ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவேங்கட மாலை -1-25-

காப்பு -நம்மாழ்வாரைக் குறித்து அருளிச் செய்கிறார் –
திண்பார் புகழும் திருவேங்கட மாலை
வெண்பா வானூரும் விளம்புதற்குக் கண் பாராய்
நாராயணா வடியேனாடும் தமிழ் வேதப்
பாராயணா சடகோபா –

நாராயணா
வடியேனாடும் -அடியேன் நாடும்
தமிழ் வேதப் பாராயணா சடகோபா
அடியேன் நாடும் -தமிழ் வேத பராயணத்துக்கும் சடகோபருக்கும் அடை மொழியாகக் கொள்ளலாம்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் –
பராயணம் = முழுவதும் -நாதனுக்கு நாலாயிரமும் அருளினவர் அன்றோ
திண்பார் புகழும் திருவேங்கட மாலை –
வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -உலக்குக்கு எல்லாம் தேசமாய்த் திகழும் மழைத் திரு வேங்கடம் –
வெண்பா வானூரும் விளம்புதற்குக் கண் பாராய் -வெண்பாவால் நூறும் விளம்புவதற்கு கிருபை செய்து அருளுவாய்

———————————————–

இதுவும் அது -திருவேங்கடமுடையானைக் குறித்து அருளிச் செய்கிறார்
மூலமே யென்ற கரி முன் வந்திடர் தொலைத்து
நீலமேகம் போலே நின்றானைப் பாலாய
வேலை நடு விற்றுயிலும் வித்தகனை வேங்கடத்து
மாலை யன்றிப் பாடாதென் வாய் –

தேவு மற்று அறியேன் -வேறு ஒன்றும் நான் அறியேன் -போலே வேங்கடத்து திருமாலை யன்றி பாடாது என் வாய் என்கிறார்
மறந்தும் புறம் தொழாதவர் -என்நாவில் இன்கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன்
-தென்னா தெனா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே –
பாலாய வேலை நடுவில் துயிலும் வித்தகன் -வியூக நிலை –

————————————————————

அவையடக்கம் –
ஆழ்வார்கள் செந்தமிழை யாதரித்த வேங்கடம் என்
தாழ்வான புன் சொல்லும் தாங்குமால் ஏழ் பாரும்
வெல்லும் கதிர் மணியும் வெம்பரலும் செஞ்சாந்தும்
புல்லும் பொறுத்தமையே போல் –

இரத்தினங்கள் -பருக்கைக் கற்கள் /சந்தன மரங்கள் -புற்களையும் -திரு வேங்கட திருமலை மேல் கொண்டது போலே
ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தங்களையும் அடியேன் உடைய பிரபந்தத்தையும் அங்கீகரிக்கும் -என்கிறார் –

—————————————————————

பொன்னும் மணியும் பொலிந்து ஓங்கி பார்மகட்கு
மின்னும் மணி முடி ஆம் வேங்கடமே -மன்னும்
பரமபத நாட்டினான் பை அரவின் சூட்டில்
சிரம பதம் நாட்டினான் சேர்வு –1-

ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு இரத்தின கிரீடம் போலே திரு வேங்கடம் -பரம பதம் திருநாட்டை யுடையவனும் காளியன் முடியிலே ஆட்டப் பயிற்சி யுடைய
திருவடிகளை நிறுத்தி நடனம் செய்து அருளிய எம்பெருமான் திரு உள்ளம் உவந்து சேர்ந்து இருக்கும் திவ்ய தேசமாம் –
மன்னி -நித்தியமாய் -என்றபடி
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்ட அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மாலை அவனுக்கு அருள் செய்த வித்தகன் –
கானக மா மடுவில் காளியன் உச்சியில் தூய நடம் பயிலும் சுந்தர
பொன் -மங்கள சப்தத்தால் ஆரம்பிக்கிறார்

—————————————————————–

சோதி மதி வந்து தவழ் சோலை மலை யோடிரண்டாய்
மேதினியாள் கொங்கை நிகர் வேங்கடமே –போதில்
இருப்பாற் கடலானிப மூர்ந்தார் கெட்டாத்
திருப் பாற் கடலான் சிலம்பு –2-

சோதி மதி வந்து தவழ் சோலை மலை யோடிரண்டாய்
மேதினியாள் கொங்கை நிகர் வேங்கடமே –
-போதில் இருப்பாற் கடலானிப மூர்ந்தார் கெட்டாத்
போதில் இருப்பார்க்கு -பிரமதேவனுக்கும்
அடல் ஆன் இபம் ஊர்ந்தார்க்கு -வலிமை யுடைய ருஷபத்தையும் ஐராவதத்தையும் முறையே
வாகனமாகக் கொண்ட சிவபிரானுக்கும் தேவேந்த்ரனுக்கும் எட்டாத
திருப் பாற் கடலான் சிலம்பு —

தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா வடிவமைந்த அன்ன நடைய அணங்கு –
காந்தன் விரும்பி விடாதே படுகாடு கிடக்குமவை யாய்த்து என்பதால் மேரு மந்த்ராதிகளைச் சொல்லாமல் இவற்றை அருளிச் செய்தார்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறர்களுக்கு அரிய வித்தகன் –

———————————————————–

மாலைக்கோ லித்திரியும் வையகத்தோர் தம் பிறவி
வேலைக்கோர் வங்கமாம் வேங்கடமே சோலைத்
தருமா தரை நாட்டான் தண் முல்லை யாயர்
தருமா தரை நட்டான் சார்பு –3-

மாலைக்கோ லித்திரியும் வையகத்தோர் தம் பிறவி
மாலை -மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை -மயக்கத்தை தம்மிடத்திலே கொண்டு
பல இடங்களிலும் அலைகின்ற நில உலகத்தில் உள்ளாருடைய பிறப்பாகிய
எம்பெருமானை நாடித் திவ்ய தேசங்கள் தொறும் யாத்ரை செய்யும் நில உலகத்தார் என்றுமாம்
வேலைக்கோர் வங்கமாம் வேங்கடமே
கடலுக்கு ஒரு மரக்கலம் போன்ற வேங்கடமே
சோலைத் தருமா தரை நாட்டான்-
தேவேந்தரனது நந்தவனம் என்னும் பூம் சோலையில் உள்ள பாரிஜாத விருஷத்தை -மா தரை நட்டான் -பெரிய பூமியில் கொணர்ந்து நட்டியவனும்
தண் முல்லை யாயர் தருமாதரை நட்டான் சார்பு –
நீர் வளத்தால் குளிர்ச்சியான முல்லை நிலத்தில் வசிக்கின்ற இடையர்கள் பெற்ற கோப ஸ்திரீகளை -ஆயர் தரும் மாதரை –
முல்லை -காடும் காடு சார்ந்த இடம்
நட்டான் -விரும்பிக் கூடியவன் ஆகிய திருமால்
சார்பு -திரு உள்ளம் உவந்து சார்ந்து இருக்கும் இடமாம்

—————————————————————

நாலு திசை முகமு நண்ணுதலால் ஒண் கமல
மேலுறலால் வேதாவாம் வேங்கடமே சாலுறையு
மண் மயக்கம் தேற்றுவித்தான் மாற்றுதல் போல் ஆரியனால்
உள் மயக்கம் தேற்றுவித்தானூர் –4-

நாலு திசை முகமு நண்ணுதலால் –
நான்கு திசைகளையும் நோக்கிய நான்கு முகங்கள் பொருந்தி இருத்தலால்
நான்கு திக்குகளில் உள்ளாராலும் விரும்பி சேவிக்கப் படுவதால்
ஒண் கமல மேலுறலால்-பிரகாசமான தாமரை மலர் மேல் தோன்றியதனால்
சிறந்த புண்ணிய தீர்த்தங்கள் தன் மேல் தங்கப் பெறுதலால்
வேதாவாம் வேங்கடமே -பிரமனைப் போன்ற வேங்கடமே
சாலுறையு மண் மயக்கம் -சால் யுறையும் மண் மயம் கம் -பாத்திரத்தில் பொருந்திய மண்ணோடு கலந்த நீரை
தேற்றுவித்தான் மாற்றுதல் போல் -தேற்றாம் கொட்டை கொண்டு தெளியச் செய்வது போலே
ஆரியனால் உள் மயக்கம் தேற்றுவித்தானூர் —
ஆசார்யனைக் கொண்டு எனது மனத்தின் தடுமாற்றத்தைத் தெளியச் செய்தவனான திருமாலின் வாசஸ் ஸ்தானம் ஆகும் –

செம்மொழிச் சிலேடை பற்றி வந்த உவமை-பிரமனுக்கும் வேங்கடத்துக்கும் சொற்களை பிரிக்காமல் பல பொருள் படுவது

——————————————————————-

பாணி பிறை கொன்றை பணி சூடி மானேந்தி
வேணியரனைப் பொருவும் வேங்கடமே -யாணி நிறப்
பீதாம் பரனார் பிரமர் வாழ் அண்டம் கண்
மீதாம் பரனார் விருப்பு -5-

பாணி பிறை கொன்றை பணி சூடி மானேந்தி
நீரையும் -சந்திரனையும் -கொன்றையையும் -பாம்பையும் -மேற் கொள்ளுதலாலும்-மானைத் தரித்தலாலும் –
தாருக வன முனிவர்களால் ஏவப்பட்ட நாகங்களை ஆபரணமாகவும் மானை இடைக்கையிலும் தரித்து இருப்பவர் சிவபிரான்
வேணியரனைப் பொருவும் வேங்கடமே –
சடை முடியை உடைய சிவபிரானைப் போல்கின்ற வேங்கடமே -அடர்ந்த வனத்தொகுதி திருவேங்கடத்துக்கு உண்டே
யாணி நிறப் பீதாம் பரனார்-
ஆணிப் பொன் நிறம் உள்ள பீதாம்பரம் என்னும் பொற் பட்டாடையை யுடுத்தவரும்
பிரமர் வாழ் அண்டம் கண் மீதாம் பரனார் விருப்பு –
பிரம தேவர் வாழும் அண்டங்களுக்கு மேலாகிய பரம பதத்தில் எழுந்து அருளி இருக்கும் திருமால் உகந்து அருளி நித்ய வாஸம் செய்யும் திய தேசமாம்

இதுவும் செம்மொழிச் சிலேடை பற்றி வந்த உவமை -சிவ பெருமானுக்கும் திருவேங்கடத்துக்கும்

——————————————————————

மாலாய்ச் சசி தழுவி வச்சிர மேந்திப்பு கர்மா
மேலாய்ப் புரந்தரனாம் வேங்கடமே -நாலாய்க்
கிளர்வாகு மந்தரத்தான் கேட்ட மாதர் வேட்டுத்
தளர்வாகு மந்திரத்தான் சார்பு –6–

மாலாய்ச் சசி தழுவி –
மால் என்னும் பெயரைக் கொண்டு -பெருமையை யுடையதாய் -இந்திராணியைக் கூடி -சந்தரன் தன் மீது பொருந்தப் பெற்று
-சசம் முயல் -சந்தரன் இடம் உள்ள களங்கம் என்றவாறு
வச்சிர மேந்திப்-
வச்சிராயுதத்தைக் கைக் கொண்டு –வச்சிர ரத்தினக் கற்களை
தனது மேல் யுடையதாய்
புகர்மா மேலாய்ப்-உத்தம இலக்கணம் ஆகிய செம் புள்ளிகளை யுடைய ஐ ராவதம் யானை மேல் ஏறுவதால்
-செம் புள்ளிகளை உடைய யானைகள் தன் மேல் தங்கப் பெறுவதால்
புரந்தரனாம் வேங்கடமே -இந்திரனை ஒத்த வேங்கடம்
நாலாய்க் கிளர்வாகு மந்தரத்தான் -நான்காய் விளங்கும் மந்திர மலை போன்ற தோள்களை யுடையவனும் –
அமரர் கேட்டு -தேவர்கள் தனது சிறப்பை கேள்வியுற்று
வேட்டு -தாம் தாம் சென்று சேர விரும்பி
தளர்வு ஆகும் -எளிதில் கிடையாமல் தளர்ச்சி யடைய காரணமான
அந்தரத்தான் -பரமாகாசம் எனப்படும் பரம பதத்தை யுடையவனாகிய
திருமால் சார்பு -சார்ந்து இருக்கும் திவ்ய தேசம் –

இந்திரனுக்கும் திருவேங்கடத்துக்கும் செம்மொழிச் சிலேடை பற்றி வந்த உவமை

————————————————————–

வள்ளி புணர்ந்த ஆறுமுக மன்னி மயில் மேல் கொளலால்
வெள்ளிலை வேல் வேள் போலும் வேங்கடமே –உள்ளினரைத்
தங்கமலப் பார்வையால் தன்னடியார் மேல் வைக்கும்
செங்கமலப் பார்வையான் சேர்வு –7-

வள்ளி புணர்ந்த -வள்ளி நாயகியோடு கூடி -வள்ளிக் கொடிகள் பொருந்தப் பெற்று
ஆறுமுக மன்னி -ஆறு முகம் அமையப் பெற்று -நதிகள் தன்னிடத்திலே அமையப் பெற்றதாய் –
சண்முக தீர்த்தம் உள்ள திருவேங்கடம் என்றுமாம்
மயில் மேல் கொளலால் -மயிலை வாகனமாகக் கொண்டு அதன் மேல் ஏறுதலால் -மயில்களைத் தன் மேல் கொண்டு இருத்தலால்
வெள்ளிலை வேல் வேள் போலும் -வெள்ளிய இலை வடிவம் ஆகிய வேலாயுதத்தை கொண்ட முருகனை ஒக்கும்
வேங்கடமே —
உள்ளினரைத் -த்யானித்த அடியார்களை
தங்க மலப் பார்-மலம் பார் -காமம் வெகுளி மயக்கங்கள் ஆகிய மும் மலங்கள் பொருந்திய உலகத்தில்
தங்க வையான்-இருக்க ஒட்டாமல் பரம பதத்தில் சேர்த்து கொள்பவனும்
தன்னடியார் மேல் வைக்கும் செங்கமலப் பார்வையான் சேர்வு -அடியார்கள் மேல் அருளும் திருக் கண் கடாஷம் யுடைய திருமால் சேரும் திவ்ய தேசம் –

சுப்ரமணியனுக்கும் வேங்கடத்துக்கும் செம்மொழிச் சிலேடை பற்றி வந்த உவமை

———————————————————————–

புள்ளரவ நீரரவம் போர் மா வரவமறா
வெள்ளரவ வெற்பாகும் வேங்கடமே ஒள்ளரியாய்
மாகனகம் பத்தினர் வாய் கண் கை யுந்தி பதம்
கோகனகம் பத்தினார் குன்று –8-

புள்ளரவ நீரரவம் போர் மா வரவமறா
பறவைகளின் ஒலியும்-அருவி நீர் பெருகிய ஒலியும் -போர் செய்கின்ற யானை முதலிய விலங்குகளின் ஓசையும் நீங்காததாய்
வெள்ளரவ வெற்பாகும் வேங்கடமே –
சுத்தமான அரவெற்பு என்று பேர் பெற்ற திரு வேங்கடமே -சேஷ கிரி அன்றோ -பலவகை அரவங்கள் என்றுமாம்
பிரிநிலை நவிற்சி அணி
ஒள்ளரியாய் -விளங்குகின்ற சிங்க வடிவமாய்
மா கன கம்பத்தினர் -ஓங்கிய பருத்த தூணின் நின்றும் தோன்றியவருமான –
வாய் கண் கை யுந்தி பதம் கோகனகம் பத்தினார் குன்று-
வாய் ஒன்றும் -கண்கள் இரண்டும் -கைகள் நான்கும் -நாபி ஒன்றும் -பாதம் இரண்டும் ஆகிய பத்து தாமரை மலர்களை யுடைய திருமாலினது திருக் குன்று

———————————————————————-

துய்ய செம் பொற் கோயில் சுடர் எறிப்பக் கண் முகிழ்ந்து
வெய்ய வன்றேர் மாவிடறும் வேங்கட மேயையிருநூ
றான முகப் பாம்பணையா ரானிரைப்பி னூதி வரும்
கானமுகப் பாம்பணையார் காப்பு –9-

துய்ய செம் பொற் கோயில் சுடர் எறிப்பக் –
சுத்தமான -மாசற்ற -சிவந்த பொன் மயமான திருக் கோயிலினது காந்தி வீசுதலால் -கண் முகிழ்ந்து –
அதிசய உக்தி -சிறப்பையும் உயர்வையும் அருளிய படி
வெய்ய வன்றேர் மா -சூரியனின் தேரில் கட்டிய குதிரைகள்
கண் முகிழ்ந்து -கண்கள் மூடப் பெற்று
விடறும் -அதனால் கால் இடறக் காரணமாகின்ற
வேங்கடமே
யையிருநூறான முகப் பாம்பணையார் -ஆயிரம் தலைகளை யுடைய ஆதி சேஷனை திருப் பள்ளி மெத்தையாக யுடையவரும்
ஆனிரைப்பி னூதி வரும் -பசுக் கூட்டத்துக்கு பின்னே ஊதி வருகின்ற
கானமுகப் பாம்பணையார் காப்பு –கானம் உகப்பு ஆம் -சங்கீதம் ஆனந்தகரமாம் படி
பணையார் -வேய்ங்குழலை யுடையவருமான திருமால்
காப்பு -உயிர்களை ரஷித்து அருளும் திவ்ய தேசம் –

——————————————————————–

மாண்டு பிறக்கும் துயர் போய் வைகுந்தம் புக்கவரும்
மீண்டு தொழக் காதலிக்கும் வேங்கடமே -பாண்டு மகன்
ஏறு இரதப் பாகனார் ஏத்தும் அடியார் நாவில்
ஊறு இரதப் பாகு அனார் ஊர் –10-

அமுதம் பொதியின் சுவைக் கரும்பினை கனியை -திருமங்கை ஆழ்வார் –

——————————————————————

கோலியொரு நான்கு குலமறையும் நால் திசையும்
வேலி என நின்று ஏத்தும் வேங்கடமே –வாலி தனை
நண்பாவை யாது அரித்தான் ஞான முதலாழ்வார்கள்
வெண்பாவை ஆதரித்தான் வெற்பு –11-

கோலியொரு நான்கு குலமறையும் நால் திசையும்
ஒப்பற்ற சிறப்புள்ள நான்கு வேதங்களும் நான்கு பக்கங்களிலும் -நான்கு திசைகளிலும் உள்ளாறும் என்றுமாம் –
வேலி எனக் கோலி நின்று -வேலி போலே சூழ்ந்து
வேத பிரதிபாத்யமாய் பிரசித்தி பெற்ற திருவேங்கடம் என்றவாறு
ஏத்தும் வேங்கடமே —
வாலி தனை நண்பாவை யாது அரித்தான் -நண்பு ஆ வையாது -பகையாகக் கொண்டு கொன்றிட்டவனும்
வாலில் வலிமை யுடைய இந்த்ரன் மகன் வாலி
ஞான முதலாழ்வார்கள் வெண்பாவை ஆதரித்தான் வெற்பு –

——————————————————————-

தெள்ளியது ஓர் வீடு அருளும் சீர் கேட்டு பொன் மலையும்
வெள்ளி மலையும் பணியும் வேங்கடமே –புள்ளின்
கொடி வா கனத்தான் குளிர்ந்த இருண்ட காரின்
வடிவு ஆகன் நத்தான் வரை –12-

தெள்ளியது ஓர் வீடு அருளும் சீர் கேட்டு -கேள்விப்பட்டு
பொன் மலையும் வெள்ளி மலையும் பணியும் வேங்கடமே —
பொன்மலையான மகா மேருவும் வெள்ளி மலையான கைலாசமும் வணங்கப் பெற்ற திரு வேங்கடமே –
புள்ளின் கொடி வா கனத்தான் -பஷி ராஜன் வடிவம் எழுதிய கொடியையும் கருட வாகனத்தையும் யுடையவனான
குளிர்ந்த இருண்ட காரின் வடிவு ஆகன் -காண்பவர் சிரமங்களை பரிஹரிக்கும் ஆஹ்லாத திருமேனி கொண்டவன்
நத்தான் வரை -பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கத்தை யுடையனுமான திருமாலினது திருமலை –

——————————————————————-

எப்பூ தலமும் இறைஞ்சி திசை நோக்கி
மெய்ப்பூ சனை புரியும் வேங்கடமே கொப்பூழ்
இலகும் முண்டகம் தர தான் ஈன்று அளிக்கும் ஈர் ஏழ்
உலகும் உண்ட கந்தரத்தான் ஊர் –13-

எப்பூ தலமும் -நிலவுலகத்தில் எவ்விடத்தில் உள்ளவரும்
இறைஞ்சி திசை நோக்கி -திக்கு நோக்கி வணங்கி
மெய்ப்பூ சனை புரியும்-உண்மையான பூசையைச் செய்யப் பெற்ற
வேங்கடமே
கொப்பூழ் இலகும் முண்டகம் -தாமரை மலர்
தர தான் ஈன்று அளிக்கும் ஈர் ஏழ் உலகும் உண்ட கந்தரத்தான் ஊர் –
அளிக்க தான் பெற்று பாதுகாக்கும் பதினான்கு உலகங்களையும் அமுது செய்த கண்டத்தை யுடைய திருமாலினது திவ்ய தேசம் –
கந்தரம் -தலையைத் தரிப்பதால் கண்டம் -காரணப் பெயர்

——————————————————————–

நோவினையும் நோயினையும் நோய் செய் வினையினையும்
வீவினையும் தீர்த்து அருளும் வேங்கடமே –மூ வினை செய்
மூவடிவு ஆய்ப் பச்சென்றான் முன்னாள் அகலிகைக்குச்
சேவடி வாய்ப் பச்சென்றான் சேர்பு –14-

நோவினையும் -பிறத்தலால் ஆகின்ற துன்பத்தையும்
நோயினையும் -வாழும் நாள் வருத்தம் செய்யும் வியாதிகளையும் –
நோய் செய் வினையினையும் -கருமங்களையும்
வீவினையும் -மரண வேதனையையும்
நோவு -மநோ வியாதி -நோய் -தேக வியாதி -பசி தாகம் பயம் கோபம் முதுமை துன்பம் -என்றுமாம்
தீர்த்து அருளும் வேங்கடமே –தன்னை அடைந்தவர்களுக்கு போக்கி அருளுகின்ற வேங்கடமே
மூ வினை செய் -படைத்தல் காத்தல் அழித்தல்-ஆகிய மூன்று தொழில்களையும் செய்து அருள்கின்ற
மூவடிவு ஆய்ப் -மூன்று திரி மூர்த்திகளின்-அயன் அரி அரன் – வடிவாய்
பச்சென்றான்-அவற்றில் தானான பச்சை
முன்னாள் அகலிகைக்குச் சேவடி வாய்ப்பச் சென்றான் சேர்பு –
திருவடி சித்தி அளிக்கும் படி நடந்து அருளின திருமால் சேரும் திவ்ய தேசம் –

—————————————————————–

பித்து மலடு ஊமை முடம் பேய் குருடு கூன் செவிடு
மெய்த்துயர் நோய் தீர்த்து அருளும் வேங்கடமே -பத்தருக்கு
வந்த துக்கம் காப்பான் மலர் உந்தியின் உலகம்
தந்து அதுக்கு அங்காப்பான் தலம் –15-

பித்து மலடு ஊமை முடம் பேய் குருடு கூன் செவிடு மெய்த்துயர் நோய் தீர்த்து அருளும் வேங்கடமே -பத்தருக்கு
வந்த துக்கம் காப்பான்
மலர் உந்தியின் உலகம் தந்து -சிருஷ்டித்து
அதுக்கு அங்காப்பான் -உண்ணும் பொருட்டு வாய் திறப்பவனான திருமால் யுடைய
தலம் –திவ்ய தேசம்
சிருஷ்டித்து ரஷித்து சம்ஹரிப்பவனும் அவனே என்றபடி –

—————————————————————-

வாடப் பசித்த வரி உழுவை வால் ஆட்டி
மேடத்தைப் பார்த்து உறுக்கும் வேங்கடமே -கூடத்துக்
கம்பவள மா வென்றான் காசினிக்கும் வெண்ணெய்க்கும்
செம்பவளம் ஆ வென்றான் சேர்வு –16-

வாடப் பசித்த வரி உழுவை
வாட்டம் யுண்டாம் படி பசி அடைந்துள்ள உடல் கோடுகளை யுடைய புலிகள்
மேடத்தைப் பார்த்து -வானத்தில் செல்லும் ஆட்டின் வடிவமான மேஷ ராசியைப் பார்த்து –
வால் ஆட்டி உறுக்கும் -அத்தை கொன்று தின்னக் கருதி வாலை ஆட்டி கோபித்து அதனோடு மாறுபடுவதற்கு இடமான
வேங்கடமே –
தொடர்பு உயர்வு நவிற்சி அணி
மேடத்தை பார்த்து இருக்கும் -புலியானது அடுத்து வரும் ருஷப ராசி -தனது வலிமைக்கு தக்க -எதிர்பார்த்து இருக்கும் என்றுமாம்
மேஷம் -சித்ர மாசத்துக்கு உரியது
கூடத்துக் -யானைச் சாலையில் –
கம்பவள மா-கம்பம் -தறியில் கட்டி வைக்கத் தக்க -வளம் மா -மதக் கொழுமையை யுடைய -குவலயாபீடம் யென்ற யானையை
வென்றான்
காசினிக்கும் வெண்ணெய்க்கும் -யுகாந்த காலத்தில் உலகத்தை உண்ணுவதற்கும் வெண்ணெய் க்கும்
செம்பவளம் ஆ வென்றான் சேர்வு —

——————————————————–

தாவி வரும் வானரங்கள் தண் குவட்டில் கற்கடகம்
மேவி வரக் கண்டு ஓடும் வேங்கடமே -காவிரி சூழ்
பொன் திரு அரங்கத்தான் போதன் சிவன் என்னும்
மற்று இருவர் அங்கத்தான் வாழ்வு –17-

தாவி வரும் வானரங்கள் தண் குவட்டில்-குளிர்ச்சியான சிகரத்தில்
கற்கடகம் மேவி வரக் கண்டு ஓடும் -நண்டு வடிவமான கற்கட ராசி பொருந்தி வர பார்த்து அஞ்சி ஓடும் -ஆடி மாதத்துக்கு உரிய ராசி
வேங்கடமே –
காவிரி சூழ் பொன் திரு அரங்கத்தான்
போதன் சிவன் என்னும் மற்று இருவர் அங்கத்தான் வாழ்வு —
தாமரை மலரில் தோன்றிய போதன் -பிரமன் -திருநாபியிலும் சிவனை வலப்புறத்திலும் கொண்ட திருமால் -கேசவன் –
வாழ்வு -திரு உள்ளம் உகந்து நித்ய வாஸம் செய்யும் திவ்ய தேசம்

—————————————————————–

ஒண் சிந்துரத்தை வெறுத்து ஊடும் பிடி வேழம்
விண் சிங்கம் கண்டு அணைக்கும் வேங்கடமே –எண் சிந்தைக்கு
ஓரா இருந்தான் ஒரு நாள் விதூரனுக்கு
வாரா விருந்தான் வரை –18-

ஒண் சிந்துரத்தை வெறுத்து ஊடும் பிடி வேழம்
ஒளி யுள்ளதாகிய ஆண் யானையை வெறுத்து பிணங்கும் பெண் யானை -பிரணய கலகம் –
விண் சிங்கம் கண்டு -வானத்தில் வரும் சிம்ம ராசியைக் கண்டு
அணைக்கும் -அச்சம் கொண்டு ஆண் யானையை தானே வலியச் சென்று தழுவுதற்கு இடமான
வேங்கடமே
–எண் சிந்தைக்கு ஓரா இருந்தான் -மனதுக்கு அறியப்படாமல் இருந்தவனும்
ஒரு நாள் விதூரனுக்கு வாரா விருந்தான் வரை -ஒருநாள் விதுரனுக்கு வருவதற்கு அரிய விருந்தினனாய் வந்த திருமால் உடைய திருமலையாம்-

——————————————————————–

மாது மடக் கன்னி கழை வந்து அணுகி கம்பத்தின்
மீது நடிப பாள் ஒக்கும் வேங்கடமே -ஊது குழல்
பாலன் பால் ஆக்குவித்தான் பஞ்சவர்க்கா நூற்றுவரைக்
காலின் பால் ஆக்குவித்தான் காப்பு –19-

மாது மடக் கன்னி -அழகையும் மடைமையையும் யுடைய இளம் பெண் வடிவமான கன்யா ராசி -புரட்டாசி மாதத்துக்கு உரிய ராசி
கழை வந்து அணுகி -மூங்கிலுக்கு நேராக வந்து பொருந்தும் போது
கம்பத்தின் மீது நடிப பாள் ஒக்கும்
நாட்டிய கழைக் கோலின் மேலே ஏறிக் கூத்தாடும் மங்கையை ஒத்தற்கு இடமான
வேங்கடமே –
ஊது குழல் பாலன் பால் -வேய்ங்குழல் இனிய இசையின் பால் அன்பால்
ஆக்குவித்தான் -ஆ குவித்தான்
பஞ்சவர்க்கா நூற்றுவரைக் காலின் பால் ஆக்குவித்தான் காப்பு –உயிர்களைப் பாதுகாக்கும் திவ்ய தேசம் –

———————————————————————

மன்னு குடிக் குறவர் வான் ஊர் துலாத்திடையே
மின்னு மணி நிறுக்கும் வேங்கடமே –என் உள்
அரவிந்தப் போது அகத்தான் அன்பால் அழைத்த
கரவிந்தப் போதகத்தான் காப்பு –20-

மன்னு குடிக் குறவர் -குறிஞ்சி நிலத்தில் நிலை பெற்ற குடிகளாகிய குறவர்கள்
வான் ஊர் துலாத்திடையே -வானத்தில் செல்லும் நிறை கோல் வடிவமான துலா ராசியின் இடத்திலே -ஐப்பசி மாசத்துக்கு உரியது
மின்னு மணி நிறுக்கும் வேங்கடமே
–என் உள் அரவிந்தப் போது அகத்தான் -மலர் மிசை ஏகினான் -என்றபடி
அன்பால் அழைத்த -ஆதி மூலமே என்று பக்தி கொண்டு அழைத்த –
கரவிந்தப் போதகத்தான் காப்பு –கரம் விந்தம் போதகத்தான் -துதிக்கை யுடைய விந்திய மலையைப் போன்ற யானை யை யுடையவனும் ஆகிய திருமால்
காப்பு

—————————————————————

கொல்லைக் குறவர் குளிர் மதி மானைக் ககன
வில்லைக் குனித்து எய்யும் வேங்கடமே –கல்லை
அரிவை வடிவு ஆக்கினான் அன்னம் ஆய் வேத
விரிவை வடிவாக்கினான் வெற்பு –21-

கொல்லைக் குறவர் குளிர் மதி மானைக்
தினைக் கொல்லையைக் காக்கின்ற குறவர்கள் ‘குளிர்ந்த சந்தரன் இடத்து உள்ள -களங்கத் தோற்றமாகிய மான் வடிவை
தினைப் பயிரை மேய வருகின்ற மான் என்று எண்ணி –
ககனம் வில்லைக் குனித்து எய்யும்-
வனத்தில் காணப் படும் வில் வடிவமான தனுர் ராசியை கை வில்லாகக் கொண்டு வளை
தனுர் ராசி மார்கழி மாசத்துக்கு உரியது
வேங்கடமே –
-கல்லை அரிவை வடிவு ஆக்கினான்- அன்னம் ஆய் வேத விரிவை வடிவாக்கினான் வெற்பு

———————————————————-

தேன் ஏறி தேன் வைக்கும் திண் கழை மேல் விண் மகர
மீன் ஏறி வேள் கொடி ஆம் வேங்கடமே -வான் ஏறித்
தீ முக நாகத்து இருப்பார் சேவடிக்கு ஆள் ஆனவனைக்
காமுகனாகத் திருப்பார் காப்பு –22-

தேன் ஏறி தேன் வைக்கும் திண் கழை மேல்
வண்டுகள் உயரப் பறந்து சென்று சேர்ந்து தேனை சேர்த்து வைக்கப் பெற்ற -வலிய மூங்கிலின் மேல்
விண் மகர மீன் ஏறி-வானத்தில் செல்லும் சுறா மீன் வடிவமான மகர ராசி வந்து தங்குகையில் -தை மாசத்துக்கு உரிய மகர ராசி –
வேள் கொடி ஆம் -மன்மதனது துவசம் போல் தோன்றப் பெற்ற
மகரத் த்வஜன் -மன்மதன் -சுறவக் கொடியோன்
வேங்கடமே –
வான் ஏறித் தீ முக நாகத்து இருப்பார் சேவடிக்கு ஆள் ஆனவனைக் -அடிமைப் பட்டவர்களை
வான் ஏறி நாகத்து இருப்பார் -பரமபதம் வந்தேறி திருவேங்கடம் நித்ய வாஸம் என்றவாறு
இருந்தால் சிங்காசனமாம் -நாகத்து இருப்பார்
காமுகனாகத் திருப்பார் காப்பு -காமம் உடையவனாகச் செல்ல விடாதவரான திருமால் காப்பு -தம் வழிப்படுத்தி ஆளுபவர் என்றவாறு

————————————————————–

ஒண் கொம்பின் தேன் இறால் ஊர் பிறைக் கோட்டால் உடைந்து
விண் கும்ப வாய் நிறைக்கும் வேங்கடமே –வண் கும்ப
கம்பத்து ஆனைக்கு அடுத்தார் கார் அரக்கர் போர் மாளக்
கம்பத்தானைக் கடுத்தார் காப்பு –23-

ஒண் கொம்பின் தேன் இறால் ஊர் பிறைக் கோட்டால் உடைந்து
ஓங்கி விளங்கும் மரக் கொம்புகளில் கட்டப்பட்டுள்ள தேன் கூடு வானத்தில் செல்லும் பிறைச் சந்த்ரனது வளைந்த வடிவமாகிய
கொம்பு படுதலால் உடைந்து -வளைந்த வடிவமான பிறையினது நுனி படுதலால் என்றுமாம்
விண் கும்ப வாய் நிறைக்கும் -வானத்தில் குடம் வடிவமான கும்ப ராசி யின் வாய் அளவும் தேனைச் சொரிந்து -மாசி மாச ராசி -கும்பம்
வேங்கடமே —
வண் கும்ப -இயல்பில் கொழுமை யுள்ள மத்தகத்தை யுடைய -இரண்டு குடம் கவிழ்த்தால் போலே யானைத் தலை உறுப்புக்கு பெயர் –
கம்பத்து ஆனைக்கு -முதலை வெவ்வியதனால் உண்டான நடுக்கத்தை யுடையதுமாகிய கஜேந்திர ஆழ்வானுக்கு
அடுத்தார் -அருகில் ஓடி வந்து அபயம் அளித்தவரும்
கார் அரக்கர் போர் மாளக் -கரு நிறம் உடைய இராக்கதர்கள் போரில் இறக்க
கம்பத்தானைக் கடுத்தார் காப்பு -கம் பத்தான் -பத்து தலைகளை யுடைய இராவணனை கோபித்து அழித்த திருமால்
காப்பு –

———————————————————–

கூனல் இள வெண் குருகு கோனேரியில் விசும்பு ஊர்
மீன நிழலைக் கொத்தும் வேங்கடமே –கானகத்துப்
பொன் ஆர் உழை எய்தார் பூங்கழலே தஞ்சம் என
உண்ணா ருளை எய்தார் ஊர் –24-

கூனல் இள வெண் குருகு-வளைவை யுடைய இளமையான வெண்ணிறம் உள்ள குருகு என்னும் நீர்ப்பறவை
-வளைவுள்ள அழகிய என்றுமாம் -குருகு -கொக்கு நாரை –
கோனேரியில் -ஸ்வாமி புஷ்கரணியில்
விசும்பு ஊர் மீன நிழலைக் கொத்தும் -வானத்தில் செல்லும் மீன் வடிவமான மீன ராசியான நிழல் தெரிய அதனை கொத்தும் -பங்குனி மாச மீன ரசி –
அந்நீரில் செல்லும் உண்மையான மீன் என்று கருதி உண்ணும் பொருட்டு மூக்கினால் குத்துதற்கு இடமான -மயக்க வணி
வேங்கடமே —
கானகத்துப் -தண்ட காரண்யத்திலே
பொன் ஆர் உழை-பொன்னிறமாய் பொருந்தின மாரீசன் ஆகிய மாய மானை
எய்தார்
பூங்கழலே தஞ்சம் என உண்ணா ருளை எய்தார் ஊர் –உனது திருவடித் தாமரைகளே சரணம் என்று
நினையாதவர் இடத்தில் சென்று சேராத திருமால் திருப்பதி ஆகும் –

———————————————————-

மண் மூலம் தா என்று மந்தி கடுவற்கு உரைப்ப
விண் மூலம் கேட்டு எங்கும் வேங்கடமே -ஒண் மூல
வேதத்து இருக்கு உழையார் வெய்யோன் இரண்டு அனைய
சீதத் திருக் குழையார் சேர்வு –25-

மண் மூலம் தா என்று மந்தி கடுவற்கு உரைப்ப
மண்ணில் இருக்கும் கிழங்கை -உண்ண பெயர்ந்து எடுத்துக் கொடு -என்னும் பொருளில் மூலம் தா என்று-
மந்தி – பெண் குரங்கு -கடுவனை -ஆண் குரங்கை நோக்கிச் சொல்ல
வண் மூலம் -பாட பேதம் -செழிப்பான மூலம் என்றபடி –
விண் மூலம்-வானத்தில் உள்ள மூல நஷத்ரம்
கேட்டு எங்கும் -தன்னைப் பிடித்துக் கொடுக்க சொல்வதாகிய அச் சொல்லைக் கேட்டு அஞ்சி கலங்கும் இடமான
வேங்கடமே –
ஒண் மூல -சிறந்த பிரமாணம் -முதல் நூலானா
வேதத்து இருக்கு உழையார் -வேதத்தில் இருக்கு மந்த்ரங்களை தமக்கு இடமாகக் கொண்டு அவற்றில் பொருள் வடிவமாகப் பொருந்து இருப்பவரும்
வெய்யோன் இரண்டு அனைய -சூர்ய மண்டலம் இரண்டு உளவாயின் அவற்றைப் போன்ற -இல் பொருள் உவமை –
சீதத் திருக் குழையார் சேர்வு –குளிர்ந்த ஒளி யுள்ள சிறந்த திவ்ய குண்டலங்களை அணிந்தவருமான திருமால் சேர்ந்து தங்கும் திவ்ய தேசம்

——————————————————————-

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: