ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் –முதல் பிரகரணம் -வைஷ்ணத்வம் –

ஸ்ரீ திருமாலை ஆண்டான் –பௌத்ரர்-இளையாழ்வார் உடைய பௌத்ரர் ஸ்ரீ யமுனாசார்யர் –
இவர் வாதிகேசரி அழகிய மணவாள சீயர் உடைய சிஷ்யர்

-பிரமேய ரத்னம் ரமணீய பஹோ புரோதசா யாமுநே தேசிகேந
உத்த்ருத்ய வேதாம்பு நிதேரபாராத் ப்ரோக்தும் ம நோ லங்க்ருதயே முமுஷோ –

ஸூ ந்தர தோளுடையான் உடைய புரோஹிதரான யாமுனாசார்யராலே வேதக் கடலிலே இருந்து முமுஷூவுக்கு
மனஸ்ஸூக்கு அலங்க்ருதமாக அருளிச் செய்யப் பட்டது -என்றவாறே –
சமஸ்த கல்யாண குணாம்ருதோதியான சர்வேஸ்வரனுடைய நிர்ஹேதுக கிருபையாலே -சத்வ உன்மேஷம் பிறந்து
அதடியாக சதாசார்ய வரணம் பண்ணியவனாலே சம்லப்த ஜ்ஞானனான சாத்விகனுக்கு ஜ்ஞாதவ்யமான அர்த்த பிரமேயம் நான்கு
அவையாவன -வைஷ்ணத்வமும் -ஆசார்ய வைபவமும் -உபாய விசேஷமும் –உபேய யாதாம்யமும் –

———————–

முதல் பிரகரணம் -வைஷ்ணத்வம்

காமயே வைஷ்ணத்வம் து -என்று சனகாதிகள் பிரார்த்திக்கிறார்கள் –
அறியக் கற்று வல்லார் வைட்டவணர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே -என்று பிரதமாச்சார்யரும் அருளிச் செய்தார் இ றே
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே -என்று யமுனாசார்யர் இத்தையே அபேஷித்தார்-
தவ தாஸ்ய மஹர சஞ்ஞ-என்று ஆழ்வான் அனுசந்தானம்
ஆச்சான் பிள்ளை முக்த போகாவளியைப் பண்ணி பெரியவாச்சான் பிள்ளைக்கு காட்ட -எனக்கு சரமத்திலே பிறந்த ஜ்ஞானம்
உனக்கு பிரதமத்திலே பிறந்தது ஆனாலும் என்னோடு வைஷ்ணவத்தை கற்க வேணும் என்று அருளிச் செய்தார் –
வைஷ்ணத்வம் ஆவது குறிக் கோளும் சீர்மையும் -அதாவது –
தனக்கு ஆச்சார்யன் தஞ்சமாக அருளிச் செய்த நல வார்த்தைகளில் அவஹிதனாய்ப் போருகையும்
அவ்வைஷ்ணவதவ லஷணத்தை யாதாவாக அறிகையும்
தந் நிஷ்டர் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தியும் –

அந்த நல வார்த்தைகள் ஆவன –
திருஷ்ட அத்ருஷ்டங்கள் பகவத் அதீனங்களாக இருக்கும் -அத்ருஷ்டம் அபேஷிக்க வரும் -த்ருஷ்டம் உபேஷிக்க வரும்
-என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் -என்று பிரமாணம்
த்ருஷ்டம் அபேஷித்தால் வராது -அத்ருஷ்டம் உபேஷித்தால் வாராது என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
த்ருஷ்டத்தையும் ஈஸ்வரன் தலையிலே ஏறிடுவார் சில சாஹசிகர்கள் -அவர்கள் யார் என்னில் ஸ்ரீ கஜேந்த்திரன் பிரஹலாதன் பிள்ளை பிரபன்னரும் –
இவர்கள் மூவருக்கும் மூன்று ஆபத்தை நீக்கினான் ஈஸ்வரன் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
இவர்கள் மூவரும் ஈஸ்வரனுடைய சௌகுமார்யத்தில் அநபிஜ்ஞ்ஞர்
ஆஸ்ரயண வேளையில் ரஷகனான ஈஸ்வரனும் -அதிகாரி பூர்த்தியில் ரஷ்ய கோடியிலாம் படி அபூர்ணனாய் இருப்பது
ஆகை இ றே பெரியாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு என்று காபிட்டதும்
ஸ்ரீ நந்த கோபரும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ரஷது த்வாம் இத்யாதியால் ரஷை இட்டதும்
ஆஸ்ரயண வேளையில் ஈஸ்வரனுக்கு அதிகாரி ரஷ்யன்
அதிகாரி பூர்த்தியில் ஈஸ்வரன் தான் குழைச் சரக்கு என்று பெரியாண்டான் அருளிச் செய்வர்
ஆனால் திருஷ்ட அத்ருஷ்டங்கள் பகவத் அதீநமாம் படி என் என்னில் த்ருஷ்டத்தை கர்ம அனுகுணமாக நிர்வஹிக்கும்
அத்ருஷ்டத்தை க்ருப அனுகுணமாக நிர்வஹிக்கும் என்று ஜீயர் அருளிச் செய்வர்
முக்தரை போக அனுகுணமாகவும் முமுஷூக்களை ஸ்வரூப அனுகுணமாகவும் பத்தரை கர்ம அனுகுணமாகவும் ரஷிக்கும் என்று எம்பார் அருளிச் செய்வர்
-ஆக இத்தால் இ றே ஈஸ்வரனுக்கு சர்வ ரஷகத்வம்
ஆனால் ஒருவனுக்கு புத்ரர்கள் ஒத்து இருக்கிற ஒருத்தனை இந்திர பதத்தில் வைத்து ஒருத்தனை ரௌத்ராதி நரகத்திலே தள்ளுமா பாதி
சர்வ ரஷகனான ஈஸ்வரனுக்கு சகல சேதனரோடும் நாராயண த்வ்ரா பிரயுக்தமான குடல் துடக்கு ஒத்து இருக்க
ஒருத்தனை தெளிவிசும்பான அந்தமில் பேரின்பத்திலே இனிது இருக்க ஒருத்தன் இருள் தரும் மா ஞாலத்திலே இருந்தால்
ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில்
ராஷசன் திருவடி வாலிலே நெருப்பை நெருப்பை இட பிராட்டி சங்கல்பத்தாலே மயிர்க்கால் வழியிலே நீர் ஏறிக் குளிர்ந்தால் போலே
சராசரத் மகமான சமஸ்த பதார்த்தங்களிலும் சத்தா தாரகனான ஈஸ்வரனுடைய இச்சா ரூபமான சௌஹார்த்தம் அனுஸ்யூகமாகையாலே
நைர்க்ருண்யம் இல்லை
இந்த சௌஹார்த்தம் நித்யர் பக்கல் அச ஸூ த்தி பிரசங்கம் இல்லாமையாலே ஸ்புரித்து இருக்கும்
பத்தர் பக்கல் அநாதி கர்ம திரோதான ரூபையான அஸூத்தியாலே சம்சார தந்திர வாஹியான
அவனுடைய அந்த சௌஹார்த்தம் நித்ய பக்தர் போலே பிரகாசிக்கப் பெறாதே ஹிதபரத்வ ரூபமான கர்ம அனுகுண
ரஷகம் நடக்கையாலே வைஷம்யம் இல்லை
ஆகை இ றே வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷ்வாத்-என்று ஸூ தர காரரும் சொல்லிற்று -இத்தாலே ஈஸ்வரனுடைய
சர்வ ரஷகத்வத்துக்கு குறை இல்லை
ஏக ஏவ ராஜா ஆகாதோ தேவ ரூப–ஈசதே தேவ ஏக –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -என்கிறபடியே
ஸ்வ தந்த்ரன் அவன் ஒருவனே அவனை ஒழிய உபய விபூதியில் உள்ளார் அவனுக்கு பர தந்த்ரர்
தாஸ பூதாஸ் ஸ்வ தஸ் சர்வே ஹயாத்மந பரமாத்மந-என்று பிரமாணம்
இப்படி பார தந்த்ர்யம் ஸ்வரூபமாய் இருக்கச் செய்தே பிரம்ம ருத்ராதிகள் அவன் கொடுத்த ஐஸ்வர்ய விசேஷத்தாலே அஹங்ருதராய்ப் போருவர்கள்
தேவாதிகள் போக ஆபாசத்தாலே அஹங்க்ருதர் -ரிஷிகள் தபோ பலத்தால் அஹங்க்ருதர் மற்றுள்ளார் அஜ்ஞ்ஞானத்தாலே அஹங்க்ருதர்
இவர்களுக்கு ஒரு காலும் பாரதந்த்ர்யம் நடவாது -அது உண்டாயிற்றாலும் மின் போலே ஷண பங்குரம்-
அது நிலை நிற்பது நித்ய ஸூ ரிகளுக்கு -அவர்கள் இந்த பார தந்த்ர்யத்தை இட்டு ஒருங்கப் பிடித்தது என்னலாம் படி பகவத் அபிமானமே வடிவாக இருப்பார்கள்
அது என் போலே என்னில் மத்யாஹன காலத்தில் புருஷன் சாயை அவன் காலுக்கு உள்ளே அடங்குமா போலே –
ஒருவனுக்கு பூஷணாதிகள் ஸ்வம்மாக உண்டானால் பூணவுமாம்- புடைக்க்கவுமாம் -அறவிடவுமாம் -ஒத்தி வைக்கவுமாம் -தானம் பண்ணவுமாம்-போலே
சர்வ வித விநியோக யோக்யமாய் அவனுக்கே யாய் இருக்குமா போலே பகவத் பாரதந்த்ர்யம்
எம் தம்மை விற்கவும் பெறுவார்கள் -என்றும் -அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் என்றும் பிரமாணங்கள்
இப்படிக்கொத்த பாரதந்த்ர்யம் இல்லாமையாலே தேவதாந்த்ர்யங்கள் உத்தேச்யம் அன்று
-பார தந்த்ர்யர்கள் உடையவர்களே உத்தேச்யம் -இவ்வர்த்தத்தை திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் இ றே -மற்றுமோர் தெய்வம் உளது என்று
இருப்பாரோடு உற்றிலன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -என்றும்
திருவில்லா தேவரைத் தேறேல்மின் -என்றும்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து -என்றும் சொல்லுகிறபடியே தேவ தாந்த்ரங்களுக்கு இழி தொழில்கள் செய்யக் கடவேன் அல்லேன்
நான்யதாயதநம் வசேத்-என்கிறபடியே அவர்களுடைய ஆலயங்களிலே வசிக்கக் கடவன் அல்லன்
நான்யம் தேவம் நிரீஷயேத் – என்கிறபடியே அவர்களைக் கண் கொண்டு காணக் கடவன் அல்லன் –
இவர்கள் பகவத் சரீர பூதர்களாக இருந்தார்களே யாகிலும் அஹங்கார பிசாச விசிஷ்டர்கள் ஆகையாலே உபேஷணீயர்
பிரதிபுத்தரானவர்கள் தேவதாந்தரங்களை சேவியார் என்று சாஸ்திரம் சொல்லிற்று
பகவத் விஷயங்களை விட்டு தேவதாந்த்ரங்களைப் பற்றுகை யாவது த்ருஷார்த்தனானவன்
கங்கை பெருக்காக ஓடா நிற்க அதன் கரையிலே ஊற்றுக்கு அல்ல துர்புத்தியைப் போலே –
பகவத் சமாஸ்ரயணீயம் பண்ணினவனை தேவதாந்த்ரங்கள் அனுவர்த்திப்பார்கள்
பிரணமந்தி தேவதா -என்று பிரமாணம் -மயிரைப் பிளக்க வலிக்கச் சொல்லுகிற யமனும் -ப்ரபுரஹம் அந்ய நருணாம் ந வைஷ்ணவா நாம் -என்றான் இ றே -ஆகையால் இவர்களுக்கு ஒரு காலும் யம விஷயத்தை அடிகை இல்லை -அப்படிக்கு ஸ்ருதியும் ஓதிற்று
ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி –ஆனால் இவனுக்கும் அநீதி உண்டானால் யம தர்சனம் பண்ண வேண்டாவோ என்னில்
கிண்ணகப் பெருக்கில் துரும்பு கொள்ள ஒண்ணாத வோபாதி அவனுக்கு பகவத் கிருபை ஏறிப் பாய்கையாலே யமாதி தர்சனம் பண்ண வேண்டா
அவர்கள் தான் இவர்களுக்கு கள்ளர் பட்டது படுவார்கள்
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -என்னும் படி இ றே இவர்களுடைய பிரபாபம் இருக்கும் படி
இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தாலே பகவச் சரீர பூதராய் இ றே இருப்பது
பகவத் ஆஸ்ரயணத்துக்கு முன்பு அசத்பிராயமாய் பின்பு இ றே தங்களை உண்டாகவாக நினைப்பது
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் –என்று பிரமாணம்
பகவத் ஆஸ்ரயணத்துக்கு முன்பு காளராத்ரி–பின்பு ஸூப்ரபாதம்
தாய் மடியிலே கிடந்து உறங்குகிற பிரஜை ஸ்வப்னத்திலே புலியின் கையிலே அகப்பட்டு க்லேசித்துக் கூப்பிடுமா போலே எம்பெருமானை உணராத தசை
தாய் மடியிலே கிடந்து உறங்குகிற பிரஜை கண் விழித்து தாய் முகத்தைப் பார்த்து நிர்ப்பயமாய் இருக்குமா போலே
எம்பெருமானை உணர்ந்த தசை என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்
இவ்வதிகாரிக்கு ஈஸ்வரன் செய்த அம்சத்திலே க்ருதஜ்ஞதையும் செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷையும் நடக்க வேணும்
பெற்றதும் பிறவாமை -என்று செய்த அம்சத்தில் க்ருதஜ்ஞை-
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ -என்று செய்ய வேண்டும் அம்சத்தில் அபேஷை நடக்க வேணும்
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொண்டு உண்டியே உடையே உகந்தோடி மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்து
அன்னவர்தம் பாடல் ஆடல் அவை ஆதரித்து சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து அவர் தம் கல்வியே கருதியோடி
ஐவர் திசை திசை வலித்து எற்றும் படி இந்த்ரியங்களுக்கு இரை தேடி இடாதே ஐம்புலன் அகத்திடுக்குகை
இந்த்ரியங்களைப் பட்டினி கொள்ளவும் ஆகாதே -பட்டி புக விடவும் ஆகாதே
ஆகையாலே இவற்றை ஹ்ருஷீகேச சமர்ப்பணம் பண்ணி –கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ
என்று எப்போதும் பகவத் விஷயத்தை கேட்டும்
குட்டன் வந்து என்னைக் புறம் புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான் -என்று பகவத் விக்ரஹத்தோடு சம்ச்லேஷித்தும்
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்கிறபடியே கண்கள் வவ்வல் இடும்படி குளிர்ந்து
வாயவனை யல்லது வாழ்த்தாதே -என்று வாயார ஸ்தோத்ரம் பண்ணியும்
பகவத் விக்ரஹ தர்சனம் பண்ணியும் -கையுலகம் தாயவனை அல்லது தாம் தொழா-என்று எப்பொழுதும் அஞ்சலி பந்தனம் பண்ணியும்
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்று கால் கொண்டு பகவத் ஷேத்ரங்களை பிரதஷிணம் பண்ணியும்
ப்ரீயாய மம விஷ்ணோச்ச -என்கிறபடியே பகவத் ப்ரீணா நார்த்தமாக வர்ணாஸ்ரம தர்மங்களை வழுவாதபடி அனுஷ்டித்தும்
ப்ராமாதிகமாக நழுவினாலும் அப்ரீதி விஷயம் அன்றிக்கே க்ருபா விஷயமாய் விடும் என்றும்
வஸ்தவ்ய பூமி கோயில் திருமலை தொடங்கி உண்டான அர்ச்சா ஸ்தலங்கள் என்றும்
அந்த ஸ்தல வாசம் தான் சரீரபாத பர்யந்தமாகக் கடவது என்றும்
யாவச்ச ரீர பாதமத்ரைவ ஸ்ரீ ரங்கே ஸூ க மாஸ்வ-
என்று ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தார்
இப்படி பிராப்ய ஸ்தலங்கள் இல்லாத போது வைஷ்ணவ சஹவாசம் பண்ணிப் போரவும்
இவை இரண்டும் இல்லாத போது பிரேத பூமி வாசத்தோ பாதியாக நினைத்து இருக்கவும் என்று துடங்கி உண்டான நல வார்த்தைகள்
ஸ்ரீ பாகவத சிஹ்னங்கள் ஆவன -பகவத் சம்பந்த நாமதேயங்கள் -திரு நாமம் -திரு இலச்சினை துடக்கமானவை
-த்வய உச்சாரணம் பகவத் பிரசாத அதாரணம் அருளிச் செயல் துடக்கமான அனுசந்தானங்கள்
ரங்கம் ரங்கமிதி ப்ரூயாத் -என்கிறபடியே தும்பினால் திரு வரங்கம் எங்கையும் இது ஒழிய ஸ்தலாந்தரங்களை சொல்லாது ஒழிகையும்
அதுக்கடி என் என்னில் பெரிய திருமலையிலே வர்த்திப்பான் ஒரு வைஷ்ணவன் பட்டர் கோஷ்டியிலே வந்து தும்ப -திரு வேங்கடம் என்ன
அவரார் கருவிலே திருவிலாதார் என்று அருளிச் செய்தார்
இது கேட்டு அனந்தாழ்வான் வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்றாளோ திருவரங்கம் என்றாளோ என்று
பட்டருக்குச் சொல்லி வரக்காட்ட அவர் கனாக் கண்ட படி என் கொண்டு செவ்வடி குத்துகிறாரோ என்று அருளிச் செய்தார்
பட்டர் திருவரங்கம் என்பாரையும் நாக்கறுக்க வேணும் திரு வரங்கம் என்னாதாரையும் நாக்கு அறுக்க வேணும் என்று அருளிச் செய்வார்
எங்கனே என்னில் கோயிலுக்கு போகிறோம் என்னாமல் திருவரங்கத்துக்கு போகிறோம் என்பாரையும் நாக்கு அறுக்க வேணும்
தும்பி திருவரங்கம் என்னாதாரையும் நாக்கு அறுக்க வேணும் என்று அருளிச் செய்தார்
தனக்கு யோக்யமாக விநியோகம் கொள்ளும்
பதார்த்தங்கள் யாவை சில அவை எல்லாம் பகவன் நிவேதிதமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்
யதன்ன புருஷா பவதி தத் அநநாஸ் தஸ்ய தேவதா -என்று பிரமாணம் -அந்த பதார்த்தங்கள் தான் நியாயார்ஜிதமாக வேணும்
பாஹ்யங்கள் ஆகாது -குத்ருஷ்டிகள் உடைய பதார்த்தங்கள் ஆகாது அபிமான தூஹிதருடைய பதார்த்தங்கள் ஆகாது
-நாஸ்திகர் உடைய பதார்த்தங்கள் ஆகாது -ஸ்ராத்தாதிகளால் வரும் பதார்த்தங்கள் ஆகாது
ஒருவனுக்காகப் பண்ணும் பகவத் ஸ்தோத்ரம் மந்திர ஜபம் திரு அத்யயனம் துடங்கி உண்டான வற்றால் வரும் பதார்த்தங்கள் ஆகாது
ஒதுவித்துக் கூலி வாங்குதல் ஸ்ருத்யர்த்தமான அபியுக்தருடைய பிரபந்தங்களை கூலிக்காக வோதுவிக்கலாவது –
ஒருவன் சோற்றுக்காக பிரபன்ன பாஷையும் பண்ணிப் போருவன் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
தனியே பிரபன்னர் என்று ஒரு ஜாதியும் பிரமேயம் என்று ஒரு பாஷையுமாய் இ றே இருப்பது
சத்வ நிஷ்டன் சாத்விகனை நெருக்காமல் சம்சாரிகள் பக்கல் சாபேஷன் அல்லாமல் யதோபாத்தம் கொண்டு ஜீவிக்கக் கடவன்
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
சாதா நாந்தர நிஷ்டனை விசேஷ திவசத்திலே காணலாம்
பிரபன்னனை ஷாம காலம் வந்த வாறே காணலாம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
பிரக்ருத்யாத்ம விவேகம் பிறந்தவனை ஷாம காலம் வந்தவாறே காணலாம் -பிரபன்னனை விசேஷ திவசங்களிலே காணலாம்
-அநந்ய பிரயோஜனனை விரஜைக் கரையிலே காணலாம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
மனனக மலமறக் கழுவி என்றும் மனசில் உண்டான அஷ்ட மலங்கள் அற்று இருக்கவும்
ஸ்திதி மனசம் தமேவி ஹி விஷ்ணு பக்தம் -என்று ஸூ த்த மனவாய் இருக்கவும்
சராசரமான பூதங்கள் அடைய பகவத் விக்ரஹம் என்று இருக்கையும் சர்வ பூத தயை பண்ணுகையும்
பர துக்க துக்கியாய் இருக்கையும் -பர சம்ருத்தி பிரயோஜனமாய் இருக்கையும்
நியாய உபபாத்மமான த்ரவ்யத்தை சாத்விகர் அளவிலே சமவிபாகம் பண்ணிப் போருகையும் பகவத் விமுகரான
அசாத்விகர் அளவிலே வ்யாபியாது இருக்கையும்
தனக்கு சேஷமான க்ருஹ ஷேத்திர க்ராமாதிகளோடு புத்ராதிகளோடு மற்றும் உள்ள உபகரணங்களோடு வாசி யற பகவத் நாமதேயங்களும்
பகவன் முத்ரைகளும் தரிப்பிக்கவும் பகவத் விமுகர் இடத்தில் சம்லாப தர்சனம் துடங்கி யுண்டான சர்வத்தையும் த்யஜிக்கவும்
தெரித்து எழுது வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது என்கிறபடி கால ஷேபமாகவும்
இப்படிக்கொத்த அர்த்தங்களிலே அவஹிதனாய் போருகை இ றே குறிக்கோள் ஆவது

சீர்மை யாவது -இப்படிப் பட்ட அர்த்த நிஷ்டன் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தி பண்ணுகை-எங்கனே என்னில்
தண சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -என்கிறபடியே சிரஸா வாஹ்யரும் அவர்களே
எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே என்கிறபடியே அந்தர்யாமியும் அவர்கள்
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -என்கிறபடியே குல நாதரும் அவர்களே
-சேஷிகளும் அவர்கள் -சரண்யரும்-பிராப்யரும் அவர்களேயாய் இருக்கும்
ப்ரபவோ பகவத் பக்தா –என்றும் வைஷ்ணவ சம்ஸ்ரயா -என்றும் -சாத்யாஸ் சாந்தி தேவா -என்றும் –
ஜ்ஞானத்தின் ஒளி உருவை நினைவர் என் நாயகரே -என்றும்
வணங்கு மனத்தாரவரை வணங்கு என் தன மட நெஞ்சே -என்றும் அடியவர்கள் தம்மடியான் என்றும் பிரமாணம்
எம்பெருமானில் தாழ்ந்தான் ஒரு வைஷ்ணவன் இல்லை என்று எம்பார் அருளிச் செய்வார்
பட்டருக்குக் கை கொடுத்து போனான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் -ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை காலை முடக்கு என்ன –
-ஆழ்வார் திருத் தாள் என்று பாடினார் –இவன் கால் என்பான் என்று அவனை விட்டு அருளினார்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் உலாவுகின்ற கோயில் ஆழ்வார் என்று இருக்க வேணும் என்று நஞ்சீயர் அருளிச் செய்வார்
ஜங்கம ஸ்ரீ விமாநாநி -என்று பிரமாணம்
வைஷ்ணவனுக்கு ஒரு வைஷ்ணவனே உசாத் துணை என்று நம்பிள்ளை அருளிச் செய்வார்
வருகிறவன் வைஷ்ணவன் ஆகில் இருக்கிறவனும் வைஷ்ணவனாய் இருக்க வேணும் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
பெரிய நம்பி சரமத்திலே கூரத் ஆழ்வான் மடியிலே கண் வளர -கோயிலும் ஸ்ரீ பாஷ்ய காரரும் இருக்க –
-இங்கே சரீர அவசானம் ஆவதே என்று வெறுக்க ஒரு பாகவதன் உடைய மடியில் காட்டில் கோயில் உத்க்ருஷ்டம் அன்று என்று அருளிச் செய்தார்
இதில் ஜாதி நிரூபணம் இல்லை -பயிலும் திரு உடையார் யவரேனும் அவரே -என்று பிரமாணம் -இவர்கள் ஜாதி நிரூபணம் பண்ணுகை
யாவது அசஹ்ய அபசாரம் ஆவது -எங்கனே என்னில் -பகவத் அபசார -பாகவத அபசாரம் -அசஹ்யாத அபசாரம் என்று மூன்று –
இதில் பகவத் அபசாரமாவது -ஸ்வ யதன சாத்யன் எம்பெருமான் என்று இருக்கை
பாகவத அபசாரமாவது -ஸ்ரீ வைஷ்ணவனோடு ஒக்க தன்னையும் சமான பிரதிபத்தி பண்ணுகை
அசஹ்ய அபசாரமாவது அர்ச்சாவதாரத்தின் உடைய த்ரவ்ய நிரூபணம் பண்ணுதல் -ஸ்ரீ வைஷ்ணவனுடைய ஜாதி நிரூபணம்
பண்ணுதல் என்று ஜீயர் அருளிச் செய்வர்
பெரிய நம்பி மாறனேர் நம்பியை சம்ஸ்கரித்தார்-பட்டர் பிள்ளை உறங்கா வல்லி தாசரை சம்ஸ்கரித்தார் -பாஷ்யகாரர் நீராட
எழுந்து அருளும் போது மிளகு ஆழ்வான் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளுவார் -மீண்டு எழுந்து அருளும் போது
பிள்ளை உறங்கா வல்லி தாசர் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளுவார்
சத்கார யோக்யர் சஹவாச யோக்யர் என்று இரண்டு -சாதநாந்தர நிஷ்டன் -சத்கார யோக்யன் -பிரபத்தி நிஷ்டன் -சஹவாச யோக்யன்
-என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
மருகாந்தரத்திலே தண்ணீர் பந்தலோபாதி சம்சாரத்தில் வைஷ்ணவ சஹவாசம் என்று பெரியாண்டான் அருளிச் செய்வர்
ஷாம காலத்தில் அறச்சாலை யோபாதி விபரீத பூயிஷ்ட தேசத்திலே வைஷ்ணவ சஹவாசம் என்று
இளையாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்
ஒரு வைஷ்ணவனுக்கு உண்டான திருஷ்ட சங்கோசம் நாடு மாறாட்டத்தோ பாதியும் கதிர் காணப் பசியோ பாதியும்
அபிஷேகப் பட்டினி யோபாதியும் என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்
அம்ருத பானத்தாலே ஜரா மரண நாசம் உண்டாமோபாதி வைஷ்ணவ க்ருஹத்தில் அம்பு பானத்தாலே சகல பாபங்களும்
நசிக்கும் என்று பிள்ளை யருளிச் செய்வர்
ஸ்வரூப நாசகரோடு சஹவாசம் பண்ணுகையும் அநர்த்தம்-ஸ்வரூப வர்த்தகரோடு சஹவாசம் பண்ணாது ஒழிகையும் அநர்த்தம் -என்று ஜீயர் அருளிச் செய்வர் -நள்ளேன் கீழாரோடு உய்வேன் உயர்வந்தரோடு அல்லாலே -என்று பிரமாணம்
இதில் ஸ்வரூப நாசகராவர் -விழி எதிர்ப்பார் -சுவர் புறம் கேட்பார் -சம்ப்ரதாயம் அற ஸ்வ புத்தி பலத்தாலே சொல்லுவார் –
ஒருத்தன் பக்கலிலே கேட்டு அங்குக் கேட்டிலோம் என்பார் -ஆசார்யன் பக்கலிலே அர்த்தத்தைக் கேட்டு அதில் பிரதிபத்தி பண்ணாது இருப்பார் –
அவன் அளவிலே க்ருதஜ்ஞ்ஞன் அன்றிக்கே க்ருதக்னனாய்ப் பொருவார் -க்யாதி லாப பூஜைக்காக கேட்பார் இவர்கள் –
ஸ்வரூப வர்த்தகராவார் -சதாசார்யர் பக்கல் பரார்த்தம் அன்றியே ஸ்வார்த்தமாக-ஏற்ற கலங்கள் -என்னும் படி
-அர்த்த ஸ்ரவணம் பண்ணுவாராய்-அர்த்தத்திலே விஸ்வச்தருமாய்-அந்த ஆசார்யன் பக்கலிலே க்ருதஜ்ஞருமாய்
சரீரம் அர்த்தம் பிராணன் என்று துடங்கி உண்டான சர்வத்தையும் ஆசார்ய சமாஸ்ரயணம் பண்ணிப் போருவர் சிலராய்
த்ரிவித கரணங்களாலும் ஆசார்யனைச் சாயை போலே பின் செல்லக் கடவர்களாய்-பிரகிருதி சங்கமுடைய
பித்ராதிகளே யாகிலும் ததீய விஷய ஞானம் இல்லை யாகில் அவர்களை அனுவர்த்தியாதே இருப்பாருமாயே அவர்களோட்டை
ஸ்பர்சம் உண்டாயிற்றதாகில் -ஷூத்ர ஸ்பர்சத்தோ பாதி சசேல ஸ்நானம் பண்ணிப் போரக் கடவராய் அபிஜன வித்யா வ்ருத்தங்கள்
ஆகிற படு குழி அற்ற ததீய விஷயத்தில் எப்போதும் போரக் கடவராய்
அவைஷ்ணவனை அனுவர்த்திக்கையும் அநர்த்தம் -வைஷ்ணவனை அனுவர்த்தியாது ஒழிகையும் அநர்த்தம்
அவைஷ்ணவ நமஸ்காராத்–என்று பிரமாணம் –
உண்ணும் சோறுண்டு போரக் கடவராய் பிரசாத தீர்த்தங்களும் பிராப்த விஷயங்களிலே பிரதிபத்தி பண்ணிப் போரக் கடவராய்
-உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை -என்கிறபடியே பகவத் விஷயத்தை ஒழிந்த போது உபவாசத்தோ பாதி என்று நினைத்து
இருக்குமவர்கள் ஸ்வரூப வர்த்தகராவார்
பெரியாண்டான் திருத் தோரணம் துடங்கி அழகர் திருவடிகள் அறுதியாக பத்தெட்டு திவசம் தண்டன் இட்டுக் கிடப்பர்
ராத்திரி மனுஷ்யர் போகும் போது ஆண்டான் கிடக்கிறாரோ -பசு கிடக்கிறதோ வழி பார்த்துப் போங்கோள் என்னும் படி இ றே
சலியாமல் பகவத் அனுபவம் பண்ணும் படி -இனி தீர்த்த பிரசாதங்களும் போஜனங்களும் நிரூபித்துக் கொள்ள வேணும்
-ஆழ்வானும் ஆண்டாளும் கோயில் நின்றும் தேசாந்தரத்துக்குப் போய் மீண்டு வருகிற அளவிலே வழியில் அவசரிக்க இடம் இல்லாமல்
கோயிலுக்கு அணித்தாக உபவாசத்தோடு வந்து புகுந்த தொரு மௌஷ்டிகன் வாசலிலே சடக்கென அமுது செய்தார்
ஆண்டாளை அழைத்து பிரசாதம் கூடச் சொன்ன அளவில் அவருடைய ரூப நாமம் கொண்டு அமுது செய்தீர் –
அவர் எதிலே நிஷ்டர் என்று தெரியாது -நான் அது செய்வது இல்லை என்றாள்
ஆழ்வான் -உம்முடைய வ்யவசாயத்தை பெருமாள் எனக்குத் தந்து அருள வேணும் -என்று வேண்டிக் கொண்டார்
ஆகையாலே கேவல நாம ரூபமுடையாரான சாதநாந்திர நிஷ்ட ரகங்களிலே பிரசாதப் படுவான் அன்று –
மந்த்ராந்தரங்களைக் கொண்டு பண்ணின சமாநாரதத்தில் தீர்த்த பிரசாதாதிகளும் பிரசாதப் படுவான் அன்று
ஸ்ரீ பாத தீர்த்தம் தான் த்விதம் என்று ஜீயர் அருளிச் செய்வர் –
இதர உபாய நிஷ்டர்களுடைய தீர்த்த பிரசாத்யாதி அங்கீ காரமும் ஜ்ஞான மாந்த்ய ஹேது
பகவத் உபாசன நிஷ்டருடைய தீர்த்த பிரசாத்யாதி அங்கீ காரமும் ஜ்ஞான மாந்த்ய ஹேது என்று பெரியாண்டான் அருளிச் செய்வார்
வசிஷ்டனுக்கும் விச்வாமித்ரனுக்கும் உள்ள வாசி போரும் பாகவத தீர்த்தத்துக்கும் பகவத் தீர்த்தத்துக்கும் என்று
இளையாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்
கரும்புக்கும் கட்டிக்கும் உண்டான வாசி போரும் என்று பிள்ளை அருளிச் செய்வர்
கூட்டத் தேனுக்கும் படித் தேனுக்கும் உள்ள வாசி போரும் என்று நடுவில் திரு வீதிப்பிள்ளை அருளிச் செய்வர்
இப்படி ததீய விஷயத்தை பண்ணிக் கொண்டு போருகை சீர்மை யாவது
ஆகையால் இப்படி குறிக்கோளும் -சீர்மையும் -உண்டாய்ப் போருகை வைஷ்ணத்வம் ஆவது

———————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: