ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் -நான்காம் பிரகரணம் –உபேய யாதாத்ம்யம் –

ஸ்ரீ ப்ரேமேய ரத்னம்-நான்காம் பிரகரணம் –உபேய யாதாத்ம்யம்

அநந்தரம்-உபேய யாதாத்ம்யம் பிரதிபாதிக்கப் படுகிறது -எங்கனே என்னில் -உபேயங்கள் அநேக விதங்களாய் இருக்கும்
-ஐஸ்வர்யம் என்றும் -கைவல்யம் என்றும் -பகவத் பிராப்தி என்றும் -இதில் ஐஸ்வர்யம் பலவகையாய் இருக்கும் –
கைவல்யமாவது கன்று நாக்கு வற்றிச் சாவா நிற்க தாய் தன முலையைத் தானே உண்ணுமா போலே -என்று பட்டர் அருளிச் செய்வர் –
சர்வ அலங்க்ருதையான ஸ்திரீக்கு பர்த்ரு விக்ரஹம் போலே என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
இனி பகவத் பிராப்தியாவது ஐஸ்வர்யா கைவல்யங்களை காற்க் கடைக் கொண்டு அர்ச்சிராதி மார்க்கத்தாலே அந்தமில் பேரின்பமான பரம பதத்தை அடைந்து
ஆவிர்பூத ஸ்வரூபராய்-சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யாதிகளைப் பற்றி அனுபவிக்கை-
ஐஸ்வர் யத்தில் ஆசை நீர்க் குமிழியை பூரணமாகக் கட்ட நினைக்குமா போலே –
கைவல்யம் மஹா போகத்துக்கு இட்டுப் பிறந்து இருக்க ஸ்வயம் பாகம் பண்ணுமோ பாதி

இனி பகவத் பிராப்தியாவது ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சாஷாத் கரித்து அனுபவித்து -அவ்வனுபவ
அதிசயத்துக்குப் போக்கு வீடாக -பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -என்று சர்வ வித கைங்கர்யங்களையும்
பண்ணி அந்த கைங்கர்ய விசேஷத்தாலே ஈஸ்வரனுக்கு பிறந்த முகோல்லாசத்தைக் கண்டு ஆனந்தியாய் இருக்கை –

சிலர் குணாநுபவம் பண்ணுவார்கள் -கரை கட்டாக் காவேரி போலே பகவத் குணங்கள் என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்
சிலர் விக்ரஹ அனுபவம் புண்ணுவார்கள்–பக்தர்களுக்கு அன்ன பானாதிகளே தாரகம் – ஸ்ரக் சந்தனாதிகள் போஷகம் -சப்தாதிகள் போக்யம்
நித்ய முக்தர்களுக்கு திவ்ய மங்கள விக்ரஹம் தாரகம் -கைங்கர்யம் போஷகம் -பகவத் ப்ரீதி போக்யம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
இரண்டு பங்குக்கு ஒரு கை ஓலையோ பாதி உபாய உபேயம் இரண்டும் ஈச்வரனே என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
உபாய பிரார்த்தனையும் உபேய பிரார்த்தனை-அதிகாரி க்ருத்யம் என்று எம்பார் அருளிச் செய்வர்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் என்கிறபடி பிரதி ஷணம் அபூர்வ ரசத்தை உண்டாக்குகை யாலே
நித்ய பிரார்ர்த்த நீயமுமாய் இருக்கும் உபேயம் என்று பட்டர் அருளிச் செய்வர்
புருஷகார விசிஷ்டம் உபாயம் லஷ்மீ விசிஷ்டம் உபேயம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
புத்ரனுக்கு மாத்ரு பித்ரு ஸூ ஸ் ருஷை இரண்டும் ப்ராப்தமாய் இருக்குமோ பாதி சேதனனுக்கு மிதுன சேஷ வ்ருத்தியே
உபேயமாகக் கடவது என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்
இவனுக்கு பிராப்யமான தொரு மிதுனம் மரமும் கொடியும் சேர்ந்தால் போலே என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

சேஷித்வம் ஆவது உபேயத்வம்-எங்கனே என்னில் சேஷ பூதனாலே பண்ணப் பட்ட கிஞ்சித் காரமாகிற அதிசயத்துக்கு ஆஸ்ரயமாய்
-அதிசயம் ஆக்குகை என்று நஞ்ஜீயர் அருளிச் செய்வர்
ராஜ்ய பிரஷ்டனான ராஜாவுக்கு மீண்டும் ராஜ்ய பிராப்தி உண்டானவோ பாதி சேஷ பூதனான இச் சேதனனுக்கு சேஷித்வ அனுபவம்
என்று இளைய ஆழ்வாரான திருமலை யாண்டான் அருளிச் செய்வர்
மிதுன சேஷ பூதனனுக்கு ஸ்வரூப அனுரூபமான பிராப்யம் மிதுனமேயாய் இருக்கும் -இதில் ஒன்றில் பிரிக்கில் பிராபா பிரவான்களைப்
பிரிக்க நினைக்குமோபாதி என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
இதில் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்ற நினைத்தான் ஆகில் மாத்ரு ஹீனனான புத்ரனோபாதி அறவையாயும் பித்ரு ஹீனனான
புத்ரனோபாதி அநாதனயுமாயும் இருக்கும் –இருவரும் கூடின போது இ றே ஸ்ரீ மத புத்ரன் ஆவது -என்று பெரியாண்டான் அருளிச் செய்வர்
பிராட்டியை ஒழிய ப்ரஹ்மசாரி எம்பெருமானை பற்ற நினைத்தான் ஆகில் ஏகாயநம் ஆகிற படு குழியில் விழும்
எம்பெருமானை ஒழிய பிராட்டியைப் பற்ற நினைத்தான் ஆகில் ஆநீசாக்ரம் ஆகிற படு குழியில் விழும் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
வயாகர சிம்ஹங்களோ பாதி உபாய விசேஷம் -யூதபதியான மத்த கஜத்தோ பாதி உபேய விசேஷம் என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்

இச் சேதனனுக்கு கைங்கர்யம் பண்ணுன் போது சேஷத்வ சித்தி இல்லை -ஈஸ்வரனுக்கு கைங்கர்யம் கொள்ளாத போது சேஷித்வ சித்தி இல்லை
-இருவருக்கும் இரண்டும் இல்லாத போது இருவருடைய போகமும் குலையும் என்று பிள்ளை யுறங்கா வல்லி தாசர் அருளிச் செய்வர் –
இதில் சேஷத்வத்தால் உண்டான போகம் சேஷியதாய்-இவன் இப்படி கொள்ளுகிறான் என்கிற பரிவு சேஷ பூதனுக்கு
உள்ள போகம் என்று மிளகு ஆழ்வான் வார்த்தை –படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே -எனபது பிரமாணம்
ஸ்ரீ ஸ்தனம் போலே போக்யன் சேதனன் போக்தா பரம சேதனன் -ஆனால் அசித்தில் காட்டில் வாசி ஏது என்னில் –
ஈஸ்வரன் போக்தா -நாம் போக்யம் என்கிற ஜ்ஞான விசேஷம் என்று திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்
இக்கைங்கர்யம் போக ப்ரீதியாலே உண்டாம் -அந்த ப்ரீதி அனுபவத்தால் வரும் -அனுபவம் அனுபாவ்யத்தை அபேஷித்து இருக்கும் –
அனுபாவ்ய ஸ்வரூபமும் ரூபமும் குணமும் விபூதியும் உபாதா நமுமாய் -இதில் ஸ்வரூபம் பரிச்சேதிக்க அரிது
குணங்கள் அளவிறந்து இருக்கும் -சீலம் எல்லையிலான் -பிணங்கி அமரர் பிதற்றும் குணம் என்று பிரமாணம் –
இனி பூர்ண அனுபவம் பண்ணலாவது விக்ரஹம் ஒழிய இல்லை –
அவ விக்ரஹம் தான் அப்ராக்ருதமாய் ஸ்வயம் பிரகாசமுமாய் ஆனந்த அம்ருத தாரைகளைச் சுரக்கக் கடவதாய்
பொற் குப்பியின் மாணிக்கம் போலே அகவாயில் உண்டான திவ்யாத்ம ஸ்வரூபத்தை புறம் பொசிந்து காட்டக் கடவதாய்
முத்தின் திரள் கோவை என்கிறபடியே அபரிமித கல்யாண குணங்களைக் கண்ணாடி போலே பிரகாசிப்பக் கடவதாய்
-வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை -என்கிறபடியே பூவில் பரிமளமான பிராட்டியும்
மண்ணில் பரிமளமான பிராட்டியும் மடித்துப் பிடித்தாலும் மாந்தும் படியான மென்மையை உடைத்தாய் நித்ய அனுபாவ்யமாய்
பூர்வ பாக சித்தமான கர்ம பாகத்தாலும் ஆராதிக்கப் படுமதாய் இருப்பதொன்று

-அது தான் அஞ்சு வகையாய் இருக்கும்
பரத்வம் என்றும் வ்யூஹம் என்றும் அவதாரம் என்றும் அந்தர்யாமித்வம் என்றும் அர்ச்சாவதாரம் என்றும் –
அதில் பரத்வம் ஆவது -முக்த ப்ராப்யமாய் இருக்கும் -வ்யூஹம் ஆஸ்ரிதர் உடைய கூக்குரல் கேட்கைக்காக திருப் பாற் கடலிலே
பள்ளி கொள்ளக் கடவதாய் சனகாதிகளுக்கு போக்யமாய் இருப்பதொன்று -அவதாரங்கள் ராம கிருஷ்ணாதிகள்
அந்தர்யாமித்வம் ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக ஸ்வரூபேண நியமித்துக் கொண்டு நிற்கும் நிலை
அங்கன் அன்றியே உபாசகர்க்கு ஸூ பாஸ்ரயமான விக்ரஹத்தோடு ஹ்ருதய புண்டரீகத்திலே நிற்பதொரு ஆகாரம் உண்டு
அர்ச்சாவதாரங்கள் கோயில் திருமலை துடக்கமான ப்ராப்ய ஸ்தலங்கள்
நாடு அழியா நிற்க மேல் நிலமாகிற நீணிலா முற்றத்திலே இனிய சந்தன குஸூம தாம்பூலாதிகளாலே அலங்கரித்து
-சத்திர சாமராதிகள் பணிமாற-அத்தேச வாசிகளுக்கு முகம் கொடுத்து த்ரிபுவன சக்ரவர்த்தி என்று விருது பிடிக்குமா போலவும்
பயிர் உலவா நிற்க கடலிலே வர்ஷிக்கும் காள மேகம் போலவும் -த்ருஷார்த்தன் நாக்கு வற்றிச் சாவா நிற்க
மத்ச்யத்துக்கு தண்ணீர் வார்க்கும் தார்மிகனைப் போலவும் -பரத்வத்தில் இருப்பு
பரம உதாரனாய் இருப்பவன் -ஒரு தார்மிகன் ஒரு க்ராமத்துக்குக் கொடுத்த த்ரவ்யத்தை நாலு கிராமணிகள் வாங்கி
விபஜித்துக் கொள்ளுமோ பாதி ஷீர வ்யூஹமான ஷீராப்தி
குண ஹீன பிரஜைகளைத் தள்ளி குணவான்களைக் கைக் கொள்ளும் பிதாவோபாதியும் மண்டல வர்ஷம் போலவும் அவதாரங்கள்
நாம் அழிக்க நினைத்தாலும் அழியாதபடி நம்மையும் தன்னையும் நோக்கிக் கொண்டு நாமாக நினைத்த வன்று அதுக்கான இடத்தில்
முகம் காட்டியும் -பித்தர் கழுத்திலே சுளுக்கு இட்டுக் கொண்டால் பின்னே நின்று அறுத்து விடும் மாதாவைப் போலேயும்-மதம் பட்ட ஆனை
கொல்லப் புக்கால் அதின் கழுத்தில் இருந்த பாகன் அதன் செவியை இட்டு அதன் கண்ணை மறைக்குமா போலேயும் இராமடமூட்டுவாரைப்
போலேவும் உணரில் கையைக் கடிக்கும் என்று உறக்கத்தில் பாலும் சோறும் புஜிப்பிக்கும் மாதாவைப் போலவும் அந்தர்யாமித்வம்
ராஜ மகிஷி தன பர்த்தாவினுடைய பூம் படுக்கையில் காட்டில் பிரஜையினுடைய தொட்டில் கால்கடை போக்யமாக வந்து கிடைக்குமா போலவும் கோயில் திருமலை பெருமாள் கோயில் துடக்கமான அர்ச்சா ஸ்தலங்கள் –
முத்துத் துறையிலே குடில் கட்டிக் கொடுக்கிற கர்ஷகனைப் போலவும் க்ராமாதி தேவதையும் க்ருஹார்ச்சையும் என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் -ஷீராப்தி போலே -பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் -அவற்றில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
சேதனனுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் பகவத் அதீனங்களாய் இருக்குமா போலே அர்ச்சாவதாரத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்யாதிகளும் ஆஸ்ரிதர் இட்ட வழக்காய் இருக்கும் என்று ஜீயர் அருளிச் செய்வர்
பக்த பராதீனம் -தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்று பிரமாணம் –
தான் உகந்த விக்ரஹத்தை ஆராதிக்கும் போது ராஜவத் உபசாரமும் -புத்ரவத் ச்நேஹமும் சர்ப்பவத் பீதியும்
உண்டாக வேண்டும் என்று எம்பார் அருளிச் செய்வர்
பரத்வாதிகள் ஐந்தையும் சேர பரமாச்சார்யர் அனுசந்தித்து அருளினார் -தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக் கோனே -என்று
பட்டருடைய சரம காலத்தில் பெருமாள் எழுந்து அருளி வந்து நாம் உமக்குச் செய்ய வேண்டுவது என் என்று கேட்டருள
பரம பதத்தில் இந்தச் சிவந்த முகம் காணேன் ஆகில் மீண்டும் இங்கே வர வேணும் என்று விண்ணப்பம் செய்தார்
ஸூ ஷேத்ரம் உழுவான் ஒருவனுக்கு மெட்டு நிலத்தையும் காட்டுமோ பாதி கோயில் வாஸம் தனக்கு
பரமபதம் கழுத்துக் கட்டியாய் இ றே இருப்பது என்று பட்டர் அருளிச் செய்வர்
மஹதா புண்ய மூலே ந-என்று பிரமாணம் -நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் என்னும் கோயில் விட்டு பரமபதத்துக்கு போ
என்றால் குறைப்பாடு படும் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
அமரர் சென்னிப் பூ என்கையாலே காக ந கு ஸூ மாம் போலே பரத்வம்
வ்யூஹம் -பாற் கடல் பையத் துயின்ற பரமன் -என்றும் -அனந்தன் தன மேல் நண்ணி நன்கு உறைகின்றான் என்றும்
சொல்லுகிறபடியே அருள் விஞ்சி இருக்கும்
மீனோடு ஆமை கேழல் அரி குரலாய் முன்னும் இராமனாய்த் தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமொதரனாத்க்
கற்கியும் ஆனான் என்கிறபடியே அவதாரங்கள் பத்தின் கீழ் மாற்றாய் இருக்கும்
அந்தர்யாமித்வம் ஆத்ம யாதாம்ய அதீனமாய் அங்கணஸ்த கூப ஜலம் போலே குணவத் க்ராஹ்யமாய் இருக்கும்

இனி அர்ச்சாவதாரமே பின்புள்ளார்க்கும் ஆஸ்ரயிக்கலாவது -பின்னானார் வணங்கும் சோதி என்று
பரத்வத்தில் ஈஸ்வரத்வம் ஆகிற அழல் விஞ்சி இருக்கும் -ஆகையாலே அர்ச்சாவதார ஸ்தலமே முக்யமாகக் கடவது
பிள்ளை திரு நறையூர் அரையர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே தெண்டன் இட்டு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்ன
பொய்யே யாகிலும் அவன் உகந்து அருளின திவ்ய தேசங்களிலே புக்குத் திரிவார்க்கு அந்திம தசையிலே கார்ய கரமாம் -என்று அருளிச் செய்தார்
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே -ஸ்தல சஞ்சாரியை விட்டு சாகா சஞ்சாரியைப் பற்றுவதே -என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
அழகர் திரு ஓலக்கத்திலே பிள்ளை அழகப பெருமாள் வந்து புகுந்து பெரியாண்டானைப் பார்த்து பரமபதம் இருக்கும் படி என் என்று கேட்க –
இப்படி இருக்கும் என்ன -ஆனால் இத்தை விட்டு அங்கு போவான் என் என்ன -இங்கு இருந்தால் முதுகு கடுக்கும்
அங்குப் போனால் செய்யாது என்று அருளிச் செய்தார்
இப்படிக் கொத்த ஸ்தலங்களிலே அடிமை செய்து போருகை இவனுக்கு பகவத் பிராப்தி யாவது
விரோதி கழிந்தால் கைங்கர்யம் ஸ்வரூப பிராப்தம் என்று சோமாசி யாண்டான் அருளிச் செய்வர்
சம்பந்தம் சம்பாத்தியம் அன்று -தடை விடுகை சம்பாத்தியம் என்று பிள்ளான் பணிக்கும்
பரமன் அடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம் உண்டார்க்கு உன்ன வேண்டா வென்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
இக்கைங்கர்யா போகம் யாதாம்யபாவி ஐஸ்வர்யா னந்தத்தில் விலஷணமாய் இருக்கும்
இத்தால் சர்வ காலத்திலும் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது
இது ப்ரஹ்ம போகம் ஆகையாலே சங்குசிதமான கைவல்ய அனுபவத்தில் விலஷணமாய் இருக்கும்
இத்தால் சர்வ தேசத்திலும் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது
இது கொண்ட சீற்றம் இத்யாதியாலே ஈஸ்வர ஆனந்தத்திலும் விலஷணமாய் இருக்கும்
அந்தரங்க பஹிரங்க பாவத்தாலே சர்வ அவஸ்தையிலும் உண்டாய் இருக்கும்
இது சர்வவிதம் ஆகையாலே பிராட்டியினுடைய ஆனந்தத்திலும் விலஷணமாய் இருக்கும்

கைங்கர்யமாவது -தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம்
துழாய் உடை அம்மான் -என்கிறபடியே திருத் துழாய் யோபாதி இஷ்ட விநியோஹ அர்ஹமாய் இருக்கும்
ஆளும் பணியும் படியும் அடியேனைக் கொண்டான் –பின்னும் ஆளும் செய்வன் -என்று பிரமாணம்
தான் உகந்ததும் கைங்கர்யம் அல்ல -தானும் அவனும் உகந்ததும் கைங்கர்யம் அல்ல -அவன் உகந்ததே கைங்கர்யம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -உனக்கே நாம் ஆட செய்வோம் -என்று பிரமாணம்
கைங்கர்யம் ததீய கைங்கர்யம் பர்யந்தமாக வேணும்
பகவத் குண அனுபவத்துக்கு படிமா பெரியாண்டானும் எம்பாரும்
பகவத் கைங்கர்யத்துக்கு படிமா எண்ணாயிரத்து
எச்சானும் தொண்டனூர் நம்பியும்
பாகவத கைங்கர்யத்துக்கு படிமா வடுக நம்பியும் மணக்கால் நம்பியும்

ஸ்ரீ ராமாயணத்தாலும் ஸ்ரீ மஹா பாரதத்தாலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தாலும் மூன்று அதிகாரிகளுடைய ஏற்றம் சொல்லுகிறது
எங்கனே என்னில் ஸ்ரீ ராமயணத்தாலே-சபரியினுடைய ஏற்றம் சொல்லுகையாலே உபேய ஏற்றம் வெளியிடுகிறது
மஹா பாரதத்தாலே த்ரைபதியினுடைய ஏற்றம் சொல்லுகையாலே உபாய வைபவம் வெளியிடுகிறது
ஸ்ரீ விஷ்ணு புரானத்தாலே சிந்த யந்தியினுடைய ஏற்றம் சொல்லுகையாலே உபாய விச்லேஷத்தில் தரியாமையை
வெளியிடுகின்றது என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

ஆசார்ய விச்வாசத்துக்கு படிமா பொன்னாச்சியார் எங்கனே என்னில்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவருடைய வைபவம் பரப்பிக்க அவரை இரு கரையர் என்றாள் -அதுக்கடி என் என்னில்
பாஷ்ய காரரை ஒழியவும் பெருமாளைச் சரண் புக்குப் போருவர் என்றாள் இ றே
உபாய வ்யாவசாயத்துக்கு படிமா கூரத் தாழ்வான் ஆண்டாள் -எங்கனே என்னில் பட்டர் ஒரு ஆர்த்தி விசேஷத்தில்
பெருமாளே சரணம் என்ன வேண்டி இரா நின்றது என்ன இக்குடிக்கு இது தான் என்றாள்

ஆக வைஷ்ணத்வ ஜ்ஞானம் பிறக்கை யாவது ஜ்ஞானா நந்தங்களும் புற இதழ் என்னும் படி பகவத் சேஷத்வமே ஸ்வரூபமாயப் போந்த
இவனுக்கு அந்தப் பகவச் சேஷத்வம் புற இதழ் என்னும் படி பாகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்று இருக்கை
இது பிறவாது இருக்கை யாவது ஒரு பாகவத விச்லேஷத்திலே நெஞ்சு நையாது இருக்கிறதுக்கு மேலே வருந்தி
ஒரு பாகவதனோடு சம்ச்லேஷிக்க இழிந்து அவனுடைய தோஷ தர்சனம் பண்ணுகை-
உபாயத்துக்கு முற்பாடன் ஆகையாலும் உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் என்று பட்டருக்கு எம்பார் அருளிச் செய்வர்
ஆகையால் அன்பர் கூடிலும் நீன்கிலும் யாம் மெலிதும்-என்று பிரதமாச்சார்யர் அனுசந்தித்து அருளிற்றதும்
ஒரு பாகவதனுடைய நியமனத்தை வெறுத்தல் பொறுத்தல் செய்கை யன்றிக்கே விஷய பிரவணனுக்கு படுக்கைத் தலையிலே
விஷய பாரூஷ்யம் போக்யமாம் போலே யாகிலும் போக்யம் என்று இருக்கை என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்
ஆர்த்த பிரபத்தி பண்ணி இக்கரைப் படுக்கையிலே ஒருப்பட்டு இருக்கச் செய்தேயும் மாதா பிதாக்களும் கூட அநாதரிக்கும் படியான
ஆர்த்தியை உடைய ஸ்ரீ வைஷ்ணவனைக் கண்டால் அவனுடைய ரஷணத்துக்கு உறுப்பாக இங்கேயே இருக்கையிலே ஒருப்படுகை
என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் –
வைஷ்ணவனுக்கு ஜ்ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் வேணும் -அனுஷ்டான ஹீனமான ஜ்ஞானம் சரண ஹீனனான சஷூஷ் மானோபாதி-
ஜ்ஞான ஹீனமான அனுஷ்டானம் அங்க்ரி சஹிதனான அந்தகனோபாதி-என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
அனுஷ்டானம் இல்லாத ஜ்ஞானமும் கிஞ்சித்காரம் இல்லாத ஸ்வரூபமும் குமர் இருக்கும் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

இனி ஆசார்ய வைபவ ஜ்ஞானம் பிறக்கை யாவது அந்தகன் ஆனவனுக்கு திருஷ்டியைத் தந்தவன் -இருட்டு அறையில் கிடக்கிற
என்னை வெளிநாடு காணும் படி பண்ணின மஹா உபகாரகன்
-செறிந்த இருளாலே வழி திகைத்த எனக்கு கை விளக்கு காட்டுமோ பாதி அஜ்ஞ்ஞான திமிர உபஹதனான எனக்கு மந்திர தீபத்தைக் காட்டி
நல்ல தசையிலே சிநேக பூர்வகமாக அதுக்கு பாத்ரமாக்கி சேஷத்வ ஜ்ஞானம் பிறவாமையாலே உருமாய்ந்து கிடக்கிற எனக்கு
ரஷகத்வ சேஷித்வங்கள் எம்பெருமானுக்கு ஸ்வரூபம் என்னும் இடத்தையும் ரஷ்யத்வ சேஷத்வங்கள் எனக்கு ஸ்வரூபம் என்னும் இடத்தையும்
தோற்றக்கடவ சரீராத்மா பாவத்தையும் வெளியிட்டு சரீரிக்கு ரஷகத்வமாய் சரீரத்துக்கு இல்லாதவோபாதி ஸ்வ ரஷண நிவ்ருத்தியையும் பண்ணி
சரீர சம்ஸ்காரம் சரீரிக்கு ஆமோபாதி போக்த்ருத்வம் தத் அதீநமாம் படி பண்ணி
இப்படி சேஷத்வத்தில் கர்த்ருத்வம் ஜ்ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வம் -கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வம் -போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வம் இவற்றை
நிவர்த்திப்பிக்கக் கடவனாய் -எங்கனே என்னில்

சேஷத்வத்தில் கர்த்ருத்வம் ஆவது -ராஜா சக்தியை யிட்டு ராஜ்யத்தைப் பிடிக்கும் மந்த்ரிகள் போலே பகவதா சத்தியை யிட்டு சதார்யனை நெகிழுகை-
அதாவது சப்தாதி விஷய ஸ்பர்சத்தில் அச்சம் பிறவாது இருக்கையும் பகவத் பாகவத கைங்கர்யத்தில் அநாதாரம் பிறக்கையும்
தந் நிவ்ருத்தியாவது -ப்ராமாதிகமாகவும் விஷய ஸ்பர்சம் இன்றியிலே இருக்கையும் -பகவத் பாகவத கைங்கர்யத்தில் அத்யாதரம் நடக்கையும் –

ஜ்ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது -நாம் ஜ்ஞாதா வாகையாலே யன்றோ நம்மை அங்கீ கரித்தது என்று பஹூ மானம் பண்ணுகை
தந் நிவ்ருத்தி யாவது தேஹாத்மா அபிமாநிகளிலும் கடையாய் அசித் ப்ராயனான என்னை இரும்பைப் பொன் ஆக்குவாரைப் போலே
ஆத்ம ஜ்ஞானத்தைத் தந்து அங்கீ கரித்தான் என்று க்ருதஜ்ஞனாய் இருக்கை -அந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே -என்று பிரமாணம்

கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வம் ஆவது -நிஷித்தங்களை விட்டு விஹிதங்களைப் பற்றின வாறே இ றே நம்மை அவன் அங்கீ கரித்தான்
என்று தன்னைப் போரப் பொலிய நினைத்து இருக்கை -தந் நிவ்ருத்தி யாவது மரப்பாவையை ஆட்டுவிக்குமா போலே நிஷித்தங்களையும்
தானே நிவ்ருத்திப்பித்து விஹிதங்களையும் பற்றுவித்தான் என்று இருக்கை

போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது -நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை -தந் நிவ்ருத்தியாவது தன் கையாலே
தன் மயிரை வகிர்ந்தால் அன்யோன்ய உபகார ஸ்ம்ருதி வேண்டாவோபாதி சரீர பூதனான ஆத்மா சரீரிக்கு அடிமை செய்கிறான் என்று இருக்கை –

இப்படி கர்த்ருத்வத்தை யதாவாக உபகரித்த ஆசார்யன் மஹா உபாகாரகன் என்று இருக்கை
ஸ்வ அனுவ்ருத்தி பிரசன்னாச்சார்ய அங்கீ காரத்துக்கு ஒழிய உபேய சித்தி இல்லை என்று முதலி யாண்டான் நிர்வஹிப்பர்
க்ருபா மாத்திர பிரசன்னாசார்ய அங்கீ காரத்துக்கு ஒழிய உபேய சித்தி இல்லை என்று ஆழ்வான் பணிப்பர்
தன்னாசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்து செய்யப் பெறாத அடிமைக்கு இழவாளனாய் இருக்கை
அதாவது ஆசார்யன் திரு உள்ளத்தைப் பின் சென்ற அனந்தாழ்வானைப் போலே
-ஆசார்யன் நியமித்த படி செய்த அம்மாளைப் போலவும் ஆசார்யன் திரு உள்ளத்தில் அநாதரம் தமக்கு அநர்த்தம் என்று
தம்மை தாழ விட்டு அடிமை செய்த எச்சானைப் போலவும் இருக்கை

இனி உபாய விசேஷ ஜ்ஞானம் பிறக்கை யாவது -சாத்தியமான சகல உபாயங்களையும் சாங்கமாகவும் மறுவல் இடாதபடி விட்டு
ஸ்வ இதர சமஸ்த நிரபேஷமாக சித்த உபாயம் ச்வீகாரம் என்று இருக்கை
இவ்வுபாய நிஷ்டை யாவது பிரபத்தி பிரகாரமும் பிரபத்தி பிரபாவமும் நெஞ்சிலே படுகை
பிரபத்தி பிரகாரம் நெஞ்சிலே படுகையாவது பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வ ஆதீனம் என்று இராதே ஒழிகை
பிரபத்தி பிரபாவம் நெஞ்சிலே படுகை யாவது பிரபத்தி நிஷ்டனுடைய பிரக்ருதியில் பிரகிருதி நிரூபணம் பண்ணாது ஒழிகை
அபிரூபையான ஸ்திரீக்கு அழகு வர்த்திக்க வர்த்திக்க அபி ரூபவானாய் ஐஸ்வர்யவனான புருஷன் ஆந்தரமாக ஆழம் கால் படுமோபாதி
அஜ்ஞனான சேதனன் அழுக்கு அறுக்க அறுக்க ஈஸ்வரன் திரு உள்ளம் அத்யாசன்னமாய்ப் போரும் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
சிறியாச்சான் அமுதனாரைப் பார்த்து உம்முடைய அனநுஷ்டானம் பேற்றுக்கு இலக்காகும் போது காணும் என்னுடைய
அனுஷ்டானம் பேற்றுக்கு சாதனம் ஆவது என்றார்
ச்வீகாரத்தில் அந்வயம் இல்லாத போது ஸ்வதஸ் சர்வஜ்ஞ்ஞன் ஸ்வத பிரசாதத்தாலே சேர விடான்
சோக நிவ்ருத்தி பிறவாத போது சுமை எடுத்துவிடும் என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்
சித்த உபாயத்தில் நிலை தாமரை ஓடையில் அன்னம் இறங்குமோபாதி-சாத்திய உபாயங்களில் நிலை அவ வோடையிலே
யானை இறங்குமோ பாதி என்று இளைய யாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்
இவ்வுபாயம் எய்ப்பினில் வைப்பு என்று தப்தனுக்கு வைத்த தண்ணீர் பந்தலோபாதி என்று பெரிய பிள்ளை யருளிச் செய்வர்

இனி உபேய யாதாம்ய ஜ்ஞானம் ஆவது -பரபக்தி யுக்தனாய் சேஷ பூதனான தான் தர்மமாகவும் சேஷியான ஈஸ்வரன் தர்மியாகவும் அறிந்து
தர்ம தர்மிகளோபாதி தனக்கும் அவனுக்கும் ஆவிநாபூதம் ஆவதொரு படி விசிஷ்ட விசேஷத்தில் அவனேயாய்த் தான் இல்லையாம் படி
ஐக்கியம் பிறந்து தன் சைதன்யத்துக்கு அனுகூலமாம் படி அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை பிரிகதிர் படாதபடி அனுபவித்து
அவ்வனுபவத்துக்கு போக்குவீடாக அவனுக்கே அபிமதமான சர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணி அவ்வளவிலே நில்லாமல்
ததீய கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான பரம பிராப்யம் என்று இருக்கை –
ச்வீகரத்தில் உபாயத்வ புத்தியும் பேற்றில் சம்சயமும் ப்ரதிபந்தகம் என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்

வைஷ்ணவத்வம் நெஞ்சில் பட்டதில்லை யாகில் ஸ்வரூப நாசகரையும் ஸ்வரூப வர்த்தகரையும் அறிந்திலனாகக் கடவன்
ஆசார்ய வைபவம் நெஞ்சில் பட்டது இல்லையாகில் ஜாத்யந்தனோபாதி யாகக் கடவன்
உபாய வைபவம் நெஞ்சிலே பட்டதில்லை யாகில் மரக் கலத்தை விட்டு சுரைப் பதரைக் கைக் கொண்டானாகக் கடவன்
உபேய யாதாத்ம்யம் நெஞ்சிலே பட்டது இல்லையாகில் ராஜ புத்ரனாய் பிறந்து உஞ்சவ்ருத்தி பண்ணுமோபாதியாகக் கடவன்

——————————————————————————–

யாமுன கவிவா தீந்திர ஸூ ந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

—————————————————————————–

திருமாலை ஆண்டான்-திருக் குமாரர் -ஸூ ந்த்ரத் தோளுடையார் -திருக் குமாரர் -இளைய யாழ்வார்
-இவர் புத்ரர் யமானாசார்யர் -இந்நூல ஆசிரியர்
இவர்கள் அனைவரும் காஸ்யப கோத்தரத்தினர்

கோவிந்த பெருமாள் சிறிய கோவிந்த பெருமாள் சகோதரர்கள்
கிடாம்பியாச்சான் கிடாம்பி பெருமாள் சகோதரர்கள் அருளாள பெருமாள் எம்பெருமானார் -அலங்கார வேங்கடவர் சகோதரர்கள்
மாருதிப் பெரியாண்டான் மாருதிச் சிறியாண்டான் சகோதர்கள்
கோமடத் தாழ்வான் கோமத்து சிறியாழ்வான் சகோதரர்கள் -போலே
பெரியாண்டன் சிறியாண்டான் சகோதரர்கள் 74 சிம்ஹாசனபதிகளில் ஒருவர்
பெரியாண்டான் திருக்குமாரர் மாடபூசி -மாடங்களுக்கே பூஷணமாக இருப்பாராம் –
பெரியாண்டான் தன் சைதன்யம் குலையும்படி அழகர் இடத்தில் பேர் அன்பு பூண்டவர்
இவர் திருத் தோரணம் கட்டி அழகர் திருவடிகள் அறுதியாக பத்தெட்டு திவசம் தெண்டன் இட்டு கிடப்பர்
-ராத்ரி மனுஷ்யர் போகும் போது ஆண்டான் கிடக்கிறாரோ ப ஸூ கிடக்கிறதோ வழி பார்த்து போங்கோள் என்னும் படி
சலியாமல் பகவத் அனுபவம் பண்ணுவாராம்

——————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: