பெருமாள் திருமொழி -9–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பிரவேசம் –

ஸ்ரீ கௌசலையார் பெற்ற பேற்றை அனுபவித்தார் கீழில் திரு மொழியில் –
பால்ய அவஸ்தை எல்லாம் அனுபவித்து பிராப்த யௌவனர் ஆனவாறே -அனுபவிக்கப் பெறாதே இழந்த
ஸ்ரீ சக்கரவர்த்தியோ பாதியும் தமக்கு பிராப்தி ஒத்து இருக்கையாலே அனுபவிக்கப் பெறாதே இழந்தேன் என்று
அவன் சொல்லுகிற பாசுரத்தாலே தம் இழவைப் பேசுகிறார் —

வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–

வன் தாள் இணை வணங்கி
தானும் ராஜ்ய பரப்பை எல்லாம் ஆண்டானாய் இருக்கச் செய்தே-அவ்வளவன்றியே –
வண் புகழ் நாரணன் திண் கழல்-என்னுமா போலே
ஆஸ்ரிதரை எல்லா அவஸ்தையிலும் விடேன் என்னும் திருவடிகளை வழி பட்டு

வள நகரம் தொழுது ஏத்த
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற -ஸ்ரீ திரு நகரியிலே
அப்படி இருக்கிற ஸ்ரீ திரு நகரி தொழுது ஏத்த

மன்னனாவான் நின்றாயை –
திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி திரு அபிஷேகம் பண்ணுகைக்கு
திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை

அரி அணை மேல் இருந்தாயை
சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை

நெடும் கானம் படர போகு வென்றாள்
இப்படி ராஜாக்கள் அல்லாதாரும் புக மாட்டாத காட்டை -தேவ நேந வனம் கத்வா -என்னுமா போலே
இவ் ஊரில் நின்றும் புறப்பட்டு
வழியே போய்க் காட்டிலே புகுமது அன்றியே காட்டிலே போம்படியாய்-
நெடிய காட்டிலே இறே போகச் சொல்லிற்று

எம்மி ராமாவோ!
நினைக்கவும் -சொல்லவும் -காணவும் -தாபம் போம்படியான உம்மை இறே போகச் சொல்லிற்று

உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
திரு அபிஷேக கல்யாண வார்த்தை -ஸ்ரீ கௌசல்யையாரிலும் காட்டில் தனக்கு நான் சென்று சொல்லி
ப்ரீதி காண வேணும் என்னும்படி பெற்ற தாயாய்ப் போந்த கைகேயி வார்த்தை கேட்டு

நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
வஞ்சன பரை என்று அறியாதே தாய் என்று இவளுக்கு வார்த்தை சொல்லப் புகுந்து –
அவள் வார்த்தையிலே அகப்பட்டு
பூமிப் பரப்பை எல்லாம் அழகிதாக உன்னை ஆள்வித்தேன்

நன் மகனே! உன்னை நானே—-
நான் இப்படி செய்த இடத்திலும் நீர் குணாதிகராம் படி நின்றீர் –
நான் நானாம் படி செய்தேன் –

—————————————————————————————

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு
அநலாஸ்யனான என்னுடைய -காடு ஏறப் போம் -ராஜ்யத்தைத் தவிரும் -என்ற
என் வார்த்தையைக் கேட்டு

இரு நிலத்தை வேண்டாதே –
உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து-
அவர்களைக் கை விட்டு

விரைந்து –
போகிறோம் -என்று விளம்பிப் போமாகில் -ராஜ்யத்தில் நசையாலே நின்றோம் என்று
கைகேயி நினைக்கும் -என்று விரைந்து

வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து-மா ஒழிந்து –
வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே
பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து

வனமே மேவி
இவற்றை ஒழிந்தால் இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி

நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு

எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?–
கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –
என்னாயனே நான் என் செய்கேன் –

———————————————————————————–

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன்
குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன்
மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய்
இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
காகுத்தா! கரிய கோவே! —–9-3–

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! –
கொலையிலே அணைந்த வேல் போலே புகரை உடைத்தாய் –
செவ்வரி கருவரியையும் உடைத்தாய் பரப்பையும் உடைத்தான கண்ணை யுடைய
ஸ்ரீ கௌசலையாருடைய உத்தாரகர் ஆனவனே –

குனி வில்லேந்தும் மல்லணைந்த வரை தோளா!
வீரர்கள் வில் ஒருக்கால் நாணி இறங்கிடாமையாலே வளைந்த படியே இருக்கும் இறே –
அந்த வில் தானும் மிகை என்னும் படி
மலை போலே பெரிய மிடுக்கை உடைய தோளையும் உடையவனே

வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்-
ஆயுத அழகாலும் தோள் அழகாலும் என் நெஞ்சை அழிக்கவே கற்றவனே

மெல்லணை மேல் முன் துயின்றாய்-
அழகிய படுக்கையிலே முற்காலம் எல்லாம் கண் வளர்ந்த நீர் –

இன்று இனி போய் –
பல மாளிகைகளிலே பல படுக்கைகளிலே கண் வளர்ந்த நீர் இன்றாக இனிப் போய்

வியன் கான மரத்தின் நீழல்-
காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே

கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ

காகுத்தா! கரிய கோவே!-
இச் செயல்கள் உம்முடைய குடிப்பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –

———————————————————————

வா போகு வா இன்னம் வந்து
ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா
விடையோன் தன் வில்லை செற்றாய்!
மா போகு நெடும் கானம் வல் வினையேன்
மனம் உருக்கும் மகனே! இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
போகாதே நிற்க்குமாறே! —9-4–

வா போகு வா –
சற்றுப் போது காணா விட்ட வாறே வரும்படி காண்கைக்காக ஸூமந்த்ரனை விட்டு அழைப்பிக்கும்-
பிறகு பின்பும் பிறகு அழகையும் காண்கைக்காகப் போ என்னும் –
பின்னையும் கண் மறையப் போனவாறே வா வென்னும் –

இன்னம் வந்து ஒருகால் கண்டு போ –
வந்தவாறே இன்னம் போம் போது ஒருக்கால் கண்டு போம் என்னும் –
இப்படி யாகும் இவன் யாத்ரை தான் இருப்பது –

மலராள் கூந்தல்
பூ மாறாதே யாளும் மயிர் முடியையும்

வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் ஒழுகு நீட்சிக்கும் வேய் போலே இருக்கிற அழகிய தோளை
உடையாளாய் இருக்கிற ஸ்ரீ பிராட்டி நிமித்தமாக –

விடையோன் தன் வில்லை செற்றாய்!
பெரு மிடுக்கனான ருத்ரனுடைய வில்லை முறித்தவனே

மா போகு நெடும் கானம் –
ஆனைகள் சஞ்சரிக்கிற காடு

வல் வினையேன் மனம் உருக்கும் மகனே! –
பால்ய அவஸ்தை தொடங்கி பதினாலாண்டு உன் சௌந்தர்யாதி சேஷ்டிதங்களாலே மஹா போகங்களை
என்னை அனுபவிப்பித்த உன்னை முடிய அனுபவிக்கப் பெறாதே மஹா பாபத்தைப் பண்ணி
என்னுடைய ஹ்ருதயத்தை சிதிலம் ஆக்குமவனே

இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —
உன் சந்நிதியில் இருக்கிற என் நெஞ்சமானது நீ போனவாறே சிதிலமாகாதே வலித்திரா நின்றதீ –
இதுக்கு ஹேது அறிகிறிலேன்-

——————————————————————————————–

பொருந்தார் கை வேல் நுதி போல்
பரல் பாய மெல் அடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம்பசி நோய் கூர இன்று
பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
கேகயர் கோன் மகளாய் பெற்ற
அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன்
என் செய்கேன்? அந்தோ! யானே— 9-5–

பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய
சத்ருக்கள் கையில் வேல் முனையை இட்டிருந்தால் போல் பரற்களானவை பாய

மெல் அடிகள் குருதி சோர
இங்குத்தையில் மிதிக்க சஹியாத ஸூகுமாரரான திருவடிகள் பாறைகள் மேலே மிதிக்கையாலே ரதத்தைப் புறப்பட விட

விரும்பாத கான் விரும்பி –
ஸூகுமாரர் அல்லாதாரும் விரும்பாத காட்டை நான் போகச் சொன்னேன் என்னுமத்தாலே விரும்பி

வெயில் உறைப்ப வெம்பசி நோய் கூர -மிக
மேலே வெய்யிலானது உறைப்ப-நினைத்த போது அமுது செய்யக் கிடையாமையாலே வெவ்விய பசியான நோய்

இன்று- பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
மஹா பாபியான என் வயிற்றிலே பிறக்கையாலே இறே ஸூ குமாரரான நீர் காடு ஏறப் போகிறது

கேகயர் கோன் மகளாய் பெற்ற அரும் பாவி சொல் கேட்ட –
கேகேய ராஜன் மகளாய் பெற்றது ஒரு மஹா பாபத்தை யாய்த்து -அவள் வார்த்தையிலே அகப்பட்ட

அரு வினையேன் என் செய்கேன்? அந்தோ! யானே—
பிரதிகிரியை அல்லாத செயலைச் செய்த என்னால் செய்யலாம் பரிஹாரம் இல்லை –

—————————————————————————–

அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்
கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத் திடை அழுந்த தழுவாதே
முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
இழி தகையேன் இருகின்றேனே– 9-6–

அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே-
வேறு ஒன்றைக் கணிசியாதே -காரியப் பாடு அற-ஐயர் -என்று அழைக்கும் ப்ரேமம் வழிந்து
புறப்பட்ட சொல்லைக் கேளாதே –

அணி சேர் மார்வம் என் மார்வத் திடை அழுந்த தழுவாதே முழுசாதே மோவாது உச்சி
ஆபரணங்களாலே அலங்க்ர்தமான திரு மார்வைக் கொண்டு-ஸூ காடம் பரிஷச்வஜே -என்னும்படி
ஏக தத்வம் என்னும் படி தழுவி முழுசாதே –
முழுசி அநந்தரம் உச்சியை மோந்து கொள்ளாதே

கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
மத்த மாதங்க காமி நம் -என்னும் படி அமைந்து இருக்கிற நடை அழகும்

கமலம் போல் முகமும் காணாது
விகாசம் செவ்விக்கு தாமரை ஒரு போலியான திரு முகத்தைக் காணாது

எம்மானை என் மகனை –
நடை அழகாலே என்னை எழுதிக் கொண்ட என்மகனை

இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே–
இப்படித் தண்ணிய செயலை செய்தக்கால் முடியவும் ஆகாதே இருக்கவும் வேணுமோ நான் –

——————————————————————————–

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூ மாறாதே இருப்பதாய் பரிமளத்தைப் புறப்பட விடா நிற்கும் திருக் குழலை –
மனுஷ்யர்க்குப் பார்க்க ஒண்ணாத படி ஜடையாக்கி

பூம் துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்து –
அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி

கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே

ஏமரு தோள் என் புதல்வன் –
விக்நம் பண்ணினாரை அழியச் செய்து அபிஷேகம் பண்ண வல்ல என் மகன்

யான் இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல்
அறுபதினாயிரம் ஆண்டு போகங்களை புஜித்து-வீத ராகனான நான் போகக் கடவ காட்டிலே
ஸூகுமாரராய்-போக யோக்யரான தாம் போகை

தூ மறையீர்! இது தகவோ?
பதிம் விஸ்வஸ்ய -என்று ஓதி இருக்கிற பிராமணரே -நீங்கள் இது சொல்லி கோள்-இது தர்மமோ

சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே
ராஜ தர்மத்தை பழக அறிந்து நடத்திப் போந்த ஸ்ரீ ஸூமந்த்ரனே -சொல்லாய்
இவ்வம்ச த்துக்கு குருவாய் ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற ஸ்ரீ வசிஷ்ட பகவானே சொல்லாய் –

‘பூணார் அணியும், முடியும், பொன்னா சனமும், குடையும்,
சேணார் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன்,
மாணா மரவற் கலையும், மானின் தோலும் அவைநான்
காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்? –ஸ்ரீ கம்ப ராமாயணம்/அயோத்தியா காண்டம்/4-நகர் நீங்கு படலம்-65-1670

‘பூண் ஆர் அணியும் – அணிதற்குப் பொருந்திய அணிகலன்களும்;
பொன் ஆசனமும்- பொன்மயமான சிங்காதனமும்;
குடையும் -வெண்கொற்றக் குடையும்;
சேண் ஆர்மார்பும் – அகன்று பொருந்திய மார்பும்;
திருவும் – அங்கே வீற்றிருக்கும்திருமகளும்;
தெரியக் காணக் கடவேன் நான் – விளங்கப் பார்த்தற்குக் கடமைப்பட்ட யான்;
மாணா மர வற்கலையும் – மாட்சிமை இல்லாத மரவுரியும்;
மானின் தோலும் – மேனியில் போர்த்துக்கொள்ள மான் தோலும்;
அவை – ஆகிய அவற்றை;
காணாது ஒழிந்தேன் என்றால் – பாராமல் (விண்ணுலகு) சென்றுவிட்டேன் என்றால்;
கருமம் நன்றுஆய்த்து அன்றோ? – என் செயல் நல்லதாக ஆய்விடும் அல்லவா?

————————————————————-

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும்
தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என்
மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில்
இனிதாக இருக்கின்றாயே– 9-8-

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும்
தந்யர் என்று எல்லாரும் சொல்லும் படி இருக்கிற உபாயாத்யர்கள் கீழே இருந்து அழகிய சகல வேத சாஸ்திரங்களையும்
ஓதி இருக்கிற ஸ்ரீ பெருமாளையும் -அவரை அல்லாது அறியாத தம்பியாரையும்

பூவை போலும் மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் –
பூவை போலே இருப்பாளுமாய் -மின்னுக்கு ஒப்பான இடையை யுடையாளுமாய் ம்ருது ஸ்வபாவையுமான
என் மருமகளான பிராட்டியையும்

வனத்தில் போக்கி
காட்டிலே போக விட்டு

நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும்
வனத்திலே போக விட்டு

என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி!
இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்

இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–
சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –
உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே
போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே –

————————————-

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின்
வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன்
ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி

அவன் தவத்தை முற்றும் செற்றாய்
அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்

உன்னையும் உன் அருமையையும் –
உன் ஸ்லாக்கியதையும்-மஹதாதபசாராம –என்று நான் உன்னைப் பெறப்பட்ட அருமையையும்

உன் நோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
உன்னைப் பிரியில் தரியேன் -என்று பின் தொடர்ந்த ஸ்ரீ கௌசல்யையார் வ்யசநத்தையும் ஒன்றாக கொள்ளாது

என்னையும் என் மெய் உரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்!
உன்பக்கல் எனக்கு உண்டான பாவ பந்தத்தை மெய்யாக அறியாதே என்னைப் பிதா என்றே நினைத்து
நெடு நாள் சத்யம் சொல்லிப் போந்தவனை நான் தோன்றி அசத்திய பிரதிஜ்ஞன் ஆக்க ஒண்ணாதே
எனக்கு சத்தியத்தை சத்யமாக்க வேணும் என்று நெஞ்சிலே கொண்டு காடு ஏறப் போன என்னாயனே

நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —
அநேக ஜன்மங்கள் பிறந்து – பிறந்த ஜன்மம் தோறும் நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும் படி
பேறு உடையேன் ஆவேன்
நெடும் தோள் வேந்தே
ரஷ்ய வர்க்கத்தின் அளவில்லாத காவல் துடிப்புடைய தோளை உடையவனே –

—————————————————

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ-
தேனைப் புறப்பட்டு விக்கிற மலரோடு கூடின மயிர் முடியை உடைய ஸ்ரீ கௌசலையாரும்-
ஸ்ரீ ஸூமத்ரையாரும் நெஞ்சு நோவ

கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
வடிவிலே வக்ரம் போலே நெஞ்சம் வக்கிரமாய் திண்ணிதான கூனியை யுடைய வார்த்தையைக் கேட்ட
கைகேயியுடைய வார்த்தையிலே அகப்பட்டு

கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து
நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி –
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து

நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன்-
நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்

மனு குலத்தார் தங்கள் கோவே! –
மநு குலோத்பவனானவனே-

————————————————————————————

ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய்
வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான்
புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன்
குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார்
தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-

நிகமத்தில் –
ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா-
எல்லா பிரகாரத்தாலும் பூர்ணனாய் -சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் கர்ம வஸ்யரோடே-
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து –
கர்மவஸ்யரும் போகத் தகாத காட்டில் புக்கான் -என்றதுக்கு ஆற்ற மாட்டாதே

தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல் தன்னை
அறுபதினாயிரம் ஆண்டு ராஜ்ஜியம் பண்ணுகையாலே மாலை மாறாத திண்ணியதான மலை போலே
தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி பிரலாபித்த பாசுரத்தை –

கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த-
கூர்மை மிக்க வேலையையும் உடையராய் -ஸ்ரீ உறையூருக்கு நியாமகருமாய் -ஐஸ்வர்ய பிரகாசகமுமான
வெண் கொற்றக் குடையும் உடையருமான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த –

சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே–
பாட்யேகேயேச மதுரம் -என்று இவை பூரணமான தமிழ் தொடை வல்லவர்கள் –
பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு விஷய பிரவணர் ஆகார்கள் –

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர் ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: