ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கட மாலை -26-50-

நாலா விட்ட பொன் ஊசல் நன்னுதலார் உந்து தொறும்
மேல் அவிட்டம் தொட்டு இழியும் வேங்கடமே –ஆலம் இட்ட
பொற்புக் களம் கறுத்தார் போர் சரியாய் வாணன் தோள்
வெற்புக்கள் அங்கு அறுத்தார் வீடு –26-

நாலா விட்ட பொன் ஊசல் நன்னுதலார் உந்து தொறும்
தொங்க விடப்பட்டுள்ள பொன்னினிலாகிய ஊஞ்சல் -அழகிய நெற்றியை யுடைய மகளிர் வீசித் தள்ளி ஆடும் தொறும்
நுதல் -புருவம் என்றுமாம் –
மேல் அவிட்டம் தொட்டு இழியும் -வானத்தில் உள்ள அவிட்டம் நஷத்ரம் மேல் பட்டு இறங்குவதற்கு இடமான
வேங்கடமே —
ஆலம் இட்ட பொற்புக் களம் கறுத்தார் -விஷத்தை உட்கொண்ட
பொலிவை யுடைய கண்டம் கரு நிறம் அடைந்தவரான சிவபிரான்
போர் சரியாய் வாணன் தோள் வெற்புக்கள் அங்கு அறுத்தார் வீடு —
யுத்தத்தில் பின்னிட பாணாசுரன் யுடைய தோள்களாகிய மலைகளை –
அங்கு -அப்பொழுது -அப் போர் களத்தில் -துனித்த திருமால் யுடைய திவ்ய தேசம்

—————————————————————–

பால் நிறம் கொள் தெங்கின் இளம் பாளை விரிய சுனையில்
மீன் இனம் கொக்கு என்று ஒளிக்கும் வேங்கடமே –வான் நிமிர்ந்த
வெள்ளத்துக் கப்பு ஆலான் மெய்ப்பரம யோகியர் தம்
உள்ளத்துக்கு அப்பாலான் ஊர் –27-

பால் நிறம் கொள் தெங்கின் இளம் பாளை விரிய
வெண்மை நிறத்தைக் கொண்ட தென்ன மரத்தின் இளமையான பாளை -விரிய -மலர -அது கண்டு –
சுனையில் மீன் இனம் கொக்கு என்று ஒளிக்கும் -சுனை நீரில் உள்ள மீன் கூட்டங்கள் அதனைக் கொக்கு என்று கருதி அஞ்சி மறைதற்கு இடமான
மயக்க அணி
வேங்கடமே —
வான் நிமிர்ந்த வெள்ளத்துக்-வானத்தையும் கடந்து பொங்கி மேல் எழுந்த பிரளய பெரும் கடல் வெள்ளத்தில்
கப்பு ஆலான் -கிளைகளை யுடைய தோற ஆலமரத்தின் இலையில் பள்ளி கொண்டு இருப்பவனும்
மெய்ப்பரம யோகியர் தம் உள்ளத்துக்கு அப்பாலான் ஊர் —
உண்மையான சிறந்த யோகப் பயிற்சி யுடைய மகான்கள் யுடைய மனதுக்கும் முழுதும் எட்டாமல் கடந்துள்ள
-மனம் மெய் மொழிகளுக்கு கடந்தவன் -திருமாலினது திருப்பதி ஆகும் –

————————————————————–

கொம்பு அணியும் தேமாங்குயில் கருடன் போல் கூவ
வெம்பணிகள் புற்று அடையும் வேங்கடமே –வம்பு அணியும்
விண்ணின் ஐந்து காப்பார் மிசை வைத்தார் பத்தரைத்தம்
உள் நினைந்து காப்பார் உவப்பு –28-

கொம்பு அணியும் தேமாங்குயில் -கிளைகள் அழகியனவாக பெற்ற இனிய மா மரத்தின் மேலே இருக்கும் குயில்
கருடன் போல் கூவ -அத்தே மா மரத்தின் இனிய தளிரை நிரம்ப உண்டதனால் வந்த கொழுமை வளத்தால்
பஷி ராஜனான கருடன் போலே கூவி ஒலி செய்ய -அது கேட்டு
கருடன் பேர் கூவ -பாட பேதம் -தங்கட்கு அரசனான பஷி ராசனது திரு நாமத்தை கூவ என்றுமாம்
வெம்பணிகள் புற்று அடையும் -கருடனுக்கு அஞ்சும் இயல்பினவான கொடிய பாம்புகள் அஞ்சி புற்றுக்குள் நுழையும் இடமான
வேங்கடமே –
-வம்பு அணியும் -வாசனை மிகுதியாகக் கொண்ட
விண்ணின் ஐந்து காப்பார் மிசை வைத்தார் -தேவ லோகத்தில் உள்ள பஞ்சதருக்களுள் ஒன்றை
பார் மிசை வைத்தார் -சத்ய பாமை பிராட்டிக்காக நில உலகில் கொணர்ந்து நாட்டியவரும்
பத்தரைத்தம் உள் நினைந்து காப்பார் உவப்பு –அடியார்களை தாம் திரு உள்ளத்தில் நினைத்து
ரஷித்து அருளும் திருமால் திரு உள்ளம் உவந்து வர்த்திக்கும் திவ்ய தேசம்

————————————————————————-

தெங்கு இள நீர் வீழச் சிதறும் மணி யைக் கரிகள்
வெங்கனல் என்று அஞ்சிப் போம் வேங்கடமே –பைங்கழையின்
மாண் தாரைப் பண் தழைத்தார் மா மறையோன் பால் தோன்றி
மாண்டாரைப் பண்டு அழைத்தார் வாழ்வு –29-

தெங்கு இள நீர் வீழச் சிதறும் மணி யைக் கரிகள்
தென்ன மரத்தின் இள நீர் காய்கள் விழுதலால் சிதறும் இரத்தினங்களை யானைகள்
வெங்கனல் என்று அஞ்சிப் போம்
வேங்கடமே –
-பைங்கழையின் -பசிய வேய்ங்குழலின்
மாண் தாரைப் பண் தழைத்தார்-மாட்சிமைப் பட்ட ஒழுங்கான கீதம் செழிக்க ஊதினவரும்
மா மறையோன் பால் தோன்றி மாண்டாரைப் பண்டு அழைத்தார் வாழ்வு —

———————————————————–

அங்கு அயலில் மேகம் அதிர பெரும் பாந்தள்
வெங்கயம் என்று அங்காக்கும் வேங்கடமே -பங்கயனோடு
அம்புவனங்கள் தந்தார் அம்புயத்து மங்கையொடு
வெம்பு வனம் கடந்தார் வெற்பு –30-

அங்கு அயலில் மேகம் அதிர பெரும் பாந்தள்
அவ்விடத்தில் அருகிலே மேகங்கள் இடி முழங்க -அம முழக்கத்தைக் கேட்ட பெரிய மலைப் பாம்புகள்
வெங்கயம் என்று அங்காக்கும் -வெவ்விய மத யானைகள் பிளிறிக் கொண்டு வருகின்றன என்று கருதி -அவற்றை விழுங்க வாய் திறக்கும் இடமான
வேங்கடமே –
பங்கயனோடு அம்புவனங்கள் தந்தார் –
அம்புயத்து மங்கையொடு வெம்பு வனம் கடந்தார் வெற்பு —

———————————————————-

திங்கள் இறுமாந்து உலவ தீம் பாற் கவளம் என்று
வெங்களிறு கை நீட்டும் வேங்கடமே –பொங்கு அமரில்
ஆர்த்த வலம் புரியார் ஆட்பட்டார் செய்த பிழை
பார்த்து அவலம் புரியார் பற்று –31-

திங்கள் இறுமாந்து உலவ தீம் பாற் கவளம் என்று -இனிய பாலினால் கலந்த உணவு கவளம் என்று கருதி
வெங்களிறு கை நீட்டும்
வேங்கடமே
–பொங்கு அமரில் ஆர்த்த வலம் புரியார் -பாஞ்ச ஜன்ய ஓசையாலே பகைவர் அஞ்சி நடுங்கி அழியும் படி –
ஆட்பட்டார் செய்த பிழை பார்த்து அவலம் புரியார் பற்று -தன் அடியார் இத்யாதி
நாம் உண்டு என்றும் ஒரு பிரமாணம் உண்டு என்றும் நாம் பொறுப்போம் என்றும் நினைத்துச் செய்தார்கள் ஆகில் அழகிதாகச் செய்தார்கள்
ஒரு தர்ம அதர்மமும் பர லோகமும் இல்லை என்று செய்தார்கள் அன்றே
ப்ராமாதிகத்துக்கு நாம் உளோம் என்று அன்றோ செய்தது -என்று எம்பெருமான் திரு உள்ளமாக உரைத்து அருளுகிறான் –

————————————————————–

அம்புலியின் வாழ் மான் அதிரும் குரற் பகுவாய்
வெம்புலியைக் கண்டு ஏங்கும் வேங்கடமே –நம்பும் எனை
வீங்கு ஊத்தைக் கண் திருப்பார் விண்ணோர் நரர் பிறந்து
சாம் கூத்தைக் கண்டு இருப்பார் சார்பு –32-

அம்புலியின் வாழ் மான்
அதிரும் குரற் பகுவாய் வெம்புலியைக் கண்டு ஏங்கும்
வேங்கடமே —
நம்பும் எனை
வீங்கு ஊத்தைக் கண் திருப்பார் -அசுத்தமான பிறப்பில் மீண்டும் திரும்பச் செஒல்ல விடாதவரும்
விண்ணோர் நரர் பிறந்து சாம் கூத்தைக் கண்டு இருப்பார் சார்பு –
தேவர்களும் மனிதர்களும் பிறந்து இறக்கின்ற கூத்தை பார்த்துக் கொண்டு இருக்கும் திருமால் சார்ந்துள்ள திவ்ய தேசம் –

————————————————————-

கண்ணால் வெடித்த கழை முத்தம் கார் துளைத்து
விண் ஆலியோடு உதிரும் வேங்கடமே –எண்ணார்
கலங்க வரும் அஞ்சனையார் கான் முளையை ஊர்ந்தார்
சலம் கவரும் மஞ்சு அனையார் சார்பு –33-

கண்ணால் வெடித்த கழை முத்தம் கார் துளைத்து
கணுக்களிலே வெடித்த மூங்கில் களினின்று வெளிச்சிதறிய முத்துக்கள் -மேகத்தை தொளை செய்து
விண் ஆலியோடு உதிரும் -அந்த மேகத்தினின்று வெளிப்படுகிற மழை நீர்க் கட்டியுடனே கீழ்ச் சிந்துதற்கு இடமான
வேங்கடமே —
எண்ணார் கலங்க வரும் -பகைவர்கள் உறுதி நிலை கலங்கும்படி செல்லுகின்ற
அஞ்சனையார் கான் முளையை-அஞ்சனா தேவியின் புத்ரனான அனுமானை -கால் முளை -சந்ததியில் தோன்றியவர்
ஊர்ந்தார் -வாகனமாகக் கொண்டு ஏறி நடத்தியவரும்
சலம் கவரும் மஞ்சு அனையார் சார்பு –நீரை நிரம்ப மொண்டு கொண்ட காள மேகத்தைப் போன்ற வருமாகிய திருமால் சார்ந்துள்ள திவ்ய தேசம்
நிறம் -அழகு -குளிர்ந்த தோற்றம் கருணை -போன்றதால் மேகம் எம்பெருமானுக்கு உவமையாகச் சொல்லுவார்களே

—————————————————————

செல்லுக்கு மேல் செல்லும் திண்ணிய வேய் வசவனார்
வில்லுக்கு வாளி ஆம் வேங்கடமே -எல்லுக்குள்
அந்தகாரம் படைத்தார் ஆர் அழல் வாய் அம்பினால்
வெந்த கார் அம்பு அடைத்தார் வெற்பு –34-

செல்லுக்கு மேல் செல்லும் -மேகத்துக்கு மேலாக வளர்ந்து செல்லுகின்ற
திண்ணிய வேய் -வலிமையுடைய மூங்கில்
வசவனார் வில்லுக்கு வாளி ஆம் -வானத்தில் தோன்றுகிற இந்திர தனுசுக்கு அம்பு போன்று இருக்கிற
வேங்கடமே –
எல்லு க்குள் -பகல் பொழுதினிலே
அந்தகாரம் படைத்தார் -இருளை யுண்டாக்கினவரும்
ஆர் அழல் வாய் அம்பினால் -நிறைந்த அக்னியை வாயிலுடைய அஸ்த்ரத்தினால்-ஆக்நேயாஸ்த்ரத்தினால் –
வெந்த கார் அம்பு அடைத்தார் வெற்பு –தவிப்படைந்த கரு நிறமான கடலை அணை கட்டி அணைத்தவருமான திருமால் உடைய திருமலை யாகும் –

————————————————————–

பொன் கமழும் கற்பகத்தின் பூங்கா வனத்துக்கு
மென் கமுகம் காலாகும் வேங்கடமே -நன்கமரும்
ஊர் அத்தி கிரியார் ஊதும் திகிரியார்
வீரத் திகிரியார் வெற்பு –35-

பொன் கமழும் கற்பகத்தின் பூங்கா வனத்துக்கு மென் கமுகம் காலாகும்
காட்சிக்கு இனிய பாக்கு மரங்கள் -பொன்மயமானதும் -வாசனை வீசுவதுமான மேலுலகத்துக்கு கற்பகச் சோலையாகிய
பொலிவு பெற்ற பந்தலுக்கு அழகிய கால்கள் நாட்டியவை போன்று இருக்கப் பெற்ற
வேங்கடமே
-நன்கமரும் ஊர் அத்தி கிரியார் -நன்றாகப் பொருந்திய அத்திகிரி யென்ற திருப்பதியை யுடையவரும்
ஊதும் திகிரியார் -ஊதி இசைக்கின்ற வேய்ங்குழலை யுடையவரும்
வீரத் திகிரியார் -பகை அளிக்கும் திறம் உள்ள -ஸூ தர்சனம் -என்னும் திவ்ய சக்ராயுதத்தை யுடையவருமாகிய திருமால் உடைய
வெற்பு –திருமலை யாகும் –

———————————————————-

தண் இலைக்கண் மூங்கில் தலை கொடுத்த தேன் இறால்
விண் நிலைக்கண் ஆடி ஆம் வேங்கடமே –உள் நிலைக்கும்
சோதி வணம் கரியார் தூய சன காதியரும்
ஓதி வணங்கரியார் ஊர் –36-

தண் இலைக்கண் மூங்கில் தலை கொடுத்த தேன் இறால்
குளிர்ந்த இலைகளையும் கணுக்களும் உடைய மூங்கில் உச்ச்சியினிலே கட்டிய தேன் கூடு
விண் நிலைக்கண் ஆடி ஆம் -தேவர் உலகத்து நிலைக்கண்ணாடி போலே விளங்கப் பெற்ற
வேங்கடமே —
உள் நிலைக்கும் -அன்பர் உள்ளத்தில் நிலை பெற்று இருக்கும்
சோதி வணம் கரியார் -ஒளி வடிவம் ஆனவரும் -திருமேனி நிறம் கருமை யானவரும்
தூய சன காதியரும் ஓதி வணங்கரியார் ஊர் -திரிகரண சுத்தி யுடைய சனகர் முதலிய மகா யோகிகளும்
-சனகர் -சநந்தனர் சனத்குமாரர் -சனத் ஸூ சாதர் -நால்வர் என்பர் இவர்கள்
-துதித்து வணங்குவதற்கு அருமையானவரும் ஆகிய திருமாலது திருமலை யாகும் –

———————————————————–

தண் கமுகின் பாளை தடம் கதிரின் செல்வனுக்கு
வெண் கவரி போல் அசையும் வேங்கடமே ஒண் கடல் சூழ்
வண் துவரை நாட்டினான் மத்தாக வாரிதியுள்
பண்டு வரை நாட்டினான் பற்று -37-

தண் கமுகின் பாளை -குளிர்ந்த பாக்கு மரத்தின் பாளைகள்
தடம் கதிரின் செல்வனுக்கு -சூரியனுக்கு
வெண் கவரி போல் அசையும் -வெண் சாமரம் போலே அசையப் பெற்ற
வேங்கடமே
ஒண் கடல் சூழ் வண் துவரை நாட்டினான்
மத்தாக வாரிதியுள் பண்டு வரை நாட்டினான்
பற்று -திருமால் விரும்பி வாஸம் செய்யும் திவ்ய தேசமாகும் –

—————————————————————–

அங்கு அதிரும் கான்யாற்று அடர்திவலை யால் நனைந்து
வெங்கதிரும் தண் கதிர் ஆம் வேங்கடமே –செங்கதிர் வேற்
சேந்தன் அத் தம் ஐந்தான் திருத் தாதை விற்கு இளையாள்
பூந்தனத்து அமைந்தான் பொருப்பு –38-

அங்கு அதிரும் கான்யாற்று அடர்திவலை யால் நனைந்து
அங்கு ஆராவரிக்கும் காட்டாறுகளின் மிக்க நீர்த் துளிகள் தன் மேல் தெறித்தலினால் நனைந்து
வெங்கதிரும் தண் கதிர் ஆம்
வேங்கடமே —
செங்கதிர் வேற் -சிவந்த ஒளியை யுடைய வேலாயுதத்தை யுடைய
சேந்தன் அத் தம் ஐந்தான் திருத் தாதை விற்கு-சுப்ரமணியனுக்கும் –
ஐந்து கைகளை யுடைய விநாயகனுக்கும் சிறந்த தந்தையான சிவபிரானுடைய வில்லுக்கு -ஹஸ்தம் ஐந்தான் -என்றவாறு
இளையாள் பூந்தனத்து அமைந்தான் பொருப்பு –இளையவளான சீதை பிராட்டி யுடைய அழகிய கொங்கைகளிலே
விரும்பிப் பொருந்திய வனான திருமாலினது திருமலை –
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் அன்றோ -மலராள் தனத்துள்ளான் அன்றோ –
நிமி குளத்தில் சிவ தனுசு முன் வந்து பின்பு சீதா பிராட்டி திருவவதரித்ததால் இளையாள் எனப்பட்டாள்-
சிவ பிரான் வில்லுக்கு இளைக்காதவள் என்றுமாம் –
வில் கிளையாள் -வில் வந்த குடும்பத்தில் வந்தவள் என்றுமாம் –

———————————————————————

கேன் உளவு திங்கள் எனும் சித்தச வேள் வெண் குடைக்கு
வேணு ஒரு காம்பாகும் வேங்கடமே -கோணும் மனத்து
என்னை ஆளாக தான் இன் அருள் செய்தான் கமல
மின்னை ஆள் ஆகத்தான் வெற்பு –39-

கேன் உளவு திங்கள் எனும்
-னத்தில் சஞ்சரிக்கின்ற சந்த்ரனாகிய
சித்தச வேள் வெண் குடைக்கு -சித்த ஜனானான மன்மதனது வெண் கொற்றக் குடைக்கு
திருமால் திரு உள்ளத்தில் இருந்து தோன்றியதால் மன்மதன் சித்த ஜன்-யாவர் மனத்தையும் கொள்ளை கொண்டவன் என்றுமாம்
வேணு ஒரு காம்பாகும் -மூங்கில் ஒரு காம்பு போலே அமையப் பெற்ற
வேங்கடமே –
கோணும் மனத்து என்னை -செவ்வைப்படாத மனத்தை யுடைய என்னை
ஆளாக தான் இன் அருள் செய்தான்-செவ்வைப்பட்டு அடிமையாகும்படி தானாக இனிய கருணையைச் செய்து அருளியவனும்
கமல மின்னை ஆள் ஆகத்தான் வெற்பு –
செந்தாமரை மலரில் வாழும் மின்னல் போலே விளங்கும் திருமகளை திரு மார்பில் யுடையவனான திருமாலினது திருமலை –

—————————————————-

தேவர் உடை ஐந்தருவின் செந்தேன் இறால் கிழிய
மீவருடை பாய்கின்ற வேங்கடமே –மூவடி மண்
போய் இரந்தார் அத்தர் புனையும் ஒரு பதினாறு
ஆயிரம் தாரத்தர் அகம் -40-

தேவர் உடை ஐந்தருவின் செந்தேன் இறால் கிழிய
தேவர்கள் யுடைய ஐவகை கற்பக விருட்சங்களில் கட்டிய செவ்விய தேன் கூடு கிழிபடும் படி
மீவருடை பாய்கின்ற -தன் மேல் உள்ள வரையாடுகள் தாவிப் பாயப் பெற்ற
வேங்கடமே —
மூவடி மண் போய் இரந்தார்
அத்தர்-அனைவருக்கும் தந்தை -சிருஷ்டி கர்த்தா –
புனையும் ஒரு பதினாறு ஆயிரம் தாரத்தர் அகம் -புணரும் -என்றும் பாட பேதம்
அத்தார் புனையும் -அழகிய மணமாலையை தரித்தவர் -என்றுமாம் –

—————————————————————–

வன் குறிஞ்சி மாதர் பால் வானோர் மருந்துக்கு
மென் குறிஞ்சித் தேன் மாறும் வேங்கடமே -நன்கு உறிஞ்சி
பேய்த்தநம் சுவைத்தார் பிறர்க்கு அமுது ஈந்து ஈசனுக்கு
வாய்த்த நஞ்சு வைத்தார் வரை –41-

வன் குறிஞ்சி மாதர் பால் வானோர் மருந்துக்கு மென் குறிஞ்சித் தேன் மாறும்
-பண்ட மாற்று முறையில் அமிர்தம் கொடுத்து தேனை பெறுவார்கள் என்றபடி
மலையும் மழை சார்ந்த இடமே குறிஞ்சி
வேங்கடமே –
நன்கு உறிஞ்சி பேய்த்தநம் சுவைத்தார்
பிறர்க்கு அமுது ஈந்து
ஈசனுக்கு வாய்த்த நஞ்சு வைத்தார் வரை –
வெருவும் ஆலமும் பிறையும் வெவ்விடையவர்க்கு ஈந்து -கம்பர் –
சிவபிரானை பாத்ரமாகக் கொண்டே தானே நஞ்சை ஏற்றான் –

——————————————————————–

வாவுகவின் மந்தி நுகர் மாங்கனிக்குக் கற்பகத்தின்
மேவு கவி கை நீட்டும் வேங்கடமே –தாவு கடல்
வேவ இலங்கைக்கு ஒண் தார் வீடணனை வைத்து ஒழிந்தார்
சாவவில் அங்கைக் கொண்டார் சார்பு –42-

வாவுகவின் மந்தி -தாவிச் செல்லும் இயல்புள்ள அழகிய பெண் குரங்கு
நுகர்-மாங்கனிக்குக் -கைக்கொண்டு உண்கின்ற மாம்பழத்துக்கு
கற்பகத்தின் மேவு கவி கை நீட்டும் -கற்பக விருஷத்தின் பொருந்திய ஆண் குரங்கு கை நீட்டப் பெற்ற -கபி -விகாரம் கவி –
வேங்கடமே –
-தாவு கடல் வேவ -அலை பொங்கி ஏழும் இயல்புள்ள கடல் கொதிப்பு அடையும் படியும்
இலங்கைக்கு ஒண் தார் வீடணனை வைத்து -பிரகாசமான ஹாரத்தை அணிந்த விபீஷணனை இலங்காபுரிக்கு அரசனாக வைத்து
ஒழிந்தார் சாவவில் அங்கைக் கொண்டார் -அவன் அல்லாத அரக்கர் பலரும் இறக்கும் படி
ஸ்ரீ கோதண்டம் என்னும் வில்லை அழகிய திருக்கையிலே கொண்டவருமான திருமால்
கடல் வழி விட நிசிசரர் பொடி பட விறு கண் சீறி -என்றால் போலே
சார்பு –விரும்பு வர்த்திக்கும் திவ்ய தேசம் –

————————————————————–

வெள்ளிய கல் மீதே விடர் முளைத்த செங்காந்தள்
வெள்ளி அகல் விளக்கு ஆம் வேங்கடமே –வெள்ளி எனும்
வேதியன் நாட்டம் கெடுத்தார் மேதினியைப் பாதலம் என்று
ஒது இயல் நாடு அங்கு எடுத்தார் ஊர் –43-

வெள்ளிய கல் மீதே விடர் முளைத்த செங்காந்தள் வெள்ளி அகல் விளக்கு ஆம் –
வெண்ணிறமான வட்டப் பளிங்கு கல்லின் மேலே -அக்கல் பிளப்பிலே முளைத்து எழுந்த செந்நிறமான காந்தளின் மலர்
வெள்ளியினால் ஆன தகழி யில் ஏற்றப் பட்ட விளக்குப் போலே தோன்றப் பெற்ற
வேங்கடமே —
வெள்ளி எனும் வேதியன் நாட்டம் கெடுத்தார் -சுக்கிரன் எனும் அந்தணனது கண்ணைப் போக்கினவரும்
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையன் அன்றோ
மேதினியைப் பாதலம் என்று ஒது இயல் நாடு அங்கு எடுத்தார் –
பூமியை பாதாளம் என்று பெயர் சொல்லப் படுகிற இயல்பை யுடைய உலகமாகிய அவ்விடத்தின் நின்றும் எடுத்தவருமான திருமாலினது
ஊர் -திருப்பதி ஆகும் –

——————————————————————

அல்லி மலர்க் காந்தளின் மேல் ஆடும் சுரும்பினங்கள்
மெல்லியலார் கைக்கழங்கு ஆம் வேங்கடமே -மல்லினரைப்
பண்டு அறைந்த வன்புடையார் பார்த்தனுக்குத் தத்துவ நூல்
விண்டு அறைந்த அன்பு உடையார் வெற்பு –44-

அல்லி மலர்க் காந்தளின் மேல் ஆடும் சுரும்பினங்கள் மெல்லியலார் கைக்கழங்கு ஆம்
அக விதழ்கள் நிறைந்த செங்காந்தள் மலரின் மேலே அசைந்து அசைந்து மொய்த்து எழுகின்ற வண்டுகளின் கூட்டங்கள்
மகளிர்களால் கையில் கொண்டு ஆடப்படுகின்ற கழல் காய் போலே இருக்கப் பெற்ற
வேங்கடமே –
மல்லினரைப் பண்டு அறைந்த வன்புடையார் -மல் போர் வீரர்களை தாக்கி அழித்த வலிமை கேடாதவரும்
பார்த்தனுக்குத் தத்துவ நூல் விண்டு அறைந்த அன்பு உடையார் -ஸ்ரீ கீதா சாஸ்திரம் வெளியிட்டு அருளிய அன்பை யுடையவருமான திருமாலினது
வெற்பு –திருமலை யாகும் –

———————————————————-

காந்தள் இரவலர் போல் கை ஏற்ப கொன்றை கொடை
வேந்தன் எனப் பொன் சொரியும் வேங்கடமே –பூந்துளவின்
கான் மடங்கா மார்வத்தார் காண விரும்பினர் மேல்
நான் மடங்கு ஆம் ஆர்வத்தார் நாடு –45-

காந்தள் இரவலர் போல் கை ஏற்ப கொன்றை கொடை வேந்தன் எனப் பொன் சொரியும்
செங்காந்தள் மலர் யாசகர் யாசிப்பதற்கு ஏற்கின்ற கை போன்று இருப்ப கொன்றை மரம்
ஈகைக் குணம் உடைய அரசன் அந்த யாசகர் கையில் பொன்னைச் சொரிவது போலே
அந்தக் காந்தள் மலரின் மேல் பொன்னிறமான தன் மலர்களைச் சொறிவதற்கு இடமான
வேங்கடமே —
பூந்துளவின் கான் மடங்கா மார்வத்தார் -அழகிய திருத் துழாய் யுடைய வாசனை மாறாத திரு மார்பகத்தார்
காண விரும்பினர் மேல் நான் மடங்கு ஆம் ஆர்வத்தார் நாடு-
தன்னைச் சேவிக்க விரும்பும் மெய்யடியார்கள் இடத்து பல மடங்கு அதிகமாக அன்பை வைக்கும் அன்பையுடைய திருமாலினது திவ்ய தேசம்

———————————————————–

நாகத்தின் மேல் குறவர் நன்கு எறிந்த மாணிக்கம்
மேகத்தின் மின் புரையும் வேங்கடமே -மாகத்தின்
மாத்தாண்ட மண்டலத்தார் வாய் உண்டு உமிழ்ந்து அளந்து
காத்து ஆண்ட மண் தலத்தார் காப்பு –46-

நாகத்தின் மேல் குறவர் நன்கு எறிந்த மாணிக்கம்
யானையின் மேல் குறிஞ்சி நில மக்கள் நன்றாக வீசி எறிந்த மாணிக்கம் என்னும் இரத்தினங்கள்
மேகத்தின் மின் புரையும் -மேகத்தின் இடம் காணப்படும் மின்னல் போல் விளங்குவதற்கு இடமான
வேங்கடமே –
மாகத்தின் -பெரிய வானத்தில் விளங்கும்
மாத்தாண்ட மண்டலத்தார்-சூர்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருப்பவரும்
வாய் உண்டு உமிழ்ந்து அளந்து காத்து ஆண்ட மண் தலத்தார் காப்பு –திருமால் ரஷிக்கும் திவ்ய தேசம்
பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட பேராளன் –

———————————————————–

செம்பதும் ராகச் சிலை சூழ் பெரும் பாந்தள்
வெம்பரிதி ஊர் கோள் ஆம் வேங்கடமே -உம்பர் உலகு
ஓதத்தின் அப்பு உற தான் ஓர் ஆலிலைத் துயின்றான்
வேதத்தின் அப்புறத்தான் வெற்பு –47-

செம்பதும் ராகச் சிலை சூழ் பெரும் பாந்தள் வெம்பரிதி ஊர் கோள் ஆம்
செந்நிறமான பத்துமராகக் கல்லை சுற்றிக் கொண்ட பெரிய மலைப் பாம்பு வெவ்விய சூர்ய மண்டலத்தைச் சுற்றிக் காணப்படும்
பரி வேஷம் போன்று தோன்றப் பெற்ற -ஊர் கோள் -ஊர்தல் வளைதல் –
வேங்கடமே –
உம்பர் உலகு ஓதத்தின் அப்பு உற
பிரளய சமுத்திரத்தின் நீர் வெள்ளம் எல்லா உலகங்களையும் கவிந்து அவற்றின் மேல் சென்று பரவ
தான் ஓர் ஆலிலைத் துயின்றான் வேதத்தின் அப்புறத்தான் வெற்பு —
அப்பெரும் கடலில் ஓர் ஆலிலையின் மேல் தான் யோக நித்தரை கொள்கிறவனும்
வேதங்களுக்கு எட்டாமல் அப்பால் பட்டவனுமான திருமாலினது திருமலை யாகும் –

————————————————–

கோல மணிப் பாறையில் பாய் கோடரங்கள் செங்கதிரோன்
மேல் அனுமன் பாய்ந்தனைய வேங்கடமே –நாலு மறை
ஆய்ந்த பர தத்துவம் தான் ஆனான் குடம் ஆடல்
வாய்ந்த பரதத்து உவந்தான் வாழ்வு –48-

கோல மணிப் பாறையில் பாய் கோடரங்கள் செங்கதிரோன் மேல் அனுமன் பாய்ந்தனைய –
அழகிய மாணிக்கப் பாறையின் மேல் பாய்கின்ற குரங்குகள் சிவந்த சூரிய மண்டலத்தின் மேல்
அனுமான் பாய்ந்தால் போல் தோன்றுவதற்கு இடமான
வேங்கடமே —
நாலு மறை ஆய்ந்த பர தத்துவம் தான் ஆனான் குடம் ஆடல்
வாய்ந்த பரதத்து உவந்தான் வாழ்வு —
நான்கு வேதங்களாலும் ஆராய்ந்து கூறப்பட்ட எல்லாவற்றுக்கும் மேலான உண்மைப் பொருள் தானேயானவனும்
குடம் எடுத்து ஆடுதல் பொருந்தின கூத்தைச் செய்வதிலே திரு உள்ளம் உகந்த திருமால் வாழும் திவ்ய தேசம் –

————————————————————

கொம்பின் இறால் வாங்க நிமிர் குஞ்சரக்கை அம்புலி மேல்
வெம்பி எழும் கோள் அரவு ஆண் வேங்கடமே -தும்பி பல
போர் காதும் ஈர்ந்தார் புனை அரக்கி மூக்கினொடு
வார் காதும் ஈர்ந்தார் வரை –49-

கொம்பின் இறால் வாங்க நிமிர் குஞ்சரக்கை அம்புலி மேல் வெம்பி எழும் கோள் அரவு ஆண்-
மரக் கொம்பில் கட்டிய தேன் கூட்டை எடுத்ததற்கு உயரத் தூக்கிய யானையினுடைய துதிக்கை
சந்திர மண்டலத்தைப் பற்ற அதன் மேல் கறுக் கொண்டு எழும் கறும் பாம்பு வடிவமான இராகு கிரகம் போலே தோன்றப் பெற்ற
வேங்கடமே –
தும்பி பல போர் காதும் -பல வண்டுகள் நெருங்கி மொய்த்து ஒன்றோடு ஓன்று தாக்கப் பெற்ற
ஈர்ந்தார் புனை அரக்கி மூக்கினொடு வார் காதும் ஈர்ந்தார் வரை —
தேனினால் குளிர்ந்த மலர் மாலையைத் தரித்த சூர்பணகை யுடைய மூக்கையும் நீண்ட காதையும் அருத்தவராகிய திருமாலினது திருமலையாகும்
ராமஸ்ய தஷிணோ பாஹூ–தம்முடைய தோளாய் இருக்கிற இளைய பெருமாளை இடுவித்துக் கொண்டு தண்டிப்பாதார் –

————————————————————-

வண்மை திகழ் வெண் பளிங்கு வட்டத்தில் கண் துயில் மான்
விண் மதியில் மான் ஏய்க்கும் வேங்கடமே -ஒண் மதியால்
நூலைத் தாம் ஒது அரனார் நோக்க அரி யார் துளவ
மாலைத்தா மோதனார் வாழ்வு –50-

வண்மை திகழ் வெண் பளிங்கு வட்டத்தில் கண் துயில் மான் விண் மதியில் மான் ஏய்க்கும்-
அழகியதாக விளங்குகின்ற வெண்ணிறமான வட்ட வடிவமான பளிங்குப் பாறையில் படுத்துத் தூங்கும்
வானத்து சந்திர மண்டலத்தின் நடுவில் காணப்படுகிற மான் வடிவத்தை ஒத்து இருக்கப் பெற்ற
வேங்கடமே –
ஒண் மதியால் -சிறந்த புத்தியால் -தமது புத்தி விசேஷத்தினால் –
நூலைத் தாம் ஒது அரனார் -பல நூல்களை தாம் ஓதிய சிவ பிரானாலும்
நோக்க அரி யார் -கட்புலனாகக் கண்டு தர்சிக்க முடியாத வரும்
துளவ மாலைத்தா மோதனார் வாழ்வு –திருத் துழாய் மாலையை அணிந்த தாமோதரன் யென்ற திருநாமம் யுடைய வருமாகிய திருமால் வாழும் திவ்ய தேசம் –
தாமம் -கயிறு -உதரம் -வயிறு –

—————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: