பெருமாள் திருமொழி -6–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பிரவேசம் –

உகந்து அருளின தேசத்தை அனுபவித்தார் கீழ் –
அவ்வனுபவம் அவதாரங்களில் அனுபவ அபேஷையைப் பிறப்பித்தது –
அதில் தோள் தீண்டியான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவித்தவர்களுடைய பாசுரத்தாலே அனுபவிக்கிறார் –

இத்தலையால் வேறு செய்வது இல்லாமையாலே கிலாய்க்கத் தொடங்கினார் –
ஸ்ரீ பகவத் விஷயத்தில் பாவ பந்தத்தில் ஊற்றம் இருந்தபடி –
ஸ்ரீ பிராட்டிமார் தசையை பிராப்தராய் கூடுவது பிரிவது ஊடுவதாம் படி யானார் –
ஸ்ரீ நம்மாழ்வாருக்கு -மின்னிடை மடவாரும் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருக்கு -காதில் கடிப்பும் போலே இருக்கிறதாய்த்து
ஸ்ரீ பெருமாளுக்கு இத் திருமொழி –

ஸ்ரீ நம்மாழ்வார் பகவத் விஷயத்தில் நின்ற ஊற்றம் எல்லாம் தோற்ற வன்மை உடைத்தாய் இருக்கும் -மின்னிடை மடவார் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -தம் மார்த்த்வம் எல்லாம் தோற்றி -மென்மையை உடைத்தாய் இருக்கும் -காதில் கடிப்பு –
இவர் தம்முடைய ராஜ குலம் எல்லாம் தோற்றி இருக்கும் இத்திருமொழி
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் தோள் தீண்டி யாகையாலே -ஒரு செவ்வாய் கிழமை முற்படப் பெற்றிலோம் –
பல்லிலே பட்டுத் தெறித்தது -என்று
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் பக்கல் உள்ள விடாய் எல்லாம்
தமக்கு ஒருவருக்கு உண்டாகையாலே
ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே பெண்கள் பேச்சாலே பேசுகிறார் –

—————–

அவதாரிகை –

ஸ்ரீ ஒரு பிராட்டி முநையில் மணலில் போய் நில்லு -நான் அங்கே வருகிறேன் என்று சொல்லி விட –
அவள் அங்கே போய் விடியும் அளவும் நின்று –
அவன் வரக் காணாமையாலே -அவனைக் கண்ட போதே ஊடிச் சொல்லுகிற வார்த்தையாய் இருக்கிறது –

ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர்
எனை பலர் உள்ள இவ் ஊரில் உன் தன்
மார்வு தழு வதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே
உன் தன் பொய்யை கேட்டு
கூர் மழை போல் பனி கூதல் எய்தி
கூசி நடுங்கி யமுனை ஆற்றில்
வார் மணல் குன்றில் புலர நின்றேன்
வாசுதேவா ! வுன் தன வரவு பார்த்தே— 6-1-

ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர்
அழகிய மலரை உடைத்தாய் -மலருக்கும் கூட நாற்றத்தைக் கொடுக்கும் மயிர் முடியை உடைய இடைப் பெண்கள்

எனை பலர் உள்ள இவ் ஊரில் –
அநேகம் பேர் திரளான இவ் ஊரில் -ஸ்ரீ திருவாய்ப்பாடியில் –

உன் தன் மார்வு தழுவதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே-
அநேகம் பெண்கள் உள்ள ஊருமாய் -நீயும் சர்வ சாதாரணனுமானால் -உன் மார்வை யாசைப் படக் கடவதன்று
என்று அறிந்து வைத்து

உன் தன் பொய்யை கேட்டு
உன் ஸ்வரூபத்தை உணர ஒட்டாது இறே-உன் வார்த்தை –
நீ யல்லது புகல் உண்டோ -உன்னை யல்லது நான் அறிவேனோ –
என்று தாழ்ச்சி தோன்ற நீ சொல்லும் வார்த்தையைக் கேட்டு –

கூர் மழை போல் பனி கூதல் எய்தி
மிக்க மழை போலே பெய்கிற பனியால் வந்த குளிரிலே யகப்பட்டு

கூசி
யார் காண்கிறார் என்று கூசி

நடுங்கி
அச்சத்தாலும் குளிராலும் நடுங்கி

யமுனை ஆற்றில்
அது தான் ஏகாந்த-ஸ்தலத்திலேயோ -சர்வ சாதாரணமான தேசத்திலே அன்றோ –

வார் மணல் குன்றில் புலர நின்றேன்
நின்றது தான் தனியே நிற்கலாம் தேசத்திலே தான் நின்றேனோ –
போகத்துக்கு ஏகாந்த ஸ்தலத்திலே யன்றோ
எல்லாரும் வந்து சஞ்சரித்துக் காணும் போது-சர்வ சாதாரணமான தேசத்திலே வந்தாள் என்று இராமே போகத்துக்கு
ஏகாந்தமான மணல் குன்றிலே விடியும் அளவும் நின்றாள் என்னும்படி தோற்ற நின்றேன்

வாசுதேவா !
நீ அங்கே நிற்கிறது என் என்னில் -உன்னை விஸ்வசித்தன்று-
உன் பிதாவை விஸ்வசித்து-ஒரு வார்த்தை அல்லது அறியாத ஸ்ரீ வாஸூதேவர் பிள்ளை
என்னுமத்தை விஸ்வசித்து நின்றேன் –

வுன் தன வரவு பார்த்தே—
உன்னுடைய அழகு காண வேணும் என்னும் நசையாலே –

——————————————————-

அவதாரிகை –

வேறு ஒரு ஸ்ரீ பிராட்டி வார்த்தை

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி
கீழை அகத்து தயிர் கடைய
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
கள்ள விழியை விழித்து புக்கு
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ
வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம்
தாமோதரா! மெய் அறிவன் நானே 6-2-

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி
முக்தமான நோக்கை உடையளாய்-சொல்லிற்று எல்லாம் மெய் என்று இருக்கும் பருவத்தை உடையாள் ஒருத்தி –

கீழை அகத்து –
பாவன பிரகர்ஷத்தாலே -ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே -ஒரு அகமும் உண்டாய் —
அதுக்கு கீழை அகமுமாய்ச் செல்லுகிறது காணும் இவர்க்கு –
நீ தான் மூலையடியே நடந்தது வேறு ஒரு இடத்தேயோ –என்னகத்துக்கு கீழை அகத்தன்றோ

தயிர் கடையக் கண்டு –
ஊர் எங்கும் அடி ஒத்தித் திரியும் இறே -தனியே நின்று தயிர் கடைவார் உண்டோ என்று –
ஒருத்தி தனியே நின்று தயிர் கடையக் கண்டவாறே அலாப்ய லாபம் பெற்றானாய்-ஓடிச் சென்று புக்கான் –

ஒல்லை நானும் கடைவன் என்று
நீ தனியே நின்று தயிர் கடையில் -ஒருக்காலும் வெண்ணெய் பட்டதாகப் படாது —
சடக்கென வெண்ணெய் படுவது நானும் ஒருதலைப் பற்றி கடையில் யாய்த்து என்று
அன்று தேவரசுரர் வாங்க -என்று பிறர் கை விட்டால் கடிவது பிறர் கார்யம் ஆகில் இறே
இங்கும் இவளும் ஒரு தலைப் பற்றில் இறே தன பிரயோஜனம் ஆவது –

கள்ள விழியை விழித்து புக்கு
இவன் கள்ள விழி –
அவள் கெண்டை ஒன கண் மடவாள்
நோக்கும் நினைவும் செயலும் -சொல்லும் ஒருபடிப் பட்டு இருக்கும் அவளுக்கு
இவனுக்கு நோக்கு ஒரு படியும் நினைவு ஒரு படியும் சொல்லு ஒரு படியும் -செயலும் வேறு ஒரு படியுமாய் இருக்கும் –
இவன் நோக்காலே எல்லாம் மெய் என்று அவள் விஸ்வசித்தாள் யாய்த்து

வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ
மேல் பண்ணின வியாபாரங்கள் ஒரு மஹா பாரதம் இறே
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ
உன் குழலை விச்வசித்த வண்டுகள் என் பட்டனவோ –

வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
ஒளியை உடைய முகம் வேர்ப்ப -அதரஸ் புரணம் பிறக்க -இவை எல்லாம் புணர்ச்சி குறி இறே –
தமிழர் சுனையாடல் என்று ஒரு கலவியைச் சொல்லுமா போலே

தண் தயிர் கடைந்திட்ட வண்ணம்
உன் நெஞ்சுக்கு பொருந்தின தயிர் கடைந்த படி –
இவள் சொன்னவாறே இங்கனே இருப்பன சில எனக்கு வேண்டா என்ன

தாமோதரா! மெய் அறிவன் நானே –
உன் உடம்பில் தழும்பை மறைக்கலாமாகில் அன்றோ உன் செயல்களை மறைக்கலாவது –

———————————————————-

அவதாரிகை –

மூன்றாம் பாட்டு -வேறு ஒரு ஸ்ரீ பிராட்டி வார்த்தை

கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை
கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால்
மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்கு பொய் குறித்து
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை
புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் ! உன் வளர்த்தி யோடே
வளர்கின்றதால் உன் தன் மாயை தானே –6-3

கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை கடை கணித்து –
நெய்தது இருண்டு பூவை உடைத்தாய் இருக்கிற மயிர் முடியை உடையாள் ஒருத்தியை -தான் அவள் மயிர் முடியில்
தோற்றமை தோற்றச் சிறாங்கணித்துப் பார்த்து –நேராக பார்த்தான் ஆகில் இறே போது நோக்கு என்று இருக்கலாவது –

ஆங்கே ஒருத்தி தன் பால் மருவி மனம் வைத்து –
இவள் பக்கலிலே கண் செல்லா நிற்க வேர் ஒருத்தி பக்கலிலே -அவளை அல்லது அறியோன் என்னும் படி மனஸை அங்கே வைத்து –

மற்று ஒருத்திக்கு உரைத்து
மனஸ் ஸூ அவள் பக்கலிலே இருக்கச் செய்தே வேறே ஒருத்திக்கு அடியேன் -என்று சொல்லி –

ஒரு பேதைக்கு பொய் குறித்து
சொன்ன வார்த்தையை விஸ்வசித்து -அகவாய் அறியாதாள் ஒரு முக்தைக்கு இன்ன இடத்திலே போய் நில்லு –
நான் அங்கே வருகிறேன் என்று இடம் குறித்து

புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி –
மயிர்முடி அலைதிகுலைதியாய் பேணாதே போக யோக்யதையாய் இருப்பாள் ஒருத்தி யோடு சம்ச்லேஷித்து

அவளுக்கும் மெய்யன் அல்லை
அதுவும் மித்யா பரி ரம்பணம் -அதாவது -பொய்யே தழுவுகை –

மருது இறுத்தாய் !
பருவம் நிரம்புவதற்கு முன்னே தீண்டினாரை கொல்லப் புக்காய்

உன் வளர்த்தி யோடே வளர்கின்றதால் உன் தன் மாயை தானே –
உன்னுடைய வஞ்சனமும் நீ பிராயம் புக அதுவும் ஒக்கப் பிராயம் புகா நின்றது இறே –

———————————————————————–

அவதாரிகை –

நாலாம் பாட்டு -உகந்து அருளின தேசத்தை அனுபவித்தார் கீழ் -அவ்வனுபவம் அவதாரங்களில் அனுபவ அபேஷையைப் பிறப்பித்தது –
அதில் தோள் தீண்டியான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவித்தவர்களுடைய பாசுரத்தாலே அனுபவிக்கிறார் –

தாய் முலை பாலில் அமுது இருக்க
தவழ்ந்து தளர் நடை இட்டு சென்று
பேய் முலை வாய் வைத்து நஞ்சை வுண்டு
பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ஆய மிகு காதலோடு யான் இருப்ப
யான் விட வந்த என் தூதி யோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்
அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே– 6-4-

தாய் முலை பாலில் அமுது இருக்க
உன்னைப் பெறுகைக்கு நோன்பு நோற்று -பத்து மாசம் சுமந்து -நீ முலை உண்ணில் தரித்தும் -முலை உண்ணா விடில் நெறித்து-
ஆற்றாளாய் இருக்கிறவளுடைய-உனக்கு தாரகமாய் இருந்த முலைப்பால் இருக்க

தவழ்ந்து தளர் நடை இட்டு சென்று
தவழ்ந்து நடக்கப் புக மாட்டாதே தள்ளம் பற்றிச் சென்று

பேய் முலை வாய் வைத்து நஞ்சை வுண்டு
உன் பக்கல் பாவ பந்தம் இல்லாத பூதனை உடைய முலையிலே வாய் வைத்து -விநாசத்தை விளைப்பதான நஞ்சை உண்டு

பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ராக த்வேஷங்களுக்கு விஷய பாகம் பண்ண மாட்டாதே அடைவு கெட நின்று நாட்டார் ஏசும் படி நின்றாய்
நான் இப்போது விழுக்காடு அறியாதே செய்தது என் என்ன

ஆய மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதி யோடே
என் தூத வாக்கியம் கொண்டு வந்தவளோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்
ஆய -ஆய பொன் -உன்னை ஆசைப் பட்டு வை வர்ண்யத்தை உடைய நான் இருக்க –
ஆய என்று கடைக் குறைச்சலாய்க் கிடக்கிறது
என்னோடு பரிமாறும் பரிமாற்றத்துக்கு அவ்வருகே என் நினைவும் கொண்டு பரிமாற நினைத்தாலும் அவளுக்கு
அந்நினைவு இல்லாமையாலே மாந்துமவன் இறே அவன்

அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே–
கோரம்பமாவது -தீம்பு -அதாவது உன் தீம்புக்கு ஏற்கும் இத்தனை இறே என்கை –

—————————————————————————-

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— 6-5-

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
மின் போலே நுண்ணிய இடையை உடையாள் ஒருத்தியை -அவ்விடை நுடங்காதபடி யணைத்துக் கொண்டு

வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
உன்னுடைய முன்னடி தோற்றாதே-போகைக்கு ஈடான மிக்க இருளும் உண்டாய்த்து இறே –
கொண்டு போகிறது தான் வேறு ஒரு தெருவே அன்றே கொண்டு போவது –
இது ஆர் தெரு என்று இருந்தாய் -இது என்ன அஞ்சாமை தான் –

பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
மறைத்துக் கொண்டு போகிறது தான் இருளுக்கு பிரகாசத்தை இட்டு அன்றோ தான்
போகிறது போகிறாய் தான் -இன்னாளைக் கொண்டு போகா நின்றோம் -இன்னாள் தெருவே போகா நின்றோம்
இன்ன காலத்திலே போகா நின்றோம் என்னும் துணுக்கும் இன்றியிலே யன்றோ போய்த்து

போகின்ற போது நான் கண்டு நின்றேன்
உன்னைப் போலே அந்ய பரை யன்றோ நான் -நீ போன விடமெங்கும் அடி ஒத்துமவள் ஆகையாலே கண்டு நின்றேன்

கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
இவளை அணைத்துக் கொண்டு போகா நிற்கச் செய்தே வேறு ஒருத்தி கண்ணுக்கு இலக்கானாள்
நீ கண்ணாலிட்டு -கண்ணாலே அனந்யார்ஹை யாம்படி நோக்கினாய் –

கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
இவளை ஒரு கையாலே அணைத்து-மற்றக் கையாலே எதிர்ப்பட்டவளை இன்னவிடத்தே வா என்று அழைத்துக் கொண்டு
போகிறபடியையும் பார்த்துக் கொண்டு நின்றேன் –

என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
அப்பாவி உன்னை -அறியாதவள் ஆகையாலே மெய் என்று இருக்கிறவள் வெறுக்கும் படி
அவளை விட்டு இங்கு என் செய்ய வந்தாய்
அங்கனே சில யுண்டோ எனக்கு -அநந்ய கதி யன்றோ என்று அவன் சொல்ல

இன்னம் அங்கே நட நம்பி ! நீயே—
குறைவாளரைப் போலே சில வார்த்தை சொல்லக் கடவீரோ -நீர் பூர்ணர் அல்லீரோ -அங்கே நடவீர் –

———————————————————————————-

மற்பொரு தோள் உடை வாசுதேவா !
வல்வினையேன் துயில் கொண்டவாறே
இற்றை இரவிடை ஏமத்து என்னை
இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய்
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்
அரிவையரோடும் அணைந்து வந்தாய்
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்?
எம்பெருமான்! நீ எழுந்து அருளே– 6-6–

மற்பொரு தோள் உடை வாசுதேவா !
உன் செயல்கள் நீ மூலையடி நடந்தாய் என்ன ஒண்ணாத படி நிவாரகர் இல்லாத பிறப்பு

வல்வினையேன் துயில் கொண்டவாறே
அப்போது உறங்காது இருக்கப் பெற்றிலேன் –உன் மிகைச் செயல்கள் எல்லாம் காணும்படி –
நித்ரையும் என்னைப் பகை மீளும்படி பாபத்தைப் பண்ணினேன் –

இற்றை இரவிடை ஏமத்து என்னை
அற்றை இரவில் நடுச் சாமத்தில் -போக யோக்யமான காலத்திலே யன்றோ என்னை விட்டுப் போய்த்து –

இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய்
போக யோக்யமான காலத்திலே -படுக்கை வாய்ப்பாலே இவள் உறங்கும் -உறங்கினவாறே போவோம் என்று -அகன்று நீ போய்

அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்
இங்கு நின்று நினைத்துப் போனாப் போலே செய்ய ஒண்ணாது இறே அங்கு -அகன்ற அன்றிரவும் பிற்றை நாளும்

அரிவையரோடும் அணைந்து வந்தாய்
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் எல்லாரோடும் சம்ச்லேஷித்து வந்தாய் –
அரிவையரோடும் அணைந்து வந்தாய்-என்றவாறே இவளை ஆற்றும் போது அணைத்து ஆற்ற வேணும் -என்று அவன் கிட்டப் புக –

எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்-
ஆரைத் தீண்டி வந்தாய் என்று தெரியாது -என்னைத் தீண்டாதே கடக்க நில்லு

எம்பெருமான்! நீ எழுந்து அருளே–
பூர்வ வாசனையாலே வந்தாய் என்ற இடம் தப்பச் சொன்னேன் -அத்தைப் பொறுத்து நீர் முதலிகள் அன்றோ -நீர் எழுந்து அருளும் –

—————————————————————————-

பைய அரவின் அணை பள்ளியினாய் !
பண்டேயோம் அல்லோம் நாம் நீ வுகக்கும்
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம்
வைகி எம் சேரி வர ஒழி நீ
செய்ய உடையும் திரு முகமும்
செங்கனி வாயும் குழலும் கண்டு
பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
புள்ளுவம் பேசாதே போகு நம்பி !—- 6-7–

பைய அரவின் அணை பள்ளியினாய் !
நீ எனக்கு நல்லை யாகிலும் -நான் உனக்கு நல்லேன் –ஆசைப்பட்டார்க்கு உடம்பு கொடுக்குமவன் –
எதிர்த்தலையினுடைய ரஷண சிந்தை பண்ணுமவன் நான் என்று அவன் சொல்ல –
பைய அரவின் அணை பள்ளியினாய் !-என்கிறாள்

பண்டேயோம் அல்லோம் நாம் நீ வுகக்கும்
அகப்படுதுகைக்கு நீ முன்பு செய்யும் செயல்கள் அறிந்தவர்கள் ஆகையால் பழையவர்கள் அல்லோம் காண் நாங்கள்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று இருக்கும் நிலை தவிர்ந்தோம் காண் நாங்கள் –
தஞ்சமாக நினைத்து இருக்கும் அதிலேயும் அதிசங்கை பண்ணும் படி அவகாஹித்தார் காணும் இவர் –
நீங்கள் பண்டையவர்கள் அன்றாகிலும் நான் தான் பழையவன் ஆகையாலே உகப்பன் உங்களை என்று அவன் சொல்ல

நீ உகக்கும் மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம்
நீ இப்போது உகக்கிறவர்களும் அல்லோம் காண் நாங்கள் -முன்னடி தோற்றாதே உன்னை மூலையடியே நடக்கப் பண்ணுகிற
அவயவ சோபை யுடையவர்கள் அல்லோம் காண் நாங்கள்
ஆனால் என்னைச் செய்யச் சொல்லுகிறது என் என்ன

வைகி எம் சேரி வர ஒழி நீ-
எங்களுடைய இருப்பிடங்கள் எங்களுக்கே ஆஜ்ஞை செல்லுவது -எங்கள் இருப்பிடத்தில் வார்த்தைகள் கேள் –
எல்லாரும் பரிமாறுகிற உங்கள் இடத்தில் நான் வாராது ஒழிகிறது என் என்ன

எம் சேரி வர ஒழி நீ
எல்லாரும் வரும் போதில் வர வேண்டாம் என்கிறோம் என்று ஆளற்ற போதாக போகா நின்றான் –
இவனுக்கு ஒரு நினைவு உண்டு என்று சங்கிக்கும் போது வர வேண்டாம் என்கிறோம் அத்தனை அல்லது
சர்வ சாதாரணமான போது வர வேண்டா என்றிலோமே என்ன –
இவர்கள் வர வேண்டா என்னாத படி ஆசிலே கை வைத்தான் –
இவர்கள் வார்த்தையிலே தான் செயல் அற்ற படியாலே இவர்கள் வாய் மாளும்படி
ப்ரஹ்மாஸ்த்ரப் பிரயோகம் பண்ணப் பார்த்தான்

செய்ய உடையும் திரு முகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு-
திருப் பரியட்டத்தைப் பேணுவது -இவர்கள் முகங்களிலே முகத்தைக் காட்டுவது -ஸ்மிதம் பண்ணுவது –
திருக் குழலிலே பேணுவது ஆனான் –
இப்படி செய்தவாறே இறாய்த்தாள் -அதாவது கண்ணைச் செம்பளித்தாள் –
கண் படைத்த லாபம் காணாதே கண்ணைச் செம்பளிக்கிறது என் என்று சொல்லக் கண்டு

பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
உன்னுடைய செயல்கள் எல்லாம் மெய்யென்று ஒரு நாள் பட்டதே யமையும் காண் என்கிறாள்
அடியேன் குடியேன் -என்று தாழ வார்த்தைகளைச் சொல்ல

புள்ளுவம் பேசாதே போகு நம்பி !—-
தாழ்ச்சிக்கு முன்னே காண் ஸ்ரவணமும் -அதுவும் எல்லாம் பண்டே செய்தற்றதே காண் –
இனி நீ சொல்லுகிறவற்றுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை
புள்ளுவமாவது-
வஞ்சனம் -வஞ்சனங்கள் எல்லாம் அறிந்த எங்கள் பக்கல் பிரயோகியாதே போ
என்னை போ என்கிறது என் உங்களை ஒழியப் புகலிடம் உண்டோ என்ன
நம்பீ
பூரணராய் இருக்கிற நீர் குறைவாளரைப் போலே சொல்லக் கடவீரோ
சொலவுக்கும் செயலுக்கும் அடியில்லை என்னும் படி நிரபேஷர் என்று அறிந்த பின்பு
சில சாபேஷரைப் போலே சொல்லக் கடவீரோ நடவீர் –

——————————————–

என்னை வருக என குறித்திட்டு
இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளை புணர புக்கு
மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி
பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல்
என் சினம் தீர்வன் நானே– 6-8-

என்னை வருக என குறித்திட்டு
பிரணயித்வத்தாலே ஒருத்தியை அனந்யார்ஹை ஆக்கினாய் –
அவளை இன்ன இடத்தில் வா வென்று இடம் குறித்து விட்டாய்

இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
பரப்பு மாறப் பூத்த முல்லைப் பந்தலின் கீழே

மன்னி அவளை புணர புக்கு
எக்காலத்தில் இடம் குறித்து விட்டான் என்று தெரியாது –
அவள் அங்கே குடில் கட்டி காத்துக் கிடக்கிறது -அவளோடு சம்ச்லேஷிக்கப் புக்கு

மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
ஒரு மஹா பாரதத்தை பாரித்துக் கொண்டு புக்கு இவளைக் கண்டவாறே கலங்கி எழுந்து இருந்தான் –

பொன் நிற ஆடையை கையில் தாங்கி
திருப் பரியட்டத்தை கையிலே தாங்கி

பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இவளைக் கை கழியப் போய் மெய்யச்சம் செய்ததை பொய்யாக்கிச் செய்தான் போய் நின்று
மெய்யே அஞ்சினானாகில் களவும் மெய்யாம் இறே
களவு பொய்யாகைக்காக பொய்யே அஞ்சினானாகப் பாவித்தான் போதியேலும்
அப்போதைக்கு இவளைத் தப்பப் போமது இறே உத்தேச்யம் -அப்படியே கை கழல போனான்

இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல்
நீ நியத ஸ்வ பாவன் அல்லாமையாலே என் கையிலேயும் ஒரு நாள் வந்து அகப்படக் கூடும் இறே –
அகப்பட்டாயாகில்

என் சினம் தீர்வன் நானே–
ஸ்ரீ உஞ்சப் பிள்ளை பாடா நிற்க ஸ்ரீ எம்பார் பார்த்து எழுந்து அருளி இருக்க இவ்விடத்துக்கு
அபி நயிக்கிறார்-காலாலே பாய்ந்து தள்ளுவதாகக் காட்ட -அது கைக் கொண்டு அருளி –
கெடுவாய் அங்கனே செய்தாள் ஆகில் அவனுக்குப் பொல்லாதோ –
அவனுக்கு அது அன்றோ தேட்டம் -அங்கன் அன்று காணும் -என்று
கையை இட்டு முகத்தை மறைத்து திரிய வைத்து அருளக் காட்டினார் –

—————————————————————

அவதாரிகை –

ஒன்பதாம் பாட்டு -தோல்வி தோற்றச் சொல்லுகிறார்கள் –

மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழை பீலி சூடி
பொங்கிள வாடை அரையில் சாத்தி
பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு
குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத
உன் குழலின் இன் இசை போதராதே– 6-9-

மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க
மங்களம் என்று சொல்லப் பட்டவை எல்லாம் உடைத்தாய் -தர்ச நீயமுமாய் இருக்கிற வனமாலை
மை போல் நெடு வரைவாய் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னுமா போலே திருமார்விலே விளங்க

மயில் தழை பீலி சூடி
தழைத்த பீலியை திரு முடியிலே சுற்றி

பொங்கிள வாடை அரையில் சாத்தி
மிகவும் மெல்லிய ஆடையைத் திரு வரையிலே சாத்தி

பூம் கொத்து காதில் புணர பெய்து கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து –
பூம் கொத்தை காதிலே மிகவும் பொருந்த விட்டுத் தேனையும் நறு நாற்றத்தையும் உடைய குழலை
உடையவர்களோடு குழைந்து-கலந்து

குழல் இனிது ஊதி வந்தாய்
நெகிழ்ந்தவர்களோடே ஒரு நீராகக் கலந்து -அக்கலவியால் பிறந்த ஹர்ஷம் எல்லாம் தோற்றும்படியாக
இனிதாக குழலூதி வந்தாய்

எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழலின் இன் இசை போதராதே–
நீ சர்வ சாதாரணனான பின்பு உன் குழலும் சர்வ சாதாரணமாய் இருக்க ஒரோ இடங்களிலேயாய்
நாங்கள் கேட்க யூத வேணும் என்றால்
நீ யூதிலும் இசை புறப்படாத படியாய்த்து இறே உன் குழலின் ஸ்வபாவம்
குழலோசை என்றும் சம்ச்லேஷம் என்றும் பர்யாயம் இறே –
எங்களோடு சம்ச்லேஷம் உனக்குப் பொருந்தாது என்கிறார்கள் –

—————————————————————————-

அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை
நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்தூடி
எள்கி வுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான்
குலசேகரன் இன் இசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே– 6-10-

நிகமத்தில்
அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
பரம பிரணயியான ஸ்ரீ கிருஷ்ணனை யாசைப் பட்டு அவனைப் போலே எறிமறிந்த பருவம் அன்றியே
பாடாற்ற மாட்டாத இளவாய்ச்சிமார்கள்

எல்லி பொழுதினில் ஏமத்தூடி-எள்கி வுரைத்த வுரையதனை
விலக்குவார் இல்லாத மத்திய ராத்ரியிலே ஊடி அத்தாலே ஈடுபட்டு -அவ்வீடுபாடு தான் சொல்லாய் வழிந்து
புறப்பட்டது என்னலாம் படியான பாசுரத்தை

கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான்-குலசேகரன்
கொல்லி -என்று சோழன் படை வீடு
கூடல் என்று பாண்டியன் படை வீடு
கோழிக் கோன் என்று முன்பே சொல்லி வைத்தார்
மூன்று ராஜ்யத்துக்கும் கடவரான ஸ்ரீ குலசேகர பெருமாள்
ஸ்ரீ கோபிமார் தங்கள் ஸ்த்ரீத்வ அபிமானம் எல்லாம் அறுத்து சொன்னாப் போலே
இவரும் தம் பெரிய அபிமானம் எல்லாம் அறுத்த படி

இன் இசையில் மேவி-சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
பாட்யே கே யே ச மதுரம் –என்னும்படியான தமித் தொடை பத்தும்

சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே–
இவருடைய பாவ பந்தம் இல்லை யாகிலும் இவை கற்றவர்களுக்கு பகவத் அனுபவத்துக்கு விச்சேத
சங்கை பிறவாதே நிரந்தர அனுபவமாகச் செல்லப் பெறுவார்கள்
சம்போக மத்யே பிறக்குமது இறே ஊடல் ஆவது
உன் தலை பத்து என் தலை பத்து என்று முடிய உடலாய்ச் செல்லும் அனுபவத்தை பெறுவார்கள் –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: