ஸ்ரீ யதிராஜ விம்சதி -13/14/15/16-ஸ்லோஹங்கள் –ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் வியாக்யானம்–

அவதாரிகை –

இவர் -நார்ஹ -என்றவாறே என் தான் இப்படி கிலேசிப்பது -நீர் சம்சாரத்தில் வர்த்திதிலீரோ —
அதில் தாப த்ரயங்களால் வரும் துக்கங்களைக் கண்டு அருசி பிறவாதோ-
பிறந்தால் அது யோக்யதை யன்றோ என்ன -அடியேனுக்கு இதில் வரும் துக்க அனுபவம் கண்டும் அருசி பிறவாமை மாத்ரம்
இன்றிக்கே மேன்மேலும் ருசி அபிவிருத்தமாகா நின்றது -என்கிறார் –தாபத்ரயீஜநி ததுக்க–இத்யாதியால் –

தாபத்ரயீ ஜநித துக்க நிபாதி நோ அபி
தே ஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ
நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –13-

தாபத்ரயீ-
ஆத்யாத்மிக ஆதி தைவிக ஆதி பௌதிக -பேதேன மூன்று வகைப் பட்டு இருந்துள்ள
தாபங்களுடைய த்ரயத்தாலே என்னுதல் –
சமூஹத்தாலே என்னுதல் ‘
இவைகள் தான் ஓர் ஒன்றே அநேக விதமாய் இருக்கும் இறே –
ஆத்யாத் மிகங்களாவன-தன்னிடத்திலே உண்டாமாவை -அவை யாவன –
அபேஷித அலாபத்தால் வரும் மான்ஸ வ்யாதிகளும் -ஜ்வராதிகளால் வரும் சரீர வ்யாதிகளும் –
ஆதி தைவிகங்கள் ஆவன -இவனை அறியாமல் தைவ யத்னத்தால் வரும் அசநிபாதாதிகள்
ஆதி பௌதிகங்கள் ஆவன சர்ப்ப தம்சாதிகளால் வரும் நலிவுகள் -இப்படி இருந்துள்ள தாப த்ரயத்தாலே

ஜநித-
உண்டாக்கப் பட்டு இருந்துள்ள -இத்தால் காரண வைசித்ர்ர்யத்தோடு ஒக்கும் கார்ய வைசித்ர்யமும் என்கிறது
ஜனித -என்று –
பூதார்த்தே க்த பிரத்யயமாய் -அத்தால் துக்காம்சத்தில் ஜன்யமானமாதல் -ஜ நிஷ்யமாணமாதல் இல்லை என்கிறது –
இத்தால் ருசி பிறவாமைக்கு சாமக்ரீவைகல்யம் சொல்ல ஒண்ணாது என்கிறது
அன்றிக்கே –
ஆதி கர்மணி -க்த -பிரத்யயமாய் ஜன்யமான என்னவுமாம் –
இத்தால் துக்கம் உண்டாய் கழிந்ததும் அன்றிக்கே உண்டாகப் போகிறதும் அன்றிக்கே இடைவிடாமல் உண்டாகிறது
ஆகையாலும் சாமக்ரீவைகல்யம் சொல்ல ஒண்ணாது என்கிறது –

துக்க நிபாதி நோ அபி –
இப்படி பஹூ விதமாய் இருந்துள்ள துக்கங்களில் அதின் கரை காணாமல் விழா நின்றேனே யாகிலும் –
இத்தால் துக்க அனுபவம் இல்லாமையை இட்டு அருசி பிறவாமையைச் சொல்ல ஒண்ணாது என்கிறது –

நி -என்கிற உப சர்க்கத்தாலே
ஸூக பிராந்த்யா வரும் துக்கம் அன்றிக்கே துக்கத் வேன வரும் துக்க அனுபவத்தைச் சொல்லுகிறது
அதில் வர்த்தமான நிர்த்தேசத்தாலே -துக்கம் உண்டாய் கழிகிறது போலே அன்றாய்த்து -துக்க அனுபவம் உண்டாகிற படியும் என்கிறது
அன்றிக்கே –
துக்கம் போலே உண்டாய் கழிந்தது அன்றிக்கே துக்க அனுபவம் உண்டாகா நின்றது என்கிறது –

மம-
தேஹமே ஆத்மா என்று இருக்கும் அடியேனுக்கு என்னுதல்-
துக்க அனுபவமே நிரூபகமான அடியேனுக்கு என்னுதல்

தே ஹஸ்தி தௌ ருசி-
துக்க அனுபவ மூலமான தேஹத்தினுடைய இருப்பிலே கிடீர் ருசி உண்டாகிறது

மம -தே ஹஸ்தி தௌ ருசி–
துக்க அனுபவ மூலம் என்று அறிந்தவதில் ருசி ஒருவருக்கும் பிறவாது -அடியேனுக்கு அங்கன் அன்றிக்கே
அதினுடைய சம்பந்தாதால் உண்டான துக்கங்களை அனுபவியா நிற்கச் செய்தேயும் அதில் ருசி உண்டாகிறது என்கிறார்

மம –ருசி–ஸ்து – தே ஹஸ்தி தௌ –
அநிவ்ருத்தமான பாதகத்தில் அருசி பிறவா விடிலும் உபேஷை யாகிலும் உண்டாகக் கூடும் இ றே-
அடியேனுக்கு அங்கன் அன்றிக்கே பாதக சம்ரஷணத்தில் கிடீர் ருசி உண்டாகிறது என்கிறார் –

தந் நிவ்ருத்தௌ-
துக்க ஹேதுவான தேஹத்தினுடைய நிவ்ருத்தியில் ருசி உண்டாகிறது இல்லை -துக்க ஆரம்பகமான சரீரத்தில் அருசி
பிறக்கக் கூடும் இறே -அதுவும் இல்லை என்கிறார்

துக்க நிபாதி நோ அபி மம ருசி ஸ் து தே ஹஸ்தி தௌ-
அடியேனுடைய ருசி லோக விலஷணை கிடீர் -மற்ற எல்லாருடையவும் ருசியானது துக்க ஹேது வாமதில் நின்றும்
நிவ்ருத்தை யாகா நிற்க அடியேனுடைய ருசியானது துக்க ஹேதுவாமதில் அபிவிருத்தமாகா நின்றது என்கிறார் –

மம ருசி ஸ் து தே ஹஸ்தி தௌ –
தேஹாத்ம அபிமானியான அடியேனுடைய சம்பந்தி நியாய இதர விஜாதீயையான ருசி தேஹத்தினுடைய
இருப்பிலே உண்டாகா நின்றது என்கிறார்
ஸ்வ விஷயத்தில் அருசி ஒருவருக்கும் உண்டாகாது என்று கருத்து –

இப்படி பாதகமான சரீரத்தில் அருசி பிறவாமைக்கு அடி என் என்ன
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ –
இவ்விரண்டுக்கும் அடி அடியேனுடைய பண்ணி வைத்த பாபம் என்கிறார்
ஏவம் சம் ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி ஜீவே துக்காகுலே

மம பாபம்
பிறர் பண்ணினதன்று

பாபமேவ
கர்மம் அடியான பகவத் சங்கல்பம் இறே சம்சார பிரவர்த்தகம் –
அங்கன் அன்றிக்கே கேவல கர்மமாய்த்து சம்சார பிரவர்த்தகம் என்கிறது
பரம தயாளுவான ஈஸ்வரன் பரம துக்க ஜனகமான சரீரத்தில் ருசி பிறக்கும் படி பண்ணுவனோ -என்கிறார்
அன்றிக்கே –
யதிவா ராவண ஸ்வயம் -என்றவன் பிரதிகூல்யர் பக்கல் ஆபி முக்யம் கொண்டு ரஷிக்கையில் க்ருத சங்கல்பனாய் இருக்க –
ந நமேயம் -என்னும் படி இ றே என் பாபம் இருப்பது என்னவுமாம்

அஹோ –
ஸ்வ தோஷத்தினுடைய பலாதிக்யத்தைக் கண்டு அஹோ என்று ஆச்சர்யப் படுகிறார் ஆதல் –
துக்கப் படுகிறார் ஆதல்
நீர் இப்படி ஆச்சர்யப் படுவது -துக்கப் படுவதாக நின்றீர் ஆகில் உம்முடைய பாப நிவ்ருத்திக்கு யத்நிப்பாரா என்ன

நாத த்வமேவ ஹர தத் –
இத்தலையில் இழவு பேறுகள் தன்னதாம்படியான சம்பந்தமுடைய தேவரீரே அப்பாபத்தைப் போக்கி அருள வேணும் என்கிறார்

நாத
ஆருடைமை அழிகிறது -ஆருடைமைக்கு ஆர் பிரார்த்திக்கிறது என்னவுமாம் –

த்வம்
பாபத்தை போக்கும் விரகு அறியும் தேவரீர்

த்வமேவ –
அடியேன் அறியில் தவிர்த்துக் கொள்ளுவேன்
ஆகையாலே அடியேன் அறியாமல் தேவரீரே போக்கி யாருல வேணும் என்கிறார்

த்வமேவ
த்யஜ -வ்ரஜ -என்னும் தேவை இடாதே –
பவேயம் சரணம் ஹி வா -ஸூ ந்தர -58-56-என்னுமவள் கோடியிலே யான தேவரீரே என்றுமாம் –

நாத த்வமேவ ஹர தத் –
எதிர் தலையிலே ஒரு பச்சை இன்றிக்கே தேவரீர் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக ரஷிக்கும் தேவரீரே என்னவுமாம்

த்வமேவ ஹரதத்
தேவரீரை அகலுகைக்கு அடியான தேஹத்தில் ருசியை உண்டாக்கும் போது அடியேன் பாபமே அசாதாராண காரணம் ஆகிறாப் போலே
அத்தைப் போக்கும் போது தேவரீரே யாக வேணும் என்னுமாம்

த்வமேவ
சமிதை பாதி சாவித்திரி பாதி போலே அடியேனும் தேவரீரும் யாகாமல் நிரபேஷரான தேவரீரே என்னவுமாம்

தத் –
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந சம்சய -ஸூ ந்தர -38-47–என்கிறபடியே பிரதமம் அல்பத் வேன ஜ்ஞாதமாய்
பல அனுபவ தசையில் பஹூத மத்வேன ஜ்ஞாதமான பாபத்தை என்னவுமாம் –
இப்படி இவர் விண்ணப்பம் செய்தவாறே ப்ராப்தி உண்டாகிலும் பாப நிவ்ருத்திக்கு சக்தர் அன்றோ வேண்டுவது என்ன

யதிராஜ-
பாப நிவர்த்தந சக்தி யன்றோ தேவரீருக்கு ஔஜ்ஜ்வல்ய கரம் என்கிறார் –
அன்றிக்கே
இப்படி இவர் விண்ணப்பம் செய்த வாறே இவருடைய பாப நிவ்ருத்தியிலே யத்நித்தமை தோற்ற இருக்கும் இருப்பைக் கண்டு
இது வன்றோ தேவரீருக்கு பிரகாசகரம் என்கிறார் ஆகவுமாம் –

சீக்ரம் –
அத்தலையில் பிராப்தியையும் சக்தியையும் கண்டு சீக்ரம் -என்று ஸ்வீகரிக்கிறார்
அன்றிக்கே –
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் -என்கிறபடியே தேஹாத்ம அபிமானியாய் தேஹத்தினுடைய இருப்பிலே
ருசி பிறக்கைக்கு அடியான பாபத்தை யுடைய அடியேனுக்கு
இவ்வாபி முக்யம் இருக்கும் காலத்திலேயே தேவரீர் இப்பாபத்தை போக்கி யருள வேணும் என்கிறார் –
இப்போது இவர் ஆபிமுக்யத்தை சொல்லுகிறது அவர் பண்ணும் ரஷணத்துக்கு ஹேதுவாக அன்று –
அது புருஷார்த்தமாகைக்காக -புருஷனாலே அர்த்திக்கப் படுமது இ றே புருஷார்த்தம் –

யதிராஜ சீக்ரம்
அத்தலையில் வைராக்யத்தால் வந்த புகரைக் கண்டு அது தமக்கு உண்டாக வேணும் என்று பதறுகிறார் ஆகவுமாம்
ஆசாரே ஸ் தாபயத்யபி -என்கிறபடியே சிஷ்யனை தன தலையிலே நிறுத்துகையும் ஆசார்ய க்ருத்யம் இறே –
மோஷமும் பரம சாம்யா பத்தி இறே
சீக்ரம் ஹர -என்று
பாப நிவ்ருத்தி பிரார்த்தனை யன்றோ சாப்தமாகத் தோற்றுகிறது-ஸ்வரூப பிராப்தி யன்றே என்னில் –
அது அப்படி யாகிலும் -தேஹத்தில் ருசி ஜனகமான பாபம் கழியவே தேஹத்தில் ருசி கழியும்
அது கழியவே ருசி நிர்விஷயமாய் இராமையாலே -ஆத்ம விஷயத்தில் ருசி உண்டாம் –
அது உண்டானவாறே ஸ்வரூப அநுரூப சித்த உபாய ச்வீகாரம் உண்டாம்
அத்தாலே ஸ்வரூபம் நிறம் பெரும் -ஆகையாலே விரோதி நிவ்ருத்தியை பிரார்த்தித்த போதே
தன்னடையே ஸ்வரூப ஆவிர்பாவம் பிரார்த்தித்ததாய் விடும் –

——————————————————————————————

அவதாரிகை

கீழ் அல்ப அபி என்று தொடங்கி-இவ்வளவும் வர –
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் -அபராத பூயஸ்தையையும் விண்ணப்பம் செய்து
மேல் இரண்டு ஸ்லோகங்களாலே-
தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்கிறார் –
அதில் இஸ் ஸ்லோகத்திலே –
இவர் அல்ப அபி -முதலாக இவ்வளவும் வர தம்முடைய தோஷ பூயஸ்வத்தை விண்ணப்பம் செய்தவாறே
நீரும் ஸ்ரீ ஆழ்வான் போல்வாரில் ஒருவர் என்ன
அங்கன் அன்று அடியேன் -மெய்யே நீசன் ஆகையாலே அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய
மற்று ஒரு கதி இல்லை என்கிறார் –வாசா மகோசர மஹா -இத்யாதியாலே

வாசா மகோசர மஹா குண தேசி காக்ர்ய
கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷா அஹமேவ ந புநர் ஜகதீத் ருசஸ் தத்
ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே –14

வாசா மகோசர –
யதா வாசோ நிவர்த்தந்தே –என்றும் –
மொழியைக் கடக்கும் -என்கிறபடியே ப்ரஹ்மானந்தம் போலே வாக்காலே பரிச்சேதித்துச் சொல்ல அரியவைகளாய்

மஹா –
அப்ராப்ய மநஸா சஹா-என்றும் –
பெரும் புகழான் -என்கிறபடியே மனசாலும் பரிச்சேதித்து அறிய ஒண்ணாதவைகளாய் இருக்கிற

குண –
தயாதி குணங்களை உடையவராய் –
ஸ்ரீ உடையவர் காலத்திலே ஒரு நாள் வரையிலே ஸ்ரீ ஆழ்வானை கதளீ தளக்ருந்த நத்திலே நியமிக்க –
அவரும் அது செய்யப் புக்கு -ஆயுத ஸ்பர்சத்தாலே ஜலம் பொசியக் கண்டு மூர்ச்சித்தார் என்று பிரசித்தம் இறே –
இப்படியே யாயிற்று மற்றைய குணங்களும் இருப்பன
ப்ரஹ்ம குணம் போலே தத் ஆஸ்ரித குணங்களும் அபரிச்சின்னங்களோ என்ன -ஆம் அபரிச்சின்னங்களே
ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ஸ்ரோத்ரி யஸ்ய சாஹா மஹா தஸ்ய –தைத் -ஆனா -என்றும்
ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் -3-6-8-என்று ப்ரஹ்மத்துக்கு உண்டான ஆனந்தம் நிஷ்காமனான
ஸ்ரோத்ரியனுக்கும் உண்டு என்று இறே வேத புருஷன் சொல்லி வைத்ததும் –

தேசி காக்ர்ய-
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் –என்றும் –
விண்ணை வாழ்த்துவர் -என்கிறபடியே
தாம் அத்தேச விசேஷத்தை அறிந்து அதன் வை லஷண்யத்தைப் பிறருக்கும் உபதேசிக்குமவர்களில் தலைவராய் இருக்கிற
இவருக்கு தேசிகரில் தலைமையாவது –
அர்வாஞ்சோ யத் பத சரசிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா -யஸ் யாந்வய முபகதா தேசிகா முக்தி மாபு
ஸோ அயம் ராமானுஜ முநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் யத் சம்பந்தாத மநுத கதம் வர்ண்யதே கூர நாத -என்கிறபடியே
ஸ்வ சம்பந்த மாத்ரத்தாலே பூர்வாபர குருத் தாரகரான ஸ்ரீ எம்பெருமானாரும் இவர் சம்பந்தம் கொண்டு பேறு
தப்பாது என்று அறுதி இடலாய் இருக்கை –
அன்றிக்கே
உடையவருக்கு ஸ்ரீ பாஷ்ய கரண சஹ காரித்வத்தால் வந்த தலைமை யாகவுமாம்-
சிஷ்ய ஆசார்ய லஷண சீமா பூமியாகையாலே வந்த தலைமை யாக வுமாம் – –

கூராதி நாத –
ஸ்வ அவதாரத்தாலே அவ்வூரை சநாதமாக்கி அதுவே தமக்கு நிரூபகமாம் படி இருக்கிற ஸ்ரீ கூரத் ஆழ்வானாலே

கதிதாகில -கதித அகில –
கதித -ஷோதீயா நபி -ஸ்ரீ ஸ்தவம் -5- இத்யாதி களாலே அருளிச் செய்யப் பட்டவை களாய் –
கதித -என்கையாலே
அவர் அருளிச் செய்தார் அத்தனை போக்கி அவர்க்கு இது இல்லை என்கிறது –
அகில -அவர் அருளிச் செய்ததில் ஓன்று குறையாத

நைச்ய பாத்ரம்
நீசதைக்கு கொள்கலன் -இங்கு நீசத்தை யாவது -அஹங்காரம் –
இது தான் தேஹாத்ம அபிமான ரூபமாயும்-
ஸ்வா தந்திர அபிமான ரூபமாயும் –
சேஷத்வ அபிமான ரூபமாயும் –
கர்த்ருத்வ அபிமான ரூபமாயும் -இருக்கையாலே -அகில -என்கிறது –

ஏஷா அஹமேவ-
இச்சரீர விசிஷ்ட அடியேன் -இந் நிர்தேசத்தாலே -ஸ்வ நைச்யத்தில் பூர்வ சரீர சமாப்தமாதல் –
உத்தர சரீர சமாப நீயமாதல் இல்லை என்கிறது

அஹமேவ
மற்று ஒருவர் இல்லை

ஏஷா அஹமேவ-
மாரீசன் மிருக வேஷத்தை தரித்தால் போலே சரணாகத வேஷத்தைத் தரித்த அடியேன் -என்கிறார்

ந புநர் ஜகதீத் ருச-
இப்படிக்கு ஒத்தவன் இஜ் ஜகத்திலே கிடையாத மாதரம் அன்றிக்கே –
சதுர தச புவனங்களிலும் -அண்டாந்தரங்களிலும் கிடையாது என்கிறார் –
அவ்யயாநாம் அநேகார்த்த கதவம் ஆகையாலே -ஈத்ருச புன -என்று –
ஸ்வ சத்ருசனுடைய ஸ்வ இதர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
அதாவது
தம்மைப் போலே பரி பூர்ண நைச்ய பாத்ரமும் அன்றிக்கே ஸ்வ இதரரைப் போலே அல்ப நைச்ய பாத்ரரும் அன்றிக்கே
கிஞ்சின் ந்யூநையான நைச்ய பாத்ரமுமாய் இருக்கை –
குணாதிகம் இறே உபமானம் ஆவது —
தத் பரிபூர்ண நைச்ய பாத்ரம் அடியேனான படியாலே அடியேனுக்கு புகலிடம் தேவரீருடைய கிருபையே என்கிறார் –

ஸ் தத் ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே —
அடியேனொத்த பரிபூர்ண நைச்ய பாத்ரம் ஜகத்தில் கிடையாமையாலே தேவர் கிருபைக்கு புகுமிடம் அடியேன் என்கிறார்

ராமாநுஜார்ய –
ந கச்சின் ந அபராதயாதி என்னும் பிராட்டியை அனுசரித்து திருவவதரித்து –
அடியேனுடைய நைச்சயம் அடியேனுடைய சொல் கொண்டு அறிய வேண்டாதபடி
ஸ்வதஸ் சர்வஜ்ஞ்ஞர் ஆனவரே என்று சம்போதிக்கிறார்
நீர் பரிபூர்ண நைச்ய பாத்ரமாகும் காட்டில் உமக்கு நம் கருணை புகலிடமாக வேண்டியது என் என்ன

ராமானுஜ
தம் திறத்தில் தீரக் கழிய அபராதங்களை செய்த ராஷசிகளை திருவடி சித்ரவதம் பண்ண உத்யோகிக்க
அப்போது அவனோடு மறுதலைத்து-
கார்யம் கருணமார்யேண -என்று குற்றமே -பச்சையாக ரஷிக்கும் பிராட்டியை அனுசரித்து அன்றோ
தேவரீர் திரு வவதரித்தது என்கிறார் –

ஆர்ய
தேவரீர் கிருபை பண்ணுகைக்கு போரும்படியான நைச்யதையை அறிக்கைக்கு ஈடான சர்வஜ்ஞதையை
உடையவர் அன்றோ தேவரீர் என்கிறார் –
இத்தால் தேவரீர் கிருபை பண்ணுகைக்கு இவனுக்கு மேற்பட தண்ணியன் இல்லை என்னும் படியான விஷயம்
வேண்டி இருந்தாலும் அடியேனை கிருபை செய்து அருள வேணும் -என்கிறார் –
தேவரீர் கிருபையைப் பார்த்தாலும் அடியேனை கிருபை செய்து அருள வேண்டும்

கருணை வது மத கதிஸ் தே –
தய நீரைக் கண்டால் தயை பண்ணி யல்லது தரிக்க மாட்டாத ம்ருது பிரக்ருதிகரான தேவரீருடைய

கருணை வது
தய நீரை ஒழிய தனக்கு விஷயம் கிடையாத கிருபை தானே

மத் கதி –
தேவரீர் கிருபைக்கு போரும்படி குற்றங்களைச் செய்யும் அடியேனுக்கு புகலிடம் என்கிறார் –

தே கருணை வ –
ஈஸ்வரன் கிருபை போலே ஸ்வா தந்தர்ய அபிபூதம் அன்றிக்கே தண்ணளி விஞ்சி இருக்கும் தேவரீருடைய கிருபையே
அநந்ய கதிகனான அடியேனுக்கு உபாயம் என்கிறார் ஆகவுமாம்

மத் கதிஸ்து தே கருணை வ –
அடியேனுடைய சாதனம் -சாதா நாந்தர-வி லஷணம் என்கிறார் –
கர்ம ஜ்ஞான பக்திகள்
அஹங்கார கர்ப்பங்களாய்-சேதன சாத்யங்களாய்
அபாய பாஹூளங்களாய் -விளம்ப பல பிரதங்களாய் -ஸ்வரூப விரோதிகளாயும் இருக்கும் –
பிரபத்தி –
நிரஹங்காரமாய்-ஸ்வதஸ் சித்தமாய் -அபாய கந்த ரஹிதமாய்-அவிளம்ப பல பிரதமுமாய் -ஸ்வரூப அனுரூபமுமாய்
இருந்ததே யாகிலும் ஈஸ்வர ஸ்வா தந்த்ர்ய கர்ப்பமாய் -பய ஜனகமாய் இருக்கும்
அடியேனுடைய உபாயம்
அஹங்கார கர்ப்பம் அன்றிக்கே ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தாலே வரும் பயமும் இன்றிக்கே இருக்கும் –
அது யத் ரூபம் என்னில்

தே கருணை வ –
ஈஸ்வர கருணையை உள் கொண்டு இருக்கும் தேவரீருடைய கருணையே வடிவாய் இருக்கும் என்கிறார்
ஆசார்யன் ஈஸ்வர பர தந்த்ரன் யாகிலும் ஈஸ்வரனுக்கு அபிமத விஷயம் ஆகையாலும்
ஆசார்ய கிருபை ஸ்வா தந்த்ர்ய பராஹதி கந்தம் இன்றிக்கே –
ஈஸ்வர கருணா கர்ப்பமாய் இருக்கும் என்கிறது –

———————————————————————————-

அவதாரிகை –

கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரமே ஷோ அஹமேவ -என்று இவர் விண்ணப்பம் செய்தவாறே –
இவ்வளவேயோ உமக்கு உள்ள நைச்யம் -மற்றவர்கள் அனுசந்தித்தது உமக்கு இல்லையோ என்ன –
அடியேன் ஸ்ரீ ஆழ்வானை உப லஷணமாகக் கொண்டு விண்ணப்பம் செய்தேன் இத்தனை போக்கி -அவ்வளவிலே பர்யவசிதனன்று –
அனைவரும் ஸ்வ கதமாக அனுசந்தித்த நைச்யம் எல்லாம் குறைவறக் கிடப்பது
அடியேன் இடத்தில் என்கிறார்-ஸூ த்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத –இத்யாதியாலே —

ஸூத்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத
பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம்
அத்யா அசத்ய அசங்குசித மேவ மயீஹ லோகே
தஸ்மாத் யதீந்திர கருணை வது மத் கதிஸ் தே –15-

ஸூத்தாத்ம –
ஆத்ம சப்தம் மநோ வாசியாய் ஸூ த்தமான திரு உள்ளத்தை உடையவர்களாய் –
திரு உள்ளத்துக்கு ஸூத்தியாவது –
தேஹத்திலும் – தேஹ அநு பந்திகளிலும் ஆத்மாவிலும் ஆத்ம அனுபந்திகளிலும் சக்தம் அன்றிக்கே
ஈஸ்வரன் இடத்திலும் தத் அனுபந்திகள் இடத்திலும் சக்தமாய் இருக்கை –
இது இறே ந காம கலுஷம் சித்தம் மம தே பாத யோஸ் ஸ்திதம் காமயே வைஷ்ணவத் வந்து சர்வ ஜன்ம ஸூ கேவலம் -ஜிதந்தே 13-என்றும் ‘
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட செய்வோம் -இத்யாதிகளிலே சொல்லப் படுகிறது

யாமுன –
முற்காலத்திலே ஸ்ரீ மன் நாத முனிகள் -ஸ்ரீ பிருந்தா வனத்திலே யமுனா தீரத்திலே பெண்கள் படித் துறையைக் காக்கையாலே
அதுவே நிரூபகமாய் ஸ்ரீ யமுனைத் துறைவர் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ கண்ணனை சேவித்துக் கொண்டு இருக்கையாலே
அவர் இடத்திலே ப்ரேமம் தலை எடுத்து -அவர் திரு நாமம் சாத்தத் திரு உள்ளமாய் ஸ்ரீ ஈஸ்வர முநிகளைக் குறித்து
உமக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார் -அவருக்கு ஸ்ரீ யமுனைத் துறைவர் என்று திரு நாமம் சாத்தும் என்று நியமித்து அருள
அவரும் அப்படியே செய்து அருளுகையாலே ஸ்ரீ யமுனைத் துறைவர் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ ஆளவந்தாராலும்-

குரூத்தம கூர நாத –
ஸ்வ உபதேசாதிகளாலே -ஸ்வ ஆஸ்ரித அஜ்ஞான நிவர்த்தகரான ஆசார்யர்களில் தலைவரான ஸ்ரீ ஆழ்வானாலும்-
இவர்க்கு அஜ்ஞான நிவர்த்தகரில் தலைமை யாவது –
ஸ்ரீ உடையவர் தமக்கு உட்பட்ட அசிஷணீயரான ஸ்ரீ அமுதனாரை தாம் அனுவர்த்தித்து
வசீகரித்து ஸ்ரீ உடையவர்க்கு ஆளாக்குகை-ஆகை இறே ஸ்ரீ அமுதனாரும் -மொழியைக் கடக்கும் -என்று அருளிச் செய்தது –

பட்டாக்ய தேசிக வர –
ஸ்ரீ விஷ்ணு பரத்வ ஸ்தாபாகமான ஸ்ரீ விஷ்ணு புராண பிரவர்த்தகர் ஆகையாலே மஹா உபாகாரகரான ஸ்ரீ பராசரர் இடத்தில்
உபகார ஸ்ம்ருதியாலே அவர் திரு நாமம் சாத்தத் திரு உள்ளமாய் –
அது செய்யப் பெறாதே ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளின ஸ்ரீ ஆளவந்தார் குறை தீர ஸ்ரீ உடையவராலே இவரும்-
ஸ்ரீ பராசர பகவான் போல்வார் ஒருவர் என்று திரு உள்ளம் பற்றி ஸ்ரீ பராசர பட்டர் என்று சாத்தப் பட்ட
திரு நாமம் உடையராய் இவ்விபூதியில் இருந்தே அவ்விபூதியில் அனுபவத்தை அனுபவிக்கும்
அவர்களில் ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பராசர பட்டராலேயும்

இவருக்கு தேசிகரில் ஸ்ரைஷ்ட்யம் ஆவது –
ஸ்ரீ பட்டர் திருவவதரித்த பின்பு ஸ்ரீ பரம பதத்துக்கும் லீலா விபூதிக்கும் இடைச் சுவர் இல்லை என்னும் படியாய் இருக்கை –

உக்த –
ஸ்வ ஸ்வ பிரபந்தங்களில் ஸ்வ கதமாக அனுசந்திக்கப் பட்டதாய் –
இத்தால் இவர்கள் ஸூத்தாத்மாக்கள் ஆகையாலே அவர்களுக்கு நைச்சயமே இல்லை யாகிலும் அவர்கள்
ஸ்வ கதமாக நைச்யத்தை அனுசந்திக்கிறது –
ஸ்வ சம்பந்தியான அடியேன் -நைச்சயமே ஸ்வ நைச்யம் என்னும் அபிப்ப்ராயத்தாலே -என்கிறது –

திக ஸூசிமவி நீதம் நிர்தயம் மாமலஜ்ஜம் -ஸ்தோத் ரத் -47–என்றும் –
அபராத சஹஸ்ர பாஜனம்-48–என்றும்
அமர்யாத ஷூத்ரஸ் சல மதிர் அஸூயாப்ரசவபு –62- என்று ஸ்ரீ ஆளவந்தாரும்

ஹா ஹந்த ஹந்த ஹத கோ அஸ்மி கலோஸ்மி திங்மாம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -84- என்றும்
அத்யாபி நாஸ்த் யுபரதிஸ் த்ரிவித அபசாராத் -அது மானுஷ -59 -என்றும்
ஹை நிர்பயோ அஸ்ம்யோவிநயோ அஸ்மி –ஸ்ரீ வரத ஸ்தவம் -74-என்றும்
வித்வேஷா மான மதராக விலோப மோஹாத் யாஜான பூமி -ஸ்ரீ வரத ஸ்தவம் -76-என்றும் ஸ்ரீ ஆழ்வானும்

அதிக்ரா மன்னாஜ்ஞாம் தவ விதி நிஷேத பவ தேப்ய பித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி ரபி பக்தாய சத்தம் அஜானன் ஞானன் வாப
வாபவத சஹ நீயாக சிரத -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-91-என்றும் ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் இறே

சமஸ்த –
அகிலமான என்னுதல்-
ஒன்றோடு ஓன்று பிணைத்துக் கொண்டு இருக்கிற என்னுதல் –
இத்தால் தனித் தனியே விபஜித்து அறிய ஒண்ணாது என்கிறது

நைச்யம்
ஒரு விசேஷம் சொல்லாமையாலே ஏக வசனம் ஜாதி அபிப்ராயமே -நைச்யத்வா வச்சின்னம் எல்லாம் என்கிறது

அத்ய
தேவரீரை சரணம் அடைகிற இக்காலத்திலே -ஸ்வ தோஷத்தை முன்னிட்டு இறே சரணம் புகுகிறது –
ராவணஸ்ய அநுஜோ பிராதா விபீஷண இதி ஸ்ருத –என்று ஸ்வ தோஷத்தை முன்னிட்டு இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுந்தது –
சரணாகத்ய அநந்தரம்-நிர்தோஷம்-சாத்த்வத ஸம் – என்கையாலே நைச்யம் கிடையாது என்று கருத்து –

அத்ய இஹ லோகே
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பான் விண்ணின் தலை நின்று இம் மண்ணின் தலத்து உதித்து -95- என்கிறபடியே
சர்வ சேதனரையும் உத்தரிப்பிக்க தேவரீர் திரு வவதரித்து அருளின இத் தேசத்திலே என்னுதல் –
இக் கர்ம பூமியிலே என்னுதல் –

இஹ மயி –
சரணம் அடைகிற அடியேன் இடத்திலே என்னுதல்
கத்யந்தர ஸூ ஞானான அடியேன் இடத்திலே என்னுதல்

அகில நைச்ய பாத்ரம் ஏஷ அஹமேவ – என்று
தன் நெஞ்சு உணர பாபங்களைச் செய்து அது தன்னையே
தன் வாயாலே சொல்ல வல்லனான அடியேன் இடத்திலே என்னுதல்

இஹாத்ய மய்யஸ்தி
இத் தேசத்துக்காக இக்காலத்துக்காக அடியேன் இடத்திலே உண்டு

அசங்குசித மே வாஸ்தி-
நைச்யம் குறைவற வேணுமாகில்-சங்கோசம் இன்றிக்கே அடியேன் இடத்திலே உண்டு என்கிறார்

அசங்குசிதம் நைச்யம் மய்யத்யை வாஸ்தி –
உத்தர காலத்தில் ஸ்யாத்-என்று பிரார்த்தித்தாலும் கிடையாது

மயி இஹை வாஸ்தி
அடியேன் இடத்தில் நைச்யம் உள்ளது இவ்விபூதியிலேயே –
மேல் கந்தவ்ய தேசம் தேவரீர் திருவடிகள் ஆகையாலே நைச்யம் கிடையாது என்கிறார்

மய்யேவ நைச்யம் அசங்குசிதம்
அசங்குசித மாய் உள்ளது அடியேன் இடத்திலேயே
மற்றையார் இடத்தில் உண்டாகில் சங்குசித மாயக் காணும் உள்ளது
அசங்குசிதமாகை யாவது –
குறைத்தல் இன்றிக்கே இருக்கை –குறைத்தலாவது நைச்யத்தில் சிறிது அம்சம் இல்லாமை
அது உண்டாவது ஆஸ்ரயாந்தரம் உண்டாகில் இறே –
புறம்பு ஆஸ்ரயாந்தரம் இல்லாமையாலே நைச்ய சப்த வாச்யம் எல்லாம் குறைவறக் கிடப்பது அடியேன் இடத்திலேயே என்கிறார்

இஹாத்ய மய்யஸ் த்யேவ-
தேசமோ இருள் தரும் மா ஞாலமான இத் தேசம் –
காலமோ சாத்தவ விரோதியான கலி சாம்ராஜ்யம் பண்ணும் காலம்
பாத்ரமோ -ஸோ அஹம் ஷூத்ரதயா -என்கிறபடியே அதி ஷூத்ரனான அடியேன்
ஆகையாலே இவன் இடத்தில் குறைவற நைச்யம் உண்டோ இல்லையோ என்று சம்சயிக்க வேண்டாத படி அவசியம் உண்டு என்கிறார்

இஹாத்ய -என்று
தேச காலங்களை விசேஷிக்கையாலே தேசாந்த்ரே காலாந்த்ரே தம்மளவில் அசங்குசித நைச்யம் இல்லாமை யாதல் –
ஆஸ்ரயாந்தரத்தில் உண்டாகை யாதல் தோற்றும் இறே -அத்தை வ்யாவர்த்திக்கிறது ஏவ காரம்
அது எங்கனே என்னில்
தேசாந்தரத்தில் ஓர் ஆஸ்ரயம் உண்டாய் இங்கு சிறிது விஜாதீய நைச்யம் உண்டாகில் இவர் இடத்தில் நைச்யம் அசங்கு சிதமாகக் கூடாது –
காலாந்தரத்தில் ஓர் ஆஸ்ரயம் உண்டாய் அங்கும் சிறிது விஜாதீய நைச்யம் உண்டாகக் கூடுமாகில் அது இவருக்கு இப்போது இல்லாமையாலே
இவர் இடத்தில் நைச்யம் அசங்கு சிதமாகக் கூடாது
ஆகையால் தேசாந்த்ர காலாந்தரங்களிலும் அடியேனை ஒத்த நைச்ய ஆஸ்ரயம் இல்லை என்னும்
இவ்வர்த்தத்தை ஏவ காரம் தோற்றுவிக்கிறது –

தஸ்மாத்-
இத் தேசத்தில் இக்காலத்தில் இன்றிக்கே -தேசாந்தரத்திலும் காலாந்தரத்திலும் அடியேனை ஒத்த
நைச்ய ஆஸ்ரயம் கிடையாமையாலே

தே கருணா து மத் கதிர்வ –
இவனத்தனை நீசர் இல்லை என்னுமவனை கடாஷிக்கத் திரு உள்ளம் பற்றி இருக்கிற தேவரீருடைய சம்பந்தி நியாய –
ஈஸ்வர கருணை போலே ஸ்வா தந்த்ர்ய பராஹதி கந்த சம்சயமாதல் –
ரஷ்ய அபேஷா ப்ரதீஷை யாதல் அன்றிக்கே விலஷணையான கருணை யானது –
அருட்கும் அக்தே புகல்-48- என்கிறபடியே
அடியேனையே விஷயமாக உடைத்தாகா நின்றது –
கருணை ஜீவிப்பது அபராதிகள் இடங்களிலே யானால் அது பூரணமான இடம் அதுக்கு மிகவும் ஜீவனம் ஆகையாலே
அசங்கு சித அபராதியான அடியேனே அதுக்குபுகளிடம் என்கிறார்

மத்யே -யதீந்த்ரே -என்றது
இவர் தம்மோடு ஒத்த நீசர் இல்லை என்று விண்ணப்பம் செய்தவாறே இவர் தம்மை அங்கீ கரித்தோமாம்
விரகு ஏதோ என்று திரு உள்ளத்தில் ஓடுகிற படி தோற்ற இருக்கக் கண்டு –
யதீந்திர -என்று சம்போதிக்கிறார்
இத்தால் அடியேனை அங்கீ கரிக்கும் இடத்தில் கருணை ஒழிய மற்ற ஒரு விரகு இல்லை என்று கருத்து

தஸ்மாத் மத் கதிஸ்து தே கருணைவ –
நிகரின்றி நின்ற வென் நிசதைக்கு நின் அருளின் கண் இன்றி புகல் ஓன்று இல்லை -46- என்கிறபடியே
தீரக் கழிய அபராதங்களைப் பண்ணி -அனுதாபமும் இன்றிக்கே
ஈஸ்வர அங்கீ காரத்துக்கும் அவ்வருகான அடியேனுக்கு புகலிடம் தாபத்ரய அபி பூதராய் சம்சாரிகள் படும் அலமாப்பைக் கண்டு
அபேஷா நிரபேஷராய் கிருபை பண்ணும் தேவரீருடைய கருணை ஒழிய மற்று ஓன்று இல்லை என்கிறார்

தத ஹம்த்வத் ருதே ந நாத வான் மத்ருதே தவம் தயநீய வான் ந ச -ஸ்ரீ ஸ்தோத் ரத் -51- என்று ஸ்ரீ பெரிய முதலியார்
பகவத் விஷயத்தில் அனுசந்தித்தால் போலே இவரும் இவ்விஷயத்திலே அனுசந்திக்கிறார் —

——————————————————————————————-

அவதாரிகை –

கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும்-
அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லை என்று இவர் தம்முடைய
அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்தவாறே -உமக்கு நாம் செய்ய வேண்டுவது என் என்ன-
கீழ் வாசோ -இத்யாதியால் நாம் பிரார்த்தித்த ப்ராப்யத்தினுடைய சரமாவதியை
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக செய்து அருள வேணும் என்கிறார் –
சப்தாதி போக விஷயா ருசிரஸ்–இத்யாதியாலே – –

சப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா
நஷ்டா பவத் விஹ பவத் தயயா யதீந்திர
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ்
தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –16-

சப்தாதி போக விஷயா ருசி –
நிதித்யாசிதவ்ய -ப்ருஹதா -4-4-5- என்றும் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
தேவம் இவ ஆசார்யம் உபாசீத -என்றும்
அதிதி தேவோ பவ -என்றும் –
குரு பாதாம் புஜம் த்யாயேத் –என்றும் –
ஆகதம் வைஷ்ணவம் சாஷாத் விஷ்ணு ரித்யபி சிந்தயேத் தத் க்ருபா தத்த சரனௌ மூர்த்த்னி பாலே
த்ருசோர்ஹ்ருதி வின் யஸ்ய பக்தி பூர்வந்து ஹாள யேத் கந்த வாறினம் -இத்யாதி பிரமாணங்களால்
பகவத் பாகவத ஆசார்ய விஷயங்களிலே அபிஹிதையான பக்தியானது அடியேனுக்கு
விஷச்ய விஷயாணாஞ்ச தூரம் அத்யந்த மந்த்ரம் உபபுக்தம் விஷம் ஹந்தி விஷயாஸ் ஸ்மரணாதபி-என்கிறபடியே
உபபுக்தமான விஷம் போலே சரீர மாத்ர நாசகம் அன்றிக்கே ஸ்மரண மாத்ரத்தாலே அச்சேத்யமான
ஆத்ம ஸ்வரூபத்துக்கும் நாசகங்களாய் இருக்கிற சப்தாதி விஷய அனுபவங்களில் கிடீர் பிரவணமாய்த்து என்கிறார் –

சப்தாதி போக விஷயா ருசி –
சப்தாதி விஷய அனுபவத்தை இட்டு தன்னை நிரூபிக்கும் படி யாய்த்து ருசி —
ருசி சப்தாதி விஷயங்களிலே பிரவணமாய்த்து என்கிறார் –
விஷய பிரகாச புரஸ் சரமாக விறே-ஜ்ஞானம் பிரகாசிப்பது -ருசி தானும் ஜ்ஞான விசேஷம் இறே
ருசி தான் தனக்கு விஹிதமான விஷயத்தை விட்டு அவிஹிதங்களான சப்தாதி விஷய அனுபவத்தில் பிரவணம் ஆகைக்கு அடி என் என்ன

அஸ் மதீயா-
ருசியானது ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –
தத் ஜ்ஞானம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87- என்றும் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் -திரு 67- என்றும் சொல்லுகிறபடியே
பிராப்த விஷயத்திலே மண்டி இருக்குமது அவ்விஷயத்தை விட்டு சப்தாதி விஷயங்களில் பிரவணம் ஆகைக்கு அடி –
ஸ்வத வருவதொரு ஹேது இல்லாமையாலே –
இனி சேதனன் உடைய கர்மம் அடியாக வேண்டுகையாலே அடியேனுடைய சம்பந்தமே அதுக்கு காரணம் என்கிறார் –
இனி செய்ய வேண்டுவது என் என்ன

நஷ்டா பவது-
அது இருந்த இடம் தெரியாதே ஸ்வரூபேண நசிக்க வேணும் என்கிறார் –
இவர் தாம் ஆன்ருசம்சய பிரதானர் ஆகையாலே உபாசகரைப் போலே தம் புண்ய பாபங்கள் அடைய
அந்ய சங்கரமணத்தை சஹிக்க மாட்டார் இறே –
ஆகையாலே வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்றோ கண்டிலமால் -பெரிய திரு -54–என்கிறபடியே
போனவிடம் தெரியாமல் போக வேணும் என்கிறார் –
இத்தால் பிரபன்னனுடைய புண்ய பாப ரூப கர்மத்துக்கு ஸ்வரூபேண நாசம் ஒழிய அந்ய சங்க்ரமணம் இல்லை என்கிறது –
இங்கு இப்படி ருசி ஸ்வரூப நாசத்தை பிரார்த்தித்தார் ஆகில் –

தத் தாஸ தைகர சதா அவிரதாமமாஸ்து-என்று
அது தன்னையே பிரார்த்திக்க கூடுமோ என்னில்
இங்கு விஷய அனுபவத்தை இட்டாய்த்து ருசியை நிரூபித்தது –
நிரூபகத்தை ஒழிய நிரூப்ய சித்தி இல்லாமையாலே நிரூபகமான விஷய அனுபவம் நசிக்கவே
தந் நிரூபிதையான ருசி தன்னடையே நசித்ததாம் இறே –
ச்வர்க்கீத் வாஸ்த-என்றும் உண்டு இறே –
மேல் பிரார்த்திக்கப் படுகிறது தாச்யைக நிரூபிதையான ருசியாகையாலே கூடும் –
விசேஷண பேதம் கொண்டு விசிஷ்ட பேதம் சொல்லுகை சர்வ சம்மதம் இறே

இஹ
அங்கன் இன்றிக்கே இத் தேசத்திலே யாக வேணும் –
சப்தாதி விஷய அனுபவத்துக்கு ஏகாந்தமான இத் தேசத்திலே அவ்விஷய அனுபவத்தை காற்கடைக் கொண்டு
வகுத்த விஷயத்திலே சரம அவதி தாச்யத்திலே பிரவணமாய் இருக்கை யன்றோ
தேவரீர் சம்பந்திகளுக்கு உள்ள வை லஷண்யம் என்று கருத்து —
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி யாடி யுழி தரக் கண்டோம் -5-2-1- என்கிறபடியே
தேவரீரும் தேவரீராலே லப்த சத்தாகரான தேவரீர் சம்பந்திக்களுமாக உலாவுகிற இத் தேசத்திலே என்னவுமாம் –
இத்தால் த்வதீய அனுபவ விரோதியான விஷய அனுபவ ருசியை போக்கி யாருல வேணும் என்று கருத்து-

இதுவோ தேசத்தைப் பார்த்தாலும் உம்மைப் பார்த்தாலும் விஷயங்களைப் பார்த்தாலும் துஷ்கரம் –
தேசமோ புண்ய பாபங்களுடைய பலமான ஸூக துக்க அனுபவத்துக்கு ஏகாந்தமான தேசம் அன்றிக்கே
புண்ய பாபம் விருத்தி அடையும் தேசம் –
உம்மைப் பார்த்தால் ஏவம் காலம் நயாமி -என்னும்படி பாபம் செய்கையிலே கை ஒழியாதவர்
விஷயங்களைப் பார்த்தால் -விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் சேரும் ஐம்புலன்கள் இவை -7-1-6- என்கிறபடியே
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஈஸ்வரனுக்கு அடிமை செய்வாரையும் பாதிக்க வல்ல
மிடுக்கு உடையவைகள் -ஆகையாலே துஷ்கரம் என்ன

பவத்தயயா –
ஈஸ்வரன் தயை போலே சேதன கர்ம ப்ரதிபந்தகம் அன்றிக்கே -பர துக்கம் போக்கி யல்லது தரிக்க மாட்டாத ம்ருது பிரக்ருதியான
தேவரீருடைய கிருபையாலே செய்து அருள வேணும் என்கிறார் –
பர துக்க ஏக நிரூபணியையான தேவரீர் கிருபையாலே என்னவுமாம்
நிரூபகமான துக்கம் அடியேன் இடத்திலே கிடைக்கையாலே அடியேன் தேவரீர் கிருபைக்கு விஷயம் என்கிறார்
இரண்டு ஆகாரத்தாலும் தேவரீர் தயா குணம் ஒன்றையுமே பார்த்து அடியேனுடைய
விஷய அனுபவ ருசியைப் போக்கி யருள வேணும் -என்கிறார்

பவத்தயயா
அநிஷ்ட நிவ்ருத்திக்காக வாதல் -இஷ்ட பிராப்திக்காவாதல்
அடியேனுக்கு ஒரு கைம்முதல் இல்லை -இரண்டும் தேவரீர் உடைய கிருபையாலே யாக வேணும் என்கிறார்
தயை யுண்டாகிலும் சக்தி இல்லாவிடில் செய்வது என் என்ன

யதீந்திர
இந்த்ரியங்களை ஜெயித்தவர்களில் தலைவர் அன்றோ தேவரீர் என்கிறார் –
இந்த்ரியங்களை ஜயிக்கை யாவது -அவற்றை சப்தாதி விஷயங்களில் நின்றும் மீட்டு பகவத் விஷயத்திலே பிரவணம் ஆக்குகை-
இத்தால் இந்த்ரிய வச்யதை தவிர்ந்து இந்த்ரியங்களை ஸ்வ வசமாக்கிக் கொள்ளும் விரகு அறியும் தேவரீரே அடியேனுடைய
இந்த்ரிய வச்யதையைத் தவிர்த்து அருள வேணும் என்கிறார் என்று கருத்து –
இவ்வளவேயோ உமக்குச் செய்ய வேண்டுவது -மற்றை ஏதேனும் உண்டோ என்ன -உண்டு என்கிறார்

த்வத் தாஸ தாஸ -இத்யாதியாலே –
அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –3-7-10-என்றும்
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -7-1-1- என்றும்
த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யச்ய ப்ருத்ய இதிமாம் ஸ்மர லோக நாத -முகுந்த மாலை – 27-என்றும்
பரமாசார்யரான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ பகவத் விஷயத்திலே பிரார்த்தித்தால் போலே இவர் இவ்விஷயத்திலே பிரார்த்திக்கிறார்
விஷய ப்ரேமம் தலை எடுத்தால் சம்பந்தி சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் இறே-
இப்படி யாகாத வன்று பிரேமத்துக்குக் கொத்தையாம் இறே
தேவரீர் சம்பந்த சம்பந்திகளுடைய பரிகணனா சரமாவதி யாகையாலே யாவனொருவன் –
இவ்வூருக்கு இது எல்லை என்னுமா போலே -இவ்வளவாய்த்து ஸ்ரீ எம்பெருமானார் பரம்பரா சம்பந்தம் இருப்பது
என்னலாம் படி இருப்பான் யாவன் ஒருவன் -அவனுக்கு அடிமையாய் இருக்கையாலே

ஏக ரசதா –
கலப்பற்ற ப்ரீதியை உடைத்தாய் இருக்கை யாவது –
கலப்பறுகை யாவது -பகவத் விஷயத்தில் பாதியும் பாகவத விஷயத்தில் பாதியும் ஆகை யன்றிக்கே –
ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைப் போலே ததீய விஷயத்திலே யாய் இருக்கை –
பெருமாள் இடத்தில் பக்தியும் சௌந்தர்யமும் இறே ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானுக்கு அகத்வே நவும் நித்ய சத்ருத்வே நவும் கழி யுண்கிறது –

அவிரதா ம மாஸ்து –
இச் சரமாவதி தாஸ்ய ருசியாவது -தமக்கு அத்யந்தம் போக்யமாய் இருக்கையாலே அவிச்சின்னமாக வேணும் என்கிறார்

மம-
ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர் -7-1-10- என்கிறபடியே
இந்த்ரியங்களால் போர நெருக்குண்ட அடியேனுக்கு -என்னுதல்
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் -இராமானுச -நூற்றந்தாதி -84-என்கிறபடியே
அதிலே ஆசை யுடைய அடியேனுக்கு என்னுதல்

மமாஸ்து –
த்ருஷார்த்தன் -தண்ணீர் தண்ணீர் -என்னுமா போலே தாம் தரிக்கைக்கு தாஸ்யம் வேணும் என்கிறார் –
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை இறே
சித்தத்துக்கு பிரார்த்தனை வேணுமோ என்னில் ரசம் உண்டாலும் தத் ஏக ரசம் இல்லாமையாலே வேணும்

அவிர தாஸ்து
ஆகில் செய்கிறோம் என்றவாறே -விஷய அனுபவத்தால் உண்டான உறாவுதல் தீர்ந்து தரித்தாராய்-
இனி ஒருக்காலும் விஷய அனுபவம் நடையாடாத படி இதுக்கு ஒரு விச்சேதம் இன்றிக்கே நித்யமாகச் செல்ல வேணும் என்கிறார்

மம
அதின் வாசி அறியும் அடியேனுக்கு என்னவுமாம்

அஸ்து
அடியேனுக்கு உள்ளது பிரார்த்தனை இறே
இது ஸ்வரூப அந்தர்கதம் ஆகையாலே சாதனம் ஆக மாட்டாது -ஆகில் சாதனம் என் என்னில்

பவத்தயயா-
என்று கீழ்ச் சொன்னதுவே சாதனம் —
உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்னக் கடவது இறே

மம விர தாஸ்து –
சப்தாதி போக நிரத-என்று சப்தாதி விஷய அனுபவத்தை இட்டு நிரூபிக்கும் படியான அடியேனுக்கு
இவனையோ சப்தாதி விஷய பிரவணன் என்னாலாவது -என்னும்படி தாஸ்யமே நிரூபகமாக வேணும் என்கிறார்
வந்தேறி கழிந்தால் தாஸ்யம் ஸ்வரூபமாய் தோற்றும் இறே –

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: