சிலேடைகள்
காதல் இற்றுச் சார்ந்தவர்க்கும் காமியத்தைச் சார்ந்தவர்க்கும்
வேதனைக் கூற்றைத் தவிர்க்கும் வேங்கடமே -போதகத்தை
மோதி மருப்பு ஒசித்தார் முன் பதினாறாயிரவர்
ஓதி மருப்பு ஒசித்தார் ஊர் –51-
காதல் இற்றுச் சார்ந்தவர்க்கும் காமியத்தைச் சார்ந்தவர்க்கும்
பிரபஞ்ச வாழ்வில் ஆசை முழுவதும் ஒழிந்து தன்னிடம் வந்து சேர்ந்த முனிவர்களுக்கும்
காதலித்துச் சார்ந்தவர் -பரம பதத்தை விரும்பி தன்னை அடைந்தவர்கள் என்றுமாம்
வேதனைக் கூற்றைத் தவிர்க்கும்–பிரமனையும் யமனையும் விலக்குகின்ற -வேதன் -வேதங்களை ஓதியன் -விதிக்கும் கடவுள் என்றுமாம்
காமியத்தைச் சார்ந்தவர்க்கும்-பிரபஞ்ச வாழ்வுகளை விரும்பிய வர்களுக்கும்
வேதனைக் கூற்றைத் தவிர்க்கும்-துன்பங்களின் வகைகளை ஒழிக்கின்ற
வேங்கடமே –
போதகத்தை மோதி மருப்பு ஒசித்தார்-யானையைத் தாக்கி அதன் தந்தங்களை முறித்தவரும்-
போதகத்தை மருப்பு ஒசித்து மோதினார் -என்றுமாம்
முன் பதினாறாயிரவர் ஓதி மரு பொசித்தார் ஊர் –இள மங்கையர் உடைய
ஓதி -கூந்தலின் -மரு -நறு மணத்தை -பொசித்தார்-மோந்து நுகர்ந்தவர் –
ஓதி -பெண் மயிர் -பொசித்தல் -புஜித்தல்-நுகர்தல் -துய்த்தல்-
பற்று அற்று வந்தவருக்கும் பற்று அறாது வந்தவருக்கும் சமமாக இடையூறு அகற்றி அருளும் திரு வேங்கடம் என்றவாறு
—————————————————————–
கேள்வித் துறவோரும் கேடு அற இல் வாழ்வோரும்
வேள்விக்கின மாற்றும் வேங்கடமே -மூள்வித்து
முன்பாரத முடித்தார் மொய் வேந்தர் வந்து அவிய
வன் பாரதம் முடித்தார் வாழ்வு –52-
கேள்வித் துறவோரும்-ஞானக் கேள்விகளை யுடைய துறவிகளும்
வேள்விக்கின மாற்றும்-மன்மதனால் வரும் இடையூற்றை நீக்குதற்கு இடமான -காம அவாவைக் கொள்ளாமை-என்றவாறு
வேள் -ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் விருப்பம் விளைவிக்கும் தேவன் மன்மதன் –விரும்பப்படும் அழகை யுடையவன் என்றுமாம்
திரு வேங்கடம் -ஆற்றும் வேங்கடம்
கேடு அற இல் வாழ்வோரும் -தீங்கு இல்லாமல் இல்லற ஒழுக்கத்தில் வாழ்வார்களும்
வேள்விக்கின மாற்றும் -வேள்விக்கு இனம் மாற்றும் -யாகத்துக்கு இனமான நல செயல்களை செய்தற்கு இடமான
ப்ரஹ்ம-தேவ -மனுஷ்ய பித்ரு பூத பஞ்ச யஜ்ஞங்கள் செய்யும் படி என்றவாறு
திரு வேங்கடமே -மாற்றும் வேங்கடம்
துறவறத்தாரும் இல்லத்தாரும் சமமாக அவரவர் தொழில் களைச் செய்யப் பெற்ற திவ்ய தேசம் என்றவாறு
-மூள்வித்து முன்பாரத முடித்தார் மொய் வேந்தர் வந்து அவிய வன் பாரதம் முடித்தார் வாழ்வு —
முன்பு ஆ -முற்காலத்தில் –
ரதம் முடி தார் மொய் வேந்தர் அவிய -தேரையும் கிரீடத்தையும்-அதிரத -மகா ரத -சமரத -அர்த்த ரத வீரர்கள்
மாலையையும் யுடைய வலிய அரசர்கள் வந்து பொருது இறக்கும் படி
வல் பாரதம் -கொடிய பாரத யுத்தத்தை
மூள்வித்து முடித்தார் -மூட்டி நிறைவேற்றிய திருமால் வாசஸ் ஸ்தானம் –
——————————————————————-
பொய் ஆம் வினையேனைப் போல்வாரும் அன்பரும் செய்
மெய் ஆம் வழுத்தேயும் வேங்கடமே செய்யாள்
தனத்து வசப் பொற்பு உள்ளார் தானவரை மோதும்
சினத்து வசப் பொற் புள்ளார் சேர்வு –53-
பொய் ஆம் வினையேனைப் போல்வாரும் -என்னைப் போன்ற நீசர்களும்
செய் மெய் ஆம் வழு-சரீர சம்பந்தத்தால் செய்யும் குற்றங்கள் -கருமங்கள் –
தேயும் -நீங்குதற்கு இடமான
திருவேங்கடம்
அன்பரும் -உள்ளன்பு யுடைய அடியார்களும்
செய் மெய் ஆம் வழுத்தேயும்-மெய்யாம் வழுத்து -உண்மையான ஸ்தோத்ரங்கள் -ஏயும் -பொருந்தப் பெற்ற
திரு வேங்கடமே
பொய்யன்பருக்கும் மெய் அன்பருக்கும் ஒரு நிகராக இருக்கப் பெற்ற திருவேங்கடம் –
செய்யாள்
தனத்து வசப் பொற்பு உள்ளார்–திருமகள் உடைய ஸ்தனத்துக்கு வசப்பட்ட -அழகை யுடையவரும்
தானவரை மோதும் சினத்து வசப் பொற் புள்ளார் -சினத் த்வசம் பொன் புள்ளார்
அசுரர்களைத் தாக்கும் கோபத்தை யுடைய கொடியான பொன்னிறமான பெரிய திருவடியை யுடைய திருமால்
சேர்வு –திரு உள்ளம் உகந்து சேரும் திவ்ய தேசம் -சேர்பு -பாட பேதம்
—————————————————————–
கோடல் இலா உள்ளத்துக் கோது இல் அடியவரும்
வேடரும் அங்கைவரை வெல் வேங்கடமே -மூடர்
மனம் ஆம் மனைக்கு ஒன்றார் வன் கஞ்சன் என்னும்
சின மா மனைக் கொன்றார் சேர்பு –54-
கோடல் இலா உள்ளத்துக் கோது இல் அடியவரும்
கோணுதல் இல்லாத -நேர் வழிப் பட்ட மணத்தை யுடைய குற்றம் இல்லா அடியவரும்
அங்கைவரை வெல்-அங்கு ஐவரை வெல் -அவ்விடத்து பஞ்ச இந்திரியங்களை வெல்வதற்கு இடமான –
வேடரும் -வேடர்களும்
அங்கைவரை வெல் -அம் கை வரை வெல் -அழகிய துதிக்கை யுடைய மலை போன்ற யானையை வெல்லுவதற்கு இடமான
வேங்கடமே –
மூடர் மனம் ஆம் மனைக்கு ஒன்றார் -மூடர்கள் உடைய உள்ளமான வீட்டில் வந்து பொருந்தாதவரும்
வன் கஞ்சன் என்னும் சின மாமனைக் கொன்றார்
சேர்பு —
——————————————————————-
மொய்வதன மங்கையர்கள் முன்கையும் யோகியர் தம்
மெய்வயதும் அஞ்சுகம் ஆர் வேங்கடமே -பெய் வளையார்
பால் திருப்பாது அஞ்சி வந்தார் பற்றினார் புன் பிறப்பை
மாற்று இருப் பாதம் சிவந்தார் வாழ்வு –55–
மொய்வதன மங்கையர்கள் முன்கையும்
அழகு மிக்க முகத்தை யுடைய மகளிரது முன்னம் கையும்
தாமரை மலர் என்று மயங்கி வண்டுகள் மொய்க்கப் பெற்ற முகம் என்றுமாம்
அஞ்சுகம் ஆர்-அம் சுகர் ஆர் -அழகிய கிளி உண்ணுவதற்கு உணவாகப் பெற்ற
மகளிர் கைகளில் கிளியை வைத்து கொண்டு உணவு ஊட்டி கொஞ்சி விளையாடும் திவ்ய தேசம் என்றவாறு
யோகியர் தம் மெய்வயதும்-யோக நிஷ்டையில் உள்ள முனிவர்கள் உடைய உடம்பின் ஆயுளும்
அஞ்சுகம் ஆர்-அஞ்சு யுகம் ஆர் -ஐந்து யுகமாகப் பொருந்தப் பெற்ற
வேங்கடமே –
பெய் வளையார் பால் திருப்பாது-மகளிர் பக்கல் மனத்தைச் செலுத்தாமல்
அஞ்சி வந்தார் பற்றினார்-அச்சம் கொண்டு தம்மிடம் வந்து சரண் அடைந்தவர்களுடைய
புன் பிறப்பை மாற்று இருப் பாதம் -திருவடி இணைகளும்
சிவந்தார் -சிவந்து இருக்கப் பெற்ற திருமால்
வாழ்வு –நித்ய வாஸம் செய்து அருளும் திருப்பதி –
———————————————————————-
இல்லக் குறத்தியரும் யாக்கை நிலை வேட்டவரும்
மெல்லக் கிழங்கெடுக்கும் வேங்கடமே -நல்ல
புதுப் பூவை வண்ணத்தான் போர் முகத்துச் செவ்வாய்
மதுப்பூவை வள் நத்தான் வாழ்வு –56-
இல்லக் குறத்தியரும்
வீட்டில் இருக்கும் குறப் பெண்களும்
மெல்லக் கிழங்கெடுக்கும் -மென்று தின்னும் பொருட்டு கிழங்குகளைத் தோண்டி எடுக்கப் பெற்ற
யாக்கை நிலை வேட்டவரும் -உடம்பு அழிதல் இன்றி நெடு நாள் நிலைத்து இருத்தலை விரும்பிய சித்தர்களும்
மெல்லக் கிழங்கெடுக்கும்-மெதுவாக -நாளடைவில் -முதுமைப் பருவத்தை ஒழிக்கப் பெற்ற
வேங்கடமே-
-நல்ல புதுப் பூவை வண்ணத்தான்-சிறந்த புதிய -அன்று மலர்ந்த காயம் பூ போன்ற கரிய திரு நிறத்தை யுடையவனும்
போர் முகத்துச் செவ்வாய் மதுப்பூவை
யுத்த களத்திலே –செவ்வாய் மது பூவை -சிவந்த தனது திரு வாயாகிய தேனை யுடைய தாமரை மலரில் வைத்து ஊதுகின்ற
வள் நத்தான் -மேன்மை யுள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் திவ்ய சங்கத்தை யுடையவனாகிய திருமால்
வாழ்வு –வாழும் திவ்ய தேசம் –
———————————————————————-
தேன் இயலும் கூந்தலார் செங்கரமும் மாதவத்தோர்
மேனியும் ஐயம் பொழியும் வேங்கடமே -ஞானியர்கள்
தாம் குறி எட்டு அக்கரத்தார் தாள் உரல் மேல் வைத்து வெண்ணெய்
தாங்கு உறி எட்டு அக்கரத்தார் சார்பு –57-
தேன் இயலும் கூந்தலார் செங்கரமும்–
இயற்கை நறு மணத்தின் பொருட்டும் செயற்கை நறு மணத்தின் பொருட்டும் வண்டுகள் மொய்க்கப் பெற்ற கூந்தல் யுடைய மகளிரது சிவந்த கைகளும்
ஐயம் பொழியும்-இரப்பவர்க்கு மிகுதியாக பிச்சையிடப் பெற்ற
மாதவத்தோர் -மா தவத்தோர் மேனியும் -முனிவர்கள் உடம்பும்
ஐயம் பொழியும் -ஐ அம்பு ஒழியும் -மன்மதனது பஞ்ச பானம் பொருந்தாது இருக்கப் பெற்ற
தாமரை -அசோக-மா -முல்லை -நீலோற்பல -பூக்கள் பாணங்கள்
வேங்கடமே –
ஞானியர்கள் தாம் குறி -தத்வ ஞானிகள் குறிக் கொண்டு தியானிக்கும்
எட்டு அக்கரத்தார் -அஷ்டாஷர மகா மந்த்ரத்துக்கு உரியவரும்
தாள் உரல் மேல் வைத்து
வெண்ணெய் தாங்கு உறி எட்டு -எட்டிப் பிடித்த
அக்கரத்தார் சார்பு -அழகிய திருக்கையை யுடைய திருமால் திரு உள்ளம் உகந்து சார்ந்து இருக்கும் திவ்ய தேசம் –
உறியில் அவர் வைத்த தயிர் பால் வெண்ணெய் எட்டாமல் குந்தி உரலின் மிசை ஏறி -பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி –
—————————————————————–
காணை -காண்ஐ-யிலார் சொற்கேட்ட கந்தருவரும் தவரும்
வீணை இராகத்தை விடும் வேங்கடமே –கோணை
இருங்குண்டை ஓட்டினான் ஏற்பு ஒழித்தான் கூனி
மருங்கு உண்டை ஓட்டினான் வாழ்வு –58-
காணை- காண் ஐயிலார் சொற்கேட்ட -பார்க்கின்ற வேல் போன்ற கண்களை யுடைய மகளிர் பேசும் சொற்களை செவியுற்ற
கந்தருவரும் -கந்தர்வர் என்னும் தேவ ஜாதியாரும்
வீணை இராகத்தை விடும்-தாம் பாடும் இசையின் இனிமை சிறவாது என்று வீணையில் இசை வாசிப்பதை ஒழியப் பெற்ற
தவரும்
தவ ஒழுக்கைத்தை யுடைய முனிவர்களும்
வீணை இராகத்தை விடும் -பயனில் செய்கைகளையும் -ஆசையையும் துறக்கப் பெற்ற
வேங்கடமே –
-கோணை இருங்குண்டை -வலிமையை யுடைய பெரிய எருதை வாகனமாக யுடைய -கோணை முசுப்பு என்கிற முதுகின் வளைவு
ஓட்டினான்-கையில் கபாலம் ஏந்திய வனான சிவபிரான் உடைய
ஏற்பு ஒழித்தான் -இரத்தத்தை ஒழித்து அருளியவன்
கூனி மருங்கு உண்டை ஓட்டினான் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் -நைக வக்ரை என்னும் கூனியின் இடத்து உள்ள உண்டையைப் போக்கி அருளிய திருமால்
வாழ்வு -நித்ய வாஸம் செய்து அருளும் திவ்ய தேசம் –
மந்தரை கூனி என்றுமாம்
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்டரங்க வோட்டி உள் மகிழ்ந்த நாதன்
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
———————————————————————
முந்நூல் மறையவர் நா மூது அரம்பை மாரின் நடு
மெய்ந்நூல் நலங்க வரும் வேங்கடமே — பொய்ந்நூலால்
அச்சமயக் கத்தினார் ஆதரிக்கத் தெய்வங்கள்
வைச்ச மயக்கத்தினார் வாழ்வு –59-
முந்நூல் மறையவர் நா -முப்புரி நூல் தரித்த பிராமணர்கள் யுடைய நா வானத்து –
மெய்ந்நூல் நலங்க வரும்-பொருள்களின் உண்மையைச் சொல்லுகிற தத்துவ சாஸ்த்ரங்களின் நல் பொருள்களை ஓதிக் கிரகித்தற்கு இடமான
மூது அரம்பை மாரின் நடு -பழைமையான தேவ மாதர்களுடைய இடையானது
மெய்ந்நூல் நலங்க வரும்-தனது வடிவத்தின் நுண்மையால்-பஞ்சு நூல் தனக்கு ஒப்பாக மாட்டாது -கெடும்படி பொருந்திய
வேங்கடமே —
பொய்ந்நூலால் -பொய்மையைக் கூறுகிற சாஸ்த்ரங்களைக் கொண்டு
அச்சமயக் கத்தினார் -அ சமயம் கத்தினார் -அந்த மதக் கோட்பாடுகளை பிதற்றும் தன்மை யுள்ளவர்கள்
ஆதரிக்கத் தெய்வங்கள் வைச்ச மயக்கத்தினார் வாழ்வு —
விரும்பிக் கொண்ட்சாடும் படி -பல தெய்வங்களை யுண்டாக்கி வைத்த மாயையை யுடைய திருமால் நித்ய வாஸம் செய்து அருளும் திவ்ய தேசம் –
—————————————————————–
ஓதும் மறை யோர் புறமும் உள்ளும் கலையின் அரு
மேதை அகலா இருக்கும் வேங்கடமே -கோதை குழல்
சுற்றாத தார் அணியார் தூய திருத்தாள் ஊன்றப்
பற்றாத தாரணியார் பற்று –60-
ஓதும் மறை யோர் புறமும்-வேதம் ஓதும் அந்தணர்கள் உடைய உடம்பும்
அரு கலையின் மேதை அகலா இருக்கும்-பெறுதற்கு அரிய மான் தோல் நீங்காது இருக்கப் பெற்ற
முப்புரி நூலோடு மானுரி இலங்கும் மார்பினில் இரு பிறப்பு ஒரு மாணாகி-திரு எழு கூற்று இருக்கை
உள்ளும் -அவர்கள் உடைய மனமும்
கலையின் அரு மேதை அகலா இருக்கும் -சாஸ்த்ரங்களின் நுட்பமான அறிவு பரந்து இருக்கப் பெற்ற
வேங்கடமே –
உள்ளும் புறமும் ஒரு நிகராக இருக்கும் வேத அத்யயனம் செய்த அந்தணர் என்றபடி
கோதை குழல் சுற்றாத தார் அணியார் -ஆண்டாள் தனது கூந்தலில் சூடாத மாலையை அன்புடன் அணிந்து கொள்ளாதவரும்
தூய திருத்தாள் ஊன்றப் பற்றாத தாரணியார் பற்று —
பரிசுத்தமான சிறந்த தமது பாதங்களில் ஒன்றை ஊன்றி அளத்தற்கு இடம் போராத
நிலவுலகத்தை யுடைய திருமால் உகந்து அருளி நித்யவாசம் செய்து அருளும் திவ்ய தேசம்
மண்ணும் விண்ணும் என் காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த -திரு விருத்தம்
——————————————————————
நன் முலை போல் வெண் நகையார் நாயகர் மேல் வைத்த நெஞ்சும்
மென் முலையும் கற்பூரம் சேர் வேங்கடமே -முன் மலைந்து
தோற்ற மாரீசனார் தோற்றி மாயம் புரிய
சீற்றம் ஆர் ஈசனார் சேர்வு –61-
நன் முலை போல் வெண் நகையார் -அழகிய முல்லை அரும்பு போன்ற வெண்மையான பற்களை யுடைய மகளிர்
இடைக்குறை விகாரம் அடைந்து முல்லை -எனபது முலை யாயிற்று -பல்லுக்கு முல்லை அரும்பு உவமை -அழகிய வடிவுக்கும் வெண்மைக்கும் –
நாயகர் மேல் வைத்த -தம் தம் கணவர் இடத்தில் செலுத்திய
நெஞ்சும் -மனமும்
கற்பூரம் சேர்-கற்பு உரம் சேர் -பதி விரதா தர்மத்தின் வலிமை பொருந்தப் பெற்ற -உரம் -கலங்காத நிலைமை –
மென் முலையும்-அம்மகளிர் யுடைய மென்மையான ஸ்தனங்களும்
கற்பூரம் சேர்-பச்சைக் கற்பூரம் சேரப் பெற்ற
வேங்கடமே –
இங்கே வாழும் மகளிர் உள்ளும் புறமும் ஒத்து உள்ளன என்றவாறு
முன் மலைந்து தோற்ற மாரீசனார் தோற்றி மாயம் புரிய -மீண்டும் வந்து மாயம் செய்ய
சீற்றம் ஆர் ஈசனார் சேர்வு –
———————————————————————-
கூறும் கிளி மொழியார் கொங்கை என்றும் கண் என்றும்
வீறு மருப்பிணை சேர் வேங்கடமே -நாறும்
துளவ மலர்க் கண்ணியார் தொண்டாய்த் தமக்கு அன்பு
உள அமலர்க்கு அண்ணியார் ஊர் –62-
கூறும் கிளி மொழியார் கொங்கை என்றும்
கொஞ்சிப் பேசும் கிளி போன்ற இன் சொற்களை யுடைய மகளிரது ஸ்தனங்கள் என்று
வீறு மருப்பிணையும் -மருப்பு இணையும் -பெருமை யுற்ற இரட்டையான யானைத் தந்தங்களும்
கண் என்றும்-அவர்கள் உடைய கண்களின் நோக்கம் என்று
வீறு மருப்பிணையும் -வீறு மரு பிணையும் -சிறப்பு பொருந்திய பெண் மானும்
சேர் வேங்கடமே -பொருந்திய திரு வேங்கடமே
நாறும் துளவ மலர்க் கண்ணியார் –தொண்டாய்த் தமக்கு அன்பு உள அமலர்க்கு அண்ணியார் ஊர் –
———————————————————————-
மாதர் அம் பொன் மேனி வடிவும் அவர் குறங்கும்
மீது அரம்பையைப் பழிக்கும் வேங்கடமே -பூதம் ஐந்தின்
பம்பர மாகாயத்தார் பாடினால் வீடு அருளும்
நம் பர மா காயத்தர் நாடு –63-
மாதர் அம் பொன் மேனி வடிவும்-
மீது அரம்பையைப் பழிக்கும்-மேல் உலகில் உள்ள ரம்பை என்னும் தேவ மாதை இழிவு படுத்தப் பெற்ற
அவர் குறங்கும்-அம்மகளிறது தொடையும்
மீது அரம்பையைப் பழிக்கும் -மேன்மை யுள்ள செழித்த வாழைத் தண்டை வெள்ளப் பெற்ற
வேங்கடமே –
பூதம் ஐந்தின் -பஞ்ச பூதங்களினால் ஆகிய
பம்பர மாகாயத்தார் -பம்பரம் மா காயத்தார் -சுழல்கிற பம்பரம் போல் விரைவில் நிலை மாறுவதான -பெரிய உடம்பை யுடைய சனங்கள்
பாடினால் வீடு அருளும் நம் பர மா காயத்தர் நாடு –
ஸ்துதித்தால்-அவர்கட்கு முக்தி அருளும் நம் தலைவர் பரமாகாசம் எனப்படும் பரம பதம் யுடைய திருமாலின் திவ்ய தேசம் –
————————————————————————-
கோள் கரவு கற்ற விழிக் கோதையர்கள் பொற்றாளும்
வேள் கரமும் அம்பஞ்சு ஆர் வேங்கடமே -நீள் கரனார்
தூடணனார் முத்தலையார் துஞ்ச எய்து துஞ்சாரைக்
கூடு அணனார் முத்து அலையார் குன்று –64-
கோள் -ஆடவரை வருத்தும் தன்மையும்
கரவு-அவர்கள் மணத்தை வஞ்சனையாக கவரும் தன்மையும்
கற்ற விழிக் கோதையர்கள் பொற்றாளும்
அம்பஞ்சு ஆர்-அழகிய செம்பஞ்சு குழம்பு ஊட்டப் பெற்ற
வேள் கரமும் -மன்மதனது கையும்
அம்பஞ்சு ஆர் -பஞ்ச பாணங்கள் பொருந்தப் பெற்ற
வேங்கடமே –
நீள் கரனார் தூடணனார் முத்தலையார் துஞ்ச எய்து -பெரிய கரனும் -தூஷணனும் -த்ரிசிரசும் –
-கரனின் சேனைத்தலைவர்கள் இவர்கள் -இறக்கும்படி அம்பு செலுத்தி பின்பு
துஞ்சாரைக் கூடு அணனார் முத்து அலையார் குன்று –
உறங்காதவரான இலக்குமணனைச் சேர்ந்த தமையனாக உள்ளவரும்
முத்துக்களை யுடைய கடலில் பள்ளி கொண்டு அருளுபவருமான திருமால் உடைய திருமலை
————————————————————————-
கொங்கைக் கோடு ஏறிக் குலுக்கும் அரியும் கரியும்
வேங்கைக் கோடாதரிக்கும் வேங்கடமே -பூங்கைக்குள்
மெய்த்தவளைச் சங்கு எடுத்தார் மேகலை விட்டு அங்கை தலை
வைத்தவள் அச்சம் கெடுத்தார் வாழ்வு –65-
கொங்கைக் கோடு ஏறிக் குலுக்கும் அரியும் –
கோங்கு மரத்தை கிளைகளின் மேல் ஏறி மிக அசைகின்ற குரங்கும்
வேங்கைக் கோடாதரிக்கும்-அங்கு இருந்து அருகில் உள்ள வேங்கை மரத்தின் கிளையை விரும்பித் தாவிப் பிடிக்கிற
கரியும் -யானைகளும்
வேங்கைக் கோடாதரிக்கும் -வேங்கைக்கு ஓடாது அரிக்கும் -புலிகளுக்கு அஞ்சி ஓடாமல் எதிர்த்து நின்று பொருது அவற்றை அளிக்கப் பெற்ற
வேங்கடமே –
பூங்கைக்குள் மெய்த்தவளைச் சங்கு எடுத்தார்-பூம் கைக்குள் -அழகிய கையில் -மெய்த் தவளம்-உருவம் வெண்மையான – சங்கு எடுத்தார்
மேகலை விட்டு அங்கை தலை வைத்தவள் அச்சம் கெடுத்தார் வாழ்வு –
ஆடையைப் பற்றுதலை விட்டு தலை மேல் கை கூப்பி வணங்கிய த்ரௌபதி அச்சம் தீர்த்து அருளிய திருமால்
—————————————————————————-
மாவில் குயிலும் மயிலும் ஒளி செய்ய
மேவிப் புயல் தவழும் வேங்கடமே -ஆவிக்குள்
ஆன அருள் தந்து அடுத்தார் ஆன் நிரைக்காகக் குன்று ஏந்தி
வானவருடம் தடுத்தார் வாழ்வு –66-
மாவில் குயிலும் ஒளி செய்ய
மா மரத்தில் குயில்களும் ஒளித்து கொள்ளும் படியும்
அங்கு
மயிலும் ஒளி செய்ய -மயில்களும் பிரகாசம் அடையும் படியும்
மேவிப் புயல் தவழும்-பொருந்தி மேகம் சஞ்சரிக்கப் பெற்ற
வேங்கடமே –
குயிலும் மயிலும் மா மரத்தில் தங்குமே -புயல் வருகையால் இரண்டும் ஒரே நிகரான தன்மையை அடைகின்றன –
ஆவிக்குள் ஆன அருள் தந்து அடுத்தார் -பொருந்திய கருணையைச் செய்து -எனது உயிரினுள் சேர்ந்தவரும்
ஆன் நிரைக்காகக் குன்று ஏந்தி வான வருடம் -வர்ஷம் – தடுத்தார் வாழ்வு —
———————————————————————–
கானொடு அருவி கனகமும் முத்தும் தள்ளி
மீனோ வெனக் கொழிக்கும் வேங்கடமே -வானோர்கள்
மேகன் அயன் அம் கொண்டு ஆர் வேணி அரன் காண்பு அரியார்
காக நயனம் கொண்டார் காப்பு –67-
கானொடு அருவி கனகமும் முத்தும் தள்ளி மீனோ வெனக் கொழிக்கும்
காடுகளின் வழியாக ஓடி வரும் நீர்ப் பெருக்குகள் பொன்னையும் முத்தையும் அலைத்து எறிந்து
நஷத்ரங்களோ என்று காண்பவர்கள் சொல்லும் படி பக்கங்களில் ஒதுக்கப் பெற்ற
மீன்கள் ஒ என்று அலறித் துள்ளும் படி கொழிக்கும் என்னவுமாம்
அவ்வருவிகள்
மீனோ வெனக் கொழிக்கும் –மீ நோவு எனக்கு ஒழிக்கும் -மிகுதியான பிறவித் துன்பத்தை எனக்கு போக்குதற்கு இடமான
வேங்கடமே –
வானோர்கள் -தேவர்களும் -மேகன் -மேகத்தை வாகனமாக உடைய இந்திரனும் -அயன் -பீரமனும் –
அம் கொண்டு ஆர் வேணி அரன்-நீரை -கங்கா வெள்ளத்தை -தரித்து பொருந்திய கபர்த்தம் என்னும் சடை முடியை யுடைய சிவபிரானும்
ஔதார் வேணி -பிரகாசமான கொன்றை மாலையைத் தரித்த சிவபிரான் என்னவுமாம் –
காண்பு அரியார்
காக நயனம் கொண்டார் -காகாசுரனது ஒரு கண்ணை பரித்தவருமான திருமால் காப்பு —
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் –
———————————————————————–
கண்டு அடைந்த வானவரும் காந்தள் குல மலரும்
விண்ட விர்ந்து நிற்கின்ற வேங்கடமே -தொண்டருக்கு
வைகுந்தம் நாட்டான் மருவு உருவம் ஈந்து வைக்கும்
வைகுந்த நாட்டான் வரை –68-
கண்டு அடைந்த வானவரும்
திருமலையின் அழகைக் கண்டு -அதன் இடத்தில் வந்து சேர்ந்த தேவர்களும்
விண் தவிர்ந்து நிற்கின்ற -மிகவும் இனிமையான அவ்விடத்தை விட்டுச் செல்ல மனம் இல்லாமையால் தேவ லோகத்தை நீங்கி நிற்றற்கு காரணமான
குலம் காந்தள் மலரும் விண்டு அவிர்ந்து நிற்கின்ற -இதழ் விரிந்து மலர்ந்து விளங்கி நிற்கும் இடமான
வேங்கடமே –
தொண்டருக்கு வை குந்தம் நாட்டான் -யமன் கூரிய சூலாயுதத்தை நாட்ட முடியாமல் செய்து அருளி
வை கூர்மை குந்தம் -ஈட்டி என்றபடி
மருவு உருவம் ஈந்து -பொருந்திய தன் உருவத்தை அடியார்க்கு கொடுத்து
வைக்கும் வைகுந்த நாட்டான் வரை –ஸ்ரீ வைகுந்தத்தில் நிலையாக வைத்து அருளும் திருமால் உடைய திருமலை –
சாலோக்யம் அருளி -என்றவாறு
——————————————————————————
வாழ் அம புலியினொடு வான் ஊர் தினகரனும்
வேழங்களும் வலம் செய் வேங்கடமே -ஊழின் கண்
சற்று ஆயினும் இனியான் சாராவகை அருளும்
நல்தாயினும் இனியான் நாடு –69-
வாழ் அம புலியினொடு வான் ஊர் தினகரனும் வலம் செய் –
கல்பகாலம் அளவும் அழிவின்றி வாழ்கின்ற சந்திரனோடு -ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற சூரியனும் -பிரதஷிணம் செய்யப் பெற்ற
வேழங்களும் வலம் செய் -யானைகளும் வலிமை கொள்ளப் பெற்ற
வேங்கடமே –
இனி மேல் யான் –
ஊழின் கண் சற்று ஆயினும் இனியான் சாராவகை அருளும்
நல்தாயினும் இனியான் நாடு –
ஊழின் கண்-கரும வசத்திலே –சற்று ஆயினும் சாரா வகை -சிறிதும் பொருந்தாத படி –
நல் தாயினும் மேலாக அருளிய இனிய திருமாலின் திவ்ய தேசம்
—————————————————————
நாட்கமலப் பூஞ்சுனைக்கும் சாயகங்கள் கொய் துதிரி
வேட்கும் வடிவு இல்லா வேங்கடமே வாட் கலியன்
நா வியப்பு ஆம் பாட்டினர் நச்சு மடுவைக் கலக்கித்
தாவி அப்பாம்பு ஆட்டினார் சார்பு –70-
நாட்கமலப் பூஞ்சுனைக்கும் வடிவு இல்லா-
நாளத்தோடு கூடிய தாமரையை யுடைய அழகிய சுனைகளுக்கும் நீர் குறைவு இல்லாத
சாயகங்கள் கொய் துதிரி வேட்கும் வடிவு இல்லா-
தனது அம்புகளாகிய மலர்களைக் கொய்து கொண்டு திரிகிற மன்மதனுக்கும் உருவம் இல்லா
வேங்கடமே
வாட் கலியன் நா வியப்பு ஆம் பாட்டினர்
நஞ்சு மடுவைக் கலக்கித் தாவி அப்பாம்பு ஆட்டினார் சார்பு –கொடுமையால் அப்பாம்பு என்று சுட்டிக் காட்டி அருளுகிறார் –
நர்த்தனம் செய்து காளியனை அடக்கினார் என்கிறார் –
—————————————————————–
ஆயும் துறவறத்தை அண்டின முத் தண்டினரும் வேயும்
கிளை விட்ட வேங்கடமே -தோயும்
தயிர்க்காத்தாம் கட்டுண்டார் தாரணியில் தந்த
உயிர்க்காத்து ஆங்கு அட்டு உண்டார் ஊர் –71-
ஆயும் துறவறத்தை அண்டின முத் தண்டினரும்
சிறந்தது என்று நூல்களினால் ஆராய்ந்து கூறப்பட்ட சந்நியாஸ்ரமத்தை -பொருந்திய த்ரிதண்டம் ஏந்திய முனிவர்களும்
தத்வ த்ரயம் -அறிந்து -மண் பெண் பொன் ஆசை மூன்றையும் அடக்கியவர்கள் –
கிளை விட்ட –சுற்றத்தாரை பற்று அற கை விடுவதற்கு இடமான
வேயும் கிளை விட்ட -மூங்கில்களும் கிளைகளை வெளியிட்டுச் செழித்து வளர்வதற்கு இடமான
வேங்கடமே –
-தோயும் தயிர்க்கா -தோய்ந்த தயிரைக் களவு செய்து உண்பதற்காக
தாம் கட்டுண்டார்
தாரணியில் தந்த -உலகத்தில் தம்மால் படைக்கப் பட்ட
உயிர்க்காத்து ஆங்கு அட்டு உண்டார் ஊர் —
————————————————————–
தொண்டொடு மெய்யன்பு உடையார் தூய மனமும் சந்தனமும்
விண்டொரு பொற் பாம்பணை சேர் வேங்கடமே -தண்டொடு வாள்
கோல் அமரும் கார் முகத்தார் கோடு -ஆழியார் குழையின்
கோலம் மருங்கு ஆர் முகத்தார் குன்று –72-
தொண்டொடு மெய்யன்பு உடையார் தூய மனமும்
பணிவிடை -கைங்கர்யம் -செய்தலுடன்-உண்மையான பக்தியை யுடைய அடியார்களது பரிசுத்தமான உள்ளமும்
விண்டொரு பொற் பாம்பணை சேர் -திருமாலுடனே அழகிய ஆதி சேஷன் சயனத்தை த்யானிக்கப் பெற்ற –
விஷ்ணு -என்பதே விண்டு என்று மருவி –
சந்தனமும் விண்டொரு பொற் பாம்பணை சேர் –
சந்தன மரங்களும் விண் தொடு -உயர்ச்சியால் ஆகாசத்தை அளாவிய பொலிவான கிளைகள் பொருந்தப் பெற்ற
வேங்கடமே –
தண்டொடு வாள்
கோல் அமரும் கார் முகத்து -அம்புகள் பொருந்திய வில்லையையும் கொண்டவர்
ஆர் கோடு -ஆழியார் ஒலிக்கின்ற சங்கத்தையும் கொண்டவர்
குழையின் கோலம் மருங்கு ஆர் முகத்தார் குன்று –
குண்டலங்களின் அழகு இரண்டு பக்கங்களிலும் பொருந்திய திருமுகத்தை யுடைய திருமாலினது திருமலை –
——————————————————————-
கிட்டும் நெறி யோகியரும் கிள்ளைகளும் தம் கூடு
விட்டுமறு கூடு அடையும் வேங்கடமே -எட்டுமத
மாவென்று வந்தான் வர நாளை வா இன்று
போ என்று உவந்தான் பொருப்பு –73-
கிட்டும் நெறி யோகியரும் தம் கூடு விட்டுமறு கூடு அடையும்
சரீரம் விட்டு வேறு சரீரம் புகப்பெற்ற
கிள்ளைகளும் தம் கூடு விட்டுமறு கூடு அடையும் -கிளிகளும் வசிக்கும் கூண்டை விட்டு நீங்கி வீதிகளில் சேரப் பெற்ற
வேங்கடமே –
எட்டுமத மா வென்று வந்தான்-அஷ்ட திக் கஜங்களைச் சயித்து வந்த இராவணன்
ஐராவதம் -புண்டரீகம் -வாமனம் -குமுதம் -அஞ்சனம் -புஷ்ப தந்தம் -சார்வ பௌமம்-சுப்பிரதீகம் -அஷ்ட திக் கஜங்கள்
வர நாளை வா இன்று போ என்று உவந்தான் பொருப்பு –வந்தான் –போர் ஒளிந்து மீண்டான் -என்றுமாம் –
———————————————————————
மட்டு வளர் சாரலினும் மாதவத்தோர் சிந்தையினும்
விட்டு மதி விளங்கும் வேங்கடமே -கட்டு சடை
நீர்க் கங்கை ஏற்றான் இரப்பு ஒழித்தான் நீள் குறள் ஆய்ப்
பார்க்கு அங்கை ஏற்றான் பதி –74-
மட்டு வளர் சாரலினும் -மலர்களின் நின்றும் கூண்டுகளின் நின்றும் தேன் பெருகி வழியப் பெற்ற அம்மலையின் பக்கங்களிலும்
விட்டு மதி விளங்கும் -மதி விட்டு விளங்கும் -சந்தரன் ஒளியை வீசி விளங்கப் பெற்ற
மாதவத்தோர் சிந்தையினும்
விட்டு மதி விளங்கும் -விஷ்ணு மதி -திருமாலை விஷயமாகக் கொண்ட ஞானச் சுடர் விளங்கப் பெற்ற
வேங்கடமே –
கட்டு சடை நீர்க் கங்கை ஏற்றான் இரப்பு ஒழித்தான்
நீள் குறள் ஆய்ப் பார்க்கு அங்கை ஏற்றான் பதி –ஆலமர் வித்தின் அரும் குறள் ஆனான் –
——————————————————————-
புக்கு அரு மாதவரும் பூ மது உண் வண்டினமும்
மெய்க்க வசம் பூண்டு இருக்கும் வேங்கடமே -ஒக்க எனை
அன்பதினால் ஆண்டார் அரிவையொடும் கான் உறைந்த
வன்பதினால் ஆண்டார் வரை –75-
புக்கு அரு மாதவரும் மெய்க்க வசம் பூண்டு இருக்கும்
அங்கு வருகின்ற அரிய பெரிய தவத்தை யுடைய முனிவர்களும்
மெய்க்க வசம் பூண்டு இருக்கும் -மெய் கவசம் பூண்டு இருக்கும் -சத்தியமாகிய கவசத்தை தரித்து இருக்கப் பெற்ற
பூ மது உண் வண்டினமும் மெய்க்க வசம் பூண்டு இருக்கும்
மலர்களில் உள்ள தேனைக் குடிக்கின்ற வண்டுகளின் கூட்டமும்
மெய்க்கு அவசம் பூண்டு இருக்கும் -மதுபான மயக்கத்தால் உடம்பில் தம் வசம் தப்பி பரவசமாம் தன்மையை கொண்டு இருக்கப் பெற்ற
வேங்கடமே
-ஒக்க-தம் மெய்யடியாரை ஒக்க
எனை-அடிமைத் திறம் இல்லாத என்னையும்
அன்பதினால் ஆண்டார்
அரிவையொடும் கான் உறைந்த வன்பதினால் ஆண்டார் வரை
வல் பதினால் -கொடிய பதினான்கு -ஆண்டார் -வருடங்களை யுடைய திருமாலினது வரை -திருமலை
——————————————————————–
கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply