இத்திரு பிரபந்தம் -திரிபு -சொல் அணி -ஒவ்வொரு அடியிலும் முதல் எழுத்து மட்டும் மாறி
-இரண்டு முதலிய பல எழுத்துக்கள் ஒன்றாகவே இருந்து பொருள் வேறு படுவது
யமகம் -சொல் அணியாகவும் இருக்கும் -எழுத்து தொடர்களே மீண்டும் வருவது யமகம் என்பர்
இத்தை மடக்கு என்பர் –
——————————
சிறப்பு பாசுரம் -தனியன் -அபியுக்தர் அருளியது என்பர் –
இக்கரை யந்திரத்துத் பட்ட தென்ன இருவினையுள்
புக்கரை மா நொடியும் தரியாது உழல் புண் பிறப்பாம்
எக்கரை நீக்கிப் படித்தாரை அந்த இரு விரசைக்கு
அக்கரை சேர்க்கும் மணவாள தாசன் அருங்கவியே –
இக்கரை யந்திரத்துத் பட்ட தென்ன -இக்கு -கரும்பானது – அரை யந்திரத்துள் பட்டது என்ன –
இருவினையுள் புக்கரை மா நொடியும் தரியாது உழல் புண் பிறப்பாம்
எக்கரை நீக்கிப் -மணல் மேட்டைக் கடக்கச் செய்து
படித்தாரை அந்த இரு விரசைக்கு அக்கரை சேர்க்கும் மணவாள தாசன் அருங்கவியே –
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு -திருக்குறள் –
—————————————————
காப்பு –
நல்ல அந்தாதி திரு வேங்கடவற்கு நான் விளம்பச்
சொல் அவம் தாதின் வழு பொருள் சோர்வு அறச் சொல் வித்தருள்
பல்ல வந்தாதிசை வண்டார் குருகைப் பர சமயம்
செல்ல வந்து ஆதி மறைத் தமிழால் செய்த வித்தகனே –
நல்ல அந்தாதி திரு வேங்கடவற்கு நான் விளம்பச் -நான் பாடுமாறு
சொல் அவம் -சொற்குற்றங்கள்
தாதின் வழு -வினைப்பகுதிகளின் குற்றங்கள்
பொருள் சோர்வு -பொருள் குற்றங்களும்
அறச் சொல் வித்தருள் -சொல்வித்து அருள்வாய் என்றபடி –
பல்ல வந்தாதிசை வண்டார் -பல்லவம் தளிர்களிலும் -தாது -பூந்துகளிலும் –
இசை வண்டு ஆர் -நறு மணத்தை உட்கொள்ளும் பொருட்டு இசை பாடும் வண்டுகள் மொய்க்கப் பெற்ற
குருகைப் பர சமயம் செல்ல வந்து ஆதி மறைத் தமிழால் செய்த வித்தகனே -ஞான ஸ்வரூபியாய் உள்ளவனே
————————————————-
திருவேங்கடத்து நிலை பெற்று நின்றன சிற்றன்னையால்
தரு வேம்கடத்துத் தரை மேல் நடந்தன தாழ் பிறப்பின்
உருவேங்கள் தத்துக்கு உளத்தே இருந்தன உற்று அழைக்க
வருவேம் கடத்தும்பி அஞ்சல் என்று ஓடின மால் கழலே –1-
திருப் பாத வகுப்பு துறை
திருமாலினது திருவடிகளின் பெருமையை அருளிச் செய்து திரு பிரபந்தம் தொடங்குகிறார் –
திருவிலே தொடக்கி அருளிச் செய்கிறார்
சிற்றன்னையால் -கைகேயி தாயார் கட்டளையால்
தரு வேம்கடத்துத் தரை மேல் நடந்தன -மரங்கள் வேகப் பெற்ற கடும் சுரத்து நிலம் மேல் நடந்து சென்றன
தாழ் பிறப்பின் உருவேங்கள் -இழிந்த பிறப்பின் வடிவத்தை யுடைய எங்களது
தத்துக்கு -ஆபத்தை நீக்குதற்கு
உளத்தே இருந்தன
கடத்தும்பி-கடம் தும்பி -மத்ததை யுடைய யானையாகிய ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்
உற்று அழைக்க -முதலையால் பற்றப் பட்டு துன்பம் உற்று ஆதி மூலமே என்று அழைக்க
வருவேம் அஞ்சல் என்று ஓடின மால் கழலே -அபய வார்த்தை சொல்லி விரைந்த திருமாலினது திருவடிகள்
திருவேங்கடத்து நிலை பெற்று நின்றன -அர்ச்சாவதாரத்தில் நிலை பெற்று நின்றன
நின்றன -இருந்தன -நடந்தன ஓடின -முரண் தொடை
—————————————————————-
மாலை மதிக்குஞ்சி – ஈசனும் போதனும் வாசவனும்
நூலை மதிக்கும் முனிவரும்-தேவரும் நோக்கி அந்தி
காலை மதிக்குள் வைத்து– ஏத்தும் திருமலை கைம்மலையால்
வேலை மதிக்கும் பெருமான் உறை திரு வேங்கடமே –2-
திவ்ய பிரபந்த தலைவனின் வாசஸ் ஸ்தானம் -பதி பிரபந்த துறை –
மாலை மதிக்குஞ்சி -அந்தி மாலைப்பொழுதில் விளங்கும் பிறைச் சந்த்ரனைத் தரித்த தலை மயிர் முடியை யுடைய
ஈசனும் போதனும் வாசவனும்
நூலை மதிக்கும் முனிவரும்-சாஸ்த்ரங்களை ஆராய்ந்து அறிகிற முனிவர்களும்
தேவரும் நோக்கி அந்தி காலை-காலையிலும் மாலையிலும் தர்சித்து
மதிக்குள் வைத்து–தமது அறிவில் வைத்து -மனத்தில் கொண்டு த்யானித்து
ஏத்தும் திருமலை
கைம்மலையால் வேலை மதிக்கும் பெருமான் உறை திரு வேங்கடமே —
கை வசப்படுத்தின மந்திர கிரி என்றுமாம் -மலைகள் போன்ற கை என்றுமாம் –
கைகளாகிய மலைகளைக் கொண்டு திருப் பாற் கடலைக் கடைந்த திருமால் எழுந்து அருளி இருக்கும் திரு வேங்கடமே –
————————————————————————–
வேங்கட மாலை அவியா மதி விளக்கு ஏற்றி அங்கம்
ஆம்கடம் ஆலயம் ஆக்கி வைத்தோம் அவன் சேவடிக்கே
தீங்கு அட மாலைக் கவி புனைந்தோம் இதின் சீரியதே
யாம் கட மால்ஐயி ராவதம் ஏறி இருக்குமதே –3-
வேங்கட மாலை
அவியா மதி விளக்கு ஏற்றி -கெடாத அறிவாகிய திரு விளக்கை மனத்தில் ஏற்றி வைத்து
அங்கம் ஆம்கடம் ஆலயம் ஆக்கி -உறுப்புகளை யுடைய எமது உடம்பைத் திருக் கோயிலாக அமைத்து
வைத்தோம் -அந்தக் கரணம் ஆகிய மனசாகும் கர்ப்ப கிருகத்தில் திருவேங்கடத்து திரு மாலை எழுந்து அருளிப் பண்ணி வைத்தோம்
அவன் சேவடிக்கே
தீங்கு அட -எமது பிறவித் துன்பங்களை அப்பெருமான் அழிக்குமாறு
மாலைக் கவி புனைந்தோம்-அவன் சேவடிக்கே கவி மாலை புனைந்தோம்
இதின் சீரியதே -யாம் கட மால்ஐயி ராவதம் ஏறி இருக்குமதே-இந்திர பதவியும் இதை விட சிறந்தது இல்லையே –
நான்கு தந்தங்கள் கொண்ட ஐராவதம் என்பர் –
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய்யும் மாலையே
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
———————————————————————-
இருக்கு ஆரணம் சொல்லும் எப்பொருள் இன்பமும் எப்பொருட்கும்
கருக் காரணமும் நல் தாயும் நல் தந்தையும் கஞ்சச் செல்வப்
பெருக்கு ஆர் அணங்கின் தலைவனும் ஆதிப் பெருந் தெய்வமும்
மருக்கு ஆர் அணவும் பொழில் வட வேங்கட மாயவனே –4-
இருக்கு ஆரணம் சொல்லும் எப்பொருள் இன்பமும் -மெய்ப்பொருள் இன்பமும் -பாட பேதம்
எப்பொருட்கும் கருக் காரணமும்
நல் தாயும் நல் தந்தையும் -அத்தனாகி அன்னையாகி -உலகுக்கு எல்லாம் முந்தித் தாய் தந்தை -எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
கஞ்சச் செல்வப் பெருக்கு ஆர் அணங்கின் தலைவனும்
ஆதிப் பெருந் தெய்வமும்
மருக்கு ஆர் அணவும் -மரு -வாசனை மிக்கு -கார் அணவும் -மேக மண்டலத்தை அளாவும் -பொழில் வட வேங்கட மாயவனே –
——————————————————————–
மாயவன் கண்ணன் மணி வண்ணன் கேசவன் மண்ணும் விண்ணும்
தாயவன் கண் நன் கமலமொப்பான் சரத்தால் இலங்கைத்
தீயவன் கண்ணன் சிரம் அறுத்தான் திரு வேங்கடத்துத்
தூயவன் கண் அன் புடையார்க்கு வைகுந்தம் தூரமன்றே –5-
மாயவன் கண்ணன் மணி வண்ணன் கேசவன்
மண்ணும் விண்ணும் தாயவன்
கண் நன் கமலமொப்பான் -புண்டரீகாஷன்
சரத்தால் இலங்கைத் தீயவன் கண்ணன் சிரம் அறுத்தான்-
இலங்கை தீய வன்கண்ணன் சிரம் சரத்தால் அறுத்தான்
திரு வேங்கடத்துத் தூயவன் கண் அன்புடையார்க்கு வைகுந்தம் தூரமன்றே –
—————————————————————
தூர இரும்புண் தரிக்கும் இக்காயத்தைச் சூழ் பிணிகாள்
நேர் அவிரும் புண்டரர்க்கு அருள்வான் நெடு வேங்கடத்தான்
ஈர இரும்புண்ட ரீகப் பொற் பாதங்கள் என் உயிரைத்
தீர இரும்பு உண்ட நீர் ஆக்குமாறு உள்ளம் சேர்ந்தனவே –6-
நேர் அவிரும் புண்டரர்க்கு அருள்வான் -நேர்மையாக விளங்கும் திருமண் காப்பை யுடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அருள்வான்
நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும்
நெடு வேங்கடத்தான்
ஈர இரும்புண்ட ரீகப் பொற் பாதங்கள்-குளிர்ந்த பெரிய செந்தாமரை போன்ற பொலிவு பெற்ற இணை திருவடிகள்
என் உயிரைத் தீர இரும்பு உண்ட நீர் ஆக்குமாறு உள்ளம் சேர்ந்தனவே –
தம்மிடத்தில் லயம் படுத்தும் படி எனது மனத்தில் சேர்ந்து விட்டன
ஆதலால்
தூர இரும்–புண் தரிக்கும் இக்காயத்தைச் சூழ் பிணிகாள் –
எனது உடலை விட்டு தூரத்தில் சென்று பிழையுங்கோள்
நெய் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம்பெற உய்யப் போமின் –
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் -பைக்கொண்ட பாம்பணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே
———————————————————————
சேர்ந்து கவிக்கும் முடி கவித்தாய் சிறியேன் இதயம்
சார்ந்து உகவிக்கும் வரம் அளித்தாய் கொண்டல் தண்டலை மேல்
ஊர்ந்து கவிக்கும் வடமலையாய் பஞ்சு ஒழுக்கிய பால்
வார்ந்து உகவிக்கும் பொழுதில் அஞ்சேல் என்று வந்து அருளே –7-
சேர்ந்து-கிஷ்கிந்தை நகரைச் சார்ந்து -நண்பு பூண்டு
கவிக்கும் -ஸூ கரீவ மகா ராஜருக்கும்
முடி கவித்தாய் -விபீஷணனுக்கு முடி கவித்ததையும் கொள்ளலாம்
நின் மேல் கவி பாடவும் அருள் செய்தாய் என்னவுமாம்
சிறியேன் இதயம் சார்ந்து உகவிக்கும் வரம் அளித்தாய் கொண்டல் தண்டலை மேல் ஊர்ந்து கவிக்கும் வடமலையாய்
பஞ்சு ஒழுக்கிய பால் வார்ந்து உக விக்கும் பொழுதில்
பஞ்சைப் பாலில் நனைத்து அது கொண்டு பிழிந்து ஒழுக விட்ட பாலும் -கண்டம் அடைத்தததனால் உள்ளே இறங்கிச் செல்ல மாட்டாது
கடைவாயினின்று வழிந்து பெருக
விக்கும் பொழுதில் -விக்கல் எடுக்கின்ற அந்திம தசை எனக்கு நேரும் பொழுதில்
அஞ்சேல் என்று வந்து அருளே
———————————————————————–
வந்திக்க வந்தனை கொள் என்று கந்தனும் மாதவரும்
சிந்திக்க வந்தனை வேங்கட நாத பல் சீவன் தின்னும்
உந்திக் கவந்தனைச் செற்றாய் உனக்கு உரித்தாய் பின்னும்
புந்திக்கு அவம் தனிச் செய்து ஐவர் வேட்கையொரும் என்னையோ –8-
வந்திக்க -அடியேன் வணங்க
வந்தனை கொள் என்று -அவ்வணக்கத்தை அங்கீ கரிப்பாய் என்று பிரார்த்தித்து
கந்தனும் மாதவரும் -முருகனும் -முனிவர்களும்
சிந்திக்க வந்தனை-பிரத்யட்ஷமாக வந்து தோற்றி அருளினாய்
வேங்கட நாத
பல் சீவன் தின்னும் உந்திக் கவந்தனைச் செற்றாய்
உனக்கு உரித்தாய் பின்னும் -எனது உயிர் உனக்கு உரியதான பின்பும்
புந்திக்கு அவம் தனிச் செய்து ஐவர் வேட்கையொரும் என்னையோ –
பஞ்ச இந்த்ரியங்கள் சம்பந்தமான ஆசை என்னை தாக்கி வருத்தும் -இது என்ன அநீதி -இரங்கி அருள்வாய் –
————————————————————————-
தலைவனைப் பிரிந்து மாலை பொழுதுக்கும் அன்றில் பறவைக்கும் வருந்தும் தலைவிக்கு ஆற்றாது தோழி இரங்கல்
பொரு தரங்கத்தும் வடத்தும் அனந்தபுரத்தும் அன்பர்
கருது அரங்கத்தும் துயில் வேங்கடவ கண் பார்த்தருள்வாய்
நிருதர் அங்கத்து நிறம் போல் வரும் அந்தி நேரத்து அன்றில்
ஒரு தரம் கத்தும் பொழுதும் பொறாள் என் ஒரு வல்லியே –9-
பொரு தரங்கத்தும்-திருப் பார் கடலிலும்
வடத்தும் -ஆளிலையிலும்
அனந்தபுரத்தும்
அன்பர் கருது அரங்கத்தும் துயில்
வேங்கடவ
கண் பார்த்தருள்வாய்
நிருதர் அங்கத்து நிறம் போல் வரும் -இராக்கதர்கள் உடம்பு நிறம் போல் இருண்டு கறுத்து பயங்கரமாய்
அந்தி நேரத்து அன்றில் ஒரு தரம் கத்தும் பொழுதும் பொறாள் என் ஒரு வல்லியே
-பூம் கோடி போன்ற இவள் சகிக்க மாட்டாள் -கடாஷித்து அருள்வாய்
———————————————————————————
தலைவனைப் பிரிந்த தலைவி கடலோடு புலம்புதல் –
ஒரு மாது அவனி ஒரு மாது செல்வி உடன் உறைய
வரும் ஆ தவனின் மகுடம் வில் வீச வடமலை மேல்
கரு மாதவன் கண்ணன் நின் பால் திரு நெடும் கண் வளர்க்கைக்கு
அருமா தவம் என்ன செய்தாய் பணி எனக்கு அம்புதியே –10-
ஒரு மாது அவனி -மனைவியான பூதேவியும்
ஒரு மாது செல்வி -மற்றொரு மனைவியான ஸ்ரீ தேவியும்
உடன் உறைய –
வரும் ஆ தவனின் மகுடம் வில் வீச -உதயமாகும் சூரியன் போலே திரு அபிஷேகம் ஒளியை வீசவும்
வடமலை மேல் கரு மாதவன் கண்ணன்
நின் பால் திரு நெடும் கண் வளர்க்கைக்கு அருமா தவம் என்ன செய்தாய்
பணி எனக்கு அம்புதியே –கடலே எனக்கு சொல்லாய் என்றபடி
போக்கெல்லாம் பாலை -புணர்தல் நறும் குறிஞ்சி –ஆக்கம் சேரூடல் அணி மாருதம் –
நோக்கும் கால் இல்லிருக்கை முல்லை -இரங்கல் நறு நெய்தல் சொல்லிருக்கும் ஐம்பால் தொகை
இரங்கல் நெய்தல் நிலம் -கடலை முன்னிலைப்படுத்தி தலை மகள் பாசுரம்
மாலும் கரும் கடலே என்நோற்றாய்-வையகம் யுண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று -போலே
உவர்க்கும் கரும் கடல் நீருள்ளான்-
—————————————————————————
அம்பரம் தாமரை பூத்து அலர்ந்தன்ன அவயவரை
அம்பரந்தாமரை அஞ்சன வெற்பரை ஆடகம் ஆம்
அம்பரம் தாம் அரை சூழ்ந்தாரை வாழ்த்திலர் ஐம்புலன் ஆம்
அம்பரம் தாம் மரை போல் திரிவாரை அகல் நெஞ்சமே –11-
அம்பரம் -கடலினிடத்து
தாமரை பூத்து அலர்ந்தன்ன அவயவரை –
கண் கை கால் முகம் வாய் உந்தி அனைத்து அவயங்களும் தாமரை பூத்து அலர்ந்தது போலேவே இருக்குமே –
கரு முகில் தாமரைக் காடு பூத்து -கம்பர்
அம்பரந்தாமரை -அழகிய பரமபததுக்கு உரியவரும்
அஞ்சன வெற்பரை -திருவேங்கடமுடையானை -அஞ்சனா சலம் என்பரே –
ஆடகம் ஆம் அம்பரம் தாம் அரை சூழ்ந்தாரை -பொன் மயமான பீதாம்பர தாரியை –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு –
அம்பரம் கூரையும் கடலும் ஆகாயமும் –
வாழ்த்திலர்
ஐம்புலன் ஆம் அம்பரம் -ஐம்புலன்கள் ஆகிய வெட்ட வெளியிலே
தா மரை போல் திரிவாரை -தாவுகின்ற மான்களைப் போலே துள்ளி ஓடித் திரிபவர்களான கீழ் மக்களை
அகல் நெஞ்சமே —
————————————————————–
தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல்
நெஞ்சு உகந்தத்தை உமக்கு உரைத்தேன் இற்றை நீடு இரவு ஓன்று
அஞ்சு உகம் தத்தை விளைக்கும் என் ஆசை அது ஆம் இதழ் சொல்
கிஞ்சுகம் தத்தை அனையீர் இங்கு என்னைக் கெடாது விடும்
விஞ்சு கந்தத்தை விளைக்கும் துழாய் அண்ணல் வேங்கடத்தே –12-
நெஞ்சு உகந்தத்தை உமக்கு உரைத்தேன்
இற்றை நீடு இரவு ஓன்று -ஒரு இரவே
அஞ்சு உகம் -ஐந்து யுகம் போலே நீண்டு
தத்தை விளைக்கும் -துன்பத்தை மிகுவிக்கின்ற்றது
என் ஆசை அது ஆம் -நான் கொண்ட காதலே காரணமாம்
இதழ் சொல் -வாய் இதழும் சொல்லும்
கிஞ்சுகம்-முருக்க மலரையும் -கிம்சுகம் -பலாச மரம் -அதன் பூவுக்கும் கிளப் பேச்சுக்கும் தத்தை என்பர்
தத்தை -கிளி கொஞ்சிப் பேசும் பேச்சையும்
அனையீர்
இங்கு என்னைக் கெடாது-இனி நீங்கள் என்னை இங்கேயே வைத்து இருந்து கெடுத்திடாமல்
விடும் -விஞ்சு கந்தத்தை விளைக்கும் துழாய் அண்ணல் வேங்கடத்தே –
விடும் –திரு வேங்கட முடையானது திருமலையின் இடத்தே கொண்டு போய்ச் சேர்த்து விடுமின் –
மதுரைப் புறத்தே என்னை உய்த்திடுமின்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் –
——————————————————————–
வேங்கடத்து ஆரையும் ஈடேற்ற நின்றருள் வித்தகரைத்
தீங்கு அடத் தாரைப் புனைந்து ஏத்திலீர் சிறியீர் பிறவி
தாம் கடத்தாரை கடத்தும் என்று ஏத்துதிர் தாழ் கயத்துள்
ஆம் கடத்தாரை விலங்கும் அன்றோ சொல்லிற்று ஐயம் அற்றே –13-
வேங்கடத்து- ஆரையும் ஈடேற்ற நின்றருள் –
வித்தகரைத் -ஞான ஸ்வரூபியான எம்பெருமானை
தீங்கு அடத் தாரைப் புனைந்து ஏத்திலீர் -தீங்கு அட -பிறவித் துன்பங்களை அவன் அழிக்குமாறு –
தாரைப் புனைந்து ஏத்திலீர்-அவனுக்கு பிரியமான திருத் துழாய் முதலிய மாலைகளைச் சாத்தி ஸ்துதிக்காமல் இருக்கின்றீர்
சிறியீர் -அறிவு ஒழுக்கங்களிலே சிறியவர்களே
மற்று
பிறவி தாம் கடத்தாரை -தங்கள் பிறவிகளை தாங்களே கடத்த மாட்டாத சிறு தெய்வங்களை
கடத்தும் என்று ஏத்துதிர் -எங்கள் பிறவிகளை கடத்தும் என்று ஸ்துதிக்கின்றீர்
வந்த வினை தீர்க்க வகை யறியார் வேளூரர்-எந்த வினை தீர்ப்பார் இவர் –
தாழ் கயத்துள் ஆம் -ஆழ்ந்த தடாகத்தில் முதலை வாயில் அகப்பட்டுக் கொண்ட
கடத்தாரை விலங்கும் அன்றோ -மத நீர் பெருக்கை யுடைய மிருக சாதியாகிய யானையும் அல்லவோ
சொல்லிற்று ஐயம் அற்றே-ஆதி மூலமே -நாராயணா -ஒ மணி வண்ணா -என் ஆர் இடரை நீக்காய் என்று சொல்லிற்றே–
———————————————————————–
ஐயா துவந்தனை நாயேனை அஞ்சன வெற்ப என்றும்
கையாது உவந்தனை நின்னை அல்லால் கண்ணுதல் முதலோர்
பொய்யாது வந்து அனையார் முகம் காட்டினும் போற்றி உரை
செய்யாது வந்தனை பண்ணாது வாக்கும் என் சென்னியுமே –14-
ஐயா -ஐயனே
துவந்தனை -இரு வினைத் தொடர்பு யுடையேனான அடியேனை -நாயேனை அஞ்சன வெற்ப
என்றும் கையாது-எக்காலத்திலும் வெறுத்திடாதபடி
உவந்தனை-மகிழ்ந்து அடியேனாக இருக்கும் படி அங்கீ கரித்து அருள் செய்தாய்
நின்னை அல்லால்
கண்ணுதல் முதலோர் -சிவன் முதலிய தேவர்கள்
பொய்யாது வந்து அனையார் முகம் காட்டினும் -மெய்யாகவே வந்து வலிய முகம் காட்டினாலும்
அனையார் முகம் -அன்னை போன்ற முகம் காட்டினாலும் என்றுமாம்
போற்றி உரை செய்யாது வந்தனை பண்ணாது வாக்கும் என் சென்னியுமே —
மறந்தும் புறம் தொழா மாந்தர் அன்றோ
உலகம் உண்ட திருக் கரத்தனை அல்லது எண்ணாது ஒரு தெய்வத்தையே -அழகர் அந்தாதி –
——————————————————————
தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்ட செவிலித்தாய் இரங்கல்
சென்னியில் அங்கை குவிக்கும் உயிர்க்கும் திகைக்கும் நின்னை
உன்னி இலங்கு ஐயில் கண் உறங்காள் உயர் வீடணனை
மன்னி இலங்கையில் வாழ்க என்ற வேங்கட வாண மற்று ஓர்
கன்னி இலம் கைக்கில் நின் பேர் கருணைக் கடல் அல்லவே –15-
உயர் வீடணனை மன்னி இலங்கையில் வாழ்க என்ற வேங்கட வாண -சரணாகத ரஷணத்தில் தீஷிதன் அன்றோ நீர்
உன்னை கூடிப் பிரிந்த எமது மகள்
நின்னை உன்னி
சென்னியில் அங்கை குவிக்கும்
உயிர்க்கும் திகைக்கும்-பெரு மூச்சு விடுகிறாள் -மோகித்து கிடக்கிறாள்
இலங்கு ஐயில் கண் உறங்காள் -பிரகாசிக்கும் வேலாயுதம் போன்ற கண்களை மூடித் துயில் கொள்ளாள்
கூரிய ஞானம் சங்கோசம் அடையாத நிலைமை என்றவாறு
மற்று ஓர் கன்னி இலம் -நாங்கள் இவளை அன்று வேறு பெண்ணை உடையோம் அல்லோம்
ஆத்ம ஸ்வரூப பூர்த்தி யுடையவள் அன்றோ இவள்
கைக்கில் நின் பேர் கருணைக் கடல் அல்லவே –நீ வெறுத்து உபேஷிப்பாய் ஆகில் தயாசிந்து என்ற உனது திருநாமம் நிலை பெறாதே
இவள் திறத்து என் செய்கின்றாயே
—————————————————————————
கடமா மலையின் மருப்பு ஒசித்தாற்கு கவி நடத்தத்
தடம் ஆம் அலைவற்ற வாளி தொட்டாற்கு என் தனி நெஞ்சமே
வடமா மலையும் திருப் பாற் கடலும் வைகுந்தமும் போல்
இடம் ஆம் அலைவு அற்று நின்றும் கிடந்தும் இருப்பதற்கே –16-
கடமா மலையின் மருப்பு ஒசித்தாற்கு
கவி-வானர சேனைகளை – நடத்தத் தடம் ஆம் அலைவற்ற -கடல் வற்றும்படி –
வாளி தொட்டாற்கு -ஆக்நேயாஸ்ரத்தை பிரயோகித்தவருக்கு
என் தனி நெஞ்சமே -ஒப்பற்ற நெஞ்சம் என்றுமாம் -மூன்று நிலைகளுக்கும் ஏற்றதனால் -சிறப்பித்துக் கூறி அருளுகிறார் என்றுமாம்
வடமா மலையும் திருப் பாற் கடலும் வைகுந்தமும் போல்
இடம் ஆம் அலைவு அற்று -ஸ்திரமாக -நின்றும் கிடந்தும் இருப்பதற்கே –
அத்திருப்பதிகளைக் காற்கடைக் கொண்டு அவ்விடங்களில் நின்றும் இருந்தும் கிடந்தும் செய்து அருளின நன்மைகளை எல்லாம்
என் நெஞ்சிலே யாய்த்து செய்தது
நிஹீன அக்ரேசரனான என்னை விஷயீ கரித்தவாறே திருமலையில் நிலையம் மாறி என் நெஞ்சிலே நின்று அருளினான்
தன் திருவடிகளிலே போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு பரம பதத்தில் இருப்பை மாறி என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் —
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைக் காட்டி என்னுடைய சாம்சாரிகமான தாபத்தை தீர்த்த பின்பு
திருப் பாற் கடலில் கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான்
இப்படி என் பக்கல் காட்டி அருளின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது இல்லை என்கிறார்
—————————————————————————-
இருப்பது அனந்தனில் எண்ணில் இல் வைகுந்தத்து என்பர் வெள்ளிப்
பருப்பதன் அம் தண் மலரோன் அறிகிலர் பார் அளந்த
திருப்பதன் நந்தன் மதலை நிற்கும் திரு வேங்கடம் என்
பொருப்பு அது அனந்தல் தவிர்ந்து உயிர்காள் தொழப் போதுமினே –17-
இருப்பது அனந்தனில் எண்ணில் இல் வைகுந்தத்து என்பர்-
தனது பரத்வம் தோன்ற ஆதி சேஷ திவ்ய சிங்காசனத்தின் மேல் வீற்று இருந்து -என்பர் மெய்யுணர்ந்த ஆன்றோர்
சென்றால் குடையாம் இத்யாதி
அத்திருக் கோலத்தை
வெள்ளிப் பருப்பதன் அம் தண் மலரோன் அறிகிலர்
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன்
அது நிற்க
பார் அளந்த திருப்பதன் நந்தன் மதலை நிற்கும் திரு வேங்கடம் என் பொருப்பு
அது அனந்தல் தவிர்ந்து -சோம்பல் ஒளிந்து -உயிர்காள் தொழப் போதுமினே —
திருவேங்கட யாத்ரைக்கு தம்முடன் செல்ல நம்மை அழைக்கின்றார் -அனைவரும் உஜ்ஜீவிக்க வேண்டும் என்னும் பர சம்ருத்தி யுடையவர் ஆதலால் –
——————————————————————————–
போதார் அவிந்த வரையும் புகா அண்ட புற்புதத்தின்
மீது ஆர இந்த வினை தீர்க்க வேண்டும் -மண் விண்ணுக்கு எல்லாம்
ஆதார இந்தளம் தேன் பாடும் வேங்கடத்து அப்ப நின் பொற்
பாதார விந்தம் அல்லால் அடியேற்கு ஒரு பற்று இல்லையே –18-
போதார் அவிந்த வரையும் புகா-பிரமன் அழியும் அளவும் ஒடுங்குதல் இல்லாத -பிரமன் அழியும் போதும் உடன் அழியும் இயல்பினவான
அண்ட புற்புதத்தின் -நீர்க் குமிழிகள் போன்ற அண்ட கோளங்களுக்கு
மீது ஆர -மேலே உள்ள பரமபதத்தில் நான் சென்று சேரும் படி
இந்த வினை தீர்க்க வேண்டும் -இந்த கர்மங்களை போக்கி அருள வேண்டும் -விந்தம் வினை -விந்தய மலை போன்ற வினைத்தொகுதி -என்றுமாம்
மண் விண்ணுக்கு எல்லாம் ஆதார -ஸ்ரீ கூர்ம ரூபியாகவும் -திரு வயிற்றில் வைத்து நோக்கி அருளுவதாலும்
-திவ்ய சக்தியாலேயே அனைத்தும் நிலை பெறுவதாலும் –
இந்தளம் தேன் பாடும் வேங்கடத்து அப்ப -வண்டுகள் இந்தளம் என்னும் பண்ணைப் பாடுவதற்கு இடமான
சோலைகள் சூழ்ந்த திரு வேங்கட திருமலையில் எழுந்து அருளும் ஸ்வாமீ
நின் பொற் பாதார விந்தம் அல்லால் அடியேற்கு ஒரு பற்று இல்லையே
——————————————————————————-
தலைவனைப் பிரிந்த தலைவியின் வருத்தம் கண்டு ஆற்றாத தோழி சந்த்ரனை நோக்கி இரங்கி கூறல் –
பற்றி இராமல் கலை போய் வெளுத்து உடல் பாதி இரா
வற்றி இராப்பகல் நின் கண் பனி மல்கி மாசு அடைந்து
நிற்றி இராக மொழிச்சியைப் போல் நெடு வேங்கடத்துள்
வெற்றி இராமனை வேட்டாய் கொல் நீயும் சொல் வெண் மதியே –19-
பற்றி இராமல் -ஓர் இடத்தில் நிலைத்து தங்கி இராமல் எங்கும் உழன்று கொண்டு
கலை போய் -ஒளி மழுங்கப் பெற்று -உடல் மேளிதளால் ஆடை சோரப் பெற்று
வெளுத்து உடல் பாதி இரா வற்றி-தேயப்பெற்று
இராப்பகல் நின் கண் பனி மல்கி -கண்களில் நீர் நிரம்பப் பெற்று -உன்னிடத்து பனி நிரம்பப் பெற்று –
மாசு அடைந்து -நீராடாமல் தரையில் புரளுவதால் உடம்பில் தூசி படியப் பெற்ற -களங்கம் உற்று
நிற்றி இராக மொழிச்சியைப் போல் -இசைப்பாட்டு போல் இனிய சொற்களை யுடைய இவளைப் போல் நிற்கின்றாய்
அவளைப் போலவே
நெடு வேங்கடத்துள் வெற்றி இராமனை வேட்டாய் கொல் நீயும் சொல் வெண் மதியே
-திருவேங்கமுடையானை விரும்பினாயோ -சொல்வாய் -வெண்ணிற சந்திரனே –
நைவாய எம்மே போல் நாண் மதியே நீ இந்நாள் மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐவாய் அரவணை மேல் ஆழிப் பெருமானார் மெய் வாசகம் கேட்டு உன் மெய் நீர்மை தோற்றாயே -திருவாய்மொழி
செம்மொழிச் சிலேடை -தலைவிக்கும் வெண்மதிக்கும் –
—————————————————————————
மதி ஆதவன் கதிர் மின்மினி போல் ஒளிர் வைகுந்தம் தா
மதியாது அவன் தர வாழ்ந்திருப்பீர் வட வேங்கடவன்
மதியாத வன் கடத்துள் தயிர் வாய் வைத்த மாயப் பிரான்
மதியாதவன் உரம் கீண்டான் கழல் சென்னி வைத்திருமே –20-
மதியாத வன் கடத்துள் தயிர் வாய் வைத்த மாயப் பிரான் –
கடத்துள் மதியாத வன்தயிர் வாய் வைத்த மாயப் பிரான் –
குடத்துள் வைத்திருந்த கடையாத கட்டித் தயிரை உண்டருளிய மாயப்பிரான்
மதியாதவன் உரம் கீண்டான் -இரண்யாசுரன் மார்பை கை நகத்தால் கீண்டு அருளினவன்
வட வேங்கடவன் கழல் சென்னி வைத்திருமே —
அதன் பயனாக
மதி ஆதவன் கதிர் மின்மினி போல் ஒளிர் வைகுந்தம்-சந்திர சூரியர்கள் தேஜஸ் மின்மினி போலே ஆகும் படி
திவ்ய தேஜோ ரூபமான ஸ்ரீ வைகுண்டம்
தாமதியாது அவன் தர வாழ்ந்திருப்பீர் –இப் பிறப்பின் முடிவிலேயே அவன் கொடுத்து அருள -பெற்று நீங்கள் நிலையாக வாழ்ந்து இருப்பீர்
சரணமாகும் தன் தால் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
————————————————————————
இருபது மந்தரத் தோளும் இலங்கைக்கு இறைவன் சென்னி
ஒருபதும் அந்தரத்தே அறுத்தோன் அப்பன் உந்தி முன் நாள்
தருபதுமம் தர வந்தன நான்முகன் தான் முதலா
வருபதுமம் தரம் ஒத்த பல் சீவனும் வையமுமே –21-
இருபது மந்தரத் -மந்திர மலை போன்ற தோளும் -இலங்கைக்கு இறைவன் சென்னி ஒருபதும் அந்தரத்தே -ஆகாயத்தே -அறுத்தோன்
தோள்களும் தலைகளும் ஆகாயத்தை அலாவி வளர்ந்துள்ளனவை ஆதலால் அந்தரத்தே என்கிறார்
உடம்பின் நின்று வேறு படும் படி அறுத்தவன் -அந்தரத்தே அறுத்தோன் என்றுமாம் -போரின் இடையிலே அறுத்தோன் -என்றுமாம்
அந்தரம் -ஆகாயம் –வேறுபாடு -இடை
அப்பன் உந்தி முன் நாள் தருபதுமம் -பூத்த தாமரை மலர்
தர நான்முகன் தான் முதலா வரு-படைக்க பிரமன் முதலாக வருகின்ற
பதுமம் தரம் ஒத்த பல் சீவனும் வையமுமே வந்தன–பதுமம் என தொகை-
கோடியினால் பெருக்கிய கோடி – -கோடான கோடி -எனவுமாம் -யளவினவான பல பிராணி வர்க்கங்களும்
உலகங்களும் தோன்றின -பொருள்களை வைக்கும் இடம் வையம் -என்றவாறு
————————————————————————-
வையம் அடங்கலும் ஓர் துகள் வாரி ஒருதிவலை
செய்ய மடங்கல் சிறு பொறி மாருதம் சிற்றுயிர்ப்பு
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் விரல் தோன்றும் வெளி
வெய்ய மடங்கல் வடிவான வேங்கட வேதியற்கே –22-
வெய்ய மடங்கல் வடிவான-பயங்கரமான நரசிம்ஹ வடிவமாகிய -பிடரி மயிர் மடங்குதலை யுடைய ஆண் சிங்கம் என்றவாறு
வேங்கட வேதியற்கே –வேத வேத்யன் -வேத பிரதிபாத்யன் –
ஐம் பெரும் பூதங்களில்
வையம் அடங்கலும் ஓர் துகள்-பூமி முழுவதும் ஒரு தூசியம்
வாரி -அடங்கலும் -ஒருதிவலை -ஜலம் முழுவதும் ஒரு நீர்த்துளியாம்
செய்ய மடங்கல் -அடங்கலும் -சிறு பொறி -செந்நிறமான அக்னி முழுவதும் சிறிய அனல் பொறியாம் –
மாருதம் அடங்கலும் -சிற்றுயிர்ப்பு -காற்று முழுவதும் ஒரு சிறிய மூச்சாம்
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் -அடங்கலும் –சுத்த
மற்ற நான்கு பூதங்களும் தன்னுள் அடங்கப் பெற்ற பெருமையால் மடங்கல் இல் ஆகாயம் என்கிறார்
விரல் தோன்றும் வெளி -விரல்களின் இடையே தோன்றும் சிறிய இடைவெளியாம்
நரசிம்ஹ விஸ்வரூப பெருமையை அருளிச் செய்கிறார் –
—————————————————————————
வேதா வடம் அலை வெங்காலன் கையில் விடுவித்து என்னை
மாதா வடம் அலை கொங்கை உண்ணாது அருள் -மண் அளந்த
பாதா வடம் அலை மேல் துயின்றாய் கடற் பார் மகட்கு
நாதா வட மலையாய் அலர் மேல் மங்கை நாயகனே –23-
மண் அளந்த பாதா வடம் அலை மேல் துயின்றாய்-அலை மேல் வடம் துயின்றாய்
கடற் பார் மகட்கு நாதா -கடல் சூழ்ந்த நில வுலகத்தின் அதிதேவதை க்கு நாதன் -சீதா பிராட்டிக்கு கொழுநன் என்றுமாம்
வட மலையாய் அலர் மேல் மங்கை நாயகனே -பத்மாவதி தாயார் கொழுநன்
என்னை
வேதா வடம் அலை வெங்காலன் கையில் விடுவித்து -பிரமனும் -பாசத்தால் கட்டி வருத்தும் -கொடிய யமனும் என்கிற
இவர்களது கைகளின் நின்றும் விடுதல் பண்ணி
பிறவித்துன்பம் இல்லாதபடியும் -மரண வேதனையும் நர துன்பமும் இல்லாத படி யும்
யான் இனி
மாதா வடம் அலை கொங்கை உண்ணாது அருள் –
ஒரு தாயினது ஆரங்கள் புரளப் பெற்ற ஸ்தனங்களின் பாலை உண்ணாத படி அருள் செய்வாய் -மீளவும் பிறப்பு இல்லாத படி –
———————————————————————————
நாயகராத் திரியும் சில தேவர்க்கு நாண் இலை கொல்
தூய கராத்திரி மூலம் எனாமுனம் துத்திப் பணிப்
பாயக ராத்திரி மேனி அம்மான் பைம்பொன் வேங்கடவன்
தீய கராத்திரி சக்கரத்தால் கொன்ற சீர் கண்டுமே –24-
தூய கராத்திரி -பரிசுத்தமான யானை -கர அத்ரி -துதிக்கை யுடைய மலை – யானை என்றபடி
மூலம் எனாமுனம்-ஆதி மூலமே என்று கூப்பிடுவதற்கு முன்னமே –
துத்திப் பணிப் பாயக ராத்திரி மேனி அம்மான் பைம்பொன் வேங்கடவன் –
புள்ளிகளை யுடைய படம் உள்ள ஆதிசேஷன் ஆகிய சயனத்தையும் இருள் போலே கரிய திரு மேநியையும் உடைய தலைவனும்
பசும் பொன் விளையும் திருவேங்கட திருமலையில் எழுந்து அருளி இருப்பவனுமான எம்பெருமான்
தீய கரா -கொடிய முதலையை
திரி சக்கரத்தால் கொன்ற -சுழற்றி விட்ட சக்ராயுதத்தால் கொன்ற
சீர் கண்டுமே –சிறப்பை பார்த்து இருந்தும்
அவனே பரம் பொருள் என்று சங்கையே இல்லாமல் நிரூபணம் ஆனபின்பும்
நாயகராத் திரியும் சில தேவர்க்கு நாண் இலை கொல்-கடவும் என்று திரிகிற
வேறு சில தேவர்களுக்கு வெட்கம் இல்லையோ –
——————————————————————————–
கண்டவன் அந்தரம் கால் எரி நீர் வையம் காத்து அவை மீண்டு
உண்டவன் அம் தரங்கத்து உறைவான் உயர் தந்தை தமர்
விண்டவன் அந்த மேலவன் வேங்கடமால் அடிமை
கொண்ட அனந்தரத்து உம்பர் நினைக்கவும் கூற்று அஞ்சுமே –25–
கண்டவன் அந்தரம் கால் எரி நீர் வையம் -பஞ்ச பூதங்களையும் சிருஷ்டித்தவன் -உத்பத்தி கிரமத்தில் அருளிச் செய்கிறார்
காத்து அவை மீண்டு உண்டவன் -ரஷித்து மீண்டும் -கல்பாந்தர காலத்தில் தனது திருவயிற்றிலே உண்டு சம்ஹரித்தவன்
அம் தரங்கத்து உறைவான் -அழகிய திருப் பாற கடலிலே பள்ளி கொண்டு இருப்பவனும்
அந்தரங்கத்து உறைவான் -அடியார்கள் மனத்துள்ளான் என்றுமாம்
உயர் தந்தை தமர் விண்டவன் -சிறந்த தந்தையும் மற்றைய உறவினரும் இல்லாதவன் -கர்மவச்யன் இல்லாதவன்
உயர் அர்த்தம் விண்டவன் -ஸ்ரீ கீதா உபநிஷத் அருளிச் செய்தவன்
அந்த மேலவன்-பரம பதத்தில் எழுந்து அருளி இருப்பவனும்
ஆகிய
நம் தரம் மேலவன் -புருஷோத்தமன் என்றுமாம்
வேங்கடமால் -திருவேங்கட திருமலையில் நித்ய வாஸம் செய்து அருளும் திருமாலுக்கு
அடிமை கொண்ட அனந்தரத்து -அடிமை செய்தலை மேற் கொண்ட பின்பு
உம்பர் நினைக்கவும் கூற்று அஞ்சுமே -உடலையும் உயிரையும் வெவேறு கூறாக்கும் தேவன் கூற்று என்றவாறு –
-சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன் தூதுவரை கூவிச் செவிக்கு –
—————————————————————————————————–
கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply