ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூநவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
——————————————————————————————-
திருமந்த்ரத்தில்
மத்யம பதத்தாலும் நாராயண பதத்தாலும் ஆர்த்தமாக பிரதிபாதிக்கப் பட்ட அர்த்த த்வயத்தையும்
சரம ஸ்லோஹத்தில் அர்த்த த்வயம் சாப்தமாக பிரதிபாதிக்கிறது
சங்க்ரஹமான பத த்வயத்துக்கும் பூர்வாபர நியமம் உண்டாய் இருக்கிறாப் போலே
விவரண பதமான இதுவும் பூர்வாபர பாவேன நியதமாய் இருக்கும் –
திருமந்தரம் அநேக அர்த்தங்களை பிரதிபாதியா நிற்கச் செய்தே ப்ராப்ய பிரதிபாதன பரமாய் இருக்கிறாப் போலே
இதுவும் அநேக அர்த்தங்களை பிரதிபாதித்ததே யாகிலும் ப்ராபக பிரதிபாதன பரமாய் இருக்கும் –
தேஹாத்ம அபிமானியாய் – ஆத்ம பரமாத்ம விவேக ஸூந்யனாய் – இருக்கிற அர்ஜுனனைக் குறித்து –
அமலங்களாக விழிக்கும்-என்கிறபடியே
சகல பாப ஷபண நிபுணங்களாய் இருக்கிற திவ்ய கடாஷங்களாலும்
அம்ருத நிஷ்யந்தியான வசன விசேஷங்களாலும்
முமுஷுத்வ விரோதிகளான சகல பிரதிபந்தகங்களையும் நசிப்பித்து
மோஷ ருசியை உண்டாக்கி
தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி -இத்யாதியாலே
ஐஸ்வர்யம் அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதமாய் இருக்கும் என்னும் இடத்தை அருளிச் செய்து
ஜரா மரண மோஷாய -இத்யாதியாலே
கைவல்யம் க்லேச சாத்யத்வாதி தோஷ துஷ்டம் என்னும் இடத்தை அருளிச் செய்து
மாம் உபேத்ய து கௌந்தேய -இத்யாதியாலே
ஸ்வ பிராப்தி லஷணமான மோஷமே நிரதிசய புருஷார்த்தம் என்னும் இடத்தை அருளிச் செய்து
தஸ்மாத சக்தஸ் சத்தம் -இத்யாதியாலே
கர்ம ஜ்ஞான பக்திகளை தத் பிராப்தி சாதனமாக அருளிச் செய்ததைக் கேட்டு அர்ஜுனன்
சர்பாச்யகதமான ஜந்துவைப் போலே இருக்கிற தன்னுடைய துர்க்கதியையும்
மம மாயா துரத்யயா -என்கிறபடியே
தன்னால் கழித்துக் கொள்ள ஒண்ணாதபடி விரோத்யம்சம் அதி பிரபலமாய் இருக்கிற படியையும்
விஹித உபாய விசேஷம் துரனுஷ்டானமாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து
பிராப்ய லாப நிமித்தமாக சோகா விஷ்டனாக அனந்தரத்திலே
துஷ்கரங்களான சாதன விசேஷங்களை ச வாசனமாக த்யஜித்து
நிரபாய சாதன பூதனான என்னையே நிரபேஷ சாதனமாக ஸ்வீகரி –
ப்ராப்தி பிரதி பந்தகங்களை நிச்சேஷமாக நானே போக்குகிறேன் –
ஆன பின்பு பிராப்ய லாப நிமித்தமாக
சோகத்தைப் பொகட்டு நிர்ப்பரனாய் இருக்க என்று அர்ஜுனனுக்கு சோகத்தை நிவர்த்திப்பிக்கிறான் –
சகல சாஸ்திரங்களிலும் இப்பிரபந்தம் தன்னில் இஸ் ஸ்லோஹத்துக்குக் கீழ் அடங்கலும்
மோஷ சாதனங்களாக விஹிதங்களாய் –
வைதிக புருஷர்களாலே அத்யாதரேண அனுஷ்டிதங்களாய்ப் போருகிற சாதன விசேஷங்களைப் பரக்க விதியா நிற்க
இஸ் ஸ்லோஹத்திலே தத் த்யாக பூர்வகமாக உபாயாந்தர விதானம் பண்ணுகை விருத்தம் என்று நினைத்து
விரோத பரிஹாரார்த்தமாகப் பல பொருள்களைச் சொன்னார்கள் –
பரம ஆப்தனான ஸ்ரீ கிருஷ்ணன் அருளிச் செய்த வார்த்தை யாகையாலும் –
க்ராவாண ப்லாவந்தே -என்றும் –
அக்னி நா சிஞ்சேத் -என்றும் இத்யாதியான விதிக்க
லௌகிக வாக்கியம் போலே அனந்விதமாய் இருக்கை யன்றிக்கே அன்விதமாய்க் கொண்டு
அர்த்த பிரத்யாயகமாய் இருக்கையாலும்
பிரமிதி ஜனகம் அன்று என்றும் அநேக பரமான விருத்தமாய் இருக்கையாலே
தத் பிரதிபாதிதமான அர்த்தம் அப்ராமாணிகமாய்-பரீஷகாநநுஷ்டேயமாய் இருக்கும் என்றும் சொல்ல ஒண்ணாது –
ஆகையால் கர்ம பல பரித்யாக பூர்வாங்க பிரபத்தி விதான பரம் இஸ் ஸ்லோஹம் என்று சிலர் சொன்னார்கள்
கர்மங்களினுடைய லஷணா புநருக்தி அசந்நிதாநங்களாலே அந்தப் பஷம் துஷ்டம் –
உபாசனம் த்ரைவர்ணிக விஷயமாக விஹிதம் ஆகிறது –
பிரபதனம் தத் வ்யதிரிக்த விஷயமாக விதிக்கப் படுகிறது –
இப்படி வ்யவஸ்தித விஷயம் ஆகையாலே உபாயத்வய விதானம் அவிருத்தம் என்று சிலர் சொன்னார்கள் –
அந்தப் பஷம்
பிரபத்தியினுடைய சர்வாதிகாரத்வ ஸ்ருதியாலும்
த்ரைவர்ணி கோபதேச்யதாநுபபத்தி யாலும் அனுஷ்டான விரோதத்தாலும் அனுபபன்னம் –
ஜ்ஞான யோக சாதன கர்ம த்யாக பூர்வகாங்க பிரபதன விதானம் பண்ணுகிறது என்கிற பஷம்
தர்ம சப்தத்தினுடைய அசங்குசித வ்ருத்தித்வத்தாலும்
ஜ்ஞான யோக வாசக சப்தா சந்நிதா நத்தாலும் துஷ்டம் –
தர்ம சப்த்தத்தினுடைய அப்ரஸ்துத பிராயச்சித்த விஷயத்வ சங்குசித விஷயத்வ பிரசங்கத்தாலும்-
அர்ஜுனன் விநஷ்ட கர்ம யோக பிரதிபந்தகன் ஆகையாலும் பிராயாச்சித்த விதான பஷமும் அனுபபன்னம் –
சோக நிவ்ருத்த்ய நுபபத்தியாலே பிரசம்சா பரம் என்கிற பஷமும் அனுபபன்னம்
பூர்ணாஹுதி திருஷ்டாந்த முகத்தாலே சரணாகத்ய நுஷ்டான மாத்ரத்திலே தாத்பர்யம் –
த்யாகத்தில் தாத்பர்யம் இல்லை என்கிற பஷமும்
சாதநாந்தர பரித்யாக லஷணாங்க வைதுர்யத்தில் பிரபத்த்யுபாயம் அனநுவர்த்திதம் ஆகையாலே அசங்கதம்
கர்ம யோகாதி பிரச்யுதி சம்பாவனையிலே தத் ப்ராயச்சித்ததயா பிரபத்தி விதானம் பண்ணுகிறது என்கிற பஷம்
நே ஹாபி க்ரம நா ஸோ அஸ்தி -என்று பிராயச்சித்த நைரபேஷ்யம் பிரதிபாதிதமான
பூர்வ வசனத்தோடு விரோதிக்கையாலே அசங்கதம் –
மோஷ சாதன கர்ம விரோதி ஸ்வர்க்காதி காம்ய கர்ம பரி த்யாக பிரதிபாதகம் என்கிற பஷமும்
மோஷ சாதன கர்ம விதான தசையிலே காம்ய கர்மம் பிரதிஷித்தம் ஆகையாலும்
மாமேகம் சரணம் வ்ரஜ என்கிற வாக்யம் கர்ம பிரதிபாதகம் அல்லாமையாலும் துஷ்டம் –
1-பூர்வோக்த சாதனங்களுக்கு சோக ஜனகத்வம் இல்லாமையாலும்
2-சோகம் தான் ஸ்ருதம் அல்லாமையாலும்
3-பக்தி த்யாகத்தில் தத் பிரதிபாதாக சாஸ்தராந்தரத்துக்கும் இந்த பிரபந்தம் தன்னில் பூர்வ வசனங்களுக்கும்
வையர்த்யம் பிரசங்கிக்கையாலும்
4-பிரபத்த் யுபாயத்துக்கு ஸ்வ தந்திர சாதனத்வ ஸ்ரவணம் இல்லாமையாலும்
5-ஸூ கர மார்க்கம் உண்டானால் வத்சல தரமான சாஸ்திரம் துஷ்கர மார்க்க உபதேசம் பண்ணக் கூடாமையாலும்
6-நிரங்கத்வேன சாதனத்வம் அகடிதம் ஆகையாலும்
விஹித உபாய பரித்யாக பூர்வகமாக உபாயாந்தர விதானம் பண்ணுகிறது என்கிற பஷம்
அனுபபன்னம் என்று சிலர் சொன்னார்கள் –
1- இப்பிரபந்தம் தன்னில் பிரதமத்திலே ஸ்வ ரஷணே ஸ்வ அந்வயம் ஸ்வரூப விரோதித்வேன பிரகாசிக்கும் படி
ஆத்ம ஸ்வரூபத்தை அத்யந்த பரதந்த்ரமாக உபதேசிக்கக் கேட்டபடியாலும் –
சதத கதியான வாயுவினுடைய நிரோதம் போலே விஷயாந்தர சஞ்சாரியான மனஸ்ஸினுடைய நிக்ரஹம் துஷ்கரமாய் இருக்கையாலும்
அப்படிப்பட்ட மனஸ்ஸூ தன்னை பிரத்யக் பிரவணம் ஆக்கப் பார்த்தாலும் அதுக்கு யோக்யதை இல்லாதபடி இந்த்ரியங்கள்
தாம் தாம் வழியிலே இழுத்துக் கொண்டு நலியா நின்றது என்று இந்த்ரிய பிராபல்ய ஜனித பீதி அனுவர்த்திக்கையாலும்
சகல ஜகத்தினுடையவும் சத்தாஸ்தித்யாதிகள் மததிநங்களாய் நடக்கிறது என்றும்
உபாசன சாதன ஜ்ஞானாதிகளுக்கும் நானே ப்ரவர்த்தகன் என்றும் அருளிச் செய்யக் கேட்கையாலும்
சர்வ அவஸ்தைகளுக்கும் பிரபத்தி ஒழியப் புகல் இல்லை என்னும் இடம் நிழல் எழும்படி
இந்த்ரிய நியமனாதி சாதனத்வேன பலவிடங்களிலும் பிரபத்தி ஸ்ருதி யாகையாலும்
விஹித சாதனங்கள் பஹூதர ஜன்ம சாத்யத்வ சாபேஷத்வ சாபாயத்வாத்யநேக தோஷ அவஹங்களாய் இருக்கை யாலும்
விரோத்யம்சம் ஸ்வ நிவர்த்யம் அல்லாதபடி அவன் கையிலே கிடக்கிறபடியை அனுசந்தித்தால் ஜ்ஞானவானாய் இருக்கிற இவனுக்கு
சோக வேஷம் பிறக்கை சம்பாவிதம் ஆகையாலே பூர்வோக்த சாதனங்களுக்கு சோக ஜநகம் இல்லை என்கிற பஷம் துஷ்டம் –
2-இவ்விடத்திலே சோகம் ஸ்ருதம் அன்றேயாகிலும் மாஸூச என்கிற சோக நிஷேத வசனத்தாலே சோகம் அனுமேயமாகக் கடவது –
3-தஸ் சாஸ்திரங்கள் தன்னிலே சாதாநாந்தர பரித்யாக பூர்வகமாக சித்த சாதன ஸ்வீகாரம் விஹிதம் ஆகையாலும்
இதுதான் ஏகாதிகார விஷயம் அன்றிக்கே பின்ன அதிகாரி விஷயம் ஆகையாலும்
ப்ரஹ்மசர்ய கார்ஹஸ்த்ய வானப்ரஸ்தாத் யாஸ்ரமங்களிலே பூர்வ பூர்வாஸ்ரம விஹித கர்ம அனுஷ்டான பரித்யாக
பூர்கமாக உத்தர உத்தர ஆஸ்ரம விஹித தர்மம் அனுஷ்டேயம் ஆகிறாப் போலே –
இவ்விடத்திலும் பூர்வ உபாய பரி த்யாக பூர்வகமாக உத்தர உபாயம் அனுஷ்டிதமாகை அவிருத்தம் ஆகையாலும்
சாஸ்த்ராந்தர விரோதமும் பூர்வ வசன விரோதமும் பரிஹ்ருதம்
4-அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே -என்றும் —
அஹமஸ்ம்யபராதா நாமாலய -என்றும் –
தாஸ்மான் நியாச மேஷாம் தபஸாம் -என்றும்
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
சரணம் த்வாம் பிரபன்னாயே-இத்யாதிகளிலே
ஸ்வ தந்திர உபாயத்வேன ஸ்ருதம் ஆகையாலே ஸ்வ தந்திர சாதனத்வ அனுபபத்தியை த்வாரமாகக் கொண்டு
த்யாக உபாய விதனா பரத்வம் அர்த்தம் அன்று என்கிற பஷம் துஷ்டம் –
5- இது தன்னாலே ஏக பல விஷயமாக சீகர துஷ்கர மார்க்க த்வய விதா நாநுபபத்தி ரூபமான சோத்யமும் பரிஹ்ருதம்
இங்கனே கொள்ளாத போது ஏக பல விஷயமான சமாவர்த்தநாதி கர்ம விதாயக சாஸ்த்ரங்களுக்கும் விரோதம் பிரசங்கிக்கும் –
கிருஷ்ணா நுஸ்மாரணாதிகளும் விருத்தம்
6- சர்வதர்மான் பரித்யஜ்ய என்று சாங்க பிரபதனம் விஹிதம் ஆகையாலே சரம பஷம் துஷ்டம் –
ஸ்வரூப அனுரூபமான இந்த உபாயத்தையே பிரதமத்திலே உபதேசியாதே
உபாயாந்தரங்களை உபதேசித்து
அவற்றுக்கு அனந்தரமாக இத்தை உபதேசிப்பான் என்-என்னில்
த்ரைகுண்ய விஷயமான சாஸ்திரம் பிரதமத்திலே ரஜஸ் தம பிரசுரராய் துர்ஜ்ஞான துர்வ்ருத்த சம்ருத்தரான சேதனருடைய
அநீதியைக் கண்டு நெகிழ விடாதபடி
அத்யந்த வத்சலம் ஆகையாலே சேதனருடைய சத்வாதி குண அனுகுணமாக சத்ரு நிரசன
வர்ஷ தான லாப புத்திர பஸ்வன்னா ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும் –
தத் சாதனமான அபிசார காரீர்யாதி சாதன விசேஷங்களையும் உபதேசித்துப் பரம புருஷார்த்த லஷண
மோஷ சாதன ஸ்ரவணத்துக்கு யோக்யனான அவஸ்தையிலே அத்தை உபதேசிக்க வேணும் என்று நினைத்து
பிரதமத்திலே நாஸ்திகனாய் பர ஹிம்ச ஏக போகனாய் அத்யந்த ந்ருசம்சனாய் வர்த்திக்கிற சமயத்திலே
அபிசார கர்மத்தை உபதேசித்து அவற்றை சபலமாகக் கண்டு
சாஸ்திர விஸ்வாசம் பிறந்த சமயத்திலே தேஹாத்மா அபிமானியாய் இருக்கிறவனுக்கு
தேஹாதுத் தீர்ணமான ஸ்வரூபத்தை அறிவிக்கைக்காக
ஸ்வர்க்காத்யாமுஷ்மிக சாத்திய சாதன பூத ஜ்யோதிஷ்டோமாதிகளை விதித்து –
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய பிரதிபத்தி கழன்ற அளவிலே பகவத் பாரதந்த்ர்யா ஜ்ஞானம் பிறக்கும்படி
பகவத் கைங்கர்ய லஷணமான மோஷத்தை உபதேசித்து
தத் சாதன பக்தியையும் விதித்து –
பாரதந்த்ர்யா யாதாம்ய ஜ்ஞானார்த்தமாக அனந்தரத்திலே பிரபத்யுபதேசம் பண்ணுமா போலே
இவனும் பந்து வத பீதியாலே யுத்த நிவ்ருத்தனான அர்ஜுனனைக் குறித்து பிரதமத்திலே
ஸ்வ அனுபவ லஷணமான பரம புருஷார்த்தத்தையும்
தத் சாதனமான பிரபத்தியையும் உபதேசிக்கச் சேராமையாலே-
க்ரமத்திலே தேஹாதி விலஷணமான வஸ்து விஷய ஜ்ஞானத்தையும்
தத் அந்தர்யாமியான தன்னுடைய ஸ்வரூபாதி விஷய ஜ்ஞானத்தையும்
ஸ்வ ப்ராப்தி லஷணமான மோஷ விஷய ஜ்ஞானத்தையும் ஜனிப்பித்து
தத் சாதனமான பக்த் யுபாயத்தை விதித்து
பூர்வோக்த சாதனங்களில் ருசி விஷயமான அந்ய தமத்தை அனுஷ்டித்து நம்மைப் பெறப் பார் என்று சொன்னால்
அனந்தரத்திலே இவனுக்குப் பிறந்த அவஸ்தைக்கு அனுரூபமாக
சித்தோபாயத்தை உபதேசிக்க வேண்டுகையாலே பிரதமத்திலே உபதேசித்து இலன் –
இவ்விடம் தன்னில் த்யாஜ்யமாகச் சொல்லுகிறது சர்வ தர்ம ஸ்வரூபத்தை என்ன ஒண்ணாது –
அசக்யம் ஆகையாலும் உத்தர காலத்தில் அனுஷ்டானம் அனுபபன்னம் ஆகையாலும் பல த்யாகம் ஆகமாட்டாது –
பௌநருக்த்ய பிரசங்கத்தாலும் -பிரபத்யுபதேசம் கடியாமையாலும்
ஸ்வ தந்திர சாதனத்வம் சித்தியாமையாலும் அவை விருத்தம் ஆகையாலும்
உபாயத்வ புத்தி த்யாகம் என்ன ஒண்ணாது
ப்ரபத்திக்கு தர்மாங்கத்வமும் அகிஞ்சனாதிகாரத்வ ஹானியும் உத்தர கால அனுஷ்டேய கர்மங்களில்
கைங்கர்ய ரூபத்வ ஹானியும் பிரசங்கிக்கையாலே-
ஆகையாலே தர்ம த்யாக உபதேசம் அனுப பன்னம் அன்றோ வென்னில் -அது சொல்ல ஒண்ணாது
இவ் விடத்தில் த்யாஜ்ய தயா உபதிஷ்டை யாகிறது சாதனத்வ பிரதிபத்தி யாகையாலே என்றும்
ஸ்வர்க்கார்த்தமான ஜ்யோதிஷ்டோமாதி களைப் போலே புத்தி விசேஷ விசிஷ்டத்தாலே கர்மாந்தரத்வம் உபபன்னம் ஆகையாலே
ஸ்வரூபத்தை த்யாஜ்யமாகச் சொல்லவுமாம் என்றும் சொல்லுவர்கள் –
நிஷ்க்ருஷ்ட சத்த்வ நிஷ்டனாய் -பரமாத்மனி ரக்தனாய் -அபரமாத்மனி வைராக்கியம் உடையனாய் -பிரமாண பரதந்த்ரனாய் –
பகவத் வைபவம் ஸ்ருதமானால் அது உபபன்னம் என்னும்படியான விஸ்ரம்ப பாஹூள்யம் உடையனாய்
ஆஸ்திக அக்ரேசரனாய் இருப்பான் ஒருவன் உண்டாகில்
அவனே இந்த ஸ்லோஹார்த்த ஸ்ரவண அனுஷ்டானத்துக்கு அதிகாரி
சர்வாதிகாரமாய் இருக்கச் செய்தே அதிக்ருதாதிகாரமாய் இறே இருப்பது -இங்குச் சொல்லுகிற பரித்யாகம்
ஸ்வீகாரங்கதயா உத்தேச்யம் என்று பிரதிபத்தி பண்ணின போது உஜ்ஜீவன ஹேதுவாம் –
ஸ்வரூபேண உபாதேயம் என்று பிரதிபத்தி பண்ணினால் அநர்த்த ஹேதுவாம் –
ஆகையாலே அதிகாரி துர்லபத்தாலும் அர்த்த கௌரவத்தாலும் இத்தை வெளியிடாதே மறைத்துக் கொண்டு போந்தார்கள்
எம்பெருமானார்க்கு முன்புள்ளார் –
சம்சாரிகள் துர்க்கதியைப் பொறுக்க மாட்டாதபடி கிருபை கரை புரண்டிருக்கையாலே அர்த்தத்தின் சீர்மை பாராதே
அனர்த்தத்தையே பார்த்து வெளியிட்டு அருளினார் எம்பெருமானார் –
தத்தவ நிர்ணயம் பண்ணின உய்யக் கொண்டார் விஷயமாக எம்பெருமானார் அருளிச் செய்து அருளின வார்த்தையும்
நஞ்சீயர் வீராணத்து அருளாளப் பெருமாளுக்கு அருளிச் செய்து அருளின வார்த்தையும் தொடக்கமான
பூர்வாசார்ய வசனங்கள் இவ்விடத்தே அனுசந்தேயங்கள் –
உபாய விதி பிரகரணமாய் கீழே அநேக சாதனங்களை விதித்துக் கொண்டு போந்ததுக்கு அனந்தரமாக
சித்தோபாய பரிக்ரத்தை விதித்து அதுக்கு மேலே
ஒரு உபாய விசேஷத்தை விதியாதே இவ்வளவிலே பர்யவசித்து விடுகையாலே இத்தைச் சரம ச்லோஹம் என்கிறது –
இப்படி யாகத போது அதி பிரசங்கம் உண்டாம் இறே –
சாங்கமான சகல தர்மங்களையும் சவாசனமாக த்யஜித்து
சௌலப்யாதி கல்யாண குண விசிஷ்டனாய் இருக்கிற என்னையே
இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் -நிரபேஷ சாதனமாக ஸ்வீகரி –
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண விசிஷ்டனாய் இருக்கிற நான்
என்னையே நிரபேஷ சாதனமாக பிரதிபத்தி பண்ணின உன்னை –
அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்கள் ஆகிற விரோதிகளினின்றும் முக்தனாக்குகிறேன்
நீ உன் கார்யம் சுட்டி சோகிக்க வேண்டா -என்று உபாயாந்தர தர்சனத்தாலே சோகாவிஷ்டனான
அர்ஜுனனுடைய சோகத்தை நிவர்த்திப்பிக்கிறான் –
இதில் பூர்வார்த்தத்தாலே பிரபத்தாவினுடைய க்ருத்யம் சொல்லுகிறது
உத்தரார்த்தத்தாலே பிரபத்தவ்யனுடைய க்ருத்யம் சொல்லுகிறது –
பிரபத்தாவுக்கு க்ருத்யம் -உபாய ஸ்வீகாரம் –
பிரபத்தவ்யனுக்கு க்ருத்யம் விரோதி நிவர்த்தனம் –
ஈஸ்வரனுக்குக் கைங்கர்யத்தில் அந்வயம் இல்லாதாப் போலே
இவனுக்கு விரோதி நிவ்ருத்தியில் அந்வயம் இல்லை
இவனுக்கு சேஷித்வத்தில் அந்வயம் இல்லாதாப் போலே
அவனுக்கும் உபாய ஸ்வீகாரத்தில் அந்வயம் இல்லை –
——————————————————————————-
சர்வ தர்ம சப்தார்த்தம் –
1- சர்வ தர்மான் –
தர்மம் ஆகிறது சாஸ்திர விஹிதங்களான இஷ்ட சாதனங்கள் –
1-1-இவ்விடத்தில் இஷ்ட சாதனமாகச் சொல்லுகிற தர்மம் ஆகிறது ஸ்வர்க்காதி சாதனமான ஜ்யோதிஷ்டோமாதிகள் ஆதல் –
1-2-உபாசன அங்கமாய் பாபாபநோதன சாதனமான தர்மமாதல் –
1-3-அங்கியான உபாசனம் தானாதல் –
1-4-அவ்யவஹித சாதனமான சித்த தர்மமாதல் இறே -இவை இத்தனையும் அனுபபந்தங்கள்-
1-1-ஜ்யோதிஷ்டோமாதிகளை த்யாஜ்யமாகச் சொல்ல ஒண்ணாது –
அவை அப்ரஸ்துதங்கள் ஆகையாலும் அதிகாரிக்குப் பலாந்தர அபிலாஷை இல்லாமையாலும் –
பாபாபநோதன சாதனமான தர்மத்தை த்யாஜ்யமாகச் சொல்லுகிறது என்ன ஒண்ணாது –
1-2-/1-3-வஷ்யமான தர்மத்துக்கு அங்கத்வம் பிரசங்கிக்கை யாகையாலும்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி என்கிறது சேராமையாலும்
அங்கியான உபாசனத்தை த்யாஜ்யமாகச் சொல்லுகிறது என்ன ஒண்ணாது –
1-4-சர்வ சப்தத்துக்கு நைரர்த்த்யம் பிரசங்கிக்கையாகையாலும்
அது சார்த்த மாச்சுதேயாகிலும் அவைதிகத்வ பிரசங்கமும் அதிப்ரசங்கமும் துஷ்பரிஹரரம் ஆகையாலும்
பரஸ்பர விரோதத்தாலே அந்வயம் இல்லாமையாலே சதுர்த்த பஷமும் உபபன்னம் அன்று –
ஆன பின்பு இங்குச் சொல்லுகிற தர்ம த்யாகம் சங்கதமாக மாட்டாதே என்னில்
பிரதம த்விதீய சதுர்த்த விகல்பங்கள் அப்யுகதங்கள் அல்லாமையால் நிரஸ்தங்கள்-
இங்கு த்யாஜ்யமாகச் சொல்லுகிறது
சகல சாஸ்திரங்களிலும் இப்பிரபந்தம் தன்னில் இஸ் ஸ்லோஹத்துக்கு கீழ் அடங்கலும்
விஸ்த்ருதமாக பிரதிபாதிக்கப் பட்ட மோஷ சாதனமான உபாசன தர்மத்தை –
சர்வ சப்த்தார்த்தம் யோக்யதா பாதகங்கள் ஆகையாலே நைரர்த்த்யம் இல்லை –
நிமித்தாந்தரத்தாலே அனுஷ்டானம் உண்டாகையாலும்
விஹித தயா அவர்ஜ நீயங்கள் ஆகையாலும் அவைதிகத்வாதி தோஷம் இல்லை
ஆகையால் இங்குச் சொல்லுகிற தர்ம த்யாகம் உபபன்னம் என்றும் சமாதானம் பண்ணினார்கள் –
பஹூ வசனத்தாலே அவதார ரஹஸ்ய ஜ்ஞானம் -புருஷோத்தம வித்யை-தேசவாசம் தொடக்கமானவற்றைச் சொல்லுகிறது –
சத்வித்யாதி பேதத்தாலே வந்த பஹூத்வத்தைச் சொல்லுகிறது என்னவுமாம்
நெறி எல்லாம் எடுத்துரைத்த என்கிறபடியே அருளிச் செய்த உபாயங்கள் அனந்தகளாய் இறே இருப்பது
ஆக
தர்ம சப்தத்தாலும் பஹூ வசனத்தாலும்
சாங்கமான தர்மங்களையும் அதினுடைய பஹூத்வத்தையும் சொல்லுகிறது
சர்வ சப்தத்தால் –
உபாசன அதிகாரிகள் எல்லாருக்கும் பொதுவாய் முன்பு சொன்ன சாதன அனுஷ்டானத்துக்கு யோக்யதா சம்பாத கங்களாய்-
ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தங்களாய் இருக்கிற தர்ம விசேஷங்களைச் சொல்லுகிறது –
யோக்யதா சம்பாதக தர்ம த்யாகம்
சாதன த்யாகத்தில் அந்தர் பூதமாய் இருக்கச் செய்தேயும் சர்வ சப்த பிரயோகம் பண்ணுகிறது
ப்ரபதநாத்மக தர்மத்தினுடைய சர்வாதிகாரத்வ ஜ்ஞாபனார்த்தமாக –
அங்கனே கொள்ளாத போது ஸ்திரீ ஸூத்ராதிகளுக்கு அதிகாரம் இன்றிக்கே ஒழியும் இறே
இதர உபாயங்களுக்கு யோக்யதை அத்யந்த அபேஷிதமாய் இருக்கிறாப் போலே
இவ்வுபாயத்துக்குத் தாத்ருசா யோக்யதா நிவ்ருத்தி அத்யந்த அபேஷிதமாய் இறே இருப்பது
ஈத்ருசா யோக்யதா நிவ்ருத்தி இல்லாமையாலே சரண்யா சரணாகதி நிஷ்பலை யாயிற்று
ஆக
சர்வ தர்மான் -என்கிற பதத்தாலே
மோஷ சாதனமாக விஹிதங்களாய் சாங்கங்களாய் இருக்கிற சகல தர்மங்களையும் சொல்லிற்று –
———————————————————–
2-பரி த்யஜ்ய பதார்த்தம் –
பரித்யஜ்ய -என்கிற பதத்தாலே அவற்றினுடைய த்யாகத்தைச் சொல்லுகிறது –
இங்குச் சொல்லுகிற த்யாகம் ஆகிறது
மோஷ சாதனத்வ பிரதிபத்தியைப் பொகடுகை என்று பிரவேசத்திலே சொன்னோம் இறே
ஆகையால் அனுஷ்டான விரோதம் இல்லை –
மேல் பரிக்ரஹிக்கப் படுகிற சித்த தர்மம் -சாத்திய தர்ம நிரபேஷம் ஆகையாலும் இவற்றை சஹியாமையாலும்
இவை தான் துரநுஷ்டானங்களாய் இருக்கையாலும் ப்ராப்ய விசத்ருசங்களாய் இருக்கையாலும்
பகவத் ஏக சாதனதைக வேஷமான ஸ்வ ஸ்வரூபத்துக்கு அனநுரூபங்களாய் இருக்கையாலும் விளம்ப சஹங்கள் ஆகையாலும்
கீழ்ச் சொன்ன தர்ம விசேஷங்கள் த்யாஜ்யங்களாய் இருக்கும் –
இது ப்ராப்தமுமாய் சித்தமுமாய் சர்வ சக்தி யுக்தமுமாய் இருக்கையாலே சாத்ய தர்ம நிரபேஷமாய் இருக்கும் –
சணல் கயிறு கண்ட பிரஹ்மாஸ்திரம் போலே வேறே ஒன்றைக் காணில் நெகிழ நிற்குமதாகையாலே
உபாய ஸ்வரூபத்தைப் பார்த்தால் சாத்ய தர்மங்கள் சேராதபடியாய் இருக்கும் –
சகல பிரவ்ருத்திகளிலும் சஹாயாந்தர நிரபேஷமுமாய் சஹாயாந்தர அசஹமுமாய் இறே வஸ்து ஸ்வரூபம் இருப்பது –
ஆகையாலே இறே இவ்வுபாய பரிக்ரஹம் பண்ணும் அதிகாரி ஆகிஞ்சன்யத்தைப் புரஸ்கரித்துக் கொண்டு இழிகிறது –
ஸ்வ ரஷணத்தில் ஸ்வ அந்வய ராஹித்யம் ஆகிறது –
பகவத் ரஷகத்வ பிரதிபந்தக ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிறக்கை இறே
அபாய பஹூளங்களாய் இருக்கையாலும் -சிரகால சாத்யங்களாய் இருக்கையாலும் துர நுஷ்டங்களாய் இருக்கும் –
ப்ராப்ய ஸ்வரூபத்தைப் பார்த்தால் அநந்ய சாத்யமாய் இருக்கையாலே அதுக்கு விசத்ருசமாய் இருக்கும்
சரைஸ்து சங்குலாம் -இத்யாதிப் படியே சக்தி யுண்டே யாகிலும் இலங்கைக்கு உள்ளே பிராட்டி இருந்தால் போலே
ஸ்வ பிரவ்ருத்தியில் பராங்முகனாய்-ஈஸ்வரன் பக்கலிலே சமர்ப்பித்த சர்வ பரனாய் இருக்கை இறே அதிகாரிக்கு ஸ்வரூபம்
ஆகையால் அதிகாரி ஸ்வரூபத்தைப் பார்த்தால் அனுரூபம் இன்றிக்கே இருக்கும் –
காலேஷ்வபி ச சர்வேஷூ இத்யாதிப் படியே
பிரதி ஷணம் அஞ்ச வேண்டும்படி யாய் இறே உபாயாந்தர ஸ்வரூபத்தை ஆராய்ந்தால் இருப்பது –
பிராந்தி தசையிலும் சாதநாந்தர சத்பாவ பிரதிபத்தி ரஹீதனாய் இருக்குமவனுக்கு இறே
இச்சாதன விசேஷம் கார்யகரம் ஆவது
அத பாதக பீதஸ்த்வம்-என்று தர்ம தேவதை தர்ம புத்ரனைக் குறித்து பாதகத்வேன உபதேசித்தது இறே
ஸ்வ பிரவ்ருத்தியாலே ஈஸ்வரனைக் கிட்ட வேணும் என்று நினைக்கிறது
பகவத் விஷயத்துக்கு என்றும் புறம்பாகைக்கு உறுப்பாம் இத்தனை இறே
அவனுடைய பிரவ்ருத்தியாலே அவனைக் கிட்ட நினைத்து இருந்தால் இறே கரை மரம் சேரலாவது-
ஸ்ருஷட் யவதாராதி முகத்தாலே எதிர் சூழல் புக்கு இவனைச் சேர்த்துக் கொள்ளுகைக்கு யத்னம் பண்ணித்
திரிகிறவனுடைய அனுக்ரஹ விசேஷத்தாலே அவனைப் பெறுகை இறே உசிதம்
என்னான் செய்கேன் -இத்யாதிப் படியே ததேக சாதனனாய் இருக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம்
பகவத் அத்யந்த பாரதந்த்ர்யம் ஆகிற உத்தேச்யத்துக்கு விரோதியாய் இருக்கையாலே
அதர்ம சப்த வாச்யங்களாகச் சொல்ல ப்ராப்தங்களாய் இருக்க
உபாயாந்தரங்களை தர்ம சப்த பிரயோகம் பண்ணுகிறது
அர்ஜுன அபிப்ப்ராயத்தாலே
துஷ் கரங்களாய் ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ -என்னும்படி இருக்குமவை யாகையாலே விளம்ப சஹங்களாய் இருக்கும் –
இவை தான் ஒராகாரத்தாலே த்யாஜ்யங்களாய் -ஒராகாரத்தாலே உபாதேயங்களாய் இருக்கும் –
கர்ம அனுஷ்டானம் தேக யாத்ரையில் அந்தர் பூதமாய் இருக்கும் –
ஸ்வ ஸ்வரூப ஜ்ஞானத்திலே அன்விதமாய் இருக்கும் ஜ்ஞான யோகம்
போஜனத்துக்கு ஷூத்து போலே கைங்கர்யத்துக்கு பூர்வ ஷணத்தில் அனுவர்த்திக்கக் கடவதான
ருசி விசேஷத்திலே அன்வயித்து இருக்கும் பக்தி –
இருவர் பக்கலிலும் அனுஷ்டானம் சமானமாய் இருக்கச் செய்தே ஹேது வைஷம்யம் உண்டாய் இருக்கும்
சாதனத்வ புத்தி அனுவர்த்திக்கும் உபாசகனுக்கு -சாத்யத்வ புத்தி அனுவர்த்திக்கும் பிரபன்னனுக்கு –
விஹித கர்ம அனுஷ்டானத்துக்கு முக்ய அதிகாரி சித்த சாதன நிஷ்டன் —
சாத்யாந்தர நிஷ்டன் ஸ்வர்க்காதி சாதனமாக நினைத்து இருக்கும்
சாதநாந்தர நிஷ்டன் மோஷ சாதனமாக நினைத்து இருக்கும் –
சித்த சாதன நிஷ்டன் ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து இருக்கும் –
நிவ்ருத்தி ரூப தர்மங்கள் வ்யாபாராத்மகங்களுமாய் -ஸ்வ ரஷண ஹேதுக்களுமாய் இருக்கையாலே
நிஷேத விதி ஸ்வீகாரத்தில் ஸ்வ ரஷணார்த்தமான வியாபாரம் பரித்யாகம் அல்லாமையாலே
பிரபத்தியில் அந்வயம் பலியாமையாலும்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி என்கிற வார்த்தையோடு சேராமையாலும்
நிஷேத விதி த்யாகம் அவசியம் கர்த்தவ்யம் அன்றோ என்ன ஒண்ணாது
நியம விசேஷாதி விசிஷ்ட வ்யதிரேகேண சாமான்யேன நிஷித்த நிவ்ருத்தி மாத்ரத்துக்கு தர்ம சப்தார்த்தம் இல்லாமையாலும்
விசேஷண அம்சத்தை ஒழிய விசேஷ்ய அம்சத்துக்கு த்யாக விஷய ராஹித்யத்தாலே நிஷேத விதி ஸ்வீகாரத்தில்
ஸ்வ ரஷண ஹேதுவான ஸ்வ யத்னம் இல்லாமையாலும்
பிரபத்த்ய அந்வயம் உண்டாவதும் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி என்கிற இதுவும் சேராது ஒழிவதும்
நிஷேத விதி த்யாகத்தில் ஆகையாலும்
நிஷித்தம் சர்வாதிகாரிகளுக்கும் அகர்த்தவ்யமாய் இருக்கையாலே இவ்வதிகாரிகளுக்கும் அனநுஷ்டேயமாய் இருக்கையாலும்
அநந்ய சாத்யமாய் அநந்ய சகாயமான வஸ்துவைப் பற்றி இருக்கிறவனுக்கு இது கூடாமையாலும்
விசேஷ நிஷேத விதி பலத்தாலும் நிஷித்த நிவ்ருத்தி மாத்ரம் சர்வ சப்தார்த்தம் ஆனாலும்
வித்யந்தர விஹிதங்களான ப்ரவ்ருத்தி ரூப தர்மங்களே இங்கு சர்வ சப்தார்த்தங்களாக விவஷிதங்கள் ஆகையாலும்
நிஷேத விதித்யாகம் வித்யந்தர தர்ம த்யாகத்தோபாதி கர்த்தவ்யம் அன்று –
ஆகையாலே நிஷேத விதி த்யாஜ்யம் அன்று –
பரி த்யாஜ்யமாகச் சொல்லுகிறது உபாயதா போதத்தை -ஆகையாலே த்யாஜ்யம் என்னவுமாம்
பரி -என்கிற உபசர்க்கம் வாசனா ருசி சஹிதமான த்யாகத்தைச் சொல்லுகிறது –
அவை கிடக்குமாகில் மேல் பரிக்ரஹிக்கப் படுகிற சாதனத்தில் அந்வயம் இன்றிக்கே ஒழியும்
மானிடர்வக்கு என்று பேச்சுப்படில் வாழ கில்லேன் -என்னுமா போலே இருக்க வேணும் –
ஸ்வ ஸ்வரூபத்தில் போலே உபாயத்தில் ஸ்வ ஸ்பர்சமும் விரோதியாய் இருக்கும்
என்னான் செய்கேன் யாரே களை கண் -என்றார் இறே
அநாதி காலம் அனுபாயங்களில் உபாய புத்தி பண்ணிப் போந்தோம் என்று லஜ்ஜா புரஸ் சரமான
த்யாகத்தைச் சொல்லுகிறது -என்று ஆழ்வான் பணிக்கும்
சாத்யதா பிரதிபத்தி பண்ண வேண்டுமதிலே இறே சாதனத்வ புத்தி பண்ணிப் போந்தது –
ஸூக்லமான சங்கத்திலே பீதத்வ புத்தி பண்ணுமா போலே ஸ்வீகாரத்துக்கு ஏக பதம் போலே த்யாகத்துக்கு இந்த உபசர்க்கம்
அது உபாய பௌஷ்கல்ய பிரதிபாதகமாய் இருக்கும் –
இது த்யாக பௌஷ்கல்ய பிரதிபாதகமாய் இருக்கும்-
இப் பிரதிபத்தியினுடைய அத்யந்தாபாவம் இறே குணாயவாவது-
ப்ரத்வம் சாபாவம் உண்டானால் அதுவும் தோஷாயவாம் படி இறே இருப்பது
த்யாகம் தன்னிலும் அந்வயம் இல்லாத படியானாலாயிற்று ஸ்வரூப பூர்த்தி உள்ளது
அங்கமான உபாயாந்தர அந்வயம் அத்யந்தாபாவத்திலும் உண்டாகையாலே அங்கத்தில் அந்வயம் இல்லாமையால்
அங்கியில் அந்வயம் இல்லை என்று சொல்லப் பெறாது என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
இவ்விடத்தில் அப்படி சொல்ல வேண்டுகிறது பிரசக்தம் ஆகையாலே இறே
இவ்வாகாரம் இல்லாமையாலே உபாயாந்தர பரி த்யாக விதுரமாக பிரபதன மாத்ரமே த்வயத்தில் பிரதிபாதிதம் ஆயிற்று
த்யாகம் ஸ்வீகார அங்கம் ஆகையாலே த்யாக சாபேஷைதையாலே
ஈஸ்வரனுடைய நைரபேஷ்யம் குலையும் என்கிற சோத்யமும் பரிஹ்ருதம்
அங்கி ஸ்வரூபம் தானும் நைரபேஷ்யத்துக்குக் குறை இன்றியிலே இருக்க ததங்கம் நைரபேஷ்யத்துக்கு
பஞ்ஜகமாய்ப் புகுகிறது அன்று இறே
நிரபேஷனான ஈஸ்வரனுக்கு த்யாக ஸ்வீகாரதிகளில் வருகிற சாபேஷை தோஷாயவாகாது
ஆக
இந்த ல்யப்பாலே உபாயாந்தர பரி த்யாகம் சித்தோபாய ஸ்வீகாரத்துக்கு அங்கம் என்னும் இடத்தைச் சொல்லுகிறது
பிரபத்தி யாவது ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுகை -என்று அனந்தாழ்வான் வார்த்தை –
இந்த ல்யப்பு
புக்த்வா சாந்த்ராயணம் சரேத் என்கிறது போல் அன்றிக்கே
ஸ்நாத்வா புஞ்ஜீத-என்கிறது போலேயாய்
த்யாகத்தில் அந்வயம் இல்லாத போது ஸ்வீகாரத்தில் அனந்வயத்தை ஸூசிப்பிக்கிறது –
ஆக
இரண்டு பதமும் த்யாஜ்ய பௌஷ்கல்யத்தையும் த்யாக பௌஷ்கல்யத்தையும் சொல்லுகிறது
———————————————————-
3-மாம் -பதார்த்தம்
மேல் பதம் ஸ்வீகார்ய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
மாம் –
த்யாஜ்யங்களான தர்மத்தில் காட்டில் ஸ்வீகார்யமான தர்மத்துக்கு உண்டான வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
அவை –
ஆபாச தர்மங்களுமாய்-
அநித்யங்களுமாய்-
அநேகங்களுமாய் –
சாத்யங்களுமாய் –
துர் லபங்களுமாய் –
ஸ்வரூப விரோதிகளுமாய் –
சா பேஷங்களுமாய் –
அசேதனங்களுமாய் –
சாபாயங்களுமாய் –
துர்லப பிரமாணங்களுமாய் –
அசக்தங்களுமாய் –
அதிக்ருதாதிகாரங்களுமாய் –
விளம்ப பல பிரதங்களுமாய் இருக்கும் –
இது-
சாஷாத் தர்மமுமாய் –
நித்யமுமாய் –
ஏகமுமாய் –
சித்த்காமுமாய் –
ஸூ லபமுமாய் –
ஸ்வரூப அனுரூபமுமாய் –
நிரபேஷமுமாய்-
சேதனமுமாய்-
நிரபாயமுமாய் –
பிரபல பிரமாணமுமாய் –
சக்தமுமாய் –
சர்வாதிகாரமுமாய் –
அவிளம்ப பல பிரதமுமாய் இருக்கும் –
வாக்ய த்வயத்தில் பிரதம பதத்தில் சொன்ன அர்த்த விசேஷங்கள் எல்லாம் இவ்விடத்தே அனுசந்தேயம் அதாகிறது
ஸ்ரீ யபதித்வமும்- வாத்சல்யாதி குண சதுஷ்ட்யமும் -திவ்ய மங்கள விக்ரஹமும் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -என்று ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதீர்ணனானவன் ஸ்ரீ யபதி யாகையாலே
பூர்வ அபராத ஷாமணம் பண்ணி சேர்ப்பிக்கக் கடவ ஸ்ரீ பெரிய பிரட்டியாரோட்டைச் சேர்த்தி அனுசந்தேயம் –
அதர்ம புத்தியாலே ஸ்வ தர்மத்தில் நின்றும் நிவ்ருத்தனாய்
அஸ்தான சிநேக காருண்ய தர்மாதர்மதி யாகுலனான அர்ஜுனனுக்கு
புபுத்சிதங்களான ஸ்வ ஸ்வரூபாதிகளைத் தன் பேறாக அருளிச் செய்கையாலே வாத்சல்யம் அனுசந்தேயம் –
மத்த பர தரம் நாந்யத்-இத்யாதிகளாலே தன்னுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தைப் பல இடங்களிலும்
அருளிச் செய்த அளவன்றிக்கே
அர்ஜுனன் தான் பல பிரகாரங்களாலும் அபரோஷிக்கும் படி பண்ணுகையாலே ஸ்வாமித்வம் அனுசந்தேயம் –
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே சகேதி என்று இவன் தானே சொல்லும்படி
தேவ தேவனான தன்னுடைய உத்கர்ஷத்தையும்
இவனுடைய நிகர்ஷத்தையும் பார்த்து நெகிழ விடாதே
இவனோடு ஏக ரசனாய்க் கலந்து பரிமாறுகையாலும்
ஆச்யே க்ருஹீத்வா துரகச்ய பந்தான் -இத்யாதியில் சொல்லுகிறபடியே இவனுக்கு இழி தொழில் செய்கையாலும்
சௌசீல்யம் அனுசந்தேயம் –
அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சஷூஸ் விஷயமாம் படி பண்ணுகையாலே
சௌலப்யம் அனுசந்தேயம் –
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -என்றும் –
ரசோ வை ச ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதி -என்றும்
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய போக்யங்களான ஸ்வரூப குணங்களைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்க ஒண்ணாத படியான
நக நியமித்த கண்டூன் பாண்டவஸ் யந்த நாஸ்வா நனுதி நம்பி ஷிஞ்சன் நஞ்ச லிஸ்தை பயோபி
அவது விதாதா காத்ரஸ் தோத்ர சம்ச்யூத மௌலிர்தச நவித் ருதரஸ் மிர் தேவகீ புண்யராசி-என்றும்
ஆச்யே க்ருஹீத்வா துரகச்ய பந்தான் -என்றும்
ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி -என்றும்
போதார் தாமரையாள் -இத்யாதி போக்யதா பிரகர்ஷத்தை யுடைத்தாய்
அவற்றில் காட்டில் திருவுள்ளத்துக்கு மிகவும் அபிமதமாய் இச்சாக்ருஹீதமாய் அணைந்த நாய்ச்சிமாரையும்
அகலகில்லேன் என்னும் படி பண்ணக் கடவதாய்-
அப்ராக்ருதமாய்
அகால கால்யமாய் யுவா குமார -என்றும்
அரும்பினை அலரை -என்றும் சொல்லும் திரு மேனியையும்
சென்னி நீண் முடி என்றும்
ஸ்புரத்கிரீட -என்றும்
மெய்யமர் பல்கலன் என்றும் இத்யாதியில் சொல்லுகிறபடியே
க்ரீடாதி நூபுராந்தமாக அசஙக்யேயமாய் இருக்கிற திவ்ய ஆபரண வர்க்கத்தையும்
ப்ரியோ அஸி மே என்று தான் அருளிச் செய்த படியே தனக்கு பிரிய விஷயமான அர்ஜுனனுக்கு
யதாவத் பிரகாசிப்பித்த படியே மாம் என்று நிர்த்தேசிக்கிறான்
ஆகையாலே திவ்ய மங்கள விக்ரஹம் அனுசந்தேயம் –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்றும் –
சரண்யம் சரணஞ்ச த்வாமாஹூ என்றும்
அம்ருதம் சாதனம் சாத்தியம் என்றும்
யோகோ யோகவிதாம் நேதா என்றும்
வைப்பாம் மருந்தாம் அடியரை வாழ்வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் அவன் எப்பால்
யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் எங்கள் ஆயர் கொழுந்தே என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சாதன தர்மமான சித்த சாதன ஸ்வரூபம் சொல்லுகிறது –
——————————————————————-
4-ஏக பதார்த்தம் –
ஏகம்-இவ்வுபாய விசேஷத்தைச் சொல்லுகிற பலவிடத்திலும்
அவதாரண பிரயோகம் உண்டாகையாலே உகாரம் போலே
இந்த ஏக சப்தமும் ஸ்தான பிரமாணத்தாலே அவதாரண வாசகமாய் இருக்கிறது –
மாமேவயே ப்ரபத்யந்தே -என்றும் –
தமேவ சரணம் கச்ச -என்றும் இத்யாதியான
பிரபத்தி பிரகரணத்திலே தானே சாவதாரணமாக அருளிச் செய்தான் இறே-
சரணே சரண் -என்றும் –
நின் பாதமே சரணாக என்றும் இத்யாதியாலே ஆழ்வார் அருளிச் செய்தார் –
இது தனக்கு உபாயாந்தரங்கள் வ்யாவர்த்யமாக மாட்டாது -பௌ நருக்த்யம் பிரசங்கிக்கையாலே-
அநேகம் ஔஷதம் கூடி ஒன்றாக வேண்டுமா போலே அநேகம் கூடி ஒரு சாதனமாக வேண்டும்
உபாயாந்தர வ்யாவ்ருத்தி ஏக வசனத்தாலே சரிதார்த்தம் –
தேவதாந்திர வ்யாவ்ருத்த பரத்வம் சொல்ல ஒண்ணாது -தூரதோ நிரஸ்தமாகையாலே
மத்யம புருஷனில் ப்ரதிபாத்யமான சித்த சாதன பிரதிபத்தியில்
சாதனத்வ புத்தி வ்யாவ்ருத்தி யாக மாட்டாது –சாதனத்துக்கு யோக்யதை இல்லாமையாலே –
உண்டாகில் உபாயாந்தர துல்யத்வம் பிரசங்கிக்கும் –
யோக்யதா வைதுர்யத்தில் இத பூர்வமேவ கார்யகரத்வம் பிரசங்கியாதோ என்ன ஒண்ணாது –
அகார்யாகரத்வம் அதிகார்யபாவ பிரயுக்தம் ஆகையாலே –
அதிகாரி சாபேஷத்வம் தோஷாயவன்று-
ஆகையாலே ஏக பதம் நிரர்த்தமாக விருந்ததே என்னில் –
உபாயாந்தரமும் தேவதாந்த்ரமும் அநேகத்வமும் வ்யாவ்ர்த்யம் அன்றே யாகிலும்
சித்த சாதன ஸ்வீகாரத்தில் சாதனத்வ புத்தி வ்யாவர்த்யமாகலாம் –
அந்வய வ்யதிரேகத்தாலே சாதனம் என்று நினைக்கலாய் இருக்கையாலே –
ஆனால் சாதனத்வம் பிரசங்கியாதோ என்ன ஒண்ணாது –
சாதனத்வம் உண்டாம் போது உபாயாந்தர வ்யாவ்ருத்தி குலைகையாலே –
ஆனாலும் பிரபத்தி அபேஷிதை யாகையாலே சித்த சாதனத்வ பங்கம் உண்டாகாதோ என்னில் உண்டாகாது –
உபாயம் நைரபேஷ்யம் ஆகையாலே –
தத் ஏக உபாயத்வ பிரதிபத்தியாலே அதிகாரியினுடைய உபாசக வ்யாவ்ருத்திக்கும் குறையில்லை
அதிகாரி யபேஷையாலே இதுக்கு முன்பு கார்யகரம் இன்றிக்கே போருகிறது –
பிரார்த்தனை என் செய்ய என்னில் பல தசையில் போலே இங்கு பிரார்த்தனை யுண்டு –
பல தசையில் புருஷார்த்த சித்த்யர்த்தமாக ப்ரார்த்தாம் அபேஷிதமாகக் கடவது –
பாரதந்த்ர்யம் நித்யம் ஆகிறவோ பாதி பரதந்த்ரமான வஸ்து தான் சித் வஸ்து வாகையாலே சைதன்ய கார்யமான
அந்த பிரார்த்தனா விசேஷமும் நித்ய சித்தமாய் இருக்கும் –
இது த்யாஜ்ய கோடியிலும் அந்வயியாது உபாய கோடியிலும் அந்வயியாது-
அதுவும் அவனது இன்னருளே என்கையாலே
பிரதிபத்தி விசேஷத்துக்கு உபாய கார்யத்வம் உண்டு இத்தனை யல்லது உபாயத்வம் இல்லை –
ஈஸ்வரன் உபாயம் ஆகையாலே இத்தை உபாயம் என்ன ஒண்ணாது -உபாய அங்கம் என்ன ஒண்ணாது –
உபாய பூதமான ஈஸ்வர ஸ்வரூபம் சித்தமாய் பரம சேதனமாய் சர்வ சக்தி யுக்தமாய் இருக்கையாலே
அங்கத்வம் கொள்ளில் ஈஸ்வரனுக்கு உத்பாத்யத்வா நித்யத்வா நேக ரூபத்வங்கள் ஆதல் –
அசைதன்யா சாமர்த்தியசா பேஷதை களாதல் உண்டாம் –
அப்போது உபாயாந்தர வ்யாவ்ருத்தி ரூபமான சித்தத்வம் ஏக ரூபத்வம் பரம சேதனத்வம் சர்வ சக்தி யோகம்
நைரபேஷ்யம் தொடக்கமான தர்மங்களும் குலையும் –
இவ்வுபாய விசேஷம் ஸ்வ வ்யதிரிக்த
மாய் இருப்பதொன்றை சஹியாமையாலே இறே-
ஆநுகூல்ய சங்கல்பாதிகளுக்கு
உபாய அங்கத்வம் இன்றிக்கே அவகாத ஸ்வேதம் போலே சம்பாவித ஸ்வபாவத்வம் உண்டாகிறது –
பிரபத்த வ்யகதங்களான ரஷகத்வாதிகள் போலே பிரபன்னகதமான இப்பிரபத்தி விசேஷம்
ஸ்வரூப அனுபபந்தியாய்க் கிடக்கும் இத்தனை
த்யாகத்துக்கு உபாய அந்தர்பாவம் உண்டாம் போதாய்த்து இது உபாயத்தில் அந்தர்பூதமாவது –
இவ்வதிகாரியினுடைய ஜ்ஞான கார்யமாய் ராக பிராப்தமாய் ஸ்வரூப நிஷ்டமாய்
ப்ராப்ய கோடி கடிதமாய் இருக்கும் அத்தனை –
பரித்யக்தங்களான தர்மங்கள் போலே
ஸ்வீகார்யமான இந்த தர்மமும் சாதனமாகில் சாங்கமாக விருக்க வேண்டாவோ என்னில்
சாதன பூதங்களுக்கு எல்லாம் சாங்கத்வ நியமம் இல்லை –
பக்தி யோகத்திலே அங்க சாபேஷை கண்டோமே என்னில் அது சாதன பிரயுக்தம் அன்று சாத்யத்வ பிரயுக்தம் –
இந்த தர்ம விசேஷம் சனாதன தர்மம் ஆகையாலே ஜ்ஞான கர்ம சாத்யமான த்யாஜ்ய தர்மம் போலே
த்யாக ஸ்வீகார சாத்யமாய் இராது –
ஆனால் ஈஸ்வர சாபேஷமாய் இருக்கக் குறை என் என்னில் அதுவும் இல்லை –
ஈஸ்வர வ்யதிரேகம் இல்லாமையாலே
ஆனாலும் அங்க சாபேஷதை வேணும் என்னில் அது உபாய அந்தர்பூதம் –
சித்த தர்மம் போலே சாத்திய தர்மமும் ஆகார த்வய விசிஷ்டமாய் இருக்கும்
இதில் சாத்ய தர்மத்தில் ஓர் ஆகாரம் த்யாஜ்யமாயும் ஓர் ஆகாரம் உத்தேச்யமாயும் இருக்கும் –
சித்த தர்மத்தில் இரண்டும் உத்தேச்யமாய் இருக்கும் –
—————————————————————————
6-சரண பதார்த்தம்
சரணம் –
கீழ் ஸ்வீகார்ய வஸ்துவைச் சொல்லிற்று –
இது ஸ்வீகார பிரகாரத்தைச் சொல்லுகிறது –
த்வயத்தில் சரண சப்தம் போலே இதுவும் உபாய வாசகமாய் இருக்கிறது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிறதுக்கு அனந்தரமாக பிரயுக்தமான சரண சப்தம் ஆகையாலே
ரஷிதாவைச் சொல்லுகிறதாக மாட்டாது –
உபாயாந்தர பரித்யாகத்துக்கு பஸ்சாத் பாவியாய் பாப விமோசனத்துக்குப் பூர்வ பாவியாய் இருக்கையாலே
உபாய வாசகமாம் இத்தனை –
இவ்வஸ்துவுக்கு ப்ராப்யதயா ஸ்வீகார்யத்வமும் உண்டு –
இதில் ப்ராப்யதயா ஸ்வீகார்யத்தை வ்யவச்சேதிக்கிறது-
பிராபக சமயத்தில் போலே ப்ராப்ய சமயத்திலும் ப்ராபகாந்தர ஸ்வீகார மாத்ரம் வ்யவச்சேதிக்க மாட்டாது
என்றும் சொல்லுவார்கள் –
ஆக
சரண சப்தம் இஷ்ட ப்ராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அவ்யஹிதமான
சாதன பாவத்தைச் சொல்லுகிறது –
—————————————————————–
6-வ்ரஜ பதார்த்தம்
வ்ரஜ –
கீழ் ஸ்வீகார பிரகாரத்தைச் சொல்லிற்று –
இதில் ஸ்வீகாரத்தைச் சொல்லுகிறது
கீழ் பரி த்யாஜ்யங்களாகச் சொல்லப் பட்ட தர்மங்கள் சனாதன தர்ம வ்யதிரிக்த தர்மங்கள் ஆகையாலும்
இந்த தர்மம் தான் அவற்றில் அந்தர் பூதம் ஆனாலும் பரித்யாக விஷயமாவது மோஷ சாதனத்வ வேஷம் அன்றிக்கே
சாதன அங்கத்வம் ஆகையாலும்
சர்வ தர்ம பரித்யாக பிரதிபாதனத்வத்துக்கும் சித்த தர்ம ஸ்வீகார விதானத்துக்கும் பரஸ்பர விரோதம் இல்லை –
வ்ரஜ என்றது புத்யஸ்வ என்கிறபடி –
இந்த புத்தி யாகிறது
த்யாஜ்ய கோடியில் உத்தீர்ணமாய்
உபாய கோடியில் அனநுப்ரவிஷ்டமாய்
பிரபகாந்தர பரி த்யாக பூர்வகமாய் –
பகவத் ரஷகத்வ அனுமதி ரூபமாய் –
சைதன்ய கார்யமாய் –
பிரார்த்தனா கர்ப்பமாய் –
பகவத் அன்முக விகாஸ ஹேதுவாய்-
ஸ்வரூப அனுரூபமாய் –
வ்யபிசார விளம்ப விதுரமாய் –
இருப்பதொரு அத்யவசாயாத்மக ஜ்ஞான விசேஷம் –
இதில் ஸாராம்சம் விஸ்ரம்ப விசேஷம் என்றும் -விஸ்ரம்ப வித்வயத்திலே சொன்னோம் –
உபாயாந்தர பரித்யாக பூர்வகத்வமும்
ஸ்வஸ்மின் உபாயத்வ பிரதிபத்தி ராஹித்யமும் –
வாத்சல்யாதி குண விசிஷ்ட வஸ்து விஷயத்வமும் தொடக்கமானவை
இப்பிரபத்தி விசேஷத்துக்கு ஸ்வரூபம் –
மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிறது தானே பிரமாணம் –
பரித்யக்த சாத்ய சாதனனாய் ஸ்வீகாரத்தில்
உபாயத்வ பிரதிபத்திக்கு அயோக்யனாய் இருக்குமவன் இதுக்கு அதிகாரி
இந்த புத்தி விசேஷம் ஏக கரண யுக்தமாகவுமாம் –
கரண த்ரய யுக்தமாகவுமாம் –
இதில் உபாயத்வம் இல்லாமையாலே பலத்துக்கு வியபிசாரம் இல்லை என்னும் இடமும் த்வயத்திலே சொன்னோம் –
சௌலப்யாதி குண விசிஷ்ட வஸ்து கோசரத்வம் இரண்டிலும் உண்டு –
த்யாக விசிஷ்டத்வமும் நைரபேஷ்யமும் இங்கு அதிரிக்தமான அர்த்தம் –
————————————————————-
ஆக
பூர்வார்த்தத்தாலே –
1–த்யாஜ்ய ஸ்வரூபத்தையும் —
2- தத் பாஹூள்யத்தையும்–
3- த்யாகத்தையும்-
4- தத் பிரகாரத்தையும் –
5-அதினுடைய அங்கத்வத்தையும் –
6- ஸ்வீகார்ய வஸ்து ஸ்வரூபத்தையும் –
7- இதினுடைய நைரபேஷ்யத்தையும்
8- ஸ்வீகார பிரகாரத்தையும் –
9-ஸ்வீகாரத்தையும் சொல்லிற்று –
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply