து அருள்வாய்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடம் -புஷ்ப மண்டபம் –
தேவாசுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே
வேங்கடமே –பூவார் கழலார் பொருப்பு –திருவேங்கட மாலை –
———————————————————————-
பூரணன் ஆரணன் பொன்னுலகு ஆளி புராரி கொடி
வாரணன் ஆர் அணன் வாழ்த்தும் பிரான் வட வேங்கடத்துக்
காரணன் ஆர் அணங்கு அனா இறைவி கணவன் மண் ஏழ்
பாரணன் நாரணன் என்பார்க்கு நீங்கும் பழுது அவமே –66-
பூரணன் -எங்கும் நிறைந்தவன்
ஆரணன் -பிரமனும்
பொன்னுலகு ஆளி -ஸ்வர்க்க லோகம் ஆளும் இந்திரனும்
புராரி -புர அரி -திரிபுரம் எரித்த சிவனும்
கொடிவாரணன் -த்வசத்தில் கோழி வடிவை யுடைய சுப்ரமணியனும் -கொடிக் கோழி கொண்டான் -நம்மாழ்வார்
ஆர் அணன் -அவனுக்கு பொருந்திய விநாயகனும்
வாழ்த்தும் பிரான் -பல்லாண்டு பாடி–ஸ்துதிக்கும் பிரபு
வட வேங்கடத்துக் -திருவேங்கட திருமலையில் எழுந்து அருளி
காரணன்-அனைத்துக்கும் காரணன்
ஆர் அணங்கு அனா இறைவி கணவன் -தன்னை விட்டு நீங்காத தலைவியாகிய அருமையான திருமகளுக்கு கணவன்
ஆரணம் காணா இறைவி – வேதங்களும் கண்டு அரிய மாட்டாத திருமகள் -என்றுமாம்
மண் ஏழ் பாரணன் -ஏழு வகை உலகங்களையும் உண்டவன்
நாரணன் என்பார்க்கு -அவனது திருக்கல்யாண குணங்கள் -சேஷ்டிதங்கள்-பரத்வம் -திருநாமங்கள் சொல்பவர்க்கு
நீங்கும் பழுது அவமே -பழுது அவம் நீங்கும் -முன்பு செய்த தீவினைகள் எல்லாம் பயன் தராதவனவாய் ஒழியும் –
———————————————————————-
பழுத்தெட்டி பொன்ற நடுச் செல்வர் பின் சென்று பல் செருக்கால்
கொழுத்து எள் தினை அளவு எண்ணம் அற்றீர் குவடு ஏறி மந்தி
கழுத்து எட்டி அண்டர் பதி நோக்கும் வேங்கடக் காவலனை
எழுத்து எட்டினால் எண்ணி ஏத்தீர் பரகதி ஏறுவதற்கே –67–
பழுத்தெட்டி பொன்ற -பிறர்க்கு பயன்படாத பழுத்த எட்டி மரம் பொன்ற
நடுச் செல்வர் பின் சென்று-பரம்பரையாக அமைந்த செல்வம் அன்றி இடையில் வந்த செல்வம் உடையவர்கள் பின்னே தொடர்ந்து சென்றும்
அல்பன் பணம் படித்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான் -இறுமாப்பு கொண்டு -பிறருக்கு உதாமல் இருப்பதால் பழுத்த எட்டி என்கிறார்
ஈயாத புல்லர் இருந்து என்ன போயென்ன எட்டி மரம் காயாது இருந்து என்ன காய்த்துப் பலன் என்ன -என்பர்
பல் செருக்கால் கொழுத்து -பல வகை செருக்கால் கொழுத்தவர்கள் ஆகியும்
எள் தினை அளவு எண்ணம் அற்றீர் -கொஞ்சம் கூட கடவுளைப் பற்றி சிந்தனை இல்லாதவர்களே –
இனியாயினும் நீங்கள் பழுதே பல பகலும் போக்காமல்
பரகதி ஏறுவதற்கே –
மந்தி -குவடு ஏறி-கழுத்து எட்டி அண்டர் பதி நோக்கும் வேங்கடக் காவலனை –
பெண் குரங்குகள் சிகரத்தில் ஏறி கழுத்தைத் தூக்கி மேல் உள்ள தேவ லோகத்தை எட்டிப் பார்க்கப் பெற்ற
திருவேங்கட திருமலையில் எழுது அருளி இருக்கும் ஸ்வாமியை
குவடு -மரக்கிளை என்றுமாம்
எழுத்து எட்டினால் எண்ணி ஏத்தீர் —அஷ்டாஷர மகா மந்த்ரத்தைக் கொண்டு த்யானித்து ஸ்துதியுங்கோள் –
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -என்பர் –
——————————————————————————-
ஏறு கடாவுவர் அன்னம் கடாவுவர் ஈர் இரு கோட்டு
உறு கடா மழை ஓங்கல் கடாவுவர் -ஓடு அருவி
ஆறு கடாத அமுது எனப் பாய அரிகமுகம்
தாறுகள் தாவும் வட வேங்கடவரைத் தாழ்ந்தவரே –68-
-ஓடு அருவி ஆறு -நதிகளாக விரைந்து செல்லும் நீர் அருவிகள்
கடாத அமுது எனப்-கடுக்காத -இன் சுவை யுடைய அம்ருதம் போலே
பாய -பாய்ந்து வர
அரிகமுகம் தாறுகள் தாவும்-அரி கமுகம் தாறுகள் தாவும் -குரங்குகள் பாக்கு மரக் குலைகளின் மேலே ஏறித் தாவப் பெற்ற
வட வேங்கடவரைத் தாழ்ந்தவரே –வணங்கினவர்கள் –
ஏறு கடாவுவர் -ருஷபத்தை வாகனமாகக் கொண்டு ஏறி நடத்துவர் -ருத்ர பதவி அடைவர்
அன்னம் கடாவுவர் -அன்னப் பறவையை வாகனமாகக் கொண்டு ஏறி நடத்துவர் -பிரம பதவி அடைவர்
ஈர் இரு கோட்டு -நான்கு தந்தங்களை யுடையதும்
உறு கடா மழை -மேன்மேல் சுரக்கின்ற மத நீர்ப் பெருக்கை யுடையதுமான
ஓங்கல் கடாவுவர் -மலை பொன்ற ஐராவத யானையை ஏறி நடாத்துவர் -இந்திர பதவி அடைவர் –
——————————————————————————–
தாழ்ந்த அருக்கம் தரு ஒக்குமோ பல தாரகையும்
சூழ்ந்த அருக்கன் சுடர் ஒக்குமோ தொல் அரக்கர் என்று
வாழ்ந்த வருக்கம் களைந்தான் வடமலை மால் அடிக்கீழ்
வீழ்ந்தவருக்கு அன்பருக்கு ஒப்பரோ அண்டர் மெய்த்தவரே –69-
தாழ்ந்த அருக்கம் தரு ஒக்குமோ -இழிவான எருக்கம் செடியானது பெரிய மரத்துக்கு ஒப்பாகுமோ
பல தாரகையும் -பல நஷத்ரங்களும்
சூழ்ந்த அருக்கன் சுடர் ஒக்குமோ-சுற்றிலும் பரவும் சூரியனது ஒளிக்கு ஒப்பாகுமோ –
ஒப்பாகா -அவை போலே –
தொல் அரக்கர் என்று வாழ்ந்த வருக்கம் களைந்தான் –
பழமையான இராக்கதர்கள் என்று பிரசித்தி பெற்று வாழ்ந்த கூட்டங்களை எல்லாம் வேரோடு அழித்த
வடமலை மால் அடிக்கீழ் வீழ்ந்தவருக்கு அன்பருக்கு ஒப்பரோ அண்டர் மெய்த்தவரே —
திருவடிகளில் வீழ்ந்து வணங்கின அடியார்க்கு அன்பு பூண்டு ஒழுகுபவர்க்கு
தேவர்களும் உண்மையான தவத்தை யுடைய முனிவர்களும் ஒப்பாகார் என்றபடி –
—————————————————————————–
மெய்த்தவம் போர் உக வெஞ்சொல் இராமன் வில் வாங்கி வளைத்து
உய்ந்த அம் போர் உகம் நாலும் செய்தோர் உயர் வேங்கடத்து
வைத்த அம் போருகப் பூ ஆர் கழலை மறை மனு நூல்
பொய்த்த வம்போர் உகவார் காமம் வேட்டுப் புரளுவரே –70-
மெய்த்தவம் -உண்மையாகச் செய்த தவம்
போர் உக -யுத்தத்தில் பழுது பட்டு ஒழியுமாறு
வெஞ்சொல் இராமன் வில் வாங்கி வளைத்து உய்ந்த அம் போர் –
கடும் சொற்களைப் பேசி வந்த பரசுராமன் உடைய வில்லை -அவன் கையின் நின்றும் தம் கையில் வாங்கி வளைத்து எய்த அம்பை யுடையவரும் –
உகம் நாலும் செய்தோர் -நாலு யுகங்களையும் செய்தவருமான திருமால்
உயர் வேங்கடத்து வைத்த அம் போருகப் பூ ஆர் கழலை –
மறை மனு நூல் பொய்த்த வம்போர் -வேதம் மனு சாஸ்திரங்கள் இவை பொய் என்று கூறும் வம்பு பேச்சை யுடையவர்கள்
உகவார் -விரும்பாதவர்களாய்
காமம் வேட்டுப் புரளுவரே -சிற்றின்பத்தை விரும்பி புரண்டு வருந்துவர் –ஈற்று -ஏகாரம் அந்தோ -கழிவிரக்கம் ஈற்று –
——————————————————————————–
புரண்டு உதிக்கும் உடற்கே இதம் செய் பொருள் ஆக்கையின் நால்
இரண்டு திக்கும் தடுமாறும் நெஞ்சே இனி எய்துவம் வா
திரண்டு திக்கும் அரன் வேள் அயனார் முதல் தேவர் எல்லாம்
சரண் துதிக்கும் படி மேல் நின்ற வேங்கடத் தாமத்தையே –71-
புரண்டு உதிக்கும் -நிலை நில்லாது மாறி மாறி தோன்றும் தன்மை யுள்ள
உடற்கே -உடம்புக்கே
இதம் செய் பொருள் ஆக்கையின் -நன்மையைச் செய்கிற செல்வத்தை சம்பாதித்திற்காக
நால்இரண்டு திக்கும் தடுமாறும் நெஞ்சே
இனி
திக்கும் அரன் -நெற்றிக் கண்ணின் நெருப்பினால் எரிக்கும் தன்மை யுள்ள சிவனும்
வேள் -சுப்ரமன்யனும்
அயனார் -பிரம தேவரும்
முதல் தேவர் எல்லாம் -முதலிய தேவர்கள் எல்லாரும்
திரண்டு -ஒருங்கு கூடி
சரண் துதிக்கும் படி-தனது திருவடிகளை ஸ்தோத்ரம் செய்யும் படி
வேங்கடம் – மேல் நின்ற –
தாமத்தையே -ஒளி வடிவம் உள்ள கடவுளை –எய்துவம் வா
நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே –
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே -திருவாய்மொழி –
—————————————————————————–
பிரிவாற்றாத தலைவி தோழியரை நோக்கி இரங்கிக் கூறுதல் –
தாம் மத்து அளை வெண்ணெய்உண்ட அந்நாள் இடைத் தாயார் பிணி
தாமத் தளை உவந்தார் வேங்கடாதிபர் தாமரைப் பூந்
தாமத்தளை அணியும் மணி மார்பில் நல் தண் அம் துழாய்த்
தாமத்து அளைவது என்றோ மடவீர் என் தட முலையே –72-
பிரிவாற்றாத தலைவி தோழியரை நோக்கி இரங்கிக் கூறுதல் –
மடவீர்
மத்து அளை வெண்ணெய்-தாம்-உண்ட
அந்நாள் இடைத்
தாயார் பிணி தாமத் தளை உவந்தார்-விரும்பி ஏற்றுக் கொண்டாரே
வேங்கடாதிபர்
தாமரைப் பூந் தாமத்தளை அணியும் மணி மார்பில் –
தாமரை மலரை இடமாக யுடையளான திரு மகளையும் -கௌஸ்துபம் மணியையும் அணிந்த திரு மார்பில் தரித்த
நல் தண் அம் துழாய்த் தாமத்து அளைவது என்றோ என் தட முலையே —
தடமுலை -பக்குவமாய் முதிர்ந்த பக்தி -என்றவாறு –
இது யமகச் செய்யுள் –
——————————————————————————
தடவிகடத் தலை வேழ முன் நின்றன சாடு உதைத்துப்
படவிகள் தத்து அலை ஈர் எழ் அளந்தன பூந்திரு வோடு
அடவி கடத்தலை வேட்டன -வேங்கடத்து அப்பன் புள்ளைக்
கடவி கடத்தலை நெய் உண்ட மாதவன் கால் மலரே –73-
புள்ளைக் கடவி
கடத்தலை -குடத்தில் வைத்து இருந்த
நெய் உண்ட மாதவன்
வேங்கடத்து அப்பன் கால் மலரே —
தட-பெரிய -விகடத் தலை -கும்ப ஸ்தலங்களை யுடையதால் மேடு பள்ளம் கொண்டு மாறு பாடுற்ற தலையை யுடைய
வேழ முன் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முன்னிலையிலே
நின்றன-சென்று நின்றன
சாடு உதைத்துப் -சகடாசுரனை உதைத்துத் தள்ளி
படவிகள் தத்து அலை ஈர் எழ் அளந்தன -பாய்ந்து வரும் அலைகளை யுடைய கடல் சூழ்ந்த பதினான்கு லோகங்களையும் அளந்தன
பூந்திரு வோடு அடவி கடத்தலை வேட்டன-ஸ்ரீ சீதா பிராட்டி யுடன் வனத்தை கடப்பதை விரும்பி நடந்தன –
—————————————————————————–
கானகம் உண்டு அதில் போம் என்னின் நீங்கிக் கடும் பிணி காள்
தேன் அக முண்டகத் தாள் வேங்கடேசனை சென்று இரக்கும்
போனாக முண்ட வெண் நீற்றான் அயனொடும் பூமியொடும்
வானகம் உண்ட பெருமானை இன்று என் மனம் உண்டதே –74-
சென்று இரக்கும் போனாக முண்ட வெண் நீற்றான் –
பல இடங்களிலும் சென்று யாசித்துப் பெற்ற பிச்சை உணவைக் கொள்ளும் பிரம கபாலம் ஏந்தி வெண் நிற விபூதியைத் தரித்த சிவனும்
அயனொடும் -பிரமனும் ஆகிய இரு மூர்திகலோடும்
பூமியொடும்
வானகம் உண்ட பெருமானை -அனைத்தையும் உட்கொண்டு அருளின பெருமானை
தேன் அக முண்டகத் -தாமரை பொன்ற -தாள் வேங்கடேசனை
இன்று என் மனம் உண்டதே —
ஆதலால்
கானகம் உண்டு அதில் போம் என்னின் நீங்கிக் கடும் பிணி காள்-
கொடிய நோய்களே -என்னை விட்டு நீங்கி -கானகம் உளது அங்கெ செல்லுங்கோள்
எம்பெருமானே எல்லா நோய்க்கும் மருந்து -என்றவாறு –
—————————————————————————-
மனம் தலை வாக்கு உற எண்ணி வணங்கி வழுத்தும் தொண்டர்
இனம் தலைப் பெய்தனன் ஈது அன்றியே இமையோரும் எங்கள்
தனம் தலைவா எனும் வேங்கடவாண தடம் கடலுள்
நனந்தலை நாகணையாய் அறியேன் அன்பும் ஞானமுமே –75–
இமையோரும் எங்கள் தனம் தலைவா எனும் வேங்கடவாண தடம் கடலுள் -பெரிய திருப் பாற் கடலுள்
நனந்தலை -பரந்த இடம் உள்ள -நாகணையாய்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் -நாராயணா வோ மணி வண்ணா நாகணையாய் –
மனம் தலை வாக்கு உற -தகுதியாக -முறையே எண்ணி வணங்கி வழுத்தும்
மநோ வாக் காயம் முறை பிறழக் கூறினார்
மெய் -தலை உத்தம அங்கம் என்பதால்
தொண்டர் இனம் தலைப் பெய்தனன்-சேர்ந்தேன்
ஈது அன்றியே-இதுவே அல்லாமல்
அறியேன் அன்பும் ஞானமுமே -ஞான பக்திகளின் தன்மையை அறிவேன் அல்லேன் -காரிய காரண முறை பற்றி அன்பும் ஞானமும் என்கிறார்
மெய்யடியார் சம்பந்தமே உஜ்ஜீவன ஹேது என்றவாறு -அத்தை வியாஜமாக கொண்டு காத்து அருள்வாய் –
————————————————————————–
கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply