ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கட மாலை -76-100-

தக்க மறையோர் நாவும் தண் சாரலின் புடையும்
மிக்க மனு வளையும் வேங்கடமே -அக்கு அரவம்
பூண்டார்க்கு மால் துடைத்தார் பொங்கு ஓத நீர் அடைத்து
மீண்டு ஆர்க்கு மாறு உடைத்தார் வெற்பு –76-

தக்க மறையோர் நாவும் -தகுதி யுடைய அந்தணர்களின் நாக்கும்
மிக்க மனு வளையும்-சிறந்த மந்த்ரம் உச்சாரணத்தால் பொருந்தப் பெற்ற
தண் சாரலின் புடையும் -குளிர்ந்த அம்மலைச் சாரல்களின் பக்கங்களும்
மிக்க மனு வளையும்-மிகுதியான மனிதர்கள் பிரதஷிணம் செய்யப் பெற்ற
வேங்கடமே –
அக்கு அரவம் பூண்டார்க்கு மால் துடைத்தார் -எலும்பு மாலையும் -ருத்ராஷ மாலையாகவுமாம் -சர்ப்பங்களும் ஆபரணமாக தரித்த
சிவபெருமானுக்கு பிரமகத்தி தோஷத்தால் வந்த மயக்கத்தை போக்கி அருளியவரும்
பொங்கு ஓத நீர் அடைத்து மீண்டு ஆர்க்கு மாறு உடைத்தார் வெற்பு —
பொங்குகிற அலைகளை யுடைய கடலை அணை கட்டி மறித்து பின்பு ஆரவாரிக்கும் படி
அத் திருவணையை உடைத்து அருளின திருமால் யுடைய திருமலை –

——————————————————————

நீடு கொடு முடியும் நீதி நெறி வேதியர்கள்
வீடும் மகம் மருவும் வேங்கடமே –கோடும்
கருத்துள் அவ மாலையார் காணாமல் நின்ற
மருத்துளவ மாலையார் வாழ்வு –77–

நீடு கொடு முடியும் -உயர்ந்த அம்மலைச் சிகரங்களும் -மேல் வளைந்து இருத்தலால் -கொடு முடி என்பர் -கொடுமை -வளைவு –
மகம் மருவும் -வானத்தில் செல்லும் மக நட்சத்திரம் பொருந்தப் பெற்ற -மற்ற நஷத்ரங்களுக்கு உப லஷணம்
நீதி நெறி வேதியர்கள் வீடும் -நியாய மார்க்கத்தில் நடக்கின்ற அந்தணர்கள் யுடைய கிருகங்களும்
மகம் மருவும் -யாகங்கள் பொருந்தப் பெற்ற
அவர்கள் வீடு மக மருவும் -புத்திர பாக்கியம் பொருந்தப் பெற்ற கிருகங்கள் என்றுமாம்
வேங்கடமே —
கோடும் கருத்துள்-நேர்மை தவறிய மனத்தில்
அவ மாலையார் -அவம் மாலையார் -வீண் எண்ணங்களின் வரிசைகளை யுடையவர்கள் -அடிமைக் கருத்து இல்லாதவர்கள் –
காணாமல் -தமது ஸ்வரூபத்தை காண ஒண்ணாத படி
நின்ற -அவர்கட்கு புலப்படாமல் நின்ற
அந்தர்யாமி மனத்தூய்மை யுள்ளவர்களுக்கே புலப்படுவான்
வீண் எண்ணங்களின் மாலை தொடர்ச்சியை யுடைய நான் என்ட்டிருமாம் –
மருத்துளவ மாலையார் வாழ்வு -நறு மணம் உள்ள திருத் துழாய் மாலையை யுடையரான திருமால் எழுந்து அருளி இருக்கும் திவ்ய தேசம் –

—————————————————————————

சீதம் கொள் சாரலினும் சீர் மறையோர் இல்லிடத்தும்
வேதம் கணால் வளரும் வேங்கடமே -போதன்
சிரித்துப் புரம் துடைத்தான் தேவரொடும் அண்டம்
விரித்துப் புரந்து உடைத்தான் வெற்பு –78-

சீதம் கொள் சாரலினும்-குளிர்ச்சியைப் பெற்ற அம்மலைப் பக்கங்களிலும்
வேதம் கணால் வளரும் -வே தம் கணால் வளரும் -மூங்கில்கள் தம்முடைய கணுக்களோடு வளரப் பெற்ற
சீர் மறையோர் இல்லிடத்தும் -சிறந்த அந்தணர் வீடுகளிலும்
வேதம் கணால் வளரும் -வேதங்கள் நால் வளரும் -நான்கு வேதங்களும் ஓதப்பட்டு வளர்வதற்கு இடமான
வேங்கடமே –
போதன்-பிரமனும் -நாபிக் கமலத்தில் தோன்றியவன் –
சிரித்துப் புரம் துடைத்தான் -நகைத்து திரிபுரம் அழித்த சிவனும்
தேவரொடும் -மற்றைத் தேவர்களும் ஆகிய அனைவருடனே
அண்டம் விரித்துப்-வெளிப்படுத்தி -சிருஷ்டித்து – புரந்து -காத்து -உடைத்தான் -சம்ஹரித்த திருமாலினது -வெற்பு –திருமலை —

—————————————————————————————————–

நன்கோடு போலும் முலை நாரியரும் சண்பகத்தின்
மென்கோடும் கற்பகம் சேர் வேங்கடமே -வன்கோடு
கூரு இடு வராகனார் கோகனகை பூமி என்னும்
ஓர் இருவர் ஆகனார் ஊர் –79-

நன்கோடு போலும் முலை நாரியரும்-அழகிய யானைத் தந்தம் போன்ற ஸ்தனங்களை யுடைய மாதர்களும் –
கற்பகம் சேர் -கற்பு அகம் சேர் -பதி விரதா தர்மம் மனத்தில் அமையப் பெற்ற
சண்பகத்தின் மென்கோடும்-சண்பக மரத்தினது அழகிய கிளைகளும்
கற்பகம் சேர் -மிக்க உயர்ச்சியால் தேவ லோகத்து கற்பகத்து விருட்சத்தை அளாவப் பெற்ற
வேங்கடமே –
வன்கோடுகூரு இடு வராகனார் -கோர தந்தம் கூர்மையாக இருக்கப் பெற்ற ஸ்ரீ வராக நாயனார்
கோகனகை பூமி என்னும் ஓர் இருவர் ஆகனார் ஊர் —
இரண்டு தேவிமார்களையும் தழுவிய திரு மார்பை யுடைய திருமால் யுடைய திருப்பதி –

———————————————————–

கோடு அஞ்சும் கோதையர்கள் கொங்கையினும் குஞ்சரத்தும்
வேடன் சரம் துரக்கும் வேங்கடமே -சேடன் எனும்
ஓர் பன்னகத்திடம் தான் உற்றான் இரணியனைக்
கூர் பல் நகத்து இடந்தான் குன்று –80-

கோடு அஞ்சும் -மலைச்சிகரம் ஒப்புமைக்கு எதிர் நிற்க மாட்டாமையால் அஞ்சும்படியான
கோதையர்கள் கொங்கையினும் –
வேடன் சரம் துரக்கும் – வேள் தன் சரம் துரக்கும் -மன்மதன் புஷ்ப பாணத்தைச் செலுத்தப் பெற்ற
குஞ்சரத்தும் -யானைகளின் மீதும்
வேடன் சரம் துரக்கும் -வேட்டுவன் அம்புகளை செலுத்தப் பெற்ற
வேங்கடமே –
சேடன் எனும் -ஆதி சேஷன் என்கிற
ஓர் பன்னகத்திடம் -ஒப்பற்ற ஒரு பாம்பின் இடத்தில்
தான் உற்றான் -பொருந்தியவனும்
இரணியனைக் கூர் பல் நகத்து இடந்தான் குன்று —

————————————————————-

நாரியர் தம் கூந்தலினும் நாலும் அருவியினும்
வேரினறும் சாந்து ஒழுகும் வேங்கடமே -பாரினுளார்
அற்ப சுவர்க்கத்தார் அறிவு அரியார் முன் மேய்த்த
நல்பக வர்க்கத்தார் நாடு –81-

நாரியர் தம் கூந்தலினும்
வேரினறும் சாந்து ஒழுகும்
நாலும் அருவியினும் -கீழ் நோக்கி வரும் அருவிகளிலும்
வேரினறும் சாந்து ஒழுகும் -வேரின் அறும் சாந்து ஒழுகும் -வேரோடும் அற்ற சந்தன மரங்கள் அடித்துக் கொண்டு ஓடி வரப் பெற்ற
வேங்கடமே –
பாரினுளார் -பூமியில் உள்ளார்
அற்ப சுவர்க்கத்தார் -அல்ப ஸ்வர்க்கத்தில் உள்ளார் போன்ற
அறிவு அரியார் -அறிவு அற்றவர்களால் அரிய முடியாதவரும்
முன் மேய்த்த நல்பக வர்க்கத்தார் நாடு –
அல்ப ஸ்வர்க்கம் பசுவர்க்கம் –

——————————————————————-

மாதரார் கண்ணும் மலைச் சாரலும் காமர்
வேத மாற்கம் செறியும் வேங்கடமே -பாதம் ஆம்
போதைப் படத்து வைத்தார் போர் வளைய மாற்றரசர்
வாதைப் படத்து வைத்தார் வாழ்வு –82-

மாதரார் கண்ணும்
காமர் வேத மாற்கம் செறியும்-காம நூல் வழியை பொருந்தப் பெற்ற -காம சாஸ்த்ரம் -ஆடவரை காம வசப் படுத்துதல் –
மலைச் சாரலும்-மலைப் பக்கங்களும்
காமர் வேத மாற்கம் செறியும்-காமர் வே தமால் கம் செறியும் -அழகிய மூங்கில்கள் தமது உருவத்தால்
வானத்தை நெருங்கப் பெற்ற -தமால் தம்மால் –
வேங்கடமே –
பாதம் ஆம் போதைப் -திருவடிகள் ஆகிற தாமரை மலர்களை
படத்து வைத்தார் -காளியன் படத்தின் மேல் ஊன்ற வைத்தவரும்
போர் வளைய மாற்றரசர் வாதைப் படத் துவைத்தார் வாழ்வு –

—————————————————————

எத்திக்கும் காம்பும் எயினரும் ஆரத்தினையே
வித்திக் கதிர் விளைக்கும் வேங்கடமே –தித்திக்கும்
காரி மாறன் பாவார் காதலித்தார் தம் பிறவி
வாரி மாறு அன்பு ஆவார் வாழ்வு –83-

எத்திக்கும் காம்பும்-எல்லா பக்கங்களிலும் மூங்கில்களும்
ஆரத்தினையே வித்திக் கதிர் விளைக்கும்-முத்துக்களையே யுண்டாக்கி ஒளியை வீசப் பெற்ற –
எயினரும் -வேடர்களும்
ஆரத்தினையே வித்திக் கதிர் விளைக்கும்-ஆர தினையே வித்தி கதிர் விளைக்கும் –
மிகுதியாக தினையையே விதைத்து கதிர்களை விளையச் செய்வதற்கு இடமான
வேங்கடமே –
-தித்திக்கும் காரி மாறன் பாவார் -நம்மாழ்வார் யுடைய பாசுரத்தை பெற்றவரும்
காதலித்தார் தம் பிறவி வாரி -பிறவியாகிய கடல் -மாறு -நீங்கு வதற்கு காரணமான -அன்பு ஆவார்-அருளின் மயமாகுவார் –
வாழ்வு –நித்ய வாசம் செய்து அருளும் திவ்ய தேசம்

———————————————————————

பார் ஓடு கான்யாரும் பல் களிறும் நந்தவனம்
வேரோடலைத் தீர்க்கும் வேங்கடமே –கார் ஓதம்
சுட்ட கருவில் படையார் தொண்டரை மீண்டு ஏழு வகைப்
பட்ட கருவில் படையார் பற்று –84-

பார் ஓடு கான்யாரும் –அந்த மலையின் நின்றும் பூமியை நோக்கி ஓடி வருகிற காட்டாறுகளும் –
நந்தவனம் வேரோடலைத் தீர்க்கும் -நம் தவனம் வேர் உடலை தீர்க்கும் -நமது தாகம் நிலைத்து இருத்தலை நீக்கப் பெற்ற
அருகில் வருவாரது உடம்பில் வேர்வை யை ஓடுதலை தண்மையால் ஒழிக்கப் பெற்ற என்றுமாம்
காட்டாறுகள் பூந்தோட்டம் வேரூன்றுதலை ஒழிக்கும் என்றுமாம்
வேர் ஓடலை தீர்க்கும் -ஸ்ரமஹரமாய் இருக்கும் என்றுமாம்
பல் களிறும் -பல மத யானைகளும்
நந்தவனம் வேரோடலைத் தீர்க்கும் -வேரோடு அசைத்து இழுக்கப் பெற்ற –
வனம் நந்த -காடுகளை அழிக்க என்றுமாம் -நந்தல் அழித்தலும் வளர்த்தாலும் –
யானைகள் நந்தவனம் என்னும் இந்திரன் உடைய பூஞ்சோலையை வேருடன் அசைத்து இழுக்கும்
வேங்கடமே —
கார் ஓதம் சுட்ட -கரு நிறமான கடலை வேதும்பச் செய்த
கருவில் படையார்-பெரிய வில்லாகிய திவ்யாயுதத்தை யுடையவரும்
தொண்டரை மீண்டு ஏழு வகைப் பட்ட கருவில் படையார் பற்று –
-தேவர் மனிதர் விலங்கு பறவை ஊர்வன நீர் வாழ்வன தாவரம் ஆகிய ஏழு வகைகள்

——————————————————————

நன்காமர் வண்டினமும் நல்வாய் மதகரியும்
மென்காமர முழக்கும் வேங்கடமே -புன்காமம்
ஏவார் கழலார் எனது உளத்தில் என் தலைவை
பூ ஆர் கழலார் பொருப்பு –85-

நன்காமர் வண்டினமும்-காமர் நல் வண்டினமும்
மென்காமர முழக்கும்-மெல் காமரம் முழக்கும் –
நல்வாய்-நான்ற வாய் -நாள்கிற வாய் -நாலும் வாய் -நாலுதல் தொங்குதல் -மதகரியும் –
மென்காமர முழக்கும் -மெல் கா மரம் உழக்கும்
வேங்கடமே –
புன்காமம் ஏவார் –
எனது உளத்தில் கழலார்-
என் தலைவை பூ ஆர் கழலார்-பூவார் கழல் திருவேங்கடமுடையான் திருவடிகளின் சிறப்பு அன்றோ
பொருப்பு —

———————————————————————

பாம்பும் குளிர் சந்தின் பக்கத்தில் நிற்கின்ற
வேம்பும் மருத்துவக்கும் வேங்கடமே காம்புகரம்
ஆனவரை நன்குடையார் ஆளாய்த் தொழுது ஏத்தும்
மானவரை நன்கு உடையார் வாழ்வு -86-

பாம்பும் மருத்துவக்கும்-பாம்புகளும் காற்றை விரும்பி உணவாகக் கொள்ளப் பெற்ற
குளிர் சந்தின் பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் மருத்துவக்கும் –
குளிர்ந்த சந்தன மரங்களின் அருகில் நிற்கின்ற வேப்ப மரங்களும்
மரு துவக்கும் -அவற்றின் சேர்க்கையால் நறு மணம் வீசத் தொடங்கப் பெற்ற -சந்தனத்தைச் சார் தருவும் தக்க மணம் கமழும் –
வேங்கடமே
காம்புகரம் ஆனவரை நன்குடையார் -தமது கையையே காம்பாகக் கொண்ட கோவர்த்தன கிரியாகிய நல்ல குடையை யுடையவரும்
ஆளாய்த் தொழுது ஏத்தும் மானவரை நன்கு உடையார் வாழ்வு –
நிறைய தொண்டர்கள் யுடைய திருமால் நித்ய வாசம் செய்து அருளும் திவ்ய தேசம்

—————————————————————————-

சாரும் அருவிதவழ் சாரலும் செஞ்சனத்தின்
வேரும் அரவம் அறா வேங்கடமே -நேரும்
மதுகையிடவர்க் கறுத்தார் மா மலரோன் சாபம்
மதுகை இடவர்க்கு அறுத்தார் வாழ்வு –87-

சாரும் அருவிதவழ் சாரலும்-பொருந்திய நீர் அருவிகள் பெருகப் பெற்ற மலைப் பக்கங்களும்
அரவம் அறா -ஓசை நீங்காது இருக்கப் பெற்ற
செஞ்சனத்தின் வேரும்-செந்நிறமான சந்தன மரங்களின் வேரும்
அரவம் அறா -பாம்புகள் நீங்காது இருக்கப் பெற்ற
வேங்கடமே –
நேரும் மதுகையிடவர்க் கறுத்தார் -மதுகடைபர்களை ஒழித்து
மா மலரோன் சாபம் மதுகை இடவர்க்கு அறுத்தார் வாழ்வு –இடபம் ரிஷபம் -ரிஷபம் உடைய சங்கரன் சாபம் அறுத்தார் –

——————————————————–

மண் மட்டுத் தாழ் சுனையும் வட்டச் சிலா தளமும்
விண் மட்டுத் தாமரை சேர் வேங்கடமே எண் மட்டுப்
பாதம் உன்னி நைந்தார் பரம பதம் சேர்க என்று
போதமுன் நினைந்தார் பொருப்பு –88-

மண் மட்டுத் தாழ் சுனையும் -தரை அளவும் ஆழ்ந்து உள்ள சுனைகளும்
விண் மட்டுத் தாமரை சேர் -விள் மட்டுத் தாமரை சேர் -மலர்ந்த தேனை யுடைய தாமரை மலர் பொருந்தப் பெற்ற
வட்டச் சிலா தளமும் விண் மட்டுத் தாமரை சேர் –
வட்ட வடிவமான கல்லினிடமும் -மேல் உலகத்தின் அளவும் தாவுகிற மான் பொருந்தப் பெற்ற
வேங்கடமே
எண் மட்டுப் பாதம் உன்னி -பாதம் எள் மட்டு உன்னி -எள்ளளவேனும் த்யானித்து
நைந்தார் பரம பதம் சேர்க என்று போதமுன் நினைந்தார் பொருப்பு -முன்பு திரு உள்ளத்தில் சங்கல்பித்து – அருளிய திருமாலினது திருமலை –
அவர்கள் எண்ணுவதற்கு முன்பே –போத முன் -அவர்கள் வருவதற்கு முன் என்றுமாம்

————————————————

போதா இரு சுடரும் போதுதற்கும் ஓதுதற்கும்
வேதா வினால் முடியா வேங்கடமே -மாதாவின்
வீங்கு தனத்துக்கு இனியான் விம்மி அழாது ஆட்கொண்டான்
தாங்கு தன் நத்துக்கு இனியான் சார்பு –89-

போதா இரு சுடரும் போதுதற்கும் ஓதுதற்கும் வேதா வினால் முடியா
கற்பகாலத்தளவும் அழியாத சூரிய சந்த்ரர் இருவரும் ஆகாய வீதியில் செல்லுவதற்கும்
வேதா வினால் முடியா -வே தாவினால் முடியா -மூங்கில்கள் அளாவி வளர்தலால் இயலாத
ஓதுதற்கும் வேதா வினால் முடியா -தனது மகிமையைச் சொல்லுவதற்கும் -வேதாவினால் -பிரமனாலும் நிறைவேறாத
வேங்கடமே –
மாதாவின் வீங்கு தனத்துக்கு இனியான் விம்மி அழாது ஆட்கொண்டான்-பிறவாமல் என்னை ஆக்கி அடிமையும் கொண்டவனும்
தாங்கு தன் நத்துக்கு இனியான் கையில் ஏந்தி யுள்ள தனது ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானுக்கு இனியவனுமான
சார்பு -திருமால் உகந்து அருளி நித்ய வாசம் செயுது அருளும் திருப்பதி
தாங்கு தனத்துக்கு இனியான் -கையில் நிரம்ப கொண்டு செலுத்தும் காணிக்கைப் பொருள்களைக்
கைமாறாகக் கொண்டு அர்த்தித்த அனைத்தையும் தந்து அருளும் திருவேங்கடமுடையான் சங்கல்பம் -என்றுமாம் –

————————————————————–

பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆயத் திரிவோர்க்கும்
வேய்க்கும் அணி முத்து வரும் வேங்கடமே -வாய்க்கு அமுது ஊர்
வண்மைப் பேர் ஆயிரம் தான் மன்னினான் மாவலி பால்
தண்மைப் பேராய் இரந்தான் சார்பு –90-

பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆயத் திரிவோர்க்கும் அணி முத்து வரும் -அங்கு வந்த மாத்ரத்திலே அழகிய மோஷம் சித்திக்கும் படியான
பேயனாய் ஒழிந்தேன் -எம்பிரானுக்கு அரங்கன் அடியார்களாகி அவருக்கே பித்தராமாவார் -அடியார்களுக்கு முக்தி கை வரும் திவ்ய தேசம் என்றுமாம் –
வேய்க்கும் அணி முத்து வரும் -மூங்கில்களுக்கும்-மணி முத்து இவரும்-அழகிய முத்துக்கள் மிகுதியாகத் தோன்றப் பெற்ற
வேங்கடமே –
வாய்க்கு அமுது ஊர் -உச்சரிப்பவருடைய வாய்க்கு அமிர்தம் போன்று இனிமை சுரக்கும்
வண்மைப் பேர் ஆயிரம் தான் மன்னினான்
மாவலி பால் தண்மைப் பேராய்-எளியவனாய் -மூவடி நிலத்தை – இரந்தான் சார்பு –

—————————————————————-

வாழ்க்கை மனை நீத்தவரும் வாளரியும் மாதங்க
வேட்கை மறந்திகழும் வேங்கடமே –தோள் கை விழ
மா கவந்தனைக் கவிழ்த்தார் வாழ் இலங்கைப் பாதகரை
லோக வந்தனைக்கு அழித்தார் ஊர் –91-

வாழ்க்கை மனை நீத்தவரும் மனை வாழ்க்கை நீத்தவரும்
மாதங்க வேட்கை மறந்திகழும் -மாது அங்கம் வேள்கை மறந்து இகழும் -முற்றும் ஒழித்து இகழப் பெற்ற –
பெண்ணாசையை அறக்கை விட்ட -என்ற படி
மா தங்கம் -மிக்க பொன்னாசையை அறத் தொலைத்த என்றுமாம்
கை மறந்த -கை விடுதல்
வாளரியும் மாதங்க வேட்கை மறந்திகழும் -கொடிய சிங்கங்களும் -யானையைக் கொல்ல வேண்டும் என்ற
விருப்பத்துடன் வீரம் விளங்கப் பெற்ற -மாதங்கம் -யானை
வேங்கடமே –
தோள் கை விழ மா கவந்தனைக் கவிழ்த்தார்
வாழ் இலங்கைப் பாதகரை லோக வந்தனைக்கு அழித்தார் ஊர்

——————————————————————-

கூட்டு தவத்தரும் கோளரிகளின் தொகையும்
வேட்டு வரம் பொழியும் வேங்கடமே –மோட்டு மதத்
தந்திக்கு அமலத்தார் தாம் பெறூ உம் வீடு அளித்தார்
உந்திக் கமலத்தார் ஊர் –92-

கூட்டு தவத்தரும் -மேன்மேல் செய்து வைத்த தவத்தை யுடைய முனிவர்களும் -அப்பெரும் தவ சித்தியால்
வேட்டு வரம் பொழியும்-விரும்பி அன்புடனே தம்மிடம் வேண்டுவார் வேண்டிய வரங்களை மிகுதியாகக் கொடுத்தற்கு இடமான
கோளரிகளின் தொகையும் வேட்டு வரம் பொழியும்-வலிமை யுள்ள சிங்கங்களின் தொகையும் –
வேட்டுவர் அம்பு ஒழியும்- வேடர்கள் எய்கிற பாணங்கள் தங்கள் மேல் படாதபடி தந்திரமாக விலக்கப் பெற்ற
வேங்கடமே –
-மோட்டு மதத் தந்திக்கு -உயர்ச்சியை யுடைய மத யானைக்கு
அமலத்தார் தாம் பெறூ உம் வீடு அளித்தார் -நிர்மலமான -காமம் வெகுளி மயக்கம் -போன்றவை இல்லாத
-ஞானிகள் பெரும் பரம பதம் கொடுத்து அருளியவரும்
உந்திக் கமலத்தார் ஊர் —

—————————————————————————

வஞ்சம் மடித்திருப்பார் வாக்கும் கலைக்கோடும்
விஞ்ச மடித்திருக்கு ஆர் வேங்கடமே –கஞ்சப்
பிரமா நந்த தான் பிரபஞ்சம் மாய்த்த
பரமா நந்தத்தான் பதி –93-

வஞ்சம் மடித்திருப்பார் வாக்கும்-வஞ்சனை ஒழித்து இருக்கும் அந்தணர்கள் யுடைய வாக்கும் -வஞ்சம் அடித்து -என்றுமாம் -அடித்தல் -ஒழித்தல்
விஞ்ச மடித்திருக்கு ஆர் -விஞ்ச மடித்த இருக்கு ஆர் -மிகுதியாக மடித்து மடித்துச் சொல்லப்படும் வேதங்கள் நிரம்பப் பெற்ற
கலைக்கோடும் விஞ்ச மடித்திருக்கு ஆர் -கலை மான் கொம்பும்
விஞ்ச -மிகுதியாக -மடி திருக்கு ஆர் -வளைவோடு கூடிய முறுக்குப் பொருந்தப் பெற்ற
வேங்கடமே —
கஞ்சப் பிரமா நந்த -தனது நாபித் தாமரையில் தோன்றிய பிரமனும் அழிய -கஞ்சம் -நீரில் தோன்றிய தாமரை -காரணப் பொருளில் –
தான் பிரபஞ்சம் மாய்த்த பரமா நந்தத்தான் பதி –கல்பாந்த காலத்திலேயே உலகத்தை அழித்த
-எல்லா ஆனந்தங்களிலும் மேலான பேரானந்தத்தை யுடைய திருமாலினது திருப்பதி –

—————————————————————————-

சேல் அஞ்சும் கண் மடவார் தேம் குழலும் கோங்கினமும்
மேலஞ்சு வர்க்கம் ஆர் வேங்கடமே -கோலம் சேர்
மாரில் அலங்கு அரத்தார் மற்றும் பல பூண் அணிந்த
காரில் அலங்காரத்தார் காப்பு –94-

சேல் அஞ்சும் கண் மடவார் தேம் குழலும் -நறுமணம் உள்ள கூந்தலும்
மேலஞ்சு வர்க்கம் ஆர் -மேல் அஞ்சு வர்க்கம் ஆர் -மென்மையான ஐந்து வகை பொருந்தப் பெற்ற –
முடி குழல் கொண்டை பனிச்சை சுருள் -ஐந்தும் -பின்னி விடுதல் பனிச்சை –
கோங்கினமும் -கொங்கு மரங்களின் தொகுதியும்
மேலஞ்சு வர்க்கம் ஆர் -மேல் அம் ஸ்வர்க்கம் ஆர் -மிக உயர்ச்சியால் மேலே உள்ள அழகிய சவர்க்க லோகத்தை அளாவப் பெற்ற
வேங்கடமே –
கோலம் சேர் மாரில் அலங்கு அரத்தார்-ஹாரங்களை யுடையவரும் –
மற்றும் பல பூண் அணிந்த காரில் அலங்காரத்தார் காப்பு –
காள மேகம் போன்ற அழகுடைய திருமால் காப்பு –

———————————————————

கொய்யும் மலர்ச்சோலைக் கொக்கும் பிணி யாளர்
மெய்யும் வடுத்த விரும் வேங்கடமே -நையும்
சனனாந் தகனார் தலையிலி தோள் சாய்த்த
சினநாந் தகனார் சிலம்பு –95-

கொய்யும் மலர்ச்சோலைக் கொக்கும் -பறித்தற்கு உரிய மலர்களை யுடைய சோலையில் உள்ள மா மரமும்
மா மரத்தை கொக்கு என்பர் -துளுவ நாட்டார் திசைச் சொல்
வடுத்த விரும் -வடுத்து அவிரும் -பிஞ்சு விட்டு விளங்கப் பெற்ற -வடுத்தல் -இலங்கை அரும்பல்
பிணி யாளர் மெய்யும் -நோயாளிகள் யுடைய யுடம்பும் -அங்கு வந்த மாதரத்தில்
வடுத்த விரும் -வடு தவிரும் -உடல் குற்றமாகிய அந்நோய் நீங்கப் பெற்ற
வேங்கடமே –
நையும் சனனாந் தகனார் -நையும் சனன அந்தகனார் -உயிர்கள் வருந்த காரணமான பிறப்பை அடியாருக்கு ஒழிப்பவரும்
ஜன நாந்தகன் -பிறப்புக்கு யமன் என்றபடி
தலையிலி தோள் சாய்த்த -கபந்தனுடைய தோள்களை வெட்டித் தள்ளின
சினநாந் தகனார் சிலம்பு –சினன் நாந்தகனார் சிலம்பு -கோபத்தை யுடைய நந்தகம் என்னும் வாட்படை யுடைய திருமாலினது திருமலை

—————————————————————-

நேர்க்க வலை நோயினரும் நீடு சிலை வேடுவரும்
வேர்க்க வலை மூலம் கல் வேங்கடமே –கார்க்கடல் மேல்
தாண்டும் காலத்து இறப்பார் தம்மை விழுங்கி கனி வாய்
மீண்டும் காலத் திறப்பார் வெற்பு –96-

நேர்க்க வலை நோயினரும் -மிகுதியான கவலையை தருகிற நோயை யுடையவர்களும் -அந்நோய் நீங்குதற் பொருட்டு
வேர்க்க -பக்தி மிகுதியால் தம் உடல் வியர்வை யடைய
வலை மூலம் கல் -அலை மூலம் கல் -திருப் பாற் கடலில் பள்ளி கொண்டு அருளுகிற ஆதி மூலப் பொருளைத் துதிக்கப் பெற்ற
அலை -கடலுக்கு சினையாகு பெயர் -மூலம் முதல் பொருள்
கல் -கற்றல் -திரு நாமங்களை இடைவிடாமல் உருவிட்டு ஜபித்தால்
நீடு சிலை வேடுவரும் -நீண்ட வில்லை யுடைய வேடர்களும்
வேர்க்க வலை மூலம் கல் -வேர் கவலை மூலம் கல் -வேரோடு கவலைக் கிழங்கை தோண்டப் பெற்ற
கவலைக் கிழங்கு குறிஞ்சி நில உணவு
வேங்கடமே –
கார்க்கடல் மேல் தாண்டும் காலத்து -பிரளய காலத்தில்
இறப்பார் தம்மை விழுங்கி -தனது திரு வயிற்றினுள் வைத்து அருளி
கனி வாய் மீண்டும் காலத் திறப்பார் வெற்பு –மீண்டும் கால -கனி வாய் திறப்பார் வெற்பு –

——————————————————————-

தண் தாமரைச் சுனையில் சாதகமும் வேடுவரும்
விண்டாரை நாடும் வேங்கடமே –தொண்டு ஆக்கி
ஏவத் தனக்கு உடையார் என்னை முன் நாள் எடுத்த
கோவத்தனக் குடையார் குன்று –97-

தண் தாமரைச் சுனையில்
சாதகமும் -சாதகம் என்னும் பறவையும்
விண்டாரை நாடும் -விண் தாரை நாடுகின்ற
வேடுவரும்
விண்டாரை நாடும் -உடல் கொழுப்பினால் போர் செய்ய பகத்தவரை தேடப் பெற்ற -விள்ளுதல் -மணம் மாறுபடுதல்
வேங்கடமே –
-தொண்டு ஆக்கி ஏவத்-தாசனாக்கி அடிமை கொள்ளுமாறு -ஏவ -குற்றேவல் செய்யும் படி கட்டளை இட –
தனக்கு உடையார் என்னை -என்னை தனக்கு உடமையாக ஆக்கிக் கொண்டவரும்
முன் நாள் எடுத்த கோவத்தனக் குடையார் குன்று —

———————————————————–

வாழ் அரியும் சந்தனம் தோய் மாருதமும் தாக்குதலால்
வேழ மருப்புகுதும் வேங்கடமே –நீழல் அமர்
பஞ்சவடி காட்டினான் பார் அளப்பான் போல் எவர்க்கும்
கஞ்ச அடி காட்டினான் காப்பு –98-

வாழ் அரியும்-வலிமை கொண்டு வாழ்கின்ற சிங்கங்களும்
தாக்குதலால் -மோதி யடித்தளால்
வேழ மருப்புகுதும் -வேழம் மருப்பு உகுதும் -யானைகளின் தந்தம் சிந்தப் பெற்ற
சந்தனம் தோய் மாருதமும் -சந்தன மரத்தின் மேல் பட்டு வருகிற காற்றும்
தாக்குதலால் -மேல் படுதலால்
வேழ மருப்புகுதும் -வேழம் மரு புகுதும் -மூங்கில்களும் நறு மணம் பொருந்தப் பெற்ற
வேங்கடமே –
-நீழல் அமர் -நிழல் பொருந்திய
பஞ்சவடி காட்டினான் -பஞ்சவடி வனத்தில் வசித்தவனும் -ஐந்து ஆல மரங்களின் தொகுதி
பார் அளப்பான் போல் எவர்க்கும் கஞ்ச அடி-தாமரைத் திருவடி – காட்டினான் காப்பு —

————————————————————-

எவ்விடமும் ஆறு தோய்ந்து எல்லாரும் பல் பாம்பும்
வெவ்விடரின் நீங்கி எழும் வேங்கடமே –தெவ்விடை ஏழ்
அட்டவன் நாகத்து அணையான் ஆதி மறை நூல் மார்க்கம்
விட்டவன் ஆகத்து அணையான் வெற்பு –99-

எல்லாரும்-எவ்விடமும் ஆறு தோய்ந்து
அனைவரும் அம்மலையில் பல விடத்தும் நதிகளில் மூழ்கி
வெவ்விடரின் நீங்கி எழும்-வெம் இடரின் நீங்கி எழும் -கொடிய பிறவித் துன்பத்தின் நின்றும் நீங்கி எழப் பெற்ற
பல் பாம்பும் -பல பாம்புகளும்
வெவ்விடரின் நீங்கி எழும்-வெம் விடரின் நீங்கி எழும் -வெவ்விய மலைகளின் வெடிப்புக்களின் புறப்பட்டு மேல் எழுந்து வரப் பெற்ற
வேங்கடமே —
தெவ்விடை ஏழ் அட்டவன்-விடை வ்ருஷம்
நாகத்து அணையான்
ஆதி மறை நூல் மார்க்கம் விட்டவன் ஆகத்து அணையான் வெற்பு —

——————————————————————

பாடும் மதுகரமும் பச்சைத் தழைக் குடிலின்
வேடும் மணம் மருவும் வேங்கடமே -நீடு
மகராலயம் கடந்தார் வாழ் வாசு தேவர்க்கு
மகர் ஆலயங்கள் தந்தார் வாழ்வு –100-

பாடும் மதுகரமும்-இசை பாடுவது போல் ஒலிக்கின்ற வண்டுகளும்
மணம் மருவும் -மலர்களின் நறு மணம் பொருந்தப் பெற்ற
பச்சைத் தழைக் குடிலின் -பசுமையான தழைகளால் அமைக்கப் பட்ட குடிசைகளில்
வேடும் மணம் மருவும் -வேடர்களும் கல்யாணம் செய்யப் பெற்ற
வேங்கடமே
-நீடு மகராலயம் கடந்தார் -நீண்ட கடலை தாண்டியவரும் -மகரங்களுக்கு இடமான கடல் -மகரம் -சுறா மீன்
வாழ் வாசு தேவர்க்கு மகர் -வாழ்வை யுடைய ஸ்ரீ வசுதேவருக்கு புதல்வரானவரும்
ஆலயங்கள் தந்தார் வாழ்வு -திருக் கோயில்களை தந்து அருளிய திருமால் நித்ய வாசம் செய்யும் திருப்பதி

——————————————————————-

நாந்திச் செய்யுள் –

ஆதி திருவேங்கடம் என்று ஆயிரம் பேரான் இடம் என்று
ஓதிய வெண்பா ஒரு நூறும் -கோதில்
குணவாள பட்டர் இரு கோகனைத் தாள் சேர்
மணவாள தாசன் தன் வாக்கு —

பட்டர் இரு கோகனைத் தாள் சேர் -ஸ்ரீ பராசர பட்டர் உடைய சரணார விந்தங்களை சேர்ந்த அழகிய மணவாள தாசன் உடைய திரு மொழியாகும்
கோகம் -சக்கரவாக

————————————————————————————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: