திருவாய் மொழி நூற்றந்தாதி -41-50—பாசுர வியாக்யானம் —ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு-மெய்யான
பேற்றை யுபகரித்த பேரருளின் தன்மை தனை
போற்றினனே மாறன் பொலிந்து –41-

கபடமான பக்தி செய்பவர்களுக்கும்-புறன் உரையே யாயினும் -வெற்றுரை என்றபடி – கருணை பொழியும் சக்கரத்தோன் உபகரித்தான்
ஒன்றும் தீவில் பரத்வம் உபதேசித்து சம்சாரிகளை திருத்தும் பணியில் அருளி திருந்தினவர்கள் படியைக் கண்டு பொலிக பொலிக -மங்களா சாசனம்
பண்ணுவதற்கு முன்பு -தம்மைப் பார்த்தார் -சம்சாரிகளை போலே இங்கேயே இருக்கச் செய்தேயும் உபதேசம் பண்ணித் திருத்தும் படியாக அருள் புரிந்தானே
இதற்கு நிதானம் ஏதேனும் உண்டோ என்று ஆராய்ந்து -இந்த அருள் நிர்ஹேதுகம் என்பதை அறிந்து உள் குழைந்து அத்தை பேசி அனுபவிக்கிறார்
சப்தாதி விஷயங்களிலே மண்டிக் கிடந்தது பகவத் விஷயம் வாயாலே சொல்பவன் போலே பாவனை செய்தாலும்
அந்த உக்தி தன்னையே பற்றாசாகக் கொண்டு விஷயீ கரித்தவாறு என்னே என்று ஆச்சர்யப் படுகிறார் –

———————————————————————————

பொலிக பொலிக என்று பூ மகள் கோன் தொண்டர்
மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி -உலகில்
திருந்தாதார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மனமாசு –42–

கீழே நண்ணாதார் முறுவலிப்ப -திருவாய் மொழியில் கொடு உலகம் காட்டேல் என்ற ஆழ்வாருக்கு இந்நிலத்தில் இருப்பு ஒருவாறு போக்யமாகைக்காக
ஸ்ரீ வைஷ்ணவத் திரள் மலிந்து இருக்கும் படியை எம்பெருமான் காட்டிக் கொடுக்க
பொலிக பொலிக -மங்களா சாசனமும் செய்து அருளியும்-இன்னும் திருந்தாத சம்சாரிகளை உபதேசங்களாலே திருத்தியும் அருளிச் செய்த
திருவாய் மொழியே நமது மனனக மலங்கள் கழிய அரு மருந்து –
நித்ய சூரிகள் வந்ததாகவும் -லோகாந்தரத்தில் உள்ளார் வந்ததாகவும் -அருளிச் செய்வர்
அடிமை புக்காரையும் ஆட செய்வாரையும் காண லோக த்வீபாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குழாங்களை கண்டு காப்பிட்டு -ஆசார்ய ஹிருதயம் –

—————————————————————–

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் -ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்க தான் பிறந்த ஊர் –43-

கீழே பொலிக பொலிக -பதிகத்தில் மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை -சௌந்தர்யம் சௌலப்யம் அனுசந்தித்து
அனுபவிக்கக் கை நீட்ட -எம்பெருமான் அகப்படாமையை யால் மடல் எடுப்பேன் என்று அச்சமூட்டி கார்யம் கொள்ள பார்க்கிறாள்
-மடலூர்துமே -என்று நாயகி பாவத்தில் அருளும் திருவாய் மொழி
பிரபன்ன ஜன கூடஸ்தர் இப்படி ஸ்வரூப விருத்தமான மடலூரலாமோ -ஜ்ஞானம் கனிந்த நலம் –பிராப்த அப்ராப்த விவேகம் காண முடியாமல்
-பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -இந்த அதிபிரவ்ருத்தியும் அவனது கிருஷி பலன்
அவனுடைய முக மலர்த்திக்காக பண்ணும் கைங்கர்யத்துடன் உபயத்தில் அந்தர்பூதம் ஆகுமே இந்த அதி பிரவ்ருதிகளும்

——————————————————————————–

ஊர நினைந்த மடல் ஊரவும் ஒண்ணாத படி
கூர் இருள் சேர் கங்குலுடன் கூடி நின்று -பேராமல்
தீது செய்ய மாறன் திரு உள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்கனயோ –44-

இரவு வந்ததால் மடலூர முடியாமல் போயிற்றே -ஆழியால் அன்று ஆங்கு ஆழியை மறைத்தான் –ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப –
-போலே அவனே மறைத்தான் போலும்
உசாத் துணைக்கு யாரும் இல்லையே -திருக் குணங்களை அனுசந்திக்க -இதுவே ஆற்றாமைக்கு உருப்பாயிற்று
அசோகா வனத்தில் முடியப் பார்த்த பிராட்டி நிலை போலே ஆழ்வார் நிலையம் ஆனதே -அந்த அவசாதனம் எல்லாம் நாயகி பாவனையில்
கீழே போலே இந்த திருவாய் மொழியும் செல்கிறது –

—————————————————————————————

எங்கனே நீர் முனிவது என்னை இனி நம்பி அழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா யுரைத்த தமிழ் மாறன்
கருதுமவர்க்கு இன்பக் கடல் –45-

திவ்ய ஆயுத ஆபரண அவயவ சோபைகளில் ஈடு பட்ட பின்பு பகவத் விஷயத்தில் நின்றும் என்னை மீட்கப் பார்ப்பது வீணே யாகும் –
இத் திருவாய் மொழியில் ஆழ்வாருக்கு இன்பமும் துன்பமும் கலந்தே உண்டானாலும் இத் திருவாய் மொழி அருளிய ஆழ்வாரை சிந்திக்க
நமக்கு நிரதிசய பேரின்பம் கிட்டும்
கீழ் ஊரெல்லாம் துஞ்சி -இருளுக்கும் பனிக்கும் நலிந்த படி சொல்லிற்று – தமோ குணம் -துக்க வர்ஷணி -இருள் நீங்கி பகல் வர
வாய் வெருவும்படி ஆயிற்று -மானச சாஷாத் காரம் உரு வெளிப்பாடாக செல்லும் திருவாய் மொழி

———————————————————————–

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடன் ஆ அனுகரிக்கலுற்று திடமாக
வாய்ந்தவனாகத் தான் பேசும் மாறன் உரை யதனை
ஆய்ந்து உரைப்பார் ஆட்செய நோற்றார் –46–

கீழே எங்கனயோ -உரு வெளிப்பாட்டில் சென்றதே ஒழிய சாஷாத் கரிக்கப் பெற்றதில்லை -எனவே கிலேசம் மிக்கு
அனுகரித்து தரிக்கப் பார்க்கிறார்
அவர் அருளிச் செய்த இந்த திருவாய் மொழியை ஓத வல்லார்கள் ஆழ்வாருக்கு அடிமை செய்யப் பெறுவார்
திருக் குரவையில் ஆய்சிமார்கள் கண்ணனாகவும் காளியனாகவும் அனுகரித்து
கிருஷ்ணே நிபத்தஹ்ருதயா இதமூசு பரஸ்பரம் கிருஷ்ணோ ஹமேஷ லலிதம் வ்ரஜாம் யாலோக்யதாம் கதி
அந்யா பிரவீதி கிருஷ்ணச்ய மம கீதிர் நிசம்யதாம் துஷ்ட காளிய திஷ்டாத்ர கிருஷ்ணோ ஹமிதி சாபரா
பாஹூ மாஸ் போடா கிருஷ்ணச்ய லீலா சர்வஸ்வமாததே அந்ய பிரவீதி ஹே கோபோ நிச்சங்கை ஸ்தீய தாமிஹ
அலம் வ்ருஷ்டி பயோ நாத்ர தருதோ கோவர்த்த நோ மயா தே நு கோயம் மயா ஷிப்தோ விசரந்து யதேச்சயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-23-
ஆண்டாளும் ஆய்சிகள் போலே அனுகரித்து நோன்பு நோற்றாள்
இங்கே மகளின் அனுகாரத்தை தாய் பாசுரமாக அருளுகிறார் -இது என்ன நிலைமை என்று தாய் ஆராய்ந்து இருக்க -பந்துக்கள் அருகே வந்து
இது என்ன என்று வினவ எம்பெருமான் ஆவேசித்தான் போலே இருக்கிறது என்று சொல்லும் முகமாகச் செல்லுகிறது இத் திருவாய் மொழி

———————————————————————————-

நோற்ற நோன்பாதியிலேன் உந்தனை விட்டு ஆற்றகில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன்தன் பேரருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது –47–

கடல் ஞாலம் செய்தேனே -என்னும் கீழ் திருவாய் மொழியிலே ஆழ்வார் அனுகரித்து பேசி ஒருவாறு தரித்தார்
அவ்வளவிலும் முகம் காட்டாமையாலே பழைய ஆர்த்தி தலை எடுத்தது
உபயாந்தரங்கள் சம்பந்தம் உண்டோ என்று சங்கை கொண்டானோ என்று அவை இல்லை என்று வேர் அற்ற மரம் போலே
வானமா மலை பெருமாள் திருவடிகளில் சரணம் புகுகிறார்

————————————————————————–

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் –48–

குளிர நோக்குதல் குசல பிரச்னம் பண்ணுதல் தழுவுதல் போன்ற பேறுகளை விரும்பி பெறாமல் தளர்ந்து -பேசின திருவாய் மொழி
ஆராவமுது –ஆழ்வார் ஆதரித்த பேறுகளை -பிரித்து சொல்லக் கூடாது -பெருமாள் திரு நாமம் ஆராவமுதாழ்வார்
கனக்க பாரித்து இங்கே வந்து சரணம் புகுந்தார்
ஸ்த நந்த்ய பிரஜை தாய் பக்கல் கிட்டி முகம் பெறாமையால் அலமந்து நோவு படுமா போலே சந்நிதியிலே இருந்து தளர்ந்து கிடந்தது
கூப்பிட்டு ஆர்த்தியுடன் அருளிச் செய்கிறார் –

—————————————————————————-

மா நலத்தால் மாறன் திருவல்ல வாழ் புகப் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்பமுற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற –49-

மா நலத்தால் -மிகுந்த பிரேமத்துடன்
மேல் நலங்கித்–சமீபத்தில் தளர்ந்து வீழ்ந்த துன்பத்துக்கு மேலே தோழி மார்கள் உடைய நிஷேத வசனங்களாலும் நலிவு பட்டு
பின் பிற பிறக்க வேண்டா -இனி மேலும் வேறு பிறவிகள் பிறக்க வேண்டாமல் முக்தி சாம்ராஜ்யம் பெறுவார்
கீழே ஆராவமுதே –பதிகத்தில் அடைந்த தளர்ச்சி அபரிமிதமாக இருக்க திரு வல்ல வாழ் போக ஒருப்பட்டு போகவும் முடியாமல்
அதற்கு மேலே பரிமளம் முகந்த தென்றல் வண்டுகளின் மிடற்றோசை வேத வைதிக கோஷங்கள் நலிவதை
தோழி மார்களுக்கு தலைவி சொல்லும் பதிகம் மானேய் நோக்கு -திருவாய்மொழி –

—————————————————————————-

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா உன்
சிறந்த குணத்தால் உருகும்சீலத் -திறம் தவிர்ந்து
சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே வைகு——————50-

விபவ அவதார குண சேஷ்டிதங்களைச் சிந்தை செய்யப் புகுந்த ஆழ்வார் அவற்றைச் சிந்தை செய்ய முடியாமல் நெஞ்சு உருகிப் போகவே
அந்த எம்பெருமானையே நோக்கி பிரானே இப்படி உருகிப் போகாமல் தரித்து நின்று அனுபவிக்கும் படியாக நீயே கிருபை பண்னி யருள வேணும்
என்று -பிறந்தவாறு -என்கிற திருவாய் மொழியில் பிரார்த்தித்தார் -அவருடைய திருவடிகளே சிந்திக்கத் தக்கன -என்றார் ஆயிற்று –
ஆழ்வார் திருவடிகளே வாய்ந்த -ப்ராப்தமான திருவடிகள் -இவையே சிந்திக்கத் தக்கன -என்கிறார்

——————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளை
ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading