பெருமாள் திருமொழி -7–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பிரவேசம் –

ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திருவடியைக் கண்டவாறே -பிரணய ரோஷம் தலையெடுத்து —
பிதுர் வசன பரிபாலனம் பண்ணப் போந்தார் என்று இறே
ஸ்ரீ பெருமாள் உங்கள் கோஷ்டியில் பிரசித்தராய் இருப்பது –
இப்பது அங்கன் அன்று காண்-
தம்மை விச்வசித்துக் கை கொடுத்த என்னை கை விடுகைக்காக காண் —
ரஷிதா ஜீவ லோகஸ்ய -என்கிறதையும் விட்டார் இறே என்று கிலாய்த்தால் போலே
கிலாய்த்தார் இவரும் கீழில் திரு மொழியில் –

சர்வாத்மாக்களுக்கும் ஸ்ரீ பிராட்டிமாரோபாதி பிராப்தி உண்டு என்னும் படி
ஸ்ரீ பகவத் விஷயத்தில் அவஹாகித்தவர் ஆகையால் இவர் கிலாய்த்தார் –
இப்படி கிலாய்த்தத்தைக்கு பிராப்தி உண்டாய் இருக்கிற விஷயத்தை அநாதி காலம் இழந்தோம்
என்கிற இழவு வந்து தலை எடுத்து
முன்பு ஸ்ரீ கிருஷ்ணனைப் பெற்று வைத்து பால்ய அவஸ்தையிலே அவன் செயல்களை அனுபவிக்கப் பெறாதே இழந்திருந்து –
கம்ச வத பர்யந்தமாக முன்புள்ள விரோதிகளை எல்லாம் போக்கி தங்கள் முகத்தில் விழித்த ஸ்ரீ கிருஷ்ணனைக் கண்ட போது
கீழ் அனுபவிக்கப் பெறாத இழவுகளைச் சொல்லிக் கூப்பிட்ட ஸ்ரீ தேவகியார் பாசுரத்தாலே
அநாதி காலம் தாம் இழந்த இழவுகளைச் சொல்லுகிறார் -இத் திரு மொழியிலே –

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ
வேழ போதக மன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ
என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய
தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத
தாயிற் கடை யாயின தாயே –7-1-

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
சமைய வளர்ந்த ஆலைக் கரும்பு போலே ரசேந்த்ரியத்துக்கு இனியனானவனே

அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
விகாசம் செவ்வி குளிர்த்தி மென்மை யுடைய தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களைக் கொண்டு
என்னை குளிர நோக்குகிறவனே-என்று
சஷூர் இந்த்ரியத்துக்கு இனிதாய் இருக்கிற படி சொல்லுகிறார்

வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ
அவயவங்களை பிரித்துச் சொல்ல வேணுமோ -அவயவியான மேனி ஸ்ரமஹரமான கடல் போலே இருக்கிறவனே –

வேழ போதக மன்னவன் தாலோ
ஆனைக் கன்று போலே வைத்த கண் வாங்காதே பார்த்த படியே இருக்கும் படியான சரிதங்களை உடையவனே –

ஏலவார் குழல் என் மகன் தாலோ
இப்படி உபமானங்களால் சொல்ல ஒண்ணாமையாலே -என் மகன் -என்னும் அத்தனை அல்லது
என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத
இப்படி பல காலும் சொல்லி வாயாரத் தாலாட்டும் சம்பத்து இல்லாத –

தாயிற் கடை யாயின தாயே –
பெறுகைக்கு நோன்பு நோற்று பெற்று வைத்து அனுபவத்தில் குறைய நிற்கையாலே பிள்ளைகளைப்
பெற்று அனுபவிக்கும் தாய் மார் எல்லாரிலும் கடையானேன் இறே நான் –

———————————————————————

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– 7-2-

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
கூர்மையை உடைய செம்மலர்க் கண் என்னுதல்-
திருக் கண்ணுக்கு ஈடாக வடிக்கப்பட்ட அஞ்சனத்தை உடைய கண்ணன் -என்னுதல்
செம்மலர் -சிவந்த தாமரை போலே இருந்துள்ள

மேல் இனிது ஒன்றினை நோக்கி
பிள்ளையைத் தொட்டிலே வளர்த்தி -அநந்ய பரனாய் பார்த்து கிடக்கைக்காக
மேலே ஒன்றைத் தூக்கி வைப்பார்கள் இறே –
அத்தை இனியனாய்க் கொண்டு சதா தர்சனம் பண்ணிக் கிடக்கும் இறே

முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
அங்குக் கிடக்கும் படி சொல்லுகிறது மேல் -புறவாய் கறுத்து-அகவாய் சிவந்த திருவடிகளை முடக்கி –

பொலியும் நீர் முகில் குழவியே போலே
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகிற்று ஒரு மேகக் கன்று போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும் அம் கை யோடு அணைந்து –
செறிந்து அழகிதான திரு விறர்களை உள்ளங்கையிலே அடக்கும் படி மடித்துப் பிடித்து

ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
ஆனை தன அவயவங்களை பொகட்டுக் கொண்டு ஸ்வைரகமாக கிடந்தால் போலே
தொட்டிலிலே கிடக்கும் போது அனுபவிக்கப் பெற்றிலேன் என்று ஐயோ -என்கிறாள்

கேசவா ! கெடுவேன் கெடுவேனே–
அப்போதைத் திருக் குழல் அழகை அனுபவிக்கவும் பெற்றிலேன்
முன்பு மலடு நின்று இழந்தேன்
பின்பு பெற்று வைத்தே அனுபவிக்கப் பெறாது ஒழிந்தேன்
இரண்டாலும் மஹா பாபி இறே நான் –

———————————————————————

முந்தை நன் முறை அன்புடை மகளிர்
முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே ! என் தன் குல பெரும் சுடரே !
எழு முகில் கணத்து எழில் கவரேறே!
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ்
விரலினும் கடை கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா
நாங்கள் கோன் வாசுதேவன் பெற்றிலனே– 7-3-

முந்தை நன் முறை அன்புடை மகளிர்
தாய்மார் -அவர்களுடைய தாய்மார் -பாட்டிமார் எல்லாரும்

முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
அவ்வோ அடைவுகளிலே குறங்குகளிலே வைத்துக் கொண்டு

எந்தையே ! என் தன் குல பெரும் சுடரே ! எழு முகில் கணத்து எழில் கவரேறே!
என் தன தமப்பனே -எங்கள் குலத்துக்கு விளக்கானவனே
ஏழு வகைப் பட்ட மேக சமூஹங்களினுடைய அழகைக் கவர்ந்த சிம்ஹம் போலே இருக்கிறவனே

உந்தை யாவன் என்று உரைப்ப
இப்படி ஸ்தோத்ரங்களைப் பண்ணி உங்கள் தமப்பனார் ஆர் என்று கேட்க

நின் செங்கேழ் விரலினும் கடை கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன்
சிவந்த விரலாலும் கண்ணாலும் காட்ட ஸ்ரீ நந்த கோபர் பெற்றார்

நல்வினை இல்லா நாங்கள் கோன் வாசுதேவன் பெற்றிலனே–
பாஹ்ய ஹீனையான என்னை கைப்பிடிக்கையாலே ஸ்ரீ ஸ்ரீ வஸூ தேவரும் இழந்தாரே –

—————————————————————————

களி நிலா எழில் மதி புரைமுகமும்
கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும்
தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால்
பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த
பாவியேன் எனது ஆவி நில்லாதே– 7-4-

களி நிலா எழில் மதி புரைமுகமும்
செறிந்த நிலாவை வுடைய பூர்ண சந்தரனைப் போலே இருக்கிற திரு முகமும்

கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
ஸ்ரீ கிருஷ்ணனே -சொல்லுகிற -விலஷணமான திண்ணிதாய் இருக்கிற
திருக்கையும் திரு மார்வும் திருத் தோளும்

தளி மலர் கரும் குழல் பிறை யதுவும்
தளிரையும் மலரையும் உடைத்தாய் இருண்டு இருக்கிற திருக் குழலின் கீழே
உன்நேயமான பிறை போலே விளங்குகிற திரு நெற்றியும்

தடம் கொள் தாமரை கண்களும்-
ஒரு தாமரைப் பூவே தடாகம் எல்லாம் விழுங்கும் படி அலர்ந்தாப் போலே
திரு மேனி எல்லாம் பரப்பு மாறும் படி அலர்ந்த திருக் கண்களும்

பொலிந்த இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால் பருகுவேற்க்கு –
இவ்வவயவ சோபைகளால் விளங்கா நின்றுள்ள யௌவன அவஸ்தையில் அழகை
என் கண்ணாலே அனுபவிக்கிற எனக்கு

இவள் தாய் என நினைந்த அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் –
தாய் ஒருத்தியையும் அல்லது வேறு ஒருத்தியையும் அறியாத அதி சைசவமாய் இருக்கிற
பருவத்தை அனுபவிக்கப் பெறாமையாலே
இப்போது கிட்டி அனுபவிக்கச் செய்தேயும் இழவே தலை எடுக்கும் படியான
மஹா பாபத்தைப் பண்ணினேன்

எனது ஆவி நில்லாதே–
என் பிராணன் தரிக்கிறது இல்லை –

———————————————————————–

மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர
மணி வாய் இடை முத்தம்
தருதலும் உன் தன் தாதையை போலும்
வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –7-5-

மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர
திரு நெற்றியிலே கூடப் பிறந்தால் போலே இருக்கும் திருச் சுட்டியானது அசையும் படி

மணி வாய் இடை முத்தம்-தருதலும் உன் தன் தாதையை போலும்
அழகிய வாயில் முத்தம் -அதர முத்தம் கொடுத்தாலும் உன் தமப்பனைப் போலே

வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
வடிவு அழகைக் கண்டு நெஞ்சமானது குளிர

விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
சிவந்து குவிந்து இருந்துள்ள திருப் பவளத்திலே திரு விரலைச் சேர்த்துச் சீற்றத்தோடு நின்று
சொல்லுகிற மழலைச் சொல்களும்

திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –
பால்ய அவஸ்தையிலே அனுபவங்களை அனுபவிக்க பாஹ்ய ஹீனையான நான் இழந்தேன்
இழக்கைக்கு நான் ஒருத்தி உண்டானாப் போலே
அனுபவிக்கைக்கு இட்டுப் பிறந்த ஸ்ரீ யசோதைப் பிராட்டி எல்லாம் பெற்றாள் இறே –

———————————————————————————-

தண் தாமரை கண்ணனே! கண்ணா !
தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன்
மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும்
வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்
என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6-

தண் தாமரை கண்ணனே! கண்ணா !
குளிர்ந்து அழகிதான தாமரைப் பூப் போலே அலர்ந்த திருக்கண்களை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே

தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
தவழ்ந்து எழுந்து இருந்து நடக்கப் புகுவது தள்ளம்பாறுவதான தளர் நடையாலே

மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
நிலப் பண்பாலே சிவந்த புழுதியை யாடி வந்து அக்கோலத்தோடே என் மார்விலே வந்து
கட்டிக் கொண்டு கிடக்கப் பெற்றிலேன் –

வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்
அழகியதாய் சிவந்த திரு மார்வில் அணைத்தாலும்-வாரி அமுது செய்து சேஷத்தை உண்ணப் பெறாத
மஹா பாபத்தைப் பண்ணினேன்

என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –
ராஜ மஹிஷியாய்-பிள்ளைகள் அலைந்த எச்சில் உண்ணாமைக்கோ-எங்கள் தாயார் என்னைப் பெற்றது –
அமுதிலும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் –
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்றவர் தம் சொற் கேட்டல் இன்பம் செவிக்கு –

—————————————————————–

குழகனே !என் தன் கோமள பிள்ளாய்
கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல்
ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
மழலை மென் நகை இடை இடை அருளா
வாயிலே முலை இருக்க வென் முகத்தே
எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம்
தன்னையும் இழந்தேன் இழந்தேனே– 7-7-

குழகனே !என் தன் கோமள பிள்ளாய்
லோக யாத்ரையிலே -அந்ய பரையாய்-தனக்கு முகம் கொடுத்து இருந்தால் –
லோக யாத்ரையைக் கை விட்டு உன்னையே
பார்க்க வல்லேனாம் படி கலைக்க வல்லை யாய்த்து -காணப் பெறாத சௌகுமார்யத்தை உடையவனே –

கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி
கோ ஸம்ர்த்தியை உடையவனே -என் கையிலே இருந்து –

ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
அழகு வெள்ளம் பரந்து ஒடும்படியான தளிர் போலே இருக்கிற ஒரு திருக்கையாலே
இவள் இரங்கி முலை கொடுக்கும் படி

ஒரு முலைக் கண்ணை நெருடிக் கொண்டு மழலை மென் நகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க வென் முகத்தே
வாயிலே முலை இருக்கச் செய்தே முலை சுரக்கும் படியாக தன் முகத்திலே
இடை இடையே மழலைச் சிரிப்பாக சிரியா

எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே–
அதுக்கும் இரங்காரும் இரங்கும்படி அழகிய திருக் கண்களாலே பார்க்கிற பார்வையும் –
பெற்ற வன்றே போக விட்டதுக்கு மேலே
இவ் வவஸ்தையிலே சேஷ்டிதங்களையும் அனுபவிக்கப் பெற்றிலேன் –

——————————————————–

அவதாரிகை –

எட்டாம் பாட்டு -நான் இழந்த இழவு எல்லாம் ஸ்ரீ யசோதை பிராட்டி பெற்றாள் என்கிறாள் –

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-

முழுதும் வெண்ணெய் அளைந்து –
வெண்ணெயில் உண்டான ஆதராதிசயத்தாலே திருக் கண்களை வெண்ணெய் குடத்திலே
இட்டு அளையுமாய்த்து-

தொட்டு உண்ணும்
அதி சாபலத்தாலே -மாளும் -என்று -விரலோடு வாய் தோய்ந்த -என்றும் சொல்லுமா போலே
தொட்டு உண்ணுமாய்த்து

முகிழ் இளம் சிறு தாமரை கையும்
இளம் தளிர் போலேயும் நிறத்துக்கு -விகாசம் -செவ்விக்கு தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கைகளும் –

எழில் கொள் தாம்பு
ஸ்பர்சிக்கைக்கு ஆசைப்பட்டு இருக்கும் திருமேனியை ஸ்பர்சித்தது இறே என்று –
எழில் கொள் தாம்பு -என்கிறார் –
ராஜ ஜன்மம் வேண்டா –அசேதனமாகவே அமையும் அங்குத்தை ஸ்பர்சம் பெறில்-என்று இருக்குமவர் இறே

கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் –
இவர் அங்குத்தை ஸ்பர்சத்தை நினைத்து -எழில் கொள் தாம்பு -என்கிறார் –
ஆகிலும் கைக்கு எட்டிற்று ஒன்றை இட்டு அவள் -அடிக்க அதுக்கு ஈடுபட்டு பையாந்து நிற்கும் நிலையும்

வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
தயிர் களவு கண்டாய் -என்று அடிக்கப் புக்கவாறே -இல்லை செய்கைக்காக முகத்திலே பூசிக் கொள்ளுமே –
வெளுத்த தயிரும் சிவந்த திருப் பவளமுமான பரபாகம் இருக்கிற படி –

அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
இல்லை -என்று இருக்கச் செய்தே களவை நாடுவதே நம் அழுகையும்
அழப் புக்கவாறே -வாய் வாய் -என்னும் இறே –
அத்தாலே பயப்பட்டு அச்சம் எல்லாம் தன்னோக்கிலே தோற்றும்படி பார்த்து கொடு நிற்கும் நிலையும்

அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
பின்னையும் அழாது இருக்கவும் மாட்டான் -அழவும் மாட்டான் —
அழகிய திருப் பவளத்தை நெளிக்கும் இத்தனை இறே

தொழுகையும் இவை கண்ட வசோதை
போக்கற்றார் செய்யும் செயல் இறே தொழுகையும் –
சாபராதாரானருக்கு அபராதம் பொறுக்குமது அஞ்சலி என்னும் இடம் தான் அறிந்து இருக்குமது
யாகையாலே அஞ்சலியைப் பண்ணுமதாய்த்து

இவை கண்ட யசோதை –
இவற்றை இங்கே சாஷாத் கரிக்க கண்ட ஸ்ரீ யசோதைப் பிராட்டி

தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே–
ஸ்ரீ பரம பதத்தில் நிரவதியான அனுபவத்தை சாவதி யாக்கினவாறே –
அங்கே சென்று எல்லாரும் தொழ இருக்குமவன் தான்
தொழுகையாலே அபரிச்சின்னமான அனுபவம் பரிச்சின்னமாய்த்து இறே –

———————————————————————————-

குன்றினால் குடை கவித்ததும் கோல
குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என் உள்ளம் குளிர
ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி வுண்டேனில் அருளே— 7-9–

குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததும்
இடையரும் பசுக்களும் தொலையும் படியாக இந்த்ரன் கல் வர்ஷம் வர்ஷித்த படியாலே
மலையை எடுத்து குடையாக தரித்ததும் –
தர்ச நீயமான குரவைக் கூத்திலே கோபிகாரோடு ஒக்கத் தன்னையும் கோத்ததும்

குடமாட்டும் கன்றினால் விள வெறிந்ததும்
ஒருவன் கன்றாய் ஒருவன் விளாவாய் வந்த இருவரையும் சேர முடித்ததும்

காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா
நான் ஆசைப்பட்டு பெறாத திருவடிகளைக் கொண்டு ஆசூர பிரக்ருதியான காளியன்
தலையிலே மிதித்தது முதலாக

வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்
வீரப் பாட்டுக்கும் மௌக்யத்துக்கும் சேர்ந்து இருக்கிற அதி மநோஹரமான
அனைத்திலும் அங்கு என் உள்ளம் குளிர ஒன்றும் கண்டிட பெற்றிலேன் –

அடியேன்
இவை காண்கையே பிரயோஜனமாக இருக்கிற நான்

ஒன்றும் காணப் பெற்றிலேன் – காணுமாறு இனி வுண்டேனில் அருளே—
நீ நினைத்தக்கால் செய்ய ஒண்ணாதது இல்லை -நான் இவை காணும் படி அருள வேணும் –

—————————————————————————–

வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க
நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ !
சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் !
கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து
தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன்
தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே— 7-10-

வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
இவனைக் கண்டால் செவ்வியராக இருக்க விறே கடவது –கண்டு வைத்து வஞ்சனத்திலே பொருந்தின பூதனை –

வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க
மாம்சமும் உள்ளுண்டான உதிரமும் -முலைப் பாலோடு கொழித்துக் கொண்ட புறப்பட –
சேஷித்த உடம்பு நார் நரம்பும் தோலுமாம் படி கரிந்துக்க

நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ ! சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்
கிடந்த ஆஸ்ரயத்தையும்-இழக்க வற்றாய்-மிக்க நஞ்சை உடைத்தாய் -கோபத்தையும் உடைத்தாய் இருக்கிற
முலையாலே தாரகமாக வுண்டு அருளி வளர்ந்தாய்

கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் !
கம்சனுடைய ஆயுஸை-அபஹரித்து அத்தாலே ஏறின புகரை யுடைய வடிவை யுடையையாய்
அச் செயலாலும் வடிவு அழகாலும் என்னை எழுதிக் கொண்டவனே

கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து
முலை நெரித்த போது உண்பான் ஒரு பிள்ளையைப் பெற்று வைத்து பெறாதே வ்யர்த்தமாய் இருக்கையாலே
எத்தனையேலும் தண்ணியராலும் தாழ்ந்தேன்

தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன்
வேறு தாரகர் இல்லாமையாலே பிராணன்களை வருந்தி தரித்து இருந்தேன்

தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே—
முலைப்பால் அபேஷிதமான போது உனக்கு நல்ல தாயைப் பெற்றாயே –

——————————————————————————–

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை-வான் செலுத்தி
மிக்க சம்பத்தை உடைய ஸ்ரீ மதுரைக்கு நிர்வாஹகனான கம்சனை தானே கை தொட்டு முடிக்கையாலே
வீர ஸ்வர்க்கத்திலே பொகட்டு

வந்து ஈங்கு அணை மாயத்து எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
கம்ச வதம் பண்ணி இங்கே வந்து கிட்டின ஆச்சர்ய சேஷ்டிதங்களுக்கு அவதி இன்றியிலே
இருக்கிற ஸ்ரீ கிருஷ்ணனுடைய பால சேஷ்டிதங்களை காணாமையாலே

தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
இவன் சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெறாத இழவையும் உடையாளாய்-
இவனைப் பிள்ளையாகப் பெறுகைக்கு ஈடான பாக்யத்தைப் பண்ணின ஸ்ரீ தேவகியார்
புலம்பிய பாசுரத்தை

கொல்லி காவலன்
கொல்லி என்கிற படை வீட்டுக்கு நிர்வாஹகரானவர்

மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை தமக்கு முடி மேல் மாலையாக உடைய ஸ்ரீ பெருமாள்

நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்

நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே–
இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே
உபய விபூதி நாயகனை ஸ்ரீ பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: