பெருமாள் திருமொழி -5–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

திரு மந்தரத்தால் சொல்லிற்று யாய்த்து அனந்யார்ஹ சேஷத்வம் இறே –
இந்த அனந்யார்ஹ சேஷத்வ பிரதிபத்திக்கு விரோதி தான்
நான் என்னது -என்று இருக்கும் அஹங்கார மமகாரம் இறே –
அநாத்மன்யாத்ம புத்தியும் அச்வேஸ்வத்ய புத்தியும் இறே
சம்சாரம் ஆகிற வர்ஷத்துக்கு பீஜம் என்று பிரமாணங்கள் சொல்லுகிறது -அது சேதனர்க்குப் பொதுவானது இறே
அப்படி இன்றிக்கே ராஜாக்கள் ஆகையாலே அஹங்கார மமகார வச்யராய் இறே இருப்பது
நிலா தென்றல் சந்தனம் என்று சொல்லுகிற இவை பதார்த்தம் ஆகாத போது ஸ்வரூப சித்தி இல்லையாம் இறே
அப்படியே இறே பரார்த்தமான வஸ்துவுக்கும் அஹங்கார மாமாகாரத்தாலே ஸ்வரூப சித்தி அழியும் இறே

இப்படி பரார்த்தம் என்னும் படிக்கு பிரமாணம் உண்டோ என்னில்
இவனை -யஸயாஸ்மி -என்றும் ஓதி -பதிம் விஸ்வஸ்ய -என்றும் அவனை ஒதுகையாலே
இவன் ஒன்றுக்கும் கடவன் அல்லன் -உடையவனானவன் எல்லா வற்றுக்கும் கடவன் என்றது இறே
அப்படி பிரமாணங்களால் சொன்ன சேஷத்வ பிரதிபத்தியாவது -ததீய சேஷத்வ பர்யந்தமான அனந்யார்ஹ சேஷத்வம் இறே –

அப்படி தமக்குப் பிறந்து இருக்கச் செய்தே அது பல பிரதமாகக் கண்டிலர்
தான் தன் கருமம் செய்கிறான் என்றாதல் –
நாம் க்ரமத்தால் செய்கிறோம் என்று ஆறி இருந்தானாதல் –
நம்முடைய த்வரைக்கு அடியான ருசியும் அறியுமவன் ஆகையால் ருசி பாகமானால் செய்கிறோம்
என்று ஆறி இருந்தானாம் அத்தனை –

நம்மைப் போல் அன்றியே செய்தது அறிந்து இருக்கும் சர்வஜ்ஞனாகையும் –
நினைத்தது தலைக் கட்ட வல்ல சர்வ சக்தனாய் இருந்து வைத்து ஆறி இருக்கும் போது
சில ஹேதுக்கள் உண்டாக வேணும் இறே என்று பார்த்து
எனக்கு நானும் இல்லை –
பிறரும் இல்லை –
பேற்றில் த்வரையால் துடிக்கிறேன் அத்தனை அல்லது சாதன அனுஷ்டான ஷமனும் அல்லேன்-என்னும் இடத்தை
அநந்ய கதிகளாய் இருக்கும் பதார்த்தங்களை நிதர்சனமாக இட்டு தம்முடைய அநந்ய கதித்வத்தை
ஸ்ரீ திரு வித்துவக்கோட்டு நாயனார் திருவடிகளிலே விண்ணப்பம் செய்கிறார்-

—————

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
நீயே தருகிற துக்கத்தை நீயே மாற்றாயாகில்-
தன்னாலே தனக்கு விரோதி வந்தது என்றும்
தானே சாதன -அனுஷ்டானத்தாலே அது போக்கிக் கொள்வான் என்றும் சாஸ்திரங்கள் சொல்லிக் கிடக்கச் செய்தே
இவர் அவனே துயர் தந்தான் என்பான் என் என்னில்
பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆகையாலே சொல்லுகிறார் –
தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் பண்ணித் தவிர்த்துக் கொள்ளுகிறான் என்று
நம்மைப் பழியிட்டு தள்ள நினைத்தான் ஆகிலும்
நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் –
நான் செய்த கர்மமும் பரதந்த்ரம் –
நான் பண்ணும் சாதன அனுஷ்டானத்துக்கு பலபிரதன் ஆகையாலே
அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் ஆகையாலே -தரு துயரம் -என்கிறார் –

ஸ்ரீ முதலிகள் எல்லாரும் கூட ஸ்ரீ பெரிய திரு மண்டபத்துக்கு கீழாக இருந்து ரகஸ்யார்த்தங்கள்
விசாரித்து எழுந்து இருப்பார்களாய்த்து-
ஒரு நாள் நித்ய சம்சாரியாய்ப் போந்தவனுக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என்
என்று விசாரிக்கச் செய்தே –
யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் என்னப் பிறந்தது –
அவ்வளவிலே ஸ்ரீ கிடாம்பி பெருமாள் இருந்தவன் நமக்கு ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் போலே
ஸ்ரீ ஸூக்ருத தேவர் என்று ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயன் என்றான் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிற நீர் தாம் நினைத்து எத்தைக் காண் என்றார் —
அதாவது ஒன்றை ஆராயப் புக்கால் அதுக்கு அவ்வருகு வேறு ஓன்று இன்றி இருப்பது இறே -அடியாவது –
யாதொன்று பல பிரதமானது இறே உபாயமாவது -அல்லது நடுவே அநேக அவஸ்தை பிறந்தால்
அவற்றின் அளவில் பர்யவசியாது இறே
இளைப்பாறுவது இதிலே சென்று இறே -நடுவு இளைப்பாறாது இறே -தரு துயரம் -என்னலாம் -இறே –

தடாயேல் –
நீ விளைத்த துக்கம் நீயே போக்காயாகில் –
மம மாயா துரத்யயா -என்றும் –
மா மேவயே ப்ரபத்யந்தே மாயா மேதான் தரந்திதே -என்றும் –
நம்முடைய மாயை ஒருவரால் கடக்க ஒண்ணாது காண் என்றும் –
இது கடக்க வேண்டி இருப்பவன் நம்மைப் பற்றி கழித்துக் கொள்வான் என்றும்
நீயே சொல்லி வைக்கையாலே நீயே துயர் தந்தாய் என்னும் படி தோற்றப் படுகிறது இறே –
துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இறே இருப்பது –
பண்ணினவன் தானே போக்கும் இத்தனை இறே

ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் -ஒரு -குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை
ஒரு சர்வ சக்தி பிணைத்த பிணையை எலி எலும்பனான இவன் அவிழ்க்க என்று ஒரு கார்யம் இல்லை இறே –
அவன் தன்னையே கால் கட்டி போக்கும் அத்தனை இறே -என்றார்

உன் சரண் அல்லால் சரண் இல்லை –
இவ்வளவாக விளைத்துக் கொண்ட நான் எனக்கு இல்லை
பிறர் ரஷகர் உண்டாகிலும் நான் அவர்களை ரஷகராக கொள்ள மாட்டாமையாலே அவர்களும் இல்லை –
நான் பண்ணும் சாதன அனுஷ்டானமும் எனக்கு கழுத்துக் கட்டி யாகையாலே
தேவரீர் திருவடிகள் அல்லது வேறு ஒரு உபாயம் இல்லை

விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே-
பரிமள பிரசுரமான சோலையை உடைத்தான ஸ்ரீ திரு வித்துவக் கோட்டிலே எழுந்து அருளி
இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனே –
விரை குழுவும் மலர் பொழில் சூழ்-
சர்வ கந்த -என்கிற பிராப்ய வஸ்து வந்து கிட்டின இடம் என்று தோற்றி இருக்குமாய்த்து –
வித்துவ கோட்டு அம்மானே–
உபாயமாம் போது ஸூலபமாக வேணும் இறே –
அம்மானே –
பிரஜை உறங்குகிற தொட்டில் கீழே கிடக்கும் தாயைப் போலே இங்கே வந்து கிட்டினவனே-
தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே தம்முடைய ரஷணத்துக்கு தமக்கு ஆனவையும் சொன்னார் –
சேஷியாகையாலே தம்முடைய ரஷணத்துக்கு ப்ராப்தன் -அவன் என்கிறார் -இப்போது –
ஒருவன் பேற்றுக்கு ஒருவன் சாதனமாம் போது இத்தனை பிராப்தி உண்டானால் அல்லது ஆகாது இறே
பிரஜை உடைய நோய்க்கு தாய் இறே குடி நீர் குடிப்பாள்
மேல் தாயை நிதர்சனமாகச் சொல்லப் புகுகிறவர் ஆகையால் இப்போது
அம்மான் என்று பிராப்தி தோன்றச் சொல்லுகிறார் –

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அவனே ரஷகன் என்னும் அத்யவசாயம் உண்டானாலும் -பேறு தாழ்த்தால் அவனை
வெறுக்க வேண்டும் பிராப்தி உண்டு இறே சேதனன் ஆகையாலே –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று அசித் சாமானமாக பாரதந்த்ர்யத்தைச் சொல்லி வைத்து
எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –என்கிறது புருஷார்த்த சித்தி சேதனனுக்கு ஆக வேண்டி இறே –
அவனைக் குறித்து சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பாரதந்த்ர்யம் அவிசிஷ்டமாய் இருக்கச் செய்தே
புருஷார்த்த சித்தி இவனுக்கு உண்டாகிறது சேதனன் ஆகையால் இறே

அரி சினத்தால் –
அரிந்து போக வேண்டும் சினத்தை யுடையாளாய்க் கொண்டு
ஈன்ற தாய் –
வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று
அகற்றிடினும் –
அகற்றிடினும் என்கையாலே அகற்றுகை அசம்பாவிதம் -என்கிறது
ஈன்ற தாய் -என்கையாலே
பெறுகைக்கு நோன்பு நோற்கையும்-பத்து மாசம் சுமக்கையும் -பிரவச வேதனை படுகையும்
என்கிற இவை எல்லாம் உடையவள் -என்கை-
அகற்றிடினும் –
இப்படி பெறுவதுக்கு முன்புள்ள வெல்லாம் துக்கமும் பட்டவள் ஆகையாலே
வருகிறதை நினைக்குமது ஒழிய அகற்ற நினையாள் இறே
அவள் தான் அகல விடினும் –
இத்தால் சொல்லிற்று யாய்த்து -நிருபாதிக தேவரீர் கை விடிலும் வேறு எனக்கு புகழ் இல்லை என்கிறார் –

மற்று அவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி –
இவள் கோபித்து விட்டாலும் வேறு ஒருவருடைய அருளை அபேஷியாது இறே பிரஜை –
அதுக்கு அடியான பிரேமத்துக்கு அவதி உண்டாகில் இறே கோபத்துக்கு அவதி உள்ளது –
ஸ்நேஹம் இல்லாமையாலே கோபமும் இல்லை இறே பிறருக்கு –

ஸ்ரீ நம்பி திரு வழுதி வள நாடு தாசரை ஸ்ரீ முதலியாண்டான் கோபித்து கையாலும் காலாலும் துகைத்து
இழுத்தவாறே திண்ணையிலே பட்டினியே ஒரு நாள் போகாதே கிடந்தார் –
ஸ்ரீ ஆண்டான் மற்றை நாள் அமுது செய்யப் புகுகிறார் -அவன் செய்தது என் என்று கேட்ட வாறே
பட்டினியே வாசலிலே கிடந்தான் என்று கேட்டு அழைத்து -நீ போகாதே கிடந்தது என் -என்ன –
ஒரு நாள் ஒரு பிடி சோறிட்டவன் எல்லா படியாலும் நிந்தித்தாலும் வாசல் விட்டுப் போகிறது இல்லை –
ஸ்ரீ நாத நான் எங்கே போவது -என்றார்

அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –
வேறு சிலரால் ஆற்ற ஒண்ணாது இறே
முன்னாள் முலை கொடுத்த உபகாரத்தை நினைத்து இருக்குமதாகையாலே -அவள் தானே ஆற்ற வேணுமே
ஸிஸூஸ்தநந்தய -என்றும் –
அளவில் பிள்ளைமை -என்றும் சொல்லுகிறபடியே
அதாவது -ரக்த ஸ்பர்சம் உடையார் எல்லாரையும் அறியாதே மாதா ஒருத்தியையுமே அறியும் அளவே யாய்த்து அதி பால்யம்
அப்படியே ஸ்ரீ எம்பெருமானைக் குறித்து இவ்வாத்ம வஸ்து நித்ய ஸ்தநந்த்யமாய்த்து இருப்பது
ஆகையால் இறே இவன் பேற்றுக்கு அவன் உபாயம் ஆகிறது –

————————————————————————–

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே-
அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான
அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்
காதலன் –
பிரேமத்தையிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்

கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல-
இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே
நினைத்து இருக்குமவளைப் போலே
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல-
அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே
கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று
குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று

விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா!
ஸ்ரீ பிராட்டி ஸ்வயம்வரத்துக்கு ஸ்ரீ மிதுலையிலே புறச் சோலையிலே விட்டிருந்தால் போலே இவரை
ஸ்வயம் வரிக்கைக்காக விறே ஸ்ரீ திரு வித்துவக் கோட்டிலே நிற்கிறது –

நீ கொண்டு ஆளாய் ஆகிலும் –
இவ்வளவாக உபகாரகனான நீ குறையும் தலைக் கட்டாதே உபேஷித்தாலும் –

உன் குரை கழலே கூறுவனே-
உன் திருவடிகள் அல்லது எனக்கு வேறு புகல் இல்லை –
உபகாரகனான நீ உபேஷித்தாய் என்று கை வாங்குபவன் அன்று நான் –
எனதாவியார் யானார் -என்று நீ பண்ணின உபகாரத்துக்கு தலை சீய்க்குமவன் நான் -என்கிறார் –

——————————————————————-

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே— 5-3-

மீன் நோக்கும் நீள் வயல் சூழ்
மத்ஸ்யம் என்று பேர் பெற்றவை யடையக் கடாஷிக்கும் தேசமாய்த்து —
கடலில் மத்ஸ்யம் -கடல் வற்றினால் நமக்குப் புகலிடம் -என்று நினைத்திருக்கும் தேசமாய்த்து –

வித்துவ கோட்டு அம்மா ! –
பரமபதத்தில் உள்ளாறும் சீல குணம் அனுபவிக்கும் தேசமாய்த்து –
தரமி பிரயுக்தம் என்று பிரமாணத்தாலே நாம் கேட்டு அறியுமா போலே
சீலாதிகள் தரமி பிரயுக்தம் என்று இருக்கும் அத்தனை இறே பரம பதத்தில்–
கண்டு அனுபவிக்கலாவது இங்கே இறே –

வித்துவ கோட்டு அம்மா ! -என் பால் நோக்காய் ஆகிலும்
பரமபதம் ஆகிற ஒரு நாடாக நீ நோக்குகிற நோக்கை -என்னை ஒருவனையுமே நோக்கி வந்து
இப்போது என்னை கடாஷியாது இருந்தாயே யாகிலும்

உன் பற்று அல்லால் பற்றி இலேன்
என்னுடைய ரஷையில் உத்யுக்தனான உன்னை விட்டு பாதகராக சம்ப்ரதிபன்னரானவரை பற்றுவேனோ
நித்ய சம்சாரியாக இவ்வளவாக சூழ்த்துக் கொண்ட என்னைப் பற்றவோ-
என்னுடைய ரஷணத்தில் என்னோபாதியும் பிராப்தி இல்லாத பிறரைப் பற்றவோ

தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
பிரஜைகளுடைய ரஷணத்திலே தீஷித்து தனிமாலை இட்டு இருக்கிற ராஜாவானவன் ரஷணத்தில் நெகிழ நிற்கும்
அளவன்றிக்கே -எல்லா துக்கங்களையும் விளைக்கிலும்

தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே—
ரஷகனாய் இருந்து வைத்து பாதகன் ஆனாலும் அவனுடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் பண்ணும் குடி போலே இருந்தேன்-
சிறியத்தை பெரியது தின்னாமல் காக்கத் தான் மாட்டான் —
செங்கற்சீரை கட்டி ரஷிப்பித்துக் கொள்ளும் முறை அவனுக்கு உண்டு
என் ரஷணத்தில் எனக்கு அந்வயம் அல்லாதாப் போலே சம்பந்தம் உடைய நீயே ரஷிக்கும் அத்தனை –
நான் செய்யலாவதும் இல்லை -நீ மாட்டாததும் இல்லை –

—————————————————————————————

அவதாரிகை —

ஒருவனாலே ஹிதம் என்றும் -பலத்திலே அந்வயம் ஒருத்தனுக்கே -என்றும் -அத்யவசித்தால்
ஹிதங்களையே பிரவர்த்தியா நின்றான் என்று தோற்றினாலும்-அவனே ரஷகன் என்று கிடக்க இறே கடவது –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரை -பிள்ளைகள் புகை சூழ்ந்த படி -சஹிக்கப் போகிறது இல்லை -என்ன –
சற்றுப் போதன்றோ வ்யசனப் படுவது –
ஸ்ரீ வைகுண்ட நாதன் திருவடிகளிலே ஸூகமாய் இருக்க வன்றோ புகுகிறது -என்றார் இறே
தான் தஞ்சமாகப் பற்றின விஷயத்துக்கு அந்யதா சித்தி பிறந்ததோ வென்று மீளும்படி இருக்கிற தசையிலே
ஹேத்வந்த்ரமது -அவ்வருகில் பேற்றில் குறையில்லை என்னும் அத்யவசாயம் இருந்த படி இறே
இதிலே மஹா விஸ்வாசம் ஆகிறது -தோற்றுகிற ஆபாத பிரதிபத்தியைக் கண்டு மீளாதே இருக்குமது இறே

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே— 5-4-

வாளால் அறுத்து சுடினும் –
ஹிம்சகர் சாதனத்தைக் கொண்டு அறுப்பது -சுடுவதானாலும்

மருத்துவன் பல் மாளாத காதல் நோயாளன் போல் –
அஹிதங்களை மேல்மேல் என பிரவர்த்திப்பிக்க செய்தேயும் பிஷக்கு –அவன் நமக்கு ஹித காமன் -என்று அவனுக்கு
தனது சர்வஸ்தையும் கொடுத்து அவன் பக்கலிலே ஸ்நேஹத்தைப் பண்ணும் வ்யாதியாளரைப் போலே

மாயத்தால் மீளா துயர் தரினும் –
மம மாயா -என்னும்படி உன்னுடையதான பிரகிருதி சம்பந்தத்தாலே அபுநராவர்த்தி லஷணமே துக்கத்தை விளைக்கிலும்

வித்துவ கோட்டு அம்மா ! நீ-மீளா துயர் தரினும் –
எனக்கு த்யாஜ்யமான சம்சாரத்திலே என்னுடைய ரஷணத்துக்காக குடி ஏறி இருக்கிற நீ நித்ய துக்கத்தை விளைக்கிலும் –
பெற்ற தாய் பிரஜைக்கு அஹிதம் செய்யில் இறே நீ செய்வது -அப்படி இருக்கிற நீ செய்யிலும் –

ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே—
ஆளா -ஸ்வரூப அனுரூபமான வர்த்தியைப் பெறுகைக்காக
வுனதருளே பார்ப்பன் –
இப்போது தோற்றுகிற வ்யசனங்களை புத்தி பண்ணாதே உன் க்ருபையையே புத்தி பண்ணி இருப்பன் –
இப்படி இருக்கைக்கு நிபந்தனம் என் என்னில்
அடியேனே—
அடியேன் ஆகையாலே -என் ஸ்வரூபத்தையும் உன் ஸ்வரூபத்தையும் நேராக அறிந்தவன் ஆகையாலே –
அன்று கண்டாப் போலே கையும் வில்லுமாக நிற்பன் –
அவனுக்கு-ராவணனுக்கு- அச்சத்தாலே தனக்கு உருவு வெளிப்பாட்டாலே முன்னே நிற்பர்
தீரக் கழிய அபராதம் செய்த எனக்கு அவர் க்ருபை பண்ணுவாரோ என்று அவனுக்கு நினைவாகக் கொண்டு
புருஷர் ஷப–நீ அநு கூலனாய் ஓரடி வர நின்றால்-அத்தையே நினைத்து நீ பண்ணின அபகாரம் எல்லாம் புத்தி பண்ணுவாரோ
அவர் ஸ்ரீ புருஷோத்தமன் காண் –முன்பூழி காணான்-குற்றத்தை மறக்கும் -அன்றியே -குற்றம் செய்த நாளை நினைக்கில் குற்றம்
என்று ஸ்ரீ பிராட்டி ராவணனுக்கு அருளிச் செய்த படியே இனி நீர் அல்லது புகல் இல்லை என்கிறார் —

————————————————————-

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5-

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
வெவ்விய கண்ணையும் திண்ணிய நெஞ்சையும் உடைத்தான குவலயா பீடத்தை கொன்றவனே
பிரபல பிரதிபந்தகங்கள் உண்டு என்று இருக்க வேணுமோ தேவரீர் உள்ளீராய் இருக்க –

வித்துவ கோட்டு அம்மானே !–
அது தீர்த்தம் பிரசாதித்தது இறே என்று பிற்பாடற்கு இழக்க வேண்டாத படி திரு வித்துவக் கோட்டிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே
பரமபதம் கலவிருக்கையாக ஸ்வாம்யத்வத்தை நிர்வஹிக்கைக்காக வன்றோ இங்கே வந்து எழுந்து அருளி இருக்கிறது

வித்துவ கோட்டு அம்மானே ! எங்கு போய் வுய்கேன் ?-
பிராப்தனுமாய் பசியனுமானவன் வாசலிலே வந்து சோறு சோறு என்னா நிற்க அந்யராய்-நிரபேஷர் ஆனவர்களை உண்ண
அழைப்பாரைப் போலே உன்னை விட்டு பரம பதத்திலே இருக்கிற அவாப்த சமஸ்த காமனைப் பற்றவோ –

எங்கு போய் வுய்கேன் –
உஜ்ஜீவன ஹேதுவாக போமிடம் இல்லை -விநாச ஹேதுவாக போமில் போம் இத்தனை இறே –
உகந்து அருளின தேசங்களை விட்டு தேவதாந்தரங்களைப் பற்றுகை யாவது -விநாச பர்யாயம் இறே

உன் இணை அடியே அடையல் அல்லால்
அத்யவாச்யமாவது -புத்த்யர்த்தம் இறே –
அவன் தானே வந்து கிட்டச் செய்தே இழக்கிறார்
இழக்கிறதும் பெறுகிறார் பெறுகிறதும்-அப்ரதிபத்தியாலும் விப்ரதிபத்தியாலும் இறே

எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
பெரிய ஷோபத்தை உடைய கடலிலே ஒரு மரக்கலமாவது
அதின் கொம்பிலே இருந்ததொரு பஷி நாலு திக்கிலும் போக்கிடம் தேடித் பறந்தாலும் கரை காண ஒண்ணாது இறே
மீண்டு வந்து கால் பாவலாவது இம்மரக் கலத்திலே இறே
அப்படியே சம்சார சாகரத்தைக் கடக்கும் போது உகந்து அருளின தேசமான திரு வித்துவக் கோட்டை பற்றி அல்லது கடக்கலாம்
அத்தனை அல்லது வேறு உபாயம் இல்லை இறே
கடக்கைக்கு உகந்து அருளின தேசத்தை ஒழிந்தது எல்லாம் அக்கடல் போலே இறே

வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே—
தானே ஏறிட்டுக் கொண்ட அகலம் எல்லாம் நீரிலே ஆழுகைக்கு உடலாம் அத்தனை இறே –
அவன் கை நெகிழ்ந்தான் என்று தோற்ற அடி மட்டையை உரக்கப் பற்றும் அத்தனை இறே –

——————————————————————————

செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா ! உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே—5-6-

செந் தழலே வந்து அழலை செய்திடினும் –
தாஹகமான அக்னி கிட்டி உஷ்ணத்தைப் பண்ணினாலும்

செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் -அலராவால்
தாமரையானது ஆதித்யன் தூரஸ்தன் ஆனானே யாகிலும் அவனுடைய கிரணத்துக்கு அலரும் அத்தனை யல்லது
அக்னி கிட்டிட்டு என்று அதினுடைய உஷ்ணுத்துக்கு அலராது

வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா !
அனுபவ விநாச்யமான பாபங்களைப் போக்கி -அதுக்கு விகாசத்தை விளைப்பிக்க வந்திருக்கிற நீ உபேஷித்தாயே யாகிலும்

உன் அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே
கல்யாண உக்தமான உன் குணங்களுக்கு அல்லது என் நெஞ்சு நெகிழாது –

————————————————————————

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —5-7-

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
கார் காலத்திலே வர்ஷியாதே மேகங்கள் மறுத்த காலத்திலும் -பைம் கூழ்கள்-உண்டு -பயிர்கள் –

மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
ஆகாசத்திலே கறுத்த மேகங்களைப் பார்த்து இருக்கும் அத்தனை அல்லது நீர் நிலம் தேடித் போக வறியாதாப் போலே

மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா!
அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபத்தைப் போக்கி சம்சார சம்பந்தம் அறுத்துக் கொடுக்க வந்து
இருக்கிற நீ அது செய்திலை யாகிலும்

என் சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —
என் ரஷணத்திலே நெகிழ்ந்தாய் என்று தோற்ற ஒருகாலுக்கு ஒருக்கால் உன் பக்கலிலே நெஞ்சு பிரவணமாகா நின்றது –

——————————————————————-

தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா ! உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே ! —5-8-

தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி –
ஜல ராசி எல்லாம் திரண்டு ஒளியை உடைத்தாய் -பார்த்த இடம் எங்கும் பரந்தோடி

தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்-
ஆழ்ந்த கடலிலே சென்று புக்கு அல்லது புறம்பு நிற்க மாட்டாத ஆறுகள் போலே -சமுத்திர இவ சிந்துபி என்னுமா போலே
இவை புக்கால் கடல் நிறையும் இல்லையாகில் குறைப்படுகிறதும் அன்று இறே-
இவற்றுக்கு புறம்பு தரிப்பது அரிதாய் இறே புகுகிறன

மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா !
மிக்க உஜ்ஜ்வலமான காள மேகம் போலே இருக்கிற நிறத்தை உடையவனே –

வித்துவ கோட்டு அம்மா !
அம்மேகம் படிந்த மலை

உன் புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே ! –
உள் புக உள் புக உஜ்ஜ்வலமான கல்யாண குணங்களிலே யல்லது உள் புக உள் புக
ம்ஸ்ர்ணமாய் இருக்கும் குணங்களிலே அவகாஹித்திலேன் காண்
இதுக்கு நிபந்தனம் என் என்னில்
புண்ணியனே -பிரதம ஸூஹ்ருதம் நீ யாகையாலே –

———————————————————————–

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா !
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–5-9-

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் –
உன்னையே வேண்டி -நிரவதிக சம்பத்தை காற்கடைக் கொண்டவன் தன்னையே
அவசர பிரதீஷமாய் பார்த்து நிற்கும் ஐஸ்வர்யம் போலே என்னுதல் -மோஷ லஷ்மியைப் போலே என்னுதல்

மாயத்தால் மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா !
மின் போலே பளபளத்து இருந்துள்ள திரு வாழியை-எப்போதும் கை கழலா நேமியனாய் ஆசிலே வைத்த கையும் நீயுமாய்
என்னுடைய ரஷணத்துக்காக இங்கே வந்திருந்து வைத்து காற்கடைக் கொண்டாயே யாகிலும்

நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–
தன்னைக் காற்கடைக் கொண்டவனை ஐஸ்வர்யம் விடாதே போலே நீ என்னை உபேஷிக்க உபேஷிக்க-உன்னையே பற்றி நின்றேன் –

——————————————————————

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே– 5-10-

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்-
இதுக்கு என்று வந்திருக்கிற நீ என்னை உபேஷித்தாயே யாகிலும்

மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
வேறு ஒரு புகலில்லை-நான் அநந்ய கதி என்று -அவன் திருவடிகளை ஆசைப்பட்டு

கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன
பிரதிபஷத்தை பக்க வேரோடு வாங்க வற்றான வென்றியை உடைய வேலையையும் சேனையையும் உடைய
ஸ்ரீ பெருமாள் சொன்னவை –
பிரதிபஷத்தை வெல்லுகைக்கு ஈடான பரிகரம் உடையரானார் போலே யாய்த்து –
ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பரிகரமாக-இவருடைய அநந்ய கதித்வத்வமும்

நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே–
கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தே -உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாய் இருக்குமா போலே
அர்த்தம் மிக்கு இருக்குமாய்த்து இத் திருமொழி –

இவை வல்லவர்கள் -நண்ணார் நரகமே –
சம்சார சம்பந்தத்துக்கு அடியான பாபத்தை பண்ணினார்களே யாகிலும் இஸ் சம்சாரத்திலே வந்து பிரவேசியார்கள் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: