ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் -மூன்றாம் பிரகரணம் –உபாய வைபவம்-

மூன்றாம் பிரகரணம் –உபாய வைபவம்

அநந்தரம் உபாய வைபவம் பிரதிபாதிக்கப் படுகிறது -எங்கனே என்னில்
சதுர தச வித்யா ஸ்தானங்களாலும் அறுதியிட்ட உபாயம் நாலு வகையாய் இருக்கும்
கர்மம் என்றும் ஜ்ஞானம் என்றும் பக்தி என்றும் பிரபத்தி என்றும் –
இதில் கர்மம் ஆவது நித்ய நைமித்திக காம்யம் என்று மூன்று வகையாய் இருக்கும்
நித்யமாவது சந்தா வந்தனம் துடக்கமானவை -நைமித்திகமாவது -க்ருஹ தஹ நாதிக்கு ப்ரோஷணாதி-
காம்யமாவது பலத்தைக் கோலி அனுஷ்டிக்குமாவை –
இன்னமும் யஜ்ஞம் தானம் தபஸ் ஸூ-தீர்த்த யாத்ரை என்று துடங்கி உண்டானவை பல வகையாய் இருக்கும்
ஜ்ஞானமும் சத் வித்யை தஹர வித்யை அந்தராதித்ய வித்யை என்று துடங்கி பஹூ வித்யை ரூபமாய் இருக்கும்
இதில் சத்வித்யை யாவது ஸ்வரூப உபாசன ஜ்ஞானம் -தஹர வித்யை யாவது -குண உபாசன ஜ்ஞானம்
அந்தராதித்ய வித்யை யாவது -ஆதித்ய மண்டல அந்தர்வர்த்தியாக த்யானம் பண்ணி உபாசிக்கிற
ஜ்ஞானம்
இனி பக்தியும் பஹூ விதமாய் இருக்கும் -த்யானம் அர்ச்சனம் ப்ரணாமம் பிரதஷினம் ஸ்தோத்ரம் துடங்கி உண்டான வற்றாலே
பக்தி தான் மூன்று வகையாய் இருக்கும் –பக்தி என்றும் -பர பக்தி என்றும் -பரம பக்தி என்றும்
இதில் பக்தி யாவது ஸ்வாமி யான நாராயணன் பக்கல் தாஸ பூதனான இச் சேதனனுடைய ச்நேஹம் அடியான வ்ருத்தி
பர பக்தியாவது சம்ச்லேஷத்தில் சௌக்யமும் விச்லேஷத்தில் துக்கமும்
பரம பக்தியாவது பகவத் விச்லேஷத்தில் சத்தா நாசம் பிறக்கும் படியான அவஸ்தை
இவ்வுபாயம் இரண்டும் உபாசன நாத்மகம் ஆகில் பேதம் என் என்னில் பய பரிபாக தசை போலே பக்தி -அதனுடைய விபாக தசை போலே ஜ்ஞானமும்
மயர்வற மதி நலம் அருளினன் – என்று ஆழ்வாருக்கும் பக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தை இ றே சர்வஜ்ஞ்ஞானான சர்வேஸ்வரன் பிரகாசிப்பித்தது
இவ்வுபாய த்ரயமும் அந்யோந்யம் ஓன்று அங்கியாய் இரண்டு அங்கங்களாய் இருக்கும் –
இதில் ஜ்ஞான பக்திகளோடு கூடின கர்மத்தாலே ஜனகாதிகள் முக்தரானார்கள்
கர்ம பக்திகளோடு கூடின ஜ்ஞானத்தாலே பரதாதிகள் முக்தரானார்கள்
கர்ம ஜ்ஞானன்களோடு கூடின பக்தியாலே ப்ரகலாதிகள் முக்தரானார்கள்
இதுக்கு ஹேது அதிகாரிகளுடைய அபி சந்தி பேதம்
இதில் சாஸ்திர ஜன்ய ஜ்ஞானமாய் இருக்கும் ஜ்ஞானம் -விவேக ஜன்ய ஜ்ஞானமாய் இருக்கும் பக்தி என்று ஜீயர் அருளிச் செய்வர்
பத்துடை அடியவர்க்கு எளியவன் என்று இருக்கை முடவனுக்கு ஆனை வளைந்து கொடுக்குமா போலே என்று
நடுவில் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர் –

அனந்தர உபாயம் பிரபதனமாய் இருக்கும்
-கீழ்ச் சொன்ன உபாயங்கள் சாஸ்திர ஜன்யங்கள் -இந்த உபாயம் உபதேச சித்தம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
கீழ்ச் சொன்ன உபாயங்கள் சாத்யங்களாய் இருக்கும் -இது சித்தமாய் இருக்கும்
அவை அசேதனங்களாய் இருக்கும் -இது அத்விதீயமாய் இருக்கும்
அவை த்யாஜ்யங்களாய் இருக்கும் -அது த்யாக விசிஷ்டமாய் இருக்கும் -என்று ஆழ்வான் பணிப்பர்
அவ்வுபாயங்களுடைய த்யாஜ்யத்வத்தையும் இவ்வுபாயத்தினுடைய ச்வீகார்யத்தையும் பிரதமாச்சார்யர் அருளிச் செய்தார்
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் இனி உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கின்றிலேன் -என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்றும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -என்றும் -அருளிச் செய்தார் இ றே
இவ்வர்த்தத்தை ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் அனுசந்தித்து அருளினார்
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன்–என் கண் இல்லை நின் கணும் பக்தன் அல்லன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் என்று –
இவ்வர்த்தத்தை நாய்ச்சியாரும் அனுசந்தித்து அருளினார் -நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் –சிற்றாதே பேசாதே
–போற்றியாம் வந்தோம் புகழ்ந்து -என்று –
அவ்வுபாயங்கள் அசக்ருத் கரணீயங்கள் -இவ்வுபாயம் சத் க்ருணீயம் என்று எம்பார் அருளிச் செய்வர்
இதில் வர்த்தமானம் தத் கால அனுஷ்டான பிரகாசகம் என்று பிள்ளை அருளிச் செய்வர்
அவை அதி க்ருதாதிகாரம் -இது சர்வாதிகாரம்
உத்தம புருஷனாலே ஆஷிப்ப்தனான கர்த்தா இன்னான் என்று தோற்றாமையாலே என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்
பிராப்தாவும் உபாயம் அல்ல -பிரபத்தியும் உபாயம் அல்ல -பிரபத்தவ்யனே உபாயம் என்று இளையாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்
வ்யவசாயாத்மாக ஜ்ஞான விசேஷம் பிரபத்தி என்று பெரியாண்டான் அருளிச் செய்வர்
பேற்றுக்கு பிரபத்தி ஒரு கால் பண்ண அமையும் -புன பிரபத்தி பண்ணுகிறது கால ஷேப ஸூ க ரூபம் என்று பாஷ்ய காரர் அருளிச் செய்வர்
உபாயங்கள் அநர்த்த பயத்தாலே த்யாஜ்யங்கள் என்று திருக் கோஷ்டியூர் நம்பி அருளிச் செய்வர்
ஆர்த்தனுக்கு ஆ ஸூ வாக பலிக்கும் -த்ருப்தனுக்கு தேக அவசானத்திலே பலிக்கும் என்று பெரிய நம்பி அருளிச் செய்வர்
கரண த்ரயமும் கூடுகை ஆர்த்த லஷணம்-இதில் ஓன்று கூடுகை த்ருப்த லஷணம் -தத்தத் பிராயச் சித்தங்களாலே நிவர்த்த நீயமான
சகல பாப நிவர்த்திக்கு தத் ஏக உபாய வ்யவசாயம் பிரபத்தி என்று பெரிய முதலியார் அருளிச் செய்வார்
பக்தி பிரபத்திகள் இரண்டும் பகவத் பிரசாதங்களாய் இருந்ததே யாகிலும் அதிசயேன பிரசாத மூலம் பிரபதனம் என்று மணக்கால் நம்பி அருளிச் செய்வர்
பக்தி நிஷ்டனுக்கு கர்ம அவசானத்திலே பிராப்யம் என்று உய்யக் கொண்டார் அருளிச் செய்வர்
பூர்வ வாக்யம் சர்வ பல சாதாரணம் -உத்தர வாக்யம் பகவத் ஏக பிரயோஜனமாயே இருக்கும் என்று நாத முனிகள் அருளிச் செய்வர்
பிள்ளை திரு நறையூர் அரையர் பூர்வ வாக்ய நிஷ்டர் ஆட்கொண்ட வில்லி ஜீயர் உத்தர வாக்ய நிஷ்டர்
விக்ரஹத்துக்கு ஸூ பாஸ்ரயத்வம் -ஆஸ்ரித கார்ய ஆபாத்கத்வம் ஜ்ஞான சக்திகளுக்கு -ஆஸ்ரயண சௌகர்ய ஆபாகத்வம் வாத்சல்யாதிக்கு
புருஷகாரத்வம் வடித்தடம் கண் மலராளான பிராட்டிக்கு -உபாயத்வம் உள்ளத்து ஈஸ்வரனுக்கு என்று பட்டர் அருளிச் செய்வர்
இவ்வுபாய விசிஷ்டனுக்கு அபராத பூயஸ்த்வம் உபாய பல்குத்வம் பல குருத்வம் என்கிற சங்கா த்ரயமும் கழிய வேணும் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
அல்லாத உபாயங்கள் பதர்க்கூடு-இது சர்வ சக்தியை அண்டை கொண்டால் போலே என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
சரணவித்வத்தாலே அனபாயிநீ யான பிராட்டியையும் சஹியாதபடி இ றே உபாயத்தினுடைய சுணை யுடைமை இருக்கும் படி
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
எம்பெருமானாலே எம்பெருமானை பெரும் இத்தனை யல்லது ஸ்வ யத்னம் கொண்டு பெற நினையாதார்கள் ஸ்வரூபஜ்ஞ்ஞர் -அது என் போல் என்னில்
சாதகமானது வர்ஷ தாரையைப் பேரில் பானம் பண்ணியும் பூ கத ஜல ஸ்பர்சம் பண்ணாதாப் போலேயும் –
பிரபன்னஸ் சாதகோயத்வத் பிரபத்தவ்ய கபோதவத் -என்று பிரமாணம்
தான் தனக்குப் பார்க்கும் நன்மை காலன் கொண்டு மோதிரம் இடுமா போலே -எம்பெருமானாலே வரும் நன்மை மாதா பிதாக்கள் பொன் பூட்டுமா போலே
தான் தனக்குப் பார்க்கும் நன்மை ஸ்த நந்த்ய பிரஜையை தாய் மடியினின்றும் பறித்து காதுகனான ஆட்டு வாணியன் கையிலே
கொடுக்குமா போலே என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்
பிறரால் வரும் உன்னையும் வேண்டேன் -என்னால் வரும் உன்னையும் வேண்டேன் -உன்னால் வரும் உன்னை வேண்டுவேன் என்று இருக்க
வேண்டேன் என்று இருக்கிறது அத்யந்த பார தந்த்ர்யத்தாலே ஸ்வாமி ஏதேனும் செய்து கொள்ளட்டும் என்னும் நிலை
திவி வா புவி வா -என்று பிரமாணம்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்று பிரதமாசார்யரும் அனுசந்தித்து அருளினார்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றே எம்பார் அனுசந்தானம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே என்று சம்சார சாகரத்துக்கு உத்தாரகன் அவனே
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதொரு தோநி பெறாது உழல்கின்றேன் என்று நாய்சியாரும் இவ்வர்த்தத்தை அனுசந்தித்து அருளினார் –
இவ்வுபாயத்தினுடைய ஸ்வரூபம் இதர உபாய அசஹத்வம் -எங்கனே என்னில் இதர உபாய ஸ்பர்சத்தில்
அபாய சம்சர்க்கத்தோ பாதி பிராயச்சித்தம் பண்ண வேணும் இவ்வதிகாரி பிராயச் சித்தம் பண்ணும் அளவில் புன பிரபத்தி யாசகக் கடவது
ஆனால் அசக்ருத் கரணத்துக்கு தோஷம் வாராதோ என்னில் -பெருக்காற்றில் பிரபலன் கையைப் பிடித்து நீந்தினால் சுழல்கள் இறுகப் பிடிக்குமோ
பாதி அர்த்த பராமர்ச வ்யவசாயமே உள்ளது -ஆகையால் தோஷம் வாராது என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
அதிகாரி சர்வ உபாய தரித்ரனாய் இருக்கும் -அவன் சமாப்யதிகார தரித்ரனாய் இருக்கும் என்று நடுவில் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர்
பக்தி பிரபக்திகள் இரண்டும் துல்ய விகல்பங்கள் என்று ஆழ்வான் பணிக்கும்
பக்திக்கு ஆயாச கௌரவம் உண்டாகிறவோ பாதி பிரபத்திக்கும் விஸ்வாச கௌரவம் உண்டு
பித்தோபஹதனுக்கு ரஸ்ய பதார்த்தம் திக்தமாமோ பாதி பாக்ய ஹீனருக்கு பிரபத்தியில் விஸ்வாச கௌரவம் பிறவாது என்று பெரியாண்டான் அருளிச் செய்வர்
பக்தி பிரபக்திகள் இரண்டுக்கும் ஈஸ்வர உபாயத்வம் ஒத்து இருந்ததே யாகிலும் பக்தியில் பல பிரதானத்தாலே வருகிற உபாயத்வமே உள்ளது -பிரபத்தியில் கரண ரூபத்தால் வருகிற சாத நத்வத்தாலே சாஷாத் பகவத் உபாயத்வம் பிரகாசிக்கை யாலும் பிராரப்த பங்க ரூபமான பலாதிக்யத்தாலும் பக்தியைக் காட்டில் பிரபத்தி விசிஷ்டையாகக் கடவது என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-
ஸ்வ விஷய சாந்த்யர்த்தமான பிரபதனமும் ஸ்வரூப ஹானி -இதர விஷய சாந்த்யர்த்தமான சாங்க பிரபதனமும்
ஸ்வரூப ஹானி என்று பிள்ளை யருளிச் செய்வர்
ச்வீக்ருத உபாய பூதனாகை யாவது ச்வீகார விஷய பூதனாகை -அதாவது ஸ்வ கத ச்வீகாரத்தில் உபாய புத்தியை விட்டு
பரகத ச்வீகாரத்துக்கு விஷய பூதனாகை என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
உய்யக் கொண்டாருக்கு உடையவர் பிரபத் யார்த்தத்தை அருளிச் செய்ய -அர்த்தம் அழகியது -வசன பாஹூள்யத்தாலே
பக்தியை விட்டு இத்தைப் பற்ற வேண்டும் விஸ்வாசம் பிறக்கிறது இல்லை என்ன
புத்திமான் ஆகையாலே அர்த்த பரிஜ்ஞ்ஞானம் பிறந்தது -பகவத் பிரசாதம் இல்லாமையாலே ருசி விளைந்தது இல்லை என்று அருளிச் செய்வர்
பதிவ்ரதை யானவள் ராத்திரி தன பார்த்தா வோடு சம்ச்லேஷித்து விடிந்தவாறே கூலி தர வேணும் என்று வழக்கு பேசுமா போலே
பக்தியை உபாயம் ஆக்கிக் கொள்ளுகை என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்
சமாவர்த்தனம் பண்ணின பிள்ளை பிதாவான ஆசார்யனுக்கு தஷிணை கொடுக்கப் புக்கால் அவன் கொடுத்த வற்றை எல்லாம்
கொடுக்குமா போலே கொடுத்தாலோ என்னில் அது எல்லாம் கொடுத்து முடியாமையாலே அவனே உபாயமாக வேணும்
ப்ராஹ்மணானவன் வைதிகன் ஆகையாலே அஹிம்சா ப்ரதமோ தர்ம என்று இருக்க சாஸ்திர விச்வாசத்தாக்லே யஜ்ஞத்தில் பசுவை ஹிம்சியா நின்றான் இறே
அவ்வோபாதி இவ்வுபாயத்துக்கும் விஸ்வாசம் பிரதானம் ஆக வேணும் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
நம் பூர்வர்கள் பூர்வ வாக்யத்தை ஒருக்கால் உபதேசித்து உத்தர வாக்யத்தை ஒருக்கால் உபதேசித்துப் போருவர்கள்
அவ்வதிகாரி பாகத்துக்கு ஈடாக அவ்வதிகாரிகளிலே பலாந்தரங்களைக் கொள்வாரும் உண்டு -எங்கனே என்னில்
த்ரௌபதி சரணா கதிக்கு பிரயோஜனம் ஆபன் நிவாரணம்
காகா சரணா கதிக்கு பிரயோஜனம் பிராண லாபம்
விபீஷண சரணா கதிக்கு பிரயோஜனம் கார்ய சித்தி
இனி சரண்ய சரணா கதியும் பலிப்பது எங்கனே என்னில் சக்கரவர்த்தி திருமகன் பக்கலிலே கண்டு கொள்வது
பிரபத்தி யாகிற தனம் இருக்க இப்படி அறவைகளாய் -உதவி அற்றவைகளாய்- திரிவதே என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
ச்வீகாரத்தை உபாயமாக்கிக் கொள்ளுகிறது பக்தியோபாதி என்று ஜீயர் அருளிச் செய்வர்
அந்த ச்வீகாரம் சைதன்ய க்ருத்யம் சித்த சமாதா நாரத்தமாக என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
பக்தி ஆனைத் தொழிலோ பாதி பிரபத்தி எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் கொள்ளுமோ பாதி என்று திருக் குருகைப் பிள்ளான் பணிப்பர்
இதர உபாயங்கள் ஈஸ்வரனுடைய ரஷகத்வத்தை குமர் இருக்கும் படி பண்ணும் -இவ்வுபாயம் அவனுடைய ஜீவனத்தை
அவனுக்கு ஆக்கிக் கொடுக்கும் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
இதர உபாயங்கள் ஸ்வரூப ஹானி இவ்வுபாயம் ஸ்வரூப அனுரூபம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
பொற் குடத்திலே தீர்த்தத்தை நிறைக்க அதில் ஸூ ர பிந்து பதிதமானால் அத்தடைய அபஹத மாமோபாதி இந்த உபாயங்கள்
ஸ்வ தந்த்ர்ய கர்ப்பங்களாய் இருக்கும் –இந்த உபாயம் ஸ்வ தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் பார தந்த்ர்ய யுக்தமாய் இருக்கும்
என்று எம்பார் அருளிச் செய்வர்
அவை சிரகால சாத்யங்களுமாய்-அபராத பாஹூள்யங்களுமாய் இருக்கை யாலே துஷ் கரங்களுமுமாய் இருக்கும் –
இது சக்ருத் க்ருத்யமுமாய் -நிரபாயமுமாகையாலே ஸூ கரமுமாய் இருக்கும் என்று இளைய ஆழ்வாரான திருமாலை ஆண்டான் அருளிச் செய்வர்
இவ்வுபாய விசேஷமும் மகா விஸ்வாச பூர்வகமான தத் ஏக உபாயத்வ பிரார்த்தனா விசிஷ்டமாய் இருக்கும்
ராத்ரி கருவுலகத்தில் ராஜ மகேந்தரன் படியை அபஹரித்து விடிந்தவாறே அத்தை திரு ஓலக்கத்திலே உபகரிக்குமா போலே
இவனுடைய சமர்ப்பணம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
தாய் முலைப் பாலுக்கு கூலி கொடுக்குமா போலே ஆகையாலே கொடுக்கைக்கு பிராப்தி இல்லை
கொடுக்கைக்கு பிராப்தி இல்லாதா போலே பறிக்கவும் பிராப்தி இல்லை -பறிக்கை யாவது பிரமிக்கை -கொடுக்கை யாவது பிரமம் தீருகை
-என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்
பாதிரிக் குடியிலே பட்டர் எழுந்து அருளின அளவிலே வேடனுடைய க்ருத்யங்களைக் கேட்டு ஒரு காதுகன் திர்யக் யோநி பிரபதனம்
பண்ண இரங்கின படி கண்டால் -ஸ்வ காரண பூதனான பரம காருணிகன் ஒரு சேதனன் பிரபதனம் பண்ணினால் இரங்கும் என்னும்
இடத்தில் ஆச்சர்யம் இல்லை இ றே என்று அனுசந்தித்து அருளினார் –

ஆக -இவ்வுபாய விசேஷம் சாதநாந்தர வ்யாவ்ருத்தமாய் இருக்கும் -தேவ தாந்திர வ்யாவ்ருத்தமாய் இருக்கும்
பிரபன்ன வ்யாவ்ருத்தமாய் இருக்கும் -பிரபத்தி வ்யாவ்ருத்தமாய் இருக்கும் –

———————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: