ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த -பிரமேய சாரம் –ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் அருளிச் செய்த-தெளியுரை சாரம்

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீணிலத்தீர்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்து அளிக்கும்
பூங்கா வளம் பொழில் சூழ் புடை வாழும் புதுப்புளி மன்
ஆங்காரம் அற்ற அருளாள மா முனி யம்புதமே –தனியன்

———————————————

அவதாரிகை –
கரை புரண்ட கருணையினால் சகல சாஸ்திர சாரமான ஸ்ரீ திரு மந்த்ரத்தில்
பிரதி பாதிக்கப் படுகிற ப்ரமேயங்களை
அர்த்த விசேஷங்களை எல்லாம் தொகுத்து
பிரமேய சாரம் என்னும் இப்பிரபந்தத்தை அருளிச் செய்கிறார் –

இதில் முதல் பாட்டில் –
திரு அஷ்டாஷர மஹா மந்த்ரத்துக்கு சங்க்ரஹமான பிரணவத்தின் சாரமான பொருளைப் பேசுகிறார்

அவ் வானவருக்கு மவ் வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் -இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-

உகாரார்தமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் ஒத்த புருஷகார பூதர்களான ஸ்ரீ ஆசார்யர்கள்
மூவகைப் பட்ட ஆத்ம சமஷ்டி எல்லாம்
ஸ்ரீ எம்பெருமானுக்கு சேஷ பூதர்கள் என்று பணிப்பர்கள்

இப்படி உபதேச முகத்தாலே கேட்டு இவ்வர்த்தத்தில் ஊன்றி இருக்குமவர்களுக்கு
அடிமைப் பட்டவர்களாகத் தம்மை அத்யவசித்து இருக்குமவர்கள்
மீளுதல் இல்லாத ஸ்ரீ திரு நாட்டிலே வீற்று இருப்பார்கள் என்று உறுதியாக இருப்பேன் என்கிறார் –

இத்தால் ஸ்ரீ பகவத சேஷத்வத்தொடு கூட
ஸ்ரீ பாகவத சேஷத்வத்தையும் தெரிந்து கொள்வார் யாவரோ
அவர்கள் தாம் பேறு பெறுவார் என்றதாயிற்று –

———————————————————-

குலம் ஓன்று உயிர் பல தம் குற்றத்தால் இட்ட
கலம் ஓன்று காரியமும் வேறாம் பலம் ஓன்று
காணாமை காணும் கருத்தார் திருத் தாள்கள்
பேணாமை காணும் பிழை –2-

ஆத்மாக்கள் பல வகைப்பட்டு இருந்தாலும் -அவ் வாத்மாக்களுக்கு தொண்டைக் குலம் ஒன்றே யாம் –
இவர்கள் தங்களுக்குக் கரும வசமாக ஸ்ரீ எம்பெருமான் தந்த தேஹமும் ப்ராக்ருதமான தொன்றேயாம் –
நிஷ்க்ருஷ்டாத்மா ஸ்வரூபத்தில் குல பேதங்கள் இல்லையே

அனுபவிக்கும் பலன்கள் வெவ்வேறு பட்டனவாம் –
கர்மங்களுக்கு ஏற்ப சரீரங்கள் கொள்ளுகிறார்கள்
ஒரு வகையான பலனையும் எதிர்பாராமல் கடாஷிக்கத் திரு உள்ளம் உடைய ஸ்ரீ ஆசாரியர்களது
திருவடிகளை விரும்பிப் பணியாத தொன்றே –
துர்க்கதிகளுக்கு மூல காரணமான பிழை

க்யாதி லாப பூஜைகளில் ஒன்றையும் கருதாமல்
கடாஷிப்பது ஒன்றையே கருத்தில் கொண்டவர்கள் ஆசார்யர்கள் –
அவர்கள் உடைய திருத் தாள்களைப் பேணாமையாகிற பிழை தான் இதற்குக் காரணம் –

——————————————————–

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என் கூறீர் -தலம் கொண்ட
தாளிணையான் அன்றே தனை ஒழிந்த யாவரையும்
ஆளுடையான் அன்றே யவன் –3-

நியமேன பலத்தோடு சந்திப்பித்தே விடும் பாவம் உண்டாய் இருக்குமானால் குலத்தினால் என்ன பலனாகும் –
எல்லா ஸ்தலங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட உபய பாதங்களை யுடையனான ஸ்ரீ எம்பெருமான்
அன்றே -உலகு அளந்த அக் காலத்திலேயே –
தனை ஒழிந்த யாவரையும் –ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த சேதனர்களையும்
ஆள் உடையான் அன்றே – அடிமை கொண்டவன் அன்றோ –

தாவி யன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்-
நிர்ஹேதுகமாக தன்னடிக் கீழ் கொண்டான் ஸ்ரீ திரிவிக்ரமன் –
பிரயோஜனாந்தர ப்ராவணயமே தொண்டைக் குலம் நம் பக்கல்
ஒழிக்க ஒழியாததாக இருக்கச் செய்தே பயன் அற்றதாகிறது

————————————————–

கருமத்தால் ஞானத்தால் காணும் வகை யுண்டே
தரும் அத்தால் அன்றி இறை தாள்கள் -ஒருமத்தால்
முந்நீர் கடைந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி –4-

ஸ்வ யதன ரூபமான கர்ம யோக ஜ்ஞான யோகாதிகளால் காண முடியாதே
பர கத ஸ்வீகாரத்தாலே -இறை தாள்கள் தரும் அத்தால் அன்றி –
தாமே தம்மைக் காட்டிக் கொடுத்தாலே காண இயலும் –

பிராப்யம் தானே பிராபகம் என்கிறது –

நீதி நிஸ் தரணா நந்தரம் ப்லவ பரித்யாகம் போலே –
உபாயம் கைப்பட்ட வாறே உபாயம் விடத் தக்கதாயும் இருக்கும்
இங்கு அப்படி அல்லவே –
இறை அடியை இறை தாள்கள் தரும் அத்தால் காணும் வகை யுண்டே யன்று
ஸ்வ யத்னத்தால் காணும் வகை இல்லை –

—————————————————————————–

வழியாவது ஓன்று என்றால் மற்றவையும் முற்றும்
ஒழியாவது ஓன்று என்றால் ஓம் என்று -இழியாதே
இத்தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
அத்ததலையால் வந்த வருள் –5-

வழியாவது ஓன்று என்றால் -ப்ராப்தி சாதனமாகக் கூடியது சித்த உபாயமான ஓன்று தான் என்று சொன்னால்
ஓம் என்று -அதற்கு இசைந்தும்
மற்றவையும் முற்றும் ஒழியா -மற்றை யுபாயாந்தரங்களை எல்லாம் அறவே ஒழித்து
வது ஓன்று என்றால் -அந்த சித்த உபாயத்திலேயே பொருந்து என்று சொன்னால்
ஓம் என்று -இழியாதே -அதற்கும் இசைந்து -ஸ்வ பிரவ்ருத்தியில் கை வைக்காமல்
இத்தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான் -சேதன பிரவ்ருத்தியால் யாவது ஒன்றும் இல்லை
என்று உறுதி கொண்டு இருப்பது தான்
அத்தலையால் வந்த வருள்-ஸ்ரீ சர்வேஸ்வரன் அடியாக வாய்ந்த கிருபை யாகும் –

உபாயாந்தரங்களை சவாசனமாக விட்டு ஒழிக்க வேணும் –

இத் தலையால் விளைவித்துக் கொள்வதொரு நன்மை இல்லை என்றும்
எந்த நன்மையையும் அத்தலையால் உண்டாகும் அத்தனை என்றும்
துணிந்து இருப்பது தான் க்ருபா பலம் -என்றதாயிற்று –

——————————————————-

உள்ளபடி யுணரில் ஓன்று நமக்கு உண்டு என்று
விள்ள விரகு இலதாய் விட்டதே -கொள்ளக்
குறையேதும் இல்லாற்குக் கூறுவது என் சொல்லீர்
இறையேதும் இல்லாத யாம் –6-

பர கத ஸ்வீகாரம் ஓன்று நமக்கு உளதென்று யதார்த்தமாக உணர்ந்து பார்க்கும் அளவில்
அவனை விட்டு நீங்கும் வழி இல்லை யன்றோ –

நம்மிடத்தில் ஓன்று கொள்ள வேண்டும்படி ஒரு குறையும் இல்லாதவனான
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு எவ்வுபாயமும் சிறிதும் இல்லாத -அகிஞ்சனான நாம்
பிரார்த்தனா ரூபமாகச் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது –
விவேகிகளே சொல்லுங்கோள்

அரங்கா அடியேற்கு இரங்காயே -என்ற ஓர் உக்தி மாத்ரமாவது -இத்தையும்
நாம் ஆற்றாமையின் கனத்தாலே சொல்லுகிறோம்
அத் தலைக்கு அவஸ்ய அபேஷிதம் என்னும் நினைவாலே சொல்லுகிறோம் அல்லோம் -என்கிறார் –

—————————————————————

இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை அஃது ஒருவர்க்கு எட்டுமதோ -இல்லை
குறையுடைமை தான் என்று கூறினார் இல்லா
மறை யுடைய மார்க்கத்தே காண் –7-

கூறினார் எல்லாம் பாட பிழை -கூறினார் இல்லா மறை -அபௌருஷேயம் மறை

இல்லை இருவர்க்கும் என்று -ஜீவாத்மா பரமாத்களான இருவருக்கும் -இல்லாமை உண்டு என்று கொண்டு
இறையை வென்று இருப்பார் இல்லை-ஸ்வாமியான அவனை ஜெயித்து இருப்பார் ஒருவரும் இலர் –
அஃது ஒருவர்க்கு எட்டுமதோ -அப்படிப்பட்ட வெற்றி சாமான்யமாக ஒருவருக்குக் கிட்டக் கடவதோ –
இருவருக்கும் இல்லாமை ஓன்று உண்டு என்றது எவை என்னில்
குறை தான் இல்லை -அப்பெருமானுக்கு நம் பக்கலில் ஓன்று கொள்ள வேண்டும்படியான குறை இல்லை
யுடைமை தான் இல்லை -சேதனனுக்கு சமர்ப்பிக்கத் தக்கதான பொருள் எதுவும் இல்லை
என்று -என்னும் இவ் விஷயத்தை
கூறினார் இல்லா மறை யுடைய மார்க்கத்தே காண்-அபௌருஷேயம் ஆகையாலே வக்தாக்களை யுடையதல்லாத
வேத மார்க்கத்தில் கண்டு கொள்-வேத விழுப் பொருள் என்றதாயிற்று –

அவாப்த சமஸ்த காமன் -அவன் –
அவனுக்கு இடலாவது ஒரு உடைமை நம் பக்கல் இல்லை –
அவன் பக்கல் குறை இல்லை
நம் பக்கல் உடைமை இல்லை -என்றவாறு –

———————————————————-

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம்
தத்தம் அவையே தலை யளிக்கும் -அத்தை விடீர்
இச்சியான் இச்சியாது ஏத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானாம் –8-

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம் -தன் லாபம் -தனத்தின் இழவு சுக துக்கங்கள்
வியாதி சரீர விநாசம் ஆகிய இவை எல்லாம்
தத்தம் அவையே தலை யளிக்கும் -தம் தம் கர்ம அனுகுணமாக வந்து சேரும்
அத்தை விடீர் -அவற்றில் கரைதலை விட்டிடுங்கள்

இச்சியான் இச்சியாது ஏத்த -அநந்ய பிரயோஜனன் என்று பேர் பெற்றவன்
நிஷ்காமனாய்க் கொண்டு துதி செய்யும் அளவில்
எழில் வானத்து உச்சியான் உச்சியானாம்-பரமபதத்தில் உச்சியில் உள்ளானான ஸ்ரீ சர்வேஸ்வரன்
இவன் தனது தலையில் வந்து சேர்ந்தவன் ஆவான் –

சேணுயர் வானத்து இருக்கும் தேவ -தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு -என்னும்படி
வாய் படைத்த பிரயோஜனம் என்று அநந்ய பிரயோஜனன் துதிக்க
அவன் தலை மிசை வந்து நின்று கூத்தாடுவான் -பிரான்

—————————————————————————————–

தத்தம் இறையின் வடிவென்று தாளிணையை
வைத்த வவரை வணங்கியிராப் –பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம் நீதியால்
வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் –9-

தம் திருவடிகளைத் தஞ்சமாகக் காட்டிக் கொடுத்த ஸ்ரீ ஆசாரியரை
தம் தம் சுவாமியின் திவ்ய மங்கள விக்ரஹம் என்று கொண்டு
வணங்கி வழிபாடு செய்யாத பித்தர்களாகி நிந்திக்குமவர்களுக்கு
ஒரு நாளும் கரை ஏற முடியாத சம்சாரப் படு குழியில் வீழ்ச்சியேயாம்
முறை தவறாது வணங்கி வழிபாடும் சச் சிஷ்யர்களுக்கு மீட்சியில்லாத ஸ்ரீ திரு நாடே யாம் –
தாளிணையை வைத்தவர் -என்றே ஸ்ரீ ஆசார்யரை நிர்தேசிக்கிறார்

மருளாம் இருளோடு மத்தகத்துத் தன் தான் அருளாலே வைத்தவர் -ஞான சாரம் -36–என்றபடி
தம் திருவடியைத் தலை மேல் வைத்தவர் -என்னலாம்

ஊழி முதல்வனையே பண்ணப் பணித்த விராமானுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் –என்றும்
அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் -என்றும் அருளிச் செய்த படி
ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளைத் தலை மேல் வைத்தவர் -என்றுமாம்

இப்படிப்பட்ட ஸ்ரீ ஆசார்யரை ஸ்ரீ சர்வேஸ்வரன் வடிவே என்று கொள்ளாதே நிந்திப்பார் நகரத்து அழுந்துவர் –
ஒரு நாளும் கரை ஏற முடியாத -சம்சாரப் படுகுழியில் வீழ்வார் –
நீதியால் வந்திப்பார் -முறை தவறாது வணங்கி வழிபடும் சச் சிஷ்யர்கள் மீட்சி இல்லாத ஸ்ரீ திரு நாடு பெறுவார் –

——————————————————————————-

இறையும் உயிரும் இருவர்க்கும் உள்ள
முறையும் முறையே மொழியும் –மறையையும்
உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல ஆன
உணர்த்துவார் உண்டான போது –10-

ஸ்ரீ சர்வேஸ்வரனையும் சேதனனையும் இவ்விருவருக்கும் உண்டான
சேஷ சேஷி பாவ ரூபமான சம்பந்தத்தையும் உள்ளபடி தெரிவிக்கின்ற
சகல வேத சாரமான – ஸ்ரீ திரு மந்த்ரத்தை உபதேசிக்கும் ஆசாரியன் இல்லாத காலம் அசத் கல்பமே —

உபதேசிக்கும் ஸ்ரீ ஆசாரியர் உள்ள காலம் தான் சத்தான காலம் –

ப்ரமேயங்களில் சாரமான அர்த்தத்தை அருளிச் செய்து இப்பிரபந்தத்தை தலைக் கட்டி அருளுகிறார் –

திவ்ய சஷூஸ்ஸூக்கள் போன்ற -ஞான சாரம் -பிரமேய சாரம் -இரண்டு பிரபந்தங்கள் –
அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார் –

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: