பெருமாள் திருமொழி -1–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

ஸ்ரீ யபதியாய் -ஜ்ஞானானந்தைக ஸ்வரூபனாய்-சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-உபய விபூதி உக்தனாய் —
சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன் அடியாக
ஸ்ரீ பெருமாள் பெற்றது -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆகையாலே
க்ரமத்தாலே காண்கிறோம் என்று ஆறி இருக்கலாவது தம் தலையால் வந்ததாகில் இறே-
அவன் தானே காட்டக் காண்கிறவர் ஆகையாலே அப்போதே காண வேண்டும் -படி விடாய் பிறந்தது –
ஸ்ரீ பரமபதத்திலும் அனுபவிப்பது குண அனுபவம் ஆகையாலே -அந்த சீலாதி குணங்கள் பூரணமான
ஸ்ரீ கோயிலிலே அனுபவிக்கப் பிரார்த்திக்கிறார்
இங்கே அனுபவிக்கக் குறை என்-பிரார்த்தனை என் என்னில் –
ஸ்வா தந்த்ர்யம் பிறப்பே உடையராகையாலே -மனுஷ்யர் நிரோதிப்பார் பலர் உண்டாகையாலே –
இங்கு வந்து அனுபவிக்க மாட்டாதே
அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றும்
ஸ்ரீ நம்மாழ்வார் பிரார்த்தித்துப் பெற்ற பேற்றை இங்கேயே அனுபவிக்க ஆசைப் படுகிறார் –

முதல் பாட்டு –

அவதாரிகை –

பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே இறே முமுஷூ மநோ ரதிப்பது —
அத்தை இங்கே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து கிடக்கிற இடத்திலே அனுபவிக்க மநோ ரதிக்கிறார் –
சம்சாரி முக்தனாய்ச் சென்றால் -பாதே நாத்யா ரோஹதி -இத்யாதிப்படியே எழுந்து அருளி இருக்கிற பர்யங்கத்திலே மிதித்து ஏறினால்
நீ ஆர் என்றால் -நான் ராஜ புத்ரன் என்னுமா போலே -அஹம் பிரஹ்மாஸ்மி -என்று இறே இவன் சொல்வது –

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-

பதவுரை

திரு அரங்கம்–ஸ்ரீரங்கமென்கிற
பெரு நகருள்–பெரிய நகரத்திலே
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும்–இருளானது சிதறி யொழியும் படி ஒளி விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப் பெற்ற
நெற்றி–நெற்றியையும்
இனம் துத்தி–சிறந்த புள்ளியையும்
அணி–அழகாக உடைய–
ஆயிரம் பணங்கள் ஆர்ந்த–ஆயிரம் படங்களை உடையவனாய்
அரவு அரசன்–நாகங்களுக்குத் தலைவனாய்
பெரு சோதி–மிக்க தேஜஸ்ஸை யுடையனான
அனந்தன் என்னும்–திருவனந்தாழ்வானாகிற
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை–அழகு மிக்கு உயர்த்தியை யுடைய வெண்ணிறமான திருப் படுக்கையிலே
மேவி–பொருந்தி
தெள் நீர் பொன்னி–தெளிந்த தீர்த்தத்தையுடைய காவிரி யானது
திரை கையால் அடி வருட–அலைகளாகிற கைகளாலே திருவடிகளைப் பிடிக்க
பள்ளி கொள்ளும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
கரு மணியை–நீல மணி போன்றவராய்
கோமளத்தை–ளெஸகுமார்யமே வடிவெடுத்தவரான பெரிய பெருமாளை
என் கண் இணைகள்–என் கண்களானவை
கண்டு கொண்டு–ஸேவிக்கப் பெற்று
களிக்கும் நாள்–ஆநந்தடையும் நாள்
என்று கொல்–எந்நாளோ!

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இருள் சிதறிப் போம் படி ஜ்யோதிஸ்சை உடைய மணிகள் விழுக்கிற நெற்றியையும்

இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
இனமான துத்தி -அதாவது இரண்டாய்ச் சேர்ந்த திருவடி நிலை என்று சொல்லுகிறவற்றை உடைத்தான
பணங்கள் ஆயிரத்தையும் பூரணமாக யுடையனாய்

அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
நாகா ராஜா வென்னும் மகா தேஜஸ் சை யுடையனாய்
எல்லா வற்றையும் வியாபித்து நிற்கிற சர்வேஸ்வரனை விளாக்குலை கொள்ளுகிற ஸ்வரூப குணங்களை உடையவன்
ஆகையாலே அனந்தன் என்று சொல்லப்படுகிற –
ஸூ முகன் -வாஸூகி -தஷகன் -என்றும் உண்டு இறே
அவர்களில் காட்டில் பகவத் பிரத்யாசித்தியை உடையது என்னும் பிரசித்தியை உடையவன் –

அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
அழகு மிக்கு ஒக்கத்தை உடைத்தாய் மறுவற்ற வெள்ளப் படுக்கை யாகிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வானை மேவி

திரு அரங்க பெரு நகருள்
வைகுண்டேது பரே லோகே –என்று சொல்லுமது அங்கே காணும்
இவருக்கு திருவரங்கம் ஆகிற மஹா நகரத்திலே

தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட
தெளிந்த நீரை உடைத்த காவேரி -திரையாகிற கைகளாலே திருவடிகளை வருட

பள்ளி கொள்ளும் கருமணியை –
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிறவனை

கோமளத்தை 
கண்ணார துகைக்க ஒண்ணாத சௌகுமார்யம் உடையவன்

கண்டு கொண்டு –
கலியர் -சோற்றைக் கண்டு கொண்டு -என்னுமா போலே

என் கண் இணைகள்
பட்டினி விட்ட என் கண்கள்

என்று கொலோ களிக்கும் நாளே-
அங்கே கண்டு -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்கும் களிப்பை
இங்கே கண்டு களிப்பது என்றோ –

——————————————————–

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-

பதவுரை

கடி அரங்கத்து-நறு மணம் மிக்க கோயிலிலே
ஓர் ஈர் ஐ நூறு வாய்–ஓராயிரம் வாய்களிலே
துதங்கள் ஆர்ந்த–ஸ்தோத்ர வாக்கியங்கள் நிறைந்திருக்கப் பெற்றவனாய்
வளை உடம்பின்–வெளுத்த உடம்பை யுடையவனாய்
அழல்–(எதிரிக்ள வந்து கிட்ட வொண்ணாதபடி) அழலை உமிழா நிற்பவனான
நாகம்–ஆதி சேக்ஷன்
உமிழ்ந்த–(தன் வாயினின்று) வெளிக் கக்கிய
செம் தீ–செந் நிறமான ஆகநி ஜ்வாலையானது
சென்னி–தலையின் மேலே
வீயாத மலர்–அழிவில்லாத புஷ்பங்களாற் சமைத்த தொரு மேற் கட்டி போல
எங்கும் மேல் மேலும் பரந்து மிக–மேற்புறமெங்கும் விஸ்தரித்து விளங்க
அதன் கீழ்–(ஆதிசேக்ஷன் உமிழ்ந்த அக்நி ஜ்வாலையாகிற) அந்தப் புஷ்ப விதாநத்தின் கீழே)
அரவு அணையில்–சேஷ சயநத்திலே
பள்ளி கொள்ளும்–கண் வளர்ந்தருளா நிற்பவனும்
காயா பூ மலர் பிறங்கல் அன்ன– காயாவின் அழகிய பூக்களாலே தொடுக்கப்பட்ட நீலமாலை போன்றவனாய்
மாலை–பெருமை பொருந்தியவனாய்
மாயோனை–ஆச்சர்யனான ஸ்ரீரங்கநாதனை (அடியேன்)
மனம் தூண் பற்றி நின்று– திருமணத் தூண்களிரண்டையும் அவலம்பாகப் பற்றிக்கொண்டு நின்று
என் வாய் ஆர வாழ்த்தும் நாள் என்று கொல்–என் வாய்த்தினவு தீர ஸ்துதி செய்யுங்காலம் என்றைக்கு வாய்க்குமோ?.

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
யசோதைப் பிராட்டி ஸ்ரீ கிருஷ்ண ஸ்பர்சத்தால் வந்த ஸூகத்துக்கு போக்கு விட்டு ஏத்துமா போலே
பகவத் அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே வந்த ப்ரீதிக்கு போக்கு விட்டு ஏத்துகைக்காக
ஆயிரம் வாயையும்

துதங்கள் ஆவது –
ஸ்தோத்ராதிகளைப் புறப்பட விடுகை -ஸ்துதம் இறே

வளை வுடம்பின் அழல் நாகம்
வெளுத்த நிறத்தை உடையவனுமாய் –
பிரதி பஷத்துக்கு வந்து அணுக ஒண்ணாத படி அநபிபவ நீயனாய்
இருக்கிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான்

உமிழ்ந்த செந்தீ வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
அவன் வாயாலே இடை விடாதே யுமிழ்கிற அக்னி ஜ்வாலைகளின் ஜ்யோதிஸ் ஆகிற மேற்கட்டியின் கீழே

வீயாத மலர்ச் சென்னி
பூ மாறாத திரு முடியை உடையனுமாய்

காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
காயாவின் அழகிய பூவாலே செய்யப்பட மாலை போலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை

கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
அரணாகப் போரும் மதிளை யுடைய ஸ்ரீ கோயிலிலே
அப்படி பரிவனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற

மாயோனை –
சமயோ போதிதஸ் ஸ்ரீ மான் -என்னும் படி கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனை

மணத் தூணே பற்றி நின்று
ஆமோத ஸ்தம்ப த்வயங்களைப் பற்றி நின்று –
அழகிலே அகப்பட்ட ஹர்ஷத்தாலே தள்ளுண்ணாமே இரண்டு ஸ்தம்பங்களைப் பற்றி நின்று

என் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே
கண்டால் கொள்வது வேறொரு பிரயோஜனம் இல்லை இறே
பல்லாண்டு பல்லாண்டு என்னும் இத்தனை இறே –

—————————————————————-

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-

பதவுரை

எம் மாண்பின் அயன்–ஸர்வ விதத்தாலுமுண்டான மாட்சிமையை யுடைய நான்முகன்
நான்கு நாவினாலும் (தனது)–நாலு நாக்கினாலும்
எடுத்து–சொற்களை யெடுத்து
ஏத்தி–துதித்து
ஈர் இரண்டு முகமும் கொண்டு–நான்கு முகங்களாலும்
இனிது ஏத்தி–இனிமையாக (வேதங்களாலே) ஸ்தோத்திரம் பண்ணி
எழில் கண்கள் எட்டினோடும்–அழகிய எட்டு கண்களினாலே
எம் மாடும்–எல்லாப் பக்கங்களிலும்
தொழுது இறைஞ்ச நின்ற–நன்றாக ஸேவிக்கும்படி அமைந்த
செம் பொன்–செவ்விய பொன் போல் (விரும்பத்தக்க வடிவுடைய) ஸ்வாமியான தன்னுடைய
கமலம் மலர் கொப்பூழ்–தாமரைப் பூவை யுடைய திருநாபி யானது
தோன்ற–விளங்கும்படி
அணி அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்;
அம்மான் தன்–பெரிய பெருமாளுடைய
அடிஇணை கீழ்-திருவடிகளின் கீழே
அலர்கள் இட்டு- புஷ்பங்களை ஸமர்ப்பித்து
அங்கு அடியவரோடு–அங்குள்ள கைங்கர்ய பரர்களோடு கூட
அணுகும் நாள் என்று கொல்-நெருங்கி வாழ்வது என்றைக்கோ?

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எப்படிப் பட்ட மாட்சிமை உடைய ப்ராஹ்மா ஸ்தோத்ராதிகளைப் பண்ணும் தன்மை குறை வற்று இருக்கை-
ஸ்தோத்ராதிகளுக்கு பரிகரமான நாலு நாக்காலும்

எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
தன ஸ்ரத்தைக்குத் தக்கபடி எடுத்தேத்தி –
நாலு வேதத்துக்கு சமைந்த நாலு முகமும் கொண்டு

எம் மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
பின்னும் முன்னும் மட்டங்கள் ஆகிற பர்யந்தங்கள் எங்கும்
அழகை அனுபவிப்பைக்கு பல கண் படைத்த பிரயோஜனம் பெற்றான்

தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற
ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு தொழுது ஸ்தோத்ராதிகளைப் பண்ணுவது
தண்டன் இடுவதாம் படி நின்ற

செம் பொன் அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
ஸ்பர்ஹணீயமாய் இவ்வருக்கு உண்டான கார்ய வர்க்கத்துக்கு எல்லாம் காரணம் என்னும் மஹத்வம் தோற்றும் படியாய்
இருக்கிற தாமரைப் பூவை உடைய தன் திரு நாபி தோன்ற

அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன்
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோயிலிலே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய

அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அவன் திருவடிகளின் கீழே புஷ்பாத் உபகரணங்களைப் பணிமாறி

அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–
அங்கு அந்தரங்க வ்ருத்தி செய்யும் அவர்களோடு சஜாதீயனான நானும் கிட்டுவது என்றோ
அடியார்கள் குழாங்கள் –இத்யாதி —

—————————————————–

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-

பதவுரை

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியினுடைய வாயைக் கிழித்து மகிழ்ந்த பெருமானாய்
வேலை வண்ணணை–கடல் போன்ற வடிவை யுடையவனாய்
என் கண்ணணை–என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’
அன்று–(இந்திரன் கல் மழை பெய்வித்த) அக் காலத்திலே
வன் குன்றம் ஏந்தி–வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி
ஆவினை உய்யக் கொண்ட–பசுக்களைக் காப்பாற்றி யருளின
ஆயர் ஏற்றை–இடையர் தலைவனாய்
அமரர்கள் தம் தலைவனை–நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய்,
அம் தமிழ் இன்ப பாவினை–அழகிய தமிழ்ப் பாஷையாலாகிய ஆநந்த மயமான அருளிச் செயல் போல் யோக்கியனாய்
அ வடமொழியை–அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ராமாயணாதிகள் போல் யோக்யனாய்
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து–ஸம்ஸார பந்தம் அற்றவர்களான விரக்தர்கள் நித்திய வாஸம் செய்கிற கோயிலிலே
அரவு அணையில் பள்ளி கொள்ளும்,
கோவினை–ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை
நா உற–நாக்குத் தடிக்கும்படி
வழுத்தி–துதித்து
என் தன் கைகள்–என்னுடைய கைகளானவை
கொய் மலர் தூய்–(காலத்தில்) பறிக்கப்பட்ட புஷ்பங்களை பணிமாறி
கூப்பும் நாள் என்று கொல்–அஞ்ஜலி பண்ணும் நாள் எதுவோ!

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை
கேசியை அநாயாசேன பிளந்து –
ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று உகந்த ஆஸ்ரீத-வ்யாமுக்தனை

வேலை வண்ணனை –
ஆஸ்ரித விரோதிகளை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவனை

என் கண்ணனை-
வெறும் வடிவு அழகே அன்றியே எனக்கு பவ்யனானவனை

வன் குன்றம் ஏந்தி
இந்த்ரன் வர்ஷிக்கிற கல் வர்ஷத்திலே வர்ஷிக்கிற கல் வர்ஷத்துக்கு சலியாத மலையை என்னுதல்-
ஸ்ரமஹரமான குன்றம் என்னுதல்

ஆவினை அன்று உய்ய கொண்ட
உபகார ஸ்ம்ர்தியும் இல்லாத பசுக்களை ரஷித்த

ஆயர் ஏற்றை
தன பருவத்தில் பிள்ளைகளைக் காட்டில் தான் மேனாணிப்பு உடையவனை

அமரர்கள் தம் தலைவனை –
தன்னோடு சாம்யா பத்தி பெற்று இருக்கிற நித்ய ஸூரிகளில் காட்டில் தலைவனானவனை –

அம் தமிழ் இன்ப பாவினை –
இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி போலே இனியவனை

அவ் வட மொழியை
ஸ்ரீ மன் நாராயணனைப் போலே இனியவனை

பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும் கோவினை –
தன்னையே பற்றி புறம்புள்ளவற்றை அநந்ய பிரயோஜனர் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ கோயிலிலே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற நாதனை

நாவுற வழுத்தி
நாத் தழும்பு ஏறும்படி ஸ்தோத்ரங்களைப் பண்ணி

என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-
கை தழும்பு ஏறும்படி புஷ்பாத் யுபகரணங்களைப் பணிமாறி அஞ்சலி பண்ணப் பெறுவது என்றோ –

———————————————————-

இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-

பதவுரை

இன்பம்–(வீணா கானத்தாலே) இன்பந்தருகின்ற
தும்புருவும்–தும்புரு மஹரிஷியும்
நாரதனும்–நாரத முனிவனும்
இணை இல்லா இன் இசை–ஒப்பற்றதும் போக்யமுமான இசையை
யாழ்–வீணையிலே
கெழுமி–நிறைத்து
(வீணா கானத்தைப் பண்ணிக் கொண்டு)
இறைஞ்சி ஏத்த–திருவடிகளிலே விழுந்து) வணங்கித் துதிக்கவும்
தொல் மலர்க் கண் அயன்–நித்யமான நாபீ கமலத்தி லுதித்த நான்முகனானவன்
வணங்கி–நமஸ்கரித்து
துணை இல்லா–ஒப்பு இல்லாததும்
தொல்–அநாதியுமான
மறை நூல் தோத்திரத்தால்–வேதசாஸ்த்ரங்களாகிற ஸ்தோத்ரங்களால்
ஓவாது ஏத்த–இடைவிடாமல் துதிக்கவும்
மணி மாடம் மாளிகைகள்–மணி மயமான மாட மாளிகைகளையும்
மல்கு செல்வம்–பூர்ணமான ஸம்பத்தையும்
மதிள்–ஸப்த ப்ராகாரங்களையுமுடைய
அரங்கத்து–கோயிலிலே
அரவு அணையில் பள்ளிகொள்ளும்;
மணி வண்ணன் அம்மானை–நீல மணி போன்ற திருநிறத்தை யுடையனான எம்பெருமானை
கண்டு கொண்டு–ஸேவித்து
என் மலர் சென்னி–என்னுடைய பூமாலை யணிந்த தலையானது
வணங்கும் நாள் என்று கொல்–(அவன் திருவடிகளில்) நமஸ்கரிப்பது என்றைக்கோ!

இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி –
உபமான ரஹிதமான இனிய இசையை உடைய யாழை நெருங்கி

இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
பாட்டாலே வந்த ஆனந்தத்தை உடைய தும்புருவும் நாரதனும்
திருவடிகளிலே விழுந்து ஸ்தோத்ரங்களைப் பண்ண

துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
ஒப்பில்லாத பழைய வேத சாஸ்திரம் ஆகிற ஸ்தோத்ரத்தாலே

தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
திரு நாபீ கமலத்தின் இடத்திலே இருக்கிற ப்ரஹ்மா திருவடிகளில் பிரமாணம் பண்ணி
விடாதே ஸ்தோத்ரம் பண்ணி

மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மணி மயமான மாடங்களையும் மிக்க ஐஸ்வர்யத்தையும் உடைய

மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மிக்க அரணான பெரிய மதிளை உடைய பெரிய கோயிலிலே
திரு வநந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளும்

மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு –
அழகிய வடிவை உடைய சர்வேஸ்வரனைக் கண்டு கொண்டு

என் மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே-
நான் பூ முடி சூடின தலை என்றோ அவன் திருவடிகளில் வணங்குவது –

————————————

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-

பதவுரை

அளி மலர் மேல் அயன்–(மதுபானத்துக்காக) வண்டுகள் படிந்திருக்கிற தாமரைப் பூவில் தோன்றிய பிரமனும் சிவனும்
அரன்–சிவனும்
இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும்–இந்திரனோடு கூட மற்றைத் தேவர்களின் திரளும்
அரம்பையரும்–ரம்பை முதலிய தேவ மாதரும்
மற்றும்–மற்றுமுள்ள
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும்–தெளிந்த ஞானத்தை யுடைய (ஸநகாதி) மஹர்ஷிகளின் ஸமூஹமும்
உந்தி–ஒருவர்க்கொருவர் நெருக்கித் தள்ளி
திசை திசையில்–பார்த்த பார்த்தவிடமெங்கும்
மலர் தூவி–புஷ்பங்களை இறைத்துக் கொண்டு
சென்று சேரும்–வந்து சேர்தற்கு இடமான
களிமலர் சேர் பொழில் அரங்கத்து–தேன் மிக்க மலர்களை யுடைய சோலைகளை யுடைத்தான கோயிலிலே
உரகம் ஏறி–திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு
கண் வளரும்–திருக்கண் வளர்ந்தருளா நின்ற
கடல் வண்ணர்–கடல் போன்ற வடிவை யுடையரான பெரிய பெருமாளை யுடைய
கமலம் கண்ணும்–செந்தாமரை போன்ற திருக் கண்களையும்
ஒளி மதி சேர் திரு முகமும்–ஒளியை யுடைய சந்திரன் போன்ற திருமுக மண்டலத்தையும்
கண்டு கொண்டு–ஸேவிக்கப் பெற்று
என் உள்ளம்–என்னுடைய மனமானது
மிக உருகும் நாள் என்று கொல்–மிகவும் உருகுங்காலம் என்றைக்கோ?

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு –
வண்டுகள் படிந்த அரவிந்தத்தின் மேலே இருக்கிற ப்ரஹ்மாவும்-
அவன் மகனான ருத்ரனும் –
அவர்களோடு சஹ படிக்கப்பட்ட இந்த்ரனும் -இவர்களுடனே

ஏனை அமரர்கள் தம் குழுவும் –
அவர்கள் மூவரையும் ஒழிந்த தேவர்கள் திரளும்

அரம்பையரும் –
ரம்பை முதலான அப்சரஸ் ஸூக்களும்

மற்றும் தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் –
ப்ரஹ்ம பாவனையாகச் சொல்லும் சனகாதிகள் திரளும்

உந்தி
ஒருவருக்கு ஒருவர் நெருக்கித் தள்ளி

திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
பார்த்த பார்த்த இடம் எல்லாம் புஷ்ப வர்ஷ்டியைப் பண்ணிக் கொண்டு சென்று கிட்டும்

களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
மது மலரை யுடைத்தான பொழிலை யுடைய அரங்கத்திலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே ஏறி

கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
பள்ளி கொள்கிற நீர் வண்ணர் கமலக் கண்ணும்

ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு –
குளிர்த்து மிக்கு புகரை யுடைய சந்த்ரனை ஒப்புச் சொல்லலான அழகிய திரு முகத்தையும் கண்டு கொண்டு

என் உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே-
என் நெஞ்சு குளிர்ந்து உருகுவது என்றோ –

————————————————

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை பொன்னி
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-

பதவுரை

மறம் நிகழும் மனம் ஒழித்து–கொடுமையால் விளங்கா நின்றுள்ள மனத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி–வஞ்சனைகளைப் போக்கி
வல் புலன்கள் அடக்கி–கொடிய இந்திரியங்களை அடக்கி
இடர் பாரம் துன்பம் துறந்து–(மேன் மேலும்) துக்கத்தை விளைப்பனவாய்ப்
பெருஞ்சுமையா யிராநின்ற பழ வினைகளை வேரறுத்து
இரு முப்பொழுது ஏத்தி–பஞ்ச காலங்களிலும் துதித்து
எல்லை இல்லா தொல் நெறிக் கண் நிலை நின்ற–அளவிறந்த பழைய மர்யாதையிலே நிலை நின்ற
தொண்டர் ஆன–தாஸ பூதர்களான
அறம் திகழும் மனத்தவர் தம்–தர்ம சிந்தையே விளங்கும் மனமுடையரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
கதியை–பரம ப்ராப்யனாய்
பொன்னி அணி அரங்கத்து–காவிரியால் அழகு பெற்ற கோயிலிலே
அரவு அணையில் பள்ளி கொள்ளும்:
நிறம் திகழும்–அழகு விளங்கா நின்றுள்ள
மாயோனை–ஆச்சரியனான எம்பெருமானை
என் கண்கள்–எனது கண்களானவை
கண்டு–ஸேவிக்கப் பெற்று
நீர் மல்க நிற்கும் நாள் என்று கொல்–ஆநந்தக் கண்ணீர் ததும்பும்படி நிற்பது என்றைக்கோ?

மறம் திகழும் மனம் ஒழித்து –
மறம்–கொலையும் -சினமும் -கொடுமையும் –
இவற்றால் விளங்கா நின்ற மனஸை வாசனையோடு போக்கி –

வஞ்சம் மாற்றி
பொய்யைப் போக்கி

ஐம்புலன்கள் அடக்கி
வன்புலச் சேக்களை பட்டி புகாமே கட்டி

இடர் பார துன்பம் துறந்து –
மிக்க துக்கத்தை விளைப்பதான –
பாரமாய பழவினை பற்று அறுத்து

இரு முப் பொழுது ஏத்தி
பஞ்ச காலம் -என்னுதல்-
பெரிய முப்பொழுது என்னுதல்
இக் காலங்களிலே ஏத்தி

எல்லை இல்லா தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான-
அளவிறந்த பழைய மரியாதையிலே -சிலவரால் கலக்க ஒண்ணாத படி –
நிலை நின்ற ஸ்ரீ வைஷ்ணவர்களான –

அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை –
ஆன்ருசம்சய பிரதானராய் இருக்கும் அவர்களுக்கு பரம பிராப்யமானவனை

பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்-
பொன்னி சூழ் அரங்கத்திலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளும்
லீலா விபூதிக்கு ஆபரணமான ஸ்ரீ கோயில் –

நிறம் திகழும் மாயோனை கண்டு
அழகு விளங்கா நின்ற ஆச்சர்ய பூதனைக் கண்டு

என் கண்கள் நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே
அவனுடைய வடிவு அழகைக் கண்டு களித்து ஆனந்தாஸ்ரு ப்ரவஹிக்கா நிற்கும் நாள் என்றோ –

———————————————————-

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்
கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி
கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-

பதவுரை

கோல் ஆர்ந்த–அம்புகளோடு கூடிய
நெடு சார்ங்கம்–பெரியதான ஸ்ரீ சார்ங்க மென்னும் வில்லும்
கூன் நல் சங்கம்–வளைந்து விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்சஜந்யமென்னும சங்கமும்
கொலை ஆழி–(எதிரிகளைக்) கொலை செய்ய வல்ல ஸூதர்சநமும்
கொடும் தண்டு–(பகைவர்களுக்குக்) கொடுந்தொழில் புரிகின்ற கௌமோதகி யென்னும் கதையும்
கொற்றம் ஒள் வாள்–வெற்றி பெற்று ஒளி மிக்க நந்தகமென்னும் வாளும்
கால் ஆர்ந்த கடும் கதி–வாயு வேகம் போன்ற மிகவும் விரைந்த நடையை யுடைய
கருடன் என்னும்–பெரிய திருவடி யென்னும் பேரை யுடைய
வென்றி பறவை இவை அனைத்தும்–ஐய சீலமான பக்ஷிராஜனும் (ஆகிய) இவை யெல்லாம்
புறம் சூழ் காப்ப–நாற் புறமும் சூழ்ந்து கொண்டு ரக்ஷையிட
சேல் ஆர்ந்த நெடு கழனி–(நீர் வளத்தால்) மீன்கள் நிரம்பிய விசாலமான
கழனிகளாலும்
சோலை சூழ்ந்த–சோலைகளாலும் சூழப்பட்ட
திரு அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்;
மாலோனை–ஸர்வாதிகனான எம்பெருமானை
வல் வினையேன்–மஹா பாபியான அடியேன்
கண்டு–ஸேவிக்கப் பெற்று
இன்பம் கல்வி எய்தி–ஆநந்த மயமான ஸம்ச்லேஷத்தையும் பெற்று
வாழும் நாள் என்று கொல்–வாழ்வது என்றைக்கோ?

கோலார்ந்த நெடும் சார்ங்கம் –
திருச் சரங்களோடு கூடின ஸ்ரீ சார்ங்கம் –
எப்போதும் கை கழலா நேமியான் -என்னுமா போலே
எப்போது இவனை யுண்டாம் என்று அறியாமையாலே
திருச் சரங்களை தொடுத்த படியே யாய்த்து ஸ்ரீ சார்ங்கம் இருப்பது

கூன் நல் சங்கம்
பகவத் அனுபவ ஜனிதத்தாலே வந்த செருக்காலே
கூனியாய் யாய்த்து ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இருப்பது

கொலை ஆழி –
இவர்கள் அனுபவத்தில் இழியப் போது இன்றியே பிரதிபஷத்தை இரு துண்டமாக விடுகை
பணிப் போருமாய்த்து ஸ்ரீ திரு வாழி ஆழ்வானுக்கு

கொடும் தண்டு –
பிடித்த பிடியிலே உகவாதார் மண் உண்ணும் படி யாய் இருக்கிற கதை –

கொற்ற ஒள் வாள்
ஐஸ்வர்ய பிரகாசகமான திருக் கொற்ற வாள்-கொற்றம் -வெற்றி –

காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை –
காற்றினுடைய மிக்க வேகம் போலே இருக்கிற கதியை உடையனாய்
ஸ்ரீ பெரிய திருவடி என்கிற பேரையும் உடையனாய் இருக்கிற பறவை –

இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
ராம லஷ்மண குப்தாஸா–என்னுமா போலே
கடல் கரை வெளியில் ஸ்ரீ சேனை எல்லாம் குழைச் சரக்காய்-
தாமும் தம்பியாருமாய் காக்குமா போலே
ஸ்ரீ பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகையாலே
ஸ்ரீ பெரிய திருவடி முதலாக ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்கள் சுற்றும் காத்துக் கொண்டாய்த்து நிற்பது

சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் மாலோனை –
சேலாலே நிரம்பின கழனிகளும் சோலைகளும் சூழ்ந்த கோயிலிலே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிற சர்வாதிகனை

கண்டு இன்ப கலவி எய்தி
கண்டு நிரதிசய ஆனந்த யுக்தனாம் படி சம்ச்லேஷித்து

வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே –
லோகாந்தரத்திலே போய்க் காண வேண்டும் வஸ்து இங்கே சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே
அனுபவிக்க ஒண்ணாத மகா பாபத்தைப் பண்ணின நான்
அனுபவித்து வாழப் பெறுவது என்றோ –
பகவத் அனுபவத்துக்கு விரோதியாய் உள்ளவை எல்லாம் பாபமாய் இருக்கும் இறே-

————————————————————————-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-

பதவுரை

தூராத காதல் மனம்–ஒரு நாளும் த்ருப்தி பெறாத ஆசை கொண்ட மனத்தை யுடையவரான
தொண்டர் தங்கள் குழாம்–ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டியிலே
குழுமி–கூடி
திரு புகழ்கள் பலவும் பாடி–(எம்பெருமானது) கீர்த்திகளெல்லாவற்றையும் (வாயாரப்) பாடி
ஆராத மனம் களிப்போடு–(அவ்வளவிலும்) த்ருப்தி பெறாத மநஸ்ஸிலுள்ள ஆனந்தத்தோடே
அழுத கண் நீர்–அழுத கண்களிலுண்டான நீர்த் துளிகள்
மழை சோர–மழை போல் பெருகி வர
நினைந்து உருகி ஏந்தி–(எம்பெருமானை) நினைத்து (அத்தாலே) மனமுருகி ஸ்தோத்திரம் பண்ணி,
நாளும்–எப்போதும்
சீர் ஆர்ந்த முழவு ஓசை–நல்ல வாத்யங்களின் கோஷமானது
பரவை காட்டும்–கடலோசை போல் முழங்கப் பெற்ற
திரு அரங்கத்து ஸ்ரீரங்கத்திலே அரவு அணையில் பள்ளி கொள்ளும்
போர் ஆழி–(பகைவரோடு) யுத்தஞ்செய்வதையே தொழிலாக வுடைய
திருவாழி யாழ்வானை யுடையவரான
அம்மானை–எம்பெருமானை
கண்டு–ஸேவிக்கப் பெற்று
துள்ளி–ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகத்) தலை கால் தெரியாமல் கூத்தாடி
பூதலத்திலே–பூமியிலே
புரளும் நாள் என்று கொல்–(உடம்பு தெரியாமல்) புரள்வது என்றைக்கோ!.

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி –
தூராக் குழி தூற்று எனை நாள் அகன்று இருப்பன் -என்று
சம்சாரிகள் சப்தாதி விஷயங்களிலே அனுபவித்தாலும்
இந்த்ரியங்களைத் திருப்தி யாக்கப் போகாதாப் போலே
பகவத் அனுபவம் ஒருக்காலும் ஆராது இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் குழாத்திலே
என்னையும் கூடிக் கலசி –

திரு புகழ்கள் பலவும் பாடி
அவனுடைய கல்யாண குணங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் பலவற்றையும் பாடி

ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர –
திரு நாமங்களைச் சொன்ன படியாலே மனஸ்ஸூக்கு ஆராமையாலே ஹ்ர்ஷ்டனாய்
அத்தாலே ஆனந்தாச்ரு ப்ரவஹிக்க

நினைந்து உருகி ஏத்தி –
இவர்கள் திரளிலே கூடி திரு நாமத்தைச் சொன்ன படியாலே
திருநாம த்வாரா விஷயத்தை நினைத்து அத்தாலே உருகி –
உருகி வழிந்து புறப்பட்ட சொல் -என்னும் படி ஸ்தோத்ராதிகளைப் பண்ணி

நாளும் சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும் திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும் போராழி அம்மானை கண்டு துள்ளி-
ஐஸ்வர்ய பிரகாசகமான வாத்திய கோஷங்கள் சமுத்திர கோஷத்தை காட்டா நிற்கிற ஸ்ரீ கோயிலிலே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே நித்ய வாசம் பண்ணுகிற
யுத்த உந்முகமான திரு வாழியைக் கையிலே உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –

துள்ளி –
ஸ ஸபிரம நர்த்தம் பண்ணி

பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே-
சிம்ஹாசனத்திலே இறுமாந்து இருக்கும் இருப்பு ஒழிந்து ஹ்ர்ஷ்டனாய்
பூமியிலே புரளுவது என்று கொலோ –

———————————————————-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

பதவுரை

வன்–(நைமித்திக ப்ரளயத்தில்) அழியாதிருக்கக் கடவதும
பெரு–பெருமை தங்கியதுமான
வானகம்–ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்கள்
உய்ய–உஜ்ஜீவிக்கவும்
அமரர்–தேவர்கள்
உய்ய–உஜ்ஜீவிக்கவும்
மண் உய்ய–பூலோகம் உஜ்ஜீவிக்கவும்
மண் உலகில் மனிசர் உய்ய–பூலோகத்திலுள்ள மனிதர்களெல்லாம் உஜ்ஜீவிக்கவும்
மிகு துன்பம் துயர் அகல–மிக்க துக்கத்தை விளைப்பதான பாவங்கள் நீங்கவும்
அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர–துக்கம் கலசாத சுகம் வளரவும்
அகம் மகிழும்–(எப்போதும்) மனதில் ஆனந்தத்தை யுடையரான
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ–உஜ்ஜீவிக்கவும்
அன்போடு–திருவுள்ளத்தில் உகப்போடு
தென் திசை நோக்கி–தெற்குத் திக்குக்கு அபிமுகமாக
பள்ளி கொள்ளும்–பள்ளி கொண்டிரா நின்ற
அணி அரங்கன்–ஸ்ரீரங்கநாதனுடைய
திரு முற்றத்து–ஸந்நிதியுள் திரு முற்றத்திலே
அடியார் தங்கள்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
இன்பம் மிகு பெரு குழுவு கண்டு–ஆநந்தம் நிரம்பிய பெரிய கோஷ்டியை சேவித்து
யானும்–அடியேனும்
இசைந்து–(அவர்களுள் ஒருவனாக) மனம் பொருந்தி
உடனே–அவர்களோடு கூட
இருக்கும் நாள் என்று கொல்–வாழ்ந்திருக்குங்காலம் எப்போது (வாய்க்குமோ?).

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
நைமித்திக பிரளய ஆபத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக
மேலுண்டான லோகங்கள் உய்ய –
அங்குண்டான ப்ரஹ்மாதிகளும் ஜீவிக்க வாய்த்து
ப்ரஹ்ம லோகத்தில் ஸ்ரீ கோயில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்த படி –

மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும்
பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க

துன்பம் மிகு துயர் அகல
நித்ய துக்கத்தை விளைப்பதான பாபங்கள் அகல

அயர் ஒன்றில்லா சுகம் வளர –
துக்கம் விஸ்ரமியாத நித்யமான ஸூகம் வளர

அக மகிழும் தொண்டர் வாழ
பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்த உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ

அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து –
அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே

அடியார் தங்கள் இன்ப மிகு பெரும் குழுவு கண்டு –
நிரதிசய ஆனந்த உக்தராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைக் கண்டு

யானும் இசைந்து-
அபிஷிர்த ஷத்ரியன் -என்று என்னை நினையாதே
அவர்களிலே ஒருவனாக இசைந்து

உடனே என்று கொலோ விருக்கும் நாளே-
என்னைச் சிலர் சேவிக்க நான் நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே சேவித்து இருப்பது என்றோ –

—————————————————–

அவதாரிகை –

திரு நாமப் பாட்டு –
பூவோ பூத்யை பூ புஜாம் பூ ஸூ ராணாம் திவ்யோ குப்தைஸ் ஸ்ரயசே தேவதா நாம்-
ச்ரியை ராஜ்ஞாம் சோளவம் சோத்பவா நாம் ஸ்ரீ மத் ரங்கம் சஹ்ய ஜாமாஜகாம –

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

பதவுரை

திடர் விளங்கு கரை–மணற்குன்றுகள் விளங்கா நின்ற கரையை யுடைத்தான
பொன்னி நடுவு பாடு–காவிரியின் நடுவிடத்து
திரு அரங்கத்து அரவு அணையில் பள்ளி கொள்ளும்:
கடல் விளங்கு–கடல் போல் விளங்குகின்ற
கரு மேனி–கரிய திருமேனியை யுடைய
அம்மான் தன்னை–பெரிய பெருமாளை
கண் ஆர கண்டு உகக்கும் காதல் தன்னால்–கண்கள் த்ருப்தி யடையும்படி
ஸேவித்து ஆநந்திக்க வேணும்’ என்று உண்டான ஆசையினால்
குடை விளங்கு–(அரசாட்சிக்கு ஏற்ப) வெண் கொற்றக் குடையுடன் விளங்கா நிற்பவரும்
விறல் தானை–பராக்கிரமம் மிக்க ஸேஸனைகளை யுடையவரும்
கொற்றம் ஒள் வாள்–வெற்றியும் ஒளியும் பொருந்திய வாளை யுடையவரும்
கூடலர் கோன்–மதுரையிலுள்ளவர்களுக்குத் தலைவரும்
கொடை–ஔதார்யத்தையே இயற்கையாக வுடையவருமான
குலசேகரன்–குலசேகரப் பெருமாள்
சொற்செய்த–அருளிச் செய்த
நடை விளங்கு–தமிழ் நடையானது நன்கு விளங்கா நின்ற
தமிழ் மாலை பத்தும்–தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசரங்களையும்;
வல்லார்–ஓத வல்லார்கள்
நலம் திகழ் நாரணன்–கல்யாண குண சாலியான ஸ்ரீமந் நாராயணனுடைய
அடி கீழ் நண்ணுவார்–திருவடிகளில் சேரப் பெறுவர்.

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
விளங்கா நின்ற திருக் கரையை உடைத்தாய் -காவேரி சூழ்ந்த

திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற –
கடல் போலே ஸ்ரமஹரமான திருமேனியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை

கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் என்னும் ஆசைப் பாட்டோடு

குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர் கோன் –
விளங்குகிற வெண் கொற்றக் கொடையையும்
வெற்றியையும் உடைய சேனையையும் –
ஐஸ்வர்ய பிரகாசகமான ஆனையையும் உடையராய்
மதுரைக்கு நிர்வாஹகருமான

கொடை குலசேகரன் சொல் செய்த
கொடை மாறாதே கொடுக்கும் ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த –

நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
உள்ளில் அர்த்தத்தில் இழிய வேண்டாதே –
பதங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்க வேண்டாதே –
இது தானே ஆகர்ஷகமாய்
இருக்கிற தமிழ்த் தொடை பத்தும் வல்லார்

நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–
சீலாதி குண பூரணராய் –
சர்வ ஸ்வாமிகளாய்-
வத்சலராய் இருக்கும் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே
யனுபவிக்க ஆசைப் பட்டால் போலே கிட்டப் பெறுவார்கள் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: