பெருமாள் திருமொழி -8–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பிரவேசம் –

ஸ்ரீ தேவகியார் இழந்த இழவு மாத்ரமேயோ –
ஸ்ரீ கௌசல்யைத் தான் காணப் பெற்றேனோ -என்று அச்சம காலத்திலே
தாம் இழக்கையாலே -அவள் அனுபவத்தை ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே அனுபவிக்கிறார் –

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பிள்ளையாகப் பெற்றாள் -என்ற நிலை நின்ற புகழை உடைய -ஸ்ரீ கௌசலையாருடைய
அழகிய வயிற்றிலே அவளுக்குப் பிள்ளையாகப் பெற்றவனே

தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! –
இத் திரு மொழி இறே ஸ்ரீ ராமாவதாரத்தில் மிகை -ஆகையாலே இச் சந்தை

செம்பொன் சேர் கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
அழிவில்லாத மதிளாலே சூழ்ந்த ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே எனக்கு திருஷ்டிக்கு நிர்வாஹகனாய் நிற்கிறவனே

என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ—
தேவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே எனக்கு அமிர்தமானவனே-
தேவர்களுடைய அமிர்தம் உப்புச் சாறு இறே –
அது அன்று இறே இவருடைய அமிர்தம் இருந்த படி –

——————————————————————————–

புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே!
திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே !
எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ –8-2–

புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே!
திரு நாபீ கமலத்திலே லோகம் எல்லாம் ஸ்ருஷ்டித்தவனே

திண் திறலாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!
ஸ்ருஷ்டிக்குமது அன்றியே -பயிரைச் செய்து களை பிடுங்குமா போலே ஆசூர வர்க்கத்தைப் போக்கின படி
திண்ணிய திறலை உடையளான தாடகை உரத்தை மாறுபாடு உருவ வில்லை வளைத்தவனே

கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே !
கண்டவர்கள் நெஞ்சுகளை தாங்களும் இசைந்து கொடுக்கும் படி ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நிற்கிறவனே

எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ –
அவதாரத்தில் பிற்பாடரான எட்டு திக்கிலும் உள்ளாறும் வந்து வாழும் படி நின்றவனே –

—————————————————————-

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே

தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா !
புகழ் என்று பிறந்தவை எல்லாம் தங்கும் படி பெரிய புகழை உடைய ஸ்ரீ ஜனக ராஜனுக்கு மருமகன் ஆனவனே

தாசரதீ !
அவனோடு சத்ர்ச சம்பந்தம் பண்ணலாம் படியான பிறப்பை உடையவனே

கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
காதசித்க சம்பந்தத்தால் வரும் ஸூ த்தி யோகம் இறே கங்கைக்கு உள்ளது
சம்பந்தம் நித்யமாகையாலே அதிலும் ஸூத்தி மிக்கு இருக்கிற ஸ்ரீ திருப் பொய்கையை உடைய
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே ஸூலபன் ஆனவனே

எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—
ராஜ வம்சத்துக்காக போகய பூதன் ஆனவனே –

————————————————————————————

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே!
கீழ்ச் சொன்ன சிருஷ்டி பின்னாட்டின படி

தயரதன் தன் மா முதலாய்!
அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தியினுடைய மலடு தீரப் பிறந்தவனே –

மைதிலி தன் மணவாளா –
பிள்ளை பெற்றத்தின் மேலும் பிறப்பில் வந்த ஏற்றத்துக்கு மேலே —
யச்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ பிராட்டியை
உனக்கு என்று இட்டுப் பிறந்த மேன்மையை உடையவனே

வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே

ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ–
ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும் ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –

——————————————————————————–

பாராளும் படர் செல்வம் பாரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ—– 8-5-

பாராளும் படர் செல்வம் பாரத நம்பிக்கே அருளி
பூமிப் பரப்படைய ஆளக் கடவதான பெரிய சம்பத்தை -பாரதந்த்ர்ய குணங்களாலே
பூர்ணனாய் இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு அருளி

ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
அவனைப் போலவே நியமித்த இடத்திலே பிரிந்து இருக்க மாட்டாதே –
குருஷ்வ மாம் -என்னும் ஸ்ரீ இளைய பெருமாளோடு கூடி
ஒருவராலும் இயங்க ஒண்ணாத துஷ்ட சத்வ பிரசுரமான காட்டிலே பிரவேசித்தவனே

சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
வீர ஸ்ரீ க்கு நிர்வாஹகன் ஆனதுவும்

தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ—–
ஆதி ராஜ்ய ஸூசகமான மாலையோடு கூடின முடியை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனே –

————————————————————————-

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்க்கு அரு மருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ –8-6–

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
எல்லாரும் போனார்களோ -சிறிதிடம் போய் மீண்டது என்று அன்றோ சொல்லிற்றாய்த்து –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று சொன்ன எல்லா அடிமையும் செய்யும் ஸ்ரீ இளைய பெருமாள்
கூடப் போகையாலே-எல்லா பந்துக்களும் கூடப் போனார்கள் யாய்த்து இறே -என்று
ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்து அருளினார்

அற்றவர்கட்க்கு அரு மருந்தே! –
கர்ப்ப பூதாஸ்த போதநா –என்று இருக்குமவர்களுக்கு -அரு மருந்தே —
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்-என்று இருக்கும் மருந்து ஆனவனே

அயோத்தி நகர்க்கு அதிபதியே!
ஸ்ரீ பரமபதம் போலே அயோத்யை இறே -இதுக்குப் பெயர் –
அப்படிப் பட்ட படைவீட்டுக்கு அதிபதியானவனே

கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
கற்பது ஒரு தேசத்திலே இருந்து ஒரு காலத்திலேயாய்-பிராப்ய வஸ்துவைக் கிட்டி
அனுபவிப்பது ஒரு தேச விசேஷத்திலேயாகாமே
பிராப்ய வஸ்து தெற்கு திக்கிலே காணலாம் படி ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நின்றவனே

சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ –
பெற்ற தாயான நான் உம்மைப் பிரியில் தரியேன் என்று ஸ்ரீ கௌசலையார் பின் தொடரச் செய்தேயும்
மாற்றுத் தாயான கைகேசி சொல்லு மாறாதே வனத்தே போந்தவனே –

—————————————————————————–

ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே!
ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ— 8-7–

ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
லோகத்தை எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ஒரு பாவனான ஆலிலையிலே-அது தான் விஞ்சும் என்னும் படி
கண் வளர்ந்து அருளின அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவனே

வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
வாலி ஆரைத் துணையாக நீ விஜயம் பண்ணின ராவணனை வாலிலே கட்டி வைத்தான்
அவ் வாலியைக் கொன்று அவனுக் கிடைந்து பர்வத குஹைகளிலே கிடக்கிற
ஸ்ரீ மஹா ராஜற்கு வானர ராஜ்யத்தைக் கொடுத்தவனே

காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே!
காற்றாலே உள்ளுக் கிடக்கிற ரத்னங்களை கரையிலே ஏறிடும் என்னுதல்
கால் வாய்களில் மணிகளைக் கொடு வந்து கரையிலே ஏறிடும் என்னுதல்

ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ—
ஸ்ரீ திரு வாலிக்கு நிர்வாஹகன் ஆனவனே –
வாலியைக் கொன்று ஊரில் தன்னைத் துணையாகக் கொள்ளப் பெற்றதே –

————————————————————————–

மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ– 8-8-

மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
நிலத்திலே வர மலையைக் கொண்டு -அரணான மலையை -அணையாகக் கட்டி
நீர் தானே மிகை என்னும் படியான
அரணையும் உடைத்தான இலங்கையை மூலையடியெ வழி போக்கினவனே

அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
அகாதமான சமுத்ரத்தைக் கடைந்து அமிர்தத்தை வாங்கி அசுரர்கள் கையிலே தேவர்கள்
சாவாத படி அவர்களுக்குக் கொடுத்தவனே

கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சகல வித்யா ஸ்தலங்களும் கை வந்து இருக்குமவர்கள் உன்னை அனுபவிக்கும்
ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே

சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ–
ஸ்ரீ சார்ங்கம் கை வைத்து இருக்குமவனே -அது தான் மிகை என்னும் படியான வீரப் பாட்டை உடையவனே –

—————————————————————————————

தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்!
வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே!
இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ– 8-9-

தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்!
கட்டவிழும்படியான நறு நாற்றத்தை உடைய மயிர் முடியை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி குலத்துக்கு
உத்தாரகன் ஆனவனே

வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே!
ப்ரஹ்மாஸ்த்ராதிகள் வாய் மடியுமூரை மனுஷ்யத்வத்துக்கு ஏகாந்தமான வில்லாலே
அவனுடைய ஊரை அழியச் செய்தவனே

களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே!
களையாகப் பறித்து கரையிலே பொகட்ட செங்கழு நீர்கள் பொகட்ட இடங்களிலே கிடந்தது தன்னிலத்திலே
அலருமா போலே செவ்வி பெற்று அலரும் ஸ்ரீ திருக்கண்ண புரம்

இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ–
தம்பிமார்க்கு உறுப்பாகாத போது-என் பிராண்ன்களும் எனக்கு வேண்டா என்னுமவர் இறே-

——————————————————————————-

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ— 8-10-

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
சஹஜ சத்ருக்களான-தேவாஸூரர் முதலான பதார்த்தங்களையும் –
இவர்களுக்கு அவகாச பிரகாசம் பண்ணும் தேசங்களையும் ஸ்ருஷ்டித்தவனே

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
ஸ்ருஷ்டி பிரயோஜனம் எல்லாம் தன்னை ஆஸ்ரயிக்கை இறே –
இதுக்காக ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளினவனே

காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஒருவர் ஏற்றிப் பாய்ச்ச வேண்டாத படி தானே வந்து எங்கும் பரக்கும் காவேரியை யுடைய
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே ஸூலபன் ஆனவனே

ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ—
ஏவிலே மூட்டக் கடவதாய் தர்ச நீயமாய் பிடித்த பிடியிலே சத்ருக்கள் மண் உண்ணும் படியான
ஸ்ரீ சார்ங்கத்தை உன் கருத்திலே நடத்த வல்லவனே –

————————————————————-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— 8-11-

நிகமத்தில் –
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
அழியாத பெரு மதிள் சூழ்ந்த ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே நின்று அருளின
ஸ்ரீ கிருஷ்ணனை அன்றியிலே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை யாய்த்து கவி பாடிற்று –

தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய பால்ய அவஸ்தையில் ஸ்ரீ கௌசல்யார் சொன்ன பாசுரத்தை
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே சொன்ன தமிழ் தொடை

கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
வேலைப் பிடித்த பிடியிலே எல்லாரும் -வேலின் கொடுமையே -என்று சொல்லா நின்ற வேலையும்
ஐஸ்வர்ய பிரகாசகமான வெண் கொற்றக் கொடையையும் உடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த

பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே—
பரம்பி -லஷணத்தால் குறைவற்ற இப்பத்தும் வல்லார்கள்
ஸ்ரீ திருத் தாயாராயும் அடியாராயும் அனுபவிக்கப் பெறுவார்கள் –

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: