பெருமாள் திருமொழி -3–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேன் -என்று –
பகவத் பிராவண்யம் ததீய சேஷத்வ பர்யந்தமாய்
அவர்கள் அல்லது செல்லாமை பிறக்கும் அளவும் உண்டு –அது சொல்லிற்று கீழில் திரு மொழியில்

எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே -என்றும்
மானிடவர் அல்லர் என்று மனத்தே வைத்தேனே -என்றும் –
பித்தர் என்றே பிறர் கூற -என்றும் -பிறக்கும் அவஸ்தை உண்டு
பகவத் பிராவண்யத்தாலே முன்பில் அதுக்கு சங்கல்பமே யாய்த்து வேண்டுவது –
அடிமை அவர்கள் கொள்ளக் கொள்ள விறே செய்வது
ப்ராதி கூல்யத்தில் வர்ஜித்தே நிற்க வேணும்
பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அநு பாவ்யம் சொன்ன சாஸ்திரம்
தானே இறே இத்தை த்யாஜ்யம் என்றதும்
ஜ்ஞான கார்யமாய் இறே ததீயர் உத்தேச்யம் ஆகிறதும்
தமோ குண பிரசுரரோடு சஹவாசம் பொருந்திற்றாகில் அஜ்ஞான கார்யம் இறே –

மத்தஸ் சர்வமஹம் -என்று சாமான்ய புத்தி பண்ணின ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்-
பூர்வ அவஸ்தையில் மத்பிது என்று அவனை
ரஷிக்கப் பார்த்தவன் ப்ராதிகூல்யத்தில் விஞ்சின வாறே அவனை விட்டுக் காட்டிக் கொடுத்தான் இறே

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஆந்தனையும் ஹிதம் சொல்லிப் பார்த்து தன் ஹிதத்துக்கு மீளாத வவஸ்தை வானவாறே
நெருப்புப் பட்ட விடத்திலே விலக்க ஒண்ணாத போது தன்னைக் கொண்டு
தான் தப்புவாரைப் போலே -ப்ராதிகூல்யம் அசலிட்டு
தன்னளவும் வரும் என்று தன்னைக் கொண்டு தான் தப்பினான் இறே

ப்ராதி கூல்யமாகிறது –
தேஹாத்மா அபிமானிகள் ஆகையும்-
விஷய பிரவணராய் இருக்கையும் –
தேஹாத் வ்யதிரிக்த வேறொரு வஸ்து உண்டு என்று அறியாது இருக்கையும் இறே –
இப்படி இருப்பாரோடு எனக்குப் பொருந்தாது என்கிறார் இத் திருமொழியில் –

—————-

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்
வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-1-

பதவுரை

மெய்யில் வாழ்க்கையை–ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே
மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.
மெய் என கொள்ளும்–பாரமார்த்திகமாகக் கருதுகின்ற
இவ் வையம் தன்னோடும் –இவ்வுலகத்தாரோடு
யான் கூடுவது இல்லை–(இனி) நான் சேர்வதில்லை
ஐயனே–‘ஸ்வாமீ’
அரங்கா–‘ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன்–என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) அழையா நின்றேன்;
என் தன் மாலுக்கே–என்னிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் பக்கலிலேயே
மையல் கொண்டொழிந்தேன்–வ்யாமோஹடைந்திட்டேன்.
மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும்
மெய் என்றும் -பொய் எனபது நில்லாமையும் -நிலை நிற்குமத்தையும் சொல்லுகிறது –
நிலை நில்லாததிலே -நித்யமான ஆத்ம வஸ்துவைப் பண்ணும் பிரதிபத்தியைப் பண்ணும் என்னுதல் –
மெய்யிலே உண்டான வாழ்க்கை – என்னுதல் –
அதாகிறது பிரகிருதியைப் பற்றி வரும் ப்ராக்ருத போகங்கள் இறே

இவ் வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
தேஹாத்ம அபிமாநிகளாய் இருப்பாரோடு எனக்கு ஒரு சேர்த்தி இல்லை –

ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
தேஹாத்ம வ்யதிரிக்தம் வேறு ஒருவர் உண்டு -என்று அறிந்தவன் -என்கிறார்

ஐயனே –
நிருபாதிக பந்துவே

அரங்கா –
அனுஷ்டான பர்யந்தம் ஆக்கின முதலித்தாப் போலே ஸ்ரீ கோயிலிலே வந்து ஸூலபனானவனே-

என்று அழைக்கின்றேன் –
கார்யப் பாடறக் கூப்பிடா நின்றேன்

மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே –
அவன் எனக்குப் பித்தேறின படியைக் கண்டு நானும் அவனுக்கு பித்தனானேன் –

——————————————————————————–

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..

பதவுரை

நூலின் நேர்–நூல் போன்று (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய பெண்டிர் விஷயத்திலேயே பொருந்தி யிருக்கிற
ஞாலம் தன்னொடும்–(இந்த) ப்ராக்ருத மனிதரோடு
யான் கூடுவது இல்லை;-
ஆலியா–(காதலுக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடி
அரங்கா என்று–‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று கூப்பிட்டு
அழையா–கூப்பிட்டு
என் தன் மாலுக்கே–என் மேல் வ்யாமோஹமுடையனான எம்பெருமான் திறத்தினாலேயே
மால் எழுந்தொழிந்தேன் – மோஹமுற்றேன்.

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
நூல் போலே நுண்ணிய இடையை யுடையராய் இருக்கும் ஸ்திரீகள் திறத்திலே நிற்கும் –
ஒரு அவயவத்தை அனுபவிக்கப் புக்கால் மற்ற அவயவத்தில் போக மாட்டாதே நிற்கும்

ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
பிராப்த விஷயத்தில் இருக்கக் கடவ இருப்பை அப்ராப்த விஷயத்தே இருக்கும் அவர்களோடு
எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை

ஆலியா அழையா அரங்கா! என்று
இவர்கள் அப்ராப்த விஷயத்திலே படும் பாடெல்லாம் ப்ராப்த விஷயத்தே படுமவன் நான் என்கிறார் –

ஆலியா அழையா அரங்கா! என்று-
ப்ரீதி பிரகர்ஷத்தாலே இருக்க மாட்டாதே –
ஆலியா –
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி அடைவு கெடக் கூப்பிட்டு

மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே –
தேநத்தேதம நு வ்ரதா-என்னுமா போலே
அவன் என் பக்கல் வ்யாமுக்தன் ஆன படி கண்டு நானும் பித்தேறினேன் –

—————————————————————-

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3-

பதவுரை

மாரனார்–மன்மதனுடைய
வரி வெம் சிலைக்கு–அழகிய கொடிய வில்லுக்கு
ஆள் செய்யும்–ஆட் பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற
பாரினாரொடும்–(இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு
யான் கூடுவது இல்லை-:
ஆரம் மார்வன்–முக்தாஹாரத்தைத் திரு மார்பிலே அணிந்துள்ளவனாய்
அனந்தன்–அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வ பாவங்களை யுடையவனாய்
நல் நாரணன்–ஸர்வ ஸ்வாமியாய்
நரக அந்தகன்–அடியவர்களை நரகத்தில் சேராதபடி காத்தருள்பவனான
நரகாந்தகன்-நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.
அரங்கன்–ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
பித்தன்–மோஹமுடையனாயிரா நின்றேன்.

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்-பாரினாரோடும் கூடுவதில்லை யான்-
காமனுடைய -தர்ச நீயமாய் தப்ப ஒண்ணாத படியாய் கொடிதாய் இருக்கிற
வில்லுக்கு குடிமகனாய்த் திரியும் பாரினாரோடும் கூடுவதில்லை யான்-என்னுதல் –
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தனக்கு ஆட் செய்யுமவன் நான்

ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் நாரணன் நர காந்தகன் பித்தனே –
ஆர மார்வன் அரங்கன்-
ஆகர்ஷகமான ஒப்பனையை உடைய ஸ்ரீ பெரிய பெருமாள்

அனந்தன் –
மனுஷ்யத்வே பரத்வம் போலே இங்கே வந்து ஸூலபராய்க் கிடக்கச் செய்தே
பரிச்சேதிக்க ஒண்ணாத படி இருக்கிறவர் –

நல் நாரணன் –
தன் உடமையை விட மாட்டாமையாலே அழுக்கை விரும்புமவன்

நர காந்தகன் பித்தனே –
அவன் தன் வாத்சல்யத்தாலே மேல் விழா நிற்க
நடுவே விரோதியும் போய்க் கொடு நிற்கும் இறே –
இப்படி இருக்கிறவர்க்குப் பித்தனே –

—————————————————————————

உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை
உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–3-4-

பதவுரை

உண்டியே–ஆஹாரத்தையும்
உடையே–வஸ்திரத்தையுமே
உகந்து ஓடும்–விரும்பி (க் கண்ட விட மெங்கும்) ஓடித் திரிகிற
இ மண்டலத்தொடும்–இந்தப் பூமண்டலத்திலுள்ள பிராகிருதர்களோடு
யான் கூடுவது இல்லை
அண்டம் வாணன்–பரம பதத்திலே வாழ்பவனும்
வல் பேய் முலை உண்ட வாயன்–கல் நெஞ்சை யுடைய பூதனையின் முலையை அமுது செய்த வாயை யுடையனுமான
அரங்கன் தன்–ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்
உன்மத்தன்–பைத்தியம் பிடித்தவனா யிரா நின்றேன்

உண்டியே வுடையே உகந்து ஓடும்
உபாசனத்துக்கு சரீரம் வேண்டுகையாலே -அது தரிக்க வேண்டும் அளவன்றியிலே
எல்லாவற்றையும் அழிய மாறி உண்டியும் உடையும் ஆக்கும்

இம் மண்டலத்தோடும் கூடுவதில்லை யான்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்று இருக்க –
ஒரு விபூதி உண்டானாப் போலே
ப்ராக்ருத போகங்களை விரும்புகைக்கு ஒரு விபூதி இறே இதுவும்

அண்ட வாணன் அரங்கன்
அண்டாந்த வர்த்திகளுக்கு நிர்வாஹகன் –
இதுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் இருப்பு ஒழிய இதினுள்ளே புகுந்து ஸூலபனாய்
ஸ்ரீ கோயிலிலே சந்நிஹிதன் ஆனவன் –

வன் பேய் முலை உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–
இங்கே வந்து அவதரித்து பிரதி பந்தங்களைத் தானே போக்குமவனுக்குப் பித்தன் நான் –

தன் உன்மத்தன் காண்மினே–
ஔஷத சேவை பண்ணினாரையும் இழக்க ஒண்ணாதாப் போலே –
அவனுடைய குண சேஷ்டிதங்களிலே
அகப்பட்டு பித்தனான என்னைக் கேவல சரீர பரவசரோடே சேர விட ஒண்ணுமோ –

—————————————————–

தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
பேதை மா மணவாளன் தன் பித்தனே– 3-5-

பதவுரை

தீது இல் நல் நெறி நிற்க–குற்றமற்ற நல் வழி இருக்கச் செய்தே
(அவ்வழியில் போகாமல்)
அல்லாது செய் நீதியாரொடும்–நல் வழிக்கு எதிர்த்தட்டான வற்றைச் செய்வதை விரதமாகக் கொண்டுள்ள பிராகிருதர்களோடு
யான் கூடுவது இல்லை
ஆதி–(உலகங்கட்கு) முதல்வனாய்
ஆயன்–ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்து ஸர்வ ஸூலபனாய்
அம் தாமரை பேதை மா மணவாளன்–அழகிய தாமரைப் பூவில் அவதரித்த பிராட்டியின் வல்லபவனான
அரங்கன் தன்–ஸ்ரீரங்கநாதன் திறத்தில்
பித்தன்–மோஹங் கொண்டிரா நின்றேன்.

தீதில் நல் நெறி நிற்க
தீமையோடு பிறவாத நல் வழி நிற்க -இவனை ஒழிந்த பலங்களுக்கு-
சாதன அனுஷ்டானம் பண்ணிப் பெரும் பேற்றில்
இழவே நன்று என்னும்படி இறே இருப்பது

அல்லாது செய் நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
இதர புருஷார்த்தங்களை யாசைப்படுகையே யாத்ரையாய் இருப்பாரோடும்
கூடுவது இல்லை யான்

ஆதி ஆயன் அரங்கன்
ஆதி –
பிரமாணங்கள் உபாஸ்ய வஸ்து என்று சொல்லப் படுகிறவன்

ஆயன் –
உபாஸ்ய வஸ்து தான் அரிது என்ன ஒண்ணாதபடி யவதரித்து ஸூ லபனானவன்

அரங்கன் –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்து பிற்பாடர் இழவாமே-
ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதர் ஆனவர்

அம் தாமரை பேதை மா மணவாளன் தன் பித்தனே–
அழகிய தாமரைப் பூவைத் தனக்கு இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபர்
ஆனவருக்கு பித்தனானேன் நான்
ஓரடி இவன் புகுரா நின்றால்-அத்தைக் குவாலாக்கி -அவன் நெஞ்சிலே புண்படும்படி
இவன் பண்ணின அபராதத்தை அவன் காணாத படி இருக்கிற புருஷகார பூதை-

மா மணவாளன் –
அப்ரமேயம் ஹி தத்தேஜ-இவளுக்கு வல்லபனாகையாலே வந்த பெருமை உடையவன்
பித்தன் நான் –

——————————————————————

எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே–3-6-

பதவுரை

எம் பரத்தர் அல்லா ரொடும்–என்னைப் போலே அநந்ய ப்ரயோஜநரா யிராதவர்களோடு;
கூடலன்–(நான்) கூட மாட்டேன்;
உம்பர் வாழ்வை–தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலிய போகங்களையும்
ஒன்று ஆக–ஒரு புருஷார்த்தமாக
கருதலன்–எண்ண மாட்டேன்;
அமரர்க்கு–நித்ய ஸூரிகளுக்கு
தம்பிரான்–ஸ்வாமியாய்
அரங்கம் நகர்–கோயிலிலே எழுந்தருளி யிருக்கிற
எம் பிரானுக்கு–பெரிய பெருமாள் விஷயத்தில்
த்ழுமையும்–எப்போதும்
பித்தன்–பித்தனாகா நின்றேன்.

எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
என் யாத்ரையே யாத்ரையாய் இராதாரை நாக்கு வளைத்து இருப்பன்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றும் –
வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்றும் இராதாரோடு சம்பந்தம் இல்லை

உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
சம்சாரத்தில் அருசியும் கைங்கர்யத்தில் ருசியும் இல்லையாகில் –
ப்ரஹ்மாதிகள் சம்பத்தே யாகிலும் த்ர்ணவத் கரிப்பன்

தம் பிரான் அமரர்க்கு –
அயர்வறும் அமரர்கள் அதிபதி

அரங்க நகர் எம்பிரானுக்கு –
நித்ய ஸூரிகள் எல்லாம் அனுபவிக்குமா போலே சம்சாரிகள் எல்லாம் இழவாதபடி-
ஸ்ரீ கோயிலிலே வந்து ஸூலபரானவர்

எழுமையும் பித்தனே–
இச் செயலுக்கு என்றுமே பித்தனாய் திரியுமவன் –

—————————————————————————-

எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே—3-7-

பதவுரை

செம் கண் மால்–புண்டரீகாக்ஷனான எம்பெருமான்
எத் திறத்திலும்–எந்த விஷயத்திலும்
யாரொடும்–கண்ட பேர்களோடே
கூடும் அச் சித்தம் தன்னை–சேர்ந்து கெட்டுப் போவதற்கு உறுப்பான நெஞ்சை
தவிர்த்தனன்–நீக்கி யருளினான்; (ஆதலால்)
அத்தனே–ஸ்வாமியே!
அரங்கா–ஸ்ரீரங்கநாதனே!
என்று அழைக்கின்றேன்–என்று கூவா நின்றேன்;
எம்பிரானுக்கே பித்தனாய் ஒழிந்தேன்-.

எத் திறத்திலும் யாரொடும் கூடும் –
அபாகவதனோடு சம்பாஷிக்க அபிமத புருஷார்த்தங்களை எல்லாம் லபிக்கலாம் என்னிலும்
அத்தையும் கால் கடைக் கொள்ளும் படி யானேன் –

அச் சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
கண்ணாலே குளிர நோக்கி -தன வ்யாமோஹத்தைக் காட்டி பிறரோடு மனஸ்ஸூ
பொருந்தாத படி பண்ணினான்

அத்தனே!
எனக்கு ஸ்வாமி யானவனே

அரங்கா! என்று அழைகின்றேன்
அந்த ஸ்வாமித்வத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக ஸ்ரீ கோயிலிலே வந்து
ஸூ லபன் ஆனவன் என்று கூப்பிடா நின்றேன்

பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே—
இதர விஷய பிராவண்யத்தோடு பொருந்தாதபடி பண்ணின உபகாரகனுக்கு பித்தனானேன் –

——————————————————————-

பேயரே எனக்கு யாவரும் யானுமோர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்?
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —3-8-

பதவுரை

யாவரும்–இவ் வுலகத்தாரடங்கலும்
எனக்கு–என் வரைக்கும்
பேயரே–பைத்தியக்காரர்கள் தான்;
யானும்–(அவர்களிற் காட்டில் விலக்ஷணனான) நானும்
எவர்க்கும்–எவர்களுக்கும்
ஓர் பேயனே–ஒரு பைத்தியக்காரன் தான்;
இது–இவ் விஷயத்தை
பேசி-(விரிவாகச்) சொல்வதனால்
என்–என்ன ப்ரயோஜநமுண்டு?
ஆயனே–‘ஸ்ரீகிருஷ்ணனே!
அரங்கா–ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன்–என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) கூவா நின்றேன்;
எம்பிரானுக்கே பேயனாய் ஒழிந்தேன்-.

பேயரே எனக்கு யாவரும் –
நிலை நின்ற புருஷார்த்தை விட்டு அஸ்திரமான பிராக்ருத போகங்களை விரும்புவதே —
பேயராய் இருந்தார்கள் என்று விட்டேன் நான் –

யானுமோர் பேயனே எவர்க்கும் –
கண்ணால் காண்கிறது ஒழிய வேறு ஓன்று உண்டு என்று பிரமியா நின்றான் –
பித்தனாய் இருந்தான்
என்று விட்டார்கள் இவர்களும் என்னை

இது பேசி என்?
இத்தைப் பரக்கச் சொல்லுகிறது என்

ஆயனே
கண்ணால் காண்கிறது பொய் என்று இராத படி வந்து அவதரித்து
தான் படுத்தின படிகளை எனக்குக் காட்டினவன்

அரங்கா என்று அழைகின்றேன்
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவோடே தலைக் கட்டாத படி ஸ்
ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளின
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி அடைவு கெடக் கூப்பிடா நின்றேன்

பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —
ஒரு விஷயத்திலே பித்தேறினவன்-நமக்கு இனி யாகான் காண்-விடாய் என்று
இதரர் என்னை உபேஷிக்கும் படி யானேன் –

——————————————————————

அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-

பதவுரை

அம் கை ஆழி–அழகிய திருக்கையிலே திருவாழி யாழ்வானை ஏந்தி யுள்ள
அரங்கன்-ஸ்ரீரங்கநாதனுடைய
அடி இணை–திருவடிகளில்
தங்கு சிந்தை–பொருந்திய மனமுடையவராய்
தனி பெரு பித்தன் ஆம்–லோக விலக்ஷணரான பெரிய பித்தராய்
கொங்கர் கோன்–சேர தேசத்தவர்களுக்குத் தலைவரான
குல சேகரன்–குலசேகராழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சொல்–இப் பாசுரங்களை
இங்கு–இவ் விபூதியிலே
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
ஏதம் ஒன்று இல்லை–(பகவதநுபவத்திற்கு) ஒருவிதமான இடையூறும் உண்டாக மாட்டாது.

அங்கை ஆழி அரங்கன் அடியிணை-
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளிலே

தங்கு சிந்தைத்
ஸ்ரீ பெருமாள் திருவடிகளுக்கு அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையாலே
அங்கே தங்கு சிந்தையை உடைய

தனிப் பெரும் பித்தனாம்
பகவத் விஷயத்திலே இவர்களோபாதி பித்தேறினார் வேறு ஒருவர் இல்லாமையும் –
சிலவரால் மீட்க ஒண்ணாமையுமான பித்தனாம்

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
மேலைத் திக்குக்கு நிர்வாஹகரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்தது

இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–
இவற்றில் வல்லவர்களுக்கு இங்கே ஏதம் ஓன்று இல்லையே

ஏதமாவது-
அபாகவாத ஸ்பர்சமாதல்-
பகவத் பிராவண்யத்தில் குறையாதல் –

வரும் துக்கம் போம் என்றும்
இஸ் சம்சாரத்தில் இருக்கும் நாளில்லை –
இத் துக்க பிரசங்கம் உள்ளத்து இவ் விடத்தே இறே –
இவை கற்றவர்களுக்கு இப்பிரசங்கம் உள்ள இத்தேசத்திலே இல்லை –

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: