சிந்திக் கல் ஆரம் கொழிக்கும் திருச் சிலம்பாற்று அழகும்
பந்திக் கலாப மயில் ஆடும் சாரலும் பங்கயனோடு
அந்திக் கலாப மதியாற்கு அரியார் உறை ஆன் பொறுப்பும்
வந்திக் கலாம் எனில் சந்திக்கலாம் உயர் வைகுந்தமே –76–
சிந்திக் கல் ஆரம் கொழிக்கும் திருச் சிலம்பாற்று அழகும்
முத்துக்களையும் மற்றும் பல வகை இரத்தினங்களையும் அலைகளிலே வீசி ஒதுக்கின்ற சிறந்த நூபுர கங்கா நதியானது
பந்திக் கலாப மயில் ஆடும்-வரிசையான தோகை யுடைய மயில்கள் கழித்து தோகை விரித்து கூத்தாடப் பெற்ற
சாரலும் -திருமால் இருஞ்சோலை திருமலை சாரலையும்
மாதுறு மயில் சேர் மாலிருஞ்சோலை
பங்கயனோடு -பிரமனுக்கும்
அந்திக் கலாப மதியாற்கு -அந்தி மாலையில் விளங்கும் பிறைச் சந்திரனை தரித்த சிவபிரானுக்கும்
அரியார் -ஒற்றை விடையானும் நான்முகனும் உன்னை அறியாப் பெருமையோனே -பெரியாழ்வார்
உறை ஆன் பொறுப்பும் வந்திக் கலாம் எனில் -ரிஷப கிரியை வணங்கக் கூடுமாயின்
சந்திக்கலாம் உயர் வைகுந்தமே –வந்திக்கலாம் எனில் சந்திக்கலாம் -சொல் நயம் –
———————————————————————-
வைதாரையும் முன் மலைந்தாரையும் மலர்த்தாளில் வைத்தாய்
மொய்தாரை அத்தனைத் தீங்கு இழைத்தேனையும் மூது உலகில்
பெய்தாரை வானின் புரப்பான் இடபப் பெரும் கிரியாய்
கொய்தாரை வேய்ந்த திருவடிக் கீழ்த் தொண்டு கொண்டருளே –77–
மூது உலகில் -பழைமையான உலகில்
பெய்-வரையாது பொழிகின்ற
தாரை வானின்-மழைப் பெருக்கை யுடைய மேகம் போலே
புரப்பான் -வரையாது அனைவரையும் பாதுகாப்பதற்கு
இடபப் பெரும் கிரியாய் -பெரிய ரிஷப கிரியில் எழுந்து அருளி இருக்கும் அழகரே -நீ –
வைதாரையும் -சிசுபாலன் போல்வாரையும் -முன் மலைந்தாரையும் -தந்தவக்ரன் போல்வாரையும் -மலர்த்தாளில் வைத்தாய்
அத்தன்மையான நீ –
மொய்தாரை அத்தனைத் தீங்கு இழைத்தேனையும் -வானில் நஷத்ரங்கள் மொய்த்தால் போலே அத்தனை தீங்கு இழைத்தேனையும்
கொய்தாரை வேய்ந்த திருவடிக் கீழ்த் தொண்டு கொண்டருளே –பறிக்கப் பட்ட மலர்களால் ஆகிய
மாலையைத் தரித்த நின் திருவடி யின் கீழ் அடிமை கொண்டு அருள்வாய்
———————————————————————–
கொண்ட மருந்தும் கடைவாய் வழி உக கோழை வந்து
கண்டம் அருந்துயர் ஆம் போது உன் பாதம் கருதறியேன்
வண்டு அமரும் துளவோனே தென் சோலை மலைக்கு அரசே
அண்டம் அருந்தும் பிரானே இன்றே உன் அடைக்கலமே –78-
வண்டு அமரும் துளவோனே
தென் சோலை மலைக்கு அரசே
அண்டம் அருந்தும் பிரானே
கொண்ட மருந்தும் கடைவாய் வழி உக -அரிதில் வாயினுள் செலுத்தப் பட்ட பாலும் உள்ளே இறங்க மாட்டாமல் கடைவாய் வெளியே வழிய
கோழை வந்து கண்டம் அருந்துயர் ஆம் போது -கபம் நெஞ்சில் அடைத்துக் கொண்டு -அரிய மரண வேதனை யுண்டாகும் சமயத்தில்
உன் பாதம் கருதறியேன்
இன்றே உன் அடைக்கலமே —
———————————————————————
அடைக்கலம் தானை இரந்தாள் புகல அவள் பொருட்டால்
படைக்கலம் தானைத் தருமன் கெடாமல் வெம் பாரதப் போர்
இடைக்கலந்தானை அலங்காரனை சரண் என்று அடைந்தேன்
முடைக்கலம் தான் நையும் அப்போது அயர்ப்பினும் முத்தி உண்டே –79-
அடைக்கலம் தானை இரந்தாள் புகல -கண்ணபிரானைக் குறித்து ஆடையை இரந்து பெற்ற த்ரௌபதி சரணம் என்று சொல்ல
அவள் பொருட்டால் -அவள் நிமித்தமாக
படைக்கலம் தானைத் தருமன் கெடாமல் -ஆயுதங்களையும் சேனைகளையும் யுடைய தருமா புத்திரன் அழியாத படி
வெம் பாரதப் போர் இடைக்கலந்தானை
அலங்காரனை சரண் என்று அடைந்தேன்
ஆதலால் இனி
முடைக்கலம் தான் நையும் அப்போது அயர்ப்பினும் முத்தி உண்டே –
அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் -சரீர அவசானத்தில் மோஷம் -ஆறு வார்த்தைகளில் யுண்டே –
————————————————————————
உண்டு இறக்கும் புவனங்களை மீள உமிழ்ந்திலை யேல்
பண்டு இறக்கும் பதுமத்தோன் புரந்தரன் பைந்தழல் போல்
கண் திறக்கும் சங்கரன் முதலோர்களைக் கண்டவர் ஆர்
திண் திறக் குஞ்சரம் சேர் சோலை மா மலைச் சீதரனே –80–
திண் திறக் குஞ்சரம் சேர்
மிக்க வலிமை யுடைய யானைகள் பொருந்திய –
சோலை மா மலைச் சீதரனே-
நீ –
உண்டு இறக்கும் புவனங்களை மீள உமிழ்ந்திலை யேல்
பண்டு இறக்கும் -முன்பு அழிந்து போன
பதுமத்தோன் புரந்தரன் -பிரமன் இந்திரன்
பைந்தழல் போல் கண் திறக்கும் சங்கரன் முதலோர்களைக் கண்டவர் ஆர் –
பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து அன்று உடனே விழுங்கி -கரந்து உமிழ்ந்து கடந்து இடந்ததும் கண்டும் தெளியகில்லீர்-
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே அவன் அருளு உலகாவது அறியீர்களே-
கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட கொற்றப் போர் ஆழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே –
—————————————————————————
பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை குறித்துத் தோழி இரங்குதல் –
சீர் அரி தாழ் பொழில் மாலிருஞ்சோலை யில் செல்வர் செங்கட்
போர் அரி தாள் புனை தார் அரிது ஆகில் தண் பூந்துளவின்
தார் அரி தாவும் தழை அரிது ஆகில் தழை தொடுத்த
நார் அரிது ஆகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்று நுதற்கே –81–
சீர் அரி
செங்கட்போர் அரி
தாழ் பொழில் மாலிருஞ்சோலை யில் செல்வர்
சீர் அரி தாழ் பொழில் – -சூர்யன் சந்தரன்இந்திரன் போல்வார் விரும்பி தாழ்ந்து தங்கும் திருமலை என்றுமாம்
தாள் புனை தார் அரிது ஆகில்
தண் பூந்துளவின் தார் அரி தாவும் -வண்டுகள் மேல் விழுந்து மொய்க்கப் பெற்ற -தழை அரிது ஆகில்
தழை தொடுத்த நார் அரிது ஆகில் -நாறும் அறிதாகில் –
பிழைப்பு அரிதாம் எங்கள் நன்று நுதற்கே –
தெய்வத் தண் அம் துழாய் ஆயினும் -தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் –
கீழ் வேராயினும் நின்ற மண் ஆயினும்-கொண்டு வீசுமினே
எம்பெருமான் அடியார் -சரம பர்வ நிலை -சம்பந்தம் ஆசை கொண்டு அருளிச் செய்கிறார்
———————————————————————-
நன்னுதலைப் பணி பூண் மார்பில் வைத்து விண் நாட்டு இருப்பார்
மின்னுதலைப் பணி மேல் துயில்வார் விடைவெற்பில் நிற்பார்
மன்னுதலைப் பணி அன்பரை வைக்கும் மலர் அடிக் கீழ்த்
துன்னுதலைப் பணி செய்வது எஞ்ஞான்று என் துயர் தொலைந்தே –82–
நன்னுதலைப் பணி பூண் மார்பில் வைத்து
விண் நாட்டு இருப்பார் -இருந்தான் -பரத்வம் –
பணி பூண் மரபு -ஸ்ரீ கௌஸ்துபம் அணிந்த திருமார்பு -நன்னுதல் -திருமகளை கொண்ட திரு மார்பு
மின்னுதலைப் பணி மேல் துயில்வார் -கிடந்தான் -வ்யூஹம் –
விடைவெற்பில் நிற்பார் -நிற்பான் -அர்ச்சை –
மன்னுதலைப் பணி அன்பரை வைக்கும் மலர் அடிக் கீழ்த்
துன்னுதலைப் பணி செய்வது -திருத் தொண்டுகளை செய்வது -எஞ்ஞான்று என் துயர் தொலைந்தே —
—————————————————————————-
தொலைந்து ஆனை ஓதும் தொலையானை அன்னை சொல்லால் மகுடம்
கலைந்தானை ஞானக் கலையானை ஆய்ச்சி கலைத் தொட்டிலோடு
அலைந்தானை பாலின் அலையானை வாணன் கை அற்று விழ
மலைந்தானை சோலை மலையானை வாழ்த்து என் மட நெஞ்சமே –83—
என் மட நெஞ்சமே —
தொலைந்து ஆனை ஓதும் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் வலிமை குன்றி அழைக்கப் பெற்ற
தொலையானை-தொல்லையானை -ஆதி மூலம் அன்றோ -நெடும் தூரம் ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவன் என்றுமாம் –
அன்னை சொல்லால் மகுடம் கலைந்தானை
ஞானக் கலையானை-சாஸ்த்ரங்களால் கொண்டாடப் படுபவனும் -ஸ்ரீ கீதா சாஸ்திரம் வெளியிட்டு அருளினவன் என்றுமாம்
ஆய்ச்சி கலைத் தொட்டிலோடு அலைந்தானை -யசோதை பிராட்டி துணித் தொட்டிலில் அசைந்தவனும்
பாலின் அலையானை-திருப் பாற் கடலில் வாழ்பவனும்
வாணன் கை அற்று விழ மலைந்தானை
சோலை மலையானை
வாழ்த்து
தொலைந்தானை தொலையானை –
கலைந்தானை கலையானை –
அலைந்தானை அலையானை –
மலைந்தானை மலையானை –
விரோத ஆபாஸ் அலங்காரம் -முரண் விளைந்தழிவணி –
—————————————————————————–
தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல்
நெஞ்சில் அம்பு ஆற்ற முடியாது வேள் எய்து நீள் இரவும்
துஞ்சிலம் பால் துளியும் நஞ்சம் ஆம் சொரி கல் மழையை
அஞ்சிலம் பால் தடுத்தார் அலங்காரர் அடி விளக்கும்
நெஞ்சிலம் பாற்று அருகே கிடத்தீர் உயிர் தேற்றுதற்கே –84–
நெஞ்சில் அம்பு ஆற்ற முடியாது வேள் எய்து
நீள் இரவும் துஞ்சிலம்
பால் துளியும் நஞ்சம் ஆம்
சொரி கல் மழையை -இந்திரன் வர்ஷித்த அஞ்சிலம் பால் -அம் சிலம்பால் -கோவர்த்தன கிரியால் -தடுத்தார்
அலங்காரர் அடி விளக்கும் -பிரமன் கை கமாண்ட தீர்த்தம் கொண்டு திருவடி விளக்குவதால் வந்த –
செஞ்சிலம்பாற்று அருகே கிடத்தீர் உயிர் தேற்றுதற்கே -உயிர் பிழைக்கச் செய்வதற்காக –
—————————————————————————-
தேற்றுவித்தால் புனல் தேற்று நர் போல் திரு எட்டு எழுத்தால்
மாற்று வித்தான் என் மயக்கம் எல்லாம் மண்ணும் விண்ணும் உய்யப்
போற்று வித்தாரப் புயல் அலங்காரன் பொன் மேருவைப் போல்
தோற்று விதார் அணியும் சுந்தரத் திருத் தோள் அண்ணலே –85-
மண்ணும் விண்ணும் உய்யப்
போற்று வித்தாரப் புயல் -வணங்கப்பெற்ற பெரிய மேகம் போன்றவனும்
அலங்காரன்
பொன் மேருவைப் போல் தோற்று
விதார் அணியும் சுந்தரத் திருத் தோள் -வண்டுகள் மொய்க்கும் மாலையைத் தரித்த அழகிய தோள்களை யுடைய
அண்ணலே —
தேற்றுவித்தால் புனல் தேற்று நர் போல் -தேற்றாங்கொட்டையைக் கொண்டு கலங்கிய நீரைத் தெளியச் செய்வது போல்
திரு எட்டு எழுத்தால் மாற்று வித்தான் என் மயக்கம் எல்லாம் –
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றி பணி செய்யக் கொண்டான்
பீதகவாடைப் பிரானார் –என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார் –
—————————————————————————-
அண்ணலை வான் மதி தோய் சோலை மா மலை அச்சுதனை
தண் அலை வானவனை தெய்வ நாதனை தாள் அடைவான்
எண்ணலை வான் பகை ஆம் ஐவரோடு இசைந்து இன்னம் உடல்
புண் அலை வான் எண்ணினாய் மனமே உன் புலமை நன்றே –86–
மனமே
அண்ணலை
தண் அலை வானவனை
தெய்வ நாதனை
வான் மதி தோய் சோலை மா மலை அச்சுதனை
தாள் அடைவான்
எண்ணலை-நீ நினைக்கின்றது இல்லை –
வான் பகை ஆம் ஐவரோடு இசைந்து இன்னம் உடல் புண் அலை வான் எண்ணினாய்
உன் புலமை நன்றே –உன் அறிவுத் தேர்ச்சி நன்றாய் இருந்ததே-இகழ்ச்சிக் குறிப்பு –
——————————————————————————-
புலமையிலே நிமிர்ந்து அற்பரைப் போற்றி பொது மகளை
குல மையிலே குயிலே கொடியே என்றும் கூர் விழி ஆம்
பல ஐயிலே என்றும் பாடாமல் பாடுமின் பாவலர்காள்
நல் அமையில் ஏய் முத்தம் ஆர் சோலை மா மலை நம்பனையே –87–
பாவலர்காள்
நீங்கள்
புலமையிலே நிமிர்ந்து -கல்வித் தேர்ச்சியிலே சிறந்து
அற்பரைப் போற்றி
பொது மகளை -வேசியை –
குல மையிலே குயிலே கொடியே என்றும் கூர் விழி ஆம்
பல ஐயிலே -கூரிய கண்கள் வழிய வேலாயுதம் போலும் -என்றும் பாடாமல்
நல் அமையில் ஏய் முத்தம் ஆர் -சிறந்த மூங்கில்கள் பொருந்திய முத்துக்கள் நிறைந்த
சோலை மா மலை நம்பனையே —
பாடுமின் –
வேய் தந்த முத்தராகிய சிவ பிரான் வணங்கும் அழகர் என்பதை ஸூ சிப்பிக்கிறார் –
——————————————————————————
நம்பி நின்றேன் நின் சரணார விந்தத்தை நல் நெஞ்சு என்னும்
செம்பின் இன்றே பொறித்தேன் உனக்கு ஆள் என்று தெய்வக் குழாம்
பம்பி நின் தேசு எறிக்கும் பதம் காணப் பதறுகின்றேன்
கொம்பின் இன்தேன் சொரியும் சோலை மா மலைக் கொற்றவனே –88–
கொம்பின்–பூம் கொம்புகளில் நின்று
இன்தேன் சொரியும் சோலை மா மலைக் கொற்றவனே —
நம்பி நின்றேன் நின் சரணார விந்தத்தை
நல் நெஞ்சு என்னும் செம்பின் இன்றே பொறித்தேன் -உனக்கு ஆள் என்று–மனம் ஆகிய செப்பேட்டில்
உனக்கு ஆள் என்று இன்றே பொறித்தேன் -தாமிர சாசனம்
தெய்வக் குழாம் பம்பி—முக்தர்கள் -நித்ய சூரிகள் நெருங்கப் பெற்று – நின் தேசு எறிக்கும்
-ஒளி விளங்கப் பெற்ற பரம -பதம் காணப் பதறுகின்றேன்
——————————————————————————
கொற்ற இராவணன் பொன் முடி வீழ கொடும் கண் துஞ்சல்
உற்ற இராவணன் மாள எய்தான் ஒண் பரதனுக்குச்
சொல் தவிரா அவுணன் மாலிருஞ்சோலை தொழுது வினை
முற்ற இராவணம் நல் தமிழ் மாலை மொழிந்தனனே –89–
கொற்ற இராவணன் பொன் முடி வீழ
கொடும் கண் துஞ்சல் உற்ற -தூங்குதல் மிக்க
இராவணன் மாள எய்தான்-இருள் போன்ற கரு நிறம் யுடைய கும்பகர்ணன் இறக்கும் படியும்
ஒண் பரதனுக்குச் சொல் தவிரா அவுணன் -அணன் -ஸ்ரீ ராமன் -அண்ணல் -அவுணன் ஆக மருவி என்றுமாம்
மாலிருஞ்சோலை தொழுது
வினை முற்ற இராவணம் -இரா வணம் கர்மம் முழுவதும் இராத வண்ணம்
நல் தமிழ் மாலை மொழிந்தனனே –
இப்பிரபந்தம் கற்ற பலனையும் அருளிச் செய்கிறார் இத்தால் –
—————————————————————————–
மொழித்தத்தை கொஞ்சும் மலை அலங்காரன் முன் நூற்றுவரை
அழித்து அத்தை மைந்தர்க்கு அரசு அளித்தான் அடி நாள் தொடர்ந்து என்
உழித்தத்தைச் செய்து அன்றிப் போகா வினையை ஒரு நொடியில்
கழித்தத்தை என் சொல்லுகேன் தனக்கு ஆட்பட்ட காலத்திலே -90-
மொழித்தத்தை -சொல் அழகில் சிறந்த கிளிகள்
கொஞ்சும் மலை அலங்காரன்
முன் நூற்றுவரை அழித்து அத்தை மைந்தர்க்கு அரசு அளித்தான்
அடி நாள் தொடர்ந்து என் உழித்தத்தைச் செய்து அன்றிப் போகா வினையை–
ஆதி காலம் தொடங்கி-என்னிடைத்தில் – உழி தத்தை செய்து -துன்பம் செய்து அல்லது போகாத வினையை
ஒரு நொடியில் கழித்தத்தை என் சொல்லுகேன் தனக்கு ஆட்பட்ட காலத்திலே –
—————————————————————————–
கால் அம் அலைக்கும் புவனங்களைக் கரந்தாய் உதிரம்
கால மலைக் குமைத்தாய் அழகா கமலத்துப் பஞ்சு ஆர்
கால் அமலைக்கும் புவிக்கும் அன்பா உயிர் காயம் விடும்
காலம் மலைக்கும் கடும் கூற்றைக் காய்ந்து என்னைக் காத்தருளே –91–
கால் அம் அலைக்கும்-ஊழிக் காற்றின் உதவியால் கடல் நீர் அலை வீசிப் பொங்கி மேல் வரப் பெற்ற
புவனங்களைக் கரந்தாய்
உதிரம் கால மலைக் குமைத்தாய் -இரத்தத்தை கக்கும் படி மல்லர்களை நசுக்கி அழித்தாய்
அழகா
கமலத்துப் பஞ்சு ஆர் கால் அமலைக்கும் புவிக்கும் அன்பா
உயிர் காயம் விடும் காலம் மலைக்கும் கடும் கூற்றைக் காய்ந்து என்னைக் காத்தருளே —
நமன் தமர்கள் நலிந்து என்னைப் பற்றும் போதுஅன்று அங்கு நீ என்னைக் காக்க வேண்டும்
இடையிட்டு வந்த முதல் முற்று மடக்கு –யமகம் -முதல் எழுத்துக்கள் சில ஒன்றி நின்று வெவ்வேற பொருளில் அருளிச் செய்கிறார் –
———————————————————————–
அருளக் கொடி இடைப் பூ மாதும் நீயும் வந்து ஆளினும் ஆம்
இருள் அக்கொடிய நமன்வரும் காலத்து இகழினும் ஆம்
கருளக் கொடி அழகா அலங்கார வன் கஞ்சன் நெஞ்சத்து
உருள் அக்கு ஓடிய உதைத்தாய் எனது உயிர் உன் உயிரே –92-
கருளக் கொடி அழகா அலங்கார -ரஷணத்துக்கு கொடி கட்டி உள்ளவனே –
வன் கஞ்சன் நெஞ்சத்து உருள் அக்கு-திரண்ட எலும்பு – ஓடிய உதைத்தாய்
எனது உயிர் உன் உயிரே –உனக்கு அடிமைப்பட்ட உயிரே யாம்
ஆனபின்பு இனி
இருள் அக்கொடிய நமன்வரும் காலத்து-அந்திம காலத்திலே
கொடி இடைப் பூ மாதும் நீயும்
அருள வந்து ஆளினும் ஆம்
இகழினும் ஆம் –
—————————————————————————
பிரிவாற்றாத தலைவி தனது நிலைமையைக் கூறுதல்
உயிர்க்கும் படிக்கும் உன் ஆயிரம் பேர் என்று ஒறுத்து அன்னைமார்
செயிர்க்கும் படிக்கு நின்றேன் என் செய்கேன் செழும் தேவர்களும்
அயிர்க்கும் படிக்குறள் ஆம் அழகா அலங்காரா நெய்க்கும்
தயிர்க்கும் படிக்கும் செவ்வாய் மலர்ந்தாய் நின்னைத் தாள் பணிந்தே –93–
செழும் தேவர்களும் அயிர்க்கும் படிக்குறள் ஆம் அழகா
ஞான வளம் உள்ள தேவர்களும் இது என் என்று சந்கிக்கும் படியாக ஸ்ரீ வாமன ரூபம் கொண்ட கோல அழகா
அலங்காரா
நெய்க்கும் தயிர்க்கும் படிக்கும் செவ்வாய் மலர்ந்தாய் நின்னைத் தாள் பணிந்தே –உன்னைத் திருவடி வணங்கி -உன்னைக் காதாலித்ததாலே –
உயிர்க்கும் உன் ஆயிரம் பேர்-படிக்கும்- என்று அன்னைமார்
ஒறுத்து -செயிர்க்கும் படிக்கு நின்றேன்
இவள் பேரு மூச்சு இடுகின்றாள் -திருநாமம் பிதற்றுகிறாள் என்று சொல்லி வெறுத்து கோபிக்கும் படி நின்றேன்
பொறுமை பூணாது இங்கனம் ஆற்றாமை படுகிறாளே என்று வெறுத்து -கோபித்து -என்றவாறு
என் செய்கேன்
வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் -ஆவியனல வெவ்வுயிர்க்கும் -திருவாய்மொழி
முகில் வண்ணன் பேர் கிளரிக் கிளரிக் பிதற்றும் -திரு விருத்தம் –
————————————————————————————–
பணிபதி வாட நின்று ஆடின நூற்றுவர் பால் சென்றன
பணிபதி னாலு புவனமும் தாயின பாப் பதின்மர்
பணிபதி எங்கும் உவந்தன பங்கயப் பாவையுடன்
பணிபதி மார்பன் அலங்காரன் பொன் திருப் பாதங்களே –94-
பங்கயப் பாவையுடன்
பணிபதி மார்பன் அலங்காரன் -ஸ்ரீ கௌஸ்துபம் மணி பொருந்திய மார்பன் -அலங்கார அழகர் யுடைய
பொன் திருப் பாதங்களே —
பணிபதி வாட நின்று ஆடின -காளியன் வலிமை தளரும் படி அவன் தலையில் நர்த்தனம் செய்தன
நூற்றுவர் பால் சென்றன -துரியோதனாதிகள் பால் பாண்டவ தூதனாய் சென்றன
பணிபதி னாலு புவனமும் தாயின-பதினாலு புவனமும் தாவி அலைந்தன
பதின்மர் பாப் பணிபதி எங்கும் உவந்தன-பத்து ஆழ்வார்கள் அருளிச் செயல் அருளி ஸ்துதிக்கப் பட்ட
திவ்ய தேசங்களில் எல்லாம் உவந்து எழுந்து அருளின –
இது இரண்டாவது யமகச் செய்யுள் இந்த பிரபந்தத்தில் –
———————————————————————–
பாதகர் அத்தனை பேரும் கனகனும் பல் நகத்தா
லே தகரத் தனையேற்கு அருள் ஆளியை எட்டு எழுத்துள்
ஒது அகரத்தனை சுந்தரத் தோள் உடையானை நவ
நீத கரத்தனை சேர்ந்தார்க்குத் தேவரும் நேர் அல்லரோ –95-
பாதகர் அத்தனை பேரும் -தீ வினையுடையார் அசுரர்கள் அவ்வளவு பேரும்
கனகனும்-இரணியனும்-
பல் நகத்தா லே தகரத்
தனையேற்கு அருள்-பிரகலாத ஆழ்வானுக்கு அருளிய
ஆளியை -ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியும்
எட்டு எழுத்துள் ஒது அகரத்தனை-அகார வாச்யனும் -அகாரத்தோ விஷ்ணு
சுந்தரத் தோள் உடையானை
நவ நீத கரத்தனை
சேர்ந்தார்க்குத் தேவரும் நேர் அல்லரோ -சரண் அடைந்தார்க்கு புண்ய பயனையே அனுபவிக்கும் தேவர்களும் நிகர் அல்லர் –
பாகவத மகிமை அருளியவாறு –
————————————————————————
அல்லல் அங்கு ஆரையும் சேர்விக்கும் ஐம்புல ஆசை என்றும்
பல் அலங்கா நைந்து கோல் ஊன்றியும் பற்று அறாது கண்டாய்
மல்லல் அம் காரிகையார் மருள் தீர்ந்து வணங்கு நெஞ்சே
தொல் அலங்காரனைத் தென் திருமால் இருஞ்சோலையிலே -96-
நெஞ்சே
அல்லல் ஆரையும் சேர்விக்கும் ஐம்புல ஆசை
என்றும் பல் அலங்கா நைந்து கோல் ஊன்றியும்-எந்நாளும் பற்கள் அசையப் பெற்று உடல் தளர்ந்து கோலை ஊன்றி
அங்கு -அசை சொல்
பற்று அறாது-தொடர்ச்சி நீங்காது
ஆதலால்
மல்லல் அம் காரிகையார் மருள் தீர்ந்து -மாதர்கள் பக்கம் உண்டான மோகம் தீர்ந்து
தொல் அலங்காரனைத் தென் திருமால் இருஞ்சோலையிலே வணங்கு
கண்டாய் -தேற்றம் –
—————————————————————–
பிரிவாற்றாத தலைவி நிலையைக் குறித்துப் பாங்கி இரத்தல் –
சோலை இல்லாமையில் சேர் திருமால் இருஞ்சோலை நின்றான்
வேலையில் ஆமையின் வேடம் கொண்டான் புயம் மேவப் பெறாச்
சேல் ஐ யில் ஆம்மை இலங்கு கண்ணாள் அவன் தெய்வத் துழாய்
மாலை இல்லாமையில் மாலை உற்றாள் அந்தி மாலையிலே –97-
சோலை இல்லாமையில் -சோலை இல் ஆ -சோலைகளை தமக்கு இருப்பிடமாகக் கொண்டு மையில் -மயில்கள்
சேர் திருமால் இருஞ்சோலை நின்றான்
வேலையில் ஆமையின் வேடம் கொண்டான்
புயம் மேவப் பெறாச் -திருத் தோள்களை தழுவப் பெறாத
சேல் ஐ யில் ஆம்மை இலங்கு கண்ணாள் -சேல் மீனும் வேலாயுதமும் போன்ற மையிடப் பெற்றுள்ள கண்களை யுடைய இம்மங்கை
மத்ஸ்ய அவதாரத்தில் ஈடுபட்டு அதே போன்ற திருக்கண்கள் யுடையவள் –
அவன் தெய்வத் துழாய் மாலை இல்லாமையில் மாலை உற்றாள் -மயக்கத்தை உற்றாள் -அந்தி மாலையிலே —
மாலை பல பொருள்களில் அருளிச் செய்து -சொல் பின் வரு நிலை அணி –
———————————————————————
பிரிவாற்றாத தலைவி நிலையைக் குறித்துப் பாங்கி இரத்தல் –
மாலைக்கு அரும்பு சிறு கால் துகைக்க வருந்தும் எங்கள்
ஆலைக் கரும்பு தன் ஆசை எல்லாம் சொல்லில் ஆயிரம் தோட்டு
ஓலைக்கு அரும்பு ண் தொடமுடம் ஆம் மதி ஊர் குடுமிச்
சோலைக் கரும் புயலே அருள்வாய் உன் துளவினையே –98-
தொடமுடம் ஆம் மதி ஊர் குடுமிச் -அடியில் உராய்தலால் அடி தேய்ந்திடுமாறு சந்திர மண்டலம் தவழ்ந்து செல்லப் பெற்ற சிகரத்தை யுடைய
சோலைக் கரும் புயலே -கால மேகம் போன்றவனே
மாலைக்கு அரும்பு சிறு கால் துகைக்க -மாலைப் பொழுதிலே இளம் தென்றல் காற்று வருந்துதலால்
வருந்தும் எங்கள் ஆலைக் கரும்பு தன் ஆசை எல்லாம் -வருந்தும்
ஆலையில் அகப்பட்ட கரும்பு போன்ற எங்கள் தலைவியின் ஆசை முழுவதும்
சொல்லில் -சொல்லி வருவதனால்
ஆயிரம் தோட்டு ஓலைக்கு அரும்பு ண் -அதனை எழுதும் இடத்து ஆயிரம் பனை ஓலைக்கு எழுதுவதால் அரிய புண்ணாகும் –
பண்ணி உரைக்கில் பாரதமாம் –
இங்கனம் இருத்தலால்
அருள்வாய் உன் துளவினையே –நினது திருத் துழாய் மாலையை இவட்குத் தந்து அருள்வாய் –
————————————————————————
துளவ இலை ஆர் பொன் அடி முடி சூட்டி தொண்டு ஆக்கி என்னை
வளவிலையாக் கொண்ட நீ கை விடேல் மங்கல குணங்கள்
அளவு இல் ஐயா அலங்கார சமயிகள் ஆய்ந்த வண்ணம்
உள இலை ஆய் உரு ஆய் அருவு ஆய ஒரு முதலே –99-
மங்கல குணங்கள் அளவு இல் ஐயா -திருக் கல்யாண குணங்கள் அளவின்றி மிகப் பெற்ற ஸ்வாமீ
அலங்கார
சமயிகள் ஆய்ந்த வண்ணம் -வணங்கும் துறைகள் பல பல வாக்கி -இத்யாதி
உள இலை ஆய் உரு ஆய் அருவு ஆய ஒரு முதலே –உள்ளன இல்லன உருவ அருவ பொருள்கள்
அனைத்துமாய ஒப்பற்ற முதல்வனே -முதல் பொருளே
உளன் எனில் உளன் –இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –
துளவ இலை ஆர் பொன் அடி முடி சூட்டி -என் சிரம் மேல் உனது பொன்னடிகளை வைத்து அருளி
தொண்டு ஆக்கி என்னை
வளவிலையாக் கொண்ட நீ கை விடேல் -நல்ல விக்கிரயப் பொருளாக கொண்ட நே கை விடாதே அருள்வாய் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
மாலடி மேல் கோலமாம் குலசேகரன் –
—————————————————————————-
ஒரு பால் அமரர் ஒரு பால் முனிவர் உடன் இருந்து என்
இரு பார்வையும் உவப்பது என்றோ இடபக் கிரிக்கும்
பொரு பாற் கடற்கும் அயோத்திக்கும் பொன் துவரா பதிக்கும்
நிருபா வைகுந்தமும் நீ வீற்று இருக்கின்ற நீர்மையுமே -100-
இடபக் கிரிக்கும் -அர்ச்சைக்கு உப லஷணம்
பொரு பாற் கடற்கும் -மோதப்பற்ற திருப் பாற் கடலுக்கும் -வ்யூஹம் –
அயோத்திக்கும்-விபவம் –
பொன் துவரா பதிக்கும் -விபவம் –
நிருபா-தலைவனே
வைகுந்தமும் நீ வீற்று இருக்கின்ற நீர்மையுமே
ஒரு பால் அமரர் -நித்யர் -ஒரு பால் முனிவர் -முக்தர் -உடன் இருந்து என்
இரு பார்வையும் உவப்பது என்றோ -சேவித்து பரமானந்தை அனுபவிப்பது என்றோ –
———————————————————————
தற் சிறப்புப் பாசுரம் –
அலங்கார ருக்குப் பரமச் சுவாமிக்கு அழகருக்குக்
கலங்காப் பெரு நகரம் காட்டு வார்க்குக் கருத்தன்பினால்
நலங்காத சொல் தொடை யந்தாதியைப் பற்ப நாபப் பட்டன்
விலங்காத கீர்த்தி மணவாள தாசன் விளம்பினனே –
அலங்கார ருக்குப் பரமச் சுவாமிக்கு அழகருக்குக் -பரம சுவாமி மூலவர் திரும்நாமம்
நலங்காத-கால பேதத்தால் வாடுதல் இல்லாத
சொல் தொடை யந்தாதியைப்
பற்ப நாபப் பட்டன் விலங்காத கீர்த்தி மணவாள தாசன் -ஸ்ரீ பராசர பட்டரை ஆச்ரயித்து அவரை நீங்காது இருந்த
புகழை யுடைய அந்தரங்க சிஷ்யர் அழகிய மணவாள தாசன் –
—————————————————————————————————
கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–