ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஞான சாரம் –ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் அருளிச் செய்த-தெளியுரை சாரம்

அவதாரிகை –
இந்த பிரபந்த திரு நாமம் ஸ்ரீ எம்பெருமானார் தாமர் இட்டருளினார் என்பார் –
அவசியம் ஜ்ஞாதவ்ய பரமார்த்தன்களை தெளிவாக தெரிவிக்கும் பிரமாணங்களின் சாரம் -என்றபடி –
ஸ்ரீ எம்பெருமானார் தாமே அருளிச் செய்வதாக இந்நூல் ஆசிரியர் திரு உள்ளம் கொண்டதால்
ஸ்ரீ எம்பெருமானார்க்குக் காப்புச் செய்யுள் இல்லாமல் அருளி உள்ளார்
ஸ்ரீ மா முனிகள் அந்த பிரமாண வசங்களை எல்லாம் எடுத்துக் காட்டி அருளிச் செய்து இருக்கிறார் –

——————————–

தனியன் –
சுருளார் கரும் குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் சொன்ன
பொருள் ஞான சாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கு புகழ்
அருளாள மா முனி யாம் பொற் கழல்கள் அடைந்த பின்னே –

——-

ஊன யுடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வன் அடித்
தேனுகரும் ஆசை மிகு சிந்தையராய்த் தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்று அற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு –1-

ஆர்த்த பிரபத்தி –உடனே -ஒரு ஷணமும் தரித்து இருக்க முடியாமல் தானாகவே விழுகை
த்ருப்த பிரபத்தி -தேக அவசானத்தில் -மோஷம்

ஸ்ரீ சனத்குமார சம்ஹிதை –
யதா பராநன்வயிபி துச்சக ஸ்ம்ருதி பிர் வி நா தேன தத்புரத பாதஸ் சா பிரபத்திஸ் தாதா பவேத்

பரா அந்வயிபி ஸ்ம்ருதி பிர் வி நா துச்சக -இதர விஷயங்களிலே அன்வயம் அற்ற சிந்தனைகள் இல்லாமல்
இந்நிலத்தில் தரித்து இருக்க முடியாதவனாய் –
இப்படிப்பட்டவனாக -யதா -எப்போது ஆகிறானோ -ததா -அப்போது –தேன -அப்படிப்பட்ட நிலைமையோடு
தத் புரத பாத -எம்பெருமான் திரு முன்பே விழுகை எனபது யாது ஓன்று உண்டோ –
சா பிரபத்தி பவேத் -அது தான் பிரபத்தியாகும் என்றபடி

ஆர்த்தியின் பரிபாகம் சரம அவஸ்தை அளவாக முதிர்ந்த பின்பு ஒரு ஷணமும் இந்நிலத்தில் இருப்பு அரிதாகி
ஆர்த்த பிரபத்தி செய்யும் அளவில் –
ஆர்த்தேஷூ ஆசுபலா -நியாச திலக ஸ்ரீ ஸூக்திப்படியே கடுகப் பலன் கை புகும் என்றதாயிற்று

—————————–

நரகும் சுவர்க்கமும் நாண் மலராள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் -துரி சற்றுச்
சாதகம் போல் நாதன் தனது அருளே பார்த்து இருத்தல்
கோதில் அடியார் குணம் –2-

துரிசு அற்று -இப்படிப் பட்ட பிரேமத்தை உபாயமாகக் கொள்ளுகையாகிற தோஷம் இன்றிக்கே

யஸ் த்வயா சஹ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா வி நா -அயோத்யா -30-28-
பிரபன்னச் சாதகோ யத்வத் ப்ரபத் தவய கபோத
ஏக க்ருதீ சகுந்தேஷூ யோந்யம் சக்ராத் ந யாசதே –

சாதக பஷியானது மேகத்தை எதிர்பார்த்து இருப்பது போலே பிரபன்னனும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன்
உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து
கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் –
ஸ்ரீ எம்பெருமானை பிரிந்து கிடப்பதை நரக பிராயமாக நினைத்து இருப்பதும் அவன் அருளையே
பார்த்து இருப்பதும் பரம பக்தர்கள் லஷணம் –

————————————————————-

ஆனை இடர் கடிந்த ஆழி யங்கை யம்புயத்தாள்
கோனை விடில் நீரில் குதித்து எழுந்த மீன் எனவே
ஆக்கை முடியும் படி பிறத்தல் அன்னவன் தாள்
நீக்கமிலா வன்பர் நிலை –3-

ந ச சீதா த்வயா ஹீ நா ந சாஹமபி ராகவ முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ரு தௌ-அயோத்யா -53-31-
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்ட திருமால் பக்தர்கள் இடத்தே அன்பே நிரூபகமானவன் -என்று அறிந்து
அத் திருக் குணத்திலே ஈடுபட்டு அவனைப் பிரிந்தால் நீரை விட்டுப் பிரிந்த மீன் படும் பாடு படுமதே மெய்யன்பர்களின் நிலை –

—————————————————————–

மற்று ஒன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே
உற்றது இது என்று உளம் தெளிந்து பெற்ற
பெறும் பேற்றின் மேல் உளவோ பேறு என்று இருப்பார்
அரும் பேறு வானத்தவர்க்கு –4-

யே ப்ரஹ்மன் பகவத் தாஸ்ய போகைக நிரதாஸ் சதா தே ப்ரியாதிதய ப்ரோக்தா ஸ்ரீ வைகுண்ட நிவாசி நாம் -பாஞ்சராத்ரம்

ஏக -மற்று ஒன்றை எண்ணாதே -மாதவனுக்கு ஆட செய்வதே ஸ்வயம் பிரயோஜனம்

—————————————————-

தீர்த்தம் முயன்று ஆடுவதும் செய்தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் -சீர்த்துவரை
மன்னடியோம் என்னும் வாழ்வு நமக்கு ஈந்ததற்பின்
என்ன குறை வேண்டும் இனி –5-

பார்த்தனை முன் காத்த பிரான் -ஸ்ரீ கீதை அருளி -ஸ்ரீ சரம ஸ்லோஹம் -உபதேசித்து அருளி
அர்ஜுனனை -சதி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணினவன் –
ஸ்ரீ சரம ச்லோஹார்த்த நிஷ்டை உண்டாகும் அளவே இந்த பிரவ்ருத்திகளுக்கு அவகாசம் உள்ளது

தாவத் கச்சேத் து தீர்த்தானி சரிதச் ச சராம்சி ச யாவன் நா பூச்ச பூபால விஷ்ணு பக்தி பரம் மன –ஸ்ரீ விஷ்ணு தர்மம்

கிம் தாஸ்ய தாநை கிம் தீர்த்தை கிம் தபோபி கிமத்வரை யோ நித்யம் த்யாயதே தேவம் நாராயண ம நன்யதீ -இதிஹாச சமுச்சயம்

யாமோ வைவஸ் வதோ ராஜா யஸ் தவைஷ ஹ்ருதி ஸ்தித தேன சேத அவிவாதஸ் தே மா கங்காம் மா குரூன் கம

செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் –
இப்பாசுரம் அனுசந்திப்பார்களுக்கும் அதிகாரிகள் ஆவாரே –

—————————————————

புண்டரீகை கேள்வன் அடியார் அப்பூ மிசையோன்
அண்டம் ஒரு பொருளா ஆதரியார் -மண்டி
மலங்க வொரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக்
கலங்கிடுமோ முந்நீர்க் கடல் –6-

ப்ரஹ்மாண்ட மணலி மாத்ரம் கிம் லோபாயா மனஸ் வின சபரீஸ் புரிதே நாப்தே
ஷூப்ததா நைவ ஜாயதே -பாகவத -10-20-15

மகத்தான தத்வம் ஆகிய சமுத்ரத்தை ஒரு சூத்திர மத்ஸ்யம் கலக்க வல்லதோ
பக்தர்கள் -கடல் ஸ்தானம் -ப்ரஹ்மாண்ட ஐஸ்வர்யம் மத்ஸ்ய ஸ்தானம்
புண்டரிகை -கோகனகை சரோருகை அரவிந்தை
முந்நீர் -ஆற்று நீர் உஊற்று நீர் மலை நீர்
முன்னீர்-அவ ஏவ சசர்ஜா தௌ -சிருஷ்டியில் முற்பட்ட நீர் -என்றுமாம் –

——————————————-

தோளார் சுடர்த் திகிரி சங்குடைய சுந்தரனுக்கு
ஆளானார் மற்று ஒன்றில் அன்பு செயார் மீளாப்
பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு
நரகன்றோ இந்திரன் தன் நாடு –7-

தத் பதம் ப்ராப்துகாமா யே விஷ்ணோஸ் தேஷாம் மஹாத்மநாம் போகா புரந்தரா தீநாம்
தே சர்வே நிரயோபமா -ப்ரஹ்மாண்ட புராணம்

அப்ராக்ருதமாய் அதி மநோ ஹரமாய் இருக்கும் விஷயத்தின் வாசி அறிந்து அதிலே தோற்று இருக்குமவர்கள்
மிகவும் ஆபாசமாய் அவிலஷணமாய் இருக்கின்ற ப்ராக்ருத விஷயங்களை விரும்புவார்களோ –

—————————————————————-

முற்றப் புவனம் எலாம் உண்ட முகில் வண்ணன்
கற்றைத் துழாய் சேர் கழல் அன்றி -மற்று ஒன்றை
இச்சியா வன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து –8-

யா க்ரியாஸ் சம்ப்ரயுக்தாஸ் சயு ஏகாந்த கத புத்திபி தாஸ் சர்வாஸ் சிரஸா தேவ பிரதி க்ருஹ்ணாதி
வை ஸ்வயம் -மோஷ தர்மம் மஹா பாரதம் –

உண்மையான பக்தர்கள் இடுமத்தை எல்லாம் ஸ்ரீ எம்பெருமான் திரு முடியாலே ஏற்றுக் கொள்கிறான்
பிரேம பரவசராய்க் கொண்டு அக்ரமமாக வாதல் சக்ரமமாகவாதல் எப்படி செய்தாலும்
திரு உள்ளம் உகந்து சிரஸா வஹித்து அருள்வான்

———————————————————————-

ஆசு இல் அருளால் அனைத்து உலகும் காத்து அளிக்கும்
வாச மலராள் மணவாளன் -தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறு ஒன்றை
எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு –9-

யோ அநந்ய மனஸஸ் ஸூத்தா யேதா சயைக மநோ ரதா தேஷாம் மே
ஹ்ருதயம் விஷ்ணோர் வைகுண்டாத் பரமம் பதம் —

அநந்ய பக்தர்கள் திரு உள்ளமே சிறந்த ஸ்தானம்
ஆசு -குற்றம் -அருளுக்கு குற்றமாவது சஹேதுகமாய் இருத்தல் -நிர்ஹேதுக கிருபை என்றதாயிற்று

————————————-

நாளும் உலகை நலிகின்ற வாளரக்கன்
தோளும் முடியும் துணித்தவன் தன் -தாளில்
பொருந்தாதார் உள்ளத்தில் பூ மடந்தை கேள்வன்
இருந்தாலும் முள் மேல் இருப்பு –10-

பகவச் சரண த்வந்தவே பக்திர் யேஷாம் ந வித்யதே தேஷாம் ஹ்ருதி ஸ்திதோ
தேவ கண்டகாக்ர இவ ஸ்தித -ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம்

சர்வ வியாப்தி சித்தமாக எங்கும் பொருந்தி இருந்தாலும் முள் மேல் இருப்பாக காணும் –

—————————————————–

தன் பொன்னடி யன்றி மற்று ஒன்றில் தாழ்வு செய்யா
அன்பர் உகந்து இட்ட அணு வெனினும் -பொன் பிறழும்
மேருவாய்க் கொள்ளும் விரையார் துழாய் அலங்கல்
மாரிமாக் கொண்டல் நிகர் மால் –11-

பக்தைரண் வப்யுபா நீதம் ப்ரேம்ணா பூர்யேவ மே பவேத் பூர்யப்ய பக்தோ பஹ்ருதம் நமே
தோஷாய கல்பதே-பௌஷ்கர சம்ஹிதையில் தானே அருளிச் செய்தான் இறே /ஸ்ரீ பாகவத ஸ்லோஹமுமாம்–

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருத மச்னாமி பிரயதாத்மான –ஸ்ரீ கீதை -9-26-

அந்யத் பூர்ணாதபாம் கும்பா தந்யத் பாதாவ நேஜ நாத்
அந்யத் குசல சாம்ப்ராஸ் நாத் ந சேச்ச தி ஜனார்த்தன -பார -உத்தியோக -69-13-

ஒரு திருத் துழாய் தளத்தினால் திருப்தி அடையக் கூடியவன் –
விரையார் துழாய் அலங்கல் மாரிமாக் கொண்டல் நிகர் மால் –
ஸ்ரீ குசேல முனிவர் இடம் ஸ்ரீ கண்ணபிரான் அனுபவம் போலே –

———————————————————————–

மாறாய் இணைந்த மருதம் இறத் தவழ்ந்த
சேறார் அரவிந்தச் சேவடியைப் –பேறாக
உள்ளாதார் ஒள் நிதியை ஈந்திடினும் தான் உகந்து
கொள்ளான் மலர் மடந்தை கோன்–12–

பேறாக உள்ளாதார் -வேறாக உள்ளாதார் பாட பேதங்கள்

ப்ருதிவீம் ரத்ன சம்பூர்ணம் யா க்ருஷ்ணாய ப்ரயச்சதி
தஸ்யாப் யன்ய மனஸ் கஸ்ய ஸூலபோ ந ஜனார்த்தன

நெஞ்சு கனிந்து இராமல் நவ நிதிகளை இட்டாலும் அவற்றை ஸ்ரீ எம்பெருமான் கண் எடுத்துப் பாரான் –
பொய்ம்மாய மருதான வசுரரைப் பொன்றுவித்தின்று நீ வந்தாய் -ஸ்ரீ பெரியாழ்வார் -3-1-3- -போலே
இங்கு மாறாய் இணைந்த மருதம்

——————————————————-

பண்டே உயிர் அனைத்தும் பங்கயத்தாள் நாயகற்கே
தொண்டாம் எனத் தெளிந்த தூ மனத்தார்க்கு -உண்டோ
பல கற்றும் தம்முடம்பைப் பார்த்து அபிமாநிக்கும்
உலகத்தவரோடு உறவு –13-

விஷ்ணு தாஸாவயம் யூயம் ப்ரஹ்மணா வர்ண தர்மிணா அஸ்மாகம் தாஸ வ்ருத்தி நாம்
யுஷ்மாபிர் நாஸ்தி சங்கதி நாஸ்தி சங்கதி
ரஸ்மாகம் யுஷ்மா கஞ்ச பரஸ்பரம் வயந்து கிங்ரா விஷ்ணோர் யூய மிந்த்ரிய கிங்கரா

ஸ்ரீ திருவயிந்திர புரத்தில் ஸ்ரீ வில்லி புத்தூர்ப் பகவர்-தனியொரு துறை அனுஷ்டானம் –

ஆவித்ய ப்ராக்ருத ப்ரோக்தோ வைத்யோ வைஷ்ணவ உச்யதே
ஆவித்யேன நகே நாபி வைத்ய கிஞ்சித் சமாசரேத்-

சாதன சாத்தியங்களில் முதலும் முடிவும் வர்ண தர்மிகள் தாஸ வ்ருத்திகள் என்று துறை
வேறு இடுவித்து -ஸ்ரீ ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்திகள்-
ஸ்ரீ திரு மந்தரப் பொருளை நன்கு தெளியப் பெற்ற பரமைகாந்திகளுக்கு
தேஹாத்மா அபிமானிகளோடு சேர்ந்து வாழ்வது பொருந்தாது -என்றபடி

——————————————————–

பூதங்கள் ஐந்தும் பொருந்து உடலினில் பிறந்த
சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் பேதம் கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ்வுயிர்க்கும் இந்திரை கோன்
தன்னடியே காணும் சரண் –14

சாதங்கள் -ஜாதிகள்
தேஹாத்ம அஜ்ஞான கார்யேண வர்ண பேதேன கிம் பலம் கதிஸ் சர்வாத்மாநாம்
ஸ்ரீ மன் நாராயண பத த்வயம் –பரமைகாந்தி தருமம் –
நிஷ்க்ருஷ்டாத்மா ஸ்வரூபத்தில் ஜாதி பேதம் எதுவுமில்லை –
சகலாத்மா வர்க்கங்களுக்கும் பொதுவான பகவச் சேஷத்வம் பொலியுமே -என்றபடி –

——————————————-

குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவன் அடியே யாகும் படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர்கலியைச் சேர்ந்திட மாய்ந்தற்று –15-

ஆர்கலி -கடல்

ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ கிராமகுலாதிபி விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம் ச ஏவ ஹி- நத்யா நச்யதி நாமாதி
பிரவிஷ்டாயா யதார்ணவம் சர்வாத்மநா பிரபன்நஸ்ய விஷ்ணுமே காந்தி நஸ் ததா –

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் பேர் அடியான் என்று இறே —
கிராம குலாதிகளால் வரும் பேர் அனர்த்த ஹேது -ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய -ஸ்ரீ ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூ க்திகள்

ஆறுகள் கடலில் சேருவதற்கு முன்பு கங்கை யமுனை கோதாவரி இத்யாதி நாம பேதங்களையும் வெண்மை கருமை முதலான
நிற வேற்றுமைகளையும் தாங்கி நிற்கின்றன -கடலில் புகுந்த பின்பு முன்பு இருந்த நாம பேதங்களையும் வர்ண பேதங்களையும்
அறவே விட்டிட்டு கடலின் நிறமே கொண்டு கடலின் பெயரினாலேயே வழங்கப்படுவது போலே

————————————————————–

தேவர் மனிசர் திரியக்குத் தாவரமாம்
யாவையும் அல்லன் இலகும் உயிர் பூவின் மிசை
ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம்
நாரணன் தாட்கே யடிமை நான் –16-

நாஹம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா ஜ்ஞா நானந்த மயஸ் த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன —

நாஹம் விப்ரோ ந ச நரபதிர் நாபி வைஸ்யோ ந சூத்ரோ நோ வா வர்ணீ ந ச க்ருஹபதிர் நோ வனஸ்தோ யதிர் வா கிந்து
ஸ்ரீமத் புவன பவன ஸ்தித்ய பாயைக ஹேதோர் லஷ்மீ பர்த்துர் நரஹரி தநோர் தாஸ தாசஸ்ய தாஸ —

சரமாவதி தாசத்வமே வடிவு எடுத்தவன் -என்றபடி

——————————————————————

ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவரவும் இவற்றால்
பிறக்குமோ தன் தெளிந்த பின் –17-

களிப்பும் கவரவும் -கொந்தளிப்பும் கிலேசமும்
தன் தெளிந்த பின் -ஸ்வ ஸ்வரூபம் ஞானம் வந்த பின்பு

ஆகச்சது ஸூ ரேந்த்ரத்வம் நித்யத்வம் வா அத்ய வா ம்ருதி தோஷம் வா த்ரவிஷாதம் வா நைவ கச்சந்தி பண்டிதா-

—————————————————————————-

ஈனமிலா வன்பர் என்றாலும் எய்திலா
மானிடரை எல்லா வணத்தாலும்-தான் அறிய
விட்டார்க்கு எளியன் விடாதார்க்கு அறவரியன்
மாட்டார் துழாய் அலங்கல் மால் –18-

அறிவரியன் -அறவரியன் -பாட பேதங்கள்

பக்தோபிவா ஸூ தேவஸ்ய சாரங்கிண பரமாத்மன லோகேஷணாதி நிர்முக்தோ முக்தோ பவதி நான்யதா –

ஆன் விடை ஏழு அன்று அடர்த்தாற்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –
செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்
மனுஷ்ய ஜாதியில் பிறந்து வைத்தே பசு ப்ராயராய் வர்த்திக்கும் ப்ராக்ருதர்களோடு உறவை ஒழித்துக் கொண்டால் தான்
அவர்களுக்கு எளியவன் ஆவான் என்றதாயிற்று

—————————————————————-

நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
இல்லம் நிலம் மாடு இவை அனைத்தும் -அல்லல் எனத்
தோற்றி எரி தீயில் சுடுமேல் அவர்க்கு எளிதாம்
ஏற்றரும் வைகுந்தத்து இருப்பு -19-

நவை இல் கிளை -குற்றம் அற்ற உறவினர் –

ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத –புத்ராஸ் ச தாரா பசவோ க்ருஹாஸ் ச த்வத் பாதபத்ம ப்ரவணாத் மவ்ருத்தேர்
பவந்தி சர்வே பிரதிகூல ரூபா –என்று ப்ரஹ்மாண்ட புராணத்தில் ஸ்ரீ ஹஸ்திகிரி மகாத்மியத்தில் சொல்லப்பட்ட வசனம்
இப்பாட்டில் சொன்ன அர்த்தத்துக்கு சம்வாதமாக அனுசந்தேயம் –

விஹித போகம் நிஷித்த போகம் போலே லோக விருத்தமும் அன்று -நரக ஹெதுவும் அன்று -ஆயிருக்கச் செய்தே ஸ்வரூப விருத்தமுமாய்
வேதாந்த விருத்தமுமாய் சிஷ்ட கர்ஹிதமுமாய் ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் இருக்கையாலே ஸ்வரூபம் குலையும் —
-ஷேத்ராணி மித்ராணி என்கிற ச்லோஹத்தில் அவஸ்தை பிறக்க வேணும் ஸ்வரூபம் குலையாமைக்கு -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்திகள் –

புத்திர களத்ராதிகள் அக்னி கல்பமாகத் தோற்றும் -அவஸ்தை பிறக்க வேணும் ஸ்வரூப பிரச்யுதி பிறவாமைக்கு -என்கை –

—————————————————–

விருப்புறினும் தொண்டர்க்கு வேண்டும் இதம் அல்லால்
திருப் பொலிந்த மார்பன் அருள் செய்யான் நெருப்பை
விடாதே குழவி விழ வருந்தினாலும்
தடாதே ஒழியுமோ தாய் –20-

யாசிதோபி சதா பக்திர் நாஹிதம் காரயேத் ஹரி பால மக்நௌ பதந்தந் து மாதா கிம் ந நிவாரயேத்-

நெருப்பின் ஒளியைக் கண்டு அதை விட மாட்டாமல் அதிலே விழ முயலும் குழந்தையை
ஹிதம் செய்யும் தாய் அத்தை தகையாமல் அனுமதி செய்வாளோ -என்றபடி

——————————————————-

ஆரப் பெருந்துயரே செய்திடினும் அன்பர்கள் பால்
வேரிச் சரோருகை கோன் மெய்நலமாம் –தேரில்
பொறுத்தர்கரிது எனினும் மைந்தன் உடல் புண்ணை
அறுத்தற்கு இசை தாதை யற்று –21-

வேரி சரோருகை கோன் –நறுமணம் மிக்க தாமரையில் பிறந்த ஸ்ரீ பிராட்டியின் வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
தேரில் -ஆராயும் அளவில்
மெய் நலமாம் -உண்மையான அன்பின் காரியமேயாகும்

ஹரிர் துக்கா நி பக்தேப்யோ ஹித புத்த்யா கரோதி வை சஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா-

தனக்கு ஒரு கிலேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல் க்ருபா பலம் என்றாதல் பிறக்கும் ப்ரீதியும் –ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ ஸூ க்திகள் –
முமுஷுவாய் பிரபன்னனானாலும் பிராரப்த சரீரம் இருக்கும் அளவும் தாபத்ரயங்களில் ஏதேனும் ஒரு கிலேசம் உண்டானால் –
இது அனுபவ விநாச்யமான பிராரப்த கர்ம பலம் அன்றோ -ஏவம்பூத கர்மங்கள் உள்ளவை கழியும் அளவன்றோ இச் சரீரத்தோடு ஸ்ரீ எம்பெருமான்
நம்மை வைக்கிறது -பிராரப்த பிரதிபந்தகங்களிலே ஒன்றாகிலும் கழியப் பெற்றோமே என்கிற அனுசந்தானத்தாலே யாதல்
துர் வாசனையாலே இவ்வுடம்பை விட இசையாமல் ப்ராக்ருத பதார்த்தங்களை யுபஜீவித்துக் கொண்டு சம்சாரத்துக்குள்ளே பொருந்தி
இருக்கிற நம்மை துக்க தர்சனத்தைப் பண்ணுவித்து இதில் பற்று அறுத்துக் கொண்டு போக நினைக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய கிருபையின்
பலம் அன்றோ இது என்கிற அனுசந்தானத்தாலே யாதல் உண்டாகக் கடவ ப்ரீதியும் —
பூர்வாகம் உத்தராகம் பிராரப்த கண்டம் எல்லாம் கழிக்கிறவனுக்கு வர்த்தமான சரீரத்தில் அனுபாவ்ய கர்மம் இத்தனையும் கழிக்கை அரிதன்று இறே —
கர்ம பலனான துக்க பரம்பரைகளை அனுபவியா நின்றாலும் இத் தேஹத்தை விட வென்றால் இசையாத விவனை
நிர் துக்கனாக்கி வைப்போமாகில் இச் சரீரத்தோடு நெடும் காலம் இருக்க இச்சித்தல் இன்னும் ஒரு சரீரம் தன்னை இச்சித்தல் செய்யுமாகையாலே
இச் சரீரத்துக்கு உள்ள கர்மம் அனுபவித்தே இறுக்கக் கடவன் என்று இறே வைக்கிறது –
ஆன பின்பு மற்று உண்டான கர்மங்கள் எல்லாம் கழித்து சம்சாரத்தில் நின்றும் இவனைக் கடுகத் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுகையில்
உண்டான கிருபையாலே யானாப் போலே இத்தனையும் கழியாமல் வைத்ததும் கிருபையாலே இறே –
அநாதி காலம் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அனுபவித்த துக்கம் பகவன் நிக்ரஹ பலம் –
இது அனுக்ரஹ பலம் –ஸ்ரீ மா முனிகள் வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள் –

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் -ஸ்ரீ பெருமாள் திருமொழி பாசுரமும் இங்கே அனுசந்தேயம்

————————————————————-

உடைமை நான் என்று உடையான் உயிரை
வடமதுரை வந்து உதித்தான் என்றும் -திடமாக
அறிந்தவன் தன் தாளில் அடைந்தவர்க்கும் உண்டோ
பிறந்து படு நீள் துயரம் பின் –22-

ஆர்த்தா நாம் ஆசு பலதா சக்ருதேவ கருதாஹ்ய சௌ திருப்தாநாம் அபி ஜந்துநாம் தேஹாந்தர நிவாரணீ – —
பிரபத்தி ஸ்வ பாவம் சொல்லும் பிரமாணம்

ஸ்வத்வமாத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் உபயோரேஷ சம்பன்னோ ந பரோபிமதோ மம–ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
என்கிறபடியே
ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் உணருவதே பிரபத்தி -என்றவாறு

————————————————————

ஊழி வினைக் குறும்பர் ஓட்டருவர் என்று அஞ்சி
ஏழை மனமே யினித் தளரேல் -ஆழி வண்ணன்
தன்னடிக் கீழ் வீழ்ந்து சரண் என்று இரந்து ஒரு கால்
சொன்னதர் பின் உண்டோ துயர் –23-

சரணாகதியின் பிரபாவத்தைப் பேசுகிறது –
த்வயத்தை அனுசந்தித்து ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் விழுந்தாருக்கு தீ வினைகள் கண்டு தளர வேண்டாம் -என்றவாறு –

மாபீர் மந்த மநோ விசிந்தய பஹூதா யாமீஸ் சிரம் யாதநா நாமீ ந பிரபவந்தி பாபரிபவ ஸ்வாமீ ந நு ஸ்ரீ தர –
-ஆலஸ்யம் வ்யபநீய பக்தி ஸூலபம் த்யா யஸ்வ நாராயணம் லோகஸ்ய
வ்யசநாப நோத ந கரோதா சஸ்ய கிம் ந ஷம-முகுந்த மாலை ஸ்லோஹம்-

————————————————————————

வண்டு படி துளப மார்பன் இடைச் செய்த பிழை
உண்டு பல வென்று உளம் தளரேல் -தொண்டர் செய்யும்
பல்லாயிரம் பிழைகள் பார்த்து இருந்தும் காணும் கண்
இல்லாதான் காண் இறை –24-

அவிஜ்ஞாதா -சர்வஜ்ஞ்ஞனை அடியார்கள் குற்றங்களைக் காணாதவன் –
அவிஜ்ஞாதா ஹி பக்தாநாம் ஆகஸ் ஸூ கமலேஷண சதா ஜகத் சமஸ்தஞ்ச பஸ்யன் நபி ந பஸ்யதி-ஹ்ருதஸ்தித —
தோஷங்களை காணாமை ஒரு குணம் -கண்டு அவற்றையே நற்றமாகக் கொள்ளுவது வேறு ஒரு குணம்
-அத்தை அடுத்த பாசுரத்தில் அருளிச் செய்கிறார் –
பிரேமத்தின் பரிபாக தசை பலவகைப் பட்டு இருக்கும் -தோஷ தர்சனமும் வாத்சல்யம் -தோஷங்களை குணமாக கொள்ளுவது –
அதனில் மேற்பட்ட தசை -ஷமிப்பது என்பதும் ஒரு தசை

—————————————————————————————–

அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ -எற்றே தன்
கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த வா –25-

அற்றம் உரைக்கில் -என்றது அறுதி இட்டுச் சொல்லும் அளவில் -என்றபடி -சாஸ்திரம் நிஷ்கர்ஷிக்கும் அளவில்

பிரபன்னான் மாதவஸ் சர்வான் தோஷேண பரிக்ருஹ்யதே அத்யஜாதம் யதா வத்சம் தோஷேண சஹ வத்சலா –

இப்படி ஸ்ரீ ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே —பார்யா புத்ரர்கள் குற்றங்களைக் காணாக் கண்ணிட்டு இருக்கும்
புருஷனைப் போலே அவர்கள் குற்றங்களைத் திரு உள்ளத்தாலே நினையாதே —
குற்றங்களை ஸ்ரீ பெரிய பிராட்டியார் காட்டினாலும் அவளோடு மறுதலைத்துத் திண்ணியனாய் நின்று ரஷித்து
காமிநியுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களை போக்யமாகக் கொண்டு —
அன்று ஈன்ற காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களைப் போக்யமாகக் கொண்டு –
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் ஸூரிகளையும் விட்டு ஸ்நேஹித்துக் கொண்டு போரும் –ஸ்ரீ தத்வத்ரய ஸ்ரீ ஸூ க்திகள் –

————————————————

தப்பில் குருவருளால் தாமரையாள் நாயகன் தன்
ஒப்பில் அடிகள் நமக்கு உள்ளது -வைப்பு என்று
தேறி இருப்பார்கள் தேசு பொலி வைகுந்தத்து
ஏறி இருப்பார் பணிகட்கு ஏய்ந்து–26-

ஆச்சார் யஸ்ய பிரசாதேன மம சர்வ மபீப்சிதம் ப்ராப்நுயா மீதி விஸ்வாசோ யஸ்யாஸ்தி ச ஸூகீ பவேத் –

ஸ்ரீ ஆசார்யன் திருவருளாலே நமக்கு எம்பெருமான் திருவடிகள் மஹா நிதியாகக் கிடைத்தன என்று தேறி இருக்குமவர்கள்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விழா வடிமை செய்யும் பாக்யசாலிகளாகத் தட்டில்லை என்கிறார்

————————————————–

நெறி அறியா தாரும் அறிந்தவர் பால் சென்று
செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் -இறை யுரையைத்
தேறாதவரும் திரு மடந்தை கோன் உலகத்
தேறார் இடர் அழுந்துவார் –27-

த்வயம் உபதேசிக்கப் பெறாதவர்கள் -நெறி -சம்சாரம் தப்புவிக்கும் உபாயம் என்று இத்தைச் சொல்லி –
அதை உபதேசிக்க வல்ல ஆசாரியனை அடி பணியாதவர்கள் -ஸ்ரீ சரம ஸ்லோஹத்தில் விஸ்வாசம் அற்றவர்கள்

அஜ்ஞஸ் சாஸ்ரத்ததா நஸ்ச சமசயாத் மாவி நஸ்யதி நாயம் லோகோஸ்தி
நபரோ ந ஸூகம் சம்சயாத் மன -ஸ்ரீ கீதா வசனம் -4-40-

————————————————————————

சரணாகதி மற்றோர் சாதனத்தைப் பற்றில்
அரணாகாது அஞ்சனை தன் சேயை -முரண் அழியக்
கட்டியது வேறோர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
விட்ட படை போல் விடும் –28-

சணல் கண்ட பிரஹ்மாஸ்திரம் போலே நழுவும் –

பிரபத்தே க்வசி தப்யேவம் பராபேஷா ந வித்யதே சாஹி சர்வத்ர சர்வேஷாம் சர்வ காம பலப்ரதா சக்ருதுச்சாரி தாயேன தஸ்ய
சம்சார நாசிநீ ராஷசாநாம் அவிஸ்ரம்பாதாஜ்ஞநே யஸ்ய பந்தனே யதா விகளிதா சத்யஸ் த்வமோகாபி
அஸ்த்ர பந்தநா ததா பும்ஸாம விஸ்ரம்பாத் பிரபத்தி ப்ரச்யுதா பவேத் தஸ்மாத் விச்ரம்ப
யுக்தாநாம் முக்திம் தாஸ்யதி சாசிராத் -ஸ்ரீ சனத்குமார சம்ஹிதாயாம்

——————————————————————————–

மந்த்ரமும் ஈந்த குருவும் அம் மந்திரத்தால்
சிந்தனை செய்கின்ற திருமாலும் -நந்தலிலா
தென்று மருள் புரிவர் யாவரவரிடரை
வென்று கடிதடைவர் வீடு –29-

நந்தல் இலாது-இடைவீடு இன்றி எப்போதும்

மந்த்ரே தததேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ-த்ரிஷூ பக்திஸ் சதா கார்யா சாஹி பிரதம சாதனம் –

தேவதாயா குரோஸ் சைவ மந்த்ராஸ்யைவ பிரசாதத
ஐஹிக ஆமுஷ்மிகா சித்திர் விஜஸ் யஸ்யாந்ந சம்சய -புராண சார சமுச்சையே மூல மந்திர மகாத்ம்யே

மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திர பிரதனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க யுண்டானால் கார்யகரம் ஆவது -ஸ்ரீ முமுஷுப்படி
அருள் புரிவர் -என்றது அருள் புரியப் பெற்றவர் -என்றபடி -மழை பெய்த இடம் என்றால் போலும் இது –

———————————————————————

மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் செம் நெறியும் –பீடுடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டிடுகை கண்டீர் விதி –30-

ஐஹிக ஆமுஷ்மிகம் சர்வம் குருர் அஷ்டாஷர ப்ரத இத்யேவம் யேந மன்யந்தே த்யக் தவ்யாஸ்தே மநீஷிபி –

மாடு பொன் பக்கம் செல்வம் -நிகண்டு -செல்வம் என்றபடி -ஷீரம் தரும் பசு என்றுமாம்
செம் நெறி -மோஷ சாதனம் -ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கம் என்றுமாம் –

இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு பெரிய திருமந்தரம் பிரதானம் -ஸ்ரீ முமுஷுப்படி
உறவை விட்டிடுகை கண்டீர் விதி -அன்னவர்கள் ஹேயர்கள்-என்பதைக் காட்டி நிற்கும்
நூல் கொள்கை -சாஸ்திர விதி என்றவாறு

——————————————

வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-

சரணாகதி தந்த தன்னிறைவன் -த்வயத்தை உபதேசம் பண்ணி அருளிய ஆசார்யனே பர தைவதம் —
சரணாகதிக்கு தீதின்மை யாவது -ஸ்வ ரூப அனுரூபமாய் இருக்கை

குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பரா கதி குருரேவ பரா வித்யா குருரேவ பரம் தனம் குருரேவ
பர காமோ குருரேவ பராயணம் யஸ்மாத் தத் உபதேஷ்டா சௌ தஸ்மாத் குருதரோ குரு
அரச்ச நீயஸ் ச வந்த்யஸ் ச கீரத்த நீயஸ் ச சர்வதா த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்ச யேன்முதா
உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் இதி சர்வேஷூ வேதேஷூ சர்வ சாஸ்த்ரேஷூ சம்மதம்
ஏவம் த்வய உபதேஷ்டாரம் பாவயேத் புத்தி மாந்தியா -ஸ்ரீ சாத்விக தந்த்ரே த்வய பிரசங்கே

———————————————————————–

மானிடவர் என்றும் குருவை மலர்மகள் கோன்
தான் உகந்த கோலம் உலோகம் என்றும் -ஈனமதா
வெண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும்
நண்ணிடுவர் கீழா நரகு –32-

சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநும் மகநா நுத்தரதே லோகன்
காருணயாத சாஸ்திர பாணி நா -என்றும்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும் –
நம்மைப் பிறவிக்கடல் நின்றும் எடுக்கைகாக எம்பெருமான் தானே மனுஷ்ய ரூபம் கொண்டு வந்து
அருளுகிறான் என்று பிரதிபத்தி பண்ணாதே மனுஷ்யன் என்று நினைப்பதும்
உமர் உகந்து உகந்த உருவம் நின்னிருவமாகி -என்றும்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ அர்ச்சா ரூபத்தை அப்ராக்ருத விக்ரஹமாக பிரதிபத்தி பண்ணாதே இதுவும் ஒரு லோஹம் என்று நினைப்பவன்
இருவரும் நீடூழி காலம் நரகத்தில் விழுந்து துவளுமவர்கள்-

விஷ்ணோர் அர்ச்சாவதா ரே ஷூ லோஹபாவம் கரோதிய யோ குரௌ
மானுஷம் பாவம் உபௌ நரகபாதி நௌ —

அர்ச்சாவதாரோபாதான வைஷ்ண வோத்பத்தி சிந்தனம் மாத்ரு யோநி
பரீஷாயாஸ் துல்ய மாஹூர் மநீஷிண —

————————————————————-

எட்டவிருந்த குருவை இறை அன்று என்று
விட்டு ஓர் பரனை விருப்புறுதல்-பொட்டெனத் தன்
கண் செம்பளித்திருந்து கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று –33-

ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் –
கைப்பட்ட பொருளைக் கைவிட்டுப் புதைத்த பொருளைக் கணிசிக்கக் கடவன் அல்லன்
-விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை யுபேஷித்து ஜீமூத ஜலத்தையும் சாகர சலித்தையும்
வாபி கூப பயஸ் ஸூக்களையும் வாஞ்சிக்கக் கடவன் அல்லன் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்திகள் –

இங்கு மா முனிகள் வியாக்யானம் -பிபாசை விஞ்சின போது ஜலத்தை சடக்கெனப் பானம் பண்ணலாம் படி பாத்ரகதமாய்க் கொண்டு
தன் கையில் இருக்கிற ஜலத்தை ஸூலபதையே ஹேதுவாக அநாதரித்துத் தரையிலே உகுத்து –
ஆகாசஸ்தமாய்க் கொண்டு எட்டாத படியையும் பூமிஸ்தமாய் இருக்க தூரஸ்தமாயும் ஆசன்னமாயும் இருக்கச் செய்தே
பெருகும் காலம் ஒழிய வற்றின காலம் இன்றிக்கேயும் எப்போதும் உண்டானாலும் அவ்வளவும் சென்று உபஜீவிக்க வேண்டியும்
இருந்த இடம் தன்னிலே யுண்டாயும் கநித்ராதிகள் கொண்டு பேர வேண்டியம் இருக்கும்
ஜீமூதாதிகளின் ஜலத்தை யாசைப்படுமவனைப் போலே ரஷக அபேஷை பிறந்த தசையிலே அப்போதே தனக்கு உதவும்படி
கை புகுந்து இருக்கிற ஆசார்ய விஷயத்தில் சௌலப்யமே பற்றாசாக உபேஷித்து
பரம ஆகாச வர்த்தியாய் துஷ் ப்ராபமாய் இருக்கிற பரத்வத்தையும்
பூமியிலேயாயும் ஷீராப்தி அளவும் செல்ல வல்லவர்களுக்கு அன்றி யுதவாத வ்யூஹத்தையும்
ஆசன்னமாக வந்தும் தாத்காலிகர்க்கு ஒழியபாச்சாத்யர்க்கு உதவாத விபவத்தையும் நித்ய சந்நிதி யுண்டாயும்
சம்பாஷணாதிகளால் இவனோடு கை கலந்து இராத அர்ச்சாவதாரத்தையும்
இருந்த இடம் தன்னிலே உண்டாய் இருந்த தாகிலும் யம நியமாதி க்ரமேணயத்நித்து தர்சிக்க வேண்டும் அந்தர்யாமித்வத்தையும்
ஆசைப் படக் கடவன் அல்லன் என்கை –

சஷூர் கம்யம் குரும் த்யக்த்வா சாஸ்திர கம்யம் துயஸ் ஸ்மரேத் கரஸ்தம் உதகம்
த்யக்த்வா கநஸ்தம் அபி வாஞ்சதி -என்று-இவ்வர்த்தம் தான் ஸ்ரீ பகவத் போதாயன க்ருதமான புராண சமுச்சயத்தில்-
ஸ்ரீ ஆச்சார்ய மஹாத்ம்ய பிரகாரணத்தில் சொல்லப் பட்டது இறே

எட்டவிருந்த குருவை இறை அன்று என்று விட்டு –அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று -என்றும்
சொல்லக் கடவது இறே -என்று ஸ்ரீ மா முனிகள் அருளினார் –

—————————————————–

பற்று குருவைப் பரன் அன்று என இகழ்ந்து
மற்றோர் பரனை வழிபடுதல் -எற்றே தன்
கைப் பொருள் விட்டு ஆரேனும் காசினியில் தாம் புதைத்த
அப்பொருள் தேடித் திரிவான் அற்று –34

ஸூலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் யா உபாஸதே லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்த மன்வேஷ திஷிதௌ–

அதி ஸூலபனாய்த் தனக்குக் கை புகுந்து இருக்கும் ஆசார்யனை அவரத்வ புத்தியாலே உபேஷித்து
அதி துர்லபனாய்ப் பெரு முயற்சிகள் செய்து காண வேண்டும் படி இருக்கும் ஸ்ரீ ஈஸ்வரனை அனுவர்த்திப்பதானது –
கைப்பட்டு இருக்கும் கிழிச் சீரையை விட்டு பூமிக்குள்ள புதைத்து வைத்து இருக்கும் பொருளைத் தேடித் திரிவது ஒக்கும்

———————————————————-

என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும்
அன்றும் தன்னாரியன் பால் அன்பு ஒழியில்-நின்ற
புனல் பிரிந்த பங்கயத்தைப் பொங்கு சுடர் வெய்யோன்
அனல் உமிழ்ந்து தானுலர்த்தி யற்று –35-

நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ பிரச் யுதஸ்ய துர்ப்புத்தே கமலம்
ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி-

ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் ஸ்வரூபத்தை வாடவும் பண்ணுவன்
தாமரையை அலற்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை யுலர்த்துமா போலே
ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆசார்ய சம்பந்தம் குலைந்தால்
அத்தை வாடப் பண்ணும் -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள்

—————————————————-

வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-

செல் -மேகம் -மேகங்கள் வந்து படியும்படி ஓங்கி இருக்கும் சோலைகள் சூழ்ந்த திருப்பதிகள் எல்லாம் என்றபடி

யேநைவ குருணா யஸ்ய நியாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச

சச்சிஷ்யனாய் சதாசார்யா ப்ரேமம் உடையனாய் இருக்குமவனுக்கு சகல திவ்ய தேசங்களும்
தன்னாசார்யனே யாவான் -என்கிறது
ஸ்லோஹத்தில் ஸ்ரீ வைகுண்டத்தையும் -ஸ்ரீ ஷீராப்தி யையும் -ஸ்ரீமத் த்வாரகையும் சொல்லிற்று –
இப் பாட்டில் ஸ்ரீ திருமலை முதலான திவ்ய தேசங்களைச் சொல்லிற்று –

————————————————–

பொருளும் உயிரும் உடம்பும் புகலும்
தெருளும் குணமும் செயலும் -அருள் புரிந்த
தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
எந்நாளும் மாலுக்கு இடம் –37-

பொருளும் உயிரும் உடம்பும் புகலும்-செல்வமும் பிராணனும் உடலும் வீடும் –
தெருளும் குணமும் செயலும்-ஞானமும் சமதமாதி குணங்களும் செய்கைகளும் ஆகிய இவை எல்லாமும் —

சரீரம் வஸூ விஜ்ஞானம் வாஸ கர்ம குணா ந ஸூந் குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ச சிஷ்யோ நேதரஸ்
ஸ்ம்ருத குர்வர்த்தம் ஸ்வாத்மன பும்ஸ க்ருதஜ்ஞஸ்ய மஹாத்மான ஸூபிரசன்னஸ் சதா விஷ்ணுர்
ஹ்ருதி தஸ்ய விராஜதே -ஸ்ரீ ஜய சம்ஹிதையில் ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்தது

அர்த்தம் பிராணன் சரீரம் முதலான எல்லாவற்றையும் ஆசார்ய சேஷமாக அனுசந்திக்குமவர்கள் நெஞ்சு
சர்வேஸ்வரன் சர்வ காலமும் வாசஸ் ஸ்தானம் -ஆகும் –ஸ்ரீ ஆசார்ய பக்தர்களுக்கே
ஸ்ரீ எம்பெருமான் உடைய திருவருளுக்கு இலக்காவார்

——————————————————————

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-

சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தா நும் மக்நான் உத்தர தே லோகன் காருண்யாச் சாஸ்திர பாணிநா
தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா சம்சார பய பீருணா -என்று –ஸ்ரீ ஐயாக்க்ய சம்ஹிதையில் ஸ்ரீ சாண்டில்யன் சொன்ன வசனம்

கீழே அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய பிரபாவம் தகும் என்பதை ஸ்ரீ ஆசார்யன் சாஷாத் நாராயணன் உடைய அவதார விசேஷமே
என்ற சாஸ்த்ரார்த்தம் காட்டி அருளுகிறார் –
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -ஸ்ரீ பெரியாழ்வார் –

———————————————————————–

அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்
போற்றிலது புன்மையே யாம் –39-

அலகை -பேய்மகள் -பூதனை -பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையோடு உயிரை வற்ற வாங்கி
உண்டவனுக்கு அன்பு பூண்டார் அடியார் அடியார் –

நியாச வித்யைக நிஷ்டா நாம் வைஷ்ணவா நாம் மஹாத்மா நாம் ப்ராக்ருதாபி ஸ்துதிர் நிந்தா நிந்தாஸ்துதிரிதி ஸ்ம்ருதா –

பாகவத உத்தமர்களின் ஏற்றம் அறிந்து அவர்களைக் கொண்டாடக் கடமைப் பட்டவர்கள் –
அறிவை என்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே -என்னும்படி இருக்கும் மஹா ஜ்ஞான நிதிகள் மஹா நீயர்கள் –
அவிவேகிகள் -லௌகிகர் பழிப்பதும் புகழ்வதும் -வாசி இல்லாமல் -மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் -என்கிற கணக்கில் –

——————————————————-

அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம் -நல்ல
படியாம் மனு நூற்கு அவர் சரிதை பார்வை
செடியார் வினைத் தொகைக்குத் தீ –40-

பரம பாகவத உத்தமர்களின் வாய்ச் சொல்லுக்கு மேற்பட்ட வேதம் இல்லை –
அவர்கள் நடத்தைகளுக்கு மேற்பட்ட தர்ம சாஸ்திரம் இல்லை
அவர்களது கடாஷ வீஷணத்துக்கு மேற்பட்ட பாவனம் வேறு ஓன்று இல்லை -என்று
அருளிச் செய்து இந்த பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளுகிறார் –

வேத சாஸ்த்ர ரதா ரூடா ஜ்ஞானகட்கதரா த்விஜா க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ச தர்ம பரமோ மத -பிரமாணம் கொண்டு
சொல்லும் அவிடு சுருதியாம் -அவிடு விநோத வார்த்தை

வாஸூ தேவம் ப்ரபன்நா நாம் யான்யேவ சரிதா நிவை தான்யேவ தர்ம சாஸ்த்ராணீ த்யேவம் வேத விதோ விது-பிரமாணம் படி
நல்ல படியாம் மனு நூற்கு அவர் சரிதை

ந ஸூத்த்யாதி ததா ஜந்துஸ் தீர்த்த வாரி சதைரபி லிலயைவ யதா பூப வைஷ்ணவாநாம் ஹி வீஷணை -பிரமாணம்
அடி ஒற்றி -அவர் பார்வை செடியார் வினைத் தொகைக்குத் தீ -என்று அருளிச் செய்கிறார் –

—————————————————-

ஆக இப்படி ஸ்ரீ சாஸ்திரங்கள் இதிஹாச புராணாதிகளில் சாரமாக விளங்கும் பிரமாண வசங்களை பாசுரம் ஆக்கிப் பணித்த
ஞான சாரம் பிரபந்தம் இவ்வளவோடு தலைக் கட்டி அருளுகிறார் –

———————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: